எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 31

சுபா உண்டு முடிந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு பரணி, தனக்கு கொண்டு வந்திருந்த உணவினை உண்ண ஆரம்பித்திருந்தான்.‌எதிரேதிரே‌ கடை என்பதால், உள்ளே ஆட்கள் வரை அனைத்தும் நன்றாகவே தெரியும்.‌ இருவரும் ஒருவருக்கு தெரியும்படி தான் அமர்ந்திருந்தனர்.

சுபாவின் பார்வை பரணியை விட்டு அகலவில்லை.‌பரணியின் பார்வை சாப்பாட்டை தவிர வேறு எங்கும் செல்லவில்லை. கணவனை காண, காண அவனின் அருகாமைக்கு உள்ளம் ஏங்கியது.

இப்போதும் அவள் செய்தது தவறு‌தான்.‌அவளை முழுதாய் நய்பியவர்களை ஏமாற்றி இருக்கிறாள்.‌மிகப் பெரிய தவறுதான் அதை அவள் மறுக்கவும் இல்லை, ஆனால் அதற்காக கணவனை விட்டு பிரியும் அளவிற்கு அவளுக்கு தைரியம் இல்லை.

அவளுக்கு அவளது கணவன் வேண்டும், அவளது காதல் வேண்டும்.‌ கணவனின் கோபம் குறையும் வரையிலும், அவளிற்கான தண்டனையாக இந்த பிரிவினை ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.‌ ஆனால் சீக்கிரம் கணவன் மனம் மாறிட வேண்டும் என்பது தான் அவளது தினப்படி வேண்டுதல்.

ஆறு மாதத்திற்கு முன்பு வரை அவளது குரலை கூட கேட்கப் பிடிக்காதவன், இன்று முகத்தையாவது பார்க்கிறான். சீக்கிரம் அவனது கோபம் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை அவளிற்கு இருக்கிறது.

மாலை ஆறு மணிக்கு அவளது வேலை நேரம் முடிய, கிளம்பியவள் நேரே பனணியிடம் வர, அவள் காலையில் வைத்து விட்டு சென்ற டிபன் பாக்ஸ் அதே இடத்தில் ‌சீண்டப்படாமல் இருக்க, அதனை‌ எடுத்துக் கொண்டவள்,

“போய்ட்டு வரேன்ங்க!” என்றவள்‌ கணவனின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டிருந்தாள். முத்துப்பேச்சி காத்திருக்க, பிள்ளையை இறக்கி விட்டவள், மேலே சென்றிருந்தாள். இனி இரவிற்கு அவளிற்கு மட்டுமே‌ சமைக்க வேண்டும். சாத்வியை அங்கே சாப்பிட வைத்து இரவு பரணி வந்தப்பிறகு தான் அனுப்புவார்.

ஆறுதலாக முகம் கழுவி வந்தவள், தனக்கு டீயை போட்டு எடுத்துக்கொண்டு வந்து பால்கனியை அமர்ந்து விட்டாள்.‌ அங்கிருந்து திரும்பி புகுந்த வீட்டினை பார்க்க வெளியே முத்துபேச்சி சாத்விக்காவை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது நன்றாகவே தெரிந்தது.

“ஹாய் அக்கா!” என்ற குரல் கேட்க வேகமாக கீழே பார்த்தாள் சுபா. அவளை ஏமாற்றாது அங்கே வந்து கொண்டிருந்தாள் வருணாக்ஷி. அப்போதுதான் வேலையை முடித்து வந்திருப்பாள் போலும்,

“டீ வச்சிட்டீங்களாக்கா?” என்றபடி அவள் மேலேறி வர, வேகமாய் அடுக்களைக்குள் சென்றவள் வருணாவிற்கு போட்டு வைத்திருந்த டீயை எடுத்து வந்தவள் அவளிடம் நீட்டினாள்.

“தாங்க்ஸ் அக்கா!” என்றபடி அதனை வாங்கி கொண்டவள், அங்கேயே அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.‌ சுபா அவளருகே அமைதியாக அமரந்திருக்க, வருணா பேச ஆரம்பித்தவள், ஊர்க் கதை உலககதை அத்தனையும் பேசினாள்.

சுபா அனைத்திற்கு ம்ம் கொட்டினாள்.‌
அவளையும் அமைதியாக இருக்க விடாது வருணா பேச்சினில் இழுத்துக் கொண்டு இருந்தாள்.

“முகில் தம்பி இன்னும் வரலையா?”

“வந்திடுவாருக்கா, வர்ற நேரம் தான்!” எனும்‌போது,
“வருணாக்ஷி!” என்ற முகிலின் குரல் கேட்டிட, அடித்து பிடித்து எழுந்தவள்,

“இதோ வந்துட்டேன்ங்க!” என குரல் கொடுத்தவள், மீதிருந்த டீயினை ஒரே மடக்கில் குடித்தவள், “வரேன்க்கா!” என ஓடியிருக்க, அவள் குடித்த வேகத்தில் அவளது உதடுகளின் ஓரத்தில் டீ ஒழிகியிருக்க, அதனை கண்ட சுபா அவளிடம் கூற வருவதற்குள் ஓடியிருந்தாள்.

“அச்சோ வருணா, மாட்டிக்க போற!” சுபா மெல்லிதாய் அலற, அதற்குள் முகிலனிடம் வசமாய் சிக்கியிருந்தாள்‌ வருணா.

“போலாமாங்க!” என வந்து நின்றவளை ஒரு நொடி கூர்ந்தவன், அடுத்த நொடி “நறுக்” என்று தலையில் ஓங்கி கொட்டியிருந்தான்.

“ஆ அவ்ச்” என அலறியவள்,
“இப்போ எதுக்கு கொட்டுனீங்க?” அவனிடம் சண்டைக்கு கிளம்ப,

ஹெல்மேட் அணிந்திருந்த கண்ணாடியினை‌ தூக்கி விட்டு முறைத்தவன்,
“டீ குடிச்சியாடி?” என,

“இல்லையேங்க!” உடனடியாய் வந்தது பதில்.

மீண்டும் கொட்டியவன்,
“பொய் சொல்லுறியாடி? அப்போ இது என்ன?” அவள் உதடுகளில் ஒட்டியிருந்ததை துடைத்து அவன் கூற,

“ஈஈஈஈ!” என அவள் சிரித்து சமாளிக்க,

“அண்ணி!” என கத்தி அழைத்திட,

“முகில் தம்பி கொஞ்சமா, கால் டம்ளர் தான் கொடுத்தேன்.” சுபா கூற,

“எங்க அந்த டம்ளரை காட்டுங்க பாக்கலாம்.” என்றிட கையை பிசைந்தாள் சுபா.‌ டம்ளரை காட்டவா முடியும்? பொய் என்று கண்டுபிடித்திட மாட்டானா? விழித்தப்படி நின்றிருந்த இருவரையும் கண்டு கடுப்பாகியவன்,
வண்டியை ஸ்டார்ட் செய்திட, வருணா‌ ஏறி அமரும் முன் சென்றிருந்தான்.

“ஆமா, அப்படியே கோபத்துல விட்டுட்டு போறாரு உங்க கொழுந்தன், இரண்டடி எடுத்து வச்சா வீடு, இதுக்கு நடக்க மாட்டோமா நாங்க!” என‌ அவள் கத்தியே கூறிட, அதற்குள் வீட்டு வாசலில் வண்டியை‌ நிறுத்தியவன், சட்டென‌ கீழே குனிந்து‌ சிறிய கல்லினை தூக்கி வருணாவின் மீது குறிப்பார்த்து எறிந்திருந்தான்.

“ஆத்தி! வாத்தி ஓவர் கோபத்துல தான் இருக்காருப் போலயே!” அவள் முணங்கிட,

“நீயும் தான் சொன்ன பேச்சை கேட்டா என்ன வருணா, டாக்டர் தான் டீயை அவாய்ட் பண்ண சொல்லிருக்காருல உன்னை? ஏற்கனவே‌ சூட்டு உடம்பு உனக்கு?” சிறிதாக உப்பியிருந்த வருணாவின் வயிற்றை பார்த்தவாறு சுபா கூறிட,

“அக்கா, ரொம்ப அதிகமா இல்லைக்கா, ஸ்கூல்ல கூட குடிக்கிறது இல்லை, வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா தான் இருக்காரு உங்க கொழுந்தன்.நீங்க கொடுக்கிறது மட்டும் தான். சரிக்கா நான் வர்றேன்.” என்றபடி அவள் கிளம்பியிருக்க, இவளிற்காக அங்கே வீட்டினுள் செல்லாது முகிலன் காத்திருக்க, அவனை அசட்டை செய்தவள் முகத்தை நொடித்து விட்டு உள்ளே சென்றிருந்தாள்.

வருணா சென்ற பின் வீட்டிற்கு சென்றவளிற்கு, தனிமை நெருப்பாய் சுட்டது. தனிமையில் இருக்கும் போதுதான் இன்னும் அவளது தவறுகள் அவளை ஆழமாய் குத்திக் கிழிக்க ஆரம்பித்தன.

இதோ வந்து சென்ற வருணா மட்டுமே அவளுக்கு ஆறுதல். இதே வருணாவை தான் ஆறு மாதங்களுக்கு முன்பு எதிரியாய் பாவித்ததை நினைத்தால், இப்போதும் அவளிற்கு உடல் கூசியது.

இந்த வீட்டிற்கு வந்த ஒரு வாரத்திலயே வருணா வந்து போக ஆரம்பித்து விட்டாள். ஆரம்பத்தில் அவள் முகம் பார்க்கவே கூசி தலைகுனிந்தவளை, பேசிப் பேசி இயல்பாய் அவளை அவளது மனநிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்திருந்தாள் வருணா.

நெருங்கி பழக பழக தான் வருணாவின் குணநலன்கள் சுபாவிற்கு பிடிபட ஆரம்பித்திருந்தது. தான் செய்திருந்த தவறு தெரிந்தும், அதனை பற்றி இன்றைய வரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவள். மனது கேளாமல் சுபா கூட அதனை‌ பற்றி பேசி மன்னிப்பு கேட்க முயல,

“நடந்து முடிஞ்சதை பத்தி பேசி ஒண்ணும் ஆக போறதில்லைக்கா, நீங்க மன்னிப்பு கேட்டாலும், நடந்த அத்தனையும் பொய்யின்னு ஆகப் போறதில்லை தானோ? இதை இப்புடியே இங்கேயே விட்டு கடந்திடுவோம்.‌ அதுதான் எல்லாத்துக்கும் நல்லது.” என முடித்திருக்க, சுபாவும் அதனை பற்றி பிறகு பேசவில்லை.

இப்போது வரை, வள்ளியம்மை பயணியை தவிர மற்ற அனைவரும் அவளிடம் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். வள்ளியம்மைக்கு இவள் மீது கோபம் எல்லாம் இல்லை, வருத்தம் மட்டமே என‌ உணர்ந்திருந்தாள். ஆனால் அவளாக போய் அவரிடம் பேசுவதற்கு அவளது குற்றவுணர்ச்சி மனதினை குத்தி கிழித்தது.

வயிறு சத்தம் போட்டதில், இரவு உணவினை‌ செய்து உண்டு முடித்தவள், அடுக்களையை சுத்தப்படுத்தி விட்டு மீண்டும் பால்கனிக்கு வந்தமர்ந்துக் கொண்டாள்.

சாத்விகாவிற்கு முத்துப்பேச்சி இரவு உணவினை ஊட்டி விட்டிக் கொண்டிருக்க, அவரருகே முகிலனும், வருணாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.‌ அதனை காணவே அத்தனை ரம்மியமாக இருந்தது.

எத்தனை நேரம் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாளே, பரணியின் வண்டி சத்தத்தில் தான் கலைத்தாள்.‌கடையினை அடைத்து விட்டு வந்திருந்தான். இவனை கண்டதும் சாத்வி வேகமாய் ஓடிவர, அள்ளி அணைத்துக் கொண்டான் பிள்ளையை. சிறிது நேரம் மகளுடன் விளையாடிய வண்ணமே அவனும் எங்கயே அமர்ந்து இரவு உணவினை முடித்திருந்தான். பின் நேரமாவதை உணர்ந்து, அவன் சுபாவின் வீட்டு பக்கம் பார்க்க, அவள் அமர்ந்திருப்பது நன்றாகவே தெரிந்தது.

அனைவரிடம்‌ சொல்லி விட்டு பிள்ளையை தூக்கி கொண்டு அவன் வர, அதனை கண்டவள் வேகமாய் கீழிறங்கி சென்றாள். இவளிற்கு சற்று‌ தள்ளி பிள்ளையை‌ இறக்கி விட்டவனின் பார்வை சாத்வியை தவிர எங்கும் பார்க்கவில்லை.

பிள்ளை சுபாவிடம் போகும்வரை நின்றிருந்தவன், பின் திரும்பி நடக்க ஆரம்பிக்க, அவனை முழுவதுமாய் மனதில் நிரப்பி கொண்டு தானும் வீட்டிற்கு சென்றவள், படுக்கையை விரித்
திருந்தாள். சாத்வி நொடியில் உறங்கி விட, கணவனை நினைத்து கொண்டு கண்ணயர்ந்தாள் சுபா.

 
Top