எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 25

வான்மழை‌ 25;

காலை ஐந்து மணியளவில் அடித்த அலாரத்தை நிறுத்திய வருணாவிடம் அப்போதே விசேச பரபரப்பு வந்து ஒட்டிக் கொண்டது. அருகில் உறங்கும் முத்துப்பேச்சியின் உறக்கம் கலையாதவாறு எழுந்தவள் குளிக்க சென்றிருந்தாள். தூரத்து சொந்தங்கள் இரண்டு, மூன்று பேர் நேற்று இரவே வந்திருக்க, அவர்களை மல்லிகா தன்னோடு உறங்க அழைத்துக் கொண்டார்.

குருசாமி, மகாலிங்கம் இன்னும் பிற ஆண்கள் கிருஷ்ணாவின் அறையை எடுத்துக் கொண்டனர்.‌ நேற்றைய இரவு அவளது கணவனும், தமையனும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். இடையில் எங்கே வேறு சென்றிருந்தார்கள் வெகு நேரமாகியும்‌ வரவில்லை.

இவள் அழைத்ததற்கு கூட வர தாமதமாகும் என மட்டும் கூறியிருந்தான்.

அதற்கு மேல் விழித்திருக்க முடியாது, மாமியாரை தன்னுடன் அழைத்துக் கொண்டிருந்தாள். குளித்து முடித்து நைட்டியில் வந்தவள், விளக்கை‌ போட்டால், பேச்சியின் உறக்கம் கேட்டுவிடும் என, சேலையை எடுத்துக் கொண்டவள் கீழே சென்றிருந்தாள்.

தாயின் அறைக்கு செல்வதற்காக வந்தவள், கண்டது அங்கே ஹாலில் படுக்கையை போட்டு ஒரு ஓரமாய் கணவனும், தமையனும் படுத்திருப்பதை தான்.

“நைட் எப்போ வந்தாங்கன்னு தெரியலையே?” என்றவாறு அவர்கள் பக்கம் சென்றாள், இருவரையும் கடந்து தான் மல்லிகாவின் அறைக்கு செல்ல வேண்டும். வீடு மிதமான இருளில் மூழ்கியிருந்தது.

சுவரை ஒட்டி கிருஷ்ணா படுத்திருக்க, பாதையின் பக்கத்தில், முகிலன் படுத்திருத்தான். அவனை கடந்து செல்ல முயன்றவளுக்கு முடியாமல் போக, திரும்பி கணவனை பார்க்க, நல்ல தூக்கத்தில் தெரிந்தான். முகத்தில் நல்ல களைப்பு தெரிந்தது.

அவனை விட்டு தள்ளியிருந்த போர்வையை, எடுத்து போர்த்தி விட்டவள், கணவனும் தமையனும் உறங்குவதால் ஹால் விளக்கை போடாது, இருட்டிற்கு கண்களை பழக விட்டு, பின் சென்றாள்.

இவள்‌ சென்ற நேரம், மல்லிகாவும் குளித்திருக்க, இருவரும் புடவையை வேகமாய் கட்டி முடித்த நேரம், வந்திருந்த உறவுகள் அனைத்தும் ஒவ்வொருவராய் விழிக்க ஆரம்பித்திருந்தனர்.

எழுந்தவர்களுக்கு, பேஸ்ட்டு , காபி, சுடுதண்ணி, துடைக்க துண்டு, சீப்பு, பவுடர் என அனைத்தையும் எடுத்து கொடுத்தவாறு ஹாலிற்கும், மல்லிகாவின் அறைக்குமாய் நடந்து கொண்டிருந்தவள், மறந்தும் விளக்கை மட்டும் போடவில்லை. இதற்கிடையே கெளரிக்கும் அழைத்துப் பேசியிருந்தாள்.

முத்துப்பேச்சி எழுந்திருந்திருக்க, அவருக்கு தேவையானதை செய்துவிட்டு வர, ஆண்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக விழிக்க ஆரம்பிக்க, அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை அனைத்தும் எடுத்துக் கொடுக்கப்பட்டது. நடமாடும் டிபன் சென்டர் போல் அலைந்துக் கொண்டிருந்தாள் வருணா. இத்தனை நடந்தும் ஹாலில் உள்ள விளக்கை மட்டும் போடவில்லை அவள், வந்த உறவினரில் ஒருவர் கூறியும், லேசாக ஒளி வரும் விடிபல்ப்பை மட்டுமே ஒளிரவிட்டிருந்தாள்.

கணவனை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், கண்கள் அவனை மொய்க்க, கைகள் அவனிற்கான வேலையை செய்தன.

மின்விசிறியில் வேகத்தை அதிகப்படுத்தி வைக்க, படுக்கையை விட்டு தள்ளி வந்திருந்த அவனை மீண்டும் லேசாக உருட்டி விட, லேசாக விலகி இருந்த அவனது சட்டையை சரி செய்ய, அறையில் போட்டிருந்த விளக்கின் வெளிச்சம் அவன் முகத்தில் படாதவாறு, கதவை சாற்றி வைக்க என அவனை சுற்றியே அவளது பார்வையும், கைகளும் சுழன்றுக் கொண்டிருந்தன.

உறவினர்களில் பேச்சு சத்தத்தில் கிருஷ்ணா கூட உருண்டு, புரண்டு எழுந்து விட்டான். அடுத்து அவனிற்கு உண்டானதை கொடுத்துவிட்டு திரும்பியவள், கணவன் தலையணையை விட்டு நகர்ந்து படுத்திருக்க, அதனை சரி செய்யும் பொருட்டு, அவனருகே குனிந்து சரிசெய்ய முயல,

“அந்த லைட்டைத்தான் போடேன்டி, இப்புடியே கண்ணுத் தெரியாம எவ்வளோ நேரம் வேலை பார்ப்ப.” என முணுமுணுத்தவாறு அவன் திரும்பி படுக்க,

“எந்திரிச்சுட்டீங்களா?”

“ஆமா, இப்புடி பூனைக்குட்டியாட்டாம் என்னை உரசிட்டே போனா, எந்திரிக்க மாட்டாங்களா? மனுசனை நிம்மதியா தூங்க விடுறியாடி நீயி? கண்ணு மொத்தத்தையும் என் மேல் தான் வச்சிருக்க.” என அவன்‌ முணங்க,

“அசந்து தூங்குறீங்களே, தூக்கம் கெடக் கூடாதுன்னு, பாவமேன்னு பார்த்து செஞ்சா, தேவைதான் எனக்கு. அப்புடி உரசி உரசியே உங்க உடம்புல இருந்த தங்கம் எல்லாம் உருகி ஓடுதுப் பாருங்க.”

“உன் பாவத்தை தூக்கி போடு. அந்தப்பக்கம், இந்தப் பக்கம்னு நகர்வலம் போயி மனுஷனை எழுப்பி விட்டுட்டு, பேச்சைப் பாரு.” என,

அவன் பேச்சில் இவளிற்கு கடுப்பாக, சுற்றும் முற்றும் பார்த்தவள், படுத்திருந்தவனின் இடுப்பில் வலிக்க கிள்ளி வைத்து, எழுந்து ஓடியிருந்தாள்.

“ஆ…” முதலில் அலறியவன், அடுத்து அவன் கையை வைத்தே, அவன் வாயை மூடி சத்தம் வெளிவராமல் செய்திருந்தான். கத்தியிருந்தால் அவன் மானம் கப்பலேறி இருக்குமல்லவா?

வலித்த இடத்தை தேய்த்துக் கொண்டவன், மனைவியின் மேல் கடுப்பில் இருந்தான். பின்னே அவன் சுதாரித்து வாயை மூடியிருக்க விட்டால், கத்தியிருப்பானே! இவன் சத்தம் கேட்டு அனைவரும் வந்திருந்தால், என்ன ஆகியிருக்கும்!. அதற்கு மேல் உறங்க முடியாமல் எழுந்திருந்தான்.

“மாப்பிள்ளை, மேல வருணா ரூம்ல போய் ரெடியாகிக்கோங்க.” குருசாமி கூற, மேலே சென்றிருந்தான்.

அவன் குளித்து முடித்து தயாராகும் வரையிலும், மனைவி அவன் கண்முண் வரவில்லை. அந்த கடுப்பும் சேர்ந்தே இருந்தது.

இங்கே, மல்லிகாவின் கண்ணிலும் படாமல் வேலை இருப்பது போல் சுற்றிக் கொண்டிருந்தாள் வருணா. பின் மல்லிகா, கண்டால் அவளை‌ கணவனிடம் அல்லவா அனுப்பி விடுவார்.‌

ஒரு தைரியத்தில் கிள்ளி வைத்து விட்டால், அந்த கடுப்பில் கணவன் இருப்பான் என‌ தெரியாதா? அவளிற்கு. இப்போது சென்றால் தலையை கொட்டியே ஓட்டை‌ செய்து விடுவானே?

“வருணா, தம்பிக்கு டீ கொண்டு போம்மா.” மல்லிகாவிடம் தப்பித்தவள், தந்தையிடம் மாட்டிக் கொண்டாள்.

“சரிப்பா!” என்றவள் வேறு யாரிடமாவது கொடுக்கலாமா? என‌ யோசிக்கும் போதே,

“சீக்கிரம் வருணா, நேரமாகிடுச்சு. சாப்பிட்டு மண்டபம் கிளம்பனும்.” அடுத்த கட்டளை அவரிடம் இருந்து வந்து விட, அதற்கு மேல் தாமதிக்காது கிளம்பியிருந்தாள்.

இவள் அறைக்குள் சென்று நேரம், கட்டிலில் அமர்ந்து போனை நோண்டியபடி அவன் இருக்க,

அவனிற்கு‌ இடப்பக்கம், வெளிகதவுக்கு சிறிது அருகே இருந்த டீப்பாயை‌ கண்டுக் கொண்டவள்,

“கிளம்பிட்டீங்களாங்க, சீக்கிரம் டீ‌ குடிச்சிட்டு கீழே வாங்க, டிபன் ரெடியாகிடுச்சு, சாப்பிட்டு மண்டபம்‌ கிளம்பிடலாம்.” என படபடவென பேசியபடி வந்தவள், அந்த டீப்பாயை மீது டம்பளரை‌ வைத்துவிட்டு, அவன்‌ எழுந்து வரும் முன் ஓட நினைத்தவள், வந்த வேகத்தில் டம்ப்ளரை வைத்துவிட்டு ஓட திரும்பிட,

மனைவி வந்ததிலிருந்தே அவளது முகபாவனைகளை பார்த்திருந்தவன், அவள்‌ கண்கள் டீப்பாயை கண்ட நோடி, அவளது திட்டத்தினை கணித்திருந்தான்,

“ப்ராடு” என முணுமுணுத்தவன், அவள்‌ ஓடிவிடும் முன், அவளை இழுத்து இப்பக்கம் விட்டவன், கையோடு சென்று கதவினை அடைத்திருந்தான்.

“ப்ராடு, ப்ளான் எல்லாம் பயங்கராமாத்தான் இருக்கு.” முழுக்கை‌ சட்டையை ஏற்றி விட்டவாறு அவளருகே வர,

“போச்சு மாட்டிக்கிட்டோம்.” முணங்கியவள்,

“இங்க பாருங்க, லேட்டாகிடுச்சு‌ இதென்ன விளையாட்டுட்டு இருக்கீங்க?”

“தைரியம் தான்டி உனக்கு, கிள்ளி விட்டுட்டு கைக்கு சிக்காம ஓடுன தானே.” அவளருகே வந்தவன், அவள் தலையில் கொட்டுவதற்கு கையை‌ ஓங்கிட,

“நீங்க பேசுனதுக்கு தான் அப்புடி பண்ணேன்.‌என்னை அப்படி பண்ணக் தூண்டியது நீங்கதான்! அப்போ‌ தப்பு உங்க பேர்தான்.” கண்களை‌ இறுக மூடி, அவனது‌ கொட்டிலில் இருந்து தப்பிப்பதற்காக‌ தலையை இடப்புறமாக சாய்த்து‌ அவள் பேச,

அத்தனை நெருக்கத்தில் மனைவியை‌ கண்டவனின் கைகள், தாமாய் இறங்கியது.

நெருக்க தொடுத்த மல்லிகை பூச்சரம், இரண்டு தோள்களிலும் வலிய, சிவப்பு பட்டில், தங்கஜரிகையிட்ட கரையும், அதற்கு தோதாக அடர் பச்சை எம்ப்ராய்டரி ப்ளவுசும் அணிந்து, நெற்றியில் வட்ட மெருன் பொட்டு அதன் நடுவே சிறு வெள்ளை கல் வைத்து, அதன் மேல‌ சிறு கீற்றாய் சந்தனம்.‌ இடப்பக்க மூக்கில் ஆர்ட்டிபிசியல் மூக்குத்தி அணிந்து‌, கண்ணிற்கு குளிர்ச்சியாய்‌‌, மலர்ந்த பூவாய் நின்றிருந்தவளை‌ கண்டவனின்‌ விழிகளில் ரசனை ஊற்று‌ பெருகியது.

“அம்மா வீட்டுக்கு வந்ததும், என்னடி இவ்வளவு பளபளப்பாகிட்டா!” என்றபடி‌ அவளை இழுத்து தனக்கு மிக நெருக்கத்தில் நிறுத்தியவனின், கைகள் அவளது இடுப்பில் அழுந்த பதிந்திருந்தது.

அவனது கொட்டலை எதிர்பார்த்தவள், இந்த நெருக்கத்தினை‌ எதிர்பார்க்கவில்லை.‌ மூக்குரச நின்றவனின், விழிகளில் தெரிந்த ரசிப்பு அவளை‌ மயக்கியது.

“அவ்வளவு அழகா மாறிட்டேனா?” அவனது ரசனை விழிகளை‌‌ உள்வாங்கியபடி அவள் பேச,

“ஹ்ம்ம் இருக்கலாம்.” அவள் வாசனையை நுகர்த்தப்படி, காதினில் சிறு சிறு முத்தமிட்டபடி அவன் கூற,
அதில் மயங்கி, மேலும் அவனுடன் அவள் ஒன்றிட, அவளது உடை கசங்காதவாறு ஒரு அணைப்பு, முக அலங்காரம் கலையாத வகையில்‌ சிறு சிறு மென்மையான முத்தங்களிட்டவனின் கைகள், வன்மையை காட்டிக் கொண்டிருந்தன.

நேராமாவதை உணர்ந்து விலகியவனுக்கு, மனைவியின் மயங்கிய நிலை விழ, நறுக்கென்று இரண்டு கொட்டுகளை பரிசளித்திருந்தான்.

“ஆ..ஆஆஆ அம்மா!” அதுவரை அவனது அருகாமை தந்த மயக்கத்தில் இருந்தவள், சத்தியமாய் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை.

“வாத்தி புத்திய காட்டிடீங்கள்ள?” கடுப்பில் அவள் கத்திட,

“போடி! போடி! பதிலுக்கு பதில் சரியாப் போச்சு.” என்றபடி அங்கே, ஆறிப் போயிருந்த டீயை எடுத்து, ஒரே‌ மடக்கில் குடித்து, அடுத்து அவள்‌ மனையாள் பேசும் முன்பு, அவளை இழுத்துக் கொண்டு கீழிறங்கியிருந்தான்.

காலை உணவினை முடித்தவர்கள், மண்டபத்திற்கு கிளம்பியிருந்தனர். இவர்கள் சென்ற நேரம் பெண் வீட்டாரும் வந்திருக்க, அடுத்தடுத்த வேலைகள் இரு குடும்பத்தினரையும் முழுவதுமாய் இழுத்துக் கொண்டது.

வருணா தோழிக்கு துணையாய் நின்று விட, முகிலன் அவ்வீட்டு மாப்பிள்ளையாய் அனைத்து இடங்களிலும் முன்நின்றிருந்தான்.
வருணாவின் பார்வை இரண்டொரு முறை கணவனை தீண்டிச் செல்ல, அவன் இவள் இருக்கும் திசையில் கூட வரவில்லை.

அவனை பொறுத்தவரையில் கணவன், மனைவியின் நெருக்கம் எல்லாம், அவர்களது அறையில் மட்டுமே! வெளியே வந்து விட்டால், பொது இடத்திற்கான ஒழுக்கத்தினை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்பவன்.
ஆசிரியர்‌ வேறல்லவா, ஆக அவனது வேலைக்கு தகுந்த ஒழுக்கத்தினை‌ தவறவிட்டதில்லை அவன்.

நிச்சயம் ஆரம்பிக்க அரை மணி நேரம் முன் வந்திருந்தனர் சுபாவும்-பரணியும்.

“வாங்க அக்கா, வாங்க மாமா! ஏன் இவ்வளோ லேட்டு?” என்றபடி சாத்விகாவை வருணா வாங்கி கொள்ள, அதற்குள் முத்துப்பேச்சியும் வந்திருந்தார்.

“அண்ணிக்கு பரவாயில்லையா சுபா?”

“பரவாயில்லத்தை, மாத்திரை போட்டு படுத்திருக்காங்க, அடுத்து அவுங்க எழுந்துக்குறதுக்குள்ள கிளம்பிடனும்.”

“என்னக்கா செய்யுது அம்மாக்கு.”

“வைரஸ் காய்ச்சல்னு‌ சொன்னாங்க.” என்ற‌ சுபாவின் குரலில் தாயின்‌ உடல்நிலையை‌‌ நினைத்து கவலை இருந்தது.

“சரி, சரி‌‌ நிச்சயம் முடிஞ்சதும் கிளம்பிடுவீங்களா, உன் தங்கச்சி இன்னும் வரலையா?”

“இன்னும் இரண்டு நாள் ஆகும்னு சொன்னா?” சுபாவின் ‌தங்கை‌ கல்லூரியில் இருந்து பீல்டு டிரிப் சென்றிருந்தாள்.

“சரி, வாங்க உட்காருவோம்.” முத்துப்பேச்சி அவர்களை அழைத்து சென்றிருந்தார்.

நிச்சயம் நல்ல நேரத்தில் ஆரம்பிக்கப்ட்டது. எந்தவித பிரச்சனைகளும் இன்றி, நல்லபடியாகவே நடந்து கொண்டிருந்தது.

பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் உறுதி செய்யப்பட்டு, திருமண தேதியினையும் அறிவித்திருந்தனர்.

அடுத்து பத்தி ஆரம்பித்து விட, பேரணியும் சுபாவும்‌ உண்ண சென்ற‌‌வேளை, சுபாவிற்கு‌ அவளது அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்து விட, உண்ணாது கூட இருவரும் கிளம்பி சென்றிருந்தனர். குழந்தைக்கும் உண்ண கொடுக்காமல் தூக்கி சென்றிருந்தது வருத்தத்தை கொடுத்தது‌ அனைவருக்கும்.

அதன்பின் சில கலாட்டக்களுடன்‌ பந்தி நடந்து முடிந்திருந்தது. மாலை வரை தான் இவர்கள் வாடைகைக்கு எடுத்திருந்தனர் மண்டபத்தினை. ஆக, சீக்கிரம் வேலைகளை முடித்து கிளம்பியிருந்தனர்.

வந்த உறவினர்கள் எல்லாம் மண்டபத்தில் இருந்தே கிளம்பியிருந்தனர்.‌ மகாலிங்கமும், பேச்சியும் அங்கே தான் இருந்தனர்.

மதிய சாப்பாடு மிச்சமிருக்க, இரவிற்கு சேர்த்தே எடுத்து வைந்திருந்தனர்.
வந்த களைப்பில் நல்ல உறக்கம் அனைவருக்கும். மாலைப் போல் தான் எழுந்தார்கள்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் காபி கொடுக்கப்பட்டது. மகாலிங்கம் கிளம்புவதாக கூற,

“சேர்ந்தாப்படி, நைட்டு இருந்துட்டு காலையில போகலாம்ல அண்ணே.” மல்லிகா கூற, அதையே ஆமோதித்தார் குருசாமியும்.

“இல்லம்மா, நாளைக்கு சனிக்கிழமை வேற, கோவிலுக்கு கூட்டம் வரும்.கடைக்கு லீவு விட முடியாது, அதோடு இன்னைக்கு அங்க நம்ம மண்டபத்தையும் வாடைகைக்கு எடுத்திருந்தாங்க, அதை எல்லாம் போய் பார்க்கனும்.‌மருமக அம்மாக்கு வேற‌ எப்புடி இருக்குன்னு தெரியலை. நாங்க இப்போ கிளம்புறது தான் சரி. அதான் முகிலன் இருக்கானே இங்கே.” என்றவர் கையோடு கிளம்பியிருந்தார் மனைவியுடன்.

அன்றைய இரவு பொழுது அமைதியாக கடந்தது. அடுத்த நாள் காலையிலே கெளரி இவர்களது வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள்.

“ஏன் டி, நேத்து தான் நிச்சயம் முடிஞ்சிருக்கு, அதுக்குள்ள இங்க வரனுமா நீயி? உங்க ஆத்தாக்காரி எப்புடி விட்டா?” முனிஸ்வரி அவளை வசைப்பாட,

“உம் பொண்ணு விட்டுட்டுட்டு தான் மறுவேலை பாக்கும் பாரு, போ‌வியா அம்மாச்சி. உன் பேரன் என்ன பாக்க வந்திருந்தா, நான் ஏன் இங்க வரப் போறேன்? வீட்டுக்குள்ள முட்டை, கிட்டை ஏதும் போட்டு வச்சுருக்கானா உன் பேரேன்.‌?”

“என்னடி கேக்குறவா?”

“இல்லை, அடைக்காக்குற கோழியாட்டம் வீட்டுக்குள்ளயே இருக்காரே அதான் கேட்டேன்.”

“வாய் கொழுப்பு அதிகமாகிடுச்சுடி உனக்கு?’ அவர் மிரட்ட,

“ஆமாமா, உன் பேரனை வந்து கொறைக்க சொல்லு” என, அவளை‌ முறைத்த வண்ணம் அங்கே வந்தான் கிருஷ்ணா.

“என்ன மொறைப்பு? இல்லை என்னன்றேன்? நேத்து பரிசம் போட்டுட்டு, உங்களுக்கென்னன்னு போயிட்டீங்க, நைட் ஒரு மெசேஜ் கூட போடலை. என்கிட்ட பேசவும் இல்லை, அதான் நானே உங்கள தேடி வந்தேன். நீங்க செய்ய வேண்டியதை எல்லாம் நானே செஞ்சிட்டு இருக்கேன்.” என,

“கெளரி! போதும், வருணா மேலே ரூம்ல இருக்கா போய் பாரு நீ!” என அவளை அங்கிருந்து அனுப்பினார் மல்லிகா.

கிருஷ்ணாவை கடந்து செல்லும் வேளையில்,
“அப்போ, நான் செய்ய வேண்டிய எல்லாத்தையும் நீயே செஞ்சிடுவ, எனக்கு எதுவும் சிரமம் இருக்காது தானே.” என்றவனின் முணுமுணுப்பில் அதிர்ந்தவள், அவன் முகம் பார்க்க விசம சிரிப்புடன் அவளை சீண்டினான் கிருஷ்ணா.

சட்டென ஒரு வெட்கம் வந்து அவளிடம் ஒட்டிக் கொள்ள, அங்கிருந்து ஓடியிருந்தாள்.‌அதன்பின் அங்கே கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை.‌ கிருஷ்ணா, முகிலன், வருணா, கெளரி நால்வாரும் மதியம் போல் தியோட்டருக்கு சென்றவர்கள், வீடு திரும்புகையில் கெளரியை வீட்டில் விட்டிருந்தனர்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அனைவரும் ஜவுளிக் கடைக்கு சென்றிருந்தனர்.‌கெளரியும் உடன் வந்திருந்தாள்.

முகிலன் - வருணாவிற்கு துணிகள் எடுக்கப்பட்டு, பொங்கல் சீர்வரிசைகளுடன்‌ வருடா புகுந்த வீடு செல்ல, அப்போது மல்லிகா செய்த ஒரு செயலால்,

“என்ன? எம் பொண்ணுக்கு என்னால சீர் செய்ய‌ வக்கில்லைன்னு, குத்தி காட்டு
றீங்களோ!” சுபாவின் அம்மாவின் குரல் ஆங்கரமாய் ஒலித்து, பெரும்‌ களோபரத்தை கிளப்பியிருக்க, சுபாவின் ஆழ்மன எண்ணங்கள் அனைத்தும் வெளிவந்திருக்க, பரணி மனமுடைந்துப் போயிருந்தான்.

 
Top