"அம்மா! போதுமே உன் புராணம் முடியல. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே எனக்கு அறிவுரை கூறுவதாய் உத்தேசம்?"
"அக்கா நீ கல்யாணம் கட்டும் வரை இது அடங்காது. நமக்கு தெரிந்தது தானே"
"உங்க இருவருக்கும் நான் பேசுவது கேலியாக உள்ளதா? வயசு பெண்ணை வைத்திருப்பவர்களுக்கு தான் தெரியும் என் வேதனை. இன்னும் கொஞ்ச காலம்தான் உனக்கு இருபத்தொன்று வயது வந்தவுடன் உன்னை கல்யாணம் கட்டி குடுத்திடுவேன்" என சாந்தி கூறியது உமையாளின் செவிகளுக்குள் இன்னமும் கேட்கிறது.
கண்களிலே கண்ணீர், தாயை தேடி மனம் அலைகிறது. ஆனால் அரவணைக்க தாய் இல்லையே.. ஆம் இன்றோடு சாந்தி இறந்து மூன்று ஆண்டுகள் கடந்திருந்தது. உமையாளின் மடியில் தழும்புகளோடு படுத்திருக்கும் தம்பி. தம்பிக்கு அவள் மடி. அவளுக்கு? அவள் கைகளிலோ கையை முறுக்கிய தழும்பு.
“அக்கா இந்த கொடுமையிலிருந்து எப்போது நமக்கு விடுதலை? ரொம்ப வலிக்குது அக்கா" நீலன் பேசிக்கொண்டே அழுதான். உமையாளோ அவன் தலையை தடவி விட்டு கொண்டிருந்தாள்.
சாந்தி தர்மன் தம்பதியருக்கு பிறந்தவர்கள்தான் உமையாள் மற்றும் நீலன் எனும் நீலகண்டன். சாந்தி மிகவும் அன்பானவர். அதே நேரம் மிகுந்த பயந்த சுபாவம் உள்ளவர்.
தந்தை தர்மன். அவன் பெயரின் அர்த்தத்திற்கு எதிரான குணங்கள் உள்ளவன். இரக்கமில்லாதவன், சுயநலம் பிடித்தவன். சாந்தியின் பெற்றோர்கள் தான் தர்மனை தேர்வு செய்து அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் ஆன சில மாதங்களிலே அவன் போக்கு சாந்திக்கு பிடிக்கவில்லை. என்னதான் பிடிக்கவில்லை என்றாலும் சாந்தி மனைவியின் கடமைகளை சிறப்பாகவே செய்தாள், அதற்கு இரு கரணங்கள் ஒன்று சமுதாயம், இன்னொன்று தர்மன். அவனது தேவைகளை அடித்து மிரட்டியே பெற்றுக் (தீர்த்து) கொள்வான்.
திருமணமாகி ஒரு வருடத்தில் உமையாள் பிறந்து விட்டாள். ஒரு குழந்தை போதும் என்பதுதான் சாந்தியின் எண்ணம் ஆனால் நான்கு வருடம் கழித்து நீலன் பிறந்துவிட்டான். ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் ஆனா பின்னும் தர்மனின் பழக்க, வழக்கத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சாந்திக்கோ எப்படியாவது இந்த இரு பிள்ளைகளையும் கரை சேர்த்துவிட வேண்டும் என்பதே எண்ணம்.
உமையாள் பதினேழு வயதிலே கைவினை பொருட்கள் நன்றாக செய்வாள். நீலனுக்கு படிப்புதான் உயிர். ஒரு வாரமாக சாந்திக்கு கடுமையான காய்ச்சல்.
மருத்துவமனை செல்ல வசதி இல்லை. மருந்துகள் வாங்கி தரவும் கையில் பணம் இல்லை. சாந்தி உடல் நிலை சரி இல்லாமல் இருக்கிறாள் என்று தர்மனுக்கு தெரியும். ஆனால் மனைவிக்கு மருத்துவம் பார்க்க அவனிடம் பணம் இல்லை.
இருந்தாலும் செலவு செய்ய மனம் இல்லை. மருத்துவத்திற்கு செலவு செய்தால் அவனால் மது குடிக்க முடியாதே. சாந்திக்கு காய்ச்சல் வந்து இன்றோடு எட்டு நாட்கள் கடந்திருந்தது.
உமையாள் காலையிலே எழுந்து சாந்திக்கு தேவையானதை செய்து வைத்து விட்டு பள்ளிக்கு செல்வாள். மதியம் பள்ளி முடிந்து வந்து மதிய உணவையும் இரவு உணவையும் தயார் செய்வாள்.
நலமாக இருக்கும் போதே சமையல் கலையை சாந்தியிடம் கற்றுக்கொண்டாள் உமையாள் அதனால் அவளின் சமையல் நன்றாகவே இருக்கும். பள்ளி செல்ல தயாராகியவள் சாந்தியிடம் சென்று
"அம்மா, அம்மா, அம்மா" என எழுப்பினாள். திறக்க முடியாமல் கண்களை திறந்து
" சொல்... சொல்லுமா" என்றார் சாந்தி.
"அம்மா கஞ்சி வைத்து விட்டேன். பக்கத்துக்கு வீடு பாக்யா அக்கா வந்து கஞ்சியை ஊட்டி விடுவாங்க. சாப்பிட்டு சுடுதண்ணி கிண்ணத்தில் கஷாயம் வைத்துள்ளேன், அதை குடித்துடுங்க. பள்ளி விட்டு வந்து சமைக்கிறேன்" என்றாள் உமையாள்.
சாந்தியின் கண்களில் கண்ணீர். அவள் இவளுக்கு செய்ய வேண்டியதை பதின்வயது
பிள்ளை இவளுக்கு செய்கிறாள்.
தந்தை இருந்தும் இல்லாத மாதிரிதான் இந்த குழந்தைகளின் வாழ்க்கை. உமையாளும் பள்ளிக்கு சென்று விட்டாள். அன்றைய பொழுது ஏழு மணி நேரம் உருண்டோடி பள்ளி முடிந்து உமையாள் வீட்டிற்கு வந்து விட்டாள்.
வந்தவள் நேரே சென்று பார்த்தது என்னவோ அவளின் அன்னையைத்தான். சாந்தியோ துயில் கொண்டு இருந்தாள். உமையாள் அவள் நெற்றி தொட்டு காய்ச்சலின் அளவை பரிசோதித்தாள்.
சாந்தியின் நெற்றி ஜில்லென்று இருந்தது. உமையவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி காலை வரை அனல் போல் கொதித்த நெற்றி இப்போது ஜில்லென்று இருக்கிறது என்றால் தான் செய்த கஷாயதின் பலன் காய்ச்சல் விட்டு விட்டது என்றே நினைத்தாள்.
பதின் வயது பெண்ணுக்கு என்னதான் தெரியும். தம்பியும் பள்ளி முடிந்து வந்து விடுவான் அவனுக்கும் பசிக்கும் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்று உமையாள் சமைக்க சென்று விட்டாள்.
நடுவில் ஒருமுறை வந்து அன்னையை எழுப்பினாள். ஆனால் சாந்தி எழுந்துகொள்ளவில்லை. சரி அம்மா அசந்து உறங்குகிறாள் என எண்ணி அவளை தொந்தரவு செய்யாமல் சமையல் வேலையை கவனிக்க சென்றாள்.
கொஞ்ச நேரத்தில் பக்கத்துக்கு வீடு பாக்யா வந்திருந்தாள்.
"என்ன உமை சமையல் வேகமாக நடந்துகொண்டு இருக்கிறது போல?"
“ஆமா அக்கா, தம்பி பசியோடு வருவான். அம்மாவும் சாப்பிடணும்ல” என்றாள் உமையாள்.
"அக்கா அம்மாக்கு காய்ச்சல் விட்டது. எல்லாம் என் கஷாயத்தால்"
"என்னடி சொல்ற? நான் முதலில் வந்து பார்க்கும் போது நெருப்பாக கொதித்ததே"
"நானும் பயந்துகொண்டேதான் வந்தேன், வந்த உடனே அம்மா நெற்றியை தொட்டு பார்த்தேன் ஜில்லென்று இருந்தது அப்படி என்றால் காய்ச்சல் விட்டது என்றுதானே அர்த்தம்." என்றாள் சிரித்துக்கொண்டே.
எனோ பாக்யாவின் மனதில் ஒரு சந்தேகம், பயம். உமையாளிடம் “இரு உமை நான் போய் அக்காவை பார்த்துவருகிறேன்” என கூறி சாந்தியின் அறைக்கு சென்றாள் பாக்யா.
சாந்தியின் நெற்றியை தொட்டு பார்த்தாள். உமையாள் சொன்னதுபோல் ஜில்லென்று இருந்தது, உடலை தொட்டு பார்த்தாள் அதுவும் ஜில்லென்று இருந்தது, கால்களை தொட்டு பார்த்தாள் அதுவும் ஜில்லென்று இருந்தது. பாக்யாவின் சந்தேகம் உண்மையானது.
கண்கள் கலங்கியது, கைகள் நடுங்க ஒரு விரலை எடுத்து சாந்தியின் மூக்கில் வைத்தாள். மூச்சு விடும் அறிகுறி இல்லை. பாக்யா கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆம் சாந்தி உயிர் உடலை விட்டு பிரிந்து சென்றிருந்தது.
நம்மால் நம் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள முடியவில்லையே என நொந்து நொந்தே காய்ச்சலின் வீரியமும் சேர்த்து அந்த தாயின் உயிர் மண்ணுலகை துறந்து விண்ணுலகிற்கு சென்றிருந்தது.
பாக்யா பின்னாலிருந்து ஒரு குரல்
"அக்கா நான் சொன்னபோது நீங்கள் நம்பவில்லை அல்லவா அம்மா குணமாகிவிட்டார்கள் பாருங்கள்" என கூறினாள்.
அடுத்த குரல் "அக்கா அம்மாவுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டதா? ஹைய்யா ஜாலி! ஜாலி! இனி அம்மா தூக்கும்போது எனக்கு கதை சொல்லுவாங்க" என மகிழ்ச்சியில் குதித்தான் நீலன்.
என்ன செய்வதென்றே தெரியவில்லை பாக்யாவிற்கு. கலங்கிய கண்களோடு திரும்பி உமையாளையும் நீலனையும் பார்த்தள். பாக்யாவின் கலங்கிய விழிகள் உமையாளை பயமுறுத்தியது. உமையாள் நிதானமானாள். மெல்ல அடி எடுத்து வைத்து பாக்யாவை நெருங்கினாள்.
"அக்கா அம்... அம்... அக்கா அம்.." அவளுக்கு அடுத்த வார்த்தை சிக்கியது. தொண்டை குழி அடைப்பதை போல் இருந்தது. பாக்யாவும் தலையை ஆம் என்னும் ரீதியில் ஆட்டினாள்.
சர்வமும் அடங்கி உமையாள் நிலத்தில் விழுந்தாள். கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. ஏதோ ஒன்று சரி இல்லை என்று நீலனுக்கும் தெரிந்தது. அக்கா இப்படி நிலைகுலைந்து நிலத்தில் அமர்ந்திருப்பது அவனுக்கு என்னமோ செய்தது பாக்யா அக்கா வேறு அழுகிறாள்.
அவன் வயிற்றுக்குள் பயப்பந்து சுழன்றது. ஓடிச்சென்று உமையாள் அருகில் அமர்ந்தான்.
"அக்கா என்ன ஆனது? ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாய்?" என கேள்வி கேட்டான். அவனே அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவனை ஏறிட்டு பார்த்த உமையாளோ
"நீலா அம்மா இல்லடா.. அம்மா நம்மை விட்டு சாமிகிட்ட போய்ட்டாங்க... அம்மா... இல்ல... என கதறிக்கொண்டு கூறினாள். அவள் கூறியதை கேட்ட நீலன் பதறிக்கொண்டு அன்னையை பார்க்க சென்றான்.
"அம்மா.. அம்மா எழுந்து வா மா.. அக்கா என்னமோ சொல்ற பாரு... பாக்யா அக்கா வேற அழுவுறாங்க. நீ எழுந்து வந்து அழ வேண்டாம்னு சொல்லு என்று அவன் தாயை உலுக்கினான்.
அவள் அசைவின்றி கிடந்தாள். அவளை எழுப்பிக்கொண்டே அழுதான். பாக்யாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை இருவரையும் கட்டி பிடித்து அழுதாள். ஓடி சென்று பாக்யா தன் வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை கூறினாள். அக்கம் பக்கத்தினரிடம் விஷயம் கூறப்பட்டது.
உறவினர்களிடமும் செய்தி தெரிவிக்க பட்டது. உறவினர்கள் சாந்தியின் இறப்பில் பார்வையாளர்கள் ஆனார்கள். அக்கம் பக்க மனிதர்கள்தான் பழகிய பழக்கத்திலும், சாந்தியின் நல்ல குணத்தாலும், பிள்ளைகள் மேல் ஏற்பட்ட கரிசனத்தினாலும் சாந்தியின் இறுதிச்சடங்கு செலவுகளை பிரித்து எடுத்து செய்தார்கள்.
பாக்யாவின் குடும்பம் உமையாளுக்கும் நீலனுக்கும் உதவியாக இருந்தது. தர்மனுக்கு செய்தி தெரிவிக்கபட்டது.
"அப்பாடா ஒரு வழியா போய் சேர்த்துட்ட. இனிமேதான் எனக்கு நிம்மதி" என்று வாய் கூசாமல் பேசினான். பெண்களை உடல் தேவைக்காக மட்டும் பார்க்கும் ஆண்களில் இவனும் ஒருவன்.
அவளுக்கு செய்த இறுதி சடங்குகளில் இவன் கலந்து கொள்ளவில்லை. குடித்து கொண்டே இருந்தான். அவனை பார்க்க நீலனுக்கு ஆத்திரமாக இருந்தது, உமையாளுக்கோ வெறுப்பாக இருந்தது.
எல்லா சடங்குகளும் முடிந்து சாந்தியை அடக்கம் செய்து இதோ இன்றோடு அவள் கருமாதியும் முடிந்து விட்டது. எல்லோரும் அன்றாட வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டனர்.
இனி உமையாள் பள்ளி செல்ல தொடங்க வேண்டும். நீலன் பள்ளி செல்ல எப்போதோ ஆரம்பித்து விட்டான். உமையாள் மனதெல்லாம் பாரமாக இருந்தது.
அம்மா இருந்தார், எப்படியோ படிக்க வைத்து விட்டார். இனி யார் படிக்க வைப்பார்கள்? எதோ பாவம் பார்த்து அக்கம் பக்கத்தினர் தாயின் இறுதி சடங்கிற்கு உதவினார்கள். உறவினர்களை பற்றி கூறவே வேண்டாம்.
தனக்கு தந்தை என்று இருப்பவரை நம்ப இன்னும் இவள் ஒன்றும் முட்டாள் இல்லையே. செய்வது தெரியாமல் வீட்டில் அமர்ந்திருந்தாள் உமையாள். அப்போது சரியாக வீட்டிற்கு வந்திருந்தாள் பாக்யா
"உமை என்ன யோசித்து கொண்டு இருக்கிறாய்?"
"அக்கா பள்ளி செல்ல வேண்டும் எனக்கு மட்டும் இல்லை நீலனுக்கும் வேண்டும். ஆனால் பணம் இல்லை. அதே சமயம் யாரிடமும் கையேந்த விருப்பம் இல்லை அதான் என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருக்கிறேன்" என கூறினாள்.
பாக்யாவிற்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. உமையாளுக்கு திடீரென்று முகத்தில் தெளிவு பிறந்தது.
"அக்கா கொஞ்ச நேரம், நான் இதோ வருகிறேன்" என கூறி எழுந்தாள்.
நேரே அவள் தோழி வீட்டிற்கு சென்றாள். தோழியை பார்த்து
"ராதா இனி நான் பள்ளிக்கு வரமாட்டேன். என் தம்பியை படிக்க வைக்க வேலைக்கு போக போகிறேன். அதனால் எனக்கு உன்னிடம் உதவி ஒன்று வேண்டுமே!"
"என்னடி சொல்லு முடிந்தால் செய்கிறேன்" என கூறி இருந்தாள் ராதா.
"பெருசா ஒன்னும் இல்லடி. பள்ளிக்கு வரமாட்டேன். ஆனால் பரீட்சை எழுதுவேன். அதற்கான நோட்ஸ் குடுப்பியா?" என கேட்டாள்.
"என்னடி கேள்வி இது கண்டிப்பாக தருகிறேன்" என கூறி முறுவலித்தாள் ராதா.
அவளின் நிலைமை அவளை சுற்றி உள்ள அனைவருக்கும் தெரியும் என்பதால் அவளை யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. இவளின் இந்த திட்டத்தை பாக்யாவிடம் தெரிவித்தாள். பாவம் அவளும் தான் என்ன செய்து விட முடியும் சரி என ஆமோதிப்பதாக தலை மட்டும் ஆட்டிக்கொண்டாள். பாக்யாவிடம் தான் அவளுக்கு வேலை பார்த்து கொடுக்க சொன்னாள்.
பாக்யாவும் அவள் வேலை செய்யும் தொழிற்சாலையிலே ஒரு வேலையை வாங்கி கொடுத்தாள். இவளின் இந்த முடிவை எதிர்த்தது என்னவோ நீலன் தான்.
"அக்கா நீயும் படிக்க வேண்டும் அம்மாவுக்கும் அதான் ஆசை. ப்ளீஸ் கா நீயும் படியேன்” என அழாகுறையாக மன்றாடினான்.
"நீலா புரிஞ்சிக்கோ டா. நீ நன்றாக படி, அம்மா ஆசை பட்டது போல் டாக்டர் ஆக வேண்டும். நானும் என் தோழிகள் உதவியோடு வீட்டிலே படிப்பேன்" என அவனிடம் பேசி புரியவைத்து பின்பே ஓய்ந்தாள்.
வீட்டில் எப்போதும் தாய் தந்தை என்பவர்கள் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள். அதில் ஒருவர் இல்லை என்றாலுமே அந்த குடும்பம் நிலைகொள்வது கடினம் தான்.
இங்கோ தாயும் இல்லை, தந்தை இருந்தும் இல்லாததை போல் தானே. இப்போது குடும்ப பொறுப்பை கையில் எடுத்தது என்னவோ உமையாள் தான். அதுவும் அவள் தம்பிக்காக மட்டுமே.