எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 13

Privi

Moderator

மறுநாள், வான்மகன் சூரியன் பூமிக்குத் தன் ஒளிக்கரங்களால் நல்வரவு கூறி, உலகெங்கும் வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டிருந்தான். ரணதீரனின் மனமோ அந்தச் சூரியனை விட அதிகத் துடிப்புடன் இருந்தது.​

இன்று எப்படியாவது மலரிடம் தன் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அந்தக் கல்லூரியில் எத்தனையோ பெண்கள் படிக்கிறார்கள், ஆனால் யார் மீதும் ஏற்படாத ஓர் ஈர்ப்பு அவள் மீது மட்டும் காரணமே இல்லாமல் வந்தது அவனுக்கே ஆச்சரியம்தான்.​

வெறும் இரண்டு நாள் பயிற்சியில் அந்த ஈர்ப்பு எப்போது விருப்பமாகவும் காதலாகவும் மாறியது என்று அவனுக்கே புரியவில்லை. உண்மையில், மலருக்குப் பதில் வேறு எந்தப் பெண் அவனுடன் ஆடியிருந்தாலும், ரணதீரன் இவ்வளவு நெருக்கமாக, ஆத்மார்த்தமாக ஆடியிருக்க மாட்டான்.​

அன்று மரத்தடியில் அவளைச் சந்திக்கச் சொன்னபோது, "உன்னைப் பிடித்திருக்கிறது" என்று சொல்லத்தான் நினைத்திருந்தான். ஆனால், அவளைக் காணாத அந்த ஒரு வார காலப் போராட்டங்கள், அவன் மலரை எந்த அளவிற்கு காதலிக்கிறான் என்பதை அவனது மனதிற்குப் படம் பிடித்துக் காட்டின.​

"எப்படி இவ்வளவு சீக்கிரம் காதல் வரும்?" என்று அவனே பலமுறை தன்னைக் கேட்டுக்கொண்டான். ஆனால், காதல் வந்துவிட்டது... அதுதான் நிஜம்! அவளது அந்த அப்பாவியான குணம், இவனைக் கண்டு மிரளும் அந்த விழிகள்...​

அவளைப் பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், "வாழ்க்கை என்று ஒன்று இருந்தால், அது அவளோடு மட்டும்தான்!" என்று அவன் மனசாட்சி ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.​

கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தபடி எண்ணங்களில் மூழ்கியிருந்த ரணதீரன், மரகதம் கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத்தான் சுயநினைவுக்கு வந்தான்.​

கதவைத் திறந்தபோது, வாசலில் நின்றிருந்த மரகதம் மிகுந்த பாசத்துடன், "ஐயா... வாப்பா, காலை உணவைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு கல்லூரிக்குக் கிளம்பலாம்.​

உனக்காகத்தான் காமாட்சியிடம் சொல்லி இட்லியும், நாட்டுக்கோழி குழம்பும் செய்யச் சொன்னேன். வந்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போப்பா..." என்றார்.​

அவனும், "நீங்கள் போங்கள், நான் இதோ வருகிறேன்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தான்.​

நேராகப் பூஜை அறைக்குச் சென்றவன், முருகனின் முன்னே நின்று, ‘இன்று மலரிடம் எப்படியாவது என் காதலைச் சொல்லிவிட வேண்டும், அதற்கு நீதான் துணையாக இருக்க வேண்டும்’ என மனமுருக வேண்டினான்.​

பின் உணவருந்தச் சென்றவன், கைகழுவுவதற்காகச் சமையலறையை ஒட்டியிருந்த கொல்லைப்புறத்தை நோக்கிச் சென்றான்.​

அங்கே அவன் தந்தை மாணிக்கவேல் யாரிடமோ ஆக்ரோஷமாகப் பேசும் சத்தம் கேட்டது.​

"பொட்டக் கழுதைக்குக் காதல் ஒரு கேடா? அதுவும் மாற்றுச் சாதிப் பயலுடன்..." என்று அவர் கத்த, ஒரு பெண்ணின் அழுகுரல் தேய்ந்து கேட்டது.​

"ஐயா... அவரை விட்டுவிடுங்கள் ஐயா! நீங்கள் சொல்வது போலவே நம் சாதிப் பையனையே கல்யாணம் கட்டிக்கொள்கிறேன்" என அவள் கெஞ்சினாள்.​

ஆனால் மாணிக்கவேலோ சற்றும் இரக்கமின்றி, "இப்போது வழிக்கு வந்தாயே, இதுதான் சரியான முடிவு. ஆனால் அவனை எப்படி விடுவது? என் சாதிப் பெண்ணைத் தொட்டுவிட்டானே! அவன் கையை வெட்டினால்தான், இனி என் சாதிப் பெண்கள் மேல கை வைக்க மற்றவர்களுக்குப் பயம் வரும்" என அரக்கத்தனமாகப் பேசிக் கொண்டிருந்தார்.​

இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரணதீரன், எப்படியாவது அந்த அநீதியைத் தடுக்க வேண்டும் என வேகம் வேகமாக அந்த இடத்திற்கு ஓடினான். ஆனால் அவன் அங்கே சென்றபோது, ஆள் அரவமற்று அந்த இடமே நிசப்தமாகிக் கிடந்தது​

அவன் அருகில் வந்த மரகதம், "என்னப்பா இங்கே என்ன செய்கிறாய்? உனக்காக உணவு மேஜை அருகே நான் காத்திருக்கிறேன். நீ வராமல் போனதால் உன்னைத் தேடி வந்தால், நீ என்னவென்றால் இங்கே வந்து நிற்கிறாய்?" என்று கேட்டார்.​

அவரது பேச்சைக் காதில் வாங்காத ரணதீரன், "அம்மா... அப்பா எங்கே?" என்று படபடப்புடன் கேட்டான்.​

அதற்கு மரகதம் முகமெல்லாம் மலர, "அப்பா காலையிலேயே தென்னைத் தோப்பிற்குச் சென்றுவிட்டார் கண்ணா... ஏன் திடீரென்று அவரைப் பற்றிக் கேட்கிறாய்?​

ஐயோ! ஜோசியர் அப்போதே சொன்னார், 'உங்க பையன் ஜாதகத்தில் கிரகங்கள் மாறுகிறது, இனி தந்தையும் மகனும் ராசியாகி விடுவார்கள்' என்று. அவர் சொன்ன மாதிரியே பார், நீ எவ்வளவு பாசமாக உன் அப்பாவைப் பற்றிக் கேட்கிறாய் என்று! இப்போது அந்த மனுஷன் வீட்டில் இல்லாமல் தோப்பிற்குச் சென்றுவிட்டாரே..." என்று மூச்சு விடாமல் மகிழ்ச்சியில் பேசிக்கொண்டே போனார்.​

தன் தந்தை அங்கே ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டு, ஒருவனின் கை கால்களை வெட்டத் திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதை அறியாமல், தன் தாய் இப்படிப் பேசுகிறாரே என்று ரணதீரனுக்குத் தோன்றியது.​

அவன் ஒன்றும் கூறாமல், தன் தாயையே யோசனையாகப் பார்த்தான். பின் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து மௌனமாக அகன்றான்.​

'அம்மா ஏதும் புரியாமல் பேசுகிறார்கள், ஆனால் நான் கேட்டது நிஜம்! அவர் யாரோ ஒருவரின் வாழ்க்கையை அழிக்கத் துடிக்கிறார். ஐயோ... நான் எப்படி அந்தப் பையனைக் காப்பாற்றுவேன்?' என அந்த எண்ணத்திலேயே உழன்று கொண்டிருந்தான் ரணதீரன்.​

பாதிக்கப்பட்டவர்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற எந்த விவரமும் தெரியாமல் எப்படி உதவி செய்வது எனப் புரியாத அந்தப் பெருங்குழப்பத்துடனேயே கல்லூரிக்குச் சென்றான்.​

அவனது முகவாட்டத்தையும் அமைதியையும் கண்ட தினகரன், "என்னடா மச்சான்... ஒரு மாதிரியா இருக்க? என்ன, உன் 'சாக்லேட்' மலரின் நினைப்பா?" எனக் கிண்டலாகக் கேட்டான்.​

அப்போதுதான் ரணதீரனுக்கு மலரைப் பார்க்க வேண்டிய நினைவே வந்தது. "டேய்... அவள் வந்திருக்காளா?" என அவன் கேட்பதற்கு முன்பே, "காலையிலேயே பார்த்தேன்டா" என்று பதிலளித்தான் தினகரன்.​

இருந்தும் ரணதீரன் முகத்தில் உற்சாகம் பிறக்கவில்லை. அவனது அமைதி நீடிக்கவே, தினகரன் அவன் தோளைத் தொட்டு, "என்னடா ஆச்சு?" என அக்கறையாக வினவினான். ரணதீரன் அன்று காலை தன் வீட்டில் நடந்த அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் அவனிடம் ஒப்பிவித்தான்.​

தகவலைக் கேட்ட தினகரனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. "டேய்..." என அவன் ஏதோ சொல்ல வருவதற்குள், ரணதீரன் இயலாமையுடன் குறுக்கிட்டான். "யார் என்றே தெரியவில்லைடா. தெரிந்திருந்தால் நிச்சயம் எப்படியாவது காப்பாற்றியிருப்பேன். இப்போது மனசே சரியில்லை... ரொம்பக் குற்ற உணர்ச்சியா இருக்குடா!" என வருத்தத்துடன் கூறினான்​

"விடுடா... யார் என்று தெரிந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்," என்று சமாதானம் சொன்ன தினகரன், ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.​

"டேய் தீரா... மற்றவர்களுக்கே இந்த கதி என்றால், உன்னைப் பற்றி நினைத்துப் பார். அந்த மலர் புள்ள பாவம்டா!" என்றான் கவலையுடன்.​

தினகரனின் அந்த எச்சரிக்கை ரணதீரனின் மனதை இன்னும் கனக்கச் செய்தது. சிறிது நேரம் ஏதோ ஒரு தீவிர யோசனையில் இருந்தவன், பிறகு மெல்ல எழுந்து மலரைச் சந்திக்க அந்த மரத்தடியை நோக்கிச் சென்றான். அங்கே மலர் ஏற்கனவே வந்துவிட்டிருந்தாள்.​

அவளது முகம் கோபத்தில் சிவந்திருந்தது. ரணதீரன் நெருங்கி வந்ததும், அவள் எரிமலையாய் வெடித்தாள்.​

"என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்? விட்டால் என் வீட்டிற்கே வருகிறீர்களா?...​

வந்தது மட்டுமில்லாமல் அங்கேயே என்னை அணைக்கிறீர்கள்! என்ன தைரியம் உங்களுக்கு? என் அப்பா வந்திருந்தால் தெரிந்திருக்கும் என்ன செய்தி என்று.​

பெரிய இடத்துப் பிள்ளை என்றால் எதை வேண்டுமானாலும் செய்வீர்களா?" என மூச்சு விடாமல் ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டே போனாள் மலர்.​

அவளது கோபத்திலும் ஒரு வசீகரம் இருப்பதை உணர்ந்த ரணதீரன், அவளது வார்த்தைகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டு நின்றான்.​

ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டே போனவளின் சொற்களை,​

"ஐ லவ் யூ!"​

என்ற அந்த ஒற்றை மந்திரத்தால் அடைத்திருந்தான் ரணதீரன். அவன் இதைத்தான் சொல்லப்போகிறான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தும், அவன் வாய்மொழியாக அதை நேருக்கு நேராகக் கேட்டபோது அவள் இதயம் ஒரு கணம் துடிப்பை மறந்தது.​

சில விநாடி அமைதிக்குப் பின் தன்னைத் தேற்றிக்கொண்டவள், "இல்லை... இது சரிவராது! நான் படிக்க வேண்டும். பல கனவுகளைச் சுமந்துகொண்டுதான் இங்கே வந்திருக்கிறேன். என் லட்சியத்தைக் கெடுக்கும் விதமாக எதையும் நான் செய்ய மாட்டேன்!" என்றாள் உறுதியாக.​

அதற்கு ரணதீரன் மென்மையாக, "படி... நன்றாகப் படி! நான் உன்னைப் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே. எனக்கு உன்னைப் பிடித்துள்ளது, உன்னைக் காதலிக்கிறேன் என்றுதானே சொல்கிறேன்?" என்றான்.​

மலர் மீண்டும் தடுத்தாள், "உங்களுக்குப் புரியவில்லையா? நான் வேறு..." என அவள் தன் சாதியைக் குறிப்பிட முற்பட்டபோது,​

சட்டென அவளை நெருங்கியவன், அவளது இடையை வளைத்துப் பிடித்துத் தன்னருகே இழுத்தான். அவளது விழிகளைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, "நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்... உன் சாதியை அல்ல! எனக்கு நீ வேண்டும்... என் மனைவியாக, என் துணையாக, என் காதலியாக, என் குழந்தையின் தாயாக!" என அவன் கூறி முடிக்கையில், மலரின் முகம் அந்தச் செவ்வானமாகவே சிவந்திருந்தது.​

சாதி, அந்தஸ்து என ஆயிரம் வேற்றுமைகள் அவள் கண்முன்னே வந்து நிழலாடினாலும், அவனது இந்த நெருக்கமும் ஆழமான காதலும் அவளைச் சித்தமிழக்கச் செய்வதுதான் நிஜமான உண்மையாக இருந்தது.​

மெல்ல அவளை விட்டு விலகிய ரணதீரன், அவளது விழிகளை நேருக்கு நேராகச் சந்தித்தான். "இதோ பார் மலர், எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. என் பக்கமிருக்கும் பிரச்சினைகள் என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும்.​

ஆனால் காதல் என்பது சாதி, மதம், அந்தஸ்து பார்த்து வருவதல்ல. என்னால் எதற்காகவும் உன்னை விட்டு விலக முடியாது, உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்கவும் முடியாது.​

ஒருவேளை நீயே நினைத்தாலும் அது நடக்காது. இந்த ஜென்மத்தில் நீ மட்டும்தான் எனக்கு!" என்றான் ஒருவித அதிகாரத் தொனியில்.​

தொடர்ந்து, "உன் படிப்புக்கு நான் உறுதி அளிக்கிறேன். நம் வாழ்க்கை நன்றாக இருக்கும், என்னை நம்பு. 'நீங்கள் தானே என்னைக் காதலிக்கிறீர்கள், நான் உங்களைக் காதலிக்கவில்லையே' என்று நீ கேட்கலாம்.​

ஆனால், உனக்கும் என்னைப் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். அன்று உன் வீட்டில், என் இடத்தில் வேறு யாராவது இருந்து உன்னை அணைத்திருந்தால், இந்நேரம் அவன் கன்னம் பழுத்திருக்கும். ஆனால் என் கன்னம் அப்படி ஆகவில்லையே?​

அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது... உன் மனதிலும் நான் இருக்கிறேன் என்று!" எனக்கூறி அவளைத் திகைக்க வைத்தான்.​

"முடிவெடுக்க நேரம் வேண்டுமென்றால் எடுத்துக்கொள். நன்றாக யோசித்து எனக்கு ஒரு நல்ல பதிலைச் சொல். நீ உன் முடிவைச் சொல்லும் வரை நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்...​

ஆனால் ரசிப்பேன், என் சாக்லேட் பேபியை!" என்று குறும்பாகச் சொல்லி, ஒற்றைக் கண்ணை அடித்துவிட்டுத் துள்ளலாக அங்கிருந்து நகர்ந்தான் ரணதீரன்.​

அவன் யாருக்காகவும், எதற்காகவும் அவளை விட்டுக்கொடுக்கவோ அல்லது இழக்கவோ தயாராக இல்லை. சொல்லப்போனால், அன்று காலையில் தன் தந்தை பேசிய அந்த ஜாதி வெறி பிடித்த பேச்சைக் கேட்ட பிறகு, இந்த விஷயத்தில் அவன் இன்னும் கூடுதலான உறுதி கொண்டான்.​

மற்றவர்களின் காதலையே தன் தந்தை இப்படிச் சிதைக்கத் துடிக்கிறார் என்றால், தன் மகன் ஒரு மாற்றுச் சாதிப் பெண்ணைக் காதலிக்கிறான் என்று தெரிந்தால் அவர் என்ன செய்வார் என்பது அவனுக்குத் தெரியும்.​

அந்தப் பயமே இப்போது அவனுக்கு ஒரு கவசமாக மாறியிருந்தது. மலரை இந்த உலகத்திடமிருந்து மட்டுமன்றி, தன் தந்தையின் அதிகாரத்திடமிருந்தும் எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்ற போராட்டத்திற்கு அவன் இப்போதே தயாராகிவிட்டான்.​

அவன் சென்ற பிறகும் மலர் அங்கேயே சிலையாக நின்றிருந்தாள். அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் மலைப்பாக இருந்தது. ஒருபுறம் தந்தைக்காகவும், தனக்காகவும் அவள் கொண்ட கனவு, மறுபுறம் சமூக இடைவெளி, இப்போது ரணதீரன் விதைத்திருக்கும் இந்தக் காதல்... எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் அவள் மனம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தது.​

 
Top