எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 10

அத்தியாயம் - 10:​

வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறுவதை போல் காவ்யா மீண்டும் சித்துவை கார்த்திக்கிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டாள்.​

வாரயிறுதியில் ஒருவாரம் தன் வீட்டிற்கு மற்றொரு வாரம் தன் புகுந்த வீட்டிற்கு என அவளுக்கு அலுப்பாக இருந்தாலும் அழைத்துச் சென்றுவிடுவாள்.​

அந்த மழை நாளில் சித்து கார்த்திக்கிடம் பேசி, சிரித்து, முத்தமிட்டத்தை அவளால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ‘எங்கே தன்னை மீறி எதாவது நடந்துவிடுமோ?’ என்ற பயத்தினால் கார்த்திக்கை முழுவதாக தவிர்த்துக் கொண்டிருக்கிறாள்.​

அந்த இரவு நேரத்தில் சித்துவிற்கு உணவினை ஊட்டி முடித்தவள் அவன் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூனை டிவியில் வைத்துவிட்டு தானும் மகனுடன் அமர்ந்து கொண்டாள். அந்நேரம் அவர்களின் வீட்டின் கதவை யாரோ பலமாக தட்டுவது போல் இருந்தது.​

'யாரு இது? கதவை இப்படி தட்டுறாங்க? மணி வேற எட்டு ஆகுதே? இந்நேரம் யாரா இருக்கும்?' என்று யோசனையுடன் அவள் சென்று கதவை திறக்கும் முன் அந்த பக்கம் இருந்தவர் மூன்று, நான்கு முறை கதவு படபடவென தட்டிவிட்டு, அழைப்பு மணியையும் தாராளமாக ஒலிக்கவிட்டார்.​

காவ்யாவின் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். அவள் வீட்டினர் கூட வார இறுதியில் மட்டுமே வருவார்கள்.​

எனவே மிகுந்த பயத்துடன் காவ்யா கதவை திறக்க, வெளியே கண்கள் கலங்கி வெளிறிய முகத்துடன் லட்சுமி நின்றிருந்தார்.​

இந்நேரத்தில் இவரா? என்னாச்சி இவங்களுக்கு? என பல கேள்விகள் மனதினை குடைய, "என்ன ஆன்ட்டி?" என பதட்டத்துடன் கேட்டாள்.​

அன்னை கதவை திறக்க செல்லும் பொழுது பின்னாடியே வால் பிடித்துக் கொண்டு சித்துவும் அவள் அருகில் வந்து நின்று கொண்டான்.​

எச்சிலுடன் சேர்த்து அழுகையையும் விழுங்கிய படியே லட்சுமி, "அ.. அவருக்கு உடம்பு முடியல.. நெஞ்சி வலிக்குதுன்னு சொல்லுறாரு.. எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல.." என சொல்லிக்கொண்டே காவ்யாவின் கைபிடித்து, "நீ கொஞ்சம் வந்து பாருமா.." என அழைத்தார்.​

அவர் கூறியதைக் கேட்டவளும் பதற்றத்துடன் அவர் வீட்டிற்கு விரைய சித்துவும் அன்னையின் பின்னே ஓடினான்.​

அவர்களின் வீட்டிற்கு உள்ளே செல்ல, அங்கே கூடத்தில் நெஞ்சை பிடித்தபடி படுத்திருந்தார் லட்சுமியின் கணவர் பரசுராமன்.​

"ரெண்டு பேரும் சாப்பிட்டுவிட்டு டிவி தான் பார்த்துட்டு இருந்தோம். தீடீர்னு நெஞ்சிவலின்னு சொல்லிட்டு படுத்துட்டாரு.." என அழுகையில் கேவியபடியே லட்சுமி சொன்னார்.​

"சரி அழாதீங்க ஆன்ட்டி. ஆம்புலன்ஸ்க்கு சொல்லுவோம்" என ஆம்புலன்ஸிற்கு சொல்லியவள் கீழே உள்ள செக்யூரிட்டியையும் அழைத்து தெரியப்படுத்தினாள்.​

பத்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட செக்யூரிட்டியின் உதவியுடன் பரசுராமை அதில் ஏற்றியவள் மறக்காமல் லட்சுமியின் வீட்டினை மட்டும் பூட்டினாள்.​

அதனை பார்த்த லட்சுமி, "நீயும் கூட வாமா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்னோட பையன் ஊருக்கு போயிருக்கான்" என பயம் கலந்த எதிர்பார்ப்புடன் அவளைப் பார்த்தார்.​

இந்த ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்டதற்கே அவளின் உடம்பு பதறியபடி இருந்தது. இப்பொழுது அதில் மருத்துவமனைக்கும் செல்ல வேண்டுமா? என யோசித்தவள், வேறு வழியில்லாமல் தனது ஃபோன், பர்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தன் வீட்டையும் பூட்டிவிட்டு சித்துவுடன் அந்த ஆம்புலன்ஸிலே மருத்துவமனை சென்றாள்.​

அங்கே பரசுராமனை சேர்த்ததும் மருத்துவர்கள் அவர்களின் பணியைத் தொடங்கினர்.​

அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து செல்லும் சமயம் தான் வீட்டிற்கு வந்த கார்த்திக் அதனைப் பற்றி செக்யூரிட்டி இடம் விசாரித்தான். அவரும் அனைத்தையும் சொல்லிவிட்டு காவ்யா அவர்களுடன் சென்றதையும் சேர்த்து கூறினார்.​

இந்த நேரத்துல அவங்க கூட எதுக்கு போனாங்க காவ்யா? என்று யோசித்தவன் தானும் அந்த மருத்துவமனைக்கு விரைந்தான்.​

அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் பரசுராமன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு வெளியில் அமர்ந்திருந்த லட்சுமி தன் மகனிடம் ஃபோனிலே அழுதுக் கொண்டிருந்தார்.​

இரண்டு நாற்காலி தள்ளி காவ்யா அமர்ந்திருக்க அவளின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான் சித்தார்த்.​

அவர்கள் மூவரையும் பார்த்த கார்த்திக் அவர்களின் முன் வந்து நின்றான். அவனை நிமிர்ந்து பார்த்த காவ்யாவிற்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.​

ஆனால் அந்த கவலை எல்லாம் சித்துவிற்கு இல்லையே, "கார்த்தி அங்கிள், அந்த தாத்தாக்கு பெரிய பீவர் போல.. உள்ள இருக்காங்க" என்று சொல்லிக்கொண்டே காவ்யாவின் மடியில் இருந்து எழுந்தவன் கார்த்திக்கின் புறம் சென்றான்.​

சித்துவையும் கார்த்திக்கையும் சந்திக்க விடாமல் காவ்யா என்ன செய்தாலும் அது தோல்வியையே தழுவியது. இப்பொழுது கூட இருவரும் பேசுவதைப் பார்த்தவள் பொது இடத்தைக் கருதி அமைதி காத்தாள்.​

சித்துவின் கையை பிடித்துக்கொண்டே லட்சுமியிடம் சென்றவன், "எதுவும் ஆகாது ஆன்ட்டி! நீங்க அழுது உங்க உடம்பையும் கெடுத்துக்காதீங்க.." என அக்கறையாய் சொல்லியவனுக்கு பசி வயிறை கிள்ளியது.​

மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டது. அதன் பிறகு வேலை, மீட்டிங் என அவன் நேரம் சென்றுவிட இன்னும் அவன் இரவுணவை உண்ணவில்லை. மணியைப் பார்க்க அது ஒன்பது முப்பது என காட்டியது.​

சித்துவிடம் "கேன்டீன் போகலாமா?" என கேட்டான். சித்து காவ்யாவைப் பார்த்தான்.​

காவ்யாவிற்கு இந்த மருத்துவமனையில் சித்துவை வைத்திருப்பதற்கு விருப்பமே இல்லை. இப்பொழுது தான் உடம்பு கொஞ்சம் தேறி இருக்கிறது. அதற்குள் இங்கு அவசர பிரிவுக்கு முன் அவனை வைத்திருப்பதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவள் கார்த்திக் கேட்டதும் வேறு வழியில்லாமல் சரி என்று கூறிவிட்டாள்.​

அவர்கள் இருவரிடமும் “ஏதாவது வேண்டுமா?” என கார்த்திக் கேட்க, இருவரும் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டனர்.​

கேன்டீன் சென்று தனக்கு இட்லியை ஆர்டர் செய்தவன் சித்துவிற்கு பால் சொன்னான்.​

அவன் இட்லியை சாப்பிடுவதைப் பார்த்த சித்து, "எங்க மம்மி கூட இன்னும் சாப்பிடல.." என்றான்.​

"நாம போறப்ப அவங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு போகலாம்" என்றவன் காவ்யாவிற்கு உணவை வாங்கிச் சென்றான்.​

முதலில் மறுத்தவள் சித்துவின் வற்புறுத்தலில் சாப்பிட்டாள்.​

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர்கள், "பயப்படுற அளவுக்கு ஒண்ணுமில்லை. கொஞ்சம் ரத்த கொதிப்பு அதிகமாகிருக்கு. சரியான நேரத்துக்கு கூட்டிட்டு வந்துட்டிங்க" என்றவர், "யாராவது ஒருத்தர் மட்டும் அவர்கூட இருங்க" என்று அங்கிருந்த அனைவரையும் பார்த்து சொல்லிவிட்டு சென்றார்.​

காவ்யாவை எவ்வளவு முறை அவமானப்படுத்தியும் தான் அழைத்ததும் சரியான சமயத்துக்கு வந்து உதவியவளை நினைத்து வெட்கிய லட்சுமி!​

காவ்யாவின் கையை பிடித்து, "என்னை மன்னிச்சிடு காவ்யா! உன்னை ரொம்பவே அவமானப்படுத்திருக்கேன் ஆ.. ஆனா அத எதையும் மனசுல நினைக்காம இன்னைக்கு நீ தான் அவரை காப்பாத்திருக்க" என்று உடல் குழுங்க கண்கலங்கியவரிடம்,​

"அக்கம் பக்கத்தில் இருக்கிறோம். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யுறதுல என்ன ஆன்ட்டி இருக்கு?" என கூறிவளை லட்சுமி மட்டுமில்லாமல் கார்த்திக்கும் வியந்து பார்த்தான்.​

இங்கு வரும் பொழுது அவன் மனதில் இது தான் ஓடிக் கொண்டிருந்தது. 'இவர் தான அவளை பற்றி எல்லோர் முன்பும் பேசியது. இப்ப அவங்களுக்கு உதவி செய்யலனா தான் என்ன?' என்ற நினைப்புடன் வந்தவனிற்கு காவ்யாவின் பெருந்தன்மை பெரிய வியப்பை அளித்தது.​

முதன்முறையாக சித்துவின் அம்மாவாக இல்லாமல் காவ்யாவையயும் அவளின் குணங்களையும் அறிய தொடங்கினான். எதிரிக்கும் நல்லது செய்யும் குணம்; எதிர்பார்ப்பில்லாமல் காட்டும் பரிவு என அனைத்தும் கார்த்திக்கை சற்று அசைத்துப் பார்த்தது.​

சித்து தூக்கம் வருது என காவ்யாவை நச்சரித்தான். "நீங்க மூணு பேரும் போங்க. என்னோட பையன் காலைல ஐந்து மணிக்கு இங்க வந்துடுவான்" என்றார் லட்சுமி.​

ஒருமுறைக்கு இருமுறை மருத்துவரிடம் பேசிவிட்டு காவ்யா, கார்த்திக் மற்றும் சித்து அங்கிருந்து கார்த்திக்கின் காரிலே புறபட்டனர்.​

மணி பன்னிரண்டாக இப்பொழுது தனியாக போவது நல்லதில்லை என்றுணர்ந்த காவ்யா எவ்வித மறுப்பும் கூறாமல் கார்த்திக் காரிலே செல்ல சம்மதித்தாள்.​

வழியிலேயே சித்து காவ்யாவின் மடியில் உறங்கிவிட்டான். காரின் கண்ணாடி வழியே இருவரையும் கார்த்திக் பார்க்க, சித்து உறங்குவதும் காவ்யா சோர்ந்து போய் ஜன்னலில் சாய்ந்தமர்ந்திருப்பதும் தெரிந்தது.​

மருத்துவமனை அதனுடன் கூடிய ஆம்புலன்ஸ் சத்தம் இன்னமும் காவ்யாவின் காதில் கேட்டுக் கொண்டிருப்பதை போல் அவளுக்கு தோன்ற, அவளின் உடல் வெளிப்படையாகவே நடுங்க தொடங்கியது.​

அந்நேரம் வீடு வந்துவிட்டது என கார்த்திக் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.​

காவ்யாவும் கீழே இறங்கியவள் உறங்கி கொண்டிருக்கும் சித்துவை தூக்கினாள். ஏற்கனவே அவள் நடுங்கி கொண்டிருக்கையில் சித்துவை வேறு தூக்கியதால் கால்கள் நிற்காமல் தள்ளாடியது.​

உடனே கார்த்திக் அவளின் கைபிடித்து சரியாக நிற்க வைத்தவன் சித்துவை வாங்கி தன் தோளில் போட்டுக்கொண்டான்.​

"என்னாச்சி?" என காவ்யாவிடம் கேட்க,​

"ஒன்றுமில்லை" என தலையசைத்தவள் சித்துவை வாங்க கை நீட்டினாள்.​

"நீங்க இப்படியே தூக்கினா? ரெண்டு பேரும் கீழ தான் விழுவீங்க.." என்று சொன்னவன், "சித்துவை நான் தூக்கிட்டு வரேன்" என முன்னே சென்றான்.​

சித்துவை தூக்குவது அவனுக்கு பஞ்சு பொதியை தூக்குவதை போல் இருக்க, சிறகில்லாமல் பறந்தான். அந்த பிஞ்சு கரங்கள் கார்த்திக்கின் வலிய தோள்களின் மீது படர்ந்திருப்பது யாரோ அவனை அணைத்து ஆறுதல் சொல்வது போல் கார்த்திக்கிற்கு இதமாக இருந்தது.​

அவனிடம் வாதாடவும் தெம்பில்லாமல் அவனை பின் தொடர்ந்தாள், காவ்யா. காவ்யாவின் தளத்திற்கு வந்ததும் அவள் கதவை திறந்தாள்.​

அவள் வீட்டின் உள்ளே செல்லாமல் வாசலிலே சித்துவை அவள் கையில் கொடுத்தவன், "போய் படுக்க வெச்சிட்டு வாங்க" என வெளியே நின்றுக்கொண்டான்.​

அவளும் சித்துவைப் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தாள்.​

"உங்கள பார்த்தாலே ரொம்ப சோர்ந்து இருக்க மாதிரி தெரியுது. எத பத்தியும் யோசிக்காம நல்லா தூங்குங்க. எதாவது உதவினாலும் தயங்காம கேளுங்க" என கூறி அவளின் பதிலையும் எதிர்பாராமல் படிகளின் வழியே அவன் வீட்டிற்கு சென்றான்.​

கதவை தாழ் போட்டுவிட்டு உள்ளே வந்தவளுக்கு இன்னமும் அந்த ஆம்புலன்ஸ் சத்தம் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.​

இருகைகளாலும் காதுகளை மூடிக்கொண்டு சித்துவின் அருகில் உடலைக் குறுக்கிப் படுத்துக்கொண்டாள்.​

அவளின் இந்த நிலைக்கு காரணமானவன் அங்கே சுவரில் மாலையிட்டு தொங்கிக் கொண்டிருந்த புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தான்.​

இரண்டு வருடங்களுக்கு முன், உலகத்தையே தன் பிடிக்குள் வைத்திருந்தது கொரோனா என்னும் கொடிய அரக்கன்!​

அப்பொழுது தான் சித்தார்த்திற்கு இரண்டு வயது நிரம்பியிருக்க ராஜேஷின் பெண்ணிற்கும் ஒருவயது நிரம்பியிருந்தது.​

மூன்று துணிக்கடைகளை வைத்து நடத்தும் குடும்பமான ரமேஷின் வீட்டில் அவனின் அப்பாவை தவிர்த்து ரமேஷும், ராஜேஷும் மாற்றி மாற்றி கடையை பார்த்துக் கொண்டிருந்தனர்.​

"வீட்ல ரெண்டு குழந்தைங்க இருக்காங்க ரமேஷ்! கொஞ்ச நாளுக்கு வேலைக்கு போகாம வீட்லயே இருக்கலாமே?" என காவ்யா ரமேஷிடம் மன்றாடினாள்.​

"கஸ்டமர் எல்லாரும் சமூக இடைவெளி கடைபிடிக்குறாங்க காவ்யா. பிரச்சனை ஒன்னுமில்ல" என்று அவளிடம் சொல்லி சென்றவன் அன்றிரவு வரும்பொழுதே தும்பலில் தான் வந்தான்.​

"நான் தான் சொன்னேனே! என் பேச்சை கேட்டீங்களா?" என்று கோபத்தையும் அழுகையையும் சேர்த்துக் கேட்டவளைப் பார்த்த ரமேஷ்,​

"சாதாரண கோல்ட் தான்! சரியாகிடும். நான் தனியா அந்த ரூம்ல இருக்கேன்" என தன்னைத் தானே தனிமைப் படுத்திக்கொண்டான்.​

அவனைப் பார்த்த ராஜேஷ் கடையை திறக்காமல் அவனும் வீட்டிலே இருந்து கொண்டான்.​

ஒருவாரம் சென்றும் ரமேஷின் உடல்நிலை முன்னேற்றம் ஏதுமில்லாமல் இருக்க, மருத்துவமனையில் சேர்க்க முடிவெடுத்தனர். ஆனால் அந்நேரம் மருத்துவமனை ஒன்றிலும் இடம் கிடைக்காதலால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொண்டான்.​

அதனால் காவ்யாவையும் பிரியாவையும் அவர்களின் குழந்தைகளுடன் அவர்கள் பிறந்த வீட்டிற்கே அனுப்பி வைத்துவிட்டனர்.​

"அப்பா! அப்பா!” என்று அப்பொழுது தான் அந்த வார்த்தையை பிழையில்லாமல் உச்சரிக்க தொடங்கிய சித்துவை பிரிவதற்கு ரமேஷ் ரொம்பவே சிரமப்பட்டான்.​

தன் மகனை தொட்டு தூக்கி கொஞ்சி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியதால் அவனைப் பார்வையால் மட்டுமே வருடியவனிற்கு அது தான் அவனை கடைசியாக பார்ப்பது என அறிந்திருக்கவில்லை!​

கௌதம் வந்து காவ்யாவையும் சித்துவையும் அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். இருமாதங்கள் முன்பு தான் கௌதமிற்கு திருமணம் நடந்திருந்தது. எனவே, காவ்யா அங்கு செல்லவே மிகவும் யோசித்தாள். ஆனால் கௌதமின் மனைவி கண்மணி காவ்யாவையும் சித்துவையும் நன்றாகவே கவனித்துக் கொண்டாள்.​

நாட்கள் செல்ல செல்ல உடல் நிலையில் மிகவும் பின்னடைவை அடைந்த ரமேஷை சிபாரிசின் பெயரில் கிடைத்த ஒரு மருத்துவனையில் சேர்த்தனர். எப்படியாவது அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று பணத்தையும் தண்ணீராக செலவழித்தனர்.​

அவனின் இந்த நிலையை நினைத்து இரு குடும்பமும் கவலையில் ஆழ்ந்தனர்.​

மருத்துவமனையில் இருந்தே தினமும் காவ்யா, சித்து மற்றும் தன் குடும்பத்துடன் வீடியோவிலே உரையாடினான் ரமேஷ்.​

அன்றிரவு வெகு நேரம் காவ்யாவுடனும் சித்துவுடனும் பேசிய ரமேஷிற்கு 'என்ன தோன்றியதோ!' காவ்யாவிடம், "சித்துவ நல்லா பார்த்துக்கோ.." என்றான்.​

ஏற்கனவே அவளின் மாமியாரும் அவளிடம் இதையே சொல்லிக்காட்டினார். அதன் தாக்கத்தில், "நான் நல்லா தான் பார்த்துக்கிறேன். அவ்ளோ அக்கறை இருந்தா நீங்க சீக்கிரமா குணமாகிட்டு வந்து பார்த்துக்கோங்க" என்று ரமேஷுடன் சண்டைபிடித்தாள்.​

அவளிற்கு சோபையான புன்னகையை கொடுத்தவன் அலைபேசியில் தெரிந்த தன் மனைவி மற்றும் குழந்தை இருவரையும் கண்ணுக்குள் நிறைத்துவிட்டு அலைபேசியை துண்டித்தான்.​

'அந்த நாள்! விடியாமல் இருந்திருக்க கூடாதா?' என்றிருந்தது காவ்யாவிற்கு.​

காலையிலே ராஜேஷ் கால் செய்து மருத்துவமனையில் ரமேஷ் இறந்துவிட்டதாக சொன்னான்.​

அதிர்ச்சியில் நெஞ்சைப்பிடித்துக் கொண்டவளை அவளின் குடும்பம் தாங்கிப்பிடித்தது.​

உடலை வீட்டிற்கு தரமுடியாது என சண்டையிட்ட மருத்துவகுழு, இங்கிருந்து நேராக மயானத்திற்கு தான் கொண்டு செல்லவேண்டும் என கூறிவிட்டது.​

'தன் மூத்த பிள்ளை இறந்த சோகத்தில் இருந்த மங்கலம்' அவனுக்கு கொல்லியாவது அவனோட பையன் வைக்கட்டும் என அழுது அரற்றியதால்,​

காவ்யா, சித்து, கௌதம், ராஜேஷ் மட்டும் ஆம்புலன்ஸில் சென்றனர்.​

ரமேஷின் முகத்தை கூட அவர்களால் பார்க்க முடியவில்லை!​

காவ்யா ஒரு துளி கூட கண்ணீர் சிந்தவே இல்லை! அவ்வளவு இறுகிப் போயிருந்தாள்.​

சிறு குழந்தையான சித்து உறங்கிக்கொண்டே வர, அவனை கௌதம் பார்த்துக்கொண்டான். வழி முழுக்க கேட்ட ஆம்புலன்சின் சத்தம் காவ்யாவின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.​

அங்கே மயானத்திற்கு சென்றதும் ரமேஷின் பூதவுடலை சுற்றிலும் துணியால் கட்டிக் கொண்டு வந்தனர். அவர்களின் முறைப்படி அனைத்தையும் செய்து முடித்தனர்.​

இறுதியில் ரமேஷின் முகத்தைப் பார்க்கக் கூட அங்கிருந்த யாருக்கும் கொடுத்து வைக்கவில்லை!​

என்ன? ஏதென்று தெரியாமலே காரியங்களை சித்துவை வைத்து முடித்துவிட்டு அவளின் பிறந்த வீட்டிற்கே சென்றுவிட்டாள் காவ்யா.​

யாராலும் நம்ப முடியவில்லை! சாதாரண சளி, காய்ச்சல் என்று இருந்தவன் இன்றில்லை! என்ற உண்மையை அனைவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.​

யாரோ செய்த செயல்! லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. அதில் ரமேஷும் ஒருவன். அவ்வளவு தான்! என்ற நிலை இருந்தது.​

ஆனால் இறந்தவர்களை நம்பி இருந்த குடும்பத்தின் நிலை? எதை ஈடாக கொடுத்தாலும் சென்ற உயிர் வரவா? போகிறது. அந்த லட்சக்கணக்கான கனவுகளை இழந்த குடும்பங்களுள் காவ்யாவும் ஒருத்தி என்றானாள் அவ்வளவே!​

கல்யாணம் முன்பு வரை தந்தையின் நிழலில் அவரின் கைபிடித்து நடந்தவள்;​

திருமணத்திற்கு பின் கணவனின் தோள் சாய்ந்து அவனுடன் கைகோர்த்து பயணம் செய்தவள்;​

இன்று தன்னந்தனியாக!​

தன்னையே நம்பி இருக்கும் சிறுப்பிள்ளையான சித்தார்த்துடன் தனியாக காட்டில் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.​

அந்த காட்டில் தந்திரங்கள் நிறைந்த நரியை போன்ற மனிதர்களும் இருப்பர்; அதே சமயம் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவும் நல்ல மனிதர்களும் இருப்பர் என காலம் அவளுக்கு காட்ட காத்திருந்தது!​


- தொடரும்
 
Top