ருத்ரன் கத்திக்கொண்டும், கூச்சலிட்டு கொண்டும் இருந்தான். அப்போது சரியாக அங்கு வந்து சேர்த்தாள் உமையாள். உமையாள் வரும்பொழுது ருத்ரனின் பின் பக்கம் தான் தெரிந்தது. உமையாள் மனதிலோ 'யார் இவன் காட்டானை போல் கத்தி கொண்டு இருக்கிறான்' என நினைத்து கொண்டே அவனிடம் சென்றாள்.
"சார் ஒரு நிமிடம் ஏன் இப்படி கத்திக்கொண்டு இருக்கின்றீர்கள்? அக்கம் பக்கம் ஆட்கள் உள்ளனர்” என கூறிக்கொண்டே ருத்ரன் முன் நின்றாள். அவளை பார்த்தவுடன் ருத்ரனுக்கு அதிர்ச்சி. அதே உணர்வுதான் உமையாளுக்கும்.
"நீயா!"
" நீயா!"
என இருவரும் ஒரே போல ஒன்றாகவே கேட்டனர்.
"அது சரி உன்னுடைய கைவினை பொருளா? அதுதான் இந்த லட்சணத்தில் உள்ளது. வாக்கு சுத்தம் இல்லை. முதலில் நானே வந்திருந்தேன் என்றால் உன்னிடத்தில் வியாபாரமே வைத்திருக்க மாட்டேன். சரியான பஜாரி"
"ஹலோ சார்! வார்த்தையை அடக்கி பேசுங்க. என்ன விட்டா ரொம்ப மோசமா பேசுறீங்க? உங்க வீட்ல இப்படிதா பேச சொல்லி குடுத்தாங்களா? ஸச் இரிடேட்டிங் பெல்லொவ் (Such Irritating Fellow)" என உமையாளும் அவள் பங்கிற்கு பேசினாள்.
"நீங்களும் பார்த்து பேசுங்க மேடம், சொன்ன திகதிக்கு குடுத்த ஆர்டரை சரியாக முடித்து குடுத்தால் நான் எதற்கு வீடு வரைக்கும் வந்து சண்டையிட போறேன்? உங்களிடம் எல்லாம் நேர்மையையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியுமா? இல்லை நான் தான் தப்பு செய்துவிட்டேன் நானே இன்னும் நல்ல நல்ல ஹண்ட்கிராப்ட் செய்யும் ஆட்களை தேடியிருக்க வேண்டும். இப்படி நெறிமுறைகள் தவறும் ஆட்களை நம்பியது என் தப்புதான்" என பேசிக்கொண்டே போனான்.
உமையாளுக்கு காது மடல் எல்லாம் சூடாகிவிட்டது. அவள் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அவள் கைபையில் இருக்கும் ரசீது புக்கை எடுத்தாள். அதில் ஆர் கன்ஸ்ரக்க்ஷன் (R Construction) என்று பெயர் போட்ட ரசீது சீட்டை தேடினாள். பின் அதை தேடி எடுத்து அதில் உள்ள திகதியை சரி பார்த்தாள். அவள் உதட்டில் ஒரு ஏளன சிரிப்பு.
"வார்த்தையை விடும் முன் நாம் ஒன்றுக்கு 100 முறை சிந்திக்க வேண்டும். நம் வாய் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் என பேச கூடாது மிஸ்டர். இதுதான் நான் உங்களுக்கு குடுத்த ரசீதின் நகல். உங்கள் கண்ணை திறந்து பாருங்கள் என்ன திகதி குறிப்பிட்டு உள்ளது என்று" என அவன் கைகளில் அந்த ரசீது புக்கை திணித்தாள்.
அவனும் ஒரு அலட்சிய முக பாவனையோடு அந்த ரசீதை பார்வையிட்டான். நொடி பொழுதில் அவன் முகம் மாற்றம் கண்டது. ஆம் டெலிவரி இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது. இப்போதும் தவறு அவன் பக்கம் வந்து விட்டது. முழுதாக தெரிந்து கொள்ளாமல் வார்த்தையை விட்டது அவன் தவறு.
அவனின் மனது அவனை மன்னிப்பு கேட்க தூண்டியது, அவன் புத்தியோ அதற்கு தடை சொன்னது. எதுவுமே பேசாமல் அந்த ரசீது புக்கை கயல் கையில் கொடுத்தவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான். அவன் காதுகளில் அவளின் சிரிப்பொலி.
சற்று தூரம் சென்றவன் திரும்பி பார்த்தான். அவள் இன்னுமே சிரித்துக்கொண்டுதான் இருந்தாள். கொஞ்சமே கொஞ்சம் அந்த சிரிப்பு அவனை ஈர்த்தது. அந்த சிரிப்பை ரசிக்க ஆரம்பித்தான்.
சட்டென்று தன்னை சுதாரித்து, மீண்டும் முகத்தில் கடுமையை பூசிக்கொண்டான். நேரே தன் வண்டிக்கு சென்றவனுக்கு தாங்கவில்லை. அவளின் சிரிப்பு அவனுக்கு அவமானமாக இருந்தது. அந்த சிரிப்பை ரசித்ததற்கும் சேர்த்து அவமானமாக இருந்தது.
வண்டியை வேகமாக ஓட்டினான். அவன் முன் இப்போது விமல் இருந்தால் அவனை இரண்டாக பிளந்திருப்பான். அதே சமயம் இங்கு உமையாளோ அவளின் வயிறு வலிக்க சிரித்து கொண்டு இருந்தாள்.
"ஹா ஹா ஹா! எப்படி ஓடினான் பார்த்தாயா? எதையும் முறையே உறுதி படுத்திக்கொண்டுதான் பேச வேண்டும். இல்லையேல் இப்படித்தான் அவமான பட வேண்டும். ஹா ஹா ஹா!" என வாய் விட்டு சிரித்து கொண்டு இருந்தாள்.
அவள் பேசிய எதற்கும் கயல் பதில் கொடுக்கவில்லை. அவளை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருந்தாள். தான் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று உணர்ந்த உமையாள் கயலை பார்த்தாள். கயல் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து அவள் முன் சொடக்கிட்டு "என்ன?" என்று கேட்டாள்.
அதற்கு கயல் அண்ணி உங்களுடன் இருந்த இத்தனை வருஷத்துல இன்று தான் நீங்கள் இப்படி சிரித்து பார்க்கிறேன்" என கூறினாள்.
உடனே உமையாள் முகத்தில் இருந்த சிரிப்பு வற்றி போனது.
"அண்ணி தயவு செய்து இப்படியே சிரித்துக்கொண்டு இருங்கள். இந்த சிரிப்பு உங்களுக்கு அழகாக உள்ளது" என கூறி வேலை செய்யும் இடத்திற்கு சென்றாள் கயல்.
கயல் சென்றபின் கொஞ்ச நேரம் அப்படியே நின்ற உமையாள் மெதுவாக நடந்து நீளவிருக்கையில் அமர்ந்து அவள் இறந்த காலத்திற்கு சென்றாள். உடனே அந்த நினைவுகளை விரட்டி அடித்து உதட்டின் ஓரம் ஒரு சின்ன ஏளன சிரிப்பை சிந்தி அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டாள்.
ருத்ரன் எங்கும் செல்ல மனம் இல்லாமல் வீட்டிற்கு சென்றான். சமையல் அறையில் வேலையாய் இருந்த பார்வதி வாசலில் சத்தம் கேட்டு வந்து பார்த்தார். ருத்ரன் தான் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தான்.
"என்ன இவனுக்கு வேலை இல்லையோ இவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வந்து விட்டானே" என நினைத்து அவனிடம் சென்றார்.
"என்னைய்யா இவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட்டாய்? சரி உனக்கு காபி கலந்து எடுத்து வரவ?" என கேட்டார்.
அதற்கு அவன் ஆம் என தலையாட்ட காபி கலக்க சென்று விட்டார். அவன் முகம் கோபத்தில் இருப்பது நன்றாகவே தெரிந்தது. என்ன பிரச்சனையோ என்னவோ என மனதில் புலம்பிக்கொண்டே சென்றார். சென்றவர் ஐந்து நிமிடங்களில் காபி கலந்து அவனுக்கு எடுத்து கொண்டு வந்தார்.
வரும்போதே எப்படியாவது அவர் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தார். காபியை அவன் முன் நீட்டினார். அவனும் அதை வாங்கி ஒரு மிடறு அருந்தினான்.
"ருத்ரா கோபமாக இருக்கியா?"
" ஹ்ம்ம் என்ன சொல்லணும்?"
"வந்து அந்த பையன் இருக்கானே அதான் உனக்கு விபத்து நடந்தபோது உதவி இருந்தானே" என அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே ருத்ரன் "நீலன் ஆஹ்?" என்று கேட்டிருந்தான்.
"ஆமா அவன்தான், அவனையும் அவன் குடும்பத்தையும் அடுத்த ஞாயிறு விருந்து கொடுக்க வீட்டிற்கு அழைக்கலாம் என்று இருக்கிறேன். அவர்கள் வரும்போது நீயும் வீட்டில் இருப்பா" என கூறினார்.
அவனுக்கோ " நீங்களே அதையெல்லாம் பார்த்துக்கோங்க. என்னை ஏன்" என அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே அவன் மனக்கண்ணில் மகிழ் தான் வந்தாள்.
மறுக்க நினைத்தவன் உடனே "சரி அவர்கள் வரும்போது நானும் இருக்கிறேன்" என சம்மதித்தான்.
"நான் கொஞ்சம் வெளியே சென்று விட்டு வருகிறேன்" என கூறி தனது கார் சாவியை எடுத்து கொண்டு வெளியேறினான். நீலனுக்கு அழைத்தான்,
"நீலன்! நான் ருத்ரன் பேசுகிறேன்"
"சொல்லுங்க ருத்ரன்"
"நான் மகிழை பார்க்க வேண்டுமே உங்களால் அவளை அந்த பார்க்கிற்கு அழைத்து வர முடியுமா?" என கேட்டான்.
சின்ன அமைதியின் பின் "சரி அழைத்து வரேன்" என கூறினான். மாலை போல் ருத்ரன் அந்த பூங்காவிற்கு சென்றான். நீலனும் மகிழுடன் பூங்காவிற்கு சென்றாள். மகிழை கண்டவுடன் ருத்ரனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
கொஞ்ச நேரம் அவளுடன் விளையாடிக்கொண்டு இருந்தான். நீலன் அவர்களை பூங்காவில் போடப்பட்டிருக்கும் ஒரு நீள்விருக்கையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். மகிழ் அவனிடம் இருப்பதை விட ருத்ரனிடம் இன்னும் கொஞ்சம் அதிக ஒட்டுதலுடன் இருப்பது போல் அவனுக்கு தெரிந்தது.
விளையாடி முடித்தவுடன் மகிழுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தான் ருத்ரன். அதனை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு வந்தாள் மகிழ். நீலன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு இருவரும் வந்தனர்.
நீலனோ "ஐஸ் கிரீம் சாப்டுறியா இரு வீட்டுக்கு போய் அம்மாவிடம் கூறுகிறேன்" என போலியாக மிரட்டினான்.
"நான்தான் வாங்கி குடுத்தேன் நீலன். மகிழ் என்னிடம் கேட்கவும் இல்லை" என மன்னிப்பு கேட்டு பழக்கமில்லாதவன் மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசினான்.
"ஐயோ நான் அவளை வம்பிழுக்கத்தான் அப்படி கூறினேன். நானும் அவளும் இந்த விஷயத்தில் கூட்டு களவாணிகள்தான்" என கூறினான்.
ருத்ரனோ "மிக்க நன்றி நீலன், மனம் ஒரு மாதிரி சோர்வாகவும், அமைதி இல்லாமலும் இருந்தது. மகிழை பார்த்தால் மனம் கொஞ்சம் நிம்மதியாய், சந்தோஷமாய் இருக்கும் என தோன்றியது. அதான் உங்களை அழைத்து அவளை அழைத்து வரமுடியுமா என கேட்டேன்.
அவளை அழைத்து வந்ததிற்கு ரொம்ப நன்றி” என கூறினான். பின் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தத்தமது இடத்திற்கு சென்றனர். இரண்டு நாட்கள் கடந்தபின் பார்வதி நீலனுக்கு அழைத்தார். அழைத்து, வரும் ஞாயிறு அவனையும் அவன் குடும்பத்தையும் விருந்து உண்ண அழைத்திருந்தார். அவனும் வருவதாக ஒப்பு கொண்டான்.
அதே நாள் தான் உமையாள் அவளுக்கு வந்த ஆர்டரை முடித்து டெலிவரிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள். "இந்த ஆர்டரை டெலிவரி செய்து விட்டு வருகிறேன்" என கூறி ஆர் கொன்ஸ்டருக்ஷனுக்கு வாகனத்தில் புறப்பட்டிருந்தாள் உமையாள்.
விடுமுறை முடிந்து வந்தவுடன் திகதியை தவறுதலாய் சொன்ன விமலை திட்டி தீர்த்து விட்டான் ருத்ரன். இன்று டெலிவெரியையும் விமலை பார்த்து கொள்ள சொன்னான் ருத்ரன்.
உமையாளும் விமலை பார்த்து முறைத்துக்கொண்டே வந்தாள். விமலோ எங்கே அவளிடம் பேச்சு வைத்துக்கொண்டால் நம்மை வைத்து செய்வாளோ என பயந்து வாயே திறக்காமல் இருந்தான்.
எடுத்து வந்த பொருட்களை சரி பார்த்து ரசீதில் கையொப்பம் வாங்கி அங்கிருந்து விடை பெற்றாள். செல்லும் அவளுக்கு எனோ யாரோ அவளை பார்ப்பதுபோல் ஒரு எண்ணம். சுற்றி பார்வையை சுழல விட்டுக்கொண்டே சென்றாள்.
அதே போல் அவள் எண்ணமும் பொய் இல்லை அவளை தனது அலுவலக அறையின் வழியாக ருத்ரன் தான் பார்த்துக்கொண்டிருந்தான். இல்லை இல்லை அவனையும் அறியாமல் அவளை ரசித்து கொண்டிருந்தான் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
அந்த நேரம் கைவினை பொருட்களை தூக்கிக்கொண்டு விமல் அவன் அலுவலக அறையினுள் நுழைந்தான். சத்தம் கேட்டுத்தான் சுயம்பெற்று திரும்பி பார்த்தான் ருத்ரன். அவள் செய்த கைவினை பொருட்கள். விமலிடம் சென்று அதனை எல்லாம் பார்வையிட சென்றான்.
நல்ல அழகான தனித்துவமான பொருட்கள். அவனுக்கும் பிடித்திருந்தது. மனதிற்குள் ”பரவாயில்லை திமிர்பிடித்தவளிடம் கொஞ்சம் மூளையும் உள்ளது” என ஒப்புக்கொண்டான்.
இப்படியே நாட்கள் செல்ல அன்று ஒரு நாள் வீட்டில் இருந்த நீலனோ சினிமா படம் பார்த்து கொண்டிருந்தான். அவனுடன் மகிழும் அமர்ந்திருந்தாள். நீலன் அபியும் நானும் எனும் அப்பா மகள் சம்பந்தபட்ட படத்தை பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென மகிழ் அவனிடம்,
"மாமா ழிணி அப்பா எங்கே?" என கேட்டாள்.
நீலன் அந்த கேள்வியில் வாயடைத்து போனான். அதே சமயம் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த உமையாள் ஸ்தம்பித்து நின்று விட்டாள். அவள் கண்கள் சட்டென்று கலங்கி விட்டது. நீலனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
பின் எதோ ஒரு காரணம் சொல்லி மகிழை சமாளித்தான். உமையாள் சத்தமின்றி அவ்விடத்திலிருந்து அகன்று அவள் அறைக்கு சென்றாள். எதை மறக்க நினைக்கிறாளோ அதையே பலவருடங்கள் கழித்து வலிக்க வலிக்க நினைக்கிறாள்.
கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. அவன் முகம் நிழலாக அவள் மனக்கண் முன் ஆடியது. இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கயலும் நீலனிடம் வந்து,
"என்னதான் ஆனது உங்கள் மாமாவிற்கு? ஏன் அண்ணி அழுகிறார்கள்?" என கேட்டாள். நீலனும் ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்டு கயலிடம் உமையாளின் இறந்த கால கதையை கூற ஆரம்பித்தான்.
வாங்களேன் நாமும் கயலுடன் சென்று உமையாள் வாழ்க்கையில் என்ன நடந்தது என தெரிந்துகொள்வோம்.