எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கட்டியமுதே! என் கண்ணம்மா! - கதைத் திரி

Shambhavi

Moderator
கண்ணம்மா - 01

அதிகாலை வேலையில் ஆதவனின் தரிசனத்தை நின்று, நிதானமாக ரசித்துப் பார்ப்பதென்பது பலருக்கு வாய்ப்பதே இல்லை. ஆனால் இன்று அதற்கென்றே நன்னாளாக அமைந்ததுவோ என்று என்னும் அளவிற்கு அவருமே தன் கதிர்களை எல்லாம் மெல்ல மெல்ல பார் எங்கும் பரப்பிக் கொண்டே துயில் கலைந்தார்.

மஞ்சளும் சிவப்பும் ஆரஞ்சும் கலந்து, நீ பெரியவளா இல்லை நான் பெரியவளா என்று சண்டையிட்டவாறே கதிர்கள் தங்களின் நிறத்தை வானம் என்னும் தாளில் தீட்டிக்கொண்டிருக்க,
நன்கு தெளிந்த நீல வானமும் அதற்கு தோதாய் வெண்ணிற மேகங்களை கொண்டு கண்ணைப் பறித்தது.

கடல் அன்னையின் மேற்புறத்தில் சூரியனவனின் கதிரொலிகள் பட்டு தங்கமென ஜொலிக்க, அந்த அதிகாலை வேளையில் பாய்மர கப்பலில் பயணம் செய்வோர் கூட, அந்த ஒளியில் எறும்புகளாய் தான் தோன்றினர் அவனின் கண்களுக்கு.

கடலை ஒட்டியிருந்த வானைத் தொட்டுவிடும் உயரத்தில் ஓங்கி உயர்ந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் ஜம்மென்று நின்றவாறே ஆற அமர இக்காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தான், வாசுதேவ கிருஷ்ணன்.

அந்த நேரத்திலேயே குளித்து முடித்து, வீட்டில் அணியும் ஒரு இலகுவான ஆடையை அணிந்து கொண்டு, இடக்கையில் தனது காஃபி கப்புடன் கண்களில் ஒரு தீர்க்க பார்வையைக் கொண்டு நின்றிருந்தான் அவன்.

குளிர்ந்த காற்று அவன் மேனியை இதமாகச் தழுவிச் செல்ல, அதனை ரசித்தவனின் கண்களும் இதழ்களும் ஒரு மென்னகை புரிந்தன.

சொட்டு விடாது ரசித்து குடித்த காஃபியின் கசப்பு நாவில் தவழ்ந்த வண்ணம் இருக்க, உமிழ் நீரைக் கூட்டி விழுங்கியவனின் காதுகளை தீண்டியது வீட்டின் அழைப்பு மணி.

"தம்பி, கிளம்பிட்டீங்களா? செத்த நேரமிருங்க டிஃபன் செஞ்சு தாரேன்" என்றவாறே தன் வயர் கூடையுடன் சமையல் அறை நோக்கி சென்றார் சாந்தா, அந்த வீட்டின் சமையல் அம்மா.

"சாந்தா ம்மா, எனக்கு கஞ்சி மட்டும் செஞ்சு வைங்க. மதியம் ராகவ் வருவான், அவன கேட்டு லஞ்ச் செஞ்சுடுங்க" என்றவன் தன் குடித்தக் கப்பை கழுவி, அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றான்.

அவனின் செயலால் மனதில் எப்போதும் துளிர்க்கும் மகிழ்வு, இன்றுமே வந்து சாந்தாவின் முகத்தில் ஒரு மலர்ச்சியைக் கொடுத்தது.

என்றும் இல்லாத ஒரு நிறைவு அவன் மனதில். ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டவாறே கட்டிலில் இருந்த சீருடையை அணிந்துக் கொண்டான், வாசுதேவ கிருஷ்ணன்.

வெள்ளை நிற முழுக்கை சட்டையும், ஆழ்ந்த நீல நிற காற்சட்டையும் அதன் நிறத்திலேயே வெள்ளை பட்டைகளைக் கொண்ட கழுத்து அட்டியும் (டை!) அணிந்து நின்றவனின் தோற்றம் அவனுக்கே ஒரு கர்வத்தைக் கொடுத்தது.

இறுதியாய் 'என்னையும் அணிந்து கொள்ளேன்' என்ற தொப்பி அவனின் கவனத்தை தன்பால் ஈர்க்க, அதனை அணிந்துகொண்டு நிமிர்ந்து நின்றவன் மகிழ்ச்சியின் பயனாய் ஒரு விரிந்த சிரிப்பின்னூடே தன்னுடைய மீசையையும் முறுக்கிக் கொண்டான்.

ஆறடியைத் தாண்டும் அசாத்திய உயரம் கொண்டவனுக்கு கனகச்சிதமாக இருந்தது அந்த உடை. அதிலும் அவனின் சற்று அடர்ந்த மில்க் சாக்லேட் நிறத்திற்கு அத்தனை எடுப்பாய் இருந்தது.

இன்று தான் முதல் நாள் வேலையில் சேர இருக்கிறான். முழுவதுமாக தயாராகி வெளியே வந்தவனை இமை கொட்டாது பார்த்து நின்றிருந்தார் சாந்தா.

அவரைக் கவனித்துவிட்டவனோ,
ஒரு சின்ன சிரிப்புடன் அவர் கொடுத்த கஞ்சியை பருகியவாறு பணிக்கு கிளம்பி சென்றான்.

திருவான்மியூரில் இருந்து கிளம்பிய அவன் சாக்லேட் நிற டஸ்டர் சென்று நின்ற இடமோ, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்!

நேரம் சரியாய் ஆறரை என அவன் ரோலக்ஸ் காட்ட, நிமிர்ந்த நடையுடன் தன்னின் உடமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தின் உள்ளே பிரவேசித்தான், வாசுதேவ கிருஷ்ணன்.



"தாத்தா, பாட்டிய பத்ரமா பார்த்துப்பீங்களாம். அவசரம்னா எனக்கு போன் பண்ண மறந்துடாதீங்க. நேரத்துக்கு மருந்து சாப்பிடுங்க. அப்புறம்.." என்று சிந்தித்தவள் அருகே நின்றிருந்த தன்னுடைய பாட்டியை கட்டிக்கொண்டு,

"அங்க போன உடன என்னைய மறந்தராத நீலா.." என்று போலி கண்ணீருடன் அவரை இறுக்கிக் கொண்டாள், அம்ருதவர்ஷினி.

தலையில் அடித்துக்கொண்ட அவரோ, "ஏன்டீ.. ஏன்டீ என் மனத்தையே வாங்குற? இப்போ நான் இந்த கண்ராவிய எல்லாம் கேட்டேனா" என்றவர் முகத்தை அஸ்ட கோணலாக வைத்துக்கொள்ள, ஒரு பொங்கிய சிரிப்பு அம்ருதாவின் முகத்தில்.

"டார்லிங்.. அப்போ என் கூட வரது உனக்கு பிடிக்கலையா" என்று நீலாம்பரியாகிய நீலாவை உரசிக்கொண்டே கேட்டார் அவரின் ஆருயிர் கணவரான சாரங்கன்.

"அய்யோ.. காலம் போன கடசீல இதுலாம் தேவையா உங்களுக்கு" அவர் பல்லைக் கடிக்க,

"சாரு நீ விடு, நீலாவுக்கு ஒரே வெக்கம் வெக்கம்.. கம்மிங் கம்மிங், அதான் ஓவரா பிகு பண்ணுது" என்றாள் நீலாவை லேசாக இடித்துக் கொண்டு.

"வெக்கப்படுறீயா டார்லிங்.." என்று கேட்டுக்கொண்ட நீலாவின் பக்கம் வந்த சாரங்கனைப் பார்த்து சற்று அவரே மிரண்டு விட்டார்.

அவரின் அதிர்வு முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, பொது இடமாக இருக்க அம்ருதாவிற்கு தான் சிரிப்பை அடக்க பெரும்பாடானது.

"ஆனாலும் உனக்கு எங்கையோ மச்சமிருக்கு தாத்தா" என்று அவர்களின் பயண பொதிகளை டிராலியில் தள்ளிக்கொண்டு வந்து நின்ற ஆதவன் கூற,

"நீ ஏன் வயிறு எரியுர பேராண்டி" - சாரங்கன்.

"என்னைய இங்க இருக்குற கேரளாவுக்கு அனுப்ப அத்தன யோசிச்ச உங்க பையன், இந்த வயசுல உங்கள கோ..வா அனுப்புறாரே! அதான்" - ஆதவன்.

"அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்டா" - அம்ருதா.

"ஆமா ஆமா.. பேரன் பேத்தியே எடுத்தாச்சு.. இதுல செகண்ட் ஹனிமூன்" என்றவன் முணுமுணுக்க,

"தப்பா சொல்லுறடா பேராண்டி, இது எங்க நாலாவது ஹனிமூன்" என்றார் முகத்தில் சிறு வெக்கச் சாயலுடன்.

"எதேய்.. கஷ்டம், கஷ்டம்.. தயவு செஞ்சு மூஞ்ச அப்படி வெக்காத தாத்தா.. கடுப்பாகுது" என்றவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அவரின் பாவனையை பார்த்தபடி நின்றிருந்த அம்ருதா, "சாரு" என்று சிரிப்பினூடே அவரை அணைத்துக் கொண்டாள்.

"வயசு பசங்க கிட்ட பேசுற பேச்சா இது" என்று வெளியே சொன்னாலுமே நீலாம்பரியின் முகமும் ஒரு மென்மையை கொண்டிருந்தது.

"அப்பா, மாத்திரை மருந்தெல்லாம் எடுத்துட்டீங்களா? ஸ்டீமர், ஸ்கார்ப் எல்லாம் இருக்கா?" என்று கேட்டுக்கொண்டே அவர்களின் டிக்கெட்டை சரி பார்த்தவாறு வந்து நின்றார், சுந்தரேஸ்வரர்.

"எல்லாம் இருக்குடா. நீ மொதல்ல டிக்கெட்ட கொடு. நாங்க கிளம்புறோம்" என்றவர் பரபரக்க, 'கிழவனுக்கு அவசரத்த பாரேன்' என்று மனதில் அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

"உங்க மைண்ட் வாய்ஸ்ஸ நான் கேச் பண்ணிட்டேன் டாடி" என்ற சிரித்துக் கொண்டே சொன்ன அம்ருதாவை,

"அம்ரூ, நீயும் தான் இவங்க கூட போற" என்று கடைசி நேர அணுகுண்டைப் போட்டார் அவளின் தந்தை சுந்தரேஸ்வரர்.

"வாட்" என்று அதிர்ந்த குரல்கள் கேட்க,

"என்ன வாட்? உங்கள தனியா அனுப்ப வேண்டாம்னு சரோ சொல்லுறான். அதான் அம்ரூ வில் அக்கோம்பனி யூ போத்" என்றார் சுந்தரேஸ்வரர்.

"அப்பா, நான் ஒன்னுமே பேக் பண்ணல அண்ட் இட்ஸ் தேயர் டிரிப்"

"அம்மா எடுத்துட்டு வராங்க அம்ரூ. அவங்க எல்டர்லி பீப்பிள்டா, அதான்" என்று தன்மையாகவே மகளிடம் சுந்தரேஸ்வரர் பேசப் பேச,

"யாருடா உனக்கு எல்டர்லி பீப்பிள்? நானா.. நானா.." என்று அவரிடம் சண்டைக்கு வந்திருந்தார் சாரங்கன்.

அவரின் பாவனையே அனைவருக்கும் சிரிப்பைக் கொடுக்க ஆதவன், "அப்புறம்.. யங் மேன், பேத்திய கூட வெச்சுட்டே ஃபோர்த் ஹனிமூன் போல" எனச் சிரித்துக்கொண்டே கேட்டவனை வெட்டவா குத்தவா என்ற திக்கில் பார்த்து வைத்தார், சாரங்கன்.

"சரி அப்பா நீங்க முன்னாடி போங்க, மீனா வந்துட்டு இருக்கா. அம்ரூ லக்கேஜ் வந்தோடனே செக்-இன் பண்ணிக்கலாம்" என்றவர் ஆதவனிடம் ஏதோ வாங்கி வர சொல்லி அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே அவர் மனைவி மீனாட்சியிடமிருந்து அழைப்பு வர, அதனை எடுத்துக்கொண்டே சிறிது தள்ளி நின்றிருந்தார் சுந்தரேஸ்வரர்.

"ஆம் சாரி சாரு" சாரங்கனை அணைத்துக்கொண்டே அம்ரூ அவரிடம் சொல்ல,

"என் பேபி எங்க கூட தான வரப்போறாங்க.. யூ டோண்ட் ஃபீல் ஃபார் தட்" என்றவர் மென்மையாய் அவளின் நெற்றியில் முத்தமிட, பார்க்க அத்தனை நிறைவாக இருந்தது.

நீலாம்பரி அவர்களின் பக்கவாட்டில் நின்றவாறு இவங்களின் பாசம் பிணைப்பை பார்த்துக்கொண்டு இருக்க, அவரை இடித்து தள்ளியவாறே முன்னோக்கி சென்றான் வாசுதேவ கிருஷ்ணன்.

ஒரு நிமிடம் நிலை தடுமாறி விட்டவர், அங்கிருந்த தடுப்பு கம்பியை பிடித்துக் கொண்டு சமாளித்து நின்றுகொண்டார்.

அவரின் தள்ளாடலை பார்த்த தாத்தாவும் பெயர்த்தியும் ஒரு விநாடி அதிர்ந்து பின் அவரைத் தாங்கிக் கொண்டனர்.

வாசுதேவ கிருஷ்ணனுக்கு இருந்த அவசரத்தில் ஓடிக்கொண்டே "ஆம் சாரி" என்று திரும்பிக் கூடப் பார்க்காமல் விரைந்திருந்தான்.

"டி பாரி.. ஒன்னுமில்லையே" என பதறிப் போய் கேட்ட சாரங்கனின் உடலிலுமே ஒரு உதறல் தோன்ற, அதை கவனித்துவிட்ட அம்ருதாவிற்கோ கோபம் கண்ணை மறைத்திருந்தது.

"ஈஸ்வரா.." என்று சற்று பதட்டமான குரலில் நீலாம்பரி கடவுளையும் மகனையும் அழைத்தவாறு தரையில் அமர்ந்துவிட, சாரங்கனுக்கு மனது படபடத்தது.

அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ஊர்ஜிதப்படுத்திய அம்ருதா, "யூ பிலடி ***" என்று அவனை அர்ச்சித்தவாறே வாசுவின் பின்னால் ஓடினாள்.

அவள் அணிந்திருந்த ஸ்கட்டை தூக்கியபடி ஓடியவளை என்னவோ ஏதோவென்று பின் தொடர்ந்து ஓடினர், விமான நிலைய காவல் அதிகாரிகள்.

கேட்டை தாண்டி செக்யூரிட்டி செக்கிங் வந்தும் கூட அவளின் ஓட்டம் தடைபடவில்லை.

ஓட்டம் முழுவதிலும் அவனை வசைபாடியவாறே இருந்தவள் சட்டென்று அங்கிருந்த பயணி ஒருவரின் காஃபி கப்பை பறித்த வேகத்தில் வாசுவை நோக்கி இன்னும் வேகமாக ஓடினாள்.

சுற்றி நடக்கும் எந்த விசயத்தையும் கருத்தில் கொள்ளாமல் அவள் பாட்டிற்கு நடந்துகொள்ள, அங்கு தன்னின் அடையாளத்தை உறுதி செய்ய நின்றிருந்தவனின் பின்புற சட்டையானது காஃபி அபிஷேகம் செய்யப்பட்டது, அம்ருதவர்ஷினியால்!

ஒரு நொடி அங்கிருந்த அனைவருமே ஸ்தம்பித்து விட்டனர்!

எதற்காக? என்ற கேள்வி அனைவர் முகத்திலுமே இருக்க, வாசுதேவிற்கோ பற்றிக்கொண்டு ஆத்திரம் வந்தது.

"வாட் தி ஹெல்" என்று அவன் திரும்ப, அங்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தாள் அம்ருதா.

கண்களில் ஆத்திரத்தை தோக்கியபடி அவள் நின்றிருக்க, "என்ன ம்மா நீ.. என்ன பிரச்சன உனக்கு" என்று அங்கிருந்த காவலர்கள் அவளை சூழ்ந்து கொண்டனர்.

"அறிவில்ல" என்று எகிறியபடி கோபத்துடன் அவளை நெருங்கியிருந்தான் வாசுதேவ கிருஷ்ணன்.

"உனக்கு மட்டும் கிலோ கணக்கில இருக்கா என்ன?" என்றவளின் கூற்றிற்கு ஆத்திரம் கட்டுக்கடங்காது வர, அவனை தடை செய்தது அங்கிருந்த பணிபெண்ணின் குரல்.

"ஸார், இட்ஸ் கெட்டிங் லேட். ப்ளீஸ் கெட் ச்சேஞ்ட் ஆப் யுவர் செல்ஃப்" என்று அடக்கத்துடன் அப்பெண் சொல்லியிருந்தாலும், இந்த நிலைமை தனக்கு வந்ததற்கான காரணகர்த்தாவை அடித்து வீழ்த்தும் கோபம் அவன் முகத்தில்.

அதற்குள் காவலர்கள் அவளை விசாரிக்க ஆரம்பித்திருக்க, வாசுதேவகிருஷ்ணனையும் இங்கிருந்து அழைத்துச் சென்றிருந்தனர் விமான நிலைய அதிகாரிகள்.

போகும் அவனையே பார்த்திருந்தவள் அப்போது தான் அவனைத் திரும்பி ஏதும் கேட்காதது நினைவிற்கு வர,

"டேய் முள்ளபன்னி தலையா.. வாய் நீளத்துக்கு இங்கிலிஷ் பேசுனா மட்டும் போதாது. மூஞ்சில இருக்கிற கண்ணும் தெரியனும்! அதவிட முக்கியமா மேனர்ஸ் இருக்கனும்" என்றவள் அவனையே பார்த்தவாறு காவலர்களின் இழுப்பிற்கு சென்றாள்.

முதலில் யாரோ என்று நினைத்தவன், பின் அவள் குரலின் அடையாளத்துடன் திரும்பிப் பார்க்க அவளின் சொற்கள் இவனுக்குத் தான் தீயாய் எரிந்தது!

அதிலும் 'என்ன, என்ன வார்த்தைகளை பிரயோகிக்கிறாள் இந்த பெண்' என்று நினைக்கையில் அவனின் கை முஷ்டிகளை இறுக்கி தன்னின் கோபத்தை அவன் கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த பிரயத்தனபட்டான், வாசுதேவ கிருஷ்ணன்.

அம்ருதாவை அங்கிருந்த காவலர் கண்கணிப்பு அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர் அந்த அதிகாரிகள். அங்கு அவளை விசாரிக்கிறேன் என்ற பெயரில் போட்டு துளைத்து எடுக்க, அவளின் கோபம் ஹை பிச்சில் ஏறி நின்றிருந்தது.

அப்போது சரியாய் சுந்தரேஸ்வரர் வந்து அவளை வினவ, பொங்கிவிட்டாள் அவரிடம்.

"வயசானவங்கள இடிச்சுட்டு ஓடி வந்தது அவன்! அவன் சட்டைய பிடிச்சு ஏன்டானு கேட்கறதுக்குள்ள என்னைய தூக்கிட்டு வந்தது இவங்க! இதுல என் தப்பு எங்க இருக்கு டாடி" என்று சுந்தரேஸ்வரரிடம் சண்டைக்கு நின்றிருந்தாள் அம்ருதா.

அவளை முறைத்துக்கொண்டே, "என் மதர் கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டாங்க ஸார். தட்ஸ் வை ஷி பெஹோவ்ட் லைக் தட் (எங்க அம்மா கொஞ்சம் தடுமாறிட்டாங்க. அதான் இவள் இப்படி நடந்து கொண்டாள்) " என்ற சுந்தரேஸ்வரரின் விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தியாக இல்லை என்று அவர் முகத்திலேயே நன்கு தெரிந்து.

இருந்தும் ஒரு பெரிய மனிதர், மகளின் செயலால் மன்னிப்பு வேறு கேட்க என்ன செய்ய முடியும் அவர்களால்?

"டோன்ட் ரிப்பீட் இட் அகைன் மிஸ் (இதை திரும்ப செய்யாதீர்கள்) " என்ற எச்சரிக்கையுடன் அவர்களை விட்டுவிட்டனர்.

"அப்பா, தயவு செஞ்சு திரும்ப ஆரம்பிக்காதீங்க. எனக்கு முடியல" என்றவள் அவரிடம் விடைப்பெற்று செக்-இன் நோக்கி சென்றாள்.

அவளுக்கு முன்பே சாரங்கனும் நீலாம்பரியும் பரிசோதனை செய்து உள்ளே சென்றிருக்க, அந்த பிரச்சனையால் சிறிது தாமதமாகியிருந்தது.

'உர்' என்ற முகத்துடன் விமானத்திற்குள்ளே சென்
றவளின் பார்வையில் விழுந்தான்‌ அவன்.

"எதேய்ய்.. இவன் தான் பைலட்டா!" என்று யூனிபார்ம் அணிந்து நின்றவனை முழுதாக பார்த்தபின் அவள் ஸ்தம்பித்துவிட்டாள் என்பதே உண்மை.


அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
கண்ணம்மா - 02


"ஒன்னும் இல்லையே பாரி? முடியலேனா ட்ரிப் கேன்சல் பண்ணிடலாமா?" என்று கரிசனையாய் கேட்ட கணவனை நினைத்து அந்த வயதிலும் அவருக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது.

"அட.. இதுக்கெல்லாம் யாராவது ட்ரிப் கேன்சல் பண்ணுவாங்களா? கோவா தான் எனக்கு முக்கியம்" என்று சிரிப்புடன் நீலாம்பரி கூற, சாரங்கனின் முகத்திலும் ஒரு விரிந்த சிரிப்பு படர்ந்தது.

இவர்கள் இருவருக்கும் முதலிலேயே முன்பதிவு செய்திருந்ததால் முன் வரிசையில் அமர்ந்திருக்க, கடைசி நேர முடிவால் கடையோர கடைசியில் தான் அம்ருதாவிற்கு இருக்கை அமைந்தது.

அதுவே அவளை சுணக்க, சற்று முன்பு நடந்த நிகழ்வால் அவளின் மொத்த மனநிலையும் குன்றியிருந்தது.

அவள் எப்போதும் விரும்பும் ஜன்னலோர இருக்கையும் அமையாதது வேறு இன்னும் கடுப்பைத் தர, பார்வையை சுற்றி சுழட்டினாள்.

அருகே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது பெண்ணும் அவரின் சின்ன குழந்தையும் அவளை கவர்ந்திருந்தனர்.

ஒரு சினேகப் புன்னகையுடன் அவர்களை பார்த்திருந்தவள், விமான பணிப்பெண்ணை அழைத்து சில சாக்லேட்களை கேட்டாள்.

மூன்றை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு, மீதமிருந்ததை அந்த குட்டி வாண்டிற்கு கொடுத்த போது அதன் முகத்தில் இருந்த மலர்ச்சியே அவளுக்கு அத்தனை பூரிப்பைக் கொடுத்தது.

பின் பரஸ்பர பேச்சுவார்த்தை அந்த வாண்டிடம் அவள் நடத்த, அதுவும் இவளிடம் ஒட்டிக்கொண்டது.

"நீ கோவா ஏன் வர?"

"அதுவா.. அங்க பீச் இருக்கும்ல அத பார்க்க" என்றாள் அந்த குழந்தையிடம் ரகசியம் போல.

"வாவ்! எங்க வீட்டு மேல இருந்து பார்த்தாவே சி தெரியுமே" என்றது அது, தன் முட்டை கண்களை விரித்துக் கொண்டு.

பாப் கட்டிங் வைத்து துறுதுறுவென இங்கும் அங்கும் தாவித் தாவி அம்ரூவிடம் அக்குழந்தை பேச, அந்த அழகுக்கு இணையான மழலையழகும் சேர்ந்து கொண்டு அம்ரூ மனதை மட்டுமன்று அங்கிருந்தவர்கள் முகத்திலுமே ஒரு நிறைந்த புன்னகையை பூக்கச் செய்திருந்தது அந்த வாண்டின் பேச்சு.

அதன் பாவனையில் லயித்திருந்தவளின் உள்ளுணர்வு ஏதோ தோன்ற, நிமிர்ந்து பார்த்தவளின் முகமோ அப்பட்ட அதிர்ச்சியில் சிவந்திருந்தது.

தீவிரமாக விமான பணிப்பெண்ணிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த வாசுதேவ கிருஷ்ணன் அவள் பார்வை வட்டத்தில் விழ, அவனின் தோரணையும் உடையும் அப்போது தான் அவள் கவனத்தையே ஈர்த்தது!

'எதேய்.. இவன் தான் பைலட்டா!' என்று அறிந்த நொடி அவள் அதிர்ந்து விட்டாள் என்பதே உண்மை.

ஏதோ ஒரு பயணி தன் பாட்டியை தள்ளிவிட்டு விரைந்திருக்கிறான் என்று அவள் நினைத்திருக்க, இவன் என்ன வென்றால் விமானியாக இருக்கிறான்.

அதுவும் அவன் அணிந்திருந்த வெண்ணிற சட்டையை பார்த்த போதுதான் தன்னுடைய செயலை நினைத்து சற்று சங்கடமாகப் போனது அம்ருதாவிற்கு.

அதுதான் அவளின் இயப்பு. தன்னால் யாருக்கும் எந்த வித அசௌகரியமோ, தீங்கோ அல்ல ஒரு சாதாரண சுணக்கமோ வரக் கூடாது என்று நினைக்கும் மனோபாவம் உடைய பெண் தான் அவள்.

'இருந்துமே பாட்டி கீழே விழுந்திருந்தால்?' என்று அவளின் மூளை எடுத்துரைக்க, 'அதற்கு காஃபிய ஊத்துவியா?' என்றவள் மனது இடித்துரைத்தது.

மூளைக்கும் மனதுக்கு நடக்கும் விவாதத்தை கவனித்தவள், எப்போதும் போல் அலசி ஆராய்ந்து பின் அவனிடன் ஒரு மன்னிப்பை கேட்டுவிட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த நிலைக்கு வர காரணம் கூட, அவன் 'ஆம் சாரி' என்று ஓடிக்கொண்டே சொல்லியதின் விளைவாகத் தான் இருந்ததே தவிர அவளாக வழிய சென்று கேட்க முடியவில்லை.

நீலம்பரியின் தடுமாற்றமும், சாரங்கனின் நடுக்கமும் அதற்கு முக்கிய பங்கு!

"விடு விடு அம்ரூ. அதான் நீல்ஸ்'கு ஒன்னுமில்லையே. அவன் தள்ளிவிட்டதும் தப்பு தான், நீ காஃபி ஊத்துனதும் தப்பு தான்" என்று தனக்குள்ளேயே பேசியவள் அவனைப் பார்க்க, சரியாக அவனுமே இவளையேத் தான் பார்த்தவாறு நின்றிருந்தான், மார்ப்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு.

'கொடிக்கம்பம்' என்ற பட்டை பெயர் வைக்கும் அளவிற்கான உயரமும், நடுத்தர நிலையிலான எடையுடன் இருந்தவனை பார்க்க, 'நம்ம பக்கத்து வீட்டு பையன் தான்' என்று சாரங்கன் அடிக்கடி சொல்லும் வாக்கியமே நினைவிற்கு வந்தது அவளுக்கு.

மங்கிய நிறத்தவன் தான் இருந்தாலும் அவனின் முகம் காட்டும் பொழிவும் மென்மையும் ஒருவித சோபையாக இருந்தது போல அம்ரூவிற்கு.

கால்களை விரித்து நிமிர்ந்து நின்றவாறே கைகளைக் கட்டியபடி அவன் நின்றிருந்த தோற்றம், அழையா விருந்தாளியாய் அவள் மனதிற்குள் சிறை பிடிக்கப்பட்டிருந்தது.

வைத்தக் கண் எடுக்காத வாசுவின் பார்வையில் அவள் தான் தலை குனிய வேண்டியதாயிற்று.

'இவன் என்ன இப்படி பார்க்கிறான்' என்றவள் துணுக்குற்றாலும், 'ஒருவேள ஷர்ட்ல கரையாகிடுச்சோ?' என்று நினைத்துக்கொண்ட இருக்க, அவனோ அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

அங்கு விமான காக் பிட்டில் அமர்ந்திருந்தவனின் மனதோ ஒரு இதமான நிலையில் இருந்தாலும் மனதின் ஓரத்தில் சற்று முன்பு நடந்த நிகழ்வானதே மின்னி மின்னி அந்த இதத்தைக் கலைப்பதாக இருக்க, 'இந்த மனநிலையில் தன்னால் பணி செய்ய முடியுமா?' என்ற அச்ச நிலைக்கே சென்றுவிட்டான், வாசுதேவ கிருஷ்ணன்.

"கேப்டன், ஷால் ஐ கிவ் தி ஃபைனல் இன்ஸ்டிரக்சன்ஸ் டூ தி பேசேஞ்சர்ஸ் (கேப்டன், பயணிகளுக்கான கடைசி அறிவிப்பை கொடுத்திடவா)" என்ற விமானப் பணி பெண்ணின் அழைப்பில் மீண்டவன்,

"ஆப்டர் ஃபைவ் மினிட்ஸ்" என்றவன் கேபினில் இருந்து வெளியேறி இருந்தான்.

நீண்ட மூச்சுக்களை எடுத்துவிட்டவனின் மனது சற்று சமன்பட, தன் விமான பயணத்தை தொடங்க அகமும் முகமும் மகிழ்ந்தவாறே கேபினுள் சென்று விமானத்தை இயக்க ஆரம்பித்தான், வாசுதேவ கிருஷ்ணன்.

"அன்பு தமிழ் மக்களுக்கு என் ப்ரியமான வணக்கங்கள். நான் பைலட் வாசுதேவ கிருஷ்ணன்! பேசெஞ்சர்ஸ் கம்பர்டபிளா ஃபீல் பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன். எனி இன்கன்வினியன்ஸ், ப்ளீஸ் லெட் அஸ் நோ. இந்த டிராவல் எனக்கு ரொம்ப முக்கியமான ஒன்னு, அதோட உங்க எல்லார் ஓட ஹாப்பினஸ்ஸும் கூட தான். இதுதான் என் ஃபர்ஸ்ட் டேக் ஆஃப் அஸ் அ பைலட். அதுக்காக ஒரு சின்ன கம்பிளிமெண்ட் டூ ஆல். ப்ளீஸ் டேக் இட். தேங்க்யூ" என்றவனின் பேச்சு அந்த ஒலிப்பெருக்கியில் நின்றுவிட,
ஏதோ ஒரு சிறு மகிழ்ச்சி கலந்த பயம் அம்ரூவின் முகத்தில்.

மகிழ்விற்கான காரணம் அவனின் ஆழ்ந்த அமைதியான பேச்சாக இருந்தாலும், 'நடுகடலில் ஊர்தியை விட்டுவிடுவானோ' என்ற பயம் இல்லாமல் இல்லை அவளுக்கு.

"எம்மா செம்மலாத்தா.. என்னைய முழுசா போய் இவன் கரை சேர்க்கனும்.. அப்போ தான் உனக்கு கிடா உண்டு.. பார்த்துக்க" என்ற அவசர வேண்டுதலும் தன் குலதெய்வத்திற்கு வைத்தாள் அந்த இளம் நாகரீக யுவதி.

'பாவம் முதல் நாள் வேலை போல.. இதுல நீ வேற காஃபிய ஊத்திட்டியே அம்ரூ' என்று தன்னையே அவள் குற்றம் சொல்ல, விமானப் பெண் அவளை நெருங்கி இருந்தார்.

ஒரு சிறு துண்டு அணிச்சல், ஒரு பதப்படுத்தப்பட்ட பழச்சாறு உடன் சில சாக்லேட்கள் எல்லா பயணிகளுக்கும் வழங்கப்பட, பலர் அதை ஏற்றும் சிலர் அதை நாசுக்காகத் தவிர்த்தும் கொண்டனர்.

மென்நகையுடே அதை வாங்கிக்கொண்டவளின் அனிச்சவிழிகள் கூட ஆனந்தம் கொண்டன அந்நொடி.



வானில் உயர பறப்பதென்பது அவனுக்கு புதிது இல்லை தான். ஆனால் ஊர்தி நிறைய பயணிகளுடன் அந்த ஊர்தியையே இயக்குவது அதுவே முதல்முறை.

எடுத்தவுடன் விமானத்தை இயக்க குடுக்க மாட்டார்கள். அதுவும் வாசுதேவ கிருஷ்ணன் துணை விமானி தான். அதாவது ஜூனியர் பைலட்.

மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவனின் பயிற்சிகள் அனைத்து நிறைவடைந்திருக்க, இப்போது தன்னுடைய நீண்ட நாள் கனவாக இருந்த 'ஏவியேட்டர்' ஆகிவிட்டான்.

அவன் முகத்தில் இருந்த நிறைவும், பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த சிரிப்பையும் பார்த்த கேப்டன், "என்ன மேன், ஆர் யூ ஹேப்பி?" என்றார் அவன் தோள் தட்டி.

"கனவ நினைவாக்க அவ்வளவு பெரிய போஸ்ட்ட விட்டுட்டு வந்தாலும், யூ காட் இட் மை பாய்" என்ற அவரின் சந்தோச களிப்பு அவனின் காதினை தீண்டவே இல்லை.

வாசுதேவின் கவனம் முழுவதும் ரேடரிலும் தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் செய்திகளிலுமே இருந்தது.

மனதில் ஒருவித கணக்குப் போட்டுக்கொண்டே அந்த ரீடிங்கை எல்லாம் பார்த்திருந்தவன், அத்தனை நாட்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகளோட அதை ஒப்பிட்டவாறு இருந்தன அவன் விழிகள்.

"வாசு" என்று அவனின் தோளைத் தொட, "என்னாச்சு கேப்டன்?" என்றவனை பார்த்திருந்தவர் சிரித்தே விட்டார்.

"சி லெவல்ல இருந்து நல்லாவே மேல வந்தாச்சு மேன்.. ஜஸ்ட் ரிளாக்ஸ்!" என்றவர் அவனை திரும்பிப் பார்த்தவாறு,

"நீ ஹேப்பி'யா?"

முகம் முழுக்க விரிந்த சிரிப்புடன், "ரொம்ப" என்றான் மிகுந்த உற்சாகத்துடன்.

"ஓகே முதல் நாளே ரொம்ப போட்டு படுத்திக்காத. போகப் போக புரிஞ்சுடும் உனக்கு" என்றவாறு அவரின் ஏவியேசன் ஹெட்செட்டை சரி செய்துக் கொண்டு தன் பணியினை கவனிக்கலானார்.

வாசுதேவ கிருஷ்ணன் இப்போது பணியில் இருப்பது ஒரு டொமெஸ்டிக் பிளைட்டில். முதலில் உள் நாட்டு சேவையை முடித்து, அதற்கான தரவரிசை பட்டியலில் அவர்கள் (ஏவியேட்டர்ஸ்) இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட கால அட்டவணைக்கு பின்பு, பைலட் என்ற நிலையில் இருந்து கேப்டனான பின்பே வெளிநாட்டு விமானங்களை இயக்க முடியும்.

இப்போது கூட அவனே அந்த விமானத்தை இயக்கவில்லை. கூட சக - கேப்டன் இருந்தார் தான். அவருடன் சேர்ந்தே தன்னின் நிலைபாட்டையும் மனதில் வைத்துக்கொண்டு விமானத்தின் போக்கை அவன் உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

ஒரு விமானத்தில் கட்டாயம் இரண்டு கேப்டன்கள் இருந்தே ஆக வேண்டும். அதற்கு மேல் துணை பைலட் ஒருவர் இருக்கலாம். அதன் கணக்கில் தான், இன்று தன்னுடைய பணியினை துணை பைலட்டாக ஆரம்பித்திருக்கிறான் வாசு.

"கேப்டன், ரிலிவ் பண்ணிட்டு வரேன்" என்றவன் தன்னுடைய ஹெட்செட்டை கழற்ற,

"சும்மா சும்மா, டெஸ்க் விட்டு போகக் கூடாதுனு டிரைனிங்கல சொல்லல?" என்றார் அந்த மற்றொரு கேப்டன்.

அவரின் பேச்சு வாசுவிற்கு எரிச்சலைக் கொடுப்பதற்கு பதிலாக, சிரிப்பையே கொடுத்தது.

"இது டொமஸ்டிக் ஃப்ளைட் கேப்டன்" என்றான் குறுநகையுடன்.

அவருக்கோ, 'மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேனே' என்ற நிலையில் அமர்ந்திருந்தார் அவர்.

விமானங்களின் கட்டமைப்புகளை பொருத்து ஓய்வறை வசதிகளுமே மாறுபடும். அதுவும் டொமஸ்டிக் ஃப்ளைடில் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் பெரும்பாலும் ஒரே ஓய்வறைதான் இருக்கும்.

ஆனால் அவர் சொல்லியதும் சரிதான். காக் பிட்டின் உள்ளே நுழைந்த பின்பு, முக்கியமான காரணம் தவிர்த்து வெளியே வரக்கூடாது. நெடுநேர பயணத்தின் போது அவர்கள் பயன்படுத்த ஏதுவாக காக் பிட்டின் உள்ளேயே ஓய்வறை வசதியோடு விமானங்களும் இருக்கினர்.

ஆனால் இது டொமஸ்டிக் விமானம் அல்லவா! அதைத் தான் வாசுவும் அவருக்கு நினைவூட்டினான்.

கதவைத் திறந்து வெளியே வந்தவன் புன்சிரிப்புடனே பயணிகளை கடந்து விமானத்தின் கடைசியில் இருந்த ஓய்வறை நோக்கி நடந்தான்.

சுற்றிலும் பார்வையை வைத்தவாறே வந்தவனை கண்டுகொண்டார், சாரங்கன்.

நன்கு சாய்ந்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் விழி எடுக்காது அவனையே பார்த்திருக்க, "என்ன தம்பி, காஃபி வாசம் ஆளத் தூக்குது" என்றார் இடக்காக.

அவரின் பேச்சைக் கண்டுகொண்டவன் புன்னகையுடன், "உங்களுக்கு பின்னாடி தானே ஸார் காலி இருக்கு. அதான் ஸ்மெல் நல்லா வருது போல" என்று சிரிப்பு மாறாமல் சொன்னவன் சென்றுவிட்டான்.

(கிச்சன் ஏரியவை தான் காலி என்று விமானத்தில் அழைப்பர்.)

இங்கு சாரங்கனோ, "எனக்கே கவுண்டர் கொடுக்கறான் பாரேன்." என்று திரும்பி நீலாவிடம் சொல்ல, அவரோ சிரிப்பை அடக்கிக்கொண்டு இருந்தார்.

"இது உங்களுக்குத் தேவையா" - நீலாம்பரி.

"தெரிஞ்சுட்டே இப்போ ஒரு ஸாரியாவது சொல்லுறானா பாரு" - சாரங்கன்.

"அதான் அப்போவே சொல்லிட்டாரே!" - நீலாம்பரி

"இருந்தாலும்.. பார்த்தா சொல்லக் கூடாதா? என்ன பழக்கமோ" என்றவருக்கு மனது அப்போதும் ஆறவில்லை.

விமானத்தின் கடைசி பகுதிக்கு செல்லும் முன்பு ஒரு சிறு திரைப் போட்டு மறைந்திருந்த இடத்தை வாசு கடக்கும் போது, அவன் பின்னால் கேட்ட மெல்லிய சப்தத்தில் திருப்பிப் பார்த்தவனின் புருவங்கள் முடிச்சிட்டன!

"ஸாரி" என்று அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தவாறு கேட்ட அம்ருதாவை ஏனோ அந்த நொடி அவனுக்குப் பிடித்துவிட்டது.

அவனின் மார்ப்பு அளவிற்கு நன்கு பூசிய உடல்வாகுடன் ஒரு பொம்மையயைப் போல் இருந்தவள் அவனை அந்த நொடி கவர்ந்திழுத்திருந்தாள்.

மில்லி மீட்டர் புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தவனுக்கு அந்த பயணம் ஏனோ மனதில் நிறைவாகத் தோன்றியது.

மனதில் ஏதோ ஒரு புதுவகை உணர்வு. 'இந்த dopamine வெளிய வந்துட்டான் போல' என்றவன் நினைக்க, அதுவே அவன் புன்னகையை இன்னும் அதிகரித்திருந்தது.

எதிரே இருந்தவளுக்கும் அது பரவிவிட, காரணம் அறியா ஒரு மெல்லிய சிரிப்புடன் தலையசைத்து அவனை கடந்திருந்தாள் அம்ருதவர்ஷினி!

இனிதாய் ஒரு காதல் வாழ்க்கைக்கு வித்திட காத்திருந்தது போல அங்கு ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையும் அழகாய் ஆரம்பிக்கப்பட்டது, விதியின் செயலால்.



அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 03

வடபழனி

'பாரி ஹோட்டல்ஸ்'
என்ற பெரும் பெயர் பலகை தங்க நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது சூரியனின் தயவால்.

காலை ஆறரை மணிக்கே காஃபியின் மனம், ஹோட்டலின் வாயில் வரை வந்து நாசியை துளைத்துக்கொண்டிருந்தது.

அதுதான் அந்த ஹோட்டலின் முக்கிய சிக்நேச்சர் டிஸ்!

காஃபி'க்கு என்றே ஒரு தனி கூட்டம் கூடும் அந்த ஹோட்டலில். அதற்கு அடுத்தபடியாக இருந்த காரணம் ஹோட்டலின் அலங்கார வடிவமைப்பு!

வாயிலின் இரண்டு புறத்திலும் மரத்தாலான பெரிய யானையின் சிற்பங்களுடன் கூடிய தோரனையான நிலவு படி.

'இன்றிகேட் கார்விங்' என்று சொல்லக்கூடய மிக நுட்பமான மர வேலைப்பாடுகள் அந்த நிலவுபடி முழுவதிலுமே இருந்தது. தமிழரை போற்றும் வகையிலும் அவர்களின் தொழிலான உணவிடுவதை குறிக்கும் வகையிலும்,

'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்'

என்ற கொன்றை வேந்தனின் ‘பகிர்ந்து உண்ணுதல்’ கருத்தை, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும், தங்களின் நிலைப்பாட்டை கூறவும் வாயில் நிலவுபடியில் அவ்வாறு சதுக்கியிருந்தனர்.

வாயிலின் இடதுபுற பக்கவாட்டில் சின்ன தாமரை குள அமைப்பும், வலது புற சுவர் முழுவதிலும் 'வெர்டிகல் கார்டன்' அமைப்பும் அத்துனை வரவேற்பாக இருந்தது.

செயற்கை மனம் எதுவும் இல்லாமல், பூக்களின் மணமே அங்கு ஒரு நிமிடம் நம்மை நின்று அதனை ரசித்துப் பார்க்க/ நுகர தூண்டும்.

அந்த இடத்தைத் தாண்டி ஹோட்டலின் உள்ளே செல்லும் பாதை முழுக்க முழுக்க மனதை க(வரு)மழும் வண்ணமாக ஒரு மெல்லிய தசாங்க மனம் சூழ்ந்திருக்கும்.

பூக்கலால் அலங்கரிக்கப்பட்ட உருளி, அதற்கு மேலே சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்தார், மூசிக வாகனன்.

பார்த்தாலே வணங்க தோன்றும் விதமாக இருந்தது அவரின் அமைப்பு. இருபக்கமும் ஐந்து அடி உயரத்திற்கு குத்து விளக்கும், அதற்கு கீழே இரண்டு மூங்கில் கூடைகளில் விரலி மஞ்சளும் உப்பும் இருந்தன.

ஹோட்டலின் உள்ளே, முழுக்க முழுக்க மரத்தினாலேயே இன்டீரியர் வர்க் செய்யப்பட்டிருந்தது.

சுவற்றை, ரவிவர்மாவின் ஓவியங்களும் தஞ்சாவூர் ஓவியங்களும் குத்தகைக்கு எடுத்திருக்க,
மெல்லிய மஞ்சளும் வெள்ளையும் கலந்த ஸ்பாட் லைட் வெளிச்சம் அங்கு சூழ்ந்திருந்தது.

சுவற்றில் எந்தவித பிரத்தியேக வண்ணப்பூச்சும் இல்லாமல், முழுக்க முழுக்க தமிழ் எழுத்துக்களை தெளித்துவிட்டபடி எழுதியிருந்தனர். சிறியது துவங்க பெரியது வரை கண்ணை உறுத்தாத அதே சமயம் அழகு மிளிரும் வகையில் இருந்தது.

ஏசியின் அளவு சற்று கூடுதலாகவே இருக்க, எப்போதும் இருக்கும் நாற்காலிகள் தவிர்த்து, உணவு மேசைகளில் சாய்விருக்கைகள் போடப்பட்டிருந்தது. அதுவே சொல்லியது அந்த ஹோட்டலின் அந்தஸ்தை!

மேல தொங்கும் ஷன்லி லைட், மேல்மட்ட பக்கவாட்டு சுவர்களில் பதித்திருந்த கண்ணாடியில் இடம்பெற்றிருந்த வேலைப்பாடு, அதற்கு கீழே இன்டோர் பிளான்ட்ஸ் என அத்தனை நுணுக்கமாக வடிவமைத்திருந்தார்கள்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்று சொன்னாலும் கூட, சமையல் அறை எங்கும் இக்கால செஃப்'கள் தவிர்த்து கிராமத்து சமையல் கலைஞர்களே காணப்பட்டனர்

'அந்த வெங்காயத்த பொடிசா நறுக்கு.. டேய் முருகா நெய்ல முந்திரி பருப்ப வறுத்து எடு.. எலகட்டு வந்துடுச்சானு பாருங்க மணி அண்ணே' என்ற கலவையான குரல்கள் சமையல் கட்டில் சுறுசுறுப்பாக கேட்டுக் கொண்டிருந்தன.

அங்கு மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த நபரிடம் விரைந்து வந்த அந்த ஹோட்டலின் ஊழியர்,

"ஸார், டிஃபன் ரெடி. சாப்பிடறீங்களா?"

"ஹான்.. ரூம்'க்கு கொண்டு வந்துடுங்க தம்பி" என்றவர் வாடிக்கையாளர்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டே தன்னுடைய அறையை நோக்கிச் சென்றார், சரவணபவன்.

பார்மலில் இருந்தவரின் தோற்றம் முப்பதுகளின் இறுதியாக தோன்றினாலும் அவருக்கு வயதோ, நாற்பத்தி எட்டு!

ஃப்ரேம் லெஸ் கண்ணாடியும், தங்க நிற கை கடிகாரமுமே அவரின் டிரேட் மார்க். அங்கிங்கு இருந்த வெள்ளை முடிகள் கூட ஒருவித அழகையே கொடுத்தது அவரின் வீட் (கோதுமை) நிற மேனிக்கு.

சுடச்சுட நெய் மணக்கும் சாம்பார் இட்லியும், கெட்டியாக இருந்த தேங்காய் சட்னியும் பார்ப்பதற்கே அமிர்தமாக இருக்க, உடன் அவரின் மனைவி அனு ரேகாவும் நினைவிற்கு வந்துவிட்டார்.

நெய் மணம் நாசியை குத்தகைக்கு எடுத்திருந்த போதிலும், காஃபியின் மணம் அதைவிட போட்டு படுத்திய போதிலும் தன் முன்பு இருந்த உணவுகளை டேபிளில் நெருக்கி வைத்து ஒரு செல்ஃபீ எடுத்துக்கொண்டவர், அதை புலனத்தின் வழி ரேகாவிற்கும் கடத்தினார்.

முகம் மலர்ந்த சிரிப்புடன் உணவை அவர் சாப்பிட ஆரம்பித்திருக்க, அந்த அறைக்குள் வேகமாக நுழைந்தார், சுந்தரேஸ்வரர்.

"சரவணா இந்த அம்ரூ இருக்காளே" என்று முன் நெற்றியில் கை வைத்தவாறு அவரின் அருகே அமர்ந்து கொண்டார் சுந்தரேஸ்வரர்.

அதற்குள் சரவணனிற்கு ரேணுவிடமிருந்து அழைப்பு வர, அதை எடுத்து ஒலிபெருக்கியில் போட்டவர், அண்ணனைப் பார்த்திருந்தார்‌.

"என்ன அம்ரூ இல்லாதனால குளிர் விட்டுப் போச்சா உங்களுக்கு? உங்கள யாரு அவளையும் இப்போ கோவாக்கு அனுப்ப சொன்னா?" என்று எகிரியவரிடம்,

"நான் தான்மா அனுப்புனேன்" என்றார் ஒரு மாதிரி குரலில் சுந்தரேஸ்வரர்.

"மாமா.." என்ற அனுரேகா முதலில் அதிர்ந்தாலும் பின்,

"அவர் தட்ட கொஞ்சம் பாருங்க மாமா.. நெய் மெதங்குது இட்லில. அம்ரூ இப்படி போன உடனே இவர் இங்க ஆட ஆரம்பிச்சுட்டார்" அனு திரும்பவும் பொரிய, சுந்தரேஸ்வரருக்கு அப்போதுதான் அந்த பொறியே தட்டியது!

"டேய், உண்மைய சொல்லு. இதுக்குதான் நீ அம்ரூவ அப்பா கூட அனுப்புச் சொன்னியா?" என்றவர் தம்பியை முறைத்தவாறு கேட்டிட, எங்கே தன்னுடைய இட்லியும் நெய் மிதக்கும் சாம்பாரும் பரிபோய்விடுமோ என்ற அச்சம் சரவணனின் முகத்தில் தெரிய ஆரம்பித்திருந்தது.

தட்டை தன் பக்கவாட்டிற்கு நகற்றியவர், "என்ன'ண்ணே.. என்னைய பார்த்து இப்படி கேட்டுட்டீங்க. வயசானவங்க தனியா போகறாங்களேன்னு சொன்னா.." என்றவரை இடைமறித்த அனுரேகா,

"எப்படி எப்படி.. மூனு மாசத்துக்கு முன்ன தான லண்டனுக்குத் தனியா போனாங்க ரெண்டு பேரும்! அப்போ அவங்க வயசானவங்க இல்லையோ" என்றவரின் குரலில் நக்கல் தோனிக்க,

"நான் நெய் சாப்பிட்டா, நீ ஏன்டீ நைய் நைய்னு குதிக்கிற?" சரவணபவன் கடுப்பாகி கத்திவிட,

"உன்னைய இப்போ நான் ரைய்னு தான் ஒன்னு விடபோறேன் பாரு.. காலங்காத்தாலையே பீபி ஏத்திட்டு" என்று கோபத்தில் சுந்தரேஸ்வரரும் கத்த ஆரம்பித்திருந்தார்.

'ஸ்பீக்கர்ல போட்டது தப்பாகிடுச்சே' என்று நொந்தவாறு, "அப்பறமா கூப்பிடுறேன், வை" என்று போனை வைத்தவர், இட்லியை ஸ்பூனில் குத்திக் குத்தி சாப்பிட ஆரம்பித்திருந்தார்.

"டேய்.. அத வெச்சுட்டு வேற கொண்டுவர சொல்லு" - சுந்தரேஸ்வரர்

"அண்ணே.. இன்னிக்கு மட்டும்" - சரவணபவன்

"என்னிக்குமே நீ இதயெல்லாம் தொடவே கூடாதுனு ஆதவன் சொன்னானா இல்லையா"

"சரீரீ.." என்று பல்லைக் கடித்துக்கொண்டு அந்த உணவை அவர் புறம் தள்ளினார் மனதே இல்லாமல்.

"பரவால பரவால.. ஒரு நாள் சாப்பிட்டுக்கோ. சாப்பாட்டை வீண் பண்ணக் கூடாதுல்ல" என்றார் சுந்தரேஸ்வரர் தம்பியின் சுருங்கிய முகத்தைப் பார்த்தப் பின்பு.

'வீம்பு பிடித்தால் இருக்கிறதும் போய்விடும்' என்று வேகவேகமாக உணவை உட்கொள்ளத் தொடங்கினார் அவர்.

அதுவரை இருந்த ஒரு கடினத் தனம் முகத்திலிருந்து மாறிட, தம்பியையே மென்னகையுடன் பார்த்திருந்தார், சுந்தரேஸ்வரர்.

சிறுவயதில் தொடங்கிய அவர்களின் ஓட்டம் இப்போது தான் சற்று குறைந்திருக்கிறது போல தோன்றினாலும், அதற்கு அவர்கள் கொடுத்த விலை என்னவோ தங்களின் உடல் நலனை!

பெரிதாக எதுவும் பாதிக்கவில்லை என்று சந்தோஷபட்டாலும், உள்ளதையும் காப்பாத்திக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை நிரம்பவே அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

அன்பு. இந்த ஒற்றை சொல் செய்யக்கூட மாயங்கள் தான் எண்ணற்றது. இப்பூவுலகில் இருக்கும் எல்லா உயிர்களுமே இந்த ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்பட்டு பொட்டிக்குள் அடைபடும் பூனையாகவே மாறிவிடும்.

உறவாகட்டும், நம்மால் செய்யப்படும் உன்னத செயல்களாகட்டும், அன்பிருந்தால் எல்லாம் வசமாகும்.

இதுவே சாரங்கனின் வாழ்க்கை மந்திரம்! அதுவே தான் அவரின் உயர்விற்கும் காரணகர்த்தா.

மதுரையில் அமைந்திருந்த ஒரு குக்கிராமத்தில் பிறந்து, வாழ்க்கையில் ஏதாவது சாதித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த சாரங்கன், நிலபுலன்கள் அனைத்தையும் தந்தையின் பேச்சை மீறி விட்டுவந்தவரை ஆதரித்தது அப்போதைய மதராசப்பட்டினம்.

வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரம், சாரங்கனையும் விட்டுவிடவா போகிறது?

அப்பாத்தாவின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிட்டவரின் கைகளும் கூட அவரின் கை பக்குவத்திற்கு அடிமையாகியிருக்க, அதையே மூலதனமாக வைத்து அவர் தொடங்கிய தொழில், ஒரு சிறு உணவுக் கடை.

பத்துக்கு ஆறு என்ற இடத்தில் தொடங்கியவரின் பயணம் இப்போது ஏழு ஹோட்டல்களை கொண்ட, 'பாரி குரூப் ஆப் ஹோட்டல்ஸ்' என்று விஸ்தரித்து நிற்கிறது.

கடும் உழைப்பு. விடாத மனோதிடம். இந்த இரண்டும் இருந்தால் யாராலும் வெற்றி அடையலாம் என்ற கூற்றை சாரங்கனும் அவரின் புதல்வர்களும் நடத்திக் காட்டியிருந்தனர்.

எடுத்தவுடனேயே எல்லாம் பொன்னாகி விடவில்லை தான். நேரமெடுத்தது.

முயலும் ஆமையும் போட்டியில் எப்படி மெல்ல மெல்ல வந்த ஆமையின் முயற்சி வென்றதோ அதேதான் இங்கும்.

அப்போது அவர்கள் முயலாமல் இருந்திருந்தால், வாழ்க்கை நிச்சயம் ஒரு ஆமையாகத் தான் இருந்திருக்கும்.

ஆனால், ஆமை வேகத்தையும் முயலின் முயற்சியுமே அவர்களை உயரத்தில் இப்போது வைத்திருக்கிறது என்பது தான் உண்மை!

சுந்தரேஸ்வரர், சரவணபவன் என்ற இரு பிள்ளைகளுடன் சாரங்கனின் 'பாரி ஹோட்டல்ஸ்' பெயரும் புகழுடன் இருப்பதற்கான மற்றொரு காரணம், சமையலின் சுவை.

தொண்ணூறு சதவீதம் சுவையாக இருந்தாலும் அந்த பத்து சதவீத அன்பு தான் சமையலையே தூக்கி நிறுத்தும். சமையல் ஆட்கள் சுணங்கியோ, சோர்ந்தோ இருந்தால் அவர்களின் உணர்வும் சமையில் கடத்தப்படும் என்பதை ஆழமாக நம்புவார், சாரங்கன். ஏன் அதுதான் உண்மையும் கூட.

அதன் பொருட்டே மிகுந்த அனுசரணையாகத் தான் ஊழியர்களிடம் இருப்பார்கள் அவர்கள் மூவரும். ஆனால் ஏமாளிகளாக இருக்கவில்லை.

அந்த பிணைப்புத் தான் இவர்கள் அனைவரையும் இணைக்கும் பாலம். உறவிலும் தொழிலும் அவர்கள் வெற்றி பெற முக்கிய காரணமே இந்த அன்பும் கலகலப்பும் தான்.



"ஸாரி" என்றவளை பார்த்திருந்தவன், இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு வந்த புன்னகையையும் அடக்கி அவள் தலையசக்கும் முன்பே ஏதும் பேசாமல் ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவாறு சென்றுவிட்டான் வாசுதேவன்.

அவனின் நடவடிக்கை அம்ருதாவிற்கு சற்றும் பிடிக்கவில்லை என்றாலும், அவளின் செயலால் தானே இது என்று நினைப்பும் அவளுக்கு இல்லாமல் இல்லை.

அவளின் பின்னோட வந்த சாரங்கனும், "என்னவாமா அவனுக்கு" என்று இடக்காகக் கேட்டவரிடம்,

"காஃபி ஊத்துனது தப்பு தான சாரு"

"அவன் பண்ணது மட்டும் சரியா.. என் டார்லிங்க தள்ளி விட்டுட்டு எப்படி ஓடினான் ராஸ்கல்.." என்று கடுகடுத்த முகத்துடன் முறைத்துக்கொண்டு நின்றிருந்தவரின் நிலையோ, ஸ்கூல் படிக்கும் குழந்தையாகவே தான் இருந்தது.

நீலாம்பரியை அவன் தள்ளிவிட்டதே அவருக்கு கோபத்தைக் கொடுத்திருக்க, சற்று முன்பு அவன் கொடுத்த மொக்கையும் இப்போது அதனுடன் சேர்ந்திருந்தது.

அதன் வெளிப்பாடாக இருந்தது இவரின் இந்த சிறுபிள்ளை கோபம்.

சின்ன சிரிப்புடன், "எனக்கு யாரோ ஒருத்தர் 'யாராவது தப்பு செஞ்சா, நீயும் அவங்களுக்குத் திரும்ப ஏதாவது செய்யனும்னு இல்லை. சிரிச்சுட்டே கடந்து போயிடுனு' சின்னதுல இருந்து சொல்லிக் கொடுத்திருக்கார் சாரு! அவர் யாருனு உனக்குத் தெரியுமா" என்று பீடிகையுடன் இழுத்தவளை முறைத்துக் கொண்டே தன் இருக்கைக்குச் சென்றுவிட்டார், சாரங்கன்.

அங்கு நீலாம்பரியோ வந்து அமர்ந்தவரின் நிலை புரியாது, "என்னங்க அந்த பிள்ளைக்கு இதுதான் முதல் டிரிப்பாம். ஒரு வாழ்த்து சொல்லலாம்'னு பார்த்தா முகத்த எப்படியோ வெச்சிட்டு போயிடுச்சு" என்று வருத்தம் பொங்க சொன்னவரை எதைக் கொண்டு அடிக்கலாம் என்று பார்த்திருந்தார் அந்த யங் மேன்.

"கிழவி.. கொஞ்சம் அமைதியா வா. வாழ்த்து சொல்லனுமாம்.. இப்போ அதான் முக்கியம்" என்று அவர் முகத்தை திருப்ப,

"அப்போ நீங்க என்ன கொமரனோ, எழுபது தாண்டியாச்சு இதுல கிழவனுக்கு பவுசப் பாரேன்.. வந்துட்டாரு" என்று நீலாம்பரி நொடிக்க, அம்ருதா அவ்விருவரின் முகத்தையும் சிரிப்புடன் பார்த்து நின்றிருந்தாள்.

காக் பிட்டில் அமர்ந்திருந்தவனின் முகத்தில் மீண்டும் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. டோபோமைன் தன் வேலையைத் திரும்ப ஆரம்பித்திருந்தது போலும்.

மஞ்சள் நிற சட்டையும் இளநீல நிற டெனிம் கோட்டும் அதற்கு தோதாய் இருந்த சிகப்பு நிறத்தில் மெல்லிய வேலைப்பாடுகள் இருந்த ஸ்கர்ட்டும் அணிந்திருந்தவள் அவனை கவர்ந்திருந்தாள்.

ரசனையாய் எல்லாம் அவன் பார்க்கவில்லை தான், ஆனாலும் அவனின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை அவள் நிகழ்த்தி இருக்கிறாளே! அதனைத் தொட்டு அவளை பார்த்திருந்தவனின் கண்களைத் தாண்டி மனதையுமே அவள் பிடித்திருந்தாள்.

தப்பே செய்திருந்தாலும் முகத்திற்கு நேராக அவள் கேட்ட 'ஸாரி' அவனை ஒரு கணம் யோசிக்கவும் வைத்திருந்தது.

தன்னுடைய செயலுடன் ஒப்பிட்டவனுக்கு, வெக்கமாய் போய்விட்டது. சாரங்கனின் கேளியுமே இப்போது அவனை குத்தவும் செய்திருந்தது.

ஒன்றரை மணி நேரப் பயணம், டபேலின் விமான நிலைத்தில் முடிவடைந்திருந்தது.

செக்கிங் முடித்து, உடமைகளை எடுத்துக்கொண்டு அவரவர்கள் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

சாரங்கன், நீலாம்பரி தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த ரிசார்ட் ஊழியர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு செல்ல வந்திருக்க, கிளம்ப ஆயத்தமானர்வர்களை திரும்பிப் பார்க்க வைத்தது வாசுதேவ கிருஷ்ணனின் குரல்.

"நீலு பேபி.." என்ற குரலுக்கு நீலம்பரி திரும்பினாரோ இல்லையோ, படக்கென்று திரும்பி பார்த்தார் சாரங்கன்.

'உசாரு டோய்' என்று நினைத்துக் கொண்டே அவர்கள் அருகே வந்து நின்றான், வாசுதேவ கிருஷ்ணன்.

"ஹாய் நீலு பேபீ" என்றான் துள்ளல் குரலில், அந்த பேபீயில் அழுத்தம் கொடுத்து.

சிரித்த முகமாக நின்றிருந்தவனை, சிரிப்பு மறைந்த முகத்துடன் பார்த்து நின்றிருந்தார் சாரங்கன்.

"என்ன ஓல்ட் மேன், பீபி டேப்லெட் மார்னிங் போட்டீங்களா" என்று அவரையும் வாரிவிட, சிங்கம் சிலிப்பிக்கொண்டு வந்தது சண்டைக்கு.

"யார் ஓல்ட் மேன்? நானா.. நானா.." என்று தன் தலையில் இருந்த தொப்பியை பிடித்தபடி வாசுவை நோக்கி முன்னேறியவரை தடுத்த நீலாம்பரிக்குக் கூட வாசுவின் பேச்சு பிடிக்கவில்லை.

"பின்ன இல்லையா? எங்க நீலு பேபிக்கு முன்ன நீங்க ஓல்ட் பீஸ் தான்" - வாசு

"ஹலோ தம்பி, இப்போ என்ன தான் வேணும் உங்களுக்கு?" - நீலாம்பரி

"நீ என்ன அவன் கிட்ட பேசிட்டு" கடுப்புடன் மனைவியை அடக்கினார் சாரங்கன்.

"சாரு.. கொஞ்சம் இரு. என்ன மிஸ்டர். பைலட், என்ன வேணும் உங்களுக்கு?" - அம்ருதா

"என் நீலு பேபி தான்" என்றான் வாசு அசராமல்.

அவன் பதிலால் மற்றவர்கள் தான் அசந்து போயிருந்தனர்.

போட்ட பீபி மாத்திரையும் தன் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்க, சாரங்கனுக்கு படபடவென்று வர ஆரம்பித்திருந்தது.

"யார் தம்பி நீங்க? இதுக்கு முன்ன நான் உங்களப் பார்த்ததுக் கூட இல்லையே?"

"ஹான் ஹான்.. இல்லையே நீலு பேபி. என்னைய அவ்வளவு சீக்கிரமா மறந்துட்டீங்களா என்ன? நியாபகப் படுத்தி பாருங்க?" என்றான் வசீகரிக்கும் புன்னகையுடன்.

"தெரியலையே" என்றவர் அப்போது தான் கணவனை கவனித்தார்.

எழுபத்து நான்கு வயதில் மனைவி மற்றொரு ஆணிடம் பேசுவது கூட அவருக்கு பொறுக்காது, முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

"நியாபகப் படுத்தும் அளவுக்கு நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா" என்ற இளப்பமாக சாரங்கன் கேட்க,

"மதுரா ஹாஸ்பிட்டல் நியாபகம் இருக்கா நீலு பேபி" என்றவனை அதிர்ந்து போய் பார்த்து நின்றிருந்தார் சாரங்கன்.

அமுதம் தொடரும்...



 
Top