priya pandees
Moderator
அத்தியாயம் 26
பள்ளியின் புதிய நிர்வாகம் ஏற்பு விழாவும், அந்த ஆண்டின் ஆண்டுவிழாவும் ஒருங்கே ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் வேலை மொத்தமும் மனோவின் தலைமையில் தான் முன்னேற்பாடாகியது. அவளுக்கு அதில் முந்தைய இருவருட அனுபவம் இருக்க, ஆசிரியர்களுக்கு சமமாக வேலையைப் பிரித்துக்கொடுத்து மிக எளிதாகவே ஏற்பாட்டை பார்த்தாள்.
இதற்கு முன் தன்னுடைய பள்ளி, தன் வேலை மட்டுமே தன் பொறுப்பு, இப்போது தனக்கான பள்ளி, இனி அவளுடைய அங்கிகாரம் அது, அங்குள்ள ஒவ்வொருவரின் பொறுப்பும் அவள்மீது இருக்கிறது, கிருஷ்ணா, கண்ணா மட்டுமின்றி அங்கிருக்கும் அத்தனை பிள்ளைகளின் வருங்காலமும் நன்முறையில் வர, உறுதியான அடிப்படை அவள் பள்ளி தந்தாக வேண்டும், அதன் முழுபொறுப்பும் அவளிடம் தான் இப்போது இருக்கிறது. இவை எல்லாம் அவளை யோசிக்க வைத்த வண்ணம் தான் இருந்தது. தன்னால் ஒரு தலைமுறையின் எதிர்காலம் கொண்டு செல்லபடுகிறது என்பதே அவளுக்குள் ஒரு உத்வேகத்தை தந்தது.
அதற்கேற்ப ஒரு திட்டத்தை கொண்டு வர மார்கண்டேயனோடு கலந்தாலோசித்தாள். அவனும் அவனது நிர்வாக மூளையும் சேர்ந்து அவளுக்கான திட்டத்தையும் அமைத்துக்கொடுத்தது. அதை விழாவன்று அறிவிக்கவும் திட்டமிட்டனர்.
விழாவிற்கு, அவர்களுக்கு துணை நின்ற அந்த பெண் நீதிபதி, அவர்கள் சுற்றுவட்டாரத்தின் எம்.எல்.எ, அம்மாவட்டத்தின் டி.ஜி.பி என மூவரையும் விருந்தினராக அழைத்திருந்தனர்.
அதுவரை குடும்பத்தில் கூட எவருக்கும் நேரடியாக விஷயத்தை இருவருமே பகிர்ந்திருக்கவில்லை. விழாவிற்கு அழைப்பாகவே அனைவருக்கும் கூறினர். மனோ வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான், அது அவர்கள் முகத்திலேயே தெரியும்படி தான் இருந்தது.
மார்கண்டேயன் வீட்டில், மகன் பள்ளி வாங்கியது சந்தோசம் தான், மகளுக்கும் அவள் கேட்பதை கொடுத்து புருஷனோடு வாழ வைத்துவிட்டால் நல்லதே என்று முனங்காமல் இருக்கமுடியவில்லை சாம்பவியால். லதா நெஞ்சிலேயே கைவைத்து நின்றுவிட்டாள்.
"அப்ப உன் பொண்டாட்டி தான் உனக்கு முக்கியம்னு காட்டிட்டல்ல? நா இங்க இப்படி கிடக்கேன் நீ புதுசா உன் பொண்டாட்டி பேர்ல சொத்து வாங்குவியோ?" என ஒப்பாரியை வைக்க,
"நீ மட்டும் இவ்வளவு வயித்தெரிச்சலோட அந்தபக்கம் வந்தனா செவுல திருப்பிருவேன்" என எகிறிவிட்டு தான் மார்க் அங்கிருந்து வந்திருந்தான்.
லதா சுரேந்தரிடமும் ஃபோனை போட்டு ஒரே அழுகை தான், "அவன் அவனோட பொண்டாட்டின்னு போய்ட்டான், ஆனா நீங்க என்னைய இப்படி வாழாவெட்டியா நிக்க வைச்சு வேடிக்கை பாக்றீங்க. பதினைஞ்சு வருஷமா கல்யாண வாழ்க்கைல நா என்னத்த கண்டுட்டேன். என் பேருல ஒரு பெட்டிகடையாவது வாங்க தோணுச்சா உங்களுக்கு? இதுல என்னைய வேலைக்கு அனுப்பி காசு பாக்க நினைக்கிறீங்களே வெக்கமா இல்லையா?" என ஆங்காரத்தில், பேசுவது என்ன என யோசியாமல் வார்த்தையை விட்டிருக்க, விவாகரத்து பத்திரமே அனுப்பிவிட்டான் சுரேந்தர்.
விவாகரத்து காரணமாக, 'மனைவியின் மனநிலை சரியாக இல்லை. இதனால் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் உயிர் ஆபத்து இருக்கிறது' என்றே கொடுத்துவிட்டிருக்க, அவளை திட்டாதோர் இல்லை.
வருவோர், போவோர், தேடி வந்தே சிலர் என அனைவரும் அவளுக்கு அறிவுரைகளை வாரிவழங்கினர், "புருஷனோட வாழபோகலையா நீ? உன் புருஷன் உன்ன சேர்த்துக்கலையா? ஏன் ஒரு வருஷமா தனியா இங்கேயே இருக்க? வயசுக்கு வந்த பிள்ளைய வச்சுட்டு உனக்கு என்ன அவ்வளவு இடும்பு? உன் வாய் கொழுப்புக்கு தான் இப்படி கிடக்குற நீ! உன் புருஷனுக்கு வேறெதுவும் பழக்கம் இருக்கோ? வேறெந்த பிள்ளையவும் கூட்டிக்கிச்சோ? நீ என்ன பண்ணின? எதுக்கு பிரிஞ்சே இருக்கீங்க? ரெண்டு பிள்ளைய வச்சுகிட்டு இப்படி அங்கையும் இங்கையுமா கடக்கவா கல்யாணம் பண்ண? புருஷன் என்ன வேணா பண்ணிருக்கட்டும் நீதான் பொம்பள பொறுத்து போகணும்" இது போல இன்னும் நிறைய நிறைய கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
"இந்தபேச்செல்லாம், மனோவும் அவ ஊர்ல கேட்டிருப்பாளோ? அதான் நாம எந்த பங்கஷனுக்கு கூப்பிட்டாலும் வராம இருந்துருப்பாளோ?" என சாம்பவி கேட்டபின்னரே, அன்று மனோ, 'புருஷன் பொண்டாட்டிய பிரிச்சி வைக்க பிடிக்கும்ல? இருந்து பாருங்க' என சொல்லி சென்றது அவள் நினைவிலும் வந்து நின்றது.
"என் புருஷன விவாகரத்து நோட்டீஸ் அவ தான்மா அனுப்ப சொல்லியிருப்பா" என அப்போதும் லதா தவறாகவே யோசிக்க, அவளை கவனிப்பார் இல்லை. சாம்பவி மட்டுமே அவ்வபோது அவளுக்காக பரிதாபபட கூடியவர். மணிகண்டன் சொல்லி சொல்லி அழுத்துப் போய்விட, அமைதியாகிவிட்டார்.
இங்கு லதாவை அப்படியே விட்டுதான் அங்கு பள்ளிவிழா கொண்டாடினர். சுரேந்தர் பிள்ளைகளோடு வந்து கலந்துகொண்டிருந்தான். மார்க் அவனுக்காக வருத்தப்படவே செய்தான்.
"நல்ல மனுஷன்டி, அக்காக்கு ஏன் புத்தி திருந்தவே மாட்டேங்குது? இப்ப பாரு டிவோர்ஸ் வர வந்து நிக்குது. அத்தான் டிவோர்ஸ் பண்ண மாட்டாரு அவள பயமுறுத்த தான் இதகூட அனுப்பிருக்காரு. ஆனாலும் அவளுக்கு புரியல பாரேன்" என எரிச்சல்பட,
"உங்க அக்காக்கும் அது தெரியுமா இருக்கலாம். சும்மா தான் அண்ணா அனுப்பிருக்காங்கன்னு அதனால பயமில்லையோ என்னவோ" இருவரும் அலுவலக அறை வாசலில் நின்றுதான் பேசியபடி இருந்தனர். விழா ஆரம்பிக்க இன்னும் நேரமிருக்க, அவன் முகத்தை பார்த்தே தனியாக தள்ளிக்கொண்டு வந்திருந்தாள்.
"அவள எப்படிதான் வழிக்கு கொண்டு வர்றது?"
"உங்க அக்காவோட வீக்னெஸ் என்ன?"
"என்ன?"
"நீங்க தான்"
"நானா?" என்றான் அதிர்ச்சியாக,
"ஆமா நீங்க தான். அவங்க ஃபோகஸ் மொத்தமும் நீங்க மட்டுந்தான் இருக்கீங்க. அதனாலயே அவங்க ஹஸ்பண்ட், பசங்க படுற கஷ்டங்கள் கூட கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது"
"என்னடி உளருற? என் அக்காக்கு என்மேல அவ்வளவு பாசமா?" என சந்தேகமாக கேட்க,
திரும்பி முறைத்தவள், "ஆசைதான். பாசமாம்ல. உங்க அக்காக்கு, தம்பி நம்மள மீறி போயிடுவானோ, நம்மள ஒதுக்கிட்டு அவன் மட்டுமா அவன் குடும்பம்னு நல்லா இருந்துடுவானோன்னு பயம். அவங்க கைக்குள்ளயே இருந்து அவங்க சொல்றதையே நீங்க கேட்டுட்டு இருந்தா ஹேப்பியா இருப்பாங்க. சோ அவங்க வீக்நெஸே நீங்க தான்"
"அதுக்கு?" என இடுப்பில் கை வைத்து முறைத்தான் மார்க்.
"கொஞ்ச நாள் உங்க அக்கா கைக்குள்ள அவங்க செல்லபிள்ளையா இருந்துட்டு வாங்களேன்" என்றதும்,
"அங்க செவனேன்னு நின்னவன கூட்டிட்டு வந்து சேட்டையாடி பண்ற?" என கொட்டிவிட்டான்.
சுற்றி பார்த்துவிட்டு, "இது ஸ்கூல் ஞாபகத்துல இருக்கட்டும்" என்றாள்.
"போ உன்ட்ட வந்து சொன்னேன்ல என் தப்பு தான் போடி" என சிடுசிடுத்தவாறு திரும்பி செல்ல எத்தணிக்க.
அவன் முழங்கையை பிடித்திழுத்து நிறுத்தினாள் மனோ, "ம்ச் என்னத்துக்கு மூஞ்சிய இப்டி வைக்கீங்க? உங்க அக்காவ சுரேந்தர் அண்ணா டைவர்ஸ் பண்ணாலாம் ஃபீல் பண்ண மாட்டாங்க. நீங்க மட்டும் டிவோர்ஸ் பண்ணி பாருங்க அடுத்த செகெண்ட் திருந்திடுவாங்க"
"அதான் அல்ரெடி நீ யாரோ நா யாரோன்னு திட்டிட்டு தான வர்றேன்"
"திட்றதுக்காக கூட பேசாதீங்கன்றேன். உங்க வீட்டு பக்கமே போகாதீங்க. ஃபோன் பண்ணா எடுக்காதீங்க. உங்க அம்மாக்கு ரூபா அனுப்பாதீங்க. உங்க அக்காக்கு எதுவும் பண்ண மாட்டேன்னு காண்பிங்க" என பேச, அவன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான்.
"இத ஒரு நாத்தனாரா நா சொல்றது பயங்கர வில்லத்தனமா தான் தெரியும். பட் நா சஜ்ஜஷன் தான் குடுத்தேன். ஆல்ரெடி ஒரு வருஷமா உங்க அக்கா இங்க தான் இருக்காங்க. எதாவது சேஞ்சஸ் இருக்கா? நா சொன்னத ஒரு ஒன் மந்த் ட்ரை பண்ணுங்க. உங்கம்மா விரட்டினா போதும் ஆட்டோமேட்டிக்கா சென்னை கிளம்பிடுவாங்க. என் புருஷன் மூஞ்சிய பாத்து பாவப்பட்டு தான் இந்த ஹெல்ப் பண்றேன், உங்க அக்காக்காக இல்ல ஓகே?" எனவும் கேட்க,
"அக்காகாக நீ பண்ணவே இல்லன்னு நல்லா தெரியுதுமா" என்றான் அவனும் கிண்டலாக,
அதன்பின் விழா ஆரம்பித்துவிட, இருவரின் கவனமும் அங்கு சென்றது. மூன்று விருந்தினர்களும் அவரவர் துறை பற்றியும், பள்ளி பற்றியும், குழந்தைகளுக்கான அறிவுரைகள் சிலவும் என பேசி முடிக்கவும், குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, விடுமுறை எடுக்காமல் அனைத்து நாளும் பள்ளி வந்தவர்களுக்கு, நடனம், பாட்டு, கட்டுரை, ஓவியம், பேச்சுபோட்டி, மாறுவேடபோட்டி, விளையாட்டு போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற்று வென்றவர்களுக்கான பரிசுகள் என மூன்று விருந்தினர்களும் கொடுத்து முடித்த பின்னரே, "முன்னாள் உரிமையாளர் ஓய்வு பெற்றதை முன்னிட்டு புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது" என்ற அறிவிப்புடன், சண்முகசுந்தரம் அவர்களுக்கு பிரியாவிடையாக கௌரவிப்பும் நடத்தப்பட்டது.
மனோவும், மார்க்கும் அவருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசும் வழங்கி, அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். சண்முகசுந்தரம், மிக மகிழ்ச்சியாக பள்ளியை மனோ கையில் ஒப்படைத்தார்.
இறுதியாக மனோ கையில் மைக் வந்தது, திரும்பி மார்கண்டேயனை பார்க்க, தலையை அசைத்து சிரித்தான்.
"நா மனோரஞ்சிதம். மிஸ்ஸஸ் மார்கண்டேயன். நம்ம ஸ்கூலோட அட்மினிஸ்ட்ரேட்டரா லாஸ்ட் டூ இயர்ஸ் வொர்க் பண்ணிட்ருக்கேன். சண்முகசுந்தரம் அங்கிள் என்னோட அப்பாவோட தி பெஸ்ட் ஃப்ரெண்ட்னு சொல்லலாம். பழ சமயங்கள்ல எங்க ஃபேமிலிக்கு சப்போர்ட்டா இருந்தவர். இன்னைக்கு என்மேல நம்பிக்கை வச்சு அவரோட ஸ்கூல என்கிட்ட குடுத்துருக்காரு. என்னைய லாஸ்ட் டூ இயர்ஸா இதுக்கு ட்ரைன் பண்ணிட்டும் இருந்தாரு. இங்க இருக்க பேரெண்ட்ஸ், டீச்சர்ஸ் நிறைய பேருக்கு இந்த சன்ரைஸ் ப்ரைமரி ஸ்கூல் பத்தி நல்லா தெரியும், நல்ல எண்ணமும் கூட, அத அப்படியே காப்பாத்துவேன்னு இந்த இடத்துல உறுதி தரேன். நம்ம ஸ்கூல் நேம் அதே தான், அதுல மாற்றம் இல்ல. ஸ்டாஃப்ஸ், ரூல்ஸ் எல்லாம் அப்படி அப்படியே தான் இருக்கும் அதுலயும் சேஞ்சஸ் இல்ல. மேனேஜ்மென்ட் கவர்ன்மெண்ட் எய்டட்டா அப்ரூவல் வாங்கியாச்சு சோ இனி அரசாங்கம் தர்ற எல்லா சலுகைகளும் அப்படியே நம்ம பிள்ளைங்களுக்கும் கிடைக்கும்" என்றதும் கரகோஷம் செய்து அதை ஏற்றனர்.
பின் ஒரு சந்தோஷ பெருமூச்சுடன், "நா பொறுப்பேத்திருக்கேன். அல்ரெடி என்னைய நிறைய பேருக்கு தெரியும்னாலும். என்னால முடியும்னு காட்ட எதாவது சொல்லணும்ல? அத சும்மா சொல்லாம செஞ்சுட்டு சொன்னா இன்னும் நல்லாருக்கும்னு தோணுச்சு. சோ இப்ப சொல்றேன். நம்ம ஸ்கூல்ல எல்லா இடத்துலயும் கேமரா அக்ஸஸ் இருக்கு. இனி அது எல்லா க்ளாஸஸ்லயும் இருக்கும். அது பேரெண்ட்ஸ் யூஸ்கும் இருக்கும். அதாவது, க்ளாஸ்ல என்ன நடக்குதுன்னு பேரெண்ட்ஸ் நீங்க இனி லைவா பாக்கலாம். ஒவ்வொரு க்ளாஸுக்கும் ஒவ்வொரு லிங்க் உண்டு. அந்த லிங்க் தனிதனி வகுப்புக்கு தனிதனி வாட்ஸாப்ப் க்ரூப் மூலம் ஷேர் பண்ணப்படும். அதோட அட்மின் அந்தந்த வகுப்போட ஆசிரியரா தான் இருப்பாங்க, க்ளாஸ் அவர்ஸ்ல நீங்க உங்க பசங்க என்ன பண்றாங்க, படிக்கிறாங்களா, சேட்டை பண்றாங்களா, ஸ்டாஃப்ஸ் பாடம் எடுக்குறாங்களா, நல்லா கவனிச்சுக்குறாங்களா, எல்லாம் உங்க இடத்துல இருந்தே பாக்கலாம். இதுல பிள்ளைங்க சேஃப்டியும் அடங்கியிருக்கு. அண்ட் பசங்க சேட்டை பண்ணா மிஸ் கண்டிப்பா கண்டிப்பாங்க அத நீங்க தடுக்க கூடாது, நீங்களே பாத்துக்கலாம் உங்க பசங்க என்ன சேட்டை பண்ணாங்க எதுக்காக மிஸ் வார்ன் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கலாம். இது ஒரு நல்ல எண்ணத்துல பிள்ளைங்களோட கவனிப்புக்காக சின்ன பிள்ளைங்க பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டது. எல்லாருமே சின்ன பிள்ளைங்க, ஸ்கூல்ல என்ன பண்றாங்களோ, பயப்படுறாங்களோன்னு நீங்க பயந்துட்டே இருப்பீங்க இல்லையா முக்கியமா அதுக்காகவே இந்த ஏற்பாடு. இன்னும் யோகா வகுப்புகள், கராத்தே வகுப்புகள் எல்லாம் நெக்ஸ்ட் இயர்ல இருந்து ஆரம்பிக்க இருக்கோம். குழந்தைகளுக்கு நல்லது எதலாம்னு பார்த்து ஒவ்வொன்னா கொண்டு வர இருக்கோம். இதெல்லாம் நாங்க தொடர்ந்து செய்ய உங்க ஒத்துழைப்பும் வேண்டும்னு கேட்டுக்குறேன். நன்றி" என்றவள் முடித்த கையோடும் மார்க்கை பார்க்க, இரு கட்டை விரலயும் தூக்கி தம்ப்ஸப் காண்பித்து சிரித்தான் அவன். படபடவென்று பேசிமுடித்து வந்தமர்ந்துவிட்டாள்.
அதன்பின் அந்த பள்ளிக்கு பின்னான அவளின் ஓட்டம் துவங்கியது. அவனுக்கான ஐடி துறையும், தேனீ பண்ணையும் அவனை உள்ளிழுத்துக்கொண்டது. இருவரும் இளைப்பாறும் நாளாக சனி, ஞாயிறு என்றானது. அந்த இருநாட்கள் அவர்கள் நால்வருக்குமானது, குடும்பத்திற்கானது. அதை முடிந்தவரை இருவருமே ஒருங்கினைத்தனர். எப்போதாவது அவனுக்கு தனியாக எங்கும் செல்ல வேண்டும் என தோன்றுகையில் மனோவிடம் சொல்லவிட்டே கிளம்பிச் சென்றுவிடுவான்.
"நீ இப்படி விடாத மனோ! அதென்ன அவுங்களுக்கு மட்டும் தனிமைல இனிமை காண தோணுமா, நமக்கெல்லாம் தோணாதா? நாமளும் அப்படி போனா என்ன செய்வாங்களாம்?" என மீனம்மா அவன் காதுபடவே சொல்லும்போது,
"உங்க வீட்டுகாரரயும் தூக்கிட்டு போயிடுவேன் ஜாக்கிரதை" என மிரட்டுவான்.
"நிஜமாவே தூக்கிட்டு தான் போகணும். நாலெட்டு வைக்கும் முன்ன இந்த முட்டி வலி தாங்கலன்னு பிடிச்சுட்டு உக்காந்துக்குவாரு" என பதிலுக்கு பதில் கூறிவிடுவார் மீனம்மா. அவர்கள் சண்டையை எப்போதும் போல வேடிக்கை மட்டுமே பார்த்து கடந்து விடுவாள் மனோ.
அடுத்ததாக உறுத்திக்கொண்டே இருந்த லதா பிரச்சனை, விழாவின் முன் தான் ஒரு வாய்தாவை முடித்திருந்தனர் அடுத்த வாய்தாவிற்கு நான்கு மாதங்கள் இருந்தது. அதில் முதல் மாதத்தில் தான் விழாவிற்கு அழைக்கச் சென்றுவிட்டு சண்டையும் போட்டுவிட்டு வந்திருந்தான்.
அடுத்து வந்த மூன்று மாதங்களும் மார்கண்டேயன் மனோ சொல்லியதை செயல்படுத்தினான், முற்றும் முழுதாக அவன் வீடு செல்வதை நிறுத்தினான். தேனீ பண்ணை சென்றாலும் அங்கு வீடு செல்லாமல், மீண்டும் நறுமணந்தி வருவதை வழக்கமாக்கினான். லதா ஃபோனை மட்டுமின்றி சாம்பவி, மணிகண்டன் என யார் அழைப்பையும் ஏற்கவில்லை, பணமும் அனுப்பவில்லை. மணிகண்டன் இப்போது எந்த வேலைக்கும் செல்லாததால், மகனை நம்பித்தான் இருந்தனர். மூன்று மாதங்களாக அவன் அனுப்பாமல் விட்டதில் அவன் முன்னர் அனுப்பிய தொகையிலிருந்து எடுத்து சமாளித்திருந்தனர். பணம் பிரச்சனை இல்லை என்றாலும், அவர்களின் ஒரே ஆதாரம் அவன் தானே அவனே ஒதுக்கி விட்டானோ என பயந்து தான் போனார்கள்.
மூன்று மாதங்கள் அவர்களை கதறவிட்டவன், அடுத்த வாய்தாவின் போது தான் அவர்கள் முன் நின்றான்.
"ஏன்டா ஃபோன கூட எடுக்கல?" என்ற சாம்பவிக்கு,
"உங்களுக்கு மட்டும் தான் நா பொறுப்பு. உன் மகளுக்குலாம் சேர்த்து பாக்க முடியாது. அவ அங்க இருக்குற வர வரவும் மாட்டேன், பணமும் அனுப்ப மாட்டேன். டிவோர்ஸ் வாங்கிட்டு இங்கேயே செட்டில் ஆகிட்டா வாழ்க்கை ஃபுல்லா நானா வச்சு பாக்க முடியும்?" என அவன் கேட்டதில் மூவரும் அதிர்ந்து பார்த்தனர்.
"நீயாடா இப்படி பேசுற? காசு உனக்கு புதுசில்ல, ஆனா உன் பொண்டாட்டி சகவாசம் உனக்கு புதுசு அவதான் இப்படிலாம் உன்ன பேச சொல்றாளா?" என அதட்டினார் சாம்பவி.
"ஆமா அவதான் சொன்னா, அவளுக்கும் மறுபடியும் அவ புருஷன் இப்ப அக்கா, அம்மான்னு ஏமாந்து நிப்பானோன்னு பயமா இருக்கும்ல? புருஷன் பிள்ளைன்னு இவளுக்கு அக்கறை இல்லாம இருக்கலாம் என் பொண்டாட்டிக்கு இருக்கும்ல?" என சொல்ல,
"அப்ப நா உன் குடும்பம் இல்லையா மாரா?" என்றாள் லதா.
"இல்ல! உன்ன கல்யாணம் பண்ணி வெளியனுப்பியாச்சு ஆனா அத மறந்துட்டு இங்கேயே கிடக்குற நீ" என தோள் குலுக்கினான் மார்கண்டேயன். பேச்சென்று வந்துவிட்டால் எவ்வளவு இறங்குவான் என இப்போது அடிக்கடி பார்க்கின்றனர் தானே அவர்களும், அதனால் அவனிடம் பேச அவர்களுக்கு பயமாக கூட இருந்தது.
"என்ன மனுஷன்டா நீலாம். இவ்ளோ சுயநலமா மாறிட்ட" என லதா அரற்ற,
"உன் சுயநலத்தவிட இங்க எல்லாம் கம்மிதான், போ போ" என்றான்.
"கழுத்த பிடிச்சு வெளிய தள்ளுனவர்ட்ட போய் நிக்க சொல்றியா?"
"நீ அவர பேசின அவரு பதிலுக்கு செய்றாரு. என்ன கேட்டா அத்தான் செய்றது சரின்னு தான் சொல்லுவேன். மனோலாம் இப்படி பேசிருந்தானா கன்னம் பழுத்துருக்கும் தெரியும்ல" என்றும் சொல்ல,
"விட்டா நீயே அவருக்கு டிவொர்ஸ் வாங்கி குடுத்துடுவ"
"ஆமா நிம்மதியா இருக்கட்டுமே. உங்கூடலாம் மனுஷன் இத்தன வருஷம் வாழ்ந்ததே தியாகம் தான். உன்ன தவிர வேற எதையும் யோசிக்கமாட்ட, ஆனா அவரு உனக்கு உங்க பிள்ளைகளுக்கு யோசிச்சா அத இளக்காரமா வேற பேசுவியோ? அப்ப நீ நல்லா வாங்கத்தான வேணும்? தனியா கிட புத்தி தெளியுதான்னு பாப்போம்"
அடுத்து உள்ளே அழைத்துவிட, அங்கு சென்று எப்போதும் கேட்ட அதே கேள்வி அதே பதிலை கொஞ்சம் வேறு விதமாக மாற்றி சொல்லிவிட்டு வந்தனர்.
"டேய் மாரா!" என கிளம்பும்போது மீண்டும் அவனை நிறுத்த,
"சொன்னா சொன்னது தான் ம்மா. ஒன்னு அவள அவ புருஷன் வீட்டுக்கு பத்திவிடுங்க. இல்லைனா வேலைக்கு பத்துங்க. அவளுக்கு என்னால படியளக்க முடியாது. அவ கிளம்பினப்றம் ஃபோன் அடிங்க வரேன். அதுக்கு முன்ன சும்மா சும்மா கூப்பிடாதீங்க பின்ன நா ப்ளாக் பண்ண வேண்டியது வரும். வந்துட்டா தம்பி காசுலயே காலத்த ஓட்டிடலாம்னு கணா கண்டுட்டு, மூஞ்சிய பாரு" என சேர்த்து லதாவையும் பேசிவிட்டு கிளம்பிவிட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து, மணிகண்டனுக்கு மட்டும் அழைத்து, "அத்தான் பாவம் ப்பா. வைஷ்ணவியும், வினித்தும் கூட ஏங்கிட மாட்டாங்களா? ஒரு வருஷத்த தாண்டி போய்ட்ருக்கு இவ எனக்கென்னன்னு இருக்கா, அதான் அப்படி பேசிட்டு வந்தேன்பா. நா ரூபா போட்டு விட்டுட்டேன். ஆனா அவளுக்கும் அம்மாக்கும் இத தெரியப்படுத்தாம அவள கிளப்பி விடுங்க" என கூறிவிட்டான். மணிகண்டனும் 'கடன் வாங்கிவிட்டேன்!' என கூறிவிட, சாம்பவிக்கு கிறுக்கு பிடிக்காத குறைதான், மகன் மகள் இருவரையும் நினைத்து நினைத்தே குமைந்து போனார்.
லதா, எவ்வளவு அழைத்தும் மார்க்கும் பிடிகொடுக்கவில்லை, சுரேந்தரும் கண்டுகொள்ளவில்லை. வீட்டிலும் கஞ்சியும், கேப்பை, கம்பு கூழும் என ஒப்பேத்த துவங்க, திருதிருத்தாள் லதா. உள்ளூரில் வேலை கூட தேடினாள்.
இப்படியே அவரவர் வாழ்க்கை செல்ல, ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மனோ பார்க்கவே மிக சோர்வாக தெரிந்தாள்.