எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 6

subasini

Moderator
மனம் - 6

கம்பீரமாகத் தைரியமாகத் தெளிவாக முடிவெடுக்கும் அதியமான்... தன் தாயை அன்பால் கட்டி வைத்திருக்கும் அதியமான்... தம்பியைக் கண்களில் வைத்துப் பாதுகாக்கும் சிறந்த அண்ணனாக... நல்ல மகனாகப் பாசம் உள்ளவனாக,
இப்படிப் பலதரப்பட்ட முகங்களைக் கண்டவளுக்கு, அவன் மேல் மதிப்பும் மரியாதையும் முதலில் தோன்றியது. அந்த மதிப்பும் மரியாதையும் ஆடவன் மேலொரு இளம் பெண்ணிற்குத் தோன்றுவது, அடுத்தபடி அது காதலாகவே மாறும் என்பது தான் இயற்கையின் நியதியாக நடைமுறையில் உள்ளது.

இதோ நம் நாயகிக்கும் அவன் வாழ்க்கையின் இந்தப் பக்கங்களைக் கண்டு அவன் மேல் காதல் வேறொன்றியது. அழகைப் பார்த்து வரும் காதலும்... அந்தஸ்தைப் பார்த்து வரும் காதலும் மனதில் பரவசத்தை உண்டாக்கும். ஆனால் நல்ல குணமும் , அன்பும் மற்றும் பாசமும் நிறைந்த நல்லக்குடும்பத் தலைவனாகப் பொறுப்பாக இருப்பவனைப் பார்த்துக் காதல் கொண்டாள்.

அந்தக் காதல் மண்ணின் உள்ளே புதைந்திருக்கும் ஆணிவேர் போல் பெண்ணின் மனதின் அடி ஆழம் வரை சென்று உறுதியாகத் தன் காதலை நிலைத்து நிற்கும்.

அவள் காதல் பிறந்த தருணமும் நேரமும் மிகவும் சிறிய கால அளவாக இருந்த பொழுதும், அவளைப் போன்று தைரியமான பெண்ணிற்குத் தோன்றும் காதல் சில நொடிகளே ஆனாலும் மிகவும் ஆழமாக இருக்கும் என்பதற்குத் தாரா, சிறந்த உதாரணமாக இருப்பாள்.

தனக்குக் கொண்டு வந்து தந்த, பல ரசத்தைக் குடித்தபடியே அதியமானைப் பற்றித் அசைபோட்டுக் கொண்டிருந்தாள். சொல்லும்படியான அளவு அழகொன்றும் இல்லை தான்... வெள்ளாவியில் வெளுத்த வெள்ளையும் இல்லை. ஆனால் ஆணுக்கு உரியக் கம்பீரம் இருந்தது. அதனால் உற்றுப் பார்க்க வைத்தவனின் பாசமும் அன்பும் அவளை ஈர்த்தது. ஒர் ஆணின் மேல் பெண்ணின் மனதில் ஏற்படும் ஈர்ப்புக் காதலாகவே இருக்கும்.

இதோ தாராவிற்கும் அதியமான் மேல் காதல் வந்தது. தன் காதல் வந்த நேரம் எந்த மாதிரியான சூழ்நிலையில் வந்தது என்பதை உணர்ந்தத் தாராவிற்குத் தன் மேல் கோபமும் வந்தது.

நாமும் மற்ற பெண்களைப் போல் தான் போல என்று மனதில் வேதனையும் உண்டானது. இப்பொழுதுத் தாரிகாவின் நிலையை நன்றாக உணர்வும் முடிந்தது. தன்னைப் போல் தானே அவளுக்கும் சதீஷின் மேல் காதல் தோன்றுவதற்குக் காரணங்கள் பலவும் உண்டாகி இருக்கும். அவளிடம் கோபத்தைக் காட்டிய தன் மேல் மேலும் கோபம் வந்தது.

இனி இந்தச் சூழ்நிலையை எப்படியாவது கடந்து வர வேண்டும். அதற்கு முதலில் நாம் தைரியமாக இருக்க வேண்டும் என்று பலவாறு சிந்தித்துத் தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டிருந்தாள் அதற்கு நேரம் அவளுக்குத் தேவைப்பட்டது.

மெல்லப் பழரசத்தைக் குடித்து முடித்துப் பணத்தைச் செலுத்தி விட்டுத் திரும்பியவளின் அருகில் வந்து நின்றான் அதியமான்.

வந்து நின்றவனை நிலையோ மிகவும் அபாயமானதாக இருந்தது. அவன் முகத்தில் இதுவரை பார்க்க முடியாத அளவுக்கான கோபத்தைச் சுமந்திருந்தான்.

இரண்டு நாட்களின் சோர்வும், உறக்கம் இல்லாத கண்களும் கலைந்த தலையும், மிகவும் சாதாரணமாக வீட்டில் உடுக்கும் ஆடையுடன் தன் முன்னே நின்றிருப்பவளின் தரத்தை ஆராய்ந்தான் அதியமான்.


மனதில் அவளின் மேல் நல்ல அபிப்பிராயம் குறையத் தொடங்கியது. ஏற்கனவே தன் தம்பியின் விபத்திற்குக் காரணமானவள் என்ற வன்மம் அவன் மனதில் இருந்த போதும்... அவளை நேரில் கண்டதும் அவளின் நிலையைப் பார்த்து அதிகரித்தது. ஒருவேளை நவநாகரீக நங்கையாக, நலினமாக இருந்திருந்தால் அவன் மனதை அசைத்து இருப்பாளோ பெண்ணவள். என்னவோ நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் சாதாரணப் பெண்ணாகவே தோற்றமளித்ததால் அப்படி ஒன்றும் அவன் மனதை அசைக்கவில்லை அவள்.

அவளின் தோளுக்குக் கீழே பிடித்துத் தன் அருகில் இழுத்தவனின் வேகத்தில் , உடல் நடுங்கியது அதியமானின் செயலைப் பார்த்துப் பயந்த இனியவன், தாராவை வேகமாக அந்தக் கேண்டினில் இருந்து வெளியே கூட்டிட்டு வந்தான்.

அங்கே மரத்தின் அடியில் ஓரமாக நின்று அவளிடம் பேசத் தொடங்குவதற்குள் மின்னல் போல வந்த அதியமான், மீண்டும் அவளைத் தன்னிருகே இழுத்தவன்... மனதில் இருக்கும் வன்மம், சினம் எல்லாத்தையும் அவள் முன் கொட்டத் தொடங்கினான்.

"உனக்கு யாரு அதிகாரம் தந்தது என் தம்பியின் காதலைப் பிரிப்பதற்கு. காதலர்களுக்கு நடுவில் உனக்கு என்ன வேலை... என் தம்பியை அடிக்க என்ன உரிமை இருக்கு" என்று சரமாரியாக வார்த்தைகளை விட்டான் அதியமான்.

" நீ அவனை அவமானப்படுத்தியதால் தான் என் தம்பி இன்னைக்குப் படுத்துட்டு இருக்கான். அவன் மட்டும் எந்திரிச்சு வரட்டும்... அதுக்கப்புறம் இருக்கு உனக்கு... என்ன நடந்தது என்று அவன் தெளிவாகச் சொல்லட்டும்... அவன் சொன்ன வரைக்கும், அவன் இந்த நிலைமைக்கு நீ மட்டுமே காரணம்... உன்னை நான் விடமாட்டேன்" என்றான் அதியமான்.

"ஆமாம் யாரு டி நீ... அவன் காதலிக்கும் பெண்ணின் அக்காவா இல்லை தங்கச்சியா... என்று கேட்டான்.


அப்பொழுதுதான் தாராவிற்குத் தெரிந்தது, தான் தாரிகாவின் இரட்டைப் பிறவி என்று சதீஷிற்கே தெரியாது, 'ஐயோ' என்றானது அவளுக்கு.

"நீ யாராகவேனா இருந்துக்கோ. இனிமேல் சதீஷோட காதலிக்கு எதுவுமாக நீ இருக்காதே... அப்படி நீ அவளுக்குத் தோழியாகவோ... கிளாஸ்மேட் ஆகவோ இருந்தாலும் இந்தக் காதலை உன்னாலே நான் பிரித்து விடுவேன் பார்த்துக்கொள்" என்று மிரட்டினான் அதியமான்.

தாரிகாவின் காதலுக்குத் தானே எதிரியாக வந்து நிற்போம் என்று அந்தக் கணம் அவள் நினைக்கவில்லை. மனதில் சொல்லில் அடங்காத துயரம் தோன்றியது. எல்லா வகையிலும் தரிகாவைப் பாதுகாக்க நினைக்கும் தன்னை இப்படிக் கூறி விட்டானே என்ற வேதனை அவள் மனதில் ஒரு பெரிய பூகம்பத்தை உண்டாக்கியது.

என்ன செய்ய எப்படித் தாரிகாவின் காதலைச் சேர்த்து வைக்க என்று சிந்திக்கத் தொடங்கினாள் தாரா. அவள் கர்ப்பத்தை வீட்டில் இருப்பவர்களிடம் மறைக்க வேண்டும் என்ற சூழ்நிலையும், அதியமானின் மிரட்டலும் இனி என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்குத் தெளிவாக உணர்த்தியது.

கண்களில் கண்ணீரோடு அவன் முன்னே கூனிக் குறுகி நின்றுக் கொண்டிருந்தாள் தாரா. எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்து விட்டான்... பேசி விட்டான் என்ற துயரம் அவளை வாட்டியது.

சற்று முன் உண்டான நேசமும் காதலும்... அவள் மனதில் உதித்த மறுகணமே அஸ்தமனமாகியதில் இதயத்தில் உண்டாகிய வேதனையின் அளவு அதிகமானதில், அவள் உடலே அவளுக்குப் பாரமானதில் அங்கே நிற்க முடியாமல் தவித்தாள் .

தனக்குத் தோன்றியக் காதலும் ரகசியமாகிப் போனது... அந்தக் காதல் தோல்வியும் ரகசியமாகிப் போனது. அவள் ஆழ் மனதில் புதைத்து விட்டான் வார்த்தைகளின் வீரியத்தில். அவனிடம் பேச வார்த்தைகளற்று அமைதியாகவே நின்றிருந்தாள்.

தன் முன் மௌனச் சாமியாராக நின்று கொண்டிருக்கும் தாராவின் மேல் உண்டான கோபத்தில், "என்ன அப்பாவியான என் தம்பி முன்னாடி மட்டும் தான், உன்னால் வீர வசனம் பேச முடியுமா? இப்போது பேசுடி எதுவாக இருந்தாலும்... சொல்லு என்ன பண்ணனும் உனக்கு... நான் பாத்துக்குறேன்... நீ தடுத்தாலும் சரி அவன் காதலைச் சேர்த்து வைக்க எனக்குத் தெரியும். அவன் முதலில் எந்திரிச்சு வரட்டும் , அதுக்கப்புறம் உன் கண்ணு முன்னாடியே அவனுக்கு அவன் ஆசைப்பட்ட பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்... வந்து சாப்பிட்டுப் போ" என்று ஆணவமாகக் கூறினான் அதியமான்.

இனியவனோ "சரி விடுடா... இனி நம்ம, தம்பி வாழ்க்கையில் வரமாட்டாள், சும்மா நீ எதுவும் பண்ணாதே... விட்டு விடு டா, பாவம் அந்தப் பொண்ணு" என்று கூறினான் இனியவன்.

"ஆமாம் ஆமாம் பெண் என்பதால் தான் இவ்வளவு பொறுமையாகப்பேசிட்டு இருக்கேன்... அவள் ஒரு பொண்ணாகப் போயிட்டா டா" என்றான் சினத்தோடு அதியமான்

பெண் என்பதாலேயே அவளைச் சும்மா விடுகிறேன் என்று அர்த்தம் அவனுடைய சொல்லில் இருப்பது தாராவிற்குப் புரிந்தது.

இதையெல்லாம் கேட்டவளுக்கு மேலும் மேலும் அவமானம் ஆகிப்போனது இருவரின் முன்னே.

என்ன நடந்தது என்று புரியாமல் தன்னைக் குற்றம் சாட்டிக் கேள்விக் கேட்டு அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் இருவரின் செயலில் வேதனை உண்டானது. சதீஷை ஏன் அடித்தேன் என்று இப்போது வரைக்கும் அவர்கள் கேட்கவே இல்லை...
தாராவிற்குத் தன்னுடைய செயலின் வீரியம் தான் சதிஷை விபத்திற்குள்ளாக்கியது என்ற குற்ற உணர்வும் ஒரு பக்கம் வதைத்தது. பெண்ணிற்குப் பொறுமை எவ்வளவு முக்கியம் என்று அனுபவத்தில் உணர்ந்தாள் தாரா. இப்பொழுதுச் சிந்தித்து என்ன செய்வது என்ற கண்ணீர்ப் பெருக அவளை அங்கிருந்து ஓடச் சொன்னது அவள் குற்ற உணர்வு.

இனி என்ன என்பது தான் கேள்வியாக அங்கே அமர்ந்திருந்தது. எதுவும் சொல்லாமல் மெல்ல அங்கிருந்து நடந்தாள் தாரா. போகும் அவளையே வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் அதியமான்.

இந்த வெறுப்பு அவள் மேல் காதலாக மாறுமா? என்பது கேள்விக்குறியே? ஆனால் ஒரு பெண்ணை இவ்வளவு தரக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் அவமானப்படுத்துவோம் என்று அவன் வாழ்நாளில் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான்.

தன் தாயைப் போலத் தான் எல்லாப் பெண்களும் இந்த உலகில் என்று நம்பிக் கொண்டிருந்தவன் தான் இந்த அதியமான் அப்படிப்பட்டவன் ஒரு பெண்ணைப் பொது இடத்தில் வைத்து இதோ அவமானப்படுத்தியிருக்கிறான்.

தன்னால் பாதிக்கப்பட்டு வேதனைக்கு உள்ளாகும் பெண்ணின் சூழலை வரும் காலத்தில் புரிந்துக் கொள்வானா என்பது விடை அறியாதக் கேள்வியே... முழுவதும் வெறுப்பு மண்டிக் கிடக்கும் அவன் மனதில் பெண்ணவள் காதலால் அசைத்துப் பார்ப்பாளா...

அவனுடைய நற்குணங்களைப் பார்த்து மனதில் தோன்றியக் காதலைப்புதைத்துக் கொண்டு செல்லும் அவளின் காதலைத் துளிர் வைக்க அவனால் முடியுமா.

காதல் என்ற வார்த்தைப் பல மாயங்களைச் செய்யும்... அந்த மாயம் தாராவின் வாழ்க்கையிலும் செய்யுமா அதியமானால் முடியுமா.

"இனியா அம்மாவை இங்கே தங்க வைக்க முடியாது. அவங்க உடல்நிலைக்கு அது சரியும் வராது... நீ அம்மாவைக் கூட்டிட்டு ஊருக்குப் போ... நம்மளுடைய ஆனந்திடம் அவன் ஹாஸ்பிடலில் சதீஷைப் பத்தின விஷயங்கள் எல்லாம் சொல்லி... அவனை அட்மிட் செய்வதற்துக்கான வேலையைப் பாரு... உன்னோட மெயிலுக்கு அவனுடைய ரிப்போர்ட்டிலிருந்து எல்லாமே அனுப்பி வைக்கிறேன்... முடிஞ்ச அளவுக்கு இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணறதுக்கான வேலையைப் பார்க்கலாம்... இந்த ரிஸ்க் எடுத்துத் தான் ஆகணும்... நம்ம ஊர்ல வச்சுத் பார்க்ககும் போது தைரியமா இருக்கலாம்" என்று கூறினான் அதியமான். இனி நடக்க வேண்டியது என்ன என்பதைத் தீர்மானித்திருந்தான் சதீஷின் அண்ணன்.

எல்லாம் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நாட்கள் அதன் போக்கில் கடந்தும் கொண்டிருந்தது. ஆனால் அடிக்கடித் தன் கண்ணுக்குள் கூனிக்குறுகியபடி நிற்கும் தாராவின் முகம் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது அதியமானுக்கு.

அதுவே அவனை மிகவும் கோபம் உள்ளவனாக மாற்றிக் கொண்டிருந்தது. அதுதான் ஏனென்று தெரியவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை... அவளை வெறுக்கிறான் கிடைக்கும் நேரமெல்லாம் அவமானப்படுத்த வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.

அவள் முகம் ஏன் தனக்குக் கண் முன் வந்து போகிறது என்பது மட்டுமே அவனுக்குத் தெரியவில்லை. பிடிக்காத பெண்ணின் முகம் அடிக்கடித் தோன்றுவதே தனக்கு மிகப்பெரிய தண்டனையாகத் தோன்றியது அவனுக்கு.

இதென்னவொரு கொடுமை என்ற படியே தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான்

சதீஷைப் பார்க்கச் சென்று வந்து மாதங்களானது... தாரிகாவோ சோகமாகப் படுத்துக்கொண்டே இருந்தாள்... வீட்டிலிருந்து அழைப்புகள் வந்து கொண்டேயிருந்தது ஏன் இன்னும் தாரிகா மட்டும் வரவில்லை... அவள் காலேஜ் முடிஞ்சிருச்சா... பரிட்சை எழுதிவிட்டாளா... இப்படிப் பலதரப்பட்ட கேள்விகளை எதிர்கொண்டிருந்தாள் தாரா.

சூழ்நிலை மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருப்பதால் தான் முதலில் யோசித்த திட்டமே செயல்படுத்த முடிவுச் செய்தாள் தாரா. முதலில் தாரிகாவின் உடல் நன்றாக வேண்டும் என்பது மட்டுமே அவள் மனதில் இருந்தது.

புனிதாவிற்கு அழைத்துத் தாரிகா, புதிய கோஸ் ஒன்றில் சேர்ந்து இருக்கிறாள் என்றும்... மேலும் பி எட் மேற்படிப்புப் படிப்பதாகவும்... சனி ஞாயிறு அரசுத் தேர்வு எழுதுவதற்குப் பயிற்சிக் கல்லூரியிலேயே அழிப்பதாகவும்... அவள் வீட்டிற்குச் செல்வது தவிர்ப்பதற்கான எல்லா வகையான விஷயங்களையும் தன் தாயிடமும் தந்தையிடமும் எடுத்துக் கூறினாள்.

அப்பொழுதுக் காலேஜுக்கு மேற்படிக்குச் செல்ல அவளைச் சேர்த்துவதற்குக் நாங்கள் வரவேண்டாமா என்று கேட்டதற்கு இல்லை நானே செய்துட்டே நீங்க பணத்தை மட்டும் பேங்க் அக்கவுண்டில் அனுப்பி விடவும் என்று தெளிவாகக் கூறிவிட்டாள் தாரா.

இரண்டு வாரத்தில் கடைசி நாள் அவளும் நானும் வீட்டிற்கு வருகிறோம் என்று கூறிப் போனை வைத்து விட்டாள் தாரா.

தாரா எடுக்கும் முடிவு எப்பொழுதும் சிறந்ததாகவே இருக்கும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது அவள் தந்தை கங்காதரனுக்கு. எனவே தன் மனைவியிடம் "பார்த்தாயா, தாரா எவ்வளவு புத்திசாலித்தனமாக எல்லாமே திட்டமிட்டுச் செயல்படுத்துகிறாள்... தாரிகாவைப் பாரு நல்ல படிக்க வைத்து அவளை ஒரு சிறந்த டீச்சராக உருவக்கி விடுவாள் பாத்துக்கோ" என்று மகளின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தார் கங்காதரன்.

புனிதாவிற்கும் மனதில் ஒரு நிம்மதி ஏற்பட்டது. தாரிகா என்ன ஆவாளோ என்ற பயம் தாராவின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நீங்கியது. இனி தாரிகாவும் தன்னுடைய வாழ்க்கையில் நல்லதொரு இடத்திற்கு முன்னேறுவாள் என்ற நம்பிக்கைத் தோன்றியது அந்தத் தம்பதியினருக்கு.

வேகமாகத் தாரிகாவின் கல்லூரிக்குச் சென்று அவளுக்குப் பி எட் அப்ளிகேஷன் வாங்கி அவளே எழுதி அப்ளைச் செய்தாள். தாரிகாவின் சப்போர்டிற்காக நளினியும் அவளோடு சேர்ந்துப் பிஎட் படிப்பதாக முடிவு எடுத்திருந்தாள்.

தாயிடம் அதனால் தன்னுடைய திருமணத்தைத் தள்ளி வைக்குமாறும், திருமணம் பார்ப்பதற்கான முடிவுகளை இரண்டு வருடம் கழித்துப் பார்க்குமாறும் கூறிவிட்டாள் .

தோழிக்காக எதுவும் செய்யத் தயாராக இருந்தால் நளினி அவளின் நிலை அவ்வளவு மோசமாக இருந்தது தாராவும் நளினியும் அவளுக்கு இரு தூண் போல நின்று அவளைப் பாதுகாத்தினர் என்பது மிகை அல்ல.

தாரா, கூறிய விஷயங்களை எல்லாம் தன் தாயின் மூலம் அறிந்த மகேந்திரனுக்கு மனதில் ஏதோ ஒரு நெருடல் உண்டானது.

மாமனின் மக்கள் இருவரும் ஏதோ மறைக்கிறார்களோ இல்லை எதுவோ ஆபத்தில் இருக்கிறார்களோ என்று பலவாறு எண்ணங்கள் தோன்றினாலும் அப்படி எதுவாக இருந்தாலும் நம்மை அழைப்பார்களே! என்ற நம்பிக்கை இருந்தது.

அதுவும் தாரா எந்தச் சிக்கலாக இருந்தாலும் தன்னிடம் வந்து கேட்பாள் என்ற நம்பிக்கையினால் மனதை அமைதிப் படுத்தினான்.

இருந்தும் அவர்களைப் போய்க் காணலாமா என்று மனம் சடுகுடு ஆடத்தான் செய்தது.

தாரா மற்றும் நளினியும் அன்பும் அக்கறையும் தாரிகாவின் உடல் தேறி வந்தாள் .

அவளின் வயிற்றில் இருக்கும் சிசுவும் வளர்ந்து வந்தது.

கல்லூரிக்குச் சென்று வருவதால், அவளின் மேடிட்ட வயிறுக் காணாத மாதிரியான ஆடைகளும் வாங்கி வந்து கொடுத்தாள் தாரா.
ஆறாம் மாதத்திற்குப் பின்னே ஆன்லைன் வகுப்பாக மாற்றிக் கொண்டாள் தாரிகா... உடல்நிலைச் சரியில்லாத காரணத்தினால் அதற்கு வேண்டிய மெடிக்கல் சர்டிபிகேட்டையும் காலேஜில் சமர்ப்பித்து இருந்தாள்.

என்னவெல்லாமோ செய்து... எப்படியெல்லாமோ சமாளித்து... தாரிகாவின் பிரசவ நேரம் வரை கடத்தி இருந்தார்கள் நளினியும் தாராவும் சேர்ந்து.

மெல்ல அவளுடைய பிரசவத் தேதியும் வந்திருந்தது. அதனால் தாராவும் இரண்டு நாள் லீவு எடுத்திருந்தாள். நளினியும் அவள் கூடவே இருந்தாள். வலியின் காரணமாக அவளை மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர் பெண்கள் இருவரும்.

இவர்களின் நிலை இவ்வாறு சென்று கொண்டிருக்க மகேந்திரனுக்கோ மனதில் மிகவும் சஞ்சலம் ஏற்பட்டதால் அவர்களைப் போய்ப் பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்திருந்தான்.

அவனும் அவர்களுக்கு அறியாமல் காண வந்திருந்தான். அப்பொழுது அங்கே அவர்கள் இல்லை என்றதும் தாராவிற்கு அழைப்பு விடுத்துக் காத்திருந்தான். தாராவின் அலைபேசி அடித்துக் கொண்டிருந்தது.

அதை எடுத்துப் பார்த்தவள் அத்தையின் மகன் என்றதும் பயதில் கைகள் நடுங்கத் தொடங்கியது. பதட்டத்தைப் பார்த்து நளினி என்ன ஆச்சு என்ன தாரா, ஏன் இப்படிப் பயப்படுற என்று கேட்டாள் .

"இல்லடி, திடீரென்று மகி மாமா ஃபோன் பண்ணராரு, என்ன பண்ணவென்று தெரியவில்லை. தாரிகா வேற இப்போது ஹாஸ்பிடலில் பிரசவ அறையில் இருக்கா, அவர் வேற வீட்டுக்கு முன்னாடி நின்னுட்டு... நான் வந்து இருக்கேன்... எங்க இருக்கீங்க இரண்டு பேரும் என்று கேட்கிறார் என்றாள் தாரா.

"நாம் இப்படியே எவ்வளவு காலம் மறைச்சிட்டு இருந்தோமென்றால் நம்மால் சத்தியமாக ஒன்றும் செய்ய முடியாது.

வீட்ல இருக்கிறவங்களில் யாராவது ஒருத்தரோட சப்போர்ட் நமக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும் தாரா... பேசாமல் உங்க மாமாவாக இருக்கட்டுமே... ஏன் அப்படி யோசிக்க மாட்டேங்குற" என்று ஆலோசனை வழங்கினாள் நளினி.

"புரியுது நளினி.. சரி நில்லு மாமாவா இங்கே ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்லுவோம்" என்றவள். தன் அலைபேசியில் மகேந்திரனுக்கு அழைத்தாள்.

மாமா என்றவள் மருத்துவமனை முகவரியைக் கூறி, ஹாஸ்பிடலுக்கு வாங்க... தாரிகாவிற்குக் கொஞ்சம் உடம்புச் சரியில்லை, ஆனால் நாங்க ஹாஸ்பிடல்ல இருக்கோம்”. என்று மட்டும் கூறிவிட்டு அலைபேசியை அணைத்து வைத்தாள்.

மகேந்திரனிடம் என்ன சொல்ல எப்படிச் சொல்ல என்று பதட்டமும் பயமும் அவள் மனதில் பயணித்துக் கொண்டே இருந்தது. எதுவாக இருந்தாலும் நேரிட வேண்டும் என்று ஆயிரத்து எட்டாவது முறையாக மனதிற்குத் தைரியம் அளித்தாள் தாரா.

நளினி "எல்லாம் சரியாகும் நீ பயப்படாதே" என்று அவளுக்குத் தைரியம் கூறினாள்.

பெண்கள் இருவரும் மகேந்திரன் வரவுக்காகக் காத்திருந்தனர் மகேந்திரன் என்ன செய்வான் தன் தாய் மாமனிடம் நேர்
மையாகச் சென்று உண்மைய உரைப்பானா? இல்லை... இக்கட்டான சூழலில் இருக்கும் பெண்களுக்குத் துணையாக நிற்பானா ? என்பது வரும் காலங்களில் தெரியும்.

தொடரும்…
 
Top