எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

7 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 7

மார்கண்டேயன் அங்கு நல்ல தூக்கத்திலிருந்தவன், அவள் திட்டியது எட்டிவிட்டதாலோ என்னவோ எழுந்தமர்ந்து இறுமினான். தண்ணீரை எடுத்து குடித்தும் தொண்டை அடைத்து இறுமல் தொடர்ந்தது.

மணி நள்ளிரவில் நிற்க, அதன்பின் தூக்கம் அண்டவில்லை அவனை. விழித்திருந்தவன் புரண்டு புரண்டு பார்த்துவிட்டு ஒருநிலைக்கு மேல், அவனது கணினி உயிர்பித்து வேலையில் அமிழ்ந்துவிட்டான். அப்போது அவனுக்கு ஏதோ மெசேஜ் வந்துவிழ, அதைப் ஹஜ் வைத்துக் பார்த்தவன் தொடர்ந்து அன்று வந்த மற்ற மெசேஜ்களையும் ஒவ்வொன்றாக பார்த்துவர, சம்பளம் வந்த மெசேஜும் அதில் ஒன்றாக இருந்தது. இந்திய மதிப்பில் ஐந்தில் துவங்கும் ஆறிளக்கம் தான் அவனது மாத சம்பளம். அதைக் கண்டதும், மனோவிற்கு பணம் அனுப்ப தான் முதலில் தோன்றியது, திறந்து அவள் வங்கி கணக்கை எடுக்கவும் செய்தான், "கேட்கட்டுமே! ஒரு வருஷமா இதகூட கேட்கக் கூடாதுன்னு தானே வேலைக்குப் போறா? இத நா தனியா சேர்த்து வச்சு என்ன செய்யப் போறேன்? என்னைக்குனாலும் அவங்க மூணு பேருக்கும் தான். அத சொன்னதுக்கும் புரியாம அன்னைக்கு அவ்ளோ சண்டை. ஏன் மனோ இப்டி பண்ற!" இரு கைகள் கொண்டு தலையை கோதி பின்னால் சாய்ந்தவன் வாய்விட்டே புலம்பினான். அவள் அங்கிருந்து அவனைக் கேட்க, இவன் இங்கிருந்து அவளைக் கேட்டான். அருகருகே இருந்து கேட்டிருந்தால் என்னைக்கோ விடை கிடைத்திருக்கலாம்.

கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தவளை தான், அமெரிக்க மாப்பிளை, விட்டால் பிடிக்க முடியாது, போனால் கிடைக்காது என பிடித்து திருமணம் செய்து வைத்திருந்தனர். அதனால் இன்று வரை அவள் மீது கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் சிறுபிள்ளை என்ற எண்ணம் தான் அவனுக்கு.

நறுமணந்தி, மனோவிற்கு பிறந்த ஊர் என்றால், மார்கண்டேயினின் அக்காவிற்கு புகுந்த ஊர். அவளின் மாமியார் வீடு அங்குதான், அவர்கள் மூலம்தான் மார்க்கண்டேயன் மனோவின் வாழ்க்கையில் வந்ததும்.

கல்லூரி முடித்த பின்னர் அமெரிக்கா அழைத்துக் கொள்வான் என்று தான் முதலில் முடிவெடுத்திருந்தனர், அதற்குள் கிருஷ்ணன் அவள் வயிற்றில் வந்துவிட, அத்தோடு தான் இறுதி செமெஸ்டரை கூட எழுதி முடித்தாள் மனோ. அதன் பின்னர், பிரசவத்திற்கு வந்தவன், பிள்ளைக்கு இரண்டு வயதாவது ஆகட்டும் என்றுவிட, அவள் பிரசவம் முடித்து மூன்றாம் மாதம் மாமியார் வீடும் சென்றுவிட்டாள்.

திருமணம் முடிந்ததிலிருந்தே அவள் வங்கி கணக்கிற்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிவிடுவான். அவன் அம்மா, அப்பாவிற்கு தனி கணக்காக அவன் தாய்மாமாவிற்கு செல்லும் அவர் எடுத்து அவர்களைப் பார்த்துக் கொள்வார். அவர்களுக்கான மளிகை, காய்கறி, வீட்டிற்கு வேலைக்கு வருபவர்களின் சம்பளம், உடம்பு முடியாமல் போனால் பார்த்து கொள்வது என அனைத்தும் மார்க்கண்டேயனின் தாய்மாமன் குடும்பம் தான் இன்று வரைப் பார்த்துக் கொள்கின்றனர்.

மனோ அங்கு அவர்களுடன் இருந்த பொழுது, அவளுக்கே அனுப்பும்படி சொல்லியும் அவன் தான் கேட்கவில்லை.

"நா வேலைக்குன்னு வெளில வந்ததுல இருந்து மாமா தான் அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக்குறாங்க. இப்ப கல்யாணம் ஆகிடுச்சுன்னு அத மாத்திக்கிட்டா அவங்க என்ன நினைப்பாங்க? உனக்கு வேணுங்குறத நீ வாங்கிக்கோ, உன்ன அவங்கட்ட எதிர்பார்த்து இருக்க சொல்லல" என்றிருந்தான்.

அவன் தாய்மாமன் மகன், அவனுக்கு தேவையான அநாவசிய செலவுகளுக்கு இவன் அனுப்பும் பணத்தை தான் கணக்குவழக்கில்லாமல் உபயோகிக்கிறான் என அவள் சொன்னதை கூட காதில் விழுத்தவில்லை. இவளுக்கு தெரிந்தே, ஒரு முறை நாற்பதாயிரத்தில் புது மொபைல் வாங்கினான், இரண்டு லட்சம் கொடுத்து பைக் வாங்கினான். அதை அவளிடமும் வந்து பெருமையாக பேசிக்காட்டி சென்றிருக்க, அதில் அவள் மாமியாருக்கு கூட அவ்வளவு பெருமை.

"கிஷோர், பைக் வாங்கிருக்குறது உங்களுக்கு தெரியுமா? நீங்க தான் அவ்ளோ அமௌன்ட் குடுத்து வாங்கிக்க சொன்னீங்களா?" என நேரடியாக அவனிடமே கேட்டாள்.

"பைக் வாங்கிருக்கானா?" என தான் பதில் கேள்வி கேட்டான் மார்க்.

"அப்ப உங்களுக்கே தெரியாதா? அத்தான் அனுப்பி வாங்கிக்க சொன்னான்னு இப்பத்தான் வந்து காமிச்சுட்டுப் போறாங்க"

"சரி அது என்னன்னு நா பேசிக்கிறேன்" என அவன் சொன்னது இவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

"அவன் சொல்லாம செஞ்சது, நீங்க அங்க கஷ்டப்பட்டு வேலைப் பாக்குற காசுல, அது உங்களுக்கு புரியலயா? ஒரு வார்த்தை சொல்லாம கூட, நீங்க உங்க அம்மாக்குன்னு அனுப்பின காசுல வாங்கிருக்காங்க, கோவம் வரல உங்களுக்கு?"

"அதெல்லாம் மாமா கணக்கு வச்சுப்பாங்க. நீ இத பெருசு பண்ணாத. நாங்க எங்களுக்குள்ள அப்படி கணக்கு பார்த்து வளரல. எங்க மாமா என்னையும் அக்காவையும் விட்டு அவங்க பிள்ளைங்களுக்குன்னு எதுவும் செஞ்சதுகூட இல்ல. நீ விவரம் இல்லாம இதுலலாம் தலை குடுக்காத" என்றுவிட, இவளுக்கு தான் கோவத்தில் மூச்சிரைத்தது.

"நா ஏன் கேட்க கூடாது? நீங்க இனி எனக்கு அமௌன்ட் அனுப்புங்க, காசு சேர்க்கணும், அங்க வந்தா இந்த சம்பளம் கிடைக்குமா அப்பிடி இப்பிடின்னு தான அங்க உட்கார்ந்துருக்கீங்க? இப்படி செலவு செஞ்சா என்னைக்கு சேர்த்து முடிக்க?" என அவள் கேட்டது, அவனுக்கு சிறுபிள்ளைதனமாக தான் தோன்றியது.

"மறுபடியும் சொல்றேன். காசு விஷயம் நா பார்த்துக்குறேன். என்ட்ட மாமா சொல்லணும்னு நினைச்சுருக்கலாம் வேற வேலைல மறந்துருப்பாங்களா இருக்கும். இப்பவும் அவன் மறைக்க நினச்சுருந்தா உன்ட்ட வந்து நா வாங்கிக்க சொன்னேன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல, மாமா வாங்கி குடுத்ததாவே சொல்லிட்டுப் போயிருப்பான், அப்ப உனக்கு தெரியவா போகுது? சோ தேவையில்லாம யோசிச்சு குழப்பிக்காத"

"ஓ! அப்ப நீங்களா எதையும் என்ட்ட சொல்ல மாட்டீங்க?"

"நீ இப்பதான் அங்க போயிருக்க மனோ. இன்னும் உனக்கு பக்குவம் வரணும். டைம் எடுக்கும்போது எங்களோட ரிலேஷன்ஷிப்பயும் உனக்கு புரிஞ்சுக்க முடியும். ஆரம்பத்துலயே தப்பா மைண்டுல ஏத்திக்காத, அப்றம் நல்லதும் தப்பாத்தான் தெரியும்"

இதுவே அவர்களின் முதல் சண்டையாகி இருந்தது, ஒரு வாரம் பேசாமல் இருந்தவளை, சமாதானம் செய்து பேச வைத்தது அவன்தான். அவனை பொறுத்தவரை அவனது நிலைப்பாடு, அவளுக்காக இறங்கி சென்றிருக்கிறான், விவரம் தெரியவில்லை என பொறுத்து போய்க்கொண்டிருக்கிறான், அவளின் மீதிருக்கும் அன்பில் மாற்றமில்லை, அவளுக்குப் பிடித்ததை செய்ய குறுக்க நிற்கவில்லை, என அவனின் நியாயங்கள் அதிகமோ அதிகம். இப்போதும் அதையெல்லாம் நினைத்துபார்த்தவாறு சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து இப்படியும் அப்படியும் ஆடியபடி யோசனையில் தான் இருந்தான்.

மேலும் இரண்டு மாதங்கள் ஓடி இருந்தது, அவனுக்கு எப்படியோ, அவளுக்கு நின்று நிதானிக்க நேரம் இல்லாத அளவிற்கு நாட்கள் வேகமாக தான் ஓடிக் கொண்டிருந்தது.

இன்று அங்கு ஒரு விஷேஷம் என மார்க்கண்டேயனின் பெற்றோர் சாம்பவியும் மணிகண்டனும், லதாவின் புகுந்த வீட்டிற்கு நறுமணந்தி வந்தனர். லதா பிள்ளைகளுடன் வரமுடியாது என்றுவிட்டதால் அவள் கணவன் சுரேந்தர் மட்டும் சென்னையிலிருந்து வந்திருக்க, அவருடன் மனோவின் வீட்டிற்கும் வந்தனர் மூவரும்.

"வாங்க, வாங்க, ஃபாரீன் சாரும் வந்துருக்காகளா?" என பின்னால் எட்டி பார்த்துவாறு முன்னால் நின்றது மீனம்மா தான்.

"எங்க மீனம்மா, அவன் வந்தா நா இந்த வயசான காலத்துல இங்கயும் அங்கயும் இப்படி அலைவேணா சொல்லுங்க?" என்றார் சாம்பவி.

"அம்மா தானே இறுக்கி பிடிக்கணும், நீங்களே சலிச்சுகிட்டா நாங்க என்னத்த செய்ய முடியும்? உள்ள வாங்க. நீங்களும் உள்ள வாங்க தம்பி, மனோ நாத்தி வரலியோ?" என உள்ளே அழைக்க, மூவரும் உள்ளே வந்தனர்.

"பிள்ளைகளுக்கு ஸ்கூல் லீவு இல்ல. அதான் நா மட்டும் வந்தேன். மனோ எப்ப வருவா?" என்றான் சுரேந்தர்.

"அஞ்சு மணிக்கு வந்துருவா" என மீனம்மா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, ஆண்டாள் வேகமாக உள்ளிருந்து வந்து வரவேற்றார்.

"பெரிய சாரு கிருஷ்ணாவ கூட்டிட்டு வரத்தான் போயிருக்காக. மனோ கண்ணன கூட்டியாந்துருவா"

"அவனுக்கு அடிபட்டப்பவே பார்க்க வந்துருக்கணும், இவங்க சண்டைல நம்ம தலையும் சேர்ந்துல காயுது. அவன் எப்படியும் வருவான், அவன்கூட வந்து பிள்ளைய பாக்கணும்னு நினைச்சுட்டு இருந்துட்டேன் மாசம் தான் ஓடிடுச்சு, அவன் வர்றமாதிரி இல்ல. அதான் இந்த பங்ஷன காரணமா வச்சு கிளம்பி வந்துட்டோம். கிருஷ்ணனுக்கு பெருசா ஒன்னும் பிரச்சனை இல்லையே? தலைல அடியாச்சே ஸ்கேன்லா பண்ணி பாத்தீங்களா?" என கேட்க,

"அத உங்க பிள்ளைல அக்கறைபட்டு ஓடி வந்து பாக்கணும்? இவங்கள ஸ்கேன் பாத்தீங்களான்னு கேட்டு என்ன செய்ய?" என்றது மீனம்மா தான்.

"மீனம்மா, அவங்க பேசட்டும்" என அதட்டினான் சுரேந்தர். அவனுக்கு தான் அவரை நன்கு தெரியுமே, அதனால் உரிமையாகவே அதட்டினான்.

"வந்த நேரத்துல தான நானும் பேச முடியும் சுரேந்தர் தம்பி?"

"நானும் இதுக்கு எப்படியும் வந்துருவான்னு நினைச்சேன், எனக்கும் என்ன செய்யன்னு தெரியல மீனம்மா. பொண்டாட்டி பிள்ளைகள அங்க கூப்பிட்டுக்கோடான்னு கூட சொல்லிட்டேன். 'ஃபேமிலியா இருக்கணும்னா நா இன்னும் நிறைய சம்பளம் வாங்கணும்மா. ப்ளஸ் இங்க கல்ச்சரே வேற, இதெல்லாம் நம்ம பசங்களுக்கு செட்டாகாது. இங்க வாங்குற இந்த சம்பளம் கூட அங்க வந்தா கிடைக்காது, எல்லாம் யோசிச்சு தான் பொறுமையா இருக்கேன்', அப்படி இப்பிடின்னு எனக்கு தான் பாடம் எடுக்கான். என் மவளும், தம்பி சொல்றது தான்மா உண்மைன்னு அவன் பக்கம் நின்னுக்குறா. என்ன செய்யட்டும் நானும்? மனோ அவன் அங்க இருக்கத சந்தோசமா ஏத்துட்ருந்தா நா இவ்ளோ கவலை பட மாட்டேனோ என்னமோ? இவளும் டிவோர்ஸ் அதிதுன்னு பேசுறான்னு கேள்விபடும்போது மனசே ஆறமாட்டேங்குது சம்மந்தி" என்றார் ஆற்றாமையுடன் ஆண்டாளிடம்.

"சந்தோசமா இருக்கவா? வெளிநாட்டுல வேலைப் பாக்குதவுக எல்லாரும் பொண்டாட்டி பிள்ளைகள் ஒக்கல்லயே தூக்கிட்டு திரியல, சம்பளம் மிச்சம் பிடிக்கணும்னு அங்கையும் இங்கையுமா இருக்கத்தான் செய்தாக. இங்க அது பிரச்சனை இல்ல, உங்க மகனுக்கு இங்க என்ன கஷ்டம்னு அங்க வேலைக்குப் போயிருக்காக, செஞ்சு முடிக்க வேண்டிய கடமை எதுவும் பாக்கி இருக்கா என்ன? எதுக்கு அங்கன இருக்காக? கல்யாண வாழ்க்கையே வாழலங்க எங்க புள்ள" என்றார் மீனம்மா.

"கல்யாணம் முடிச்சுக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னத நம்பித்தான் நாங்கக் கட்டிகுடுத்தோம். இந்த எட்டு வருஷத்துல, ஒரு மாசம் என் பிள்ளை கூட சேர்ந்தாப்ல இருந்துருப்பாரா உங்க பிள்ளைன்னு சொல்லுங்க? வர பத்து நாள் இருக்கப் போயிற, இதுல ரெண்டு பிள்ளை வேற? அவளுக்கு அது எவ்வளவு கஷ்டத்த குடுக்கும், ஒருக்கானாலும் யோசிக்கணும்ல?" என்றார் ஆண்டாள்.

மனோவின் பெற்றோரும், சுரேந்தரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து, பதில் சொல்ல முடியாமல் திண்டாடியபடி இருக்க, "அமைதியா இருந்தா, இதுக்கு என்னதான் முடிவு? உங்க பிள்ள இப்ப மூணு வருஷமா ஃபோன்ல கூட பேசல, பிள்ளைக படிப்புக்கும் காசு அனுப்பல, அப்ப மொத்தமா வேணாம்னு முடிவுக்கு வந்துட்டாகளான்னாது கேட்டு சொல்லுங்க" என்றார் மீனம்மா.

"இல்ல இல்ல மீனம்மா. அவனுக்கு கொஞ்சம் கோவம் அதான் அப்படி இருக்கான். ஆனா இவங்கள நினைக்காமலோ தேடாமலோலாம் இல்ல. அவங்க மாமாட்ட அப்பப்ப எதையாவது கொண்டு வந்து குடுக்க சொல்லி சொல்லுவான். அது தான் என் தம்பி கூட இங்க அடிக்கடி வந்துட்டு போறதும். இதோ இப்பவும், அவன் பையன் கிஷோர் கல்யாணம் பொண்ணெல்லாம் பார்த்தாச்சு, நீ வர்றத வச்சுத்தான் கல்யாண தேதின்னு முடிவா சொல்லிட்டான், அவன வரவழைச்சு, புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து நின்னு தான் என் பையன் கல்யாணத்த நடத்தணும் நீன்னு அவன்ட்ட உறுதியா சொல்லிட்டான். அப்ப எப்படியும் பேசி ரெண்டு பேரையும் ஒன்னா வாழவைச்சுடலாம். நம்புங்க சம்மந்தி" என்றார் சங்கடமாக,

"அவன அதட்டிகூட பேச மாட்டோம். அவனும் எங்கமேல அவ்வளவு பாசமா தான் இருப்பான். லேட்டா பிறந்ததாலேயே, கை நீட்டி நா அவன அடிச்சதுகூட இல்ல. சாதரணமா சொன்னாலே கேட்டுக்குற பிள்ளை தான். இது என்னமோ அவங்கள பிடிச்ச நேரமோ என்னமோ சேர விடாம வச்சுட்ருக்கு. இந்த முறை கண்டிப்பா இறுத்தி வச்சு பேசலாம். மருமகட்ட நீங்களும் எடுத்துச் சொல்லுங்க" என்றார் மணிகண்டன்.

"முதல்ல உங்க புள்ள வரட்டும் அப்புறம் பேசறத பத்தி யோசிப்போம். இதுக்கு முன்ன இதுமாதிரி மூணு தடவ ஏமாந்தாச்சு" என்றார் மீனம்மா.

"மீனம்மா!" சுரேந்தர் இப்போது நேரடியாக முறைக்கவே செய்தான்.

"கண்டிப்பா வருவான் மீனம்மா. நானும் அழுத்தி சொல்லிருக்கேன், வருவான்" என்றார் சாம்பவி.

இவ்வளவு பேச்சிற்கும், அறைக்குள்ளிருந்த மல்லிகா வெளியே வரவேயில்லை. அவளுக்கு, இவர்களிடம் சென்று தான் என்ன பேச போகிறோம் என்ற எண்ணம். அனைத்தும் காதில் விழுந்தாலும் கேட்டுக்கொண்டு அமைதியாக உள்ளேயே இருந்தாள். அவளுக்கும் எப்படியாவது, மனோ அவள் கணவனோடு சென்றுவிட்டால் நல்லது என்ற எண்ணம் தான். வேலைக்கு செல்பவள் அவள், பிள்ளையைப் பார்க்க ஆள் வேண்டும், அவள் அம்மா மேல் வளையாதவர் என்பதால் மாமியாரை தான் பிடித்து வைக்க வேண்டிய கட்டாயம். மனோவின் முழு பொறுப்பும் இவர்களிடம் இருந்தால், தன் பிள்ளையைப் பார்த்துக்கொள்ள வரமாட்டார்களே என்ற கடுப்பு அவளுக்கு. அதனாலயே, சீக்கிரம் மனோ மார்க் பிரிவிற்கு ஒரு சுபம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற வேண்டுதலில் இருக்கிறாள்.

ஐந்து மணி நெருங்குகையில், கிருஷ்ணாவை அழைத்துக்கொண்டு ஞானம் வந்துவிட்டார். அவனை அருகே அழைத்து, சாம்பவியும் மணிகண்டனும் அவனை உச்சிமுகர்ந்து முத்தமிட, நெளிந்துகொண்டு நின்றான் அவன். அவனுக்கு அவர்களை தாத்தா பாட்டி என நன்கு தெரியும், ஆனால் ஒட்டுதல் இல்லை.

"வாங்க!" என ஞானமும் அழைக்க, "வாங்க!" என சாம்பவி, மணிகண்டன், சுரேந்தரும் அவரை அழைத்தனர்.

"ஊருக்கு வாரியா ராசா? ரெண்டு நாள் இருந்துட்டு வருவோம். வரியா கிருஷ்ணா?" என்றார் மணிகண்டன்.

'இல்ல!' என தலையை மட்டும் அசைத்து மறுத்தான் கிருஷ்ணன்.

"ஒருமணி நேரம் வச்சு சமாளிச்சுருவீகளான்னு பாருங்க" மீனம்மா இடக்காக சொல்ல,

"மனோ வர லேட்டாகுமா?" என்றான் சுரேந்தர்.

"நா டீ போட்டு எடுத்தாரேன், மனோக்கு ஃபோன போட்டு பாருங்க பெரிய சாரு" என மீனம்மா உள்ளே செல்ல திரும்ப,

"டீ மட்டும் போதும் மீனம்மா, அளவு சுகர் தான். வேறெதும் சாப்பிட முடியாது" என்றார் சாம்பவி.

ஞானம் மனோவிற்கு அழைக்க, "அவங்க கிளம்பினதும் சொல்லுங்கப்பா வரேன். இங்க தான் பார்க்குல உட்கார்ந்துருக்கேன்" என அவர் ஹலோ எனும் முன்னரே பதில் அளித்துவிட்டாள் மனோ ரஞ்சிதம். இந்த விஷயம் தெரியவந்தால் மார்கண்டேயன் எதிர்வினை!
 
Top