எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

varnanngal 5

Geethasuba

New member

வர்ணங்கள் 5



ஜெயந்தனின் சோர்வற்ற நிலை கண்டு அலுவலகத்தில் இருப்பவர்களுக்கே இவன் மனிதனா இல்லை ரோபாவா என்ற சந்தேகம் வந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு புன்னகை மன்னனாக வேறு வலம் வந்தான். மற்றவர்களிடம் பேசும்பொழுது முன்பு இல்லாத அளவுக்கு நிதானம் வந்திருந்தது. அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சர்யம் . இருந்தாலும் அவனது நினைவுகளின் அலைக்கழிப்பிலிருந்து வெளியே வரமுடியவில்லை. அது ஒருவிதமான போதையென புரிந்து கொண்டவன் அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டான்.

ஜெயந்தன் அவன் எப்போதுமே ஆணழகன்தான். மனம் பாதிப்படைந்து தன்னை மறந்திருந்த நேரத்திலும் கூட சுய பராமரிப்பில் அவனது கவனம் அதிகம் இருந்திருந்தது. அவனது மனைவி கன்யாவுக்கும் கூட அவன் ஒருநாள் ஷேவ் செய்யாமல் இருந்தால் பிடிக்காது.எப்போதும் அழுத்தமான முகம்கொண்ட தனது கணவன் நேர்த்தியான ஆடைகள் அணிந்திருக்க வேண்டும் என்று விரும்பினாள் . அவள் இறக்கும் ஒருநாள் முன்பு கூட இருவருமாக ஷோப்பிக் சென்று ஆடைகள் வாங்கி வந்திருந்தார்கள். கன்யாவை மனதில் நிறுத்தியே எப்போதும் நேர்த்தியாக இருப்பான் .



'கன்யா அவளது நினைவுகளில் மட்டும் நாட்களைக் கடத்திவிடலாம்' என்று நினைத்திருந்த ஜெயந்தனுக்கு முகமறியா ஒரு பெண்ணின் குளுமையும்,இளமையும் அவளோடு தனித்திருந்த நேரங்களுமாக மனதளவில் ஆட்டிப்படைக்க, இன்னொரு பக்கம் அவனது பெற்றோர் அவனுக்காக இணையை தேட ஆரம்பித்து விட்டார்கள். அந்த இணை அழகிலும் அறிவிலும் தங்களது மகனது வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டுவர வேண்டும் என பிரயர்த்தனப் பட்டுக்கொண்டிருந்தார்கள்.



நிஜத்தில் மகனது மூளை விழித்துக்கொண்ட பிறகு, நடப்பவை மட்டும் புரிந்தாலும்,அவனது ஆழ்மனதில் கன்யாவின் படிமத்தின் மீது சுபாவின் நினைவுகள் சிங்காசனம் போட்டு அமர்ந்திருப்பது இன்னமும் அவர்களுக்குத் தெரியாதே.



கணவன் மனைவியை பிரிப்பது எவ்வளவு பெரிய பாவம் ?அதைவிட பெரிய தவறு கணவனை அவனுக்காக மட்டும் நேசித்த சுபாவை மனைவி எனும் அதிகாரத்தை பறித்துக்கொண்டு அனுப்பிவிட்டார்கள். படிக்கவைத்தேன், அவளது வாழ்க்கைக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்து வாழ வைத்திருக்கிறேன் என்றெல்லாம் ஆயிரம் சொன்னாலும்,செய்த ஹிமாலயத் தவறு அதை திருத்தி அமைக்க முடியுமா?



அத்துடன் அவர்களது மகனுக்கு ஆறு வயதில் மகள் இருக்கிறாள். அவளுக்கான உரிமை?அதுவும் அற்றுப்போக வேண்டுமா..குழந்தை தன்னுடையது என்று தெரியும் பொழுது ஜெயந்தன் எப்படி உணர்வான் என்றே புரியவில்லை.



ஆனால் சுபாவைப் பொறுத்த வரைக்கும் மகளுக்கும் தனது கணவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.அதனால்தான் அவள் கர்ப்பமுற்று இருப்பதைப்பற்றி ஜெயந்தன் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டாள். தன்னிடம் தாலியை கழற்றி வாங்கிக்கொண்டு திரும்ப அனுப்பியவர்கள் ,அவர்களை நம்பும் தைரியம் பெண்ணுக்கு இல்லை.



அதோடு சுய நினைவு வந்த பிறகு ஜெயந்தன் எப்படி மாறியிருப்பானோ தெரியாது.அவனைப்பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமலே திருமண வாழ்க்கையை வாழ்ந்து முடிந்ததன் சாட்சியாக குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு வந்தும் விட்டாள் .

ஜெயந்தன் வீட்டினர் ஒருவேளை கருவை கலக்க அழுத்தம் கொடுத்தாலோ,இல்லை வேறு விதமாக முயற்சி செய்தாலோ சுபாவால் என்ன செய்ய முடியும்? அவள் கணவன் அவளை காதலிக்காமல் இருந்திருக்கலாம்.அவளை உணராமல் இருந்திருக்கலாம். ஆனால்,இவளுக்கு தெரியுமே!கணவனும் மனைவியுமாக இருந்த அற்புதக் காதல் கணங்கள் அவை.மனம் முழுவதும் கணவன் மீதான காதலை மட்டுமே கொடுத்து , அவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அவனுயிர் தியா.



ஆயினும், அவன் ஜெயந்தன் தனது மகள் தியாவுக்கு ஈன்ற தகப்பன்(biological father) தான்.அதற்காக குழந்தை மீது அவனுக்கு எந்த உரிமையும் இல்லை.அதைக் கொடுக்கவும் சுபா தயாராக இல்லை. என்னவோ குழப்பம் தான். கணவன் மீதான காதல் இம்மியளவும் குறையாத நிலையில் அவன் கண் முன்னே வரும்பொழுது எப்படி அவள் இதையெல்லாம் கையாளப்போகிறாளோ தெரியாது.



ஜெயந்தனின் தனிப்பட்ட இ மெயிலுக்கு அவனது பெற்றோர் மூலமாக நிறைய பெண்களின் புகைப்படங்களும் குறிப்புகளுமாக அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை எல்லாம் பார்க்க கூட விருப்பமும் நேரமும் இல்லாதவனாக தனது வேலைகளில் முழுமையாக ஈடுபாடு கொண்டான் ஜெயந்தன்.

அவனது நிலையை சோதிப்பதற்கு எண்டு வந்து சேர்ந்தாள் சாயா . சாயா பரம்பரை பணக்கார வர்கத்தை சேர்ந்தவள். ஏற்கனவே லண்டனில் இருந்த பொழுது திருமணம் முடிந்து அந்த திருமணம் மூலமாக நான்கு வயதில் மகன் உண்டு.மகன் அவன் தந்தையுடன் இருக்கிறான். தனக்கு அந்த குழந்தை வேண்டாம் இன்னொரு வாழ்க்கை அமைத்துக்கொள்ள தடையாக இருக்கும் என்று நினைத்தே குழந்தையின் பொறுப்பை ஏற்க அவள் தயாராக இல்லை.



நல்ல நிர்வாகியான சாயா, ஜெயந்தனின் அப்பாவால் தெரிவு செய்யப்ப்பட்டவள்.தங்கள் மகனது அலுவலக சுமையை குறைப்பதற்க்காகவும்,இன்னொரு திருமணம் முடிக்கவுமாக சாயா தெரிவு செய்யப்பட்டிருக்கிறாள்.அவளுக்கும் ஜெயந்தன் மீது விருப்பம் தான்.ஏற்கனவே தொழில் முறை விழாக்களில் பார்த்திருக்கிறாள். அவனது முதல் திருமணம் பற்றி அறிந்து வைத்திருந்தாள் .அதில் எல்லாம் அவளுக்கு மன சுணக்கம் கிடையாது. கன்யா பற்றி மட்டும் தெரிந்து வைத்திருந்தாள் .ஜெயந்தனின் இரண்டாவது மனைவி சுபா பற்றிய விஷயங்கள் அவளுக்கு தெரியாது.யாரும் தெரியப்படுத்தவும் இல்லை.



எந்த நேர்காணலும் இல்லாமல் நேராக ஜெயந்தனின் அந்தரங்க காரியதரிசியாக சேர்ந்தாள் சாயா. அவளது தந்தையின் தொழிலில் அவளுக்கு இஷ்டம் இல்லை. லண்டனில் இருந்த பிரபல நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவள் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் இந்தியா வந்து விட்டாள் .ஜெயந்தனின் அப்பாவும்,சாயாவின் அப்பா தானேஸ்வரனும் நெருங்கிய நண்பர்கள்.அந்த நட்பின் காரணம்தான் சாயா இன்று இங்கே நின்று கொண்டிருக்கிறாள்.

சாயாவின் கண்கள் அலுவலகம் வந்ததிலிருந்து ஜெயந்தனை விட்டு அகலவில்லை. ஜெயந்தனின் காரியதரிசி என்று அவளுக்கு பதவி கொடுக்கப் பட்டிருந்தாலும் அவளது வேலை அதற்கும் அதிகம். நிறுவனத்தின் பல்வேறு தொழில்களில் ஜெயந்தன் வசமாக இருப்பது ஆறு தொழில்கள். அதில் மிகவும் முக்கியமானது மூன்று முக்கிய தொழில்கள்.



ரியல் எஸ்டேட் தவிரவும் பத்திரிக்கை தொழிலும் அதை சார்ந்த தனியார் தொலைகாட்சி நிறுவனமும் இருக்கிறது.அதன் பொறுப்பை ஜெயந்தன் தான் பார்த்துக்கொள்கிறேன். இயந்திர உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை இந்திய நிறுவங்களுக்கு விற்பதுவும் , சூரத்தில் இருக்கும் நிறுவங்களோடு ஒப்பந்தத்தின் பேரில் ஏற்றுமதி செய்வதும் கூட அவனது கட்டுப்பாட்டில் இருக்கிறது.



சாயா , ஜெயந்தனின் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் சம்மந்தமான விஷயங்களில் காரிய தரிசியாக இருக்கிறாள். அவளது தகுதிகள் அதிகம் தான். ஆனால்,வேலை இங்கு முக்கிய விஷயம் அல்லவே.சாயாவின் பார்வை ஜெயந்தனை துளைத்தது. அதன் அர்த்தம் புரியாதவன் இல்லை அவன். ஆனாலும் ஜெயந்தனின் முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை. வெறும் வேலை பற்றி மட்டும் பேசினான். அவளது முகத்தை பார்க்கக் கூட அவன் முற்படவில்லை.



சாயாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. முதல் நாளே அவனது பார்வை தன் மீது படியும் எண்டு அவள் எதிர்பார்ப்பது தவறென தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள். இருக்கட்டும்,அவளும் எங்கே போகப் போகிறாள்..அல்லது அவன் தான் வேறெங்காவது சென்றுவிடுவானா?



முக்கியமாக ஜெயந்தனின் பெற்றோர் ஆதரவு தனக்கு முழுமையாக இருக்கும் பொழுது கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன? ஒருமாத பயிற்சிக் காலம்.வழக்கமாக மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றாக வேண்டும்.சாயாவுக்கு ஏற்கனவே முன் அனுபவம் இருப்பதால் ,ஒரு மாதம் போதும் என்றுவிட்டான் ஜெயந்தன்.அதுவும் அந்த நிறுவனங்களை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும்தான்.

அந்தப் பதவியில் இப்போது இருக்கும் ஸ்ரீஜாவுக்கு பதவி உயர்வு கொடுத்ததன் காரணமாக இப்போது சாயா வந்திருக்கிறாள்.ஸ்ரீஜாவும் இன்னும் ஒரு மாதத்தில் பதவி உயர்வை ஏற்றாக வேண்டும்,அதற்க்காக சாயாவுக்கு வேகமாக பயிற்சி கொடுக்கத் தொடங்கினாள் ஸ்ரீஜா.



சாயாவின் மனமோ பயிற்சியை பற்றி யோசிக்காமல் ஜெயந்தனை பற்றியே சிந்தனை செய்தது.அவனது ஆளுமை ,கம்பீரம்,அழகு,ஆண்மை மிகு தோற்றம் ,கண்களை மட்டும் பார்த்து பேசும் நடத்தை என்று எல்லாமுமாக சாயாவை பித்து பிடிக்க செய்தது. திருமதி.ஜெயந்தனாகத் 'தான் ' என்று மனதில் சொல்லிக் கொண்டவளுக்கு சிலிர்த்தது.



ஸ்ரீஜா இவளுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டே தனது வேலைகளை பார்த்ததில் அதிகம் சோர்ந்து போனாள் . பெரிய இடம். யாரிடமும் சொல்லி அங்கலாய்த்தால் கூட பிரச்சனையாகி விடக்கூடும் என்பதாலேயே வாயைத் திறக்கவில்லை. தனது அறைக்கு வேலை சம்மந்தமாக பேச வந்த ஸ்ரீஜாவின் சோர்வை ஜெயந்தன் வெகுவாக கண்டுகொண்டுவிட்டான்.



'இந்த அப்பா ஏன் தகுதியற்றவர்களை வேலைக்கு சேர்க்கிறார்..இவர்களால் எல்லோருக்கும் துன்பம்'என்று மனதுள் பேசியவாறே ஸ்ரீஜாவிடம் "என்ன ஸ்ரீ ..புதுசா வந்திருக்குறவங்க எப்படி கத்துக்கறாங்க? உங்களுக்கு ஹாண்டில் பண்ண ஈசியா இருக்கா?" என்று கேட்டு வைத்தான்.



ஸ்ரீஜாவுக்கும் தெரியும், ஜெயந்தன் சாயாவை பற்றி கணித்துவிட்டுதான் இங்கே தன்னிடம் இப்படி கேட்கிறான் என்று. "இன்னிக்குத் தானே முதல் நாள் சார், போக போக சீக்கிரம் கத்துப்பாங்க "என்றுவிட்டு தனது வேலைகளில் கவனத்தை செலுத்தலானாள்.



மலேசியாவிற்கு வந்த முதல் வாரத்தில் அங்கு பிரபலமாக இருக்கும் முருகன் கோவிலுக்கு தனது மகளையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு சென்று வந்தாள் சுபா. சுபா கோவிலுக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அலுவலக வேலை பளுவின் காரணமாக அவளால் செல்ல முடியவில்லை. இப்போது முருகனை கண்டவுடன் அவளால் பரவசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.



ஜெயந்தன் வீட்டில் எப்போதுமே முருகனுக்கு தனி இடம் உண்டு. திருத்தணி முருகன் தான் அவர்களது குலதெய்வமும் கூட. அதனாலேயே சுபாவுக்கும் முருகக் கடவுளை பிடித்து விட்டது. வழக்கம்போல் கணவனின் நன்மைக்காகவும் மகளின் நல்வாழ்க்கைக்காகவும் சுபா பிரார்த்தனை செய்ய,மகளின் கண்ணீர் நின்று அவள் வருங்கால வாழ்க்கை சதோஷமாக அமைய வேண்டும்.அவளுக்கென விரைவில் அருமையான குடும்ப வாழ்க்கை அமையனும் என்று சுபாவின் அம்மா முருகனை துளைத்து எடுத்தாள்.



அனைவரையும் வாழ வைக்கும் முருகன் இவர்களுக்காக என்ன வைத்திருக்கிறானோ..பார்ப்போம்!
 
Top