பேருந்தில் ஏறி ஒருவழியாகத் தட்டுத்தடுமாறி வீடு வந்து சேர்ந்த மலர், தனது அறைக்குள் நுழைந்ததும் கதவைத் தாளிட்டாள். நொண்டிக்கொண்டே சென்று கட்டிலில் அமர்ந்தவள், ஆவேசமாகக் காலில் இருந்த கட்டை அவிழ்க்கத் தொடங்கினாள்.
"ச்சோ... எதற்காக இந்தப் பொய்யான கட்டைப் போட்டுக்கொண்டேனோ, அந்த நோக்கம் நிறைவேறாமலேயே போய்விட்டதே!" எனத் தனக்குத்தானே சலிப்புடன் முணுமுணுத்தாள்.
உண்மை அதுதான். அவளுக்குக் காலில் அடிபட்டது உண்மை, வலியும் சற்று அதிகமாகத்தான் இருந்தது. ஆனால், கட்டுப் போடும் அளவிற்குப் பெரிய காயம் எல்லாம் கிடையாது.
நடனப் நிகழ்ச்சிக்கு மிகுந்த ஆர்வத்தோடு பெயர் கொடுத்தவள், அந்தப் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவது ரணதீரன் என்று தெரிந்த மாத்திரத்திலேயே பின்வாங்க முடிவு செய்தாள். எப்படியாவது நிகழ்ச்சியில் இருந்து தப்பிக்கவே இந்த 'கட்டு' நாடகத்தை அரங்கேற்றினாள்.
கல்லூரி மாணவர் தலைவன் ரணதீரனைப் பற்றிப் பரவாத கதைகளே இல்லை. அவன் ஒரு கண்டிப்பான பேர்வழி, தவறு செய்தால் யாராக இருந்தாலும் தயங்காமல் தண்டிப்பான், ஆண், பெண் என்ற பாகுபாடே அவனிடம் கிடையாது எனப் பலவாறாக அவனைப் பற்றிப் பயமுறுத்தும் பிம்பமே கல்லூரி முழுவதும் நிறைந்திருந்தது.
அவனை நேரில் பார்ப்பதற்கு முன்பே அந்தப் பிம்பத்தைக் கண்டு அஞ்சிய மலர், எப்படியாவது அவன் கண்ணில் படாமல் தப்பிக்கவே துடித்தாள். ஆனால், முதல் நாள் தன் மீது வண்டியை மோதிய அந்த அண்ணன் தான் 'ரணதீரன்' என்பதை அவளும் எதிர்பார்க்கவில்லை.
அதே சமயம், அங்கே ரணதீரனோ தன் நண்பர்கள் பட்டாளத்தின் நடுவே அமர்ந்திருந்தாலும், அவனது எண்ணங்கள் முழுவதும் மலரைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தன.
'கேடி... தசை பிரண்டு விட்டதாம்! எப்படி அந்தப் பெரியக் கண்ணை உருட்டிக்கொண்டு அப்பட்டமாகப் பொய் சொல்கிறாள்? வசியக்காரி...' எனத் தன் மனதிற்குள் அவளைச் செல்லமாக அர்ச்சனை செய்தபடி ரசித்துக் கொண்டிருந்தான் ரணதீரன். அவளது நாடகம் அவனுக்கு முன்பே தெரிந்திருந்தது என்பது மலருக்குத் தெரியவில்லை.
சுற்றிலும் நண்பர்கள் பட்டாளம் சூழ்ந்திருந்தாலும், ரணதீரனின் எண்ண ஓட்டம் முழுவதும் மலரைச் சுற்றியே மையம் கொண்டிருந்தது. அவளது ஒவ்வொரு அசைவையும், அந்தப் பொய்க்கட்டையும் நினைத்து அவனுக்குள் ஒரு மெல்லிய ரசனை ஓடிக்கொண்டிருந்தது. இப்படியே இரண்டு நாட்கள் உருண்டோடின.
அன்று மலர் நடனப் பயிற்சிக்குச் செல்ல வேண்டிய நாள். காலையிலிருந்தே அவளது முகம் பயத்தில் வெளிறிப் போயிருந்தது. அவளது தவிப்பைக் கண்ட
தோழி மீனா, "ஏண்டி... ஏன் இப்படிப் பதட்டமா இருக்க?" என மெல்லக் கேட்டாள்.
மலர் தன் கைகளை ஒன்றோடொன்று பிசைந்துகொண்டே,
"பின்ன இருக்காதா மீனா? இன்னைக்கு நான் கட்டாயம் டான்ஸ் பிராக்டீஸ்க்கு வரணும்னு சீனியர் ரணதீரன் சொல்லியிருக்கார். எப்படியோ இந்த ரெண்டு நாள் அவரோட கண்ணுல படாமத் தப்பிச்சுட்டேன். ஆனா இன்னைக்குத் தப்பிக்கவே முடியாது போலிருக்கே..." எனப் புலம்பினாள்.
கடந்த இரண்டு நாட்களாக ரணதீரன் கண்ணில் படாமல் தான் தப்பித்துவிட்டதாக மலர் மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் உண்மை அதுவல்ல
அவளுக்கே தெரியாமல் ஒரு நிழலைப் போல ரணதீரனின் கண்கள் அவளைத் துரத்திக் கொண்டுதான் இருந்தன. அவள் எப்போது நொண்டி நடக்கிறாள், எப்போது இயல்பாக நடக்கிறாள் என்பதை அவன் தூரத்திலிருந்தே ரசித்துக் கொண்டிருந்தான்.
வகுப்புகள் முடிந்தன. அடிமேல் அடி வைத்து, மிகுந்த தயக்கத்துடனும் அதே பயத்துடனும் நடனப் பயிற்சி நடைபெறும் கூடத்திற்குச் சென்றாள் மலர். அங்கே மற்ற நான்கு மாணவர்களும் தீவிரமாக ஆடிக்கொண்டிருக்க, மலர் மட்டும் ஓரமாய் நின்று தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.
அவள் உள்ளே நுழைந்ததைக் கண்ட ரணதீரன், "பிரேக்!" என உரத்தக் குரலில் கூறிவிட்டு, நேராக அவளை நோக்கி நடந்தான்.
அவளது விழிகளுக்குள் தன் பார்வையை ஊடுருவவிட்டவன், "இப்போ வலி பரவாயில்லையா?" எனக் கேட்டான். அவனது குரலில் ஒரு மெல்லிய நையாண்டி இழைவதை அவள் கவனிக்கத் தவறவில்லை.
"இப்போ... இப்போ ஓகே சார்," எனத் திக்கித் திணறிக் கூறினாள் மலர்.
"அப்போ சரி... வா, நடனப் பயிற்சியைத் தொடங்கலாம்," என அவளைத் தன்னோடு அழைத்துச் சென்றான்.
மைதானத்தில் மற்ற இரண்டு ஜோடிகளையும் அவரவர் இடங்களில் வரிசையாக நிறுத்திவிட்டு, சரியாக நடுவில் இருக்கும் மையப்புள்ளியில் மலரை நிற்க வைத்தான். மற்றவர்கள் அனைவரும் ஆண் பெண் என ஜோடியாக நிற்க, மலர் மட்டும் அந்தப் பரந்த இடத்தில் தனித்து நின்றாள்.
'எல்லாரும் ஜோடியா இருக்காங்க... நான் மட்டும் என்ன சென்டர்ல தனியா நின்னு ஆடணுமா?' எனப் பேந்தப் பேந்த முழித்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ரணதீரன், பக்கத்தில் நின்றிருந்த தினகரன் காதில் ஏதோ ஒரு ரகசியத்தைக் கூறிவிட்டு, சட்டென மலரின் அருகில் வந்து நின்றான்.
அவன் அவளுக்கு ஜோடியாக நிற்கப் போகிறான் என்பதை உணர்ந்த மலருக்கு, ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது போலிருந்தது. உடல் சிலிர்க்க, அதிர்ச்சி விலகாத விழிகளோடு அவனை ஏறிட்டாள்.
அவனோ கம்பீரமாக நின்று அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது திகைப்பைக் கண்டு, தனது ஒற்றைப் புருவத்தை நளினமாக உயர்த்தி "என்ன?" என்பது போல ஜாடை காட்டினான் ரணதீரன்.
அவனது அந்தப் பார்வை அவளை மேலும் நிலைகுலையச் செய்தது.
அவனது அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், "ஒன்றுமில்லை..." என்பது போலச் சட்டென்று தலையசைத்துவிட்டுப் பார்வையை நேராகத் திருப்பினாள் மலர். அவளது அந்தத் தடுமாற்றத்தைக் கண்ட ரணதீரனின் இதழோரம், ஒரு சிறு மின்னலைப் போலப் புன்னகை ஒன்று அரும்பியது.
அடுத்த நொடி, அந்தக் கூடம் முழுவதும் ஹாரிஸ் ஜெயராஜின் காந்த இசை பரவத் தொடங்கியது. உன்னிகிருஷ்ணன் மற்றும் சின்மயி ஆகியோரின் தேன் குரல்களில், "வாராயோ வாராயோ..." என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
அந்தப் பாடலின் மெல்லிசை காற்றில் கரைய, ரணதீரன் மெல்லத் தன் கையை மலரை நோக்கி நீட்டினான். அவளது இதயத் துடிப்பு அந்தப் பாடலின் தாளத்திற்கு இணையாக எகிறியது. பயம் அவளுள் ஊசலாட, ரணதீரனோ ஒரு மர்மமான புன்னகையோடு அவளைத் தன் வசப்படுத்தத் தொடங்கினான்.
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே…..
பாடல் ஒலிக்கத் தொடங்கியதும், ரணதீரன் ஒரு தேர்ந்த கலைஞனைப் போலத் தனது நடனத்தை லாவகமாகத் தொடங்கினான். கடந்த இரண்டு நாள் பயிற்சியின் காரணமாய், மற்ற இரண்டு ஜோடிகளும் அவனது அடிகளுக்கு ஏற்ப மிகச் சரியாகத் தாளம் தப்பாமல் ஆடினர்.
ஆனால், மலரோ அங்கே ஒரு திசை தெரியாதப் பறவையாய் நின்றாள். ரணதீரன் ஒரு பக்கம் நகர, அவள் திகைத்து மறுபக்கம் நகர என இருவரிடமும் அந்த 'கெமிஸ்ட்ரி' துளியும் வேலை செய்யவில்லை.
போதாக்குறைக்கு, காலில் அடிபட்டிருப்பதாக அவள் ஆடிக்கொண்டிருக்கும் நாடகமும் அவளது அசைவுகளைத் தடுமாறச் செய்தன.
முதல் சரணம் முடிவதற்கு முன்பே, ரணதீரனின் ஒற்றைக் கண் அசைவைப் புரிந்துகொண்ட தினகரன் சட்டென இசையை நிறுத்தினான். கூடம் அமைதியானது.
ரணதீரன் விலகிச் செல்லாமல், அவளது கண்களுக்கு மிக நெருக்கமாக வந்து நின்றான். அவளது விழிகளை ஊடுருவிப் பார்த்து, "என்ன... உனக்கு ஆடத் தெரியவில்லையா?" எனக் கேட்டான். அவனது குரலில் கேலி கலந்திருந்தது.
மலர் மெல்லத் தலையை ஆட்டி, "ஆமாம்" என ஒப்புக்கொண்டாள்.
ரணதீரன் அவளது அப்பாவித்தனத்தைக் கண்டு ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தான். "சரி... இப்போது வேறு எதையும் பார்க்காதே, என் கண்களை மட்டும் பார்!" என ஓர் அதிகாரப்பூர்வமான அன்போடு கட்டளையிட்டான்.
தினகரன் மீண்டும் பாடலை முதலிருந்து ஒலிக்கச் செய்ய, ரணதீரன் அவளது கைகளைப் பற்றிக்கொண்டான். 'ஸ்விங் டான்ஸ்' எனப்படும் மேற்கத்திய பாணியில், அவளது தாளத்திற்கு ஏற்ப அவன் அவளைத் தன் வசப்படுத்தினான்.
அவனது கண்களையே பார்த்தபடி மலர் நகரத் தொடங்க, அந்த முறை அவர்கள் இருவரின் அசைவுகளும் கவிதை போல ஒன்றிணைந்தன.
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே…..
வாராயோ வாராயோ மோனலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
இசை மெல்ல மெல்ல வேகம் எடுக்க, மலர் இதுவரை கட்டிக் காத்திருந்த பொய்கள் அனைத்தும் அந்த அறையின் காற்றில் கரைந்து போயின. காலில் அடிபட்டிருப்பதாகச் சொன்ன நாடகமும், தன்னைச் சுற்றியிருந்த பயமும் அவளுக்கு மறந்தே போனது.
ரணதீரனின் கைகள் அவளைத் தாங்க, அவன் சொன்னது போலவே அவனது தீட்சண்யமான கண்களை மட்டுமே பார்த்தபடித் தன்னை மறந்து ஆடினாள்.
ரணதீரனும் அந்த நிமிடம் தன்னை மறந்தான். அவளது விழிகளின் ஆழத்தில் ஏதோ ஒரு மர்மமான ஈர்ப்பு அவனைக் கட்டிப்போட்டது. அவனது அதிகாரமும், அவளது தயக்கமும் அங்கே விடைபெற்றுக் கொள்ள, இருவருமே தங்களைச் சுற்றியிருந்த உலகத்தை மறந்தனர்.
தினகரன் அங்கிருப்பது, மற்ற மாணவர்கள் ஜோடியாக ஆடிக்கொண்டிருப்பது என எதுவுமே அவர்கள் உணர்வுக்குப் புலப்படவில்லை. அந்தப் பாடலின் ஒவ்வொரு தாளமும் அவர்கள் இதயத் துடிப்போடு ஒன்றிப்போனது.
இருவருமே இந்த நிஜ உலகத்தை விட்டு விலகி, வேறொரு மாயாஜால உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். அங்கே சொற்களுக்கு வேலை இல்லை; விழிகள் மட்டுமே மௌன மொழியில் பேசிக்கொண்டன.
அந்த நடனம் வெறும் அசைவுகளாக இல்லாமல், இரு ஆன்மாக்களின் சங்கமமாக மாறியது
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
ஆ...லை..லை..லை..லை..காதல் லீலை
இ...செய்..செய்..செய்..செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனோடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
அவர்களின் நடனம் கலைநயத்துடன் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது உண்மைதான். ஆனால், ஒரு சீனியருக்கும் ஜூனியருக்கும் இடையிலான நடனப் பயிற்சியைத் தாண்டி, இருவரின் உடல் மொழிகளிலும் ஒருவிதமான அதீத நெருக்கமும், கூடுதல் உரிமையும் இழையோடுவதைத் தினகரன் கவனித்தான்.
ரணதீரனின் கைகள் அவளைத் தாங்கும் விதமும், மலர் தன்னை மறந்து அவன் கண்களில் லயித்திருப்பதும் அங்கிருந்த மற்ற மாணவர்களிடமிருந்து அவர்களைத் தனித்துக் காட்டியது.
தினகரனின் மனதிற்குள் அபாயச் சங்கு ஒலித்தது. 'இது... இது சரியில்லையே! ரணதீரன் இவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணிடம் தன்னைத் தொலைக்க மாட்டானே!' எனத் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அவன் மனதிற்குள் ஓடிய எண்ணங்கள் எதையும் அறியாத அந்த இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்தபடியே ஆடி கொண்டிருந்தனர்
நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுதி நீ
வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
மீதமிருந்த பாடலின் வரிகளுக்கும் தாளம் தப்பாமல் ஆடி முடித்தனர். இசை மெல்ல அடங்கியது.
பாடல் முடிவுக்கு வந்துவிட்ட அந்த நிசப்தமான தருணத்தில், அவளது விழிகளுக்குள் தன் விழிகளைக் கலக்கவிட்டிருந்த ரணதீரன், இன்னும் அவளை விட்டு விலகவில்லை. அவளது இமைகளுக்கு மிக அருகே அவன் முகம் இருந்தது.
அடுத்த நொடி, இசைக்கருவிகளின் சத்தம் தேய்ந்து மறைய, அந்தப் பாடலின் ஆன்மாவான
"என்னோடு வா தினமே..."
எனும் வரியைத் தனது இதழ்கள் அசைய மிக மெல்லிய குரலில் முணுமுணுத்தான். அது வெறும் பாடலின் வரி மட்டுமல்ல; அவளது ஆழமான மௌனத்தைக் கலைக்க அவன் விடுத்த அழைப்பு என்பதை மலர் உணர்ந்தாள்.
அவன் சொன்ன அந்த வார்த்தைகள், அவளது செவிகளில் தேனாய் இறங்காமல் இடியாய் இறங்கியது. அதைப் பார்த்த மலரின் கண்கள் இன்னும் பெரிதாக விரிந்தன; ரத்தம் உறைந்து போவது போன்றதொரு உணர்வு அவளை ஆட்கொள்ள, அவளது முகம் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனது.
மலர் ஒரு சிலையாக அங்கேயே நின்றாள்.ரணதீரனின் பார்வையில் இருந்த அந்தத் தீவிரமும், அவன் இதழ்கள் உதிர்த்த அந்த ஒற்றை வரியும் அவளது மொத்த உலகத்தையும் ஒரு நொடி நிலைகுலையச் செய்திருந்தது.
அந்தத் தற்காலிக மௌனம் அங்கு நிலவிய சுற்றியிருந்த யதார்த்தத்தை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டியது.அவர்கள் இருவரின் அந்த வசீகரமான நடனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள், உற்சாக மிகுதியில் கைதட்டிப் பாராட்டினார்கள்.
ஆனால், மலரோ அந்தப் பாராட்டுகளை எதையும் உணரவில்லை; ஒரு பெரிய பேயைக் கண்டதைப் போலவும், அது சட்டென்று அவளை அறைந்துவிட்டுச் சென்றதைப் போலவும் அப்படியே திகைத்து நின்றிருந்தாள்.
ரணதீரன் சுதாரித்துக் கொண்டான். "ஓகே... இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. இதே மாதிரியே பிராக்டிஸ் பண்ணுவோம். நாளைக்கும் கரெக்டா இதே டைமுக்கு வந்துடுங்க," என அதிகாரத்தோடு கூறி அந்த ஐவரையும் அனுப்பி வைத்தான்.
மற்றவர்கள் இயல்பாக நகர, மலர் மட்டும் இனம் புரியாதக் குழப்பத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள். அவளது ஒவ்வொரு அசைவையும் ரணதீரன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கூடாரத்தை விட்டு வெளியேறப் போகும் வேளையில்,சட்டென்றுத் திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவளது அந்தத் திடீர் பார்வையைச் சந்தித்த ரணதீரன், "என்ன?" என்பது போலத் தனது இடதுபுறப் புருவத்தை நளினமாக மேலே தூக்கிக் கேட்டான்.
அவனது அந்த ஒற்றை அசைவில் மீண்டும் நிலைகுலைந்தவள், சட்டென்றுத் தலையை இருபக்கமும் ஆட்டி "இல்லை... ஒன்றுமில்லை!" என்பது போலக் தலையை அசைத்துவிட்டு, அங்கிருந்து விறுவிறுவென ஓடுவதும் நடப்பதுமாகச் சென்றுவிட்டாள்.
மலர் மறைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரணதீரனோ, அவளது அந்தத் தடுமாற்றத்தை எண்ணித் தனது இதழ்களுக்குள்ளேயே மெளனமாகச் சிரித்துக் கொண்டான்.