மெய்யழகனின் தேன்நிலவு - 48
மெய்யழகனின் கோபத்தை கண்ட தேன் நிலவிற்கோ வாய் அடைத்துப் போனது. இப்பொழுது என்ன கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை. என்ன கூறினால் இவன் சமாதானம் ஆவான் என்பதும் அவளுக்கு தெரியவில்லை.
அவன் இவளின் வாயிலாக என்ன வார்த்தையை எதிர்பார்க்கிறான் என்பதும் இவளுக்கு புரியவில்லை. பதில் உரைக்காமல் அப்படியே நின்று இருந்தாள்.
மெய்யழகன், "நான் பாரின் போனாலும் நீ இங்க பெங்களூர்ல தான் இருக்கணும். ஊருக்கு போகணும் என்ற நினைப்புல சுத்திகிட்டு இருக்காத" என்றான் தன் பற்களை கடித்துக்கொண்டு.
தேன்நிலவு பதறியவாறு, "அய்யோ! எனக்கு இங்க எதுவுமே தெரியாது அத்தான். நான் இங்க எப்படி தனியா இருக்கிறது".
மெய்யழகன், "அதெல்லாம் எனக்கு தெரியாது.. தெரியலைனா கத்துக்கோ.. அதுக்காக திரும்பவும் ஊருக்கு போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைக்காத.. நான் ரிட்டர்ன் வர டூ இயர்ஸ் ஆகும்.. நீ இங்க தான் இருக்கணும்.. துணைக்கு வேணும்னா தாத்தா பாட்டி ஸ்டே பண்ணுவாங்க".
அவனின் கோப வார்த்தையை மீறி பேசவும் தேன்நிலவிற்கு நா எழவில்லை. என்ன பேசினாலும் கோபப்படுபவனிடம் என்ன தான் பேசுவது..
இப்படி கூறினாலாவது அவள் தன்னுடன் வருகிறேன் என்று கேட்பாள் என்று எண்ணிய மெய்யழகனிற்கோ அவள் வாயிலிருந்து அந்த வார்த்தை மட்டும் வராமல் இருப்பது இன்னமுமே கடுப்பானது.
'எங்கேயாவது வாயைத் திறந்து இங்க தனியா இருக்கிறதுக்கு பதில் நானும் உங்களோடவே வந்திடுறேன்னு சொல்லுறாளானு பாரு.. அப்படியே கல்லு மாதிரி நிக்கிறா' என்று உள்ளுக்குள் அவளை வறுத்தெடுத்தபடி நின்றிருந்தான்.
தேன்நிலவு, "தாத்தா பாட்டி அத்தை வீட்டுக்கு போய்ட்டாங்கன்னா நான் எப்படி இங்க தனியா இருக்கிறது" என்றவளின் வார்த்தை தயக்கமாக தான் வெளி வந்தது. எங்கே இதற்கும் திட்டுவிழுமோ என்ற பயத்தில்.
மெய்யழகன், "நீ என்ன சின்ன குழந்தையா.. உன்னால் தனியா இருக்க முடியாதா?".
தேன்நிலவு, "அதுக்கு இல்ல புது ஊரு எனக்கு இங்க எதுவுமே தெரியாது. நான் வேணும்னா தாத்தா பாட்டி இங்க இருக்க வரைக்கும் இங்க இருக்கேன்.. தாத்தா பாட்டி அத்தை வீட்டுக்கு போனாங்கன்னா நான் ஊருக்கு போயிடுறேனே" என்றாள் கெஞ்சலாக.
'அப்போ கூட என் கூட வரேன்னு சொல்றாளா பாரு..'.
மெய்யழகன், "முடியாது! நான் ஊருக்கு போறதை நினைச்சு சந்தோஷப்பட்ட இல்ல.. நான் திரும்பி வர வரைக்கும் 2 இயர்ஸ் நீ இங்க தான் இருக்கணும்.. நம்ம வீட்ல தான் இருக்கணும்.." என்றவன் வேகமாக நடக்க தொடங்கினான்.
அவனின் பின்னோடு ஓட்டமும் நடையுமாக கெஞ்சிக் கொண்டே சென்றாள் தேன்நிலவு.
மற்றது அனைத்தையுமே பேசினாள்.. கெஞ்சினாள்.. மன்றாடினாள்..
ஆனால், மெய்யழகன் எதிர்பார்த்தது போல் தானும் உங்களுடன் வருகிறேன் என்ற வார்த்தை மட்டும் அவளின் வாயிலிருந்து உதிரவே இல்லை.
எப்படியும் அவன் தன்னை அழைத்து செல்ல மாட்டான் என்று எண்ணிவிட்டாள் போலும்.
"ப்ளீஸ்.. ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க.. நான் இங்க தனியா இருந்து என்ன பண்றது.. எனக்கு போர் அடிக்கும்.. எனக்கு தனியா இருந்து பழக்கம் இல்லை" என்றவளுக்கும் கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட்டது.
விட்டால் இப்பொழுதே அழுது விடுவேன் என்னும் நிலையில் நின்று இருந்தாள்.
மெய்யழகன், "அது உன் பிரச்சனை.." என்றவனோ லிப்ட் அவர்களின் தளத்தில் நின்றதும் விறுவிறுவென வீட்டிற்குள் சென்று விட்டான்.
தேன்நிலவு அழுத்தமாக தன் முகத்தை துடைத்துக் கொண்டு அவனின் பின்னோடு வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவளின் முகமே சரியில்லை என்பது கவிதாவிற்கும், ஊர்மிளாவிற்கும் தெளிவாகப்பட்டது.
கவிதா, "என்ன ஆச்சுன்னு தெரியலையே" என்று வருத்தமாக பார்க்க.
ஊர்மிளாவோ, "ஏதோ பிரச்சனை போலருக்கு" என்று எண்ணியவளுக்கு குதூகலமாக இருந்தது.
அடுத்த இரு நாட்களுமே மெய்யழகன் தேன்நிலவிற்கு பாராமுகம் தான் காட்டிக் கொண்டு இருந்தான். அவளிடம் சரியாக பேசுவதில்லை..
அவளை சற்றும் சட்டை செய்யாமல் அவளே வலியசென்று பேசினாலும் மற்றவர்களின் முன்னிலையில் கேட்பதற்கு மட்டும் பதில் அளித்துவிட்டு சென்று விடுவான்.
இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை என்பது அங்கிருந்த யாருக்குமே தெரியவில்லை. அவ்வளவு ஏன்.. இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்பதே அங்கு யாருக்கும் விளங்கவில்லை. கவிதாவையும், ஊர்மிளாவையும் தவிர..
மெய்யழகனும் காலை முதல் மாலை வரை அலுவலகம் சென்று விடுவான். ஏழு மணி அளவில் தான் வீட்டிற்கு வருவான் இருக்கும் கொஞ்சம் நேரமும் அவளிடம் சரிவர பேசாமல் முகத்தை தூக்கி வைத்து சுற்றிக் கொண்டிருந்தான்.
அன்று துணி காய வைக்க மொட்டை மாடிக்கு தேன்நிலவு செல்லவும்..
அவளை பின்தொடர்ந்து சென்ற கவிதா, "என்ன தான் டி நடக்குது உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல.. ரெண்டு பேருடைய முகமுமே சரியில்ல.. என்ன பிரச்சனை?" என்றதுமே தேன்நிலவிற்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.
எவ்வளவு கட்டுப்படுத்தியும் சரசரவென கண்ணீர் கன்னம் தொட்டுவிட்டது.
அவளின் கண்ணீரை பார்த்து பதறிய கவிதா, "ஹே என்னடி.. என்ன ஆச்சு.. ஏதாவது பிரச்சனையா?".
தேன் நிலவு, "அவர் என் மேல கோவமா இருக்காரு.. பேசக்கூட மாட்டேங்கிறார்".
கவிதா, "ஏன் என்ன ஆச்சு? நீ ஏதாவது செஞ்சியா?".
தேன்நிலவு, "அவர் அமெரிக்கா போன பிறகும் நான் இங்கேயே தான் இருக்கனும்னு சொன்னாரு.. நான் எப்படி இங்க தனியா இருக்க முடியும். அதனால் ஊருக்கு போய் இருக்கேன்னு சொன்னேன். அதான் பிரச்சனை".
கவிதா, "இதுல என்ன பிரச்சனை இருக்கு?".
தேன்நிலவு, "அவருக்கு நான் ஊருக்கு எல்லாம் போகக்கூடாதாம்.. இங்கேயே தான் இருக்கணுமாம்.. துணைக்கு வேணும்னா தாத்தாவும் பாட்டியும் இருப்பாங்களாம்..
அவங்க அத்தை வீட்டுக்கு போனா கூட நான் இங்கேயே தான் இருக்கணும்னு சொல்றாரு.. எனக்கு இங்க எல்லாமே புதுசு.. இங்க எதுவுமே தெரியாது.. நான் எப்படி தனியா இருக்கிறது" என்று சொல்லும் பொழுதே அவளுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
சிறு வயது முதலே அவர்களின் ஊரை தாண்டி வெளியூர் கூட சென்றது கிடையாது. அதிலும், எப்பொழுதுமே தன்னை சுற்றி ஆட்களுடனே இருந்து பழகியவளுக்கு இப்படி தனி ஊரில் தனிமையில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் மிகவும் கடினமான ஒன்றாக தான் தோன்றியது.
கவிதா, "நீ அவர்கிட்ட பேசி பார்க்கலாம் இல்ல".
தேன்நிலவு, "அவர் பேசுனா தானே.. நான் பேசினா முகத்தை திருப்பிக்கிட்டு போறாரு..".
கவிதா அவளின் தோளில் தட்டியவள், "சரி விடு.. அழாத.. எல்லாம் சீக்கிரமா சரியாகிடும். என்ன பண்றதுன்னு எனக்கு ஒன்னும் புரியல".
தேன்நிலவு, "இப்போ நான் ஊருக்கு போறேன்னு சொன்னது தானே அவருக்கு பிரச்சனை.. நான் இங்கேயே இருக்கேன்" என்றாள் தன் கண்களை துடைத்தபடி.
கவிதா, "இங்கேயா.. எப்படி நீ தனியா இருப்ப?".
தேன்நிலவு, "பரவாயில்ல டி.. அப்புறம் வேற என்ன பண்றது.. நான் ஊருக்கு போறேன்னு சொன்னா தான் அவர் கோவிச்சுக்கிறாரே.. அவர் இங்க இருக்கும் பொழுதே இந்த இடத்தை எல்லாம் கொஞ்சம் பழகிட்டா ஒன்னும் பிரச்சனை இருக்காது. அதான் இந்த அப்பார்ட்மெண்ட்குள்ளவே கடை எல்லாம் கூட இருக்கே. ஏதாவது தேவைனா வாங்கிக்கலாம்.. நான் பார்த்துக்கிறேன்".
கவிதாவிற்கும் என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட விஷயம் அவர்களே முடிவெடுக்கட்டும் என்று எண்ணியவள், "சரி டி உன் இஷ்டம்" என்று முடித்துக் கொண்டாள்.
அன்றைய நாளும் அப்படியே கழிய..
அன்று இரவு அனைவரும் உணவருந்தும் வேளையில் தாத்தா, "மெய் ஊர்மி அப்பா போன் பண்ணி இருந்தாங்க.. இங்க ரிசப்ஷன் வைக்கிறது பத்தி உன்கிட்ட பேச சொன்னாருப்பா" என்றதும்.
சட்டென்று ஊர்மிளா மெய்யழகனை பார்க்க..
மெய்யழகன், "அதெல்லாம் எதுவும் தேவையில்லை தாத்தா" என்றதும் ஊர்மிளாவின் இதழில் யாரும் அறியாமல் ரகசிய புன்னகை அரும்பியது.
பாட்டி, "ஏன் வேண்டாம்னு சொல்ற? ரிசப்ஷன் வச்சா தானே உன் கூட வேலை பாக்குறவங்க இங்க நமக்கு தெரிஞ்சவங்க எல்லாரும் வருவாங்க.." என்கவும்.
மெய்யழகன் தேன் நிலவை தான் பார்த்தான்.
அவளோ அவன் பார்வையை உணர்ந்ததும் சட்டென்று தலையை தாழ்த்திக் கொள்ள..
மெய்யழகன், "வேண்டாம் பாட்டி.. டைம் இல்ல.. இன்னும் 10 டேஸ்ல நான் கிளம்பணும்" என்றான் உணவில் கவனத்தை செலுத்தியவாறு.
ரத்தினம், "என்னடா எதுக்குமே பிடி கொடுக்காமல் பதில் சொல்லுற.. இங்க இருக்கவங்களுக்கு எல்லாம் உனக்கு கல்யாணம் ஆனது பத்தி தெரிய வேண்டாமா?".
அவன் இன்னமும் தேன்நிலவின் விஷயத்தில் மாறவில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு..
ஊர்மிளா, "அவனே இப்படி ஒருத்தியை கல்யாணம் பண்ணதை எப்படி வெளியில் சொல்றதுன்னு தெரியாமல் தான் மறைக்க நினைக்கிறானோ.. என்னவோ..
இவங்க எல்லாம் அது தெரியாமல் ரிசப்ஷன் வைக்கிறது பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க" என்று எண்ணியவளின் இதழில் இப்பொழுதோ நக்கல் புன்னகை குடியேறியது.
மெய்யழகன் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், "சரி, ரிசப்ஷன் எல்லாம் வேண்டாம். சிம்பிளா பார்ட்டி அரேஞ்ச் பண்றேன். ரொம்ப க்ளோஸ் ஆனவங்களுக்கு மட்டும் சொன்னா போதும்" என்றவனோ எழுந்து அறைக்கு சென்று விட்டான்.
அவனுக்கோ சம்பந்தமே இல்லாமல் தேன் நிலவின் மேல் அத்தனை கோபம்.. தன் கையை கோபத்தில் இறுக்க முடியவன்.
"ரெண்டு நாள் ஆகுது.. நானும் உங்களோடு வரேன்னு ஏதாவது வாயை திறந்து சொல்லுறாளா என்று பாரு.. அப்படியே கல்லு மாதிரி இருக்கா.. அப்போ நான் மட்டும் தான் அவளை கூப்பிட்டு போகணும்னு நினைக்கிறேனா..
அவளுக்கு என் கூட வருவதில் விருப்பமே இல்ல போலருக்கு.. யாரா இருந்தாலும் அவங்க ஹஸ்பண்ட் வெளிநாட்டுக்கு வேலைக்கு போறார்னா நானும் கூட வரேன்னு ஒரு தடவையாவது வாயைத் திறந்து சொல்லுவாங்கல்ல.. இவ ஏன் அப்படி எதுவுமே சொல்ல மாட்டேங்குறா" என்று புலம்பியவாறு நின்று இருக்க.
மெதுவாக அறை கதவை தட்டியவாறு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் தேன்நிலவு.
அவளை பார்த்தவன், "என்ன" என்றான் வெடுக்கென்று.
இவ்வளவு நேரம் அவனிடம் என்னென்ன பேச வேண்டும் என்று மனப்பாடம் செய்து கொண்டு உள்ளே நுழைந்தாளோ அவனின் ஒற்றை வார்த்தையிலேயே அனைத்தும் சடுதி
யில் மறந்து போனது.