எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 14

அத்தியாயம் - 14​

“முடியல தேவ்.. ரொம்ப வலிக்குது!” என வலி மொத்தத்தையும் அவனின் கையில் கொடுத்துவிடும் வேகத்தில் தேவாவின் கையை அழுத்திப் பிடித்திருந்தாள் சாருமதி.​

“இன்னும் கொஞ்சநேரம் தான் மதி!” என அவளை நடக்கவைத்து கொண்டிருந்தான் தேவா.​

விடிகாலையில் வலிவந்து சேர்ந்தாலும் “இன்னும் சிறிது நேரம் செல்லட்டும், வலி நன்றாக வரவேண்டும்! அதுவரை நடந்துவிட்டு வாங்க” என மருத்துவர் அறிவுறுத்தினார். அதற்காக தான் இருவரும் நடந்துக்கொண்டிருந்தனர்.​

காலையில் அனைவருமே கிளம்பி வந்திருந்தனர். மருத்துவர் “நேரமெடுக்கும்” என சொல்ல வந்தனாவையும் குழந்தை யஷ்வந்த்தையும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.​

மாலை போல் சாருமதிக்கு நன்றாக வலி வந்தது. அவ்வளவு நேரம் அவளுடன் இருந்த தேவாவை வெளியவே நிற்க வைத்துவிட்டு சாருமதியை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றனர். “உனக்காக காத்திருப்பேன் மதி! பாப்பாவோட நல்லபடியா வா..” என்ற வேண்டுகோளுடன் அவளை உள்ளே அனுப்பினான்.​

பிரசவ வலியை பற்றி ஏற்கனவே கோமதி, ஜெயந்தி, செல்வராணி என அனைவரும் எடுத்து கூறியிருந்தாலும் வலியை கண்ட நொடி அழுகையில் கரைந்தாள் சாருமதி.​

உள்ளே வலியில் சாருமதி அழுகையும், கதறலுமாக இருக்க வெளியே தேவா மனதளவில் துடித்துக் கொண்டிருந்தான். சற்று தள்ளி கோமதி, செல்வராணி, அரவிந்த், ஜெயந்தி படப்படப்போடு அமர்ந்திருந்தனர்.​

தேவாவின் அருகில் வந்து அமர்ந்த குமரேசன் எதுவும் பேசாமல் அவனின் கையை அழுத்தி பிடித்துக்கொண்டார். அந்நேரம் அந்த ஆறுதல் தேவாவிற்கும் தேவையாக இருக்க அமைதியாக இருந்துக்கொண்டான். ஆனால் அவனுக்குளிருந்த ஒவ்வொரு அணுவும் தன்னவளுக்காக துடித்துக்கொண்டிருந்தது.​

மீண்டும் சாருமதியின் ஒரு பெரிய அலறலுடன் புதிதாக இப்பூவுலகில் ஜெனித்த குழந்தையின் அழுகையும் சேர்ந்து ஒலித்தது.​

வெளியே வந்த தாதி, “உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு! உங்க வைஃப் நல்லாருக்காங்க. குழந்தையை டாக்டர் குளிப்பாட்டிட்டு வந்து கொடுப்பாங்க” என்று அறிவிப்பாக சொல்லிவிட்டு சென்றார்.​

“நம்ம பொண்ணுக்கு பொண்ணு பிறந்திருக்கு!” என கண்கலங்க ஜெயந்தி குமரேசனிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்தார். “என்னோட பேத்திக்கு பொண்ணு பிறந்திருக்கு..” என கோமதியும் ஆர்பரித்தார்.​

தேவாவிடம் வந்த அரவிந்த் அவனை கட்டிப்பிடித்து, “வாழ்த்துகள் தேவா! எனக்கு மருமக வந்துட்டா. நான் வந்தனாவுக்கு ஃபோன் போட்டுட்டு வரேன்..” என அங்கிருந்து அகன்றான்.​

செல்வராணி, “தேவா எனக்கு பேத்தி வந்திருக்கா டா..” என மகிழ்ச்சியில் திளைத்தார். அனைவரும் அவரவர் உறவு முறையை சொல்லி சந்தோசப்பட, அனைத்தையும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தேவாவிற்கு அவ்வளவு நேரமிருந்த பதட்டம் மெதுவாக தணிய தொடங்கியது.​

குழந்தையை டவல் சுற்றி கொண்டுவந்தனர். தேவாவிடம் நீட்ட அவன் கோமதியை தான் வாங்க சொன்னான்.​

முதன்முதலில் பேத்தியை வாங்கும் பொழுது வந்த சிலிர்ப்பை தன் பேத்தியின் மகளை வாங்கும் பொழுதும் கோமதி உணர்ந்தார்.​

சிறு ரோஜா குவியலை போல் இருந்தவளை பார்க்க பார்க்க அனைவருக்கும் ஆனந்தம் கரைபுரண்டு ஓடியது. மகளை ஆசைதீர ரசித்த தேவா மனைவியை காண காத்திருந்தான்.​

சிறிது நேரம் கழித்து, மருத்துவரிடம் கேட்டுவிட்டு உள்ளே சாருவை பார்க்க தேவா மட்டும் சென்றான். சாருவின் அருகில் இருந்த சிறு தொட்டிலில் அவர்களின் மகள் உறங்கிக் கொண்டிருந்தாள்.​

மயக்கத்தில் இருந்த சாருவிடம் சென்ற தேவா அவளின் தோளில் முகம் புதைத்தான். அவ்வளவு நேரம் அவன் அடக்கிவைத்த உணர்ச்சிகள் அனைத்தும் புயலில் சிக்கிய கொடியாய் துவண்டிருந்த மனைவியை பார்த்ததும் கண்ணீராய் வெளியேற மெளனமாக கண்ணீர் சிந்தினான்.​

அதில் சற்று மயக்கம் தெளிந்தவள், “தே..தேவ்! என்..என்ன பண்ணுறீங்க?” என அவனின் தலையை கோதினாள்.​

“நான் ரொம்ப பயந்துட்டேன் மதி. தேங்க்ஸ்!” என்று சில நிமிடம் அப்படியே இருந்தவன் அவளின் நுதலில் முத்தமிட்டு விலகினான். பின்பு அவளின் கையை பிடித்துக்கொண்டு பார்வையிலே அவளுக்கு ஆறுதல் வழங்கினான்.​

அங்கு நிலவிய மௌனமே இருவரையும் இணைத்திருந்தது. சில நேரம் பேசபடாத வார்த்தைகளின் மௌனம் கூட அழகு தானே!​

அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக குழந்தை பசியில் வீறிட்டு அழ துவங்கியது. உடனே பெண்கள் அனைவரும் உள்ளே வர தேவா சத்தமில்லாமல் வெளியேறினான்.​

மறுநாள் சாருவை பார்க்க வந்த அவளின் சின்னப்பாட்டி காந்திமதியுடன் அவரின் பேரன்களும் வந்திருந்தனர். சாருவை பார்த்து நலம் விசாரித்த இளையவர்கள் தேவாவிடம், “பாப்பா பெயர் என்ன மாமா?” என்றனர் நக்கல் சிரிப்புடன்.​

“பொண்ணுனே நேத்து தான் தெரியும். இன்னும் பெயர் சூஸ் பண்ணல” என்றவனை பார்த்து மேலும் சிரித்தவர்கள்,​

“அது அவ்ளோ கஷ்டம் இல்லை மாமா. என்ன பெயர் வெச்சாலும் மதினு சேர்த்துக்கோங்க அவ்ளோதான்! இது மதிஸ் ஃபேமிலி தான?” என கிண்டலுடன் சொல்லிவிட்டு சென்றனர்.​

பின் மருத்துவமனை வாசம் முடித்து சாருவை அவளின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.​

வாசலில் குழந்தையை தேவா வைத்துக்கொள்ள அவனின் மறுபுறம் சாருமதி நின்றிருந்தாள். அவர்களுக்கு ஆர்த்தி எடுத்த வந்தனா அனைவரையும் உள்ளே அழைத்து சென்றாள்.​

மருத்துவமனையில் இருந்து வந்த அலுப்பு தீர சாருமதி குளித்துவிட்டு வந்தாள். பின் கோமதி குழந்தையை குளிப்பாட்டி அவரின் புடவையிலே தொட்டில் கட்டி தூங்கவைத்தார்.​

இரண்டு நாள் அவர்களுடன் இருந்த தேவா மனைவியையும் மகளையும் விட்டுவிட்டு அவனின் வீடு திரும்பினான். ஆனாலும் தினமும் மாலை வந்து இருவரையும் பார்த்துவிட்டே செல்வான்.​

பகல் முழுவதும் உறங்கும் சாருவின் மகள் இரவில் கண்விழித்து யாரையும் தூங்க விடமாட்டாள். இதில் அவள் அழுகையில் பக்கத்து அறையில் உறங்கும் யஷ்வந்த்தும் விழித்துவிடுவான்.​

அதன் பிறகு அங்கிருக்கும் அனைவருக்குமே சிவராத்திரி தான்.​

ஒருநாள் ஜெயந்தி, “உன்னோட பொண்ணுக்கு தொண்டை ரொம்ப பெருசு சாரு! என்ன கத்து கத்துறா? இவளுக்கு யாஷ் பரவால போல” என கிண்டலாக சொல்ல, “குழந்தையலாம் எதுவும் சொல்லாதீங்க மா” என பட்டென்று சொல்லிவிட்டாள்.​

“ஓ! உன்னோட பொண்ணை ஒருவார்த்தை சொல்லாம வளர்த்துடுவியா?” என அவரும் பேச,​

“இந்தா ஜெயா! உனக்கு வேற வேலை இல்லையா? அங்க இருக்க முருங்கை கீரையை ஆஞ்சிவை சூப்பு போடணும்” என மருமகளை அகற்றினார்.​

“இப்படி எடுத்துக்கெல்லாம் கோவப்படாத சாரு! பிள்ளை பெத்த உடம்புக்கு நல்லதில்லை” என பேத்தியை கண்டிக்கவும் தவறவில்லை.​

யஷ்வந்த் பிறந்த பொழுதும் இப்படி தான் இரவு முழுவதும் உறங்காமல் அழுவான். சாருமதி, செல்வராணி, வந்தனா, கோமதி என அனைவரும் சேர்ந்தே பார்த்துக்கொண்டனர். ஆனால் இங்கே இரண்டு வாரத்தில் ஜெயந்தி இப்படி சொன்னதும் சாருவிற்கு கடுப்பாக வந்தது.​

‘நானென்ன வேணும்னா செய்யுறேன். இப்பலாம் சட்டு சட்டுனு கோவம் வருது’ என்று நினைத்துக் கொண்டவளிற்கு பிரசவத்திற்கு பின் அதிகமாகவே மூட் ஸ்விங்ஸ் ஏற்பட்டது.​

ஒருவாரம் சென்றிருக்க, அன்று மதியம் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தேவாவிற்கு சாருமதி அழைத்தாள். அவன் ஃபோனை எடுத்தவுடன், “பிஸியா இருக்கீங்களா?” என்றாள்.​

“மத்தவங்களுக்கு பிஸி. உனக்கு ஃப்ரீ” என்று சிரிப்புடன் சொன்னான்.​

“நம்ம வீட்டுக்கு எப்ப கூட்டிட்டு போவீங்க?” என்றாள் அவன் சொன்னதை கண்டுகொள்ளாமல்.​

அதில் ஒருநிமிடம் தயங்கியவன், “என்னாச்சி மதி?” என்றான் மென்மையாக.​

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?” என்று பிடிவாதமாய் நின்றவளிடம், “ஈவ்னிங் நான் வரேன். பேசலாம்” என்று அழைப்பை துண்டித்தான். பின் வேலை அனைத்தையும் விரைவில் முடித்துவிட்டு சாருமதியின் வீட்டிற்கு சென்றான்.​

மாலையில் தேவா நுழையும் பொழுதே ஒன்பது மாதத்தில் நடைபழக தொடங்கியிருந்த யஷ்வந்த் வந்து அவனின் காலை கட்டிக்கொண்டான்.​

“வாங்க மாப்பிள்ளை! வாங்க அண்ணா!” என அங்கு அமர்ந்திருந்த ஜெயந்தியும் வந்தனாவும் அவனை வரவேற்றனர். அவர்களுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவன்,​

“மாமா உன்னை தூக்கணுமா?” என கேட்டுக்கொண்டே குனிந்து யஷ்வந்த்தை தூக்கிக்கொண்டவன் சாருவின் அறைக்குள் சென்றான்.​

உள்ளே சென்றதும் யஷ்வந்த் சாருவிடம் தாவினான். அவனை சாருவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த குளியறையில் தேவா சென்றுவிட்டான்.​

முகம் கழுவி அங்கிருந்த டவலில் முகத்தை துடைத்துக் கொண்டிருந்தவனிடம், “வீட்டுக்கு எப்ப போகலாம்?” என்றாள்.​

ஆனால் தேவாவின் கவனம் முழுவதும் தொட்டிலில் உறங்கும் மகளிடம் தான் இருந்தது. “உங்க கிட்ட தான் கேட்கிறேன்?” என்றாள் சாரு மறுபடியும்.​

அந்நேரம் கதவை தட்டிவிட்டு வந்தனா உள்ளே வர சாருமதி அமைதியானாள். தேவாவிடம் காஃபியை கொடுத்துவிட்டு யஷ்வந்த்தை வாங்கிக்கொண்டு வெளியேறினாள்.​

காஃபியுடன் பெட்டில் அமர்ந்தவன், “என்ன தீடீர்னு? பாப்பா பிறந்து மூணு வாரம் தான மதி ஆகுது? உங்க அம்மா ஏதாவது சொல்ல போறாங்க” என்றான் காஃபியை ஒரு மிடரு அருந்தியவாறு.​

“அதான் ஒருமாதம் ஆக போகுதே தேவ். அவங்க என்ன சொல்ல போறாங்க?” என்றவளின் கண்ணை பார்க்க முனைந்தான். அவனின் கண்ணை நேராக பார்க்க முடியாமல், “அத்தை கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க” என்றாள்.​

“யாராவது ஏதாவது சொன்னாங்களா? நீ உன்னோட மனசுலையே வெச்சிக்கிட்டு நீயா யோசிச்சி எதையாவது கற்பனை செய்யாத மதி?” என்றான் சிறு அதட்டலுடன்.​

“நானா கற்பனை செய்யல. எங்கம்மா தான். முதல்ல என்னையும் அண்ணியையும் கம்பேர் பண்ணி பேசிட்டு இருந்தாங்க. இப்ப பாப்பாவையும் யாஷையும் பேசுறாங்க. என்னால முடில தேவ்..” என சோர்ந்து அவனின் தோள் சாய்ந்தாள்.​

இதில் அவன் என்ன சொல்லமுடியும்? ‘பிறந்து ஒன்பது மாதம் ஆனா குழந்தையையும் பிறந்து மூணே வாரம் முடிந்த குழந்தையையும் எப்படி இவர்களால் ஒப்பிட்டு பேச முடிகிறது?’ என்று அவனுக்கும் புரியவில்லை.​

ஜெயந்தி சாதாரணமாக தான் சொன்னார். ஆனால் எப்பொழுதும் அதிகமாக யோசிக்கும் சாருமதிக்கு பிரசவத்தின் பின் மூளையும் அதிகமாக தான் வேலை செய்தது. எனவே, அன்னை சாதாரணமாக கூறியதையும் மிகைப்படுத்திக்கொண்டாள்.​

பின், “சரி அம்மா கிட்ட பேசிட்டு சொல்லுறேன். நம்ம பாப்பாவுக்கு என்ன பெயர் வைக்கலாம்?” என அவளின் எண்ணவோட்டதை திசை திருப்பினான் தேவா. அது சரியாக வேலை செய்ய சாருமதி சற்று தெளிந்தாள்.​

சாருமதியிடம் தெரிவித்தது போல் தேவா செல்வராணியுடன் பேசிவிட்டு ஒரு வாரத்தில் வீட்டிலே பெயர் வைக்கும் விழாவை ஏற்பாடு செய்தனர்.​

“வான்மதி!” என அவர்களின் ஆசை புதல்விக்கு பெயர் வைத்தனர். காந்திமதி பாட்டியின் பேரன்களும் “இதை எதிர்பார்த்தது தான?” என்று சிரித்தனர்.​

கோமதி, “நாளைக்கு உங்களுக்கு பொண்ணு பிறந்தாலும் இப்படி தான் டா பெயர் வைப்போம்” என அதட்டினார்.​

வீட்டிற்கு வந்த முதல் நாள் இரவு குழந்தையை தொட்டிலில் போட்டு உறங்க வைத்த சாருமதி படுக்க வர, அவளை அணைத்த தேவா அவளின் வாசம் பிடித்தான்.​

“தேவ்! உங்கள கிட்டயே சேர்க்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க” என கிண்டலுடன் சொன்னாள்.​

“ஹ்ம்ம். பச்சை உடம்புகாரி பார்த்து இருந்துக்கோன்னு என்கிட்டயும் சொன்னாங்க மதி!” என சிரிப்புடன் சொன்னவன், “உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று அணைப்பின் இறுக்கத்தை கூட்டினான்.​

அதில் சிலிர்த்தவள், “தேவ்! என்னோட ஃபீலிங்ஸையும் புரிஞ்சிக்கோங்க..” என்ற சிணுங்களுடன் அவனை விலக்க பார்த்தாள். “இப்படி கட்டிப்பிடிக்கிறதால ஒன்னும் ஆகாது மதி!” என இருவரும் அணைத்துக்கொண்டே உறங்க தொடங்கினார்கள்.​

சரியாக ஒருமணி நேரத்தில் குழந்தை அழுக இருவரும் எழுந்துவிட்டனர். சாருமதி அமுதூட்டி தட்டி கொடுத்தும் உறங்காமல் அழிச்சாட்டியம் செய்தாள் வான்மதி.​

“இவ எப்ப தூங்குவா மதி?” என்றான் தூக்க கலக்கத்தில்.​

“அவளுக்கா தோணினா தூங்குவா தேவ். நீங்க தூங்குங்க நாளைக்கு வேலைக்கு போகணும்ல?” என்று அவள் கூற சிறிது நேரம் பொறுத்து பார்த்த தேவாவும் தூங்கிவிட்டான்.​

பகல் முழுவதும் செல்வராணி குழந்தையை பார்த்துக்கொள்ள சாருமதி உறங்கி ஓய்வெடுப்பாள். இரவு சாருமதி பார்த்துக்கொள்வாள். இடையிடையே சிறிது நேரம் தேவாவும் இரவில் குழந்தையை பார்த்துக்கொள்ள இருவரும் சேர்ந்தே மகிழ்வுடன் குழந்தையின் வளர்ப்பை விரும்பி செய்தனர்.​

குழந்தை பிறந்து ஆறுமாதம் முடிந்திருக்க குலதெய்வத்திற்கு வேண்டுதல் வைத்ததாக செல்வராணி கூறினார். “நம்ம குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து, பாப்பாவுக்கு மொட்டை போட்டு காது குத்திடலாம்” என்றும் சொன்னார்.​

“ம்மா. என்ன சொல்லுறீங்க? சின்ன குழந்தைக்கு போய் காது குத்தணுமா..? ரெண்டு வருஷம் போக்கட்டும்” என அதட்டியவனிடம்,​

“டேய் மொத மொட்டை போடுறப்ப காது குத்துறது தான் வழக்கம் டா. கொஞ்சம் வளர்ந்துட்டா தான் ரொம்ப வலிக்கும்” என அவனிடம் பேசி நல்ல நாள் குறித்துக்கொண்டு அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு அனைவரும் வேனில் புறபட்டனர்.​

அந்த கோவிலில் இருந்த குளத்தை பார்த்ததும் சாருமதிக்கு அதில் குளிக்க ஆசை வந்துவிட்டது. “வேண்டாம் சாரு. அப்புறம் உடம்பு முடியாம போக போகுது” என கோமதி தடுத்தும் அரைமணிநேரம் அதில் ஆட்டம் போட்டாள்.​

பின் அரவிந்தன் மடியில் வான்மதிக்கு மொட்டை போட்டு காது குத்தினர். அதனை பார்த்த யஷ்வந்த் எனக்கும் மொட்டை போட சொல்லி அழுதான். அவனை சமதானப்படுத்தும் வேலையும் ஒருபுறம் நடந்தது.​

மொட்டை அடித்து அதில் சந்தனம் பூசி, காதில் சிறு பொட்டு அளவில் கம்மல் போட்டு குழந்தை பொக்க வாயை திறந்து சிரித்ததை பார்க்கப்பார்க்க அனைவருக்கும் திகட்டவில்லை.​

குழந்தைகூட சிறிது நேரத்தில் சிரித்துவிட்டாள். ஆனால் தேவா தான் ‘அவளுக்கு வலிக்கும்!’ என்று அனத்திக் கொண்டிருந்தான்.​

அன்று மாலையே அனைவரும் சென்னை திரும்பிவிட்டனர்.​

ஊருக்கு சென்று வந்து ஒருநாள் மட்டும் தான் அனைத்தும் சரியாக இருந்தது. மறுநாளே சாருமதிக்கும் குழந்தை வான்மதிக்கும் காய்ச்சல் வந்துவிட்டது.​

சாருவால் சுத்தமாக முடியவில்லை. உடல் சரியில்லாததால் குழந்தைக்கும் பால் புகட்ட முடியாத நிலை! என ரொம்பவே அவஸ்தை பட்டாள்.​

இதில் ஜெயந்தி வேறு, “நீ குளத்துல நல்லா ஆட்டம் போட்டதால தான் இப்படி ஆகிடுச்சு. கொஞ்சமாச்சும் ஒரு அம்மாவா இருக்க பாரு சாரு” என அவளை கடிந்துக்கொண்டவர்,​

“உன்னோட பொண்ண சொன்னா மட்டும் உனக்கு கோபம் வருதுல? நீ பண்ணுறது மட்டும் சரியா?” என மேலும் திட்டினார். சாருமதிக்கும் தன்னால்தான் என்று தெரிந்தே இருந்தது! அனைத்தையும் யோசித்தவள் மனத்திற்குள்ளே மறுக தொடங்கினாள்.​

குழந்தையை செல்வராணி பார்த்துக்கொண்டாலும் காய்ச்சலுடன் இருக்கும் சாருவிடமும் கொடுக்க முடியவில்லை. பாட்டியின் அன்பிலும் தந்தையின் அரவணைப்பிலும் ஓரளவு இருந்துக்கொண்டாள் வான்மதி.​

தன்னவளையும் தன்னில் இருந்து வந்தவளையும் தேவா தான் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான். கூடவே, “இனி இதுமாதிரி வேண்டுதல் எல்லாம் ஒருவயசுக்கு மேல வெச்சிக்கோங்கம்மா!” என செல்வராணியையும் அதட்டி எச்சரிக்க தவறவில்லை.​

இருவாரம் அனைவரையும் படுத்திவிட்டே சாருமதியும் வான்மதியும் சரியானார்கள். அதிலிருந்து சாருமதி மிக கவனமாக தான் இருக்கிறாள்.​

 

ஒருநாள் மாலை வேளையில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தான் தேவா. அவர்களின் அருகில் சாருவும் இருந்தாள்.​

அந்நேரம், “பா” என்றழைத்து அவனின் நெஞ்சில் மிதித்தாள் வான்மதி. பிறந்து ஆறுமாதம் கடந்த நிலையில் அவ்வப்பொழுது “மா” “தை” என சொல்ல தொடங்கிய வான்மதி, முதல் முறையாக “பா!” என ஒரெழுத்தில் கவிதையாக அழைத்தாள்.​

‘எந்த வார்த்தையை தேவா கூற முடியாமல் போனதோ? எந்த வார்த்தையை தேவா கூற ஏங்கினானோ?’ இன்று அந்த வார்த்தை அவனை நோக்கி அழைப்பதை கேட்டவனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.​

தேவா எப்பொழுதெல்லாம் துவண்டு போகிறானோ அந்நேரமெல்லாம் அவனின் தந்தையை தேடியிருக்கிறான். ஆனால் இன்று அவனையே “பா!” என்று அழைத்து பூமி தொடா பாதங்களினால் அவனின் நெஞ்சை மிதித்த அவனது மகளின் செயலில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டான்.​

“சொல்லுங்க வானும்மா” என குழந்தையை கொஞ்சியவனின் வார்த்தை கரகரப்பில் ஒலிக்கவும் தான் அவனின் கண்கள் கலங்கியதே சாருமதிக்கு தெரிந்தது.​

அவனின் கையை பிடித்து நிதானப்படுத்தியவள், “இதோட நீங்க அழுகிறதை நான் மூணாவது முறை பார்க்கிறேன்!” என்றாள் உதட்டில் சிரிப்பை மறைத்துக்கொண்டு.​

“வாய்ப்பே இல்லை” என்று வாதிட்டவனிடம், “உங்க தங்கச்சி கல்யாணத்துல கைபிடிச்சி கொடுக்குறப்ப ஃபர்ஸ்ட் டைம்! என்னோட டெலிவரியப்ப செகண்ட் டைம்! இப்ப உங்க பொண்ணு உங்களை அப்பான்னு கூப்பிடும் பொழுது தர்ட் டைம்!” என்று அனைத்து நிகழ்வுகளையும் கூறி கணக்கை சரியாக கூறினாள்.​

ஆனால் அவனின் ஆண் மனம் அதை ஏற்க மறுத்தது. “இதெல்லாமா கணக்கு வெச்சிருப்ப?” என அவளையே கிண்டலடித்து பேச்சை மாற்றினான்.​

தெளிந்த நீரோடையாக சென்றுக்கொண்டிருந்த அவர்களின் வாழ்விலும் ஒரு பெரிய சூழல் வந்தது.​

ஓருநாள் அலுவலகத்தில் இருந்து வந்த தேவா சோர்த்திருந்தவளை பார்த்து, “என்னாச்சி மதி?” என்றான்.​

“தெரியல தேவ். ஏதோ நடக்க போற மாதிரி ஒரே படப்படப்பா இருக்கு!” என்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.​

இரவில் உறங்கும் பொழுதும் தூங்காமல் இருந்தவளை அணைத்தவன் மெல்ல அவளை வருடியும் சிறு சிறு முத்தங்கள் வைத்தும் கூட சாருவின் அலைப்பாருதல் நின்றபாடில்லை.​

“என்னடி? என்ன பண்ணுது? உடம்பு சரில்லையா?” வார்த்தைக்கும் வலிக்குமோ என்று அப்படி ஒரு மென்மையான குரலில் கேட்டான்.​

‘இல்லை!’ என தலையை ஆட்டிவிட்டு அவனின் மீதே படுத்துக்கொண்டாள். ஆனால் தூக்கம் தான் இருவருக்கும் வந்த பாடில்லை.​

பின் வான்மதி அழுக, அவளை எடுத்து பால் புகட்டி தூங்க வைத்து காலை நான்கு மணியளவில் தான் சாரு கண்ணயர்ந்தாள்.​

இரவு முழுவதும் மனைவியையும் மகளையும் பார்த்துக்கொண்டாலும் காலையில் விரைவிலேயே தேவாவிற்கு முழிப்பு வந்துவிட்டது. எழுந்தவன் சாருமதியின் ஃபோனில் உள்ள அலாரத்தை அணைத்துவிட்டு அதை சார்ஜில் போட்டுவிட்டு குளிக்க சென்றான்.​

பின், அன்னையுடன் பேசியபடியே காஃபி அருந்திக் கொண்டிருந்தவனை அரவிந்த் அழைத்தான். ‘காலைலேயே எதுக்கு அழைக்கிறாரு?’ என்ற எண்ணத்துடனே காதில் வைத்த தேவா, “சொல்லுங்க அரவிந்த்?” என்றான்.​

“......”​

“என்ன? எப்போ? எப்படி?” என பதறியபடியே கேட்டான்.​

“.....”​

“சரி நான் பார்த்துக்கிறேன்” என்றவன் செல்வராணி பதட்டமாக பார்ப்பதை உணர்ந்து அவரிடம் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.​

சாருமதி உறங்கிக் கொண்டிருக்க அவளின் அருகில் குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தது. “மதி!” என்றான் அவனுக்கே கேட்காத குரலில்,​

“ஹ்ம்ம்” என முணங்கிய படியே திரும்பி படுத்தாள்.​

இப்பொழுது அவளின் அருகில் வந்து அமர்ந்தவன், “மதி!” என அவளின் கையை அழுத்தி மீண்டும் அழைத்தான்.​

ஒற்றை கண்திறந்து மணியை பார்த்தவள், “ஏழு தான தேவ் ஆகுது. கொஞ்சநேரம் தூங்குறேனே..” என அவனின் மடியிலே தலைவைத்துப்படுத்து கொண்டாள், அவன் சொல்ல போவதை கேட்டு அவளின் நிம்மதி பறிப்போவதை அறியாமல்!​

“மதி!” என தேவாவின் உடைந்த குரல் இப்பொழுது சரியாக சாருமதியை சென்றடைந்தது. கலங்கியிருந்த தேவாவின் முகத்தை பார்த்து எழுந்தவள்,​

“என்..என்னாச்சி? சொல்லுங்க தேவ்? கோ..கோம்ஸ்?” என படபடக்கும் இதயத்தோடு கேட்டவளிடம்,​

“இல்ல இல்ல அவங்களுக்கு ஒன்னுமில்லை” என அவளின் கையை பிடித்தவன், “உன்னோட யூ..யூடியூப் சேனல் ஹேக் ஆகிருக்கு!” என இதயம் கனக்க அவளிடம் விஷயத்தை கூறினான்.​

அவன் கூறியதை கேட்டவளிற்கு கண்ணீரும் வர மறுக்க திக்ப்ரம்மை பிடித்தது போல் அசையாமல் இருந்தாள். பின் படக்கென்று கட்டிலிலிருந்து இறங்கி அங்கிருந்த ஃபோனை எடுத்து பார்க்க அவளால் அவளின் யூடியூப் சேனலிற்குள்ளே செல்ல முடியவில்லை.​

அதிர்ந்து விழித்தவளின் நெஞ்சு விம்ம விழிகளில் கண்ணீர் கோடாய் இறங்கியது. அழுகையில் உதடு தந்தியடிக்க, “எப்..எப்படி தேவ்?” என்றாள் ஃபோனை பார்த்துக்கொண்டே,​

“மதி போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா. என்ன பண்ணனும்னு பார்க்கலாம்” என்ற தேவா நிலைமையை கையில் எடுத்துக்கொண்டான்.​

 
Top