அத்தியாயம் 1
மாடியில் நின்று கொண்டு, பால்கனி வழியாகப், பகலவனைக் கண்களால் பருகி கண் கொண்டு , காஃபியை வயிற்றுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள் முக்தா.
விரைவாகவே துயில் கலைந்து எழுந்து விடுபவள் தான்.
இரவு உடையை மாற்றும் நினைவு இன்றி , காஃபியின் மணமும், சுவையும் அவளைப் பிடித்து வைத்துக் கொண்டது.
"முகி!" என்ற தந்தையின் அழைப்பில், தலையைத் திரும்பினாள் அவர்புறம்.
"குட்மார்னிங்! இன்னைக்கு சீக்கிரம் போகனும் டா" என்று கனிவுடன் மகளிடம் கூறினார் நீலகண்டன்.
"ஏன் அப்பா?" என்றாள் அவரது செல்ல மகள்.
"மூர்த்தி தான் வர சொல்லி இருக்கான். போனா தான் தெரியும். நீ ஃப்ரெஷ் ஆகிடு" என்று கூறினார் தந்தை.
"ம்ம்! சரிங்க ப்பா"
"மறக்காமல் லன்ச் சாப்பிட்ருங்க! நான் கொடுத்து விட சொல்றேன்" என்கவும்,
"இல்லைடா. ஹோட்டலில் அரேன்ட்ஜ் செய்து இருக்கிறதா மூர்த்தி சொல்லி இருக்கான். நான் அவன் கூட தான் மதியம் சாப்பிடப் போறேன்" எனக் கூற,
"சாப்பிட்டுட்டு மெசேஜ் செய்திடுங்க அப்பா" என்று மட்டும் கூறி தந்தையை வழி அனுப்பினாள் முக்தா.
காலியானக் கோப்பையைக் கழுவப் போட்டவள், துவாலையை எடுத்துக் கொண்டு, குளித்து விட்டு வந்தாள்.
வேலையாட்களிடம் அதிகம் பேச மாட்டாள், அவர்கள் தங்களது வேலையைச் சரியாகச் செய்தாலே போதும் என்று உத்தரவிட்டு இருந்தாள் முக்தா.
காலையுணவு மேஜையில் தயாராகி இருக்க , நாளிதழைப் புரட்டிக் கொண்டு அதைக் கொறித்து முடித்தாள்.
மஸ்காராவைக் கொண்டு கண்களின் இமைகளை அழகாக தீட்டி முடித்தவள், அணிந்திருக்கும் உடையை ஆராய்ந்தாள்.
ஜீன்ஸூம் , டீ ஷர்ட்டும் அவளது உடலை மறைத்திருக்க, அதற்கேற்றாற் போல், அணிகலன்கள் அலங்கரித்திருந்தது அவளை.
பிங்க் வர்ண உதட்டுச் சாயத்தின் அளவைக் கொஞ்சம் தூக்கலாக்கிக் கொண்டு, வீட்டிலிருந்து காரில் கிளம்பினாள் முக்தா.
தோழிமார்களுடன் நேரத்தைச் செலவழிக்கத் தான் பயணித்துக் கொண்டிருந்தாள்.
உணவகம் ஒன்றில் குழுமியிருந்த நான்கு பெண்களும், ஐந்தாமவளுக்காகக் காத்திருந்தார்கள்.
"ஹேய்! முகியோட அப்பா நீலகண்டன் இருக்காருல்ல? அவரோட ஃப்ரண்ட் பையன் மஹதனைத் தான் அவ லவ் பண்ணிட்டு இருக்கிறா!" என்று லிஷா என்பவள் கூறிக் கொண்டு இருந்தாள்.
"மஹதனா? நானும் அவனைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்" என்றாள் ஜியா.
"ஆனால், அவன் இவளைக் கண்டுக்கிறா மாதிரியே தெரியலை" என்று கூறினாள் ஹீமா.
"அதையும் சொல்லியாச்சு. அவ கேட்கிறாகவே இல்லை. கேட்டால், லவ்!" என்று சலித்துக் கொண்டாள் ஷீலா.
இப்படியாக, நான்கு பேரும் பிரித்து மேய்ந்து கொண்டிருந்த தோழியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
"என் கதை தான ஓடுது?" என்றபடி தன்னுடைய குளிர் கண்ணாடியைக் கழட்டி விட்டு, நாற்காலியில் அமர்ந்தாள் முக்தா.
"ஆமாம். எங்களுக்குப் பொய் சொல்ல அவசியமில்லை முகி!" என்று துடுக்காக கூறினாள் ஹீமா.
"அப்படியா? எனக்கும் உங்களோட அட்வைஸைக் கேட்கனும்னு எந்த கட்டாயமும் இல்லையே!" என்று அவள் பாணியிலேயே திருப்பிக் கொடுத்தாள்.
"இது ஒன்னும் பெருமை கிடையாது முகி!" என்று அவளைக் கடிந்து பேசினாள் லிஷா.
"உஃப்! ப்ளீஸ்! நான் ஹேப்பியா இருக்கலாம்னு வந்தால், வரிசையாக அட்வைஸைத் திணிக்கிறீங்களே!" என்று ஆற்றாமையுடன் கூறினாள் முக்தா.
"நாங்க சொல்றதை சொல்லிட்டோம் முகி! இதுக்கும் மேல் நீ ட்ரை பண்றது வேஸ்ட்!" என்று அடித்துச் சொன்னாள் ஜியா.
"அப்படியே இருந்துட்டுப் போகட்டும். இன்னொரு தடவை அசிங்கப்படுத்துற மாதிரி பேசினால், நம்ம ஃப்ரண்ட்ஷிப் கட் ஆயிடும். பாத்துக்கோங்க!" என்ற முடிவுடன் அவள் கூறி விடவும்,
"என்னமோ போ முகி. நாங்க சொல்றது இப்போ புரியாது. பட்டுத் தெரிஞ்சுக்கோ!" என்றவாறே பேச்சை மாற்றி விட்டனர் மற்ற நால்வரும்.
அதற்குப் பிறகு, தங்களுக்கான உணவுகளை வரவழைத்து உண்டனர்.
"அப்படி மஹதன் உன்னை ஹர்ட் பண்ணினால், தயங்காமல் எங்ககிட்ட வந்து பேசு முகி! ஈகோ பார்த்துட்டு வராமல் இருந்துடாத!" என்று அறிவுரை வழங்கினர் அவளது தோழிகள்.
"அப்படி சொன்னால் மட்டும், மனசுக் கஷ்டப்படுறா மாதிரி தான பேசுவீங்க!" என்று ஏளனமாக கேட்டாள் முக்தா.
"நாங்க அந்த அளவுக்குக் கேவலமானவங்க இல்லை. இப்போ நீ தான் எங்களைக் கஷ்டப்படுத்திட்டே. இனிமேல் நாம் மீட் பண்ண வேண்டாம்" என்று காயம்பட்டவர்கள் அங்கிருக்கவும், அவளிடம் நின்று பேசவும் பிடிக்காமல் வெளியேறினர்.
தன்னுடைய நான்கு தோழிகளும் பாதியிலேயே கிளம்பி விட்டதைக் கண்டு, தொய்ந்து போனாள் முக்தா.
அவளுக்குள் இருந்த இறுமாப்பு நால்வரையும் தடுத்து நிறுத்த விடவில்லை.
அமைதியாக வீட்டிற்குச் சென்று, தந்தைக்குத் தான் செல்பேசியில் அழைப்பு விடுத்தாள்.
"முகி" என்ற தந்தையின் விளிப்பைக் கேட்டதும், எங்கிருந்து தான் புத்துணர்வு வந்ததோ!
"அப்பா! ஆஃபீஸில் இருக்கீங்களா?" என்று வினவினாள் முக்தா.
"ஆமா டா. என்ன விஷயம்?"
"வொர்க் முடிஞ்சு எப்போ வீட்டுக்கு வருவீங்கப்பா?" என்றாள் மகள்.
"வர நைட் ஆகுமே. ஈவ்னிங் மூர்த்தியைப் பார்த்துப் பேசனும்" என்று கூறினார் நீலகண்டன்.
"ஓகே ப்பா" என்றவள், தந்தையிடம் எதுவும் சொல்லாமல், சாதாரணமாகப் பேசி விட்டு வைத்தாள் முக்தா.
தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, சமையலறைக்குள் போய், அங்கிருந்த வேலையாட்களிடம்,
"எல்லாரும் வெளியே போங்க. நான் காஃபி போடனும்" என்று உத்தரவிட்டாள்.
இந்த வீட்டில் இதெல்லாம் பழக்கம் தான். முக்தா தன் மனதை நிலைப்படுத்திக் கொள்ளச் செய்யும் ஒரு சில வேலைகளில் இதுவும் ஒன்று.
அவளுக்குச் சமையல் நன்றாகவே வரும். மேற்கத்திய உணவுகள் மட்டுமில்லாமல், இந்திய உணவுகளும் அத்துப்படி.
காபியைப் பருகிக் கொண்டவள், மஹதனுக்குச் செல்பேசியில் அழைத்தாள்.ஆனால், வழக்கம் போல, அவன் அதை ஏற்றுப் பேசவில்லை.
முக்தாவின் தோழிகள் சரியான சமயத்தில் தான் அவளுக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அதைப் பின்பற்றுவது அவளுடைய தனிப்பட்ட விருப்பம் அல்லவா! இப்போதே அவர்கள் கூறியதைச் செவிமடுத்து இருந்தால், எதிர்காலத்தில் படப் போகும் அவமானங்களில் இருந்து , முக்தா தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.
தாயின் வளர்ப்பு இல்லை தான்! தந்தையும் சுதந்திரத்தை அளவுக்கதிகமாக கொடுத்திருக்கிறார் தான். ஆனாலும், தனக்குரிய கட்டுப்பாடுகள் என சிலதை வகுத்துக் கொண்டுள்ளாள்.
'ஸ்டேட்டஸ்' - பணம் பிரதானமாக இருக்கும் பட்சத்தில், நமக்குத் தான் மற்றவர்கள் வளைந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் வேரூன்றி இருந்தது.
அதனால், மற்றவரிடம் பேசக் கூடாத ஒரு சிலவற்றைப் பேசிக் காயப்படுத்தி விடுவாள் முக்தா.
இந்தக் குணங்கள் நல்லது என ஒருநாளும் சொல்லவில்லை.
மாற்றிக் கொள்ளும் தருணம் கட்டாயம் வர வேண்டும். அப்படி வரும் போது, என்று சில ஞானோதயங்களும் முக்தாவிற்கு அவள் கேட்காமலேயே கிடைக்கப்படும்.
அன்றைய சமூக வலைதளங்களை ஆராய்ந்தவாறே பொழுதைக் கழித்தாள் முக்தா.
இந்தக் கதையின் நாயகன் கிஷான் அல்லவா! அவனுடைய அறிமுகத்தைப் பற்றிப் பார்ப்போம்.
கிஷானுடைய தந்தை காஞ்சியப்பன் மஹதனின் அப்பா திருமூர்த்தியைப் போல வசதி படைத்தவர் தான்.
ஆனாலும் , தொழிலில் அபார வளர்ச்சி அடைந்த போதும் , அதற்கேற்ப குணத்தை மாற்றிக் கொள்ளாமல் , முன்னர் இருந்த அதே நிலையிலேயே இன்றும் அவரது துறையில் வெற்றிகரமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.
அவரது துணைவி சித்ரலேகாவும் கணவனின் தொழிலிலும் , மகனின் தொழிலிலும் பங்குதாரராக இருக்கிறார்.
"நீயும், நானும் பார்ட்னர்ஸ்ன்னு தான் பேரு. ஆனா, நான் மட்டும் தான், ரெகுலராக இந்த ஹோட்டலுக்கு வந்துட்டு இருக்கேன்!" என்று குறைபாட்டான் கிஷான்.
"அதனால் என்னடா? நானும் வரனும்னா சொல்லு! தினமும் வந்துடறேன்" என்று நண்பனிடம் கூறினான் மஹதன்.
"தினமும் வர வேண்டாம். எப்போதாவது வரலாமே டா? அப்படியே என்கூட பேசிட்டுப் போன மாதிரியும் இருக்குமே!"
"ம்ம். இது ஓகே. வாரத்துக்கு ஒரு தடவை வர்றேன் கிஷான். அதுக்கு மேல வர சொல்லாத. புரிஞ்சுக்கோ" என்க,
"சரி மஹத்! நீ வந்து ஹோட்டலைச் சரி பார்த்துட்டுத் போயிடு. எனக்கும் திருப்தியாக இருக்கும்"
தங்கும் விடுதி ஒன்றில் இருவரும் பங்குதாரர்கள் தான்.
அதில், கிஷான் மட்டும் நாள் தவறாமல், விடுதிக்கு வந்து, தனது முதலாளித்துவத்தைக் காட்டிக் கொள்வான். நேர்மையாகத் தான் ஒவ்வொன்றையும் அவன் நடத்துவதால், இன்னொரு உரிமையாளனான மஹதனுக்கு அதிக வேலையே இருக்காது. அதனால், விடுதியை எட்டிக் கூடப் பார்க்காமல் இருக்கிறான்.
அவன் அப்படியே இருந்து விடுவது முறையன்று, என அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டுச் செல்லுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறான் கிஷான்.
"உங்கிட்ட இன்னொரு விஷயமும் பேசனும்டா!" எனவும்,
"சொல்லு மஹத்?" என்று அதைக் கேட்கத் தயாரானான் தோழன்.
"நீலகண்டன் சாரோட பொண்ணு முக்தாவை உனக்குத் தெரியும் தான?" என்று கேட்டான்.
"ம்ஹ்ம்! தெரியுமே! அவங்களைப் பத்தி நீயே சொல்லி இருக்கியே! அவரே எனக்கு இன்ட்ரோ பண்ணிருக்காரே!" என்றான் கிஷான்.
"அந்தப் பொண்ணுக்கு என் மேல் லவ் இன்ட்ரெஸ்ட்!" எனக் கூறவும்,
"உனக்கு ஓகேன்னா அக்சப்ட் பண்ணு" என்று இயல்பாக கூறினான்.
"இல்லையே டா. அங்கிளோட பொண்ணு, ஃப்ரண்ட்ஷிப் மெயின்டெய்ன் பண்றதுக்கு எனக்கு இஷ்டம் தான். காதல்ன்னு யோசிக்கலையே" என்று தன் எண்ணத்தைக் கூறி விட்டான் மஹதன்.
"அதை அவங்ககிட்ட சொல்லிட்டியா?"
"எப்பவோ சொல்லிட்டேன். மாறுவ, என் மேல் லவ் வரும்னு வெயிட் பண்றாங்க"
"ஓஹ்! நீயும் மாறிடும் போலவே?" எனக் கேட்கவும் மறக்கவில்லை கிஷான்.
"என்ன மாறனும்? அவங்க புரபோஸ் செய்ததை, நான் குறை சொல்லலை. எனக்கும் இஷ்டம் இல்லை. அப்பறமும் காத்திருக்கிற அளவுக்கு நான் அவ்ளோ பெரிய அழகன் கிடையாதே!"
"நீ அழகன்னுப் பார்த்து தான் அவங்க லவ் பண்ணாங்கன்னு உன்கிட்ட சொன்னாங்களா? சம்திங் உன்னோட கேரக்டர் பிடிச்சு இருக்கலாம். அதனால் லவ் வந்திருக்கலாம்!" என்று புரிய வைத்தான் கிஷான்.
"கண்டிப்பாக இருக்கும். நான் அதை மறுக்கலைடா. இப்போ டைரக்ட் ஆக சொன்ன பிறகும், எதிர்காலத்தில் நடக்கும்னு, காத்திருக்கிறது முட்டாள்தனம் தான?" என்று வினவினான் மஹதன்.
"ஆமாம். நீ நம்பிக்கை கொடுக்காமல், இப்படி வெளிப்படையாகச் சொன்னதே போதும். நீ அவங்களை ஏமாத்தலை. முக்தாவும் புரிஞ்சு, தன்னை மாத்திக்கட்டும்"
தங்கும் விடுதியில் செய்ய வேண்டிய எதிர்காலத் திட்டங்களைச் பற்றி விரிவாகப் பேசி விட்டுக் கிளம்பினர் இருவரும்.
- தொடரும்