எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 5

priya pandees

Moderator
"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, அப்பப்ப முனி வந்தாடும் இவனுக்கு" என்றவன் எழுந்து குளியலறை சென்றுவிட்டு, வந்ததும் சாப்பாடையும் ஆர்டர் செய்துவிட்டு, ப்ளே ஸ்டேஷன் எல்லாம் எடுத்து வைத்தான். எல்லா நாட்களும் அலுவலகத்தில் உணவை எடுத்துக்கொள்ள, சனி, ஞாயிறுகளில் வெளியே சாப்பிட்டுகொள்வர், வீட்டலிருந்தால் உணவை இதுபோன்று ஆர்டர் செய்து வாங்கி உண்டுவிடுவர், என்றாவது அத்திபூத்தார் போன்று சமையலறையை உபயோகபடுத்தினால் உண்டு, இல்லாமல் அது புதிதாக, பளிச்சென்று பத்திரமாக இருந்தது.

அடுத்த ஒருமணி நேரத்தில் உணவு வந்துவிட, இவன் சென்று அழைத்ததும், யோசனையோடே வந்தமர்ந்து கொண்டான், உண்ணும் போதும் அப்படிதான் அடுத்ததாக இருவரும் விளையாடும் போதும் அப்படித்தான்.

"ஏன்டா இப்படி உர்ருனு மூஞ்சிய வச்சுட்டு விளையாடுறியே, ஒலிம்பிக்ல கோல்ட் மெடல் எதுக்குமா விளையாடுற?" என கேட்டேவிட்டான் திரு.

"கான்சென்ட்ரேட் மேன்"

"இப்படி எவனும் ரிமோட் சேஸிங் பண்ணிருக்க மாட்டான்" என திரு புலம்பினாலும் கண்டுகொள்ளவில்லை அவன்.

இருவரும் விளையாடியபடி இருந்தாலும், மார்க்கின் கண்கள் அடிக்கடி டிவி திரையின் ஒரு ஓரத்தில் மின்னிக் கொண்டிருந்த நேரத்திற்கு சென்று வந்து கொண்டிருந்தது. மணி இரவு ஏழு தாண்டவும், எழுந்து கொண்டவன், "நீ விளையாடு, நா ஒரு ஃபோன் பேசணும் பேசிட்டு வரேன்" என அறைக்குள் சென்றுவிட,

"கன்போர்ம்! முனி தான் அடிச்சுருக்கு இவன" என தலையில் தட்டிக்கொண்டவன், "ஏன் எங்கட்ட ஃபோன் இல்ல? நாங்களும் பேசுவோம், உன்ன மாதிரி இல்லடா ஹால்லயே படுத்து பேசுவேன்டா" என முனங்கி மனைவி மக்களுக்கு காணொளி அழைப்பில் பேசத் துவங்கிவிட, தண்ணீர் பாட்டிலை எடுக்கத் திரும்பி வந்த மார்க், திரு அவன் மனைவி பிள்ளைகளோடு பேசுவதை பார்த்தவாறே தான் திரும்பச் சென்றான்.

'அவன் மனோ மட்டும் ஏன் இவ்வாறு இல்லை?' என்பது தான் அப்போதும் அவனின் எண்ணம். அவனுடன் இருந்தால் தான் அவள் அவன் மனைவியா? இல்லை என்றால் அவளும் அவன் பிள்ளைகளும் யாரோவா? அந்த கோபத்துடனே தான் வந்து அவளுக்கு அழைத்தான். எடுக்கவே இல்லை அவள், மீண்டும் மீண்டுமாக மூன்று முறை அழைத்தான், நான்காம் முறை மாமானாருக்கே அழைத்தான்.

"எது கேட்கறதா இருந்தாலும், விசாரிக்கறதா இருந்தாலும் நேர்ல வர்றன்னைக்கு தெரிஞ்சுக்கிட்டா போதும்னு தெளிவா சொல்லிட்டு வச்சுடுங்கப்பா" ஞானம் அட்டென்ட் செய்தபோது, அவன் கேட்ட குரல் அவன் மனைவியோடது தான், சற்று தள்ளியிருந்து தான் பேசுகிறாள் ஆனாலும் தெளிவாக கேட்டது. சுகமாகத்தான் அவனுள் இறங்கியது.

அவ்வளவு நேரமிருந்த கோபம் கூட கொஞ்ச குறைந்திருக்க, "ஏன் ஃபோன்ல பேசமாட்டாளாமா? போடி" என மாமானாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தான்.

மீண்டும் அவரே அழைத்தார், "சொல்லுங்க மாமா?" என கேட்க,

"மாப்ள! அது மனோ?"

"என்ன நீட்டி இழுக்குறீங்க சின்னசாரு? மனோவோட வாழ வாறாரா இல்லையான்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா கேளுங்க?" என்றது அருகிலிருந்து கணீரென்ற மீனம்மாவின் குரல், அவர் ஆண்டாள் திருமணமாகி அவர்கள் வீட்டிற்கு வந்தபோதிலிருந்து அங்கு வேலைக்கு வருபவர், மனோவையும், பாலாவையும் எடுத்து வளர்த்தவர்.

"சும்மா இரு மீனம்மா" என ஞானம் மெதுவாக அதட்டுவதும் கேட்க, சிரித்தான் இவன்.

"வருஷ கணக்கா இங்க நம்ம புள்ள தனியா கிடக்கு, இதுக்கா கட்டி வச்சோம்? நீங்களும் கேட்க மாட்டேங்கீக, ஆண்டாளம்மாவும் கேட்க மாட்டேங்குதாக, புள்ள வாழ்க்கை வீணா போவுதுன்னு எண்ணமிருக்கா உங்க ரெண்டு பேருக்கும்? வாழுற வயசுல வாழாம உங்க வயசுல பேரனுகள வளர்க்க சொல்ல போறீகளா சின்னசாரு?"

"ஷூ வாய மூடு, நீ போய் மனோ என்ன செய்றான்னு பாரு, உன்ன யாரு என் பின்னயே வர சொன்னது?"

"ஒரு ரெண்டுநாளு நா இங்கன இல்ல, அதுக்குள்ள பிள்ளைய ஆஸ்பத்திரி வர தூக்கிட்டு வந்து படுக்க வச்சுட்டீக. அவரு எப்ப வந்து பிள்ளைகள கூட்டிட்டு போவாருன்னு கேளுங்க. இல்ல டிவோர்ஸ் பண்ணுவோம்னு சொல்லுங்க" என நகராமல் நின்று மிரட்டினார் மீனம்மா.

"ஏய் போத்தா அங்குட்டு. வாய்க்கு வந்தத பேசி நீயே அவருக்கு யோசனை குடுக்குயோ?" என ஞானம் பேச, அனைத்தையும் கேட்டபடி தான் இருந்தான் மார்க்கண்டேயன்.

"டிவோர்ஸ் பண்ணிடுவாளாமா என்னை?" என்ற நினைப்பு வந்து தான் சென்றது.

"மாமா!" என்றான் ஞானத்தை.

"மாப்ள? மனோ பசங்க கவலைல இருக்கா அதான் பேச முடியல. வீட்ல போய்ட்டு பேச சொல்றேன்"

"ஓகே மாமா. இப்ப மீனம்மாட்ட குடுங்க பேசுவோம். அவங்கட்ட பேசி ரொம்ப நாளாச்சு"

"இந்தா அவரு பேசணுமாம். நல்லா வாங்கி கட்டிட்டு வா" என முறைத்து கொடுத்துவிட்டு மனோவை அதட்ட சென்றார் ஞானம்.

"எனக்கென்ன பயமா? தப்ப தப்புன்னு சொன்னா திட்டுவாகளாமா?" என ஞானத்தைப் பார்த்து சத்தமிட்டபடி தான் ஃபோனை காதில் வைத்தார், "ஹலோ ஃபாரீன் சாரு சொல்லுங்க ரொம்ப சுகமா இருக்கீகளா? பொண்டாட்டி பிள்ளைக பிக்கல் பிடுங்கல் இல்லாட்டி சுகமா இருக்கத்தானே வேணும்?" என ஆரம்பிக்க,

அதிலேயே சிரித்தான், அவருக்கு எப்படியும் வயது அறுபது தாண்டி தான் இருக்கும், ஞானத்தை விடவும் வயதில் மூத்தவர், வேலை செய்ய வந்தவரானாலும், அவரின் இந்த படபட குணம், மனதில் பட்டதை கொஞ்சமும் பயமும் தயக்கமும் இன்றி முகத்திற்கு சொல்லிவிடுவார், பாசம், விசுவாசத்திலும் அவரை அடித்துக் கொள்ள முடியாது. அது தான் இன்னும் அவரை அந்த வீட்டோடு ஒன்ற வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று ஆண்டாளுக்கும் ஞானத்திற்கும் வீட்டில் பெரியவர்கள் இல்லாத குறையைத் தீர்த்து வைத்துக் கொண்டுமிருக்கிறார். அதற்காக எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துவிட மாட்டார், ஆண்டாள் அவர் மனது கேளாமல் புலம்புவது அனைத்தும் இவரிடம் தான், அதில் சரிதவறு தோன்றுவதை பேசிவிட கூடியவர் மீனம்மா.

இவனைப் பார்த்தத் தினத்திலிருந்து, "என்ன ஃபாரீன் சாரு?" என்பது தான் அவரின் வரேவேற்பாக இருக்கும். இந்த மூன்று ஆண்டுகளாகவும் மனோ வீட்டில் யார் பேசவில்லை என்றாலும், இவரிடம் பேசிவிடுவான், அவன் மாமா வரும்போதோ, அவன் மாமனார் இதோ இப்படி பேசும்போதோ, எந்த வகையிலாவது இவரிடம் பேசிவிடுவான், மனோவின் மொத்த கதையையும் இவனை திட்டிக்கொண்டே சொல்லி முடித்துவிடுவார் அவர்.

"எப்படி இருக்கீங்க மீனம்மா?"

"எனக்கென்ன என் புருஷன் எங்கூட இருந்து தங்கமா தாங்குதாரு, கட்டிக்குடுத்தப் பிள்ளைகள நா போய் பார்த்துட்டு வாரேன், என்னையப் பார்க்க மாசம் தவறாம அதுக வந்துட்டுப் போதுக, பள்ளிக்கூட லீவு விட்டா பேரன் பேத்திக வந்து கையையும், காலயும் சுத்தி சுத்தி வருதுக, எனக்கென்ன குறைங்கேன்?"

"ப்பா! இப்படி பேச மனோக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுங்களேன்?"

"குடுத்தா மட்டும் பேசவிட்டு கேட்டுட்டு இங்கன இருப்பீகளாக்கும்? அந்த புள்ள கலகலன்னு தான் இருந்தது ஒரு காலத்துல, உங்கள கட்டிகிட்ட பின்னாடி தான் இப்புடி மௌனச்சாமியாரா போச்சு"

"நீங்க அவளுக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க?"

"என் பிள்ளைக்கு நா பேசாம வேற ஆரு பேசுவா? அவளோட அருமை தெரிஞ்சா இப்புடி இங்கன விட்டுட்டு தனியா போய் கெடக்கத் தோணுமா உங்களுக்கு?"

"இவ்ளோ டிஸ்டன்ஸ்ல இருக்கும்போதே சண்டைக்கு பஞ்சம் இல்ல, இதுல கிட்டத்துலயேனா!" என முனங்கவே செய்தான்.

"என்ன ஃபாரீன் சாருக்கு பதில் சொல்ல வரலையோ?" என அவர் கத்த,

காதிலிருந்து ஃபோனைத் தள்ளி எடுத்து கீழே வைத்துக்கொண்டு சாய்ந்து அமர்ந்து, "ஏதோ டிவோர்ஸ்னு சொல்லிட்ருந்தீங்க? யாருக்கு? உங்களுக்கும் உங்க வீட்டுகாரருக்குமா?" என்றான் நிதானமாக.

"அவர டிவோர்ஸ் பண்ணிட்டு உங்கள மாதிரி ஒண்டிகட்டையா கெடக்கவா நானும்? நா என் புள்ள மனோக்கு டிவோர்ஸ் வாங்கி தரலாம்னு இருக்கேன்"

"ஏனாம்?"

"பின்ன வருவீகளோ மாட்டீகளோன்னு அவ தெனமு அழுறதுக்கு, மொத்தமா வேணாமுன்னு முடிவுக்கு வந்துட்டா, இனி உறவு இல்லன்னு நிம்மதியா இருப்பா தான?"

"அப்படிலாம் என் பொண்டாட்டிய விட்டுதர முடியாது மீனம்மா" என்றான் சும்மாவேணும் விட்டுக்கொடுக்காமல்.

"இதென்ன தானும் வாழமாட்டேன் தனியாவும் வாழவிடமாட்டேன்னு அடம்பிடிக்குதீக சாரு?" மீனம்மா கோபம் கொள்ள,

"மனோவ டிவோர்ஸ் பண்ணிட்டா எனக்கு யாரு கடைசி காலத்துல கம்பெனி கொடுப்பா, ரெண்டாவதா வேணும்னா உங்கள கட்டிக்கவா?" என்றான் நக்கலாக.

"லந்தா பண்ணுதீக? மனோக்கு ஒரு வழி சொல்லுங்க. அந்த புள்ள ரெண்டு ஆம்பள பிள்ளைகளையும் பார்த்து, வேலையும் பார்த்து மனசுக்கும் நிம்மதியும் இல்லாம, அம்புட்டு வாடிபோய் திரியிது. வாழ வேண்டிய வயசுல வாழாம அங்க இருந்து யாருக்கு காசு சேர்த்துட்டு இருக்கீக?" என திட்ட,

அவனைக் கண்டதும் மலரும் முகத்தை ஒர நொடி நினைத்துப் பார்த்தான் மார்க். ஃபோனை கையிலெடுத்து ஸ்கீரின் சேவராக இருந்ததையும் பார்த்தான். அது முடிந்த தீபாவளிக்கு எடுத்த புகைப்படம் தான், மற்றவர்களுக்கு வாடிப்போய் தெரிபவள், அவன் கண்களுக்கு மட்டும் அம்சமாக தான் தெரிந்து தொலைத்தாள்.

"அம்மா வீட்ல ஜம்முன்னு இருக்க விட்ருக்கவன என்னலாம் பேசுறீங்க நீங்க?" என்றவன் கைகள் அவள் முகத்தையும், பிள்ளைகள் முகத்தையும் மாற்றி மாற்றி வருடிக் கொடுத்தது.

"அம்மா வீடோ ஆயா வீடோ, வந்தமா மூணு நாள் இருந்தோமா, தான் வீட்டுக்கு கிளம்பினோமான்னு இருக்கணும், அது தான் பொம்பள பிள்ளைக்கும் மரியாதை, கட்டிகிட்டவருக்கும் மரியாதை"

"உங்க மனோவ முதல்ல எங்கிட்ட சமாதானமா பேச சொல்லுங்க"

"ஏங்குறேன்? நேர்ல வந்து சமாதானபடுத்தி பேச வைங்க. மூணு வருஷமா காக்க போட்டீக தான? நீங்க பேசுன்னதும் பேசிறனுமோ? இப்பவும் பொண்டாட்டிகாகவா பேசுதீக? பிள்ளைய விசாரிக்க பேசுணும்கீக, அவளே பேசுதேம்னு சொன்னாலும் நா விட மாட்டேனாக்கும். உங்களுக்கு தான் பிள்ளையக் கட்டிக் குடுத்தோம் உங்க ஃபோனுக்கு இல்ல. எதுனாலும் மனோ சொன்ன மாதிரி நேர்ல வாங்க. என் எங்க மனோவ பார்க்க பயமோ?"

"பார்ரா உசுப்பேத்துரீங்ளாக்கும் மீனம்மா?"

"ஏ மீனம்மா இன்னுமா பேசிட்ருக்க நீ?" என ஞானம் வந்துவிட,

"ஃபாரீன் சாருக்கு மனோட்ட பேசுறத விட எங்கிட்ட பேசத்தான் அம்புட்டு ஆசபோல கெடக்கு" என அவர் நொடிக்க,

"என்னத்த பேசி வச்சுருக்க நீ?" என ஞானம் அதட்ட,

"இந்தாங்க கேளுங்க நீங்களே" என கொடுத்துவிட்டு பொடுபொடுத்துக் கொண்டிருந்தார்.

இவர் வாங்கி காதில் வைத்ததும், "கிருஷ்ணாவ டிஸ்சார்ஜ் பண்ணினதும் சொல்லுங்க மாமா" என்றான் மார்க்.

"சரி மாப்ள" என்றார், வைத்துவிட்டான்.

பிள்ளைகளிடமும் பேசி வருடம் கடந்துவிட்டது. அவ்வப்போது வீடியோக்களில் பார்த்துக் கொள்வான். அவள் அவனைப் புரிந்துக் கொள்ளவில்லை நம்பாமல் பேசுகிறாள் என்ற கோபத்தில் அவளுக்கு அழைக்காமல் இருந்திருக்க, பிள்ளைகளிடமும் அது பிரிவாகவே இருந்தது.

"மனோரஞ்சிதம்!" பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

அங்கு மனோ அன்று மாலையே பிள்ளையுடன் வீடு திரும்பியிருந்தாள். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கிருஷ்ணாவை சமாளிக்க, பாலாவும் விடுமுறை எடுத்துக்கொண்டு உடனிருந்தான் கண்ணனை சமாளிக்க வேண்டி. எல்லாருமாக வீட்டிலிருக்க, கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொண்டாள் மார்க்கின் மனைவி.
 
Last edited:
Top