எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

18 மார்கண்டையனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 18

மனைவியின் வில்லங்கமான சிரிப்பை பார்த்தவன், "உங்கம்மா சிரிப்பே சரியில்லையேடா கிருஷ்ணா. லாஸ்ட் எக்ஸாம்ல என்ன க்ரேட் வாங்கின நீ?" என்றான் சுருங்கிய பார்வையுடன்.

"ஏ க்ரேடு"

"அப்ப எய்டி பெர்சன்ட் தான். சரி இன்னைக்கு ஹோம்வொர்க் குடுத்துருக்காங்களா?" என்கவும், டைரியை எடுத்து நீட்டினான், "அங்க வெள்ளகாரனுங்கள்ல ஒரு டீமே வச்சு மேய்க்கிறேன் நானு. உங்க ரெண்டு பேருக்கு உங்கம்மா குடுக்குற லுக்கு இருக்கே, அப்படி பயந்து வருதுடா எனக்கு" என பேசியபடிதான் அவனிடமிருந்து டைரியை வாங்கினான்.

அதில் ஆங்கிலம் வீட்டுபாடம் இருக்க, முதலில் அதை எடுத்து எழுத கூறினான். ஒரு ரைம்ஸ் அமைப்பிலான பாடம் அதிலிருந்து, நான்கு கோடிட்ட இடங்களும், நான்கு
கேள்விகளும் இருக்க, இவன் பதில் எழுதி செல்லவேண்டும். அதை புரிய வைத்து அந்த நான்கு வார்த்தையை எழுத வைப்பதற்குள் ஒருமணிநேரம் சென்றிருந்து. அதை எழுதுவதற்குள் அவன் செய்தவை, தலையை சொரிய, காதை குடைய, படுத்து எழுத, உட்கார்ந்து எழுத, நான்கு முறை தண்ணீர் குடித்துவிட்டான், ஆறு முறை உச்சா போய் வந்துவிட்டான், "இன்னொருக்கா எந்திச்ச நீ?" என இறுதியில் மார்க் மிரட்டிய பின்னரே நகராமல் அமர்ந்து கடைசி இரண்டு வார்த்தையை எழுதி முடித்தான். அடுத்து கணிதம், அவனுக்கே தன்னை நினைத்து பாவமாகிவிட்டது.

மிரட்டவும் முடியவில்லை, கூடவே இருந்து மிரட்டினால் வேறு, அவனே வருடங்கள் கழித்து வந்து நிற்கிறான், பிள்ளைகள் தள்ளிதான் நிற்கின்றனர். அப்பா என்ற வார்த்தை மட்டுமே அவனோடு உட்கார வைத்திருக்கிறது. அப்படியிருக்கையில் அரட்டி பயந்து மொத்தமாக விலகிவிட்டால்? அந்த பயமே மார்க்கை அளவுக்கு மீறி மிரட்டவிடவில்லை. அவனையும் குறை சொல்ல முடியாது, அவன் வயது அப்படி, விளையாட்டு பிள்ளை என்கையில் அப்படித்தானே இருப்பான் என்றும் தோன்றியது.

"அடுத்து மேத்ஸ் நோட் புக் எடு" என்றான் நிதானமாக,

"பசிக்குது" என்றான் கிருஷ்ணன்.

"இவ்ளோ நேரத்துக்கும் இங்க்லீஷ் மட்டுந்தான்டா முடிச்சுருக்க. இன்னொரு சப்ஜட் முடிச்சுக்கலாம்"

"பசிக்குது ப்பா. அம்மா பசிக்குது" என ஊரே கேட்க கத்தவும் செய்தான்.

"டேய் சொல்லிட்டு தான இருக்கேன்?" என்றான் அதட்டலுடன்,

"பசிக்குது நா போறேன்" என எழுந்து ஓட, இழுத்து பிடித்தான் மார்க், அவன் பிடித்த பிடியே கிருஷ்ணனுக்கு வலித்துவிட்டது,

"ம்மா!" என இன்னும் கத்தினான்,

"என்ன பிஹேவியர்டா இது? சவுண்ட குறை ஃபர்ஸ்ட்" என மீண்டும் அதட்ட, வலியில் கத்தி கத்தி அழுதான் கிருஷ்ணன். முதல் நாள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததற்கும் சேர்த்து இப்போது, நங் நங்கென்று தரையில் குதித்து கத்தி ஏதேதோ திட்டி அழுதான். அழுதுகொண்டே பேசியதால் அவன் பேசியது எதுவும் மார்க்கிற்கு புரியவில்லை.

"என்ன கிருஷ்ணா?" என வந்தாள் மனோ,

"அவன மட்டும் படிக்க வேணாம்னு அப்பாட்ட இருந்து கூட்டிட்டு போன, என்னைய மட்டும் விட்டுட்டு போயிட்ட, அப்பா கூட என்னைய அனுப்ப போற தான? நா போவ மாட்டேன். அவன அனுப்பு, நீ வேணா போ, நா தாத்தா கூட தான் இருப்பேன். படிக்க மாட்டேன், அங்க வரவும் மாட்டேன், அப்பாவ இங்கயிருந்து போ சொல்லு, வேணாம் எனக்கு பிடிக்கல, நீ ஃபோன் பேசி அழுவ தான? அப்பாகிட்ட நீ அழுவ, சண்டை போடுவ, இப்பையும் சண்டை போடு போ சொல்லு" என தொண்டையிலிருந்து கத்தி கத்தி பேசி அழுதான்.

"கிருஷ்ணா!" என மார்கண்டேயன் அவன் நடந்துகொள்ளும் முறை பிடிக்காமல் அதட்ட,

எல்லோரும் வந்து நின்றனர், "கிருஷ்ணா ஏலே இங்க வா. அழாத வா" என அழைத்தார் ஞானம்.

"இருங்க மாமா" என அவரை நிறுத்திய மார்க், கிருஷ்ணாவிடம், "எதுக்கு உனக்கு இப்ப இவ்ளோ கோவம் வருது? சேட்டை பண்றது வேற, இதுமாதிரி அடம்பிடிக்கறது வேற" என்றவன், "கிருஷ்ணா நில்லு. தங்குன்னு தங்குன்னு குதிக்காத" என கொஞ்சம் சத்தமாக அதட்ட,

அதற்கு மேல் முடியாமல், "இருக்கட்டும் மாப்ள, நா வெளில கூட்டிட்டு போனா அமைதியாகிடுவான். விடுங்க, நா கூட்டிட்டு போறேன்" என அவனோடு கண்ணனையும் கூட்டிச் சென்றுவிட்டார்.

"என்ன மனோ? இப்படித்தான் எப்பவும் கோவபடுவானா? இந்த வயசுல இவ்ளோ கோவம் தேவையா அவனுக்கு?" என்றான் அவளிடம் திரும்பி.

"இப்படி தான் அவன திட்றதே இல்ல. அதான் தாத்தா போதும்னு சொல்லுவான். ஓவர் சேட்டை. யாருக்கும் பயம் கிடையாது. மனோ எப்பவாது திட்டினாலும், இவங்க திட்ட கூட விட மாட்டாங்க. கோவம் வந்துட்டா சிலநேரம் கைல கிடைக்கிறத தூக்கி கூட எரிஞ்சுடுவான். நா ஏன் ரூமுகுள்ளயே இருக்கேனா இவனுங்க ரெண்டு பேரால தான். பிள்ள மேல எப்ப என்னத்த தூக்கி போடுவானுங்கன்னு தெரியாது, மெதுவா பேசவே தெரியாது. இவன பார்த்து சின்னவனும் அப்படியே தான் வந்துட்ருக்கான். நாளைக்கு உங்க வீட்ல உள்ளவங்களே, மனோவ தான், 'என்ன பிள்ள வளத்துருக்கா'ன்னு பேசுவாங்க. ஆனா ஆச்சி, தாத்தா தான் ஓவர் செல்லம் அவனுக்கு. இதோ இப்ப நீங்களே பாக்றீங்களே அண்ணா இப்படித்தான்" என்றாள் மல்லிகா. அவளுக்கு பலநாள் எரிச்சல் இது. பிள்ளையை கொஞ்ச நேரம் கூட அமைதியாக இருக்கவிட மாட்டார்கள் அவ்விருவரும் என்ற கடுப்பில் இன்று மார்கண்டேயன் இருக்கும் தைரியத்தில் பேசிவிட்டாள்.

"செல்லமா வளர்த்தா பேசுவாங்களோ? நீயும் சான்ஸ் கிடைச்சதும் பேசுதன்ன?" என்றான் பாலா.

மார்கண்டேயன் மனோவை பார்க்க, அவள் கிருஷ்ணா சென்ற திசையை தான் பார்த்து நின்றாள். 'அவன் அப்படி நடக்க தனி காரணம் எதுவும் இருக்குமா என அவளுக்கு தெரியாது, பிள்ளைகள் வீட்டில் நடக்கும் விஷயத்திலிருந்து தான் கற்றுக்கொண்டு அதை அப்படியே பின்பற்றுவர் என மருத்துவ உலகம் கூறுகிறது. இங்கு, யாரும் யாரையும் அடிப்பதுமில்லை, கத்தி சண்டையிடுவதுமில்லை, அவர்கள் அதை பார்த்து கற்றுகொண்டு தான் இப்படி நடக்கிறார்கள் என்ற கூற்றிற்கு இடமே இல்லாதது தான் மனோவின் தாய் வீடு. பின்னர் எங்கிருந்து, இவ்வளவு அடம், ஆக்ரோஷம், கோவம் எல்லாம் என்றால், அது மனோவிடமிருந்து மனரீதியாக கடத்தப்பட்டிருக்கலாம். பெரியவன் வயிற்றில் வந்தபோது, இறுதி வருட படிப்பு, அதற்கான டென்ஷன், அரியர் இன்றி முடிக்க வேண்டிய படபடப்பு, மாமியார் வீட்டு புது சூழ்நிலை, திடீரென கிடைத்த அதிக பொறுப்பு, திருமதி மார்கண்டேயனாக நடக்க வேண்டிய கட்டாயம் என நிறைய அவளுள் இருந்தது, சிறியவன் வந்தபோது, 'இந்த பிரசவமும் அவனின்றியே முடிந்துவிடுமோ?' என்ற போராட்டம், அவனை அதிமாக தேடியது அதனால் அவளுக்கு அவள் மீதே வந்த எரிச்சல், மாமியார் வீட்டில் இருக்க மாட்டேன் என வந்துவிட்டதால் சுற்றியுள்ளவர்கள் பேசிய பேச்சும் கொடுத்த இலவச அறிவுரையும், அதனால் வந்த மன உலைச்சலும் என இத்தோடு தான் பிறந்தான் கண்ணன். அதன் பிறகு இருவரிடமும் அவள் சிரித்த சந்தோஷமான முகத்தை காட்டியதில்லையே? எங்கும் கூட்டிச்சென்றதில்லை, உடன் சேர்ந்து விளையாடியதில்லை, செல்லம் கொஞ்சியதில்லை, எதுவுமே இல்லை. இருவரையும் சாப்பிட வைப்பாள், தூங்க வைப்பாள், படிக்க வைப்பாள், மனதுக்குள் குழப்பத்தோடு இருப்பாள். அப்படியென்றால், பிள்ளைகளை தவிக்க விட்ட அவள் எவ்வளவு பெரிய சுயநலவாதி. தள்ளி இருந்து அவன் தண்டித்தான் எனில் கூடவே இருந்து அவளும் அல்லவா பிள்ளைகளை தண்டித்திருக்கிறாள்' என யோசித்து அவளுக்குள் அவளே பேசி, சண்டையிட்டு, மறுதலித்து, கை, கால் எல்லாம் நடுங்கவே துவங்கிவிட்டது அவளுக்கு.

மார்க், அவளிடம் கேட்டுக்கொண்டு நின்றவன் அவள் திடிரென்று நடுங்கவும், "ஹே மனோ! என்னடி? என்னாச்சு?" என அவளின் நடுங்கும் கையை பிடித்து தேய்த்தான், "என்ன இருந்தாக்குல திடீர்னு நடுங்குற?" என கேட்டும் அவள் வாசலையே தான் பார்த்தாள்.

"மனோ! அவ லூசு மாதிரி உளறுறா, அத பெருசா எடுக்கியா நீ? இங்க பாரு" என பாலாவும் மறுபக்கம் வந்து அவள் தோளை தட்டினான். மல்லிகா சொன்ன, 'என்ன பிள்ளை வளர்க்கிறாள்!' என்ற வார்த்தைக்கு தான் அவள் அப்படி நிற்கிறாள் என நினைத்தனர்.

"போதுமா உன் பிரச்சனை தீர்ந்துருச்சா? எப்பவும் என்ன நடந்தாலும் உள்ள தான இருப்ப, இப்ப மட்டும் என்னத்துக்கு வந்த நீ? எங்க பேரனுக்கு நாங்க எப்படியும் செல்லம் குடுத்து வளக்குறோம், உனக்கு என்ன மல்லிகா? இதே கடைசியா இருக்கட்டும், என் பொண்ண சாடையா பேசுறது, என் பேரணுங்கள பேசுறதெல்லாம் வேணாம் பார்த்துக்கோ" என ஆண்டாள் திட்டிவிட, மல்லிகா அழுதே விட்டாள்.

"நா சொன்னதுக்கு கோச்சுகிட்டியா மனோ? இவனுங்க அளவுக்கு மீறி சேட்டை பண்றது உனக்கே தெரியும் தான?" என நேராகவே கேட்டாள்.

"பேச்ச விடுங்க. நா பாத்துக்குறேன் இனி" என்றுவிட்டான் மார்க். பாலா முறைக்க அழுதபடியே அவள் அறைக்குள் சென்றுவிட்டாள்.

"நா எதுவுமே சரியா பண்ணலையா?" என கேட்ட மனோ, "உன்னால தான் உன்னால தான் எல்லாம். நீ ஒழுங்கா எங்கூட இருந்துருந்தா, இவ்வளவு வந்துருக்குமா? பிள்ளைங்க குணமே போச்சு, இவ்ளோ நாள் நானும் இத கூட கவனிக்காம தான் இருந்துட்டேன். என் பிரச்சனையே பெருசு பெருசுன்னு இருந்துட்டேன். சின்னவன் யார் மேல கோவம்னாலும் என்னைய தான் அடிப்பான், எதுக்குனே தெரியாம, நாமளும் அடிச்சா இன்னும் அது பழக்கமாகும்னு அமைதியா போயிருக்கேன். ஆனா நாந்தான் காரணமா இருந்துருக்கேன்" என்றவள் அப்படியே அங்கிருந்த கட்டிலில் பொத்தென்று அமர்ந்து, "ம்ச் இவனுங்கள நல்லா வளக்குறேன்னு நெனச்சுட்ருந்தேன். இப்ப இப்படி வந்துட்டானுங்க. எப்படி இந்த பழக்கத்த மாத்த போறேன் நான்? அப்புறம் தனியா இருந்து வளக்குறேன்னு இப்படி வளர்த்துட்டான்னு தான பேசுவாங்க. அண்ணி சொன்ன மாதிரி? ஒரு பையனோட வளர்ப்புக்கு பின்னாடி ஒரு குடும்பமே அவன நம்பி வருமே அந்த பொறுப்போட தானே ஒரு அம்மா அவ பையன வளர்க்கணும், நா அப்படி இல்லையோ? என்னோட மைண்ட் செட் நிலையா இல்லாதனால நா இவனுங்கள விட்டுட்டேன்ல?" என எப்பவும் மனதிற்குள் பேசுபவள், இப்போது அனைத்தையும் வெளியேவே பேச, பாலா, ஆண்டாள், மார்கண்டேயன் மூவரும் அதிர்ந்து தான் விழித்தனர்.

"மனோ!" என மூவரும் மாத்தி மாத்தி அதட்டி அழைத்த பின்னரும், யோசித்தபடியே தான் அவர்களை பார்த்து விழித்தாள். அவளுக்கு எல்லாம் தெரிகிறது தான், வாய்விட்டே புலம்புகிறோம் சுற்றி புருஷன், அம்மா, அண்ணா என மூவர் நின்று அவளை தான் பார்த்திருக்கின்றனர் என்று, ஆனாலும் பிள்ளைகளை அவள் விட்டுவிட்டாளோ என்ற எண்ணத்திலிருந்து வரமுடியவில்லை அவளால்.

"என்ன மனோ?" என்றான் மார்கண்டேயன் அவளின் அமைதியான பார்வையில்,

"இவ்ளோ நாள் சரிபண்ணல, அதுக்கு ட்ரை பண்ணல ஓகே. பட் இனி எனக்கு லைஃப் இங்க தான். வேலை இங்க தான், பசங்களோட அடுத்த பனிரெண்டு வருஷ படிப்புன்னு எல்லாம் இங்க தான். உங்கள பத்தியோ நீங்க எப்ப வருவீங்கன்னோ? இல்ல நாம அங்க போகணுமோன்னோ எந்த குழப்பமும் இனி கிடையாது, அதெல்லாம் நிச்சயம் இல்லன்னு முடிவாகிடுச்சு, சோ இனி என் ரூட் க்ளியரா தானே இருக்கு, இப்ப சின்ன பசங்க தானே ரெண்டு பேரும்? அப்ப இனி அவங்கட்ட கான்சன்ட்ரேட் பண்ணாலும் போதுமே, சரியா வழிநடத்திடலாமே அவனுங்கள, இது ஒன்னும் அவ்ளோ லேட் இல்லையே? கரெக்ட்" என்றாள் முடிவெடுத்தவளாக, அதன்பின் முகம் தெளிந்துவிட்டது.

ஆண்டாள் ஏதோ பேச வர, பாலா, "பேசாம வாம்மா" என அழைத்து சென்றுவிட்டான்.

"அடியே மனோ! எங்கிட்ட என்ன சொன்ன நீ?" என அவள் முதுகில் அடித்தான் மார்க்.

"என்ன சொன்னேன்?"

"அமெரிக்கா வரேன்னு. இப்ப வேறெதோ முடிவு பண்ணவளாட்டம் பேசுற? கிருஷ்ணா கோவமா நடந்துக்குறான், அத கொஞ்சம் கண்டிப்பு காட்டி திருத்தணும் விஷயம் அவ்வளவு தான். அதுக்கு நீ உங்க ஊர் மலை ரோட்ட புடிச்சு இமய மலை வரை போய்ட்டு வந்துட்ட. அதும் என்னைய அப்படியே இங்கன விட்டுட்டு"

"உளறாதீங்க" என அவனை அசட்டை செய்தவள், ஃபோனை எடுத்து தகப்பனுக்கு அழைத்து பிள்ளைகளை அழைத்து வர கூறி வைத்தாள்.

"ஏமாத்துற மனோ நீ"

"என்ன ஏமாத்துனேன் உங்கள?"

"அந்த இடத்த நம்ம பேர்ல முடிச்சா வரேன்னு சொன்ன. நா வி.சா ஏற்பாடு பண்ண ப்ளான் பண்ணிட்ருக்கேன்டி"

"இடத்த முடிச்சா தான?"

"அவ்ளோ நம்பிக்கையா உனக்கு? என் அக்கா உரிமை எடுத்து பேசுவா, அவ பிறந்தவீடு எப்பவும் வேணும்னு நெனப்பா, அதுக்காக நா கேட்டு ஒன்ன தரமாட்டேனுலாம் சொல்ல மாட்டா. என்னைய விட உனக்கு அவள நல்லா தெரியுமா?" என்றான் கோபமாகவே,

"போய் இடத்த உங்க பேர்ல முடிச்சுட்டு வந்து பேசுங்க, நா கேட்குறேன்" என பேச்சை முடித்துவிட்டாள்.

"அசர மாட்றாளே!" என்றவன், அடுத்த நிமிடமே சாம்பவிக்கு அழைத்தான்.

"சொல்லு மாரா. என்ன செய்ற? பிள்ளைக என்ன செய்றாங்க?"

"இருக்காங்கம்மா. நம்ம பரமசிவம் மாமா லேண்ட் லாஸ்ட் டைம் நா வந்தப்ப வாங்கினோமே, அதோட பத்திரம் வீட்ல தானம்மா இருக்கு?" என கேட்க,

"அந்த பதினைஞ்சு ஏக்கர் எஸ்டேட்டாயா?"

"ஆமாம்மா. அதான்"

"அது மாமாட்ட தான் இருக்குப்பா"

புருவம் சுருக்கியவன், "மாமாட்டயா? அவங்கட்ட ஏன் இருக்கு? அக்கா எல்லாத்தையும் அவ பொறுப்புல வச்சுருப்பா அதனால அவகிட்ட இருக்கணும் இல்ல உங்கிட்ட இருக்கணும் மாமாகிட்ட ஏன் இருக்கு?"

"அவனுந்தான எல்லாத்தையும் பார்த்துக்குறான். நீ காலைல பைக்குக்கும் இப்படி தான் பேசிட்ட. அப்படி பேசாதடா காலைல இருந்து அவன் முகமே சரியா இல்ல. பாவம்" என்றார் கரிசனையாக,

"பைக்க கேட்டா, அங்க வேணும் நீ எப்படியும் போன்னு போசுறாங்க, அப்ப நானும் அப்படித்தான் பேசுவேன். அதவிடுங்கம்மா பத்திரத்த வாங்கி வைங்க. எனக்கு அத வச்சு வேற ஒரு வேலை இருக்கு. அத என் பேருக்கு மாத்திடலாம்னு இருக்கேன். அடுத்த வாரத்துல ஒருநாள் போய்ட்டு ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்துருவோம்" என சொல்ல,

"சரிப்பா, லதா வரவும் அவகிட்டையும் சொல்லி வைக்கிறேன்"

"சரிம்மா" என வைத்தவன், அடுத்ததாக அவன் மாமாவிற்கு அழைத்தான், "சொல்லு மாரா!" என்றவர் குரலே வித்தியாசமாக தான் இருந்தது.

"மாமா, அந்த பரமசிவம் மாமாட்ட வாங்கினோமே அந்த லேண்ட் பத்திரம் உங்கட்டயா இருக்கு?" என கேட்க,

ஒருநொடி தடுமாறினாலும், "ஆமா ஆமாப்பா. என்னாச்சு? அது ரிஜிஸ்டர் பண்ணி கொண்டு வந்து எங்கிட்டயே இருந்தது. அப்புறம் என்னோட எல்லா டாக்குமெண்ட்டோட சேர்த்து கொண்டு லாக்கர்ல வச்சுருக்கேன். சொல்லு மாரா"

"ஓ! சரி நாளைக்கு எடுத்துட்டு வந்துடுங்க. ரிஜிஸ்டர் ஆபிஸ்ல டோக்கன் வாங்கிடுங்க, அடுத்த புதன் அத அம்மா பேர்ல இருந்து என் பேருக்கு மாத்திடலாம்னு இருக்கேன்" என சொல்ல,

"இப்ப என்னப்பா அவசரம்?" என்றார் அவர் அதைவிட அவசரமாக,

"தேவைபடுது மாமா. நா அதுக்கு வேறொரு ப்ளான் வச்சுருக்கேன்"

"என்னன்னு விட்டுசொல்லு மாரா. சரியா தப்பான்னு நானும் சொல்வேன்ல?" என்றார் மாமாவும்.

"இல்ல முழுசா டிசைட் பண்ணல மாமா. பட் எதுக்கும் ரெடியா இருக்கணும். அதுக்கு பர்ஸ்ட் ஸ்டெப் அந்த லேண்ட்ட நா என் நேமுக்கு மாத்தணும். நீங்க டோக்கன் வாங்குங்க நா செவ்வாய் கிழமை நைட் அங்க வந்துடுவேன்" என்றுவிட்டான்.

இரவு உணவு அமைதியாக கழிந்தது. இரவு மனோ நடுவில் படுக்க, கிருஷ்ணாவும், கண்ணனும் இருபக்கம் படுத்தனர். அவர்கள் மூவரும் கிழே படுத்துக்கொண்டதால், மார்க் கட்டிலில் படுத்து அவர்கள் மூவரையும் தான் பார்த்திருந்தான். வளவளத்துகொண்டே இருந்தனர், சொக்கிய கண்களோடும் அவர்களுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தாள் மனோ. அவன் ஒருவன் அங்கிருப்பதையே கண்டுகொள்ளவில்லை அவள். கண்ணா மட்டுமே இவனை திரும்பி பார்ப்பதும் அவன் அம்மா காதில் ஏதோ சொல்வதுமாக இருந்தான்.

"எங்கிட்ட வாரியா?" என கேட்க, வேகமாக மறுத்து தலையசைத்தவன், பட்டென்று மனோ வயிற்றில் ஏறி படுக்க, "கீழபடு, அம்மா மேல நா கால் போடுவேன்" என அவனை அப்படியே உருட்டிவிட்டான் கிருஷ்ணன். இருவரும் நடுவில் அவளை வைத்தே அடி உதையில் இருக்க, பாதி அடி மனோவிற்கு தான் விழுந்தது, சிறிது நேரம் முக சுழிப்போடு அந்த வலியை பொறுத்தவள், அதிகமாக வலிக்கவும், "பேசாம படுங்க இல்ல அடி வச்சுருவேன்" என மிரட்டலாக சொல்லவும், அந்த குரலுக்கு சட்டென்று அமைதியாகி படுத்துவிட்டனர்.

"ரொம்ப பயந்தவனுங்க தான். ஆக்ஷன் காட்டுங்கடா நல்லா!" என அவர்களை பார்த்தே சிரித்தபடி படுத்திருந்தவனுக்கு, மனோவின் முகம், பரிவை தந்தது. இன்று ஒருநாளில் அவளின் பாட்டை பார்த்துவிட்டான். இதில் வேலைக்கும் வேறு செல்கிறாள். வீட்டில் அத்தனை பேர் இருந்தும் இந்த இருவருக்கும் அனைத்திற்கும் அவள் தான் வேண்டும். கிருஷ்ணாவும், கண்ணாவும் வெளியே விளையாட சென்றிருக்கும் நேரத்தில் கூட வேகமாக சில வேலைகளை பார்த்து வைக்க வேண்டும் என பார்க்கிறாள். அவன் தனிமை தேடிய பொழுதுகள் அவனையே இப்போது சம்மட்டியால் சாத்தியது போலிருந்தது. தள்ளி நின்று பார்ப்பவனுக்கே மூச்சு வாங்குகையில் அதனுள் இருந்து மூன்று வருடங்களாக அனுபவிப்பவளுக்கு எவ்வாறு இருக்கும் என நிச்சயம் புரிந்தது அவனுக்கு.

அவளின் கோபம் கூட இந்த அதீத ஓட்டத்தால் வந்த எரிச்சலில் தான். அவளுக்கென ஒன்றை செய்யவோ யோசிக்கவோ நேரமின்றி ஒரு ஓட்டம் ஓடுகிறாள். வீட்டில் அத்தனைபேர் இருந்தாலும் அவள் பிள்ளைகள் அவள் பொறுப்பு அதை அவள் தான் பார்க்க வேண்டும் என செய்கிறாள். இதற்கே அவளுக்கு நாளும் பொழுதும் சரியாக இருக்கிறது. எல்லாவற்றையும் அவன் அவர்களை பார்த்தபடி யோசித்திருக்க, அந்த மூவரும் தூங்கியிருந்தனர். சிரிப்புடன் அவர்களை பார்த்தவாறே தானும் கண்ணயர்ந்தான்.

பாதி ராத்திரியில், சலசலக்கும் சத்தத்தில், என்னவோ என கண்ணை திறக்க, மனோ தான் விரித்து தூங்கிய பாயையும் போர்வையும் அலசிகொண்டிருந்தாள் பிள்ளைகள் எழுந்துவிட கூடாதென மெல்லிய சத்தத்தில் தான் செய்தாள். இவன் தான் விழித்து எழுந்தமர்ந்திருந்தான். இப்போது வேறொரு பாயில் பிடுத்திருந்தனர் பிள்ளைகள் இருவரும்.

"இப்ப ஏன் அலசிட்ருக்க?" என வந்து நின்றவனை திரும்பி பார்த்தவள் முகத்தில் அவ்வளவு சோர்வு.

"கண்ணன ரெண்டு மணிக்கு பாத்ரூம் கூட்டிட்டு வருவேன், ஒருக்கா கூட்டிட்டு வந்து விட்டுட்டா பாய்ல யூரின் இருக்க மாட்டான். இன்னைக்கு எந்திக்க முடியல கொஞ்சம் தூங்கிட்டேன், ஒரு வேலைக்கு ரெண்டு வேலையாக்கிட்டான்" என பதில் சொல்லியவாறு, அலசிய போர்வையை அங்கேயே பாத்ரூம் கம்பியில் விரித்து விட்டாள். பாயை ஓரமாய் சாய்த்து நிற்க வைத்தாள்.

"இங்கேயே போடுற? வெளில போய் போட்டு வரவா நான்?"


"ம்கூம் எப்படியும் திரும்ப துவைக்கணும். காலைலனா ரொம்ப வாட அடிச்சுடும், அதான் சும்மா தண்ணில முக்கி போட்டேன். காலைல மெஷின்ல போட்ருவேன்" என்றவள் அப்படியே சென்று இருவருக்கும் நடுவில் மீண்டும் படுத்துக்கொண்டாள்.
 
"தூக்கத்துல இருக்கனால, கடிக்காம பதில் சொல்லிட்டு போய்ட்டா" என நினைத்தவனும் வந்து அவனிடத்தில் படுத்துக்கொண்டான். அவன் அறியாதது, பாதி ராத்திரியில் எழுந்தாள் என்றால் விடியும் வரை தூக்கம் அண்டாது அவளுக்கு, இன்று மீண்டும் சென்று படுத்த நொடி மறுபடியும் தூங்கியிருந்தாள்.

மறுநாள் மதியமே லதாவிடமிருந்து அழைப்பு வந்துவிட்டிருந்தது மார்கண்டேயனுக்கு. கிஷோரை மறுவீடு கொண்டு விட்டுவிட்டு வந்ததும் சாம்பவி சொல்லியிருக்க அழைத்துவிட்டாள்.

"எதுக்குடா அந்த நிலத்த உன் பேருக்கு மாத்த போற?" என தான் எடுத்ததும் ஆரம்பித்தாள்.

"எனக்கு தேவைப்படுதுக்கா"

"அதான் என்னன்னு கேட்கிறேன்"

"செய்யும்போது சொல்லுவேன். எனக்கு இப்ப அத மாத்திட்டா தான் வேல்யு பார்த்து என்ன பண்றதுன்னு ப்ளான் பண்ண முடியும்"

"சரி அப்ப எனக்கு கேஷா ட்ரான்ஸ்பெர் பண்ணிடுறியா? இல்ல வேற எங்கையும் வாங்குறதுல ஷேர் பண்ணிப்போமா?" என்றாள் சாதாரணமாக,

"என்ன ஷேர்?" என்றான் நேராகவே, அவன் மனைவியின் வார்த்தைகள் தான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்ததே.

"என்னடா? லேண்ட ஃபுல்லா உன் நேமுக்கு மாத்திக்குற தான அப்ப அதுக்கான என்னோட ஷேர் எனக்கு வரணும்ல?"

"உனக்கு எதுக்கு தரணும்? அது நா எனக்குன்னு வாங்கினது"

"உனக்குன்னு வாங்குனியா? அப்படிவேற தனியா வாங்குவியோ? அப்ப நா எங்க போவேன்? என்ன உனக்கு உன்னோடதுன்னுலாம் புதுசா பேசுற" என்றாள் படபடவென,

"லூசாக்கா நீ. அந்த லேண்ட் நா என்னோட சம்பாத்தியத்துல வாங்குனது. பர்ஸ்ட் டைம் வாங்குறோமே அம்மா பேர்ல வாங்கினா நல்லதுன்னு மாமா சொல்லவும் தான் சரின்னு சொன்னேன். இல்லனா என் பேர்ல தான் முடிச்சுருப்பேன்"

"உன் சம்பாத்தியம்னா? அப்ப நா யாருடா? உன் அக்கா அதுல இல்லையா?" என சண்டைக்கு தான் வந்தாள். அவளால் அவன் பேச்சை பொறுமையாக கேட்கவே முடியவில்லை.

"நீ வாங்குறதுலலாம் எனக்கு பங்கு தந்துட்டா இருக்க?" என்றான் அவனும் எரிச்சலாக, மனைவி சொல்வதுபோல் அல்லவா அக்கா பேசுகிறாள்.

"நா அடுத்த வீட்டுக்கு போனவடா. ஆம்பள பிள்ள நீ அதுல எதிர்பார்ப்பியா? யாரு உன் பொண்டாட்டி சொல்லி குடுத்தாளா? அவ வீட்ல இருந்து உனக்கு என்னத்த வாங்கி குடுத்துட்டாளாம்? என் பிறந்தவீட எனக்கு இல்லாம ஆக்க பாக்குறா பாரு. போய் ஒரு நைட் தங்கல நீ அங்க. அதுக்குள்ள உன்னோடது உனக்குன்னு பேசறல்ல? அப்ப நா எங்க போறது. அப்பாக்கு அப்றம் நீ தான என்ன பாக்கணும்? இப்பவே இப்படி பேசுற நீ" என அவள் ஆரம்பித்து ஒருமணி நேரத்திற்கும் மேல் அவள் மட்டுமே பேசியபடி இருக்க, இங்கு இவனுக்கு தலைவலியே வந்துவிட்டிருந்தது.

"நா நாளைகழிச்சு வருவேன் வந்து நேர்ல பேசுறேன் உன்ட்ட" என வைத்தேவிட்டான்.

லதா விடாமல் புலம்மியதில் விஷயம் சுரேந்தர் காதுக்கும் சென்றது, "அவன் சொத்து அது, அத அவன் என்ன வேணா செய்வான். வாய மூடிட்டு கிளம்பு நீ" என அதட்டியும், "வரமாட்டேன்!" என இருந்து கொண்டாள்.

"வந்தா வா வராட்டி இங்கேயே இரு. ஆனா அவன் தரமாட்டேன்னு சொன்னத வாங்கிட்டு அந்தபக்கம் வந்திடாத நா மனுஷனா இருக்க மாட்டேன்" என மிரட்டிவிட்டே பிள்ளைகளை மட்டும் அழைத்துக்கொண்டு அவன் கிளம்பவிட்டான்.

சாம்பவி தான் திட்டினார், லதா அப்போதும் தைரியமாகவே தான் இருந்தாள், "என் புருஷன நா சமாளிப்பேன். கூட ரெண்டு நாள் தான? இருந்து என் ஷேர வாங்கிட்டு தான் போவேன்" என இருந்து கொண்டாள்.

ஆனால் மறுநாள் பழூரில் இருக்கும் மார்கண்டேயனின் நண்பன் ஒருவனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

"உன் மாமாவ இங்க ரிஜிஸ்டர் ஆபிஸ்ல பார்த்தேன்டா, அதான் ஊர்ல இருக்கனா நீயும் இங்க தான இருப்பன்னு தேடுனேன் உன்ன காணும். ஊர்ல இல்லையா நீ?" என்றான் அவன்,

"இல்லடா. நாந்தான் ஒரு லேண்ட் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண டோக்கன் போட சொன்னேன். அதுக்காக வந்துருக்காங்க. நா இங்க என் வைஃப் வீட்ல இருக்கேன்"

"டோக்கன் போடவா? இல்லையே லேண்ட் ரிஜிஸ்டர் பண்ற லைன்ல ரிஜிஸ்டரர் முன்னாலல நிக்றாங்க. கூட அவர் மகன் கிஷோர் அவனோட வைஃப் எல்லாம் நிக்றாங்கடா. அந்த பொண்ணோட ஃபேமிலி கூட நிக்குதுடா. அவங்களுக்குள்ள எதுவும் மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன்"

"வீட்ல சொல்லாம, நா இங்க இருக்கேன் என்ட்ட சொல்லாம செய்ய மாட்டாங்களே?" என அவன் வாய்விட்டே யோசிக்க,

"அப்ப ஒரு நிமிஷம் இரு என்ன விஷயமான்னு தெரிஞ்சுட்டு கூப்பிடுறேன்" என அவன் வைத்துவிட, மார்க் அவன் அம்மாவிற்கு அழைத்து மேலோட்டமாக கேட்டு பார்த்தான், அவருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

"கிஷோருக்கே அவங்க வீட்ல எதுவும் சொத்து எழுதி தந்தாலும் அத ஏன் நம்மகிட்ட மறைக்கணும்?" என தீவிரமாக யோசித்தான் மார்க். வெளியாட்களை அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டான் தான், ஆனால் வீட்டாட்களை சிறுவயதிலிருந்து பார்த்து பார்த்து வளர்த்தவர்களை சந்தேகிக்க மனம் வரவில்லை.

சற்று நேரத்தில் அவன் நண்பனே மீண்டும் அழைத்தான், "ஏதோ லேண்ட் தான்டா ரிஜிஸ்டர் பண்றாங்க. உங்க மாமா தான், அவர் பையனுக்கும் மருமகளுக்கும் பேர்ல மாத்தி தராரு. பொண்ணுக்கு டவ்ரி நிறைய வாங்கிருப்பாரோ? ஒன்றைகோடி மதிப்பு சொத்த மாத்தி தராரு" என்க,

"எந்த லேண்ட்னு தெரியுமாடா?" என்றான், ஏதோ உள்ளே உறுத்தவே அதை கேட்டான். 'அவன் மாமா அவனுக்கு மறைத்து அவ்வளவு பெரிய சொத்தை ஏன் தரவேண்டும். மகனுக்கு செய்வதை அவனிடம் பகிர்ந்தால் என்ன?' என நினைத்தபடி இருக்க,

"நம்மூர்ல மேர்க் சைடிருக்க பதினைஞ்சு ஏக்கர் நிலம்டா. எஸ்டேட் நிலம். அது உன் மாமா எஸ்டேட்னே இன்னைக்கு தான்டா தெரியுது. ஏன்டா, சும்மா போட்டு வச்சுருக்கீங்க. எதாவது போடலாம்ல அதுல" என அவன் பேச,

"நீ அவர ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணவிடாம பிடி ஒருமணி நேரத்துல அங்க இருப்பேன் நான். யார் நிலத்த யாரு பட்டுவாடா பண்றது?" என்ற அவன் கோபத்தில், அவன் நண்பனே அதிர்ந்து விட்டான்.

"எப்படியாவது ஹோல்ட் பண்ணு. நா வந்துட்டே இருக்கேன்" என்றவன், நேராக பள்ளிக்குச் சென்று மனோவையும் அழைத்துக்கொண்டு தான் கிளம்பினான். வரமாட்டேன் என்றவளை அடமாக இழுத்துக்கொண்டு கிளம்பியிருந்தான்.

 
லதா நீயெல்லாம் என்ன ஜென்மம் 😡😡😡😡 அசிங்கமா இல்ல உனக்கு அவன்கிட்ட பங்கு கேட்க 🤮🤮🤮
உன்னை விட பெரிய அயோக்கியன் நம்பிக்கை துரோகி உன்னோட மாமா இருக்கான் மொத்தமா முழுங்கப் பார்க்குறான் 🤬🤬🤬🤬
ரெண்டும் சுயநலம் பிடிச்ச பேய்ங்க 👹👹👹

மார்க் உனக்கு இதல்லாம் தேவை தான்..... 😤😤😤
பொறுப்பு ஏத்துக்க முடியாதவனுக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம் குழந்தை 😬😬😬😬

உன் பிள்ளைங்களுக்கு சேர வேண்டியத கண்டவன் எல்லாம் அனுபவிக்கிறான்... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Mama land paiyanuku mathi kodukurara 🤣🤣🤣
Aiya marku idam Unga amma perula irukunu sonniye pa. Unna petha antha deivame pasamalar ku eppoya eluthi koduthuchu. Lathake viboothi adicharu paru pasakara mama. 🤣🤣🤣
Intha pasathatha Mano purinjukalainu unaku kovamada.
Adei athooo theriyuthu paru America athuku inga irunthe tata katidu
 
A
லதா நீயெல்லாம் என்ன ஜென்மம் 😡😡😡😡 அசிங்கமா இல்ல உனக்கு அவன்கிட்ட பங்கு கேட்க 🤮🤮🤮
உன்னை விட பெரிய அயோக்கியன் நம்பிக்கை துரோகி உன்னோட மாமா இருக்கான் மொத்தமா முழுங்கப் பார்க்குறான் 🤬🤬🤬🤬
ரெண்டும் சுயநலம் பிடிச்ச பேய்ங்க 👹👹👹

மார்க் உனக்கு இதல்லாம் தேவை தான்..... 😤😤😤
பொறுப்பு ஏத்துக்க முடியாதவனுக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம் குழந்தை 😬😬😬😬

உன் பிள்ளைங்களுக்கு சேர வேண்டியத கண்டவன் எல்லாம் அனுபவிக்கிறான்... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Ini therijupan sis elame aprm thirunthuvan
 
Mama land paiyanuku mathi kodukurara 🤣🤣🤣
Aiya marku idam Unga amma perula irukunu sonniye pa. Unna petha antha deivame pasamalar ku eppoya eluthi koduthuchu. Lathake viboothi adicharu paru pasakara mama. 🤣🤣🤣
Intha pasathatha Mano purinjukalainu unaku kovamada.
Adei athooo theriyuthu paru America athuku inga irunthe tata katidu
😂😂😂 Ungaluku kusy ah irukula
 
Top