எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

14 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 14

மார்கண்டேயன் மிக அருகில் வந்து நிற்க, அவளும் பார்த்தபடி தான் நின்றாள். அவன் கையை அவள் முகம் நோக்கி நீட்ட, மெல்ல தலையை மட்டும் பின்னால் இழுத்தாள் மனோ.

"இருடி" என்றவன், அவள் முகம் கழுவியதால் நகர்ந்து வலது நெற்றியோரம் சென்று வீற்றிருந்த, கருப்பு நிற வட்ட ஸ்டிக்கர் பொட்டை எடுத்து வந்து புருவத்தின் நடுவில் நேராக வைத்தான்.

அவள் கன்னத்தில் தெரிந்த இரு பருக்களை பட்டும் படாமல் தொட்டுவிட்டு, "பீரியட்ஸா மனோ?" எனவும் கேட்க, அவன் கையை தட்டிவிட்டு தள்ளி நின்று முறைத்து பார்த்தாள்.

"ஏன்டி? ஆமான்னா ஆமான்னு சொல்லு, இல்லனா இல்லன்னு சொல்லு. பீரியட் சமயம் தானே உனக்கு இப்படி வரும்? அதான் கேட்டேன்" என தோல்களை குலுக்க,

"என் விஷயம் உங்களுக்கு அநாவசியம், என்னவோ என்னைய பத்தி ரொம்ப தெரியுங்குற இந்த சீனும் வேணாம். நிச்சயம் எப்பவாச்சும் நானே என்னபத்தி உளறிருப்பேன் அத இப்படி சிட்யுவேஷன்ல யூஸ் பண்ணிப்பீங்க நீங்க. இனி அவ்வளவு மெனகெடாதீங்க, என்னைய நீங்க உங்க மெமரில இருந்தே அழிச்சுடலாம்"

"அது நீ சொல்ல கூடாது. எனக்கு எது தேவை எது தேவையில்லன்னு நாந்தான் டிசைட் பண்ணணும் பொண்டாட்டி" என்றவன், பேசியபடியே வரவேற்பரையிலிருந்த ஷோகேஷ் அருகில் சென்று, அதை திறந்து உடைந்திருந்த கிருஷ்ணர் ராதை பொம்மையை வெளியே எடுத்தான்.

"கிருஷ்ணா உடச்சிட்டானா? உடஞ்சுட்டுனா தூக்கி தூர போட வேண்டியது தானே? எதுக்கு பத்ரமா வச்சுட்ருக்க?" என சாதரணமாக தான் கேட்டான்.

"உடஞ்சத பாத்துட்டே இருந்தா தான, அது உடஞ்சு தான் வேற வழியில்லாம அங்க இருக்குன்னு நமக்கு ஞாபகம் இருக்கும்?" என்றாள் வெடுக்கென்று.

சட்டென்று எரிச்சலானவன், "எல்லாத்தையும் கனெக்ட் பண்ணுவியா நீ? எதுக்கு இப்ப இவ்ளோ டென்ஷன்? இங்க வா உட்காரு நாம நிதானமா பேசலாம், சும்மா சிடுசிடுன்னு பேசினா சொலுயூஷனே கிடைக்காது" என அவள் கை பிடித்து இழுத்து வந்து சோஃபாவில் அமர வைத்து தானும் ஒற்றை காலை மடக்கி அவளை பார்த்து அமர்ந்தான்.

'நீ பேசு. என்னவேனா பேசு எவ்ளோ வேணா பேசு!' என்பதாக தான் இருந்தது அவள் பார்வை. அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்று அமர்ந்திருந்தாள். இதற்கு முன் இதுபோல் அவன் சாந்தமாக பேச்சை எடுத்தாலே, கோவம் போய் அழுகை தான் வரும், அவனிடம் கேவி கேவி அழுவாள், அவன் சமாதானம் செய்ய, சண்டை அந்த இடத்தில் முடிவுக்கு வரும் பிறகு இருக்கும் பத்து நாட்களை அவளோடும் பிள்ளையோடும் அங்கிங்கு என சுற்றி காண்பித்து கழித்துவிட்டு, "ஒரு ஒன் இயர் மட்டும்டி!" என கெஞ்சி கொஞ்சி முத்த பறிமாற்றமும் சில பொழுதுகளில் மொத்த பறிமாற்றமும் நடந்து அந்த தற்காலிக சண்டையை முடிவுக்கு கொண்டு வருவர்.

அவர்கள் சண்டை எல்லாம் இன்றும் பசுமரத்தானியாக நெஞ்சில் நிற்கிறதே அவளுக்கு. எல்லா சண்டையும் எப்படியோ சுபமாக முடிந்திருந்தது.

ஆனால் கடைசியாக போட்ட சண்டை, கண்ணனின் பிறப்பிற்கு வந்து கிளம்புபோது நடந்தது, கண்ணன் பிறந்து ஒருமாதமாகியிருந்தது, மார்கண்டேயன் அமெரிக்கா திரும்புவதால் சொல்லிவிட்டு செல்ல வந்திருந்தான், இரண்டு நாட்கள் அங்கிருந்து பெரியவன் சின்னவனோடு சேர்த்து மனையாளயும் ஆசைதீர கொஞ்சிக்கொண்டான். கிளம்பும் நேரம் தனிமை கொடுத்து விலகிவிட்டது குடும்பம்.

"ரெண்டு பேரயும் சமாளிக்க முடியல ப்ளீஸ் இங்கேயே வந்திடுங்க" என ஆரம்பித்து, "தனியா குடும்பம் தானே வச்சுருக்கீங்க அங்க?" என்ற கேள்வியில் உஷ்ணம் கொண்டு நின்றது அன்றைய சண்டையும். அவன் ஊருக்கு கிளம்புகிறான் என்கையில் எல்லாம் அவளுக்கு இப்படித்தான் கோவம், எரிச்சல் எல்லாம் வந்து முன் தலையில் அமர்ந்து கொள்ளும்.

"எனக்கு அங்க தான் மனோ பிடிச்சுருக்கு. அங்க லட்சத்துல வாங்குற சம்பளம் இங்க, அதுல ஒருமடங்கு தான் தருவான். அதெப்படி நம்மளுக்கு போதும்? குடும்பம் பெருசாகிடுச்சு, நீயும் பிள்ளைங்களும் இருக்கீங்க தானே? ஆம்பள பிள்ளைங்க வேற, சொத்தா சேர்த்து வைக்கணும்ல?" என சிரிக்க,

"எங்கள கூட்டிட்டு போற ஐடியா இப்பவும் இல்ல?"

"கூட்டிட்டு போறேன்டி. சின்னவனுக்கு ஆறு மாசம் ஆகட்டும் கூட்டிட்டு போறேன்" என அவன் சொல்லவும், அவள் நக்கலாக சிரித்தாள்.

"ப்ராமிஸ்டி"

"உங்க பேச்ச எந்த வகையிலையும் நம்பவே மனசு வரமாட்டேங்குது" என பாவமாக பேசியவளை கண்டு அவனுக்கும் கஷ்டமாகிவிட, இழுத்தணைத்துக் கொண்டான்.

"ஏன் மனோ இப்டி பேசுற? இவ்ளோ ஸ்ட்ரெஸ் எடுக்காத மனோ, நாந்தான் இருக்கேனே பாத்துக்குறேன்"

"இல்லையே எனக்கு அப்படி தோனலையே? தனியா இருக்க மாதிரி தானே இருக்கு, அம்மா, அப்பா, மீனம்மான்னு எல்லாரும் இருக்காங்க, ஆனா பிள்ளைங்கள நாந்தான் பாக்கணும், என் அளவுக்கு அவங்களால முடியாது, யார் இருந்தாலும் நீங்க கூட இருக்க மாதிரி இருக்காது தானே? கர்ப்பமா இருக்குறப்போ, பொண்டாட்டிக்கு என்னலாம் வேணும்னு ஹஸ்பண்ட் தான் தேடி தேடி வாங்கிட்டு வந்து தருவாங்களாம், என் ஃப்ரெண்ட் நேத்து சொல்றா அவ இப்ப ப்ரக்னென்டா இருக்கா ஆறு மாசம் ஆகுது, இப்போ ரத்தம் இல்லன்னு சொன்னதால அவ ஹஸ்பண்ட் சுவரொட்டி, ஈரல் எல்லாம் சொல்லிவச்சு கரெக்ட்டா வாங்கிட்டு வந்து குடுக்குறாங்களாம், இங்க அம்மா அப்பாக்கு அதெல்லாம் தெரியாதே? எனக்கும் நீங்க சொல்லலையே? இங்க அம்மாக்கு பீட்ரூட் ஜுஸ் தான் போட்டு தர தெரியும் அத சரியாதான் செஞ்சாங்க, ஆனா சின்னவன் நிறம் கம்மியா பிறந்ததுக்கு அந்த பீட்ரூட் தான் காரணம்னு பேசுறாங்க உங்க வீட்ல, எனக்கு நீங்க இருந்து செஞ்சுருந்தா அவங்க எதுவும் பேச முடிஞ்சுருக்காதுல்ல? உங்களுக்கு இப்படி கூட இருந்து என்ன பார்த்துக்கணும்னு தோணாதா? அதுகூட தொந்தரவுனா எதுக்கு கல்யாணம் அப்புறம் இப்படி பிள்ளைலாம் குடுத்தீங்க?" என்றவளும் அவனை இறுக்கி தான் பிடித்தாள், விடமாட்டேன் என்பவளாக. கேட்டதெல்லாம் அமைதியாக, அழுத முகமாக தான் கேட்டாள்.

"சீக்கிரமே உங்கூடவே வந்துடுறேன்டி. மேக்ஸிமம் ஒன் இயர்டாமா, போஸ்ட்பார்டம் டிப்ரஸனா இருக்கும்மா உனக்கு. நீ ஏன் இவ்ளோ யோசிக்குற மனோ? ரிலாக்ஸா இருடி. எங்க போனாலும் லாஸ்ட்ல உங்கிட்ட தான் வந்து நிப்பேன்மா" என தானும் தாங்கி கொண்டான் அவளை.

"லாஸ்ட்ல வேணாம். இப்ப வாழும்போதே வாங்க" என்றதும் அவள் வாயில் அடித்தவன், "கான்ட்ராக்ட் முடியவும் வந்துடுறேன், அடுத்து எக்ஸ்டன்ட் பண்ண மாட்டேன். சுயர்" என அவள் தலையில் கைவைத்து ஆட்டினான்.

"நீங்க வாங்க அப்புறம் நம்புறேன் உங்கள" என கண்ணை அவன் சட்டையிலேயே துடைத்திருந்தாள் அன்று.

"சியரப் கேர்ள்!" என சமாளித்து சிரிக்க வைத்து தான் கிளம்பினான்.
அப்படித்தான் அவர்களின் கடைசி சந்திப்பு கடந்து சென்றிருந்தது. உண்மையில் அவன் வந்துவிடும் எண்ணத்தில் தான் கிளம்பியுமிருந்தான். அவள் புலம்பல்கள் அந்தளவில் அவனை கரைத்துவிட்டிருந்ததும் உண்மை. ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் வந்திருந்தது, அவர்கள் பிரிவை மூன்று வருடங்களுக்கு நீட்டித்துமிருந்தது.

அங்கு சென்றபின் நடந்தது தான். தொலைவில் இருந்ததால் அவனால் அதை எளிதாக கையாலவும் முடியவில்லையோ என்னவோ!

ஒரு இடம் வாங்கும் பிரச்சனையில் ஆரம்பித்தது. முதலில் இவள் பெயரில் வாங்குவதாக தான் அவன் கூறியிருந்ததும், ஆனால் அவன் வீட்டில் என்ன பேசினார்களோ இறுதியில் அது அவன் அம்மா பெயரில் தான் முடிக்கப்பட்டிருந்தது.

அதும் அவன் அங்கு சென்று மூன்று மாதங்களுக்கு பின் தான் அவளுக்கு தெரியவந்திருந்தது. அதுவரை தினமும் பேசுபவன் கூட அவளிடம் சொல்லியிருக்கவில்லை.

"உனக்கு டெலிவரி டைம் உன்ன அலைய வைக்க வேணாம்னு தான் மனோ உன் பேர்ல எழுதல. நீ ட்ராவல் பண்ணவே மூணு மாசம் ஆகும், நா போய்ட்டு இதுக்காக திரும்ப வர முடியாது. அதான் மாமா இப்படி சொல்லவும் சரின்னு முடிச்சுட்டேன்" என்றான் இலகுவாக.

"என் பேர்ல இல்லனாலும் உங்க பேருல முடிக்க வேண்டியது தான?" என்றாள் இவள்,

"நா ஃபாரீன்ல இருக்கேன் மனோ. அந்த இடத்துல வீடு கட்டணும்னா அங்க இருக்க ஆள் நேம்ல இருந்தா தானே முடியும்? அதனால தானே ஃபர்ஸ்ட் உன் நேம்ல வாங்க நினச்சேன். ஆனா நீதான் அங்க போய் இருக்கவே மாட்டேங்குறியே, இனி ரெண்டு பிள்ளைகள பாக்கணும் கண்டிப்பா உன் அம்மாவ விட்டுட்டு அங்க போகவே மாட்ட, அதனால தான் அவங்க பேர்ல முடிச்சேன். ஏன் உனக்கு அதுல இஷ்டம் இல்லையா?" என்றான் இவனும் குதர்க்கமாக.

"ஃபர்ஸ்ட் விஷயம், இங்க சொத்து யார் பேர்லங்குறது இல்ல, எனக்குன்னு சொன்ன ஒரு விஷயம் என்ட்டயே சொல்லாம இன்னொருத்தருக்கு குடுக்கப்பட்டிருக்கு, உங்களுக்கு அத ஏன் என்ட்ட சொல்லிட்டு செய்யணும்னு தோணல? இப்ப வர கூட நீங்களா சொல்லல, உங்க மாமாவே வந்தப்ப சொல்லிட்டு போறாங்க, எனக்கு தெரியும்ன மாதிரி அவங்களும் என் அம்மா, அப்பாவும் பார்க்கும்போது, இல்லன்னு சொல்ல முடியாம, உங்கள விட்டுக்குடுக்காம சமாளிச்சு நின்னுட்டு வந்துருக்கேன் தெரியுமா? என்ட்ட ஏங்க சொல்லல நீங்க?"

"நாள் நல்லாருக்குன்னு அக்கா, அம்மா எல்லாம் பார்த்துவச்சுட்டு கடைசியா தான் சொன்னாங்கடி. எனக்கு அத உன்ட்ட சொல்லணும்னு அந்நேரம் நெனப்புல இல்ல, நீயே பேசும்போதுலாம், சின்னவன் நைட்டெல்லாம் தூங்க மாட்டேங்குறானே புலம்புவ, அதான் வேறெதையும் சொல்லி டென்ஷன் ஆகுவியோன்னு சொல்லல மனோ, ஊருக்கு வரும்போது உன்ட்ட சொல்லலாம்னா நீயே போஸ்பார்டம் டிப்ரெஷன்ல இருந்த, ஏற்கனவே குழப்பத்துல இருக்குறவள எதுக்கு வேறெதுவும் சொல்லி குழப்பணும்னு தான் நா பேசல மனோ"

"அப்ப டென்ஷன் ஆகுவேன்னு தெரிஞ்சே தான் நீங்க என்ட்ட சொல்லல ரைட்?"

"என்னடி நீ? யார் பேர்ல இருந்தா என்ன எல்லாம் உனக்கு தானே?"

"அதெப்டிங்க உங்க வீட்டபத்தி பேசும்போது மட்டும் உலக விவரமே இல்லாதவர் மாறி ஒரு பேச்சு பேசுறீங்க?" காட்டமாக தான் கேட்டாள்.

"புரியல மனோ! இப்ப ரெண்டு மாசமா தான் நாம சண்டை போடாம இருக்கோம், அத நானே சொல்லி கெடுத்துக்கணும்னு நினைக்கிறியா நீ? நா மறைக்கணும்னு நினைக்கல, அவங்க யார்ட்டயும் உனக்கு தெரியாதுன்னும் சொல்லல, என்னைக்குனாலும் அவங்க சொல்லி கூட நீ தெரிஞ்சுப்ப, அப்டி தெரியிறப்ப வந்து இப்படி சண்டையும் போடுவன்னு தெரிஞ்சும் தான் நா அமைதியா இருந்தேன். நீ என்னைய விட்டுகுடுக்காத மாதிரி தான் நானும் உன்ன எங்கையும் விட்டுகுடுக்கல, குடுக்கவும் மாட்டேன். சண்டை போடுற நீ?" என அவனும் பேச,

"சண்டை தான் போடுறேன். உங்க பேர்ல வாங்குற சொத்து மட்டும் தான் உங்க பிள்ளைங்களுக்கு வந்து சேரும். உங்க அம்மா பேர்ல வாங்குறது எல்லாம் நாளைக்கு பொதுவா தான் பிரிக்க முடியும்னு உங்களுக்கு தெரியாதில்லையா? உங்க அக்கா இத ப்ளான் பண்ணி தான் வாங்குற சொத்தெல்லாம் உங்கம்மா பேர்ல வாங்குறாங்கன்னும் உங்களுக்கு தெரியவே செய்யாது இல்ல? இதே என் பேர்ல வாங்கினா நா எங்க அப்பாவுக்கோ அண்ணனுக்கோ தார வார்த்துருவேன்னு பயம். என் மேல அவ்ளோ நம்பிக்கை. உங்க அக்கா, அம்மா, மாமாலாம் ஒன்னுந்தெரியாதவங்க, நா எங்கப்பா, என் அண்ணாலாம் கூடுதல் விவரம், சரியா? இதானே உங்க எண்ணம்?" என கேட்க,

"அடி அறிவாளி பொண்டாட்டி! நா இவ்ளோலாம் யோசிக்கவே இல்லடி, நீயா ஏதேதோ பேசுற" என்றவனுக்கு உண்மையில் 'அம்மா பெயரில் முடித்தால் அம்மா சந்தோஷபடுவாங்க, ஊருக்குள்ள மரியாதையா இருக்குமே' என நினைப்பில் செய்தது தான்.

"அப்புறம் ஏன் என்ட்ட மறைச்சு செஞ்சீங்க? டெலிவரி பார்த்து ஒரு மாசம் ஆகுமுன்ன இவ்ளோ வேகமா இத ஏன் முடிக்கணும்? குடும்பமா என்னைய ஒதுக்கி வச்சுட்டு ஏன் செஞ்சீங்க? மத்த எல்லாத்துக்கும் நா அந்த வீட்டு மருமக, நாந்தான் எல்லாம் செய்யணும், இன்னும் சின்ன பிள்ள இல்ல, பொறுப்பா என் இடத்துல நின்னு செய்யின்னு, எவ்ளோ பேசுவீங்க, இப்ப ஏன் இத என்ட்ட கேட்டு செய்யல?" என பேச, விழி பிதுங்கியது அவனுக்கு.

"வீடியோ கால் வா மனோ!"

"மாட்டேன். இப்படியே பேசுங்க. என் முகத்த பார்த்து நா நினைக்குறத கண்டுட்டு அதுக்கு தக்கன அட்ஜஸ்ட் பண்ணி பேசுற பேச்சே வேணாம். நீங்க உங்களுக்கு மனசுல தோனுறத சொல்லுங்க, நானும் உங்க நெனப்பு என்னனு நல்லா தெரிஞ்சுக்குறேன்"

"ரொம்ப பண்ணாத மனோ"

"என்ட்ட ஏன் கேட்காம செஞ்சீங்க?"

"இனி கேக்குறேன்டி. சத்தியமா நா இவ்ளோலாம் யோசிக்கல. உன் அளவுக்குலாம் யோசிக்கவும் தெரியாது. என்னய அடிக்கடி அலைக்கலிக்காம அவங்கள வச்சே வேலை எல்லாம் ஈசியா முடிஞ்சா நல்லது தானேன்னு மட்டுந்தான் நினைச்சேன். அதுக்கு பின்ன இதெல்லாம் யோசிக்கணும்னே இப்ப நீ சொல்லித்தான் எனக்கு தெரியுது. இனி கவனமா இருக்கேன். உன்ட்ட சொல்லாம எதையும் இனி செய்ய மாட்டேன்டி போதுமா"

"நல்லா நடிக்றீங்க. இங்க இருக்கவங்க எல்லாம் அவ்ளோ தொந்தரவாவா தெரியிறோம்? உங்களுக்கா தோணுற நேரம் மட்டும் வரணும், நாங்க கூப்பிடுற நேரம்லாம் வர கூடாதுன்றதுக்காக கஷ்டப்பட்டு சம்பாதிக்குற காச கூட இப்படி கொண்டு கொட்டுவீங்களோ?"

"ஹே! என்ன பேசுற நீ? எங்கம்மா பேர்ல எழுதினா குப்பைல கொண்டு கொட்டுன மாதிரி பேசுற? அவ்ளோ கேவலமா தெரியிறாங்களா அவங்க?" என்றவனுக்கும் கோவம் மூண்டது.

"ஏமாத்தி பிடுங்கினா அப்படித்தான் சொல்லுவேன் நானும்"

"என்னைய பார்த்தா அவ்ளோ லூசா தெரியுதா உனக்கு? இப்ப என்னடி? குடுக்குறத இருந்தாலும் என் அக்காக்கு தானே குடுக்கிறேன், நாந்தான் அவளுக்கு செய்யணும். இப்ப மட்டுமா இனியும் செய்யத்தான் போறேன், ஒன்னொன்னுக்கும் இப்படித்தான் பேசுவியா நீ?"

"செய்றது வேற, நைசா பேசி வாங்கிக்குறது வேற, உங்க அக்கா ரெண்டாவது ரகம், அப்போ என்ட்ட சொல்லிட்டு செய்ங்கன்னு கன்ட்ரோல் பண்ணதான் செய்வேன். நமக்கும் இப்ப ரெண்டு பசங்க இருக்காங்க, நா அவங்களத்தான் யோசிப்பேன்" என மூச்சுவாங்க பேச,

"ம்கூம் இது பேச பேச வளரும். எனக்கு உன்ன, நம்ம பிள்ளைங்கள, என் அம்மா, அப்பாவ, என் அக்காவ, அக்கா பிள்ளைங்களன்னு எல்லாரையும் பார்த்துக்க தெரியும். பார்த்துக்க முடியும். நாம ஒன்னும் காசில்லாம கஷ்டத்துல இல்ல, சொத்து சுகத்தோட நல்லாதான் இருக்கோம். உன்னையும் பிள்ளைங்களையும் அப்படி ஒன்னும் வெறுங்கையோட நிறுத்திட மாட்டேன். என்ன நம்புறதா இருந்தா இந்த பேச்ச இத்தோட விட்று. இந்த இடம் அவங்க பேர்ல வாங்கினா என்ன, அடுத்தத உன் பேர்ல தான் வாங்குவேன், இனி உனக்கு தெரியாம எதையும் செய்யல போதுமா, டென்ஷன் குறையவும் பேசு, நா வைக்கிறேன்" என பிரச்சனையை முடிக்கப் பார்த்தான்.

"என் பேர்ல இடம் வாங்குவீங்கன்னு தான் நா இவ்ளோ நேரமும் பேசுனனா?" என்றாள் அவள் அடுத்தாக,

"அடியே இல்லடி. உனக்கும் வாங்கிடுவோம்னு நானா தான் சொல்றேன். இப்படி எல்லாத்துக்கும் தப்பர்த்தம் எடுத்தா வாழவே முடியாது மனோ"

"அடுத்து எப்ப வருவீங்க?"

"இப்பதான்டி வந்துருக்கேன், இனி அடுத்து லீவ் கிடைச்சா தான் வரமுடியும்"

"கஷ்ட ஜீவனம் இல்ல. நிலம், சொந்த வீடுன்னு எல்லாம் இருக்கு. இதோ தனி சொத்தும் வாங்கிட்டீங்க. அக்காக்கும் கல்யாணம் முடிஞ்சது. வேற பொறுப்பும் இல்ல. அப்புறமும் ஏன் தனியா வெளிநாட்டுல தான் இருப்பேன்னு அடம்பிடிக்கிறீங்க?"

"மறுபடியும் முதல்ல இருந்து வர்றடி நீ? அங்க வந்துரு வந்துருனா வந்தா மட்டும் சண்டை போடாம இருந்துருவியா நீ? எதுக்கெடுத்தாலும் அக்காக்கு ஏன் செய்றீங்க, அம்மாக்கு ஏன் குடுக்குறீங்க? மாமா வீட்டுக்கு ஏன் செய்றீங்கன்னு நொய் நொய்யின்னு தான் நச்சரிக்க போற? எத்தனவாட்டி சொல்றது, அம்மா மாமாலாம் இன்னைக்கும் அக்கா தம்பின்னு ஒரே குடும்பமா பாசமா இருக்காங்க, நாங்களும் அப்படித்தான் வளர்ந்துருக்கோம். என் அக்காவும் நானும் கூட அப்படித்தான் இருக்க நினைக்கிறோம், சொல்ல சொல்ல புரியாம திரும்ப திரும்ப அதையே பேசுற. அதான் என் அக்காவும் எங்க நீ அவங்களட்ட இருந்து என்ன பிரிச்சிடுவியோன்னு பயந்து அவ இஷ்டத்துக்கு எதையாவது உளறி கொட்டுறா. இவ்ளோ தள்ளி இருக்கும்போதே மனுஷன வச்சு செய்றீங்க, அங்கயே இருந்தா முழு பைத்தியம் ஆக்கிட மாட்டீங்க?" என வெடித்துவிட்டான்.

"எல்லாமே ப்ளான் தான்ல?"

"ஆமா ப்ளான் பண்ணி உன்ன ஏமாத்தி ஏரோபிளைன் வாங்கி மொட்டமாடில நிறுத்த போறேன்" என பல்லை கடிக்க,

"எப்படியோ ஏமாந்து நாசமா போங்க, எனக்கென்ன, இங்க வந்தா எங்கூட இருந்தா பைத்தியம் ஆகிடுவீங்களோ? அப்ப அங்கேயே இருந்துக்கோங்க இனி வரவே வேணாம்"

"வரவே மாட்டேன்டி. வை ஃபோன" என வைத்தும்விட்டான். அதன் பின் அவனும் அழைக்கவில்லை அவளும் அழைக்கவில்லை. கண்ணனுக்கு பிறந்தநாள் என அழைத்தான் இவள் எடுக்கவில்லை, முதல் மொட்டை அடிக்க வேண்டும் என சொல்ல அவள் அழைத்தாள்(வீட்டினர் பிடிபிடி என பிடித்ததாலேயே அழைத்தாள்), அதற்கு அவன் எடுக்கவில்லை. இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியிருந்தது, அடுத்ததாக வந்த மாதத்தில் அவன் அப்பாவிற்கு அதிகமாக உடம்பு சரியில்லாமல் சென்றிருக்க, இவளை சென்று அம்மாவிற்கு உதவியாக இருந்து பார்த்துக்கொள்ள சொல்லி அவன் அழைத்தபோது இவள் அழைப்பை ஏற்கவும் இல்லை, ஞானத்திடம் சொல்லியும் மனோ கேட்டுக்கொள்ளவில்லை, அதில் முழுதாக முறுக்கிக்கொண்டான் அவன். அதுவரை மாதம் பிறந்ததும் இவர்கள் செலவுக்கென்று ஒரு தொகை சரியாக வந்துவிழுந்துவிடும், ஆனால் அவன் அப்பாவை கூட சென்று பார்க்கவில்லை என்ற கடுப்பில் அவன் அவளை பேச வைக்க ரூபாய் அனுப்பாமல் விட்டான்.

"ரெண்டு சேட்டைகார பிள்ளைகள வச்சுட்டா அங்க போய் நா என்னத்த உதவ முடியும்பா" என்றாள், அதை புரிந்துகொள்ள யாரும் முயலவில்லை, அனைவரும் அவளை தான் வில்லிபோல பேச அவளும் முறுக்கிக் கொண்டாள். அவன் அனுப்பாவிட்டால் வாழவே முடியாதா என்ற முடிவில் தான் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும்.

அதன்பின் இதோ இன்று தான் அருகருகே அமர்ந்திருக்கின்றனர், ஆண் என்பதால் அவளை நேரில் பார்த்ததும் அனைத்தையும் மறந்துவிட்டு, இலகுவாக பேச அமர்ந்துவிட்டான் கணவன், பெண்ணவளுக்கு இப்போதும் வரிசையாக அனைத்தும் கண்முன் ஓடிக்கொண்டிருக்க, சிறிதும் இரக்கமின்றி அமர்ந்திருக்கிறாள்.

"மனோ! என்னடி யோசனை? அடுத்து எத சொல்லி சண்டைய ஆரம்பிக்கலாம்னா?" என சமாதானம் பண்ணும் முயற்சியில் அவனே ஆரம்பிக்க,

"புதுசா ஆரம்பிக்கலாம் வேணாம்? பழசையே நாம இன்னும் முடிச்சுக்கல. லாஸ்டா என்ன சொல்லிட்டு ஃபோன வச்சீங்கன்னு ஞாபகம் இருக்கா?"

"சத்தியமா இல்லடி. மறுபடியும் அதுலாம் வேணாம் மனோ! பேசவே தெரியாத அந்த முதல் மனோவ அடிக்கடி தேட வைக்கிற நீ"

"பேச்ச டைவர்ட் பண்றீங்களா?"

"இல்ல சொல்லு, பழச பேசினா சண்டையாகுமேன்னு தான் வேணானு சொன்னேன்" என உடனே சரண்டரானான்.
 

"அதெப்டி பேசுனதெல்லாம் வேணாம்னு விட முடியும்? உன்னையும் பிள்ளைங்களயும் கையேந்தி நிக்க விட்ற மாட்டேன், நம்புனா நம்பு நம்பாட்டி போன்னு பேசுனீங்க தான? லாஸ்ட் ஒரு வருஷமா என்ன செஞ்சீங்க?"

"நீயா பேசணும்னு தான் அனுப்பல. இங்க பாரு, உங்களுக்குன்னு ஒதுக்கி வச்சது இதோ தனி அக்கௌண்ட்ல அப்படியே கடக்கு, மொத்தமா இப்ப அனுப்பிட்டேன் பாத்துக்கோ" என அந்நொடியே மொத்த தொகையையும் அனுப்பிவிட்டான். ஒரு வருட கணக்கையும் தீர்த்துவிட்ட நிம்மதி அவனுக்கு.

அதில் அவன் கையிலிருந்த ஃபோனை வாங்கி விட்டெறிந்திருந்தாள்.

"ஏய் லூசு! என்னடி பண்ற?" என வேகமாக அதை எடுத்து அவன் சரி பார்க்க,

"அன்னைக்கும் உன் பேர்ல இடம் தான கேட்குறன்னு அசிங்கபடுத்துனீங்க, இன்னைக்கும் காசு தான கேட்குறன்னு விட்டெறியிறீங்க? அவ்ளோ சீப்பா தெரியிறேனா நான்? என்னைய பார்த்தா காசுக்கு அலையிறவ மாதிரி இருக்கா உங்களுக்கு?" என தொண்டியிலிருந்து கத்தி தான் கேட்டாள். 'என்னை புரியவே செய்யாதா இவனுக்கு!' என்ற ஆவேசத்தை அடக்கிய குரலில் தான் கேட்டாள்.

"அப்படியே அறைஞ்சுடுவேன்டி, எல்லாத்தையும் குதர்க்கமாவே எடுத்து பேசிட்ருக்க நீ" என அவனும் எரிச்சல் பட,

"போடா, போ என் முன்னால நிக்காத போ. உன்ன பாக்கவே பிடிக்கல எனக்கு. எத்தன ஜென்மம் எடுத்தாலும் உனக்குலாம் என்னைய புரியவே செய்யாது. தயவுசெஞ்சு நின்னு என்னைய சாகடிக்காம போ" என அவனை நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டவள், அழுகையை அடக்கிக்கொண்டு மண்டியிட்டு மடிந்தமர்ந்துவிட்டாள்.



 
Top