இதுநாள் வரைக்குமே ரோஜாவிடம் தேவை இல்லாமல் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டு வந்த நிலா, ரோஜாவின் வயிற்றில் வளரும் குழந்தைகளைக் கொல்லும் தன் எண்ணத்தை மட்டும் கைவிடவே இல்லை.
அவளது முகத்தில் அவ்வளவு குரோதம் நிரம்பி வழிந்தது, உதடுகள் துடிக்க, காரின் ஸ்டீயரிங்கை, அவளது கைகள் அழுத்தமாக பற்றி இருந்தது. அந்த வெளிநாட்டு காரில் இருந்து சத்தமும் வரவில்லை.
அதனால் தனக்குப் பின்னால், ஆக்ரோஷமாக வரும் காரைப் பற்றி ரோஜாவுக்கு தெரியவில்லை.
தன் தாயின் வேதனைகளை எல்லாம் நினைத்துப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்த ரோஜாவுக்கு, நிலவனும் இது போல் செய்திருக்கக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருக்க, அதனை நினைத்துக் கொண்டே நடந்தாள்.
சரியாக நிலாவின் கார் அவளை இடிக்க வரும் போது, ரோஜாவுக்கும் நிலாவின் காருக்கும் குறுக்காலாக வந்து நின்றது ஒரு சிவப்பு நிறக் கார்.
அந்தக் காரின் கதவு திறக்கப்பட, அதில் இருந்து வெளிப்பட்ட நிலவனோ, கண் இமைக்கும் நேரத்தில் ரோஜாவை அவள் இடையோடு தூக்கி, உள்ளே சீட்டில் பாதுகாப்பாக அமரவைத்தான்.
அவசரமாக காரின் கதவை சாத்தியவன், அதிக வேகத்தில் திரும்பி, அந்த இடத்தை விட்டுச்சென்றான்.
மருத்துவமனைக்கு நடந்து கொண்டிருந்த ரோஜா, திடீரென்று நிலவனின் காருக்குள் தான் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.
அவளது இதயம் டக் டக் என்று அடித்துக்கொண்டது.
‘இவருக்கு என்ன பைத்தியம் பிடிச்சி இருக்குதா?’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள், “எதுக்காக இப்படி பண்றீங்க நிலவன். நான் தான் உங்கக்கூட இருக்க விருப்பம் இல்லைன்னு எப்பவோ சொல்லிட்டேனே!” என்று ரோட்டில் கண்ணைப் பதித்தவாறு, வண்டியை ஓட்டும் நிலவனைப் பார்த்துக் கேட்டாள்.
அதற்கு எதுவும் பதில் பேசாதவன், “நேத்து நைட் நீ சரியா தூங்கலையா? கண்ணில் கருவளையம் இருக்குது?” என்று கேட்டான் நிலவன்.
ரோஜாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டு இருந்தவன், அவளின் மேல் கொண்ட அக்கறையோடு கேட்டான்.
“ம்ச்... நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. எதுக்காக இப்படி எல்லாம் பண்றீங்க” என்றாள் அவனைப் பார்த்து முறைத்தபடி. ஆனால் நிலவன் அதற்கும் வாயைத் திறக்காமல், ஒரு கையால், வண்டியை ஓட்டிக்கொண்டே, தன்னுடைய இன்னொரு கையால், ரோஜாவின் கையைப் பிடித்து இழுத்தவன், அதில் முத்தம் வைத்து அவளின் கண்களை விரிவடையச் செய்தான். ரோஜாவோ மெதுவாக அவள் கையை அவனிடமிருந்து பிரித்தவள், சில கணங்கள் எதுவுமே பேசவில்லை.
நிலாவுக்கு இருக்கும் நோயைப் பற்றி, நேற்றே தன் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவரிடம் கேட்டு, அந்த நோயின் வீரியத்தையும் அறிந்து கொண்டவன், நிலாவைத் தான் கண்காணித்துக் கொண்டு இருந்தான். அதில் அவள் காலையிலையே வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல, அவள் பின்னால் வந்தவன், ரோஜா தன் அண்ணன் சிவாவின் காரில் இருந்து இறங்கியதும், நிலா செய்யபோகும் காரியத்தை அறிந்து, நிலாவின் திட்டத்தை தவிடு பொடியாக்கினான்.
தன் அண்ணனின் கார் குறுக்கே வந்ததை கோபத்துடன் பார்த்த நிலா, காரின் ஸ்டியரிங்கில் குற்றினாள்.
அவளின் காரைச் சுற்றி நிலவனின் ஆட்கள் வந்து கொண்டு இருக்க, அதில் எரிச்சல் அடைந்தவள், கண்மண் தெரியாமல் காரை ஓட்டி, அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறினாள்.
உடனே நிலவனுக்கு அலைபேசியில் அழைத்த அவனது ஆட்கள், “அவங்க காரை வேகமா ஓட்டி தப்பிச்சு போயிட்டாங்க சார்” என்றனர்.
“***” என்று ஒரு ஆங்கில கெட்ட வார்த்தையைச் சொல்லி திட்டியவன், “வேகமாக அவளைப் போய் பிடி” என்றான் தன் பற்களைக் கடித்தபடி.
பின் அலைபேசியில் பேசிவிட்டு வைத்த நிலவனைப் பார்த்த ரோஜா, “என்னாச்சி? மறுபடியும் உங்க தங்கச்சியால பிரச்சனையா?” என்று கேட்டாள் நக்கலாக.
அவனோ, “ஆம்” என்று தன் தலையை ஆட்ட, “நான் தான் நேத்தே சொல்லிட்டுப் போனேன்ல, அவளால் அவளுக்கும் ஆபத்து மத்தவங்களும் ஆபத்துன்னு, ஆனா அதைக் கேட்டு நீங்க என்ன செஞ்சீங்க... ஒரு கர்ப்பிணி பொண்ணுன்னு கூட பார்க்காம என் கழுத்தை நெரிக்குறீங்க” என்றாள் தன் கழுத்தை வெட்டியபடி.
“தப்பு தான் ரோஜா. இனி இது போல் எல்லாம், நான் நடக்கவே மாட்டேன். நான் செஞ்ச அந்த தவறை நினைச்சு நினைச்சு ரொம்பவே வேதனைப்பட்டேன், நான் செஞ்ச இந்த கேவலமான செயலுக்கு நீ எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க நான் தயாரா இருக்கேன். ஆனா தயவு செஞ்சி, என்னை விட்டு மட்டும் போகாத” என்றான் உருக்கமான குரலில்.
“உங்க பேச்சை எல்லாம் என்னால் கேட்க முடியாது... இப்ப என்னை எங்க கடத்திக் கூட்டிட்டுப் போறீங்க? என்னை என்ன செய்யப்போறீங்க” என்று உச்ச பச்ச குரலில் கத்தினாள் ரோஜா.
“உன்னை கடத்திட்டு எல்லாம் போகல. எங்க கூட்டிட்டுப் போறேன்னு கேட்டில... என்னுடைய கூட்டுக்கு கூட்டிட்டுப்போறேன்... உன்னை சந்தோஷமா வச்சிக்க கூட்டிட்டுப்போறேன்... உன் கனவுகளை எல்லாம் அடைய நான் உறுதுணையா இருக்க கூட்டிட்டுப்போறேன்” என்று அவன் பாட்டுக்குக் காதல் வசனம் பேசிக்கொண்டே சென்றான்.
முதன் முதலாக ரோஜாவிடம் தன்னை இழந்த, இரும்பு இதயம் கொண்ட நிலவனுக்கு, ரோஜாவிடம் காதலில் வழிவது எல்லாம் தானாகவே வந்தது.
சில நேரங்களில் அவன் பேச்சை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.
காதல் கொண்ட மனதில் எவ்வாறு கவிதை எல்லாம் வரும் என்று அன்று தான் அவன் கண்டுகொண்டான்.
ஆனால் ரோஜாவின் மனதில் நிலவனின் மேல் காதல் இருந்தாலும், ஏற்கனவே அந்த அஜய்யால் காயம் பட்டவள், தன் அன்னை பரணியின் துயரங்களையும் கேட்டவள், நிலவனின் பேச்சில் மயங்கவில்லை.
“இப்படி எல்லாம் பேசி பேசி, ஒரு பெண்ணை ஏமாற்றி அவளைக் காதலில் விழ வச்சி, அவளுடைய கனவுகளை எல்லாம் அழிக்குறது தானே உங்கள மாதிரியான ஆண்களின் வேலை... இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன்” என்று ஆவேசமாகப் பேசினாள் ரோஜா.
“என்ன பேசுற ரோஜா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் மத்த ஆண்கள் மாதிரி கிடையாது..” என்று அவன் சொல்லும் போதே, தன் சுண்டு விரலை தன் காதிற்குள் விட்டவள், “ஷப்பா... இந்த மாதிரி வசனங்களை எல்லாம் கேட்டு என் காது தான் வலிக்குது நிலவன்” என்றாள் கேலியாக.
சரியாக நிலவனின் காரும் அவனது வீட்டின் முன்னே சென்று நின்றது. அதில் இருந்து இறங்கியவன், ரோஜாவின் அருகே இருக்கும் கதவைத் திறந்துவிட்டு, “வெளிய வா ரோஜா” என்றான்.
அதற்கு முகத்தை சுழித்துக்கொண்டு வேறு பக்கமாக திருப்பிக் கொண்டவள், “அதெல்லாம் முடியாது” என்றாள் வீம்பாக.
அவள் கையின் மணிக்கட்டைப் பிடித்து இழுத்து, அவளை அலேக்காக தூக்கியவன், அவள் கத்தல்களைப் பொருட்படுத்தாமல், அவள் தந்த அடிகளையும் வாங்கிக்கொண்டு, மெதுவாக தன் அறையை நோக்கி மாடி ஏறினான்.
தன் அறைக்குள் சென்று, தன் கட்டிலில் அவளைப் படுக்க வைத்தவன், தன் அலமாரியைத் திறந்து, ஒரு அழகான நகைப் பெட்டியை வெளியே எடுத்தான்.
கட்டிலில் இருந்து எழுந்து கொண்டே, ”உங்க மனசுல என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க நிலவன்... என்னை கேட்குறதுக்கு யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா? உங்களுக்கு என் அம்மா மேல எவ்வளவு கோபம் இருக்குதோ, அதை விட அதிகமா உங்க மேல எனக்குக் கோபம் இருக்கு” என்று அவள் பாட்டுக்குப் பேசிக்கொண்டே சென்றாள்.
அவள் முன்னால் வந்து, தான் கையில் வைத்திருக்கும் பெட்டியைத் திறந்து, அவளை நோக்கி நீட்டினான்.
அந்த பெட்டியினுள் இருந்த, வேறு எதுவும் ரோஜாவின் கண்களில் படும் முன்னர், அவள் கழட்டி வைத்து விட்டு சென்ற தாலி, அதனுள் இருப்பது அவளது கண்ணில் பட்டது.
அதனைப் பார்த்து, “என்னைக் கட்டாயப்படுத்தி, திரும்பவும் தாலி கட்டலாம்னு தான், இங்க என்னைக் கூட்டிட்டு வந்தீங்கலா?” என்று கேட்டு அவனைப் பார்த்து முறைத்தாள் ரோஜா.
அதற்கு, “இல்லை” என்று தன் தலையை ஆட்டியவன், “இதுக்குள்ள இருக்குற எல்லா பொருட்களையும் கவனமா பாரு ரோஜா” என்றான்.
அவள் கண்கள் திரும்பவும் அந்த பெட்டிக்குள் சென்றது, அதற்குள் இருந்த மாத்திரைகள், காகிதங்கள், மாஸ்க்குகள் என அனைத்தையும் கண்டவள், யோசனையோடு நிலவனின் முகத்தைப் பார்த்தாள்.
“உனக்கு நிஜமாவே தெரியலையா ரோஜா” என்றான் மெதுவாக வருடும் குரலில்.
அவள், “இல்லை” என்று தன் தலையை ஆட்ட, “இதுக்குள்ள இருக்குற காகிதத்தை எடுத்துப் படிச்சுப் பாரு ரோஜா. இதெல்லாம் நீ எனக்காக கொடுத்தது. இதெல்லாம் நான் பாதுகாக்கும் பொக்கிஷம்” என்றான்.
அப்போது தான் அவள் சிந்தனையில் மின்னல் போல் திடீரென்று வந்த நினைவு அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அதே அதிர்ச்சியுடன், நிலவனைப் பார்த்துவிட்டு, வேகமாக அந்த காகிதத்தை எடுத்தாள். அதைப் பார்த்து உறைந்து, “நீ... நீங்க 203...” என்று பேச்சு வராமல் திக்கினாள்.
அதற்கு மெல்லியதாக சிரித்தவன், “ஆமாம் ரோஜா. நான் ஐந்து வருடங்களுக்கு முன்னால் ரூம் நம்பர் 203ல் இருந்த கொரோனா பேசண்ட்” என்று சொல்ல, தன்னை அறியாமல் அவளது கண்களில் கண்ணீர் பெருகியது.
பெருந்தோற்று காலத்தில், அனைவராலும் கைவிடப்பட்ட நிலவன், இன்று தன்னால் உயிருடன் நடமாடுவது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது.
அவளது இரு கன்னங்களையும் பற்றியவன், “நான் இன்னைக்கு உயிரோடு இருக்குறேன்னா, அதுக்குக் காரணமே நீ தான் ரோஜா” என்றான் கண்ணீர் மல்க.
“நீங்க ஹாஸ்பிடலில் இருந்து எங்க போனீங்க நிலவன். நான் உங்களை மறுபடியும் தேடி வந்தேன் தெரியுமா!” என்றாள் கனிவு ததும்பிய குரலில்.
“அவசரமா போகவேண்டிய சூழல் ரோஜா. அதுக்குப் பிறகு உன்னைப் பார்க்க மாட்டேன்னு நினைச்சேன். அப்ப தான் எங்க தாத்தா இறந்து போய், அவருடைய உயிலும் என் கைக்குக் கிடைச்சது” என்றதும் பழையபடி கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ரோஜாவுக்கு ஏற ஆரம்பித்தது.
“அதனால் சொத்துக்காக என்னை நம்ப வச்சி ஏமாத்திட்டீங்க அப்படித் தானே!” என்றாள் கோபமாக.
“ஐயோ! அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ரோஜா. நான் சொல்வதைக் கேளேன்” என்று அவன் கெஞ்ச, இவளோ, “அதெல்லாம் கேட்க முடியாது” என்றாள் முடிவாக.
இவர்களுக்குள் இப்படியே சம்பாஷனைகள் சென்று கொண்டு இருக்க, அங்கே தன் அண்ணின் ஆட்கள் கண்களில் படாமல், அதிவேகமாக காரை ஓட்டிக்கொண்டு சென்று ஒதுக்குப்புறமாக நின்ற நிலா, சிவாவை அந்த இடத்திற்கு வரவைத்து அவனை மிரட்ட ஆரம்பித்தாள்.
“இதை மட்டும் நீங்க என் கழுத்துல கட்டல... நான் செத்துப் போயிடுவேன் சிவா” என்றாள் மஞ்சள் தாலியை சிவாவின் முன்னால் நீட்டியபடி.
“நான் உன்னைத் தான் கல்யாணம் செய்வேன்னு வாக்குக் கொடுத்து இருக்கேன் தானே நிலா. கண்டிப்பா அதை நான் நிறைவேத்துவேன். இப்ப நீ, நான் சொல்றதைக் கேளு. முதலில் என்னுடன் ஹாஸ்பிடலுக்கு வா” என்று கூறி அவளிடம் மன்றாடினான்.
காலையில் தான் நிலாவிற்கு இருக்கும் நோயின் தீவிரத்தைப் பற்றி, பரணி சிவாவிடம் சொல்லி இருந்தார். அதனால் தான் அவன் காலையில் இருந்தே, நிலாவைத் தேடி அலைந்து கொண்டு இருந்தான். ஏனெனில் அவள் சிவாவின் அழைப்பை ஏற்கவில்லை. இப்போது அவளே கால் செய்ததும், அங்கே ஓடி வந்தவனுக்கு, நிலாவின் இந்த செயல் அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஆனால் சிவாவின் பேச்சை எல்லாம் சிறிதும் காதில் வாங்கிக்கொள்ளாமல், நிலா பைத்தியம் பிடித்தவள் போல் கத்த, வேறு வழி இல்லாமல், அவள் கையில் இருந்த மஞ்சக் கயிற்றை வாங்கிய சிவா, அதனை நிலாவின் கழுத்தில் கட்டினான்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால், பெருந்தோற்று காலத்தில், இந்தியாவில் தொழிலைப் பெருக்க அலைந்து கொண்டு இருந்தான் நிலவன்.
அப்போது தான் கொரோனா பரவ ஆரம்பித்து இருந்தது. தன் தொழில் விஷயமாக, தென் தமிழகத்தில், மதுரைக்கு அருகே இருக்கும், ஒரு கிராமத்தில் தான் அவன் தங்கி இருந்தான்.
அவன் உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே இருக்க, அந்த கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், அவனுக்குக் கோவிட் பாசிடிவ் இருப்பது கண்டறியப்பட்டது.
யாருமே தனக்குத் தேவை இல்லை. தன் தொழில் மட்டுமே தனக்குப் போதும் என்ற மமதையில் இருந்த பெரும் செல்வந்தன், யாருமற்ற அனாதையாக, அந்த இடத்தில் கிடந்தான்.
மருத்துவ வசதி துளியும் இல்லாத, அந்த கிராமத்தில், அவனுக்கு வயித்தியம் பார்க்கக் கூட யாரும் வரவில்லை.
நிலவனுக்குப் பேசக் கூட முடியாமல் மூச்சு வாங்கியது. அந்த சமயம் அந்த கிராமத்தில் தான் மெடிக்கல் கேம்ப் வந்திருந்தாள், எம்பிபிஎஸ் இறுதி வருடம் படிக்கும் மாணவி வனரோஜா.
அங்கே நிலவனையும் சேர்த்து இன்னும் பத்து நோயாளிகள் இருந்தனர். ரோஜாவுடன் சேர்த்து இன்னும் ஐந்து மாணவர்கள், நோயாளிகள் அனைவரையும் நிலவனுடன் சேர்த்து பாதுகாப்பாக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
அங்கேயும் இதே நிலை தான். மருந்து தட்டுப்பாடு காரணமாக நிலவனுக்கு எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்கவில்லை.
அதில் நிலவனின் நிலை மோசமாக சென்று கொண்டே இருந்தது. அந்த மருத்துவமனையில் அவசர நிலை கருதி, வாலண்டியராக பணியாற்ற ஆரம்பித்தாள் ரோஜா.
உடல் எல்லாம் வெளிறிப்போய், எலும்பும் தோலுமாக இருந்த நிலவனுக்கு அதிகம் மூச்சு வாங்கியதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு இருந்தது.
இப்போது இருக்கும் அவனது முகத்துக்கும், அப்போது இருந்த அவனது முகத்துக்கும் அதிகம் வித்தியாசம் இருந்தது.
அங்கே இருக்கும் நோயாளிகளுக்கு எல்லாம் தன்னால் முடிந்த உதவியை தூரத்தில் இருந்தே செய்து கொண்டிருந்த ரோஜா, அந்த சமயத்தில் தன் கையை வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலவனைக் காப்பாற்றினாள்.
செவிலியர் வைத்து விட்டு சென்ற கத்தியை எடுத்துத் தன் கையை வெட்டப்போனவனை, கொஞ்சமும் நோய் பயம் இல்லாமல், அவன் அருகில் சென்று, அவன் கையில் இருந்த கத்தியை வாங்கி, “மிஸ்டர் 203, நீங்க இப்படி எல்லாம் செய்யக்கூடாது. உங்களைக் காப்பாற்ற தானே நாங்க எல்லாம் போராடிக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு என்ன செய்யுது? ஒண்ணுமே செய்யல. பாருங்க இப்ப உங்களுக்கு வென்டிலேட்டர் கூட தேவைப்படல” என்று பேசிப் பேசியே அவனை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தாள்.
பின் அவனுக்குத் தினமும், கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்து வந்தாள்.
அதில், “மாற்றம் ஒன்று தான் மாறாதது 203. நீங்க வேணும்னா பாருங்களேன், இங்க இருந்து நீங்க வெளிய போனதும், என்னவெல்லாம் சாதனை செய்யப்போறீங்கன்னு!” என்று எழுதி ஜன்னல் அருகே வைத்துவிடுவாள்.
இன்னொரு நாள் எழுதிய கடிதத்திலோ, “அன்பை வெளியத் தேடாதீங்க... உங்களுக்குள் தேடுங்க... உங்களை முதலில் நீங்க நேசிக்கக் கத்துக்கணும். லவ் யூவர்செல்ப் மிஸ்டர் 203” என்று எப்போதும், அவனுக்கு நம்பிக்கை அளிக்கும் கடிதத்தை எல்லாம் அளித்து வந்தாள்.
நிலவனின் மனது தன் தாய் தந்தையை இழந்த பிறகு முதன் முதலாக ரோஜாவைப் பார்க்கும் போதெல்லாம் இதமாக மாறியது. ஐந்து அடி தூரத்தில் அவளைப் பார்ப்பது, அவனுக்கு இனம் புரியாத, மகிழ்ச்சியினைத் தந்தது. மாஸ்கின் பின்புறம் இருக்கும் ரோஜாவைப் பார்க்க பேராவல் கொண்டான்.
நிலவனும் இப்போதெல்லாம் வென்டிலேட்டர் உதவி இல்லாமல், வெறும் மாஸ்க் மட்டுமே அணிந்து இருக்கின்றான். ஆனால் முழுமையாக அவன் குணமாகவில்லை.
அந்த அரசு மருத்துவமனையில், நிலவனுக்கும் மற்ற ஏனைய சில நோயாளிகளுக்கும் மருந்துக்களை மருத்துவரிடம் இருந்து கேட்டு வாங்கித் தருவது ரோஜா தான். அதனுடன் தற்கொலைக்கு முயன்ற நிலவனை மிகவும் பாதுகாப்பாக நம்பிக்கை அளித்துக் கவனித்து வந்தாள்.
அன்று நிலவன், “என்னைக் காப்பத்துன உங்க முகத்தை ஒரு தடவை பார்க்கணும் டாக்டர்... ப்ளீஸ் எனக்காக ஒரு தடவை உங்க மாஸ்க்கைக் கழட்டுங்க” என்றான் வேண்டுதலாக.
அவனுக்காக தன் மாஸ்கைக் கழற்றினாள் ரோஜா. அந்த நீல நிற கவச உடையில் கூட, அவன் கண்களுக்கு ரோஜா, தேவதை போல் தெரிந்தாள்.
அதன் பிறகு அடுத்த நாள், அவள் நிலவனைக் காண வரும் போது, அவன் அங்கு இல்லை.
நடந்தவற்றை எல்லாம் நினைவு கூர்ந்த நிலவன் ரோஜாவிடம், “எனக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு நிலா ரொம்பவே அழுதாள். அப்ப பாதிப்பும் கொஞ்சம் நீங்கி இருந்தது. அதனால் என் ஜெட்டில் லண்டன் போக இந்திய அரசாங்கம் அனுமதி தந்து இருந்தது. அதனால் உன்னை, இனி பார்க்க முடியதுங்குற சோகத்தில், நான் இந்தியாவை விட்டுப் போனேன்” என்றான்.
தன் கையை கட்டிக்கொண்டு அவனைப் பார்த்து முறைத்தவள், “அப்ப தெரிஞ்சே தானே என்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணி லண்டன் கூட்டிட்டுப் போனீங்க... நீங்க எல்லாம் மனுஷன் தானா?” என்றாள்.
“சொல்றேன் ரோஜா... எல்லாத்தையும் சொல்லத் தான் உன்னை நான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்று சொல்லி பேச ஆரம்பித்தான்.
“இந்தியாவில் இருந்து லண்டன் போனதுக்குப் பிறகு, என் தொழிலின் பின்னால், முன்பை விட, மிகவும் வேகமாக ஓடினேன். அப்ப அப்ப உன் நினைவுகள் எனக்கு வரும்” என்று சொன்னவனின் இதழ் ஓரத்தில் சிறு புன்னகை.
“அப்ப தான் எனக்கு காரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டுச்சு. என்னால் இனி தந்தை ஆக முடியதுங்குற விஷயமும் எனக்கு சொல்லப்பட்டது. ஆனால் அந்த காரணத்துக்குப் பின்னாடி, என் தங்கை நிலா இருப்பான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல” என்றான் சோகமான குரலில்.
“அதெப்படி நிலவன், உலகில் உள்ள தலை சிறந்த மருத்துவர்கள் எல்லாருமே, நிலாவின் பேச்சைக் கேட்டு, உங்களுக்கு இப்படி குறை இருக்குன்னு சொல்லி இருப்பாங்க” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள் ரோஜா.
“ஏன்னா எனக்கு உண்மையாகவே குறை இருந்துச்சி ரோஜா, ஆனா அது அப்போதே சரியகிடுச்சிங்குற உண்மை தான் எனக்குத் தெரியல. என்னுடைய ரிப்போர்ட்டை நிலா மாத்திட்டாள். அந்த ரிப்போர்ட்டைப் பார்த்த மருத்துவர்கள் எல்லாருமே, எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லைன்னு சொன்னாங்க” என்றான்.
“எனக்கு இனி வாழ்க்கையில் எந்த ஒரு சந்தோஷமும் கிடையாதுங்குற நிலையில் தான், என் பேராசை கொண்ட மனது, உன்னைப் பார்க்கணும் பேசணும்னு ஆசைப்பட்டுச்சு” என்று தன் நினைவுகளில் உள்ள இனிமைகளை எல்லாம் ரோஜாவுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தான்.
“தாத்தாவின் உயில் எல்லாம் உன்னைப் பார்க்க வர்றதுக்கு நான் கையாண்ட ஒரு கருவி தான். ஆமாம் நான் நினைச்சேன்... நீ உங்க அண்ணன் அம்மா பக்கம் போயிடக்கூடாதுன்னு. அதனால் தான் அவங்கக் கண்ணில் படாமல் உன்னை ரொம்ப தூரமா கூட்டிட்டுப் போனேன்” என்று சொல்லி நிறுத்தினான்.
“பிறகு எதுக்காக என்கிட்ட மோசமா நடந்துக்கிட்டிங்க?” என்றாள் அவனை முறைத்தபடி.
“ஏன்னா, உனக்கு என் மீது காதல் வந்துவிடக்கூடாது, அதனால் உன் வாழ்க்கை பாதிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். நீயும் ரொம்பவே அந்த நேரத்துல மன கஷ்டத்தில் இருந்த, உன்னைப் பார்க்கும் நேரமெல்லாம் உன்னை அரவணைக்க வரும் என் கையைக் கட்டுப் படுத்திவைக்க நான் கஷ்டப்பட்டேன். எனக்கு உன் மேல் உள்ள அன்பு வெளிய இருக்கும் என் பிஏவுக்குக் கூட தெரியக்கூடாதுன்னு, உன் மேல் கோபமா இருக்குறமாதிரி அவனிடம் கூட நடிச்சேன்” என்று அனைத்தையும் அவளிடம் கூறினான்.
“அப்ப எதுக்காக என்னை செயற்கை கருத்தரிப்புமுறைக்கு போக சொன்னீங்க” என்றாள் தன் ஒரு புருவத்தை மட்டும் தூக்கியவாறு.
“நீ நல்லா இருக்கணும்னு தான் உன்கிட்ட இருந்து விலகியே இருந்தேன். ஆனா உன் கூட ஒன் நைட் ஸ்டான்ட் இருப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கல ரோஜா. உண்மையை சொன்னால், என் வாழ்வில் இனிய இரவு அது. அதுக்குப் பிறகு, உன்னை வேற எந்த ஒரு ஆணோடவும் சேர்த்து வைத்துப் பார்க்க, என் மனசு விரும்பல. அந்த நேரம் என் மனசு சாத்தான் போல் யோசித்தது. நீயும் எனக்கு யாரும் தேவை இல்லை, நான் கல்யாணமும் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னியா, அதனால் தான் அப்படி சொன்னேன். அதனால் நிலாவுக்குக் கிடைக்க வேண்டிய சொத்தும் கிடைக்கும்” என்று அவன் சொல்ல, நிலாவின் பெயரைக் கேட்டதும், ரோஜாவுக்குக் கோபம் வந்தது.
“நீங்க என்ன தான் என் நல்லதுக்குன்னு சொன்னாலும், நிலாவுக்கு ஆதாயம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டீங்க தானே! அப்படி என்ன அவள் மேல் உங்களுக்குப் பாசம்? இத்தனைக்கும் அவள் உங்க சொந்தத் தங்கை கிடையாது தானே!” என்று ரோஜா சொல்ல, தொப்பென்று அங்கு பூஜாடி உடையும் சத்தம் கேட்டது.
இருவரும் திரும்பிப் பார்க்க, நிலா தான் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் தொங்கும் மஞ்சள் தாலியைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றாள் ரோஜா.
ஆனால் நிலவனின் கண்களில் அது படவில்லை. அவன் மனதோ, ‘இதனைக் கேட்ட நிலாவின் மனது என்ன பாடுபடுமோ’ என்ற ஐயத்தில் இருந்தது.
நிலாவை நெருங்கியவன், அவளைத் தொடப் போக, “என்னைத் தொடாத... நான் உன் தங்கச்சிக் கிடையாதா? அதனால் தான் எனக்கு சொத்து வரக்கூடாதுன்னு, இவள் கூட சேர்ந்து நாடகம் ஆடுனியா” என்று ரோஜாவைக் காட்டிக் கேட்டாள்.
ரோஜா பேசும் போது தான், அந்த இடத்திற்கு வந்திருந்தாள் நிலா. அதனால் நிலவன் அவளுக்காகப் பேசியது எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.
“இங்கப்பாரு நிலா... நான் சொல்றதைக் கேளு...” என்றபடி நிலவன் திரும்பவும் அவள் அருகில் போக, “வராதன்னு சொல்றேன்ல அங்கயே நில்லு. அப்பாவுக்கு எப்போதும் என்னையத் தான் பிடிக்கும். அப்படி இருக்கும் போது, நான் அவருடைய பொண்ணு இல்லைன்னு நீ எப்படி சொல்லலாம்?” என்றாள் கண்களை ரத்த சிவப்பாக வைத்துக் கொண்டு.
“ஹேய் நிலா... அபப்டி எல்லாம் ஒன்னும் இல்லைடா... நீ அப்படியே நம்ம அப்பா மாதிரி முகஜாடை. இதை அப்பாவே சொல்லி இருக்கார் தானே!” என்றான் மெதுவாக அவளுக்குப் புரியவைக்கும் குரலில். ஆனால் அவனுள் பாசம் சுத்தமாக இல்லை, ரோஜா வேறு அங்கே இருப்பதால், அவன் மிகவும் பயந்தான் நிலாவைப் பார்த்து.
“அப்ப இந்த வனரோஜா எதுக்காக அப்படி சொன்னாள்” என்று கத்தினாள்.
இப்போது முன்னே வந்த ரோஜாவோ, “நான் ஒரு கோபத்தில் அப்படி சொல்லிட்டேன் நிலா. இங்கப்பாரு நான் உன்கிட்ட அதுக்காக மன்னிப்பு கேட்குறேன்” என்றாள் தணிவான குரலில்.
“எல்லாத்துக்கும் காரணம் நீ தான்டி... நீ மட்டும் எங்க வாழ்க்கையில் வராம இருந்திருந்தா, நான் நல்லா இருந்துருப்பேன்” என்று ஆக்ரோஷமாக பேசியவள், அவள் அருகே இருந்த மேஜையில் பழம் வெட்டும் கத்தியை எடுத்து ரோஜாவின் வயிற்றில் குத்த வருவதற்குள் ரோஜாவின் முன்னே வந்து நின்று அந்தக் குத்தை தன் வயிற்றில் வாங்கினான் நிலவன்.
கங்கா மருத்துவமனைக் கட்டிலில் படுத்து இருந்தாள் ரோஜா. ரோஜாவின் வியர்வைக் கரங்களைப் பற்றி இருந்த நிலவனோ, கண்களில் ஆனந்தம் மின்ன அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அருகே இருந்த தொட்டிலில் ரோஜா ஈன்று எடுத்த இரண்டு ரோஜாக்கள் தூங்கிக் கொண்டு இருந்தன.
“இந்த இரண்டு சின்ன உயிர்களின் முதல் அழுகை, என் காதுகளுக்கு இதுவரை கேட்காத அழகிய இசை ரோஜா” என்றான் கண்களில் நீர் மிளிர.
அதற்கு மெல்லியதாக சிரித்தவள், “பார்க்க அப்படியே உங்களைப் போலவே இருக்காங்க. உங்களை மாதிரியே சேட்டை பண்ணா என்ன செய்யுறது?” என்று கேட்டாள் விளையாட்டாக.
“என்னை எப்ப பார்த்தாலும் கிண்டல் பண்ணி பேசிக்கிட்டே இருப்பியே அதனால் தான் என் பெண் குழந்தைகள் என்னைப் போலவே பிறந்திருக்காங்க” என்றான் அவனின் பிரதியாக இருக்கும் இரு குழந்தைகளையும் பார்த்தபடி.
அப்போது அங்கே கதவைத் தட்டி விட்டு, இரண்டு செவிலியர்களுடன் உள்ளே நுழைந்த பரணி, “ரோஜாம்மா இப்ப உனக்கு எப்படி இருக்குது?” என்று கேட்டார்.
அவரைக் கண்டதுமே தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் நிலவன். இவர்களுக்குள் இருக்கும் பனிப்போர் எதுவும் இன்னுமே முடியவில்லை.
“இப்ப பெட்டரா இருக்கும்மா” என்றாள் ரோஜா.
“குழந்தைகளுக்கு இன்ஜெக்ட் பண்ணனும் ரோஜா. நான் குழந்தைகளை எடுத்துட்டுப் போறேன். நீ ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு, செவிலியர் உதவியுடன் குழந்தைகளை எடுத்துக் கொண்டு சென்றார்.
அவர் போன பின்பு ரோஜாவைப் பார்த்தவன், “இதெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல ரோஜா” என்றான்.
“அது இருக்கட்டும், நிலாவின் நிலைமை இப்ப எப்படி இருக்கு? எதாவது முன்னேற்றம் இருக்குதா?” என்று அவள் கேட்க, “இல்லை” என்று தன் தலையை ஆட்டினான் நிலவன்.
நிலா முழுவதுமாக சுயநிலை இழந்துவிட்டாள். சில மாதங்களுக்கு முன்னால் அவள் நிலவனைக் கத்தியால் குத்தியதும், ரோஜா அதிர்ச்சியில், “நிலவன்...” என்று கத்தினாள்.
உடனே ரோஜாவையும் தாக்க வந்தாள் நிலா.
அப்போது அவளைத் தேடி அங்கே வந்த சிவா, மாடியில் சத்தம் கேட்டு, அங்கே ஓடி சென்று, ரோஜாவைத் தாக்க இருக்கும் நிலாவின் கையைப் பிடித்தான்.
ஆனால் அவளோ பைத்தியம் முத்திப் போய், சிவாவிடம் இருந்த தன் கையை உருவி அவனையும் கத்தியால் குத்த வந்தாள்.
அதற்குள் நிலவனின் பாதுகாவலர்கள் அங்கே வந்து, நிலாவுக்கு மயக்க ஊசி போட்டனர். சிவாவும், ரோஜாவும் தான் நிலவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
வெறும் பழம் வெட்டும் கத்தி என்பதால், அவ்வளவு கூர்முனையில் கத்தி அவனது வயிற்றில் இறங்கவில்லை. ரோஜா தான் அவனை அருகில் இருந்து, அவனுக்கு சரியாகும் வரை கவனித்துக் கொண்டாள்.
அப்போது தான் இருவரும் அதிகமாகப் பேசினர். தங்களது காதலையும் பகிர்ந்து கொண்டனர்.
ஆனால் அவர்களது பெற்றோர்களின் பேச்சை எடுத்தால் மட்டும் அவர்களுக்குள் சண்டை வெடிக்க ஆரம்பித்தது.
அதில் நிலவன் ரோஜாவிடம் தெளிவாக சொல்லிவிட்டான், “என்னுடைய பெற்றோர்களும், உன்னுடைய பெற்றோர்களும், வாழ்க்கைனா என்னன்னு பார்த்தவங்க. ஆனா நாம அப்படி இல்ல. நமக்குக் குழந்தை வேற பிறக்கப் போகுது. நம்ம வீடு அன்பால் மட்டும் தான் கட்டமையனும். அதில் உன் அம்மாவைப் பற்றியும் என் அப்பாவைப் பற்றியும் பேசுவதற்கு ஒண்ணுமே இல்ல” என்று சொல்லி அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளியும் வைத்துவிட்டான்.
நிலாவை லண்டனில் இருக்கும் ஒரு மனநலக் காப்பகத்தில் வைத்திருக்கின்றனர். சிவாவும், நிலவனும் மட்டுமே அடிக்கடி அங்கு சென்று அவளைப் பார்த்துவிட்டு வருவர்.
இதில் உடைந்து போன சிவாவை, தேற்றிக் கொண்டு வந்தது, அவனுடைய நண்பி, டாக்டர் மேகி தான்.
ரோஜாவும் நிலவனும் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அங்கே வந்த சிவா, நிலவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ரோஜாவைப் பார்த்தான்.
“ம்ச்... உங்களோட... அப்படி என்ன தான் உங்களுக்குள் பிரச்சனை? பேச வேண்டியது தானே!” என்றாள் இருவரையும் பார்த்து.
அதற்கு நக்கலாக நிலவனைப் பார்த்த சிவா, “அது ஒன்னும் இல்ல ரோஜா, இந்த வட்டம் அரசாங்க டெண்டர் நம்ம நிறுவனத்துக்குக் கிடச்சி இருக்கு அது தான் இவருக்குக் கோபம்” என்றான்.
“ரோஜா, நான் அமைதியா இருக்கேங்குறதுக்காக, என்னவேணாலும் பேசலாம்னு அர்த்தம் இல்ல. உன் அண்ணன் கிட்ட சொல்லி வை” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான் நிலவன்.
வெளியே சென்ற நிலவன் முகத்தில் லேசாக புன்னகை தெரிந்தது.
அவன் சென்றதும், “இப்ப அவர் சிரிச்சார் தானே!” என்று தன் அண்ணனிடம் நம்பமட்டாமல் கேட்டாள் ரோஜா.
“அவன் வேணும்னே தான் டெண்டரை விட்டுக் கொடுத்தான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சிவா.
“ஆங்... எனக்காகவா?” என்று அவள் அதிர, “உனக்காக இல்ல... எனக்காக... அவன் என் பழைய நண்பன் தெரியுமா!” என்றான் தன் காலரைத் தூக்கிவிட்டபடி.
ரோஜாவோ தன் வாயில் கைவைத்துவிட்டாள்.
ஆம் இருவரும் சிறுவயது நண்பர்கள். நிலவனுக்கு பரணி மீது கோபம் இருந்தாலும், ஒன்றுமே செய்யாத சிவாவின் மேல் என்றுமே கோபம் இருந்தது கிடையாது. பல வருடங்களுக்கு முன்பே கைவிட்ட நட்ப்பை, மீண்டும் தொடர இருவருக்குமே ஒரு மாதிரியாக தான் இருந்தது.
இருவருக்குமே சகஜமாக பேச்சு வரவில்லை. ஆனால் இருவருமே தங்கள் நட்ப்பைப் புதுப்பிக்க எண்ணினர். அதில் முதல் அடி என்னவோ எடுத்து வைத்தது நிலவன் தான்.
இதனைக் கேட்ட ரோஜாவோ, “அடப்பாவிகளா... ரெண்டு பேரும் காதலர்கள் போல அல்லவா பண்றீங்க...” என்று சொல்லியபடி அவன் கையில் அடி ஒன்றைப் போட்டாள்.
“குட்டிஸ்களை எங்கக் காணோம்” என்றான் அவன் கண்களை சுழற்றியபடி.
“அம்மா எடுத்துட்டுப் போயிருக்காங்க அண்ணா. ஆமாம் நீ ஏன் நிறுவனத்திற்குப் போறேன்னு சொல்லிட்டு, மறுபடியும் இங்க வந்து இருக்க?” என்றாள் ரோஜா.
“உன் போனைக் கொடுக்க வந்தேன்” என்று தன் காற்சட்டைப் பையில் இருந்த போனை அவளிடம் கொடுத்தவன், “உன் பிரண்ட் சந்தியா காலையில் இருந்தே போன் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்று சொல்லிவிட்டு சென்றான்.
ரோஜாவின் அழைப்பை எடுத்த சந்தியாவோ, “வாழ்த்துக்கள் ரோஜா, இரட்டைப் பெண் குழந்தைகள் உனக்குப் பிறந்து இருக்குன்னு உன் அண்ணன் சொன்னார்” என்று மகிழ்ச்சி பொங்க பேசினாள்.
“நன்றி சந்து. மன்னிச்சிடுடி, உன் கல்யாணத்துக்கு என்னால் வரமுடியல... உன் வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டாள்.
“இதுக்கு எல்லாம் எதுக்காக மன்னிப்பு கேட்குற? உனக்கு டேட் நெருங்குற நேரத்தில், எனக்குக் கல்யாணத்தை வச்சிட்டாங்க. நாங்க எல்லாரும் ஓகே தான். கூடிய சீக்கிரம் உன் குடும்பத்தோட, நீ இந்தியா வா, நாம எல்லாரும் சந்திக்கலாம்” என்றாள் குதூகலமாக.
“கண்டிப்பா சந்து... அதுக்காக நான் இப்பவே காத்திருக்கேன்” என்றாள் ஆனந்தமாக.
“நீ இப்படி இருக்குறது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்குது ரோஜா. எத்தனை நாள், அம்மா அப்பா பாசம் கிடைக்காமல் அழுது இருப்ப. இப்ப உனக்குக் குடும்பம் மட்டும் கிடைச்சது இல்லாம, பார்க்க அன்ட்டி ஹீரோ போல இருந்துட்டு, உன்னைக் கடத்திட்டுப் போன, கிரீன் பிளாக், அதைவிட உனக்காக எதையும் செய்யுற கணவரும் கிடைச்சி இருக்கார்” என்றாள் சந்தியா குறும்புடன்.
அதற்கு அகத்தில் சிரித்துக் கொண்ட ரோஜாவிடம், “ஆனால் ஒன்னு ரோஜா, உன்னை படுத்தினப் பாட்டுக்கு, அந்த அஜய்யும் சரி, அவனுடன் சேர்ந்து அபியும் அவளுடைய அம்மா அப்பாவும் சரி நல்லாவே அனுபவிக்குறாங்க. கடவுள் உலகத்துல இருக்காருங்குறதுக்கு இவங்க தான் நல்ல உதாரணம்” என்று அவள் சொல்லும் போதே, ரோஜாவின் புருவம் முடிச்சிட்டது.
“என்னாச்சி சந்து? அவங்களுக்கு என்ன?” என்றாள் யோசனையாக, “நீ இங்க இருந்து போன உடனே, அபிக்கு ஆக்சிடென்ட் ஆகி, அவள் படுத்த படுக்கையாகிட்டாள் ரோஜா. அவளுடைய அப்பா நிறுவனத்தில் ஹேவி லாஸ். எதுவுமே இல்லாம நடத்தெருவுக்கு வந்துட்டாங்க ஒரே மாசத்துல. அந்த அஜய் இருக்கானே, இவனுக்காக மருத்துவமனை கட்டித் தருவேன்னு அபி அப்பாக்கூட சொன்னாரே, அவன் அதுக்காகத் தான் அபியைக் கல்யாணமே செய்துருப்பான் போல.
அபிக்கும் அவள் குடும்பத்துக்கும் இப்படி ஆனதும், இவங்கக்கிட்ட எதுவும் தேறாதுன்னு அந்த அஜய் கம்பி நீட்டிட்டான் போல. பணம் பணம்னு அலைஞ்சு, கடைசியில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை கொடுத்து, போலீஸ்ல மாட்டி, இப்ப ஆயுள்தண்டனைக் கைதியா ஜெயில்ல களி திண்ணுக்கிட்டு இருக்கான்” என்றாள் சந்தியா.
குரலில் நடுக்கம் உண்டாக, “அபி... அபியும் அவள் அம்மா அப்பாவும் இப்ப என்ன செய்யுறாங்க?” என்றாள்.
“அபியை நான் வேலை பார்க்கும் அரசு மருத்துவமனையில் தான் சேர்த்து இருக்காங்க. அவள் எழுந்து நடமாடுறது எல்லாம் கஷ்டம் தான். முதுகெலும்பு செயல் இழந்து போச்சு. அவளுடைய அம்மா தினமும் அவள் முகத்தைப் பார்த்து அழறாங்க. அவள் அப்பா, எங்கையோ வாட்ச்மேன் வேலைக்குப் போறாரு போல” என்று தனக்குத் தெரிந்ததைக் கூறினாள்.
“சந்தியா, அபிக்கு அறுவை சிகிச்சை செய்தால், அவள் சரியாகிடுவாளா?” என்று கேட்டாள்.
ரோஜா எதற்காக இப்படி கேட்கின்றாள் என்பதனை உணர்ந்த சந்தியா, “அவளுக்கு நீ பணம் கொடுக்கப் போறியா? அப்படி செய்தாலும், மேலும் அவங்க உன்னை கரிச்சு தான் கொட்டுவாங்க ரோஜா. இந்த உலகத்தில் நல்லது பண்ணா கூட அதுக்கு மதிப்பே இல்ல” என்றாள்.
“முடிவு பண்ணிட்டேன் சந்து. அவங்க எப்படியோ, நான் அவங்க மீது பாசமாத் தான் இருந்தேன். அவங்களுக்கு இந்த ஒரு உதவியை மட்டும் செய்ய நினைக்குறேன். இது நான் செய்தேன்னு அவங்களுக்குத் தெரியவும் வேண்டாம். ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து, அபியின் சிகிச்சைக்குக் கொடுத்தாங்கன்னு, நீயே சொல்லிடு” என்றவள் சிறிது அவளுடன் பேசிவிட்டு வைத்தாள்.
அப்போது நிலவன் அங்கே வர, அவனது கையைப் பிடித்தவள், “அபியோட அப்பா நிறுவனம் லாஸ்ல போறதுக்கு நீங்க தான் காரணமா நிலவன்?” என்று கேட்டாள்.
“அது அபியோட அப்பா நிறுவனம் இல்லை ரோஜா... உன்னுடைய அப்பா நிறுவனம். நான் அவங்களுக்கு இதை மட்டும் தான் செய்தேன். மத்தபடி அபியோட விபத்துக்கு நான் காரணம் இல்ல” என்றதும் தான் ரோஜாவுக்கு நிம்மதியாக இருந்தது.
தொடர்ந்து பேசியவன், “அஜய்க்கு லேசா காசு ஆசை காண்பிச்சேன், அவன் தோதா வந்து சிக்கிட்டான்” என்று சொல்லி சிரித்தான்.
“இதெல்லாம் நமக்குத் தேவை தானா நிலவன்?” என்று கேட்டாள் ரோஜா.
“எப்ப என்னுடைய குழந்தைகளவே நிலா கொலை செய்ய முடிவு செஞ்சாளோ அப்போதே, நான் உயிரையே வச்சி இருந்த என்னுடைய தங்கச்சி வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். இதுல உன்னை பல ஆண்டுகளா கொடுமை செய்தவர்களை நான் எப்படி சும்மா விடுவேன்” என்றான் கண்களில் தீப்பொறி பறக்க.
நிலா அவளுக்கு ஏற்பட்ட நோயினால் தான் அப்படி இருக்கின்றாள் என்று மற்றவர்களைப் போல் நிலவன் நினைக்கவில்லை.
தன் மருத்துவ அறிக்கையை மாற்றியவள், நோயில் இருந்து விடுபட்டாலும் தன்னை நிம்மதியாக வாழவிடப்போவது இல்லை, என்று கணித்து தான் விலகி இருந்தான் நிலவன்.
ஆனால் ரோஜா தான், “நிலா உங்களைக் கேட்டு தான் அடம்பிடிக்கின்றாள் நிலவன். அவளைப் போய்ப் பாருங்க” என்று அவனிடம் அடிக்கடிக் கூறி பார்க்க வைப்பாள்.
ஆனால் நிலா நோயில் இருந்து விடுபடவே இல்லை. அவளின் மனநிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது.
நாட்கள் செல்ல, குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் வைபோகம் நடந்தது.
பூவிழி, பூந்தென்றல் என்று தங்களது இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயர் வைத்தனர், ரோஜாவும் நிலவனும்.
அந்த விழா முடிந்த கையோடு, மேகியை, அவளது வீட்டில் விடச்சென்ற சிவா, “பக்கத்துல தான் நிலா இருக்கும் ஹாஸ்பிடல் இருக்குது மேகி. நாம அவளைப் பார்த்துவிட்டுப் போகலாம்” என்று சொல்ல, அவளும் சம்மதித்தாள்.
இருவரும் ஜோடியாக வருவதைப் பார்த்த நிலாவுக்கு என்ன ஆனதோ, எதுவும் பேசவில்லை அமைதியாகவே இருந்தவள், மறுநாள் தற்கொலையும் செய்து கொண்டாள்.
மருத்துவர் தன்னை சோதிக்க வரும் போது, அவருக்கே தெரியாமல், அவரது ஊசியை எடுத்துத் தன் தலையணைக்குள் மறைத்து வைத்த நிலா, அவர் சென்றதும், அந்த மருந்தில்லா வெற்று ஊசியை தன் மணிக்கட்டு நரம்பில் செலுத்தி உயிரை விட்டு இருந்தாள்.
தன் சுயநலத்திற்காக மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்தி, அதனால் மனச்சிதைவு நோய் ஏற்பட்டு மொத்தமாக இந்த உலகை விட்டே சென்று இருந்தாள் நிலா.
நிலாவின் இந்த முடிவு அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இதில் அதிகமாக உடைந்து போனது சிவா தான். நிலவனோ, யாரோ இறந்தது போல் இருந்தான்.
ரோஜா பேசிப் பார்த்தும், அவன் நிலாவின் உடலை தன் வீட்டிற்குள் எடுத்து சென்று இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கவில்லை.
ரோஜாவின் மனது ஒரு மாதிரி என்றால், நிலவனின் மனது இன்னொரு மாதிரி. மன்னிக்கும் மனப்பான்மை அனைவருக்கும் இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லையே!
ஐந்து வருடங்களுக்குப் பிறகு....
நிலவனும் ரோஜாவும் தாங்கள் முதன்முதலாக சென்ற தீவிற்கு தான் வந்து இருந்தனர்.
பழைய நினைவுகளை எல்லாம் பேசிக்கொண்டே இருந்தவர்கள், தங்கள் பிள்ளைகளோடு இணைந்து கடலில் விளையாடினர்.
மறுநாள், தனிவிமானம் மூலம் லண்டன் சென்றனர், அங்கு மருத்துவத்தில் சிறந்த சேவை செய்ததற்காக, இங்கிலாந்து அரசர் கையால் ரோஜாவுக்கு விருது கிடைத்தது.
அதைப் பார்த்த பரணிக்கு, ஆனந்தக் கண்ணீர் வந்தது. தான் அடைய நினைத்ததை எல்லாம், தன் மகள் அடைந்து விட்டதால் பெருமையாக இருந்தது.
சிவாவும், தன் மனைவி மேகி மற்றும் ஒரு வயது குழந்தையோடு அந்த விழாவில் பங்கேற்றான்.
நிலா அனைவரது வாழ்வில் இருந்தும் மொத்தமாக மறைந்து போய் இருந்தாள்.
இப்போதெல்லாம் பரணியும், நிலவனும் கூட தொழில் விஷயமாக அடிக்கடிப் பேசிக் கொள்கின்றனர். ஆனால் நன்றாக மாமியார் மருமகன் போல் எல்லாம் பேசுவது கிடையாது. நிலவன் இந்த அளவுக்கு பரணியிடம் பேசுவதே, ரோஜாவுக்குப் போதுமானதாக இருந்தது.
ஆனால் சிவாவுடனான நட்பு, சிறுவயதில் இருந்ததைப் போலவே மாறியது நிலவனுக்கு. அடிக்கடி இருவரும் பிள்ளைகளை மட்டும் கூட்டிக்கொண்டு சுற்றுலா சென்றும் வந்தனர்.
அன்று இரவு, பிள்ளைகள் இருவரும் தூங்கப்போன பின், தங்களது அறையில், ரோஜாவும் நிலவனும் பேசிக்கொண்டு இருந்தனர்.
“அதெல்லாம் சரி. அன்னைக்கு மட்டும் எனக்கு அஜய் கூட கல்யாணம் ஆகி இருந்தா நீங்க என்ன பண்ணி இருப்பீங்க?” என்று அத்துணை வருடங்கள் கடந்து அந்தக் கேள்வியைக் கேட்டாள் ரோஜா.
அதற்கு அவள் தலையோடு, தன் தலையை முட்டியவன், “உன்னை தூக்கிட்டு வந்து இருப்பேன்” என்றான் சற்றும் யோசிக்காமல்.
“இது என்ன சினிமாவா? அப்படி மட்டும் நீங்க செஞ்சி இருந்தா, உங்க மேல எனக்குக் காதலே வந்து இருக்காது” என்றாள் தன் கழுத்தை வெட்டியபடி.
“அதெப்படி வராமல் போகும். சின்ன வயசுல இருந்தே, நீ எனக்குத் தான்னு என் தாத்தா சொல்லிட்டாரு. நான் அசுரனா இருந்தாலும், அதிகனா இருந்தாலும் உனக்கு என் மேல் நிச்சயமா காதல் வந்து இருக்கும்” என்ற நிலவன், அவளை மேலும் பேச விடாமல், அவள் இதழில் தன் இதழைப் பொருத்தி ஆழமாக முத்தம் பதித்தான்.
முற்றும்.....
(கதையுடன் சேர்ந்து பயணித்த அனைத்து வாசகர்களுக்கும் மிகுந்த நன்றிகள். கூடிய விரைவில் அடுத்தக் கதையுடன் உங்களை சந்திக்கிறேன் டியர்ஸ்!)