எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

23 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 23

மனோ குடும்பம் மொத்தமும் மார்க் வீடு கிளம்பிச் சென்றிருந்தனர். பாலாவும் கூட அன்று விடுமுறை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். மார்க்கின் மாமாவால் ஏதும் பஞ்சாயத்து வந்தால், என மனோவிற்காக கிளம்பி வந்திருந்தான்.

"நா என்னத்துக்கு? நீங்க போய்ட்டு வாங்க" என்ற மீனம்மாவையும் இழுத்து வந்திருந்தான் மார்க்.

"என்னவாம் உன் நாத்தி, ஆரத்தியோட நிக்கா? பெருசா என்னமும் எதிர்பாக்குதமாட்டு இருக்குத்தா, பாத்து சூதானம்" என்றார் சென்று நின்றதுமே மீனம்மா.

"என்ன மீனம்மா எப்படி இருக்கீங்க? மனோ காதுல என்னத்த கடிக்கீங்க?" என லதா சிரித்தபடியே ஆரத்தியை சுற்ற,

"உன் நாத்தனார லம்பா கவனிச்சுவிடுன்னு சொன்னேனத்தா" என மீனம்மாவும் பதில் பேச,

"பின்ன மனோ தான என்னைய கவனிக்கணும். நா பிறந்தவீட்டுகாரினாலும் உடமைபட்டவ அவ தான?" என்றாள் லதாவும் தாராளமாய்.

மார்கண்டேயன் சுரேந்தரிடம் தன் அக்காவை காண்பித்து புருவம் உயர்த்த, தோளை குலுக்கி, உதட்டை பிதுக்கி காண்பித்தான் அவன்.

"என்னடா பாத்துட்டு நிக்ற. ஆரத்தி சுத்திருக்கேன்ல காசு குடு" என லதா தம்பியிடம் நையாண்டியாக கேட்க,

"சில்ரை இல்லையாம்" என்றார் மீனம்மா,

"என் தம்பிட்ட எல்லாம் ஐநூறாதான் இருக்கும்னு தெரியாதவளா நானு. அவன் எனக்கு சில்லரைலாம் போட மாட்டான் மீனம்மா" எனவும் சொல்ல, மார்கண்டேயன் எதுவும் பேசாமல் ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டிவிட்டான்.

"வாங்க உள்ள வாங்க எல்லாரும். எவ்வளவு நாளாகிடுச்சு இப்படி வீடே நிறைஞ்சு. கிருஷ்ணா, கண்ணா" என சாம்பவி எல்லோரையும் அழைத்து பேரன்களை கொஞ்சிவிட்டு, மல்லிகா கையில் தூங்கியிருந்த பிள்ளை கன்னத்தை தடவி கொடுத்தவர், "உள்ள ரூம்ல போடுத்தா. தொட்டில் வேணாலும் கட்டிக்கோ" என்க, அவள் விட்டால் போதும் என அறைக்குள் முடங்கிவிட்டாள்.

லதா தான் பம்பரமாக சுற்றி வந்தாள். "எல்லாரும் உட்காருங்க, டீ, கேசரி சாப்பிட்டுறலாம் ஃபர்ஸ்ட். அப்புறம் கேக் கட்டிங்" என அவளே அனைவருக்கும் எடுத்து கொடுக்கச் சென்றவள், "வா மனோ நீயும் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு. நீதானே வந்தவங்களுக்கு செய்யணும், பட் உனக்கு நா செய்றேன் சரியா" என திரும்பி வந்து அவளையும் அழைத்தாள்.

"சுரேந்தர் அண்ணா ஆள் மாத்தி கூட்டிட்டு வந்துட்டீங்களா? எந்த ஆங்கிள்லயும் இவங்க என் நாத்தனாரா எனக்கு தெரியவே இல்லையே?" என சுருங்கிய புருவத்துடன் கேட்க,

"நிச்சயமா நா கூட்டிட்டு வந்தவ இவ இல்ல. நேத்து நைட்டு வர என் பொண்டாட்டி என் பொண்டாட்டியா தான் இருந்தா, காலைல தான் யாரோ மந்திரிச்சு விட்ருக்காங்க, இல்லனா அவ யாரையோ மந்திரிக்க போறா. ரெண்டுல ஒன்னு கன்ஃபோர்ம்" என்றான் சுரேந்தர். மார்கண்டேயன் இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

"மனோகிட்ட என்னங்க சொல்றீங்க?" என அவளை அழைக்க வந்தவள் சுரேந்தரிடம் கேட்டு நிற்க,

"என்னவோ நடக்க போவுது, எதுக்கும் நீ குடுக்குற எதையும் சாப்பிடும் முன்ன யோசின்னு சொன்னேன்" என்றான் கொஞ்சமும் இரக்கம் இன்றி.

"உங்களுக்கு என்னைய எதாவது சொல்லிட்டே இருக்கணும்" என்றவள், "நீ வா மனோ!" என கைபிடித்து அழைத்து செல்ல, திரும்பி மார்க்கை பார்த்து கண்ணை உருட்டிவிட்டுதான் லதாவுடன் அடுப்படிச் சென்றாள் மனோ.

மற்றவர்கள் எல்லாம் பல நாட்கள் கழித்து சந்தித்தால், ஊரை பற்றி வேலையை பற்றி சில உறவுமுறைகளை பற்றி, அங்கங்கே நடந்த விஷேசங்களை பற்றி, அரசியல் பற்றி என பேச ஆயிரமிருக்க பேசியபடியே இருந்தனர். மனோ வீட்டினர் அவர்களாக மார்க்கின் மாமா பற்றி பேச்செடுக்க முயலவில்லை, அது மார்க்கின் குடும்பத்திற்கு மன நிம்மதியை தர அவர்களும் அவர்பற்றி பேச்செடுக்கவில்லை. பக்கத்து வீட்டில் ஆள் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

மனோவும், லதாவும் டீயையும் கேசரியையும் கொண்டு தர, அனைவரும் உண்டபடி இருக்க, "மதியத்துக்கு ஹோட்டல்ல ஆர்டர் சொல்லியாச்சு மனோ. அதுவே வந்திடும்" என்க, தலையசைத்துக் கொண்டாள்.

பிள்ளைகள் நால்வரும் விளையாட்டில் ஒன்றுசேர்ந்துவிட, "வைஷூக்கு கண்ணா, கிருஷ்ணாவ பாக்கணும்னு ரொம்ப ஆசை. அவகிட்ட விட்டாலே போதும் நல்லா பார்த்துக்குவா" எனவும் சொல்ல,

"அடடா அண்ணன் சொன்ன மந்திரிக்க போற ஆளு நாந்தானோ?" என முனங்கியபடி மனோ நிற்க,

"ஏன் ஒன்னும் பேச மாட்டேங்குற? நல்லா பேச வேணாமா? இப்படி தான் முதல்ல இருந்தே ஒதுங்கி ஒதுங்கி நின்னுட்ட, நமக்குள்ள செட்டாகாமலே போச்சு. இனினாலும் அடிக்கடி பாக்க பேசன்னு இருப்போம் அப்பதான் பிள்ளைகளும் ஒத்துமையா இருப்பாங்க"

"ஓ! சரி"

"என்ன மொட்டையா சரின்னு சொல்ற. சரி அண்ணி சொல்லணும்"

"ஓகே அண்ணி!"

"அப்புறம்? ஏன் அங்கேயே இருக்கீங்க? இங்க வந்து அம்மா அப்பாவோட இருக்கலாமே? உங்க அம்மா அப்பாவ உன் அண்ணா பாத்துக்குற மாதிரி இங்க மாரா தானே பாத்துக்கணும்? நீ வரமாட்டேன்னு சொல்லிட்டியாம் அதான் அவன் அங்கேயே கிடக்கான். பொண்டாட்டி வீட்லயே இருந்து, தொழிலயும் அங்கேயே வச்சுக்கிட்டா அவன யாரு மதிப்பா சொல்லு. உன்னையும் தான பேசுவாங்க" என சிரித்தபடியே தான் பேசினாள் லதா.

"உங்க தம்பி இங்க தான் வாரத்துல நாளு நாள் இருக்காங்க அண்ணி" என்றாள் மனோவும் நிதானமாக. லதா, எதை பேச இப்படி சுற்றி வளைக்கிறாள் என தெரியவேண்டி இருந்தது, அதனால் பொறுமையாகவே பதில் கூறினாள்.

"நீயே இங்க வந்துட்டா, அவன் தொழிலயும் இங்கயே வச்சுப்பான்ல?"

"என் வேலை அங்க தானே?"

"என்ன பெரிய வேலை? நர்சரி ஸ்கூல் ஏ, பி, சி, டி தான சொல்லி தருவ? அவன் அங்க இருந்தாம்னு வேலைக்கு போன சரி, இப்ப தான் இங்க வந்துட்டானே இன்னும் என்னத்துக்கு நீ வேலைக்கு போகணும்? இங்க வந்து வீட்ட பார்த்துட்டு பிள்ளைங்கள பார்த்துட்டு ரிலாக்ஸா இருக்கலாமே?"

"வேலைக்கு போறதும் ரிலாக்ஸா தான் அண்ணி இருக்கும் எனக்கு"

"நா என்ன சொல்றேன்னு உனக்கு புரியல மனோ! அதுவந்து" என அவள் மேலும் பேசும் முன், "என்ன பண்ற மனோ?" என வந்துவிட்டான் மார்கண்டேயன்.

"அண்ணி தான், அத்தையும் மாமாவையும் பாத்துக்க ஆள் இல்லன்னு புலம்புறாங்க" என குரல் சாதாரணமாக இருந்தாலும், கண் அவனை முறைத்துப் பார்த்தது.

"என்னடி?" என புருவம் உயர்த்தினான்.

"சரி வாங்க கேக் கட் பண்ணிடலாம். கேசரி இப்ப தானே சாப்பிட்டாங்கன்னு தான் கொஞ்சம் லேட் பண்ணுவோம்னு, சும்மா மனோட்ட பேசிட்ருந்தேன்" என வேகமாக சமாளித்தாள் லதா. வரவேற்பரை சென்றுவிட்டாள். அவளுக்கு மனோ முன் அவளை எதுவும் மார்க் பேசிவிட கூடாது என்பதும் பெரிதாக இருந்தது.

லதா சென்றதும் மனைவியிடம் திரும்பி, "என்னடி?" என்றான் மறுபடியும் மனோவை நெருங்கி,

"நீங்க பேசாதனால, உங்களோட பேசி சகஜமாகிட ட்ரை பண்றாங்கன்னு நினைக்கிறேன். வேற வழி இல்லாம தம்பி துணை வேணுமேன்னு கூட இப்டி மாறி இருக்கலாம். பட் என்னமோ இருக்கு அதுமட்டும் உண்மை"

"உங்கிட்ட என் அக்கா எப்படி பேசுவா?"

"அதிகாரமா. அவங்க பெரியாள் மாதிரியும் நா சின்ன பிள்ள மாதிரியும். அவங்களுக்கு தான் இங்க எல்லா உரிமையும் மாதிரி, அவங்கட்ட சொல்லாம நா எதையும் செய்ய கூடாதுங்கற மாதிரி. ஆஃப்கோர்ஸ் பாதி நீங்க என்ன ட்ரீட் பண்ண மாதிரிகள் தான், எங்க அம்மா வீட்ல நா நல்லாதான இருப்பேன்னு ஒரு எண்ணமு அவங்களுக்கு என் மேல உண்டு"

"என்னையும் எல்லாத்துலயும் சேர்த்துப்பியே நீ"

"நீங்க இல்லாம இங்க எதுவுமே எனக்கு இல்ல தெரியுமா?" என திரும்பி பார்க்க, பட்டுபுடவை, பூ, முகம் லேசாக வேர்த்து கலங்கியிருக்க, அதிலும் கூடுதல் பலபலப்பிருந்தது அவள் முகத்தில்.

"அழகா இருக்கடி!" என கண்ணடித்தான்.

"ஜொள்ளு!" என அவள் உடனே கண்டிக்க, அவள் இடுப்பில் நறுக்கென்று கிள்ளிவைத்தான் மார்க், அதற்கும் முறைத்தாள் மனோ.

"தம்பி, மனோ வாங்க ரெண்டு பேரும்" என அங்கிருந்தே அழைத்தாள் லதா,

மனோ அவனை முறைத்தபடியும், மார்க் சிரித்தபடியும் அங்கு சென்று நிற்க, நான்கு பிள்ளைகளையும் அவர்களோடு நிற்க வைத்தாள் லதா.

"கட் பண்ணுங்க" என சுரேந்தரும் சொல்ல, பிள்ளைகள் கைபிடித்து இருவரும் கேக்கை வெட்டினர். முதலில் பிள்ளைகளுக்கு கொடுத்த மார்கண்டேயன், அடுத்ததாக மனோவிற்கும் ஊட்டிவிட வர, அவள் தலையை பின்னால் சாய்க்க, இப்போது முறைத்தான் இவன்.

"வாங்கு மனோ!" என பாலா, சுரேந்தர், லதா எல்லோரும் சொல்ல, அதன்பிறகே வாங்கிக் கொண்டாள். எல்லாரும் பார்க்க வாங்குவது தான் ஒருவிதமாக இருந்தது, வாங்கியபின் பெரிதாக தெரியவில்லை சகஜமாகிவிட்டாள். இருவரும் சேர்ந்தே இருந்து ஊட்டிவிட்டோ பறிமாறியோ உண்டிருந்தால் பெரிதாக தெரிந்திருக்காமல் இருந்துருக்கலாம். கணவன் மனைவியாக ஓரே வீட்டில் இருக்கையில், ஏதோ ஒன்றை அவள் ருசி பார்க்க கூட அவனுக்கு குடுக்க நேர்ந்திருக்கும், அவனும் ஏதாவது வாங்கி வந்ததை அவள் கைவேலையாக இருந்தால் ஊட்டி விட்டிருப்பான், வெகு இயல்பான ஒரு விஷயம் அது. அதுபோன்ற பல சமயங்களை கடந்து வந்திருக்க கூடும். ஆனால் அதுவே அவளுக்கு ஒன்பது வருடத்திற்கு பிறகும் சங்கோஜம் தரும் விஷயமாக இருந்தது. மனோ சமாளித்துவிட்டாலும் மார்க்கண்டேயனால் அதை உணர முடிந்தது. இங்கு தான் இனி என முழுமையாக வந்தபின்னரும் அவன் தவறவிட்ட சாதாரண சின்ன சின்ன விஷயங்கள்.

மறுபடியும் பெரியவர்கள் எல்லாரும் அப்படியப்படி அமர்ந்துவிட, லதாவே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள். மார்கண்டேயன், பாலா, சுரேந்தர் மூவரும் வெளி வராந்தா மேடையில் சாய்ந்து நின்றனர்.

"வெடி வெளியே வரபோகுது, ரெடியா இரு" என மார்கண்டேயன் காதில் சுரேந்தர் சொல்ல.

"உங்க பக்கம் தான் திருப்பி விடுவேன்" என்றுவிட்டான் அடுத்த நொடியே,

"இதெல்லாம் உங்க மச்சான கேட்குறதில்லையா நீங்க?" என மறுபக்கம் அமர்ந்திருந்த பாலாவிடம் சுரேந்தர் கேட்க,

"உங்களுக்கும் எனக்கும் அமைஞ்ச மாதிரி பொண்டாட்டி அமஞ்சுருந்தா, மாப்பிளைக்கு குடும்பஸ்தன் கஷ்டம் தெரிஞ்சுருக்கும். மனோ தங்கம்" என சிரித்தான் அவன்.

"புருஷன்னு வந்துட்டா பொண்டாட்டி ரோல் பண்ற எல்லாரும் ஒன்னு தான். உங்க ரெண்டு பேருக்கும் அவள தங்கச்சியா மட்டுந்தான தெரியும், எனக்கு தான் அவளோட மறுபக்கமு தெரியும்" என மார்க் சொல்ல,

"அம்மாடி மனோ!" என சுரேந்தர் அழைக்க,

"நா அக்காவ கூப்பிட்டு பஞ்சாயத்து வைப்பேன் பரவால்லயா? எனக்கு இன்னைக்கு கல்யாண நாளு, எந்த கோக்கும்மாக்கும் நடக்க கூடாது. மருமக வேணுமா வேணாமா உங்க ரெண்டு பேருக்கும்?" என்றவன் பேச்சில் இருவரும் சிரிப்பை அடக்கி கொள்ள, இவனும் அருகில் வந்த மனைவியை, "இங்க நில்லு மனோ!" என அருகே நிறுத்திக்கொண்டான்.

"எமகாதகன்டா நீயி" என்றான் சுரேந்தர் வாய்விட்டே,

"என்னாச்சுண்ணா?" மனோ கேட்க,

"இவன ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ணணும்மா நீ" என்றான் மறுபடியும்,

"அங்க அக்கா என்னவோ பேசுறா பாருங்க" என அவன் முகத்தை பெரியவர்களோடு அமர்ந்திருந்த லதா பக்கம் திருப்பிவிட்டான் மார்க்.

"மனோட்ட பேசிட்டேன். மாரா தொழில் அங்க பண்ண காரணமே, மனோ தான். இப்ப தான் ரெண்டு பேரும் ஒன்னாகிட்டாங்களே, இனி இங்கேயே இருக்கலாம்ல, அம்மாவும் தனியா இருக்கதா ரொம்ப ஃபீல் பண்றாங்க" என லதா சொல்ல,

"அப்படியாம்மா? உன்ட்ட சொல்லிட்டு தானே அங்க போனேன்? உன்னயும் அப்பாவையும் கூட கூப்பிட்டேன்ல?" மார்க் சொல்ல,

"ஏற்கனவே நில விஷயத்துல நீ அம்மாட்ட கோவமா இருந்த, அதான் அவங்க உன்ட்ட சொல்லல, ஆனா நீ அங்க மனோ வீட்டோட போயிடுவியோன்னு அவங்களுக்கு ரொம்ப வருத்தம்" என லதா பட்டென்று பேச,

"அப்படி சொல்லல சம்பந்தி, இங்கே இருந்து தொழில் பாக்கலாம், அங்கையும் இங்கையும் அலையிறானேன்னு சொன்னேன்" என்ற சாம்பவி, "எத எப்படி பேசணும்னே தெரியாதா உனக்கு?" என மகளையும் அதட்டினார்.

"அவங்களுக்கு புரியும்மா" என்றாள் லதா அப்போதும்.

"இது என் டிஷிஷன். என்னட்ட பேசணும் நீ" என்றான் மார்க்.

"நீ அவளுக்காக தான செய்ற, அவ இங்க வரக்கூடாதுன்னு இருக்கா, அப்ப அதபத்தி அவள பெத்தவங்கட்ட தான பேச முடியும்?"

"எனக்கு அங்க தான் கம்பர்டபிளா இருக்குன்னு சொல்றேன்ல" என்றான் மறுபடியும்.

"அவனுக்கு பிடிச்சத பண்ணட்டும். நீ சும்மா இரு லதா. வேண்டாத பேச்சு பேசாத" என்றார் மணிகண்டன்.

"நீங்க சும்மா இருங்கப்பா. நா ஒன்னும் காரணமில்லாம சொல்லல. இப்ப மனோ வேலைக்கு போயே ஆகணும்னு என்ன கட்டாயம்? தம்பிதான் நல்லா சம்பாதிக்கிறானே?"

"அது அவங்க பிரச்சனை உனக்கு என்னடி அதுல?" என்ற சுரேந்தரின் குரலில்,

"இங்க பாருங்க நீங்க அங்க என்னைய என்ன பாடு படுத்துறீங்கன்னு இவங்க யாருக்கும் தெரியாது" என்றவள் லேசாக கண்ணீரை துடைத்துக் கொண்டு, "என்னைய வேலைக்கு போக சொல்லி ஒரு வருஷமா படுத்துறாரு. நானும் ட்ரை பண்ணிட்டேன் எனக்கு வேலையே கிடைக்கல. எனக்குன்னு மாச வருமானம் வேணும். அதில்லனா இவர்ட்ட என்னால வாழவே முடியாது. ஒரு பால் பாக்கெட் வேணும்னா கூட அவர் நினைச்சா தான் வாங்கி நானும் பிள்ளைங்களும் குடிக்க முடியும். இதெல்லாம் எதனால தெரியுமா? இதோ இவன் அமெரிக்காவுல இருந்து வேலையை விட்டு வந்ததால தான். இவேன் அங்க இருந்துருந்தா அவருக்கு என்மேல மரியாதை இருந்துருக்கும். இப்ப எல்லாம் போச்சு. நா எவ்வளவு ஆணவமா என் தம்பி வீட்டுக்கு போறேன்னு போய்ட்டு வருவேன். கணக்கு வழக்கு பாக்காம நா கேட்டப்பலாம் ரூபா அனுப்பினவன் இப்ப என் ஃபோன கூட எடுக்க மாட்டேங்குறான். இவங்க ரெண்டு பேர்ட்ட கேட்காம நா வேற யார்ட்ட கேட்பேன். அப்பாக்கு முடியலல அப்ப இவந்தான என்னைய பாக்கணும்? எனக்கு மாச வருமானம் வேணும். அவன் இங்க தேனீ பண்ணை வச்சுருக்கான்ல? நல்லா தானே போகுது? அதுல வர்ற வருமானத்துல எனக்கு ஒரு பங்கு பாதியா போட்டுவிட சொல்லுங்க, மீதிய மனோக்கும் போட்டா அவளும் வேலைக்கு போக வேணாம். வீட்டு பொம்பளைங்களுக்கு ஆகாம வேறெதுக்கு? நா சொல்றதுல எதாவது தப்பா தெரிஞ்சா சொல்லுங்க நா கேட்டுக்குறேன்" என மீண்டும் கண்ணீரை துடைக்க,

அனைவரும் விழித்தபடி இருக்க, நெஞ்சில் கைவைத்து அதிர்ந்த மீனம்மா, "ஆத்தாடி ஆத்தா நானும் பாத்தாலும் பாத்தேன் உன்னைய மாதிரி ஒரு ஐடியாமணிய பாத்ததே இல்லத்தா. எனக்குலாம் இம்புட்டு சாமர்த்தியம் பத்தாது. கொஞ்சுண்டு கத்துகுடுத்தா. யப்பா யப்பா யப்பா. என்னன்னுயா இவகூட இத்தன வருஷமா குடும்ப நடத்துத நீயி? இதுக்கு ஃபாரீன் சாரு தங்கந்தான் போலயே?" என புலம்பியே சொல்லிவிட்டார். அவருக்கு என்ன பயம் அதனால் பேசிவிட்டார்.

"என்ன மீனம்மா சொல்றீங்க?" என்றாள் லதா,

"அப்படியே ஆஞ்சுபுடுவேன் ஆஞ்சு. எங்க வீட்டு பிள்ளைக்கு நீ என்னடி பங்கு தாரது? உன் புருஷன் அவ தங்கச்சிக்கும் தம்பிக்கும் இன்னைக்கும் சம்பளத்துல பாதிய அனுப்பிட்ருந்தா சும்மா விட்டு பாப்பியா நீ? பாவ்லாவா காட்டுத? வேணும்னா வேலைக்கு போ, இல்லனா வீட்ல கட, என் புள்ளைக்கு பேச்சுக்கு வந்த? மரியாதை கெட்டு போவும் பாத்துக்கோ. பிள்ளைய பாரு பிள்ளைய வந்துட்டா நீலி கண்ணீர் வடிச்சுட்டு. உன் பிள்ளைகளுக்கு இதத்தான் சொல்லி குடுத்து வளக்கியோ? கட்டுன புருஷன இத்தன பேரு முன்னுக்க உன் இஷ்டத்துக்கு பேசுற அறிவிருக்கா இல்லையா? பிள்ளைக என்ன நினைக்கும், நாங்க வந்தவுக என்ன நெனப்போம் எதுவும் இல்லைல உனக்கு? உன் மாமியா உன் வாய கிழிச்சுவிட்டிருந்தா இப்படி பேசுமா இந்த வாயி?" என அவர் பேச பேச, எல்லோரும் இன்னும் அதிர்ந்து தான் நின்றனர். லதாவே பேச்சு மறந்து தான் ஒரு நிமிடம் நின்றுவிட்டாள்.

"என்னத்த பொம்பள பிள்ளைய பேசவிட்டுட்டு நிக்கீக? உங்க பொண்ணு பேசுறதெல்லாம் சரின்னு தோனுதோ உங்களுக்கு?" என அடுத்ததாக சாம்பவியிடம் செல்ல,

"இங்க பாருங்க, என்னைய பேச நீங்க யாரு முதல்ல. உங்க வீட்ல தான் வேலைகாரிய நடுவீடு வர விடுறாங்கனா, இங்கயும் அந்த நெனப்புல பேச கூடாது சொல்லிட்டேன். இது என் வீடு, என்னைய பேசும் முன்ன யோசிக்கணும்" என பேசி முடிக்கும் முன்,

"ஏய்!" என மனோ அதட்டியிருக்க, மார்க் பார்த்தபடி தான் இருந்தான். அவனுக்கு தெரியும், மீனம்மாவிற்கு யாரின் தயவும் தேவைபடாது என்று. அவரை பேசினாள் தானே அவரிடமே வாங்கி கொள்ளட்டும் என நின்றுவிட்டான். சுரேந்தர் அருகிலேயே தான் நின்றான். ஆனால் பாலா, மார்கண்டேயன் இருவருமே அவனை திரும்பி பார்த்து சங்கடபடுத்தாமல், சாதாரணமாக நின்றனர்.

மீனம்மா, "இந்தாடி, யார்ட்ட பேசுற?" என அவள் முன் சென்றவர், "எங்க திரும்ப பேசு பாப்போம். வாயிலேயே போடுவேன்" என கையை ஓங்கி கொண்டு செல்ல, இரண்டடி பின்னால் தள்ளி நின்றாள் லதா.

"மனோ நா வளர்த்த புள்ள, அவளுக்கு ஒன்னுன்னா எங்க வந்தும் கேட்பேன் நானு. நீ அமுக்க பாக்குறதும் அவ புருஷனோடத தான். நானாவது வேலைகாரியா இருந்து உழைச்சு சாப்பிடுறேன். ஆனா நீ? பிடுங்கியே எத்தனை வருஷத்த ஓட்டுவ?" என அரட்ட,

"அவன் என் தம்பி! எனக்கு செய்யாம யாருக்கு செய்யணும்? நீங்களாம் தான் அவன என்ட்ட இருந்து பிரிச்சுட்டீங்க. என் புருஷனுக்கு தம்பி தங்கச்சி இருந்தாலும் நா செய்ய தான் சொல்லுவேன் குறுக்க புகுந்து கெடுக்க மாட்டேன்"

"இல்லன்ற தைரியத்துல பேசுத? ஆனா மனோவ அவரு தங்கச்சியாஃ தான் பாக்றாராம்" என்றவர் சுரேந்தரிடம் திரும்பி, "மாசம் ஒரு ஐம்பதாயிரம் போட்டுவிட்ருங்க தம்பி" எனவும் சொல்ல,

"தங்கச்சி மாதிரிய எல்லாம் இதுல சேக்க முடியாது" என்றாள் அதற்கு மட்டும் இன்னும் வேகமாக.

"அப்படியே பளார்னு ஒன்னு வைக்கட்டா?" என கையை அடிக்க ஓங்கியவர், அவள் கன்னத்தை வலிக்க நிமின்டிவிட்டார்.

அவர்கள் இருவரின் பேச்சில் யாருமே குறுக்கே செல்லவில்லை. மகள் பேச்சு பிடிக்காமல் மணிகண்டன் கூட வேடிக்கை பார்த்து நிற்க, சாம்பவி தான், ஒன்றும் பேச முடியாமல் நின்றார். மகள் ஒருபக்கம் என்றால் மறுபக்கம் மகன். மகளுக்கு மகன் செய்வதிலோ அவள் கேட்பதிலோ பிழை இருப்பதாக அவருக்கும் தோன்றவே இல்லை. அதனால் பாவம்தான் பட்டார்.

ஆண்டாள், ஞானம், பாலா மூவரும் எரிச்சலோடு நிற்க, மல்லிகா, "இது புதுசா இருக்கே? நல்ல வேலை நம்ம நாத்தனார் கொஞ்சம் ரோஷகாரி. உன்னோடது உனக்கு என்னோடது எனக்குன்னு இருக்கா. அந்த வகைல நா தப்பிச்சேன்" என வேடிக்கை பார்த்து நின்றாள்.

"எம்மா நீங்க என்ன உங்க மகள கேட்காம நிக்கீங்க?" என மீனம்மா சாம்பவியிடம் வர,

"அவ தம்பின்ற உரிமைல கேட்கா மீனம்மா. நா பேசுறேன் அவகிட்ட" என சாம்பவி சொல்லிவிட,

"ஐயையே! ஃபாரீன் சாரு பிரச்சனை உங்க அக்கா இல்ல உங்கம்மா தான். இவங்க தான் அவள அப்படி சொல்லி சொல்லி வளர்த்து கெடுத்து வச்சுருக்காங்க" என சொல்ல,

"இல்ல இல்ல மாரா. நா அவகிட்ட பேசுறேன்டா. சிலநேரம் கூறுகெட்டாக்குல இப்படிதானே பேசி வைப்பா, தப்பா எடுக்காதடா நீ" என பதறி பேச,

"ம்மா அவா அத்தான என்னெல்லாம் சொல்லிட்டா, அத கேட்டியா நீயி?" என மார்க் தான் அதட்டி ஞாபகபடுத்தினான்.
 
"மன்னிச்சிருங்க மாப்ள. அவள நீங்க கண்டிக்காம யாரு கண்டிப்பா. அவ பேசுனதுல நாங்க எதுவுமே நினைக்கல. நீங்க எப்பவும் போல அவள உங்க கைல இறுக்கி பிடிங்க. இந்த பக்கமே விட வேணாம்" என சாம்பவிக்கு முன் பேசியிருந்தார் மணிகண்டன்.

"ம்ம்கூம் எங்கூட அவ அவ்ளோ கஷ்டப்பட்டு வாழவே வேணாம். சுதந்திரமா இங்கயே இருக்கட்டும். நா அவள படுத்துறபாட்டுக்கு அவளால அங்க வாழவே முடியாது மாமா. உங்க பொண்ண நீங்களே வச்சுக்கோங்க. மார்கண்டேயன் அமெரிக்காவுல இருந்தப்ப ஆளா பறந்துட்டு போனது உங்க பொண்ணு தான். டிக்கெட் காச நா குடுப்பேன் ஆனா அதையும் உங்க பையன்ட்ட குடுக்காம வந்துட்டு, அவன் வேணாம்னு சொல்லிட்டாம்னு சொல்லுவா உங்க பொண்ணு. அவன் காசுக்காக உங்க பொண்ண நா வச்சுக்க வேணாம். அவன் காசும் வேணாம் உங்க பொண்ணும் வேணாம். நா கிளம்புறேன். வரேன்டா மாரா" என்றவன், பிள்ளைகளை அழைத்து கிளம்ப, அவர்களும் சமத்தாக அவனுடன் கிளம்பிவிட்டனர். பனிரெண்டு வயது, பத்து வயது பிள்ளைகள் அதனால் பார்க்கும் அனைத்தும் புரிந்தது.

"நல்ல புருஷனோட இருந்து வாழ தெரியல, இவளாம் பேச வந்துட்டா" என மீனம்மா சேலையை உதறி கிளம்ப, ஆண்டாள், ஞானம், பாலா மூவரும் மணிகண்டனிடம் ஒரு தலையசைப்புடன் கிளம்பிவிட்டனர். நிச்சயம் மார்கண்டேயனும் மனோவும் வந்துவிடுவர் என வெளியே சென்று கார் அருகில் நின்றுவிட்டனர். மல்லிகாவும் பின்தொடர்ந்துவிட்டாள்.

மனோ அவள் முன் வர, "நா உனக்கும் சேர்த்து தான் பேசுனேன் மனோ? என் தம்பிட்ட நா கேட்க கூடாதா நீ சொல்லு?" என அவள் கை பிடிக்க வர,

"ச்ச ச்ச தள்ளி நில்லுங்க. உங்கள மாதிரி சுயநலமான ஆள நா பாத்ததே இல்ல. வாழ்க்கை முழுக்க உங்களுக்கே உழைச்சு கொட்ட தான் உங்களுக்கு அவர தம்பியா பெத்தாங்களா உங்கம்மா? இல்ல எதுக்கு கல்யாணம்லாம் பண்ணி வைக்றீங்க, உங்க கூடவே வச்சுக்க வேண்டியது தான?" என்றுவிட்டு திரும்பியவள் மீண்டும் அவளிடம் திரும்பி, "புருஷனும் பொண்டாட்டியும் பிரிஞ்சிருந்தா ரொம்ப புடிக்கும்ல உங்களுக்கு. இருந்தா பாருங்க தெரியும்" என்றாள், பின் திரும்பி மார்கண்டேயனை பார்க்க, அவன் முறைத்துப் பார்த்தான்.

"நடடி!" என அவளை வெளியே நடக்க சொல்லி அவனும் கிளம்ப,

"மாரா!" என அக்கா, அம்மா இருவரும் அழைத்து நிறுத்தினர், "என்னைய ரொம்ப ஏமாத்துறீங்க எல்லாரும். காசுன்னு வந்துட்டா கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்கு பின்னுன்னு பிரிச்சுடணும் போல. கல்யாணத்துக்கு முன்ன நா எவ்வளவு வேணா தானம் பண்ணலாம் ஆனா கல்யாணத்துக்கு பின்ன நா கணக்கு காட்டணும்னுன்ற எண்ணம் எனக்கிருந்துருக்கணும். அதேதான் என்ன நம்பி இருந்தவங்களுக்கும், கல்யாணத்துக்கு முன்ன இவன் தாராளமா செஞ்சான் கல்யாணதுக்கு அப்புறம் அவன் குடும்பத்த பாக்க போயிருவான்ற பயம், அது உங்க சுயரூபத்த காமிச்சு விட்ருது. இதோ இப்ப ஒன் பை ஒன்னா காட்றீங்களே இந்த மாதிரி. உனக்கு ஒரு கஷ்டம்னா நீ என்ன எதிர்பாக்கலாம், ஆனா உன்ன விட்டுட்டு எங்க நா மட்டும் முன்னேறிடுவனோன்னு பயத்துல நீ என்ட்ட எதிர்பாக்குற அது நடக்காது. என் பொண்டாட்டி பேர்ல வாங்க வேண்டிய சொத்து அது, அப்படி போய் மாட்டிட்டு நிக்குது. காரணம் நா உங்களலாம் நம்பினது தான். இனி அந்த தப்ப ரிப்பீட் பண்ற ஐடியால நா இல்ல. சோ மறுபடியும் மறுபடியும் எதாவது ட்ரை பண்ணாம, உன் வாழ்க்கைய நீ வாழு, என் வாழ்க்கைய என்னைய வாழ விடு" என்றவன், "நா அடுத்த வாரம் வர்றேன்மா, வரேன்பா" என சொல்லி கிளம்பிவிட்டான், மனோ சொல்ல கூட இல்லை, வெளியேறிவிட்டாள்.

சுரேந்தர் அவன் காரிலேயே சென்னை கிளம்பியிருக்க, இவர்களும் அவர்கள் காரில் கிளம்பினர். முதலில் மனோ, மார்க், கண்ணன், கிருஷ்ணன், மீனம்மா இறங்கி கொள்ள, அதே வண்டியில் பாலா குடும்பம் கிளம்பியது. இங்கு இறங்க சொல்லியும் மறுநாள் வேலைநாள் என அப்படியே கிளம்பிவிட்டனர்.

"உன் நாத்திட்ட பேசி எனக்கு நாக்கு தள்ளிபோச்சு நா நாளைக்கு வர்றேன்தா" என மீனம்மாவும் அவர் வீடு சென்றுவிட, மார்க் குடும்பம் மட்டும் வீட்டினுள் வந்தனர்.

பிள்ளைகள் இருவரையும் களைப்பு நீங்க குளிக்க வைத்து, உடை மாற்றி, இரவு உணவு கொடுக்க, உண்டதும் படுத்துவிட்டனர். அவ்வளவு அயர்ந்திருந்தனர். மார்கண்டேயன் வந்ததும் லேப்டாப்பை எடுத்து அமர்ந்தவன், அவளில் ஒரு கண்ணும் கணினியில் ஒரு கண்ணுமாக இருக்க, சிறிது நேரம் பொறுத்தவள், ஒரு நிலைக்கு மேல், "கண்ண நோண்ட போறேன் பாருங்க" என அதட்டியே விட்டாள்.

"பாத்தாலே கரைஞ்சுடுவியா நீ? அங்க வச்சு என்னடி சொன்ன? எதுக்கு கல்யாணம் பண்ணுறீங்கன்னு கேட்குற? என்னைய பாத்தா எப்படி தெரியுது உனக்கு?" என மிரட்ட,

"பால் வேணுமா வேணாமா?" என புருவம் உயர்த்தினாள் மனோ. அவள் கேள்வியே மற்றதை மறக்கடித்துவிட,

"எடுத்துட்டு வாயேன் ப்ராப்பரா செலிப்ரேட் பண்ணிடுவோம்" என சட்டென்று ஹஸ்கி குரலுக்கு மாறிவிட்டான் மார்க்.

அறையில் பிள்ளைகள் தூங்கியிருக்க, ஹாலில் மெத்தையை விரித்தனர் இருவரும். டிவி ஓடியபடி இருந்தது, அவன் படுத்திருக்க அவன் தோளில் தலைவைத்து மேலே பார்த்து படுத்திருந்தவளும் அமைதியாக படுத்திருக்க அவனும் அமைதியாக தான் யோசனையோடு படுத்திருந்தான்.

"தூக்கம் வருதா மனோ?" என குனிந்து அவள் உச்சியில் முத்தமிட,

"இல்ல!" என நிமிர்ந்து மூக்கில் வாங்கினாள் அடுத்த முத்தத்தை.

"பின்ன அமைதியா இருக்க?"

"நீங்களும் தானே?"

"அப்ப அமைதியா ஏன்டா இருக்கன்னு கேட்குற?" என அவள் நாடிபிடித்து நிமிர்த்த,

"ஆமா!" என்றாள் சிரிப்புடன் கண்சிமிட்டி, ஆவேசமான முத்தத்துடன் துவங்கிவிட்டான் அவன் ஆலிங்கனத்தை.

மீண்டும் ஊருக்கு கிளம்பிவிடுவான் என்ற அவசரம் இல்லாத, அடுத்து எப்போது வருவோமோ என்ற ஏமாற்றம் இல்லாத ஒரு அழகான நிம்மதியான கூடலில் கூடி களைத்தனர் இருவரும். ஏற்கனவே அறிமுகமான பரிட்சையமான உணர்வுகள் தான் இருவருக்கும் ஆனாலும் இன்று புதிதாகவும் புத்துணர்வாகவும் இருந்தது. ஆசையாகவும் ஆத்மார்த்தமாகவும் ஒரு தேடலாகியது அந்த சேர்க்கை.

மௌனமாக அவளும், "மனோ!" என்ற மந்திரமாக அவனும் கிறங்கி கிடக்க,

"மனோ மனோன்னு புலம்பி அவனுங்கள எழுப்பி விட போறீங்க" என அவன் வாயை மூட,

"புலம்ப விடுறடி நீ" என இன்னும் போதையில் தான் இருந்தான் மார்க். அவ்வளவு சீக்கிரம் தெளியாத போதை, அவன் தெளிய விரும்பாத போதை அவள், அவன் மனைவி மனோரஞ்சிதம்.





 
Top