எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 12

Privi

Moderator

பயிற்சியிலேயே கடந்த அந்த இரண்டு நாட்களும் மின்னலென மறைந்தன. இதோ, அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்த அந்தக் கலை நிகழ்ச்சிக்கான நாளும் வந்துவிட்டது.​

மேடை ஏறும் போது பெண்கள் மூவரும் சேலையிலும், ஆண்கள் மூவரும் பாரம்பரியமான பஞ்சகச்ச வேட்டியிலும், அதற்கேற்ற மேற்சட்டையிலும் மின்ன வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.​

நடுநாயகமாக ஆடப்போகும் மலர், அடர் பச்சை நிற சேலையில் பேரழகியாகத் தயாராக, மற்ற இரு பெண்களும் மெல்லிய மஞ்சள் நிறச் சேலையில் அவளுக்கு இணையாக அலங்கரித்துக் கொண்டனர்.​

ரணதீரன், பச்சை நிறக் கரை போட்ட தூய வெள்ளை நிறப் பஞ்சகச்ச வேட்டியைக் கட்டி, அதற்குப் பொருத்தமாக அடர் பச்சை நிற மேற்சட்டையை அணிந்திருந்தான். அவனது கம்பீரத்திற்கு அந்த உடை கூடுதல் மெருகூட்டியது.​

மற்ற இரு இளைஞர்களும் பெண்களின் உடைக்கு ஏற்றாற்போல மெல்லிய மஞ்சள் நிற உடையில் தயாராக நின்றனர். அன்று காலை அனைவருக்கும் சில இறுதி நேர அறிவுரைகளையும், ஒரு சிறிய பயிற்சியையும் வழங்கிவிட்டுச் சென்றதோடு சரி... அதன் பிறகு ரணதீரன் அவளைப் பார்க்கவே இல்லை.​

"எப்போது அவளைக் காண்போம்?" என்ற தவிப்பு ரணதீரனின் மனதிற்குள் அலைமோதிக் கொண்டிருந்தது. காலமும் கடந்து, இதோ அவர்கள் மேடை ஏறும் அந்தத் தருணமும் வந்துவிட்டது.​

மேடையைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அந்த மூத்த மாணவன், உற்சாகக் குரலில் அறிவித்தான்:​

"நமது மாணவர் தலைவர் ரணதீரன் தலைமையிலான குழுவின் அற்புதமான நடன நிகழ்ச்சி... இதோ உங்கள் கண்களுக்கு விருந்தாக!"​

அந்த அறிவிப்பு வந்தவுடன் ரணதீரன் மேடையை நோக்கி நகர, அப்போதுதான் அவனுக்குப் பின்னே வந்து நின்ற மலரைப் பார்த்தான். சேலையில் ஒரு தேவதை நிலத்திற்கு இறங்கி வந்தது போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தாள் அவள்.​

அவளது அந்தத் தோற்றத்தைக் கண்டதும், ரணதீரன் ஒரு நிமிடம் உலகையே மறந்தான்; கண்சிமிட்டக் கூடத் தோன்றாமல் சிலையாக நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.​

மலருக்கு ரணதீரனின் அந்தத் தீட்சண்யமான பார்வை ஏனோ செய்தது. அவனைக் காணும்போதெல்லாம் அவள் மனதிற்குள் ஓர் அபாய மணி ஒலிக்கும். இன்றும் அது வழக்கத்தை விட உரக்கவே ஒலித்தது.​

அந்த மெய்மறந்த நிலையில் இருந்த ரணதீரனை, "டேய்!" என்று முதுகில் தட்டிச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தான் தினகரன். திடுக்கிட்டுத் தன் நிலைக்குத் திரும்பிய ரணதீரன், அனைவரையும் அழைத்துக்கொண்டு கம்பீரமாக மேடைக்குச் சென்றான்.​

அவையில் அமர்ந்திருந்தவர்களுக்குப் பண்புடன் வணக்கம் செலுத்திவிட்டு, அவரவர் தங்களுக்குரிய இடங்களில் ஜோடியாக நிலைகொண்டனர். பின்னணியில் இசை ஒலிக்கத் தொடங்க, நடனமும் அரங்கேற ஆரம்பித்தது.​

அவர்கள் ஆடத் தொடங்கிய அந்த நொடியே, அந்தப் பிரம்மாண்டமான அரங்கம் நிசப்தத்தில் மூழ்கியது. அந்த நடனம் அத்தனை ஆத்மார்த்தமாகவும், உயிர்ப்புள்ளதாகவும் இருந்தது.​

ஆடுபவர்களின் அசைவுகளில் அங்கிருந்த அனைவரும் தங்களை மறந்து லயித்திருந்தனர்.​

ஆனால், மலருக்கோ ரணதீரனின் அந்த நெருக்கம் பெரும் அவஸ்தையைத் தந்தது. அவனது அண்மையால் உள்ளுக்குள் படபடப்பு ஏறிக்கொண்டே சென்றது.​

அவர்கள் நடனத்தை நிறைவு செய்தபோது, அந்த இடமே கரகோஷத்தால் அதிர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஆறு பேரும் சபையினருக்கு நன்றி கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கினர்.​

உடை மாற்றச் சென்ற மலர், மேக்கப் கலைத்த பிறகுதான் கவனித்தாள்—அவளது ஒரு தோடு காணாமல் போயிருந்தது! சுற்றும் முற்றும் தேடியும் அது கிடைக்கவில்லை. வேறு வழியின்றி மற்றொரு தோடையும் கழற்றி வைத்துவிட்டு, தன் நண்பர்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.​

அங்கே தனிமையில் இருந்த ரணதீரன், மலரின் அந்த ஒற்றைத் தோடைத் தன் கையில் வைத்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். "உன்னைப் பார்த்து ஏழு நாட்கள்தான் ஆகிறது... ஆனால் என் மனமோ என் கட்டுப்பாட்டை மீறி உன்னிடமே தஞ்சமடைகிறதே! என்னடி செய்தாய் என்னை... என் ஓவியமே?" எனத் தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டான்.​

"ஏழு ஜென்மங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், இந்த ஒரு ஜென்மத்தில் நீ மட்டும்தான் என்னவள்!" - கையில் இருந்த ஒற்றைத் தோடிடம் மலராகவே நினைத்து மானசீகமாகப் பேசிக் கொண்டிருந்தான் ரணதீரன்.​

அப்போது அங்கே தினகரன் வருவதைக் கண்டதும், சட்டென அந்தத் தோடைத் தன் காற்சட்டைப் பையினுள் மறைத்து வைத்தான். பின், ஏதும் நடவாதது போல் தன் நண்பர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான். அமர்ந்தவன் கண்கள் கூட்டத்திற்குள் மலரையே தேடி அலைந்தன.​

ஆனால், அவன் பார்வைக்கு அவள் தென்படவே இல்லை. ஒருவழியாகக் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற, அனைவரும் அங்கிருந்து கிளம்பத் தொடங்கினர்.​

மலரும் தன் தோழிகளுடன் வீட்டிற்குப் புறப்பட்ட அந்தத் தருணம், அவள் முன்னே வந்து நின்றான் ரணதீரன். இப்போதும் அவளைக் கட்டி இழுத்தது அந்த வசீகரக் கண்கள் தான்.​

'கொல்றாடா இந்த ராட்சசி!' என மனதிற்குள் நொந்து கொண்டவன், பின் நிதானமாக அவளிடம் பேசினான். "எனக்கு எப்போதுமே சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது. அதே சமயம், இதைப் பற்றிப் பேச இது சரியான நேரமும் இல்லை.​

திங்கட்கிழமை மாலை நான்கு மணிக்கு, பின்னால் இருக்கும் அந்தப் பெரிய மரத்தடிக்கு வந்துவிடு. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்," என்றவன், "இப்போது பார்த்துப் பத்திரமாக வீட்டிற்குப் போ," என அக்கறையுடன் கூறி விடைபெற்றான்.​

அவளோ, 'தப்பித்தோம் பிழைத்தோம்' என அங்கிருந்து மின்னலென மறைந்தாள். இத்தனையையும் தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த தினகரனுக்கு இது எதுவும் சரியாகப் படவில்லை.​

வீட்டிற்குச் செல்லும் வழியில் அவன் ரணதீரனிடம் கேட்டே விட்டான், "தீரா... நீ என்ன பண்றன்னு தெரிஞ்சுதான் பண்றியா?"​

அதற்கு ரணதீரன் மிகத் தெளிவாகப் பதிலளித்தான், "நன்றாகவே தெரியும்!"​

"எனக்குப் பிடிச்சிருக்கு தினா!" அவன் எதைப் பற்றிக் கேட்கிறான் என்பதைச் சரியாக யூகித்து, ரணதீரன் தீர்க்கமாகப் பதிலளித்தான்.​

தினகரன் தயங்கியபடி, "டேய், நான் அதைச் சொல்ல வரல... உன் அப்பா..." என இழுக்க,​

ரணதீரன் அவன் பேச்சை இடைமறித்தான். "என்னை மீறி அவரால் எதுவும் செய்துவிட முடியாது," என்றான் அழுத்தமான குரலில்.​

"அப்படியென்றால் அவள்...?" எனத் தினகரன் மீண்டும் கேட்க முற்பட,​

"ஆமாம், அவள் நம் சாதிப் பெண் இல்லைதான்!" என்று ரணதீரனே அந்த வாக்கியத்தை முடித்தான்.​

தினகரன் பெருமூச்சுடன், "இது எங்கே போய் முடியப்போகிறதோ? பார்த்துச் செய் டா, அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்," எனக் கூறிவிட்டு அமைதியானான்.​

ரணதீரனும் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக வண்டியைச் செலுத்தினான்.​

தினகரனுக்கு ரணதீரனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் ஒரு முடிவெடுத்துவிட்டால், எதற்காகவும் யாரோடும் சமரசம் செய்துகொள்ள மாட்டான்.​

ஒருநாள் விடுமுறை முடிந்து, கல்லூரி தொடங்கும் அந்தத் திங்கட்கிழமையும் வந்தது.​

குறிப்பிட்டபடி மாலை நான்கு மணிக்கு, பின்னால் இருந்த அந்தப் பெரிய மரத்தடியில் ரணதீரன் காத்திருந்தான். நிமிடங்கள் மணிநேரங்களாகக் கரைந்தன.​

இரண்டு மணிநேரம் கடந்தும் மலர் வரவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பியவன், மறுநாள் கல்லூரி முழுவதும் அவளைத் தேடி அலைந்தான். எங்கு தேடியும் அவள் தென்படவில்லை.​

இறுதியில் அவளது தோழிகளிடம் விசாரித்தபோது, "அவள் கல்லூரிக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது," என்ற பதிலே கிடைத்தது.​

இப்படியே ஒரு வாரம் கடந்தது. அவளைப் பார்க்காமல் ரணதீரனுக்குப் பைத்தியம் பிடிப்பது போலானது. "என்னடி செய்தாய் என்னை? உன்னைக் காணாமல் நான் நானாகவே இல்லையே!" எனத் தனக்குள்ளேயே வாய்விட்டுப் புலம்பினான்.​

அவன் மாணவர் தலைவன் என்பதால், அவளது வீட்டு முகவரியைக் கண்டறிவது அவனுக்குப் பெரிய காரியமாக இருக்கவில்லை. இதோ, அவளைத் தேடிப் புறப்படத் தயாரானான்.​

அவளை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்புடன், மலரின் வீட்டிற்குச் சென்றான் ரணதீரன். அது ஒரு படுக்கையறை மட்டுமே கொண்ட சிறிய ஓட்டு வீடு. கதவு திறந்திருந்தது, ஆனால் உள்ளே யாரும் தென்படவில்லை. அப்படியே திகைத்து வெளியே வந்து பார்த்தபோது, விறகு வெட்டிவிட்டு கை நிறையக் கட்டுகளோடு வந்து கொண்டிருந்தாள் மலர்.​

அங்கே ரணதீரனைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தவள், கையில் இருந்த விறகுக் கட்டுகளைக் கீழே போட்டாள். பதற்றத்துடன் பின்புறம் எட்டிப் பார்த்தாள், அவளது தந்தை அங்கே வேலையாக இருந்தார்.​

அவர் இப்போதைக்கு இப் பக்கம் வரமாட்டார் என்பதை உறுதி செய்துகொண்டு, சட்டென ரணதீரனை வீட்டின் முன்புறம் இருந்த கிணற்றடிக்கு இழுத்துச் சென்றாள்.​

அவனிடம் கோபமாக, "இங்கே என்ன வேண்டும் உங்களுக்கு? ஏன் இங்கே வந்தீர்கள்?" எனக் கேட்டாள்.​

ஆனால், ரணதீரனோ அவளது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், அவளை இறுக்க அணைத்துக் கொண்டான். அவள் காதுகளுக்கு அருகே, "உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்..." என உருக்கமாக முணுமுணுத்தான்.​

அவனிடமிருந்து திமிறி விலகியவள், "நான் நாளை கல்லூரிக்கு வருவேன், அங்கே பேசிக்கொள்ளலாம். இப்போது தயவுசெய்து இங்கிருந்து கிளம்புங்கள்!" என்றாள் பிடிவாதமாக.​

அவனும் அவள் கண்களைப் பார்த்து, "நிச்சயமாக வந்துவிடுவாயல்லவா?" எனக் கேட்டுவிட்டு, "வர வேண்டும்!" என்று மெல்லிய கட்டளையுடன் அங்கிருந்து கிளம்பினான்.​

அவன் சென்ற பின், தன் படபடக்கும் இதயத்தின் மேல் கை வைத்துத் தன்னை ஒருநிலைப்படுத்திக் கொள்ளப் போராடினாள் மலர்.​

அன்று ரணதீரன் எதற்காகத் தன்னை அழைக்கிறான் என்பதை அவள் ஏற்கனவே அனுமானித்துதான் வைத்திருந்தாள். பயிற்சியின் போதே அவனது பார்வையும் மனமும் எங்கே நிலைத்திருக்கிறது என்பதை அவள் உணராமல் இல்லை.​

அதே சமயம், அவன் ஊரே வியந்து பார்க்கும் அந்த மிராசுதாரரின் மகன் என்பதும் அவளுக்குத் தெரியும். அந்த மிராசுதாரர் குடும்பம் எவ்வளவு அதிகாரமிக்கது, எத்தகைய கண்டிப்பானது என்பது அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அனைவருக்கும் அப்பட்டமாகத் தெரிந்த ஒன்றல்லவா!​

அந்த ஊரைச் சேர்ந்தவர் முருகேசன். சொந்தம் என்று சொல்லிக்கொள்ள அவருக்கு ஒருவருமில்லை. இவரைப் போலவே அநாதையாக வளர்ந்த முல்லைக்கொடிதான் அவர் மனைவி.​

திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக, மிகவும் ஆத்மார்த்தமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தனர். அந்த அழகிய வாழ்க்கைக்குப் பரிசாக கிடைத்தது தான் அவர்களின் மகவின் வரவு.​

ஆனால், விதியின் சதியால் குழந்தை பிறந்த ஒரே வாரத்தில் முல்லைக்கொடியை மஞ்சள் காமாலை காவு கொண்டது. ஊரார் அந்தப் பச்சைப் பிள்ளையை "தாயையே முழுங்கியவள்" என்று தூற்றினாலும், முருகேசன் தன் வாழ்க்கையின் ஒரே ஆதாரமாக வந்த மகளை மிகுந்த பாசத்துடன் வளர்த்தெடுத்தார்.​

அவளுக்கு 'மலர்' என்று பெயரிட்டார். காய்கறிகளைப் பயிரிட்டு, அவற்றை அறுவடை செய்து சந்தையில் விற்கும் ஒரு சாதாரண ஏழை விவசாயி அவர். ஆனால், விளைந்த காய்களை அவர் சொந்த ஊரில் விற்க முடியாது.​

சாதிப் பாகுபாடு எனும் நஞ்சால் அவர் ஊர் மக்கள் அவரிடம் காய் வாங்க மறுக்க, இரண்டு ஊர் தள்ளிச் சென்றுதான் வியாபாரம் செய்கிறார்.அவரது வருமானம் என்னவோ சொற்பம்தான்.​

ஆனாலும், மகளும் அவரும் மட்டுமே என்பதால் அவளைப் படிக்க வைப்பதற்கும், உணவிற்கும் அந்த வருமானம் போதுமானதாக இருந்தது.​

மலருக்குத் தந்தை முருகேசன் தான் உலகம். அவளுக்கென இருக்கும் ஒரே உறவும், உற்ற துணையும் அவர்தான். பல நேரங்களில் தாய்மைக்காக ஏங்கினாலும், அதைத் தன் தந்தை வருந்துவார் என்பதற்காக ஒருபோதும் அவர் முன் காட்டியதில்லை.​

படிப்பிலும் சுட்டியான மலர், பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாள். தன் மேல்படிப்பு ஆசையைத் தந்தையிடம் சொன்னபோது, "அதெல்லாம் முடியாது" என முருகேசன் ஒற்றைக்காலில் நின்றார்.​

"தாழ்ந்த சாதிக்காரங்க படிச்சு என்ன பண்ணப்போறாங்க?" என ஊரே ஏளனம் பேசும் என்பதால் அவர் பயந்தார்.​

ஆனால், மலரின் விடாப்பிடியான பிடிவாதம் அவரைச் சம்மதிக்க வைத்தது. "சரி, உள்ளுக்குள் இருக்கும் கல்லூரி வேண்டாம் ... கொஞ்சம் பெரிய டவுனுக்குப் போய்ப் படி" என்று மிகவும் சிரமப்பட்டுத்தான் இந்தக் கல்லூரியில் அவளைச் சேர்த்துவிட்டார்.​

மலரும் ஆயிரம் கனவுகளுடன் தான் இங்கே வந்தாள். அவள் வீட்டிலிருந்து இந்தக் கல்லூரி வெகு தொலைவு; இரண்டு பேருந்துகள் மாறித்தான் செல்ல வேண்டும். இவ்வளவு போராட்டங்களுக்கு இடையில் படிக்கும் மலருக்கு, 'காதல்' என்பது எட்டாக்கனியாகவே தெரிந்தது.​

ஆனால், ரணதீரனின் அந்தத் தீட்சண்யமானப் பார்வையையும், வசீகர சிரிப்பையும் அவளால் முற்றிலுமாகத் தவிர்க்க முடியவில்லை. அவனது பார்வை அவளுக்குள் இனம் புரியாத மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதுதான் நிஜம்.​

குறிப்பாக அன்று, "என்னோடு வா தினமே..." என்ற வரியை அவன் வாய் அசைவிலேயே சொன்னதிலிருந்து, அதிலிருந்து மீள முடியாமல் பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தாள் மலர்.​

அன்று ரணதீரன் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று சொன்ன அந்த விநாடியே, அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதை மலரின் உள்மனம் யூகித்துவிட்டது.​

அவள் மனதில் ஆயிரம் குழப்பங்கள் அலைமோதின. இது என்ன மாதிரியான உணர்வு? ஈர்ப்பா அல்லது இதையும் தாண்டிய ஒன்றா? எனப் புரியாமல் தவித்தாள். ஆனால், பல குழப்பங்களுடன் அன்று மாலை அவள் வீட்டிற்கு வந்தபோது, அங்கு அவளை வரவேற்றது அதிர்ச்சியான ஒரு காட்சி.​

முதுமையின் தளர்ச்சியில் இருந்த தன் தந்தை முருகேசனுக்கு அம்மை போட்டிருந்தது. தந்தையை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்ததால் தான், கடந்த ஒரு வாரமாக அவளால் கல்லூரிக்கு வர இயலவில்லை.​

அந்த வாரம் முழுவதும் தந்தையின் அருகிலேயே இருந்து பணிவிடைகள் செய்தாள். அம்மை இறங்கி அவர் உடல்நிலை தேறியதும், வரும் வாரம் முதல் கல்லூரிக்குச் செல்லலாம் என்றுதான் அவள் திட்டமிட்டிருந்தாள்.​

ஆனால், அவள் கல்லூரிக்கு வரும் வரை கூடப் பொறுக்க முடியாமல் அவளைத் தேடியே ரணதீரன் வந்துவிட்டான். அவன் என்ன கூறப்போகிறான் என்ற குழப்பம் ஒருபுறம் இருந்தாலும்,​

இப்போது அவன் ஊர் எல்லை தாண்டி வந்து, தன்னை அணைத்து, தன் காதோரம் அந்த 'மிஸ் யூ' என்ற ஒற்றை வார்த்தையைச் சொன்னதில் எல்லாம் தெளிவாகிவிட்டது. அவன் தன்னைத் தீவிரமாகக் காதலிக்கிறான் என்பது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.​

அவன் கிளம்பிச் சென்ற பிறகுதான் மலருக்கு அந்த அதிர்ச்சியான உண்மை உரைத்தது, அவன் தன்னை அணைத்துவிட்டுச் சென்றிருக்கிறான்! "அறிவு கெட்டவளே!" எனத் தன் தலையிலேயே 'பட்டென்று' அடித்துக்கொண்டாள்.​

அவன் அணைக்கும்போது ஏன் தனக்குத் தோன்றவில்லை? ஒருவேளை தந்தை வந்துவிடுவாரோ என்ற பயத்தில் அறிவு வேலை செய்யவில்லையா? அல்லது... அவளுக்கும் அவன் மேல் காதல் வந்துவிட்டதா?​

"ஏழே நாட்களில் காதல் வருமா?" எனத் தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டாள். ஒரு வாரப் பழக்கத்தில் ஒருவன் தன் எல்லைக்குள் நுழைந்து அணைக்கிறான் என்றால், அதற்குத் தான் இடம் கொடுத்தது ஏன்? எண்ணங்கள் ஒன்றோடொன்று மோத, அந்தப் பேதை மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்து போனாள்.​

ஆனால், அந்தக் குழப்பங்களுக்கு நடுவிலும் அவளிடம் ஒரு தெளிவு இருந்தது எது எப்படியானாலும் தான் படித்தே தீர வேண்டும். தன் தந்தையின் கஷ்டங்களுக்குத் தன் படிப்புதான் ஒரே தீர்வு என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.​

 
Last edited:
Top