எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

manjam 23

subageetha

Moderator
Manjam 23

தனது அறைக்குள் செல்வதற்கு முன் நிரஞ்சன், அதியின் அறை பக்கம் திரும்பினான். அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் இப்போது போய் பேசினால் அவளது உணர்வுகளைக் கிளறிவிட்டது போலாகிவிடக்கூடும் என்று இரண்டு நாட்களுக்கு அவள் கண்முன் போவதையும்கூட தவிர்த்தான். அதியும் நிரஞ்சனை தேடவில்லை. அவள் எண்ண அலைகள் முழுவதும் அவளது முன்னாள் கணவனே!


இதற்கு மேல் அவளை விட்டு வைப்பது எந்த அர்த்தமும் இல்லை என்ற முடிவு செய்த நிரஞ்சன், மூன்றாம் நாள் காலையிலேயே அவள் அறையின் கதவைத் தட்டினான். அரைகுறை தூக்கத்தில் புரண்டு கொண்டிருந்த அதிதி, முதல் முறை கதவு தட்டப்படும் போது கதவை திறந்து விட்டாள். அவள் கண்களில் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்ற கெஞ்சல்... ஆனால் சற்று அழகாக நிரஞ்சன்,' ரெடியாகு “அதிதி, மார்னிங் கொஞ்ச நேரம் ரன்னிங் போயிட்டு இன்னியிலிருந்து சி ஏ கிளாஸ் போக தொடங்கலாம் நான் உனக்காக ஹால்ல வெயிட் பண்றேன் சீக்கிரம் வா…” என்று கட்டளை குரலில் சொல்லிவிட்டு, மாடிப்படி இறங்கி விட்டான். அவன் சொன்னது அவள் மூளையை சென்றடைய சற்று நேரம் தேவைப்பட்டது. ஒருவாறு அவன் சொன்ன வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டவள், மனது இல்லாமல் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.

சரியாக பத்து நிமிடங்களில், ரன்னிங் செல்வதற்கான ஆடையுடன் வெளியே வந்தவளை பார்த்தவனுக்கும் மனதில் சஞ்சலம். அவனது மனது “சீக்கிரம் என்கிட்டே வந்து சேர்ந்திடு அதி, அம் வைட்டிங்” என்ற முணுமுணுத்துக் கொண்டது.


வித்யாவும் விசுவமும் கூட இத்தனை விரைவில் எழுந்து கொண்டு விட்டார்கள். அவர்கள் மனதில், தங்கள் பெண் எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்ற ஆதங்கம்.

வித்யாவுக்குத்தான் தான் நிரஞ்சனை இந்த விஷயத்தில் இழுத்துவிட்டு இருக்கக்கூடாது என்ற குற்ற உணர்ச்சி. எல்லாம் கைமீறிப் போய், இப்பொழுது நிரஞ்சன் கைகளில் அதியின் வாழ்க்கை என்ற நிலை வந்தால், நிரஞ்சனது அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்ற பயம் வேறு.

செய்வது என்ன என்பது புரியாமல் தவித்து விழித்தாள் வித்யா.

சொன்ன படிக்கு, ஒரு மணி நேரம் அருகில் இருக்கும் பார்க்கில் பயிற்சி முடித்து, அதிதியை வீட்டிற்கு கூட்டி வந்தவன், அவளுக்கு யோசிக்க கூட நேரம் தராமல்'’ சீக்கிரம் கிளம்பு அதிதி. உன்னை கிளாஸ்ல கொண்டுபோய் விட்டுட்டு வரேன் “என்றவனை வித்யாசமாக பார்த்த அதி,’' நானே பார்த்துப்பேன் நீரு... நீ உன்னோட ஆபீஸ் வேலைய பாரு'’ என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால் தயங்கி தயங்கி.சற்றே யோசித்தவன் ‘'ம்ஹும்... அது சரிப்படாது அதி... கொஞ்ச நாள் போகட்டும்'’என்றுவிட்டு தயாராவதற்கு தன் அறைக்கு சென்று விட்டான் நிரஞ்சன்.

தான் கொஞ்சம் கொஞ்சமாய் நிரஞ்சன் சொல்லும் சொற்களுக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக் கொள்கிறோம் என்ற அச்சம் அதிகமானது அதி மனதில்.

வினய் காலையில் எழும்பொழுதே அதிதியின் ஞாபகம். நீதி மன்றத்திலிருந்து வந்ததிலிருந்தே என்னமோ அவளைபற்றி வெகுவாக யோசிக்கிறான். திருமணம் முடிந்து நிஜத்தில் அவளுடன் அதிகம் தங்கியதில்லை. ஏனோதானோ என்று ஒரு வாழ்க்கை. அவளும் நெருங்க முற்படவில்லை. அவனும் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்த அனுபவம் முற்று பெற்றது என்று சந்தோஷம் வரவில்லை. மாறாக சலிப்பு ஆக்ரமித்துக்கொண்டது. தனக்கு நடந்த விபத்து பற்றிக்கூட அவளுக்கு அவள் வீட்டில் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே அவனுக்கு தோன்றியது. அவளை பற்றி நினைக்க கூடாது என்று எண்ணிக்கொண்டாலும், அதை மீறிக்கொண்டு அதி அவனை பாதித்தாள். திருமண சமயத்தில் அவர்கள் வீட்டில் போட்ட ஐந்து சவரன் செய்யின் கழுத்தை உறுத்த இனி தான் இதை போட்டுக்கொள்ள அதிகாரம் இல்லை என்று தோன்ற அதை கழற்றி பத்திரப் படுத்தினான். அவள் அவனவளாய் இருக்கும் பொழுது இல்லாத பாதிப்பு இப்போது ஏன் என்று யோசனை ஓடியது.இனி இருந்தால் குழப்பம் தான் வரும். என்று இருந்தாலும் அமெரிக்க மண்ணில் தான் என் வாழ்க்கை. உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மனதில் தோன்ற, இன்னும் ஊன்றுகோலின் துணையின்றி நடக்க முடியாத நிலையில் எப்படி கிளம்ப முடியும் என்ற எண்ணமும் மனதில் எழுந்தது. எப்படியும் முழுதாக குணமாக என்னும் ஒரு மாதமாவது ஆகும். அதுவரை சென்னையில் தங்கி இருப்பது முடியாத காரியம் போலிருந்தது. இது தான் திருமண பந்தத்தின் நிலைப்புத் தன்மையா என்று தோன்ற ‘தான் அவசரப்பட்டு விட்டோம்’ என்று அவனுக்குள் எண்ணம்..

அதிதி உடனான இந்த விவாகரத்து விஷயத்தில் நிச்சயம் அவன் நடாலியை பின் தள்ளி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.. இதை முன்பே செய்திருந்தால், ஒரு திருமண வாழ்க்கை இவ்வளவு மோசமாக தோற்று இருந்திருக்க வேண்டியதில்லை. அவனின் மனதில் ஒரு பாதி இந்தத் திருமண வாழ்க்கை பற்றி யோசிக்க, மற்றொரு பாதியை என்றுமே அவள் தன் இரவுகளுக்கு நியாயம் செய்யப்போவதில்லை என்ற கோபம் வேறு. மனைவி அனுசரித்து போபவளாக இருந்தால் கணவன் வேறு தேட வேண்டிய அவசியம் என்ன என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டான். இந்த பட்டிமன்றத்தில் அவனது காம உணர்வுதான் ஜெயித்தது. பொதுவாக இதுபோன்ற யோசனையின் போது நியாயத்தின் பக்கம் மனது போகும். அவன் அளவில் இதுதான் நியாயம்.

இன்னொருபுறம் அதியோ, இந்த திருமணபந்தம் தோற்றத்தில் உச்சகட்ட அழுத்தத்தில் இருந்தாள். தாலியை கழற்றி திரும்ப கொடுப்பது பற்றி அவள் இன்னும் யோசிக்கவில்லை, அல்லது மேற்கொண்டு அதைப் பற்றி யோசிக்க அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் இந்தத் தாலியை அவள் கழுத்தில் விட்டு வைத்திருந்தால் அவள் மேற்கொண்டு தனது வாழ்க்கையை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள முனைய போவதில்லை. அதியின் வாழ்க்கையில் வேறு நபருக்கு இடமில்லாமல் போய்விடும். அதனால் இந்த விஷயத்தை இப்போது முடித்துவிட வேண்டும் என்று யோசித்தாள் அதியின் அம்மா வித்ய.

அதிதியை சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. அவர்கள் வீட்டில் கொடுக்கும் பொருட்களுடன் இதையும் சேர்த்து கொடுத்தாக வேண்டும் என்பதற்கும் அவளிடமிருந்து பதில் இல்லை. ‘திருமாங்கல்யம், செயின் இரண்டும் அவர்கள் வீட்டில் போட்டது அதி, அந்தப் பையனோட சம்பாத்தியத்தில் இருந்து. அவனை வேண்டாம்னு முடிவு பண்ணபிறகு திருப்பிக் கொடுக்காமல் இத நம்ம வைத்துக் கொள்வது சரி கிடையாது’ வித்தியாவின் வார்த்தைகளை ஒப்புக் கொள்ளும் அளவிற்கு அது இல்லை. கழுத்தில் இட்ட இந்தத் தாலியை கூடவா கழட்டி தரவேண்டும் என்று அவளுக்குள் எண்ணங்கள். ஆனால் வேறு வழியில்லை. மற்ற பொருட்களை அனுப்பி வைக்கும் போது இது மட்டும் இல்லை என்றால் அவர்கள் வீட்டில் நிச்சயம் கேட்பார்கள். அப்படியே அவர்கள் கேட்டுவிட்டால்?

இரண்டு நாட்களில், அதிதி வீட்டிலிருந்து வினய் வீட்டில் கொடுத்த சாமான்கள், பட்டுப் புடவைகள் நகைகள் எல்லாம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. பொன் தாலி உட்பட..இப்போது அவர்கள் முறை. அது வீட்டில் கொடுத்த எல்லா பொருட்களையும் சீர் வரிசைகளையும் திரும்பி கொடுத்தாக வேண்டும். ஒரு வழியாக அவர்கள் வீட்டில் கொடுத்த சீர்வரிசை பொருட்களுக்கு ஈடாக ஒரு தொகையையும், வினய் தன் கழுத்திலிருந்து கழற்றி கொடுத்த செயினையும் காலை அவர்கள் வீட்டிற்கு நேராக சென்று கொடுத்துவிட்டு வந்தார் வினயின் அப்பா. அவர் மனதின் ஓரத்தில், திரும்ப அந்த பெண்ணை அழைத்துக் கொள்வதற்கும் அவளைப் பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பு இருக்குமா என்ற எண்ணம் மிச்சம் இருக்கிறது.

ஆனால் அவர் சென்ற நேரம், அதி வகுப்புகள் இன்னும் முடிந்து வந்திருக்கவில்லை.


அந்த பெண்ணை திரும்ப அழைத்துக் கொள்வது நடக்கப்போவதில்லை என்பது தெரிந்துதான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதி வெளியே வகுப்புகளுக்கும் செல்கிறாள் என்பதே அவருக்கு புதிய தகவல். அப்படி என்றால் அந்தப் பெண் தன் வாழ்க்கையை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். ஏதோ அவசர புத்தியால் தன் மகன் தனது வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு விட்டானே என்று அவருக்கு

ஆற்றாமையாக இருந்தது. சற்று நேரம் காத்திருந்து பார்த்தார். முன்பெல்லாம் ஒன்று விட்ட சகோதரியின் கணவர் என்ற முறையில் நல்ல மரியாதை இருந்தது. இப்போது மகனது நடவடிக்கையால் அந்த மரியாதையும் போனது. யாரும் அங்கு அவருடன் பேசத் தயாராக இல்லை. பெண்ணும் வருவதாக இல்லை. அவர்கள் கொடுத்த காபியுடன் கிளம்பிவிட்டார். நிரஞ்சன் இங்கு அதியின் வீட்டில் தான் தங்கி இருக்கிறான் என்பது அவருக்கு தெரியாது. அத்துடன் அவர் வந்திருந்த நேரம் நிரஞ்சன் அலுவலகம் சென்றிருந்தான்.


வினய் எப்படியோ ஒரு மாதத்தையும் நெட்டித் தள்ளினான். உடல்நிலை சீரானதும் மருத்துவரின் அனுமதி பெற்று திரும்பவும் அமெரிக்காவுக்கு கிளம்பி விட்டான். சியாட்டல் வீடு வெகுகாலமாக அனுபவித்திராத ஆழ்ந்த அமைதியில் இருந்தது. திருமணம் செய்து கூட்டி வந்த அதியும் அங்கு இல்லை. வருங்காலம் இவ்வளவு என்று நிர்ணயம் செய்து வைத்திருந்த நட்டாலியும் கலந்துவிட்டாள். வாசலில் கூட புற்கள் ஒழுங்கீனமாக வளர்ந்திருந்தன. அதிதி இருந்தவரை அழகாக தோட்டம் வைத்து பராமரித்து கொண்டு வந்தாள். பீன்ஸ் தக்காளி பச்சை மிளகாய் என்று ஏதேனும் ஒன்றை பயிர் செய்து கொண்டே இருந்தாள். இத்தனை பெரிய வீட்டிற்கு தோட்டம் தான் அழகு என்பது போல் வீடு எப்பொழுதும் பசுமை நிறைந்து இருந்தது. இந்தியா சென்று விட்டு இவ்வளவு நாட்கள் கழித்து வந்தவனுக்கு வீட்டை எப்படி பழைய நிலைக்கு கொண்டு வரப் போகிறோம் என்ற ஆயாசம். வீட்டுக்குள் குளிர அறையில் வெப்பத்தை கூட்டினான். தனிமை அவனை வெகுவாகத் தாக்கியது. ஏறத்தாழ நான்கு மாதங்களாய் அவனுக்கு சன்னியாச வாழ்க்கைதான்.

' என்னவென்று புரியாத வரை காமம் தாக்குவதில்லை... தாக்கியவரை அதை என்றும் விடுவதில்லை' என்று நினைத்தவனுக்கு நடாலி நடந்து கொண்ட முறை கொஞ்சம் கூட ஒப்பாக இல்லை. அவனது மூச்சு காற்று அதிக வெப்பத்துடன் வெளிவந்தது.

அதி ஒரு விதமாக தன்னை அவமானப்படுத்தினாள் என்றால் நடாலி வேறுவிதமாக என்னை அவமதித்து விட்டாள். பெண்களாக இருந்துகொண்டு இவர்களுக்கு இவ்வளவு ஆணவம் தேவையா என்று இருந்தது வினய் மனதில். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தோன்றவே இல்லை.


பெற்றோரிடம் சொல்லி மீண்டும் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும், இங்கேயே இந்திய வம்சாவளியை சேர்ந்த அல்லது படிக்கவோ வேலைக்கோ வந்திருக்கும் பெண் கிடைக்குமானால் இன்னும் தோது என்று அடுத்த திருமண வாழ்க்கை பற்றி திட்டமிடத் தொடங்கியது அவன் அறிவு.


ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தவனுக்கு தட்பவெட்பம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. சென்னையின் வெப்பத்திற்கும், இங்குள்ள குளிருக்கும் தனக்கும் அதிகமான பொருத்தம் என்று நினைத்துக்கொண்டான். முன்பு இருந்த அவள் பற்றிய உணர்வுகள் கூட இப்போது அவனிடம் இல்லை.


இரவின் தனிமை தாங்கமுடியாமல் துணைக்கு பெண் நண்பிகளை தேடத் தொடங்கி விட்டான். ஒருநாள் கூட பெண்ணின் அருகாமை இல்லாமல் தூங்க முடியாதவன் மீதமுள்ள காலத்தை எப்படிக்கழிப்பான்?

கொஞ்ச காலம் கழிந்தால் தெரியும்.
 
Top