எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

19 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 19

மார்கண்டையன் அவன் நண்பனிடம் பேசி வைத்ததும் அடுத்து அழைத்தது, அவன் அம்மாவிற்கு தான்.

"மாமா கேட்ட இடத்துலன்னு எப்பவாது எங்கையாவது கையெழுத்து போட்டுக் குடுத்தியா?" என எடுத்ததும் கேட்க, புரியாமல் விழித்தார் சாம்பவி.

"ஏன்டா? எப்பவும் போடுவேனே. மாசமாசம் இங்கு குழுவுல வட்டிக்கு கொடுக்குற ரூபாய்க்கு நா கையெழுத்து போட்டு தான் குடுப்பேன், மாமா போய் பேங்க்ல எடுத்தாருவான். எதுக்கு கேட்குற?"

"இங்க குடும்மா. என்னத்தடா விசாரிக்குற அம்மாட்ட?" என லதா நடுவில் வந்து வாங்க,

"ஏய் அறிவுக்கெட்டதனமா நடுவுல வந்துட்டு. ஃபோன அம்மாட்ட குடு" என அவன் போட்ட போடில், திடுக்கென்றாகி ஒருமாதிரியாகிவிட்டது அவளுக்கு. ஒருவகை உதாசீனம். அவள் தம்பி இப்படியொரு உதாசீன குரலில் அவளிடம் பேசியிருக்கிறானா? இப்போது பேசிவிட்டானா? என நம்ப முடியாமல் நின்றாள்.

"ம்மா லைன்ல இருக்கியா இல்லையா?" என அவன் அதட்டலில் தான் தாயிடம் ஃபோனைக் கொடுத்தாள்.

"ஏன்டா அக்காவ வஞ்சுட்டியா?" என சாம்பவி அவள் முகத்தை வைத்தே கேட்க,

"ம்மா அவசரம் புரியாம. உன் தம்பிக்கு பத்திரத்துல எதுலயும் கையெழுத்துப் போட்டுக் குடுத்தியா?"

"தெரியலையேடா. அவன் கேட்டாம்னா போடுவேன்டா. அவனுக்கு தெரியாத விவரமா எனக்கு தெரிஞ்சுட போகுது?" என அவர் பேச,

"ஹாங் தப்புதான். நா முட்டாளா இருந்துட்டு உன்ன பேசி என்ன செய்ய" என வைக்கப் போனவன், மறுபடியும் காதில் வைத்து, "உன் தம்பிக்கு ஃபோன போட்டு என்னத்தையும் உளறி வைக்காத. அந்த ஆளு நம்மள பெருசா ஏமாத்த ப்ளான் பண்ணிருக்காரு. நா வந்து பேசிக்கிறேன். நீ எதாவது தம்பி பாசத்துல பண்ணின அப்புறம் மகனே கிடையாது உனக்கு சொல்லிட்டேன்" என பேசிய பேச்சில் சாம்பவியும் நெஞ்சைப் பிடித்துவிட்டார்.

"என்னடி இப்படிப் பேசுறான்?" என மகளிடம் திரும்ப,

"உன் மகன் மாறிட்டான்மா. இனி அவன் நமக்கில்ல. நா கேஸ் போடுவேன். இது உன் பேர்ல தான இருக்கு? அப்றம் எப்படி அவன் தனியா கொண்டு போ முடியும்? சமமா தான் பிரிச்சாகணும். வீட்டுக்குன்னு வாங்கின முதல் சொத்து அது. நாம தானே படிக்க வச்சோம். அவன் வேலைக்கு போனாலும் இங்க அவனுக்கு பதிலா நாந்தான வந்து இருந்து எல்லா பொறுப்பையும் பார்த்துக்குறேன்? சம்பாத்தியம் பண்ணிட்டா பெரிய இவனா அவன். என்னையே எப்படி பேசிட்டான். கண்டிப்பா கேஸ் போடுவேன். அவனா நானான்னு பாக்றேன். இவன நம்பி என் பிள்ளைங்களலாம் விட நினச்சேனே இப்படி சயநலமா மாறிட்டானே. இனி எனக்குன்னு பிறந்தவீட்டு உறவா யாரு இருக்கா? என் புருஷன் என்னைய மதிப்பாரா முதல்ல? என் மாமியார் வீட்ல எனக்கு பிறந்த வீட்டு ஆதரவு இல்லன்னு தெரிஞ்சாலே போதுமே போட்டு சவுட்டி தள்ளிருவாங்க" என அவள் புலம்ப,

அவள் பேச்சு எதையும் காதில் ஏற்காமல், "நா எதுவும் தப்பா கையெழுத்துப் போட்டுட்டேனோடி?" என பதைபதைத்தார் சாம்பவி.

"என்ன கையெழுத்து?"

"மாரா என்னவோ அப்படித்தான் கேட்டான்டி. மாமாவையும் மரியாதை இல்லாம பேசுறான். என்ன நடக்குன்னு ஒன்னுமே புரியலயே?" என அவர் புலம்பியபடி கணவரை தேடிச் சென்றார்.

மார்க்கின் மாமாவின் ஆதிக்கம் தான் அங்கு அவன் வீட்டில் முழுவதும். அவன் அப்பா கூட அவரிடம் கேட்டு தான் செய்யும்படி பழகியிருந்தார். ஆரம்பத்திலிருந்து ஒட்டுதல் தான்.

பிரச்சனையே மார்கண்டேயன் தனியே சம்பாதிக்கத் துவங்கிய பின்னர் தான் ஆரம்பித்தது. அதுவரை அவர் கை தான் ஓங்கியிருந்தது. மார்கண்டேயன் அப்பா மாத வருமானகாரர் தான். ஆனாலும் இவரிடம் எதற்கும் சென்று நின்றதில்லை.

மார்க்கின் மாமாவாகவே தான், அவர் பிள்ளைகளுக்கு எதையாவது வாங்கினாலும் இவர்கள் இருவருக்கும் கூட சேர்த்தே வாங்கி வருவார். அவர் தொழில் தேனி வளர்ப்பு. தேனி வளர்ப்புப் பண்ணை சொந்தமாக வைத்திருந்தார். நல்ல வருமானம் தங்கை மீதும் பாசமிருக்க தங்கை பிள்ளைகளுக்கும் உணவு, உடை, பண்டங்கள் என வாங்கி தருவதில் அவருக்கும் பிரியமே.

முதலில் திருமணம் முடிந்தது லதாவிற்கு தான், அதன்பின் மார்கண்டேயனும் வேலைக்குப் போகத் துவங்க, அவர்களாக தனித்து நிற்க ஆர்மபித்ததே இவருக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் இவர் பிடியில் தான் நின்றனர். இவரிடம் சொல்லாமல் எதையும் செய்வதில்லை. அது இவருக்கு தான் உணர்வில் இல்லை.

அப்படித்தான் அவன், 'இப்படி செய்யலாம் மாமா!' என எதையாவது அறிவுரையாக கூறிவிட்டால் இவருக்கு கடுகடுத்துவிடும், காட்டிக்கொள்ள தான் மாட்டார்.

லதாவும் அவள் புருஷன் பேச்சு என சிலவற்றை எடுத்து வந்து செயல்படுத்த துவங்க, அதுவும் பிடிக்கவில்லை. மார்கண்டேயன் திருமணம், மனோ அப்படிதானே அவர்கள் வாழ்க்கைக்குள் வந்ததும். அதுவே அவருக்கு பிடிக்கவில்லை தான், அதனாலேயே அவர்கள் பிரிந்தே இருக்கட்டும் என இன்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார்.

அடுத்து அவன் அமெரிக்கா சென்றதும் அனுப்பும் பணத்தொகை அதிகரிக்கத் துவங்கியது, ஆனால் அவர் மகன் கிஷோர் இங்கு இன்னும் வெட்டியாக தான் சுற்றி வந்தான். அவர் பண்ணையில் வந்தமர்ந்து பொழுதை மட்டும் போக்கிவிட்டுப் போவான். இதுவும் அவர் எண்ணம் தான், கிஷோர் உண்மையில் அவன் பண்ணையைப் பற்றி தெரிந்துகொண்டு தொழில் கத்துக்கொள்ளதான் சென்று வந்தான். ஆனால் கொஞ்சம் அசமந்தம், சுகபோகவாசி. அப்பா பணம், வெளிநாட்டிலிருந்து ஒருவன் அனாமத்தாக கொட்டும் பணம், கேட்க ஆளில்லை என்றதால் வந்த மெத்தனம், அவனை முழு மூச்சாக தொழிலில் ஈடுபட விடவில்லை.

அனுப்பியது போக மிச்சம் அவன் கையிலும் அவன் மனைவி கையிலும் சேருகிறது என்றால் நாளை நம் பிள்ளைகள் அவனுக்கு கீழ் அல்லவா இருப்பார்கள், அப்படியொரு நிலை வரவே கூடாது என்று ஆரம்பித்த எண்ணம் தான் பாசத்தை மலுங்க செய்து துரோகம் செய்யும் துணிவையும் தந்திருந்தது. அவன் அந்த பதினைந்து ஏக்கரை மனைவி பெயரில் வாங்க போவதாக சொன்னதும் அதிர்ந்து தான் போனார் அவன் மாமா.

"நீ அங்க இருக்க, அந்த பொண்ணும் இங்க வர மாட்டேங்குது. எதும் இதுல தொழில் செய்யணும், மாத்தம் செய்யணும்னா கூட நீ அங்கயிருந்து ஓடிவர முடியுமா? இல்ல உன் பொண்டாட்டிட்ட விளக்கம் சொல்லி கூட்டிட்டு என்னால அலைய முடியுமா சொல்லு. அதவிட உன் அம்மா என்ன நெனப்பா, முதல் முதலா இவ்வளவு பெரிய நிலம்னு வாங்குற, அத அம்மா பேர்ல வாங்கினா தான குடும்பமும் ஒத்துமையா இருக்கும். உன் அக்காவும் சந்தோஷபடுவா. எல்லா வகையிலையும் இதான் நல்லது மாரா. குடும்பஸ்தன் ஆகிட்ட சில நுணுக்கங்கள தெரிஞ்சுக்க பழகு" என்றிருந்தார். இவன் அவன் மனைவிக்கு எதை தெரியாது என்றானோ அதையே அவரும் அவனுக்கு சொல்லியிருக்க, 'இருக்கலாம் நாம கத்துக்க தான் வேணும் போல' என ஏற்றுக்கொண்டிருந்தான்.

அவன் அந்தபக்கம் அமெரிக்கா கிளம்பிய ஒரு மாதத்தில், "அக்கா அந்த இடத்துல ஏதோ வில்லங்கம். நா அத சரி பாக்குறேன். போலீஸ் கேஸ்னு ஆகும்போல. மாராக்கு தெரிஞ்சா வருத்தப்படுவான். நீ ஒரு கையெழுத்து மட்டும் வந்து போட்டுவிடு, பவர் என் கைக்கு இருக்கட்டும் பிரச்சனைய நான் பாத்துக்குறேன்" என சொல்லிவிட நம்பிய சாம்பவியும் அவருடன் சென்று பத்திரவு பதிவு என்றே தெரியாமல் கையெழுத்து போட்டு கொடுத்து வந்திருந்தார்.

"பிரச்சனை முடிஞ்சது. இனி இதனால ஒரு பிரச்சனையும் மாராக்கு வராது" என்றும் வந்து அவர் சொல்லிவிட, சாம்பவி அத்துடன் அதை அப்படியே மறந்தும் போனார். மகன் மருமகள் பிரிந்திருப்பதையே மீண்டும் மீண்டும் பேசி அவரை வேறு யோசிக்கவும் விடவில்லை. மார்க்கின் அப்பாவிற்கும் முடியாமல் சென்று அதிகம் கஷ்டப்பட்ட நேரத்தில் மாமா குடும்பம் தான் ராவும் பகலும் உடனிருந்து பார்த்துக்கொண்டதும். அதனால் மறுபடியும் குடும்பத்திற்கு இன்றியமையாதவராகி போனார் அவன் மாமா.

நல்ல பெயரை காப்பாற்றிக்கொள்ளவே மார்க், மனோ இருவரையும் சேர்க்க, கிஷோர் கல்யாணம் என காரணம் காட்டியதும், இந்த சொத்தை காண்பித்து தான் அவனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் முடித்து, அதிக டவுரியும் வாங்கியிருந்ததும். அவர்கள் கேட்டது, 'உங்க பையன் பேர்ல என்ன சொத்து இருக்கு?' என மட்டுமே, அதற்கு தான், இந்த இடத்தை கை மாற்றிவிட நினைத்தார். அவர்கள் பெரிய இடம், கை மாற்றிவிட்டால், பின்பு மாரனுக்கு தெரிந்தாலும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் அவருக்கு. நிச்சயம் இவர்கள் குடும்பத்துக்குள் பிரச்சனை வெடிக்கும். ஆனால் மகள் மகன் செட்டில் ஆகிவிட்ட பின்னர் இவர்கள் பேசினால் என்ன பேசாவிட்டால் தான் என்ன, என்றும் அனைத்திற்கும் தயாராகியிருந்தார்.

அன்று மனோ ஜட்ஜ் வீட்டிற்கு சென்றிருக்கிறாள் என தெரிந்ததும் பிரச்சனையை பெருசாக்கிவிடவே அவ்வளவு பேரையும் இழுத்துக்கொண்டு அவர் நேராகவே அங்கு சென்றது. கோவத்தில், 'ஆமா டிவோர்ஸ் தான் பண்ண போறேன்!' என சொல்லிவிடுவாள், அவன் மொத்தமாக அமெரிக்காவில் தங்கிவிடுவான், இங்கு வராதவரை எந்த பிரச்சனையும் இல்லை என பலவித கணக்குகள் அவருக்குள்.

ஆனால் மனோ, வேண்டாம் என சொல்லி சென்றதும் கடுப்புதான், சாம்பவி மகனை வந்தே ஆகவேண்டும் என பாடாய் படுத்தி வர வைத்ததும் அதைவிட கடுப்பு தான் அவருக்கு. ஆனாலும் அவன் திரும்பி கிளம்பும் வரை அமைதியாக சென்றுவிட நினைத்திருக்க, பைக்கை அவனிது என பேசி மனைவியை தேடி அவனே கிளம்பிய நொடியில் மொத்த திட்டத்தையும் மாற்ற துவங்கியிருந்தார்.

அடுத்த நாளே அந்த இடம் பற்றிய பேச்சும் வரவும், அவனுக்கு எதுவும் தெரிந்திருக்குமோ என அவ்வளவு பயம். ஏனென்றால் அந்த இடம் மாற்றம் பற்றி அவர் வீட்டில் கூட சொல்லியிருக்கவில்லை. அவரும் பெண்ணின் தகப்பனாரும் மட்டுமே பேசி வைத்திருந்தனர். அதனாலயே மறுவீடு சென்றவர்களை கிளம்பி வரசொன்னதும் பெண்ணின் தகப்பனாரும் சந்தோஷத்தோடு அழைத்து வந்துவிட்டார்.

"எங்க மக சீர் கொண்டு உங்க வீட்டுக்கு வரும்முன்ன நீங்க உங்க பெருந்தன்மைய காட்டிட்டீங்க. ரொம்ப சந்தோஷம் சம்மந்தி" என பேசியபடி தான் அங்கு இப்போது கூடி நிற்கின்றனர்.

ரிஜிஸ்டரர் முன்னிருந்த டாக்குமெண்ட் வரிசைகளில் மார்க்கின் மாமாவோடதை கடைசிக்கு எடுத்து மாற்றி வைத்துவிட்டு வர காசை குடுத்து ஏற்பாடு செய்துவிட்டு கமுக்கமாக வெளிய வந்துவிட்டான் மார்க்கின் நண்பன். அவன் எதையோ நினைத்து ஃபோன் செய்ய, அது எவ்வளவு பெரிய விஷயத்திற்கு கொண்டு சென்றுவிட்டது, என நினைக்கையிலேயே, நண்பன் வந்துவிட வேண்டும் என பாதையை பார்த்து நின்றுவிட்டான்.

அங்கு மார்கண்டேயன், மனோவை சென்று அழைக்க, "எங்க கூப்பிடுறீங்க?" என கடித்து தான் வைத்தாள்.

"ம்ச் வாடி. அங்க பிரச்சனை எவ்ளோ பெருசுன்னு தெரியல. பட் நீ கூட வரணும்னு தோணுது எனக்கு"

புருவம் உயர்த்தியவள், "எங்க? என்ன பிரச்சனை?" என்றாள் நிதானமாக,

"மனோ, ஏற்கனவே கடுப்புல தான் இருக்கேன். நீ இன்னும் ஏத்திவிட்டு பாக்காத. கிளம்பு போற வழில எல்லாம் சொல்றேன்"

"இன்னும் எங்கன்னு சொல்லல நீங்க"

"ஏய் வாடி" என கையை பிடித்து இழுத்து அவள் சேரிலிருந்து எழ வைத்தவன், வெளியேவும் இழுத்து வர,

"சீன் கிரியேட் பண்ணாதீங்க. விடுங்க வரேன்" என கையை உருவ முயல,

"ஒரு எமெர்ஜென்சி, இவங்களுக்கு லீவ் சொல்லிடுங்க" என அங்கிருந்த, மஹிமா, விஜி, தமயந்தி மூவரிடமும் சொல்லிவிட்டு நடக்க,

"கண்ணன டேகேர்ல மாத்திவிட்ரு மஹிமா. நா போய்ட்டு வந்துடுறேன்" என அவளும் சொல்லி செல்ல, தலையை மட்டும் அசைத்தாள் மஹிமா.

"ஸ்கூலா இது என்னது? இவளுக்கு மட்டும் ஒரு சட்டமா? இதலாம் கேக்கமாட்டாரு நம்ம சாரு. இத நா சொன்னா பொல்லாப்பு" என முனங்கினார் தமயந்தி.

வருடங்கள் கழித்து அவனுடன் பைக்கில் ஏறுகிறாள், ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லை என பார்த்தாலே தெரிந்தது. இவளுக்கு தான் எரிச்சலாக இருந்தது, 'எங்க போறதுனாலும் தனியா போக வேண்டியது தான? அமெரிக்காவுல மட்டும் தனிமை தேடிரும் போல இந்த மனுஷன' என திட்டியபடியே தான் ஏறி தள்ளி அமர்ந்தாள்.

வண்டியை எடுக்க போனவன் அப்படியே தலையை மட்டும் திருப்பி முறைத்து, "கிழ விழுந்து பொதையல் எடுக்க போறியா?" என்க,

"உங்களோட வர பிடிக்கல, அப்படி விழுந்தா விழுந்துட்டு போறேன் போங்க" என இவளும் பேச, பட்டென்று எடுத்துவிட்டான், தன்னால் அவனை வந்து ஒட்டி அமர்ந்துவிட்டாள்.

வண்டி போகும் திசையை வைத்தே அவன் பழூர் போகிறான் என தெரிந்தது. "வண்டிய நிறுத்துங்க, உங்க ஊருக்குலாம் நா வரல. அங்க என்ன பிரச்சனைனாலும் அது உங்களோட நீங்க தான் பாக்கணும். என்னைய இப்படி இறக்கி விடுங்க. விடுங்கன்றேன்ல" என அவன் முதுகிலும் அடித்தாள். அவன் இன்னும் வேகத்தை கூட்டிவிட, பயத்தில் அப்படியே தோளை பிடித்து அமர்ந்து விட்டாள், ஆனால் மனம் தான் ஒருநிலையில் இல்லை, கோபம், எரிச்சல், கண்கள் கூட கறித்துக்கொண்டு வந்தது. வண்டியிலிருந்து குதிக்க கூட முடியாத இயலாமை இன்னும் பிடிவாதத்தை தர, கண்ணை மூடி குதித்தே விடுவோமா என நினைத்துவிட்டாள்.

செல்லும் வழியில் அவன் ஃபோனுக்கும் விடாமல் அழைப்பு வந்தவண்ணமிருந்ததே, அவன் அதில் ஒன்றை கூட ஏற்கவில்லை, வேகம் வேகம் மட்டுமே, "எதுக்கு இவ்ளோ ஸ்பீடா போறீங்க?" என திட்டியும் பார்த்தாள், எதற்கும் அவனிடம் பதில் இல்லை. இரண்டு மணி நேரத்தில் வந்துவிட்டனர்.

"சார் பதிவாளர் அலுவலகம்" அந்த பலகையை பார்த்ததும், 'அந்த இடம் விஷயமோ? மாற்றி எழுதவா அழைத்து வந்திருக்கிறான்? அவன் அக்கா அவ்வளவு எளிதில் விட்டுகுடுக்கும் ஆளில்லையே?' என நினைத்தவள் வண்டியிலிருந்து இறங்கியபடியே சுற்றி பார்வையை ஓட்டினாள்.

மார்க் இறங்கி நேராக அவன் நண்பனிடம் செல்ல, அவனும் வந்து அவனிடம் நிற்க, இருவரும் கிசுகிசுப்பாக பேசுவதை சற்று தள்ளி நின்று பார்த்தபடி மட்டும் நின்றாள்.

"உள்ள வா மனோ!" என அவளுக்கு தலையசைத்தவன், அவன் நண்பனுடன் பேசியபடி உள்ளே செல்ல, இவளும் விஷயத்தை அறியவேண்டியே பின்னே சென்றாள்.

அவன் நண்பன், ஒரு லாயரையும் வர சொல்லியிருக்க அவரும் வந்திருந்தார்.

"நமக்கு தெரிஞ்சவர் தான்டா, எதுவும் அட்வைஸ் வேணும்னா கேட்டுப்பல்ல அதான் வர சொன்னேன்" என்றான் நண்பன்.

"நா பர்ஸ்ட் பேசி பாக்கணும் சார். என்னோட சொந்த மாமா அவர், சோ முதல்ல பேசி பாத்துட்டு தான் முடியலனா லீகலா போகணும். கண்டிப்பா அப்ப நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்" என இவனே சொல்லவிட,

"சரி. தேவைனா கூப்பிடுங்க" என சென்றுவிட்டார்.

அவன் அம்மாவையும் வர சொல்லி அழைத்துவிட்டே மாமா முன் சென்று நின்றான்.

அங்கிருந்த கூட்டத்தில், ஊழியர்களிடம், "ஏன் இன்னும் எங்களோடது ரிஜிஸ்டரர் முன்ன வரல?" என்ற வாக்குவாதத்தில் இருந்ததில் சுற்றி கவனமில்லாமல் இருந்திருந்தார்.

"உங்க மருமகன் தான?" என மார்க்கின் மாமாவிடம் வினவி, "நீங்க ஏன் வரலன்னு கேட்டேன் தம்பி, வைஃப்ப பாக்க போயிருக்கறதா சொன்னாரு. இதான் உங்க சம்சாரமா?" என்றார் பெண்ணின் தந்தை.

"நா வராம எப்படி என் நிலத்த விக்க முடியும்னு கேட்டுட்டு போகத்தான் நானும் நேர்லயே வந்துட்டேன்" என்றான் மாமாவை முறைத்துப் பார்த்து.

"மாரா நா வீட்ல போய் சொல்றேன். இது கிஷோர் வாழ்க்கை" என்றார் அவரும். தெரிந்து தானே வந்திருக்கிறான், அதனால் வேறெதுவும் முயலவில்லை பளிச்சென்று பேசினார்.

"கரெக்ட் தான். கிஷோர நீங்க தான பெத்தீங்க? அப்ப நீங்க சம்பாதிச்சதுல இருந்துல எழுதி கொடுக்கணும், என்னோடத எடுத்து குடுதீங்கனா எப்படி? நல்லாவா இருக்கு உங்க வயசுக்கு இந்த ஏமாத்து வேலை?" என்றான் இவனும் காட்டமாக.

"என்னாச்சு தம்பி?" என்றார் கிஷோரின் மாமனார். அவருக்கு சொத்தில் தான் ஏதோ பிரச்சனை என புரிந்து விட்டிருந்தது.

"ரிஜிஸ்ட்ரேஷன் நடக்காதுங்க. நா ஸ்டே வாங்குவேன், இது என்னோட சொத்து, இந்தாளு ஏமாத்தி எங்கம்மாட்ட இருந்து வாங்கிட்டு உங்களுக்கு மாத்திவிட பாக்றாரு"

"டேய் மரியாதையா பேசு" என்றார் அவன் மாமா.

"என்னாச்சுத்தான்?" என்றான் கிஷோரும் ஒன்றும் புரியாமல்.

"ஓசிலயே வாழ்ந்து பழகிட்டல்ல? அதனால இங்க நடக்குறது எதுவும் உனக்கு புரியாது. எப்பயும் போல வேடிக்கை மட்டும் பாரு" என்றவன், மாமாவிடம், "ஒரிஜினல் பத்திரத்த ஒழுங்கா இப்ப என்ட்ட தரணும். இல்லனா நடக்குறதே வேற" என பல்லை கடித்தான்.

"என்னடா பண்ணுவ? உங்கம்மா சைன் போட்டு குடுத்துட்டா, இனி நீ எங்க போய் அலைஞ்சாலும் வேலைக்காகது" என்றார் தெனாவெட்டாக,

"அப்ப ஏமாத்தி தான் வாங்குனீங்களா?" என்றார் கிஷோர் மாமனார்.

"என்ன ஏமாத்தி? இவன வளக்கலையா நானு? எனக்கு செய்யமாட்டானா இவேன்?" என்றவர் அவனிடம் திரும்பி, "இன்னும் தான் சேர்த்து வச்சுருக்கல்ல அதுல நிறைய வாங்கிக்கோ போ. இத கிஷோருக்கு குடு" என பேச,

"அவ்ளோ பெரிய பிச்சை போடுற அளவுக்கு நா பணக்காரன் கிடையாது. நா கஷ்டப்பட்டு சம்பாதிச்சத நீ ஈசியா தூக்கிட்டு போவ நா டேஷிட்டு போணுமோ? செவுல திருப்பிருவேன். என்ன பத்தி தெரியாது உனக்கு" என எகிறிகொண்டு செல்ல, கூட்டம் கூடிவிட்டது.

அவன் அம்மாவும் அக்காவும் அப்போது தான் வந்தனர், "டேய் டேய் என்னடா? எதுக்குடா சண்டை போட்டுக்குறீங்க?" என சாம்பவி இருவரையும் கலவரமாக பார்க்க,

"இங்க பாரு அந்த இடத்த நீ கையெழுத்து போட்டு என்ட்ட குடுத்துட்ட அது இனி என்னோடது. என் பையனுக்கு குடுக்குறதா நா வாக்கு குடுத்துட்டேன். நீ மாராக்கு சொல்லு. அவனுக்கு வேற நல்ல இடமா கூட நா காட்றேன். வாங்கிக்கட்டும்" என்றார் தாராளமாக,

"அடிங்!" என பாய்ந்தவன், கிஷோரை நான்கு அறை கண்சிமிட்டும் நேரத்தில் வைத்தும்விட்டான். அவனுக்கு வாயே கிழிந்து விட்டது. கணினி தட்டுபவனிடம் இப்படி ஒரு அடியை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை போல, அதிர்ந்து நின்றனர். கூட்டத்தினர் விலக்கவிட, ஆளாளுக்கு பேச, மார்க், "உனக்கு விழ ரொம்ப நேரமாகாது!" என எச்சரித்தான்.

மனோ எதையும் தடுக்கவில்லை உள்ளே போகவில்லை, உயர்த்திய புருவத்துடன் படம் பார்ப்பவள் போல வேடிக்கை தான் பார்த்தாள்.

"டேய் என்ன? உன் இடம்னா இப்ப என் பேர்ல இருக்கு உன்னால ஆனத பாரு போ. என் பையன் மேல கைய வச்ச, போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிருவேன்" என மிரட்டினார் அவன் மாமா.

கிஷோர் மாமனாரும், "ஆமா தம்பி. மருமகன் மேல கை வைக்குற வேலைலாம் வேணாம். வேணும்னா லீகலா வாங்க" என்றவர், "இங்க பாருங்க இந்த வில்லங்க சொத்து இல்லாம, வேறெதுவும் இருந்தா மாத்துங்க, அதுவரை பொண்ணும் மாப்ளையும் என் வீட்லயே இருக்கட்டும். முதல்ல பிரச்சனைய முடிங்க" என்றவர் கிளம்ப போக,

"ஹலோ, உங்க பொண்ண வேணா கூட்டிட்டு போங்க. ஃபோர்ஜரி கேஸே உங்க சம்மந்தி மேலயும் உங்க மருமகன் மேலயும் தான் குடுக்க போறேன். அவன உங்க வீடு வரைக்கும் வந்து அரெஸ்ட் பண்ணுவாங்க பரவால்லயா?" என்றான் இவனும்.
 
"எப்புடுறா பண்ணுவ? சுயநெனவோட இதோ இதே இடத்துல வச்சு தான் கையெழுத்து போட்டு குடுத்தா உன் அம்மா. அத இல்லன்னு ஆக்க முடியுமா உன்னால?" என்றார் அவரும்.

"என்ன பத்திரம்னு சொல்லாம தான நீ கையெழுத்து வாங்கிருக்க?"

"அதுக்கு ஆதாரம் கேட்பான்ல? உன் அம்மா படிக்க தெரியாதவளா? மயக்கத்துல கையெழுத்து போட்டாளா? ரெண்டும் இல்லல?" என்றார் அவரும்.

"உன்ன நம்பி தொலைச்சோம்ல எங்களுக்கு இது தண்டனை தான்யா. ஒரிஜினல் டாக்யூமெண்ட்" என கேட்டு கை நீட்ட,

"தர முடியாதுடா உன்னால ஆனத பாருடா" என்றவர், பத்திரத்தை உள்ளே தான் கொடுத்திருந்தார். இங்கு இவர்கள் பேச்சில் இருக்கையிலேயே அவன் நண்பன் அந்த பத்திரத்தை முழுவதுமாக வாங்கி வந்திருந்தான். தாய் பத்திரம்(அதாவது அந்த இடத்தின் முதல் முதல் பத்திரம்) முதல் அனைத்தும் அதிலிருந்தது.

"நீ வாயா உன்ன ஊம குத்தா குத்தல என் பேரு மார்கண்டேயன் இல்ல" என பத்திரத்தை பிரித்து பார்த்தவாறு வெளியே பார்க்கிங் சென்றான் மார்கண்டேயன்.

"டேய் நில்லுடா" என்றவர், "எப்படிங்க இங்க குடுத்தது அங்க போவும்? ஆள் பாத்து வேலை செய்றீங்களா? எனக்கும் நிறைய ஆளுங்கள தெரியும் நானும் யாருனு காட்டுறேன்" என உறுமிவிட்டு தான் மார்கண்டேயனை பிடிக்க வெளியே சென்றார். கிஷோரும் அப்பா பின்னால் செல்ல, அவன் மாமனார் மகளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சாம்பவி அழ, லதா அதிர்ந்து நடப்பது புரியாமல் விழித்திருக்க, மனோ அனைத்தையும் செல்லில் பதிவேற்றியிருந்தாள்.

"டேய் பத்திரத்த குடுத்துரு இல்ல கொண்ணு பொதைச்சுருவேன்" என வந்து மிரட்ட.

"ஏன்டா தம்பி இப்பிடி பண்ற?" என்றார் பின்னாலேயே வந்த சாம்பவி அழுகையுடன்.

"பேசாம போ உனக்கு ஒன்னுந்தெரியாது" என விரட்டினார்.

"இதெல்லாம் டூமச் மாமா. எங்க சொத்த நீங்க எப்படி எடுத்துக்க முடியும்?" என்றாள் லதா.

"உங்க சொத்தா? நீயே ஆட்டய போடத்தான் ரெண்டு நாளா இங்கன டேரா போட்ருக்க. நீயெல்லாம் என்னைய பேசவே கூடாது"

"அவன் என் தம்பி பார்த்து பேசுங்க"

"கல்யாணம் பண்ணி சீரு எல்லாம் வாங்கிட்டு தான போன? இன்னும் எதுக்கு அவன் பின்னையே அம்புட்டையும் கரந்துட்டு போக திரியித? நா சொல்லட்டா? அவனுக்கு ரெண்டும் ஆம்பள பிள்ளைக சொத்துல சல்லிகாசு தேத்த முடியாது, வாரிசுன்னு எல்லாம் அதுங்களுத்தான் போவும். நீ செஞ்சா சரி நா செஞ்சா தப்பா? அவன் பொண்டாட்டிய கிட்ட சேக்கவிடாம நீ பாதி வேலை பாத்த நா மீதி வேலை பாத்தேன். ரெண்டுக்கும் சரியா போச்சு. போவியா" என்றவர், "டேய் குடுடா" என திரும்ப, கையை கட்டியபடி அவர்கள் இருவரையும் தான் பார்த்திருந்தான் மார்கண்டேயன்.

"அடேங்கப்பா எப்பேர்ப்பட்ட சொந்தங்கள் எனக்கு. இங்க பாருங்க அப்படியே புல்லரிச்சு போச்சு. யூ நோ, என் பொண்டாட்டி அப்பவே சொன்னா, நாந்தான் அவளுக்கு ஒன்னுந்தெரியாது சின்னபிள்ளையா உறவுமுறை தெரியாம இருக்கான்னு சண்டை போட்டு மூணு வருஷம் பேசாம இருந்துட்டேன். ஆனா வெளில தள்ளி நின்னு பார்த்ததால வந்திருந்த கொஞ்ச நாள்லயே அப்படி கரெக்டா பாய்ண்ட் அவுட் பண்ணி உங்க ரெண்டு பேரையும் கொத்தா தூக்கி வெளிய எங்கிட்ட போட்டுட்டு தான் அவ வீட்டுக்கே கிளம்பி போயிருக்கா. பொண்டாட்டி ஆல்வேஸ் ரைட்ல?" என்றவன் சற்றுதள்ளி நின்ற மனோவையும் பார்த்து புருவம் உயர்த்த, இப்போதும் நக்கலாக தான் சிரித்தாள் மனோ.

அதில் மறுபடியும் கடுப்பானவன், "பத்திரத்த ஏமாத்தியா புடுங்குற? உனக்கு இருக்குடி, நீ எப்படி இனி இங்க தொழில் பண்ணி வாழ்ந்துடுறன்னு பாக்குறேன். எங்கிட்ட வச்சுகிட்ட வெள்ளகாரனையே ஓடவிடுவேன் நான். நீ என்னையவே போட்டு பாத்துட்டல்ல? மொத்தமா வச்சு தேய்ச்சுவிட்டுறேன் சொட்ட இருக்கு உனக்கு" என பேச,

"எங்க போனாலும் செல்லாதுடா. கடைசி பத்திரம் என் பேர்ல தான் இருக்கும், அத வச்சு நீ என்ன செய்வ. கேஸ் போட்டு நா என் டாக்யூமென்ட்ட வாங்குவேன். கவர்ன்மெண்ட் ரெக்கார்ட்ல இருக்கும் ஒரிஜினல் எல்லாம். இத வச்சு நீ ஒன்னுமே பண்ண முடியாது"

"பரவால்லங்குறேன். நீயும் எங்க வேணா போ. எங்கம்மாட்ட நிலத்த வாங்குனதுக்கு காசு குடுத்தியா? இதுல குடுத்தேம்னு டாக்யூமெண்ட் வச்சுருக்கியே அதுல இருக்கது எங்கம்மா சைனே இல்லன்னுவேன். நீ காசே தரலன்னு ப்ரூப் பண்ணுவேன். காசு தந்த செக், டிடி எதாவது கேட்பானே எத குடுப்ப? ஃபோர்ஜரில உள்ள போவயா நீ. சாகுற வர உன்னையும் அந்த நிலத்துல ஒருபுடி மண்ணெடுக்க விட மாட்டேன். ஏமாத்தி புடுங்குற உனக்கே அவ்வளவுனா, நா எவ்வளவுக்கும் போவேன்யா. இனி பார்ப்பல்ல" என்றவன், "மனோ வாடி" என அவளை அழைக்க,

"நா போயிக்கிறேன். நீங்க உங்க பஞ்சாயத்த சிறப்பா முடிச்சுட்டு வாங்க" என ஒரு ஆட்டோவை கை காண்பித்து அழைத்து, ஏறிச் சென்றுவிட்டாள்.

"மாரா?" என சாம்பவி பாவமாக கிட்டவர,

"நீ மட்டும் உன் தம்பி பாசத்துல மாத்தி பேசாம இருந்தா போதும், என் சொத்த நா காப்பாத்திப்பேன்" என்றவன், அந்த பத்திரத்தில் சாட்சி கையெழுத்தாகியிருந்த ஆட்களை தேடிச் சென்றான், அவர்களையும் பிடித்து அவர்களிடம் பேசி சரிகட்டி, கொஞ்சம் ரூபாயும் கொடுத்து, அம்மா மூலமே கேஸ் கொடுக்க வைத்தான். மாமாவின் டாக்யூமெண்ட்டை கேன்சல் செய்ய முறையீடு செய்தான். இதற்கே ஒரு மாதம் சென்றிருந்தது. இனி அது சொத்து வழக்காக எத்தனை ஆண்டுகள் செல்லும் என தெரியாது, யாராவது ஒருவர் விட்டொழியுது என விடும்வரை கேஸ் நடக்கும்.

ஆனால் அவனுக்கு அமெரிக்கா கிளம்ப வேண்டிய நாளும் வந்து நின்றது. லீவு முடிந்தது. திரும்பச் சென்றே ஆகவேண்டும் அவன். ஆனால் மனைவியுடனான பிரச்சனையும் அப்படியே நின்றது, சொத்து பிரச்சனையும் அப்படியே நின்றது. லீவை நீட்டிக்க கூட, அவன் நேரில் சென்று கேட்டுதான் வாங்கி வரவேண்டும். மார்கண்டேயன் மறுபடியும் அமெரிக்கா கிளம்பியேவிட்டான்.
 
என்ன மார்க் எல்லாத்தையும் இப்படி பாதியிலயே விட்டுட்டு போயிட்ட...
 
நல்ல மாமா அக்கா இவனுக்கு..... எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கான்னு அவனுக்கு நடு மண்டையில அடிச்சு புரிய வச்சுட்டாங்க.....
இருக்க பிரச்சனை அப்படியே கிடக்க அமெரிக்கா கிளம்பியாச்சா.... முதல்ல அதை தலை முழுகிட்டு வா மார்க்கு ....
 
Top