அமரனின் பக்கத்தில் அமர்ந்திருந்த ப்ரதீப்பை காணவில்லை என்ற பதற்றம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. கலக்கம் நிறைந்த கண்களால் நம்பமுடியாத சக்தி, “எ..என்ன டா? எப்படி டா?” என கேட்டுட,
“தெரியல டா..” - ராங்க.
அமரன், “என்னங்க டா இவன் காத்துல காணாம போய்ட்டானா? என்னோட பக்கத்துல தான இருந்தான். அவன் எழுந்திரிச்சு போயிருந்தா கூட நமக்கு தெரிஞ்சிருக்குமே..” என்று பதட்டம் நிறைந்த குரலில் அமரனும் அனைவரையும் பார்த்தான்.
“அதான் ஒண்ணுமே புரியல. ஒன்னு மாற்றி ஒன்னு வந்துட்டே இருக்கே..” என்று புலம்பிய விலோ, ப்ரதீப்பிற்கு வந்த க்ளுவை படிக்க தொடங்கினாள்.
“வளியவனில் அரூபமாவாய்..
ஆறுபோட மீண்டு வருவாய்!”
என்று அந்த நீர் குமிழில் தோன்றிய எழுத்தை விலோ சத்தமாக வாசிக்க, “வளின்னா காற்று! கா..காற்றோட காற்றாய் கா..காணாம போய்ட்டாங்க..” என்ற ஷிவன்யாவின் விளக்க குரலில் அனைவரின் இதயமும் படபடத்தது.
“ஹே! ப்..ப்ரதீப்..” என்று உதடுகள் நடுங்க ப்ரதீப்பை அழைத்த விலோ சுற்றும் முற்றும் பார்த்தபடியே “விளையாடாம எங்க முன்னாடி வா டா..” என ஒருபுறம் அழைக்க,
“ப்ரதீப்.. எங்கடா போன?” என்று சுற்றியும் கண்களை சுழற்றி தேட தொடங்கினான் ரங்கராஜ்.
“ப்ரதீப் நாயே விளையாடாத, மரியாதையா எங்க கண்ணு முன்னாடி வந்து நில்லு..” என்ற மிரட்டலுடன் அமர் அழைத்தான்.
எப்பொழுதோ காற்றில் கலந்து மறைந்திருந்த ப்ரதீப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் கத்தியும் மிரட்டியும் அவனை அழைத்துக்
கொண்டே இருந்தனர். இவர்களாவது வாய்விட்டு அவனை கூப்பிட்டனர். ஆனால், நடந்ததை நம்பமுடியாமல் தீக்பிரம்மை பிடித்ததை போல் அசையாமல் அமர்ந்திருந்தான் சக்தி.
சிறிது நேரம் பழகினாலும் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டும்; கிண்டலடித்தாலும் கண்ணியமாக நடந்துக்கொண்ட ப்ரதீப்பை நினைத்து ஷிவன்யாவிற்கும் வருத்தம் மேலோங்கியது. ஆனால், ‘தானும் அவர்களை போன்று கலங்கினால் வேலைக்கு ஆகாது..’ என்று புரிந்துக் கொண்டவள்,
“அமர்” என்று அமரனின் தோள்தொட்டு திசைத் திருப்பினாள். அவளை பார்த்தவனிடம் கண்களால் சக்தியின் நிலையை காட்டினாள். பின்பே அவனை பார்த்து தலையிலடித்தவன், “சக்தி..” என்றழைக்க, சக்தியோ அமைதியாக எழுந்து அந்த கப்பலின் கைப்பிடியின் அருகே சென்று நின்றுக் கொண்டான். ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற கேள்வி தான் அவனை ஆக்கிரமித்திருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக ப்ரதீப் அங்கு இல்லாததை உணர்ந்த விலோ அழுகையுடன் ரங்காவை பார்த்தாள். “என்.. என்னால தான் ரங்கா.. நான்தான் எல்லாத்துக்கும் காரணம்! ப்ரதீப்புக்கு எதுவும் ஆகாது தான? அவன் திரும்பி நம்மக்கிட்ட வந்துடுவான் தான?” என அழுதபடியே அவனின் கையை பற்றிக்கொண்டாள். அவனும் அவளின் கையை இறுக்கிப்பிடித்து ஆறுதல் கொடுத்தான்.
என்னதான் எப்பொழுதும் சண்டைபிடித்தாலும் ப்ரதீப்பை என்றுமே எங்குமே விட்டுக்கொடுத்ததில்லை விலோ. இன்னும் சொல்ல போனால் உரிமையுடன் அனைத்தையும் அவனிடம் மட்டுமே பகிர்ந்துக் கொள்வாள். இப்பொழுது அவன் இங்கில்லை. அதற்கு தான் மட்டும் தான் காரணம் என்று எண்ணியவள் ரங்காவின் மடியில் முகம் புதைத்து அழுதாள்.
அவர்களை பார்த்த அமரன் சக்தியிடம் சென்றான். சக்திக்கு ப்ரதீப்பை தான் மிகவும் பிடிக்கும் என்று அனைவருமே அறிவர். எனவே, இந்நிகழ்வு அவனை எவ்வளவு பாதிக்கும் என்றும் உணர்ந்திருந்தான்.
அதற்கு ஏற்றதுபோல் சக்தியின் கண்கள் கலங்கி தக்காளி பழம்போல் சிவந்திருந்தது. ‘உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான்’ என்பது சக்தி, அவனின் கைக்கு கொடுக்கும் அழுத்தத்தில் நன்கு தெரிந்தது. அப்படி அழுத்தி பிடித்திருப்பதால் அவனின் இடது தோள் பட்டையில் இருந்த காயத்திலிருந்து இரத்தமும் கசிய தொடங்கியது.
அவனின் நிலையை அருகில் பார்த்த அமர், “சக்தி!” என்று நண்பனின் தோளில் கை வைத்தான். ரங்கா, விலோ, ஷிவன்யா மூவரும் கூட அவர்களை நெருங்கினர்.
இருள் சூழ்ந்த கடலில் நுரைப்பொங்க மேலெழும்பிய அலைகளை வெறித்த சக்தி, “அவன் ஊருக்கு போயிருக்க வேண்டியவன் அமர். நா..நான்தான் ட்ரிப் போகலாம்னு கூப்பிட்டேன். என்னை நம்பிதான் வந்தான். ம்ப்ச்..” என கண்ணை மூடி தலையை அழுத்தி கோதியவன், “இங்க என்ன நடக்குதுனே புரியல அமர். எதுக்காக இதெல்லாம் நடக்கணும். இதுனால யாருக்கு என்ன கிடைக்க போகுது?” என்றவனால் மேல சொல்ல முடியாமல் தொண்டையடைத்தது. சக்தியின் மறுபுறம் வந்து அவனின் கையை ரங்கா பிடித்துக் கொண்டான்.
ஷிவன்யா, “எனக்கும் ப்ரதீப்பை நினைச்சா வருத்தமா தான் இருக்கு. ஆனா, நம்மால அவரை திருப்பி கொண்டு வர முடியும். நாம யாராவது ஆறு போட்டா திரும்பி வந்திடுவாங்க. அதுக்கு நாம தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடி ஆகணும்” என்று அனைவரின் முகங்களையும் பார்த்து சொல்லி முடித்ததும்,
“ஏற்கனவே, சக்திக்கு காயம். விலோவுக்கு வேற என்ன நடக்கும்னே தெரியல. ப்ரதீப்பையும் இப்போ காணோம். இதை தொடர்ந்து விளையாடி இன்னும் வேற என்னலாம் வருமோ..”என்ற ரங்காவின் பேச்சில் அந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடுவதற்கான மறுப்பு அப்பட்டமாக தெரிந்தது.
“நீ சொல்லுறது சரி தான் ரங்கா. ஆனா அதுக்கான தீர்வும் இந்த விளையாட்டுல தான இருக்கு. இதை இப்படி நம்மளால பாதில விட முடியாதே..” என அமரன் தெளிவு படுத்தினான்.
இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்க சக்தியின் கவனம் இங்கில்லாமல், ப்ரதீப்பை முதன்முதலில் சந்தித்த நாளுக்கு சென்றது.
பல வண்ண கனவுகள் நிறைந்த முதலாம் ஆண்டு மாணவர்கள், அவர்களுக்கான வகுப்பறையை தேடியபடியே புகழ்பெற்ற பெங்களூரில் இருந்த பல்கலை கழகத்தில் சுற்றிக் கொண்டிருந்தனர். இறுதியாக தன்னுடைய வகுப்பை கண்டுபிடித்த ப்ரதீப் கண்ணன், அந்த வகுப்பறைக்குள் சென்றான்.
அனைவரையும் பார்த்துக்கொண்டே அங்கு தனியாக அமர்ந்திருந்த சக்திவேலின் அருகில் சென்று அமர்ந்தான். அவனுக்கு ஒரு சிரிப்பை கொடுத்தவன் வகுப்பறையை சுற்றிலும் பார்த்துக்கொண்டான்.
பால் நிறத்தில் பதினெட்டு வயதிலே அளவான மீசையும் முறுக்கேறிய உடம்புமாக இருந்த சக்தியை பார்த்த ப்ரதீப் அவனை வடநாட்டவன் என்று எண்ணினான். பின்பு பெயரை கேட்டதும் தான் தமிழ் என்று உறுதியானப்பின் எந்த ஒரு தங்குதடையுமின்றி அவனிடம் சுலபமாக நட்பு பாராட்டினான். எப்பொழுதும் அமைதியாக இருக்கும் சக்திக்கு, ஓயாமல் வாய் பேசும் ப்ரதீப் நட்பாய் கிடைத்தது விந்தை தான்.
ஒரு வருடம் சென்று தான் சக்தியின் பின்புலம் ப்ரதீப்பிற்கு தெரியவர அவனின் உயரம் பார்த்து மிரண்டவன் அவனை விட்டு விலக தொடங்கினான். ஆனால் அவனின் நோக்கத்தை புரிந்துக்கொண்ட சக்தி அவனை இறுக்கி பிடித்துக் கொண்டான்.
அதன் பிறகு, அந்தஸ்து, செல்வாக்கு என்று அனைத்திற்கும் அப்பாற்பட்டு அவர்களின் நட்பு வளர்ந்தது. அனைத்தையும் ஒரு நொடி நினைத்த சக்தியின் செவியில், “என்ன ஆனாலும் விட்றாதீங்க டா” என ப்ரதீப் அவர்களிடம் கூறிய கடைசி வாக்கியம் மீண்டும் மீண்டும் ஒலித்தது. “ப்ரதீப் நம்மகிட்ட தான விட்ராதீங்கன்னு சொன்னான். அப்புறம் எப்படி அவனை விட முடியும்?” என்ற சக்தி கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டான்.
“நம்மல்ல ஒருத்தன் இப்ப நம்ம கூட இல்லை. அவனை நாம தான திருப்பி கொண்டு வரனும். என்னை நம்பி தான் இந்த ட்ரிப்க்கு ப்ரதீப் வந்தான். என்னுடைய உயிரை கொடுத்தாவது ப்ரதீப்பை மீட்பேன்” என்று உறுதியாக கூறினான் சக்திவேல்.
“வேற யாருக்காவது எதாவது ஆகிடும்னு தான் நான் சொன்னேன். ஆனா, ப்ரதீப் இல்லாம நம்மால இந்த கேமை முடிக்கவும் முடியாது; நம்ம உலகத்துக்கு போகவும் முடியாது. நாம எல்லாரும் சேர்ந்து ப்ரதீப்பை நிச்சயமா திருப்பி கொண்டுவரலாம் சக்தி” என நம்பிக்கையாக ரங்கா சொல்ல,
“ஆமா. ஆறு போட்டா ப்ரதீப் வந்திட போறான். அடுத்து போட போற அமர் ஆறு போட்டா கூட ப்ரதீப் உடனே வந்திடுவானே! அப்புறம் என்ன?” என விலோவும் கண்ணை துடைத்தப்படி சொன்னாள். ஆனால் அந்த ஆறு அவர்களுக்கு வருவதற்குள் எவ்வளவு இன்னல்கள் வரும் என்பதை அந்த ‘சமுத்திரா’ மட்டுமே அறிவாள்!
அனைவரின் கலக்கம் நிறைந்த முகங்களை பார்த்த மார்ட்டின், “நாம நம்ம பெஸ்ட்டை கொடுக்கலாம். கண்டிப்பா அதுக்கு பலன் இருக்கும். உங்க பிரென்ட் நிச்சயம் உங்க கிட்ட வந்துடுவாங்க” என அனைவரையும் தேற்றி அழைத்து சென்றார். செல்லும் அவர்களையே பார்த்த கடற்கன்னி மெல்ல சிரித்தாள்.
அறுவர் இப்பொழுது ஐவர் ஆகியிருக்க, சமுத்திர விளையாட்டை சுற்றி ஐவரும் அமர்ந்தனர். அந்நேரம், “சக்தி..” என்ற ப்ரதீப்பின் குரல் காற்றில் மிதந்து வந்தது. பிரம்மையோ என்று எண்ணி கொண்டிருக்கையிலே,
“அமர்”
“ரங்கா”
“விலோ”
“ஷிவ்”
என அனைவரின் பெயர்களும் வரிசையாக ப்ரதீப்பின் குரலில் விளிக்கப்பட்டது.
“ஐயையோ செத்து போய் ஆவியா வந்துட்டானோ..” என்று விலோ பீதியுடன் கூற,
“டேய் ஏறுமைங்களா நான் உங்க முன்னாடி தான இருக்கேன். உங்க யாருக்கும் கண்ணு தெரியலையா?” என்று ப்ரதீப் கத்தினான். ஆனால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் இருந்தவனிடம், “ப்ரதீப், நீங்க எங்க யார் கண்ணுக்கும் தெரியலையே! எங்க இருக்கீங்க?” என்றாள் ஸ்ரீ.
“என்ன? தெரியலையா? நான் பேசுறது கேட்குது தான? உங்க முன்னாடி தான இருக்கேன்..” என மீண்டும் ப்ரதீப் கத்த, குரல் வந்த திசையில் அனைவரும் திரும்பினர். கடலில் வீசிக்கொண்டிருந்த காற்றை தவிர வேறெதுவும் அவர்களுக்கு புலப்படவில்லை. “சத்தியமா தெரியலை டா நாயே” என அமரன் கூறுகையில்,
அங்கு தோன்றிய குறிப்பை நினைவு கூர்ந்த ஷிவன்யா, “வளியவனில் அரூபமாவாய்னு வந்துச்சு. வளின்னா காற்று. அரூபம்னா உருவம் தான் இருக்காது. அப்படினா காத்துல ப்ரதீப் உருவம் தான் நமக்கு தெரியாம மறைஞ்சிருக்கும். அவர் பேசுறது நமக்கு கேட்கும் போல” என்று கண்டுபிடித்த குதூகலத்துடன் கூற,
“டேய் ப்ரதீப். இவ்வளவு நேரம் பக்கத்துல தான் இருந்தியா டா? எருமை.. சொல்லுறதுக்கு என்ன?” என்றான் சக்தி அவ்வளவு நேரம் துடித்த துடிப்பு நீங்கியவனாக.
“நான் எதோ இருட்டு ரூம்ல இருந்த மாதிரி இருந்துச்சு டா. அப்பறம் தான் அது கப்பலோட அடித்தளம்னு புரிஞ்சிது. உங்க எல்லாருக்கும் என்னாச்சோன்னு பயந்துகிட்டே அங்க இருந்து மேல வந்தேன். இங்க வந்து பார்த்தா எல்லாரும் சுற்றி உட்கார்ந்திருக்கீங்க. அதான் எல்லாரோட பேரையும் சொல்லி கூப்பிட்டேன்” என ப்ரதீப் விளக்கமளித்து முடித்தபின்,
“ப்ரதீப், நீ இப்ப மம்மியா மாறிட்டியா?” என்ற விலோவின் கேள்வியில், “மம்மியா..?” என்று அதிர்ந்த ப்ரதீப்பின் குரல் காற்றில் வந்தது.
“ஆமாம் டா. இப்ப உன்னோட ஆவித்தான் இங்க இருக்கு. உடம்பு வேற எங்கயோ இருக்கும் போல. அப்ப நீ மம்மி தான..?” என்று அமரன் சிரிப்புடன் கேட்க.
“டேய் எருமை, நான் இன்னும் சாகலை டா. அதுக்குள்ள ஆவினு சொல்லுறியே பாவி..” என்று அமரனை திட்டியவன், “ஐயோ! கல்யாணம் பண்ணி டாடியாக வேண்டிய என்னை.. இப்படி மம்மியா மாத்தி புலம்ப விட்டுட்டாங்களே..” என்று காற்றிலே புலம்பினான்.
“ஹே ப்ரதீப் உன்னால தொட முடியுதா? அப்படி தொட முடிஞ்சுதுனா நாங்க யாரும் ஆறு போடலனா கூட நீயும் விளையாடலாம். நீ மூணு போட்டா கேம் முடிஞ்சிடுமே?” என்று சக்தி கேட்க பர்தீப்பும் அந்த பகடையை எடுக்க முனைந்தான்.
ஆனால், ப்ரதீப்பின் கரம் அந்த பகடையை மட்டுமின்றி அனைத்து பொருட்களையும் ஊடுருவி சென்றது. அதில் சோர்ந்த ப்ரதீப், “இல்ல சக்தி. என்னால எதையுமே தொடக்கூட முடியல. என்னால எல்லாத்தையும் பார்க்க முடியுது. பேச முடியுது. ஆனா நான் யார் கண்ணுக்கும் தெரியவே இல்லை” என்றிட,
“கவலை படாத ப்ரதீப். நாங்க ஐந்து பேர்ல கண்டிப்பா யாராவது ஆறு போட்டு உன்னை திருப்பி கொண்டு வருவோம்” என்ற ரங்கா காற்றிலே ப்ரதீப்பிற்கு வாக்களித்தான்.
எங்கோ பார்த்தபடி பேசி கொண்டிருந்த நண்பர் கூட்டத்தின் செயல்களை புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர் அந்த கப்பலின் கேப்டன்கள் இருவரும். அதை பற்றி கேட்ட அவர்களுக்கு நடந்ததை கூற, அவர்களால் ப்ரதீப் பேசுவதை கேட்க முடியவில்லை.
‘ஒருவேளை இந்த கேம்ல இருக்கவங்களால மட்டும் தான் ப்ரதீப் பேசுறதை கேட்க முடியும் போல..’ என்று அவர்களே முடிவுக்கு வந்தனர்.
“எனக்கு ஆறுலாம் லூடோ விளையாடுறப்ப கூட வராதே..” என விலோ புலம்பினாள்.
“நீ லாஸ்ட் தான் வருவ. அதுக்குள்ள இவங்க நாலு பேர்ல யாராவது ஆறு போடுவாங்க” என்று ப்ரதீப் கூறியதும், இவ்வளவு நேரம் அழுகையில் கரைந்தவர்களா இவர்கள் என அனைவரையும் பார்த்த ஷிவன்யாவிற்கு பொறுமை கரைய தொடங்கியது.
“நாம டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது அமர். நீங்க தான் அடுத்து போடணும் வாங்க” என அழைத்தப்படியே அமரனின் கையில் பகடையை திணித்தாள்.
“ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ஷிவன்யா வந்துட்டாங்க டோய்” என காற்றில் தவழ்ந்து வந்த ப்ரதீப்பின் குரலில் நக்கல் மிகுதியாகவே இருந்தது.
அதில் பொறுமையை இழந்த ஷிவன்யா, “ப்ரதீப், உங்க உருவத்தை மறைய வெச்ச மாதிரி, உங்க வாய்க்கும் ஒரு பூட்டு போட்டிருக்கலாம்” என்று சொல்லிவிட்டாள்.
“என்னால உன்னை மாதிரி எப்பவும் சீரியசாகவே இருக்க முடியாது ஷிவ். வாழ்க்கைல கொஞ்சம் விளையாட்டு தனமும் வேணும். அப்படி ஸ்டிர்க்ட்டா, சீரியஸா இருந்து என்னத்தை சாதிக்க போற?” என்ற ப்ரதீப்பின் குரல் அடித்துக்கொண்டிருந்த காற்றிலும் அனைவருக்கும் தெளிவாக கேட்டது.
ஒருநொடி அமைதியான ஷிவன்யாவின் முகத்தை தான் அனைவரும் பார்த்தபடியே இருந்தனர். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருந்தும், “எல்லாருக்கும்.. எல்லாரோட சூழ்நிலையும் ஒண்ணுயில்லை ப்ரதீப். எல்லாரோட வாழ்க்கை, எல்லாரும் வளர்ந்த விதம்னு எதுவுமே யாருக்கும் ஒரே மாதிரி இருக்காது” என சிறுகுரலில் கூறியவள், “நீங்க டைசை உருட்டுங்க அமர். சீக்கிரமா விளையாட்டை முடிச்சிட்டு நம்ம உலகத்துக்கு போகனும்” என யாரின் முகத்தையும் பார்க்காமல் சொல்லிவிட, அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகியது.
ஆசிரமத்தில் வளர்ந்த ஷிவன்யா எதற்கும் யாரையும் எதிர்பார்த்ததே இல்லை. வளர்ந்து, படிப்பை முடித்து வேலைக்கு என வெளியே வந்தபின், ‘அவளை அவளே தான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற நிலையில் தானாகவே ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு அகற்குள்ளே இருந்துக் கொண்டாள். அப்படி ஒரு சூழலில் வளர்ந்தவளிடம், ‘நீ விளையாட்டாக இருக்க மாட்டாயா? எதற்கு இவ்வளவு சீரியஸ்?’ என கேட்டதும் அவளுக்கு எரிச்சல் தான் வந்தது.
சாதாரண பேச்சு எங்கோ சென்றதை உணர்ந்த ப்ரதீப் குற்றவுணர்வில், “சாரி ஷிவ்” என கேட்க, “நான் சொன்னதும் தப்பு தான ப்ரதீப். பேசுறது உங்க இயல்பு அதை நான் தப்பா பேசியிருக்க கூடாது” என்று அமைதியாகி விட்டாள்.
“நான் டைஸ் போட போறேன்” என்ற அமரன் அனைவரின் கவனத்தையும் அவன் புறம் கொண்டுவந்தான்.
“ஆறு போடு டா..” என ப்ரதீப் வேண்ட, “எது வந்தாலும் நல்லதா வரணும்” என விலோ வேண்டினாள்.
ஆனால் அமரனுக்கு வந்ததோ ஒன்று. “இதுலாம் இப்ப வரலைன்னு யாரு அழுதா..” என ப்ரதீப் சலித்துக்கொள்ள, இரண்டில் இருந்த அமரனின் ஊதா நிற காயின் ஒரு கட்டம் தாண்டி மூன்றில் சென்று நின்றது.
“ரட்சிக்கும் எண்ணமில்லா
ராட்சசன் பின் தொடர்கிறான்.
கவனம் கொள்!”
என்ற குறிப்பை படித்த விலோ, “இதுவரைக்கும் வந்ததுங்க மட்டும் ரட்சிக்கவா செஞ்சது?” என சலித்தப்படி கேட்டாள்.
“பின்னாடி யாரும் வரலையே..” என கப்பலின் பின்னே பார்த்து சொன்ன ப்ரதீப், “ஆனா கப்பலுக்கு உள்ள இருந்து வராங்க..” என சொன்னதும் திரும்பி பார்த்த அனைவரும் திகைத்துவிட்டனர்.
ஏனெனில், கப்பலின் உள்ளிருந்து ரிச்சார்ட் மற்றும் டேனியல் வந்தனர். அதுவும் ஆங்காங்கே ரத்த காயத்துடன் வந்தவர்களை பார்த்து மிரண்டாலும் அவர்களை உயிருடன் பார்த்தது சற்று ஆசுவாசத்தை அவர்களுக்கு கொடுத்தது. முக்கியமாக நண்பர்களின் குற்றவுணர்வையும் கொஞ்சம் குறைத்தது.
“ரிச்சார்ட்! டேனியல்! நீங்.. நீங்க எப்படி.. அது.. உங்களுக்கு எதுவும் இல்லை தான? எப்படி மேல வந்துதீங்க?” என அவர்களை பார்த்த மகிழ்ச்சியில் மார்ட்டினும் விக்டரும் அவர்களை நெருங்கினர்.
“எங்களுக்கு ஒன்னுமில்லை மாஸ்டர். பட், அலெக்ஸ்..” என்று அவர்கள் தொடங்கும் முன், “தெரியும் ரிச்சார்ட்” என்ற மார்ட்டின் அவனின் கையை பற்றினார்.
“இங்க என்ன நடக்குது மாஸ்டர்? நம்ம போட் எப்படி இப்படி சைலிங் ஷிப்பாக(பாய்மர கப்பல்) மாறுச்சு? அந்த முதலை எல்லாம் எப்படி நம்ம கப்பலுக்குள்ள வந்துச்சு?” என ரிச்சர்டும் டேனியல் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பினர்.
“இவனுங்க என்னடா வந்ததும் ஓவரா பர்ஃபார்ம் பண்ணுறாங்க?” என்று ப்ரதீப் நண்பர்களின் சொல்ல, “கொஞ்ச நேரம் அமைதியா இரு டா” என ராங்க அவனை அதட்ட, “நான் பேசுறது உங்களுக்கு மட்டும் தான டா கேட்கும். அப்புறமென்ன?” என்ற ப்ரதீப்பை பார்த்த ஷிவன்யாவிற்கு அவனை நினைத்து ஆச்சர்யம் தான் வந்தது. ‘எப்படி நான் பேசியதை லேசாக எடுத்துக்கொண்டார்’ என்றும் எண்ணிக்கொண்டாள்.
அங்கு நடந்ததனைத்தையும் ஒன்றுவிடாமல் மார்ட்டின் ரிச்சார்டிடமும், டேனியலிடமும் தெரிவித்தார். மாஸ்டர் கூறியதை கேட்ட இருவருக்கும் அதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. ஆனால் மார்ட்டின் கூறுவதால் அமைதியாக கேட்டனர்.
டேனியல், “மாஸ்டர் நீங்க கூட இதெல்லாம் நம்புறீங்களா? முதல்ல போட் எதுக்கு இங்க நிக்குது? நீங்க கரைக்கு திருப்பலாம் தான?” என எரிச்சலுடன் நண்பர்கள் கூட்டத்தை பார்த்தபடி சொன்னான்.
“போட் எடுக்க முடியல டேனி. நீ நம்ப முயற்சி பண்ணு. நாங்க சொல்லுறதெல்லாம் உண்மை தான்” என அங்குமிங்கும் பார்த்த விக்டர், “இங்க பாரு.. இந்த பாக்ஸ். இதுக்குள்ள இருக்க ட்ரிங்க்ஸ் எல்லாமே அந்த விளையாட்டுல இருந்து தான் வந்துச்சு. அதோ அந்த மெர்மைட்(கடற்கன்னி) கூட அதுல இருந்து தான் வந்துச்சு” என மதுவால் நிறைந்த அட்டை பெட்டிகளையும் கடற்கன்னியையும் சுட்டி காட்டினான்.
அந்த அட்டை பெட்டியை
திறந்து பார்த்த டேனியல் அதில் இருந்த மது குடிவை ஒன்றை கையில் எடுத்தான். ‘என்ன பண்ண போகிறான்?’ என அனைவரும் அவனையே பார்க்க, சிறிதும் யோசிக்காமல் அந்த மதுவை அருந்த தொடங்கினான்.
அதுவரை அவனையே பார்த்துக்கொண்டிருந்த நண்பர்கள் கூட்டம் முகம் சுளித்தனர். “ப்ரதீப் எல்லாம் உன்னால தான். நீ குடிக்க வர வெச்சதை அந்த மொட்டையன் எடுத்து குடிக்கிறான்” என விலோ கடுப்புடன் கூறினாள்.
ஏற்கனவே ஷிவன்யாவும் ப்ரதீப்பை பேசியிருக்க இப்பொழுது விலோவும் அவனை சாட பொறுமையிழந்த சக்தி, “ரொம்ப பேசாத விலோ! அவன் சரக்கடிக்கவே மாட்டான். அவன் டீடோட்டலர்” என்றான்.
“அது.. சும்மா உன்னை வெறுப்பேத்த விலோ” என ரங்கா சொல்ல,
“அடப்பாவி அவ்ளோ நல்லவனா நீ?” என விலோ அதிர்ச்சியாக,
“அவனுக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல. சரக்கு தான் அடிக்க மாட்டான். ஆனா இருக்க சைட் டிஷ் மொத்தத்தையும் ஒரே ஆளா காலி பண்ணிடுவான்” என அமர் சிரிப்புடன் கூறினான்.
அங்கு மதுவை அருந்திய போதையில், “என்னென்னமோ வரும்னு சொன்னீங்க? இங்க இருந்து வருமா? இல்ல அங்க இருந்து வருமா?” என கப்பலில் அங்குமிங்கும் நடந்த டேனியல், “ஆனா, இன்னும் ஒன்னு கூட வரலையே மாஸ்டர்..” என மாலுமிகள் கூட்டத்திடம் நக்கலாக கேட்டான். அவர்களும் அவனை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
முழு போதையில் இருந்த டேனியலின் பார்வை இப்பொழுது பெண்களின் மேலும், பளிங்கு சிலையாக அமர்ந்திருந்த கடற்கன்னியின் மேலும் விழுந்தது. சக்தி, அமர், ரங்கா மூவரும் டேனியலை முறைத்தபடியே தோழிகள் இருவருக்கும் அரணாய் நின்றுக் கொண்டனர்.
“அங்க பாருங்களேன். நம்ம ஏஞ்சல் அவனையே பார்த்துகிட்டு இருக்கா.. அநேகமா அடுத்த ஸ்கெட்ச் அந்த குடிகாரனுக்கா தான் இருக்கும்” என ப்ரதீப் கூறியதும் எதோ பெரிய உருவம் ஒன்று அவர்களின் கப்பலை இடித்தபடி நகர்ந்தது.
அந்த ஒரு தாக்குத்தலுக்கே கப்பல் ஆட்டம் காண, ஒருநொடி தடுமாறிய அனைவரும் சுதாரித்து நின்றனர். குடி போதையில் தள்ளாடிய டேனியல் மட்டும் நின்ற இடத்திலே விழுந்து வாரினான்.
ஒருபக்கம் அவர்களை வேட்டையாட கொடூரமான உயிரினம் கப்பலுக்கடியில் கடலில் உலாத்திக் கொண்டிருக்க.. மறுபக்கம், கப்பலின் விளக்கொளியின் மூலம் அவர்களை கண்டுக்கொண்ட கொள்ளைக்கார கூட்டம், அவர்களை தாக்க வந்து கொண்டிருந்தனர்.