எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை‌ 06

வான்மழை 06

அதிகாலை நான்கு மணியளவில் அந்த வேன்‌ பழனியை‌ நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஊதக்காற்று‌ சர்ரென்று‌ ஜன்னல் வழியே‌‌ வீச, ஏற்கனவே குளிரில் இழுத்துப் போர்த்தி அமர்ந்திருந்த கெளரிக்கு இந்த ஊதக்காற்று‌ மேலும் நடுக்கத்தை கூட்ட,

“யா..த்..தே..!” என‌ உதடுகள் நடுங்க திணறியவள், அருகில் அமர்ந்திருந்த வருணாக்ஷியை கண்களால் எரிக்க,

இந்த பக்கம் கெளரி, அந்த பக்கம் முனிஸ்வரி என நடுவில் பாதுகாப்பாகவும், குளிர் தெரியா வண்ணம் அமர்ந்திருந்தவள் கெளரியின் பார்வையை கண்டுக் கொள்ளாது, தெளிவாக அவள் புறம் தனது பார்வையை‌ திருப்பாது, முனிஸ்வரியின் புறமே திரும்பியிருந்தவளை கண்டு கடுப்பு எழ,

“எருமை மாடே!!!” என‌ வலிக்க அவள்‌ தொடையில் அழுந்த கிள்ளி‌விட்டிருந்தாள்‌ கெளரி.

“ஆஆஆ..அவுச்! ஏன்டி, கொரங்கே இப்புடி கிள்ளுன?” என‌ அவள்‌ கிள்ளிய இடத்தை தடவியபடி வருணா‌‌ கேட்க,

“ஏன் டி சொல்ல மாட்ட, ஞாயிற்றுக்கிழமை அதுவுமா நல்லா தூங்கிட்டு இருந்தவளை‌ குண்டுக் கட்டா தூக்கி வேனுக்குள்ள போட்டுருச்சு என் அம்மா? அதுக்கு யாரு டி காரணம்? நீ, நீ மட்டும் தான் டி காரணம் எருமையே?” என‌ கடுப்பில் கத்தினாள் கெளரி.

அவள் கடுப்பிலும் காரணம் இருக்கிறது. வருணா சொன்ன அத்தனை விஷயத்தையும் அச்சுப் பிசகாமல் கூறி‌ இப் பயணத்திற்கு வர முடியாது எனக் கூறி, தனது தாயையும் தந்தையையும் தாஜா செய்து சமாதானாப் படுத்தி வீட்டில் இருக்க அனுமதி வாங்கி நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தவளை,

முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பி, வர மாட்டேன் என்றவளை தரதரவென இழுத்து வந்திருந்தார் பார்வதி.

காரணம்! இதோ அருகில் அமர்ந்திருக்கும் சாட்சாத் வருணாவே தான்.

அவள் தானே, அவளது அத்தைக்கு போனைப் போட்டு மூளைச் சலவை செய்து கெளரியை‌ கதற கதற இழுத்து வர வைத்தது.

தாயின் திடீர் மாற்றத்திற்கான காரணம் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவள், வேனில் ஏற, ஆளுக்கு முன் உள்ளே வேனில் அமர்ந்திருந்த வருணாவைக் கண்டு விழிகள் தெறித்து வெளியே வந்து விட்டது கெளரிக்கு.

“சோம்பேறிக்‌ கழுதை, வருணாவப் பாருடி, உன் வயசு தானே அவளுக்கும்,அவ ஏதாச்சும் மொரண்டு பிடிச்சாலா கிளம்புறதுக்கு? அவளைப் பார்த்து கத்துகடி” என‌ போகிற போக்கில் அவளை ஒரு இடி இடித்து விட்டுச் செல்ல,

‘இந்த ப்ராடு, அவ்வளவு நல்லவக் கிடையாதே?’ என யோசித்தபடி அவள்‌ அருகே அமர,

“என்ன, கெளரி தண்ணீர் அபிஷேகம் நடந்ததா?” என‌ கேட்டு அவள் கள்ளச் சிரிப்பு சிரிக்க,
அதில் அத்தனைக்கும் காரணம் அவள் தான்‌‌ தெரிந்துக் கொண்ட கெளரி அவள்‌ மீது கொலை வெறியில் இருக்க, அதன் விளைவே இந்த அடிதடி‌ இருவருக்கும்.

“ஏய், இங்க பாரு டி நீ ஒண்ணும்‌ அவ்வளவு நல்லவ எல்லாம் கிடையாது. கோவிலுக்கு போக தான் நீ ரெடியாகி வந்திருக்கேன்னு சொன்னா அதை நான்‌ நம்ப மாட்டேன். ஒழுங்கு மரியாதையா சொல்லு என்ன தில்லாலங்கடி வேலை பாக்க இந்த வேசம்?” என கெளரி அவளை கனித்து கிடுக்குப் பிடி பேட,

அருகில் அமர்ந்திருந்த தனது அப்பத்தாவை ஒரு முறைப் பார்த்தவள், கெளரியின் அருகில் நெருங்கி அமர்ந்து,

“அது வந்து டி கெளரி நேத்து அவுங்க வீட்டுல இருந்து போன் போட்டுருந்தாங்க……..” என தொடங்கி இவள் பேசிய தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்தையும் கூறி, முகிலனின் பேச்சினையும் கூற,

ஆ வென வாய் பிளந்து அவளைப் பார்த்தாள் கெளரி.

“அடியே, நிஜமாலும் நீயேவா போனைப் போட்டு பேசின?” என்க,

“ஆம்!” என தலையசைத்து பாவமாக அவளைப் பார்க்க,

“எவ்வளவு தைரியம் டி உனக்கு? ஏதோ போன்‌ நம்பர் கேக்குறியேன்னு வாங்கி கொடுத்தா, நீ இப்புடி ப்ராடு வேலை எல்லாம் பாத்து வச்சிருக்க? கொஞ்சமாச்சும்‌ மண்டையில அறிவு இருக்காடி உனக்கு?” என அவளை‌‌ கடிய,

“என்ன‌ டி போன் பேசுனதுக்கு போய் இப்புடி திட்டுற?” என அவள்‌‌ குறைப் படிக்க,

“ப்ச் வருணா கொஞ்சமாச்சும் மூளைய யூஸ் பண்ணுடி. இன்னும் எதுவுமே முடிவாகாத நிலையில இப்புடி போன்‌ பேசியிருக்கியே! இதை அந்த அண்ணா எப்புடி எடுத்துருப்பாங்கன்னு யோசிச்சுப் பாத்தியா?”

“நல்லா தான் பேசுனாங்க, நானே ஒரு ஆர்வக்கோளாறுல தான் யோசிக்காம போட்டுட்டு,பதட்டத்துல பேசாம இருந்தேன். ஆனாலும் அவரைப் பிடிச்சிருக்கு டி, அவருக்கும் என்னை பிடிச்சிருக்கான்னு‌ தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்” என்றவளின் குரல் இறங்கிட,

“எல்லாரையும் அப்புடி ஈசியா நம்பிட முடியாது வருணா, இப்பவும் ஆம்பிளைக்களுக்கான சில புத்தி இருக்கத்தான் செய்து, அவுங்க என்ன பண்ணாலும் அது பிரச்சனை இல்லை, நம்ம பக்கம் சின்னதா முதல் ஸ்டெப் கூட அவுங்களுக்கு பெருசா தான் தெரியும்.

நீயே இப்புடி போன் பேசியிருக்க, “என்னடா, இந்த பிள்ளை எதுவும் முடிவாகமாலோ இப்புடி தைரியாம பேசுதே? அப்போ இதுக்கு முன்னாடி இதே மாதிரி எத்தனை பேருக்கிட்ட பேசியிருக்குமோன்னு?” ஒரு செகண்ட் அவுங்க நெனைச்சிருந்தா என்ன பண்ணிருப்ப?” என்னவளின் கேள்விக்கு வருணாவிடம் பதில் இல்லை.

‘உண்மைதானே, கெளரி சொன்னது போல் அவர் நினைத்திருந்தால், என்ன ஆகியிருக்க கூடும்’ என நினைத்தவளிற்கு அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்து விட முகம் வாடி விட்டது.

“அடடே! உடனே மூஞ்சிய தொங்க வச்சிடாதா? இப்போ என்ன? பேசிட்ட, அண்ணாவும் உன்கிட்ட நல்லா தானா பேசுயிருகாங்க விடு, இனி கொஞ்சம் கவனமா இரு சரியா?” என்றவளிற்கு வெறும் தலையாட்டலே வர,

அதன் பிறகு சிறிது நேரம் அதையும், இதையும் பேசி அவளை இயல்பிற்கு கொண்டு வந்திருந்தாள் கெளரி.

கெளரியின் பேச்சில் தன்னை தேற்றிக் கொண்டாலும், மனதில் ஓரத்தில் உறுதிக் கொண்டிருந்தது என்னவோ உண்மை!!!!

அதிகாலை நான்கிற்கு கிளம்பியவர்கள் இடை இடையே நிறுத்தி பழனியை அடைவதற்குள் மணி ஐந்தை தாண்டி விட்டிருந்தது.

நேராக வேன் சென்று நின்ற இடம் முகிலனின் மண்டபத்திற்கு தான். அதனை தான் புக் செய்திருந்தனர். பின்வாசல் வழியே வேனை நிறுத்தியிருக்க, இறங்கி உள்ளே சென்றனர்.

“குரு, ஏழு மணிக்கு சாமி பாக்க டிக்கெட் வாங்கியிருக்கு, அதுக்கு முன்ன‌ கீழயே‌ மொட்டைப் போட்டு காது குத்திட்டு தான் சாமி பாக்க போகணும், காலை‌ சாப்பாடு செய்ய ஆளுங்க வந்துட்டாங்க, நாங்க பொம்பளையாளுங்க‌ கூட மாட ஒத்தாசைக்கு இருக்கோம்.

நீங்க ஆம்பளையாளுங்க போயி மொட்டை போடுற‌ இடத்துல விசாரிச்சுட்டு வாங்க” என குருவின் பெரிய அக்கா லக்ஷ்மி கூற,

“சரி க்கா நீங்கப் பாருங்க, மாமா வாங்க நம்ம‌ போயிட்டு வருவோம்” என்றவர் கூறி விட்டு முன் வாசல் வழியாக வர,

மண்டபத்திற்கு அருகில் இருந்த கடையில் தீபாராதனை காட்டி கொண்டிருந்தார் மகாலிங்கம் உடன் பரணி மற்றும் முகிலன்.

இன்று விடுமுறை தினம் ஆதலால், கடைக்கு வந்து விட்டிருந்தான் முகிலன். இது அவனது அன்றாட வழக்கம்.

“அடடே, குருசாமி வந்துட்டீங்களா, வாங்க, வாங்க, வர லேட்டாகும்னு நெனைச்சேன். இருங்க பூஜையை முடிச்சிட்டு வரேன்” என்க,

பரணியும், முகிலனும் “வாங்க” என்றழைத்தனர்.

மகாலிங்கம் பூஜையை முடித்து விட்டு இவர்களுக்கும் தீபாராதனை காட்ட‌ எடுத்துக் கொண்டனர்.

“வெள்ளனவே வந்துட்டீங்கப் போல?” என்க,

“ஆமாங்க லீவு நாள் இல்லையா? அதான்‌ கூட்டம் வர்றதுக்கு முன்ன வந்துட்டோம்” என்றார் குருசாமி.

“அடுத்த வாரம் தைப்பூசம் வருதில்லைங்களா அதான் கூட்டம்” என்றார் முருகேசன் பார்வதியின் கணவர்.

“சரிங்க மகாலிங்கம்,நாங்க மொட்டை போடுற இடத்துக்கு ஒரு‌ எட்டு போய்ட்டு வரோம்” குருசாமி கூற,

“ஓ..ஓஓ‌ சரி சரி நானும் அங்கே இருக்குற இன்னொரு‌ கடைக்கு தான் போறேன். அங்க போய் பூஜை போடணும் வாங்களேன்‌ சேர்ந்தே போவோம். பரணி வாப்பா, போகலாம்” என்க, முகிலனை தவிர அனைவரும் கிளம்பி விட்டிருந்தனர்.

“என்ன இன்னும் அவளைக் காணோம். நெருங்கின‌ சொந்தம், அவளும் தானே வந்துருப்பா? உள்ளப் போயி பாக்கலாமா?” என அவனுக்கவனே பேசியவன்,

‘ச்சே ச்சே வேண்டாம் அது நல்லா இருக்காது. எப்புடியும் வெளியே வந்து தானே ஆகணும். பாத்துக்கலாம்’ என சிந்தனையில் இருந்தவனை அடுத்தடுத்த வியாபாரம் இழுத்துக் கொள்ள அதில் மூழ்கி விட்டான்.

வந்த நேரத்தில் இருந்து ஒரு அரைமணி நேரம் அமைதியாக இருந்தவளுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லாமல் போக,

“ம்மா, அம்மா நாங்க ரெண்டு பேரும் வெளிய கடைக்குப் போயிட்டு வர்றோம் அம்மா. இங்க சும்மாதானே இருக்கும்.” என வருணா தாயிடம் கெஞ்ச,

“யேய் சும்மா இருடி, இந்த நேரத்துல தனியா‌ போறேன்னு சொல்றீங்க? வேண்டாம் எல்லாம் முடிச்சிட்டு மலை ஏறிட்டு வந்துட்டு போகலாம்”

“ச்சு அம்மா வெளிய பாரும்மா எப்புடி கூட்டம் வருது, இங்கன போயிட்டு வர்றதுல என்னம்மா பயம்? சாமி பாத்துட்டு வந்து எல்லாம் போக முடியாதும்மா? எல்லாரும் கிளம்புற அவசரத்துல தான் இருப்போம்.‌ இங்கன வெளிய தானேம்மா, இங்க நின்னு பாத்தாவே கடை தெரியுது‌ தானே, ப்ளீஸ் ம்மா” என்க,

“விடு மல்லி பிள்ளைங்க போயிட்டு வரட்டும். அதுங்களும் எம்புட்டு நேரம் தான் வெறுமன உட்காந்திருக்கும்ங்க, இங்கன தானே பாத்துக்கலாம். அப்டியே பூஜைக்கு தேவையான சாமான்களையும் வாங்கிட்டு வரச் சொல்லிடுவோம்” என முனிஸ்வரி‌ கூற,

“சரிங்கத்தை” எ‌ன்றவர் இருவரிடமும் ஆயிரம் கவனம் கூறி அனுப்பி வைத்தார்.

தாய் அனுமதி அளித்து நொடி இருவரும் சிட்டாக பறந்திருந்தனர்.

வெளியே வந்த வருணா முதல் வேலையாக தேடியது முகிலன் எந்த கடையில் இருக்கிறான் என‌ தான்.

மகாலிங்கம் குடும்பத்திற்கு இங்கோ கடை இருக்கிறது என தெரியும். ஆனால் எந்த கடை என்று அவளிற்கு தெரிந்திருக்கவில்லை.

தேடியவனை மிக அருகிலேயே கண்டுக் கொண்டவள் கெளரியையும் இழுத்துக் கொண்டு வேகமாக அவன் கடை முன் சென்று நின்றாள்.

இவள் சென்ற‌ நேரம் முகிலன் வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை கொடுத்து விட்டு மீதிப் பணத்தை எடுத்துக் கொண்டு இவர்களுக்கு முதுகு காட்டி நின்றிருக்க,

“ம்ஹீம்!” என‌ தொண்டையை கணைத்தவள்,

“கடைக்காரரே! பூஜை சாமன்‌ செட்டு ஒரே மூணு கொடுங்க!” என்க,

அவள்‌ குரலை வைத்தே அவளைக் கண்டுக் கொண்டவனுக்கு உடல் ஜிவ்வென்றாக இதழ்களை மடித்து சிரித்தவன்,
“சேட்டைக்காரி! வந்துட்டா” என மெல்ல முணுமுணுத்தவன், மீதி சில்லறையை அந்த வாடிக்கையாளருக்கு கொடுத்து விட்டு இவர்களிடம் திரும்பியவன்,

“சொல்லுங்க, பூஜை செட்டு மட்டும் போதுமா? இல்லை சாமி போட்டோ எதுவும் வேணுமா?” என அவளை பொருட்களை வாங்க வந்த வாடிக்கையாளராக அவன்‌‌ நடத்த,

“கேட்டதை மட்டும் கொடுங்க கடைக்காரரே!‌ உங்களுக்கு வியாபாரம் ‌ஆகணும்னு‌ எங்க கிட்ட‌ விக்கிறீங்களோ!”என அவள் உதட்டை சுழிக்க,

சில நொடிகள் அவள் சுழித்து உதட்டில் பார்வையை கொண்டு சென்றவன், அவள் கேட்ட பூஜை சாமன் அடங்கிய கூடையினை அவள் கையில் கொடுத்தவாறே,

“ மொத்தம் 120 ரூபா ஆச்சு” என்க,

“அடடே! என்ன இது பகல் கொள்கையா இருக்கு, வெறும் பூஜை சாமன் 120 ரூபாயா?” என அவள் வாய்பிளக்க,

அவள்‌‌ குறும்பை கண்டு கொண்டவன்,
“என்ன மேடம் செய்யுறது, விலைவாசி எல்லாம் ஏறிப் போயிடுச்சே?” என்க,

“சரி, சரி இந்தாங்க காசு மீதி சில்றையை கொடுங்க!” என்றபடி அவன்‌ இரண்டாயிரம் ரூபாய் தாளை‌ எடுத்து நீட்ட,

“என்னங்க மேடம், இப்போதான் வியாபாரமே‌ ஆரம்பிச்சிருக்கு, 120 ரூபாய்க்கு இரண்டாயிருவா நோட்டை நீட்டுறீங்க,” என்க,

“என்னங்க, இது ஒரு இரண்டாயிரத்துக்கு சில்லறை இல்லையா? கடை மொதலாளி முன்னாடியே சில்லறை எல்லாம் எடுத்து வச்சிக்க மாட்டீங்களா?” என அவள் கறராக பேச,

“நீங்க வர்றது தெரியதுங்களே, இப்போ தான்‌ இருக்குற சில்லறையை எல்லாம் ஒருத்தருக்கு கொடுத்தேன். இனி நாளையிலிருந்து கோயில் வாசல்ல போய் உட்காந்திடுறேன்” என சிரிக்காமல் அவன் கூற,

“நக்கல், நையாண்டி எல்லாம் நல்லாத்தான் வருது. சரி சரி என்கூட வாங்க அதோ அந்த தாத்தா டீ விக்கிறாருல அவர்கிட்ட ரெண்டு டீ வாங்கி குடிச்சிட்டு, உங்களுக்கு சில்லறையை தரேன்” என‌‌ சற்று தள்ளி சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருந்தவரை அவள் கைக்காட்ட,

‘இவ என்ன லூசா? அந்த தாத்தாவே பத்து ரூபாய்க்கு டீயை வித்துட்டு இருக்காரு, அவருக்கிட்ட போயி சில்லறை வாங்கித் தரேன்னு சொல்லுறா’ என நினைத்தபடி கெளரி அவளை அற்பமாக ஒரு பார்வை பார்க்க,

கெளரிக்கு தெரிந்த விஷயம், முகிலனிற்கு தெரியாதா என்ன? இருந்தும் அவள் குரலில் தன்னிடம் தனியே பேச விரும்பும் ஆர்வம் அளவுக்கதிகமாக தெறித்ததையும், அவள் விழியின் ஆசையிலும்,அதனை கண்டுக் கொண்டவன்,

“சரிங்க மேடம், வாங்க போவோம். காசு குடுக்காமா நீங்க ஏமாத்திட்டா என்ன பண்றது? அந்த தாத்தாக்கிட்ட நிறையவே சில்லறை இருக்கும்” என கேலி பேசியவன், கடைப்பையனிடம் சிறிது நேரம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவளருகே வந்து,

“போவோமா!” என‌ வாயசைக்க,

“கெளரி, அத்தை சாமி படம் வாங்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்களே, நீ பாத்து வாங்கிட்டு இரு, நான் இவருக் கூடப் போயி சில்லறையை வாங்கி கொடுத்திட்டு வர்றேன். உனக்கு விவரம் பத்தாது நீ போனினா‌ உன்னை ஈசியா ஏமாத்திடுவாரு, நான் போய் சில்லறையே வாங்கிட்டு இவருக்கு காசை கொடுத்துட்டு வரேன்” என அவன் நக்கலை அவனிற்கே திருப்பி கொடுத்தவள்,

“வாங்க போகலாம்!” என்று விட்டு வேகமாக முன்னே செல்ல, அவள் பின்னே முகிலன்.

“ப்ராஃடு கழுதை, ஆளைக் கண்டதும் எப்புடி கழட்டிவிட்டுப் போறா பாரு! நீ
என்கிட்ட தான் டி வந்தாகனும். அப்போ பேசிக்கிறேன் கொரங்கே” என‌ கெளரி பல்லைக் கடித்து மானாவாரியாக வருணாவை திட்டியவள், சாமி படங்களை பார்க்கலானாள்.











 
Top