வினய் திருமண உறவுக்கு முழுதும் தயாராகிவிட்டான்.கலிபோர்னியா ஸ்டேட் யூனிவர்சிட்டியில் எம் எஸ் இறுதி ஆண்டு பயிலும் மாணவி தயாவுடன் அவனுக்கு நிச்சயம் ஆகி உள்ளது. இது வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பெண்ணுக்கு இந்த திருமண உறவில் சற்றும் பிடித்தம் இல்லை. ஆனால், சாதாரண வங்கி அலுவலர் அவள் அப்பா. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவரது தங்கை திருமணம் சமயம் எடுத்த கடன், வீட்டுக்கடன் எல்லாம் முடியும் நிலையில் மூத்தவள் பொறியியல் முடித்துவிட்டாள். இரண்டு வருஷங்கள் ஒரு ஐ டி நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு வங்கி கடனில் இங்கு படிக்க பயணம். தங்கையோ பொறியியல் இறுதி ஆண்டு மாணவி. ஒரு நடுத்தர குடும்பம் அவர்கள் மன நிலையில் வினய் போன்றதோர் வரன் வரமே!
படித்துக் கொண்டிருக்கும் பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்க வேண்டுமா... என்றெல்லாம் அந்தப் பேச்சுக்கே இடமில்லை! மகள் அமெரிக்காவில் படிக்கிறாள்.அதற்கு ஏற்ற வரன் அமைய வேண்டும். பொருளாதார ரீதியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு அவளின் பெற்றோரிடம் இப்போது பணம் இல்லை.
தயா தன் பெற்றோரிடம் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டாள்.'’ நான் எம்எஸ் முடிச்சிட்டேன்னா அங்கேயே எனக்கு வேலையும் கிடைச்சுடும். அதுக்கப்புறம் இவ்வளவு பணக்கஷ்டம் இருக்காது. எவ்வளவு செலவு செஞ்சு நீங்க எனக்கு கல்யாணம் செய்ய நினைக்கிறீர்களோ அவ்வளவு பணத்துக்கு மேலேயே என்னால் சம்பாதிக்க முடியும். தங்கச்சிக்கு கூட நல்ல பெரிய இடமே பார்த்து கல்யாணம் செஞ்சுடலாம்'’என்றெல்லாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கூட அன்னிய தேசத்தில் தனியாக பல வருடங்கள் திருமணமாகாத மகளை விட்டு வைக்க தயாவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விருப்பமில்லை. கொஞ்சம் என்ன... நிறையவே பழமையில் ஊறிய குடும்பம். இவ்வளவு தூரம் அனுப்பி வைத்ததே பெரிய விஷயம். நினைக்க நினைக்க ஆற்றாமையாக இருந்தது. சீரியஸாக படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திருமணம் தேவைதானா எனும் கேள்விக்கு பதில் இல்லை. இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்தால், வேறு வழி கிடைக்கும். அதற்குள் நிச்சயம் ஆகிவிட்டது. மாப்பிள்ளை பற்றி அறிந்து கொள்ளவும் அவளுக்கு ஆவல் இல்லை. மனதில் பட்டாம்பூச்சி பறக்கவில்லை.
விநயனை அவள் நிச்சயம் இங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் புகைப்படத்தை பார்த்த உடன் நேரில் பார்ப்பதற்கு அவனால் காத்திருக்க முடியாது. அதனால்தான் கிளம்பி வந்துவிட்டான். இருவரும் காபி ஷாப்பில் காஃபி அருந்தியாவாறே பேசிகொண்டிருந்தார்கள். பிறகு ஷாப்பிங் அழைத்து சென்றான். நிறைய பேசினான். இரவு அவளுடன் அறையில் தங்கிக்கொள்ள அவன் கேட்க தயா தீர்மானமாக மறுத்துவிட்டாள். அவன் முகம் சுருங்கியதை அவள் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவளின் நடத்தை அவனுக்குள் ஒரு ஸ்வாரஸ்யம் கலந்த கோவம் கொடுக்க, ஹோட்டல் அறையில் தங்கிக்கொண்டான்.
இந்தியாவில் திருமண நிகழ்வு நடப்பதில் திருவாளர் மாப்பிள்ளைக்கு விருப்பம் இல்லை. பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளையின் பெற்றோர் அமெரிக்கா வர சியாட்டல் வீட்டில் திருமணம். நோர்த் காரோலினாவில் உள்ள வெங்கடேஸ்வரா ஆலயத்தில் தரிசனம். வீட்டில் விருந்து. திருமண பதிவு என்று நிகழ்வுகள் முடிய, யூனிவர்சிட்டி மாற்றிக்கொண்டு பெண்ணும் சியாட்டல் வீட்டுக்கு வந்துவிட்டாள். இரு சார்பு பெற்றோரும் விடை பெற்று இந்தியா கிளம்பி விட, இருவரின் திருமண வாழ்க்கையும் ஆரம்பம் ஆனது.
முதலில் பிடித்திருந்த அவனது வேகம், பிறகு தயா அவளுக்கு நடுக்கம் தந்தது. அவன் தொடுதலில் காதல் கொஞ்சமும் இல்லை, முழு காமம் என புரிந்த பிறகு உணர்வுகள் மரத்துபோனது. அவளது அடுத்த செமஸ்டர் பணம் அவன் கட்டியிருந்தான். அதை பலமுறை சொல்லியும் காண்பித்தான். அதுவும் நித்தமும் கூடலுக்கு முன். அவளுக்கு படுக்கை முள்ளாய் தைக்க கொண்டவன் தேளாய் கடுத்தான்.
கல்லூரி செல்லும் பொழுது உடல் துவண்டது. தினமும் கூடல் அவளை சக்கை போல் பிழிய வாயை மூடி பொறுத்துக் கொண்டாள்.
முனைந்து படித்து, அவள் ப்ராஜெக்ட் செய்த கம்பெனியில் வேலையும் கிடைக்க, கணவனிடம் வாங்கிய பணத்தையும், இந்தியாவில் வங்கி கடனையும் அடைக்க தொடங்கினாள். கலகலப்பான தயா பேசுவதையும் சிரிப்பதையும் கூட குறைத்துக்கொண்டாள். இறுக்கம் எப்போதும். தங்கையின் திருமண செலவுக்கு பணம் சேர்க்களானாள்.
வினய் அதியை பற்றி தரகுறைவாக பேசும் பொழுது இப்படியும் ஒரு பெண்ணா! என்று தோன்றும். இப்போதோ அவள் தப்பித்தாள், நான் மாட்டினேன் என்று அதி மீது கோவம் வருகிறது தயாவுக்குள்.
இதோ, ஏதோ என திருமணம் முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது தயா -விநய்க்கு. தயாவுக்குள் முன்னேறும் வெறி. படிப்பு முடியும் சமயம் வேலையும் கிடைத்து விடவே கொஞ்சம் ஆசுவாசம்.
திருமணமாகி இருவரும் கலந்த பிறகு பணம் பற்றிய பேச்சுக்கள் எப்படி வரமுடியும்? அவளது அப்பா வேலை பார்த்தாலும் அம்மாவுக்கு வீட்டை பார்க்கும் வேலை மட்டும் தான். ஒருநாளும் அம்மா அப்பாவின் பர்சில் பணம் எடுக்க தயங்கியதில்லை. அம்மா மீது அப்பாவுக்கு நம்பிக்கை அதிகம். இங்கோ, நிலைமையே வேறு மாதிரி இருக்கிறது. அவளுக்குள் பெருமூச்சு எழுந்தது.
அதனாலேயே அதிகம் வேலை செய்தாள். வினய் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளவில்லை. தனக்கு தேவையானவை கிடைக்கின்றதா, அவ்வளவுதான்! தன்னுடன் இருப்பவளுக்கு என்ன தேவை என்பது பற்றியெல்லாம் அவனுக்கு கிஞ்சித்தும் அக்கறையும் கிடையாது, அவசியமும் கிடையாது.
தயா மனதிற்குள் சலிப்பும் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. இந்த கல்யாணத்தை செய்து கொண்டதால் அவளுக்கு கிடைத்தது... ம்ஹும்... நிஷ்பலன் தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவள் சுதந்திரம் குறுகி விட்டது. ஒரு சராசரி இந்தியப் பெண்ணாக இந்த திருமணத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் அவளுக்கும் விருப்பம். பெற்றோர் ஆசை ஆசையாக செய்து வைத்தது. அதற்காகத்தான் அவளும் பொறுமையாக இருக்கிறாள். ஆனால் இந்த வயதில் தான் தனியாக இருக்கிறேன் என்ற எண்ணம் அவள் மனதில். காதலை எதிர்பார்க்கிறது இதயம் . கிடைப்பது என்னவோ கட்டில் சுகம் மட்டுமே!
--------------------------------------
பெங்களூரு,
சுமனா தன் காதலை பற்றி, அவளுக்கும் நிரஞ்சனு க்குமான திருமணக் கனவுகள் பற்றி தன்னிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து, அதிதி மனதாலும் அறிவாலும் நிறைய போராட்டங்களை எதிர்கொள்கிறாள். அவளையும் அறியாமல், இத்தனை வருடங்களில் ஏற்படாத ஒரு உணர்வு நிரஞ்சன் மீது. அவன் இன்னொருத்திக்கு கணவனாக வேண்டியவன் என்று நினைக்கும் போதே, அவன் தன்னுடன் என்றும் நிலைத்து நிற்க முடியாது என்ற வலி அடி வரை தாக்குகிறது. இந்த எண்ணங்களிலிருந்து வெளிவந்தால் தான் நிரஞ்சனை விட்டு முழுவதும் விலக முடியும். அவனுக்கான வாழ்க்கையை அவன் வாழ வேண்டும். எத்தனை நாட்களுக்கு நிரஞ்சன் எனக்கு நண்பனாக மட்டுமே தன் வாழ்க்கையை செலுத்த முடியும்? போன்ற எண்ணங்கள் அவளை சுழற்றி அடிக்கிறது. அவள் எண்ணம் போகும் போக்கு அவளுக்கே அதிர்ச்சிதான்!
எப்படியும் சென்னைக்கு கிடைப்பதற்கு இரண்டு மாதங்கள் ஆகும் என்ற நிலையில், வேறு ஒரு இடத்தில் தனக்கான அறையை தேடி கொண்டவளுக்கு இதைப்பற்றி நிரஞ்சனிடம் எப்படி பேசுவது என்று தான் தெரியவில்லை.
அதேசமயம், ஆரியன், நிரஞ்சனை சந்தித்து, சுமாவின் எண்ணங்கள் பற்றி தெளிவாக சொல்லிவிட்டான். சுமா மீதான தனது காதலைப் பற்றியும் தான்.
நிரஞ்சன் அதிதியிடம் எதைப்பற்றியும் கேட்கவில்லை. அவள் என்ன செய்கிறாள் என்று மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை கட்டும் சமயம் வரை அவனது பொறுமை நீண்டது.
அதற்கு மேல் தாங்க முடியாதவன் '’ உன்ன அனுப்ப நா தயாரா இல்ல அதி ‘'என்றான்.
பின்னால் இருந்து அவன் குரலை, தனது அறையில் அவ்வளவு நெருக்கமாக கேட்டவளுக்கு உடம்பு ஒரு முறை தூக்கி போட்டது. நிதானமாக அவன்புறம் திரும்பியவள்,
“உன்னோட அனுமதி எனக்கு தேவை இல்லை நிரஞ்சன். ஐ ஹவ் டிஸைடட். நா இங்க இருந்தா நிறைய பேச்சு வருது. அது எனக்கு பிடிக்கல. அண்ட் மோர்ஓவர் உன்னுடைய வருங்காலத்துக்கும் நல்லதல்ல. உங்க அம்மா சொன்ன மாதிரி உனக்குன்னு லைஃப் இருக்கு. சோ, ஐ டோன்ட் வாண்ட் டு மேக் எனி கன்பியூஷன்ஸ் இன் அர் ரிலேஷன்ஷிப். அதான்... நா கிளம்புறேன்” என்றாள்.
அம்மா இவளின் மனம் உடையும் படி ஏதோ சொல்லி இருக்கிறாள் என்று நிரஞ்சனுக்கு புரிந்துவிட்டது. இதற்கு மேல் தாமதிக்க கூடாது என,
“தென், நாம கல்யாணம் செஞ்சுக்கலாம். அப்படி செஞ்சுட்டா யாரும் நம்மள பத்தி பேச முடியாது.”என்றவனின் உடல்மொழி நிச்சயம் அவன் விளையாட்டுக்காக சொல்லவில்லை என்று அதிதிக்கு புரியவைக்க உறைந்து நின்றாள்.
“ஆர் யூ மேட் நிரஞ்சன்? நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனவ. நீ இன்னும் மோஸ்ட்
எலிஜிபுள் பேச்சுலர் தான். நாம எப்படி கல்யாணம் செஞ்சுக்க முடியும்? இதுக்கு உங்க வீட்லயும் சரி எங்க வீட்டிலும் சரி... ஒத்துக்க போறதில்ல.”
“இல்ல நிரஞ்சன் எனக்கும் சம்மதமில்லை. உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்னு ஒரு பொண்ணு வந்து சொல்றா. நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்,அதுதான் சரி. இவ்வளவு நாள் பிரண்ட்ஸ்னு சொல்லிட்டு இப்ப கல்யாண பந்தத்திற்குள் நுழைய எனக்கு கஷ்டமா இருக்கு.
உனக்கு விருப்பம் இருந்தா நீ சுமனாவை கல்யாணம் பண்ணிக்கோ... இல்லாட்டியும் உனக்கு விருப்பமான வேற ஏதாவது பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. என்னை விட்டுடு. கல்யாணம் பண்ணிக்கிற மனநிலையில் நான் இல்லை.”
“அப்போ உங்க வீட்ல உனக்கு வரன் பாக்குறாங்க. அதுக்கு என்ன சொல்றது அதி. வீட்ல பார்த்து வச்சா மட்டும் ஓகேயா?”
“ நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு கொஞ்சம்கூட புரியல நிரஞ்சன். நான் இதுவரைக்கும் கல்யாணம் செஞ்சுக்க சம்மதிக்கல.”
“எனக்கு புரியல அதி, நாம கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்ன தப்பு. எப்படியும் நீ யாரையாவது கல்யாணம் செஞ்சுக்க உங்க வீட்ல ஏற்பாடு செய்வாங்க தானே? உன்னை இப்படியே சிங்கிளா விடுவதற்கு அவங்களால முடியாது. எனக்கும் யாரையாவது கல்யாணம் பண்ணிக்க தான் வேணும். நீ மட்டும் தான் என்னோட சாய்ஸ்.”
“நோ, நிரஞ்சன். என்னால கண்டிப்பா முடியாது. இன் ஃபேக்ட், ஐயம் நோட் எலி ஜிபிள் பார் மேரேஜ்.”
என்னை புரிந்து கொள்ளேன் என்று அவள் கண்கள் நிரஞ்சனிடம் கெஞ்ச நிர்த்தாக்ஷன்யமாய் அவள் நயன மொழியை ஒதுக்கித் தள்ளினான் நிரஞ்சன்.
அவனுக்கு இன்று கண்டிப்பாக ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டிய அவசியம்.
யாரு அப்படி சொன்னது அதி...
“வினயன்... அவன் தான் சொன்னான். நா கல்யாணம் செஞ்சுக்க, புருஷனை திருப்தி படுத்த தகுதி இல்லாதவன்னு. இன் பாக்ட், அதனால தான் நிரஞ்சன் உன்னை ஏன் லவ் பண்ணல... நீ டல் பீசுன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும். இல்லன்னா இவ்ளோ அழகான பொண்ண பிரண்ட்னு சொல்லி வச்சிருக்க முடியுமா?னு கூட கேட்டான். நிஜம் தானே நிரஞ்சன்?”
“இல்ல அதி, உன்னை ரொம்ப நேசிக்கிறேன். வெறும் பெட் ரூம் ல இல்ல சட்டிஸ்பாக்ஷன். கல்யாணம் அந்த உறவு வேற அதி…”
அவனை பரிதாபமாக பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.
அவள் தோள் தொட்டு உலுக்கிய நிரஞ்சன், “ஏதாவது சொல்லு அதி” என்றான்.
“எனக்கு பரிதாபபட்டு கல்யாண பிச்சை போடாத நிரஞ்சன். என்னை கல்யாணம் பண்ணி உன் இளமை வேஸ்ட் ஆக நா ஒத்துக்க மாட்டேன்” என்று வெடித்தாள் அதி.
இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்து புழுங்கிய அவளது எண்ணங்கள் அவர்கள் இருவரையும் சூழ்ந்தது.