எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

குரோதத்தின் குறுக்கே காதல் - கதைத் திரி

NNO7

Moderator
குரோதத்தின் குறுக்கே காதல்

இந்தக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்கரு அனைத்தும் கற்பனையே! இது முற்றிலும் என் சொந்தக் கற்பனையால் மட்டுமே எழுதப்பட்டது. யாருடைய மனதையும் நோகடிக்க எழுதப்படவில்லை. நன்றி.
 

NNO7

Moderator
குரோதத்தின் குறுக்கே காதல்

அத்தியாயம் – 1

“நம்ம குடும்ப மானத்தைக் கெடுக்குறதுக்குன்னே இருக்காளா உன் பொண்ணு. ஊரு உலகத்துல யாருமே பார்க்காத வேலையைத் தான் உன்னோட பொண்ணு பார்க்குறாளாக்கும் ” என்று ரத்னாவை சகட்டுமேனிக்குத் திட்டிக் கொண்டு இருந்தார் அந்த எழுபது வயது மூதாட்டி காயத்திரி.

ரத்னாவோ தன் மாமியாரின் பேச்சில் வழக்கம் போல் கலக்கம் மிகுந்த முகத்துடன் தலையைத் தொங்கப்போட்டு நின்று கொண்டிருந்தார்.

ரத்னாவின் உடைக்கு, சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது, அவர் முகத்தில் இருந்த கலக்கம்.

அந்த பங்களாவில் விளக்குகள் எல்லாம் ஜகஜோதியாய் பிரகாசித்துக் கொண்டு இருந்தது.

பங்களாவின் வாசலிலும் நிலா முற்றத்திலும் மின் அலங்காரங்கள் ஜொலிக்க, வாயிலில் வாழை மரத் தோரணம் கட்டப்பட்டு, வீடு முழுவதும் கொய் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது தான் தேவதை போன்ற, இளம்பெண்ணொருத்தி, வைரத்தால் ஆன அணிமணிகளை அணிந்து, பட்டுச்சேலை சரசரக்க, அந்த இடத்திற்கு வந்தாள்.

“என்னாச்சி பாட்டி?” என்று காயத்திரியிடம் கேட்டபடி, அருகில் நின்று கொண்டிருந்த ரத்னாவை மெத்தனமாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

அப்போது தான் தன் பேத்தி மீனாவைப் பார்த்தவர், அவள் அழகில் நெட்டி முறித்து, “இளவரசி மாதிரி இருக்க மீனுக்குட்டி. இன்னைக்கு விழா முடிஞ்சதும் உனக்கு சுத்தி தான் போடணும். உனக்கு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செய்தது நான் தானே! அதனால் தான் உன்னுடைய உடையும் நகையும் கூட இவ்வளவு அழகா இருக்கு” என்றபடி ஓரப்பார்வையால் ரத்னாவைப் பார்த்துக் கொண்டார்.

அதற்கும் எதுவும் பேசாமல் ரத்னா அமைதியாகவே தான் இருந்தார். தன் கண்முன்னால் இருக்கும் மகளை விட, இன்னும் வீட்டிற்கு வராமல் இருக்கும் தன் இன்னொரு மகளை நினைத்துப் படபடப்பாக இருந்தது ரத்னாவிற்கு.

மீனாவோ, தன் பாட்டியிடம், ரத்னாவைக் கண் காட்டி என்னவென்று கேட்க, அதற்கு முகத்தைச் சுழித்துக் கொண்ட காயத்திரி, “உன் அம்மா, செல்லம் கொடுத்து கெடுத்து வச்சி இருக்காளே! எல்லாம் அவளால் வந்தது” என்றார்.

“அவளுக்கு என்னவாம் பாட்டி” என்றாள் மீனா.

காயத்திரி சொல்வதற்குள் முந்திக்கொண்ட ரத்னா, “அது ஒன்னும் இல்ல மீனா. இன்னைக்கு மணி வேலை பார்க்குற இடத்துல விழா நடக்குது. அதில், அவளுக்கு விருது எல்லாம் கொடுக்குறாங்களாம்....” என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “என்னது விழாவா? இன்னைக்கு எனக்கு முக்கியமான நாள்னு அவளுக்குத் தெரியாதா?” என்று அவரைப் பார்த்துக் கத்தினாள்.

தன் கையைப் பிசைந்தபடி அவளைப் பார்த்த ரத்னா, “அவள் சீக்கிரம் வந்துவிடுவாள் மீனா” என்று அவர் சொல்ல, “விழா ஆரம்பிக்கப்போகுது அவளை இன்னும் காணும். மாப்பிள்ளை விட்டுக்காரங்க வரும் நேரமாகிடுச்சி, அவங்க உன் இன்னொரு பொண்ணைக் கேட்டா என்ன சொல்லுவா?” என்று எரிச்சல் மிகுந்த குரலில் கேட்டார் காயத்திரி.

ரத்னா பதற்றமாக நின்று கொண்டிருக்க, அந்த நேரம் சரியாக மாப்பிள்ளை வீட்டார் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது.

ரத்னாவைப் பார்த்த காயத்திரி, “நீ என்ன இப்படியே பொம்மை மாதிரி நின்னு, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வரவேற்காமல் என் மகனின் பெயரைக் கெடுக்க நினைக்குறியா?” என்று சத்தம் போட, “இதோ... போறேன் அத்த” என்று சொல்லிவிட்டு வேகமாக, அவர்களை வரவேற்க வாயிலுக்கு வந்தார்.

அவரின் கணவர் ரவி வாயிலில் நின்று கொண்டிருந்தவர், முகத்தை சிரித்தமாதிரி வைத்துக் கொண்டு, “மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வரும் பொழுது எங்கப் போய் தொலைஞ்ச?” என்று பல்லைக் கடித்தார்.

அதற்குள் அவர்கள் இவர்களுக்கு அருகே வந்துவிட, மாப்பிள்ளை வீட்டினரை வரவேற்று உபசரித்தனர்.

விழா நாயகனான ஒளிவியன் சக்கரவர்த்தியைக் காணாமல் தவித்த ரவி, “மாப்பிள்ளை வரலையா சம்பந்தி?” என்றார் பணிந்து போன குரலில்.

அதற்கு ஒளிவியன் சக்கரவர்த்தியின் தந்தை ராஜன் சக்கரவர்த்தி பதில் பேசுவதற்குள் முந்திக்கொண்ட, அவனின் தாய் வித்யா, “பாரின் மினிஸ்டர் கூட அவனுக்கு மீட்டிங் இருக்கு” என்று கெத்தாக சொன்னதோடு முடித்துக் கொண்டார்.

காயத்திரியோ, “அதுவும் சரி தான். நம்ம மாப்பிள்ளை ஒன்னும் சாதாரண ஆள் கிடையாதே!” என்று பொத்தம் பொதுவாக சொல்லிக் கொண்டார்.

ஆனால் மாப்பிள்ளை வீட்டினரின் ஒவ்வொரு நடவடிக்கையும், பெண் வீட்டினரை மட்டம் தட்டுவதாகவே இருந்தது.

அதற்குக் காரணமும் இருந்தது. ஏனெனில் இருகுடும்பமும் தொழிலில் பரம எதிரிகள். இருவருக்குமே என்றும் ஆகாது. ஆனால் எதிர் துருவங்கள் தான் இணையும் என்பது போல, இரு குடும்பத்தில் உள்ள இளையவர்களுக்குள் காதல் அரும்பியது. அதுவே இன்று நிச்சயதார்த்தத்தில் வந்து முடிந்து இருக்கிறது.

வேலவன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனமும் சக்கரவர்த்தி கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் அர்கிடெக்ட் நிறுவனமும் இணைகிறதா? என்று தான் தொழில் வட்டாரத்தில் பேச்சாக இருந்தது.

இதனை, இரண்டு நிறுவனத்திற்கும் உள்ள ஷேர் ஹோல்டர்களால் நம்பவே முடியவில்லை. இதனாலையே இருவரதும் பங்குகளும், இந்த ஒரு வாரத்தில் கணிசமாக எகிறி இருந்தது.

வேலவன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் ரவி. அவரது தாயார் காயத்திரி, மனைவி ரத்னா.

ரகு ரத்னா தம்பதியினருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் முதலாவதாக பிறந்தவள் தான் மீனா. அவளுக்குத் தான் சக்ரவர்த்தி குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசோடு திருமணம் நடக்க இருக்கின்றது.

இருவருக்கும் ஒரு ஆண்டு கால காதல். சமீபத்தில் தான் இளம் தொழிலதிபர் விருது வாங்கி, தன் தாத்தா ஆரம்பித்த நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருந்தான் ஒளிவியன்.

இளம் பெண்களைக் கவரும் ஆணழகன் தான் ஒளிவியன். ஆறடியில் உடற்பயிற்சி செய்தேறிய கட்டுமஸ்தான உடலும், திரவிடனுக்கே உரிய நிறமாகவும் இருப்பவன். எப்போதும் சிரிக்காமல் முகத்தைப் பாறை போல் இறுகியபடி வைத்திருக்கும் ஒளிவியனுக்கு காதல் வந்தது என்னமோ அதிசயம் தான்.

ஆனால் மீனாவின் அழகில் ஒளிவியன் மயங்கியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

மீனாவின் மேனியின் நிறம் செந்தாமரை மலரின் செந்நிறத்தை ஒத்து இருந்தது. ஒளிவியனுக்கு ஏற்றவாறு, ஐந்தே முக்கால் அடியில் இருந்தாள். தன் தந்தையோடு சேர்ந்து வேலவன் கன்ஸ்ட்ரக்ஷனைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றாள்.

அவள் ஒரு பெண் தொழிலதிபராக இருந்தாலும், அவள் உடை நடை பாவனை அனைத்தும் அவளை ஒரு மாடல் போலவே காட்டும்.

ஒளிவியனும் மீனாவும் சந்தித்துக் கொண்டது, ஒரு அரசாங்க ஏலத்தில் தான். ஆளுமை தோரணையோடு, அனைவரையும் தன் கண் அசைவிலையே, வேலை ஏவும் ஒளிவியனை பார்த்த முதல் பார்வையிலையே பிடித்து தான் போனது மீனாவுக்கு.

அனைவரிடமும் கடுமையாக நடந்து கொள்ளும் ஒளிவியனோ, மீனாவிடம் மட்டும் சிரித்துப் பேசுவது, அனைவருக்குமே ஆச்சரியத்தை தான் அளித்தது.

இதோ இன்று நிச்சயதார்த்தத்தில் இணையப்போகும் இவர்களது பந்தம், இன்னும் இரண்டு நாட்களில் திருமண பந்தத்தில் இணையப் போகிறது.

“எங்க இருக்கீங்க ஒளிவியன்? இன்னைக்கு நமக்கு நிச்சயதார்த்தம்” என்று கோபத்தோடு மீனா, தன் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தாள்.

“பார்த்துப் பேசு மீனா. சரியான நேரத்துக்கு நான் அங்க இருப்பேன். இதுபோல் எல்லாம் பேசுறது எனக்குப் பிடிக்கல” என்றான் அடிக்குரலில் ஒளிவியன்.

“அச்சோ ஒளிவியன், நான் அந்த அர்த்தத்தில் கேட்கல. விழா ஆரம்பமாகப் போகுது. இன்னும் நீங்க வரலைன்னு ஒரு பதற்றத்தில் பேசிட்டேன். சீக்கிரம் வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு வைத்தவள், தன் நெஞ்சைத் தடவி கொண்டாள்.

அப்போது அவள் அறைக்கு வந்த அவளின் தந்தை ரவி, “என்னமா, மாப்பிள்ளை கிட்ட பேசுனியா?” என்றார்.

“பேசினேன் அப்பா. சீக்கிரம் வந்துடுவேன்னு சொல்லிட்டாரு” என்றாள் சிரித்த முகமாக.

“அதெல்லாம் இருக்கட்டும் மீனா, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு?” என்று முக சுருக்கத்துடன் கேட்டார்.

“ஒன்னும் பிரச்சனை இல்ல அப்பா. ஒளிவியன் நிஜமாவே என் அழகில் மயங்கி தான் போயிட்டார். அதனால், நான் கேட்டதுக்கு எல்லாம் மறுப்பு சொல்லவே இல்ல” என்று சொன்னவள் முகத்தில் தன்னை நினைத்தே கர்வம் வந்தது. அதில் அவள் முகமும் மலர்ந்தது.

ஆனால் அந்த முகமலர்ச்சியானது ரவியின் முகத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை.

‘யாருக்குமே பணியாத ஒளிவியன் இதற்கு எப்படி சம்மதித்தான்’ என்ற எண்ணம் அவர் அகத்தில் உண்டாகி முகம் சுருங்கும்படிச் செய்தது.

தன் தந்தையின் எண்ணத்தைப் படித்தவளாக, “இன்னும் என்ன அப்பா?” என்றவள், “உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரலைன்னா, இன்னைக்கு விழா முடிஞ்சதும் நீங்களே ஒளிவியன் கிட்ட பேச வேண்டியதை எல்லாம் பேசிடுங்க அப்பா” என்றாள்.

“உன் மேல எனக்கு சந்தேகமெல்லாம் ஒன்னும் இல்ல மீனா. மாப்பிள்ளை நமக்காக செய்வார் தான். ஆனா அவர் குடும்பத்தில் உள்ளவங்க என்ன சொல்லுவாங்கன்னு தான்...” என்று சொல்லும் போதே, “ம்ச், அப்பா, அவர் எப்பவோ நான் சொல்றதை எல்லாம் கேட்கும் கைப்பாவையா மாறிட்டாரு. கல்யாணமானதும், நான் சக்கரவர்த்தி நிறுவனத்துக்குள் நுழைஞ்சிடுவேன். பிறகு பாருங்க நம்ம வேலவன் கன்ஸ்ட்ரக்ஷனும் நல்ல முன்னேற்றம் அடையும்” என்றாள் கண்கள் ஜொலிக்க.

அப்போது அங்கே வந்த அவளின் தம்பி வீர், “அப்பா, அம்மா உங்களை உடனே கீழே வர சொன்னாங்க” என்றவன் தன் அக்காவைப் பார்த்து, “அழகா இருக்க அக்கா” என்றான்.

அதற்கு சிரித்துக் கொண்டே அவனது கன்னத்தைத் தடவியவள், “கல்யாணத்துக்குப் பிறகு உன்னைப் பிரிஞ்சி போறதை நினைச்சா தான், எனக்குக் கஷ்டமா இருக்குது வீர்” என்றாள் கலங்கிய குரலில்.

இருவரது ஒற்றுமையையும் பார்த்து மனதால் குளிர்ந்த ரவி, “உன் அக்கா உனக்காக நிறைய பண்றா வீர். அவள் விட்டுட்டுப் போற நிறுவனத்தின் பொறுப்பை எல்லாம் இனி நீ தான் கவனமா பார்த்துக்கணும்” என்று சொல்ல, தன் தலையை ஆட்டிக்கொண்டான் வீர்.

“சரி, அவள் வந்தாளா இல்லையா?” என்று இப்போது முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு, வீரிடம் கேட்டாள் மீனா.

“யாரு?” என்று அவன் ஒற்றை வார்த்தையில் கேட்க, “அதான் உன்னுடைய தங்கச்சி... எங்கையோ போயிட்டான்னு சொல்லி, பாட்டி அம்மாவை திட்டிக்கிட்டு இருந்தாங்க” என்றாள்.

அதைக் கேட்ட ரவியோ, கோபத்துடன், “என்ன சொல்ற? இந்த நேரத்துல கூட என் மானத்தை வாங்குறதுக்குன்னே பிறந்து வந்துருக்காளா அவள்” என்றார் எரிச்சலுடன்.

தன் நெற்றியை தடவிய வீரோ, “நான் அவளைக் கூட்டிட்டு வரவா அப்பா” என்றான்.

“வேண்டாம் வீர். இதுவும் நல்லதுக்குத் தான். இங்க இருந்தா எந்த நேரம் என்ன பிரச்சனை பண்ணுவான்னு தெரியாது. அந்தக் கழுத இல்லாமலையே விழா நடக்கட்டும்” என்று சொன்னதோடு முடித்துக் கொண்டார்.

இங்கே இவர்களது கோபத்திற்கு ஆளானவளோ, அங்கே பப்பில் கையில் பழரசக் கோப்பையுடன், தன் தோழிகளுடன் ஆடிக் கொண்டு இருந்தாள்.

தோழிகளுடன் இருக்கும் வரை மட்டுமே, அவள் இதழில் எப்போதும் புன்னகை குடி கொண்டு இருக்கும். அவள் வீட்டிற்கு சென்றுவிட்டால், அனைத்தும் துடைத்து வைத்ததைப் போல் காணாமல் சென்றுவிடும்.

ஆடமட்டும் ஆடிவிட்டு, அங்கே இருந்த இருக்கையில் களைத்துப்போய் அமர்ந்தவளைச் சுற்றி அமர்ந்த அவளின் தோழிகளில் ஒருத்தி, “இன்னைக்கு நம்ம மணி பெஸ்ட் ப்ரோக்ராமர் அவார்ட் வாங்குனதுனால, நம்ம எல்லாருக்கும் ட்ரீட் கொடுத்து இருக்காள். இனி வரும் காலங்களிலும் அவள் இது போல் பல விருதுகள் வாங்கி, நமக்கு ட்ரீட் வைக்கணும்னு, எல்லாரும் விஷ் பண்ணுங்க” என்று சொல்லி கத்த, அனைவரும் அவளைப் பாராட்டும் விதமாகக் கத்தினர்.

அவள் தான் மணிச்சிகை. மணிச்சிகை என்பது சங்ககாலப் பூவின் பெயர். இந்தப் பெயரைத் தேடி தேடி வைத்தது, அவளின் அன்னை ரத்னா தான்.

பார்த்ததும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் அழகி எல்லாம் கிடையாது. ஆனால் அவள் பேசுவதற்கு முன்னால் அவளது கண்கள் அழகாக பேசும்.

ஆம் தாமரை இதழ்போல் வடிவம் அமைந்த அவளுடைய கண் இமைகளுக்கு உள்ளே, செண்பகப்பூவில் மொய்க்கும் அழகிய கருவண்டுகளை ஒத்து இருந்தது கருவிழிகள்.

மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறத்தில் ஒல்லியான உடல்வாகில் இருப்பவளின் அழகோ, காவியங்களில் பேசப்படும், திராவிடப் பெண்களின் அழகை ஒத்து இருந்தது.

அப்போது மணிச்சிகையின் அருகில் அமர்ந்திருந்த அவளின் இன்னொரு தோழி, “உன் அக்காவுக்கு கல்யாணமாமே சொல்லவே இல்லை நீ... எனக்கே இப்ப இன்ஸ்டாவில் பார்த்து தான் தெரிஞ்சது” என்றாள் பொய்யாக கோவித்தபடி.

அதற்கு மெல்லியதாக சிரித்துக் கொண்ட மணிச்சிகை, “நானே அங்க போகக்கூடாதுன்னு தான் இங்க இருக்கேன். இதுல உங்களை வேற கூப்பிடனுமாக்கும்” என்றாள் தன் உதட்டை அழகாக சுழித்தபடி.

அதற்கு இன்னொரு தோழியோ, “ஏன் மணி? உன் அக்காவுக்கு கணவர் ஆகப்போறவர் ஒளிவியன் சக்கரவர்த்தி என்பதாலா?” என்று கேட்க, அதுவரை சிரித்துக் கொண்டிருந்த மணிச்சிகையின் கண்கள் உஷ்ணமானது.

“ஒளிவியன்... இந்த உலகத்தில் நான் வெறுக்கும் ஒரே பெயர்” என்றாள் மணிச்சிகை.



(ஹாய் டியர்ஸ்! குரோதத்தின் குறுக்கே காதல், என்ற கதை மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கதை உங்களுக்குப் பிடித்து இருந்தால், மறக்காமல் லைக்ஸ் மற்றும் கமென்ட் செய்யுங்கள்)
 

NNO7

Moderator
அத்தியாயம் – 2

அந்த பௌர்ணமி இரவில், தன் ஸ்கூட்டி பெப்பை சத்தம் வராமல் நிறுத்திவிட்டு, வீட்டின் உள்ளே பூனை போல் நடந்து சென்ற மணிச்சிகை முன்பு வந்து நின்றார், அவளின் தாய் ரத்னா.

அவரைக் கண்டதும், தன் பயந்த முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்ட மணிச்சிகை, “நீங்க இன்னும் தூங்கப் போகலையா அம்மா” என்றாள்.

தன் கையை கட்டிக் கொண்டு அவளைப் பார்த்து முறைத்தவர், “நான் தூங்குறது இருக்கட்டும்... இன்னைக்கு நீ என்ன வேலை பண்ணி வச்சிருக்கன்னு உனக்கு தெரியுதா இல்லையா?” என்றார் கண்டிப்பான குரலில்.

“நான் சொன்னேன் தானேம்மா, இன்னைக்கு எங்க நிறுவனத்துல எனக்கு அவார்ட் கொடுத்தாங்க” என்று சொல்லிவிட்டு, செல்லப்போனவளின் முழங்கையைப் பிடித்து இழுத்தவர், “சரி கொடுத்தாங்க... ஆனா வீட்டுக்கு வருவதற்கு இவ்வளவு நேரமா?” என்றார்.

“என் பிரண்ட்ஸ் எல்லாம் பார்டி கேட்டாங்க... அவங்களைப் பார்த்துட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமாகிடுச்சி அம்மா” என்றாள் சலித்துக் கொண்டபடி.

அதற்கு அவளை உறுத்து விழித்தவர், “என்ன பேசுற மணி, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம. இன்னைக்கு நடந்தது உன் ஒரே அக்காவோட நிச்சயதார்த்தம். நீ இங்க அவளுடன் இல்லாததுனால அவள் எவ்வளவு வேதனைப் பட்டாள்னு தெரியுமா?” என்றார்.

அதற்கு மெல்லியதாக சிரித்துக் கொண்ட மணிச்சிகைக்கு நேற்று இரவு தன் அக்கா மீனா தன்னிடம் சொன்ன வார்த்தைகள் தான் நியாபகத்திற்கு வந்தது.

“நாளைக்கு நடக்கப்போற என்னுடைய என்கேஜ்மெண்ட்க்கு தயவு செஞ்சி நீ வந்துடாத” என்று மணியிடம் எரிச்சலாக சொல்லிக் கொண்டு இருந்தாள் மீனா.

அதற்கு கொஞ்சமும் வருத்தம் கொள்ளாமல், “ஏன் நான் வந்தா, உன் வருங்கால கணவர் மிஸ்டர் ஒளிவியன் சக்கரவர்த்திக்குப் பிடிக்காதா?” என்றாள் ஏளனக் குரலில்.

“ஏய்! அவர் பெயரைக் கூட சொல்றதுக்கு உனக்கு தகுதி கிடையாது. எது பேசுறதா இருந்தாலும் பார்த்துப் பேசு” என்றாள் எரிச்சல் மிகுந்த குரலில்.

“ம்ச்... சும்மா சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காத. அப்படி அவரை நான் என்ன பண்ணிட்டேன்? அவரைப் பத்தின உண்மையைத் தானே சொன்னேன். அது அவருக்குப் பிடிக்கலைன்னா நான் என்ன செய்வேன்?” என்றாள் மணி.

“இங்கப்பாரு மணி, நீ என்னுடைய ஒரே தங்கச்சி நிச்சயம் எனக்கு உன் மேல பாசம் இருக்குது. ஆனா எனக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது, நீ அங்க வர்றது நல்லது இல்லைன்னு என் மனசுக்குப் படுது. நீ புரிஞ்சி நடந்துப்பன்னு நான் நம்புறேன்” என்று மணியிடம் இறங்கி வந்தாள் மீனா.

அதற்கு வெற்று சிரிப்பை சிந்திய மணி, “உன் விருப்பம் அது தான்னா நான் அதுக்கு சம்மதிக்குறேன் அக்கா. ஆனா அம்மா...” என்று அவள் சொல்லும் போதே, இடையிட்ட மீனா, “அம்மாவை நான் சமாளிச்சிக்குறேன்” என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டாள். ஆனால் மீனா செய்ததோ வேறு.

அதனை எல்லாம் நினைத்துப் பார்த்த மணி, “அக்கா உங்கக்கிட்ட எதுவுமே சொல்லலையா?” என்று கேட்டாள் ரத்னாவிடம்.

“அதை ஏன் கேட்குற? நீ வீட்ல இல்லைனதும் அவள் முகம் ரொம்பவே சோர்ந்து போச்சு. என்கிட்ட வேற மணி எப்ப வருவாள் அம்மான்னு கேட்டுக்கிட்டே இருந்தாள். உன் அப்பா வேற கோபத்தில் இருந்தாரு உன் மேல” என்றதும் விரக்தியாக சிரித்துக் கொண்டவள், “சரிம்மா நீங்க தூங்கப் போங்க... எனக்கும் தூக்கம் வருது” என்றாள் கொட்டாவி விட்டபடி.

அப்போது தான் அந்த இடத்திற்கு பிரசன்னமான மீனா, “இது தான் நீ வர்ற நேரமா மணி? உன்னால ஒளிவியன் வீட்ல, நம்ம குடும்பத்தைப் பத்தி எப்படி பேசுனாங்கன்னு தெரியுமா? அதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது? உனக்கு உன்னுடைய சந்தோசம் தானே முக்கியம்” என்று பேசிக்கொண்டே சென்றாள் மீனா.

தனிமையில் ஒரு பேச்சு, இப்போது ஒரே பேச்சு என்று ரெட்டைப் பேச்சு பேசும் மீனாவைக் கண்டு எல்லாம் மணி அதிரவில்லை. திடீரென்று மீனா இது போல் பேசினால் தானே ஆச்சரியப்படுவதற்கு. இது இவர்கள் சிறுவயதாக இருக்கும் போதே நடக்கும் ஒன்று. அதனால் எதுவும், மறுப்பு மொழி பேசாமல் இருந்து கொண்டாள் மணி.

அவள் தன்னை நிரூபிக்க நினைத்தாலும், அதற்கு மீனா விடப்போவது இல்லை. பின் எதற்கு என்ற எண்ணம் மணிக்கு.

மணி பேசாமல் நிற்பதைப் பார்த்த ரத்னா, “அக்கா பேசுறதுக்கு பதில் பேசு மணி. எதுவும் பேசாமல் அப்படியே நிற்குறது மரியாதை கிடையாது” என்று கண்டித்தார்.

அதற்கு எகத்தாளமாக மணியைப் பார்த்த மீனா, “நம்ம குடும்ப பெயரை கெடுக்குறதே நீ தான் மணி. என்னைப் பாரு, நம்ம நிறுவனத்தையே நடத்திக்கிட்டு இருக்கேன். எனக்குப் பிறகு வந்த வீரும், அவ்வளவு திறமையா எல்லாத்தையும் செய்யுறான். ஆனா நீ என்ன பண்ற? காலேஜ்ல எல்லாத்திலையும் அரியர்ஸ் வாங்கிட்டு, ஒரு லோக்கல் கம்பனியில, லோ கிளாஸ் ஆளுங்க கூட வேலை பார்த்துக்கிட்டு இருக்க” என்றாள்.

அதுவரை தன்னைப் பற்றிப் பேசும் போது வராத கோபம், இப்போது தான் வேலை பார்க்கும் நிறுவனத்தையும், அங்கே வேலை செய்யும் தன் நண்பர்களைப் பற்றியும் மீனா தவறாக பேசியதால், மணிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“என்னது நீயும் அண்ணனும் பொறுப்பா நிறுவனத்தைப் பார்த்துக்குறீங்களா? எந்த நிறுவனத்தை? நம்ம தாத்தா வேலவன் உருவாக்கிட்டுப் போனாரே அதையா? அதை அப்பா பாதி அழிச்சாருன்னா, நீயும் வீரும் சேர்ந்து இன்னொரு பாதியை அழிக்குறீங்க...” என்று அவள் நக்கலாக சொல்லும் போதே, அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் ரத்னா.

மீனாவோ மனதிற்குள் குரூரமாக சிரித்துக் கொண்டு வெளியே பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டாள்.

ரத்னா கை நீட்டி தன்னை அடித்ததும், எதுவும் பேசாமல் மீனாவைப் பார்த்துவிட்டு தன் அறையை நோக்கி வேகமாக ஓடி சென்றாள் மணி.

“என்னம்மா, இப்படி பண்ணிட்டீங்க. இப்பப் பாருங்க, அவள் அழறாள். நான் அவளைப் பார்க்கப் போறேன்” என்று சொன்ன மீனாவை தடுத்தவர், “வேண்டாம் மீனா. இப்படி செஞ்சா தான், அவளும் ஒழுங்கா பேசுவாள்” என்று கடுமையாக பேசியவர், இப்போது முகத்தை இலக்கமாக வைத்துக் கொண்டு, “நீ இன்னும் தூங்கலையா மீனா” என்று கேட்டார்.

“இல்லம்மா, மணி எப்ப வீட்டுக்கு வருவான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்” என்றாள் அவளின் மீது மிகவும் அக்கறை இருப்பது போல் காட்டியபடி.

“இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு, நீ தேவை இல்லாத விஷயத்துக்கு எல்லாம் டென்ஷன் ஆகாத மீனா. மணியை நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை விடிந்ததும், மணியின் முன்னால் சென்று நின்றவர், “அம்மா மேல கோபம் இல்லை தானேடா...” என்றார் கொஞ்சிய குரலில்.

தன் அன்னையின் அப்பாவி முகத்தைப் பார்த்த மணி, “இல்லைம்மா” என்று சொல்லி அவரை அணைத்துக் கொண்டாள்.

தன் அன்னையைப் பார்க்கும் நேரம் எல்லாம், அவள் கண்ணில் ஆயிரம் கவலைகள் வந்துவிடும். ஆனால் அதனை எல்லாம் அவர் முன்னால் அவள் காட்டமாட்டாள்.

அணைப்பில் இருந்து விடுபட்டவள், “இனி நீங்க கோபப்படுற மந்திரி நான் நடந்துக்கமாட்டேன் அம்மா” என்றாள் அவரது தோளில் சாய்ந்து கொண்டபடி.

அதனைக் கேட்டு மகிழ்ந்த ரத்னா, “உன் அப்பா ஏதாவது பேசுனா, நேத்து உன் அக்காக்கிட்ட பேசுன மாதிரி பதிலுக்குப் பதில் பேசாமல் இரு மணி” என்று கேட்டுக்கொண்டார்.

“சரி” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டாள் மணி.

“நேத்து உன் அக்காவின் வருங்கால வீட்டுக்காரர் உன்னை ரொம்பவே கேட்டார் தெரியுமா!” என்று அவர் சொல்ல, “யாரு? ஒளிவியனா?” என்றாள் முகத்தை சுழித்துக்கொண்டு.

“ம்ச்.. இதென்ன பெயரை சொல்ற பழக்கம். அழகா மாமான்னு சொல்லு மணி” என்று கண்டித்தார்.

“சரி அது இருக்கட்டும் என்னை எதுக்காக கேட்டார்?” என்றாள்.

“நீ தான் அவர் மேல கோபத்தில் இருக்க மணி. ஆனா அவர் அப்படி இல்ல. அவர் ரொம்பவே நல்லவர் தெரியுமா” என்று அவர் சொல்லிக் கொண்டே போக, மணியின் காதில் ரத்தம் வராதது ஒன்று மட்டும் தான் குறை.

பின் ரத்னா வெளியே சென்றதும், தன் தலையைப் பிடித்துக் கொண்டவள், “இந்த ஒளிவியன் நல்லாவே நடிக்குறார். இது ஏன் என் வீட்ல இருக்குற யாருக்குமே தெரியல” என்று வாய்விட்டுப் பேச, அப்போது அவளது அலைபேசி சத்தமிட்டது.

தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்பை எடுத்து யோசனையோடு தன் காதில் வைத்தாள்.

“நேத்து எதுக்கு நீ வரல? என்னைப் பார்த்து பயந்திட்டியா?” என்று கம்பீரமாகவும், ஆளுமையுடனும் இருந்தது அந்தக் குரல்.

அதைக் கேட்டவுடனே பேசுவது யாரென்று அறிந்து கொண்ட மணி, “எனக்கு எதுக்காக போன் பண்ணி இருக்கீங்க?” என்றாள் ரத்தம் சூடாக.

“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே!” என்று வேண்டும் என்றே அவளுடன் வம்பிழுத்தான் அந்தப்பக்கம் பேசியவன்.

“என் அக்காவுக்கு கணவர் ஆகப்போறீங்கங்குற ஒரே காரணத்துக்காகத் தான் நான் பொறுமையா உங்கக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் மிஸ்டர் ஒளிவியன்” என்றாள் தன் பல்லைக் கடித்தபடி.

தொழிலில் சிறந்து நிற்கும் முதிர்ச்சியோடு, வெளியுலக அனுபவங்களும், அக உலக அனுபவங்களும் சேர்ந்து தனித்து இயங்கும் ஒளிவியன் சக்ரவர்த்தி, காலையிலையே, மணிச்சிகைக்கு அலைபேசியில் அழைத்து, வம்பு வளர்க்கக் காரணமும் இருந்தது.

தன்னைக் கண்டு மீனாவின் குடும்பத்தில் அனைவரும் பணிந்து போக, அதற்கு எல்லாம் சிறிதும் அஞ்சாமல் தன்னையே எதிர்த்து நிற்கும் மணியை சீண்டிப் பார்க்கத் தான் தோன்றியது ஒளிவியனுக்கு.

“என்னைப் பத்தி என்னென்னவோ சொன்னியாம் மீனா கிட்ட... அவள் எல்லாத்தையும் என் கிட்ட சொல்லிட்டா” என்றான் திமிரான குரலில்.

“ஆமாம் சொன்னேன். அதெல்லாம் உண்மை தானே! முகமூடிக்குப் பின்னாடி இருக்கும் உங்க கோரமான முகமும், இதயமும் எனக்கு நல்லாவே தெரியும்” என்றாள் ஆங்காரமான குரலில்.

அதற்கு தன் உதட்டை வளைத்து சிரித்தவன், “இதை நீ அவளிடம் சொல்றதுக்கு முன்னாடியே, நான் இதை மீனாக்கிட்ட எப்போதோ சொல்லிட்டேன். இன்பாக்ட் இதுக்கு முதல் ஆளா ஆதரவு கொடுத்தவளும் உன் அக்கா தான்” என்று சொல்லி வைத்தான்.

அதனைக் கேட்ட மணிக்கு நம்பவே முடியவில்லை.

வேகமாக தன் அறையின் அருகே இருக்கும் மீனாவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றவள், கண்ணாடி முன்னால் அமர்ந்து தன் உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டு இருந்த மீனாவைப் பார்த்து, “உனக்கு இதுநாள் வரைக்கும் என்னை மட்டும் தான் பிடிக்காதுன்னு நினைச்சேன். ஆனா இப்ப தான் எனக்குத் தெரியுது, உனக்கு இதயமே இல்லைன்னு” என்றாள் வெறுப்பான குரலில்.

தன் முன்னே இருந்த கண்ணாடியின் வழியாக மணியைப் பார்த்த மீனா, “என்னடி பேச்சு எல்லாம் ஒரு மாதிரியா இருக்குது. அப்பாக்கிட்ட பெல்ட்டால் வாங்கிய அடியெல்லாம் மறந்துட்ட போல” என்றாள் மீனா.

அதற்குப் பதில் பேசாமல், “ஒளிவியனைப் பத்தி ஏற்கனவே உனக்குத் தெரியுமாமே!” என்று கேட்டாள் மணி.

“ஆமாம் தெரியும்” என்றாள் தன் தோள்களைக் குலுக்கியபடி, “தெரிஞ்சுமா நீ இப்படி இருக்க?” என்றாள் நம்ப மாட்டாதவளாக.

“ஆமாம். அவர் தான் என்னுடைய உயிர். அப்படியும் நீ சொன்ன மாதிரியே இருந்தாலும் எனக்கு எந்த விதக்கவலையும் இல்ல. இப்ப வெளியே போ” என்று கத்தினாள் மீனா.

‘இதற்கு மேல் மீனாவிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை’ என்ற நினைப்போடு வெளியே வந்தாள் மணி.

ஒருநாள், பட்டப்பகலில் தன் துப்பாக்கியை வைத்து, ஒருத்தரை ஒளிவியன் சுட்டுவிட்டதை மணிச்சிகை பார்த்துவிட்டாள்.

அதனால் தான், தன் காதலன் என்று அவனை மீனா அறிமுகம் செய்யும் பொழுது, தன் எதிர்ப்பைத் தன் குடும்பத்தின் முன்னால் காட்டினாள். மணிச்சிகைக்கு அவள் வீட்டிலையே மரியாதை இல்லை எனும்போது, அவள் பேச்சை எப்படி அங்கிருப்பவர்கள் மதிப்பர்?

அதனால் தான் அவளது தந்தை ரவி கூட அவள் விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது என்று அவளை விட்டுவிட்டார்.

தன் அறைக்குள் சோகமாக உள்ளே சென்ற மணிச்சிகை, அங்கே நடுநயமாக கால் மேல் கால் போட்டு தன் கட்டிலில் அமர்ந்திருந்த ஒளிவியனைப் பார்த்து அதிர்ந்துவிட்டாள்.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 3

தன் இதயம் படபடவேன்று துடித்துக் கொண்டு இருக்க, கோபத்தோடு ஒளிவியனைப் பார்த்து முறைத்த மணிச்சிகை, “நீங்க எப்படி உள்ள வந்தீங்க?” என்றாள் தன் நெஞ்சில் கைவைத்தபடி.

அதற்கு சாவகாசமாக கட்டிலில் இருந்து எழுந்து நின்றவன், “கதவு வழியாத் தான் வந்தேன்” என்றான் விசில் அடித்துக் கொண்டே, அவளை நெருங்கி வந்தபடி.

அவள் எதுவும் பேசாமல் அவனை முறைத்துக் கொண்டு இருக்க, “என்னாச்சி என்னைப் பார்த்து பயந்துட்டியா? கவலைப் படாத உன்னைக் கொலை எல்லாம் செய்ய மாட்டேன்” என்றான் தன் ஒரு உதட்டை மட்டும் வளைத்து சிரித்தபடி.

இப்போது நன்றாக மூச்சை இழுத்து விட்ட மணிச்சிகை, “நீங்க செய்த தவறுக்கு ஐ விட்னஸ் நான் தான் மிஸ்டர் ஒளிவியன். உங்களுக்குப் பயந்துக்கிட்டு எல்லாம் நான் அமைதியா இருக்கல” என்றாள் முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டு.

“அந்த இடத்தில் நீ மட்டும் ஐ விட்னஸ் கிடையாதே! உன்னை மாதிரி பலபேர் அங்க இருந்தாங்க. எல்லாரையும் விட நீ தைரியமான ஆள் தானே! நீ வேற எந்த விஷயத்துக்கு அமைதியா இருக்க? நான் தான் அதை செய்தேன்னு போலீஸ்கிட்ட போய் சொல்ல வேண்டியது தானே” என்றான் தன் சட்டையின் கையை மடித்துவிட்டபடி.

அதற்கு மணிச்சிகையிடம் பதில் இல்லை. ஒளிவியன் பட்டப்பகலில் ஒருவனைத் துப்பாக்கியால் சுட்டது, எங்கும் பதிவாகவில்லை. தொழிலில் மட்டும் அல்ல, பல அரசியல்வாதிகளுடன் பழக்கமும் அவனுக்கு இருந்தது. ஒளிவியனை எதிர்த்துக் குரல் கொடுக்கவே மற்றவர்கள் அஞ்சும் போது, அவனுக்கு எதிராக சாட்சியா சொல்லப் போகின்றனர்?

தொடர்ந்து பேசிய ஒளிவியன், அவளது முகத்திற்கு நேராக குனிந்து, “எனக்கு எதிரா யார் வந்தாலும், நான் அவங்களை சும்மா விட்டதே கிடையாது. அது தொழிலா இருந்தாலும் சரி, குடும்பமா இருந்தாலும் சரி. மீனாவின் தங்கை என்பதற்காக எல்லாம், நான் உன்னை சும்மா விடுவேன்னு நினைக்காத” என்ற அவனது வார்த்தைகளைக் கேட்டு, மணியின் கன்னம் சூடானது.

அவள் மனதோ தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் யோசிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே தன் சொந்த வீட்டிலையே, தான் அகதி போல் இருக்க, இதில் புதியதாக இன்னொரு பிரச்சனையா என்று நினைத்துக் கவலை கொண்டவள் ஒரு முடிவை எடுத்தவளாக,

தன்னை மிகவும் நெருங்கி நின்ற ஒளிவியனிடம் இருந்து இரண்டு அடி, தன் பின்பக்கம் நோக்கி சென்று, “இனி உங்க விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் ஒளிவியன்” என்றாள் தன் தலையைக் குனிந்தபடி.

ஒரு எட்டில் அவளை நெருங்கியவன், அவளது நாடியைப் பிடித்து, முகத்தை நிமிர்த்தி, “எனக்கு இருக்குற ஆயிரம் வோர்க் டென்ஷன்ல நீயும் ஆயிரத்தி ஒன்னாவது டென்ஷனா ஆகமாட்டன்னு நம்புறேன். உன் அக்காவுக்காக தான் உன்னுடைய தொல்லையை எல்லாம், இது நாள் வரைக்கும் பொறுத்துக்கிட்டு இருந்தேன்” என்று சொல்லியபடி அவள் நாடியில் இருந்து எடுத்தத் தன் கையை, தன் காற்சட்டைப் பையில் இருந்து எடுத்தக் கைக்குட்டையால் துடைத்தான்.

அதைப் பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்ட மணிச்சிகை, ‘ஏற்கனவே நான் என் அக்காவுக்கு வேண்டாதவள் மட்டும் தானே! இதுல அவளுக்குக் கணவனா வரப்போறவன் எப்படி இருந்தா எனக்கு என்ன?’ என்று நினைத்துக் கொண்டாள்.

அவளை அசட்டாக பார்த்தபடியே வெளியே சென்றான் ஒளிவியன்.

அவன் சென்றதும், குளித்துக் கிளம்பி கீழே வந்தவள், வரவேற்பு அறையில் தன் பாட்டி காயத்திரி வேலை ஆட்களை வேலை ஏவிக் கொண்டு இருப்பதைப் பார்த்து, சத்தம் வராமல் அவர் கண்ணில் படாமல் வீட்டில் இருந்து வெளியேறினாள்.

இந்த வீட்டில் மற்றவர்களுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்றாலும், அவள் பெருசாக எதையும் கண்டுகொண்டது இல்லை. தன் தந்தை ரவியிடம் எவ்வளவு பெரிய திட்டுகளையும், அடிகளையும் வாங்கினாலும், அதற்கு எல்லாம் பயப்பட மாட்டாள் மணிச்சிகை.

ஆனால் இந்த வீட்டில் அவள் பார்த்துப் பயப்படும் ஒரு ஆள் என்றால் அது காயத்திரி பாட்டி தான். அவர் மணியைப் பார்த்து வாயைத் திறந்தாலே, தேள் போல் கொட்டும் வார்த்தைகளை மட்டும் தான் சிந்துவார்.

நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நிகழ்வாக, மெகந்தி, சங்கீத் என்று அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து கொண்டே இருந்தது. முன்பு போல் அல்லாமல், தன் அன்னை ரத்னாவிற்காக, அனைத்திலும் கலந்து கொண்டாள் மணிச்சிகை.

ஆனால் தன் அக்காவின் விருப்பப்படி, விழாவில் ஒரு ஓரமாக இருந்து கொண்டாள்.

எல்லாம் சிறப்பாக தான் நடைபெற்றது மீனாவும் ஒளிவியனும் அவ்வளவு சந்தோஷத்தில் இருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திருமணத்தன்று அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

அரண்மனை போன்று தன் தந்தை வேலவன் கட்டிய வீட்டிலையே தான், தன் மகள் மீனாவுக்கு திருமணம் செய்ய தடபுடலாக ஏற்பாட்டை செய்திருந்தார் ரவி.

திருமணத்தன்று காலையில் தோட்டத்தில் தான் நின்று, காலை சூரியனை ரசித்துக் கொண்டு இருந்தாள் மீனா.

எப்போதும் காலையில் தோட்டத்திற்கு வந்து அங்கிருக்கும் செடி கொடிகளுடன் உரையாடும் மணிச்சிகையோ, இன்று வழக்கத்திற்கு மாறாக மீனா அங்கு நிற்பதைப் பார்த்துத் திரும்பி செல்லப்போனாள்.

அதற்குள் அவளைப் பார்த்துவிட்ட மீனாவோ எப்போதும் இல்லாத வகையில், “எங்கப்போற மணி... இங்க வா” என்று அவளை அன்போடு அழைத்தாள்.

மீனாவின் பேச்சு மற்றும் செயலில் வித்தியாசம் தெரிய, ஒரு வித புருவ சுழிப்போடு அவள் அருகில் வந்து நின்றாள் மணி.

“இந்த பூவுடன் பேசத் தானே வந்த, பின்ன எதுக்காக திரும்பிப் போற?” என்று சிரித்தபடி, அங்கே செடியில் இருந்த நந்தியாவட்டைப் பூவைப் பிடித்துக் கொண்டபடி கேட்டாள் மீனா.

பக்கத்தில் தன் தந்தையும், தாயும் இல்லாமல் மீனா இப்படி எல்லாம் பேசமாட்டாளே என்று நினைத்த மணி, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. இன்னும் சில மணி நேரத்தில் உனக்குக் கல்யாணம் நடக்கப்போகுது. ஆனா நீ ஏன் இங்க நின்னுக்கிட்டு இருக்க?” என்று கேட்டாள்.

“பியூட்டிசன் வர இன்னும் நேரம் இருக்குது மணி. நம்ம ஸ்டேட்ல பெஸ்ட் பியூட்டிசன் இல்லைன்னு சொல்லி, ஒளிவியன் தான் மும்பையில் இருந்து வரவழைச்சார் தெரியுமா” என்றாள் கனவில் மிதந்தபடி.

அதற்குள் தன் அலுவலகத்தில் இருந்து மணிச்சிகைக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசிக்கொண்டே உள்ளே சென்றவள், திருமணதிற்கு தயாராகி வெளியே வரும் போது, தன் வீடே தலைகீழாக திருப்பிக் கிடப்பதைத் தான் பார்த்தாள்.

அங்கே ஒளிவியன் வீட்டினர் பேசிக்கொண்டிருந்த பேச்சு அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால், அதற்கு தன் தந்தை ரவி பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுக்கு இதயவலியைக் கொடுத்தது.

“என் பையனை ஒரு வருஷமா லவ் பண்ணி தானே கல்யாணம் வரைக்கும் வந்தாள் உங்க பொண்ணு. இப்ப அவளுக்கு என்ன ஆச்சு? எதுக்காக கல்யாணத்தன்னைக்கு ஓடிப்போனாள்?” என்று ஆக்ரோஷத்தோடு கத்திக் கொண்டிருந்தார் வித்யா.

பதறிய ரவியோ, கலங்கிய குரலில், “என் பொண்ணு எதுக்காக இப்படி ஒரு காரியத்தை செய்தான்னு, எனக்கு சத்தியமா புரியல சம்பந்திம்மா. அவள் இது போல் எல்லாம் செய்யும் பொண்ணும் கிடையாது” என்று சொன்னவருக்குக் குரல் கரகரத்தது.

“உங்க பொண்ணு ஆசைப்பட்ட மாதிரியே தான், கல்யாணத்துக்குப் பின்னாடி, அவளோட வாழ்க்கை இருக்கும்னு என் பையன் வாக்கும் கொடுத்து இருக்கான். அப்படி இருந்தும் உங்கப்பொண்ணு ஓடி போயிருக்கான்னா என்ன அர்த்தம்? என்ன இருந்தாலும், நாங்க உங்களுக்கு தொழிலில் எதிரி தானே, எங்களைப் பழி வாங்க நினைச்சிட்டாளா?. என் பையன் என்ன சாதாரண ஆளா? இனி அவனால் எப்படி வெளிய தலைகாட்ட முடியும்?” என்று வார்த்தைகளால் வெடித்து சிதறினார் வித்யா.

நடப்பதை எல்லாம் பாறை போல் இறுகிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஒளிவியன் எதுவும் பேசவில்லை.

அவனிடம் வந்த ரவி, “உங்க வலியும் வேதனையும் எனக்கு நல்லாவே புரியுது மாப்ள. என் பொண்ணு மீனா எதுக்காக இப்படி ஒரு காரியத்தை செய்து, கடிதம் எழுதி வச்சிட்டுப்போனான்னு எனக்குத் தெரியல மாப்ள. அதுக்காக உங்க கோபத்தை என் மேல காட்டாதீங்க. தயவு செஞ்சி எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேத்துங்க மாப்ள” என்று அவர் சொல்லி முடிக்க, விஷம் மிகுந்த அணு ஆயுதம் போல் வெடித்து சிதறினான் ஒளிவியன்.

“யோவ்... நீயெல்லாம் பெரிய மனுஷனா? இப்படி எல்லாம் பேசுறதுக்கு உனக்கே அசிங்கமா தெரியல” என்றான் தன் மரியாதையைக் கைவிட்டவனாக.

ஒளிவியன் இதனைப் பேசும் போது, ரவியின் குடும்பம் மிகவும் அவமானத்தில் நின்று கொண்டிருந்தனர்.

மீண்டும் ரவி ஒளிவியனிடம், தன் நிறுவனத்தின் நலன் கருதியே பேச, அவனுக்கோ வெறுப்பாக இருந்தது.

ரவி இதனை சொல்லும் போது, ரத்னாவின் கண்களிலோ அவ்வளவு பயம் மற்றும் பரிதவிப்பு இருந்தது. ரவி பேசுவது அவருக்குப் பிடிக்க வில்லை என்றாலும், வாய் மூடி இருக்க வேண்டிய சூழல் அவருக்கு. காயத்திரியும் அதே நிலையில் தான் இருந்தார்.

மீனா எங்கு சென்றாளோ, எப்படி இருக்காளோ என்று சிறிதும் கவலைப் படாமல் அந்த நேரத்திலும், தன் நிறுவனம் ஒன்றே குறிக்கோள் என்று பேசிய தன் மகனைப் பார்த்து காயத்திரிக்குக் கடுப்பாக இருந்தது.

“எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல. நான் இங்க இருந்துப் போறேன் என்னைத் தேடாதீங்க” என்று கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாள் மீனா

“கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு லெட்டர் எழுதி வச்சிட்டுப் போயிருக்காள் உங்க பொண்ணு. அதனால எங்க குடும்பத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டு இருக்கு. அதைப் பத்திப் பேசாம, என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கீங்க. இது தான் உங்க குடும்ப லட்சணமா?” என்று கோபமாகக் கேட்டார் ஒளிவியனின் அன்னை வித்யா. அவரின் கணவர் ராஜனும், “தொழிலில் எங்களைத் தோற்கடிக்க முடியிலைன்னதும் தான், இந்த மாதிரி உங்க பொண்ணை வச்சி நாடகம் நடத்தி, சபையில நிக்க வச்சி அசிங்கப்படுத்திட்டீங்க தானே! இனி உங்க நிறுவனம் என்ன கதிக்கு ஆளாகப்போகுதுன்னு வேடிக்கை மட்டும் பாருங்க” என்று அவரும் தன் பங்கிற்கு வெடித்து சிதறினார்.

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு, ஒளிவியனிடமே சரணடைந்த ரவி, “உங்க மன உளைச்சல் கோபம் எல்லாம் எனக்கும் புரியுது மாப்ள. நீங்க சொன்னதை எல்லாம் நிச்சயம் நான் கேட்குறேன் மாப்ள. ஆனா எங்கள் நிறுவனத்திற்கு, நீங்க நிதி தரேன்னு வாக்குக் கொடுத்து இருக்கீங்க...” என்று அந்த நேரத்திலும் அவருக்கு தன் நிறுவனமே பெரியதாக தெரிந்தது.

அவர் பேச்சைக் கேட்டு, கண்களில் கனல் தெறிக்க, முகமெல்லாம் ரத்த சிவப்பாய் வைத்துக் கொண்டு மணிச்சிகை முன்னால் வந்து நின்ற ஒளிவியன், “அவள் போனா என்ன? இவளை எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்க” என்று சாதாரணமாக சொல்லி முடிக்க, மணிச்சிகையின் இருதயம் மேலெழும்பி வந்து தொண்டையை அடைத்துக் கொண்டது.

அங்கிருந்த அனைவருக்கும் அவனது பேச்சு திகிலை உண்டு பண்ணியது என்றால், ஒளிவியனின் தாயும் தந்தையும் ஒரு வித எதிர்பார்ப்போடு, மணியின் முகத்தைப் பார்த்தனர்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 4

ஒளிவியன் பேச்சைக் கேட்டு கொஞ்சமும் யோசிக்காமல், “உங்க விருப்பம் அது தான்னா, அதை நிறைவேற்றி வைக்க, நான் கடமைப்பட்டு இருக்கேன் மாப்ள” என்று கொஞ்சமும் மணியிடம் கலந்து ஆலோசிக்காமல் வாக்கும் கொடுத்தார் ரவி.

அதுவரை பேசாமல் இருந்த மணியோ, தன் தந்தையின் பேச்சில் வெடித்து எழுந்தவளாக, “என்ன நடக்குது இங்க? என்னை வச்சி வியாபாரம் பேசுறீங்களா அப்பா” என்று உணர்ச்சியால் அதிகக்குரல் எடுத்துக் கேட்டாள்.

அதுவரை தன் பேத்தி மீனாவை நினைத்து அதிக கவலையில் இருந்த காயத்திரியோ, இது தான் சாக்கு என்று, தன் மகனைப் பார்த்தவர், தன் கண்களை மூடித் திறந்தவர், மணிச்சிகையின் முழங்கையைப் பிடித்து, இழுத்துக் கொண்டே, அங்கே இருந்த அறைக்குள் சென்றார்.

பதறியபடி ரத்னாவும் அவர்கள் பின்னே சென்றார்.

அப்போது அங்கே வந்த வீரரும், இவர்கள் பின்னால் வந்தவன், “அக்காவை எங்க தேடிப் பார்த்தும் கிடைக்கலை பாட்டி” என்றான்.

அவர் பேசுவதற்குள் முந்திக்கொண்ட மணி, “நல்லா தேடி பாரு அண்ணா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட அவளை நான் தோட்டத்தில் பார்த்தேன்” என்றாள் கண்கள் கலங்க.

அதற்கு சோகமாக மறுப்பு தெரிவித்தவன், “எங்கயும் இல்லை மணி. இனி நம்ம குடும்பம் நடுத்தெருவில் நிற்பதும், இல்லை அரண்மனையில் வாழ்வதும் உன் கையில் தான் இருக்கு” என்று சொல்லிவிட்டு அமைதியானான்.

“இவள் கிட்ட எதுக்கு நீ கெஞ்சிக்கிட்டு இருக்க வீர். நம்ம சொல்றதைக் கேட்காம எங்க போயிடப்போறா” என்று சொல்லிக் கொண்டே, மணியைப் பார்த்து, தன் கோலிக்குண்டு கண்களை நிமிர்த்திக் காட்டி அவளைப் பயப்படுத்தினார்.

அதற்குக் கொஞ்சமும் அசராத மணியும், “அம்மா என்னம்மா பேசுறாங்க இவங்க... இதை எல்லாம் கேட்டுட்டு நீங்களும் அமைதியா இருக்கீங்க” என்று என்ன செய்வதென்று அறியாமல் தன் இருகையையும் பிசைந்து கொண்டிருந்த தன் அன்னை ரத்னாவைப் பார்த்துக் கேட்டாள்.

“அவள் என்ன சொல்லுவாள். அவள் பொண்ணு ஒருத்தி, குடும்ப மானத்தை வாங்கிட்டு ஓடிப்போயிட்டாள். நீயோ சொல்றதைக் கேட்காமல் வீம்பு பிடிக்குற” என்றவர் ஒரு கணம் நிறுத்திவிட்டு, “நீ தான் உன் அக்கா இடத்துல இருந்து எல்லாத்தையும் இனி செய்யணும்” என்று ரத்னாவைப் பேச விடாமல் முந்திக் கொண்டுப் பேசினார் காயத்திரி.

அதனைக் காதில் வாங்காமல் தன் அன்னையைப் பார்த்தவள், “எப்போதும் வாயை மூடி இருக்குற மாதிரி இப்போதும் வாயை மூடி இருக்கணும்னு நினைக்காதீங்க அம்மா” என்றாள் தன் கண்கள் கலங்க.

ரத்னாவின் கண்களும் கலங்கியது. ஆனால் அவரால் மட்டும் என்ன செய்துவிட முடியும்.

“மீனாவுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல வாழ்வு உனக்குக் கிடைக்கப்போகுது. அதை நினைச்சு நீ சந்தோஷப்படணும். இப்படி அழுதே உன்னுடைய வாழ்க்கையைப் பாழக்கணும்னு நினைக்கக்கூடாது” என்று அரட்டினார் காயத்திரி.

தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள், “என்னது நல்ல வாழ்வா! அதுவும் அந்த ஒளிவியனுடனா?” என்று எரிச்சலாகி கேட்டவள், “அவள் போயிட்டான்னு தானே, என்னை அவள் இடத்தில் நிற்க சொல்லுறீங்க... இப்ப நானும் போயிடுவேன், அப்ப என்ன செய்வீங்க?” என்று கேட்டபடி தன் அருகில் நின்று கொண்டிருந்த தன் அண்ணன் வீரைப் பார்த்தவள், “இவனுக்குப் பொண்ணு வேஷம் போட்டுக் கூட்டிட்டுப் போய் சபையில் நிற்க வைப்பீங்களா?” என்று கேட்டாள் எகத்தாளமாய்.

அதைக் கேட்ட காயத்திரி, “என்னடி அதிகமா பேசுற... வாங்குன அடி எல்லாம் மறந்து போச்சா?” என்றார் அவளைப் பார்த்து முறைத்தபடி.

வீர், “நீ பேசுறது எதுவும் நல்லா இல்ல மணி. நான் காரணத்தையும் சொல்லிட்டேன் அப்படி இருந்தும் நீ இப்படி பேசுனா என்ன அர்த்தம்?” என்றான் தன் இடையில் கையைக் குற்றியபடி.

“வேற எப்படி அண்ணா என்னைப் பேசச் சொல்லுற? நேத்து வரை அக்காவை விரும்பினவரை, இன்னைக்கு என்னையக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா என்ன நியாயம். இது அப்பாவுக்கும் உனக்கும் தான் புரியலைன்னு பார்த்தா, அந்த ஒளிவியனுக்குமா புரியல. காதல் பண்ணியது அக்காவோட, கல்யாணம் மட்டும் தங்கச்சியோடவா... ச்சீ... கேட்குறதுக்கே அசிங்கமா இருக்கு” என்று அவள் பேசியதற்கு யாரிடமும் பதில் இல்லை.

சிணுங்கிய அலைபேசியை தன் காற்சட்டைப்பையில் இருந்து எடுத்த வீர், “ஆங்... சரிப்பா... சரிப்பா” என்று சொல்லிவிட்டு வைத்தவன், தன் பாட்டியைப் பார்த்து, “ஒளிவியன் நமக்கு வெறும் ஒரு மணி நேரம் மட்டும் தான் நேரம் கொடுத்து இருக்கார் பாட்டி. நம்ம சொந்தக்காரங்க வேற ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சிட்டாங்கன்னு அப்பா சொல்றார்” என்று முகத்தில் தோன்றிய வேதனையோடு காயத்திரியிடம் கூறியவன், அவருக்கு அருகில் இருக்கும் தன் அன்னையைப் பார்த்து,

“அம்மா, இன்னைக்குக் கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா, நாம நடுத்தெருவுக்குத் தான் வருவோம். என்னுடைய லைப் மொத்தமா போயிடும்” என்று அவன் இறுதியாய் சொன்ன செய்தியைக் கேட்டு, ரத்னாவின் இதயம் கனக்க ஆரம்பித்தது.

தன் அன்னையின் முக மாற்றத்தைக் கண்டவள், ‘ஐயோ! இந்தத் தடியன் வேற அம்மா மனசைக் கலங்க வைக்குற மாதிரி பேசுறானே!’ என்று தன்னுள் அலறியவள், “இங்கப்பாருங்க அம்மா, இவன் சொல்றதை எல்லாம் கேட்டு, தப்பான முடிவை எடுக்காதீங்க. இந்த உலகத்துல ஒளிவியன் தான் கடைசி ஆம்பளையா இருந்தாலும் கூட நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்” என்றாள் மணிச்சிகை.

காயத்திரி மணியைத் திட்டிக் கொண்டே இருக்க, வீர் அவளிடம் கெஞ்சிக் கொண்டு இருக்க, ரத்னாவோ என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க, அந்த நேரம் பார்த்து வியர்க்க விறுவிறுக்க அந்த அறைக்குள் வந்த ரவியோ, தன் நெஞ்சைப் பிடித்துவிட்டார்.

வழக்கம் போல் அனைத்து தந்தையும் பேசும் அதே வசனத்தைப் பேசினார். அதைப் புரிந்துகொள்ளாத ரத்னாவும், “அப்பாவுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கோ மணி” என்று அவளிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்.

பிறகு என்ன, இறுதியாக வீட்டிற்கு வேண்டாத பிள்ளை தான் மணமகள் வேஷம் போட்டு மேடை ஏறினாள்.

மணிச்சிகை மணப்பெண் அலங்காரத்தில் மேடை ஏறும் போது, கீழே அமர்ந்திருந்த உறவினர்கள் மத்தியில் சிறு கூச்சல் எழ, அது ஒளிவியன் பார்த்த பார்வையில் மாயமாகிவிட்டது.

இருந்தும் அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்வதை நிறுத்தவில்லை.

ஐயர் மந்திரம் ஓத, மணிச்சிகையின் கழுத்தில் பொன் தாலியை அணிவித்த ஒளிவியன், வேறு எதுவும் பேசாமல், மணியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே வெளியேற, அவனுக்குப் பின்னாலையே அவனது பெற்றோரும் வெளியேறினர்.

நடப்பது எதுவும் புரிந்துகொள்ள முடியாத மணியோ, தன் தாய் ரத்னாவின் முகத்தைக் கலக்கத்தோடுப் பார்த்தபடி, ஒளிவியன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள்.

அவளை மட்டும் கூட்டிக்கொண்டு, தன் மகிழுந்தை அதிவிரைவாக கிளப்பிக்கொண்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

கண்களில் இருந்து வழியும் கண்ணீரை கடினப்பட்டு உள் இழுத்துக் கொண்ட மணி, ‘அவள் ஓடிப்போனதுக்கு என்னைப் பழி வாங்கிடுவாரோ! அப்படித் தானே நிறையா கதைகளில் எல்லாம் வரும்’ என்று நினைத்துக் கொண்டபடி, ஒளிவியனின் முகத்தை திகிலோடுப் பார்த்தாள்.

சாலையில் தன் கண்களைப் பதித்தபடி, தன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ஒளிவியனின் முகத்தில் சிறிதும் வருத்தம், கவலை, கோபம் என்று எதுவும் இல்லை இப்போது.

அவனது முகம் பளிச்சென்று இருந்தது. சுருங்க சொல்லப்போனால், அவன் அகத்தில் எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது.

அது மேலும் பெண்ணவளைக் குழப்பம் அடையச் செய்ய, தன் பயத்தைக் கைவிட்டு, மெதுவாக தன் வாயைத் திறந்தவள், “பழி வாங்குறதுக்காகத் தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா... இப்ப என் அக்கா செஞ்ச தவறுக்கு என்னைக் கூட்டிட்டுப் போய் கொடுமை செய்யப் போறீங்களா?” என்றாள்.

அதற்கு தன் உதட்டை வளைத்து, “கொடுமையா? ச்ச.. ச்ச.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல” என்றவன் மர்மமாக புன்னகை செய்தான்.

அந்த புன்னகையில் எதுவோ உள்குத்து இருக்கிறது என்று மணியின் மனம் அடித்துக் கூறியது.

அவன் தந்த பதிலில் கொஞ்சம் தைரியம் வரப்பெற்றவளாக, “என் அக்காவைக் காதலிச்சிட்டு, என்னைக் கல்யாணம் செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது? அப்ப இவ்வளவு நாளா நீங்க அவளைக் காதலிச்சது எல்லாம் பொய்யா? இல்லை உங்க இன்னொரு கொலைகார முகத்தைப் பார்த்துப் பயந்து போய், அவள் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி ஓடிட்டாளா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

அவள் கேள்விக்கு எதற்கும் விடையளிக்காதவன், “ஏன், நான் உனக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்னு பயப்படுறியா? கவலைப்படாத உன் கழுத்தில் தானே தாலி கட்டி இருக்கேன்” என்றான் திமிராக.

அதற்குப் பல்லைக் கடித்தவள், “அதைத் தான் நானும் கேட்குறேன். இது என் அக்காவுக்குக் கிடைக்க வேண்டிய வாழ்க்கை. அவளுடைய இடத்துல நீங்க என்னை நிற்க வச்சிப் பார்த்தா, அது அபத்தமா தெரியும். ஆனா அதைப் பத்திக் கவலை கொஞ்சமும் இல்லாமல் இவ்வளவு கூலா பேசுறீங்க?” என்றாள்.

“நான் உன்னை அவளுடைய இடத்தில் வச்சி பார்க்கவே இல்லையே! கல்யாணத்துக்கு முன்னாடி ஆயிரம் பொண்ணுங்களைக் காதலிக்கலாம். ஆனா கல்யாணம் முடிஞ்சதும் அதைப் பத்தி எல்லாம் பேசணும்னு எந்த வித அவசியமும் இல்ல” என்று சொல்லி அவளைக் குழப்பினான்.

“அப்ப என்கூட நல்ல விதமா வாழுறதுக்காகவா என்னைக் கல்யாணம் செய்தீங்க! பின்ன எதுக்காக எங்க வீட்ல இருந்து என்னைத் தரதரன்னு இழுத்துக்கிட்டு வந்தீங்க?” என்றாள் புரியாத குரலில்.

இப்போது வண்டியை லாவகமாக ஓட்டிக்கொண்டே, மணி இருக்கும் பக்கமாக திரும்பியவன், “கல்யாணம் எதுக்காகப் பண்ணனும்னு நினைச்சேனோ, அதுக்காக நான் கல்யாணம் பண்ணிட்டேன். அது மீனாவா இருந்தா என்ன, இல்லை மணிச்சிகையா இருந்தா என்ன. என்னுடைய குறிக்கோள் நிறைவேறிடுச்சி” என்றான் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டபடி.

அவனது பேச்சு அதிர்ச்சியைத் தர, “எந்த காரணத்துக்காக என்னைக் கல்யாணம் செய்தீங்க?” என்றாள் ஜன்னலோடு ஜன்னலாக ஒட்டி அமர்ந்தபடி.

“கல்யாணத் தன்னைக்கு ராத்திரி, மணமக்களுக்கு நடுவே நடக்குமே ஒன்னு அதுக்காகத் தான்” என்றான் தன் உதட்டை நாக்கால் தடவியபடி.

அதனைக் கேட்டு அவள் இன்னும் தள்ளி அமர்ந்து கொள்ள, அவளது இதயமோ வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தவன், ஒரு மருத்துவமனையின் வளாகத்திற்குள் நுழைந்தான்.

‘இங்க எதுக்காக’ என்று அவள் யோசிக்கும் போதே, காரை நிறுத்தியவன், அவள் பக்கம் இருக்கும் கதவைத் திறந்துவிட்டு, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான் மருத்துவமனைக்குள்.

அந்த மிகப்பெரிய மருத்துவமனையில், வேறு ஒரு கட்டிடத்திற்குள் அவளை இழுத்துச் சென்றான்.

அங்கே ஆட்கள் அதிகம் இல்லாததால், இவர்கள் மணக்கோலத்தில் வருவதை பெரியதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.

தன் கையைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு செல்பவனின் கையைப் பிடித்தவள், “இங்க எதுக்காக இப்ப கூட்டிட்டு வந்து இருக்கீங்க? உங்க பாட்டி தாத்தா யாராவது இங்க இருக்காங்களா?” என்று அப்பாவியாய் கேட்டாள்.

அதற்கு மறுப்பாக தன் தலையை ஆட்டியவன், “உனக்காக வேண்டி தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்” என்று சொல்ல, அவள் முகத்திலோ யோசனை முடிச்சுக்கள்.

தொடர்ந்து பேசிய ஒளிவியன், “நீ கன்னித்தன்மையோட தான் இருக்கியான்னு, வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கணும்” என்று சொல்லி அவளை அதிரச் செய்தான்.

(ஒளிவியன் அடம்பிடித்து மீனாவிற்குப் பதிலாக மணியைத் திருமணம் செய்யக் காரணம் என்ன? திடுக்கிடும் தகவல்களோடு ஆண்ட்டி ஹீரோ நாவலாக இனி இந்தப்பயணம் தொடரும்)
 

NNO7

Moderator
அத்தியாயம் – 5

பளிங்கு கற்களால் கட்டப்பட்டு இருந்த அந்த அறைக்குள் தான், குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மணிச்சிகை.

தான் எதற்காக, இதற்கு ஒத்துக் கொண்டோம், எதனால் இங்கு வந்து நிற்கின்றோம் என்று எதுவும் அவளுக்குப் புரியவில்லை.

அவளுக்கு இடது பக்கம், கட்டிலில் பஞ்சு மெத்தைகள் கிடக்க, வலது பக்கமோ, பத்து அடி நடந்த பின், தாமரைத் தடாகம் இருந்தது. அதற்கு மேலே சீலிங் இல்லாமல் இருக்க அந்த வெளிச்சம் தான் அந்த அறையை நிறைத்துக் கொண்டு இருந்தது.

குளம் போல், நீச்சல் குளத்திற்கும் பாதியாக, அழகாக அமைக்கப்பட்டிருந்த அந்தத் தாமரை தடாகத்தில், தாமரை இலைகள், தளதளவென்று வளர்ந்து இருந்தது.

அந்த இலைகளின் மீது தண்ணீர்த் துளிகள், வைரம் போல் சூரியனின் வெளிச்சத்தில் மின்ன, இலைகளுக்கு நடுவே பூக்களின் ராணி போல், கம்பீரமாக நின்று கொண்டிருந்தது ஒரே ஒரு தாமரை.

இந்த இயற்கை அழகை எல்லாம் பார்த்து அனுபவிப்பதற்கு மணிச்சிகையின் மனது மட்டும் இடம் கொடுக்கவே இல்லை.

அந்த தடாகத்தைத் தாண்டி ஒரு வழி செல்ல, அதன் இருபக்கம் சுவற்றிலும், ரோமானியர்கள் காலத்து ஓவியம், அழகிற்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்க, அங்கே இருந்த ஒரு அறைக்குள் தான் ஒளிவியன் இருந்தான்.

‘அநேகமாக அந்த அறை அவருடைய அறையாகத் தான் இருக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள் மணிச்சிகை.

ஒளிவியன் எதற்காக அவளைத் திருமணம் செய்தான் என்ற காரணம் எதுவும் பெண்ணவளுக்குப் புரியவில்லை.

ஒளிவியன் இருக்கும் அறைக்கதவைப் பார்த்துக் கொண்டே, தன் அன்னை ரத்னாவிற்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள்.

முதல் ரிங் செல்வதற்கு முன்பே மணியின் அழைப்பை எடுத்துத் தன் காதில் வைத்தவர், “ஹலோ, மணி நீ நல்லா தானே இருக்க? அங்க ஒன்னும் பிரச்சனை இல்லை தானே!” என்று படபடப்பான குரலில் கேட்டார்.

திடீரென்று, முன் பின் தெரியாத ஒருத்தனுக்கு, அதுவும் தன் அக்காவின் காதலனுக்குத் தன்னைக் கட்டாயப்படுத்தி, மனதை நோகடித்துத் திருமணம் செய்து வைத்துவிட்டு, எப்படி தன்னிடம் இது போல் ஒரு கேள்வியைக் கேட்க முடிகிறது என்று தன் அன்னையை நினைத்துக் கோபம் தான் வந்தது மணிச்சிகைக்கு.

இருந்தும் அப்பாவியாய் இருக்கும் தன் அன்னையிடம் கோபத்தைக் காட்டாமல், அதனைக் கட்டுப்படுத்தி வைத்தவள், “நான் என்ன சொல்லணும்னு விரும்புறீங்க அம்மா” என்றாள் ஆற்றாமையாக.

“அப்பா உன்னை அப்படியே விட்டுட மாட்டார் மணி. உன்னைப் பார்க்கத் தான் வீர் அங்க வந்துக்கிட்டு இருக்கான். நீ எதுக்கும் கவலைப்படாத” என்றார் கலங்கிய குரலில்.

ரத்னாவால் கொடுக்க முடிந்தது, அவளுக்கு ஆறுதல் ஒன்று தான். அதைத் தான் செய்தார் அவர்.

அவர் சொன்னதில் கொஞ்சம் மனது எழ, “வீர் அண்ணன் வரானா... என்னை இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடுவானா?” என்று வேகமாக கேட்டாள்.

“இல்லை மணி. மாப்ள, தாலி கட்டி முடிஞ்ச கையோட உன்னை அப்படியே கூட்டிட்டுப் போயிட்டாரா, எனக்கு மனசே கேட்கல, அதனால் வீர் தான் நான் போய் மணியை ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டுப் போனான்” என்றார்.

“அம்மா, நான் இங்க இருக்க மாட்டேன். எனக்குப் பயமா இருக்குது” என்றவள் குரல் திக்கித் திணறி வந்தது. அவள் நினைவோ, சிறிது நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் நடந்ததை சுற்றி வந்தது.

“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது மணி. இனி அது தான் உன் வீடு. இனி அங்கப் போய் நீ நல்லா இருப்பன்னு என் மனசு சொல்லுது” என்றார் பழமைவாதியாக.

அவர் பேசுவதை எல்லாம் கேட்டு தன் பல்லைக் கடித்தவள், ‘இவரிடம் பேசி எந்தப் பயனும் இல்லை’ என்று நினைத்தவள், அலைபேசியை வைக்கப்போக, இப்போது அதில் கேட்டது ரவியின் குரல்.

“அங்க எல்லாம் எப்படி போகுது மணி” என்று ரவியின் குரல் கேட்க, அதிர்ச்சியோடு தன் அலைபேசியைப் பார்த்தவள், ‘நிஜமாவே இது தன் தந்தை தானா!’ என்ற நினைப்பில், “அப்பா...” என்றாள்.

“ம்... அப்பா தான் பேசுறேன். உன் அக்கா இப்படி நம்ம மானத்தையே மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவான்னு நான் கொஞ்சமும் நினைச்சுப் பார்க்கல. உன்னுடைய முடிவால் தான், நான் உயிரோடவே நடமாடிக்கிட்டு இருக்கேன். நம்ம குடும்ப மானம் மரியாதை, செல்வம்னு எல்லாமே உன் கையில் தான் இருக்குது மணி. நீயும் பார்த்து நடந்துக்கோ. மாப்ள சொல்றதைக் கேளு. அவர் இஷ்டப்படி நடந்துக்கோ. அவங்க நிச்சயம் உன்னை நல்லா பார்த்துப்பாங்க. உன் உடம்பையும் நல்லா பார்த்துக்கோ, நீ நல்லா இருந்தாத் தான் நாங்களும் இங்க நல்லா இருக்க முடியும்” என்று அவர்பாட்டுக்கு அறிவுரைகளையும், அவளது நலன்களையும் பேண வேண்டி, அடுக்கிக் கொண்டே சென்றார்.

அவர் மணியிடம் நன்றாக பேசுவதற்கு, அவள் எங்கேனும் தவறாக நடந்து கொண்டு தன் நிறுவனத்திற்கு பாதகம் இளைத்து விடக்கூடாது என்ற காரணம் இருந்தது. அது மணிக்கும் புரியாமல் இல்லை. இருந்தும் முதல் முறையாக தன்னிடம் தணிந்த குரலில் பேசும் தந்தையின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

எல்லாம் சில நிமிடம் மட்டும் தான். அடுத்ததாக அவர் பேசிய பேச்சு, மணியைக் கோபம் கொள்ள வைத்தது.

“சக்கரவர்த்தி குடும்பத்துல மருமகளா போனதுக்கு நீ உண்மையிலையே கொடுத்து வச்சி இருக்கணும் மணி. விளையாட்டுக்குக் கல்யாணம் பண்ணி பின்னாடி வேண்டாம்னு சொல்ற பரம்பரை அவங்களது கிடையாது. நீ தான் அவங்க வீட்டுக்குக் கடைசி வரையும் மருமகள். இதில் எந்த வித மாற்றமும் கிடையாது. இதை அனுபவிக்க உன் அக்காவுக்குத் தான் கொடுத்து வைக்கல” என்று அவர் சொல்லும் போது கூட மணி அமைதியாகத் தான் இருந்தாள்.

ஆனால் அவர் அடுத்ததாக பேசிய பேச்சு அவளைக் கொதிப்படையைச் செய்தது.

தன் குரலை மெதுவாக்கி, “என்ன ஆனாலும் சரி. நம்ம குடும்பத்து ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாது. இதை நீ எப்போதும் காப்பாத்துவன்னு நான் நம்புறேன்..” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, இணைப்பை ரத்து செய்தவள், தன் அலைபேசியை மெத்தையில் வீசி எறிந்தாள்.

அவளுக்கு அவ்வளவு கோபம் வந்தது. ‘இங்க என்னுடைய வாழ்க்கையே போயிடுச்சி. இதுல, குடும்ப ரகசியம் தான் முக்கியமாக்கும்’ என்று நினைத்துக் குறுக்கும் நெடுக்கும் நடந்தவள் முன்னால் வந்து நின்றான் ஒளிவியன்.

அவனைப் பார்த்ததும், அச்சடித்தது போல், அதே இடத்திலையே நின்றவள், “எனக்கு இங்க இருக்க பிடிக்கல” என்று வேறு பக்கமாக தன் முகத்தைத் திருப்பிக் கொண்டபடி சொன்னாள்.

தன் காற்சட்டைப் பையினுள் கையை விட்டபடி, அவளை மிதப்பாகப் பார்த்தவன், “இங்க இருக்கப் பிடிக்கலையா இல்லை என்னைப் பிடிக்கலையா?” என்று கேட்டான்.

சற்றும் தாமதிக்காமல், “ரெண்டும் தான்” என்றாள் முணுமுணுத்துக் கொண்டபடி.

ஒரு எட்டில் அவளது கழுத்தைப் பற்றியவன், “இந்த சக்கரவர்த்திக் குடும்பத்துக்குள்ள வந்துட்டா, நீ சாகுற வரைக்கும் இந்த வீட்டு மருமகள் தான்” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு, பின் அவள் மூச்சு விடமுடியாமல் திணறுவதைப் பார்த்தவன், தன் கையை அவளது கழுத்தில் இருந்து விடுவித்து, “உன்னைக் கொடுமை செய்து பழி வாங்குறது என்னுடைய நோக்கம் இல்ல” என்றான் அவளுக்கு முதுகுக்காட்டித் திரும்பி நின்றபடி.

தன் கழுத்தைத் தடவியபடி, “உங்களுக்குக் கொஞ்சமாச்சும் ஏதாவது புரியுதா இல்லை புரியாத மாதிரி நடிக்குறீங்களா ஒளிவியன்?” என்றபடி தன் கையை விரித்துக் காட்டியவள், “இதோ, நான் கட்டி இருக்கும் இந்த முகுர்த்தப் புடவை கூட, என் அக்காவுக்காக நீங்க பார்த்துப் பார்த்து வாங்கியது தானே!” என்றாள்.

இப்போது திரும்பி அவளைப் பார்த்து முறைத்தவன், “எத்தனை தடவை தான் இதையே சொல்லுவ? இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சி அதைப் பத்தி மட்டும் பேசு” என்று சொல்லி அவளது வாயை அடைக்கப் பார்த்தான்.

ஆனால் இதனை மணிச்சிகை விட வேண்டுமே!

“அப்ப நீங்க என்னை முழுமனசோடு உங்க மனைவியா ஏத்துக்கப் போறீங்களா?” என்றாள் தன் கண்களை விரித்து வைத்துக் கேட்டபடி.

“ஆம்” என்று தன் தலையை ஆட்டியவன், “அதுக்குத் தானே உன்னை டெஸ்ட் எடுக்கக் கூட்டிட்டுப் போனேன்” என்று எகத்தாளமாய் தன் உதட்டைக் கடித்தபடி, அவளைக் கீழ் இருந்து மேலாகப் பார்த்தான்.

அதில் அவளுக்கு ஒரு வித அசுகை உண்டாக, “அதில் நான் வெர்ஜின் இல்லைன்னு வந்தா, நீங்க என்ன பண்ணுவீங்க?” என்றாள் பல்லைக்கடித்தபடி.

அதற்கு ஒரு மாதிரியாக சிரித்தவன், “நான் என்ன பண்ணுவேன்னு, கூடிய சீக்கிரம் நீயே பார்ப்ப” என்று வில்லன் போல் சொல்லிவிட்டு, வெளியே செல்லும் ஒளிவியனைத் தான் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒளிவியன் சென்றதும், அவளை மேலும் யோசிக்க விடாமல் அவள் இருக்கும் இடத்திற்கு வந்தான் அவளின் அண்ணன் வீர்.

வீரைப் பார்த்ததும் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மணி.

“நீ எங்க மேல கோபமா இருக்கன்னு எனக்கு நல்லாவே புரியுது மணி. இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்ல” என்று உண்மையான வருத்தத்தில் அவன் பேச, அவனது பேச்சுக்கள் மணிக்கு அளவில்லாத ஆத்திரத்தைக் கொடுத்தது.

“இப்ப மட்டும் என்ன உனக்குப் பாசம் பொங்குதா? உனக்கு எப்போதும் அக்காவை மட்டும் தான பிடிக்கும். எப்ப பார்த்தாலும் எனக்குப் பாட்டிக்கிட்ட இருந்து திட்டு வாங்கி கொடுப்ப தானே!” என்றாள்.

தன் நெற்றியைத் தடவியவன், “ஹேய், மணி இதெல்லாம் உடன்பிறப்புகளுக்குள் சகஜம் தானே! மீனா அக்கா நம்ம ரெண்டு பேருக்குமே மூத்தவங்க, அவங்கக்கிட்ட உன்கிட்ட விளையாண்ட மாதிரி எல்லாம் விளையாட முடியுமா?” என்றான்.

வீர் எப்போதும் மீனா போல் மணியின் மீது என்றுமே வன்மத்தை வளர்த்தது இல்லை. மணி பிறந்ததும், தனக்கு சிறிய தங்கை கிடைத்துவிட்டாள் என்று சந்தோசம் கொண்டவன் தான், ஏனோ பின்னாளில் அவளுடன் வம்பு வளர்க்க ஆரம்பித்தான். ஆனால் எப்போது படித்து முடித்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்தானோ, அன்றே எல்லாத்தையும் குறைத்துக் கொண்டான்.

இப்போது அவளின் கோபம் கொஞ்சம் குறைய, “எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. இப்போதே என்னை எங்கையாவது கூட்டிட்டுப்போ அண்ணா” என்றாள் கெஞ்சலாக.

“ஏன், வீட்ல எல்லார்கிட்டையும் நான் திட்டு வாங்கணுமா?” என்றவன் இழுத்து மூச்சை விட்டபடி, “இங்கப்பாரு மணி, ஒளிவியன் ரொம்பவே நல்லவர் தான். நான் நிச்சயம் சொல்றேன் அக்கா இடத்தில் உன்னை நிறுத்திப் பார்க்க மாட்டார் அவர். எனக்கு இந்த நம்பிக்கை இருக்கு. ஆனா அவர் மனசும் மாறுவதற்குக் கொஞ்சம் நேரம் எடுக்கும்” என்றான் நம்பிக்கை மிகுந்த குரலில்.

இதைத் தன் அண்ணனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டிருந்தவள் இறுதியாக, ஒளிவியன் தன்னை மருத்துவமனைக்குக் அழைத்து சென்றதைக் கூறிவிட்டாள்.

அதில் அதிர்ந்த வீர், “என்ன? என்ன சொல்ற? விர்ஜினிட்டி டெஸ்ட்டா? அப்படி எல்லாம் இருக்காது மணி. ஒளிவியன் அப்படிப் பட்டவர் எல்லாம் கிடையாது. அவரது குடும்பமும் அப்படிப்பட்டது கிடையாது. உன்னைப் பத்தி எதுவும் தெரியாமல் ஒன்னும் அவர் உன்னைக் கல்யாணம் பண்ணல” என்று அவசரமாக சொல்லிவிட்டு, ஒரு கணம் நிறுத்தி, “இந்த வீட்ல இருக்கக் கூடாதுங்குறக்காக, நீ ஏதாவது பொய் சொல்றியா?” என்று மணியைக் குற்றம் சுமத்துவதைப் போலக் கேட்டான்.

அவனது பேச்சு மணிக்குத் தலைவலியைக் கொடுக்க, “உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. என்னை, எனக்குப் பார்த்துக்கத் தெரியுமா. நீ எதுவும் எனக்காக செய்ய வேண்டாம்” என்று முகத்தில் அறைந்ததைப் போல் சொல்லிவிட்டாள்.

“மணி, கோபப்படாத. நம்ம அக்கா செஞ்ச வேலைக்கு ஒளிவியன் உன்னை ஏதாவது செஞ்சா நான் சும்மா பார்த்துட்டு இருக்க மாட்டேன். அதை சொல்றதுக்காகத் தான் நான் இங்க வந்தேன்” என்று சொல்ல,

‘உண்மையைச் சொன்னா நம்ப மாட்டேங்குறான், இதில் பாச மலர் மாதிரி வசனம் எல்லாம் பேசுறான்’ என்று நினைத்து முகத்தை சுளித்தவள், “வந்த வேலை முடிஞ்சதுன்னா வெளியப் போ அண்ணா, எனக்கு உன் முகத்தைப் பார்த்தாலே எரிச்சல் தான் வருது” என்றவள் தன் தந்தையின் மேல் உள்ள கோபத்தையும் வீர் மீதே இறக்கி வைத்தாள்.

அதில் கண்கள் கலங்க அவள் கையைப் பற்றியவன், “நீ என்ன பேசுனாலும் சரி. உன்னை எந்த வித துன்பமும் அண்ட விடமாட்டேன்” என்று உறுதியளித்தவன், “நான் இங்க இருந்து கிளம்புறேன் மணி. உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் எனக்குக் கால் பண்ணு” என்றான்.

‘ம்ச்... பிரச்னையை சொன்னா, நான் பொய் சொல்றேன்னு சொல்றான். இவனும் இவனுடைய வசனமும்’ என்று அவள் தன்னுள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, “அப்பா உன்கிட்ட சொன்னது நியாபகம் இருக்குத் தானே! அதை மறந்துடாத. நம்ம குடும்ப விஷயம் ஒளிவியனுக்குக் கூட தெரியக்கூடாது” என்றான் பார்வையில் கூர்மையைத் தேக்கி வைத்தபடி.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 6

தன் அண்ணன் பேசி சென்ற பேச்சால், தன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மணிச்சிகை.

இதில் அவளது வயிறு வேறு, ‘என்னையும் கொஞ்சம் கவனியேன்’ என்று சத்தம் எழுப்பியது.

இப்படியே அமர்ந்திருந்தால் ஒன்றும் கதைக்கு ஆகாது என்று நினைத்தவள், அந்த அறையில் இருந்த குளியல் அறைக்குள் சென்று இலகுவான உடையை மாற்றி வந்தாள்.

அவளைக் காண வந்திருந்த வீர் தான், மணிக்கான உடைகளைக் கையோடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றிருந்தான்.

அவள் கீழே இறங்கி வரும் போது, வித்யா மட்டும் தான் வரவேற்பு அறையில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தார்.

‘புது இடம் புது மனிதர்கள். இவர்களிடம் சென்று தான் எப்படி உணவிற்காக கேட்பது’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள் தன் வாழ்க்கையை நினைத்து நொந்து தான் போனாள்.

ஆனால் பசிக்கு முன் இதெல்லாம் பார்க்க முடியாது என்று நினைத்து வித்யாவின் முன்னால் சென்று நின்றாள்.

அவளது உடையையும் அவளையும் ஏற இறங்கப் பார்த்தவர், “ அதுக்குள்ள ட்ரெஸ் மாத்திட்டியா? சரி போய் எனக்குக் காபி எடுத்துட்டு வா” என்று அவளை வேலை ஏவினார்.

அவள் எதுவும் பேசாமல் இன்னும் தன் முன்னே நிற்பதைப் பார்த்தவர், “இன்னும் என்ன?” என்றார் எரிச்சலான குரலில்.

“எனக்கு காபி போடத் தெரியாது அத்த” என்றாள் மணிச்சிகை.

ஆங்காரத்தோடு சோபாவில் இருந்து எழுந்த வித்யா, “ஒரு காபி கூட போடத் தெரியாமத் தான் இங்க மருமகளா வந்துருக்கியா?” என்றார்.

“அக்கா ஓடிப்போனதும், அவள் இடத்தில் என்னை நிப்பாட்டி வைக்கும் போதே, இதை என்கிட்ட கேட்டு இருக்கலாமே அத்த” என்றவளின் குரலில் நக்கல் வழிந்தோடுவதுப் போல, வித்யாவிற்குத் தெரிய மணியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். ஆனால் அவளோ இதை எல்லாம் சாதாரணமாக சொல்வது போல் தன் முகத்தை வைத்துக் கொண்டாள்.

அதை நம்பியவர், “இங்கப்பாரும்மா, நம்ம வீட்ல வேலைக்காரங்க எல்லாம் இருக்காங்க தான். ஆனா சமையல் வேலை எல்லாத்தையும் வீட்டு ஆளுங்க தான் செய்யணும்” என்றார்.

“அப்ப எனக்கு நீங்க ஒரு காபி போட்டுக் கொடுங்க அத்த. வயிறு வேற பசிக்குது” என்றாள் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு.

‘வீட்டுக்கு மருமகள் வந்ததும் அவளை வச்சி எல்லா வேலையையும் வாங்கிறலாம்னு பார்த்தா, இவள் என்ன என்னையவே வேலை செய்ய சொல்றாள்’ என்று நினைத்தவர், பசிக்குது என்று அவள் சொன்னதால் மனது கேட்காமல் எழுந்து சென்றார் காபி போட.

வித்யா ஒன்றும் அவ்வளவு மோசமான மாமியார் எல்லாம் ஒன்றும் கிடையாது. மீனா சென்றது, அவருக்கு கோபம் தான். இருந்தும் தன் வீட்டிற்கு வந்த மருமகளை, அவள் அக்காவையும், குடும்பத்தையும் குத்திக் காட்டிப் பேச அவர் எண்ணவில்லை. ஆனால் மணியிடம், மாமியார் என்ற கெத்து குறையாமல் தான் பார்த்துக் கொண்டார்.

உள்ளே சென்றவர், மணி இன்னும் அங்கயே நிற்பதைப் பார்த்து, “என்ன அங்கயே நிற்குற? கூட வந்து காபி எப்படி போடணும்னு கத்துக்க” என்ற வித்தியாவின் குரலில், அவர் பின்னே சென்றாள் மணிச்சிகை.

வித்யா காபி போட்ட உடனே ஒளிவியனின் வண்டி சத்தம் கேட்க, மணிச்சிகைக்குப் போட்ட காபியை அவளின் கையில் திணித்தவர், “என் பையன் ஒளி வந்துட்டான். இதைப் போய் அவன் கிட்ட கொடுத்துடு, என்றார் காபிக் கோப்பையை சுட்டிக் காட்டியபடி.

அதனை தன் கைக்கு வாங்கி, “ஆங்...” என்று முழித்த மணிச்சிகைக்கு, தன் கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்க வில்லையே, என்ற ஏக்கம்.

திருமணம் ஆகி விட்டால், உணவு உடை பழக்க வழக்கம் எல்லாம் மாறிவிடும். உங்களால் அதனைக் கட்டுப் படுத்த முடியாது என்று எங்கோ எப்போதோ எவரோ சொன்னது தான் மணிக்கு அந்த நேரத்தில் நியாபகத்திற்கு வந்தது.

அவள் அப்படியே நிற்பதைப் பார்த்த வித்யா, “நான் காபி போடும் போது பக்கத்தில் இருந்து பார்த்த தானே! உன் கையில் இருக்குறதை (ஒளிவியன்)ஒளிக்குக் கொடுத்துட்டு, நீ வேற ஒன்னை போட்டு குடிச்சிக்கோ, நான் என் ரூமுக்குப் போறேன்” என்று வேகமாக சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

தன் தலையில் கையை வைத்த மணி, ‘நான் ஒரு பொய்யை சொல்லி இந்த அம்மாவை வேலை வாங்கலாம்ன்னு பார்த்தா, இது எப்படி நேக்கா என்னை வேலை வாங்கிட்டுப் போகுது... ஓ... இது தான் மாமியார் பவரா!’ என்று நினைத்துக் கொண்டு, காபிக் கோப்பையை எடுத்து வெளியே சென்றவள், அங்கு வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த ஒளிவியன் முன்பு சென்று நீட்டினாள்.

அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தவன், இவள் நின்று இருந்ததைக் கவனிக்காமல் திடீரென்று எழுந்திருக்க, சூடான காபி, அவன் மேல் கொட்டியது.

அவளோ தன் வாயைத் திறந்தபடி நிற்க, பேசிக்கொண்டு இருந்த அலைபேசியை அணைத்துவிட்டு, அதனை சோபாவில் தூக்கி எறிந்தவன், கோபத்தில் அவளை உறுத்து முறைத்தபடி, “என்ன செஞ்சி வச்சி இருக்க” என்றான் காபி கறை படிந்திருந்த தன் வெள்ளைச் சட்டையைப் பார்த்தபடி.

தன் தலையைக் குனிந்து கொண்ட மணிச்சிகை, “மன்னிச்சிடுங்க கவனிக்கல” என்றாள்.

சூடான காபி அவன் நெஞ்சை நனைத்து இருக்க, அது அவனுக்கு வலியைத் தந்தது. அதனை அவனது முக மாற்றத்தைக் கண்டு உணர்ந்துகொண்டவள், “ஐஸ் வச்சா வலிக்காது” என்றாள் முணுமுணுத்தபடி.

“உன் அக்கா என்னை தலைகுனிய வச்ச வலியை விட, இந்த வலி ஒன்னும் மோசமானது இல்ல” என்றான் அவளை வெறித்துப் பார்த்தபடி.

அதற்கு அவளிடம் பதில் இல்லை.

“நான் ஐஸ் எடுத்துட்டு வரேன்” என்று அவனைத் தாண்டி செல்லப்போனவளின் முழங்கையைப் பிடித்து நிறுத்தியவன், “சும்மா என் மேல அக்கறை இருக்குற மாதிரி நடிக்காத. முதலில் உன்னை யாரு எனக்காக காபி போட சொன்னது? நீ தெரிஞ்சே தான் காபியை என் மேல ஊத்துனன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்றான் காட்டமான குரலில்.

“இங்கப் பாருங்க ஒளிவியன், இது தெரியாமல் நடந்த விபத்து தான். அதெல்லாம் இல்ல, இதை நான் வேணும்னு தான் செஞ்சேன்னு நீங்க நினைச்சா, நினைச்சுக்கோங்க. நீங்க என்ன நினைப்பீங்கன்னு நினைச்சு என்னால டென்ஷன் ஆகமுடியாது. அதுவும் இல்லாமல் நான் உங்க மேல அக்கறை இருக்குறது மாதிரி எல்லாம் நடிக்கல. இந்தக்காபியை உங்க அம்மா தான் போட்டாங்க” என்றபடி தன் கையில் இருந்த காபி கோப்பையை அங்கே இருந்த டீப்பாயில் வைத்தாள்.

தொடர்ந்து பேசிய மணிச்சிகை, “உண்மையை சொல்லப்போனால் எனக்கு உங்க மேல் அக்கறை எல்லாம் எதுவும் கிடையாது. ஒரு மனிதாபிமானத்துல தான் கேட்டேன்.” என்றாள்.

அவளை நெருங்கி நின்றவன், “திடீர்னு என்ன ஆச்சு உனக்கு? என்னைப் பிடிக்கலைன்னு தானே சொல்லிக்கிட்டு இருந்த? அம்மா போட்ட காபியா இருந்தாலும், அதைக் கொண்டு வந்து நீட்டுற” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் தூக்கியபடி.

“பிடிக்கலைன்னு சொன்னாலும் என்னால வேற என்ன பண்ண முடியும். அது தான் தாலி கட்டிட்டீங்களே! இனி என்னால் என் வீட்டுக்கும் போக முடியாது” என்றாள் உள்ளே போன குரலில்.

அதற்கு விசில் அடித்தபடி, அவளைச் சுற்றி வந்தவன், “அப்ப இன்னைக்கு நைட் நடக்கப்போற, பர்ஸ்ட் நைட்டுக்கும் தயாராகிட்டன்னு சொல்லு” என்றான் அவளை ஒரு மாதிரியாக பார்த்தபடி.

அதில் அவளது இதயம் மேலெழும்ப, ‘ச்சீ... எப்ப பார்த்தாலும், இவர் இந்த நினைப்போட தான் அலைவாரா!’ என்று தனக்குள் பேசிக்கொண்டவள், வெளியே, “அப்படி எல்லாம் எதுவும் இல்ல. இந்த உறவை நான் ஏத்துக்க எனக்கு நேரம் வேணும். உங்களை மாதிரியெல்லாம் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரான்னு என்னால இருக்க முடியாது” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு.

“உனக்கு தான் பாய்பிரண்ட்ஸ்ன்னு யாரும் இல்லை தானே! பிறகு எதுக்காக நேரம் கேட்குற?” என்றான் தன் கீழ் உதட்டைக் கடித்தபடி.

அவள் அந்த நேரம் இருந்த பசிக்கு அவனது பேச்சுக்கள் எதையும் சரியாக உள்வாங்காமல், “ம்ச்... என்ன இருந்தாலும் நீங்க என் அக்காவுக்குக் கணவரா ஆகப்போறவர்னு தானே நான் நினைச்சேன்... அதனால் எனக்கு நேரம் வேணும்” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அவளது இடையைப் பற்றி மணிச்சிகையை அதிரச் செய்தான் ஒளிவியன்.

“இதுக்கு எல்லாம் நேரம் தேவை இல்ல... நடக்க வேண்டியது எல்லாம் அடுத்தடுத்து நடக்க தான் செய்யணும்” என்றான்.

தன் இடையில் இருந்த அவனது கையை எடுத்துவிடப்போராடியவள், “எனக்கு இதெல்லாம் பிடிக்கல ஒளிவியன். கையை எடுங்க” என்றாள்.

உடனே அவள் இடையில் வலிக்காமல் கில்லி வைத்து, “ரெடியா இரு. நான் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்றான் அவளில் இருந்து விலகி நின்றபடி.

“நான்...” என்று அவள் எதுவோ சொல்ல வருவதற்குள் அவள் உதட்டில் தன் ஆட்காட்டி விரலை வைத்தவன், “மணிச்சிகை” என்க, அவனது மெல்லிய குரல், அவள் அகத்துள் இறங்கி, அவளை எதுவோ செய்ய, அவன் கையைத் தட்டி விடாமல், ஒரு வித மோன நிலையில் நின்றாள்.

அவள் நிலையைப் பார்த்து மெல்லியதாக சிரித்தவன், அவளது கன்னத்தைத் தட்டி, “என்னாச்சி மணிச்சிகை? அதுக்குள்ளே டூயட் சாங் ஆட வெளிநாட்டுக்குப் போயாச்சா?” என்று நக்கலாக கேட்டபடி அங்கிருந்து சென்றான் ஒளிவியன்.

சிலை போல் அந்த இடத்திலையே அதிர்ந்து நின்றவள், “இனியாவது இந்த ஒளிவியன் முன்னாடி அசிங்கப்படாம இருக்கணும்”என்று வாய்விட்டு சொல்லியபடி திரும்பவும் சமையல் அறைக்குள் சென்றாள்.

நடந்த காபி சண்டையில் இனி காபி வேண்டாம் என்று முடிவு எடுத்தவளாக, ப்ரிட்ஜைத் திறந்தாள். அவள் நல்ல நேரத்திற்கு அதில் சில பழங்கள் இருக்க, அதனை எடுத்து சாப்பிட்டு விட்டுத் திரும்பவும் தான் இருந்த அறைக்குள் சென்றாள்.

பசி அடங்கியப்பிறகு தான், அவளுக்கு ஒரு விஷயமே தெரிய ஆரம்பித்தது, ‘எனக்குப் பாய்பிரண்டே கிடையாதுன்னு இந்த ஒளிவியனுக்கு எப்படி தெரியும்’ என்று யோசித்தவள், ‘தெரிஞ்சும் அவர் எதுக்காக எனக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கக் கூட்டிட்டுப் போனார்’ என்று நினைத்தவளுக்கு தலையெல்லாம் வலிக்க ஆரம்பித்தது.

அந்த அறையில் உள்ள கண்ணாடி முன் சென்று நின்றவள், தன்னைத் தானே பார்த்துப் பேசியபடி, “அப்ப, எனக்கு எடுத்த டெஸ்ட் வெர்ஜினிட்டி டெஸ்ட் கிடையாதா!” என்ற அதிர்வில் தன் வாயில் கையை வைத்துக் கொண்டாள் மணிச்சிகை.

என்ன தான் படித்தவள் என்றாலும், அவளுடைய துறை வேறு. மருத்துவத் துறை சார்ந்த எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. தனக்கு என்ன டெஸ்ட் எடுக்கப்பட்டது என்று நினைத்துப் பயந்தவளுக்கு தலை வின்வின் என்று வலிக்க ஆரம்பித்தது.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 7

அதிக கவலையில் தனக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் திணறிய மணிச்சிகை, எப்போது கண்ணயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

அவள் எழுந்து பார்க்கும் போது, தாமரை தடாகத்தின் மேலே இருந்து வந்த சூரிய ஒளி, அவளது கண்ணைக் கூசச் செய்தது.

‘அதற்குள் இரவு முடிந்து காலை வந்துவிட்டதா’ என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு ஒன்றைவிட்டாள் மணிச்சிகை.

ஒளிவியன் இரவு வரவில்லை என்ற நினைப்பே அவளுக்கு நிம்மதியைக் கொடுத்தது.

மெதுவாக எழுந்து குளித்துக் கிளம்பி வந்த மணிச்சிகைக்கு, அவள் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசி முடித்தவள், ‘அச்சோ இன்னைக்கு வேற முக்கியமான ப்ராஜெக்ட். இப்போதே லேட் ஆகிடுச்சே’ என்ற நினைப்பில், ஒளிவியன் தன் கழுத்தில் கட்டிய பொன் தாலியைக் கழட்டி வைத்துவிட்டு, தன் மெட்டியையும் கழட்டி வைத்து, எப்போதும் போல் அலுவலகம் செல்பவள் போல் தயாரானாள்.

நேற்று இரவு முழுவதும் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த ஒளிவியன், அப்போது தான் அங்கே பிரசன்னமானான்.

தன் அலைபேசியைப் பார்த்துக் கொண்டே வந்தவன், தன் முன்னே நின்று இருந்த மணிச்சிகையை, அப்போது தான் கீழிருந்து மேலாக பார்த்தான்.

‘ஏதோ குறையுதே!’ என்று நினைத்தவன், “உன்னுடைய தாலிய எங்கக் காணும்?” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் தூக்கியபடி.

“எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்ல. நான் வேலைக்கு வேற போகணும். அதனால் அதை எல்லாம் போட்டுக்கிட்டு என்னால ஷோ காட்ட முடியாது” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டபடி.

“நீ எங்க போறதா இருந்தாலும், உன் கழுத்தில், நான் கட்டிய தாலியோட தான் போகணும். இல்லைன்னா நீ எங்கயும் போக முடியாது” என்றான் வார்த்தைகளை தன் பற்களுக்குள் கடித்துத் தின்றபடி.

“ம்ச்... அதெல்லாம் முடியாது” என்று அவள் சொல்லும் போதே, “வாயை மூடு” என்று கர்ஜித்தவன், “சக்கரவர்த்தி குடும்பத்துக்குன்னு சில மரியாதை எல்லாம் இருக்கு. இன்னைக்கு நீ எங்கயும் போகவேண்டாம். நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு, இன்னைக்கு உன்னைப் பார்க்க கெஸ்ட் வர்றாங்க” என்று சொல்லிவிட்டு, முன்னே இருக்கும் அறைக்குள் சென்று மறைந்தான்.

வேண்டா வெறுப்பாக கழட்டி வைத்த அனைத்தையும் திரும்ப அணிந்த மணிச்சிகை, ‘அது சரி குரங்கு வேஷம் போட்டா, மரத்துக்கு மரம் தாவி தானே ஆகணும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போது திரும்பவும் அவள் அலைபேசி சிணுங்க அதனை எடுத்துத் தன் காதில் வைத்தவள், “என்னம்மா மறுபடியும் அறிவுரை சொல்றதுக்குக் கால் பண்ணீங்களா?” என்று அவள் சலித்துக் கொள்ள.

“அதுக்கு இல்ல. உன்னை நல்லா திட்டுறதுக்குத் தான் போன் பண்ணேன். என்னடி பண்ணி வச்சி இருக்க? நேத்து உன் மாமியார் கிட்ட காபியே போடத் தெரியாதுன்னு சொன்னியாம்? அவங்க எனக்குப் போன் பண்ணி உங்க பொண்ணுக்கு இதை கூட சொல்லித் தரலையான்னு கேட்குறாங்க. எனக்கு எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா?” என்று மணிச்சிகை மிகப்பெரிய தவறு செய்து விட்டதைப் போல பேசினார் ரத்னா.

‘அதுக்குள்ள போட்டுக் கொடுத்துடுச்சா இந்தக் கிழவி’ என்று தன் மனதிற்குள் வித்யாவைத் திட்டியவள், வெளியே தன் அன்னையிடம், “சரி நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க?” என்றாள்

“நீ தான் உனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு பொய் சொல்லி வச்சு இருக்கியே, அதனால நானும் அவள் எல்லாத்தையும் வேகமா கத்துக்குவாள்னு சொல்லிட்டேன்” என்றதும் பெருமூச்சி விட்டவள், “ரொம்ப நல்லது. நான் வைக்குறேன்” என்று அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே, இணைப்பைத் துண்டித்தாள்.

‘சமையல் வேலை எல்லாம் செய்யத் தெரியம்ன்னு சொல்லி நல்ல பெயர் வாங்கினா, எனக்கு இவங்க என்ன விருதா கொடுக்கப் போறாங்க! நான் என்ன செய்தாலும் தப்பு கண்டுப்பிடிச்சு பேசுவாங்க. அதுக்கு எதுவும் தெரியாதுன்னு பொய் சொல்றதே பெட்டர்’ என்று நினைத்துக் கொண்டே, கீழே இறங்கி வந்தவளைப் பார்த்த வித்யா, “இது தான் மகாராணி இறங்கி வரும் நேரமா? மணி ஒன்பது ஆச்சு” என்றவர் முன்பே, தயங்கியபடி வந்து நின்றவள், “எனக்குப் பசிக்குது அத்தை. என்ன டிபன் பண்ணி இருக்கீங்க” என்றாள் தன் வயிற்றைத் தடவியபடி.

“உனக்கு எப்ப தான் பசிக்காம இருக்கும். எப்ப பார்த்தாலும் பசிக்குது பசிக்குதுன்னுட்டு... டைனிங் டேபிள்ல எல்லாத்தையும் எடுத்து வச்சி இருக்கேன். ஒளி கீழ இறங்கி வந்ததும், அவனோட சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடு” என்க, தன் தலையை அட்டிக்கொண்டாள் மணிச்சிகை.

“இங்கப்பாரும்மா, நாளையில் இருந்து வேகமாக எழுந்து வந்து, கூடமாட ஒத்தாசைக்காவது இரு” என்று இதையும் சேர்த்தே சொன்னார் வித்யா.

பின் ஒளிவியனுடன் உணவு அருந்தும் போது, அவன் பெரியதாக எதையும் பேசாதது, அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.

சாப்பிட்டு முடித்ததும், அவன் அலுவலகம் சென்றுவிட, வந்திருந்த அவனது உறவினர்களோடு உரையாடுவது அவளுக்கு எரிச்சலைத் தான் தந்தது.

வந்திருந்த மத்திய வயது பெண் ஒருவர், “ஏன் வித்யா, உன் மருமகள் குடும்பமும் பணக்காரங்கன்னு தான் சொன்ன, ஆனா உன் மருமகள் கழுத்தில் தாலியைத் தவிர வேற ஒன்னும் இல்லையே” என்று அங்காலாய்க்க, வித்யாவின் பார்வை கோபத்தோடு தான், மணியைத் துளைத்து எடுத்தது.

மணியைத் தனியாக சமையல் அறைக்குக் கூட்டி சென்றவர், “நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு, நீ இப்படி வந்து நிற்குறியே!” என்று கடிந்து கொள்ள, ‘நல்ல வேளை, நான் தாலியையும் சேர்த்தே கழட்டி வச்சதை இந்தம்மா பார்க்கல’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள், “எனக்கு அதெல்லாம் பிடிக்காது அத்தை. நான் இவ்வளவு பெரிய தாலியைக் கூட கஷ்டப்பட்டு தான் போட்டு இருக்கேன்” என்றாள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.

“ம்ச்.. இப்படி எல்லாம் பேசக்கூடாது. சக்கரவர்த்தி குடும்பத்து மருமகளை யாரும் எதுவும் பேசுறது எனக்குப் பிடிக்காது. இனி புரிஞ்சி நடந்துப்பன்னு நான் நம்புறேன்” என்று கண்டிப்பான குரலில் சொன்னார் வித்யா.

அதற்கும் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு, “சரி அத்த, இனி வந்திருக்கும் ஆன்ட்டிகளுக்குப் பிடிச்ச மாதிரி நான் நகை போட்டுக்குறேன். சக்கரவர்த்தி குடும்ப மருமகளை யாரும் எதுவும் பேசிடக் கூடாது பாருங்க” என்றாள் சாதாரணமாக.

இவள் நக்கலாக பேசுகின்றாளா, அல்லது அறியாமையால் பேசுகின்றாளா! என்று எதுவும் வித்யாவிற்கு விளங்கவில்லை.

“அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி எல்லாம் நீ இருக்க வேண்டாம். புதுப்பொண்ணு மாதிரி இருன்னு தான் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

அவர் சென்றதும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்த மணி, ‘மாமியாரை டீல் பண்றது ஒன்னும் பெரிய வேலை எல்லாம் இல்லை போல. இப்படியே எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வச்சிக்கிட்டா, இந்தம்மாவும் நம்புது’ என்று நினைத்தவளுக்கு, வித்யாவின் இன்னொரு முகம் தெரியவே இல்லை.

அன்றைய நாள், ஒளிவியன் உறவினருடன் சந்திப்பில் எப்படியோ முடிய, சமையல் வேளையிலும் வித்யாவிற்கு உதவி செய்தவள், அலுப்புடன் கட்டிலில் படுத்தாள்.

அப்போது அங்கே வந்த ஒளிவியன், “நேத்து எனக்கு வேலை இருந்தது. இன்னைக்கு நான் ப்ரீ தான்” என்றபடி தன் டையைக் கழட்ட, அடித்துப் பிடித்து தன் படுக்கையில் இருந்து எழுந்தவள், “என்ன செய்யுறீங்க ஒளிவியன்” என்று அதிர்ச்சியில் கத்தி விட்டாள்.

“பார்த்தா தெரியல, நேத்து நடக்காததை இன்னைக்கு நடத்தப்போறேன்” என்று சொல்லி அவளை நெருங்கியவன் நெஞ்சில், தன் இரண்டு கையையும் வைத்துத் தடுத்தவள், “நான் தான் எனக்கு நேரம் வேணும்னு சொன்னேன்ல” என்றவள் குரல் தெளிவாக வந்தாலும், மணியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டு தான் இருந்தது.

“இதுக்கும் நான், பதில் நேத்தே சொல்லிட்டேன்னு நினைக்குறேன்” என்றவன் கை பெண்ணவளின் இடையைச் சுற்றி வளைத்தது.

“ஆனா... டெஸ்ட் ரிசல்ட் இன்னும் வரலையே” என்றாள் திக்கித் திணறியக் குரலில்.

அவள் பேச்சில் அவனது புருவம் யோசனையோடு வளைய, “அதெல்லாம் வந்துருச்சி” என்றபடி அவளை மேலும் நெருங்கப்போக, தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி, அவனை ஒரே தள்ளாக தள்ளியவள், “பொய் சொல்லாதீங்க. எனக்கு என்ன டெஸ்ட் எடுத்தீங்கன்னு, எனக்கு இப்பவே தெரிஞ்சி ஆகணும்” என்றாள் கோபக்குரலில்.

தன் நெற்றியை நீவி விட்டவன், “அது என்ன டெஸ்ட்ன்னு உனக்கு நான் நேத்தே சொன்னேன் தானே!” என்றான் சாதாரண குரலில்.

“உங்களுக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரிஞ்சி இருக்கு. அப்படி தெரிஞ்சி தான் என்னைக் கல்யாணமும் பண்ணி இருக்கீங்க. பிறகு எதுக்காக வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க என்னைக் கூட்டிட்டுப் போனீங்க? அது நிஜமாவே அந்த டெஸ்ட் தானா?” என்று வரிசையாக கேள்விகளை அவனின் முன்னால் அடுக்கி வைத்தாள்.

அதற்கு எதுவும் பேசாதவன், பட்டென அவள் உதட்டில், அவன் தன் உதட்டைப் பொருத்தி எடுத்ததும், மணியின் உதட்டில் மின்சாரம் தாக்கிய உணர்வு ஏற்பட, பெண்ணவள் இப்போது, தான் நின்ற இடத்திலையே சிலையானாள்.

அதனைப் பார்த்துத் தன் ஒரு பக்க உதட்டைச் வளைத்து சிரித்தவன், “இது பேசுறதுக்கு உண்டான நேரம் கிடையாது மணி” என்றபடி இப்போது அவளது கன்னத்தில் அவன் முத்தம் வைக்க, இப்போதும் ஒரு வித மாய உலகில் இருந்த மணிச்சிகை, பேசவும் மறந்து போய், தன் கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டபடி நின்றிருந்தாள்.

ஆனால் இவர்களது இந்த நெருக்கத்தைக் காலம் அனுமதிக்கவில்லை போல.

ஒளிவியனின் அலைபேசி சத்தம் செய்ய, மணிச்சிகையை விடுவித்து, தன் காற்சட்டைப் பையில் இருந்த அலைபேசியை எடுத்துத் தன் காதில் வைத்தவன், “ஆங்... இதோ, இப்ப வந்துடுறேன்” என்றபடி, ஒளிவியன் அவள் இருக்கும் அறையில் இருந்து வெளியேறியதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.

தன் நெஞ்சில் கைவைத்தபடி, சிறிது நேரத்திற்கு முன்பு, ஒளிவியனின் முன்னால் தான் மயங்கி நின்றதை நினைத்து, கோபத்தில் வெட்கியவள், ‘இனி தினமும் இரவு, இந்த பயத்தோடு தான் வாழ வேண்டுமா’ என்ற நினைப்பில், கண்ணில் இருந்து கண்ணீர் கசிய, படுத்தபடி விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மணிச்சிகை.

***

“எல்லாம் ஓகே தானே ஒளி. ஒன்னும் பிரச்சனை இல்லை தானே! எல்லாம் நாம நினைச்ச மாதிரி தானே நடக்கும்” என்று ஐயத்தோடு கேட்டாள் ஒரு பெண்.

தன் மகிழுந்தை லாவகமாக ஓட்டியபடி, தன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்த ஒளிவியன், “எல்லாம் ஓகே தான். மணிச்சிகைக்கு செய்த டெஸ்ட்டின் ரிசல்ட் மட்டும் வந்தா போதும், நாம நினைச்சது நடக்க ஆரம்பிச்சிடும்” என்று நம்பிக்கையோடு சொன்னான்.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 8

“உன்னை எத்தனை மணிக்கு எழுந்துருச்சி வரச் சொன்னா, நீ எத்தனை மணிக்கு எழுந்துருச்சி வர்ற! இது தான் நீ எழுந்திருக்கும் நேரமா” என்று தன் கண்டிப்பான குரலில் கேட்டார் வித்யா.

“நீங்க சீக்கிரம் வரச்சொன்னதால் தான் கஷ்டப்பட்டு எட்டு மணிக்கு வந்துருக்கேன் அத்த” என்று பாவம் போல் தன் முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள் மணிச்சிகை.

“நாளையில் இருந்து ஏழு மணிக்குள் குளிச்சி கிளம்பி கீழ வந்துருக்கணும்” என்க, நல்ல பிள்ளை போல் தலையைத் தலையை அட்டிக் கொண்டாள் மணிச்சிகை.

“ஆமாம் ஒளி எங்க? இன்னும் தூங்கிட்டு தான் இருக்கானா? நேத்து வேகமா வீட்டுக்கு வந்துட்டானே! இன்னைக்கு ஜாக்கிங் போகுறதுக்குக் கூட இன்னும் கீழ இறங்கி வரல” என்று கேட்டார்.

‘அது யாருக்குத் தெரியும்! எப்படியோ ராத்திரி இங்க இருந்து போயிட்டார். அது வரைக்கும் நிம்மதி’ என்று நினைத்தவள், வெளியே வித்யாவிடம், எதுவோ சாமாளிக்க வருவதற்குள், அங்கே வந்த ஒளிவியன், “நேத்து கொஞ்சம் வேலை அதிகம்மா” என்று தன் தாயிடம் சொல்லியபடி, மணியைத் தான் பார்த்தான்.

“அப்படியாப்பா” என்றவர், தன் அருகே வெறுமனே நின்றபடி தங்களது வாயைப் பார்த்துக் கொண்டிருந்த மனிச்சிகையைப் பார்த்தவர், எரிச்சலுடன், “இன்னும் ஏன் அப்படியே நிக்குற? ஒளி வந்துட்டான் பாரு. போய் அவனுக்குக் காபி போட்டு எடுத்துட்டு வா” என்றார்.

தன் பெரிய கண்களை உருட்டி, “நானா அத்த?” என்றாள்.

“ம்ச்... உன்னைத் தான். சீக்கிரம் போட்டு எடுத்துட்டுவா” என்று வேலை ஏவினார்.

அவள் திரும்பவும் தன் கண்கள் இரண்டையும் உருட்டி முழிக்க, “வேண்டாம் அம்மா, நானே போட்டுக்குறேன்” என்றபடி காபி போடச் செல்ல, வித்யாவிற்கோ, மணியைப் பார்த்துக் கோபம் வந்தது.

ஆனால் உடனே அதனை அவளிடம் கட்டாமல், தன் வேளையில் கவனத்தைத் திருப்பினார்.

உணவு மேஜையில் வித்யா செய்த உணவுகளை எல்லாம் மணி எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அப்போது தான் அங்கே வந்தாள் ஒரு பெண்.

தன் இடப்பக்கம் நின்றபடி, தன்னைக் குறுகுறுவென்று யாரோ வெறிப்பதைப் போல தோன்ற, திரும்பிப்பார்த்த மணி, அங்கே ஒரு இளம்பெண் நிற்பதைப் பார்த்து, “யாரு நீங்க? எப்ப உள்ள வந்தீங்க?” என்றாள் கொஞ்சம் சத்தத்தைக் கூட்டி.

அதற்கு மணியை மிதப்பாகப் பார்த்துக் கொண்டே, உணவு உண்ணும் இருக்கையில் வந்து அமர்ந்த அப்பெண், “என்னுடைய வீட்டுக்கு வந்துட்டு, என்னையவே யாருன்னு கேட்குறியா?” என்றாள் திமிராக.

சமையல் அறையில் இருந்து வெளியே வந்த வித்யா, அப்பெண்ணைப் பார்த்து, “ரேகா... நான் பார்க்குறது நிஜம் தானா? நீ எப்படா வந்த?” என்று மகிழ்ச்சி பொங்க, தன் வயதையும் மறந்து ஓடி வந்து அப்பெண்ணை அணைத்துக் கொண்டார்.

இருவரும் தங்களுக்குள் கொஞ்சிக் கொள்ள, இதை எல்லாம் பார்த்த மணியோ, ‘என்ன இந்தம்மா இப்படி துள்ளி குதிக்குது. இது யாரோ இருக்கும்! ஒருவேள சொந்தக்கார பொண்ணா இருக்குமோ’ என்று நினைக்கும் போதே, மணியிடம் திரும்பிய வித்யா, “என்ன பார்க்குற? இவள் என்னுடைய மூத்த பொண்ணு ரேகா. உன்னுடைய அண்ணி. வாங்கன்னு சொல்லு” என்றார் அரட்டலாக.

“வா.. வாங்க அண்ணி” என்றாள் பயந்த குரலில், ஆனால் அவள் மனதிலோ, ‘ஒளிவியனுக்கு இப்படி ஒரு அக்கா வேற இருக்கா! பார்க்குற பார்வையே வில்லி பார்வையா இருக்குதே! இனி மாமியாரோடு சேர்த்து, நாத்தனாரையும் சமாளிக்கணுமா!’ என்று நினைத்த மணிச்சிகைக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

மணி நினைத்த மாதிரியே தான், அவளை எடை போடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் ரேகா.

“இவளோட அக்கா தான் மீனாவா?” என்றாள் மணியை ஏற இறங்கப் பார்த்தபடி, அதற்கு சற்றும் தாமதிக்காமல், “ஓ.. நீங்க தான் ஒளிவியனோட அக்காவா?” என்று அவளைப் போலவே கேட்டபடி ஏற இறங்கப் பார்த்து வைத்தாள் மணிச்சிகை.

அவளது பார்வையில் உள்ளம் கொதிக்க, “சும்மா சொல்லக் கூடாது உன் அக்காவைப் போலவே நீயும் சரியான கில்லாடி தான்” என்றபடி, வித்யாவைப் பார்த்த ரேகா, “அம்மா, நம்ம வீட்டுப் பழக்க வழக்கம் எதுவும் இவளுக்கு சொல்லித்தரலையா? பெரியவங்கன்னு மரியாதை இல்லாம பதில் பேச்சு பேசுறாள்” என்று குற்றம் படித்தாள்.

“இப்ப தானே நம்ம வீட்டுக்கு வந்திருக்கா ரேகா. கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் கத்துப்பா. ஆமாம் ஒரு வாரம் கழிச்சு தான் விசா கிடைக்கும்னு சொன்ன, அதுக்குள்ளே வந்துருச்சா?” என்று கேட்கும் போதே, அங்கே வந்த ராஜன், “ரேகா, எப்படா வந்த” என்று ஆரவாரமாய் கேட்டார்.

‘ஒன்னு கூடிட்டாய்ங்கய்யா... ஒன்னு கூடிட்டாய்ங்க... அடியே மணி இனி உன் பாடு திண்டாட்டம் தான். இருந்தாலும் இதை சும்மா விடக்கூடாது மணி. இவிங்கக்கிட்ட நீ மாட்டக்கூடாது, இவிங்க தான் உன்கிட்ட மாட்டணும்’ என்று நினைத்து, ரேகாவின் அருகே சென்றவள், “நல்லா இருக்கீங்களா அண்ணி, கல்யாணத் தன்னைக்கு, நான் உங்களை பார்க்கவே இல்லையா அதான் எனக்கு நீங்க யாருன்னு தெரியல” என்றாள் இளித்தபடி.

அதற்கு அவளை கிஞ்சித்துக்கும் மதிக்காத ரேகா, “அம்மா, எனக்கு ரொம்பவே அலுப்பா இருக்கு. நான் தூங்கப்போறேன்” என்றபடி இருக்கையில் இருந்து எழுந்தாள்.

ராஜன், “எப்படா வந்த? ராத்திரி வந்தியா? மாப்ள வரலையா?” என்று நலம் விசாரித்தார்.

“ஆமாம் அப்பா. ஏர்போர்ட்ல இருந்து ஒளி தான் என்னைக் கூட்டிட்டு வந்தான். கடைசி நேரத்தில் தான் எனக்கு விசா கிடைச்சது. அவருக்குக் கிடைக்கல” என்றாள் ரேகா.

“ச்சு... கேள்வி கேட்குறதை முதலில் நிறுத்துங்க” என்று தன் கணவரிடம் சொன்ன வித்யா, “நீ போடா தங்கம்” என்று செல்லம் கொஞ்சி அவளை அனுப்பி வைத்தார்.

உணவு உண்ண வந்த ஒளிவியனிடம், “அக்கா வந்துருக்கான்னு சொல்லவே இல்ல நீ” என்று குறைபட்டார் வித்யா.

“உங்களுக்கு சர்ப்ரைஸ்சா இருக்கட்டும்னு தான், இதை நான் சொல்லல அம்மா” என்று சொல்லியபடி இட்லியில் ஒரு வில்லை எடுத்து வாயில் வைத்தான்.

‘ஓ... இந்த இரும்பு இதயத்திற்குள் பாசமலர் வேற மலருதா’ என்று நினைத்து தனக்குள் சிரிப்பைக் கட்டுப் படுத்திக் கொண்ட மணிச்சிகைக்கு தெரியவில்லை, இந்த பாசமலர்கள் தான் இவளுக்கு எதிராக மிகப்பெரிய சதியைத் தீட்டிக் கொண்டு இருக்கின்றனர் என்பது.

மணியை ஒளிவியன் திருமணம் செய்ததே ரேகாவின் யோசனை தான். வெளிநாட்டில் இருக்கும் போதே, பல திட்டங்களைத் தீட்டி பலபேரை மண்டை காயவிட்ட ரேகா, இனி இந்தியா வந்ததில் இருந்து என்னவெல்லாம் செய்யப்போகின்றாளோ!

***

“இன்னைக்கு நான் கண்டிப்பா வேலைக்குப் போயே ஆகணும்” என்று ஒளிவியன் முன்பு வந்து நின்றாள் மணிச்சிகை.

தன் கையில் கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டே, “சக்கரவர்த்தி குடும்பத்து மருமகள் எங்கயும் வேலைக்குப் போகக்கூடாது” என்று ஒரே வாக்கியத்தில் முடித்தான்.

அதில் பதறிய மணி, “நேத்து, தாலி மெட்டி எல்லாம் போட்டா, போகலாம்னு சொன்னீங்க... இன்னைக்கு ஏன் மாத்தி சொல்றீங்க?” என்றாள் அப்பாவி போல்.

“தாலி மெட்டி போட்டு, வெளிய போகலாம்னு தான் சொன்னேன். வேலைக்குப் போகலாம்னு நான் சொல்லவே இல்ல” என்றான் உதட்டை ஒரு பக்கமாக வளைத்தபடி.

“ப்ளீஸ் ஒளி. என்னைப் போக விடுங்க. இந்த ப்ராஜெக்ட் முடிக்குற வரைக்குமாவது, நான் அங்க போயே ஆகணும்” என்று கெஞ்சினாள்.

“வாட்... இப்ப நீ என்னை என்ன சொல்லிக் கூப்பிட்ட?” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் தூக்கியபடி.

“அது... உங்களை எல்லாரும் அப்படி தானே கூப்பிடுறாங்க... ப்ளீஸ்ங்க நான் தான் ப்ராஜெக்ட் லீடர்” என்று சொல்லியபடி, தரையைப் பார்த்தாள்.

“சரி” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டவன், “நீ முதலில், என் அம்மா அப்பா அக்காக்கிட்ட போய் அனுமதி வாங்கு” என்றான்.

‘அடக்கடவுளே! நான் வேலைக்குப் போன மாதிரி தான்’ என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்டவள், வெளியே, “அவங்க சரின்னு சொன்னா, நான் போகலாமா?” என்று கேட்டாள்.

“அவங்க சரின்னு சொன்னா, என்கிட்ட திரும்பவும் வந்து நீ அனுமதி வாங்கணும். அப்ப என்னுடைய மூட் எப்படி இருக்கோ, அதைப் பொறுத்து தான், நான் உன்னை அனுமதிப்பேன்” என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்துவைத்த மணி, ‘என் வீட்ல, நான் ராத்திரி பிரண்ட்ஸ் கூட சுத்துறதுக்குத் தான் சுவர் ஏறி குதிப்பேன். ஆனா இங்க வேலைக்குப் போறதுக்கு எல்லாம் சுவர் ஏறி குதிக்கணும் போல’ என்று நினைத்து, ஒரு திட்டத்தை அப்போதே தீட்டி வைத்தாள் மணிச்சிகை.

அவள் முழித்த முழியைப் பார்த்த ஒளிவியன், “உன் பார்வையே சரியில்லையே” என்றபடி அவளை நெருங்கினான்.

பின் பக்கம் எட்டு வைத்த மணியோ, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஒளி” என்றாள் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு.

“இன்னைக்கு நைட் ரெடியா இரு. இன்னைக்கு யாரும் நமக்குத் தடையா வரப்போறது இல்ல” என்று அவள் கன்னத்தைத் தட்டிச் சென்றான்.

செல்லும் ஒளிவியனின் முதுகைப் பார்த்த மணியோ, “ஐயையோ இன்னைக்கு வேற ராத்திரி வருமே! எனக்கு ரொம்ப பிடிச்சதே ராத்திரி நேரம் தான். ஆனா இந்த ஒளிவியனால், நான் ராத்திரியவே வெறுக்குறேன்” என்று வாய்விட்டு புலம்ப மட்டும் தான் முடிந்தது மணிச்சிகைக்கு.

***

“இவளைப் பார்த்தாலே, அந்த மீனா முகம் தான் என் முன்னாடி வந்து நின்னு, எனக்குக் கோபத்தை ஏற்படுத்துது அம்மா” என்று தன் அறையில் அமர்ந்தபடி, தன் அன்னை வித்யாவிடம் கூறிக் கொண்டிருந்தாள் ரேகா.

“அந்த மீனா மாதிரி எல்லாம் இவள் கிடையாது ரேகா. இந்தப் பொண்ணு நல்ல பொண்ணா இருக்குது. சொல்லப்போனா நம்ம குடும்பத்துக்கு ஏத்தப் பொண்ணு. எதுவும் தெரியாத அப்பாவி வேற” என்று முகத்தில் தோன்றிய சிரிப்புடன் பேசினார்.

அதனைக் கேட்ட ரேகாவோ கடுப்புடன், “அம்மா, இருந்தாலும் நீங்க இவ்வளவு வெள்ளந்தியா இருக்கக்கூடாது. அவள் உங்களை நல்லாவே நடிச்சு ஏமாத்துறாள். நீங்க முதலில் நல்ல மாமியாரா நடந்துக்கோங்க. இல்லைன்னா அவள் உங்க தலையில் நல்லா மிளகாய் அரைத்துவிடுவாள்” என்றாள்.

“என்ன ரேகா சொல்ற?” என்றார் பயத்துடன்.

“ஆமாம் அம்மா. அவள் முகத்தைப் பார்த்தாலே தெரியலையா? சரி அது இருக்கட்டும் தம்பிக்கும் அவளுக்கும் இடையில் எப்படி போகுது?” என்றாள் முகத்தைக் கூர்மையாக வைத்துக் கொண்டு.

“அதெல்லாம் நமக்கு எதுக்கு ரேகா. கல்யாணம் முடிச்சாச்சு அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க” என்றார் சாதாரணமாக.

“ஐயோ அம்மா, நீங்க ஏன் தான் இப்படி இருக்கீங்களோ. உங்களுக்கு இப்ப ஒன்னும் தெரியாது, பின்னாடி உங்கப் பையனே அவள் பேச்சைக் கேட்டுட்டு, உங்களைப் பேசுவான் அப்ப தான் தெரியும்” என்று நன்றாக வத்தி வைக்க,

இன்று காலையில் காபி போட சென்ற மணியை வேண்டாம் என்று சொல்லி தானே காபி போட்டு ஒளிவியன் பருகியது அவரின் நியாபகத்திற்கு வந்து அவரை வேறு மாதிரியாக யோசிக்க வைத்தது.

“அப்ப நம்ம ஒளி சொன்னதை எல்லாம் நிச்சயம் கேட்பா தானே!” என்று கண்கள் மின்ன கேட்டார் வித்யா.

‘தான் ஒன்று சொல்ல, தன் தாய் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டார்’ என்று தன் தலையில் கைவைத்துக் கொண்ட ரேகா, “மருமகளை உங்கப் பிடியில் வச்சிக்கோங்கன்னு சொல்றேன் அம்மா”

“சரிடி அதைவிடு. நாம நினைச்சது நடக்கும் தானே! மணி ரொம்பவே நல்ல பொண்ணு. இந்த விஷயத்தைப் பத்தி ஒளி இன்னைக்கே மணியிடம் பேசிட்டா, எல்லாமே நல்லதா முடிஞ்சிடும்” என்று விட்டத்தைப் பார்த்துக் கும்பிடு போட்டார்.

அதற்கு எரிச்சலுடன் தன் தாயைப் பார்த்த ரேகா, “ஏன் சொல்லணும்? அப்படி சொன்னதால் தான், அந்த மீனா ஓடிப்போனாள். இப்ப அதைக் கேட்டு அவள் தங்கச்சியும் ஓடவா?” என்றாள் கோபமாக.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 9

ரேகாவின் பேச்சைக் கேட்ட வித்யாவின் தேகம் எல்லாம் படபடத்து நடுங்கியது.

“இப்படி எல்லாம் விளையாட்டுக்குக் கூட பேசாத ரேகா. நம்ம சக்கரவர்த்தி குடும்பத்துக்குன்னு மரியாதை இருக்கு” என்று ரேகாவைக் கண்டித்தார்.

ஆம் சக்கரவர்த்தி குடும்பம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. அதில் விவாகரத்து என்ற சொல்லே ஏற்கப்படாத சொல்லாக இருக்க, இதில் ரேகா பேசுவதை எல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை வித்யாவிற்கு.

“நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன். அவள் அக்கா ஓடிப் போனாள் தானே! இவளை அந்த மாதிரி விட்டுடக்கூடாதுன்னு தான் சொல்றேன்” என்று இறங்கி வந்தாள் ரேகா.

“நான் தான் சொல்றேனே, அந்த குடும்பத்து, பசங்கள்ல நல்ல பொண்ணுன்னா அது மணி தான். அப்படி எல்லாம் எதுவும் நடக்காது” என்றார் நம்பிக்கையான குரலில்.

“அப்படி எதுவும் இல்லைன்னா நல்லது தான் அம்மா” என்று சொல்லிக் கொண்டாள் ரேகா. ஆனால் அவள் அகத்தின் உள்ளே, மணியை தங்களது வழிக்குக் கொண்டு வர, பல விதமான திட்டங்களை தீட்டிக் கொண்டு இருந்தாள்.

தன் சொந்த குடும்பத்தினரையே எட்டி தள்ளி வைத்திருக்கும் மணிச்சிகைக்கு ரேகாவின் சூழ்ச்சிகள் என்ன தான் செய்யப் போகிறது?

****

தன் அலுவலகத்தில் அமர்ந்து வேகமாக கணினியின் கீபோர்டை தட்டிக் கொண்டு இருந்தாள் மணிச்சிகை.

“இரண்டு நாள்ல முடிக்காத வேலையை, இந்த ஒரே நாள்ல முடிக்கலாம்னு பார்க்குறியா மணி?” என்று சிரிப்புடன் கேட்டாள் மணியின் அருகே இருந்த ஒருவள்.

“ம்ம்...” என்று வெறுமனே தலையை மட்டும் ஆட்டிக் கொண்டவளின் பார்வை எல்லாம் கணினியின் திரையை நோக்கி இருந்தது.

“உன் அக்கா கல்யாணம் எப்படி போச்சு?” என்று ஆரம்பிக்க, அவளை நோக்கி கும்பிடு போட்ட மணிச்சிகை, “அம்மா தாயே என் வேலையைப் பார்க்க விடு” என்றதும் தான் அந்தப் பெண் அமைதியடைந்தாள்.

தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்க, தன் தாலி செயினை சட்டைக்குள் மறைத்து வைத்திருந்தாள் மணிச்சிகை.

அவள் வேலையில் குறுக்கிடுவது போல், அவள் அலைபேசி சத்தம் செய்ய, அவள் தேகம் அதல பாதாளதிற்குள் விழுவது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

‘ஐயோ, நான் வெளிய வந்ததை அதற்குள் கண்டுபிடிச்சிட்டாரா இந்த ஒளிவியன்’ என்று நினைத்துக் கொண்டே நடுங்கும் கைகளுடன் அலைபேசியை எடுக்க, அலைபேசியின் திரையில் அம்மா என்ற சொல்லைப் பார்த்ததும், நிம்மதியுடன் அதனை எடுத்துத் தன் காதில் வைத்தாள்.

“எடுத்ததும் அவளிடம் நலம் விசாரித்தவர், அங்க ஒன்னும் பிரச்சனை இல்லை தானே மணி. நீ நல்லா தானே இருக்க?” என்று எப்போதும் போல் கேட்டார் ரத்னா.

வெளியே எழுந்து வந்த மணி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்று கொண்டு தன் தாயிடம் பேச ஆரம்பித்தாள்.

“அம்மா, ஒளிவியனுக்கு அக்கா இருக்குன்னு நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல” என்று கேட்டாள்.

“சொல்லவே இல்லையா! இதுக்குத் தான் முக்கியமான விஷயம் பேசும் போது வீட்ல இருக்கணுன்னு சொல்றது. சரி அதை விடு, அந்தப் பொண்ணு வெளிநாட்டுல இருக்குதுன்னு சொன்னாங்க, நீ பேசுனியா?” என்றார் ஆர்வமுடன்.

“ம்... இன்னைக்கு தான் இங்க வந்தாங்க” என்றாள் முகத்தை சுழித்தபடி.

“அப்படியா, சரி அந்தப் பொண்ணுக்கிட்ட நல்லா பேசி நல்லா நடந்துக்கோ, ஏன்னா சக்கரவர்த்தி குடும்பம், அந்தப் பெண்ணை ரொம்பவே தாங்குறாங்க. சம்பந்தி அம்மா கூட, மூச்சு மூந்நூறு தரம், அந்தப் பெண்ணைப் பத்தி தான் பேசுனாங்க. விசா கிடைக்கலைன்னு அந்தப் பெண்ணால் கல்யாணத்துக்குக் கூட வரமுடியலையாம்” என்று பேசிக்கொண்டே சென்றார்.

“ம்ச்... அப்படி எல்லாம் என்னால் பொய்யா நடிக்க முடியாது அம்மா. அவங்க என்கிட்ட எப்படி நடந்துப்பாங்களோ நானும் அவங்கக்கிட்ட அப்படி தான் நடந்துப்பேன். நான் வைக்குறேன்” என்று அவள் இணைப்பை அணைப்பதற்குள், “பேசும் போதே போனை கட் பண்ணாத மணி. நேத்து இப்படித் தான் உன் அப்பா பேசும் போது கட் பண்ணிட்ட, அவருக்கு வந்த கோபத்தைப் பார்க்கணுமே! பிறகு நான் தான் உன்னுடைய போன் ரிப்பேர்ன்னு சொல்லி சமாளிச்சேன்” என்றார்.

இங்கே மணி அமைதியாக இருக்க, கனிவு ததும்பும் குரலில், “மணி, அப்பா சொன்னது நியாபகம் இருக்கு தானே...” என்று அவர் இழுக்க, இப்போது தன் அன்னையின் மீதே மணிக்குக் கோபம் வந்துவிட்டது.

“எப்பப் பார்த்தாலும் குடும்ப ரகசியம் ரகசியம்னு சொல்லாதீங்க... கடுப்பா இருக்கு. நீங்க இன்னொரு தடவ இப்படி பேசுனா...” என்று அவள் சொல்லும் போதே, பதறிய ரத்னா, “அம்மாவை மன்னிச்சிடுடா.. இனி நான் அப்படி எல்லாம் பேச மாட்டேன்” என்றார்.

இப்போது தன் அலைபேசியை அணைத்தவள், கண்களில் தேங்கி இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, திரும்பவும் வேலை பார்க்க ஆரம்பித்தாள். எப்போதும் கலங்காத மணிச்சிகை, இந்த இரண்டு நாளாக அதிக மன அழுத்தத்தில் இருக்கின்றாள். ஒன்று ஒளிவியனால், இன்னொரு இவர்கள் சொன்ன அந்த குடும்ப ரகசியத்தால். அந்த ரகசியமும் உடையும் காலம் வெகு தொலைவில் இல்லை.

***

மாலை அதிவிரைவாக, வீட்டிற்கு வந்த மணி, எப்படி வெளியேறி சென்றாளோ, அதனைப் போலவே தோட்டத்தின் பக்கம் சுவர் ஏறி குதித்து, பைப் கம்பிகள் மூலம், தான் இருக்கும் அறையின் பால்கனிக்கு வந்தாள்.

அங்கிருந்து படுக்கை அறைக்குள் நுழையும் போது, அவள் கட்டிலில் ஜாம்பமாக ஒளிவியன் அமர்ந்திருப்பதைப் பார்த்தவளுக்கு, ஒரு கணம் இதயம் மேலெழும்பி துடித்தது.

தன் அலைபேசியில் எதையோ மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், தன் முன்னே வந்து நின்ற மணியைப் பார்த்து, உதட்டை ஒரு பக்கமாக வளைத்தபடி, “ஓ... வந்துட்டியா? உன்னைத் தான் ரொம்ப நேரமா தேடுறேன்” என்க.

தன் குரலை திடப்படுத்திக் கொண்டு, “நான் பால்கனியில் நின்னு காத்து வாங்கிட்டு இருந்தேனா, அதான், நீங்க வந்ததை நான் கவனிக்கல” என்றாள் இளித்துக் கொண்டு.

அவள் கையைப் பிடித்துத் தன் அருகில் அமரவைத்தவன், “இங்க வா... இதை நீ கண்டிப்பா பார்த்தே ஆகணும்” என்று சொல்லிக் கொண்டே, தன் அலைபேசியை அவள் முன்னால் நீட்டினான்.

“என்னது?” என்றபடி அதனைப் பார்த்தவளுக்கு, உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

அதில் மணிச்சிகை சுவர் ஏறி குதித்து வெளியே செல்லும் காட்சி தான் ஓடிக்கொண்டு இருந்தது. அதைத் தான் ஒளிவியன் பார்த்துக் கொண்டிருந்தான் அலைபேசியில்.

இதனை எப்படி சமாளிப்பது என்பதனை அறியாமல், மணியின் உதடுகள் டைப்படிக்க ஆரம்பிக்க, அவள் மனதோ, வார்த்தைகளைக் கடினப்பட்டு தேடிக் கொண்டு இருந்தது.

அவளது நிலையைப் பார்த்து சிரித்தவன், “வீட்டை சுத்தி சிசிடிவி கேமரா இருக்குது. உன்னால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என்றான் தன் கீழ் உதட்டைப் பற்களால் கடித்தபடி.

‘ஐயையோ! பிக்பாஸ் மாதிரியான வீட்டுக்குள் வந்து இப்படி மாட்டிக்கிட்டேனே... இப்ப என்ன செய்யுறது’ என்று நினைத்தபடி உடனடியாக, தன் நெஞ்சைப் பிடித்த மணி, “ஐயோ, எனக்கு எதுவோ செய்யுதே!” என்று மயக்கம் வருவதைப் போல் அப்படியே கட்டிலில் படுத்துக் கொண்டு தன் இன்னொரு கையால் தன் தலையைப் பிடிக்க, “அடடா! அப்படியா! நான் டாக்டரைக் கூப்பிடுறேன்” என்று அவன் அலைபேசியை எடுக்க, மணிச்சிகையோ, மயக்கம் வந்தவள் போல் தன் கண்களை மூடிக் கொண்டாள்.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்கா. உடம்பு சரியில்லைன்னு இதையே சாக்கா வச்சி, இன்னைக்கு ராத்திரியையும் கடத்திற வேண்டியது தான். இல்லாட்டி இந்த ஒளி வேற பர்ஸ்ட் நைட் கொண்டாடி விடுவார்’ என்று அவள் நினைக்கும் போதே, “கஷ்டப்பட்டு ரொம்ப நடிக்காத மணி. இனி நேர் வழியிலையே போ... இப்படி எல்லாம் சுவர் ஏறி குதிக்காத” என்று தன் இடையில் கையைக் குற்றியபடி ஒளிவியன் கூறினான்.

அதற்கும் அவள் அசையவில்லை. ‘இவர் என்ன கிரீன் ப்ளாக் மாதிரி பேசுறாரு. இவர் நல்லவரா இல்லைக் கெட்டவரா?’ என்று மனதினுள் யோசித்தவள் கண்களைத் திறக்கவில்லை.

அவளைப் பார்த்து பெருமூச்சி விட்ட ஒளிவியன், “இன்னும் உனக்கு என்ன தான் வேணும்?” என்று கேட்டான்.

அவள் அதற்கும் கொஞ்சம் கூட அசையவே இல்லை.

‘எவ்வளவு நேரம் தான் இப்படியே கிடக்குறன்னு நானும் பார்க்குறேன்’ என்று தனக்குள் நினைத்த ஒளிவியன், அங்கிருந்து நகன்று சென்றான்.

‘எவ்வளவு நேரம் தான் உடம்பு சரியில்லாதது மாதிரி நடிக்குறது? வயிறு வேற பசிக்குதே!’ என்று நினைத்தபடி, தன் ஒரு கண்ணை மட்டும் சிறியதாக திறந்தபடி, மணி பார்க்க, அவள் முன்னே தன் கையைக் கட்டிக் கொண்டபடி நின்று இருந்தாள் ரேகா.

தன் தம்பி அங்கிருக்கும் வேறு அறைக்குள் இருக்க, இங்கே மணி தனியாக படுத்திருப்பதைப் பார்த்த ரேகாவிற்கு திருப்தியாக இருந்தது.

அவளைப் பார்த்து அடித்துப் பிடித்து எழுந்த மணி, “நீங்க எப்ப அண்ணி வந்தீங்க?” என்று கேட்டபடி எழுந்து அவள் முன்னால் வந்து நின்றாள்.

மணியை ஏற இறங்கப் பார்த்தவள், “விளக்கு வைக்கும் நேரத்துல தூங்குற? உன் வீட்ல என்ன தான் உனக்கு சொல்லி வளர்த்தாங்களோ” என்றாள் வெறுப்புடன்.

‘மை லைப் மை ரூல்ஸ்ன்னு வாட்ஸ்ஆப்ல ஸ்டேட்டஸ் போட்டு ஜாலியா சுத்திக் கிட்டு இருந்தேன். இந்தக் கல்யாணம் ஆனதும் தான் ஆச்சு, இதை எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு’ என்று தனக்குள் புலம்பியவள், வெளியே, “உடம்பு சரியில்லை அண்ணி” என்றாள் வலுவிழந்த குரலில்.

அதில் பதறிய ரேகா, “என்ன உடம்பு சரியில்லையா? மாத்திரை போட்டியா? வா டாக்டரைப் பார்க்கலாம்” என்று ரேகா படபடக்க, மணியின் நெற்றியில் யோசனை முடிச்சுக்கள்.

‘இவங்க என்ன, திடீர்னு என் மேல இவ்வளவு அக்கறை காட்டுறாங்க!’ என்று நினைத்து, “மாத்திரை போட்டேன் அண்ணி சரியாகிடும்” என்றாள் மணிச்சிகை.

“ஏன் நிற்குற? போய் படுத்துக்கோ. உடம்பை கவனமா பார்த்துக்கணும்” என்று அவளைப் படுக்க வைத்து, அவள் மேல் போர்வையைப் போர்த்தி விட்டு சென்றாள் ரேகா.

‘என்னடா நடக்குது இங்க? இந்த நாத்தனாருக்கு, அப்படி என்ன திடீர் பாசம்’ என்று யோசித்துக் கொண்டே இருந்தவள், எப்போது கண்ணயர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.

ரேகாவின் இந்த அக்கறைக்குப் பின்னே காரணம் காரியம் இல்லாமல் இல்லை. ஆனால் இதெல்லாம் மணிக்கு எங்கே தெரியப்போகிறது? மணியின் கற்பனைக்கு எட்டாத காரியத்தை தான் அக்காவும் தம்பியும் செய்யப் போகின்றனரே!
 

NNO7

Moderator
அத்தியாயம் – 10

மணிச்சிகை நன்றாக தூங்கி விட்டு எழுந்திரிக்க, ஒளிவியன் சத்தம் கேட்டு மீண்டும் தூங்குவது போல் பாசாங்கு செய்தாள்.

“தூங்குனது மாதிரி நடிச்சது போதும் முதல்ல எழுந்து சாப்பிடு” என்று சொல்லியபடி அங்கே வந்தான் ஒளிவியன்.

சாப்பாட்டை வேலையாட்கள் வந்து வைத்து விட்டு செல்ல, அதன் வாசனை மூக்கைத் துளைக்க எழுந்து அமர்ந்த மணிச்சிகை, தன் தலையைப் பிடித்தபடி, “எனக்கு உடம்பே சரியில்ல, சாப்பிட்டுவிட்டு தூங்குறேன்” என்றபடி அவள் இருக்கையில் வந்து அமர, அவளை மேலும் கீழுமாகப் பார்த்தவன், ‘எதுக்காக இந்த நடிப்பு நடிக்குறாள்’ என்று நினைத்தவன், அவளுடன் தானும் சேர்ந்து அமர்ந்தான்.

அமைதியாக உணவை இருவரும் உண்டு கொண்டிருக்க, அப்போது தான் தனது சந்தேகத்தைக் கேட்டான் ஒளிவியன்.

“உன் அக்கா மீனாவுடன் காண்டாக்ட்டில் இருக்கியா?” என்று முகத்தைச் சுருக்கியபடி கேட்டான்.

“இல்ல” என்று ஒரே வார்த்தையில் முடித்தாள் மணிச்சிகை.

“நீ சொல்றதை நம்பலாமா?” என்றான் முகத்தைக் கூர்மையாக வைத்துக் கொண்டு.

“நானும் என் அக்காவும் அவ்வளவு க்ளோஸ் கிடையாது” என்றாள் ஒரு மாதிரியான் குரலில்.

“ஆனா மீனா என்கிட்ட சொல்லும் போது அப்படி ஒன்னும் சொல்லலையே! எனக்கு என்னுடைய தங்கச்சியை ரொம்பவே புடிக்கும்ன்னு சொன்னா” என்று கேட்க, மீனா பற்றிய பேச்சு வந்ததும் ஆத்திரத்தில், “அப்ப அவள் கிட்டயே போய் கேளுங்க. என்னை எதுக்காக தொந்தரவு செய்யுறீங்க?” என்று எரிந்து விழுந்தாள்.

இதனைக் கேட்ட ஒளிவியன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

இப்போது தன் குரலை இலகுவாக்கிக் கொண்ட மணிச்சிகை, “திடீர்னு என்ன மீனாவைப் பத்தி எல்லாம் கேட்குறீங்க?” என்றாள்.

“ஏன் அவளைப் பத்தி நான் கேட்டா உனக்குக் கோபம் வருதா?” என்றான் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி.

“எனக்கு எதுக்காக கோபம் வரப்போகுது? அவள் உங்களைத் தான் கல்யாணம் செய்வேன்னு சொல்லும் போதே, அதுக்குப் பயங்கரமா எதிர்ப்பு தெரிவிச்சது நான் தான். அப்படி இருக்க, நீங்க பேசுறது வேடிக்கையா இருக்கு” என்று சொல்லிவிட்டு, திரும்பவும் தன் உணவில் கண்ணைப் பதித்து உண்ண ஆரம்பித்தாள்.

“இப்ப அவள் திடீர்னு இங்க வந்து நின்னா என்ன பண்ணுவ?” என்று மணி ஐயம் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கேட்டான் ஒளிவியன்.

அதற்கு அசட்டாக சிரித்துக் கொண்ட மணி, “என் வீட்ல எல்லாரும் அவள் பேச்சைத் தான் கேட்பாங்க. அவள் என்னிடம் இருக்கும் எதைக் கேட்டாலும், நான் அவளுக்குத் தரத் தான் செய்யணும்” என்றாள் அவனைப் பார்த்தபடி.

“என்னைக் கேட்டாலும் நீ தந்துடுவியா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான்.

அதற்குத் தன் தோள்களைக் குலுக்கியபடி, “கண்டிப்பா. அவளுக்குப் பதிலாத் தானே நான் இங்க வந்துருக்கேன். அவள் திரும்பி வந்துட்டா எனக்கு என்ன வேல..” என்று சொல்லும் போதே, இடை மறித்தவன், “இது ஒன்னும் மெகா சீரியல் கிடையாது, நீ சொல்ற மாதிரி நடக்குறதுக்கு. நீ சக்கரவர்த்தி குடும்பத்து மருமகள் ஆகிட்ட. இது ஒரு வழிப் பாதை தான். இதில் இருந்து நீயே நினைச்சாலும் வெளிய போக முடியாது” என்றான் அவளை நேர்பார்வை பார்த்தபடி.

அவனது முகத்தோற்றம் பயங்கரத்தை விளைவிப்பதாக இல்லை. இருந்தும் அவளது நெஞ்சம் திகிலடைந்தது.

அவள் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டவன், “இந்த ஒளிவியன் எப்போதும் உனக்கானவன் மட்டும் தான்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

அவன் பேச்சில் அப்படியே சிலை போன்று அமர்ந்திருந்த மணி, ‘இப்ப என்ன சொல்லிட்டுப் போறாரு? அவர் கண்ணில் ஒரு ஒளி தெரிஞ்சதே அதுக்கு என்ன அர்த்தம்? இவர் மீனாவை காதலிச்சது பொய்யா?’ என்று தனக்குள் நினைத்துக் குழம்ப, அவளது அலைபேசி அடித்தது.

அவளது தந்தை ரவி தான் அழைத்து இருந்தார். சொல்ல முடியாத துன்பமும், அவள் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.

மணி இணைப்பை எடுத்து தன் காதில் வைக்க, எடுத்ததுமே, “அங்கே எல்லார்கிட்டயும் நல்ல பெயர் வாங்கிட்டியா? எல்லாரும் உன்னை நம்ப ஆரம்பிச்சிட்டாங்களா?” என்றவர், ஒரு கணம் நிறுத்தி, “வீட்டுக்கு வந்துட்டுப் போ” என்று சொல்லி வைத்தார்.

இரவு மணி எட்டைக் கடந்து கொண்டிருக்க, ‘இப்போது எதுக்காக தனக்குப் போன் செய்தார்’ என்ற நினைப்புடன் கீழே வந்தாள் மணிச்சிகை.

ஒளிவியன் அங்கு இல்லாததால் வித்யாவிடம் சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள்.

ரவியின் அலுவலக அறையில் அமர்ந்தவள், “எதுக்காக என்னை சீக்கிரமா வரச்சொன்னீங்க?” என்றாள் மொட்டையாக.

“அப்பான்னு சொல்ல உனக்கு வாய் வராதா?” என்று ரவியோ பல்லைக் கடிக்க, ஒரு பெருமூச்சை வெளியிட்ட மணி, “சொல்லுங்க அப்பா” என்றாள்.

“இது ரொம்பவே முக்கியமான விஷயம். உன்னுடைய போனுக்கு வரும் அழைப்புகள் ஒளிவியன் ஆட்களால் ஒட்டுக் கேட்கப்படுது அதுக்காகத் தான், நான் உன்னை நேரில் வரவச்சேன்” என்றார் ஆழ்ந்த குரலில்.

அதில் உடனே யோசனைக்குத் தாவியவள், ‘மீனாவிடம் பேசவே கூடாதுன்னு நினைக்குறாரா? ஆனா ஏன்?’ என்று நினைத்தவளிடம், “இப்ப மீனா செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்யுற இடத்தில் நீ தான் இருக்க. ஒழுங்கா உன் பழைய வேலைகளை எல்லாம் தூக்கிப் போட்டு, உடனடியா சக்கரவர்த்தி நிறுவனத்துக்கு வேலைக்குப் போ” என்றார் கட்டளையாக.

அதில் எரிச்சல் அடைந்தவள், “மீனா செய்ய இருந்த வேலைகளை எல்லாம் செய்யுறதுக்குத் தான், என்னை அங்கே அனுப்பி வச்சீங்களா அப்பா” என்றாள் தன் புருவம் நெருங்க.

“நீ எப்படி வேணாலும் வச்சிக்கோ. எனக்கு என் நிறுவனம் தான் முதலில் முக்கியம், அதுக்குப் பின்னாடி பணம், அதுக்கும் அப்புறம் தான் பிள்ளைங்க எல்லாம். மீனா மேல நான் மிகவும் நம்பிக்கை வச்சி இருந்தேன் அதை எல்லாம், அவள் குழி தோண்டி புதைத்துவிட்டாள். ஆனா நீ எல்லாத்தையும், எனக்காக மீட்டு எடுப்பன்னு நம்புறேன். சக்கரவர்த்தி நிறுவனத்துக்குள் போய், நம்ம நிறுவனத்துக்குத் தேவையான அனைத்தையும் நீ செய்யணும்” என்று நீட்டமாகப் பேசிக்கொண்டே சென்றார்.

“நான் எதுக்காக அப்படி செய்யணும்? நீங்க என்னைத் தவறு செய்யத் தூண்டுற மாதிரி இருக்கு. இதெல்லாம் தப்புன்னு உங்களுக்குத் தெரியலையா?” என்றாள் கடுமையான குரலில்.

“நான் என்ன தப்பா கேட்டுட்டேன், சக்ரவர்த்தி குடும்பத்துக்குப் போற ப்ராஜெக்ட் சிலதை நமக்குக் கொண்டு வரக் கேட்டேன். இதெல்லாம் உன்னால் செய்ய முடியாதா? என்ன இருந்தாலும், உன் உடம்பில் ஓடுறது அந்த சக்காடை ரத்தம் தானே!” என்று வார்த்தைகளை விட்டார்.

அந்தக் கொடிய மொழிகளைக் கேட்ட மணிச்சிகை திக்பிரமை பிடித்தவள் போல் ரவியைப் பார்த்தபடி நின்றாள்.

ஒரு கணம் சென்ற பிறகு தான் ரவிக்கு, தான் பேசியதே புரிய, “மணி...” என்றபடி அவள் அருகே வரப்பார்க்க, “இல்ல வராதீங்க...” என்றாள் கண்கள் கலங்க.

இதுவரைக்கும் ரவி அவளை எவ்வளவோ திட்டி இருக்கின்றார், ஏன் அடித்தும் இருக்கின்றார். அப்போது எல்லாம் ஒன்றும் கவலைப் படாத மணிச்சிகை, இன்று அவரது வார்த்தைகளில் வேரோடிந்த மரம் போலானாள்.

வீட்டிற்கு எப்போதும் வேண்டாத பிள்ளையாக இருந்தாலும், ரவி இவ்வளவு நாள் செய்தது எல்லாம் தன் நல்லதிற்குத் தான் என்று எண்ணியவள், இப்போது அப்படி எண்ணவில்லை. ஏனெனில் அவரின் பேச்சு அப்படி இருந்தது.

பாசமே காட்டத் தெரியாத ரவி, தன் தொண்டையைச் சொறும்பிக் கொண்டே, “இங்கப்பாரு, நான் பெரியாளு. என் வார்த்தைகள் கொஞ்சம் முன்னப் பின்ன தான் இருக்கும். இதெல்லாம் பெருசா எடுத்துக்காத. என் ரத்தம் தான் உன் உடம்பிலும் ஓடுது. உன்னை அப்படி சொன்னது, என்னையும் அப்படி சொன்ன மாதிரி தான் புரியுதா?” என்றார்.

அதற்குக் கண்களில் வலியுடன், அவரைப் பார்த்து, வெற்று சிரிப்பை சிந்திய மணி, “நீங்க என்ன அர்த்தத்தில் அப்படி சொன்னீங்கன்னு கூட புரிஞ்சிக்க முடியாத அளவு தத்தி நான் இல்ல. இனி இதைப் பத்தி மேலும் பேசவும் நான் விரும்பல” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அந்த இடத்திற்கு வந்த வீர், இருவரது முகத்தையும் பார்த்துவிட்டு, “உன் போன் எங்க மணி? உனக்கு அழைப்பு போகலன்னதும், ஒளிவியன் எனக்குப் போன் அடிக்குறாரு. வா நானே உன்னைக் கொண்டு போய் விடுறேன்” என்றபடி, அவள் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான்.

தன் தங்கையின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவன், “அப்பா சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காத” என்றான் ஆறுதலாக.

“என் கையை விடு. நானே போயிப்பேன்” என்றாள் வெறுமனே.

அவள் பேச்சில் அண்ணன் என்ற அழைப்பைக் காணாதவன், ‘அப்பா எதுவோ பெருசா பேசிட்டார் போல’ என்று வருந்த மட்டும் தான் முடிந்தது அவனால்.

“வா மணி, பாட்டி வேற ஹால்ல தான் உட்கார்ந்து இருக்காங்க” என்று சொல்லியபடி, திரும்பவும், அவளது கையைப் பற்றிக் கீழே கூட்டி சென்றான்.

வெடுக்கென்று தன் கையை எடுத்துவிட்டவள், “இங்க நான் எல்லாருக்கும் பயந்து பயந்து தான் வாழணும் இல்லையா! ஏன்னா நீங்க எல்லாரும் தானே எனக்கு வாழ்க்கைக் கொடுத்து இருக்கீங்க” என்று கோபத்துடன் பேசிவிட்டு, வேகமாக கீழ் இறங்கி சென்றவள், தன் தாயின் ரத்னா அழைப்பைக் கூட காதில் வாங்காமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

அச்சத்துடன் வீர் அருகே வந்த ரத்னா, “மணிக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு கோபமா போறாள்” என்றார் படபடப்பான குரலில்.

“அப்பா எதுவோ பேசிட்டார் போல அம்மா” என்றான்.

“உன் அப்பா எப்போதும் பேசுறது தானே! அதுக்காகவெல்லாம் மணி இப்படி செய்யமாட்டாள்” என்றார் கண்கள் கலங்க.

நடப்பதை எல்லாம் கண்களில் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த காயத்திரி பாட்டி, “என் பையன் ரவி, அவளுடைய தரம் என்னன்னு சொல்லி புரிய வச்சி இருப்பான். அதுக்குத் தான் இந்த வேண்டாதவள் இந்த ஓட்டம் ஓடுறாள்” என்று சொல்லி சிரித்தவரைப் பார்த்து, வீரால் முறைக்க மட்டுமே முடிந்தது.

இங்கே ஒளிவியன் வீட்டு வரவேற்பு அறைக்குள் நுழைந்தவளை, அனைவரும் கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தன் வீட்டில் இருந்து இங்கே வந்துவிட்டாலும், மணியின் உள்ளம் அமைதியை அடையவில்லை. அவள் மனதில் ஏதோ அர்த்தம் இல்லாத கவலை குடி கொண்டு இருந்தது.

அனைவரும் ஒரு வித முகபாவனையில் இருப்பதைப் பார்த்த மணி, ‘நான் வீட்டுக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டுத் தானே போனேன். எதுக்காக இப்படி பார்க்குறாங்க’ என்ற எண்ணத்தில் அவள் வர, அவள் முன்னே வந்து நின்ற ஒளிவியன் முகத்தில் கோப ரேகைகள் தார்மாறாக ஓட, என்னவென்று புரியாமல் மணி முழிக்கும் போதே, தன் இரும்பு போன்ற கைகளால் மணிச்சிகையின் கழுத்தைப் பிடித்த ஒளிவியன், “நீ... நீ மீனாவின் தங்கச்சி கிடையாதா?” என்று கோபத்தில் உதடு துடிக்கக் கேட்டான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 11

கோபத்தில் ருத்ர மூர்த்தியாகி, தன்னை கோபத்தோடு வெறிக்கும் ஒளிவியனைக் கண்ட மணிச்சிகை, அதற்கான காரணத்தை யோசிக்கும் போதே, அவளின் கழுத்தைப் பற்றி இருந்தான் ஒளிவியன்.

ஏற்கனவே அதிகமான மனச் சோர்வில் இருந்த மணிக்கு, திடீரென்று தன் கழுத்தைப் பிடித்து, ஒளிவியன் கேட்ட விஷயம் எதுவும் அவள் காதில் விழவில்லை.

மனவலி தாங்காமல், மணியின் கண்கள் சொறுகிய பின்னர் தான் ஒளிவியன் அவளின் கழுத்தில் இருந்து தன் கையை எடுத்தான். அப்போது மயங்கி சரியப்போன மணியை, இடையில் கைவைத்துத் தூக்கிக் கொண்டவன், தன் அறை நோக்கிப் படி ஏறினான்.

அதீத கோபத்தில் அங்கே அமர்ந்து இருந்த ரேகா, எழுந்து வந்து, “இன்னும் என்ன பண்ணப் போற ஒளி. எதுக்காக இவளைக் கூட்டிட்டுப் போற?” என்றாள் கண்கள் வெறிக்க.

“மணியின் நிலை சரியில்லை அக்கா” என்றவனுக்கு முன்பு இருந்த கோபம் இப்போது இல்லை. கோபம் என்பதை விட அதிர்ச்சி என்றே சொல்லலாம். தான் நினைத்தது நடக்கவில்லை என்ற வெறியில் தான் கோபத்தை மணிச்சிகையின் மீது காட்டினான் ஒளிவியன்.

“அதுக்காக இவளை வச்சி என்ன செய்யப் போற? நாம இப்ப எவ்வளவு இக்கட்டான நிலையில் இருக்கோம்னு உனக்குத் தெரியுதா இல்லையா? இனி நாம என்ன பண்ணப் போறோம்?” என்றாள் ஒளிவியனின் நடவடிக்கைகள் பிடிக்காதவளாக.

“அதுக்காக இவளை அப்படியே விட்டுடச் சொல்றியா?” என்று சொல்லும் போதே, இவர்கள் அருகில் வந்த ராஜன், “ஒரு பொண்ணை தத்து எடுத்து வளர்க்கும் அளவுக்கு அந்த ரவி நல்லவன் கிடையாதே ஒளி. ஒருவேள இந்தப் பொண்ணு அவனுக்குத் தவறான வழியில் பிறந்தவளா இருக்கலாம்” என்று யோசனையுடன் சொன்னவர், பின் கோபமாகி, “நம்ம சக்கரவர்த்தி குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. போயும் போயும் இப்படி ஒருத்தியை அவன் நம்ம தலையில் கட்டி வச்சிட்டான்” என்றார் பல்லைக் கடித்தபடி.

அதற்கு எதுவும் பேசாத வித்யாவின் முகத்தில் அடுத்து என்ன என்ற கவலை மட்டுமே இருந்தது.

தன் தந்தையின் பேச்சுக்கு எதுவும் பேசாத ஒளிவியன், மணியுடன் மாடி ஏறினான்.

அதனைப் பார்த்து எரிச்சல் அடைந்த ரேகா, “அப்பா என்னப்பா இது” என்றாள் ராஜனிடம்.

“ஒளி ஒரு முடிவு எடுத்துட்டான்னா, அவன் வேற யார் பேச்சையும் கேட்க மாட்டான். இது உனக்கும் தெரியும் தானே!” என்றார் அவளிடம்.

“எனக்கும் தெரியும் தான் அப்பா. ஆனா நிலா...” என்று அவள் சொல்லும் போதே, தன் வாயைத் திறந்த வித்யா, “எனக்கும் அதை நினைச்சு தான் கவலையா இருக்குது ரேகா. இனி நாம என்ன செய்யப் போறோம்” என்று அவர் கேட்டுக் கொண்டே கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.

இங்கே மயக்க நிலையில் இருந்து எழுந்திருத்த மணி, ஒளிவியன் கொடுத்த தண்ணீரைப் பருகி விட்டு, “என் மேல கோப்படாதீங்க, நான் அத்தைக்கிட்ட சொல்லிட்டுத் தான், என் வீட்டுக்குப் போனேன்” என்றாள் பயந்தவளாக.

“நான் அதைப் பத்தி உன்கிட்ட கேட்கவே இல்லை மணி. எதுக்காக நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற?” என்றான் அவள் மேல் தன் கையை வைத்தபடி.

ஆறுதலாக பேசும் ஒளிவியனை ஏழாவது அதிசயமாகப் பார்த்த மணி, “உங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும்?” என்றாள் தரையைப் பார்த்துக் கொண்டே

”ம்... சொல்லு” என்க.

“என் அப்பா என்னை, சக்கரவர்த்தி நிறுவனதிற்காக வேலை பார்க்க சொல்றார்” என்று சொல்லிவிட்டு ஒளிவியன் முகத்தை தான் பார்த்தாள்.

“உனக்கு விருப்பம் இருந்தா தாராளமா வரலாம்” என்றான் மெல்லியதாக புன்னகைத்தபடி.

உள்ளுக்குள் கவலைகள் கோத்துக்கொண்டு இருக்க, மணியிடம் இதுபோல் ஆறுதலாக பேசும் ஒளிவியனுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாகத் தான் இருந்தது.

“அப்ப நாளையில் இருந்து நான் அங்க வரேன்” என்று ஒரு மாதிரியாகத் தான் பேசினாள் மணி.

என்ன தான் ஒதுங்கி இருந்தாலும், தன் குடும்பத்தோடு பொருந்திப் போகவே முயற்சி செய்து கொண்டிருந்தாள் மணி. அதன் முதல் அடியாக, ரவியிடம் முடியாது என்று சொல்லிவிட்டு வந்த வேலையை இப்போது செய்ய ஆரம்பமானாள்.

ஆனால் ஒளிவியனின் பேச்சில் இருந்த இலக்கம் அவளை யோசிக்கவும் வைத்தது. அதனால், ‘ஒளிவியனுக்கு எதிரா நான் தவறு செய்யக் கூடாது’ என்று நினைத்தவள், வேறு எதுவும் சொல்லவில்லை.

ஒளிவியன், “நீ வேலை செய்யுற இடம் என்ன ஆச்சு? முக்கியமான ப்ராஜெக்ட் இருக்குன்னு சொன்ன?” என்று வினாவினான்.

“மறந்துட்டேன் ஒளி. அந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும் வரேன் ஒளி” என்க, தன் தலையை ஆட்டிக் கொண்டான்.

இப்போது அவள் கன்னத்தில் தன் கையை வைத்தவன், “இங்கப்பாரு மணிச்சிகை. இனி இது தான் உன் குடும்பம். உன்னுடைய பின்புலம் எப்படி பட்டதா இருந்தாலும் அதைப் பத்தி எனக்குக் கவலை இல்ல” என்று கூறியபடி அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

இப்போது மணிக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது, தான் ஒளிவியனுக்கு செய்யவிருந்த, துரோகத்தை நினைத்து. முதன் முதலில் ஒளிவியனைப் பார்க்கும் போது, அவன் ஒருவனை தன் துப்பாக்கியால் சுட்டதெல்லாம் அவளின் நியாபகத்தில் அப்போது இல்லை.

‘நிஜமாவே ஒளி எனக்காகப் பார்க்கின்றாரா! ஒளியுடன் உண்டான எனது வாழ்வு, அம்மா சொன்னது போலவே நல்லா இருக்குமா!’ என்று தனக்குள் நினைத்துக் கொண்ட மணி, ஒளிவியன் ஆச்சரியம் கொள்ளும் வகையில் அமர்ந்த வாக்கில், அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளின் முதுகை நீவிவிட்டவன், உன் கவலைக்கு உண்டான வடிகாலாக நான் இருப்பேன் என்பது போல், அவளுக்கு துணை நின்றான். எல்லாமே சுபமாக முடிந்துவிட்டால், அங்கே பூமி சுழல்வதற்கான வேலை ஏது? ஆம் பிடிக்காது இணைந்த வாழ்க்கையில், ஒரு நல்ல மாற்றம் நிகழும் போது, திடீரென்று விரிசல் வந்து கொண்டு தான் இருக்கின்றது.

மணியை படுக்க வைத்துவிட்டுக் கீழே இறங்கி வந்த ஒளிவியன், வித்யா படபடப்போடு இருப்பதைப் பார்த்து, “நான் நிச்சயம் இதுக்கு ஒரு வழி செய்வேன் அம்மா” என்றான் உறுதியான குரலில்.

ரேகாவோ, “நீ செஞ்சதை தான் நானும் பார்த்தேனே ஒளி” என்றாள் முகத்தை சுழித்துக் கொண்டபடி.

“அக்கா, நான் தான் சொல்றேனே! நான் எப்படியாவது மாற்று ஏற்பாடு செய்யுறேன். நான் சொன்னதைச் செய்வேன்னு உனக்கும் தெரியும் தானே” என்றான் ஒளிவியன்.

அவன் அருகே வந்த வித்யா, “எனக்கு இருக்கும் அதே மன வேதனை தான் உனக்கும் இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும் ஒளி. அம்மா உன்னை நம்புறேன்” என்றார் கலங்கிய குரலில்.

“நானும் உன்னை நம்ப தான் செஞ்சிக்கிட்டு இருந்தேன் ஒளி. ஆனா நீ இப்ப அந்த மணிச்சிகைக்காக கவலைப்படுறது எனக்கு பயத்தைத் தருது. நடக்குறதை எல்லாம் பார்க்கும் போது, எங்க நீ மாறிட்டியோன்னு சந்தேகம் வருது” என்று நீட்டமாகப் பேசினாள் ரேகா.

யாராலும் தோற்கடிக்க முடியாத உயரத்தில், தொழிலில் தனக்கென ஒரு உயரத்தை உருவாக்கி அதில் மின்னுபவன் தான் ஒளிவியன். அவனிடம் சாதாரணமாகக் கூட யாரும் பேசிட முடியாது தான். ஆனால் அது ரேகாவைத் தவிர.

ராஜராஜ சோழனுக்கு குந்தவை எப்படியோ அதே போல் தான் நான் என் தம்பிக்கு என்று சிறுவயதில் இருந்தே சொல்லிக் கொண்டு இருக்கும் ரேகா, தொழிலில் கூட தன்னிடம் கேட்டே ஒளிவியனை அனைத்தையும் செய்ய வைத்து இருந்தாள்.

பங்குகள் முதலீடுகள் என அனைத்திலும் முதன்மையாக செயல்படும் ஒளிவியன், ரேகாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தான் செய்வான் எதையும். அப்படித் தான் அவனைப் பழக்கப்படுத்தி இருந்தார் ராஜன்.

ரேகா இதைச் செய் என்று சொன்னால், மறு பேச்சுப் பேசாமல் அதனை அப்படியே செய்பவன் தான் ஒளிவியன். அவள் சொல்லித் தானே மணிச்சிகையையும் திருமணம் செய்தான். இனியும் அது தொடருமோ!

மூச்சை இழுத்து வெளியே விட்ட ஒளிவியன், “நான் மாற்றிட்டேன்னு நீ நினைக்குரியா அக்கா? என் மேல் உனக்கு அவ்வளவு தான் நம்பிக்கை?” என்றான் சோர்ந்த குரலில்.

“அப்ப நான் சொல்றதை செய் ஒளி. இனி எந்த உபயோகமும் இல்லாத அந்த மணிச்சிகை இந்த வீட்டில் இருக்கக் கூடாது” என்றாள் கோபத்தின் மொத்த உருவமும் ஆகி.

அதனைக் கேட்ட வித்யாவும் ஒளிவியனும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். ராஜனோ, ரேகா சொல்வது தான் சரி என்பது போல் நின்று இருந்தார்.

***

மணிச்சிகை ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டுக் கண் விழிக்கும் போது, அவள் அருகில் ஒளிவியன் இல்லாததைப் பார்த்து, “இன்னைக்கும் வேலை இருக்குன்னு வெளிய போயிட்டார் போல” என்று வாய்விட்டுக் கூறியபடி எழுந்து அமர்ந்தவள், தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க, அதில் ரவியிடம் இருந்து தவறிய அழைப்புகள் இரண்டும், வீரிடம் இருந்து ஐந்தும் வந்திருந்தது.

அதனைப் பார்த்து, வெற்று சிரிப்பை சிந்தியவள், ‘விலகி விலகிப் போனாலும், என்னைக் கட்டி வைக்க தான் பார்க்குறீங்க’ என்று நினைத்துக் கொண்டவள், ‘ஒளி நல்லவரா இல்லைக் கெட்டவரான்னு எனக்குத் தெரியாது. ஆனா அவருக்கு எதிரா நான் என்னைக்குமே வேலை பார்க்க மாட்டேன்.’ என்று நினைக்கும் போதே, வேறு ஒரு நம்பரில் இருந்து மணிக்கு அழைப்பு வந்தது.

புருவ முடிச்சோடு அதனை எடுத்துத் தன் காதில் வைத்தாள்.

அந்தப்பக்கம் பேசிய பெண்ணின் குரலில், அவள் யார் என்று அறிந்து கொண்ட மணியின் கண்கள் பெரியதாக விரிந்தது.

“எப்படி இருக்க மணி? நல்லா இருக்கியா?” என்று மீனா தான் பேசினாள்.

அதிர்ச்சியில் இருந்து உடனே உடைபட்டவளாக, “அக்கா, நீ... நீ எங்க இருக்க?” என்றாள் மணி.

“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு. நல்லா இருக்கியா இல்லையா?” என்றாள் அழுத்தம் மிகுந்த குரலில்.

“எனக்கு என்ன? நான் நல்லாத் தான் இருக்கேன்” என்று மணி வாயில் இருந்து வந்ததும், பேய் சிரிப்பு சிரித்த மீனா, “அப்ப, அந்த ஒளிவியன் தன் வேலையை இன்னும் உன்கிட்ட காமிக்கலைன்னு நினைக்குறேன்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தாள்.

அதில் எரிச்சல் அடைந்த மணி, “இப்ப உனக்கு என்ன தான் வேணும்? எதுக்காக எனக்குப் போன் செய்த?” என்றாள்.

தன் சிரிப்பைக் கைவிட்ட மீனா, “என்னுடைய நல்ல வாழ்க்கை உனக்கு வந்துருச்சுன்னு, அதிகமா சந்தோஷப்பட்டு ஆடாத மணி. ஆட்டை வெட்டுறதுக்கு முன்னாடி, அதுக்கு மாலை போட்டு, மஞ்சத்தண்ணி ஊத்தி கொண்டாட தான் செய்வாங்க. அந்த ஆடு தான் நீ. இப்போதைக்கு உனக்கு மாலை மட்டும் தான் அந்த ஒளிவியன் குடும்பம் போட்டு இருக்கு. இனி மஞ்சத்தண்ணீ ஊத்தின உடனே, உன்னை வெட்டிடுவாங்க” என்று புரியாதபடி பேசினாள் மீனா.

மணி எரிச்சலுடன் எதுவும் பேசாமல் இருக்க, இப்போது தன் குரலை சிரியதாக்கிப் பேசிய மீனா, “உன்னை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போய் டெஸ்ட் எடுத்து இருப்பாங்களே! அது பாஸிடிவ் ஆகிடுச்சா?” என்று கேட்டு மறுபடியும் கேவலமாக சிரிக்க, இங்கே மணியின் இதயம் தான் படபடக்க ஆரம்பித்தது.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 12

பைத்தியம் போல் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கும், மீனாவின் பேச்சுக்கள், மணிச்சிகையின் காதில் இருந்து இரத்தத்தை வரவைப்பதாக இருக்க, “இப்ப எதுக்காக எனக்குப் போன் செய்த? நான் ஒளிவியனைக் கல்யாணம் செய்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று ஆற்றாமையுடன் கேட்டாள் மணி.

“இப்படி நடக்கும்னு எனக்கு முன்னாடியே தெரியும் மணி. அப்பாவுக்கு அவர் பிள்ளைங்க மேல கூட அவ்வளவு பாசம் கிடையாது. ஆனா அவர் நிறுவனத்தின் மீது உயிரே வச்சி இருக்கார். இப்ப நிறுவனம் இருக்கும் நிலையில் சக்கரவர்த்தி குடும்பத்தின் உதவி தேவைப்படுது. நான் இங்க இருந்து போனதும், உன்னை என் இடத்துல வச்சி அப்பா இந்த விஷயத்தை எப்படியோ முடிச்சிட்டார். ஆனா இதில் மாட்டிக்கிட்டது நீ தான்” என்று நீட்டமாகப் பேசினாள்.

மீனா சொல்லிய வார்த்தைகள் அவள் மனதில் சொல்ல முடியாத வேதனையைக் கொடுத்தது.

“எதையாவது உளறிக்கிட்டு இருக்காத... சரி எதுவோ டெஸ்ட்ன்னு சொன்னியே என்னது அது?” என்று தன் குரலைக் கூர்மையாக்கிக் கேட்டாள் மணிச்சிகை.

“ஒ... அதுவே உனக்குத் தெரியாதா? அதெல்லாம் தெரியாமத் தான் செம்மறி ஆடு மாதிரி அந்த ஒளிவியன் சொல்றதை எல்லாம் செஞ்சிக்கிட்டு இருந்தியா?” என்றாள் இளக்காரமாய்.

“அது விர்ஜினிட்டி டெஸ்ட்ன்னு ஒளி சொன்னாரு” என்று சொன்னவள் குரலில் உயிரே இல்லை.

“அட பைத்தியமே! அது இம்யூனாலஜி டெஸ்ட். உன்னுடைய திசுக்கள், கல்லீரலை தானம் செய்யுறவங்களுக்குப் பொருந்துதான்னு பார்க்குறதுக்கு எடுக்கும் டெஸ்ட்” என்று மீனா சொல்ல, கல்லீரல் தானம் என்ற பெயரைக் கேட்டவுடன் மணிக்கு தூக்கி வாரிப் போட்டது.

அவள் எதுவும் கேட்பதற்கு முன்பே, பேசிய மீனா, “உண்மையை சொல்லப் போனா, அந்த ஒளிவியன் விரும்பினது என்னை இல்ல. அவனுக்குத் தேவை எல்லாம் என்னுடைய கல்லீரல் தான். எதுக்குன்னு தெரியுமா? அவனுடைய காதலியைக் காப்பாத்துறதுக்கு” என்று மீனா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும், அவள் காதுக்குள் ஆழமாக இறங்கி, இதயத்தில் தீராத காயத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.

ஆனால் மீனா சொன்னதை நம்பாதவள் போல் பேசிய மணி, “எப்ப பார்த்தாலும் என்னை வேதனைப் படுத்திப் பார்க்குறதையே வேலையா வச்சி இருக்க நீ. உன் பேச்சை எல்லாம் கேட்டுட்டு என்னால் இருக்க முடியாது”என்றவள் கண்களில் துளித்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

மீனா சொல்வது உண்மையாக தெரிந்தாலும், மணிக்கு ஒளிவியன் மேல் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.

“அப்படின்னா ஒன்னுசெய் மணி. இதைப் பத்தி நேர ஒளிவியன் கிட்டயே போய் கேளு. அந்த ஒளிவியனுக்கு ஒரு காதலி இருக்காள். அவள் உடம்புக்கு மிகவும் முடியாத நிலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கின்றாள். அவளுக்குத் தான் கல்லீரல் தேவைப்படுது. நீ நினைக்குற மாதிரி கல்லீரல் தானம்ங்குறது சாதாரண ரத்த தானம் மாதிரி கிடையாது. உன் கல்லீரலை வெட்டி தான் அவளுக்கு வைப்பாங்க. அந்த பொண்ணு ஏற்கனவே உடம்பு சரியில்லாத பொண்ணு. ஒரு தடவை மட்டும் உன்னிடம் இருந்து வெட்டமாட்டங்க. அடிக்கடி நீ இதை செய்யணும். அப்படி தான் அந்த ஒளிவியன் ஏமாற்றுக்காரன் என்கிட்ட சொன்னான். இதனால் பிரச்சனை இல்ல, உனக்கு அது வளர்ந்துடும்னு சொன்னான்” என்றாள் பல்லைக் கடித்தபடி.

அப்போது தான் சமீபத்தில், தான் படித்த செய்தி மணியின் நியாபகத்திற்கு வந்தது, ‘அறுபது சதவீதம் தன் கல்லீரலை கணவனின் உறவினருக்கு தானம் செய்த பெண் மரணம்’ என்ற செய்தி அவள் முன்னாள் வந்து நிற்க, தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்ட மணி, ‘இதெல்லாம் உண்மையாக இருக்காது’ என்று தன் மனதினுள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

நடுங்கும் உதடுடன், “கல்லீரல் தானம், பொதுவா அவங்க குடும்பம் தானே செய்யும்” என்றாள் மணி.

“அந்த பொண்ணுக்குக் குடும்பம் இல்ல. இதுல ரேர் ப்ளட் குரூப் வேற. அதாவது என்னுடைய ரத்தம் தான். என் திசுக்களும் அந்த பொண்ணுடன் ஒத்துப் போச்சு. உன்னுடைய ரத்த வகையும் அதே தான்னு ஒளிவியனுக்கு நல்லாவே தெரியும்” என்று அவள் சொல்லும் போதே, மணியின் அகத்தில் எதுவோ உடைவது போல் இருந்தது.

தொடர்ந்து பேசிய மீனா, “என்ன தான் நாம ரெண்டு பேரும் உடன் பிறந்தவர்கள் இல்லை என்றாலும், நம்ம ரெண்டு பேர் உடம்பிலையும் ஓடுறது ஒரே குடும்பத்து ரத்தம் தானே! அதனால் தான் சொல்றேன் உன்னை நீயே காப்பாத்திக்கிட்டு அங்க இருந்து தப்பிச்சிடு” என்று சொல்லிவிட்டு வைத்தாள் மீனா.

கீழே தன் அக்கா ரேகா சொல்லியதை மறுத்துவிட்டுப் புயல் வேகத்தில் தன் அறைக்குள் செல்லப்போனவனின் முன்னே வந்து நின்றாள் மணிச்சிகை.

அவளுடைய முகமெல்லாம் சிவந்து போய், ஆத்திரமும் ஆங்காரமும் பொங்கியது என்றால், அவளது இதயம் கவலையால் நிரம்பி இருந்தது.

தன் முன்னே வந்து நின்றவளைப் பார்த்து, “என்னாச்சி மணி? உடம்புக்கு எதுவும் செய்யுதா?” என்று அக்கறையுடன் கேட்டான்.

அதற்கு மறுப்பாக தன் தலையை ஆட்டியவள், “கல்யாணம் முடிஞ்ச கையோட என்னை எங்க கூட்டிட்டுப் போனீங்க” என்று அழுத்தம் மிகுந்த குரலில் கேட்டுவைத்தாள் மணி.

அவளின் பேச்சிலையே எதையோ உணர்ந்தவன், “மீனா உனக்கு போன் பண்ணினாளா? அவளுடன் பேசக்கூடாதுன்னு நான் சொன்னேன் தானே!” என்றவன் குரலில் கோபம் தெரித்தது.

“ஏன் பேசக்கூடாது? அப்படி பேசுனா, உங்கக் குட்டு வெளிப்பட்டு விடும்னு பயப்படுறீங்களா?” என்று அவனை நேருக்குக் நேராகப் பார்த்தபடி கேட்டாள்.

“எனக்கு யாரைப் பார்த்தும் பயம் கிடையாது” என்றவன் புருவங்கள் மேலேறின, உதடுகள் கோபத்தில் துடித்தன.

தொடர்ந்து பேசியவன், “உனக்கு எடுத்த டெஸ்ட் பத்தி மீனாவே சொல்லி இருப்பான்னு நினைக்குறேன். உன்னிடம் அதைச் சொல்லாமல் விட்டது என் தப்பு தான். ஆனா இப்ப அதை உன்கிட்ட சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கேன். என்னுடன் வா” என்று அந்த இரவு நேரத்தில் மணிச்சிகையைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றான்.

மகிழுந்தில் செல்லும் போதே, சிறிது நேரத்திற்கு முன்பு ஒளிவியன் பேசிய பேச்சுக்கள், அவள் இதயத்தில் ஈட்டியை இறக்குவதைப் போல் இருந்தது.

‘என்ன டெஸ்ட் எடுக்குறாங்கன்னு கூட தெரியாமல் இருந்த முட்டாளா நான்’ என்று தன்னை நினைத்தே அவளுக்குக் கோபம் வந்தது. அது எந்த டெஸ்ட்டாக இருந்தாலும் , தன்னிடம் சொல்லாமல் அப்படி செய்தது தவறு தானே என்று அவளின் இதயம் வேறு அலறியது.

முன்பு மணியை டெஸ்ட் எடுக்கக் கூட்டிக்கொண்டு வந்த அதே மருத்துவமனைக்கு தான் இப்போதும் கூட்டிக் கொண்டு வந்திருந்தான் ஒளிவியன்.

அந்த மருத்துவமனையில், ஒரு அறைக்குள் மணியை அழைத்துச் சென்றான். அங்கே வேரோடிந்த கொடி போல், ஒரு பெண் படுக்கையில் படுத்துக் கிடக்க, அவள் முகத்தில் உயிர் காக்கும் கருவி பொருத்தப்பட்டு இருந்தது.

வெளியில் நின்றே அவளை மணிக்குக் காண்பித்தவன், “இவள் தான் நிலா. இவளுக்காகத் தான் நாங்க கல்லீரல் டோனரை தேடிக்கிட்டு இருக்கோம்” என்றான்.

“எனக்குத் தெரியாமலையே என் கல்லீரலை எடுக்கலாம்னு நினைச்சீங்களா ஒளிவியன்” என்றவள், அவனது மனதில் உள்ள வார்த்தைகளைப் படிக்க முயன்றாள்.

“அப்படி இல்ல மணி. எல்லா டெஸ்ட்டும் முடிஞ்சதும் உன்கிட்ட சொல்லலாம்னு தான் நாங்க நினைச்சோம்” என்றவன் பேச்சில் மணியிடம் மௌனம் நிரம்பியது.

பின் தன் மௌனத்தைக் கலைத்தவள், “இதுக்காகத் தான், என் அக்கா கல்யாணம் நடக்கும் நேரம், அன்னைக்கு ஓடி போனாளா?” என்று கேட்க, அவனோ தன் தலையை மேலும் கீழுமாக ஆட்டினான்.

தன் உதட்டைக் கடித்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவள், “நான் தருவேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்?” என்றாள்.

“உன் அக்கா மாதிரி நீ கொடுமைக்காரி இல்லைன்னு உன்னைப் பார்த்த அன்னைக்கே தெரிஞ்சது. நீ நல்ல பொண்ணு அதனால் கண்டிப்பா செய்வன்னு நினைச்சேன்” என்றவன் பேச்சு அதிர்ச்சியைக் கொடுத்தது.

‘இப்படி செய்தால் தான் நீ நல்ல பெண்’ என்ற பிம்பத்தை ஒளிவியன் ஏற்படுத்தியது, அவளுக்கு அளவில்லா ஆத்திரத்தைக் கொடுத்தது. இருந்தும் அமைதி காத்தாள் மணிச்சிகை.

இப்படியும் சிலர் இருக்கத் தான் செய்கின்றனர். சுயமாக சிந்திக்கத் தெரிந்த எவராலும் இவர்களை எல்லாம் சகித்துக் கொள்ள முடியாது.

மெதுவான குரலில், “டெஸ்ட் ரிசல்ட் வந்துருச்சா? என்கிட்ட இருந்து எப்ப லிவரை கட் பண்ணப்போறீங்க?” என்று வெற்றுக் குரலில் அவள் கேட்டாலும், அவள் மனதிலோ பல யோசனைகள் ஓடிக் கொண்டு தான் இருந்தது.

அதில் மனமகிழ்ந்த ஒளிவியன், “என் கணிப்பு வீண் போகல மணி. நான் அக்காகிட்டையும் உன்னைப் பத்தி தான் சொன்னேன். ஆனா அவள் நம்பல” என்ற பேச்சு அவளுக்குப் புரியவில்லை.

தொடர்ந்து பேசியவன், “உயிருக்காக ஒருத்தர் போராடிக்கிட்டு இருக்கும் போது, அவங்களுக்கு உதவுறதுக்கு முன் வரும் உன்னைப் போன்ற பெண் கிடைப்பது மிகவும் அரிது மணி. நீ அந்த மீனா மாதிரி கிடையாது” என்று சொல்லிக் கொண்டே, இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டான்.

அவனை அணைக்காமல், தன் பல்லைக் கடித்த மணி, ‘நான் கொடுப்பேன்னு அவ்வளவு நம்பிக்கையா! மீனா மாதிரி ஓடி எல்லாம் நான் போகமாட்டேன். ஆனா உங்க குடும்பத்தின் கேவலமான முகமூடியை கிழிக்காமல் போகமாட்டேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.

அணைப்பில் இருந்து அவளை விடுவித்தவன், “ஆனா, விதி நம்ம பக்கம் இல்லை மணி. உன்னுடைய திசுக்கள், நிலாவின் திசுக்களுடன் ஒத்து வரல” என்று அவன் சொல்லும் போதே, மிகப்பெரிய பாரம் அவள் நெஞ்சில் இருந்து இறங்கி சென்றது.

‘இனி, தான் நினைத்ததை பயம் இல்லாமல் செய்யலாம்’ என்ற எண்ணம் மணிச்சிகையின் மனதில் குடிகொண்டது.

தொடர்ந்து பேசியவன், “நீயும் மீனாவும் ஒரே முக ஜாடையில் இருக்கீங்க. ஒரே ரத்த வகை வேற. அப்படி இருந்தும் உங்க ரெண்டு பேர் திசுக்கள் ஒத்து வரல. பொதுவா, உடன் பிறப்புகள் இருவருக்கும் ஒரே ரத்த வகை இருக்காது தான். அப்படி இருந்தா, நிச்சயம் திசுக்கள் ஒத்து வரும் அந்த தைரியத்தில் தான் நாங்க இருந்தோம். இப்படி ஆகும்னு நான் நினைச்சு கூட பார்க்கல” என்றான்.

அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் மணிச்சிகைக்கு அளவில்லாத கோபத்தைத் தந்தது. யாரோ ஒருவன் தன் வாழ்க்கையில் நுழைந்து, தனக்கான முடிவை எடுக்கும் போதே கோபம் வரும். இதில் உடல்நிலை வரை தலையிட்டால் எப்படி இருக்கும்? உரிமை மட்டும் இல்லை இங்கே மனிதமும் மீற தான் படுகிறது.

தன் கையைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவனை மேலும் கீழுமாகப் பார்த்தவள், “இப்ப என்ன செய்யப்போறீங்க மிஸ்டர் ஒளிவியன். உங்க காதலிக்காக, கல்லீரல் பொருந்துற பொண்ணா பார்த்து, மறுபடியும் கல்யாணம் பண்ணப்போறீங்களா?” என்றவள் பேச்சு அங்கே இருக்கும் அமைதியைக் கலைத்தது.
 
Top