எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 24

Sathya theeba

New member
தன் மகளுடன் அமர்ந்து இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த தனஞ்சயனைக் காணும்போது அவளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி அவனால் அவ்வளவு இயல்பாகப் பொருந்திக் கொள்ள முடிந்தது. தன் மகள் என்று தெரிந்த பின்னும் எந்தவித ஒதுக்கமுமின்றி, வேற்றுமை பாராட்டாமல் இயல்பாக இருக்கின்றானே. தன்னால் நிச்சயம் இப்படி இருக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது. அவனது மனைவியையும் பிள்ளைகளையும் கண்டால் இப்படி இயல்பாகப் பேச முடியுமா என்பது ஐயம்தான். சுபிக்குட்டியும் எப்படி அவனுடன் பொருந்திப் போனாள். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த அழகையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குனிந்து மகளுடன் பேசிக் கொண்டிருந்தவனின் அடர்ந்த சிகை அவள் கண்களில் பட்டது. அந்த சிகைக்குள் விரல்களால் அளைந்துவிடத் தோன்றியது. தன்னை மறந்து தன் மனம் போகும் திசையை எண்ணும்போது அவளுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

சிறுவர்களுக்கு உரிய ஜோக் ஒன்றை அவன் கூறவும் கிளுக்கிச் சிரித்த மகளைப் பார்க்கும்போது மனதில் சந்தோஷம் ஊற்றெடுத்தது. ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில் இது தற்காலிகமான சந்தோசம்தானே. அளவுக்கு மீறி தூகலிக்காதே. கொஞ்சம் அடங்கு என்ற குரலும் இடித்துரைத்தது.

சற்று நேரத்தில் அவளிடம் திரும்பியவன்,
“என்ன அங்கேயே நிற்கின்றாய்? உள்ளே வரவேண்டியதுதானே.. இது உன் வீடு தானே” என்றான்.
அவளுக்கே அதில் சந்தேகம் ஏற்பட்டது. உரிமையாளன் போல் அவன் உள்ளே அமர்ந்திருக்க வாயிலிலே பார்த்திருக்க வேண்டிய தன் நிலையை எண்ணி ஒரு பக்கம் சிரிப்பும் மறுபக்கம் அவன் மீது கோபமும் ஏற்பட்டன. எதற்காக வந்தான் என்றே சொல்லாமல் என் வீட்டிற்கே வந்து அழிச்சாட்டியம் பண்ணுவதைப் பார் என்ற கோபம் உண்டானது.

“அம்மா இங்க வாங்களேன்... இந்த அங்கிள் ஜோக் எல்லாம் சொல்கிறார். சிரிப்பா வருது... நீங்களும் வாங்கம்மா” என்று அழைத்தாள் சுபிக்ஷா.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “இல்லை எனக்கு வேலை இருக்கின்றது” என்று அவள் கூறவும்,
“ஆமா குட்டிம்மா... அம்மா பிரேக்பாஸ்ட் செய்யணும்தானே. எனக்கும் ரொம்பவும் பசிக்குது. நைட்டும் எதுவும் சாப்பிடலை. அம்மா போய் நம்ம ரெண்டு பேருக்கும் டிபன் ரெடி பண்ணட்டும் குட்டிமா” என்றான் அவன்.
“ஓகே அம்மா, நீங்க டிபன் பண்ணுங்க, நாங்க பேசிக்குறோம்” என்று பெரிய மனிசி போல கூறினாள் சுபிக்ஷா.
மகளின் முன்னால் அவனிடம் அவளால் எதுவும் பேச முடியலை.

சமையல் பகுதிக்குள் சென்றவள் இட்லி ஊத்திவிட்டு, சாம்பார் வைத்தாள். யோசித்து விட்டு அவனுக்குப் பிடிக்கும் என தேங்காய் சட்னியும் அரைத்து வைத்தாள்.

காலை உணவை வேகவேகமாக செய்து முடித்தவள் அவனை சாப்பிட எப்படி அழைப்பதென யோசனையுடன் உள்ளே சென்றாள். அங்கே அவர்கள் இருவரையும் காணாது திகைத்து நின்றாள். எங்கே சென்றிருப்பார்கள் என யோசிக்கும்போதே வீட்டின் பின்புறம் சிரிப்புச் சத்தம் கேட்டது. அங்கே சென்று பார்த்தவள், ஆச்சரியத்தில் விழி விரித்தாள்.
சுபிக்ஷாவிற்கென பின்புறம் விறகடுப்பில் தண்ணீர் சூடாக்கப் போட்டிருந்தாள். அவன் அதிலிருந்து சுடுதண்ணீர் எடுத்து தண்ணீருடன் கலந்து, அவளைக் குளிப்பாட்டி விட்டு துவட்டி விட்டுக் கொண்டிருந்தான்.
அதைப் பார்க்கும்போது ஒருபக்கம் சந்தோசமாக இருந்தாலும் மறுபக்கம் அவன் தன் பிள்ளைகளுக்குச் செய்திருப்பான் போலும், அதுதான் இவ்வளவு இயல்பாகச் செய்கிறான் என்றும் மனம் எண்ணமிட்டது.
உள்ளே சென்று சுபிக்கு வேண்டிய உடைகளை எடுத்து வந்தவள் எதுவும் பேசாது அவனிடம் நீட்டினாள். அவன் அதனை அணிவித்ததும்
“நீங்க... கைகால் கழுவிற்று வாங்க... சாப்பாடு ரெடியாச்சு” என்று கூறிவிட்டு மகளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அவன் வந்ததும் தட்டை வைத்து அவனுக்குப் பரிமாறியவள் மகளுக்கும் சிறிய தட்டில் இட்லியும் சட்னியும் வைத்து பரிமாறினாள். தனது தட்டில் வைக்கப்பட்ட தேங்காய் சட்னியை பார்த்ததும் அவளை நிமிர்ந்து பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தான். மேற்கொண்டு எதுவும் பேசாது மடமடவென சாப்பிட்ட அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ரொம்பப் பசி போல, பாவம் என்று எண்ணமிட்டாள். சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்தாள் சுபிக்ஷா. இவளுக்கோ அவனுடன் என்ன பேசுவதெனப் புரியவில்லை.

சற்று நேரத்தில் தாரணியும் அவளது கணவரும் அங்கு வந்தனர். அவர்களைக் கண்டதும் ஆச்சரியத்தில் விழி விரித்தாள் நிஷாந்தினி. எதிர்பாராத அவர்களது வருகை இவளை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது. ஆனாலும் ஒரு பக்கத்தில் இந்த நேரத்தில் இவன் இங்கே இருக்கிறானே, அவர்கள் இருவரும் அவனைக் கண்டதும் என்ன நினைப்பார்கள் என்ற ஒரு தடுமாற்றமும் அவளை ஆட்கொண்டது. அவர்களது வருகையை எதிர்பார்த்தது போலவே அவர்களை வரவேற்று உரையாடினான் தனஞ்சயன். எந்தவிதக் கேள்வியும் இன்றி அவர்கள் இருவரும் இயல்பாக அவனுடன் பேசினர். இதை வைத்து பார்த்தால் அவர்களுக்கும் அவன் இங்கே இருப்பது ஏற்கனவே தெரியும் போலவே அவளுக்குத் தோன்றியது.

சற்று நேரத்தில் அவளை அறைக்குள் அழைத்துச் சென்ற தாரணி அவளை அணைத்துக் கொண்டு,
“நிஷா.. ரொம்ப சந்தோசமாய் இருக்கு. நான் சுபியை வெளியே அழைத்துப் போகிறேன். நீ அவருடன் பேசுடி” என்றாள்.
“தாரணி இவர்.. இவர்...” என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள் நிஷாந்தினி.

“எனக்கு அவரைப் பற்றித் தெரியும். தெரிந்து தானே நாங்கள் இப்போது இங்கே வந்தோம். நீ அவருடன் பேசவேண்டும்... பேசினால் தான் எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும். இது உன் வாழ்க்கை. அதை நீ சந்தோசமாக வாழ வேண்டும். இத்தனை நாட்கள் நீ துன்பத்தில் வாழ்ந்தது போதும்... இனியாவது உன் வாழ்வில் சந்தோசம் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். நீ அவரிடம் பேசினால் எல்லாத்துக்கும் முடிவு கிடைக்கும். பேசுடி..” என்றாள் தாரணி.

அவள் சொல்வது புரியாமல் திகைத்து நின்றாள்.
“என்ன சொல்கிறாய்? நான் அவரிடம் பேசுவதற்கு இப்போது எதுவுமே இல்லையே..."

"பேசுவதற்கு நிறைய இருக்குது உங்கள் இருவருக்கும்.. ஆனால் நான் இப்போது சொல்வதற்கு எதுவுமில்லை. அவரே எல்லாம் சொல்லுவார். நாங்கள் அப்புறம் சந்திப்போம்” என்றுவிட்டு சுபியை போய் அழைத்தாள் தாரணி.
“சுபிக்குட்டி... நாங்கள் பார்க் போவோம் வருகிறாயா?”
“ஆன்ரி பார்க் போறோமா... ஐ.. ஜாலி.. நான் வாறேன். ஆனால்... அங்கிள்...” என்று இழுத்தாள் சுபி.
“அங்கிள் உங்கள் வீட்டில்தான் இருப்பார். நீ அப்புறமா வந்து அவருடன் பேசலாம். இப்போ நாம பார்க் போவோம்”
“ஓகே ஓகே.. அங்கிள் நான் தாரணி ஆன்ரி கூட பார்க் போய்ட்டு வாறேன். நீங்கள்... உங்களுடன் அப்புறமா பேசறேன்” என்றுவிட்டு தரணியுடன் புறப்பட்டுச் சென்றாள் சுபி.

நடப்பதைப் பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள் நிஷாந்தினி. அவர்கள் சென்றதும் இருவருக்குள்ளும் மௌனமே அவ்விடத்தில் ஆட்சி செய்தது.

அந்த அதீத மௌனம் அவளுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இவன் எதற்கு இங்கே வந்துள்ளான் என்ற குழப்பத்தில் சில நிமிடங்களைக் கழித்தாள். அவனுக்கு அவளை இழுத்து அணைத்து ‘ஏண்டி என்னை இவ்வளவு நாளும் தவிக்கவிட்டாய்’ என்று கத்த வேண்டுமென்றே மனம் பரபரத்தது. ஆனால் இப்போது கோபத்தைக் காட்டும் நேரமில்லை என்பதால் மௌனம் காத்தான். அவனும் எதுவும் பேசாமல் இருக்கவும் அந்த அமைதி அவளை சங்கடப்படுத்தியது. எனவே ஏதாவது பேசவேண்டும் என்று எண்ணி
“உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா? உங்கள் மனைவி, பிள்ளைகள் நலமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள். அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “அவர்களுக்கு என்ன? மிகமிக நன்றாக இருக்கிறார்கள்” என்றான்.
அவனது பதிலில் மனம் சற்று வலித்த போதும் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.

“உன் ஹஸ்பண்ட் அமெரிக்காவில் இருந்து எப்போ வர்றாராம்?”
“அ.. அது.. அவர் சீக்கிரம் வந்திடுவார்”
“ஓகோ.. ஆமா உன் ஹஸ்பண்ட் நேம் என்ன?”
“த.. வ..” என்ன சொல்வது என்று தெ‌ரியாமல் தடுமாறினாள்.
“ஹஸ்பண்ட் நேம் மறந்திடுச்சா அல்லது..”
“உங்களுக்கு எதுக்கு சார் அவர் பெயர் எல்லாம்”
“ஓகோ.. எனக்கு அவர் பெயர் எதுக்கு? தேவையேயில்லை.. அப்புறம் என்னை எப்படிக் கூப்பிட்டாய்? சாரா..?, மாமா என்று கூப்பிட்டதாய் ஞாபகம்..”
“அப்படிக் கூப்பிடும் உரிமை இப்போது எனக்கில்லை சார்..” என்றவளால் அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தனை நாட்களாக அவள் மனதிற்குள் அழுத்தி வைத்திருந்த ஏக்கம், கோபம், தவிப்பு எல்லாம் அணையை உடைத்த வெள்ளமாகக் கரை புரண்டோடியது. அப்படியே கீழே உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

அதுவரை நேரமும் தள்ளி நின்று அவளை ரசித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தவன், அவள் அழவும் உருகிப் போய்விட்டான். அவள் அருகே நெருங்கிவந்து உட்கார்ந்து,
“ஷ்... என்ன பாப்பு நீ.. இப்போ எதுக்கு அழுகிறாய்? அழாதடி பாப்பு... பிளீஸ்” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். நீண்ட நாட்களின் பின் அவனது அருகாமையும் அணைப்பும் அவளை சிலிர்க்கச் செய்தது. அவனது கைகளும் அச்சிலிர்ப்பை உணர்ந்து கொண்டன. அவனது அணைப்பு இறுகியது.

அவளவன் என்று எண்ணி வாழ்பவளுக்கு அவனது ஸ்பரிசம் சொல்லொண்ணாத உணர்வுகளைத் தோற்றுவிக்க விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.

“பாப்பு.. என்னடி இது? ஏன் இப்படி ஒரு அழுகை? அதுதான் நான் வந்திட்டேனே” என்று ஆறுதலாக வருடி விட்டான். அவளுக்கு ஏதோ தோன்றவும் சட்டென அவனிடமிருந்து விலகி எழுந்து விறுவிறுவென பின்புறத் தோட்டத்திற்குச் சென்றுவிட்டாள்.

ஏன் திடீரென விலகிச் சென்றாள் என்பது புரியாமல் சற்று நேரம் தடுமாறி நின்றவன், இதனை அப்படியே விட முடியாது என எழுந்து அவளைத் தேடிச் சென்றான்.

அவளோ பின்புறம் ஓடிய சிற்றாறை வெறித்தபடி நின்று கொண்டிருந்தாள். பின்புறம் சென்று அவள் இடையைத் தன் நீண்ட கரங்களால் வளைத்து அணைத்தவன்,
“என் செல்லக்குட்டிக்கு இப்போ என்ன கோபம்?” என்று மிக மென்மையான குரலில் கேட்டான். அக்குரல் அவளை அப்படியே வசியப்படுத்தியது. ஆனாலும் அவளால் அவனது அணைப்பையோ காதலையோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“பி..பிளீஸ் விடுங்க” என்றபடி அவனிடமிருந்து விலக முயன்றாள்.
அவளை விலகமுடியாதபடி இறுக அணைத்தபடி
“இப்போ உனக்கு என்னதான்டி பிரச்சினை” என்றான்.
“இந்த அணைப்பு... காதல்.. இதெல்லாம் எனக்குச் சொந்தமானதல்ல”
“அப்படி யாரு உனக்குச் சொன்னது. இவை உனக்கு மட்டுமே உரியது. இப்போதல்ல எப்போதுமே”

திரும்பி அவனை கண்களில் தவிப்புடன் பார்த்து,
“உங்களுக்கு நான் சொல்வது புரிகிறதா? நீங்கள் இப்பொழுது வேறு ஒருவருக்குச் சொந்தமானவர். எந்த உரிமையில் நான்...” முடிக்க முடியாமல் தவித்து நின்றாள் பேதையவள்.
“என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ இல்லை என்றதும் வேறு ஒருத்தி கழுத்தில் தாலி கட்டி வாழ்ந்து விடுவேன் என்று நினைத்தாயா?” என்று கோபத்துடன் கேட்டான்.
ஆச்சரியத்துடன் விழி விரித்து அவனைப் பார்த்தாள்.
“இந்தப் பார்வைதான்டி என்னை இத்தனை நாட்களும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. இந்தப் பார்வையை.... என் பாப்புவை விட்டு என்னால் வேறு ஒருத்தியை எப்படி மனதால் ஏற்க முடியும்" என்றவன் அவளைத் தன்புறம் திருப்பி இறுக அணைத்து அவள் உச்சியில் முத்தமிட்டான். தொடர்ந்து நெற்றி, கண்கள் என முத்தமிட்டவன் இறுதியாக அவள் இதழ்களைத் தஞ்சமடைந்தான்.


ஐந்து வருடங்களாய் உள்ளுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்த காதல் புயலென மாறியது. அணை கடந்த வெள்ளமாய் கரைபுரண்டு ஓடியது. இருவரும் தம் காதலை இதழ் வழியே பரிமாறிக் கொண்டனர்.
 
Top