எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா - 13

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!

அத்தியாயம் 13

விஹானின் கார் கல்லூரிக்கு வந்ததும் அவன் கண்களுக்குச் சிக்கியதென்னவோ தன்னவளின் அழுகை தான். துடித்துவிட்டான். எதற்காக அழுகிறாளெனத் தவித்து வேக எட்டுகளில் பட்டென அவள் முன் வந்து நிற்க, அவனைப் பார்த்துக் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள் பிரணவிகா.


“ஹேய் பிரணி! என்னாச்சு ஏன் அழற?”


“இல்ல ஒன்னுமில்ல” எனக் குரல்கம்ம கூறினாள்.


“அழுது முகம், கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு.. ஒன்னுமில்லனு சொல்ற? என்னாச்சுனு சொல்லப் போறியா என்ன?”


“அது இன்னைக்கு டெலிவரி பார்த்தேன்.. அதான் எமோஷனல் ஆகிட்டேன்” எனக்கூறவும் தான் அவனுக்கு உயிரே வந்தது.


“உப்” என வாயைத் திறந்து மூச்சுவிட்டவன் தொடர்ந்து


“இதுக்கு தான் இவ்ளோ அழுகையா? நான் பயந்தே போனேன்” என அவன் கைக்குட்டையை அவளிடம் நீட்ட, அவளும் வாங்கிக்கொண்டாள்.


“இதுக்கெல்லாம் அழுகலாமா? நீ டாக்டர்.. இதுக்கு எல்லாம் எமோஷனல் ஆனா என்ன பண்றது? உன்னோட வேலைக்கு இத விடவும் கஷ்டமான சிட்டுவேஷன் எல்லாம் வரும்.. எல்லாத்தையும் சமாளிக்கிற குணம் வேண்டும். அத முதல்ல வளர்த்துக்கோ” எனக்கூற முனுக்கெனக் கோபம் வந்துவிட்டது.


“அதெல்லாம் எனக்கு எல்லாம் சமாளிக்க தெரியும்.. சமாளிக்க முடியாம ஒன்னும் இல்லை. இன்னைக்கு ஏதோ அழுதுட்டேன் அதுக்காக எல்லா நாளும் யாரும் அழமாட்டாங்க. உங்க அட்வைஸ்க்கு நன்றி” என வெடுக்கெனக்கூறி அவன் கைக்குட்டையை அவனிடமே கொடுத்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.


‘ராங்கி.. ஒன்னு சொன்னா முனுக்குனு கோபம் மட்டும் வந்துரும்.. வர வர பயம் இல்லாம வாய் நீளுது.. கையில சிக்கிற அன்னைக்கு வச்சிக்கிறேன் ஓவரா பேசுற வாயை’ என நினைத்து, சிரித்தவன், பின்னந்தலையை கோதியவாறு உதட்டோரம் உதிர்த்த புன்னகையை மீசைக்கடியில் புதைத்து அவனறையை நோக்கிச் சென்றான்.


மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்லும் போதும் அவள் பேருந்திலிருந்து இறங்கியதும் காலையில் வந்து ஒருவன் பூங்கொத்து கொடுத்தது போல ஒற்றை ரோஜாவை மட்டும் கொண்டுவந்து ஒரு சிறுமி கொடுத்தாள்.


“தங்க்யூ பாப்பா” எனக்கூற, சிரித்துக்கொண்டே சென்றாள். சிறு தூரம் நடக்க மீண்டும் ஒரு சிறுவன் வந்து பூவைக் கொடுக்க,


“யார்டா கொடுத்தா?” என்றாள் இடுப்பில் கைவைத்து கேட்க,


“அந்த அங்கிள்” எனக்கூறி கையைக் காட்ட, வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ ரேஸ் பைக்கில் பறந்துவிட்டான்.


“ஹேய் கேர்ள்! அது பி. எம். டபிள்யூ பைக் தான?” என் சாத்விகா கேட்க, பிரம்மை பிடித்தது போல நின்ற பிரணவிகாவின் கையைப் பிடித்து உலுக்கினாள் சாத்விகா, கனவுலகத்திலிருந்து வெளிவந்தாள்.


“ஹே! அவனை பார்த்தியா? என் பிரன்ஸ் க்கு சொன்னது போல ஸ்டெயிலா இருக்கான்ல. ச்சை முகத்த பார்க்க முடியலயே!” என வருத்தமாகக் கூற,


“ஆள பார்த்தா வசதியான ஆள்போல இருக்கு.. எதுக்கு இப்படி பூ கொடுத்து விளையாடனும்? எதுக்கும் கவனமா இருக்கனும்” என சாத்விகா கூற, அதைக் காதிலே எடுக்கவில்லை பிரணவிகா.


*******


கட்சி அலுவலகத்தில் அதீத கோபத்தில் அமர்ந்திருந்தார் சந்தோஷ் ராகவேந்திரா. அவர் அருகில் தன்னுடைய ஆத்திரத்தை நாற்காழியின் கைப்பிடியில் காட்டியபடி பற்களைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் விராஜ். வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருந்தனர் கட்சி ஆட்கள்.


“தலைவரே! உங்க தம்பி மகனே இப்படி பண்ணினா.. நாளைக்கு நம்ம கட்சிக்குத் தான பாதிப்பு?”


“அது அவன் சும்மா வேலை விஷயமா பேசும்போது யாரோ எடுத்து எடிட் பண்ணினது.. அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?” எனக் காட்டமாகக் கேட்டான் விராஜ்.


“விராஜ் அமைதியா இரு” என அவனை அடக்கியவர்,


“அந்த போட்டோஸ் எல்லாம் நெட்டுல இருந்து எடுத்தாச்சு.. இனிமேல் இப்படி வராத மாதிரி பார்த்துக்கலாமே ஒழிய வந்தத மாத்த முடியாதுல்ல.. இதுக்குமேல என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க” எனக்கேட்கவும் அமைதியாகிவிட்டனர் இவ்வளவு நேரமும் துள்ளியவர்கள்.


“சரி அந்த பிரச்சனை தான் முடிஞ்சதுல.. விடுங்க.. இனி அடுத்து இடைத்தேர்தல் பத்தி பேசுங்கப்பா.. சும்மா ஆகாத பிரச்சனையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு இருக்காம” என்றார் மூத்த உறுப்பினர்.


“சந்தனபாண்டிக்கு வாய்ப்பு குடுக்கலாம் இந்தத் தடவை” என்றார் சந்தனபாண்டியின் அணியைச் சேர்ந்த ஒருவர்.


“சந்தனபாண்டிக்கும் சென்னைக்கும் என்னய்யா சம்பந்தம்? அவர் திருநெல்வேலிகாரர்” என்றார் ஒருவர்.


“அப்போ சென்னை ஆளு வண்ணார பேட்டை ரவிக்கு குடுக்கலாம்” என்றான் ரவியின் நண்பர் வட்டாரத்தின் ஒருவர்.


“தலைவரே! ஒன்னும் பேசாம இருக்கீங்க? யாருக்கு சீட் குடுக்கலாம்னு சொல்லுங்க?” என்றார் நிதித்துறை அமைச்சர்.


“யார் யாருக்கு நிற்க விருப்பம்னு சொல்லுங்க” என்றார் சந்தோஷ் ராகவேந்திரா. உடனே பலரும் “எனக்கு.. எனக்கு..” எனக் கூற, ஒவ்வொருவரின் பின்புலம் எல்லாம் ஆராய்ந்து அந்தத் தொகுதிக்குத் தகுந்தவர் யாரென அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தனர். கடைசியாக ஒருமனதாக,


“வில்லிவாக்கம் முத்துவேலுவையே நிறுத்தலாம். அவரும் அந்தத் தொகுதி தான், அதனால அந்த மக்கள் கிட்ட வரவேற்று இருக்கும்” என முடிவெடுக்க, அதில் விருப்பமில்லாதவர்கள் முனுமுனுப்புடன் அமர்ந்திருந்தனர்.


“நாளைக்கு வேட்பாளரை அறிவிச்சிடலாம். வேற எதுவும் கருத்து இருக்கா?” என்றார் முதல்வர்.


அதன் பின் கட்சி சம்பந்தமாகவும், தேர்தல் சம்பந்தமாகவும் பேசி விட்டுக் கூட்டத்தைக் கலைத்தனர். சந்தோஷூம், விராஜூம் அவர்களுக்கான அறைக்கு வரவும்,


“இந்த விஹான் பையன் ஒரு காபி குடிக்கிறதுக்குள்ள நம்ம ஆவிய வாங்கிட்டானே” என்றார் அலுப்பாக.


“எல்லாம் அந்த சூர்யான்ஷ் பண்ற வேலை தான் பெரியப்பா.. அவனுக்கு ஒரு ஆப்ப வைச்சா தான் அமைதியா இருப்பான்”


“நம்ம குடும்ப தொழில் வேற.. அரசியல் வேற.. இரண்டையும் ஒலப்பாத ராஜ்”


“ம்ச்.. இப்படியே நம்ம நியாயம் பார்த்துட்டே இருந்தா அவனுங்க நம்மளுக்கு அநியாயம் பண்ணிட்டே தான் பெரியப்பா இருப்பாங்க..”


“அந்த மாடல் பொண்ணை மாத்திட்டு வேற பிராண்ட் அம்பாஷிட்டர் போடலாம்ல?”


“ஏன் பெரியப்பா நீங்களும் அவன சந்தேகப்படுறீங்களா?” என்றான்.


“ஹே இல்லடா.. எதுக்கு பிரச்சனைன்னு தான்..”


“நம்ம அப்படி சொன்னாலே.. அவன சந்தேகப்படுற மாதிரி தான் பெரியப்பா.. அவன் சும்மாவே அவன் மனசுல உள்ளத யார்கிட்டயும் சொல்லாம உள்ளயே வைக்கிற ஆளு.. நாம இத சொன்னா அவனுக்குள்ளயே நொறுங்கிடுவான்”


“அப்போ என்ன தான் வழி?”


“அவனே எதாவது யோசிச்சிருப்பான். நாம அவனுக்குப் பிரஷர் கொடுக்காம இருந்தாலே போதும்.. கட்சி ஆட்களை மட்டும் நம்ம சமாளிச்சுட்டா அவனே அவன பார்த்துப்பான்” எனக்கூறவும்,


“இப்போ அவன பத்தி இவ்ளோ புரிஞ்சு சொல்றீயே.. நீயே தான அவன நேத்து சந்தேகப்படுற மாதிரி பேசுன?” எனக் கேட்கச் சிரித்தவன்,


“அவன கலாய்க்க வாய்ப்பு வந்தா அத கரெக்ட்டா யூஸ் பண்ணுக்கனும் பெரியப்பா” என்றான் விராஜ்.


“சின்ன புள்ளையாட்ட இன்னமும் இரு. அவன் மேல பாசமா இருக்க, புரிஞ்சு பேசுற.. அத நேரடியா அவன்கிட்ட காட்டினா என்ன?”


“அதெல்லாம் முடியாது.. அவனுக்கும் எனக்கும் செட் ஆகாது”


“நீ மாறவே மாட்ட போ..” எனச் சிரித்தவர்.. “நாளைக்கு வேட்பாளர் பெயரைப் பிரஸ் கிட்ட சொல்லிடு.. இன்னைக்கு வேற என்ன ப்ரோகிராம் இருக்கு?”


“இப்போ ஒன்னும் இல்ல பெரியப்பா.. சாயந்தரம் தான் உள்துரை அமைச்சரோட மீட்டிங் இருக்கு” எனக்கூறவும், அடுத்தடுத்து அவரைக் காண வந்தவர்களுடன் பேச ஆரம்பித்து விட, அன்றையபொழுது அப்படியே சென்றது.


*******


ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையே தோற்றுவிடும் போல இருக்கும் அறையில், வான்மேகத்துக்குள் புதைந்து இருப்பது போல அந்த வெள்ளை நிற படுக்கையில் புதைந்தபடி அவன் எதிரில் உள்ள திரையைப் பார்த்துக்கொண்டிருந்தான் சூர்யான்ஷ்.


அந்தத் திரை முழுவதும் பிரணவிகாவின் முகம் தான் தெரிந்தது. அவளது அழகழகான செய்கைகள், குறும்புகள், சிரிப்புகள் என வரிசையாக ஓடிக் கொண்டிருந்தது.


“ஹேய் பியூட்டி குயின் என்னை என்ன பண்ணின? இப்படி உன்னையே நினைச்சுட்டு இருக்கேன்” என அவளிடம் கேட்பதாக எண்ணி அவனையே கேட்டுக் கொண்டான்.


அவனுக்குப் பெண்கள் புதிதல்ல ஆனாலும் இவளிடம் ஒரு மயக்கம். அதுவும் விஹானுக்கு இவள்மேல் இருக்கும் மயக்கம் தெரிந்த பிறகு பிரணவிகா மேல் ஒரு வெறியே வந்தது. எப்பாடு பட்டாலும் அவள் விஹானுக்கு கிடைக்கக் கூடாது தனக்கு தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அவனுக்கு விஹானை இதன் மூலமாவது பலிவாங்க வேண்டும். விஹானை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம்.


ஆனால் அவனே அறியாமல் அவனும் அவளிடம் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறானெனத் தெரியாத அளவுக்கு அவள்மீது அவனும் பித்தாகிக் கொண்டிருக்கிறான். திரையில் தெரிந்த அவளின் புகைப்படத்தில் அவளைப் பார்த்துக்கொண்டே, ரசித்துக்கொண்டே இருந்தான்.


“பியூட்டி குயின் நான் கொடுத்தனுப்பின பொக்கே உனக்குப் பிடிச்சது. நான் கொடுத்து அனுப்பின ரோஸையும் பிடிச்சது அதே போல என்னையும் உனக்குப் பிடிக்குமா? உன்னோட ஸ்பெஷல் நாள் அன்னைக்கு உன் முன்னால நிப்பேன். நோ சொல்லவே முடியாத நிலையில நீ எனக்கு ஓ.கே சொல்லுவ.. சொல்ல வைப்பான் இந்த சூர்யான்ஷ்” என அவளுடன் மனதோடு பேசிவிட்டு, அவளிடம் காதலை சொல்லும் முன் அவளை எப்படி கவர்வது எனத் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்.


அவனைக் கவரவே ஆயிரம் பெண்கள் திட்டம் தீட்ட, இவனோ பிரணவிகாவை கவர திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறான். இவன் திட்டத்தை எல்லாம் செயல்படுத்த விடுவானா விஹான். இல்லை சூர்யான்ஷ் தான் தன்னுடைய திட்டத்தைச் செயல்படுத்தாமல் விடுவானா?


*******


விஹான் அவனது அறையில் அடக்கப்பட்ட கோபத்தில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான். சற்று நேரத்துக்கு முன் தான் அவன் புகைப்படத்தைத் திருத்தி வலைதளத்தில் பதிவிட்டவனை கண்டுபிடித்து விசாரிக்க, கடைசியாக அவன் சூர்யான்ஷின் உதவிளாளர் தான் செய்யச் சொன்னதாகக் கூறினான். முன்னரே அவனாகத்தான் இருக்கும் எனத் தெரிந்தது தான் ஆனாலும் இப்போது ஆதாரபூர்வமாகத் தெரிய, பதிவிட்டவனை நன்றாகக் கவனித்து உள்ளே தள்ளிவிட்டான்.


சூர்யான்ஷ் மேல் இதை வைத்துப் புகார் அளிக்கலாம் தான் ஆனால் காவல்நிலையமே செல்லாமல் அதிலிருந்து வெளிவரும் அளவுக்கு அவனிடமும் பணபலம் இருந்தது. அதனால் அவனை வேறு எதாவது செய்தாக வேண்டுமென நினைத்துக் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான்.


இருவரும் ஒரே தொழிலில் இருப்பதால் இரண்டு டெண்டர்களை விஹான் எடுத்தால் சூர்யான்ஷ்க்கு ஒன்றை தானாகவே விட்டுக்கொடுத்து விடுவான் விஹான். ஆனால் அவனோ தானாக எடுத்தது போலப் பெருமைப்பட்டுக் கொள்வான். இம்முறை இந்த வாரத்தில் வந்த பதினைந்து இருபது டெண்டர்களை அவனுக்கு ஒன்று கூட விடாமல் விஹானே எடுத்தான்.


அதில் கொந்தளித்து தன்னிடம் சண்டைக்கு வருவானென எதிர்பார்த்த விஹானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவனோ தனக்கு டெண்டர் கிடைக்காத கோபத்தையும் கூட வன்மமாய் உள்ளுக்குள் வைத்து விஹானை மொத்தமாக வீழ்த்தப் புலிபோல் பதுங்கி அவனது இறையான பிரணவிகா மேல் மட்டுமே மொத்த கவனத்தையும் வைத்து, இறை ஒன்றே குறியென இருந்தான்.


டெண்டருக்காக விஹான் அழைந்த நேரம் மொத்தமும் சூர்யான்ஷ் பிரணவிகாவை அவளது டிஸ்டினி உலகத்துக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொண்டிருந்தான் அவன் முகத்தை மட்டும் காட்டாமல். கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தைப் பார்க்க அவள் ஏங்கும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டான்.


ஒவ்வொரு முறையும் அவள் கண்ணில் படுவான் ஆனால் முகத்தை மட்டும் அவளுக்குக் காட்டாமல் அவளிடமிருந்து தப்பிவிடுவான். அவள் தினமும் அந்த முகம் தெரியாதவனை நினைத்துக் கனவுகாணும் நிலைக்கு வந்துவிட்டாள்.


அவள் விரும்பிய அந்த டிஸ்டினி ஹீரோவாகவே மாறிவிட்டான். பாவம் அந்தப் பேதை பெண்ணுக்குக் கற்பனை உலக நாயகன் காற்றாகக் கரைந்து விடுவான்.. நிஜ நாயகன் தான் தன்னை தாங்குவானென அறியாமல் மாயை பின்னால் செல்கிறாள்.


தொழிலை மட்டும் கவனித்து தன்னவளை கவனிக்காமல் விஹான் செய்த தவறின் விளைவை கண்கூடாக காணும் நேரம் எவ்வாறு அதை ஏற்றுக் கொள்வான்? எப்படி தன்னவளை கைப்பற்றுவான்?
 
Top