எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

16 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 16

கண்ணனை கொண்டு வந்து விட்டுவிட்டு அவன் கிளம்புவது வரை கண்ணை திறக்காமலே அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் சென்றபின் தானும் எழுந்து உள்ளே சென்று படுத்துவிட்டாள்.

கிருஷ்ணனை படிக்கவைத்து, வீட்டுப்பாடம் எழுத வைக்கவேண்டும், கண்ணன் தலையில் இடித்த இடம் வீங்கியிருக்கிறதா, சிவந்திருக்கிறதா என பார்க்க வேண்டும், இருவருக்கும் இரவு உணவு கொடுக்க வேண்டும் என்று மனதில் அடுத்தடுத்த நிகழ்வுகள் ஓடிக்கொண்டிருந்தாலும், மனமும் உடலும் அயர்ந்திருக்க, படுத்திருக்க வேண்டும் போலவே இருந்தது. அதனால் முழுமையாக தூங்கவும் முடியாமல் கண்ணை மூடியே படுத்திருந்தாள்.

"மனோ!" என ஆண்டாள் வந்து நிற்க,

"என்னம்மா?" என்றாள் கண்ணை திறக்காமலே,

"என்ன பேசினீங்க? மாப்ள என்ன சொன்னாரு?"

"அவர் எதுவும் சொல்லல. உங்க புருஷன் உத்யோகம் எனக்கு இனி தேவையில்ல உங்க அமெரிக்கா வேலையவே நீங்க சுதந்திரமா பாருங்கன்னு நா சொல்லிட்டேன்" என்றாள் சுருக்கமாக.

"அடிப்பாவி!" என ஆண்டாள் நெஞ்சில் கைவைத்து அதிர,

"அடிசக்கை அதான் ஃபாரீன் சாரு மூஞ்சு ஒரு போக்கா இருந்துச்சோ? பொண்டாட்டி கெஞ்சிட்டே கால சுத்திட்டு இருந்தா நல்லாதான் இருக்கும் இந்த ஆம்பளைங்களுக்கு, அவ என்னைக்கு 'போயா உன் வேலைய பாத்துகிட்டு'ன்னு துணிஞ்சு நிக்காளோ அப்பதான் அவுக பவுசு வெளியவே வரும். இந்தா வந்துருச்சுல்ல. நீதான்டி மனோ குட்டி சரி" என அவளை நெட்டி முறித்து சொடக்கும் எடுத்தார் மீனம்மா.

"மீனம்மா!" என பல்லை கடித்த ஆண்டாள், "இந்தாடி. எதுக்கு இப்படி பேசி வச்சுருக்க. உனக்கு அந்த மனுஷங்கூட வாழ ஆசையே இல்லையா?" என அதட்ட,

"இல்ல"

"அப்படி சொல்லாதடி. இதுக்கா நாங்க இத்தன நாளும் அந்த குடும்பத்து ஆளுங்கட்ட பொறுமையா போனோம்? என்னைக்குனாலும் நீ அங்க வாழ போகணும்னு தான எல்லாமே?"

"ஏது? கல்யாணம் முடிஞ்சு பத்து வருஷங்கழிச்சு தான் மறுவீடு முடிச்சு அனுப்பிதியோ பிள்ளைய?" என்றார் மீனம்மா.

"நீ போ முதல்ல. போய் நைட்டு சாப்பாட்ட என்னன்னு பாரு" என ஆண்டாள் மீனம்மாவை விரட்ட,

"தெளிவா இருக்க பிள்ளைய பயமுறுத்தி குழப்பி விடாத ஆண்டாளு. யாரு இருந்தாலும் இல்லனாலும் பொம்பள பிள்ள தன்ன பாத்துக்கவே தெம்பா நிக்கணும். அதுக்கு முதல்ல தேவை மன தைரியம் தான். அத அவளுக்கு இல்லாம பண்ணாத. புருஷன் துணை கண்டிப்பா தேவை தான். ஆனா அதுக்காக போனானுக்கு போனான் வந்தானுக்கு வந்தான்னு இருக்கவங்களலாம் ஏத்துக்க முடியாது. அவ புருஷன், அவ வாழ்க்கை அத அவளே பார்க்கட்டும் நீ வா, நாம நைட்டு சாப்பாட பாப்போம்" என்றவர், "குறுக்கு வலிக்காத்தா மனோ? ஒத்தடம் வைக்கவா?" என மனோவிடமும் கேட்க.

"வேணாம் மீனம்மா. ஹீட்டர் போட்டுதான் குளிச்சேன். கண்ணனுக்கு தலையில் தைலம் மட்டும் தேச்சுவிடு ப்ளீஸ். நா ஒரு அரைமணி நேரம் படுத்துட்டு எந்துச்சு வரேன்" இப்போதும் கண்ணை திறக்கவில்லை அவள். இரண்டு கண்ணும் தீயாக காந்தியது அவளுக்கு.

"ரொம்ப வலிக்குதாடி? தலைவலி பரவால்லயா?" என்ற ஆண்டாளுக்கு மனதே பாரமாக இருந்தது, "பொம்பள பிள்ளை இப்படி கஷ்டபடுதேன்னு இருக்கு மீனம்மா. எவ்வளவு செல்லமா வளர்த்தோம். இப்படி கஷ்டபடுததுக்கா எல்லாம்?" என மேலும் புலம்ப,

"ஒரு ஆதரவும் இல்லாம தனியா ஓடுத பொம்மளைங்க நாட்ல எவ்வளவு இருக்காங்க தெரியுமா? எல்லாருக்கும் புருஷன்மாறு தங்க தட்டுல வச்சு தாங்கிடற மாதிரி அமையிறதில்ல. பொம்பளைங்க பொறுத்து போறதால தான் பாதி ஆம்பளைங்க பொழப்பே ஓடுது. இங்க மனோக்கு நாம இத்தன பேர் கூட நிக்கோம் அவளால எதுவும் முடியும். நீ வாத்தா விசனபடாம" என மீனம்மா தான் வம்படியாக அவரை அழைத்துச் சென்றார். அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமைதியாக தான் படுத்திருந்தாள் மனோ.

பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது, "ம்மா இந்த கண்ணாவ வந்து பாரும்மா, சப்பாத்தி மாவ என் முதுகுல அப்பிட்டான்" என வந்து நின்றான் கிருஷ்ணன். மீனம்மா இரவு உணவிற்கு செய்த சப்பாத்தி மாவில் இருவரும் விளயாட்டை ஆரம்பித்திருந்தனர்.

"சின்ன பையன் தானடா, வேற சட்டை மாத்திக்கோ போ" என்றாள்.

அவன் சென்ற ஐந்து நிமிடத்தில், "ம்மா கிஷ்ணா அயிக்க வாதான். சப்பாத்தி மாவு கொத்தித்தான்" என திடுதிடுவென ஓடிவந்து இவள் மேலேயே விழுந்தான் கண்ணன்.

"ம்மா இவன் தான் தண்ணீய ஊத்துனான். ஆச்சி என்னைய திட்றாங்க. நா சும்மா தான் நின்னேன், இவந்தான் என்னைய தள்ளிவிட்டு கொட்டினான்" என பின்னையே வந்த கிருஷ்ணா அவனை அடிக்க பாய, இருவரும் அவள் மேல் உருள, எழுந்தே விட்டாள் மனோ.

"பிள்ளைகள பாரு பிள்ளைகள. ரெண்டு பேரையும் கையையும் காலையும் கட்டி பரன்ல தூக்கி போடுதனா இல்லையான்னு பாருங்க. சப்பாத்தி மாவ பூராம் கொட்டி கவுத்தியாச்சு, சப்பாத்தியும் கிடையாது ஒன்னுங்கிடையாது உங்களுக்கு. இனி அந்த பக்கம் வாங்க, முருங்கை குச்சி ஒடிச்சு வச்சுருக்கேன் கால்லயே போடுதேன்" என கத்திக்கொண்டு வந்தார் ஆண்டாள். அவ்வளவு தான் இரண்டையும், "புக்க எடு, நோட்ட எடு. எழது" என பிடித்து அமர வைத்துவிட்டாள், அவள் ஓய்வும் அந்த பத்து நிமிடங்களோடு பறந்திருந்தது.

அங்கு மார்கண்டேயன் பழூர் சென்று சேர இரவாகியிருந்தது. அவன் வீடும் அவன் மாமா வீடும் அடுத்தடுத்த காம்பௌண்ட் தான். சொந்தங்கள் இருவீட்டுக்கும் பொதுவாக வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

"இன்னும் யாரும் தூங்கலையா? காலைல சீக்கிரம் எந்துச்சீங்க தான? போய் படுக்கலாம்ல?" என கேட்டவாறே தான் வண்டியை நிறுத்தி இறங்கினான்.

"இப்பதான் நைட்டு சாப்பாடு முடிஞ்சது. அதான் அப்படியே காத்தாட உட்கார்ந்துருக்கோம் மாரா. நீயும் போய் சாப்பிடு" என சுரேந்தர் சொல்ல, மற்றவர்களும், "உன் பொண்டாட்டி என்ன சொல்லுதா? ஏன் வரல? உடம்பு சரியில்லன்னு சொன்னாக? ரொம்ப முடியலயோ? இப்ப பரவால்லயா? வேலைக்கு போறாளோ? அங்க கூட்டி போ போறியா?" என ஒவ்வொன்றாக விசாரிக்க, நின்று பதிலளித்தான்.

"சாப்பிட்டு வேணா வாடா" என்றான் மறுபடியும் சுரேந்தர்.

"பொண்டாட்டி வீட்ல இருந்து வாரான் சாப்பிடமாலா வருவான்?" என்றார் சித்தி முறையில் உள்ளவர் ஒருவர்.

"மூணு மணிநேரம் ஆகும்ல அங்கிருந்து வர, சாப்பிட்டாலும் செமிச்சுருக்கும். லைட்டா சாப்பிட்டு படு" என சுரேந்தர் தான் கண்ணை காண்பித்து அவனை உள்ளே அனுப்பிவிட்டான்.

'பொண்டாட்டி வீட்டில் தண்ணீர் கூட குடிக்கவில்லையே!' என நினைத்தவன், அப்படியே சென்று அவன் அறைக்குள் முடங்கி விட்டான். மூன்று மணி போல் குடித்த டீ மட்டும் அன்றைய அவனது உணவாகியிருந்தது. மனைவியும் அவள் பேச்சுமே மனதை முட்டி நிறைத்திருக்க, சாப்பிட தோன்றவில்லை.

அவன் திடீரென இரண்டு மூன்று முறை, 'சர்ப்ரைஸ்!' என சென்று அவள் நின்றிருக்கிறான். அப்போதெல்லாம், தான் தான் செய்வேன் என எதையாவது அவனுக்கு உடனடி உணவாக செய்து நீட்டிவிடுவாள். அங்கிருந்து கிளம்பும்வரை இவனை விட்டு அங்கிங்கு நகர மாட்டாள். அந்த நிமிடங்களில் அவள் முகத்தில் தெரியும் மிளிர்ச்சிகாகவே மீண்டும் அதை செய்யவேண்டும் என நினைத்திருக்கிறான். இங்கு அவளுடன் இருக்கும்வரை அனைத்தையும் நினைப்பான், மீனம்மா சொன்னதுபோல் அங்கு சென்றதும் அனைத்தும் பின்னுக்கு சென்று அவன் வேலையும், அமெரிக்காவில் அவன் வீடும் தான் முன் நிற்கும். அந்த வள்ளுவன் தான் சூனியம் வைக்கிறான் போலும் என நினைக்க சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.

இங்கு வந்த பொழுதுகளில் சேர்ந்திருக்கும் இரண்டு நாட்களில் சண்டை கூட வந்துவிடும், ஆனால் அப்போதும் விலகி நின்றதில்லை அவள். இன்று தான் அவ்வளவு தள்ளி நிற்கிறாள் அவனையும் நிறுத்த பார்க்கிறாள். இந்த எண்ணங்களோடே தூங்கியவன், காலையில் எழுந்து குளித்து கிளம்பியே அறையிலிருந்து வந்தான்.

"நைட்டு எந்நேரம்டா வந்த? மனோவ பாக்க போனியே நேத்து, என்ன சொன்னா?" என டீயுடன் வந்தார் சாம்பவி.

"முகம் குடுத்து பேசுனாளாடா?" என்றாள் லதா.

"பசிக்குது எனக்கு" என்றவன் டீயை வாங்காமல், சென்று சமையலறையில் எதாவது இருக்கிறதா என பார்த்தான்.

"உட்காரு தோசை ஊத்துறேன். ம்மா மாமா வீட்ல சட்னி, சாம்பார் மட்டும் எடுத்துட்டு வா" என அனுப்ப,

"அங்க போயே அவன் சாப்பிடட்டும் லதா. நேத்தும் பாதில கிளம்பிட்டான். மாமா எதுவும் நினைக்கலனாலும், அத்தை எதுவும் நினைப்பாள்ல?" என சாம்பவி சொல்ல,

"மாமா வீட்டுக்கு போகத்தான கிளம்பியே வந்துருக்கான். மனோட்ட என்ன பேசுனான்னு தெரிய வேணாமா? அங்க போய்ட்டா எப்படி கேட்ப?" என லதா மெதுவாக கடியவும், கிளம்பிவிட்டார்.

"அப்றம் மச்சான்? பசங்க ரெண்டு பேரும் என்ன சொல்றாங்க? சின்னவன் உன்ன பார்த்ததும் அப்பான்னு ஓடி வந்திருப்பானே?" என சுரேந்தர் சிரித்தபடி வந்து அவன் அருகில் அமர,

"உங்களுக்கு என் நிலமை கிண்டலா இருக்காத்தான்?" என பார்க்க,

"இல்லடா. போகதவன் போயிருக்கல்ல? அதான் பாசத்துல என்ன செஞ்சாம்னு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்" என அவன் தோளில் கைபோட்டு தட்டியபடி அமர்ந்து கொண்டான் சுரேந்தர்.

சாம்பவி, சட்னி சாம்பாருடன் வர, அவன் மாமாவும் கூடவே வந்தார்.

"ஏன்டா அங்க சாப்பிட வந்தா என்ன?" என வந்தவர் சுரேந்தரும் அமர்ந்திருக்க கண்டு, "நீங்களும் இங்கேயே சாப்பிட போறீங்களா?" என கேட்க,

"ஆமா சித்தப்பா. மாராக்கு கம்பெனி குடுக்கலாம்னு தான்" என்றான் சுரேந்தர்,

லதா இருகல்லை வைத்து இருவருக்குமே தோசை வார்க்க, சாம்பவி அமர, அவன் மாமாவும் சாப்பாட்டு மேசையிலேயே ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

"மதியம் மேல பொண்ணு வீட்டுக்கு மறுவீடு போகணும். நீங்களும் லதாவும் கூட போய்ட்டு வரீங்களா மாப்ள?" என சாம்பவியே கேட்க,

"ஓகே தான் அத்த. நாளைக்கு நைட்டு தான் நாங்க சென்னை கிளம்புவோம். இன்னைக்கு நைட்டு மட்டும் அங்க ஸ்டே பண்ணா போதும்ல?"

"ஆமா மாப்ள, அவங்க ரெண்டு நாள் இருந்து கூட வரட்டும் நீங்க நாளைக்கு காலை சாப்பாட முடிச்சுட்டு கிளம்பி வந்துருங்க" என்றார் மார்க்கின் மாமா.

"நீங்களும் சாப்பிடுங்க மாமா" என லதா அவருக்கும் வைக்க, அவரும் சாப்பிட ஆரம்பித்தார்.

"மனோ என்னப்பா சொல்றா?" என மார்க் பக்கம் வந்தது விஷயம்.

"இங்க கூப்பிட்டியா நீ?" என கேட்டாள் லதா.

"அவளுக்கு நா மூணு வருஷமா பேசாம இருந்தது ரொம்ப கோவம்" என்றுமட்டும் சொல்ல,

"இருக்கத்தானே செய்யும். நாங்கதான் அத்தனதடவ பேசு பேசுன்னு சொன்னோமே? அந்த புள்ள வராதுன்னு எனக்கு கண்டிப்பா தெரியும். ஆனாலும் நீ நம்பிட்டு இருந்ததால நா எதுவும் சொல்லல மாரா" என்றார் அவன் மாமா.

"ம்ம், கோவமா தான் இருக்கா. பட் நா பாத்துக்குவேன் அத. நீங்க வொரி பண்ணிக்க வேணாம்" என்றான் அவனே.

"நாம எல்லாரும் உட்கார்ந்து பேசணும் மாரா. அவங்க வீட்டுக்கு கூட போவோம். நீ அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க? ஒன்னு அவங்கள அங்க கூட்டிட்டு போ, இல்லனா நீ இங்கயே வந்துடு" என்றார் சாம்பவி.

"இன்னமு தனியா தான் இருக்கணும். என்னால இங்க வந்து இருக்க முடியாதுன்னுலாம் பேசிட்ருக்காத மாரா. கஷ்டமோ நஷ்டமோ நா உன் அக்கா கூட சேர்ந்து இருந்து சமாளிக்கல? அதுமாதிரி சமாளிக்க பழகிக்கோ" என சொல்ல, மற்றவர்கள் சிரிக்க, லதா முறைத்துப் பார்த்தாள்.

"எதாவது செய்யணும் தான். போன தடவையே இங்கயே வந்துடுற ப்ளான்ல தான் போனேன். அதுக்குள்ள வேறொரு பஞ்சாயத்து ஆகி போச்சு, அப்படியே சண்டை பெருசாகி, இவ்ளோ நாள் ஓடிபோச்சு"

"அங்க வேணா கூட்டிட்டு போ. இங்கேயே வர்றதுலாம் சரிபடாது மாரா" என்ற லதா, "அப்டி என்னதுக்கு தான்டா சண்டை போட்டீங்க?" என்றும் கேட்க. இதுவரை இடத்துக்கான சண்டையாக அவர்கள் இருவரை தவிர அவர்கள் பேச்சுவார்த்தை நின்றதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. வருகிறேன் என்றுவிட்டு அவன் வரவில்லை அதனால் இந்தமுறை சண்டை பெருசாகிவிட்டது, இதுதான் இருவீட்டினரும் அறிந்திருந்தது.

"அதான் சொன்னான்ல? அந்த பிள்ளையும் எத்தன நாளைக்கு அங்கேயே இருக்கும்? இனி ரெண்டு பேரும் சேர்ந்திருக்கட்டும். இந்தா ஏப்ரல் எக்ஸாமோட பெரியவன் கிருஷ்ணாக்கு செகெண்ட் க்ரேட் முடியுது. அப்புறம் அடுத்த க்ரேடுக்கு அங்க கூட்டிட்டு போ மாரா. சின்னவனையும் அடுத்த வருஷம் அங்கேயே சேரு. அங்கு இருக்க வர அங்க படிக்கட்டும் உனக்கு இந்தியா எப்ப வர தோணுதோ அப்றம் இங்க வந்துடலாம். பிள்ளைங்க வளர்ந்துட்டா மேல் படிப்புக்கு அங்க தனியா கூட இருந்துப்பாங்க" என சுரேந்தர் பேச,

"ப்ளான் பண்ணணும் அத்தான். அங்க செலவு ஜாஸ்தி தான். ப்ளஸ் எயிட்டீன்கு மேல ஃபுல் ஃப்ரீடம் நாம குடுத்தே ஆகணும். அந்த கல்ச்சருக்கு மனோ, பசங்க மூணு பேருமே செட்டாகணும். பாப்போம்" என்க,

"மனோ அங்க போனா, நம்ம வைஷுவையும், வினித்தையும் கூட அங்கேயே படிக்க வைக்கலாம் இல்லையாங்க? அவங்களுக்கும் அப்ப அங்க யுனிவர்ஸிட்டில ஈசியா சீட் கிடைக்கும். மனோ இருக்கதால நாலு பேரையும் பாத்துப்பா. நானு அப்பப்பா போய்ட்டு வந்துக்குவேன். அந்த திருவள்ளுவன வேற வீடு பாத்துக்க சொல்லி இப்பவே சொல்லிடுடா மாரா" என்றாள் லதா வேகமாக.

வைஷ்ணவி, வினித் இருவரும் சுரேந்தர் லதா பிள்ளைகள்.

"அவங்க ரெண்டு பேரையும் அங்க அனுப்பிட்டு, நாம என்ன செய்றது? அவங்களுக்கு இங்கதான் செட் ஆகிருக்கு இங்கேயே படிக்கட்டும். இன்டர்நேஷனல் போர்டு தானே படிக்கிறாங்க. படிக்கட்டும். யுனிவர்சிட்டிக்கு வேணும்னா அப்ப என்ன செய்யலாம்னு பாக்கலாம்" என்றான் சுரேந்தர்.

"ஆமா முதல்ல மனோவும், பிள்ளைகளும் போய் செட்டாகட்டும். அவ அங்க பழகணும். பிள்ளைங்களுக்கு பழக்கணும். அதுதான் முக்கியம். நாம அதுக்கு முன்ன அவங்க வீட்ல போய் பேசணும். மனோ சட்டுன்னு ஒத்துக்குவான்னு தோணல, அவள பேசி சரிகட்டி தான் இவன்கூட கிளப்பணும்" என்றார் சாம்பவி.

இவர்கள் எல்லோரும் தான் பேசிக்கொண்டிருந்தனர், மார்கண்டேயன், சாப்பிட்ட கையோடு எழுந்து சென்று கை கழுவியவன், அப்படியே நின்று காப்பியை கலக்க ப்ரிட்ஜிலிருந்து பாலை எடுக்க, தானே வாங்கி அனைவருக்கும் டீ வைத்தாள் லதா.

"என்னடா மாரா? என்ன யோசனை?" என்றார் மாமா.

"ஒன்னுமில்ல மாமா. இங்க எதுவும் வேலை இருக்கா? நா அங்க கிளம்பணும். ஒரு வாரம் அங்க தான் இருப்பேன்" என்றான் தகவலாக.

"போய்ட்டு வாடா. இங்க நா பாத்துகிடுதேன், அததுக்கு ஆள் இருக்குல, நீ கிளம்பு. அடுத்த வாரம் நாங்களும் வாரோம். பேசிடலாம், அதுக்கு முன்ன நீயும் மனோவ கொஞ்சம் சமாதானம் பண்ணி வை" என மாமா சொல்ல,

"ஆமா கிளம்பு. பிள்ளைகளும் எவ்வளவு ஏங்கிருக்குங்க. போய் இருந்துட்டு வா, அடுத்து ரெண்டு வாரம் கழிச்சு நீ கிளம்புபோது உங்கூடயே கூட்டிட்டு போ முடியுமா பாரு. பெரியவனுக்கு பரிட்சை முடிஞ்சுருமான்னு கேட்டுக்கோ" என்றார் சாம்பவி.

"ம்மா இருந்தா என்ன. அடுத்து நாங்களும் லீவுக்கு கிளம்புவோமே? அப்ப கூட எங்க கூட கூட்டிட்டு போறோம்" என்றாள் லதா.

"இந்த தடவ, இங்கன வந்து இரு நீ. மனோ மட்டும் போட்டும்" என சாம்பவி சொல்ல,

"நாங்க ஏன் போக கூடாது. வருஷத்துக்கு ஒருக்கா தான் அங்க போறோம். ஏன் போக கூடாதுன்ற?" என லதா சண்டைக்கு கிளம்ப,

"அத்தன பேருக்கும் டிக்கெட் செலவு என்னாகும்? மனோ போட்டும். அடுத்த வருஷம் அவ அங்க தான் இருப்பா, அப்ப நீ பிள்ளைகள கூட்டிட்டு போய்ட்டு வரலாம்ல?" என சாம்பவி பேச,

"நா வாரதுக்கும் கணக்கு பாப்பியாடா நீ? அவங்கள கூட்டிட்டு போனாலும், நானும் பிள்ளைங்களும் எப்பவும் வர்றது தானே. நாங்க வர்றதுக்கும் அதுக்கும் கனெக்ட் பண்ணுவியா மாரா நீ?" என அவனிடம் கேட்டாள்.

"ஏன்டி, அவன் முதல்ல அவனோட வாழ்க்கைய சரி பண்ணிக்கட்டும் அதான் இப்ப முக்கியம்" என்றான் சுரேந்தர்.

"நான் என்ன வேணாம்னா சொல்றேன். இன்னும் ஒரு மாசம் தானே இருக்கு, விசா சேர்த்தே எடுக்கலாம்ல? இப்ப அவளுக்கு தனியா அப்புறம் எங்களுக்கு தனியான்னு எடுக்க வேணாம்னு தான சொல்றேன்"

அக்கா பேச்சை தான் பார்த்திருந்தான். அவனுக்கே இப்போது அவன் அக்கா அதிகமாக அவளை மட்டுமே முன்னிறுத்தி யோசிப்பதாகபட்டது. மனோ அப்படித்தானே கூறினாள். அவனையும் அப்படித்தான் சொன்னாள், நானும் அப்படித்தான் இருக்கிறேனோ?

'அவள மாதிரி, இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு என்னையும் முட்டிக்க வச்சுட்டா' என நினைத்துக்கொண்டான்.

"டேய் தம்பி! நீ என்னடா ஒன்னும் பேசாம நிக்ற? நீ எது செஞ்சாலும் அக்காக்கும் சேர்த்து தான் செய்யணும் சொல்லிட்டேன். பிரிச்சு எதையும் செஞ்சா என்னால தாங்கிக்கவே முடியாது பார்த்துக்கோ" என்க,

"இவ்ளோ நாள் அவன் தனியா கடந்தான்ல அத மட்டும் தாங்கிக்க முடிஞ்சதா உனக்கு?" என்றார் சாம்பவி.

"நானா அவன பொண்டாட்டி கூட பேசாம இருன்னு சொன்னேன்? அவங்களுக்குள்ள எதுக்கு சண்டையோ? ஃபாரீன் கூட்டிட்டு போகாதது தான் பிரச்சனைனா இதோ இப்ப கூட்டிட்டு போ போறான்ல அப்ப சரியாகிடுவா அவ. ஈசியா முடிச்சுக்குறத பெருசாக்கினதே அவ தான். வெளிநாட்ல தனியா இருக்கானே என் தம்பின்னு அவதான் பொறுமையா போயிருக்கணும். அவளுக்கு அதெல்லாம் முக்கியமில்ல, அவன்கூட சண்டை போடணும் அதுக்கு அவளுக்கு காரணம் வேணும் விஷயம் அவ்ளோதான்"

சுரேந்தர், "உன் அக்கா என்னத்தையாவது உளறுவா. நீ இப்ப கிளம்பு மாரா. நாங்களும் நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம். சென்னைக்கு கூட மனோவ கூட்டிட்டு வா, கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்" என சொல்ல,

"என் அக்காவயும் என் பொண்டாட்டியையும் ஒரே இடத்துல இருக்கவச்சுட்டு ரிலாக்ஸா?" என முனங்கியவன், "நா போய்ட்டு வரேன். பைக் எடுத்துட்டு போறேன் மாமா" என்றான்.

"பைக் இங்க தேவைப்படும் மாரா. நீ ட்ராவல்ஸ்ல சொல்லி போய் இறங்கிடு" என அவர் சொல்ல,

புருவம் சுருக்கி பார்த்தவன், "கிஷோர் பைக் இருக்குள்ள மாமா?" என்க,

"அது பெரிய வண்டி, யாரையும் தொடவும் விட மாட்டான் மாரா. மருமகன் வீட்ல இருக்காரு, வெளில போக அவருக்கு தேவைப்படும்" என வெகு சாதாரணமாக தான் கூறினார். அது மார்கண்டேயன் வாங்கி விட்ட வண்டி தான். அவன் வரும்போது உபயோகிக்க தேவைப்படும், சுரேந்தர் வந்தால் தேவைப்படும் என வாங்கிவிட்டிருக்க, இங்கு அவன் அப்பா எடுக்கமாட்டார் என்பதால் அது அநேகம் அவன் மாமா வீட்டில் தான் நிற்கும்.

"ஒரு வாரத்துக்கு கிஷோர் பைக்க யூஸ் பண்ண சொல்லுங்க மாமா. எனக்கு என் பைக் வேணும். வர்ற நேரம் யூஸ் பண்ண முடியலனா எப்படி?" என்றுவிட, அதிர்ந்து தான் பார்த்தார் மாமா, அவர் வீட்டிலேயே நின்றதால் அது அவன் பைக் என்றே மறந்துவிட்டார் போலும்.

"டேய் மாரா? மாமா" என சாம்பவி சொல்ல வர,

"பரவால்லமா, நாந்தான் மாமாட்ட சொல்லிட்டேனே, அவங்க கிஷோர்ட்ட சொல்லிடுவாங்க. ஓகே தானே மாமா?" என்றான், அவர் தன்னால் தலையை ஆட்ட,

"நீங்க போய்ட்டு வாங்கத்தான். நா ஃபோன் பண்றேன்" என சுரேந்தருக்கும் சொல்ல, அவர் தம்ப்ஸப் காண்பித்தார்.
 
"வரேன்மா, வரேன்கா" என்றவன், பெரிய ட்ராவல் பேக்கில், புதிதாக வாங்கியதையும், அவனுக்கு சில உடைகளையும் இரவே எடுத்து வைத்திருக்க அத்தோடு கிளம்பினான்.

"எதுக்குடா இவ்ளோ பெரிய பேக்கு?" என்றார் சாம்பவி.

"மனோக்கும் பசங்களுக்கும் கொஞ்சம் வாங்கிட்டு வந்தேன்மா. அதான் கையோட கொண்டு போயிடலாம்னு எடுத்துட்டேன்"

"அடுத்த வாரம் கூட்டிட்டு வந்து காட்டலாம்ல, பைக்ல இத எப்டி வச்சுப்ப?" என்றார்.

"பாத்துக்குறேன்மா ஈசி தான்"

"அவ பேசலனாலும் என் தம்பி பார்த்து பார்த்து அவளுக்கு இவ்ளோ வாங்கிருக்கான். அவளுக்கு தான் இவன் அருமையே தெரியல. அங்க போறது சரி ரெண்டு நாள் இருந்துட்டு கிளம்பி வர பாரு. வர்ற நேரத்துல தான் இங்கன இருக்க முடியும் நீ. அவங்க வீட்ல சும்மாவே உன் மேல நல்ல எண்ணம் கிடையாது, அதனால போனோமா வந்தமான்னு இரு. ஒரு வாரம் சென்னைக்கு வந்திருக்கணும் நீ. அதுக்கு தக்கன எல்லாம் ப்ளான் பண்ணுடா. சொன்னது ஞாபகம் இருக்கட்டும், விசா சேர்த்தே அப்ளை பண்ணு, நாங்க ஒன்னா வரோம்" என்றாள் வேகமாக.

கிளம்பியவன் நின்று, "ஒருவேளை நா அமெரிக்கா போறத ட்ராப் பண்ணிட்டு இங்கேயே இருந்துட்டா என்னக்கா பண்ணுவ?" என கேட்டான், போட்டுவாங்கவே அவன் கேட்டது.

"லூசா நீ? அப்டிலாம் லூசுதனமா முடிவெடுக்காத. அமெரிக்கால வேலை எல்லாருக்கும் ஈசியா கிடைக்காது. அத தூக்கிபோடுற மாதிரி யோசிக்க கூட செய்யாத சொல்லிட்டேன். முதல்ல எதுக்கு இப்படிலாம் தோணுது உனக்கு சொல்லு? மரியாதையான வேலை, அதிக சம்பளம், சும்மாகூட இது வேணாம்னு சொல்ல கூடாது நீ" என படபடவென பொரிந்துவிட்டாள்.

"சரி பாக்கலாம்" என்றவன் கிளம்ப,

"டேய் நில்லு. என்ன பாக்கலாம்னு இழுக்குற?"

"விடுடி பனிரெண்டு வருஷமா வெளில தான இருக்கான். இனி இங்க இருக்கணும்னு நினச்சா இருக்கட்டும். அது அவன் வேலை அவன் டிஷிஷன். நீ உன் வேலைய மட்டும் பாரு. சும்மா நொய் நொயிங்குற" என்றான் சுரேந்தர்.

"நா இவன நம்பிதான பிள்ளைங்க மேல்படிப்ப அங்க வச்சுக்கலாம்னு, இங்க இன்டர்நேஷனல் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சுட்ருக்கேன். இவன்பாட்டுக்கு கிளம்பி வந்துட்டா அங்க யார நம்பி விடமுடியும்? என்ன விளையாடுறீங்களா?" என்றாள் அதிக டென்ஷனில். மாமா எதுவும் பேசவில்லை, நின்று அவர் மருமகனை தான் பார்த்தபடி இருந்தார்.

அக்காவை பார்த்திருந்த மார்கண்டேயன், "இனி என் பொண்டாட்டி எங்கையோ அங்கதான்கா நா இருக்க முடியும். அவகிட்ட பேசி பாக்றேன்" என்றவன், "பைக்கா, போய்ட்டு வரேன் மாமா, அத்தான்" என அம்மாக்கும் சொல்லி கிளம்பிவிட்டான்.

"என்னம்மா இவன்!" என அங்கு லதா ஏதோ திட்டுவது கேட்டதோடு வண்டியை கிளப்பிவிட்டான்.

அங்கு மனோ வீட்டில் அவன் சென்றிறங்கியபோது, வாசலில் அவன் பைக்கை துடைத்துக்கொண்டு நின்றான் பாலா. இவன் அவனை பார்க்க, பாலா, இவனையும் இவன் கையிலிருந்த பெரிய பையையும் மாறி மாறி பார்த்தான்.

தற்செயலாக வெளியே வந்த மனோவும், முறைத்துப் பார்த்து நின்ற மச்சான்ஸ் இருவரையும் புருவம் சுருக்கி பார்த்து நின்றுவிட்டாள்.
 
Top