எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இராமன் விளைவு கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 1

விமானத்தின் உள்ளே அமர்ந்து இருந்த அவன் நிலையும் இது தான்.போய்த்தான் வேண்டுமா?
எந்த தைரியத்தில் வந்தோம்?
ஏறி அமர்ந்தாகி விட்டது இனி அதைப்பற்றி ஆலோசனை செய்து பயன் இல்லை.வந்தது வந்து விட்டோம் பார்த்துவிடலாம் என்று குருட்டு தைரியமாக அமர்ந்து கொண்டான். இருந்தாலும் கைகள் வியர்த்து நடுக்கத்தை பறைசாற்றி வைத்தது.

அதை பயம் என்று சொல்வதைவிட அவனது எதிர்பார்ப்பு இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்த அவனது ஆவல்களின் காரணமாக கூட இருக்கலாம்.இத்தனை நேரமாக விரித்து வைத்துக் கொண்டு இருந்த பத்திரிகையை மூடி வைத்து விட்டு நிமிர்ந்தவனுக்குள் ஒருவித மகிழ்ச்சி எதிர்பார்ப்பு பயம் எல்லாம் பரவலாக இருந்தது.

இது இன்றல்ல என்று அன்னையிடம் வாக்குறுதி அளித்தானோ அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.
"இத்தன வருஷமா வேற கல்யாணம் பண்ணிக்கன்னு உன்கிட்ட சொல்லி சொல்லி.."
என ஆரம்பித்தவர் அவனது கண்டன பார்வையில்
" இனி அத பத்தி பேச ல ஆனா உனக்கு உம் புள்ளைய உனக்கு வேணும்னா பார்க்காம இருக்க முடியும் ஆனா என்னால முடியாது ஒன்னு வேற கல்யாணம் பண்ணிக்க இல்லை யா என் பேரன கூட்டிட்டு வா கண்ணார பார்த்துக்கறேன் போற காலத்தில் எனக்கு இந்த கொடுப்பினையாவது
கிடைக்கட்டும்"
என்று தனது இறுதி நாட்களில் இருக்கும் தாயின் வேண்டுதலை மறுக்க முடியவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் ஆழியன் அவனுக்காகவே வாழ்ந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் என்னும் அந்த உயிர் ஓவியம்... காலநீரில் வண்ணம் கலைந்து மெல்ல உயிர் கரைந்து கொண்டிருந்தது . அவரிடம் மறுதலித்து செய்த தவற்றை சுட்டி வீம்பு உரைத்து ஆகப் போவது என்ன ?

அவனால் முதல் கோரிக்கையை ஏற்க இயலாது ஆகையினால் இரண்டாவதை நிறைவேற்றி ஆக வேண்டும். அதையும் தாண்டி உள்ளூர தன் மகனைக் குறித்த தேடல் அவனைப் நிழற்படத்தில் கண்ட நாள் முதல் விஸ்வரூபமாய் வளர்ந்து அவனை ஆட்டி வைக்கும்
விதத்தில் கிடைத்த வாய்ப்பை வேண்டும் என்று பற்றிக் கொண்டது மனம் .

"சரி உங்களுக்காக போறேன் "
என்றவனின் வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்து போனார். பிரவசவ அறைக்குள் புதிதாய் நுழையும் பெண்ணின் பயம் எதிர்பார்ப்பு மகிழ்ச்சி அத்தனையும் தாண்டி பிரசவிக்கும் வலி அவனுள்ளும்

ஆனால் நிகழ்ந்தவை நிகழப்போகின்றவை இரண்டையும் நினைக்க நினைக்க நிகழ்வில் தொண்டை வறண்டு போனது போன்ற எண்ணம் எழுந்தது. லேசாக செருமி சரி செய்தவனுக்கு ஒரு கோப்பை தேநீர் வேண்டும் என்று தோன்ற பணிப் பெண்னை அழைத்து
"ஒன் கப் டீ " என்றான்.
அது தொண்டையை நனைத்ததும் தான் இயல்பு நிலை வந்ததாக உணர்ந்தான். மீண்டும் தன்னை இழுத்து பத்திரிகையில் பதிவிறக்கம் செய்தான்.

அங்கு

அந்த அறைக்குள் நுழைந்தாள் அவள் . எதையோ வரைந்து கொண்டிருந்த பதினெட்டு வயதுநிலனின் சட்டையை பிடித்து இழுத்தாள். கவனம் கலையத் திரும்பியவன் காலுக்குள் வந்த பன்னீர் ரோஜாவை தூக்கிக் கொண்டான்.

"ஹே கியூட்டி. என்ன ஆச்சு "
எனவும் அழுது வைத்தாள் ஏழு வயது குழந்தை அவள்
"என்ன ஆச்சு? யார் என்ன சொன்னாங்க"
உதடு பிதுங்க
"மாம் "
என்றாள்.
"எது மாம்மா கியூட்டிய அடிச்சது வா கேட்போம்."
என்று தங்கையை தூக்கிக் கொண்டு சென்றான்.

அந்த அறையில் தனது அடுத்த வெளியீட்டுக்கான உடையை வடிவமைப்பு செய்து கொண்டு இருந்தனர். மேத்யூவும் மகரவிழியும்.இவனது அரவம் கேட்டதும் திரும்பியவர்களுக்கு. அவனையும் அவன் கையில் பாந்தமாக உட்கார்ந்திருந்த மகளைக் கண்டதும் புன்னகை மலர்ந்தது.

"தூங்கி எழுந்ததும் நேரா உன் கிட்ட வந்துட்டாளா வழக்கம்போல"

என்றபடி மகளிடம் வந்தவள். அவளை தூக்கிக் கொள்ள முயல முடியாது எனும் விதமாக தலையாட்டி விட்டு மீண்டும் அண்ணன் கழுத்தை கட்டிக்கொண்டாள். தங்கையுடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டவன். தங்கையை மடியில் அமர்த்தியபடி

"மாம் கியூட்டி கோபமா இருக்காங்க? அப்படி தான டாட்"
என்றவனின் அழைப்பில் மேத்யூ

"எஸ் எஸ் என்ற படி மகனின் அருகில் அமர்ந்து கொண்டு அடுத்த நடக்கும் சமாதான உடன்படிக்கை நிகழ்வுகளை காண தயாரானான்.
மகரவிழி மேத்யூவை உதவி கிடைக்குமா என்று பரிதாபமாக பார்க்க
"சீ ஹனி என்னால இந்த விஷயத்தில் ஹெல்ப் பண்ண முடியாது."
எனவும் அவனை முறைத்துவிட்டு மகனைப் பார்க்க
"ஸாரி மாம் அயம் ஹெல்ப்லெஸ்." என்று தோளை குலுக்கி தலையை இருபுறமும் ஆட்டி விட்டு தங்கையை மடியில் சரியாக வைத்துக் கொண்டான். மகர விழி வேறு வழியற்று குழந்தை முன் மண்டியிட்டு
"ஸாரி ஸாரி கியூட்டி" என்று மகளிடம் இறைஞ்சி கொண்டிருந்தாள். அவளை விட்டு விட்டு பாரீஸ் சென்று வந்ததற்கு.அப்போதும் கடந்த சில நாட்களாக தான்தேடிய உடன் வராத அன்னையிடம் கொண்ட கோபம் குறைவதாக இல்லை.

"டேய் இதெல்லாம் நல்லா இல்லை அப்பா மகன் மகள் எல்லாம் ஒரு கட்சி நான் மட்டும் தனியா எப்படியாவது காப்பாத்துங்கடா"

அப்போது நிலன் தான்

"ஹேய் கியூட்டி மாம் உனக்கு பார்பி டால் வாங்க போயிருந்தாங்க‌."
"ரியலி"
என மேத்யூவை பார்க்க
"எஸ் டியர்" என்று அவளை தூக்கிக்கொண்டான்.
"எங்கம்மா பார்பி "
என்றதும் வாங்கிவராத ஒன்றை எப்படி தருவது ? இன்னும் சற்று பொறுத்து தருவித்துவிடலாம் என்றாலும் அது வரை எப்படி சமாளிப்பது என்று விழித்தபடி நின்று கொண்டிருந்தவளின் கரத்தில் தான் ஏற்கனவே தங்கைக்கு என வாங்கி வைத்திருந்த அந்த பொம்மையை வைக்க தனது சூழலை புரிந்து கொண்டு அதற்கு தீர்வையும் தந்த மகனை தழுவிக் கொண்டாள் மகர விழி. நிலனைத் தொடர்ந்து தானும் தாயிடம் தாவியவளை அள்ளிக் கொண்டவள். அவளிடம் பொம்மையை கொடுத்தாள்.
"ப்யூட்டிபுல்" என்று அதை கொஞ்சத் துவங்கிவிட
மகரவிழி அதைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டாள். அடுத்து எதையோ கேட்க துவங்கும் முன்

"ஓகே மாம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஃநைட் டின்னர்ல பார்க்கலாம்"

என்றவன் வெளியேறி இருந்தான்.
 
அத்தியாயம் 2

கொலம்பியா சர்வதேச விமான நிலையத்தில் நிதானித்து நின்ற அந்த விமானம் நீர் கரையில் கொக்கு மெல்ல இறகு உதிர்ப்பது போல் தன்னில் இருந்து பயனிகளை உதிர்த்தது.

அதிக அளவில் ஆழியன் அவனுக்கு பயணப் பொதிகள் இல்லை எனவே சற்று சீக்கிரமாகவே அவனுக்கான சோதனைகள் முடிவடைந்து விட்டது. வெளியேறிவன் சுற்றிலும் பார்த்து இழுத்து மூச்சை விட்டு நிதானம் கொண்டான். வந்து இறங்கியாகி விட்டது. இனி எப்படியும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். எப்படியும் மகனைப் பார்த்து விட வேண்டும் என்னும் ஆசை. அவனுடன் பேசிவிட வேண்டும் எனும் அவா. அவை அவனது கனவை நிறைவேற்ற இது போல மற்றும் ஒரு சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது என தொழில் அறிவும் ஏதோ உள்ளுணர்வும் உந்தியதில் வந்திருந்தவன்
எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு

என்ற குறளையும் சொல்லிக் கொண்டவன் அதன் பொருளை நெஞ்சில் பதிய வைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

தனது அலைபேசியில் இருந்து அழைப்பை விடுத்தவன் சுற்றும் பார்க்க அந்த எண்ணிற்கு உரியவனை காணவில்லை. அழைப்பும் ஏற்கப்படவில்லை. தான் செல்ல வேண்டிய முகவரியை எடுத்து பார்த்துக் கொண்டான். வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனுக்கு வெளிநாட்டு பயணங்கள் புதிதல்ல ஆனால் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் தனது தொழில் போக்குவரத்தை மேற்கொள்பவன் அமெரிக்காவினை தவிர்த்து விடுவான். ஆனால் இது அப்படி அல்லவே வேகமான எட்டுகளுடன் நடந்தவன் ஒரு வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் என வாகனத்தின் உள் அமர்ந்து இருந்த அதன் ஓட்டுநரிடம் விசாரிக்க எண்ணி குனிய.

"டேய் பாதகா ஆழியா. "
என மூச்சு வாங்க வந்து நின்றவனை கண்டதும் புன்னகைத்தபடி திரும்பியவன்
"ஹேய் ராகவ் "
என அவனை அனைத்துக் கொண்டான். பதிலுக்கு அவனை அனைத்து விடுவித்தவன் ஓட்டுநரிடம் திரும்பி.
"ஸாரி "
என மன்னிப்பு வேண்டி விட்டு இவனுடன் நடக்க
"இரண்டு நிமிஷம் வெயிட் பண்ண மாட்டியாடா "

" போன் எடுக்கல சோ பிஸின்னு நினைச்சேன்.
அதான் அட்ரஸ் இருக்குல்ல அப்புறம் என்ன?"

"இதே கேள்விய என் பொண்டாட்டிட்ட கேட்டுட்டு நேத்தி இராத்திரிலர்ந்து இங்க தங்கியிருக்கேன்?"

"ஏன்டா "
" என்ன ஏன்டா?"
"உன்னய கூட்டிட்டு உள்ள வந்தா போதும்ன்னு விரட்டி விட்டுட்டா"

"பாவம் டா தங்கச்சி ஒரு ஆர்வத்துல கொஞ்சம் சீக்கிரமா போக சொல்லியிருக்கும்."
"உனக்கென்ன தெருவுல நின்னது நான் தான?"

"எப்பிடியும் இம்மிகிரேஷன் ல டைம் ஆகும்ன்னு ரெஸ்ட் ரூம் போயிட்டு வரதுக்குள்ள வெளிய போய்ட்ட உன் பின்னாடியே ஓடி வந்து உன்னய பிடிச்சு இருக்கேன்"

என்று பேசியபடி வந்தவர்கள் வாகனத்தில் ஏறியிருந்தனர். அவர்களின் தமிழ் உரையாடலைக் கேட்டுவிட்டு ஒரு சந்தோஷத்துடன் அவர்களுக்கு அருகே வர எத்தனித்தாள் அவள். ஆனால் அவள் நெருங்கும் முன் இருவரும் வாகனத்தில் ஏறியிருந்தனர்.
வாகனம் புறப்படும் முன் அவர்களை பிடித்துவிட தனது பயணப் பொதியை இழுத்தபடி ஓடிவர அதற்குள் வாகனம் போக்குவரத்தில் கலந்து விட இவள் விழித்தபடி நின்றாள். கையில் முகவரியுடன்.

அவள் கயல் விழி முப்பதுகளின் இறுதியில் இருந்த அவள் உள்ளே ஏறியதில் இருந்தே ஆழியனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் . இருந்தாலும் எப்படி கேட்க எனும் தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. அதில் உழன்றவள் இறங்கிய உடன் அவனிடம் கேட்கலாம் என்று நினைத்தவள் அவன் பின் நின்று கொண்டாள் அதில் சில விடயங்கள் அவன் அறியாமல் அவளுக்கு உதவியிருந்தான்.
எதை கொடுக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் ஆங்கிலம் அவளுக்கு குளிர் பரப்பியது இருந்தாலும் அவன் சற்று முன் பேசியதில் நடைமுறை புரிய திக்கி தினறி தானும் பதில் சொல்லிவிட்டு அவளுடைய பயணப் பொதியை பெற்றுக் கொண்டு வெளியே வந்தவள் கண்கள் தாமாகவே தனது முன்னோடியை தேட அவன் விமான நிலைய வாயிலை அடைந்து இருந்தான்.

முன் பின் தெரியாத நிலையில் உள்ள ஆண்மகனை எப்படி அழைப்பது என்ற தயக்கம் வேறு அவன் நடை உடை வேறு பயமுறுத்த பின்தொடர்ந்தவள் அவனை நெருங்கி பேசும் முன் அவனை தவறவிட்டு இருந்தாள்.
அவனில் இருந்து தெளிந்தவள் இப்போது தான் என்ன செய்யவது? எப்படி போவது? என்று தெரியாமல் விழித்தவள் தன்னை அழைத்து இருப்பவரை தொடர்பு கொள்ள எண்ணி அருகில் இருந்த பொது தொலை பேசி இருக்கும் இடத்திற்கு சென்றாள். அவளது இந்திய ரூபாயை அது அங்கீகரிக்க மறுக்க அருகில் இருந்தவர்களிடம் உடைந்த ஆங்கிலத்தில் விசாரித்து அமெரிக்க டாலர்களாக மாற்றி அவளிடம் இருந்த எண்ணிற்க்கு தொடர்பு கொண்டாள். அதுவோ வாய்ஸ் மெயிலில் சேர்ப்பிக்க வா என்று கேட்டு வைத்தது அது சரிவர புரியாமல் அழைப்பதை விட்டு விட்டு
வாடகை வாகனத்தை நோக்கி நடந்தாள்.
அப்போது அவள் முன் வந்து நின்ற வாகனத்தில் இருந்து இறங்கியவன் முழுமையாக ஆத்திரத்தில் இருந்தான்.

"எங்க போய் தொலைஞ்ச உன்ன எங்க எல்லாம் தேட படிச்சவ தான ஒரு அட்ரஸ் ஒழுங்கா பார்த்து வர முடியாது. மகாராணிய அழைக்க ஒருத்தர் வரனும்."
என்றதில் அமைதியாக தலை குனிந்து நின்றுவிட
என்ன நினைத்தானோ
"லக் கேஜ்ஜ பின்னாடி வைச்சுட்டு சீக்கிரம் வந்து ஏறு நேரம் ஆகுது. எனக்கு வேற வேலை இருக்கு."
என்றபடி வாகனத்தின் பின்பகுதியை திறந்துவிட தனது பெட்டியை உள்ளே வைத்தவள் விடுவிடுவென்று வந்து வாகனத்தில் அமர்ந்து கொண்டாள். அதற்கு மேல் அவனும் எதுவும் பேசவில்லை அவனது கைப்பேசி அவனை இழுத்திருந்தது. தனது பயணத்தின் சோர்வையும் மீறி வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அவள் எண்பதுகளைச் சார்ந்தவள் மேலும் சொந்த மாவட்டத்தின் தலைநகரத்திற்கு செல்வதே அரிது. அப்படிப்பட்டவள் இன்று தனியாக விமானமேறி வந்திருக்கிறாள். அன்று பள்ளி பருவத்தில் இருந்தவளிடம் இப்படி ஒரு நிலை வந்துவிடலாம் யாருக்கும் ஆகையால் கற்றுக் கொள்ளுங்கள் கதறிய ஆங்கில பாட ஆசிரியை நினைவுக்கு வந்தார் கூடவே வேறு சிலவும். தன்னை மீறி வந்த நினைவுகளை சிறுஓடையென கால் பதியாமல் தாண்டி மீண்டு மனதை சுற்றிலும் வைத்தாள்.

சிறிது ஒரு வளைவில் வாகனம் திரும்ப இருமருங்கிலும் பசுமையாய் புல்வெளி சீராக வெட்டப்பட்டு இருக்க தனித்தனி வீடுகள் தங்களது சுற்றுச் சுவருடன் இருந்தது பார்வைக்கு மிக அழகாக இருந்தது. அதற்குள் வாகனத்தை அந்த வீட்டின் முன் நிறுத்தியவன். அவனோ இதுவரையும் சளசளவென்று பேசிக் கொண்டு வந்தவன் வீடு வந்துவிட்டதை கவனித்துவிட்டு ப்ருடூத்தில் இருந்தவனிடம் "ஒன் செக்ன்ட்" என அனுமதி வேண்டி விட்டு இறங்கியவன் வாகனத்தின் பின்பகுதியை திறந்து விட்டு

"உன்னோட லக்கேஜ் எடுத்துட்டு உள்ளபோ நான் கார கேரஜ்ல விட்டுட்டு வரேன் "
என்றவனிடம்
"ம்" என தலை அசைத்துவிட்டு தனது பெட்டியை இறக்கினாள்.

"எஸ் யூ கேன்…ராபர்ட்."
என விட்ட இடத்தில் இருந்து மீண்டும் பேச்சுவார்த்தையை நரேந்திரன் துவக்கியிருக்க இவனை நம்பி பலன் இல்லை என தனது பொதியை இழுக்க முடியாமல் இழுத்து வாசலின் முன்பு வரை வந்தவள் அழைப்பு மணியை அழுத்தினாள்.

மறுபுறம்

கதவை திறந்த ராகவனின் மனைவி சீதா ஆழியனைக் கண்டதும் மலர்வுடன்
" வாங்க அண்ணா வாங்க. எப்படி இருக்கீங்க அம்மா எப்படி இருக்காங்க போன தடவை நான் வந்தப்ப கால்வலி இருக்குன்னாங்களே இப்ப எப்படி இருக்கு"

அவளின் வேகத்தில் சிரித்தபடி நாற்காலியில் பாதிபுதைந்தவன்

"எல்லாரும் நல்லா இருக்காங்க மா"

என்றவன் அடுத்த வார்தை பேசும் முன் ராகவன்

"ஏ கொஞ்சம் கேப் விட்டு ஒரு மடக்கு காபிய கொடுத்துட்டு கேளு. நீ கேட்கறத பார்த்தா அவன் இருக்கற எண்ணத்தை கைவிட்டுட்டு இப்பவே அடுத்த ப்ளைட்ட புடிச்சி ஊர பார்க்க போய்டுவான்."

"சும்மா இருங்க வராதவுக வந்து இருக்காங்க ஒரு சந்தோஷத்துல இரண்டு வார்த்தை கூட பேசாம
எப்படி "

"எப்படியோ முதல்ல இரண்டு பேருக்கும் காபி தா "
என்றபடி தனது மேல் ஜாக்கெட்டை கழற்றினான்.

"அதெல்லாம் கரட்டா அப்பவே ரெடி பண்ணிட்டேன்"
என்று தயாராக இருந்த காபியை நீட்டினாள்.
மற்றொரு டம்ளரை ஆழியனிடம் நீட்டியவள்.

"அண்ணா இந்தாங்ககாபி ப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம். "

"சரிம்மா உன் பையன எங்க டா ? "

"அவன் புட் பால் கோச்சிங் போயிருக்கான். நீ தூங்கி ரெஸ்ட் எடு ஈவினிங் நாம பேசலாம் . இப்ப எனக்கு கம்பெனில கொஞ்சம் வேலை இருக்கு."

என்றவன் மீண்டும் கிளம்பிவிட

"என்னங்க சாப்பாடு ."
"ஆஃபிஸ் ல பார்த்துக்கறேன்."
என்று விட்டு வெளியேறி இருந்தான்.

ஒருபுறம்

கயல்விழி அந்த நாற்காலியில் முன்னனியில் உட்கார்ந்து இருந்தாள். சுவரில் சரிந்து நின்றபடி அந்த பெண் இவளைத் தான் பார்த்து கொண்டு இருந்தாள்.அவள் பார்வையே சொன்னது
"நீ சொல்லி நான் கேட்கவா "எனும் பதின் பருவத்தில் இருக்கிறாள் அவள் என்று.

கயல்விழியின் அருகில் வந்து அமர்ந்த மற்றவள் அவள் கரம் பற்றிக் கொண்டு
"பொன்நிலா என்னோட பெயர் "
"நான் கயல் விழி"

"நீங்க அத்தையோட சொந்த ஊர்லர்ந்து எங்களுக்காக வந்ததுல சந்தோஷம். நாங்க இரண்டு பேரும் வேலை விஷயமா வெளியூர் போக வேண்டிய அவசியம். அத்தைய பார்த்துக்க ஒருத்தர் தேவை அப்புறம் "

"ஏன் இழுத்தடிக்கற டைரக்ட்டா சொல்லு."

என்ற நரேந்திரன்
"சீ கயல்விழி நீங்க வாங்கின கடனுக்கு இங்க வேலை செய்ய வந்துருக்கீங்க எங்க அம்மா என் பொண்ணு அப்பறம் ஹவுஸ் கீப்பிங் குக்கிங் எல்லாம் நீங்க தான் செய்யனும்.
உங்களால முடியுமா முடியாதா."

என்று கறாராக கேட்டு வைத்தான். முடியாது என்று சொல்லிட முடியுமா ? அவளால் அப்படி கூறிவிட முடியும் என்றால் அங்கேயே சொல்லி இருப்பேனே விமானம் ஏறி இங்கு வந்து ஏன் சொல்லப் போகறாள்.

"பார்த்துக்கறேன் ."
என்று சொல்லவும்

"அப்புறம் என்ன ஓகே சொல்லிட்டாங்கல்ல. நாம ஆபிஸ் போகலாம் பொன்நிலா சீக்கிரம். வந்து ஊருக்கு வேற பேக் பண்ணி கிளம்பனும்."

" இதோ வரேன் நீங்க போய் கார ஸ்டார்ட் பண்ணுங்க." என்று விட்டு. மீண்டும் "கயல் விழி இது என்னோட பொண்ணு பாகீரதி . அவங்க என் அம்மா இவங்களுக்கு தான் நீங்க உதவி பண்ணணும். உங்களுக்கு எது வேணுமோ அம்மா கிட்ட கேளுங்க ஓகே வா."
எனும் போதே நரேந்திரன் வாகனத்தின் ஒலி கேட்க ஓடிச் சென்று ஏறிக் கொண்டாள் .

இப்போது கயல் விழி என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள். அவளிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. அவளுக்கோ "போய் சேர்ந்ததும்
போன் பண்ணி சொல்லும்மா"
அறிவித்து விடச் சொன்ன என்ற மகளின் வார்த்தைகள் நினைவில் ஆனால் அவளிடம் அலைபேசி இல்லையே.

இவள் வந்து விட்டதை அலைபேசி வாயில் அறிந்து கொண்ட நரேந்திரனின் தாய் அதை தன் மகளுக்கு சொல்லியிருப்பார்களா? அதை இவர்களிடம் கேட்கலாமா? என்று யோசித்தபடி இருந்தாள்.
 
அத்தியாயம் 3

இரவு உணவு முடிந்திருந்தது. ஆழியன் அறைக்கு திரும்பியிருக்க சீதா சமையலறையில் தனது வேலைகளை முடித்துக் கொண்டிருந்தாள். பாத்திரங்களை ஒழித்துப் போட்டவள் சமையலறை வாயிலைப் பார்க்க.
ராகவன் தான் தெரிந்தான்.
"ஏங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க."
அதில் தனது மனைவி வேறு ஏதோ ஒன்றை கேட்க விரும்புகிறாள் என்று புரிந்து கொண்டவன் தனது அலைபேசியை வைத்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.

"ஏன் இன்னிக்கு உன் புத்திர பாக்கியம் உதவிக்கு வரலையா?"
"இல்லை நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகனும்ன்னு சொன்னான். அதான் போய் படுத்துட்டான்."
"இந்த தடவை எப்படியும் செலக்ட் ஆகிடுவான்னு நினைக்கிறேன்." என்றவன் எளிதான பாத்திரங்களை டிஷ்வாஷரின் போட்டுவிட்டு ஏற்கனவே எடுத்து உலர வைத்த கண்ணாடி பாத்திரங்களை துடைத்துக் கொண்டு இருந்தவளிடம் முன் இருந்த மேசையில் அமர்ந்து கொண்டவன் அவளிடம் இருந்த துணியை வாங்கி தானும் துடைக்க துவங்க.
நாற்காலியில் மீது இருந்த அவனுடைய கால்மூட்டில் முகம் பதித்து ராகவனிடம்
"ஏங்க என்ன செய்ய?"
அதில் அவன் விழிக்க
"அதான் அங்க?"
"எங்க"
"செண்பா ஆண்டி சொன்னாங்கல்ல?
"ஓ இவனுக்கு பொன்னு பார்க்க போறதையா?."
என விஷயத்தை விளங்கிக் கொண்டு கேட்க
"ம் ஆமா எப்ப பார்க்க போறாங்க கூட வரனுமான்னு கேட்பமா. "
என்றவளிடம்
"அதான் எப்படின்னு யோசிச்ட்டு இருக்கேன் சீதா. அம்மா வேற போன் பண்ணி கேட்கறாங்க."

"ஆமா என் கிட்டயும் பேசினாங்க ."

"என்ன சொன்னாங்க ?"

" வேற என்ன அவங்க இங்க பார்த்து வைச்சிருக்க பொண்ண நாம அவர் கூட போய் பார்த்து பேசனுமாம்."
"எனக்கு எப்படி பேசன்னு தெரியல .ஞாயிற்று கிழமை அந்த பொண்ணு பார்க்க கூட்டிட்டு போற. நீன்னு வேற சொல்லிட்டாங்க.இங்க என்னன்னா இன்னும் பெத்த புள்ளையவே போய் பார்க்க வகை இல்லை."

"ஆனா வேற வழியில்லை வா நாம இரண்டு பேரும் சேர்ந்து போய் கேட்போம்."

என சீதா ராகவன் இருவரும் ஆழியனின் அறை முன் நின்றிருந்தனர். அவன்
"ஏ போடி ."
என முனுமுனுக்க
"ம்ஹூம் நீங்களே போங்க"
"உனக்கு அண்ணன் தானே."
"உங்களுக்கு ப்ரண்ட் தானே."
என கிசு கிசு வென்று மாறி மாறி பேசிக் கொண்டு இருக்க.
அவனோ இது எதுவும் பற்றி கவலையின்றி தனது லேப்டாப்பில் இருந்தவனையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் கவனம் இல்லை என்று அறிந்தவர்கள் மெல்ல அறையின் உள்ளே வந்து அவன் எதிரில் அமரவும். நிமிர்ந்து அவர்களைப் பார்த்தவன்
"என்ன புருஷன் பொண்டாட்டி இரண்டுபேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க. என்ன விஷயம்."
"அது …. ஒன்றுமில்லைண்ணா வந்து நாளைக்கு"
என்று சீதா ஆரம்பிக்க இழுக்க

"இங்க பக்கத்தில இருக்கிற கோயிலுக்கு போயிட்டு அப்படியே சாப்பிட்டு வருவமான்னு "
என்று இவர்கள் அவனையும் தங்களையும் ஒரு மாதிரியாக ஆயத்தம் செய்ய முயல.
என தட தடவென இறங்கி வந்த அவர்கள் மகன்
" அங்கிள நாளைக்கு ஆறு மணிக்கு என் கூட வர்ரீங்களா இல்ல மேட்ச் டைம்க்கு வர்ரீங்களா."
என்று ஒரு அறிவிப்பை வெளியிட
"ஆழியா நீயும் குகனும் நாளைக்கு வெளிய போறீங்களா?"
"ஆமாடா நாங்க ரெண்டு நாள் முன்னாடியே போன்ல முடிவு பண்ணின ப்ரோகிராம் இது ."
இப்போது இவர்களை என்ன செய்வது என்று சீதா ராகவனை பார்க்க அவன்
"சரிடா அப்ப நாம ஈவினிங் கோயிலுக்கு போயிட்டு வரலாம்."
என்று அவனிடம் தங்களது திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்க
"நோ வே நாளைக்கு புல்லா நானும் ஆழியன் அங்கிளும் தான் சோ நீங்க மட்டும் போய்ட்டு வாங்க உங்க ப்ரோகிராம்க்கு இல்ல நெக்ஸ்ட் சன்டே மாத்திக் கோங்க ."

என்றவன் அத்துடன் முடிந்தது தான் வந்த காரியம் ஆனது. என்பதைப்போல் அலைபேசியில் நண்பனுக்கு அழைத்தபடி தனது அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக் கொண்டான்.

இப்போது என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் அமர்ந்து இருந்த மூவரில் ஆழியன் முதலில்

"ஏன் நீங்க இரண்டுபேரும் அவனோட மேட்ச் பார்க்க போக மாட்டிங்களா."

"அவரு பெரிய மனுஷன் ஆகிட்டாராம் அதனால வேண்டாமாம் ."
"என்னடா சொல்லற "
"என்னத்த சொல்ல போன தடவை இந்த மாதிரி மேட்ச்ல அவன் செலக்ட் ஆகல உடனே இவ ஒரே அழுகை நானும் கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனா அவன் டாட் விளையாட்டுல இதெல்லாம் சகஜம் இனி நீங்க நான் டீம்க்கு செலக்ட் ஆகி பெரிய மேட்ச் விளையாடும் போது வாங்க போதும். இல்ல என்னய ஃபேம்பரிங் பண்ணி குழந்தையாகவே வைச்சிருவீங்க நான் நானா இருந்துக்கறேன்னு சொல்லிட்டார்."

" எனக்கு அந்த தன்னம்பிக்கை பிடிச்சுது சோ அவனுக்கு மேட்ச் இருக்குற அன்னிக்கு இவ
கோயிலுக்கு போவா இல்ல வீட்டுலயே சாமி கும்பிடுவா நான் முடிஞ்சா கோயில் இல்ல விஷ் பன்றதோட சரி "

"ஒ பட் குகனோட தன்னம்பிக்கை அபாரம். நான் அங்க சில பசங்களுக்கு ஸ்பான்ஸர் பண்றேன் அவங்கள இங்க கோச்சிங்க அனுப்பி வைக்கனும் அதுக்கு இந்த கிளப் அவங்க கோச் அப்புறம் எல்லாம் பத்தி விசாரிக்கனும் அதான் குகன் கூட போய் பார்த்துட்டு வரலாம்ன்னு."

'இப்படி மற்றவர்களுக்கு என பேசுபவனுக்கு எப்படியாவது ஒரு வாழ்கை அமைந்திட வேண்டும்' என்று இறைவனிடம் மானசீகமாக வேண்டிக் கொண்டவள்.
"சரிண்ணா அப்ப நாம இன்னோரு நாள் போகலாம் இப்ப நீங்க குகன் கூட போய்ட்டு வாங்க."
என்று விட்டு எழுந்து கொள்ள அவளைத் தொடர்ந்து ராகவனும் செல்ல அதற்கு மேலும்
அங்கு அமர பிடிக்காதவன். வெளியே வந்தான்

எண்ணம் முழுவதும் இன்னும் எப்படி அவர்களை சந்திப்பது எதிர்கொள்வது என்பதிலேயே உழன்று கொண்டிருந்தது. மகர விழியாளையோ இல்லை மேத்யூவையோ சந்திப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அது செய்து விடும் மன அசௌகர்யம் மற்றும் அவன் கேட்கும் விஷயத்தை முழுதாக காதில் வாங்காமல் பேசிவிட்டால். ஆனால் அவனும் பின்வாங்க முடியாதே.

சரி தவறு என்று முன்பின்னாக மனதில் பல்வேறு யூகங்கள் அதற்கு வியூகம் அதன் சாதக பாதக பலன் என்று பலவற்றையும் ஆராய்ந்தவன். இன்றும் கடந்த நாட்களை போலவே குழம்பி கைகட்டி நின்று தூரத்தில் வெறித்துக் கொண்டு இருந்தான்.

கயல் விழி தனது வேலைகளில் முழ்கி இருந்தாள். பொன் நிலாவும் நரேந்திரனும் தங்களது பயணத்தை மேற்கொண்டு இருந்தனர்.
ஆகையால் வீட்டில் இப்போது பொன்நிலாவின் தாய் சாவித்ரியும் பாகீரதியும்தான் . மூன்று வேளையும் சமைக்க அந்த உணவுகளை சாப்பிட சேர்ந்த பாத்திரங்களை கழுவுதல்.
வீட்டில் இருக்கும் இரண்டுபேருக்கும் உணவு செய்வதற்குள் கயல்விழியின் நிலை கவலைக்குள்ளாகி விடும்.

சாவித்தரி முன் ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியில் ஏதோ பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளிடம் வந்த கயல்விழி
"அம்மா இராத்திரிக்கு என்ன செய்யட்டும் ?" என்றதும் சாவித்ரி
"வயிறு சரியில்லாத மாதிரி இருக்கு மிருதுவாக இட்லி சட்னி பண்ணிக்கோ ரதிக்கு கொஞ்சம் சாம்பாரும் சேர்த்து பண்ணிடு போதும்." என்று விட சரிம்மா என்று தலையாட்டி விட்டு திரும்ப
உள்ளே வந்த பாகீரதி
"ஆன்டி ஒன் கப் காபி."
என்றவள் "ஏ சவி என்ன உன்னோட சீரியல் பார்க்கறியா?"
"ஆமாண்டியம்மா. உள்ள போய் இத மாத்திண்டு வரியா இட்லி சாப்பிடலாம் உனக்கு பிடிக்கும்னு சாம்பார் வேற பண்ண சொல்லி இருக்கேன்."

"இட்லி சாம்பார் யக், "
என்று முகம் சுளித்துவிட்டு
" சாப்பாத்தி வித் சென்னா " என்றாள்.
அதில் சென்னாவை கயல்விழிக்கு தெரியவில்லை . பிறகு அவள் கூறிய சில அமெரிக்க உணவுகள் பற்றி அவளுக்கு எதுவுமே தெரியாது.அவள் அறிந்தது அதிக பட்சம் நூடுல்ஸ். இதெல்லாம் இவளுக்கு செய்ய தெரியாது என்றவுடன் இரண்டு தோள்களையும் ஒரு குலுக்கு விட்டு

" சவி நான் வேற ஆர்டர் பண்ணிக்கறேன்"
என்ற பேத்தியிடம்
"ரதி வாரத்தில் ஒரு நாள் தான் வெளியே அவ்வளவு மணி தான் அலவ்ட் மத்த நாள் வீட்டுல
பண்றதுதான் என்ன வேணும் சொல்லு."

"அவங்களுக்கு சப்பாத்தி நான் இது மாதிரி நார்த் இன்டியன் டிஷ் எதுவுமே தெரியல சவி"

"இதென்ன பிரமாதம் ஒரு தடவை சொல்லி தரலாம். அவளுக்கு தெரியலன்னா ஆள மாத்திடலாம்."

இதில் உள்ளே இருந்த கயல்விழி பதறிப் போனாள் . இதற்காக வெளியே அனுப்பி விட்டால்
தனது நிலை என்னவாகும் என்பதை விட தன் மகள் மாதங்கியை நினைத்து தான் இன்னும் கவலையாகிப் போனாள். இவள் இங்கு வர ஒப்புக் கொண்டதால் தான் நரேந்திரனின் தாய் மாதங்கிக்கு அந்த எஞ்சினீயரிங் காலேஜ்ல் இடம் மற்றும் விடுதிக்கும் ஏற்பாடு செய்தார். வாரம் ஒருமுறை மட்டுமே அவளை தொடர்பு கொள்ள முடியும் கையில் தொலைபேசி இருக்கக் கூடாது என்று பல சட்டதிட்டங்கள் மாதங்கியை பாதுகாக்க இருந்தது. ஆனாலும் பயம் நேற்று இவளிடம் பேசிய மாதங்கி இவளை நேரில் பார்க்க முடியவில்லை என்பதை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றதில் கொஞ்சம் நிம்மதியுற்று இருந்தாள் கயல்விழி.


இப்போது இவர்கள் பிடிக்கவில்லை வெளியே போ என்றால் அதற்கான தொகையை திருப்புவது என்பதும் எளிதல்ல முதலில் அங்கிருந்து வெளியே வந்தால் இவளுக்கு பாதுகாப்பும் இல்லை. போக்கிடமும் இல்லை. என்பதில் தன் பதின் பருவத் தவறுகள் உரைக்க கண்ணீருடன் பாலும் பொங்கி வர கரையை கடக்கவிடாமல் உள் இழுத்துக் கொண்டவள். அடுப்பை அனைத்து மனதை இங்கு நிறுத்தி காபியை தயாரித்தாள். அதை பாகீரதியிடம் தர.
"தேங்யூ " என்று காபியை வாங்கி கொண்டாள்.

எப்போதும் போல் மற்றோர் முறை அவளை பார்த்தாள் நல்ல நிறம் நீண்ட சீராக வெட்டப்பட்ட கூந்தல். ஒரு ஜீன்ஸ் மேலே ஒரு டீசர்ட் அதில் எதுவோ எழுதியிருந்தது. கயல்விழிக்கு என்னவோ பாகீரதியை பார்த்தால் செய்தால் தன் மகள் மாதங்கியை பார்த்தது போல செய்தது போல் ஒரு நிறைவு. அதற்காகவே செய்ய விரும்பினாள். இனி இதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் சாம்பாருக்கு காய்கறிகளை வெட்ட துவங்கினாள்.
 
அத்தியாயம் 4

மேத்யூ கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்து சரி செய்து கொண்டு இருந்தான். அவனது அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அந்த வாண்டு நேராக மேசைக்கு அடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

அதைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. ஒழிந்து கொள்கிறாளாம் .அதைக் கண்டுகொண்டவள்
"ஸ் சிரிக்காதீங்க அம்மா கேட்டா இல்லைன்னு சொல்லுங்க ஒகே."
என்றவள் கதவு திறந்த உடன் கண்ணில் படும் வண்ணம் இருந்த மேசையில் அடியில் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.

"தேன் நிலா தேன் நிலா எங்க இருக்க. டெய்லி உனக்கு இது வேலையாப் போச்சு. நேரமாச்சு எங்க இருக்க"
"இங்க தான் "

"அம்மா பாவம்ல க்ளு கொடு கியூட்டி"

"இங்கதான் டாடி ரூம்ல நீ என்ன கண்டுபிடி பார்க்கலாம் ."

என்ற எங்கு இருக்கிறாள் என்பதை தான் அறியாமல் கூறிவிட்ட பெண்னை நினைத்து புன்னகையுடன் கதவை திறந்தவள் பார்வையில் தேன்நிலா விழ அவளை பார்க்காதது போல மேத்யூவை பார்க்க. அவனோ
"யாரை தேடற விழி கியூட்டி இங்க வரவே இல்லையே."
என்றதில் மகிழ்ந்து போன சிறியவள் வாயை மூடி சிரித்துக் கொண்டது.
" ஓ ஆனா அவ க்ளு கொடுத்தாளே இங்க தான் இருக்கறதா."
"அப்ப தேடி பாரு "
என்றதில் அவள் மறு பக்கம் தேடுவதாக பாசாங்கு செய்ய தேன் நிலாவோ தந்தையின் கண்ணசைவில் வெளியே செல்ல முயல எட்டி அவளைப் பிடித்தவள்
"ஏய் குட்டி எங்க ஓடற சாப்பிடாம யூனிபார்ம் மாத்தாம . ஸ்கூல் போகனும் ல"
என்க
"ம் மாட்டேன் மாட்டேன் டாட் டாட் கிட்ட தான் செஞ்சிப்பேன்"
"நான் அப்ப பிடிச்சி கெஞ்சறேன் இங்க ஓடிவந்து ஒளிஞ்சிட்டு " என்று மிரட்டிய மகரவிழியை மேத்யூ பிடித்து கொண்டான். அந்நேரம் அவள் பிடியில் இருந்த தேன்நிலா தப்பி ஓட திமிறியதில் மெத்தையில் விழுந்தாள். அதில் தடுமாறி அவள் மீது விழப் போன மகரவிழியை பிடிக்க தகப்பன் முனைய. அவனையும் சேர்த்து இழுத்தபடி மெத்தையில் சரிந்தாள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் இருக்க அவன் உலகம் மறக்கும் முன் தன் தந்தை தாயை தாங்கியது பொறுக்காமல் ஊடாக வந்தவள் என் தந்தைதான் எனக்கு மட்டும் தான் எனும் விதமாக தந்தையின் மார்பின் மீது ஏறி படுத்துக் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
"சரியான பொறாமை புடிச்சது. "
என்று சலித்து கொண்டு நகர்ந்த அவளை பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். அதில் அவள் பொருந்தி கொண்டு அவனை அனைக்க
" ஸாரி " என்ற ஒற்றை சொல்லில் இருவரும் தலை திருப்பிப்பார்க்க நிலன் அதுவரை நின்றிருந்தவன் திரும்பி முன்னறையை நோக்கி நடந்தான்.

"பொறாமை உன் பையனுக்கு தான் பாரு இரண்டு நிமிஷம் அவன விட்டுட்டு வந்துட்டன்னு முகம் சுருங்கி போச்சு பாரு. " என்றவாறு எழுந்து கொண்டவன் தனது உடையை சரி செய்து கொண்டவன் தேன் நிலாவையும் தூக்கிக் கொண்டு வெளியேறினான்.

ஆனால் மகர விழி மனமோ அவனது இந்த உடல் மொழி மற்றும் பார்வை அவளுக்கு ஆழியனை நினைவுபடுத்தியது. இத்தனை வருடங்களில் அவன் நினைவுகள் எப்போதாவது அவளுள் எழுவதை தடுக்க முடியவில்லை. இது போன்ற நேரங்களில் முன்பு மற்றோர் வேலையில் தன்னை திருப்பிக் கொள்வாள் . முதலில் அவனில் ஆழியனைப் பார்த்தவள் பிறகு தானாகவே நிலனை நிலனாகவே பார்க்க பழகியிருந்தான். ஆனாலும் மனம் என்றுமே போட்டு வைத்த கோட்டுக்குள் நின்றுவிடுவது இல்லை. ஒரு நொடிக்கும் குறைவான கட்டற்ற பிரபஞ்சம் தாண்டியும் செல்லும் அதே பிரபஞ்சத்தை நினைத்த மாத்திரத்தில் தன்னுள் கொண்டுவந்துவிடவும் முடியும்.

கட்டற்ற மனம் கட்புலனாகத நினைவு வழி செல்ல அதனை இழுத்து பிடிக்கும் கடிவாளம் எதுவெனில் அதே மனமும் அதன் மாற்று எண்ணங்களும் தான்.ஆனால் மகர விழி அதை கட்டமைக்க இயலாது தன் அச்சத்தின் வழி இருந்தாள். அவள் உள்ளுணர்வு அவளை ஆட்டுவித்தது எங்கே ஆழியன் வந்துவிடுவானோ ? அவனை கேட்டுவிடுவானோ என்பதான நினைவுகள் இப்போதெல்லாம் அந்தரங்கமாக அவளை அரித்தபடி இருக்கிறது.

இதை மேத்யூவிடம் கூறலாம் என்றால் அதற்கும் மனம் இசைவு தரவில்லை. அவன் இயல்பு எனும் அறிவு சார்ந்து நடந்து கொள் என்பான். மனதின் உணர்வு சார்ந்து யோசிக்க கூடாது என்பதோடு அல்லாமல் இன்னும் அவன் நினைவு உன்னில் இருக்கிறதா என்று அவன் வாய் விட்டு கேட்க வேண்டாம் ஒரு பார்வை பார்த்தாலே போதும் அவள் இறந்துவிடுவாள்.
இது அத்தனையும் தாண்டி இதுவரை அவன் தன் மகன் என இருக்கும் மேத்யூவிடம் எப்படி கேட்பது. நிலனிடம் எப்படி தனது மற்றோர் வாழ்கையை கூறுவது அதற்கு பின்னான தங்களது உறவு எப்படி இருக்கும் என தன் போக்கில் இல்லாத பூதம் வந்தால் இருந்தால் என சிந்தித்தவாறு இருந்தவளின் கழுத்தில் கோர்த்த இரு கரங்களின் கனத்தில் நிமிர்ந்தவள் முன் நிலன் நின்றிருந்தான்.

என்னடா என்றவளை எதுவும் சொல்லாமல் அனைத்து கன்னத்தில் முத்தம் பதித்தான். அதிலேயே அவளுக்கு புரிந்து போயிற்று சற்று முன் வந்த பொறாமையில் வீசிய ஸாரி என்ற வார்த்தை இந்த அனைப்பில் தணிகிறது என்று அதை உணர்ந்தவள் தன் முன் குனிந்து நிற்கும் அவன் நுதலில் முத்தமிட
"மாம் எனக்கும்" என்றபடி வந்த அந்த சின்ன சிட்டை "போடி நீ போய் உங்கப்பாட்ட வாங்கு "
என்றாள்.
"மாம்" என சினுங்க

நிலன் சிரித்தபடி அவளை தூக்கி கொண்டவன் அவளுக்கு ஒன்று தர மற்றொன்றை மகர விழி தந்தாள்.

"ஹனி எனக்கு"

என்று உள்ளே வந்த கணவனும் கன்னம் காட்டியதில்
"அவள் என்ன இதெல்லாம் பிள்ளைங்க முன்னாடி."என்று கண்டன பார்வை பார்க்க
அவனோ அதை இலட்சியமே செய்யவில்லை.
"உன்ன மாதிரி இந்த பாரபட்சமே எனக்கு கிடையாது."
என சட்டென அவளை அனைத்து இரு கன்னத்திலும் முத்தம் வைத்தான். அதில் சற்று வெட்கத்துடன் சங்கடமும் வந்து விட்டது அவளுக்கு . அதே போல நிலனையும் அனைத்து விடுவித்தவன். அவன் தோள் மீது கை போட்டவாறு

"நிலன் இட்ஸ் ரியலி சூப்பர்ப் த வே யூ ஹோல்ட் தட் மீட்டிங்."
என்று தகப்பனும் மகனும் பேசியபடி உணவறைக்கு சென்று விட. இவளும் அவர்களைத் தொடர்ந்தாள்.

கயல் விழி விரிந்து பரந்து கிடந்த அந்த வணிக வளாகம் முன் நின்றாள். அவளுக்கு ஏதோ வனாந்திரத்தில் தனியாக இருக்கும் மன நிலை. எதுவும் புரியவில்லை. இருந்தாலும் வியர்வை பிசுபிசுத்த கரத்தை புடவையில் துடைத்தவாறு. உள்ளே நுழைந்தவள். இப்போது

"ஐய்யய்யோ திக்கும் திசையும் தெரியலையே. "
என்று முனுமுனுத்தவாறு புடவை தடுக்காத வண்ணம் லேசாக தூக்கி பிடித்தபடி நடந்தாள்.

ஆம் அவளும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடக்கிறாள். ஆனால் எங்கு இந்த இந்திய பொருட்கள் விற்கும் கடை இருக்கிறது என்று தெரியவில்லை.

விசாரிக்கலாம் என்றால் ஆங்கிலம் என்றதும் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது. இவ்விடத்திற்கு இதற்கு முன்பு ஒரு சாவித்திரியும் இவளும் வந்தது. அப்போது நவராத்திரி கொலு என்பதால் வெற்றிலை பாக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட காய்கறிகள் மளிகை பூஜை பொருட்கள் என சில பொருட்களை வாங்க இங்கு வந்து இருந்தனர். மற்றபடி அடிக்கடி தேவைப்படும்
மளிகைப் பொருட்கள் பால் போன்றவற்றை அருகில் உள்ள கடையில் அல்லது ஆன்லைனில் வாங்கிவிடுவது வழக்கம். இப்போது வெயில் காலம் என்பதால் வடகம் வத்தல் போடலாம் என்று
சாவித்திரி யோசித்ததன் வினை. இவள் இந்த கடையில்

"எல்லாம் என்ன சொல்லனும். வாய வைச்சுட்டு பேசாம இல்லாம"
என்று தன்னை நொந்துகொண்டாள் அன்று மதியம் சற்று ஒழிந்த நேரத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போது சாவித்திரி.
"நான் அங்க இருந்த வரை பங்குனி சித்திரை வந்தா வடகம் வத்தல் போட்டு காய வைச்சி எடுத்து வைச்சா அந்த வருஷம் முழுவதுக்கும் ஆகும் அது போக இங்க வேற கொடுத்து விடுவேன்."
என்றவரிடம்
"இங்கயும் அதே வெயில் தான காயுது. இங்கயே போட்ற வேண்டியதான."
என்றதில் இவள் துணையிருக்கும் தைரியத்தில் இருவரும் இணைந்து வேண்டிய பொருட்களை பட்டியல் இட்டு அதை வாங்கவென்று கிளம்பி.
பாகீரதியிடம் சொல்ல அதுவரை கணிணியில் இருந்தவள்

"நோ சவி. வெயில்ல ப்ரஷர் கூட்டிட்டா சங்கடம் அப்புறம் மாம் வத்தலாவது வடகமாவது எல்லாத்துக்கும் நோ சொல்லிடு வாங்க."

"இப்ப என்னடி செய்ய ."

"நான் என் ப்ரண்ட்ட பார்க்க போறேன். போகும் போது இறக்கி விடறேன். பர்சேஸ் முடிச்சிட்டு கால் பண்ண சொல்லுங்க கூட்டிட்டு வரேன்."
என்றதும் சரி எனப் பட்டது ஏனெனில் கயல்விழி டாக்ஸி பிடித்து தனியாக செல்வதை விட பாகீரதியுடன் செல்வது உசிதம் முடிவு செய்யப்பட்டது.
" நீயே வாங்கிட்டு வந்துறலாமே ரதி . "
என்ற சாவித்ரிக்கு
"நோ சவி நீங்க நூறு வெரைட்டி சொல்லுவீங்க அது இது ன்னு நான் அதுக்கு ஆள் இல்லை. அது மட்டும் இல்லாம இவங்களும் வாங்கி பழகிக்கனும் தான. "

என்றதும் கயல்விழி கார்டு அலைபேசி சகிதம் வந்து ஏறிவிட்டாள். கயல்விழிக்கு தான் அவளது ஒட்டுநர் திறமையை அந்த லாவகம் கண்டு வியப்பு . மாதங்கியையும் கற்றுக் கொள்ள சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். பாகீரதி அவளை கடை வாசலில் இறக்கிவிட்டவள்
"கால் பண்ணுங்க ஆண்டி " என்று விட்டு போய்விட்டாள்.
இவள்தான் தலை சுற்றி இருந்தாள். ஒரு முறைதான் வந்தது என்பதால் புது இடம் கண்ட பசு போல மிரண்டு போனாள் அதில் அந்த கடை இருக்கும் இடம் பரிச்சயம் மறந்து விட தேடிக் கொண்டு இருக்கிறாள்.

சரி யாரிடமாவது கேட்கலாம் என்றால் இவளது ஆங்கிலம் அவர்களுக்கு புரியவில்லை புரிந்தால் அவர்கள் பதில் இவளுக்கு விளங்கவில்லை. சரி இந்தியர் போல் இருந்தவர்களை கேட்க அவர்கள் "இந்தியில் இல்லை இந்தி கலந்த ஆங்கிலத்தில் கேட்க. " இவள் சோர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

"என்னடா இது எங்கு பார்த்தாலும் யாரைக் கேட்டாலும் ஒரு சிரிப்பு . பதில மட்டும் காணும் ஏன்டா இப்படி வடகம் போட நினைச்சது ஒரு குத்தமா "
என மனதின் குரல் வெளியே கேட்கும் படி புலம்பிக் கொண்டு இருந்தாள்.


நன்றாக பரந்த மைதானம் நெடுக சீராக வெட்டப்பட்ட பச்சை புற்கள் மற்றும் கால் முளைத்த மலர்களுடன் இருந்தது. அந்த நேரத்திற்கே வந்து விட்ட மாணவ மலர்கள் தங்களது உடைகளை மாற்றிக் கொண்டு கால்பந்தாட்டத்திற்கு முன்பான பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்தனர். குகனும் தனது பயிற்சியை தொடங்கி இருந்தான்.
 
அத்தியாயம் 5


மிக சிறப்பாக தனது தடுப்பாட்டத்தை களத்தில் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தான் குகன். அவன் கண்களோ பார்வையாளர் பகுதியில் ஆழியனுக்கு பின் பார்த்து பார்த்து மீளாய்வு செய்து கொண்டு இருந்தது. அதை கவனித்தபடி தான் இருந்தான் ஆழியன். அப்படி இவன் யாரை பார்க்கிறான் என சிந்தனை வந்தாலும் குகனின் கண்கள் அதன் மலர்ச்சி அவன் வயது அத்தனையும் கூறியது அவன் பருவ நோயின் வசப்பட்டு போயிருக்கிறான் என்பதை. ஆழியன் மூளை உணர்வும் அதை அறிவித்து விட்டது. அது யாராக இருக்கக் கூடும் எனும் ஆர்வத்தில் பின்னால் திரும்பி பார்த்தால் ஆண்களும் பெண்களுமாக நிறைய பேர் இருந்தனர். இதில் அவன் யாரைப் பார்த்தான் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை.

அதற்குள் சிறு இடைவேளை வர குகனிடம் வந்த அவனது கோச். அவனது முதுகில் தட்டியவர் மெல்லிய குரலில்

"குகன் கான்சட்ரேட் இன் தி மேட்ச் இட் இஸ் யூவர் டைம்." என்றவர் கூறியதன் உள்ளர்த்தம் இனி வருபவை உனக்கான உன் வாழ்விற்கான நொடிகள் தவற விட்டு விடாதே என்பதை மிகச் சரியாக புரிந்து கொண்டவன் தனது கவனத்தை களத்திலும் கால்களிலும் வைக்க அவனது அந்த நொடி வந்து சேர்ந்தது. பெரும் பரபரப்புக்கு இடையே அவன் தட்டிய ஒரு கோலில் அவனது அணி வென்றது. அதில் ஆர்பரித்த அவனது அணியினர் அவனை தூக்கி போட்டு பிடித்து கொண்டாடினர்.அங்கு வந்த அவனது கோச்
"கன்குராஜுலேஷன் குகன் யூ ஆர் செலக்ட்டு டூ த நெக்ஸ்ட் டோர்னமென்ட்"

அதுவும் மிகப் பிரபலமான அணிகளுடன் என்றதில் அவனது ஆனந்தம் எல்லையில் இல்லை.இது அவனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி செல்லும். உள்ளூர் போட்டிகள் இதில் இவனுடைய ஆட்டம் அதன் பாணி கவர்ந்தால் அடுத்தடுத்த பெரிய அளவிலான கிளப்புகள் பிறகு மாகாணம் என்று முன்னேற முடியும்.

இதைக் கேட்டவாறு பார்வையாளர் இடத்தில் இருந்து குகனை பார்த்துக் கொண்டு இருந்தான் ஆழியன் குகனைப் பார்த்து கையசைக்கவும். குகன் தானும் பதிலுக்கு கைசைத்தவன். நண்பர்களிடம் ஏதோ கூறி விடைபெற்றுக் கொண்டு வந்தான்.

"அங்கில் டென்மினிட்ஸ் போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்துடறேன். நாம இரண்டுபேரும் சேர்ந்து போய்
இந்த கோச்சிங் செண்டரோட மேனேஜர பார்த்துட்டு வந்தரலாம். "
". வாழ்த்துக்கள் . பார்த்துட்டு அதுக்கு அப்புறம் நாம செலபரேட் பண்ணலாம்."

என்று சிரித்தபடி வாழ்த்தியவனை குகன் உற்சாகம் மிக அனைத்து விடுத்தவிட்டு ஆடை மாற்றிக் கொள்ளஉள்ளே சென்றான்.சற்றைக்கு எல்லாம் திருத்தப்பட்ட ஆடையுடன் வந்தான். ஆழியனும் குகனும் அந்த கால்பந்து விளையாட்டு சங்க மேனேஜர் முன் இருந்தனர்.

கயல் விழி அவனுடன் வந்து கொண்டிருந்தாள். அவன் கண்களோ அவர்களை யாரும் கவனிக்கிறார்களோ என்று அவதானித்தபடி இருந்தது. பொருட்கள் இருந்த அந்த தள்ளுவண்டியை தள்ளியபடி வந்தவன்.
தனது இரையை மரத்தின் மேல் பதுக்கும் சிறுத்தை போல அவளை புசிக்க அவன் இடம் தேடிக் கொண்டு இருக்க இவளோ அதை அறியாமல் வழியை நினைவு கொள்ள பொருட்டு சுற்றிலும் பார்த்து வந்து கொண்டிருந்தாள்.
வாகனத் தரிப்பிடம் வந்து விட்டிருந்தது.அது நின்ற இடமோ வாகனங்கள் இருந்தாலும் ஆட்கள் இன்றி உட்புறம் சற்று ஒதுக்கமாக நின்றிருந்தது.இன்னும் சற்று நேரத்தில் வீட்டுக்கு போய் விடலாம் எனும் ஆவலில்

"ரொம்ப நன்றி சார் நல்லவேளை கடவுளா பார்த்து உங்கள இங்க அனுப்பி வைச்சிருக்கார்."
என்றபோது அவன் சிரித்தபடி தனது வாகனத்தை நெருங்கி கையில் இருந்த சாவி மூலம் கதவை திறந்து பைகளை உள்ளே வைத்தபடி
"என்னம்மா இப்படி சொல்லிட்ட நானும் உன்ன மாதிரி ஊருவிட்டு ஊரு வந்தவன் தான. நாம வேலைக்கு வந்தவங்க வந்த இடத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரனையா இருக்கனும்ல"
என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் போது அவன் கண் மேய்ந்த விதமும் அதுவரை இருந்த மரியாதை ஆவியாகி விட்டிருந்ததிலும். கயல்விழியின் உள்ளுணர்வு விழித்து கொண்டது. அவனிடம் ஒர் எச்சரிக்கை வர சற்று தள்ளி நின்றாள். கைகள் தானாக விலகிடாத புடவையை மீண்டும் சரிசெய்ய கண்கள் சுற்றிலும் ஆட்கள் யாரும் இருக்கின்றனரோ என பார்வையை செலுத்த இல்லை என்று வந்த பதில் வந்தது. மனம் கலங்க நின்றாள்.

'இவன் பார்வை பேச்சு வழக்கு எதுவும் சரியில்லையே. இவன நம்பி வந்தது தப்பா போயிரும் போலயே இப்ப என்ன செய்ய?"
என்று யோசித்தவளுக்கு கையில் இருந்த போன் நினைவு வந்தது அதையும் சற்று முன் சாமான்களை எடுக்கும் போது.
" போன என் கைல கொடுத்துட்டு நீ சாமான நல்லா பார்த்து எடுங்க நான் வெளிய வந்து உங்களுக்கு தரேன்" என்றதும் அவனிடம் கொடுத்தது கண்முன் வர ஒருவிதமாக
"சார் நான் உங்க கூட வரல என் போன தாங்க என்னோட ஹவுஸ் ஓனருக்கு போன் பண்ணி வரச் சொல்லி போய்க்கறேன். உங்களுக்கு ஏன் சிரமம்."
இந்த வார்த்தைகளில் இருந்து கயல்விழி சுதாரித்து கொண்டுவிட்டாள் என்று புரிந்து கொண்டவன்.
"என்னம்மா கண்ணு இப்படி சொல்லிட்ட நாம வேலை செய்யற வீட்டுக்கு பக்கத்து வீடு நானே கொண்டு விடறேன்னு சொல்லறேன். சரின்னு சொல்லிட்டு இப்ப என்ன ஆச்சு உனக்கு?" என்றவன் கரங்கள் அவளை நோக்கி நீள ஒரு எட்டு பின்னால் நகர்ந்தவள்.
"இருக்கட்டும் சார் உங்களுக்கு ஏன் சிரமம் ?"
"என்னம்மா சிரமம் இதுல ?"
"இல்ல சார் நீங்க போன கொடுத்துட்டு சாமான கீழ இறக்கிவைச்சுட்டு கிளம்புங்க. நான் முதலாளியம்மா கூட போய்க்கறேன் ."

"இன்னும் அவங்க வரலையே?"

என்றவன் இன்னும் கூட நைச்சியமாக முயன்றான். சற்று முன்பு பார்த்த முகம் வேறு இது வேறு என்று தெளிவாகப் புரிய இவனை விலக்கிவிட வேண்டும் என்று உந்துதலில் இவ்வளவு நேரம் பூசியிருந்த தன்மை குறைய சற்று வெம்மையேறியவளாக
"வரும்போது வரட்டும் சார் நீங்க போன கொடுத்துட்டு சாமான எடுத்து கீழ வைச்சிட்டு கிளம்புங்க"
என்ற கத்தரித்த வார்த்தைகளில்
"ஏய் என்னடி ரொம்ப பண்ற ?"
என்று அவளை நோக்கி கரம் நீட்ட அதுவரை மட்டும் தான் அவன் அவன் வசம் இருந்தது. அடுத்த நொடி நீட்டிய கையை பிடித்து முறித்து பின்புறம் திருகியிருந்தாள். அவளிடம் இருந்து இதை எதிர்பாராதவன் இவளை வளைப்பது எளிது என்றெண்ணியிருந்தவனுக்கு அவள் சிக்கவில்லை. தான் தான் அவளிடம் சிக்கியிருக்கிறோம் என்று புரிய
"ஏய் விடு விடுடி . "
என்று மறு கையின் உதவியுடன் அவளை திருப்பி பிடிக்கவும் தன்னை விடுவிக்கவும் முயல இப்போது இரண்டு கைகளையும் ஒருசேர பின்புறம் திருப்பி வளைத்துப் பிடித்தாள்.
"இந்த கைதான நீண்டுச்சி…"
என்றவாறு அதனை கார் கதவின் இடுக்கில் வைத்து ஒரு அழுத்து அழுத்தியதில் மணிக்கட்டு முறிந்துவிட அவனுக்கு மயக்கம் வரும் போல்
இருந்தது.
வலியில் கண்ணீர் நிறைய கையை பிடித்தவாறு குத்த வைத்து உக்கார்ந்து விட்டவன் முன் குனிந்தவள்
"என்ன கிராமத்துகாரி ஒன்னும் தெரியாது ஈஸியா வளைச்சிறலாம்ன்னு பார்த்தியோ?
வகுந்துடுவேன் வகுந்து?
கொலையும் செய்வாள் பத்தினி கேள்விபட்டுறுக்கியா அந்த வகைடா நானு."

என்றதில் அதிர்ந்து போய் பார்த்தவனுக்கு கண்ணீர் நின்று கைவலி மரத்து போய் இருக்க தன் உயிர் மேல் பயம் வந்து விட்டது. சுற்றியும் தனக்கு உதவிக்கு ஆட்கள் யாரேனும் உள்ளனரா என்று அவன் விழிகள் துழாவ

"என்ன பயந்து வருதா? கொஞ்சம் முன்ன வேற சுகம் தேடின இப்ப என்ன ? கை வைச்சு பார்ரா…"
என்றவள் அவன் முன் தானும் குத்த வைத்து உக்கார்ந்தவள்
"உன்ன மாதிரி தானடா நானும் என் குடும்பத்துக்குகாக இப்படி நாடு விட்டு நாடு வந்து பத்துரூவா காசுக்கு நாயா படுறேன். முடிஞ்சா உதவு இல்ல மூடிட்டு போ அதவுட்டுட்டு இங்கயும் வந்து …"
என்றவள் முகம் மனம் இரண்டும் அருவருக்க
"தூ " என்று அவன் எதிரில் துப்பியதிலேயே தன் சாக்கடைத்தனம் புரிய தலையை குனிந்து கொண்டான். அவன் முன் அவள் கரம் நீள நிமர்ந்தவனிடம்
"ம் " என்று கரம் காட்ட அவனோ மறுபடி முதலில் இருந்து தொடங்கிற்றோ இப்போது எந்த கையோ …. என பயத்தில் திருதிருவென விழிக்க . அவளோ விழியால் அவனது காற்சட்டை பையை காட்ட உடனே அசைக்க முடியாத நிலையில் கூட அவசரமாய் அதில் இருந்த போனை எடுத்து நீட்டவும் அதை வாங்கிக் கொண்டவள் தனது பொருட்களை எடுத்து கீழே வைத்து கொண்டு இருந்தாள். மனம் பழைய நினைவுகளில் மழையில் வெளிச்சம் காற்று புகாது மூடிவைத்து பராமரிக்கப்படாத மர அறையென ஒரு வித புழுங்கி வாடையுடன் இருந்தது. தனது தாழை விலக்கி திறந்துவிட்டு இருந்தது அதற்குள்
"கயல் ஆண்ட்டி கயல் ஆண்ட்டி…"
என்றபடி வந்து கொண்டிருந்த பாகீரதியின் குரலில் சுயம் கொண்டவள்.
"இங்க . இங்க இருக்கேன் பாப்பா"
என்று கை காட்ட .
"என்ன ஆச்சு கயல் ஆண்டி. ரொம்ப நேரமாச்சு போன் வரல ரீச் ஆகல உங்களயும் காணும்ன்னு தேடிட்டு வந்தேன்."
என்றவள் கீழே இரு மணிகட்டும் முறிந்து இருந்தவனை பார்த்துவிட்டு
"இவர் யார் ? "
"தெரியாது ரதிம்மா எனக்கு இங்க வர்ரது இரண்டாவது தடவை தான அதுதான் கொஞ்சம் தடுமாறிட்டேன் அப்ப இவர்தான் உதவி செஞ்சாரு
உள்ள சாமான வைக்கயில கதவு இடுக்குல கை சிக்கிட்டு "
"ஓ எமர்ஜென்ஸி கால் பண்ணிறலாம். "
என்றவள் அவசர உதவிக்கு அழைத்து அவனை ஏற்ற அவன் தேள் கொட்டிய திருடனாக இருந்தான் . உண்மையை கூறினால் அது அவனுக்கு அல்லவா கெடுதி.

கயல்விழிக்கு வாகனத்தில் ஏறியது இறங்கியது
இரவு உணவு வேலை இருந்தது அதை செய்து கொண்டுதான் இருந்தாள். ஆயினும் மனம் ஒர் ஓரமாக பழையனவற்றில் தான் உழன்றது. ஊறுகாயை கைகள் கிளறிவிட எழும்பிய வாசனை அது நிறம் மாறியிருந்தாலும் தன்னியல்பாய் தான் யார் என்பதை வாசனையில்
ருசியில் காட்டும் அதுபோல் இன்று அவளும் அவளுக்கு காட்டப்பட்டிருந்தாள்.

 
அத்தியாயம் 6

பாகீரதி தன் வகுப்பில் அமர்ந்து இருந்தாள். ஆசிரியர் நடத்திய பாடத்தில் அவள் கவனம் பதியவில்லை. அதை தொடர்ந்து அவர் அளித்த குறிப்புகளை அவள் எடுத்துக் கொள்ளவும் இல்லை. அவள் வேறு யோசனையில் இருந்தாள். நேற்று பார்த்த கயல்விழி அவள் மூளையை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தாள்.
வாகனத்தில் அவர்கள் திரும்பி வரும்போது அவளது நிமிர்வில் கவரப்பட்டுப் போன பாகீரதி
"சூப்பர் கயல் ஆண்ட்டி எதிர்பார்க்கவே இல்லை. உங்களக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது?"
"இது தைரியம் இல்ல ரதிம்மா வாழ்கையோட அனுபவத்தில அடிமனசுல படிஞ்சு கிடக்கிற கோபம் வெறுப்பு."
என்றதில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த பாகீரதி புரியாமல் விழித்தாள். அதில் மெல்லியதாக சிரித்தவள்
"முள்ளு காட்டுல நடந்து வந்தவளுக்கு ஒத்த முள்ளு குத்த வந்தா எடுத்துப் போட்டு நடக்கறது பெரிய விஷயமா?"
எனவும் அவளுக்கு எதுவும் விளங்கிக் கொள்ள இயலாததில்
"என்ன சொல்றீங்க எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க" என்றதும்
"ஒன்னும் இல்லம்மா இதெல்லாம் பெரிய விஷயமா மேல கைய வைக்க வந்தா எந்த பொண்ணும் இதத் தான் செய்வா."
என்ற கயல்விழி சில நொடிகள் மௌனத்தின் பின்
"ரதிம்மா இத வீட்ல சொல்ல வேண்டாம் சாவித்ரியம்மா வருத்தப்படுவாங்க"
என்று கேட்டுக் கொண்டதும் சரி என்பதாய் தலையசைத்து விட்டாள். இருந்தாலும் அவளுக்கு ஏதோ ஒன்று உறுத்தியது. ஏன் இவள் இதை மறைக்க விரும்புகிறாள் என்று தீரஆலோசிக்க அப்போது தோன்றவில்லை. ஆனால் தற்செயலாக அன்று பொன்நிலா ஊருக்கு செல்லும் கேட்டது நினைவுக்கு வந்தது.

"நிலா உன் மாமியாருக்கு வேற ஆளே கிடைக்கலையா இவளப் போய் அனுப்பி வைச்சிருக்கா?"
"ஏம்மா என்ன ஆச்சு?"
என்றபடி வந்து கட்டிலில் இருந்த புடவையை மடித்தபடி கேட்டாள்.
"என்ன ஆகனும் ? இவ விறகு கட்டையால அடி அடின்னு அடிச்சு புருஷன கொண்னுட்டான்னு என் தம்பி மருமக சொல்றா "
"ச்ச ச்ச அப்படி எல்லாம் இல்லமா. அவன் குடிச்சிட்டு வண்டி ஒட்டிட்டு போய் செத்துருக்கான்.அத்தை நல்ல விசாரிச்சிட்டு அனுப்பி வைச்சிருக்காங்க உங்க தம்பி மருமகளுக்கு புறணி பேசறதே முழு நேர வேலை இப்ப இத எதுக்கு உங்ககிட்ட சொல்லி பயமுறுத்தறா, "
என்று அடுத்த புடவையை மடிக்க
"சும்மா அவளை குறை சொல்லாத நிலா தூரதேசத்தல இருக்கோமே தெரியாத ஆளுகள வேலைக்கு வைச்சுட்டு திண்டாடக் கூடாதேன்னு சொன்னா."
என்று சாவித்திரி தனது தம்பி மருமகள் சார்பில் வாதாட தயாரானார்.
"அப்படி எல்லாம் இல்லை மா அவன் ஒரு சைக்கோ அவள டெய்லியும் சந்தேகப்பட்டு குடிச்சிட்டு அடியும் மிதியும் தானாம். அன்னிக்கு எல்லைமீறவும் தாங்காம திரும்ப ஒருநாள் இவ விறகு கம்பால வெளுத்துவுட்டதுல போய் குடிச்சிட்டு வர்ர வழில ஆச்சிடென்ட் ஆகி செத்துட்டான். இத்தனைக்கும் இந்த பொண்ணு அவன காதலிச்சி கல்யாணம் பண்ணிகிட்டாளாம்."
என்றவாறு அத்தனையும் எடுத்து அலமாரியில் அடுக்கியவாறு கூற சாவித்திரியும் தனது மூட்டுவலிக்கான தைலத்தை காலில் தேய்த்துவிட்டு வாறு
"ஆமா நிலா ப்ளஸ்டூ கடைசிபரிட்சை அன்னிக்கு பள்ளிகூடத்து வாசல்லர்ந்து பஸ்ஸேறி ஓடிப்போய் கல்யாணம் பண்ணி…. ப்ச் பாவம் இப்ப இப்படி சீரழியனும்ன்னு எழுதி இருக்கு."
என்றவள் காலை நீவிய பொன்நிலா
"விடும்மா அது அந்த வயசுல கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாது சொன்னாலும் புரியாது கோவம் வேகமும் தான் இருக்கும். ஆனா நீங்க இத பத்தி அவ முன்ன பேசாதீங்க அவ மனசு வருத்தப்படும் அதுமட்டும் இல்லாமல் இது அவளோட பர்சனல் நமக்கு தேவையில்லை புரியுதா ? நம்மள பொறுத்தவரை நமக்கு அவ நேர்மையா இருக்காளா வேலைய ஒழுங்கா செய்யறாளா அவ்வளவு தான். அதவுட்டுட்டு கண்டதையும் பேசி யோசிச்சி இவளையும் அனுப்பிறாதீங்க நான் போய்ட்டு வர்ர வரைக்கும் துணைக்கு வேற ஆள் கிடையாது புரியுதா."
என்று எழுந்து கொண்டாள்.
"எப்பவும் நீ என் வாயைத் தான மூடச் சொல்லுவ உன் மாமியார் எது செஞ்சாலும் சரி உனக்கு."
என்றதில் பொன்நிலா பிரச்சனை திசை மாறுவதை உணர்ந்தவளாக
"உன் கூட பேசிட்டு இருந்தா நாளைக்கு நான் ஊருக் கிளம்பின மாதிரிதான் இன்னும் பேக் பண்ண வேண்டியது இருக்கு நான் போறேன் நீங்க மாத்திரைய போட்டு படுங்க."
என்று விட்டு கதவை சாற்றிவிட்டு தனது அறைக்கு போனாள். பொன்நிலா கேட்ட பையை எடுத்து வந்த பாகீரதி பாட்டி சாவித்திரியும் பொன்நிலாவும் பேசிக் கொண்டதை கேட்க நேரிட்டது. அன்று அதை எளிதில் ஒதுக்கிவிட இன்று காலையில் அது நினைவுக்கு வந்து. அது உண்மையாக இருக்குமோ என்று தீடிரென்று தோன்றி வைத்ததில் கைக்குள் வியர்த்து போனது.
வெகுநேரமாக அவளைக் கவனித்த ஆசிரியை எலிசபெத்
"பாகீரதி ஆர் யூ ஆல்ரைட்"
என்றதில் கலைந்து
"எஸ் மேம்" மேசையில் இருந்த பொருட்கள் சிதற எழுந்து நின்றாள். அதிலேயே அவள் கவனம் அங்கில்லை என்பது புரிந்துவிட
"டேக் டௌன் த நோட்ஸ்"
என்றவர் மீண்டும் கூறத் துவங்கினார். பாகீரதியும் தனது பேனாவை தேடி எடுத்து குறிப்பேட்டில் எழுதத் துவங்கினாள். அந்த பாடவேளை முடிந்தற்கான மணி ஒலித்தது. அவளது வகுப்பினர் வெளியேற அவர்களைத் தொடர்ந்து பாகீரதியும் தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.அது இறுதி பாடவேளை என்பதால் வாயிலை நோக்கி நடந்தவளுடன்
"ரதி… ரதி … வெயிட் வெயிட்."
என்று ஓடி வந்து சேர்ந்து கொண்டாள் அவளது தோழி செல்சி. அவள் கத்தியதில் அவளுக்காக நின்று பிறகு அவளுடன் சேர்ந்து நடக்க.

"ஹே ஒன் மினிட் நாளைக்கு என்னோட பர்த்டே "

" அதான் ஏற்கனவே இன்வைட் பண்ணிட்டியே வர்ரேன் சொல்லிட்டேனே."
"எஸ் பட் பார்ட்டிக்கு கொஞ்சம் இன்டியன் ஃப்ரெண்ட்ஸும் வராங்க சோ…"
" சோ…"
"உங்க வீட்டு மெயட் கொஞ்சம் சவுத் இண்டியன் ஸ்வீட்ஸ் அன்ட் டிஷ் செஞ்சி தர வர சொல்ல முடியுமா நல்லா செய்வாங்கன்னு சொல்லி இருக்கல்ல."
"ம் கிராணிட்டயும் அவங்க கிட்டயும் கேட்டு சொல்றேன். "
"ஓகே கால் மீ " என்றவள் கைகாட்டிவிட்டு சென்றுவிட்டாள்.

மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த ஆர்கிட் மலர்க் கொத்தை வாங்கிக் கொண்டவன் தனது வாகனத்தினுள் அதை வைத்துவிட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன் தனது சட்டைப் பையில் இருந்து அந்த முகவரி அட்டையை எடுத்தப் பார்த்தான். கருப்பில் வெள்ளிநிற எழுத்துக்களை கொண்டு பொறிக்கப்பட்டு இருந்த நிலன் மேத்யுஹைடன் என்ற பெயரை வருடியவன் மனதில் எழும்பிய மகிழ்வும் துயரும் பார்த்த விழியில் பதிந்த ஊசியென ஒருசேர அவனை ஆட்கொண்டது. அது அந்த இடத்தில் நிலன் அமுதன்ஆழியன் என்று தன்னை இணைத்துப் பார்க்க மனம் தாளாமல் ஒரு துளி கண்ணீர் வழிந்தது. தான் இழந்ததை எண்ணி ஒருவித கோபமும் கூட எழுந்தது.

இழுத்து மூச்சை உள்ளே நிறுத்தி பின் நிதானமாக வெளியிட்டவன் தானும் சற்று தணிந்தவனாக வாகனத்தை செலுத்தினான்.

அந்த கட்டிடத்தின் அந்த தளம் முழுவதும் விளையாட்டு சம்மந்தப்பட்ட உடைகளாகவே காட்சிபடுத்தப்பட்டு அதுவும் வயது வாரியாக இருந்தன. அதிலும் ஒரு சுவர் முழுவதும் அவன் அத்தனை அழகாய் நேர்த்தியாய் இயல்பாய் கால்பந்தாட்ட உடையை அணிந்து கையில் கால்பந்துடன் நின்று அவனைக் கவர்ந்தான்.
ஆழியன் வந்தது மறந்து நின்று அவனையே பார்த்துக் கொண்டு இருந்தான். எவ்வளவு நேரம் நின்று இரசித்தானோ தெரியவில்லை அவனிடம் வந்த வரவேற்பாளினி
"வெல்கம் சர்."
என்று அவனை இழுத்து வந்து தன்னிடம் நிறுத்தினாள்.
"மே ஐ ஹெல்ப் யூ?"
" யா"
"நீங்க யாரைப் பார்க்க வேண்டும்?"
" மிஸ்டர் நிலன் "
என்றதும் தனது கணியை தட்டியவள்
"முன்பே அனுமதி வாங்கியிருக்கிறீர்களா?"
என்றதில் அந்த விசிட்டிங் கார்டை அவள் முன் வைக்க அது அவனது அனுமதியை கூற
"உங்கள் பெயர்?"
"அமுதன் ஆழியன்"
எனவும் அவன் முகத்தை ஏதோ தோன்ற சில நொடிகள் உற்றுப் பார்த்தாள். தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள மிக ஒப்புமை அவளை குழப்பியது போலும் மீண்டும் அவனைப் பார்க்க ஆழியனுக்கு சிரிப்பு வந்தது அவள் குழப்பத்தில் என்ன என்பதாய் புருவத்தை ஏற்றி இறக்க அவள் பதறி தனது கவனத்தை கணிணியில் வைத்தாள். அதன் விளைவு இப்போது அந்த அறையின் முன் அமர்ந்திருந்தான் ஆழியன். ஒருவித பதட்ட மன நிலையில் இருந்தான். தன்னை அவனுக்கு தெரியுமா பார்த்தவுடன் எப்படி நடந்து கொள்வான். தான் என்ன செய்வது என்ன பேசுவது என்று நேற்று முதல் ஒர் இலட்சம் தடவை ஒத்திகை பார்த்து கொண்டு இருக்கிறான் இருந்தாலும் அவனுடைய பதற்றம் குறைவேனா என்கிறது.
"நோ ஸ்டே காம் டோன்ட் கெட் நர்வெஸ்"
என்று அவனே அவனுக்கு சொல்லிக் கொண்டு இருந்தான்.
" ச்ச இவ்வளவு நர்வஸ் ஆகும்ன்னு நினைக்கல"
என்று புலம்பிக் கொள்ளும் போதே அவனிடம் வந்த அந்த வரவேற்பாளினி
"நெக்ஸ்ட் யூவர் டெர்ன் சர்"
என்றதில் ஒருவித பதட்டம் சந்தோஷம் பரவ காத்திருக்க துவங்கினான்.


வெள்ளொளி
ஊடாக விரவும்
நிறமாலையில்
கட்புலனாகும்
வண்ணம் நீ
கட்புலனாகா
வண்ணம் நான்
எண்ண அலைநீளம்
உன் மின்காந்த உணர்ப்பிகளை
சேர்ந்தென்னை உண்மையை
உணர்த்தாதோ

 
அத்தியாயம் 7

பிறந்ததில் இருந்து அழைத்து இருந்தால் இதுவரை எத்தனை முறை நிலன் என்று மகன் பெயரை உச்சரித்து இருப்பானோ அத்தனை முறை அழைத்து விட அவன் பேராவல் கொண்டான். அதனை மனம் செயல்படுத்திவிட்டிருந்தது. விளைவு எங்கும் எதிலும் நிலன். என்ன நடந்தது ஏது பேசினோம் என்பது தொடர்பான எல்லாம் பின்னுக்கு சென்றுவிட அவன் நிலன் மட்டும் எங்கும் வியாபித்து நின்றான்.

உணவு மேசையில் ராகவன் குகன் ஆழியன் எல்லோரும் அமர்ந்து இருக்க. உள்ளும் புறமுமாய் சீதா அலைந்து கொண்டு இருந்தாள். ராகவன் அவன் உணவில் கவனமாய் இருக்க தனது தட்டத்தில் சாம்பார் குறையவும்
"சீதா சாம்பார் "
என்றபடி அடுத்த விள்ளலை வாயில் வைத்தான்.
"அங்க தான இருக்கு எடுத்து ஊத்திக்கங்க இதுக்குன்னு நான் வரனுமா எனக்கு என்ன பத்து கை பத்துகாலா இருக்கு"
என்று விட்டு அடுத்த தோசையை போட்டுவிட்டு திரும்பியவளிடம்.
"அத நீயே எடுத்து கொடேன் சீதா"
என அவள் ஊற்றுவாளோ என்று நப்பாசையுடன் பார்க்க அவளது உத்தேசம் அதுவாக இல்லை என்பது தெளிவாக புரிந்துவிட.
"டேய் அந்த சாம்பார நகர்த்து டா "
என்று ஆழியனை கேட்க அவன் கைகள் உணவை வாயிக்குள் அனுப்பிக் கொண்டு இருந்ததே தவிர அவனது கவனம் அதில் இல்லை.

"ஆழியா ?"
என்று அழைத்தவனுக்கு எந்த ஒரு பதிலும் இல்லை.என்ன வைக்கப்பட்டு இருக்கிறது என்ன உண்கிறோம் என்பதில் அவன் கவனம் செலுத்தவில்லை. "ச்ச இந்த சாம்பாருக்கு இந்த அக்கபோரு ." என முனுமுனுத்தாலும் தன் கையே தனக்கு உதவி என்று தானே சாம்பாரை எடுத்து ஊற்றிக் கொள்ளும் முடிவுக்கு வந்தவன் கையை சாம்பார் பாத்திரத்தை நோக்கி உயர்த்த அதற்குள் மீண்டுமாக வந்த சீதா
"இங்க பக்கத்தில் இருக்குற சாம்பார எடுத்து தட்டுல விட்டுக்க முடியல அதுக்கு ஒரு ஆள்."
என்று முறைப்பும் முனுமுனுப்புமாக ராகவனுக்கு சாம்பாரை ஊற்றிவிட்டு
"இத முதல்லயே செஞ்சிருக்கலாம்."
என்ற மென்குரல்
"என்ன சொன்னீங்க?"
என்ற சீதாவின் வினா வகையில்
வாயில் திணித்த தோசையுடன்
"ஒன்றும் இல்லை" என்பதனை தலை அசைப்பில்
கூற அதன் பிறகு
"டேய் குகா இன்னும் ஒன்னு வைக்க வா"
"அச்சோ ஏன் மா நான் கொஞ்ச நாள் உயிரோட இருக்கனும்."
"வேண்டான்னா போடா."."
என்றவள் ஆழியன் புறம் திரும்பி
"அண்ணா இன்னும் ஒரு தோசை வைக்க வா?"
"ம்"
என்ற ஒப்புதலில் வைக்கப் போக அவள் கரத்தை பற்றிய குகன்
"மாம் வெயிட்" என்றவன்
"அங்கிள்"
"ம்"
"இரண்டு இட்லி வைக்கட்டா "
"ம்"
"சப்பாத்தி"
"ம்"
"இரண்டு கரண்டி "
"ம் "
"இரண்டு சேர் டேபிள் "
"ம்"
"பார்த்துக்கோங்க இப்படி தன்நினைவு இல்லாத ஒரு மனுசனால மட்டும் தான் உங்ககிட்ட இன்னும் வேனும்ன்னு கேட்க முடியும்."
எனவும் ரகுராமன் சிரித்து விட அதில் இருவரையும் முறைத்தவள்
"நான் செஞ்சி போட்டதுல தானடா இவ்வளவு வளர்ந்து இருக்க. இதுல வாய் வேற"
"மாம் வளர்ந்து இருக்கேன் சொல்லுங்க ஒகே ஆனா உங்க தோசைலன்னு சொல்லாதீங்க."
"ஏன்டா."
"அப்புறம் நான் பழைய வரலாறு எல்லாம் புரட்ட வேண்டியிருக்கும். அது"
"அது"
"உண்மையச் சொல்லும்"
"என்ன உண்மை"
"அப்பா சமைச்சது பாட்டி என்ன வளர்த்தது கடந்த இரண்டு வருடங்களாகத்தான் நீங்க சமைக்கறீங்க அதுலயும் இந்த ஆறுமாசமாத்தான் தோசைய வட்டமா கிழியாம கருகாம வார்க்கறீங்க."
"அடிக் கழுதை ஆடிக்கு ஒருநாள் அமாவசைக்கு ஒரு நாள் உங்கப்பா செஞ்சி தந்தத டெய்லி செஞ்ச மாதிரி சொல்ற . உங்க பாட்டி இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வந்து ஒரு வாரம் சமைச்சது எல்லாம் எப்படி கோர்த்து சொல்லது பாரேன். "
"நீங்க என் அம்மாவா இருக்கலாம் அதுக்காக என்னால உண்மைய மறைச்சு பேச முடியாது."
"ஒஹோ அப்படிங்களா அப்ப இந்த வாரம் நீங்க ஊர் சுத்த நான் உதவி செய்ய முடியாது."
"மாம் அப்டரால் ஒரு தோசை அதுக்கு போய் ஏன் அதுல கை வைக்கறீங்க. இங்க பாருங்க மகாஜனங்களே எங்கம்மா சீதா தான் தோசை வார்க்கறதுல பெஸ்ட் ஒகே வேணும்னா இன்ஸ்டால கூட இத போட்டோ எடுத்து ஸ்டேட்டஸா வைக்கறேன் "
"ம் அது "
மகனின் இந்த தடாலடி மாற்றத்தில் ரகுராமன் அதிர்ந்துவிட்டான் என்றால் மெல்ல சுயத்துக்குள் வந்திருந்த ஆழியனோ. சிரித்தவாறு எழுந்து கொண்டான்.
"அண்ணா இன்னும் ஒன்னு"
"இல்ல போதும் மா"
"அதான் தெளிஞ்சிட்டாருல்ல அப்புறம் எப்படி "
"டேய்"
"ஓகே ஓகே யு கண்டினியூ"
என்று விட்டு கை கழுவ ஓடிவிட்டான்.
"அப்படி எல்லாம் இல்லம்மா நல்லாத் தான் இருந்தது. என்னால இதுக்கு மேல சாப்பிட முடியல."
என்று விட்டு சென்றான்.

இவன் மனம் தீபாவளியை பல நாளாய் என்று வரும் எப்போது புதியவை அணியலாம். திகட்ட திகட்ட தின்னலாம். செவிநோக விழியும் கையும் சலிக்க சலிக்க பட்டாசு வெடிக்கலாம் உல்லாசமும் உற்சாகமுமான மன நிலையில் துள்ளிக் கொண்டு இருக்க

தனது தந்தை இறந்திருக்க கொண்டாடவும் இயலாது மறுக்கவும் இயலாது தடுக்கவும் மனம் அற்ற தாய் அனைத்தையும் செய்தாலும் தான் கொண்டாட இயலாது தந்தை மரணமும் முகமும் மனதை அறுக்க வலியோடு அந்த நாளை தாண்டும் வலி கொண்ட பெண்ணாய் தவித்துக் கொண்டிருந்தது நிலனின் மனம்.

முதலில் அவன் தந்தை என்பதை அறிந்தும் ஆழியன் மீது தனக்கு இருந்த காழ்ப்புணர்ச்சியில் பார்க்க அனுமதி தந்துவிட்டிருந்தான். அவனுக்கு ஆழியனை பற்றிய விவரங்கள் முழுதாக அப்போது தெரியவில்லை விரும்பவும் இல்லை. பிரிவு உங்களுக்குள் இருந்தாலும் நான் என்ன செய்தேன் என்னை ஏன் நீ மறுதலித்துவிட்டுப் போனாய் என மனதை புண்படுத்திக் கொண்டிருந்த கேள்விகளை வலிய கொணர்ந்து அவனை தாக்க எண்ணியிருந்தவனுக்கு அது வாய்ப்புண்ணுக்கு என அதக்கிய அதிமதுர வேரின் சுவையாய் அந்த தித்திப்பு தன்னைப் படுத்தும் என்று அறியவில்லை.

அவனுடைய வார்த்தையாடல்கள் ஆழியன் அவனைக் கண்டு சிக்கிக் கொண்டது ஒருபுறம் என்றால். இப்போது அந்த முகம் காட்டிய தவிப்பு மகிழ்ச்சி அந்த கண்கள் தேக்கிய கண்ணீரின் பளபளப்பு புதிதாக உணர்ந்த தந்தை எனும் உணர்வு அது நிலன்அவனை தணித்து தத்தளிப்புக்கு உள்ளாக்கியதில். முதலில் தன்னை நிலைப்படுத்த வேண்டும் அப்போது தான் மனம் அறிவிடம் ஆற்றுப்பட்டு செயல்படும் என்பது புரிய. சட்டென்று எழுந்து கொண்டான்.
அதில் ஆழியன் அவன் கண்கண்ட வானவில் மழை நிற்க மறைவது போல் தோன்ற அழியா வண்ணம் கொள்ள வேண்டிய குழந்தையாய் அவனைப் பார்க்க.அதில் ஏதோ உணர்வு கொண்ட தனயன் மறு மழையில் என சமாதானம் சொல்லும் இயற்கை அன்னையாய்
"ஸாரி ரொம்ப முக்கியமான வேலை போயே ஆகனும் நாளைக்கு ஈவினிங் மீட் பண்ணலாம்." என்றதில் மகிழ்வுடனே தலையசைத்தான். அதில் ஏற்கனவே மேத்யூ மூலம் தந்தையின் அதீத பாசத்தை புரிந்திருந்தவனுக்கு இப்போது இந்த தந்தையை இறுக்கி அணைத்துக் கொள்ள தோன்ற அதைச் செய்துவிட நீண்ட இரு கரங்களில் ஒன்றை அடக்கி தனது காற்சட்டையில் நுழைத்துவிட்டு மறுகரத்தை நீட்ட நீண்ட அக்கரம் ஆழியன் அவனுக்கு சொர்க்கதின் திறவுகோல் என உருமாறியது.
அவதி அவதியாய் அவ்விடம் விட்டு நீங்கியவன் வந்து அமர்ந்திருப்பது என்னவோ இந்த பப்பில் தான் .தன் முன் இருந்த மதுவை கண்டவன் எனும் தன் மனக்கிலேசத்தினை நீக்கும் மார்க்கம் அறியாமல் அந்த குவளையை இருகரங்களின் ஊடாக உருட்டியவன் விளிம்பை வருடியபடி சிறு மிடறாய் பருகியபடி இருந்தான் . அதில் தான் காதலிக்கும் ஆனால் அவனுக்கு பெண் நண்பியுமாய் இருக்கும் இவாஞ்ச்சலின் ஆச்சர்யமும் அந்த அழகில் கவரப்பட்டும் அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் கவர்ச்சிமயக்கத்தில். நிலை மறந்து போக எதுவும் நிகழக் கூடும் என்று அறிந்தால் தானோ என்னவோ அதற்கு முன்பே எழுத்து கொண்டான்.
" கேன் ஐ ட்ராப் யூ" என்றபடி இணைந்து கொள்ள முயன்ற இவாஞ்சலினிடம்.
"நோ தேங்யூ ஐ கேன் மேனேஜ்" என்றவன் ஒரு வாடகை வாகனத்தில் வீடு வந்து சேர்ந்தான்.

உள்ளே நுழையவும் முன்னறையில் அமர்ந்து தனது மகளுடன் அளவளாவிக் கொண்டிருந்த மகரா. நிலனை கண்டதும் பேசுவதற்காக எழ
அலைபேசியை எடுத்தபடி "குட் நைட் மாம் ." என்று
அவளுடான உரையாடலை தவிர்க்கும் விதமாக
வேகமான எட்டுக்களுடன் தனது அறையை நோக்கி விரைந்து சென்று விட்டான். எதுவோ சரியில்லை மகனிடம் என மகர விழியாளின் உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தது.
"மாம் " என்ற மகளின் அழைப்பில் அவளிடம் திரும்ப அவளது உறங்க அழைக்கும் விழிகளில் மேற்க் கொண்டு ஆராயாமல் விட்டுவிட்டு மகளைத் தூங்க இட்டுச் சென்றவள் மனம் நேரமாகி விட்டதுதான் காரணம் என்று கற்பிதம் செய்தது நிலனின் நடவடிக்கைக்கு.
ஆனால் கண்களின் செவ்வண்ணம் லேசான தள்ளாட்டம் அதனை மறைக்கும் முயன்று நடக்கும் நேரான நடை .அந்த நெடி அவனைக் காண்பித்து கொடுத்தது மேத்யூவின் கண்களுக்கு.


என் வானவில்லின்
செந்நிறம்
அவன் தன் நிறம்
கட்புலனாகா
என் அகச்சிவப்பின்
அலைநீளங்கள்
அவன் புலனுக்குள்
புரிதலாகயில்
செந்தீ வண்ணம்
அந்திவண்ணமாக
அன்பின் வண்ணமாகும்.

 
அத்தியாயம் 8

தன்னை அறிதல் எதிலும் முன்னிலைப்படுத்தப்படுகிறது. நான் யார் ? எங்கிருந்து வந்தேன் ? எங்கே போவேன்? இறப்பின் பின் என்ன ஆவேன்? இது ஆன்மீகம் மற்றும் அறிவியல் சார்ந்து உள்முகமாக திருப்பப்பட அல்லது திருப்பப்பட்ட மனம் தனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்விகள் அதற்கான பதில் நோக்கியே அதன் பாதைகள்.எனக்கு என்ன தெரியும் தெரியாது எது எனக்கு தேவை நான் யாராக வேண்டும் எதை நோக்கி என் பயணம் இவ்வாறான வினாக்கள் மற்றும் அதற்கு அவர்கள் முயன்று அறியும் விடைகள் அவை ஒரு மனித வாழ்க்கை அல்லது ஒரு சமூகத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது.

தூக்கம் கலைந்து எழுந்த நிலன் கவன் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தான் . நேற்றைய பொழுதின் தாக்கங்கள் இன்னும் தூர்வாரிய பின்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மீந்து மிதக்கும் ஆகாயத் தாமரைகள் மீண்டுமாய் நினைவின் குளத்தை மூடிட முயல அதில் தலைவலி வரவா என்றது.
போர்வையை விலக்கி விட்டு முயன்று எழுந்து அமர்ந்தவன் கண்கள் முதலில் அலைபேசியைத் தான் நாடியது அதை தேடி தலையனை அடியில் இருந்து எடுத்தவன் நேரத்தை பார்க்க அது விடிந்து நேரம் ஆகிவிட்டது என்பதையும் இன்று பள்ளி உண்டு என்பதையும் சேர்த்து நினைவுருத்த சற்று விரைந்தே ஆயத்தமாக வேண்டியதன் அவசியம் உணர்ந்து குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அந்த நேரம் அவனது அறைக் கதவை தட்டிவிட்டு திறந்தாள் மகர விழி . மனதைத் திடப்படுத்திக் கொண்டு தான் அவள் அங்கு வந்திருந்தாள். எப்படியானாலும் சரி இன்று அவனிடம் உண்மையை கூறவிடுவது என்று ஆனால் அவன் படுக்கையில் இல்லை என்றதும் நேரத்தை பார்க்க அவனுக்கு மட்டும் அல்ல தனக்கும் அலுவலகத்திற்க்கு நேரம் ஆகிவிட்டது என்றதில் இப்போது அவசரத்தில் அவனுடன் நிதானமாக தன் உள்ளத்தின் உண்மையை பகிர முடியாது என்பதையும் மனம் அறிவித்தது. அதற்கு இது நேரமும் அல்ல எனவே மாலை அவன் அலுவலகத்திற்கு வருவான் அங்கு அவனுடன் வெளியே எங்காவது சென்று பேசிக்கொள்ளலாம். இந்த வீடு இங்கு அவள் நினைவுகள் அறுபடாமல் வரும் என அவளுக்கு தோன்றவில்லை. என தன் போக்கில் சிந்தித்து முடிவு செய்து கொண்டாள். கையில் இருந்த காபி கோப்பையை மேசை மீது வைத்தவள்
"நிலா. நிலா"
"ம் சொல்லுங்க மாம்"
என்றபடி கதவைத் திறந்து கொண்டு வந்தான். தலையிருந்த நீர் வடிய ஒழுங்காக துவட்டாமல் வந்தவனை கண்டதும் பேச விளைந்தது முழுவதும் வடிய
"என்ன நிலா தலை நல்லா துவட்ட வேண்டாமா இப்படியே கிளம்பி போனா வரும் போது தும்மிக்கிட்டே தான் வருவ நீ "
என மகனை உலர்த்தி (driyer) எடுத்து தலையை காய வைக்க முயல அவளிடம் இருந்து அதனை வாங்கிக் கொண்டவன்
"நான் பண்ணிக்கறேன் நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க"
என்று தானே உலர்த்த துவங்க தான் பேச வந்த விஷயம் நினைவுக்கு வர எப்படி சொல்ல என தத்தளித்தாள் .
"என்ன மா ஏதாவது முக்கியமான விஷயமா? நான் வேண்ணும்னா லீவு போட வா ஸ்கூலுக்கு லீவு போடவா வெளிய எங்கயாவது போலாமா"
என்று தாயின் தவிப்பு புரிந்து கொண்டு கேட்க
"ம் போலாம்." என்றவள்
" ஒகே அப்ப கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இப்ப கிளம்பி வரேன்."
என்றதும் என்ன நினைத்தாளோ
"பரவாயில்லப்பா இந்த விஷயம் முக்கியம் தான் ஆனா இன்னிக்கு லீவு போட்டுட்டு வெளிய போய் பேச முடியாது. நைட் இல்ல நீ ப்ரீ ஆனதும் பேசிக்கலாம். நேத்து உங்கிட்ட அது பத்தி பேசத்தான் வெயிட் பண்ணேன் பட் நீ "
என்னும் போதே உள்ளே வந்த மேத்யூ
"குட் மார்னிங் நிலன்"
என்றவன் விழிகள் அவனை ஆராயந்தது. அதில் உருவாகிய ஒரு விதமான அசௌகர்யத்தை புறம் ஒதுக்கி புன்னகையுடன்
"மார்னிங் டாட். மாம் இதுவும் எனக்கு ஒகே தான் உங்க இஷ்டம் . அப்ப நான் ரெடியாகிட்டு வரேன். நீங்க ப்ரேக் பாஸ்ட் எடுத்து வைங்க"
என்றவன் தனது கப்போர்டை திறந்து ஆடைகளை
எடுக்க
"ஓ ஒகே " என்று திரும்பியவள்
" நீங்க வரலையா உங்களுக்கும் நேரம் ஆச்சே."
"ஆமா ஹனி எனக்கு ஆபிஸ் விஷயமா நிலன் கிட்ட பேசிட்டு வரேன் நீ போய் கியூட்டியப் பாரு அவ எழுந்துட்டா அதான் உன்னை தேடி வந்தேன். "
எனும்போதே தேன்நிலா
"மா எங்க இருக்கீங்க?"
என்று தேடும் குரல் கேட்க்க "இதோ வந்துட்டேன் கியூட்டி . "
என்று பதில் கொடுத்தவாறே கீழிறங்கி போனாள். இப்போது தகப்பனும் மகனும் மட்டும் என்றாக தனது ஆடையை அணிந்து கொள்ளும் விதமாக மேத்யூவிற்கு புறம் காட்டி நின்றவனுக்கு தனது நேற்றைய காரியத்தின் காரணத்தை எப்படி கூறுவது என்ற சங்கடம் எழ என்று அவனோ நீ எப்போது வேண்டுமானாலும் திரும்பு எப்படியும் என்னைப் பார்த்துதான் ஆக வேண்டும் என்பது போல் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
வேறு வழியற்று திரும்பி மேத்யூவின் முகம் பார்க்க அதில் தெரிந்த பாசத்தில் அவன் மனம் நனைய

"டாட் "
என்றான் குரல் கம்ம பிறப்பினால் தந்தையாகிய ஆழியனையும் ஏற்க்கும் தன் மனதையும் அவனிடம் பேசத் துடிக்கும் உதடும் ஏந்திய கனம் முதல் தந்தை என்று மனதால் வளர்ப்பால் தந்தை மட்டும் அல்ல தாயும் என்றானவன்.கண்ணனின் நந்தகோபன் போலானவன். நிலன் அவனின் அந்த தழுதழுப்பில் எழுந்துவந்து அவன் தோள் சேர்த்துக் கொண்டவன்
"நோ டியர். ஐயம் ஆல்வேஸ் வித் யூ "
மகனின் மனம் நிலை அவன் கூறியா இவன் புரிந்து கொள்ள வேண்டும். ஆதுரமான வார்த்தைகளில் மேத்யூவின் முகம் பார்க்க
"எப்போதும்"
என்ற உறுதியில் 'நான் உங்களுக்கு எதிரா எதாவது செய்தால் உங்களை விட்டுட்டு போனால்.' என்ற மனதின் கேள்விகளை உள்ளடக்கி
"எப்பவும் "
என
"ம் எந்த நிலையிலும் நியாயம் உன் பக்கம் இருந்தால்."
எனவும் அவனை அனைத்துக் கொண்டவன் ஆழியனை பார்த்து பற்றி கூறிவிட முயல
"உனக்கா எப்ப சொல்லனும் இல்ல சமாளிக்க முடியலன்னு தோணுதோ அப்ப சொல்லு இப்ப சொல்லனுமேன்னு எந்த ஒரு விஷயத்தையும் சொல்லாத செய்யாத. அதைவிட முக்கியம் டிரிங்ஸ் அது எப்பவும் எதுக்கும் சொல்யூஷன் கிடையாது இப்ப அது நல்லாருக்கும் அப்புறம் அடிக்ட் ஆகிடுவ புரியும்ன்னு நினைக்கிறேன்"

"ஸாரி டாட் ஒரு சின்ன குழப்பம் "
" இருக்கத்தான் செய்யும் வரத்தான் செய்யும். நேத்திக்கு குடிச்சியே எதாவது மாறிச்சா இல்ல உன் பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சிதா."
என்றதும் தலையை குனிந்தவாறு
"நோ "எனவும்
"இத ஞாபகம் வைச்சிக்கோ அவ்வளவு தான். ஆனா நேத்திக்கு அளவு அதிகமாகி எதாவது ஆகி இருந்தா. எங்களுக்கு வேற நிலன் கிடையாது. "

"இனி பண்ண மாட்டேன்ப்பா அப்புறம் அந்த விஷயத்தையும் இன்னோரு நாள் உங்களுக்கு சொல்றேன்."
" இப்ப சாப்பிட போலாமா "
"ம் உங்க ஹனி வந்துருவாங்க"
"பொறாமை"
"ம் லைட்டா "
என்று சிரித்த முகத்துடன் இருவரும் கீழே இறங்கி
வர அப்பபோது நிலனின் அலைபேசி அழைக்க
யாரென்று பார்க்க இவாஞ்சலின் தான் அழைத்து இருந்தாள். அலைபேசியை காதில் வைக்க
மேத்யூ அவனுக்கு இடமளித்து நகர்ந்து சென்றிருந்தான்.

இவனின் ஹலோவில் அவளுக்குத்தான் குளிர்ந்தது.
"நத்திங் நிலன் நைட்டு தனியா போனல்ல ட்ரிங்ஸ் அதான் போன் பண்ணினேன்."
"நைட்தான் கேட்டியே "
"ம் ஆமா இருந்தாலும் மார்னிங் எழுந்த அப்புறம் இன்னோரு தடவை கேட்டுக்கலாம்னு. ஆர் யூ ஒகே. ஸ்கூலுக்கு வருவல்ல ."

"ம் வருவேன்"
என்றவன் அவள் அழைப்பை துண்டித்தவன்.
"இவ பேச்சு வார்த்தையே சரி இல்லை எப்ப ப்ரபோஸ் பண்ணி தொலைக்கப் போறாளோ. "
என முனுமுனுக்க
"அப்படி ப்ரபோஸ் பண்ணா. "
என மனம் கேட்க
"நோ தான் "என்றான்.
"ஆனா டேட்டிங் மட்டும் போவ"
நானாவா போய் அவள கூப்டேன் அவதான கேட்டா நான் அக்செப்ட் பண்ணினேன்."
"ரொம்ப நல்லவன் நீ ம்"
என்ற மனதை
"ஸ்ஸு சும்மா இரு என்ஜாய் பண்ணவிடாம"
என அதட்டி விட்டு உணவு மேஜைக்கு திரும்பினான். அடுத்தடுத்த பொழுதுகள் விரைந்தன.

கயல்விழி இமைமூடி அந்த ஸ்ரீனிவாசன் சன்னதியில் வேண்டிக் கொண்டு இருந்தாள். மாதங்கி கூறிய செய்தியில் அவள் மனம் அதிர்ந்து கலங்கி இருந்தது. இனியாவது நல்வாழ்வு கிட்ட வேண்டும் என்று அவள் மனதை கல்லாக்கி இங்கு வந்திருக்க அங்கே நடப்பதோ வேறாக இருந்தது. மனமே ஆறவில்லை அவளுக்கு ஆதலினாலேயே ஏதேனும் ஒரு கோவிலுக்கு போக வேண்டும் என்று மனம் முரண்ட
"அம்மா மனசே சரியில்லம்மா இங்க பக்கத்திலருக்க கோயிலுக்கு போயிட்டு வர வா."
சாவித்திரியிடம் கேட்டாள். அதில் ஒரு பெண்ணின் தாயாக மற்றும் சகமனுசியாக அவள் நிலை உணர்ந்த பாகீரதியும் சாவித்ரியும்
"நீங்க இங்க வந்த அப்புறம் அந்த வெங்கடாஜலபதி கோயிலுக்கு போனது இல்லைல்ல நாளைக்கு கூட்டிட்டு போறேன் இதுதான் இங்க முதன் முதலாக கட்டப்பட்ட இந்துக் கோயில்."
எனவும்
"ஆமா கயல் திருப்பதி கோயில் மாதிரியே இருக்கும். நானும் போய் நாளாச்சு."

என்றவர் கூறியபடி அழைத்து வந்து இருந்தார்.
அதற்க்கு முன்பே கயல்விழியின் மனப் பதற்றத்தை மாதங்கி வழி அவனே போக்கி இருந்தான்.பாகீரதிக்கு கயல்விழி அவளது கடந்த நிகழ்கால வாழ்கையை தெரிந்து கொள்ள ஆவல் அதனாலேயே வந்தாள்.தரிசனம் செய்து முடித்ததும் மனம் கொள்ளா அமைதியுடன் அமர்ந்து கொண்டனர் மூவரும்.

எவ் வண்ணம்
யான் கொண்டபோதும்
செவ்வண்ணம்
அதன் தனல் வண்ணம்
அவன் சினத்தில்
அவ்வண்ணமே
ஆழ்ந்த அன்பிற்கும்
ஆகிநின்றது ஏனோ
உரிமை உள்ள இடத்தில்
உறைப்பும் உளதால்

தானோ
 
அத்தியாயம் 9

"என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருந்த இரண்டு நாளா கயல்விழி?"
"அது மாதங்கி முந்தா நேத்து போனப் போட்டு அம்மா இனிமே நான் இங்க இருக்க மாட்டேன் படிக்க மாட்டேன்னு என்னையும் உங்ககூட கூட்டிட்டு போன்னு ஒரே அழுகை."
" அவ ஹாஸ்டல்ல தான இருக்கா தைரியமான பொண்ணுன்னு வேற சொல்லுவீய. யாரும் தப்பா ஏதும் நடந்துகிட்டாங்களோ. "
"இல்லம்மா. ஆனா அவ பார்த்த சம்பவம் அப்படி அவ மனச பாதிச்சிருக்கு."
"ஏன் என்ன நடந்துச்சி ? "
"என்னத்த சொல்ல எல்லாம் இந்த நாசமா போற காதலால வந்த வினை."
சாவித்ரியும் பாகீரதியும் என்ன ஆவலாக கயல்விழி அவள் முகம் பார்க்க. அவள் தொடர்ந்தாள். அவதங்குத இடத்தில அவ கூட தங்கி இருந்த புள்ளை ஒன்னு நாண்டுட்டு நின்னுருச்சாம்."

"வாட் நாண்ட்டு நின்னுருச்சு அப்படின்னா என்ன?"
என்று அந்த வார்த்தையின் பொருள் விளங்காமல் பாகீரதி கேட்க
"அதான் பாப்பா தூக்குல தொங்கறதுன்னு வாகளே அதுக்கு இங்கிலீஷில் என்ன வரும் தெரியலை. "
"ஒகே தூக்குல தொங்கறது தட் மீன்ஸ் சூசைட் "
அவள் புரிந்தவளாக தலையை ஆட்டவும்
"ஆமா ஆமா. எம்மவ அந்த புள்ள இன்னும் இரண்டு புள்ளைக எல்லாரும் ஒரே ரூம்ல தான் இருக்குவ . அதுல இந்த புள்ள எவனையோ ஆசைப்பட்டுறுக்கு அவன் கூட பேசவும் கொள்ளவுமா இருந்துருக்கு.அன்னிக்கு ஒரு நா அவன் எப்படியோ சுவரேறி குதிச்சி இவளுக இருக்க ரூமுக்கே வந்துருக்கான். அவன இனி இதமாதிரி வந்தா வார்டன்ட்ட சொல்லிருவேன்னு கண்டிச்சி வெளிய போகச் சொல்லிட்டு அவன் பேச்சு பழக்கவழக்கம் சகவாசம் ஒன்னும்சரியில்ல அவன்பழக்கத்த நிப்பாட்டு உனக்கு நல்லது இல்லன்னு எச்சரிச்சு இருப்பா போல அதுக்கு பொறவு மாதங்கி கூட பேச்சு வைச்சிகறது இல்ல அந்த புள்ளை அவளும் என்னனும் தொலைன்னு விட்டுட்டா. இப்ப கடைசி பரீட்சைக்கு லீவு விட்டா கல்ல அப்ப வீட்டுக்கு போவாம இவன் கூட எங்குட்டோ போய் இரண்டு மூனு நாளு தங்கிட்டு பொறவு வீட்டுக்கு போயிருக்கு. அதையும் அந்த ரூம்ல இருக்க பிள்ளைய சொல்லித்தான் அவளுக்கு தெரியும். நாலைஞ்சி நாளா அந்த புள்ளைக்கும் பையனுக்கும் ஏதோ பிரச்சினை போல அன்னிக்கு அழுத முகமும் கலைஞ்ச தலையும் இருந்துருக்கு. சாயங்காலம் ஏழு மணிக்கு எல்லாரும் படிக்க ஸ்டடி ஹாலுக்கு போயிருக்காக இது மேலுக்கு முடியலன்னு ஒரு மாத்திரையப் போட்டுட்டு படுத்துருக்கு மாதங்கி படிச்சிட்டு இருந்தவ இவ வகுப்புகாரி ஒருத்தி ரெக்கார்ட் நோட் கேட்டாளாம் அது ரூம்ல இருக்கவும் எடுத்துட்டு வந்துருவோம் வந்து பாத்தா கதவ பூட்டி இருக்கவும் தட்டி பார்த்துருக்கு திறக்கலங்கவும் சன்னல் பக்கமா உள்ள பார்த்து இருக்கா உள்ள அவ பேன்ல சேலைய மாட்டி தொங்கிட்டு உடம்பு துடிக்க கிடக்கத பார்த்து பயந்தடிச்சி இவ கத்துனதுல அம்புட்டு பேரும் வந்து கதவ உடைச்சி அவள இறக்கி ஆஸ்பத்திரி சேத்து ஒரே பரிதவிப்பா போச்சுன்னா. போலீஸ் கலேஜ் ஆளுக எல்லாரும் கூடப் படிக்கதுக அந்த புள்ள தாய் தகப்பன் அம்புட்டு பேரும் இவள போட்டு படுத்துன பாட்டுல ஏற்கனவே அந்த பொண்ண பார்த்து பயந்து போய் இருந்தவ இவனுவ இம்சைல பீதீயாகி எனக்கு போனப் போட்டு இனி நான் இங்க இருக்க மாட்டேன் வந்து என்னய கூட்டிட்டு போன்னு ஒரே அழுகை அவள அமத்தி விஷயத்த கேட்டு தைரியஞ் சொல்லிட்டு வைச்சேன். மனசே ஒரு நிலையில இல்லை வேற எதாவது நல்லது போல பொல்லாப்புன்னா பொசுக்குன்னு போய் என்னன்னு கேட்க்க மாதிரியா என் நிலை இருக்கு . அதையும் இதையும் நினைச்சு எனக்கு இராத்திரி பூரா தூக்கமே இல்ல கொட்டு கொட்டுன்னு கோட்டானுக்கு துணைக்கு இருந்தேன். இன்னிக்கு தான் அந்த புள்ளயே கண்ண முழிச்சி யாருக்கும் எதுவும் தெரியாது அதுவும் இவளுக்கு சுத்தமா தெரியாது சொன்னப்பறம் தான் நிம்மதி இப்ப வேற ரூம் மாத்தி இருக்காகளாம். கொஞ்சம்
தெளிச்சலா பேசக்கண்டுதான் மனசு ஆறிச்சி."

"சரி சரி விடு ரொம்ப யோசிச்சி கவலைப்படாத அதான் இப்ப சரியாகிட்டால்ல."
"ஆமாம்மா என்ன அந்த புள்ளை நினைச்சா தான் ஆத்திரம் வருது. பெத்த ஆயி அப்பன ஒரு நொடி நினைச்சருந்தா இப்படி பண்ணியிருக்குமா.? எவனோ ஒரு இரைப்பாளி…. அவுனுக்காக உசர விட்டுறுறனும் முடிவு பண்ணிணவ அவன் முன்ன வாழ்ந்து காட்டனும் உறுதி யிருந்தா அவ பொம்பள அத விட்டுட்டு அது என்ன எதுக்கு எடுத்தாலும் சாவறது."
அதற்குள் கையில் இருந்த பிரசாதம் காலியாகி இருக்க மற்ற இரு பெண்களிடமும் "கொண்டாங்க நான் போட்டுட்டு வாரேன்" அந்த கிண்ணங்களையும் தன்னுடையதையும் சேர்த்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வந்தாள்.
"ஆன்ட்டி"
"சொல்லும்மா"
"எனக்கு உங்க லைப்ப பத்தி சொல்லுங்களேன்"
"அதுல என்னத்தா விசேசமா இருக்கு ஒரு மண்ணும் இல்லை."
"பரவாயில்லை ஆண்டி சொல்லுங்க ."
"நேரமாயிரும்ல"
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது இன்னிக்கு எவ்வளவு நீங்க சொல்லி முடிச்ச அப்புறம் தான் காரை ஸ்டார்ட் பண்றேன்."
"என்ன பாப்பா நீ ம்மா நீங்களாச்சும் சொல்லுங்க"
"அவ மட்டும் இல்ல நானும் தான் தெரிஞ்சுக்கறேன் சொல்லு ."
"என்னம்மா நீங்களும் சின்னபுள்ளை கூடச் சேர்ந்து கிட்டு"
" இல்ல கயல்விழி நீ சொல்லறது உண்மை ஆனா அதுவே நாளைப் பின்ன வேற யாரவது திரிச்சி எதையாவது சொன்னா கஷ்டம் தான "
என்றதில் தன்னைப் பற்றி தவறான தகவல் வந்திருப்பதை ஊகம் செய்து கொண்டவளுக்கு சிரிப்பும் வந்தது. என் சொந்த வாழ்கையை பற்றி என்ன தேவைக்கு உங்களுக்கு கூற வேண்டும் என்று தோன்றிற்று ஆனால் அதன் பிறகு எண்ணம் அதை தடை செய்தது. தனது சொந்த வாழ்கையைப் பற்றி இவர்களுக்கு ஏன் இத்தனை ஆவல் என் போன்ற சாதாரண ஒருத்தியின் சொந்த வாழ்கையே இத்தனை தூரம் கேள்விக்கும் அலசல்களுக்கும் உள்ளாகும் என்றால் மற்ற பெண்களுக்கு இதில் சுதந்திரம் சுண்ணாம்பு என்று வேறு. என விரக்தியில் இதழ் வளைய சற்று தொலைவில் வெறுமையை பார்த்தவள் அங்கேயே பார்வையை பதித்தவள் அதையே உள்ள வாங்கி தன்னில் எதிரொளித்தவள்

" படிக்க வயசுல படிக்காம ஆர்வ கோளாருல பின்னாடி வந்த ஒரு பய அழகா இருக்கவும் திரும்பி பார்த்துப்புட்டேன் பார்வை பழக்கமாகி பழக்கம் கிறக்கமாகி கிறக்க கிறுக்குல ஒன்னையும் ஆராயாம அவன்தான் அம்புட்டும்ன்னு பன்னென்டாப்பு கடைசி பரிட்சைமுடிய ஓடியாச்சு. கூட இருக்கவங்க எத்தன நாளைக்கு காப்பாத்த ஏலும் இங்க வந்தா குடும்பத்துல சேர்க்கல அவுகள சொல்லவும் பாதையில்ல பார்த்து பார்த்து வளர்த்தவகளுக்கு துரோகம் பண்ணா வலிக்கத்தான செய்யும். பொறவு மெல்ல மெல்ல தான் தெரியுது அவன் சீரு. "
"சீரு மீன்ஸ் ?"
"அவன் இலட்சணம் "
"அவன் கேரக்டர் பாகீ " என்று சாவித்ரி விளக்கிகூறவும்.
"ஓ " என்று மீண்டும் ஒரு வேலைக்கும் போகாம ஊதாரித்தனம் பண்ணிட்டு திரியுறபய ன்னு என்ன செய்ய ஆசைப்பட்டு கட்டிக்கிட்டாச்சு என்ன ஏதுன்னு விளங்கறதுக்குள்ள கையில ஒரு புள்ள வேற ஆகி போச்சி ஓட வா முடியும் . சொல்லி பெறக்கி சீராக்கி வாழ்ந்துறலாம்ன்னு பார்த்தேன்
எங்க முத கொஞ்ச நாளுக்கு வேலைக்கு போய்ட்டு மொத்த சம்பளத்தையும் என் கைல கொடுத்தவன் உடம்பு நோவுதுன்னு எப்பவாச்சும்னு இருந்த குடிய அடிக்கடின்னு தொடங்கி பொறவு தினமும் அதே தான் அதால வேலைக்கும் போகாம இருக்குறதெல்லாம் வித்து குடிச்சுபுட்டு கேட்டா என்னையப் போட்டு அடிக்கறது சந்தேகப்பட்டு அசிங்க அசிங்கமா பேசறதுன்னு அந்தப்பாடு பொறவு என்ன செய்ய வாழனும் மேன்னு களத்து வேலை காட்டு வேலை
வீட்டு வேலை எல்லாம் செய்ய ஆரம்பிச்சேன். எவ்வளவு சொகுசா வளர்ந்த புள்ள தெரியுமாம்மா நானு."
"உங்க அப்பா அம்மா நீங்க கஷ்டப்படறத பார்த்து உங்கள அவங்களோட வரச்சொல்லி கூப்பிடலையா."
"முத மனசு இல்லை. அப்புறம் வழியில்லை."
என்ன சொல்கிறாள் எனப் பாகீரதிக்கு புரியவில்லை அவள் விழித்தவள்
"மனசு இல்லை ஒகே அது என்ன வழியில்ல"
"ஆமா பாப்பா முத இவியளுக்கு ஏத்துக்க மனசு வரல தள்ளி வைச்சிட்டாக பிறகு நான் படுத கஷ்டத்தோட கூறுல சேர்த்துகிடலாம்ன்னா என் அண்ணன் தம்பிய விடல ஏதாவது கொடுத்து உதவலாம்னா அவுகளே அவனுகள அண்டித்தான் இருக்காக இதுல என்னய எங்குட்டு பார்க்க அவுக வுகளுக்குன்னு குடும்பம் புள்ள பொண்டாட்டி இருக்குல்ல மேலும் எனக்கும் வீம்பு இவனுவ முன்ன நல்லா வாழ்ந்துறனும்னு."
"உன் மாமியார் வீட்டில எப்படி?"
என்ற சாவித்ரிக்கு
"என் மாமியார் வீட்டுல கொஞ்சம் பரவலால்ல ஆனாலும் ரொம்ப போக்கு வரத்து கிடையாது. அது முதல்லயே சொல்லிறிச்சு எம்மா நீயும் எனக்கு மக மாதரி தான் இவனுக்கு ஏற்கெனவே ஊதாரி கூடவே குடிப்பழக்கம் வேற இருக்கு அதான் இன்னொரு பொம்பள புள்ள வாழ்கைய கெடுக்க வேண்டாம்ன்னு தான் இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கமாட்டேன்னு சொன்னேன் ஆனா நீயே வந்து குழில விழுந்துந்திட்டியேடி பாவின்னு
சொல்லி வருத்தப்பட்டுச்சு அன்னிக்கு ஏதோ என்னைய புடிக்காமத்தான் அப்படி பேசுதுன்னு நினைச்சேன் ஆனா அது உண்மையத்தான் சொல்லிருக்கு .நமக்கு வேற எழுதியிருக்கே அனுபவிக்கனும்ல."
"அப்ப மாதங்கியோட அப்பா எப்படி இறந்தார்?"
என்ற பாகீரதியின் புத்தகத்தின் முதல் சில பகுதிகளிலேயே இறுதி தெரிந்து கொள்ளும் ஆவல் கொண்ட கேள்வியில் கயல்விழியும் தனது நெடுங்கதையை நெடுவினாவின் பதிலாக சுருக்கி வரைந்தாள்.
"ஏற்கனவே குடிச்சா அவன் மனுசனா இருக்க மாட்டான். அன்னிக்கு குடிச்சிட்டு வந்தவன் வீட்டுக்கு வந்துருந்த என் அண்ணங் கூட சேர்த்து வைச்சி பேச அவன் பதிலுக்கு கூட பேச முடியாம வெட்கி போயிட்டான். எனக்கு வந்த ஆத்திரத்தில விறகு கட்டைய எடுத்து வெளுத்துட்டேன் அந்த வேகத்துல இன்னும் குடிச்சிட்டு வந்து என் கூட சண்டை போடனும்னு பைக் எடுத்துட்டு போனவன் போய் லாரில விழுந்து செத்துட்டான். அதுக்கும் நான் தான் காரணம்ன்னு ஊருக்குள்ள பேசுதுக."
என்றவள் கலங்கி சிவந்த கண்களையும் முகத்தையும் துடைத்தபடி
"பேசிட்டு போவுதுக ஆனா எம் மாமியார் இனியாச்சும் நிம்மதி கிடைக்கனும்மா உனக்குன்னு சொல்லிச்சு அது எவ்வளவு சத்தியம் தெரியுமா . இன்னிக்கு ஒரு வாய் கஞ்சி குடிச்சாலும் நிம்மதியா குடிக்கேன். இல்ல கடனு கடனு கட்ட மண்ணா போனவன் என்னை சேர்த்து அரிச்சு இருப்பான் ." என்று அதை அனுபவித்து கூறினாள்.

அதன் பிறகு சாவித்ரியும் சரி பாகீரதியும் சரி ஏதும் கேட்கவில்லை. மெல்ல எழுந்து கொண்டவர்கள் வாகனத்தை நோக்கி நடக்கத் துவங்கினர். சுருங்க சொல்லிவிட்ட அவள் கடந்த வாழ்கை இவர்கள் மீது குவிக்கப்பட்ட சீரொளி (லேசர்) ஆக பாய்ந்திருந்தது. அதில் மனங்கள் அவரவர் போக்கில் சிந்தித்தபடி இருந்தது. ஆயினும் பயணம் முடிவடைவது இல்லையே

இறப்பு கூட வரமாகுமா ஆகும் போலும் கல்லானாலும் கணவன் என்னும் போதில் கல்லான அவன் தான் கல்லறையாகி போனதில் ஓர் நிம்மதி கொள்கிறார் எனில் இது கருணைக் கொலை வகையை சாருமோ அல்லது காருண்ய வாழ்கையை சகிக்குமோ. வாழ்கை எல்லாருக்கும் ஒரே விதமான திடலை தந்தாலும் தடத்தை மாற்றி விடுகிறது. ஓட்டம் ஒன்று எனினும் தடகளம் வேறு தொடரோட்டம் வேறு பந்தய ஓட்டம் வேறல்லவா.

செம்மஞ்சள்
உணர்வுகளின்
இரு சிகரங்களையும்
உயர்த்தும் அதை
தவிர்த்தவர்களையும்
தனித்துக்காட்டுமாம்
இவ் வண்ணம்
போலவோ என்
மனம் மாமகிழ்வு
மீ நோவு இரண்டும்
தாண்டிய புத்தனை
தேடியலைகிறது.
பித்தனைக் கண்டு

யானும் ஞானமடைவேனோ
 
Status
Not open for further replies.
Top