எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

manjam 22

subageetha

Moderator
Manjam 22

மதியம் ஒரு மணிக்கு மேல் நீதிபதி அதியை தன்னை வந்து பார்க்கச் சொல்ல, அதிதி ஒருவாறாக தன்னை சமன் செய்து கொண்டு நீதிபதியை பார்க்க சென்றாள். அவளுக்கு மட்டும்தான் அனுமதி. அவள் பெற்றோர் வெளியே காத்திருக்க அதி முதன்முறையாக தைரியத்தை கூட்டி கொண்டு, தனக்கு சியாட்டல் வீட்டில் நடந்தது முதற்கொண்டு, நங்கநல்லூரில் சிறைவாசம், அங்கு வினய் தனக்கு செய்தவைகள்,அதன் மூலம் அவளுக்குள் இருக்கும் மன அழுத்தம்,இந்த ஞாபகங்களில் இருந்து வெளிவருவதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சி என்று ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

‘'எனக்கு அவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒரு சதவிகிதம் கூட விருப்பமில்லை. இனிமேலாவது என்னை நிம்மதியாக வாழ அனுமதியுங்கள்'’ என்றவளுக்கு தான் பட்ட வேதனைகளை மீண்டும் மீண்டும் யோசிக்கும் போது ஏற்படும் துன்பம் தாளாமல் கண்ணீர் வழிந்தது.கேட்டவருக்கும் மனதில் பாரம்.


‘'அப்போ ஹாரஸ்மென்ட் னு போட்டு டிவோர்ஸ் பைல் பண்ணலாமே” என்றார்.அதியிடம் கசந்த முறுவல். டிவொர்ஸ் பண்ண பைல் செஞ்சது முழுக்க முழுக்க அவர்தான். இப்போ ஏன் இப்படி பேசுறாரு எனக்கு புரியல... அண்ட் ம்யுடுவல் அக்ரீமெண்ட்ல டைவர்ஸ் வேணும்... எனக்கு இதுக்கு மேல அவருடைய எந்த பிரச்சனைக்கும் இன்டெரெஸ்ட் இல்ல மேம்' என்றுவிட்டாள்.


அவள் மனம் அவருக்கும் புரிகிறது. வினயை தனியாக அழைத்து அதியின் விருப்பமின்மை பற்றி பேசி விவாகரத்து கொடுப்பதற்கு ஒப்புக் கொள்ளுமாறும் இல்லாவிட்டால், நிலைமை வேறு மாதிரி மாறக்கூடும் என்றும் எச்சரித்து அனுப்பினார். அவன் மனம் முழுவதும் கையாலாகாத கோபம். ஆனால் இந்த நிலைமை ஒன்றும் செய்ய முடியாது. ஏதேனும் சிக்கல்களை இழுத்துக்கொண்டால் மீண்டும் யு. எஸ் சென்று வேலையில் சேர்வது கஷ்டமாகி விடும் என்று ஒருவாராக ஒப்புக்கொண்டான்.

இருவருக்கும் ஒரு வழியாக விவாகரத்து கிடைத்தது.


அதி கடக்க வேண்டிய பாதை நீண்டது. மீண்டும் அவள் வாழ்வில் வினய் வந்தால் அவள் சமாளிக்க முடியுமா? இன்று திடீர்னு வந்த தைரியம் மீண்டும் அவளுக்கு உதவி செய்யுமா?


குடும்ப நல நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டிய காகிதங்களில் கையொப்பம் இட்டுவிட்டு, நீண்டதொரு பெருமூச்சை இழுத்துவிட்டாள் அதிதி. காலையிலிருந்து பயத்தினால், குழப்பம் மிக இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சு இப்போது தான் நிம்மதியுடன் வெளி வருகிறது. வினய் என்ன செய்வானோ என்ற மனோ நிலைமை அவளை பாடாய் படுத்தி எடுத்தது. இப்போது இந்த உறவிற்கு இனி அர்த்தமில்லை என்ற நிலையில் இவ்வளவு சீக்கிரம் இந்த உறவு முடிந்து விட்டதா என்று வருத்தம் ஒருபுறம். எவ்வளவு தூரம் அவனை விவாகரத்து செய்தது மனநிம்மதியோ, இந்த திருமணம் தோல்வியில் முடிந்தது அவளுக்கு அவ்வளவு வேதனையைக் கொடுத்தது. இந்த நுண்ணிய உணர்வை புரிந்து கொள்வது கடினம். ஏறத்தாழ மூன்றரை வருடங்கள் அவனை தன் மனதில் கணவனாக இருத்தி, அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து, இந்த உறவு முறிந்து விடாமல் இத்தனை காலம் இழுத்துப் பிடித்து விட்டாள். இப்பொழுதும் அவனாக முன்னெடுத்து இருக்காவிட்டால், இந்த விவாகத்தை ரத்து செய்வது பற்றி எல்லாம் அவள் யோசித்து இருக்கவே மாட்டாள். அவ்வளவு எளிதா இந்த உறவு? உறவுகளை எல்லாம் அழைத்து, அக்னியை சாட்சியாக்கி இவன்தான் என் கணவன் - இவள் தான் என் மனைவி என்று முரசு அறிவிப்பு போல் திருமணம் செய்து, நான் இனி என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருப்பேன்... நாம் இருவரும் வாழ்க்கையின் மேடு பள்ளங்களை இணைந்து கடக்கலாம் என்று செய்த சத்தியத்தை வெறும் நீதிமன்ற காகிதங்கள் முறிக்க கூடுமா... இதற்கா இவ்வளவு பாடுகள்?


இனி, நான் அவன் மனைவி அல்ல.அவன் எனது கணவன் அல்ல.இன்று இந்த உறவை நீதிமன்றம் முடித்து வைத்துவிட்டது. திருமணத்திற்காக ஏற்றிவைத்த அக்னி மீது நீதிமன்றத் தீர்ப்பு என்ற மழை பொழிந்து இந்தத் திருமணத்தை பிசுபிசுக்க செய்துவிட்டது.


இந்தக் கணம் வரை தனக்குள் கொழுந்து விட்டெறியும் கணவன் மீதான கோபத்தை சற்று தள்ளி வைத்துவிட்டு, சற்று தள்ளி நின்று கொண்டு தனது பெற்றோருடன் பேசிக் கொண்டிருக்கும் விநயனை மீண்டும் ஒருமுறை ஆழ பார்த்துக்கொண்டாள் அதிதி. 'இந்த ஜென்மத்தில் இனி இவனை காணப்போகிறோமோ,இல்லையோ' என்ற எண்ணம் வேறு அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. விவாகரத்து ஆன பிறகு அவன் சென்னையில் தங்க போவதில்லை என்பது ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்றுதான். அவனுக்கு இனி சென்னையில் வேலையும் இல்லை. மனதின் ஓரத்தில் பாரம். இவனுக்காக நான் இவ்வளவு யோசிக்க வேண்டுமா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் பெண்.தன்நெஞ்சறிய பொய்யற்க... திருமணம் ஆகும் வரை காதல் என்ற ஒன்று பற்றி அறிந்திராத இந்தப் பெண் மனதில் கணவன் என்ற உறவுடன் வந்தவன் அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருந்தான். கணவன் மீது அவள் வைத்திருந்த பிரியம் பொய்யல்ல. எத்தனையோ நிகழ்வுகளுக்குப் பின் அவன் மீது தீர்க்க முடியாத வருத்தம் வந்தது உண்மை. ஆனால் அப்போதும் அவள் நிரந்தர பிரிவு பற்றி யோசித்து இருக்கவில்லை. ஆனால், நடாலியுடன் அவன் கொண்டிருந்த உறவு சகிக்க முடியாதது.அப்படியும் அவன் அந்த உறவில் இருந்து வெளியே வந்து இருந்தால், கொஞ்சம் கொஞ்சமாக கசப்பான சம்பவங்களில் இருந்து வெளியே வந்து, அவனுடன் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ அதிதி ஆரம்பித்து இருந்திருப்பாள்.

கணவன் என்று வந்துவிட்டால் தன்னை பாராமல் அவனை பற்றி மட்டும் யோசிக்கும் சராசரி இந்திய பெண் அவள்.

அவனை நிச்சயம் மன்னித்து இருக்கக்கூடும்.கணவன்- மனைவிக்குள் என்பதை மீறி அவன் நடந்து கொண்ட விதம் அவனிடம் உள்ள பிரியத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு, அதிதி என்னும் பெண்ணின் சுயமரியாதையை அடி ஆழம் வரை உசுப்பிவிட்டது. இந்த விவாகரத்திற்கு முழுமுதற் காரணம் வினய் மட்டும்தான்! மனைவியை கணவன் அவள் இஷ்டம் இன்றி கையாள்வதும் கற்பழிப்பே என்று வாதிட்டது அவள் பெண்மை!


தனக்குள்ளாகவே, பட்டிமன்றம் எடுத்து இந்த நிகழ்வுக்கான காரணங்களை அலசியவள் மனம் முழுவதும் திருமணமான அன்றிலிருந்து கணவனுக்கும் தனக்கும் உண்டான உறவினை பற்றி மீண்டும் ஒருமுறை யோசித்துப் பார்த்தது. சற்றே தொலைவில் இருந்து வினய் அவள் மீது செலுத்திய அலட்சிய பார்வையை ஒதுக்கி விட்டு, தன் அப்பாவின் காரில் ஏறி அமர்ந்தாள். முதன் முறையாக அவளது அந்த அலட்சிய பாவம் அவளது முன்னாள் கணவனை ஈர்த்தது.


ஏதோ தமது கையில் உள்ள எதையோ தொலைத்து விட்டது போன்ற மன உணர்வு வினய் அவனுக்குள்.


திருமண பந்தம் கொடுத்த உறவு கூட இருக்கும் போதும் அவளது அருமையை அவன் உணரவில்லை. இதோ இப்போதும் அவளின் அருகாமை நீங்கியதை உணர்பவன் அவளை உணரவில்லை.


ஏதோ ஒன்று... கழுத்தில் உறுத்த அதை எடுத்துப்பார்த்த அதிக்கு கைகள் நடுங்கியது. இனி, இதன் அவசியம் என்ன என்று யோசித்தவளுக்கு கண்ணீர் முட்டியது. வெறும் பத்து பவுன் செயின் இல்லை இது! அம்மையப்பர் கோர்க்கப்பட்ட திருமாங்கல்யம். இதை என்ன செய்வேன்…’ என்று மனது கதற வித்யா -விஸ்வம் இருவருக்கும் மனது பதறியது. எப்படி இந்த பெண்ணை சமாளிக்கபோகிறோம் என்ற பயம் நெஞ்சை கவ்வ, வித்யா சட்டென்று முடிவெடுத்து 'எதுனாலும் வீட்டுக்கு போய் பேசலாம் 'என்று பொதுவில் சொல்ல முடுக்கப்பட்ட பொம்மை போல் விஸ்வம் காரை கிளப்பினார்.

அரை மணி நேரத்தில் வீடு சேர்ந்தாயிற்று. கனத்த மௌனம் மூவருக்கும் இடையில் சுவர் போல் நிற்க, அதி தன் அறைக்குள் புகுந்தவுடன், எதிர்பார்த்தவனாய் நிரஞ்சன் வந்துவிட்டான். விஸ்வம் சோஃபாவில் ஓய்ந்து அமர்ந்துவிட வித்யா நிரஞ்சனிடம் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டாள். அவளுக்கு ஆதங்கம் தாங்க முடியவில்லை. வித்யா சொன்னவற்றை கேட்ட நிரஞ்சன் மனதிலும் அதிதியை எப்படி கையாள்வது என்ற யோசனைதான். அதேசமயம் அதி இவ்வளவு தூரம் தைரியமாக செயல்படுவாள் என்று நிரஞ்சன் நினைத்திருக்கவில்லை.


இதை இப்படியே விட முடியாது. இன்றுடன் முடியும் காரியமும் அல்ல.விவாகரத்து என்ற ஆனபிறகு, அவர்கள் வீட்டில் அதிதிக்கு கொடுத்த பொருட்களை திரும்ப கொடுத்தாக வேண்டும். அவள் அணிந்திருக்கும் தாலி சரடு உட்பட.அதே போல அவர்கள் திருமணத்தின் சமயம் வாங்கிய பொருட்களையும் திரும்ப அனுப்ப வேண்டும். இப்படியே, ஸ்தம்பித்துப் போவதால் உலகம் நிற்க போவதில்லை. அவர்களாக இதுபற்றி பேசுவதற்குள் நாம் பேசுவது நல்லது என்ற எண்ணம் நிரஞ்சன் வித்யா விஸ்வம் மூவர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. விநய் விவாகரத்து வேண்டாம் என்று சொன்னது நிரஞ்சனுக்கு ஆச்சரியமாக இல்லை. எப்போது அவன் வீட்டில் அதிதியை வினய்க்கு உதவி செய்ய அனுப்ப முடியுமா என்று கேட்டார்களோ அப்போதே நிரஞ்சன் இவற்றையெல்லாம் எதிர் பார்த்திருந்தான்.

அதனால் தான் விநய்க்கு நடந்த விபத்து பற்றியும், அவர்கள் வீட்டில் கேட்டது பற்றியும் அதிதியிடம் ஒரு வார்த்தை கூட சொல்வதற்கு அவசியம் இல்லையென்றான் நிரஞ்சன். அதேபோல் அதிதி வராததை பார்த்து அவளின் மன ரீதியான உணர்வுகளை புரிந்துகொண்டு, விலகிச் சென்று விடுவான் விநய் என்றுகூட ஊகம் நிரஞ்சனுக்கு இருந்தது. ஆனால் மனிதர்கள் சுயநலம் என்று வந்துவிட்டால் தன்மானம், பிறர் மன நிலைமை என்று எதையுமே யோசிப்பது இல்லையே!


வித்யா -விஸ்வம், நிரஞ்சன் மூவரும் மிகத் தீவிரமாக தங்கள் யோசனைகளில் மூழ்கி இருந்தார்கள். அதிதி தன் அறையில் தாலி சரடை கைகளில் இறுக்கமாக பற்றிக் கொண்டு வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் பேனை பார்த்தபடி படுத்து இருந்தாள். கழுத்தில் இருக்கும் சரடை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு கசந்தது. என்னதான் கோர்ட்டு உத்தரவின் மூலம் திருமணம் ரத்து என்று சொன்னாலும்கூட நெருப்பை சாட்சியாகி கட்டிய தாலியும், அதனை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட குடும்பமும் எப்படி பொய்யாக கூடும்? வெறும் உடல் தேவையை பூர்த்தி செய்யவா இந்த தாலி எனும் லைசென்ஸ்?வெறும் காகிதங்கள் திருமணத்தையும், அது தரும் பந்தத்தையும் நிர்ணயம் செய்யக்கூடும் என்றால் அத்தனை பேரை கூட்டி திருமணம் செய்து வைப்பது எதற்காக? என்றெல்லாம் அவள் மனதில் போராட்டம்.

மீண்டும் தன்னுடன் வாழ்வதற்கு கேட்டுவந்த அவனை ஒத்துக்கொண்டு இருக்கலாமோ என்று குற்ற உணர்வு வேறு அவளை அறுத்தது. கலவையான எண்ணங்கள் அவளை கற்களைப் போல உருட்டின. அதேசமயம் கோர்ட்டு வளாகத்தில் அவன் அவளைப் பார்த்த கணவன் பார்வை அவளுக்குள் எந்த ரசாயன மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை, மாறாக அருவருப்பு உண்டு பண்ண, மேற்கொண்டு இந்த திருமண உறவை நீட்டிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்ற முடிவில் தான் அவள் நீதிபதியை தனியாகச் சந்தித்து பேசினாள்.

இப்போது எனக்கு என்ன வேண்டும், என் தேவை என்ன, எது வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்? எது நிஜம் எது நிழல்... ஒன்றும் புரியாமல் தலை பாரமாக

கனக்க தலையணைக்குள் தன் முகம் புதைத்துக்கொண்டாள்.
 
Top