எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மார்க்கண்டேயனின் மனோரஞ்சிதம் கதை திரி

Status
Not open for further replies.

priya pandees

Moderator
அத்தியாயம் 1

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் அநேக கிராமங்களில் ஒன்றான நறுமணந்தி என்ற கிராமத்தில், ஒரு வீட்டின் காலை பொழுது.

"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்"

மகா மிருத்யுஞ்ஜய மந்திரம், உயிர் காக்கும் சிவன் மந்திரம், வீட்டிற்கு நேர்மறை எண்ணங்களை தரும் ஸ்லோகம். ப்ரோதஷ தினங்களில் இதை, காலையில் குளித்துவிட்டு கடவுள் முன் நின்று பாராயணம் செய்யும் வழக்கத்தில் உள்ளவர் ஞானதேசிகன். அன்றும் அவர் வீட்டின் அந்த சிறிய மரத்திலான பூஜை அறை முன் அவர் அந்த வழக்கத்தில் நின்றிருக்க,

மறுபக்கம், "மோனிகா நிமிஷா, மோனிகா கமிஷா, மோனிகா பேபிமா மோனிகா, கிச்சிச்சா கிச்கிச்சா" என வாய்க்குள் வருவதை எல்லாம் வார்த்தைகளாகப் போட்டுப் பாடிக் கொண்டிருந்தான் ஞானத்தின் மூத்த பேரன். குளியலறையிலிருந்து வந்த அவன் பாட்டு சத்தம் வீட்டிலிருக்கும் அனைவரின் காதையும் இறைய விட்டுக் கொண்டிருந்தது. தொண்டையில் ஒலிபெருக்கியோடே பிறந்தவனாக அவனுக்கு அப்படி ஒரு சத்தமான குரல். அவன் கிருஷ்ணன் மனோரஞ்சிதத்தின் மூத்த மகன்.

"டேய் இப்ப நீ வெளில வர்றியா இல்ல நா உள்ள வரவா?" என கையில் சட்னி அறைத்துக் கொண்டிருந்த கைவேலையால் மிக்ஸி ஜாரின் மூடியோடு வந்து குளியலறை வாசலில் நின்று அரட்டினார் ஆண்டாள். ஞானதேசிகனின் மனைவி.

"நோ ஆச்சி. பாய்ஸ் குளிக்கும் போது கேர்ள்ஸ் பாக்கக் கூடாது, உனக்கு நா டெய்லி சொல்றேன் மறுபடியும் மறுபடியும் சொல்ற நீ" என அவன் பதில் பேச,

'இவன!' என ஆழ மூச்செடுத்தவர் "பாடாம கம்முனு குளிச்சிட்டு வாடா. காது இரைச்சல்ல ஆகுற வேலைய கூட வேகமா பாக்க முடியல" என கதவில் ஒரு தட்டு தட்டிவிட்டு மீண்டும் பாதியில் விட்ட சட்னியை முழுமையாக அரைக்கச் சென்றார்.

மனோரஞ்சிதத்தின் மூத்த மகன் கிருஷ்ணன் ஏழு வயது, இளையவன் கண்ணன் மூன்று வயது. கிருஷ்ணன் இன்னும் குளிக்கிறேன் என பண்ணும் சேட்டை கருத்தில் பட்டாலும், சிறியவனுக்கு ஊட்டிவிட்டு, இருவரையும் கிளப்பி அவளும் கிளம்ப வேண்டிய பரபரப்பில் இருந்தாள் மனோ.

"ப்பா இவன பார்த்துக்கோங்க. கவனம். நா போய் கிளம்பி வர்றேன்" என சாமி கும்பிட்டு விட்டு நின்ற ஞானத்திடம், கண்ணனை இறக்கி விட்டுவிட்டு அவள் அறைக்குள் குளிக்கச் சென்றாள்.

அம்சமான அழகி, இரண்டு பிள்ளைகளின் தாய் என கூற முடியாதளவிற்கு ஒல்லியான தேகம். வேலைப்பளுவாலோ, குழந்தைகளின் சேட்டையாலோ, மனக்கவலையாலோ எதுவோ ஒன்று அவளை சிக்கன உடம்புகாரியாகவே வைத்திருந்தது.

அவள் இறக்கிவிட்ட நொடி, கைக்கு எட்டியதை எல்லாம் இழுத்து கீழே போடத் துவங்கியிருந்தான் இளையவன்.

அதில் அங்கு விரவி கிடந்த விளையாட்டு பொருட்களில், இரு நாட்களாக அவனுக்கு தராமல் கிருஷ்ணன் ஒளித்து வைத்த சிகப்பு நிற மான்ஸ்டர் ட்ரக் விளையாட்டு வாகனம் கண்ணில் பட்டுவிட, அப்படி ஒரு பரவசத்தோடு அதை எடுக்க நான்கு கால் பாய்ச்சலில் அதை எட்டியவன், எடுத்து இப்படியும் அப்படியும் தேய்த்து, அதை ஓட்டிப் பார்த்து ஆசை தீர விளையாடிக் கொண்டிருந்தான். குளித்து முடித்து துண்டோடு ஆடிக்கொண்டே வந்த கிருஷ்ணனின் கண்ணில் இது பட்டுவிட, அவ்வளவு தான் அடுத்த நிமிடம் இருவருக்கும் சண்டை வலுத்துவிட்டது.

இது எப்போதும் நடப்பது தான் என்பதால் பூஜையை முடித்துவிட்டு, இருவரிடமுமிருந்து ஞானம் அவரின் வேலையைச் சார்ந்த சில நோட்டுகளை பத்திரபடுத்த அங்கிருந்த ஷோகேஷை அப்போதைக்கு திறந்தார். ஆண்டாளும் எட்டிப் பார்த்துவிட்டு, "இன்னைக்கு உன் அம்மாட்ட அடி வாங்கிட்டு தான்டா கிளம்பப் போற நீ" என அடுப்பு வேலை அழைக்க அங்கு திரும்பி விட்டார்.

ஞானதேசிகன், அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்க திடுதிடுவென ஓடிவந்து, அவர் காலுக்கும், ஷோகேஷுக்கும் இடையில் உள்ள இடத்தில் படீரென்ற சத்தத்தோடு விழுந்தான் இளையவன் கண்ணன்.

அவன் விழுந்ததிலேயே, ஞானம் கையிலிருந்த நோட்டு, பேனா, சில தாள்கள் எல்லாம் திக்கத்திற்கு ஒன்றாக பறந்திருந்தது.

ஆனாலும் அதை விடுத்து, "அடேய் ஏன்டா?" என, குனிந்து கண்ணனைத் தூக்கிவிட முனைய, அவனை விரட்டிக்கொண்டு புயல் வேகத்தில் வந்த கிருஷ்ணன் தம்பியைப் பிடித்துவிடும் வேகத்தில் அவன் மீதுவிழ, சின்னவன் கையிலிருந்தக் காரைத் தூக்கி எறிய, ஷோகேஷில் இருந்த பொருட்களும் அடுத்ததாக பறந்தது.

அந்த வீட்டு மூன்று குட்டீஸ்களின் ஃபோட்டோ, மனோவின் அண்ணா அண்ணி வளைகாப்பு ஃபோட்டோ, மற்றும் குட்டி கிருஷ்ணன் ராதை சிலை, குழந்தை அமைப்பிலான மண் பொம்மை, சில கைவினை பொருட்கள் என அனைத்தும் உருண்டு பிள்ளைகள் மேனியில் பாதியும், ஞானம் காலில் சிறுதுமாக பட்டு உருண்டு அந்த அறையை வட்டமடித்து நின்றது. கண்ணாடி பொருட்கள் பிள்ளைகள் மேல் பட்டுவிட்டதா என்ற பதட்டத்தில் ஞானம் பதறி நின்றார்.

அதை கண்டு கொள்ளாமல், கிருஷ்ணனும், கண்ணனும் கீழே விழுந்த பொருட்களோடு உருண்டு கொண்டிருக்க, "டேய் சண்ட போடாதீங்கடா, எந்திரிங்க ரெண்டு பேரும்" என ஞானம் மெதுவாகவே அதட்டியபடி, இருவரையும் பிரித்துவிட முயன்றார், உள்ளறையில் சமையலில் நின்றிருந்த ஆண்டாளும், குளித்து வந்த மனோரஞ்சிதமும், இவர்கள் சத்தத்திற்கு அடித்துப்பிடித்து வேகமாக வந்தனர்.

"அம்மா வர்றா எந்திரிங்கடா" என ஞானத்தின் குரலில், கிருஷ்ணன் வேகமாக எழுந்து கண்ணனை அப்படியே விட்டுவிட்டு இடுப்பில் கட்டிய துண்டோடும் அங்கு சற்று தள்ளி கீழே கிடந்த அந்த மான்ஸ்டர் காரோடும் வாசல் நோக்கி ஓடிவிட்டான், கண்ணன் அவனை மீண்டும் பிடிக்க, "கிஷ்ணா கிஷ்ணா" என்றழைத்தவாறு எழுந்து வெளியே ஓட முனைய, அவனை பிடித்து நிறுத்தி தூக்கி விட்டாள் மனோரஞ்சிதம்.

"ரெண்டு நிமிஷம் சும்மா விட்டா போதும் வீட ரெண்டாக்கிடுதுங்க. சீக்கிரம் பள்ளிகூடத்துக்கு கிளம்புங்க ராசாக்களா, முடியல" என்ற ஆண்டாளும் புலம்பிவிட்டுத் திரும்ப, அப்போது தான் அறை இருக்கும் நிலையே இரு பெண்களின் கண்ணிலும் பட்டது. அதுவரை இரண்டு வாண்டும் போட்ட சத்ததத்தில், எப்போதும் போல் சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்ற எண்ணம் மட்டுமே!

"இதென்ன எல்லாம் கீழ விழுந்து கிடக்கு?" என அறையின் விளக்கையும் ஒளிரவிட, இன்னும் தெளிவாக தெரிந்தது, இருவரும் சில நொடிகளில் பார்த்துவிட்டிருந்த வேலை.

இவர்கள் அதிர்ச்சி எல்லாம் இவர்களுக்கு மட்டும்தான் என, அண்ணனைப் பிடிக்க கையையும் காலையும் உதறி வெளிய போக வேண்டும் என மல்லுகட்டிக் கொண்டிருந்தான் மனோரஞ்சிதம் இடுப்பிலிருந்த கண்ணன்.

"என்னங்க இது? சண்டை போட்டு இதெல்லாம் அவனுங்க உருட்டி விடுறவர பார்த்துட்டு நின்னீங்களா நீங்க? ஷோகேஷ என்னத்துக்கு இந்நேரம் திறந்தீங்க நீங்க? ஃபோட்டெல்லாம் கீழ கடக்கே!" என ஞானத்திடம் கடுப்பாக கேட்டவர் ஃபோட்டக்களை மட்டும் எடுத்துப்பார்க்க, கண்ணாடி வைக்காத ஃப்ரேம் என்பதால் அதில் எந்த கீறலும் இல்லாமல் இருந்தது.

"சரி மத்தத நா அப்றமா பாத்து ஒதுக்கிக்குறேன், போய் சேலைய மாத்திட்டு வா மனோ. நீங்க அவன போய் கூட்டிட்டு வாங்க, வேன் வந்துரும் இப்ப" என கணவருக்கும் சொல்ல,

"ஏலே கிருஷ்ணா! எங்கையா போய்ட்ட? வா யூனிஃபார்ம் போடணும்ல?" என அவரும் அவனை அழைத்துக் கொண்டே வாசல் நோக்கி சென்றுவிட்டார்.

"அவன இப்படி கொஞ்சிட்டே திரிங்க இன்னும் நல்லா சேட்டை பண்ணட்டும்" என அங்கிருந்தே ஆண்டாளும் கத்த, பதிலே பேசவில்லை ஞானம்.

மனோரஞ்சிதம், கையில் துள்ளிக் கொண்டிருந்த பிள்ளையை அடக்கியபடி அங்கு கிடந்த கிருஷ்ணர் ராதை சிலையை தான் புருவ சுழிப்புடன் பார்த்திருந்தாள். உள்ளுக்குள் எதுவோ செய்தது, பாரமேறி அழுத்துவதாகபட்டது முயன்று சமநிலைப் படுத்தினாள்.

ஆண்டாள், "உனக்கு என்னலே? என்னத்தையாவது உருட்டிவிட்டுட்டு எனக்கு ஒரு வேலைக்கு இருவேலையாக்கிட்டே இருக்கீங்க? என்னத்துக்கு குதியாட்டம் போடுத இப்ப?" என சின்னவனை அரட்டியதில், அவரைக் கோபித்து முறைத்தவன், மனோரஞ்சிதம் முகத்தில் சத் சத்தென்று அடித்துவிட்டான்.

அதில் சுயம்பெற்றவள், "கண்ணா!" என அதட்டி இறக்கிவிட, கீழே தரையில் ராட்டினமாக உருண்டு தொண்டையிலிருந்து சத்தமிட்டு அழுகையைப் பிடித்துவிட்டான் சிறியவன்.

"வலிச்சுருச்சா? பட்டுன்னு ரெண்டு அடி வைக்காம பாத்துட்டு நிக்கிற, நல்ல கை நீண்டு பழகிட்டு இந்த வாண்டுக்கு, என் புள்ளைய அடிக்குற நீ, ஓடி போயிடு உங்க அப்பா வீட்டுக்கு" என்ற ஆண்டாள், திரும்பி அவள் முகத்தில் அவன் நககீரல் எதுவும் பட்டிருக்கிறதா எனவும் அவள் நாடிபிடித்து திருப்பித் திருப்பிப் பார்த்தார்.

"அதெல்லாம் ஒன்னுமில்லம்மா. மணி எட்டாக போகுது. அவனுக்கு வேன் வந்திரும். நீ இட்லிய பாரு, நா அவன கிளப்பப் பாக்குறேன்" என்றவள், மீண்டும் கண்ணனனைத் தூக்கி இடுப்பில் இறுத்த, தோளில் சாய்ந்து கொண்டான் அவன். யாருக்கும் எதற்கும் பயப்படாத இரண்டு வாண்டும், 'ஓடிபோயிரு உங்க அப்பா வீட்டுக்கு' என்ற வாக்கியத்தில் பாவம் போல் முகத்தை வைத்து நடித்துவிடுவர். சிறியவனுக்கு அதற்கான அர்த்தம் புரியாத போதும், கிருஷ்ணன் இந்த வாக்கியத்திற்கு எவ்வாறு முகத்தை வைத்துக் கொள்வான் என தெரிந்திருக்க, இவனும் அதை பின்பற்றிக் கொண்டிருக்கிறான்.

"நல்லா நடிப்பான்!" என அவன் கன்னத்தில் வலிக்காமல் இடித்துவிட்டு, ஆண்டாள் சிரிப்புடன் சமையலறை செல்ல,

"ம்மா ம்மா!" என இவள் கன்னத்தைத் தட்டினான் சிறியவன், மனோ வெளியே பெரியவனைத்
தேடியவாறு வந்தாள். அங்கு தான் ஞானம் கிருஷ்ணனை அதட்டுவது போன்ற பாவனையில், 'பள்ளிக்கு கிளம்பணும் வா' என கெஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

"போ தாத்தா. உள்ள வந்தா அம்மா அடிப்பா. நா இன்னைக்கு வேன்ல போ மாட்டேன். அம்மாவ கூட்டிட்டு போ சொல்லு" என அடுத்த வீட்டின் வாசற்படி சருக்கில் காரோடு சருக்கி விளையாடிவாறு பேச்சு வார்த்தையில் இருந்தான் அவன்.

"கிருஷ்ணா!" என்ற மனோவின் அதட்டலில், அங்கிருந்தும் ஓட முயல, "இப்ப வந்து கிளம்ப போறியா என்ன நீ?" என்ற அரட்டல் குரல், இனி அடுத்து அடிதான் என்ற புரிதலை, அவனுக்கு பலமுறை அனுபவம் தந்திருந்ததால், "வா தாத்தா!" என ஞானத்தையும் இழுத்துக் கொண்டு, அவரின் கைக்குள் பதுங்கியவாறு அம்மாவை கடந்து உள்ளே ஓடிவிட்டான்.

மனோ தகப்பனாரையும் கடுகடுவென்று முறைக்க, "ஏலே எதுக்கு காலைலயே சிடுசிடுங்க? சின்ன பையன் தான? அமைதியா சொன்னா கேட்டுக்குவான். போய் நீயும் கிளம்பு போ, இவன கொண்டா" என சிறயவனை வாங்கிக் கொண்டு அவளையும் சிரித்த முகத்துடன் உள்ளனுப்பினார் ஞானம்.

மீண்டும் உள்ளே வந்தபோது அந்த அறை அப்படியே தான் கடந்தது, இப்போதைக்கு அதை ஒதுங்க வைக்க ஆண்டாளுக்கும் நேரம் கிடையாது, இவளாலும் முடியாது. மீண்டும் அந்த ராதாகிருஷ்ணர் சிலைக்கு பார்வை போக, அது அருகில் சென்று பெருமூச்சோடு கையில் எடுத்தவள். அதை எவ்வகையிலாவது சரி செய்ய முடியுமா என பார்த்தாள்.

ஒரு பெரிய மரம், அதனடியில் கிருஷ்ணர் கண்ணை மூடி சாய்ந்தமர்ந்து புல்லாங்குழல் வாசிக்க, அவர் தோளில் ராதை சாய்ந்திருந்தாள். இப்போது கீழே விழுந்ததில், கிருஷ்ணர் ராதை இருவருக்கும் நடுவில் கீரல் விழுந்திருக்க, ராதையின் ஒரு கைபகுதியும் உடைந்திருந்தது, அந்த மரத்தின் பகுதியிலும் சில இடங்களில் உடைந்துவிட்டிருந்தது.

நினைக்காதே நினைக்காதே என எவ்வளவு அதட்டியும், மன கண் முன் வந்து நின்றான், மார்க்கண்டேயன், அவளின் ஆருயிர் கணவன். அந்த சிலை அவளை பெண் பார்க்கவென வந்தபோது அளித்த காதல் பரிசு. முதலும் கடைசியுமான பரிசும் அது தான்.

'மார்கண்டேயன்' சிவபக்தரான ஞானம், இந்த பெயருக்காகவே அவனை மருமகனாக்கிக் கொண்டார். இன்றளவும் அவன்மீதிருக்கும் மதிப்பு குறையவில்லை, வருத்தம் தான் மேலோங்கிக் கொண்டு செல்கிறது. மகளின் முகம் காண்கையில் எல்லாம் அந்த சிவனை தான் துணையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மனோவும் அதைதான் இப்போது நினைத்து நின்றாள்.

"ஏலே மறுபடியும் அங்க தண்ணீல என்ன செய்ற?" என்ற ஆண்டாளின் அதட்டல், அவளுக்கான அடுத்தடுத்த வேலைகளை நினைவுபடுத்த, கையிலிருந்த ராதாகிருஷ்ணனை அவள் அறைக்குள் சென்று மரபீரோவில் பத்திரபடுத்திவிட்டு, மீண்டும் வந்து கீழே கிடந்த குழந்தை போன்ற அமைப்பில் இருந்த சிலையை எடுத்தாள். அதிலும் பல இடங்களில் கீறல் விட்டு உடைந்தும் போயிருக்க, "கிருஷ்ணா!" என பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது.

இதற்குமுன் எத்தனை பொருட்களை உடைத்திருப்பான் அவளிடம் எத்தனை அடிகள் வாங்கியிருப்பான் என கணக்கில் கிடையாது. இப்போது அவன் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய நேரத்தில் எதையும் பேசி அவன் இலகுவாக நேரத்தை கடக்க அவளே வழி வகுக்க விரும்பவில்லை.

கையிலிருந்த சிலையை மீண்டும் பார்த்தாள், இது வேறுவிதத்தில் அவளுக்கு தலைவலியை கொண்டுவரும் என தெரிந்தது, அதை அப்படியே பார்த்ததும் கண்ணில் படும்படி ஷோகேஷின் மேல்தட்டில் வைத்தவள், அடுத்த நிமிடமே அதே போன்றொரு குழந்தை சிலையை ஆன்லைனில் ஆர்டர் போட்டுவிட்டு பெரிய மகனை கவனிக்கச் சென்றாள்.

கிருஷ்ணன் மறுபடியும் குளியலறைக்குள் சென்று நின்றிருந்தான், மேல் கை கால் எல்லாம் மண்ணாகி இருக்க, கழுவுகிறேன் என அங்கு நின்று ஆடிக் கொண்டிருந்தான்.

மகனை குளிக்க வைக்க மனோவே உள்ள வரவும், சற்று முன் நடந்த சம்பவத்தை விட்டுவிட்டு, "ம்மா நேத்து கவின் அவனோட அப்பா எலக்ட்ரிகல் பைக் வாங்கி குடுத்துருக்கதா சொன்னான்மா, சண்டே அவன் வீட்டுக்கு பைக் பாக்க எல்லாரையும் வர சொல்லிருக்கான், நானும் போய்ட்டு வரவா?" என்றான் நல்ல பிள்ளை போல், பேச்சைமாற்றி அம்மாவே சமரசரத்திற்கு இழுக்கிறானாம்.

"போய்ட்டு வந்து அதே மாதிரி பைக் வேணும்னு கேட்ப தானே?" என்றவள் கை அவனை குளிக்க வைக்கும் வேலையில் வேகமாக இருந்தது.

"நோம்மா!"

"நானும் நோ தான். இப்ப வேனுக்கு டைம் ஆச்சு. குயிக்" என வெளியே இழுத்து வந்து, அவன் மேலும் பேச பேச பதில் கூறியவாறு, உடை மாற்றி, டையை கட்டிவிட்டு, சாக்ஸையும் அணிவித்து, புத்தக பையையும் எடுத்து வைத்தவள், ஆண்டாள் அவனுக்கு கட்டி வைத்திருந்த மதிய உணவு டப்பாவையும் எடுத்து வந்து, "ப்பா வேன்ல ஏத்தி விட்டுட்டு வாங்க" என ஞானத்தை அழைக்க, அதுவரை வெளியேவே நின்றவர், மனோவின் அழைப்பில் உள்ளே வந்தார்.

"ம்மா அவன வேன்ல அனுப்புமா, நா உங்கூட வண்டீல வருவேன். இல்லனா சைக்கிள எடுத்து குடு அதுல தான் ஸ்கூல் போவேன்" என அடுத்ததை கிருஷணன் ஆரம்பிக்க,

"பேசாம கிளம்பு கிருஷ்ணா!" என பொறுமையாகவே கூறினாள் மனோரஞ்சிதம்.

"என்னைய மட்டும் விரட்டி விரட்டி விட்ரு, அவன மட்டும் நல்லா கொஞ்சு" என தொண்டையிலிருந்து கத்தி பேசிவிட்டு, பேக்கை கூட எடுக்காமல் ஷூவை மட்டும் மாட்டிக்கொண்டு, தெருவில் இறங்கிவிட்டான்.

"பேக் எடுத்துட்டு போ கிருஷ்ணா!" என இவள் கத்துவதை, தெருவே திரும்பிப் பார்த்தது, அவன்மட்டும் நிற்கவில்லை.

"ஏலே கிருஷ்ணா நில்லு" என அந்த பைகளை எடுத்துக்கொண்டு பின்னே வேகமாக இறங்கினார் ஞானம்.

"ப்பா, லஞ்ச் நா கொண்டு போய்க்கிறேன். பேக்க குடுத்துட்டு, பஸ் மட்டும் ஏத்தி விட்டுட்டு வரணும் நீங்க. அவன் இப்ப தொங்கப் போட்டுப் போற மூஞ்ச வச்சுட்டு, கடைல கைய காமிச்சு கேட்குற எதையும் வாங்கி நீட்டாதீங்க. ப்ஸீஸ் பாவமா கேட்காம்னு செய்யாதீங்க" என சொல்ல சொல்ல, 'சரி சரி' என பேரனைப் பிடிக்கும் அவசரத்தில் தான் ஓடினார் அவர்.

அடுத்து சிறியவனைப் பள்ளிக்குக் கிளப்ப, 'வரமாத்தேன்!' என அனைத்திற்கும் படுத்தி தான் எடுத்தான் அவன். எல்லாம் முடிந்து பள்ளி சீருடை, சாக்ஸ் எல்லாம் மாட்டிய பின்னரே, "ம்மா கக்கா வருது" என நின்றான். அதன் பின்னரும் உள்ளே அமர்ந்து கொண்டு, "ஒன் கக்கா, டூ கக்கா, த்ரி கக்கா" என அவன் எண்ணிக்கையில் இருக்க, மனோரஞ்சிதம், ரஞ்சிதமே ரஞ்சிதமே' என ஆடும் நிலைக்கு தான் சென்று கொண்டிருந்தாள்.

ஒருவழியாக, அவனையும் கிளப்பி, பெரியவனுக்கும் காலை உணவையும், இவளுக்கும் சிறியவனுக்கும், பெரியவனுக்கும் மதிய உணவையும் எடுத்துக்கொண்டுப் பள்ளியை நோக்கி ஸ்கூட்டியைக் கிளப்பிவிட்டாள்.

இதுவே மனோரஞ்சிதத்தின் தற்போதைய அன்றாடம். திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. எதற்காகவோ எதை எதையோ எதிர்பார்த்து ஏழு ஆண்டுகள் வீணடித்துவிட்டாள். ஆம்! இப்போது நினைத்தால் வீணாக தான் சென்றுவிட்டது போல தோன்றும் அவளுக்கு.

ஐந்து ஆண்டுகளாக அம்மா வீடு தான். அதிலும் கடந்த ஓராண்டாக தான் கிருஷ்ணன் படிக்கும் பள்ளியில் வேலைக்கு செல்கிறாள். அது ஞானத்தின் நண்பரின் பள்ளி தான், ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் ப்ரைமரி மெட்ரிக் பள்ளிக்கூடம். அவளும் அவள் அண்ணனும் கூட ஐந்தாம் வகுப்பு வரை அங்குதான் படித்தனர். இன்று அங்கேயே அவள் பிள்ளைகளும் பயிலத் தொடங்கியிருக்கின்றனர்.

அங்கு வேலைக்கு வரச்சொல்லி அவள் எம்.ஏ.பி.எட் முடித்த தினத்திலிருந்து அழைத்துக்கொண்டு தான் இருக்கிறார் அந்த பள்ளியின் தாளாளர் சண்முகசுந்தரம். இதுவரை தேவைப்படவில்லை, இனி அதுதான் தன் சுயம் என்ற முடிவில் போகத் துவங்கியிருக்கிறாள்.

இருவரையும் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்ல அவளுக்கும் ஆசைதான். ஏற்ற இறக்கமான சாலை, இருவரும் சிறு பிள்ளைகள் என்பதால் கொஞ்சம் பயம். ஆனால் அதையும்விட இருவருக்கும் பாதி வழியிலேயே சண்டை வந்துவிடுகிறது, பின்னால இருக்க வைத்துவிட்டு முன்னால் அவளால் நிம்மதியாக ஓட்ட முடிவதில்லை. சின்னவனை முன்னால் நிறுத்தினாள், சாவியை திருகி திருகி கையிலெடுத்துவிடுகிறான், ஆதலாலேயே, பெரியவனை வேனில் அனுப்பிவிட்டு, சிறியவனை ஸ்கூட்டியில் ஏற்றிச் சென்று, அங்கு காலை உணவை பெரியவனை உட்கார வைத்து ஊட்டி சமாதானமும் செய்து வைப்பாள். இதற்கே துவண்டு தான் போவாள்.

கொண்டவன் துணை மனதிலாவது இருந்தால் இதெல்லாம் பெரிய வேலையாக தெரியாதோ என்னவோ! இப்போது இதுவே மலையை பொறட்டியது போன்ற சோர்வை தந்தது.

கட்டியவளை இங்கே தனியாக தவிக்கவிட்டவன், அங்கே அமேரிக்காவில் சியாட்டில் நகரத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் யாருமற்ற இரவில் தனியாக கணினியை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
 
நைஸ் ஸ்டார்ட் 🤩🤩🤩🤩🤩
புயல் அடிச்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு 🤣🤣🤣🤣
சரியான வாலுங்க... 🥰

பொண்டாட்டி பிள்ளையை இங்க விட்டுட்டு இவன் ஏன் அங்க தனியா கிடக்கான் 🤔
 
Status
Not open for further replies.
Top