எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 26

வான்மழை 26:

நிச்சயம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் அனைவரும் ஜவுளிக் கடைக்கு கிளம்பி இருந்தனர். வருணா‌ கெளரியையும் அழைத்திருக்க அவளும் வந்திருந்தாள்.

இளையவர்கள் ஒருபுறம் சென்றிட, குருசாமி, மல்லிகா தனியாக சென்றனர்.

பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் மட்டும் துணி எடுப்பதில்லை அவர்களுக்கு விருப்பமில்லை. மகாலிங்கத்திற்கும் முத்துப்பேச்சிக்கும் பட்டில் துணி எடுத்தனர்.

“ஏங்க!” மல்லிகா குருசாமியை அழைத்திட,

“எனக்கு ஒரு யோசனை தோணுது!”

“சொல்லும்மா!”

“இல்லை, நம்ம வருணாக்கு மட்டும் சீர் கொடுக்குறோம். அந்த வீட்டுல இன்னொரு பொண்ணு இருக்கா தானே.”

“அதுக்கு என்ன பண்றது?”

“இல்லைங்க, அந்த பொண்ணுக்கும்…!”

“நீ எங்க வர்றேன்னு தெரியுது மல்லி, ஆத்துல போட்டாலும் அளந்து தான் போடனும்.நம்ம பொண்ணுக்கு செய்யிற எல்லாத்தையும் அந்த பொண்ணுக்கும் செய்யனும்னு‌ சொல்றது நியாயாம?”

“நான் அப்புடி சொல்லைங்க, பொண்ணு வைக்கிற இடத்துலே பூ வைக்கணும்னு சொல்ற மாதிரி, சுபாவுக்கும், பரணி தம்பிக்கும் துணி எடுக்கலாமேங்க,

நம்ம பொண்ணுக்கு மட்டும் செய்யிற போது, சுபா மனசு சங்கடப்படாதா? அப்புடி‌ சங்கடப்பட்டா, அது நம்ம பொண்ணுக்கும் தானேங்க பாதிக்கும்.” என்றிட,

பெண்ணை பற்றி பேசிய பின் அவர் எப்படி மறுப்பார்.

“சரி, அம்மைக்கு ஒரு போனைப் போட்டு கேட்டுட்டு எதுனாலும் எடு.” என, அடுத்த நிமிடம் மாமியாருக்கு அழைத்து விவரத்தையும் கூறிட,

“அதுக்கென்ன, தாரளமாக எடுங்க. அந்த பிள்ளைக்கும் கொடுத்தா, நம்ம பிள்ளையை பார்த்து சங்கடப்படாது தானே.” என்றிருந்தார் அவர்.

அதன்பின் சுபா, பரணி மற்றும் சாத்விக்காவிற்கும் விலையுயர்ந்த பட்டிலே துணி எடுத்திருந்தார் மல்லிகா. ஏனோ தானோவென எடுக்காமல் நிறைந்த மனதாக நல்லதையே எடுத்திருந்தார்.

அன்று மாலையே வருணாவையும், முகிலனையும் பொங்கல் சீரோடு கொண்டு விட சென்றனர். வருணாவின் புகுந்த வீட்டு ஆட்கள்.


சுபத்ராவின் தாய் வள்ளியம்மைக்கு, உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. காய்ச்சல் ஒரளவு மட்டுப்பட்டிருந்தாலும், எந்த வேலையும் செய்ய முடியாமல் தூங்கியே கிடந்தார். வைரல் ஃபீவர் என்பதால் சில நாட்களுக்கு உடம்பு அசதியாக தான் இருக்கும் என மருத்துவர் கூறியிருந்தார்.

சாத்வியை வைத்துக் கொண்டு, சுபாவால் அவளது அம்மாவை தனியாக சமாளிக்க முடியவில்லை. ஆக, பயணியிடம் கலந்துப் பேசி, வள்ளியம்மையை இங்கே அவளது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டிருந்தாள்.

இங்கே சாத்வியை பேச்சி பார்த்துக் கொள்வதால், அவளுக்கு சிரமம் இல்லாமல் போனது. அவளது அம்மாவிற்கு தேவையானவற்றை பார்த்துக் கொண்டாள்.

இப்போது தான் வள்ளியம்மைக்கு சிறிது பால் குடிக்க கொடுத்திருந்தார் வருணா.

“இங்கனவே, அடைஞ்சு கிடக்காதம்மா, கொஞ்சம் காத்தாட வெளிய வா, கொஞ்ச நேரம் உட்காரு. நைட்டுக்கு இட்லியும் சாம்பாரும் வைக்கிறேன்.” என்றபடி அவரை வெளியே அழைத்து வந்தாள் சுபா.

அங்கே, முத்துப்பேச்சி போனில் பேசிக் கொண்டிருந்தார்.
“பரணி, கறிக்கு சொல்லிருந்ததை மறந்துடாதே, யார்கிட்டயாச்சும் கொடுத்து விடு. நான் வேலையை ஆரம்பிக்கனும்.” என, அவரை பார்த்துக் கொண்டிருந்த சுபா,

“எதுக்குத்தை இப்போ போய் நான்வெஜ்?”

“இன்னைக்கு வருணாக்கு பொங்கல் சீரு கொடுக்க வர்றாங்க சுபா, நான் நேத்தே சொன்னேன்ல மறந்துட்டியா? என்ன?”

“ஓஹ் ஞாபகம் இல்லைத்தை, மறந்துட்டேன்.”

“சரி, செத்த நேரம் பாப்பாவ பாத்துக்க, நான் நைட் சமையலுக்கு தேவையானதை ரெடி பண்றேன். அவுங்க வந்ததும் சாப்பிடுற மாதிரி இருக்கனும்.” என்றபடி அவர் உள்ளே சென்றிட,

குழந்தையை கண்முண்ணே விளையாட விட்டு, தாயின் அருகே வந்தமர்ந்தாள் சுபா.

“ஏன் டி? உன்‌ மாமியாக்காரிக்கு திமிரைப் பாரேன். ஒருத்தி இங்கன முடியாம கிடக்குறேன். இப்போ போய் கறியும், மீனும் எடுக்கிறதை!” என‌ அவர் கடுகடுக்க,

“ம்மா, இதுல என்ன இருக்கு, சம்பந்தி வீட்டுக்காரங்களுக்கு செய்ய மாட்டாங்களா? ஏன் நீ வரும்போது உனக்கு செஞ்சதில்லை?”

“ஹாங், நல்லா சொஞ்சாங்க வகைவகையா, தொகைதொகையா! ஏன் நானும் அவுங்க சம்பந்தி தானே, எனக்கு உடம்பு சரியில்லாதப்போ அப்புடி ஆக்கி கொட்டனுமா?”

“லூசு மாதிரி உளறாதே, உனக்கு முடியலைன்னா வேற யாரும் இங்க சாப்பிடக் கூடாதா என்ன? பேசாம இருக்கறதுன்னா உட்காரு, இல்லைன்னா ரூமுக்கு போம்மா.” என்றவள் பேசிவிட்டு, சமையலறை சென்றிட,

“இதை பெத்ததுக்கு நான் சும்மாவே இருந்திருக்கலாம். அம்மாக்காரி உடம்பு முடியாம இருக்குறாளேன்னு கவலை இருக்கா இதுக்கு.” என மகளை கரித்தப்படியேனும் அங்கேயே தான் அமர்ந்திருந்தார்.

“அத்தை, நான் ஏதும் பண்ணவா?”

“வேணாம் சுபா, நான் பாத்துக்கிறேன். நீ அம்மாவ பாரு அவுங்களுக்கு ஏதும் வேணுமான்னு கேட்டு செஞ்சுக் கொடு.”

“இல்லத்தை, இப்போ பரவாயில்லை அம்மாக்கு, சைட்டுக்கு அவுங்களுக்கு சிம்பிளா சாம்பார் மட்டும் வச்சுக் கொடுத்திடுறேன்.”

“அதெல்லாம் வேண்டாம், எல்லாரும் நைட் விருந்து சாப்பிடும்போது அவுங்க மட்டும் சாம்பாரை சாப்பிடனுமா, மாத்திரை மருந்து எடுத்து நாக்கு செத்துப் போயி கிடக்கும்.‌இப்போ காச்சல் இல்லைதானே, தனியா அவுங்களுக்கு எலும்பும் குடலும் சொல்லிருக்கேன்.‌காரமில்லாம சூப் மாதிரி வைக்கிறேன்.‌ இட்லிக்கு தொட்டுக்கட்டும் ஒண்ணும் செய்யாது.” என்றவரை கண்டு அவளது மனமே‌ அவளை குத்தியது.

“சரிங்கத்தை!” என்ற வார்த்தையை தவிர வேறு என்ன பேசிட முடியும் அவளால்.

அதன்பின் வேலைகள் இருவரையும் இழுத்துக் கொள்ள, இங்கே வள்ளியம்மை அமர்ந்திருந்தவர் குழந்தையை கவனியாது,

“சுபா, பாப்பா அழுகுறாப் பாரு.” என‌ அவ்வப்போது மகளை தன்னிடம் இழுத்து தூபம் போட முயன்றார்.
ஆனால் பயனில்லை.

இதற்குள் முகிலன் அழைத்து தாங்கள் அருகில் வைத்துக் கொண்டிருப்பதாக கூறியிருக்க, மகாலிங்கமும் பரணியும் பரணியும் கூட வந்திருந்தனர்.

“ஏன் மாப்பிள்ளை கடையை விட்டுட்டு இந்நேரத்துக்கு வந்துட்டீங்க?” மருமகனை கண்டு வினவ,

“முகிலன் வர்றான்லத்தை!”

“அட, உங்க தம்பி வர்றது புதுசா என்ன?”

“புதுசு இல்லை தான், முகிலனோட மாமா போன் பண்ணி பொங்கசீரு கொண்டு வரோம். நீங்களும் கட்டாயம் வீட்டுல இருக்கனும்னு சொன்னாரு, அவரு பேச்சுக்கு மதிப்பு கொடுக்க வேண்டாமா?”

“இது நல்ல கூத்தா இல்லை இருக்கு. ஊர் உலகத்துல வேற‌ யாருமே சீரு கொடுக்காத மாதிரியில்ல, இவுங்க புதுசா பண்றாங்க.” என்றவர் கூறும் போதே, வெளியே வண்டி சத்தம் கேட்டிட,

“வந்துட்டாங்க போலயே!” என்றவாறு அனைவரும் வெளியே செல்ல, சுதாவை நிறுத்தி வைத்த வள்ளியம்மை,

“நீ எங்கடி போற? பேசாம இங்கனவே இரு.”

“அம்மா, எல்லாரும் போறாங்கம்மா”

“நீ போகணும்னு அவசியம் இல்லை!” என்றபடி தன்னுடன் அவளை நிறுத்திக் கொண்டார்.

சுபாவமும் அதற்குமேல் வாதாடாது அவருக்கு அடங்கி நின்றுவிட்டாள்.

“வாங்க, வாங்க எல்லாரும்!” என்றபடி வந்தவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தனர்.

சரியாக அவர்கள் உள்‌நுழையும் நேரம், அதுவரை இருந்த வள்ளியம்மை, சாத்விக்காவையும் தூக்கி கொண்டு வேகமாய் அறைக்குள் சென்றிருந்தார்.

இதனை எதிர்பாராத சுபா திகைத்துவிட்டாள்!

‘வந்தவர்களை அவமானப்படுத்துவது போல் அல்லவா இருக்கிறது! அவரின் செயல்.

அவர் உள்சென்றதை வருணாவின் பிறந்த வீட்டு ஆட்கள் கவனித்தாலும், கண்டுக் கொள்ளவில்லை.

முனிஸ்வரீ தான், “என்னவாம் அந்தம்மாக்கு அப்புடி வெடுக்குன்னு உள்ளப் போகுது.” மல்லிகாவிடம் கூற,

“அவுங்களை பத்தி நமக்கு‌‌ என்ன அத்தை, விடுங்க எப்டியோ‌ போறாங்க.” என அவரை மேலும் பேசவிடாது தடுத்திருந்தார்.

வள்ளியம்மையின் இச்செய்கை ஆண்களை‌ சற்றே சங்கடப்படுத்திவிட்டது.

பரணி சுபாவை‌‌ ஒரு பார்வை பார்க்க,
“அது பாப்பாக்கு பாத்ரூம் போகணும்னு சொன்னா, அதான் அம்மா கூட்டிட்டு போயிருக்காங்க.” என அன்னையை‌ விட்டுக் கொடுக்க இயலாது சமாளித்து வைத்தாள்.

அதன்பிறகு அதனை பற்றி யாரும் பேசவில்லை.

வருணா தங்களது உடைமைகளை அறைக்குள் வைத்துவிட்டு வந்தவள், வள்ளியம்மையை விசாரிக்கும் பொருட்டு அவரிடம் சென்றவள்,

“உடம்புக்கு இப்போ பரவாயில்லையாம்மா?” என,

“ம்ம்ம் இருக்கு இருக்கு.” என்றவர் கட்டிலில் படுத்து விட, அதற்கு மேல் என்ன பேச? வருணா வெளியேறி இருந்தாள்.


அதன்பின் பேச்சுகளில் நேரம் கடந்தது.இடைஇடையே அவர்களுக்கு காபி, பலகாரமும் கொடுக்கப்பட்டது.

முனிஸ்வரீயை சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுப்பியிருந்தனர்.

இரவு உணவு வேளை வரையிலும், வள்ளியம்மை வெளிவரவில்லை. சுபா சென்றழைக்க முகத்தை திருப்பியிருந்தார்.

பின், முத்துப்பேச்சி சென்றழைத்திருக்க,

“இதோ வரேன் சம்பந்தி!” என்று வந்தவர், மிதப்பாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்து அமர்ந்தார்.

ஆண்கள் வெளியே இருக்க, மல்லிகா மற்றும் வராண்டாவில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே சென்றமர்ந்தார் வள்ளியம்மை.


உடம்பு முடியாதவரை விசாரிக்காமல் இருப்பது நாகரீகம் அல்ல என மல்லிகா,

“நல்லா இருக்கீங்களா? இப்போ உடம்பு பரவாயில்லையா?”

“ம்ம்ம் ஏதோ இருக்கேன். எனக்கு என்ன தாங்கி பிடிக்க உறவா இருக்கு. ஏதோ பொண்ணு இருக்க போயி பாக்குறா?”

“உங்க சின்ன பொண்ணு இன்னும் வரலையா?” எதார்த்தமாக மல்லிகா கேட்டிட,

“ஏன்? இங்கேயே இருந்திடுவேனோன்னு பயப்படுறீங்களா?” என்றவரின் பேச்சில் திகைத்த மல்லிகா,

“நான் எப்போ அப்புடி சொன்னேன். உங்க சின்ன பொண்ணு டூருக்கு போய்ருக்கறதா சொன்னாங்க, அதான் வரலையான்னு கேட்டேன்.”

“ஓஹோ, அதை கேட்டிங்களா, நான் கூட எங்க நான் இங்க இருக்குறதை உங்க பொண்ணுக்கு தொந்தரவாகிடுமோன்னு பயந்து கேக்குறீங்களோன்னு நினைச்சேன்.” என்றவரின் வார்த்தை விளையாட்டில் மல்லிகா அமர்ந்து தான் போனார்.

அதன்பின் அங்கே நில்லாது நகர்ந்திருந்தார். வருணாவின் பிறந்த வீட்டு ஆட்கள் எல்லாம் நாகரீகத்தின் அடிப்படையில் வள்ளியம்மையை விசாரித்திருக்க, இவருக்கு தலையில் கிரீடம் ஏறிக் கொண்டது. ஆனால் முனிஸ்வரி இவரை கண்டுக் கொள்ளவில்லை.

இரவு உணவினை உண்ண ஆரம்பித்த போதும்,
“நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன் பேச்சி மதினி, உங்க சம்மந்தக்காராங்க வந்திருக்காங்கன்னு கறியும், மீனும் எடுத்திருப்பீங்க, அங்கன வந்து உடம்பு சுகமில்லாதவ என்ன பண்ண போறேன். எல்லாரும் சாப்பிட்டப் பிறகு சொல்லுங்க, நான் எனக்கானதை வந்து சாப்பிட்டுக்கிறேன்.” என, ஒரு பஞ்சாயத்தினை கூட்ட முயல,

ஆனால் அதற்கு விடாது,” உங்களுக்கும் சேர்த்து தான் காரமில்லாம சூப் வச்சிருக்கேன் மதினி, வந்து சாப்பிடுங்க.” என பேச்சினை முடித்திருந்தார் முத்துப்பேச்சி.

இரவு உணவினை முடித்து விட்டு, குருசாமியும் மல்லிகாவும் வருணாவிற்கு உண்டான சீர் வரிசைகளை தந்தனர்.

பட்டுச்சேலை, நகைககள், பொங்கல் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் அதற்கு மேல் பணம் என இருந்ததை காண காண வள்ளியம்மைக்கு வயிறு பற்றி எரிந்தது.

‘காசு இருக்கிற பவுசு!’ என முணங்கி கொள்ள மட்டுமே முடிந்தது அவரால்.

பின் குருசாமி கண் ஜாடையில், ஒரு தட்டில் சுபாவிற்கும், பரணிக்கும் எடுத்த உடைகளோடு பூ, பழம் வைத்து சிறிது பணத்தையும் வைத்த மல்லிகா,

“பரணி தம்பி, இது உங்களுக்கும் சுபாவுக்கும் நாங்க கொடுக்குறது. மறுத்துப் பேசாம வாங்கிக்கோங்க. சுபா, நீயும் எனக்கு ஒரு பொண்ணு போலத்தான், இதை வாங்கிக்கோம்மா.” என்றவரின் அன்புக்கட்டளையை மீற முடியாது பரணி சுபாவை கண்களால் அழைத்தவன், அதனை வாங்க முயல,

“ஓஹோ, எம் பொண்ணுக்கு சீரு செய்ய நாதியில்லை, எனக்கு அந்த வக்கில்லைன்னு குத்தி காட்ட இந்த சீரை தூக்கிட்டு வந்திருக்கீங்களோ?

ஏன்டி! அறிவுகெட்டவளே என்னை அசிங்கப்படுத்த இந்த தட்டை கொடுக்குறாங்க, அதை உன் புருசனோட ஜோடி போட்டு பகுமானாமா வாங்க போறியே, வெட்கமில்லை உனக்கு, ரோசமானமுள்ளவளா இருந்தா இதை வாங்குவியா நீயி?

நான் படிச்சு படிச்சு சொன்னேனே, இப்போ வந்தவ, உன்னை அடக்கி ஒடுக்கிடுவான்னு. அதே மாதிரி நடக்குது பாரு. ஏற்கனவே உன்னை ஒருத்தரும் மதிக்கிறதில்லை, இப்போ உனக்கு சீரு செய்ய நாதியில்லைன்னு
சொல்ற மாதிரி இதை கொண்டு வந்து நீட்டி, உனக்கான மரியாதையை இங்க சுத்தமா இல்லாம ஆக்கிட்டாங்கப் பாரு.” என்ற வள்ளியம்மையின் ஆவேச வார்த்தைகளில் அனைவரும் அதிர்ந்து தான் போயினர் சுபா உட்பட!
 
Top