எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 21

வான்மழை 21:


இப்போதெல்லாம் சுபாவின் எண்ணத்தை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தாள் வருணாக்ஷி.
ஏற்கனவே பெரிய இடத்தும் பெண், சீர்வரிசை‌ அதிகம், என்ற லிஸ்ட்டோடு இப்போது வேலைக்கு சென்று‌‌ சம்பளம் வாங்குபவள் என்ற அடைமொழியும் அந்த பட்டியலில் இணைந்துக் கொண்டிருந்தது.

வருணா அன்றைக்கு சொன்னதுப் போலவே, அவளிற்கும் முகிலனிற்குமான உணவு பொறுப்பினை‌‌ அவளே பார்த்துக்‌ கொண்டாள்.‌எதற்கும் சுபாவையோ, பேச்சியையோ நாடவில்லை அவள்.

இதை வைத்து ஏதாவது பிரச்சனையை செய்து, அவளை விட தனக்கே இந்த வீட்டில் அதிகாரமும், முக்கியத்துவமும் உள்ளது என நிலைநாட்டி விடலாம் என‌ எண்ணியிருந்த சுபாவின் எண்ணத்தில் மண் விழுந்தது.

இதையெல்லாம் விட இன்னொன்று, வருணா வேலைக்கு செல்லும் தகவலை அறிந்த, சுபாவின் தாய் அவளை கண்டபடி வசைப் பாடியிருந்தார்.

“நான் சொன்ன மாதிரியே நடக்குதுப் பாத்தியா? நேத்து வந்தவ உன்னைய மூலையில் முடக்கிட்டால்ல, நீ அவளுக்கு சேவகம் செஞ்சிட்டு, வேலைக்காரி மாதிரியே‌ திரி, நான் பெத்தது இப்புடி கூறுக்கெட்டு இருக்கும்னு நினைக்கலையே.” என்றவரின் பேச்சில் கடுப்பாகியவள்,

“இப்ப‌ என்ன ஆகிப்போச்சுன்னு இப்புடி பேசுறீங்கம்மா?”

“பின்ன உன்னைய மாதிரி ஒரு‌ முட்டாக்கழுதைய பெத்ததுக்கு, இப்புடிதான் பேசணும். இனி உன் பேச்சு அங்க எடுபடும்னு நெனைக்கிறியாடி நீயி?”

“ஏன்?‌ஏன்? எடுபடாது, இப்போ வரைக்கும் அதுல மாற்றமில்லை, என்‌ கைக்குள்ள தான் இன்னமும் இருக்கு.”

“நீ அப்புடி கனா கண்டுட்டு இரு, அந்த வீடு‌ உன் கைக்குள்ள இருந்திருந்தா, இந்நேரம் அவளை‌ வேலைக்கு போக விட்டுருப்பியா நீயி? இனி நீ அங்க செல்லாக்காசு தான்.

சம்பளம் வாங்குற‌ மருமக பேச்சு தான்‌ அங்கே இனி எடுபடும்.‌ இனி எல்லாம் அந்த வீட்டுவச அவ எடுக்கிறது தான் முடிவுன்னு மாறப் போகுது.‌நீயி கடைசியில உன் புருஷன் மாதிரி ஒன்னுத்துக்கு இல்லாதவளாதான் நிக்கப் போற.”

“இப்போ எதுக்கு நீ அவரை இழுக்குற, அவர்கிட்ட‌ என்ன கொறைச்சலை கண்ட நீயி?”

“ஆமா நீ தான் மெச்சிக்கனும். உன் கொழுந்தக்காரனை பாத்த தானே, வாத்தியார் வேலை இல்லாம, தனியா மண்டபத்தை வாடகை விட்டு சம்பாதிக்கிறான்.‌ பத்தாதுக்கு பெரிய இடத்து பொண்டாட்டி வேற, ஏகப்பட்ட பணம், சீர்வரிசை, இது இல்லாமா இப்போ பொண்டாட்டிய வேலைக்கும் அனுப்புறான். எல்லா வகையிலயும அவனுக்கு வருமானம் பெருகிட்டே இருக்கு.

ஆனா உன் புருசன் கிட்ட என்ன இருக்கு, அந்த ஓட்டை கடையை தவிர, வீடு எப்படியும் மூணு பங்கு போகும். அப்போ இருக்கிற அந்த இரண்டு கடையையாவது உன் புருஷன் பேருக்கு மாத்தியிருக்க வேண்டாம். அந்த கடையிலயும் ஒண்ணு உங்கொழுந்தனுக்குப் போகும்.
இப்புடி ஏமாளியா இருக்குற உன் புருஷனை சொன்னா, உனக்கு ரோசம் பொத்துக் கிட்டு வருது.

கூடிய சீக்கிரமே, ஒண்ணுமே இல்லாத வந்த உன்னைய ஒதுக்கிட்டு, உன் ஓரகத்தி தான் அந்த வீட்டையே ஆளப் போறா, அவ நல்லா செல்வ செழிப்பா இருக்க, நீயும் உன் புருஷனும் ஒன்னும் இல்லாம நடுத்தெருவுக்கு வரப் போறீங்க பாரு. இப்பயாவது முழிச்சுக்கோ.” என‌ கத்தி விட்டு போனை வைத்திருந்தார்.

அவரின் பேச்சில், சுபாவிற்கு பய‌ உணர்வுகள் அதிகரிக்க தொடங்கியது.
எங்கே, தான் ஒன்றுமில்லாமல் வந்தவள் என தன்னை அனைத்திலும் ஒதுக்கி வைத்து விடுவார்களோ, என்ற எண்ணம் அவளை அதிகமாக பாதிக்க தொடங்கியது. அவளின் அம்மா சொன்னதும் போல், கடைசியில் தன்னையும், தன் கணவனையும் விட்டுவிடுவார்களோ என, வேண்டாத எண்ணங்கள் அவளை ஆக்ரமிக்க தொடங்கிய‌ வேளை,

“சுபாக்கா, சுபாக்கா” வருணாவின் குரல்.

அன்று சனிக்கிழமை வருணாவிற்கு விடுமுறை ஆதலால் வீட்டிலிருந்தாள். முகிலனிற்கு கல்லூரி இருந்தது.

வழக்கம் போல் ஆண்கள் இருவரும் கடைக்கு சென்று விட, சாத்வியுடன் விளையாடியபடியே, மாமியாருடன் கதையளந்துக் கொண்டிருந்தாள் வருணா.

“அத்தை, எங்கயாச்சும் வெளிய போய்ட்டு வருவோமா? நம்ம மூணு பேரும். எவ்ளோ நேரம் தான் வீட்டுக்குள்ளயே இருக்கிறது.” வருணா கேட்க,

“உன் மாமாவும்‌, பரணியும்‌ மதிய சாப்பாட்டுக்கு வந்திடுவாங்களே வருணா” என்றவரின் குரலில், வெளியே செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ஆண்கள் சாப்பாட்டிற்கு வந்து விடுவார்களே என்ற தயக்கமும் இருந்தது.

“அட, அத்தை இன்னைக்கு ஒரு நாள் வெளிய சாப்பிட்டுகட்டும் ரெண்டுப் பேரும்.இப்பவே நம்ம போன் பண்ணி சொல்லிடலாம்.”என்றவள், கையோடு அவர்களுக்குக் அழைத்து விசயத்தையும் தெரிவித்திருக்க,

“தராளமா போய்ட்டு வாங்க.” என்றிருந்தார் மகாலிங்கம்.

கணவர் சொன்னதும் சந்தோஷமடைந்து விட்டார் பேச்சி.

“அப்போ சரி எங்க போகலாம் வருணா?” என கேட்டவரின் குரலில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. பேச்சிக்கு வெளியே செல்வது அதிகமே பிடிக்கும்,மேகலா திருமணம்‌ ஆகி செல்லும் வரை இருவரும் சேர்ந்து நிறைய இடங்களுக்கு சென்றிருக்கின்றனர்.

மகளுக்கு‌ திருமணம் ஆனதும் அவரின் பொழுது எல்லாம் ஒத்தையிலயே கழித்தது. பின் பரணித் திருமணம், சுபாவுடன் சேர்ந்து வெளியே செல்வதற்கு பேச்சி ஆவலாகவே இருந்தார்.

ஆனால் சுபாவிற்கு அந்த ஆவல் சுத்தமாக இல்லை. எப்போது கேட்டாலும் எதாவது ஒரு காரணத்தை சொல்லி தவிர்க்க ஆரம்பித்தாள். சரியென்று பேச்சி மட்டும் தனியாக செல்லாம் என்றாலும், பலதையும் பேசி, அவரை‌ குழப்பி விட்டு போக விடாமல் செய்து விடுவாள். ஆக, சுபா அவளின் அதிகாரத்தை மறைமுகமாக பேச்சியிடம் இருந்தே தொடங்கியிருந்தாள். அவர் அறியாமலே.

ஒருக்கட்டத்தில், பேச்சிக்கு சலித்து விட, வெளியே செல்லும் ஆசையையே விட்டிருந்தவர்,இன்று வருணா கேட்டதும் மீண்டும் அவருக்கு அந்த ஆசை துளிர் விட்டிருந்தது.

ஆவலாக கேட்ட அத்தையை சிரிப்புடன் பார்த்தவள், “ இருங்க அத்தை, சுபா அக்காவையும் கேட்டிடலாம்.” என்றவள்,
அவளை அழைத்திருந்தாள்.

இவளது குரல் கேட்டு வெளியே வந்த சுபாவிடம், அனைத்து விசயங்களும் தெரிவிக்கப்பட,

சற்று முன் சுபாவின் அம்மாவின் பேச்சு, வருணாவிற்கான இடம், என நொடியில் அவளது மூளையில் அனைத்தும் வந்து செல்ல, இதனை தடுத்து தனது வார்த்தைக்கு இருக்கும் அதிகாரத்தை, வருணாவிடம் காட்டி விட வேண்டும் என்ற செருக்குடன்,

“என்ன அத்தை? இப்போ கிளம்பி போய் எப்போ வர்றது? பாப்பாக்கு வேற சாப்பாடு தரனும். மாமா வெளியே சாப்பிட்டுக்கிறேன்னு சொன்னாலும், அவருக்கு அது ஒத்துக்குமான்னு தெரியலை. இதை எல்லாம் நம்ம பாக்காம‌ எப்புடித்தை திடுதிப்புன்னு‌ கெளம்ப முடியும். இன்னைக்கு வேண்டாம், நம்ம அடுத்த வாரம் ஒரு நாள் போகலாத்தை.” என வழக்கம் போல் அவள் தடை போட, நொடியில் பேச்சியின் முகம் விழுந்து விட்டது.

அதுவரையிலும் மாமியாரின் முகத்தில் இருந்த பிராகாசம் வடிந்ததில், லேசாக எரிச்சலுற்றவள்,

“இதெல்லாம் ஒரு விசயமாக்கா? பாப்பாவோட சாப்பாடு எடுத்து வைங்க, வெளியே பார்க் மாதிரி எங்காயச்சும் வச்சே ஊட்டி விடலாம். வேடிக்கை பாத்துட்டே சாப்பிட்டுடுவா.

மாமாக்கு பிரச்சனை இல்லை, இன்னைக்கு ஒரு நாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்குவாரு. இப்போ சும்மா இங்க வீட்டுல இருக்கிறதுக்கு வெளியே போய்ட்டு வரலாம். இதுக்கு நேரம் காலம் எல்லாம் பாத்திட்டு இருந்தா முடியாதே.” என,

தன்னை கேலி பண்ணுவதாக நினைத்த சுபாவிற்து அவளது முடிவை தவறு என‌ நிருப்பித்திடும் வேகம் அவளிடம்.

“சரி எங்க போகா ப்ளான் பண்ணிருக்கீங்க?” என்க

“இன்னும் யோசிக்கலை அக்கா, அதுக்குத்தான் உங்களை கூப்பிட்டோம். சொல்லுங்க உங்களுக்கு ஏதும் ஐடியா இருக்கா?”

“சுத்தம், அதையே இன்னும் ஃப்ளான் பண்ணலையா நீயி? மணியப் பாத்த தானோ, இனி‌ நீ எங்க போறதுன்னு முடிவு பண்றதுக்குள்ளயே மதிய சாப்பாடு முடிச்சிடும் போலயே. இதுக்குத்தான் நான் சொன்னேன், அடுத்த வாரம் போகலாம் அதுக்குள்ள‌ எங்க போகணும், யாரெல்லாம் போறாம்னு‌, நான் ப்ளான் பண்ணி வைக்கிறேன்.” என‌ சுபா விடாது அவர்களை‌ தடுக்கும் நோக்கத்திலே பேசிட,

பேச்சிக்கும் சுபா சொல்வதே சரியென தோன்றி வருணாவிடம் சொல்வதற்கு திரும்ப,

“அத்தை தேக்கந்தோட்டம் ஃப்பால்ஸ்க்கு போகலாம்.‌ஒரு மணி நேரம் தான் ஆகும். நான் டேக்ஸிக்கு சொல்லுறேன்.” என அவள் முடிப்பதற்குள்,

“இந்த நேரத்துல தண்ணி இருக்கிற இடத்துக்கு, அதுவும் தனியா போறாதா? அங்கே கூட்டம் எப்படி இருக்கும்னு தெரியுமா? எதாவது தெரிஞ்சுதான் சொல்லுறியா நீயி? எதுவும் தெரியாம உன் இஷ்டத்துக்கு ஃப்ளான் பண்ணிட்டு இருக்க, அங்க என்ன நிலவரமோ.” என இடைப்புகுந்திருந்தாள் சுபா.

“அத்தை நீங்க போய் ஒரு செட் மாத்து துணி எடுத்திட்டு வாங்க.” என அவரை அனுப்பியவள்,

“என்னக்கா பிரச்சனை உங்களுக்கு? எல்லாத்துக்கு தடங்கல் சொல்லிட்டே இருக்கீங்க.” நேரிடையாக சுதாவிடம் பேசிட,

இதை எதிர்பாராதவள், ஒரு நொடி திகைத்து பின்,
“என்ன பேசுற வருணா நீ? நீ எதையும் யோசிக்காம ஃப்ளான் பண்ணுறது சரியில்லை, அதை நான் சொன்னா, நீ என்ன இப்புடி திரிச்சுப் பேசுற.” சுபா அதை பெரிதாக்கிவிடும் நோக்கத்துடன் பேச, அதற்குள் வந்திருந்தார் பேச்சி.

அவரிடம் அவள் வருணா பேசியதை கூறி, பெரிதாக்க முயல,

“என்ன வருணா இது பேச்சு?” பேச்சியும் அவளைக் கண்டிக்க,

“நான் இப்போ என்ன சொன்னேன். சொல்றதுக்கெல்லாம் வேண்டாம் சொல்லுறாங்களே, அதான் அவுங்களுக்கு ஏதும் பிரச்சனை அதாவது உடம்புக்கு ஏதும் பிரச்சனையான்னு கேட்டேன்.‌ இதுல என்ன தப்பிருக்கு?” என்றவளின் பேச்சில் இப்போது பேச்சியம்மாள், சுபாவை லேசான முறைப்புடன் பார்க்க,

“ஓ நீ அந்த பிரச்சையான்னு கேட்டியா, நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போல.” என்ற சுபா, அடுத்து வாய் திறக்காது நிற்க,

“அத்தை அங்க கூட்டமா இருந்தா,நம்ம சும்மா வேடிக்கை பாத்துட்டு ஈவ்னிங் படத்துக்கு போய்ட்டு வரலாம்.” என்றவள்,

“பாப்பாக்கும், உங்களுக்கும் டிரெஸ் எடுத்துட்டு வாங்க அக்கா.” சுபா க்ஷவிடம் கூற,

“இல்லை நான் வரலை, பாப்பாக்கு தண்ணி சேராது, அவளை வச்சிக்கிட்டு தண்ணி இருக்கிற இடத்துக்கெல்லாம் ம்ஹீம் வேண்டாம்ப்பா.”

“அப்போ படத்துக்கு போகலாமாக்கா”?

“இவளை வச்சிக்கிட்டு அவ்ளோ நேரம் எல்லாம் உட்கார முடியாது, அழுவா.”

“அப்போ சரிக்கா, நான் அத்தைய‌ கூட்டிட்டு போய்ட்டு வரேன். அத்தை நம்ம போகலாம்மா?”

சுபாவை மட்டும் விட்டுவிட்டு செல்ல அவருக்கு ஒப்புதல் இல்லை,
“சுபாவ விட்டுட்டு எப்புடி வருணா?”

“அத்தை, அக்கா சொல்றதும் சரிதான் பாப்பாவ வச்சிட்டு முடியாது, இன்னொரு நாள் பாப்பாவோட போகலாம். இப்போ ஃப்ளான் பண்ணதை கேன்சல் பண்ண வேண்டாம். எவ்ளோ ஆசையா கிளம்புனீங்க, சுபாக்காவும் நம்மளை போகத்தான் சொல்லுவாங்க, உங்க ஆசையை வேண்டாம் சொல்லுவாங்களா அவுங்க.” என்றிட, இதற்கு மேல் எங்கே சுபா மறுத்திட,

“ஆமாத்தை நீங்க போய்ட்டு வாங்க, தனியாதானே நான் சமாளிச்சுப்பேன்.” என‌ அவள் சற்று அழுத்திக் கூற,

பேச்சி எதுவோ கூற வர,
“தனியா எல்லாம் இல்லைக்கா, பரணி மாமாக்கு மேசேஜ் போட்டுடேன்.அவர் வரேன்னு சொல்லிட்டாரு. அத்தை, சுபாக்காக்கு துணையா மாமா வர்றாரு. இப்போ நம்ம போகலாம் தானோ.” என கேட்டவளிடம், சரியென்றிருந்தார் பேச்சி.

தான் சொன்னாலும் மாமியார், தன்னை தனியே விட்டு செல்லமாட்டார் என்ற தைரியத்தில் இருந்த சுபா, இதை சற்றும்‌ எதிர்பார்க்கவில்லை. அவளது அதிகாரம் கண்முன்னே உடைந்ததை கண்டவளிற்கு, முள் மேல் நிற்பதை போல்தான் இருந்தது. அடிவயிற்றில் பயபந்து உருண்டது உண்மை.

அவர்கள் இருவரும் கிளம்ப,
“ரெண்டு பேரு தனியா போறீங்க, பத்திரமா போய்ட்டு வாங்க. படம் முடிய நைட் ஆகிடும் பார்த்து கவனம்.” கடைசி முயற்சியாய் மீண்டும் அவள் முயற்சிக்க,

“நான் அவருக்கு போன்‌‌ பண்ணிட்டேன்க்கா, உங்க கொழுந்தனார் நேரா அங்க ஃப்பால்ஸ்க்கு வரேன்னு சொல்லிட்டாரு.‌ ஹாப்டே‌தான இன்னைக்கு அவருக்கு.‌ அதானால பயப்படாதீங்க.” என்றவள் அதற்கு மேல் நில்லாது, பேச்சியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

செல்லும் அவர்களை வெறித்துப் பார்ப்பதை தவிர, வேறு வழியிருக்கவில்லை சுபாவிற்கு.

சொன்னது போலவே, இவர்கள் அருவிக்கு சென்று நேரம்,‌முகிலனும் வந்து இவர்களுடன் இணைந்து கொண்டான்.

அங்கே சற்று நேரம் கழித்தவர்கள், பின் தியேட்டருக்கு சென்றனர்.‌ சிறுப்பிள்ளை என முத்துப்பேச்சி அனைத்தையும் ரசித்து மகிழ்ந்ததை கண்ட முகிலனிற்கு, இதற்கு காரணமான மனையாட்டியின் மீது இன்னும், இன்னும் காதல் பெருகியது.

தியேட்டரில் பேச்சிக்கும், முகிலனிற்கும் இடையே அமர்ந்திருந்தாள் வருணா. பேச்சி படத்தில் கவனமாய் இருப்பதைக் கண்ட முகிலன், மெல்ல தன்னவளை‌ சுரண்டினான்.

“என்ன?” அவன் புறமாய் அவள் திரும்ப,

“கிட்ட வா?” என்றவனின் செய்கையில் அதிர்ந்து முழித்தவள்,
“ச்சீ ச்சீ நான் மாட்டேன்.” என்றவளின் செய்கையில் கடுப்பாகி, நறுக்கென அவள் தலையில் கொட்டியவன்,

“கொன்றுவேன்டி! என்ன நினைச்ச என்னைய?” அவளை முறைத்து வைக்க,

அவனது கோபத்தில் சமத்தாய் அவனருகே நெருங்கிட,

“ஐ லவ் யூ வரும்மா!” என கிசுகிசுத்திட, அவனது கிசுகிசு குரலிலும், அவன் சொன்ன காதலிலும் மயங்கியவள், அதை மறைத்துக் கொண்டு,

“இதுக்குத் தான் கூப்புட்டீங்களா.” அதே ஹஸ்கி வாய்ஸ் இவளிடம்.

“ஆமா, பின்னே நீ நினைச்ச மாதிரியா டேஃர்ட்டி கேர்ள்!” என அவன் சீண்ட,

அவனை கண்களை சுருக்கி முறைத்தவள், வேகமாய் அவனிடம் இருந்து நகர போக, அவளது கைமுட்டியினை இழுத்து நகர விடாது செய்தவன்,

“ரொம்ப நாள்‌ கழிச்சு, அம்மா சந்தோசமா இருக்குறாங்க. எல்லாம் உன்னாலதான்.”

“ம்ம்ம் அதுக்கு?”

“அதுக்கு ஒண்ணுமில்லை, சொல்லனும்னு தோணிச்சு.”

“ஓஹோ தாங்க்ஸ் சொல்லுவீங்களோன்னு நினைச்சேன்.”

“சொல்லனுமா?” மையலாய் அவன் கேட்டிட,

“சொல்லுவீங்களா?”

“கண்டிப்பாஆஆ… மாட்டேன்!” அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன்.

நறுக்கென அவனை கிள்ளியவள், அடுத்து அவனிடம் வாயாடாது, பேச்சியின் புறம் திரும்பிக் கொள்ள,
அவளது கைகளை இறுக பற்றிக் தன்னுள் அடக்கி கொண்டவனுக்கு, மனம் சந்தோசத்தில் நிறைந்திருந்தது.

மனையாளின் விளையாட்டுத் தனத்தை எல்லாம் எண்ணி பயந்திருந்தவனுக்கு, இன்று அதையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்ந்திருந்தாள் அவனது வருணா. இதே போல் எப்போதும் இருக்க வேண்டும், என அவனது மனம் அவசர வேண்டுதலை மலை மீது இருப்பவரிடம் வேண்டிக் கொண்டான்.

படம் முடிந்து வீட்டிற்கு வரும் வரையிலும் அந்த மகிழ்ச்சி நீடித்தது மூ
வரிடமும்.

அடுத்தடுத்த நாட்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி, அழகாய் நகர்ந்தது. சுபாவிற்கு மெல்லவும் முடியாது, சொல்லவும் முடியாத நிலை. ஏதோ ஒருவகையில் வருணா அவளை‌ பாதித்தாள்.

 
Top