எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

25 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 25

"ப்ளானிங்க்ல தான் இருக்கீங்க? நா மனசு வைக்கணும் தெரியும்ல?" என மிரட்டியவளிடம்,

"இது புதுசா இருக்கே? நா மொத்தமா கை வச்சா மட்டும் போதும்னு நினைச்சேனே? நீயும் வைக்கணுமோ?"

"உங்கள?" என செல்லமாக முறைத்து தான் கிளம்பி சென்றிருக்கிறாள்.

அதுமட்டுமின்றி அவளை அனுப்பி வைக்க இன்னொரு காரணமுமிருந்தது. கண்ணனை கிளப்பி அழைத்துக்கொண்டு அடுத்து அதற்கு கிளம்பவே வள்ளுவனையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தான். வள்ளுவனும் கண்ணனும் முன்னே சென்று பைக்கில் ஏறியிருக்க,

"ஃபாரீன் சாரு அவேன் என்னத்துக்கு உங்களோட?" என்றார் மீனம்மா.

"மனோ வர நைட்டாகும். நா இவன கூட்டிட்டு போறேன். நீங்க கோச்சுக்காம மறுபடியும் மாவு அறைச்சுடுங்க" என மார்க் சொல்ல,

"ஊற வைக்க மூணு மணிநேரம் அரைக்க ரெண்டு மணிநேரம் ஆகும். அஞ்சு மணிநேரம் கழிச்சு தான் அவன கூட்டிட்டு வரணும். முடியுமா ஃபாரீன் சாரு?"

"சரி பாத்துக்கலாம்" என சிரிக்க,

"என்னத்த தினுசா சிரிக்கீக?"

"காரணமாத்தான். இன்னைக்கு நீங்க எனக்கு ஷ்பெஷலா பிரியாணி செஞ்சு தருவீங்க"

"புரியலயே?"

"அழுவலா இருந்தாலும் என்னுடையதாக்கும்னு ஒருநாள் உங்க புருஷர நீங்க சொன்னீங்க ஞாபகம் இருக்கா? அன்னைக்கு நா சவால் விட்டேன், என் பொண்டாட்டியும் ஒருநாள் இப்டி சொல்லுவான்னு. அந்த நாள் இந்நாள்" என சொல்லி நிறுத்த நம்பாமல் தான் பார்த்தார் அப்போதும்.

"சொல்லும்போது நம்புவீங்க மீனம்மா. பிரியாணி தெரு முக்கு வர மணக்கணும் ஓகே?" என்றுவிட்டே கிளம்பினான்.

அவர்கள் நேராக வந்தது மனோவின் பள்ளிக்கு தான். அதேநேரம் சண்முகசுந்தரமும் வந்து இவனுக்காக காத்திருக்க, அலுவலக அறையிலிருந்தவர்கள், "என்னவோ?" என தான் பார்த்திருந்தனர்.

சற்றுநேரத்தில் விஷயம் தெரிந்தது, 'டி.ஈ.ஓ' டிஸிடிரிக்ட் எஜிகேஷனல் ஆபிஸர் வந்திறங்கினார். வந்தவர், சண்முகசுந்தரம் அறைக்கு செல்ல, மார்கண்டேயனும், வள்ளுவனும் கூட உடன் சென்றனர்.

"ஸ்கூல்ல நீங்க தான் வாங்குறீங்களா?" என்றார் அந்த அலுவலர் மார்க்கிடம்.

"ஆமா சார்"

"டாக்யூமென்ட்ஸ்லா ரெடி தானே?" என்க,

"ஆல்மோஸ்ட்!" என்ற சண்முகசுந்தரம் அதையும் எடுத்து காட்டினார்.

"ஓகே, ஸ்கூல பாத்துடலாம். அல்ரெடி கவெர்ன்ட் அப்ரூவல்ல தான் இருக்கு. ஆனாலும் இவர் பேர்ல இருந்து உங்க பேருக்கு மாறும்போது, டாக்யூமென்ட்ஸ் எல்லாம் மாறுமே? சோ ந்யூ அப்ரூவல் தான் நீங்க வாங்குற மாதிரி இருக்கும்" என்றவர், அப்படியே வெளியே வந்து பள்ளியை சுற்றிவர, உடன் மற்ற மூவரும் கூட வந்தனர்.

"ஏய் மஹிமா? என்ன விஷயமாம்? அந்த அமுக்குனி எதுவும் உனக்கு சொல்லாமலா இருப்பா?" என்றார் தமயந்தி. புருஷன் ஊரோடு வந்தும் ஒருவருடமாக இங்கேயே சுற்றி வருகிறாளே என்ற கடுப்பு அவருக்கு.

"தெரியாது மேடம்" என்றாள் மஹிமா.

"தெரிஞ்சாலும் சொல்ல மாட்டீங்களே, எல்லாம் ஒரே கூட்டணியாச்சே" என அவர் பொரும, மஹிமா திரும்பி கொண்டாள்.

மீண்டும் அவர்கள் அலுவலக அறை வந்து, "எல்லாம் ஓகே. இது ஃபார்மாலிட்டி விசிட் தான். நாளைக்கு ஆபிஸ் வந்துடுங்க, முடிச்சுடலாம்" என்றார் அவர்.

"நாங்க பத்திர பதிவுக்கு ஏற்பாடு பண்ணிடவா?" என சண்முகசுந்தரம் கேட்க,

"ம்ம் பாருங்க. அப்ரூவல் டாக்யூமென்ட்ட நீங்க நாளைக்கே அங்க ஆபிஸ்ல வெயிட் பண்ணியே வாங்கிட்டு போய்டலாம்" என கூறி கிளம்பிவிட்டார்.

"ஜட்ஜ் ரெகமென்டேஷன் இருக்க போயி இவ்ளோ சீக்கிரம் வேலை முடிஞ்சுருக்குப்பா" என சண்முகசுந்தரம் சந்தோசமாக சொல்ல,

"நான் மனோவோட நேர்ல போய் பார்த்தே பேசிடுறேன் அங்கிள்" என்றான் மார்க்.

"போன வருஷம் ஆன்வல் டேக்கு அவங்க தான் கெஸ்ட். இந்த வருஷம் அன்வல் டேயும், ஸ்கூல் இனாக்ரேஷனும் சேர்த்து வைங்க, அப்ப அவங்கள இன்வைட் பண்ணிடுங்க சிம்பிளா வேலை முடியும்" என்றார் சண்முகசுந்தரம்.

"மனோட்ட பேசுறேன் அங்கிள்" என்றான் மார்க்.

"சரி இனி ரிஜிஸ்ட்ரேஷன் வேலைய பாப்போம் மார்க்" என்றவர், அங்கேயே அவர்களை சுற்றி வேடிக்கை பார்த்திருந்தவர்களை அப்போது தான் கவனித்தார்.

மெலிதாக சிரித்தவர், "ஸ்கூல் கைமாற போகுது" என சொல்ல,

"சார்!" என மற்றவர்கள் அதிர, தமயந்தி நெஞ்சிலேயே கைவைத்து விட்டார்.

"என்னத்துக்கு? ஏன் இப்படி பண்றீங்கண்ணா? நம்ம சொந்தபந்தம்லா இருக்கும்போது நீங்க தனிச்சு இப்படி முடிவெடுக்கலாமா?" என கேட்கவும் செய்ய,

"என் ஸ்கூல நா யாருக்கும் குடுக்க எதுக்கு மத்தவங்கள கேட்கணும்?"

"எதுக்கும் சொந்தம் வேணும்ல? நீங்களே தனி மனுஷன், யாரு வேணா ஏமாத்தலாம்"

"ஏமாத்த நா என்ன சின்ன பாப்பாவா?"

"இப்ப என்னலாமோ நடக்கு. இதோ மனோ வீட்டுகாரர அவரு சொந்த மாமாவே ஏமாத்தலையா?"

"அதான் அவரும் அவர் சொந்தங்கள நம்பல போல மேடம்?" என முறைத்தான் மார்கண்டேயன்.

"எல்லா சொந்தமும் உங்க மாமா மாதிரி இருந்துட மாட்டாங்களே? எங்கள மாதிரி நல்லது நினைக்குறவங்களும் இருக்கோமே!"

"யோசிச்சு பேசு தமயந்தி. நாளைக்கு நீ இவருக்கு கீழ தான் வேலை செய்ய போற" என்றார் சண்முகசுந்தரம்.

தமயந்தி விழிக்க, "ஸ்கூல மனோ மேடம் வாங்கிட்டாங்களா?" என்றாள் மஹிமா.

"ஆமா!" என்றான் மார்கண்டேயன்.

"சூப்பர் சார். அல்ரெடி மொத்த ஸ்கூலும் மேடம் கன்ட்ரோல் தான். இனி அது அஃபிசியலா நடக்க போகுது. மேடம் சொல்லவே இல்ல எங்கள்ட்ட?"

"மனோக்கே தெரியாது. மார்க் தான் சர்ப்ரைஸா இத குடுக்க போறாரு" என சண்முகசுந்தரம் சந்தோசமாக கூறினார்.

"எவ்வளவுக்கு வாங்குனீங்க?" என்றார் தமயந்தி.

"ஷேரிங்க்கு வர போறீங்களா மேடம்?" என்றான் மார்க்.

"நா என் அண்ணாட்ட பேசிட்ருக்கேன்"

"ஓகே அங்கிள். நீங்க உங்க சொந்தங்கள பார்த்து ஹேண்டில் பண்ணிடுங்க. ஹெல்ப் வேணாலும் கேளுங்க நாங்க இருக்கோம்" என கைகுலுக்கி விடைபெற்றுக் கொண்டான்.

அவன் சென்றதும் சண்முகசுந்தரம் தமயந்தியை பிடிபிடியென பிடித்து வறுத்தெடுத்துவிட்டார். அதில் கோபித்துக்கொண்டு, மற்ற சொந்தங்களையும் இதில் கொண்டுவந்து சண்டையை பெரிதாக்கி, பள்ளியை கைமாற்ற விடாமல் செய்யவேண்டும் என கிளம்பிவிட்டார் தமயந்தி. அடுத்த வாரிசு இல்லாதவர் சண்முகசுந்தரம் என்பதால் இந்த பள்ளி மீது சொந்தகளில் அநேகருக்கு கண் உண்டு. அவராகவே அவர்களை தேடி வரவைக்க கூட சிலர் ஆயத்தங்கள் செய்துகொண்டிருக்கின்றனர். தமயந்தியும் அப்படி ஒரு ஏற்பாட்டோடு தான் அங்கிருந்தார், இப்போது அனைத்தும் கனவாகிவிடுமோ என்ற கடுப்பில் கிளம்பிவிட்டார். இனி சண்முகசுந்தரம் அவர் சொந்தங்களின் மூலம் வரும் பிரச்சனைகளை சமாளிப்பதில் தான் தன்னை பிஸியாக வைத்துக்கொள்வார்.

இரவு மனோ வீடு வரும்போதே விஷயம் அவள் காதுக்கும் சென்றிருந்தது. உண்மையில் அவளுக்கு இதை எப்படி எடுத்துக்கொள்ள என்றே தெரியவில்லை. குழப்பத்தோடு தான் வந்தாள். மாலையே, அவள் ஃபோனுக்கு மாத்தி மாத்தி வாழ்த்துகள் வந்து குவிய தொடங்கியிருக்க. சிலர், 'வாய்ஸ் மெசேஜி'ல் விவரம் கூறியே வாழ்த்தியிருந்தனர். தமயந்தி வாய்க்கு வந்ததை திட்டி அனுப்பியிருந்தார். விஷயம் இதுதான் என அதிலேயே புரிந்துவிட்டது அவளுக்கு.

ஆனால், சந்தோஷம், ஒரு சொத்தை புதிதாக அவர்கள் வாங்கவிருக்கிறார்கள். அதும் கல்வி நிலையம், இன்றைய காலத்தில் மிகப்பெரிய வர்த்தகமே அதுதான். அதனுள்ளேயே இருப்பதால், தனியார் பள்ளிகளின் வருமானம் பற்றி அவளுக்கு நன்கு தெரியும்.

கவலையும் இருந்தது, ஒரு சொத்து ஏற்கனவே இழுபறியில் இருக்கையில், புதிதாக வாங்குவதென்பது எவ்வளவு பெரிய முடிவு, அதும் இவளுக்காக என அவன் யோசித்து செய்தது, இன்னுமே சொத்தை அவள் பெயரில் வாங்கி எதையும் சரிகட்ட நினைக்கிறானோ என தோன்றியது.

பயமாகவும் இருந்தது, 'அகலகால் வைக்க நினைக்கிறானோ?' என்று. இப்படி கலவையான எண்ணோங்களோடே தான் வீட்டுக்குள் வண்டியை கொண்டு நிறுத்தினாள்.

"ம்மா!" என கண்ணன் ஓடிவர,

"இங்க பாரு, நா ட்ரக் வாங்கினேனே. எனக்கு மட்டுந்தான் நீ தொட கூடாது" என அதை பையிலிருந்து எடுத்துக்கொண்டு கிருஷ்ணா உள்ளே ஓட, கண்ணன் துரத்திக்கொண்டு சென்றான். நிலைபடியில் சாய்ந்து அவள் முகத்தையே தான் பார்த்திருந்தான் மார்க்.

கண்கள் சுருக்கி முறைத்தவள், "என்ன போஸு? தள்ளுங்க" என அவன் தோளில் கைவைத்து தள்ளி உள்ளே செல்ல, சிரித்தபடி தானும் உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்துவிட்டான்.

"ஏலே அடிச்சுக்காதீங்க. அதான் ரெண்டு இருக்குள்ள வச்சு விளையாடுங்க" என்ற மீனம்மா குரலில்,

"கிருஷ்ணா!" என அழைத்துவிட்டான். வந்தவனிடம், அன்று என்னவெல்லாம் செய்தான், எங்கெல்லாம் சென்றார்கள், என்னவெல்லாம் பார்த்தார்கள் என ஒவ்வொன்றாக கேட்டு அவனையும் பொறுமையாக பதிலளிக்க வைத்து, மேல்கழுவி உடைமாற்றிவிட்டான்.

மனோ உடைமாற்றி வரவும் இரவு உணவு மீனம்மா எடுத்து வைக்க, "பிரியாணியா மீனம்மா? எதுக்கு இந்நேரம்?" என்றவள் கணவனை பார்க்க,

"அங்கேயே கேளு. என்னவோ நீ சந்தோசத்துல துள்ளி குதிச்சுட்டு வருவன்னாரு. ஒன்னையும் காணும்" என அவரும் மார்க்கை முறைக்க,

"அவளுக்கு சந்தோசம் தான். ஆனா அத எப்படி வெளிபடுத்தன்னு தெரியாம உள்ளுக்க அடக்கி வச்சுட்ருக்கா"

"ஆரு அவளா?"

"பின்ன நானா?"

"விஷயத்த சொல்லாம விளையாடுதீகளா நீங்க?"

"அத அவளே சொன்னாதான எனக்கு சந்தோசமா இருக்கும்"

மனோ இருவரையும் பார்த்தவள், கிருஷ்ணாவிற்கு ஊட்ட துவங்கிவிட்டாள்.

"ஏத்தா மனோ நீயாச்சும் என்னன்னு சொல்லேன்?"

"அதான சொல்லேன்டி?" என்றான் மார்க்கும் புருவம் உயர்த்தி.

"நாளைக்கு ஸ்கூலுக்கு போய் பாத்துட்டு வந்து சொல்றேன் மீனம்மா. ஸ்கூல் விஷயம் தான் இது" என்றாள் மனோ.

"ஸ்கூல் விஷயத்துக்கு தான் இம்புட்டு பாடா? நானும் என்னவோன்னு நினைச்சுட்டேன்" மீனம்மாவிற்கு குரலே உள்ளே போய்விட்டது.

"நீங்க நினைச்சதும் நடக்கும். அதும் சீக்கிரமே!"

"நா என்ன நெனச்சேன்னு தெரியுமா உங்களுக்கு?"

"ஓ! நல்லா தெரியுமே. பொம்பள பிள்ளை தானே? ஆன் தி வே" என மார்க் மேசையில் தாளம் தட்டியபடி சொல்ல, மனோ, மீனம்மா இருவரும் ஒருசேர முறைத்தனர்.

"என் பொண்டாட்டி முறைக்குறா அதுல, ஏன்டா இப்பவே வெளில சொல்றன்னு கேட்குறா ஓகே. நீங்க ஏன் மீனம்மா முறைக்கிறீங்க?"

"உங்க அக்கா ஒரு பிரச்சனை உங்க மாமா அதவிட பெரிய பிரச்சனைன்னு ரெண்டு தலைவலி வீட்டு முன்ன நிக்குது. அந்த ரெண்டும் சரியாகிடுச்சோன்னு நினைச்சு நா பிரியாணி செஞ்சு வச்சா, பொம்பள பிள்ளயாம்ல? பெத்துக்குறது சரி, நீங்க தான் வளத்தணும் சொல்லிட்டேன். மனோ ஆர அமர உட்கார்ந்து ஒருவாய் சோறு சாப்பிட்டு எத்தனை வருஷமாகுதுன்னு உங்களுக்கு தெரியாது. சோத்துல கை வைக்கேல தான், ஒன்னு ஒன்னுக்கு போவணும்னு நிக்கும் இன்னொன்னு ரெண்டுக்கு போவணும் நிக்கும். அதனால எல்லாத்துக்கும் ரெடியானா தாராளமா இன்னும் ரெண்டா கூட பெத்துக்கோங்க. நைட்டு கண் முழிக்கணும், ஒன்னு அடிச்சுட்டான்னு அழும், இன்னொன்னு என் வண்டிய எடுக்காம்னு அழும், மூணாவது வர்றது இவனுங்க இம்சைல தூங்க முடியலன்னு அழும்"

"ஏன் மீனம்மா இல்லையா ஹெல்ப் பண்ண?"

"அப்பவும் நா பாக்கேமுன்னு சொல்லுதீங்களா நீங்க?"

"நா பாத்ததால தான பிள்ளையே வரபோகுது சொல்லேன்டி" என மெதுவாக சொல்லி மனோ தொடையில் கிள்ள, அவள் இப்போது கண்ணனுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். பேச்சு பேச்சென்றாலும் அவள் வேலை நடக்க வேண்டியிருந்தது. அவன் சும்மா அமர்ந்து தானே அரட்டையிலிருக்கிறான் என சட்டென்று புரிந்தது.

"நீ சாப்பிடு நா கண்ணனுக்கு ஊட்றேன்" என தட்டை வாங்க, கண்ணன், "அம்மாட்ட!" என்றான்.

"இன்னைக்கு காலைல இருந்து உங்கட்ட தானே சாப்பிட்டான் அதான் வரமாட்றான்" என்றவள் அவளே ஊட்டினாள்.

"அப்ப உனக்கு ஊட்றேன் நீ சாப்பிடு" என அவளுக்கு வைத்து ஊட்ட, அம்மா வாங்கவும், கண்ணனும் கிருஷ்ணாவும் கூட வாயை, 'ஆ!' காண்பித்து வாங்கி உண்டனர். அதை பார்த்தவாறே, "சரி அப்ப நாளுபேருமா விளையாண்டு முடிச்சுட்டு பாத்திரத்த கழுவி கவுத்திட்டு படுங்க" என கிளம்பிவிட்டார் மீனம்மா.

எல்லாம் முடித்து படுக்கைக்கு வந்துபின், "என்ன யோசிக்கற மனோ?" என்றான் அவனே. பிள்ளைகள் இருவரையும் தூங்க வைத்திருந்தனர்.

"எதுக்கு ஸ்கூல்?"

"நமக்கான அசெட்டி. ஏன் இப்படி கேட்குற?"

"அமௌன்ட்?"

"கொஞ்சம் லோன். மீதி ஹேண்ட்கேஷ்"

"அங்கில் உங்கட்ட பேசினாரா?"

"ஆமா உன்ன பாக்க அங்க வந்தேனே அன்னைக்கு. அப்ப உட்கார வச்சு பேசினாரு. ஓகே பாக்றேன்னு தான் சொல்லிருந்தேன். ஏனா அன்னைக்கு நா உங்களையும் அழைச்சுட்டு அமெரிக்கா போயிடுற ப்ளான்ல இருந்தேன்ல சோ! பட் இங்கேயே தான் இனின்னு டிசைட் பண்ணதுமே அங்கிள்ட்ட பேசிட்டேன். ஆறுமாசமா அதுக்கான எல்லா வேலையும் பார்த்தாச்சு. லோன் கூட சேங்க்ஷன் ஆகிடுச்சு"

"அதான் அங்கில் நேம்கு நிறைய போஸ்ட் வந்ததா?"

"ஆமா, அவரோட ஓன் ப்ராப்பர்டி தானே இது. சோ அப்படியே நம்ம பேருக்கு மாத்தி தரார்"

"அப்பாக்கு தெரியுமா?"

"நா சொல்லல, ஆனா அவர் ப்ரண்ட்டாச்சே சோ அங்கிள் சொல்லிருப்பாரு"

"அமௌன்ட் எப்படி ஃபிக்ஸ் பண்ணீங்க? அங்கில் அல்ரெடி அப்பாக்கு தரேன்னு சொல்லிட்ருந்தாரு. அப்பாதான் அவர் சொந்தங்களுக்கு பயந்து வேணாம்னு சொல்லிட்ருந்தாங்க. வேல்யூ பார்த்து பேசுனீங்களா? கம்மி ரேட்னா கூட என்னவேணா பேசுவாங்க"

"அன்வல் இன்கம் வச்சுதான்டி ஸ்கூல் ரேட் ஃபிக்ஸ் பண்ண முடியும். உனக்கு தான் தெரியுமே, உங்க ஸ்கூல் அன்வல் இன்கம் எவ்வளவு?"

"மொத்தம் நானூறு ஸ்டூடண்ட் கிட்ட படிக்கிறாங்க, ஒன் டூ ஒன் பாய்ண்ட் டூ க்ரோர் டேர்ன் ஓவர் வரும்"

"ம்ம் ரைட், இதான் அங்கிளும் சொன்னாரு, த்ரீ க்ரோருக்கு பேசி முடிச்சுருக்கேன். இதுல டூ ஹேண்ட்கேஷ். ஒன் லோன். உன்னோட ஜட்ஜ் மேடம் தான் அஸ்யூரன்ஸ் குடுத்தாங்க"

"அவங்களா?"

"ம்ம் அவங்களுக்கு ஒரு வெப்சைட் டிசைன் பண்ணோம் அதுல இருந்து ஃப்ரெண்ட் அப்புறம் உன்னோட ஹஸ்பண்ட்னு தெரியவும் இன்னும் நெருங்கிட்டாங்க. உனக்காக ஸ்கூல்னதும் யோசிக்கவே இல்ல. மனோ ஸ்கூல்ல பெஸ்ட்டா கொண்டு வருவான்னு சொல்லி தான் ரெகமெண்ட்டே பண்ணாங்க"

சிரித்த மனோ, "அவங்களுக்கு என்னவோ என்மேல ஸ்டார்டிங்லயே ஒரு குட் தாட்" என்றாள்.

"இப்ப சொல்லு ஹேப்பியா நீ?"

"ஹேப்பிதான். வேலை பாக்றேன்றப்போ ஓகே. இனி நம்மதான் பொறுப்புன்றப்போ கொஞ்சம் பயமா தான் இருக்கு" என்றவளிடம் அதை சரியாக செய்துவிட வேண்டும் என்ற தீவிரமும் அந்நொடி வந்திருந்ததுதான்.

"அதெல்லாம் பண்ணலாம். மீனம்மாவ துணைக்கு வச்சுட்டா ஸ்கூல் என்ன நாளு காலேஜே நடத்தலாம்" என்றவன் சாய்ந்து படுத்து அவளையும் மேலிழுத்து போட்டுக்கொண்டான்.

"பொம்பள பிள்ளை பொம்பள பிள்ளைன்னு பாட்டா பாடுறீங்களே ஏன்?" என அடுத்ததாக ஆரம்பித்தாள்.

"சொல்லிட்டே இருந்தா தேவதைகள் ததாஸ்து சொல்லி நடக்கும்னு நம்பிக்கை தான்"

"நீங்க என்னைய அதுக்கு ரெடி பண்றீங்கன்னு புரியாத ஆளா நான்? அடுத்தமாசமே வந்துருக்க வேண்டியது மாசகணக்கா தள்ளி போகும்போதே தெரியாதா எனக்கு?"

"இல்லடி மனோ" என சிரித்தபடி கட்டிக்கொண்டான் மார்க்.

உண்மையில் அவளை அவன் தயார் தான் படுத்திக்கொண்டிருந்தான். 'வந்து வந்து பிள்ளை மட்டும் தந்துவிட்டு போகிறான்' என்ற குறை அவளுக்கிருந்ததே, அதனால் வெகு நிதானமாக வாழ்க்கையோடு தாம்பத்தியத்தையும் அனுபவித்து, அவளையும் அனுபவிக்கவைத்துக் கொண்டிருந்தான். அவளை உடம்பளவிலும் மனதளவிலும் அடுத்த பிள்ளைக்கு தயார்படுத்தினான். இரண்டு பிள்ளைகள் போதும் என்றாலும், அவளின் ஏக்கமாக ஒருமுறை வெளிவந்த, "ப்ரெக்னென்ட் டைம் எனக்கு என்ன வேணும்னு நீங்க தானே பார்த்து வாங்கி தரணும்?" என்றது இன்னும் நினைவில் இருக்க, அதை அவனுமே அனுபவித்துவிட ஆசைகொண்டான். அவன் 'மனோ!' அவன் மனைவி, அவளை எவ்வளவு பிடிக்கும் என அவனுக்கு அவனே அறிந்து கொண்டிருக்கிறான். அவனை ரசிக்க வைத்துக்கொண்டிருக்கிறாள் அவன் ரஞ்சிதம்.

வம்பிழுக்கவே, "உங்க அக்காக்கு இது தெரிஞ்சா என்னாகும்?" என்றாள் திடீரென்று. முத்தம் தர வந்தவன் தலையை பின்னிழுக்கிழுத்து நறுக்கென்று கொட்டிவிட்டான்.

"யோவ் என்ன? அக்காவ சொன்னதும் கோவம் வருதோ? அடிக்கிறீங்க?"

"பிறக்க போற பொம்பள பிள்ளைய பத்தி தான பேசிட்டுருந்தோம்? அடுத்து அதுக்கான வேலைல தானே உன் கவனம் இருக்கணும். ஏன்டி அங்க போற நீ?"

"எல்லாம் ஒரு க்யூரியாசிட்டி தான். ஆறு மாசமா சென்னைக்கும் போகாம அண்ணா வரவேணாம்னு சொன்னதுக்கு நாந்தான் காரணம்னுற மாதிரி இருக்கவங்கட்ட இத சொன்னா என்ன செய்வாங்கன்னு எனக்கும் கேட்க தோணும்ல?"

"கொழுப்புடி உனக்கு. அக்கா அப்படி செய்றான்னா நீ என்ன பாவமாவா நிக்ற? அமைதியா இருந்தே அலற விட்டுறல்ல?"

"அமைதியா இருக்கேன்றது தான் சரி. தானா அலறிட்டு ஏதாவது செய்றதுலாம் உங்க குடும்பம் தான்"

"இப்ப இத பேசணுமாடி உனக்கு?" என அவள் கன்னத்தில் கடிக்க, பட்டென்று அடித்தாள் மனோ.

"ஏன்டி!"

"கடிச்சா அடிப்பேன்"

"அப்ப நா மறுபடியும் கடிப்பேன்" முரட்டு சண்டைகளோடு செல்ல சண்டைகளுக்கும் பஞ்சமில்லை அவர்களுக்குள்.

கேஸ் ஆரம்பித்து அதோ இதோ என்று நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. தொடர்ந்து மல்லுக்கு நின்றவர் இறுதியாக வந்த இரண்டு வாய்தாவிற்கும் வரவில்லை. குடும்பமே கண்ணில் படவில்லை. அவன் ஊரிலும் விசாரித்தவரை யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தேனீ பண்ணை நஷ்டத்தில் சென்றுவிட்டதால், கிஷோரும் மாமானார் வீட்டோடு அவர் தொழிலை பார்த்து இருந்துவிட, இங்கு யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அடுத்துவரும் வாய்தாவிற்கு கட்டாயம் அவர் வரவேண்டும் என நீதிமன்றம் அறிவுறித்திவிட்டது. வீடியோ ஆதாரங்கள் இவர்கள் பக்கம் இருக்க, பணம் கொடுத்ததற்கான ஆவணம் சமர்ப்பித்தல் என எதுவும் அவர் செய்யவில்லை என்பதால், கேஷை முடிக்க வேண்டும் என நீதிமன்றமே உத்தரவுபிறபித்துவிட்டது.

அவர் ஏன் வரவில்லை என்ற காரணத்தை அறிய முயன்றான் மார்கண்டேயன். கிட்னி செயலிழந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்தார் அவன் மாமா.
 
Top