எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 24

subasini

Moderator
மனம் - 24

உடல்நிலைச் சரியானதும் ஊருக்குக் கிளம்புவதற்குத் தயாரானான் அதியமான்.

தன் மாமனாரிடம் வந்து “சரி மாமா நான் கிளம்புறேன்” என்றவனிடம் “மாப்பிள்ளை இப்போது தான் உடம்பு சரியாகியிருக்கு, இன்னும் இரண்டு நாள் இருந்துட்டுப் போகலாம்” என்றார்கங்காதரன்.

“இல்ல மாமா… அங்க நான் இல்லையென்றால் சரியாகாது. என் பிரண்டும் மூன்று தடவைக் கால் பண்ணிட்டான், முக்கியமான வேலை இருந்தால் தான் இப்படி அழைப்பான்… இனி லேட் பண்ணினால் நன்றாக இருக்காது..நான் கிளம்புறேன்” என்றவன் தன் அறைக்கு வந்தான்.
அங்கே தயாராகினான்.

தாராவிடம் எதுவும் சொல்லாமல் கார்சாவியையும் தன் பேகையும் எடுத்தான். அப்போது “இருங்க நானும் வரேன்” என்றவளிடம்,

“நீயாகத் தானே உங்க அப்பா வீட்டுக்கு வந்த… நீயாகவே வீட்டுக்கு வந்து சேரு, நான் உன்னைக் கூட்டிட்டுப் போக மாட்டேன்” என்றான். அவள் முகத்தையும் கண்ணையும் பார்த்து.

கணவனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியோடு நின்றாள் தாரா.

வாயைப்பிளந்து நின்றவளுக்கு, அவன் என்ன அர்த்தத்தில் கூறினான் என்பது புரியவில்லை.

அதிர்ச்சியில் அப்படியே நிற்கவும் அவன் பாட்டுக்குத் தன் பேகையும் கார்ச்சாவியும் எடுத்துக்கொண்டு நேராக மாமனாரும் மாமியாரிடம் விடைப் பெற்று வெளியே வந்தான்.


அப்பொழுதுதான் கணவன் என்ன செல்கிறான் என்பது உரைத்தது தாராவிற்கு.

“அவளைக் கூட்டிட்டுப் போகவில்லையா‌? மாப்பிள்ளை” என்ற‌ப் புனிதாவிடம்,

“இல்லை அத்தை இரண்டு நாள் தங்கிட்டு அவங்கள் வரட்டும்” என்றவன் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான் தன் வீட்டிற்கு.

கணவனின் செயலில் கோபம் வந்தது தாராவிற்கு.

"காய்ச்சல் வந்தால் மட்டும் நாங்கள் இவங்களுக்குப் பக்கதில் இருக்கணும்… உடம்புச்சரியானதும் நம்ம அவர் கண்ணுக்கு எல்லாம் தெரிய மாட்டோம்… இருக்கட்டும் உங்களுக்கு இருக்கு… வரேன் வீட்டிற்கு முதலில்” என்றவள் வேகமாக வீட்டினுள் வந்தாள்.

இன்றைக்கே கிளம்பினாள் நன்றாக இருக்காது என்று‌ நினைத்தவள் அவள் அம்மா விடம் வந்து…

“அம்மா நாளைக்கு நான் வீட்டிற்குக் கிளம்பிருவேன்‌” என்றாள்.

“ஏன்டி‌ அது தான் இரண்டு நாட்கள் தங்கிட்டுப் போகச் சொன்னாருத் தானே‌ மாப்பிள்ளை…‌ உடனே போகணுனமா” என்று கேட்டார்.

“இல்லைம்மா… அவருக்கு முடியாமல் போயிருக்கார்... சரியாகச் சாப்பாடாமல் வேலை வேலை என்று சுத்திட்டு இருப்பாரு… நான் நாளைக்குக் கிளம்பறேன்” என்றாள் தாரா.

“சரி அவருக்குத் தினமும் காலையில் குடிக்கச் சத்து மாவுத் தயாரிக்க நினைச்சேன்…‌ இப்போதிக்கு அளவாகச்செய்துத் தரேன்… நான் உன்னை‌ப் பார்க்க‌ வரும் போது‌க் கொண்டு‌ வரேன்‌” என்று காய‌வைத்திருந்த பொருட்கள் அரைக்கத் தயாரானார்ப் புனிதா.


“ரொம்பத் தான் மருமகனைத் தாங்கறீங்கம்மா‌ நீங்கள்‌” என்றவள் சிரித்தபடித் தன்னறைக்குச் சென்று‌ அவனுக்கு அழைத்தாள்.

அலைபேசியின்‌ ஒலியில் அதை எடுத்துப் பார்த்தவனுக்குத் தன் மனைவி தான் அழைக்கிறாள் என்றதும் இதழில் புன்னகையோடு எடுத்தவன் குரலில் கடுமையை‌க் கொண்டு‌ வந்து… “ம்ம் சொல்லு” என்றான்.

“ அது... நானும் பையனும் நாளைக்கு வருகிறோம்” என்றாள்…

“ஒஒ” என்றவனின்‌ப் பதிலில்…

“இல்லை இன்றைக்கே வந்திருப்பேன் ‌ஆனால் நன்றாக இருக்காது… அது தான்” என்று‌ அவன் கேட்காமல் பதில் கூறினாள்.

ஏன் இன்றைக்கே கிளம்ப வில்லை என்ற காரணமும் … ஆனால் தனக்கு இன்றைக்கே வீட்டிற்கு வர விரும்பம் தான்… என்ற தகவலும் அவள் பேச்சில் இருந்தது.

அவள் கூறியதைக் கேட்டவன் “சரி” என்றான்.


அவ்வளவு தானா என்ற மனதில் தோன்ற அமைதியாக எதாவது சொல்வாரா என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே…
அவளின் மௌனத்தை உணர்ந்தவன், அவள் எதிர்பார்த்ததைச் செய்யாமல், அழைப்பைத் துண்டித்தவனின் இதழில் சிரிப்பும் கண்களில் அவளுக்கான காதலும் இருக்க... காரிலோ இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் எஸ்பிபி யின் குரலில்…

“தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் ..
சுட்டனக் கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே”…

என்ற‌ப் பாடல் இசைத்துக் கொண்டு இருந்தது…


அந்நேரத்தில் அவன் முகபாவங்கள் அவனின் காதலின் ஏக்கங்களை வெளிப்படுத்த, அதைக் காண அருகில் அவனவள் தான் இல்லை…

நேராகத் தன் அலுவலகம் வந்தவன், தன்னை வேலையில் புகுத்திக் கொண்டான்.

இங்குத் தாராவிற்கோ கடிகாரம் சுற்றுவது நின்றது போலத் தோன்றியது… நெட்டி முறித்தாள் நேரத்தை…
எப்படியோ இரவும் வந்தது… மகனை‌ உறங்க வைத்தவளுக்கு விழிகளில் உறக்கமில்லாமல் விரகத்தில் வெந்து கொண்டு இருந்தாள்.

அருகில் இருக்கும் அலைபேசியை எடுத்தவள் கணவனுக்கு அழைத்தாள்.

படுக்கையில் உறங்காமல் மடிக்கணினியில் பணிச் செய்து கொண்டு இருப்பவனின் கவனத்தை ஈர்த்தது அழைபேசியின் ஒலி…

எடுத்துப் பார்த்தவன் தாராவின் அழைப்பு என்றதும் யோசனையோடு எடுத்துக் காதில் வைத்தவன் எதுவும் பேசவில்லை.
மெல்ல ஹாலோ‌ என்றவளிடம் "ம்ம் சொல்லுத் தாரா" என்றான் அதியமான்.

"சரியான நேரத்துக்குச் சாப்படிங்களா… மருந்து எடுத்தீங்களா" என்றவளின் கேள்விக்கு…

ம்ம் என்றான். அவளின் எந்தப் பேச்சிற்கு ம்ம் ம்ம் என்ற வார்த்தையைத் தவிர எதுவும் பேசவில்லை அவளிடம்.

கணவனின் மௌனம் அவளை வலிக்கச் செய்ததில் கண்கள் கலங்கியது.

"சாரி" என்ற வார்த்தையை மெதுவாக உதிர்த்தவள் தன் ஃபோனை வைத்துவிட்டாள்…

சாரி என்ற அவள் வார்த்தைகள் அழுகையின் ஊடே வந்ததை உணர்ந்தவனுக்கு, மனம் கேட்காமல் அவளுக்கு அழைத்தான் அதியமான். கணவனின் அழைப்பை ஏற்றவளுக்குக் குறையவில்லை அழுகை.

"ஹலோ... தாரா".. என்றவனிடம் அழுகையை மட்டுமே பதிலாகத் தந்தாள் தாரா.

அந்த நேரம் அவளைத் தன் அருகில் வைத்துக் கொள்ளத் துடித்த மனதைக் கட்டுப் படுத்தியவன், தன் குரலைச் சொருமி… நாளைக்கு எப்போ கிளம்பறீங்கள், எப்படி வருவீங்க, பஸ்ஸில் வேண்டாம், நான் வாடகைக்கார் ஏற்பாடுப் பண்ணவா" என்ற அவன் குரலில் சீக்கிரம் வா டி என்ற செய்தியிருந்தது.

பதில் எதுவும் சொல்லாமல் அழுதவளை… "அம்மூ" என்றவன் குரலில் அவள் அழுகை நின்றது.
"சீக்கிரம் வா டி" என்றவன் ஃபோனை வைத்தான்.

அவன் சொன்னச் சீக்கிரம் வாடி என்ற வார்த்தை அவளுக்குக் கேட்டதா என்று அவளுக்கே தெரியவில்லை…
அப்படியே படுத்தவும் உறங்கினாள்.

காலையில் நேரமாக விழிப்பு வந்தது தாராவிற்கு.

எழுந்தவள் வேகமாகக் குளித்துத் தன் பேக்கை எடுத்து வைத்தவள், குழந்தையை இந்த நேரத்தில் குளிக்க வைத்தால் உடம்புக்கு முடியாமல் போகும் என்று எண்ணி, அவனுக்கு முகம் மட்டும் துடித்து அவனையும் ரெடியாக்கினாள்... தன் அம்மாவிற்கு ஒத்துழைத்தவனின்‌‌ உறக்கும் குறையவில்லை.

மகள் முன் தினமே சொல்லி வைத்ததால் தனக்குத் தெரிந்த நண்பனின் கேப் அழைத்திருந்தார் கங்காதரன்.

அதனால் எந்தச் சிரமமும் இல்லாமல் அவள் பயணம் இருந்தது.

சூரியன் உதிக்கும் முன்னமே தன் பயணத்தைத் தொடங்கியதால் வேகமாக வந்து சேர்ந்தாள் தாரா.

முதல் நாள் அலுவலகம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று எல்லா வேலைகளையும் பிஏ விடம் சொல்லி விட்டு, அடுத்த நாள் வீட்டில் இருந்தே எல்லாம் செயல்படுத்த முடிவு செய்து இருந்தான் அதியமான் ‌

அதனால் வீட்டில் இருந்தவன் அழைப்பு மணி அடித்ததில் யமுனா தான் வந்து விட்டார் என்று‌ நினைத்தான். அவர்‌ லீவ் கேட்டுத் தன் வீட்டிற்குச் சென்றிருந்தார்.. அவர்களுக்குத் தன்னை வேண்டாம் என்றாலும் எனக்கு அவங்கள் தானே‌ என் உடன்பிறப்பு என்று பாசத்தோடு அவர்களை‌க் காண‌ச் சென்றிருந்தவர் திரும்ப வருகிறேன் என்று சொல்லி இருந்தார் தாரா விடமும் அதியமானிடமும்.

அவர் என்று எண்ணிக் கதவைத் திறந்துவனுக்கு மகனோடு நின்றிருந்தாள் தன் அருமை மனைவி
அவள் கையில் சரியாக உறக்கம் இல்லாததால் அழுதுகொண்டே இருந்தான் அமரன்.

குழந்தையைப் பார்த்ததுமே புரிந்தது அதியமானுக்கு.

உறக்கம் சரியில்லை என்றால் தன் மகன் எப்படி அழுவான் என்ற இவ்வளவு காலத்தில் தெரிந்து வைத்திருந்தான் அதியமான்.

வேகமாக மகனை அவளிடம் வாங்கியவன் தன் மனைவியை முறைக்கத் தவறவில்லை.

"ம்ஹூம் நேற்றைக்கே எங்களையும் கூட்டிட்டு வந்திருந்தால் இதெல்லாம் தேவையா" என்று‌ முனகிக்கொண்டே உள்ளே வந்தாள் தாரா.

எப்பொழுதும் அமைதியாக இருக்கும் தாராவின் செயலில் மாற்றத்தை உணர்ந்தான் அதியமான்.

இப்படியெல்லாம் பேச மாட்டாள்… அமைதியாகத் தன் கண்ணைப் பார்த்துப் பேசத் தயங்கும் மனைவி அவள்.. இந்த ஒரு வாரத்தில் எல்லாம் தலைகீழாக மாறி இருந்தது.

அவள் மாற்றத்தின் காரணம் புரியாமல் அமைதியாகத் தங்கள் அறைக்கு வந்தவன், மகன் உடைகளைக் களைந்து, அவனுக்கு வெகு வெதுப்பான நீரில் உடம்புக் கழுவி விட்டு, வேறு மிருதுவான ஆடைக்கு அவனை‌ மாற்றிய நேரம் மகனுக்குச் சாப்பிட இட்லி எடுத்து வந்தாள் தாரா.

புனிதா, பேரனுக்குக் கொடுத்து விட்டு இருந்தார் கடைகளில் வாங்கிக் கொடுத்துக் குழந்தையின் வயிற்றைக் கெடுக்காதே என்று‌ மகளுக்கும் திட்டு‌விழுந்திருந்தது.

அவள் கையில் இருக்கும் இட்லியைப் பார்த்ததும் தெரிந்தது தன் மாமியாரின் வேலைதான் என்றும்.. அவர்களையும் போட்டுப் படுத்தி எடுத்து விட்டுதான் வீட்டிற்கு வந்து இருக்கிறாள் தன் அருமை மனைவி என்பது புரிந்ததும் சிரிப்பு வந்தது அதியமானுக்கு.

'எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் கைக்காரிச்சாமி இவள்' என்று‌நினைத்ததை அவளிடம் சொல்லவில்லை அவன்.

அவள் கையில் இரண்டு தட்டு இருந்தது .
ஒன்றை மகனுக்கு வைத்தவள் இன்னொன்றைக் கணவனிடம் கொடுத்தாள்.

அவளையே பார்த்தவனிடம்…
“ உங்க மாமிதான் குடுத்து விட்டாங்க..இப்போ தான் தேறி வந்து இருக்காரு‌ மருமகன்.. வெளியே சாப்பிட்டால் சரியாகாது… அவருக்கு எடுத்துட்டுபோ என்று சொன்னாங்க" என்றாள் அவன் கேட்காமலேயே.

கணவனுக்குக் கொடுத்தவள் மகனுக்கு ஊட்டி விடத் தொடங்கினாள்.
இரண்டு இட்லியைச் சாப்பிட்டவன் அடுத்து வாய் எடுத்துத் தாராவிற்கு‌ ஊட்டினான்.


அவன் செயலில் கண் கலங்கிய போதும் அதை வெளியயேற‌விடாமல் “இல்லை நீங்கள் சாப்பிடுங்க.. நான் கொஞ்சம் நேரத்தில் சமைத்துச் சாப்பிட்டுக்கிறேன்” என்றாள்.

அவளை‌ முறைத்தவன் “அப்போது நானும் சாப்பிடறேன்”…
என்றவன் “ஏன் நான் ஊட்டி விட்டால் சாப்பிட மாட்டாயா... அப்போ நான் தரவில்லை” என்ற கைகளைப் பின்னுக்கு இழுத்தவனின் செயலில் அதிர்ச்சியானாள்

என்ன பேச்சிது என்று நினைத்தவள்.. அவன் கைகளை இழுத்து இட்லியை உண்டவள்.

அவனை முறைத்தாள்.

அவளின் எந்தச் செய்கையும் தன்னை‌ப் பாதிக்காது என்பது போல் இருந்தது அவன் முகம்..

குழந்தையை அவனிடம் கொடுத்தவள் தன் பணியைத் தொடங்கினாள்.

அவர்களுக்குச் சமைத்து முடிக்கும் தருவாயில் வந்தார் யமுனா.

எல்லாம் முடிந்ததும் தன் அறைக்கு வந்த தாரா, கணவனைச் சாப்பிட அழைத்தாள்.

“இல்லை இப்போது எனக்கு வேண்டாம் வேலை இருக்கு” என்று தன் பணியில் கவனமாக இருந்தான் அதியமான்.

இருவரும் பேசிக்கொண்டு போதும் அதில் எந்த உறவும் இல்லை…
சாதாரண வழிப் போக்கனிடம் பேசுவது போல் இருந்தது அதியமானின் பேச்சுக்கள்.

அதை உணர்ந்தத் தாராவிற்கு வேதனை உண்டாவதை விட முதலில் கோபம் தான் வந்தது.

அவள் அவனுக்குச் செய்யும் எதையும் ஏற்காமல் அவனுக்கு வேண்டிய அனைத்தையும் அவனே பார்த்துக் கொண்டான்.

அவன் ஆடைகளை இஸ்திரி இடுவது இருந்து எதற்கும் அவளை எதிர் பார்க்கவில்லை அவள் கணவன்.

அவன் ‘எல்லாம் செய்து தா’ என்று எப்போதும் கேட்டதில்லை.

அவளாகவே எல்லாம் அவனுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்தாள்.. அவளாகவே எதுவும் செய்யாமல் கோபித்துக் கொண்டு இருந்தாள்.

அதனால் பாதிக்கப்பட்டது அவன் தானே என்ற கோபம் அவனுக்கு இருந்தது.

இந்த ஊடலோடு இரண்டு நாட்களைக் கடத்தியவளுக்குப் பொறுமை அவளிலிருந்து பிரிந்து சென்றது.
அன்றைய தினம் அவனுக்கு ஆடையை எடுத்து வைத்து விட்டுத் தன் வேலையைப் பார்க்கச் சென்றாள் தாரா.

அவள் வைத்ததை எடுத்துப் போடாமல் வேறு‌ ஆடையை மாற்றியவன்‌, சாப்பிவதற்குக் கூட‌ நிற்காமல் வேகமாக அலுவலகத்திற்குச் சென்றான்.

அவன் சென்றதும் பிள்ளையை யமுனாவின் பொறுப்பில் விட்டவள் தன்னுடை வேலையை வீட்டில் இருந்தே தொடர்ந்தாள் தாரா.

அவளுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் தன் அறையில் பணியைத் தொடர்ந்தாள்.

ஆனால் மனதில் அதியமானின் செயலில் கோபம் கனன்று கொண்டு இருந்தது.

அப்படியே நாட்கள் செல்ல வார இறுதியில் அவள் செய்து வைத்திருந்த, அவனுக்குப் பிடித்த உணவினை உண்ணாமல் தவிர்ததில் அவள் சினம் சிலிர்த்துக் கொண்டு வந்ததில், அவன் ‌தட்டில் உணவினை எடுத்து வைத்தாள் தாரா.

அவள் முகம் பார்த்தவன் அதைத் தொடாமல் மீதம் இருந்ததை உண்டதைக் கண்டதும் வேகமாக அவன் உணவில் தான் வைத்ததை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள் தாரா.

அவள் செய்கையில் வந்த சிரிப்பை அடக்கியவன்‌ எனக்கு‌ப் போதும்‌ என்று உணவு உண்பதில் இருந்து எழுந்தவனின் கைகளைப் பிடித்து “உங்களுக்கு என்ன கோபம்” என்று கேட்டாள் தாரா.
“எனக்கென்ன‌க் கோபம்… உனக்குத் தான் கோபம் குழப்பம்.. சந்தேகம் எல்லாம் இருக்கே என் மேல்” என்றவன் வேகமாகத் தன் அறைக்கு வந்தான் அதியமான்.

அவன் முன் வந்தவள் அது வந்து என்று இழுத்தாள் “அதுக்குத் தான் மன்னிப்புக் கேட்டேனே” என்றாள் உள்ளே போன குரலில்…

“ஒஒ மன்னிப்புக் கேட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தாயா ‌..
எனக்கு உண்டான வேதனையும் அவமானமும் சரி ஆகிடுமா” என்று கேட்டான்.

அவமானமா என்று அவனைப் பார்த்தவளுக்கு அவன் முகம் காட்டிய உணர்வுகளைப் பார்த்துப் பயந்துதான் போனாள் அவன் மனைவி.

“யாரு உங்களை என்ன சொன்னாங்க” என்று‌‌ப் பயந்தபடிக் கேட்டாள்.. தன் பெற்றோர் தன் மேல் உள்ளபாசத்தில் கணவரிடம் எதாவது சொல்லிட்டாங்களோ என்று‌ உள்ளுரப் பயந்தாள் தாரா.

"யாருச் சொல்லணும் உன் செய்கை அப்படித் தானே‌ இருந்தது" என்றவன்

"காலையில் எழுந்துப் பார்த்தால் பொண்டாட்டி வீட்டில்
இல்லை..சரி‌ அவள்‌ மாமியாரைப் பார்க்கதானே‌ப் போயிருப்பாள்‌ என்று‌ அவங்களை‌க் கேட்டபாவத்திற்கு… என்ன பண்ணாங்கத் தெரியுமா” என்றவன் அன்றைக்கு நடந்த எல்லாமே அவளிடம் கூறினான்.

“இதெல்லாம் நான் நேரிடகாரணம்… உன்னுடைய கோபம் தான்… அதெப்படிப் பழிவாங்கக் கல்யாணம் பண்ணுவாங்களா டி... பைத்தியக்காரி” என்றவன் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியானது தாராவிற்கு.

தாரிகாவின் எண்ணமும் தன் மாமியாரின் பேச்செல்லாம் கேட்டுக் கண் நிறைய நின்றிருந்தாள் தாரா.

“பழி வாங்குவதற்குக் கல்யாணம் செய்தேன் என்று நீயும்… உனக்காக அம்மாவை விட்டுட்டு வந்துட்டேன் பொண்டாட்டித் தாசன் என்று‌ என் அம்மாவும்… இரண்டு பேருக்கும் என் மேல் பாசம் எதுவுமே இல்லை என்பது மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்தது” என்றான் அதியமான்…

“உனக்கு ஏன் அப்படித் தோன்றியது… உன்னைப் பழி வாங்கி எனக்கு என்ன கிடைக்கும்" என்று அவளைப் பார்த்துப் கேட்டவனின் கேள்வி இப்போது அபத்தாமாகத் தோன்றியது. ஆனால் அவன் மேல் அவள் தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தாள்.

"என் தம்பி மேல் இருந்த வன்மம் தான் அவனோட குழந்தையை உன்னிடமே வைத்துக் கொண்டாய்… அதனால் தான் என்னைக் கல்யாணம் பண்ணச் சம்மதம் இல்லையென்றாய் என்று நான் சொல்லவா” என்று கணவன் கூறியக் கற்பனைக்கதையில் "நான் கல்யாணம் வேண்டாம் சொல்லக் காரணம் நீங்க தான், உங்க தம்பி இல்லை” என்று அழுதவளைக் கண்டு, “எதுக்கு டி இப்போ அழற நீ” என்றான் கடுப்பாக.

“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க” என்றாள் தேம்பியவாறே…

“எதுக்குக் கணவன் இல்லாமல் ஒரு குழந்தைக்கு அம்மாவாக அடையாளப்படுத்திக்கிட்ட.. உன் எதிர் காலம் நினைத்துப் பார்த்தாயா... கணவன் இல்லாமல் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருக்கும் என் மகள் நவீனக் குந்திதேவி என்று மனது குளிர்ந்துப் போயிருக்குமா உன் அப்பாவிற்கு… அப்போது அவருக்கு எதுவுமே ஆகியிருக்காது… அப்படித் தானே”… என்றவன்.

“எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்த… எதுக்குக் கல்யாணம் கேட்டு வந்த நேரம் வேண்டாம் சொன்ன... எனக்குப் பதில் தெரியணும்” என்றான் அதியமான்.

மௌனமாக நின்றிருந்தவளிடம் "இதெல்லம் தெரியாமல் நமக்குள்ளே எதுவும் இல்லை… உன் மனதில் நிறைய விஷயங்களை மறைத்து வைத்திருக்காய்… அதில் எதாவது பாதிக்கும் போது என் மனநிம்மதிதான் போகுது. உன்னைக் காதலித்துக் கல்யாணம் பண்ணின என்னைச் சொல்லணும்” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டவள் “பொய்ச் சொல்லாதீங்க” என்று அழுதாள்.

“ஓ என் காதல் உனக்குப் பொய், பையன் கொஞ்சம் பெரியவனாகட்டும்,நினைச்சேன் பாரு… அப்படி மட்டும் யோசிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நீ உண்மையாகவே அம்மாவாகிருப்பாய்.. அப்போது என் காதலின் ஆழமும் உணர்ந்து இருப்ப” என்றவனின் வார்த்தைகளைக்கேட்டு முகம் சிவந்தவளின் சொற்களோ அவள் நிலைக்கு எதிர்மறையாக வந்து வீழ்ந்தது.

“ உங்களுக்கு என்னைப் பிடிக்காது என்பதும்… உங்கள் மனதில் என் மேல் எவ்வளவு வெறுப்பும் அருவெறுப்பும் இருக்கு என்பதையும், உங்கள் கண்களில் நான் பார்த்து இருக்கேன்… அந்தப் பார்வையை மீண்டும் பார்க்கும் சக்தி எனக்கில்லை ஏற்கனவே” என்றவள் வார்த்
தையை அப்படியே முழுங்கினாள்.

“என்ன சொல்ல வந்த தாரா, சொல்லு அப்படி எந்த விஷயம் உன்னை வேதனைப் படுத்தியது” என்று கேட்டவனின் கேள்விக்கு அவள் கூறும் பதிலில் அவன் நிலைபாடு என்னவாக இருக்கும்…

தொடரும் ...
 
Top