எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 15

kani suresh

Moderator
மாலை ஸ்கூலில் இருந்து கண்மணி கவினை அழைத்துக் கொண்டு வந்தாள். ஒன்றுக்கு இரண்டு முறை சுற்றிப் பார்த்தாள்.

"அத்தை, யாரைப் பாக்குற?" என்று கேட்டான் கவின்.

"ராகிமா, எங்கடா?" என்று கேட்டாள்.

"ராகியா? அவ ஆயாம்மா கூடப் போயிட்டா"

"ஏன்டா, என்னப் பாக்கலையா?".

"என்கிட்டக் கேட்டா? அவ ஒரு வாரமா உன்னப் பாக்கல தான். அது உனக்குத் தோணவே இல்லையா?".

அப்போதுதான் யோசித்தாள். ராகினி தன்னை ஒரு வாரமாகப் பார்க்கவில்லை தான் என்று. ஏனென்று புரியாமல் கவினைப் பார்க்க, “வீட்ல அவங்க அப்பா கிட்ட அவங்க பாட்டி பேசி இருக்காங்க. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி. அப்ப அவங்க அப்பா, பாட்டிகிட்டச் சத்தம் போட்டு இருக்காரு. ரெண்டு பேத்துக்கும் சண்டை வந்ததால, தன்னால தானே சண்டை வருதுனு அவ உன்னப் பார்த்ததாலயும், உன் கிட்டப் பேசினதாலயும் உன்னப்பத்தி வீட்ல பேசுறதாலயும் தானே இவ்வளவும் நடந்துச்சுனு நினைச்சு, அவளே உன் கிட்ட இருந்து விலகணும்னு நினைக்கிறா" என்றான்.

"டேய் என்னடா சொல்ற? இப்படி எல்லாமா யோசிக்கிறா?".

"யோசிக்கிறா அத்த. நான் கேட்டதுக்கு அப்படித்தான் சொன்னா என்கிட்ட" என்றவுடன், "அவ எங்க இருப்பா?" என்று கேட்டாள்.

"வேண்டாம் வா, நம்ம வீட்டுக்குப் போகலாம். அவங்க அப்பா வர நேரம்"

"வரட்டும் டா இரு" என்று விட்டு ராகினியைத் தேடிக்கொண்டு செல்ல, ஒரு மூலையில் அமைதியாக உட்க்கார்ந்திருந்தாள். ஆயாம்மா, "ராகினி கண்ணு, ஒரு வாரமா உம்முன்னு இருக்க ஏன் டா" என்றார்.

"ஒன்னும் இல்ல ஆயாம்மா" என்று விட்டு அமைதியாக இருந்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, "எல்லாத்துக்கும் அம்மா இருக்காங்க, எனக்கு மட்டும் ஏன் இல்லை?" என்று கண்கள் கலங்கக் கேட்க, அவளது கண்ணீரைத் துடைத்து விட்டுக் கட்டி அணைத்துக் கொண்டு, "உனக்கு உங்க அப்பா இருக்காரு டா, அம்மா மாதிரிப் பாத்துக்க. அப்புறம் என்ன?"

"அப்போ எனக்கு அ.அம்..அம்மா வேணாமா?" என்று திக்கித் திணறினாள்.

"அது மட்டும் இல்ல, பாட்டி சொன்னாங்க அ..ப்பா அப்பா…"

"ஒன்னும் இல்லடா. உன்னையும் உன் அப்பாவையும் பாத்துக்குற ஒரு நல்ல பொண்ணு உங்க லைஃப்ல வரும். நீயும் நல்லவ தான், சின்னப் பொண்ணு. உங்க அப்பாவும் ரொம்ப நல்லவருடா, உங்க அப்பாவ நல்லாப் புரிஞ்சுகிட்ட பொண்ணா ஒரு பொண்ணு உங்களோட லைஃப்ல வரும்" என்று கண் கலங்கக் கூறியவர் ராகினியைக் கட்டி அணைத்தார்.

இவ்வளவு நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட கண்மணிக்கு மனம் பாரமாகியது. வேகமாக ஓடிச்சென்று அவளைக் கட்டி அணைத்துக் கொள்ளக் கை பரபரத்தது. கவின் வேகமாகப் பிடித்து இழுத்தான்.

"அத்த வேணாம்" என்றான்.

"ஏன்டா?" என்று கேட்க,

"நீ இப்போ போயி அவகிட்டப் பேசினா, அவ ரொம்ப உடைஞ்சிருவா அத்த…"

"அதனால என்னடா"

"ப்ளீஸ் அத்த, அவ திரும்ப நீயே அம்மாவா வேணும் என்று நினைச்சுறப் போறா… இவ்வளவு நாளா உன்ன ஆன்ட்டியா பார்த்தா. ஆனா, அவங்க பாட்டி அவங்க அப்பாகிட்ட உனக்கும், அவங்க அப்பாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதப் பத்திப் பேசினதுல இருந்து உன்னப் போல ஒரு அம்மா கிடைச்சா நல்லா இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டா. அதனாலேயே உன்கிட்ட இருந்து விலகவும் செய்யறா. ப்ளீஸ், அவகிட்ட நீயா போய் பேசி அவ மனசுல ஆசைய வளர்த்துறாத. அது இன்னும் கஷ்டமா போயிடும். நம்ம வீட்டுக்குப் போலாம்" என்றவுடன் தனது அண்ணன் மகனைத் தூக்கித் தோளோடு அணைத்துக் கொண்டவள்,

"இந்த வயசிலேயே உனக்கு எப்படி டா இவ்வளவு பக்குவம்?" என்று கேட்டாள்.

"எல்லாம் நீ சொல்லிக் கொடுத்தது தான்" என்று சிரித்துக் கொண்டே அவளது தோளில் சாய்ந்தவன், "அவங்க அப்பா வராங்க, நம்ம போலாம்." என்றான் தூரத்தில் வரும் வினோத்தைப் பார்த்துவிட்டு.

காலையில் அவனிடம் பேசியது நினைவில் வந்தாலும், இப்பொழுது அவனை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி இல்லாதவள், அமைதியாகக் கவினுடன் ஒளிந்து கொண்டாள். நேராக வந்த வினோத், சுற்றி முற்றி ஒரு முறை கண்களைச் சுழல விட்டுவிட்டு ராகினி அருகில் வர, "ராகினி, அப்பா வராரு பாரு… அப்பா நீ அழுவதைப் பார்த்தால் ஃபீல் பண்ணுவாரு இல்ல" என்று ஆயாம்மா சொன்னவுடன் தன் கண்களை வேகமாகத் துடைத்தாள்.

"ராகிமா ஏன் டா ஒரு மாதிரி இருக்க" என்று அருகில் வந்து கேட்க, "ஒன்னும் இல்லப்பா, விளையாண்டுட்டு இருந்தனா கண்ணுல தூசி பட்டுருச்சு" என்றாள். "சரிடா தங்கம், வீட்டுக்குப் போலாமா" என்றான்.

"போலாம் பா" என்று விட்டு அவள் எழுந்த உடன், "சரி தம்பி, முடிஞ்ச அளவுக்குப் பாப்பாவுக்காக நேரம் ஒதுக்குங்க. நேரத்துக்கு வந்து கூட்டிட்டுப் போங்க"

"ஏன்கா, உங்களுக்கு ஏதாச்சும் வேலை இருக்கா…" என்றான்.

"எனக்கு வேலை இருக்குன்னு சொல்லல தம்பி. ஆனால், பாப்பா கூட நான் இருக்கறது நீங்க இருக்கற மாதிரி வராது இல்லையா? உங்களை விடவா ஒரு உறவு அவளுக்கு வந்துரப்போகுது. அவளுக்கும் சில பல ஏக்கங்கள் இருக்கும்ல தம்பி" என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் நகர்ந்து விட,

அவர் சொல்வது புரியவில்லை என்றாலும், ஏதோ உள்ளே மனதிற்குள் வைத்துக் கொண்டுதான் பேசுகிறார் என்பதை உணர்ந்தவன், ஒரு நிமிடம் தன் மகளைப் பார்த்தான். அவளும் அமைதியாக இருக்க, எதுவும் பேசாமல் 'சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் ராகிமா' என்று மனதிற்குள் எண்ணி விட்டுத் தன் மகளை அழைத்துக் கொண்டு சுற்றி இன்னொருமுறை கண்களைச் சுழல விட்டுவிட்டு ராகினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

இங்குக் கவினை அழைத்துக் கொண்டு கண்மணி வீட்டிற்குச் சென்றாள். இரவு வினோத் ராகினியின் புக்கை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, "அப்பா, என்ன தேடுறீங்க? இந்த புக்ல எனக்கு இன்னைக்கு ஹோம் ஒர்க் இல்லையே" என்றாள்.

"தெரியும் தங்கம், இருங்க அப்பாவுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு இந்த புக்குல…" என்று விட்டு அன்றைய கண்மணியின் போன் நம்பர் இருந்த புக்கை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டிருந்தான்.

போன் நம்பர் கிடைத்தவுடன், ஒரு சில நொடி தன் மகளைப் பார்த்தான். அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு "பாட்டிகிட்டப் போங்கடா, பாட்டி கூப்பிட்ட மாதிரி இருக்கு. போய் கொஞ்ச நேரம் விளையாடுங்க, அப்புறமா படிக்கலாம்" என்றான்.

"ஏன் பா" என்று கேட்க, "நாளைக்கு தான் சண்டேவாச்சே… லீவு தானே"

"சரிப்பா" என்று விட்டு அமைதியாக அவள் பாட்டியிடம் சென்றுவிட,

உடனடியாக அந்த நம்பரைத் தன் போனில் டயல் செய்தான். கண்மணி இங்கு கவின் உடன் விளையாடிக் கொண்டு இருந்தாள் அவளுடைய ரூமில். போன் வந்தவுடன் பார்த்து விட்டுப் புது நம்பராக இருக்க, ஒரு நிமிடம் யோசித்து விட்டு, சரி என்று போன் அட்டென்ட் செய்து காதில் வைக்க, "கண்மணி தானே" என்று ஒரு ஆண் குரல் கேட்க,

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தாள். பிறகு இன்று பேசிய அவனது குரலை நினைவில் வைத்து "வி..வினோத்… ராகினி அ..அப்பாவா…" என்று திக்கித் திணறி இழுத்தாள்.

கவின் அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தவன் அவளது கையைச் சுரண்டினான். "கொஞ்ச நேரம் கம்முனு இருடா" என்று அவனிடம் வேகமாகவே எரிந்து விழுந்து விட்டு, இப்பொழுது திக்காமல் திணறாமல் "ராகினி அப்பாவா?" என்று கேட்டாள்.

"ஆமா கண்மணி" என்றான்.

"சொல்லுங்க சார்"

"நீ சொன்னதை யோசிச்சேன் கண்மணி, சரிவரும்னு தோணுது. நான் அம்மாகிட்டப் பேசிட்டு நாளைக்கு வீட்ல தானே இருப்பீங்க. உங்க வீட்ல வந்து நாளைக்குப் பேசலாம் இல்ல" என்று கேட்டான்.

"சார், உண்மையா தான் சொல்றீங்களா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
"உண்மையா தான் கண்மணி சொல்றேன். ஏன் உங்களுக்கு இதுல இப்படி ஒரு சந்தேகம்" என்று சிரித்துக் கொண்டே கேட்க,

"சரி சார், நானும் வீட்ல பேசுறேன்.” என்றாள்.

"சரி கண்மணி" என்று விட்டு போனை வைத்தான்.

"ஏய் கவிக்குட்டி" என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டவள், அவனைத் தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

அவன் நெளிந்து கொண்டே வர அவனை இறக்கி விட்டவள், சுற்றித் தன் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இருக்கிறார்களா? என்று பார்த்தாள்.

கமலி மட்டும் இல்லாமல் இருக்க, "டேய், உங்க அம்மா எங்கடா?" என்று கேட்டாள்.

"தெரியல" என்று உதட்டைப் பிதுக்க, "ஏன் கண்மணி" என்று சங்கர் கேட்க,

"அண்ணா எங்க அண்ணி?" என்று கேட்டாள்.

"அவ ஒரு மாதிரி இருக்குன்னு ரூம்ல படுத்து இருக்கா…"

"கமலி!" என்று இரண்டு முறை கண்மணி அழைக்க,

"ஏண்டி" என்று கேட்டுக் கொண்டே ரூமில் இருந்து கமலி வெளியில் வர,

“ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான் உக்காரு.” என்று விட்டுத் தன் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, கவின் அனைவரையும் உட்கார வைத்தவள்,

அவர்களுடன் உட்கார்ந்து விட்டு, "நான் யோசிச்சிட்டேன், ஒரு முடிவு எடுத்து இருக்கேன். நல்ல முடிவு என்று தான் நினைக்கிறேன்." என்றாள். "எங்களுக்கு நல்ல முடிவா, இல்ல, உனக்கு நல்ல முடிவா?" என்று கமலி கேட்டு விட,

"கமலி" என்றான் சங்கர்.

சிரித்துக் கொண்டே, "எல்லாருக்குமே நல்ல முடிவு தான்" என்றவுடன் வீட்டில் அனைவரும் அவளை என்னதான் சொல்ல வருகிறாள் என்று பார்த்துக் கொண்டிருக்க, "எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம். அதாவது, ராகினியோட அப்பா வினோத்தைக் கல்யாணம் பண்ணிக்க…" என்றவுடன்,

"ஏய்" என்று கத்திக் கொண்டே அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு பின்பக்கம் இருந்து அவளது தாடையில் முத்தமிட்டான் கவின்.

"அத்தை, உண்மையா தான் சொல்றியா நீ" என்று கேட்டான்.

"ஆமாண்டா கவிக்குட்டி" என்றவுடன் தனது அத்தையின் முன்னாடி வந்து குறுகுறுவென்று பார்த்தவன்,

"இன்னைக்கு நடந்ததை வச்சு இந்த முடிவு எடுத்தியா அத்த" என்று கேட்டான்.

"இன்னைக்கு என்ன டா நடந்துச்சு, அம்மாகிட்டச் சொல்லவே இல்லையே" என்று கமலி மிரட்டுவது போல் கேட்க, ஸ்கூலில் நடந்த அனைத்தையும் சொல்ல, "உண்மையாவே இவன் சொல்றதுதான் காரணமா கண்மணி?" என்று கமலியும் கைகளைக் கட்டிக் கொண்டு கேட்க, "உனக்கு அப்படித்தான் தோணுதா? நீ காலையிலேயே பாதி யோசிச்சு இருப்பியே…"

"ஆனா, நீ காலையில சொல்லலையே" என்று கமலியும் விடாமல் கேட்க,

"என் பக்கம் இருந்து மட்டும் நான் பதில் சொல்ல முடியாது கமலி. இரண்டு பக்கமும் சொல்லனும் இல்ல."

“புரியல…"

"நான் காலையில அவரதான் பார்த்துட்டு வந்தேன்னு உனக்கு கன்ஃபார்மா தெரியும், என்ன பேசினேன்னு தான் தெரியாது." என்ற உடன், "அத்தை, நீ எப்ப ராகி அப்பாவைப் பார்த்த" என்றான்.

"கொஞ்ச நேரம் அமைதியா இருடா" என்று கமலி மிரட்ட, தன் தாயை முறைத்துவிட்டுத் தன் அத்தையின் மடியில் வந்து உட்கார்ந்து கொண்டு, அவள் முகத்தையே பார்த்தான். காலையில் பேசியதிலிருந்து இப்பொழுது வினோத் பேசிய வரை அனைத்தையும் தன் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லியவள், "எனக்கு விருப்பம், மேற்கொண்டு நாளைக்கு அவங்க வந்து பேசும் போது என்ன பண்ணனுமோ பண்ணுங்க." என்றுவிட்டு எழுந்தாள்.

"கண்மணி ஒரு நிமிஷம்" என்று கமலி சொல்ல, அமைதியாக நின்றாள்.

"இதுவரைக்கும் நீ எடுத்த முடிவு சரி. ஆனால், இதில் உங்க இரண்டு பேருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, அதையும் யோசிப்பேன்னு நினைக்கிறேன்." என்றாள்.

"எது நடக்கணும்னு இருக்கோ, அது நடக்கும் கமலி. ஆனா எதுவும் இப்பவே நடந்திடாது இல்லையா?" என்று மட்டும் சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாமல் சென்று விட,

பின்னாடியே கவினும் செல்ல இருந்தான். மகனை வேகமாகப் பிடித்து இழுத்த கமலி, "கொஞ்ச நேரம் இருடா, எப்பப் பாத்தாலும் வால் பிடிச்ச மாதிரி அவ பின்னாடியே போற. உங்க அத்தை இங்க இருக்கற வரைக்கும் தானே" என்ற உடன் ஒரு நிமிடம் திரும்பிய கண்மணி, கண்கள் கலங்கப் பார்க்க, ஓடிச் சென்று அவள் கால்களைக் கட்டிக் கொண்டான்.

"நான் எப்பயும் உன்னோட அத்தை தாண்டா கவிக்குட்டி" என்று சொல்ல, "ஆமா அத்த" என்று சிரித்தான்.

"இருக்கட்டும் கமலி, அவன் இன்னைக்கு என் கூடத் தூங்கட்டும்" என்று சொல்லிக் கவினைத் தூக்கிக்கொண்டு ரூமுக்குள் நுழைந்து விட்டாள்.
 
Top