ராகவேந்திரா இல்லம்
அனைவரும் காலை வேலையில் அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். அன்று விஹான் காலையிலேயே சாப்பிட்டு அவர்களது பள்ளிக் கல்லூரிகளை மேற்பார்வையிடும் பொருட்டு முதலில் அவர்களது மருத்துவக்கல்லூரிக்கு கிளம்பிவிட்டான்.
விராஜோ தன் காதலியைச் சமாதானம் செய்கிறேன் எனச் சென்று, அவனே எதிர்பாராமல் சிறு விருந்தே சுவைத்துவிட்டு வந்து, கிளம்பி அன்றைய வேலைக்காகத் தன் பெரியப்பாவுடன் சட்டமன்றத்துக்கு கிளம்பிவிட்டான்.
ஷிம்ரித் வேலை காரணமாகக் கடலூரில் இருக்க, நிஹாரிகா குழந்தைபெற்று கவின் வீட்டில் இருந்தாள். கல்பனாவுக்கு அனைவரின் வயிற்றையும் நிறைத்து அவர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் வரை அடுப்படிக்கும், உணவு பரிமாறும் இடத்திற்கும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்.
சிறிது நேரத்தில் விமலேஷூம் வர அவருக்கும் உணவு பரிமாற, அவரும் உணவருந்தி விட்டு அவர்களது கட்டுமான நிறுவனத்திற்கு சென்றுவிட்டார். கடைசியாக வீட்டில் எஞ்சி இருப்பது கல்பனாவும் அவரின் தங்கை கவிதாவும் மட்டுமே.
மாடியில் அவர்களது அறையில் கிளம்பிக் கொண்டிருந்தார் கவிதா. குளித்து முடித்து வந்தவர் அவரின் முடியை உலர்த்தும் கருவியின் உதவியால் உலர்த்தியவர் தலையை வாறி, இரு புறமும் முடி எடுத்து ஒரு சின்னக் கிளிப்பில் அடக்கி மீதியை விரித்து விட்டிருந்தார்.
மடிப்பு கலையாமல், தும்பை மலரின் நிறத்தில் உயர் ரக காட்டன் சேலையில் கம்பீரமாக இறங்கி வந்தார் கவிதா. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார் மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திலும் முக்கிய பொருப்பில் இருக்கிறார்.
அவர் ஒரு வழக்கை எடுத்தால் அதில் தோல்வி என்பதே இல்லை என்ற பெயருக்குச் சொந்தகாரர். தோற்றும்படியான வழக்கை அவர் எடுப்பதே கிடையாது. ஒரு வழக்கை அவர் எடுத்துவிட்டால் அதை எந்த எல்லைக்கும் சென்று அதில் வெற்றியை நிலைநாட்டி ‘ஜீரோ ஃபெய்லியர்’ என்னும் பெயரைத் தக்கவைத்துள்ளார்.
பல பெரிய பெரிய ஆண் வழக்கறிஞர்களைவிட கவிதாவுக்கு போட்டி அதிகம். அவரின் சந்திப்புக்காகக் காத்திருப்போரின் பட்டியலும் அதிகம். அவர் தங்களது வழக்கை எடுத்துவிட மாட்டாரா என அவர் அலுவலக வாயிலில் தவமிருப்போரும் அதிகம். அந்த அளவுக்கு உயர்நீதி மன்றத்தில் பெண்சிங்கம் போல வலம் வருவார். அவர் வாதமும் பெண்சிங்கத்தின் கர்ஜனை போல இருக்கும்.
எதிரிகளை நின்று நிதானமாக வேட்டையாடுவதில் வள்ளவர். அவர் அடங்கும் ஒரே இடம் அவரின் அக்காவின் கணவர் சந்தோஷிடம் மட்டுமே. அவர் வார்த்தைக்கு மட்டுமே எதிர்ப்பேச்சு வராது கவிதாவிமிருந்து. விமலேஷ்ஷை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவார்.
அக்கா கல்பனாவின் மீது பாசம் இருக்கும் ஆனால் மதிப்பு இருக்காது. காரணம் அவர் படித்த படிப்பு மொத்தத்தையும் வீணாக்கிவிட்டு வீடே கதியென அடுத்தவர்களின் சம்பாத்தியத்தில் நிற்கிறார், சுயமாக இருக்கவில்லை என்ற எண்ணத்தால் கவிதாவின் மனதில் கல்பனா கீழ் இறங்கிவிட்டார்.
இதில் லாவகமாக ஒன்றை கவனிக்க தவறிவிட்டார் கவிதா, தான் பெத்த இரு குழந்தைகளையும் அவர் தான் வளர்த்தார் என்பதை. அவரும் இவரைப் போல் வேலைக்குச் சென்றிருந்தால் ஒன்னுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஆதரவுக்கு ஆள் இல்லாமல், அவர்களின் இஷ்டத்துக்கு வளர்ந்து, அதீத பணத்தால் சீரழிந்து நின்றிருப்பார்கள்.
இவர் வேலைக்குச் சென்று விட மூவரையும் ஒற்றை ஆளாக வளர்த்து, அவர்களுக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்து, ஒழுக்கத்தை சொல்லிக்கொடுத்து, நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் சொல்லிக் கொடுத்து, இன்று இந்த நிலைமைக்குக் கொண்டுவந்தது அவரல்லவா! ஆனால் அதையெல்லாம் வசதியாய் மறந்து போனார் கவிதா.
தங்கை கம்பீரமாக வரும் அழகை பார்த்துக்கொண்டிருந்தார் கல்பனா.
“என்னத்த அப்படி பார்க்கிற? நான் என்ன பேஷன் ஷோ’லயா நடந்து வாரேன்? பராக்கு பார்க்காம சாப்பாடு எடுத்து வை. லேட் ஆச்சு. கிளம்பனும்” என வந்ததும் வராததுமாக எரிந்து விழுந்தார்.
“இதோ ரெடியா தான் இருக்கு. ஏன் கத்துற? உட்காரு” என அவரை அமரவைத்து சாப்பாடு பரிமாறினார் கல்பனா. தங்கை தன்னிடம் இப்படி பேசுவதை எல்லாம் அவர் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த வீட்டில் கல்பனா தான் அனைவருக்கும் ராணி. அப்படி தான் அனைவரும் அவரை நடத்துவார்கள் விமலேஷ் முதற்கொண்டு. அந்த ராணி இவர் கண்களுக்கு மட்டும் சேவகி மாதிரி தெரிந்தார் போலும்.
தன் தேவைக்கு மட்டும் கல்பனாவை பயன்படுத்திக் கொள்ளும் குறுகிய மனம் கவிதாவுக்கு. வீட்டிலிருப்பவர்களுக்கும் கவிதாவின் இந்தக் குணம் பிடிக்காது. ஆனால் யாரையும் இதில் தலையிட விடமாட்டார் கல்பனா.
“என் தங்கச்சி என்னை பேசுறா? உங்களுக்கு என்ன? அவ பிறந்ததிலிருந்து அப்படி தான்.. தேவையில்லாம அவளை திட்டாதீங்க” என அனைவரின் வாயையும் அடைத்து விட்டார். எங்கே தன் தங்கை கோபம் கொண்டு குடும்பத்தைப் பிரித்து விடுவாளோ எனப் பயந்தவர், கவிதாவின் இந்தக் குணத்தை பொருட்படுத்தாமல் இருக்க பழகிக் கொண்டார்.
கவிதாவும் சாப்பிட்டு முடித்துக் கிளம்பிவிட வீடே வெறிச்சோடிப் போய்விட்டது. வீட்டில் அனைத்திற்கும் வேலையாட்கள் இருக்கின்றனர், ஆனால் அடுப்பில் வைத்து இறக்குவது மட்டும் தான் கல்பனாவின் வேலை. அதை அவர் விடவும் மாட்டார். அவருக்கே முடியவில்லை என்றாலும் எழுந்து வந்து எளிமையான சமையலாவது செய்து வைத்து விடுவார்.
இனி மதிய சாப்பாடு செய்யும் நேரம் வரையிலும் அவருக்கு வேலை கிடையாது, அனைத்தையும் வேலையாட்கள் பார்த்துக் கொள்வார்கள். மேற்பார்வை மட்டும் பார்த்தால் போதுமானது அதனால் போனை எடுத்து மருமகளுக்கு கால் செய்தார்.
“நிஹாம்மா”
“அத்தை! என்ன பண்றீங்க? எல்லாரையும் அனுப்பியாச்சா?”
“ம்ம். இப்போ தான் எல்லாரும் போனாங்க”
“உங்க தங்கச்சி போயாச்சா?”
“ம்ம் போய்ட்டா”
“இன்னைக்கு எதுக்கு திட்டுனாங்க?”
“அதெல்லாம் இல்ல. சாப்பிட்டு போய்ட்டா”
“நல்லா சமாளிங்க.. எனக்குத் தெரியாதா? கல்யாணம் ஆனதிலிருந்து பார்க்குறேன்”
“விடு அவ குணம் அது தான்”
“ஆனாலும் இவ்ளோ பொறுமையா போகக் கூடாது அத்தை! உங்கள வச்சு தான் என்னை மதிப்பாங்க”
“உன்னை ஒன்னும் சொல்லமாட்டா”
“சொன்னா நான் திருப்பிக் கொடுப்பேன் அதுனால பேசாம இருக்காங்க.. நீங்களும் திருப்பிக் கொடுத்தா உங்க கிட்டயும் அப்படி நடப்பாங்க.. ஆனா நீங்கத் தான் சொல்லுங்க மஹாராணினு கும்புடு போடுறீங்களே!”
“விடு.. என் குட்டியம்மா என்ன பண்றா?”
“விளையாடுறா.. இனி இவள வச்சி தான் அவ சின்னப் பாட்டிய அடக்கனும். பாட்டிய சின்னப் பாட்டி திட்டினா சின்னப் பாட்டி அடிச்சிடலாம் ஷரா குட்டி” எனக் குழந்தையிடம் பேசிக்கொண்டே குழந்தையை வீடியோ காலில் தன் மாமியாருக்கு காட்டினாள்.
பரமேஸ்வரி “கல்பனா என்ன பண்ற?”
“இருக்கேன்ம்மா உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு?”
“எனக்கென்ன என் கொள்ளுபேத்தி வந்தபிறகு எனக்கு 10 வயசு குறைஞ்சு போச்சு”
“அது சரி..” என அனைவரிடமும் பேசிவிட்டு போனை வைத்தார். நிஹாரிகாவுக்கு தான் மனம் பாரமாகி போனது.
நிஹாரிகா அந்த வீட்டுக்குச் சென்ற ஓரிரு நாட்களிலேயே கவிதாவின் குணம் புரிந்துவிட்டது. நிஹாரிகாவின் அம்மாமேல் இருந்த கோபத்தை நிஹாரிகா மேல் காட்ட ஆரம்பித்தார் கவிதா. நிஹாரிகாவை கல்பனா போல நினைத்துவிட்டார் போலும்.
ஆனால் அவள் நிஹாரிகா ஆச்சே ஆனானப்பட்ட கலெக்டரயே வந்து பார் என்று நிற்பவள் இவரிடமா அடங்குவாள்? ஒரு நாள் காலை வேலைக்குக் கிளம்பும் நேரம் அங்குச் சாப்பிடுமிடத்தில் ஷிம்ரித்துக்கு பரிமாறிவிட்டு அவனுடன் சேர்ந்து சாப்பிட்டவள் அவன் சென்றதும் கல்பனாவை சாப்பிடுமாறு கூறி அவரை அமர வைத்துச் சாப்பாட்டு பரிமாறிக்கொண்டிருந்தாள். அப்போது சாப்பிட வந்த கவிதா நிஹாவிடம்,
“வீட்டுல சும்மா இருக்குறவங்க மெதுவா சாப்பிட்டா என்ன? நீ எனக்கு எடுத்து வை” என அவளைக் கல்பனா போல வேலை ஏவினார்.
நிஹாரிகா அவளாக அவள் மாமியாருக்கு மனமுவந்து செய்து கொண்டிருப்பது வேறு ஆனால் அவர் அவளை வேலைக்காரி போலல்லவா பேசிக்கொண்டிருக்கிறார். அவளுக்குச் சுர்ரென ஏற, அடுப்படியை நோக்கி உள்ளிருக்கும் வேலையாட்களை அழைத்தவள்,
“சரசக்கா.. சின்னத்தைக்கு சர்வ் பண்ணுங்க” எனக்கூற, படக்கென எழுந்துவிட்டார் கவிதா.
“என்ன! வேலைக்காரி சர்வ் பண்ணவா? ஏன் அவளுக்குச் சர்வ் பண்ற நீ எனக்குப் பண்ண மாட்டியோ?”
“நான் இந்த மாவட்ட கலெக்டர். எனக்கு உங்களுக்கு எல்லாம் சர்வ் பண்ண நேரம் இல்லை. நீங்க எப்படி பிஸியோ அதே போல நானும் பிஸி தான். சரசக்கா சர்வ் பண்ண வேணாம்னா செல்ப் சர்வ் பண்ணிக்கோங்க” எனக்கூற கல்பனாவை முறைத்தார் கவிதா.
“நிஹாம்மா நம்ம அத்தைடா. அப்படி பேசாத.. நீ உட்காரு கவிதா நான் பரிமாறுறேன்”
“தேவையில்ல” எனக் கோபத்தோடு தட்டை உதறிவிட்டு “கேவலம் அந்த மஞ்சரி மக நீ.. உனக்கு எல்லாம் என் முன்னாடி நின்னு பேசத் தகுதியே கிடையாது” எனக்கூற,
அவரைச் சொடக்கிட்டு அழைத்த நிஹாரிகா “நான் மஞ்சரி மகளா இருக்கலாம். ஆனா என் இரத்தம் என் அப்பா கவினோடது.. அதே இரத்தம் தான் உங்க உடம்புலயும் ஓடுது. அதுனால உங்களுக்கு எந்த விதத்துலயும் நான் குறைஞ்சவ கிடையாது. இனி எனக்கான மரியாதை நீங்கக் குடுத்தா உங்களுக்கான மரியாதை கிடைக்கும் இல்ல அத என் வாயால சொல்லமாட்டேன்”
“என்ன மிரட்டுறியா?”
கல்பனா “விடுங்க இரண்டு பேரும் ஏன் இப்படி ஏட்டிக்கு போட்டி பேசுறீங்க? நிஹாம்மா உனக்கு டைம் ஆச்சு நீ கிளம்பு. கவிதா நீ உட்காரு சாப்பிடு” எனக்கூற, நிஹாரிகா மாமியாரை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
“என்ன மருமகள பேச விட்டு வேடிக்கைப் பார்க்குறியோ?”
“என்னைப் பேசுன.. கூடப்பிறந்தவனு பொறுத்து போனேன், அவ எப்படி பொறுப்பா? அவளுக்காக இல்லாடியும் அவ பதவிக்கு ஒரு மதிப்பு இருக்குல.. ஆனா நீ என்னை மாதிரி அவள நடத்துனினா பேசத் தான செய்வா.. நான் பொறுக்கலாம் அவளையும் பொறுத்து போனு எப்படி சொல்ல முடியும். அது அவளோட சுய மரியாதை சம்பந்தப்பட்டது. நீ அதுல கைவச்சா அவ அப்படி தான பேசுவா.. என்னைப் பேச உனக்கு உரிமை இருக்கு ஆனா என் மருமகளை பேச உனக்கு உரிமை இல்லை” எனக்கூறவும், எதுவும் பேசமுடியாத கோபத்தில் விறுவிறுவெனக் கிளம்பிவிட்டார்.
அதிலிருந்து கவிதாவுக்கும், நிஹாரிகாவுக்கும் ஆகாது. இருவரும் ஒருவர் இருக்கும் இடத்தில் மற்றவர் இருக்க விரும்புவதில்லை. நிஹாரிகாவுக்கு தன் மாமியாரை அவர் மட்டம்தட்டி பேசுவது பிடிக்காது ஆனாலும் கல்பனாவுக்காகப் பொறுத்துப் போகிறாள்.
*******
இங்குக் கல்லூரிக்கு வந்த விஹானுக்கோ காலையில் தங்களது கல்லூரியில் தன் தம்பியின் கார் நிற்பதைப் பார்த்ததும் ‘என்ன காலையிலேயே இவன் வண்டி இங்க நிக்குது.. எதுவும் பிரச்சனையோ? அந்த சூர்யான்ஷ் பதிலுக்கு எதுவும் பண்ணிட்டானா? அதுதான் தனியா பேச வந்திருக்கானோ?’ என நினைத்தவன் காரின் வேகத்தைக் குறைத்து தம்பியின் காரின் அருகில் நிறுத்தித் திரும்பி அவனைப் பார்க்க மூச்சடைத்துவிட்டது. தம்பி அவன் காதலியின் உதட்டை இரசித்து, ருசித்துக்கொண்டிருந்தான். உடனே முன்னால் திரும்பிவிட்டான்.
‘எருமைமாடு காலேஜ்ல வச்சு என்ன வேலை பண்ணிட்டு இருக்கான்.. இவன’ எனக் கோபத்தில் ஹார்ன் சத்தத்தை விடாமல் எழுப்பினான். அதில் தன்னுனர்வு வந்த விராஜ் திரும்பிப் பார்க்க அவனைத் தீப்பார்வை பார்த்துவிட்டு எதுவும்பேசாமல் அவனறைக்கு வந்துவிட்டான்.
அதில் தம்பியின் மேல் கொலைவெறியில் இருந்தான். கல்லூரியில் வைத்துத் தம்பி செய்த காரியத்தால் கோபமா? அல்லது தனக்கு இப்பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற கோபமா அது அவன் மட்டுமே அறிந்த விஷயம்.
அறைக்கு வந்ததும் முதலில் விராஜ்க்கு தான் அழைத்தான் விஹான். அண்ணனின் அழைபேசி எண்ணைப் பார்த்ததும் புரிந்து கொண்டான் வண்டை வண்டையாகத் திட்டப்போகிறான் என்று. அதனால் அழைப்பை ஏற்கவே இல்லை.
மீண்டும் மீண்டும் அழைக்க ஒரு கட்டத்தில் எடுத்துவிட்டவன்,
“போன் எடுக்கலனா விட மாட்டியா? ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கே “
“ஹ்ங் உன் மீட்டிங் என்னனு எனக்கு தெரியாது. எருமை மாடே காலெஜ்ல பண்ற வேலையாடா அது?”
“எது?” என வெகுசாதாரணமாகக் கேட்க,
“கொன்றுவேண்டா..”
“கத்தாத.. ஒரு சின்னப் பிரச்சனை சமாதானம் பண்ண வந்தேன் கொஞ்சம் அதிகமாகச் சமாதானம் ஆகிட்டோம் அவ்ளோ தான்”
“செறுப்பு பிஞ்சிறும் ராஸ்கல்.. என்னடா இது? வீட்டுக்குத் தெரியாம கல்யாணத்துக்கு முன்ன பண்ற காரியமாடா அது?”
“இதெல்லாம் வீட்டுக்குத் தெரிஞ்சா ப்ரோ பண்ணுவாங்க?” என்றான் வெகுநக்கலாக.
“இங்க பாரு கல்யாணம் வரைக்கும் ஒழுக்கமா இரு சொல்லிட்டேன். படிக்கிற புள்ளைட்ட என்னடா பண்ற?”
“ப்ரோ உனக்கு இந்த ஹார்மோன்ஸ் எல்லாம் வேலை செய்யுதா? இல்லையா? இதெல்லாம் இப்போ பண்ணாம எப்போ பண்றது? எதுக்கும் நீ ஒரு நல்ல டாக்டரைக் கன்செல்ட் பண்ணேன்.. நம்ம அண்ணனோட காதல் கதை எல்லாம் தெரியுமா? அவர் எல்லாம் யாருக்கும் தெரியாம கல்யாணம் கட்டி குடும்பமே நடத்திருக்கார்.. நான் ஒரு முத்தம் அதுவும் ஒரே ஒரு அசைவ முத்தம் அதுக்கு போய்ப் பொங்குறீயே.. போய்க் கணக்கு வழக்க பாரு ப்ரோ” எனப் போனை வைத்துவிட்டான்.
அந்தக் கோபத்திலிருந்தவன், அவனது அறை வாயிலில் சுரேகா மேடம் வெகுநேரமாக அமர்ந்திருப்பதை கண்காணிப்பு கேமரா மூலமாகப் பார்த்தவன், பெல்லை அடிக்கப் பியூன் வந்தவர் “மேடம் உங்களைப் பார்க்க வேண்டுமாம்” எனக்கூற, அவரை உள்ளே அனுப்பக்கூறினான்.
அடுத்த நொடியே விஹானின் கதவை ஒருமுறை தட்டிவிட்டு அறைக்குள் வந்தார் சுரேகா மேடம் வயது எப்படியும் 45 இருக்கும் ஆனால் இன்னமும் திருமணமாகாததால் அம்மணிக்கு 25 என்ற நினைப்பு.
“எஸ் மிஸ் சுரேகா.. சொல்லுங்க என்ன விஷயம்?” எனக்கேட்க, பிரணவிகா நேற்று செய்த அத்தனையையும் கூறிவிட்டார். அவனுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், ஆசிரியருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கனும் அல்லவா? அவள் செய்தது தவறு என்று தான் அவன் மனம் கூறியது.
பிரணவிகாவும், சாத்விகாவும் விஹானுக்கு தாய்மாமன் மகள்கள், அவனின் சொந்தம் என இங்குக் கல்லூரியில் யாருக்கும் தெரியாது. தெரியும் படி யாரும் நடக்கவும் மாட்டார்கள். குடும்பம் வேறு, தொழில் வேறு என நினைப்பவர்கள் இவர்கள், அப்படியிருக்கும்போது கல்லூரியில் சொந்தம் கொண்டாடினால் படிப்பிலும் மெத்தனம் வந்துவிடும் என்பதற்காகவே அவர்களைச் சொந்தம் என இங்குத் தெரியப்படுத்தவே இல்லை.
அதனால் சுரேகா நேற்றே விமலேஷ்ஷிடம் புகார் கூறிவிட்டாலும், இன்றும் இதைச் சாக்காக வைத்து விஹானிடம் பேச வந்துவிட்டார். அவனது கம்பீரமும், அழகும், அழுத்தமும் ஆண்டிகளைக்கூட கவித்திவிடும் போல, ஆனால் அவன் மனம் கவர்ந்தவள் கண்களுக்கு மட்டும் அவன் வில்லனாகவே தெரிவது தான் விதியோ!
“ஓ.கே மேடம் நான் ஆக்ஷன் எடுக்குறேன்” எனக்கூறியும் செல்லாமல் அமர்ந்து இருக்க, அவளை அழைக்காமல் செல்லமாட்டாரெனப் புரிந்து பியூன் மூலமாக பிரணவிகாவை அழைத்து வரக்கூறினான்.
இங்கு லெக்சர் வகுப்பில் அமர்ந்திருந்தவளை கல்லூரியின் பியூன் வந்து அழைக்க,
“அய்யோ எதுக்குடி அந்த சிடுமூஞ்சி என்னைக் கூப்பிடுது?”
“எனக்கென்ன கேர்ள் தெரியும்?”
“நீயும் வா”
“உன்னைக் கூப்பிட்டா நீ போ கேர்ள்.. நான் எதுக்கு?”
“பயமா இருக்குடி”
“இன்னைக்கு என்ன பண்ணி தொலைச்ச?”
“தெரியலயே.. நான் என்ன வேணும்னா செய்றேன்.. ஆனா இந்த சிடுமூஞ்சி வாரம் ஒரு தர என்னைக் கடிச்சு கொதறாம இருக்காது.. கடவுளே இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ! வாடி..” என அவளையும் கூட அழைக்க,
“பிரணவிகா.. இன்னும் என்ன பண்ற? டிஸிப்பிள் கொஞ்சமும் இருக்குறதில்ல உனக்கு.. கூப்பிட்டு எவ்ளோ நேரம் ஆகுது அங்க என்ன பேச்சு. கிளம்பு” என ஆசிரியர் கடிய, அமர்ந்திருந்த சாத்விகாவின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
“சாத்விகா சிட் டவுன். பிரணவிகா யூக்கோ அலோன்” எனக்கூற, ஒன்றும் செய்ய முடியாமல் தனியாகச் சிங்கத்தின் குகைக்குச் சென்றது அந்த மான்.
சிங்கம் மானை வேட்டையாடுமா? அல்லது மான் சிங்கத்தை வேட்டையாடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.