எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பூந்தென்றலாய்.. பூஞ்சாரலாய்..13

அத்தியாயம் - 13

காசிநாதனின் இல்லம்! சகல வசதிகள் படைத்த இல்லம்!

இல்லத்திற்குள்......

தையல்நாயகியின் மனதில் கோபம் கொள்ளை கொள்ளையாய் குடிகொண்டிருந்தது. அதுவும் கணவரின் தம்பி வீட்டினர் செய்த காரியத்தை அறிந்த நொடியில் இருந்து உலையில் கொதிக்கும் அரிசிப் பருக்கையை போல் கொதித்து வெந்து கொண்டிருக்கிறார்.

காசிநாதன் என்ன சொல்லி சமாதானம் செய்ய முயன்றும் தையல்நாயகி என்பவரின் அகங்கார அக்னி அடங்குவதாய் இல்லை.

"கேவலம்... ஒரு ஓட்ட மெடிக்கல வச்சு பொழப்பு நடுத்துறான் உங்க தம்பி! அவனுக்கு இவ்வளவு திமிரு வந்திருக்க கூடாது" என்று அவர் நூறாவது முறையாக இந்த வாக்கியத்தை வக்கிரத்துடன் கணவரிடம் கூற காசிநாதன் பெரு மூச்சுடன் தலையை பிடித்துக் கொண்டார்.

கடந்த இரண்டு மணி நேரமாக இதே விஷயத்தை வெவ்வேறு வார்த்தைகள் கொண்டு மீண்டும் மீண்டும் துவேதத்துடன் கூறும் மனைவியை கண்டு மனம் நொந்து தான் போனது அவருக்கு.

"நாயகி.. இப்ப என்ன ஆகிப் போச்சுன்னு நீ இப்படி கோபப்படுற" என்று காசிநாதனே மனைவி மீதான பயம் நீங்கி அயர்வுடன் கேட்க, கொந்தளித்து விட்டார் தையல்நாயகி.

"என்னது.. என்ன ஆகிப் போச்சா? அந்த திமிரு புடிச்சவளுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு. நேத்து பூ வச்சு உறுதி படுத்தியிருக்கு. அதை உங்க தம்பி நமக்கு ஒரு வார்த்தை கூட இதப் பத்தி மூச்சு விடல. என்ன ஒரு எகத்தாளம். நம்ம அவ்வளவு இளக்காரமா போய்ட்டோமா? நம்மள கூப்பிடாம.. நம்ம கிட்ட ஒரு வார்த்தை கலந்து பேசாம எப்படி அவுங்க மாப்பிள்ளை பாத்து முடிவு பண்ணலாம்" என்றவர், மேலும் கொந்தளிப்புடன் பேசலானார்.

"அட உங்க பஞ்ச பாட்டு பாடுற தம்பி தான் இதைப் பத்தி மூச்சு விடலேன்னா என் ஒன்னு விட்ட தூரத்து சொந்தமான மயில் வாகனமும் என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல பாருங்களேன்" என்று குமுற காசிநாதன் நெற்றியில் வழிந்தோடிய வியர்வையை துடைத்தவாரே,

"ஐயோ நாயகி.. கொஞ்சம் அமைதியா இரேன். என் தம்பி சொல்லலேன்னா அதுல என்ன இப்ப? நாம எதை சொன்னோம் அவனுக்கு?" என்று காசிநாதன் கேள்வி கேட்க தையல்நாயகி கோபத்துடன் கணவரை பார்த்தார்.

"நாம எதையுமே கண்ணன் கிட்ட சொன்னதில்லை. எல்லாமே கடைசி நிமிஷத்துல தான் போய் சொல்லுவோம். அதுவும் வேண்டா வெறுப்பா தட்ட தூக்கிட்டு போய் வந்திருங்கன்னு பேருக்கு சொல்லிட்டு வருவோம். இந்த முறை நாம செய்யறதையே அவன் நமக்கு செய்ய நினைக்கிறான் போல" என்று இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா எனக் காசிநாதன் எடுத்துக் கூற, தையல்நாயகி இன்னும் வெகுண்டார்.

"எப்படி எப்படி? நம்ம செய்யுறதையே நமக்கு செய்வானாமா உங்க தம்பி? எவ்வளவு நெஞ்சழுத்தம்? நமக்கு உங்க தம்பி சமமா? நம்மள ஒரு ஆளா கூட மதிக்காம அவன் அந்த ராதாவுக்கு மாப்பிள்ளை உறுதி செஞ்சு இருக்கான். அதுவும் என் உறவுக்கார தம்பி மகனையே.. ஆனா நமக்கு சொல்லாம பண்ணி இருக்கான்? எப்படி சும்மா விட முடியும்?" என்றவர்,

"இதெல்லாம் அந்த ராதாவோட வேலையா தான் இருக்கும். உங்க தம்பி என்ன பண்ணாலும் என்ன செஞ்சாலும் நம்மள அவமதிக்க மாட்டான். அதனால் தான் சொத்தெல்லாம் நாம திட்டம் போட்டு அவன் கிட்ட இருந்து பரிச்சோம்னு தெரிஞ்சும் நம்மள அவன் ஒதுக்கி வைக்கல. ஏன்னா அவன் தெரிஞ்சே ஏமாந்த ஏமாளி! ஏமாந்தும் தன்னோட குணத்தை விட்டு கொடுக்காதவன். ஆனா அந்த ராதா அப்படி இல்ல. நம்மள உருக்குலைக்கவே அவன் அப்பன் கிட்ட பேசி அடம் பிடிச்சு நம்மள கூப்பிட கூடாதுன்னு சொல்லி இருப்பா. ஒரு வேளை என்னை மீறி கூப்பிட்டா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு மிரட்டி இருப்பா. அதனால உங்க அடங்கி போற தம்பியும் சின்ன மகளுக்கு பயந்து நம்மள கூப்பிடாம அவமானப் படுத்தி இருப்பான்" என்று ஒவ்வொன்றாக யூகித்து கூறியவருக்கு ராதா மேல் கொலைவெறியே உருவாகியது.

"விடு நாயகி. ஒரு வேளை கண்ணன் சொல்லி இருந்தாலும் நாம ராதா பொண்ணு பாக்குற விசேஷத்துக்கு போயிருந்திருக்க போறோமா என்ன? கிடையாதே! அவனோட மூத்த பொண்ணுங்களுக்கும் தான் பூ வைக்கிறது, நிச்சயதார்த்தம், கல்யாணம்னு எல்லாத்துக்கும் சொன்னான். நாம போனோமா? கல்யாணத்துக்கு நான் மட்டும் பேருக்கு போய் தலையை காட்டிட்டு வந்தேன். இப்பவே ராதாவோட விசேஷத்துக்கு சொல்லி இருந்தாலும் நாம போய் இருக்க போறதில்ல. அப்புறம் எதுக்கு நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற" என்று காசி நாதன் மனைவியை முருங்கை மரத்தில் இருந்து இறக்கப் பார்க்க ஆனால் தையல்நாயகி எனும் வேதாளமோ முருங்கை மரத்தில் குடி கொள்ளும் சபதத்தை எடுத்திருக்கும் போலும்... அது இறங்குவதாய் தெரியவில்லை.

காசிநாதனும் மனைவியை இப்போது எது சொல்லியும் அடக்க முடியாது என்ற உண்மை புரிந்து அமைதியாய் அங்கிருந்து அகன்று விட்டார். ஆனால் தையல் நாயகி மனதிலோ எப்படி இந்த சம்மதத்தை கெடுக்கலாம் எனும் திட்டம் தான் ஓடிக் கொண்டிருந்தது.
*************



ராதாவின் மனதில் முதல் முறையாக மற்றற்ற மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது. அவள் பிறந்தது முதல் இத்தனை அளவிற்கு சந்தோஷமாக இருந்திருக்கிறாளா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதநாள் வரை அவள் வாழ்ந்த வாழ்க்கை அவள் விருப்பப்படாத விதமாக தான் இருந்திருக்கிறது. சிறு வயதில் அன்னை மூலம் தன் பெரியப்பாவால் தாங்கள் ஏமாற்றப் பட்ட விஷயம் அறிந்ததில் இருந்து அவள் மன நிலை முற்றிலும் மாறிப் போனது என்னவோ உண்மை!

அதுவரையில் தாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சற்று கஷ்டப் படும் குடும்பம் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தவள் அன்னை சொன்னதை கேட்டதும் தங்களை இப்படி ஒரு கஷ்டமான, ஏழ்மையான வாழ்விற்கு தள்ளிய குள்ளநரி புத்தி கொண்ட பெரியப்பாவை எண்ணி மனம் வெந்து போனாள்.

அப்பாவிடம் சென்று கேள்விகள் கேட்டதற்கு உனக்கு இதை பேசுற வயசில்ல ராதா என்று அவள் வாயை அடைத்து விட்டார். ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவரால் ராதாவின் வாயை அடக்க முடியவில்லை.

வயது பெறுக பெறுக அவளுக்கு அறிவும் அனுபவமும் அவமானங்களும் ஆதாங்கங்களும் தங்களை ஏமாற்றிய பெரியப்பா குடும்பத்தின் மீது ஆக்ரோஷமும் பெருகிக்கொண்டே போக அவளின் வாய்ப்பேச்சுகளும் பெருகிக்கொண்டே சென்று விட்டது.

ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக பேசுவதும் ஆதங்கப்பட்டு ஆக்ரோஷப்பட்டு பேசுவதும் அவளின் பழக்கமாகிப் போய் இருக்க கண்ணபிரானால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

தந்தையின் மிரட்டலுக்கு அடிகளுக்கும் பயப்படாமல் பெரியப்பா பெரியம்மாவை காணும் போதெல்லாம் அவர்களின் இளக்கார பேச்சுக்களை கேட்கும் போதெல்லாம் அச்சமின்றி அவளின் வார்த்தைகளை சகட்டுமேனிக்கு உபயோகத்திருக்கிறாள்.

இப்பொழுது மட்டுமல்ல எப்போதுமே அவர்களிடம் அவள் அப்படித்தான் அதை எவராலும் மாற்ற முடியாது அது அவளின் தந்தையாக இருந்தாலும் சரி இல்லை வருங்கால கணவனாகப் போகிற நரேந்திரனானாலும் சரி!

ஆனால் இந்த நொடி ராதாவின் மனதில் மகிழ்ச்சி மட்டுமே வியாபித்திருந்தது அதற்கு காரணம்.. நரேந்திரன்! நரேந்திரன் என்பவனின் வார்த்தைகள்.

அவன் திருமணத்திற்கு பின்பு வேலைக்கு செல்லலாம் என்பதை தனக்கான உரிமையாக தன் இஷ்டம் என கருதி கூறிய வார்த்தைகளை எண்ணி மீண்டும் மீண்டும் சிரிப்புடன் பெருமூச்சினை விட்டுக் கொண்டாள்.

"ஆள் நல்லா தெளிவா தான் இருக்காரு. நம்ம கிட்டயே கேள்வி கேட்டு நம்மளையே பேச வச்சு நம்மளையே ஸ்ட்ராங்கான்னு கேட்டு தெளிவாக்கி விட்டுட்டார். ஹ்ம்ம்.. எப்படியோ சொன்ன சொல் மாறாம கல்யாணத்துக்கு அப்புறம் நம்மள வேலைக்கு போறதுக்கு தட போடாம இருந்தா சரி!" என்று நிம்மதி கண்ட மனதுடன் தூக்கத்தையும் எட்டி இருந்தாள்.

அடுத்த மாத இறுதியும் வெகு வேகமாக நெருங்கி இருக்க ராதா மற்றும் நரேந்திரனின் நிச்சய நாளும் இனிதே விடிந்திருந்தது.

நிச்சயத்திற்கும் கண்ணபிரான் அண்ணன் வீட்டினரை அழைக்கவில்லை. இத்தனைக்கும் ராதா பூ வைக்கும் தினத்திற்கு முன்பு தந்தையிடம் அவர்களை அழைக்க வேண்டாம் என்று சொல்லி தன் முடிவை சொல்லியதோடு சரி. அதற்கடுத்து இந்த ஒரு மாத காலமாக அவள் பெரியப்பா பெரியம்மாவை மறந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் கண்ணபிரான் மகளுக்காக மிகவும் பயந்தார். அன்று மகளின் முடிவையும் மனைவியின் முடிவையும் கேட்டு அவர் உள்ளம் பெரும் பயத்திற்கு உள்ளாகி இருந்தது என்னவோ நிஜம்.

எனவே அவர் இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. எனவே நிச்சயத்திற்கும் அண்ணன் வீட்டினை அவர் அழைக்க முன்வரவில்லை.

கண்ணபிரானை அழைக்காத போது தெய்வானைக்கும் அவர்களைப் பற்றின சிந்தனை கிஞ்சித்தும் வரவில்லை. பிறகு ராதாவிற்கு மட்டும் எங்கிருந்து வரப்போகிறது?

எனவே கண்ணபிரானின் குடும்பத்தினர் மொத்தமாக காசிநாதன் மற்றும் தையல்நாயகியின் குடும்பத்தை குறுகிய காலத்திற்கு மறந்தே போயிருந்தனர்.

ஆனால் குமுதாவும் மயில்வாகனமும் மறக்கவில்லை. மயில்வாகனம் தையல்நாயகியின் வீட்டிற்குச் சென்று நிச்சயதார்த்தத்திற்கு அழைத்த போது "பூவச்சுக்கறதுக்கு மட்டும் என்ன கூப்பிடல. இத்தனைக்கும் பொண்ணு என் வீட்டுக்காரரோட தம்பி மக. அது தெரிஞ்சு நீங்க என்னை கூப்பிடல இப்ப நிச்சயத்துக்கு மட்டும் எதுக்கு வீடு ஏறி வந்து கூப்பிடுறீங்க?" என்று கண்ணபிரானின் வீட்டினர் மீது உள்ள கோபத்தையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து தம்பி மயில்வாகனத்திடம் காண்பித்தவர்,

மேலும் இந்த திருமணத்தை கெடுக்கும் எண்ணம் கொண்டவராக "நீங்க பாத்திருக்கீங்களே பொண்ணு அவ ஒன்னும் அவ்வளவு நல்லவெல்லாம் கிடையாது சரியான வாயாடி லம்பாடி மாதிரி சண்டை போடுவான் அவ வாய அடக்க முடியாது. எல்லாரையும் எதிர்த்து பேசுவா. மரியாதை கொடுக்க தெரியாதவ அவ. அவளையா மகனுக்கு பொண்டாட்டியா முடிவு பண்ணி இருக்க? ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சுக்கோ மயில்வாகனம். அவ லேசு பட்டவ இல்ல!" என்று ராதாவைப் பற்றி கண்டமேனிக்கு பேசிவிட மயில்வாகனம் அத்தனை அதிருப்தியோடு அக்காவை பார்த்தார் என்றால் குமுதாவோ கோபம் கொண்டு விட்டார்.

"அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு இல்லைன்னு நீங்க எப்படி அண்ணி இவ்வளவு தூரம் சொல்றீங்க? உங்க கொழுந்தனார் குடும்பத்து கூட நீங்க அவ்வளவு தூரம் ஒட்டி உறவாடுறதில்லன்னு நாங்க கேள்விப்பட்டோம். அவங்களோட எந்த விஷேசத்துக்கும் நீங்க போனதே இல்லையாமே. உங்க விசேஷத்துக்கு கூட அவங்கள கடைசியில தான் போய் கூப்பிடுவீங்களாம். அவங்க வீட்டு கல்யாணத்துக்கும் அண்ணன் மட்டும்தான் போயிட்டு வந்ததா கேள்விப்பட்டோம். அப்படி இருக்கும்போது உங்களுக்கு எப்படி எங்க வீட்டுக்கு வரப்போற மருமகளை பத்தி இவ்வளவு தெரிஞ்சிருக்கு? அதுவும் தப்பான விதமா?" சிரித்த முகத்துடன் சூடாக கேட்ட குமுதா,

"பரவால்ல நீ ஒரு நல்ல காரியத்துக்கு என்று உங்களிடம் வந்து அழைப்பு வைக்கிறோம். ஆனா நீங்க அந்த நல்ல காரியம் நடத்தக் கூடாதுன்னு இவ்வளவு பேசுறீங்க. இதுலயே தெரியுது.. யாரு லேசு பட்டவங்க இல்லன்னு" என்று நேர்கொண்ட பார்வையுடன் சொன்னவர்,

"நிச்சயத்துக்கு அழைப்பு வைக்கணும்னு என் வீட்டுக்காரர் சொன்னாரு. அதனாலதான் இவ்வளவு தூரம் வந்தோம். ஆனா இப்ப நீங்க சொல்றத பார்த்தா உங்களுக்கு நிச்சயத்துக்கு வரதுல இஷ்டமும் இல்ல. இந்த நிச்சயம் நடக்கிறதுல இஷ்டமும் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு. அதனால வரதா வேண்டாமான்னு நீங்களே முடிவு எடுத்துக்கோங்க. நாங்க கிளம்பறோம்" என்று சிரித்த முகம் மாறாமல் கூறிவிட்டு கிளம்பி விட்டார்.

குமுதா பேசிய பேச்சில் தையல்நாயகியின் விடைப்பான மூக்கு அன்று சுக்கல் சுக்கலாக உடைந்தே போனது என்னவோ உண்மை.

குமுதா பேசி விட்டு சென்றதற்கே தையல்நாயகி கணவரிடம் "பாத்தீங்களா?? இவயெல்லாம் இப்படி பேசிட்டு போறா. என்னோட தலையெழுத்து.. இந்த பேச்சு எல்லாம் கேட்கணும்னு. இவ என்ன சொல்றது? வரதும் வராததும் உங்க இஷ்டம்னு.. கேவலம் இந்த மிடில் கிளாஸ் குமுதாவும் உங்க பஞ்சப்பாட்டு பாடுற தம்பியும் சம்பதியாக விசேஷத்தை நான் போய் சிறப்பிக்கணுமா.. நான் போக மாட்டேன்" என்று வெட்டி வீராப்புடன் சொல்லிக் கொண்டார்.

காசிநாதனும் வழக்கம் போல் அமைதியாக மனைவியின் பேச்சுக்கு செவிமடுத்து விட்டார்.

ஆக ராதா மற்றும் நரேந்திரனின் நிச்சயதார்த்த விழா இனிதே தொடங்கி இருந்தது.

நரேந்திரன் ராதாவிற்கு என அழகான தங்க இதயக்கூட்டில் வைரக் கல் வைத்த ஒரு மோதிரத்தை அணிவித்து விட கண்ணபிரானும் மாப்பிள்ளைக்கு என வாங்கி இருந்த நான்கு கிராம் கொண்ட தங்க மோதிரத்தை மகளின் கையில் கொடுக்க ராதாவும் அதனை நரேந்திரனுக்கு நிச்சய மோதிரமாக அணிவித்தாள்.

தன் விரலில் உள்ள மோதிரத்தை பார்த்த ராதா நரேந்திரனை நிமிர்ந்து பார்த்து "இந்த ஸ்டோன் ரொம்ப ஜொலிக்குது அப்படியே வைரம் மாதிரி" என்று சிறு பிள்ளையின் சிரிப்போடு சாதாரண குரலில் கூற அருகே நின்றிருந்த அவளின் அக்கா லதாவோ,

"அடியே ராதா.. அது வைர மோதிரம் தான். மாப்பிள்ளையே உனக்காக போய் ஸ்பெஷலா வாங்கினாராம்.. என் மாமியார் என்கிட்ட நேத்து ராத்திரி சொன்னாங்க" என்று காதிற்குள் யாரும் கேட்காத வண்ணம் கூற படக்கென்று தன் எதிரே நின்று இருந்த நரேந்திரனை நிமிர்ந்து பார்த்தாள் ராதா. நரேந்திரனோ அவளையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

மீண்டும் ஒரு முறை மோதிரத்தை பார்த்த ராதாவின் முகத்தில் நம்ப முடியாத ஆச்சரியம். மெய்யாகவே வைரமா என்று அயர்ந்து போனவள் நிச்சயத்திற்கு எதற்காக வைரம் அதுவும் அவனே சென்று வாங்கியுள்ளான்... அதுவும் அந்த வைரக் கல் இதயக் கூட்டிற்குள் வேறு உள்ளது... என்று யோசிக்

க மெல்ல மெல்ல அவளின் இதயக்கூட்டிலும் நரேந்திரனின் நேசம் ஊடுறுவக் காத்திருந்தது.
 
Top