அத்தியாயம் 5 தன்னவளிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை நினைத்துக் கொண்டே இருந்தவனுக்கு வாட்ஸ்ஆப் மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்க அது வினிக்காவின் தொலைபேசி எண்ணிலிருந்து வந்திருப்பது தெரிந்து திறந்து பார்த்தவனுக்கு அவளின் திருமண அழைப்பிதழ், "கண்டிப்பாக வர வேண்டும்." என்ற அழைப்போடு வந்திருந்தது. பெருமூச்செறிந்தவன். இனி செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. என்ற நினைவோடு கண் மூடிப் படுத்துக் கொண்டான். மறுநாள் கண் விழித்த திலோத்தமை நேற்று இரவே மகன் சரியாகச் சாப்பிடாததால் அவனுக்கு மிகவும் பிடித்த காய்கறி சாதம் செய்வதற்கு வேகமாகத் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சென்றார் அடுப்படியை நோக்கி. மகன் மனதில் எதையோ போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது அவருக்கு. ஆனால் அதை என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை அவர். ஏதேனும் காதல் விவகாரமாக இருக்குமோ என்ற அச்சம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது அவருக்கு. மகனின் திருமணம் அவரின் தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அதீத பிடிவாதத்தோடும் ஆசையோடும் இருந்தார் அவர். மகனின் நிலையைப் பார்க்கப் பார்க்க ஏதேனும் தனக்கு பிடிக்காதவற்றை செய்து விடுவானோ தன் செல்ல மகன் என்ற பயம் ஆட்டிப்படைத்தது. அதனாலயே மகனுக்குப் பிடித்ததாகச் செய்து கொடுத்து அவன் மனதை திசை திருப்ப வேண்டும் என நினைத்துக் கொண்டு வேகமாக வேலையில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார் திலோத்தமை. அலுவலகத்திற்கு கிளம்பி வந்தவனுக்கு அடுப்படியிலிருந்து வந்த வாசம் மனதிற்கு இதம் அளித்தாலும் பசியை தூண்டவில்லை. மனதில் இருந்த சோகமும் பாரமும். தனக்காகச் சிறத்தை எடுக்கும் அன்னையின் மனதை வாட விட மனம் இல்லாமல், "என்னம்மா ஒரே கம கமன்னு வாசமா இருக்கு!.." என்றான் டைனிங் டேபிளில் அமர்ந்தபடி "வா ப்பா, எந்திரிச்சிட்டியா? இப்போ தலைவலி எப்படி இருக்கு?.." என்றார் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே, "பரவால்லம்மா, தைலம் போட்டேன் இப்போ சரியாயிடுச்சு, டீக்குடுங்கம்மா?.." என்றவன் கேட்டு முடிப்பதற்குள்ளாகவே அவன் கைகளில் டீக்கோப்பை கொடுத்தவர், "உனக்குப் பிடிக்கும் என்று தான் வெஜிடபிள் பிரியாணி செஞ்சுட்டு இருக்கேன்... இப்பவும் அதையே கொஞ்சம் சாப்பிடுறியா? இல்ல தோசை ஊத்தவா?.."என்றவரின் கேள்விக்கு "ஒரே ஒரு தோசை கொடுங்கம்மா போதும்." என்றபடி தேனீரை அருந்த ஆரம்பித்தான். அவன் கேட்டபடி அவனுக்குத் தோசையை கொண்டு வந்து கொடுத்தவர். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவன் அருகில் அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் சஞ்சலமாக. அன்னையின் பார்வையை உணர்ந்தவன், " என்ன ம்மா?.." எனச் சிரித்துக் கொண்டே கேட்க "ஒன்னும் இல்லப்பா இப்படியே சிரிச்சுக்கிட்டே இரு" என்றார் அவன் கண்ணம் வழித்து, அதில் மேலும் சிரித்தவன். "எனக்கு ஒன்னும் இல்லம்மா நீங்க மனசு போட்டுக் குழப்பிக்காதீங்க." என்ற படியே அவனின் லேப்டாப் பையையும் சாப்பாட்டுப் பையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான் தன் அலுவலகம் நோக்கி. அதோ, இதோ வென்று திருமண நாளும் நெருங்கியிருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் அதற்குண்டான பரபரப்புடன் இருந்தது பூங்காவனம். இப்போதும் சிவகாமி பாட்டியின் குரலே உயர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. "ஏ டி அகி, இந்தக் கைக்கு மருதாணி பூசுறவங்க வந்துட்டாங்களா? உங்க அக்கா என்ன செய்றான்னு போய்ப் பாத்தியா." எனச் சத்தம் கொடுத்துக் கொண்டே அவளை நோக்கி வந்தவரைப் பார்த்தவள் "ஏன் பாட்டி மருதாணி பூசுறவங்களா? அவங்க பேர் என்ன தெரியுமா? மெஹந்தி ஆர்டிஸ்ட்! அப்படி சொல்லணும்." என எப்பொழுதும் போல் தன் பாட்டியைத் திருத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தாள் அவரோடு வம்பு வளர்த்தபடி. "போடி அங்குட்டு, வந்துட்டா எல்லாத்துக்கும் ஒரு நியாயம் பேசிகிட்டு, வந்தாங்களா இல்லையாடி அவங்க..?" எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே இரு பெண்கள் இவர்களை நோக்கி வருவதை பார்த்தவர் "வாங்க மா வாங்க! நீங்கத் தான் மருதாணி போடப் போறீங்களா?.." எனக் கேட்டபடி அவர்களின் அருகே சென்றவர் அகிலாவை நோக்கி, "கூட்டிட்டு போ அகிலா மா. அக்காவுக்கு வைக்கிற மாதிரி நீயும் வச்சுக்கோ கை நிறைய."என்றார் செல்லப் பேத்தியின் கன்னத்தைக் கிள்ளி. "கண்டிப்பா பாட்டி நான் வைக்காமலா? நான் மட்டும் இல்ல அம்மா, பெரியம்மா அத்த அதோடு நீங்கக் கூடத் தான் வைக்கப் போறீங்க." எனக் குதித்தபடி சொல்லியவாறு அவர்களோடு சென்றாள் அக்காவின் அறையை நோக்கி. "நானுமா." என்றபடி தன் கைகளை விரித்துப் பார்த்தவர் "நல்லா தான் இருக்கும், வெச்சா ஆனா இந்த மனுஷனுக்கு பிடிக்கணுமே." என்று அங்கலாய்த்தபடி அடுப்படியை நோக்கிச் சென்றார் சமையல் வேலை எப்படி செல்கிறது என்பதை பார்ப்பதற்கு. அத்தையோடு பேசிக் கொண்டிருந்தவள் தன் அறையில் நுழைந்தவர்களை கேள்வியோடு பார்க்க. "அக்கா இவங்க தான் உனக்கு மருதாணி வைக்க வந்திருக்காங்க" என்றாள் அகிலா வேகமாக, " ஓ! என்றபடி "வாங்க"என அவர்களை அழைத்து அவர்களுக்கு உட்காருவதற்கு வசதி செய்து கொடுத்து இவளும் அமர்ந்து கொண்டாள் வாகாக. "ஏதாவது டிசைன் வச்சிருக்கீங்களா? "இல்லையே" "அப்ப நாங்களே எங்க விருப்பத்துக்குப் போடலாமா?"என கேட்டவர் பின். "உங்களுக்கு ஏதாவது குறிப்பிட்டு போடணும்னா சொல்லுங்க அந்த மாதிரி போடுறோம்" என்றவர்களை பார்த்து உதட்டைப் பிதுக்கிய படி "என்கிட்ட எந்த டிசைனும் இல்லை" என்றவளை பார்த்தவர்கள் தங்களிடமிருந்த மருதாணி மாதிரிகளைக் காட்ட எந்த ஆர்வமும் இல்லாமல் வாங்கியவளிடமிருந்து வேகமாகப் பறித்துக்கொண்டாள் நிகிதா. "நானே செலக்ட் பண்றேன்மா." என்றபடி அவர்கள் கொண்டு வந்திருந்த டிசைன்களை பார்த்து அழகாக இருந்த ஒன்றை தேர்வு செய்து அவர்களிடம் கொடுத்தாள். அதேபோல் போடுமாறு. துரிதமாக அவர்களும் தங்கள் வேலையை ஆரம்பிக்கக் கவலையோடு அண்ணன் மகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் நிகிதா.