எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காற்றலையில் ஓர் காதல் காவியம் - அத்தியாயம் 2

Dharshika

Moderator
நாட்கள் குதிரை வேகத்திலே ஓட நம் தியாவின் வாழ்க்கை எப்போதும் போல ஆமை வேகத்திலே தான் நகர்ந்தது.

விஜயா எந்நேரமும் தன் நிலைமையினால் மகளின் வாழ்க்கை இவ்வாறு இருப்பதை நினைத்தே உள்ளம் அங்கலாய்த்துக் கொண்டே இருந்தார்.

ஒரு வெள்ளிக்கிழமை காலை பத்து மணியளவில் தியா காலை உணவு தயாரித்துக் கொண்டு இருக்க பின்னணியில் வானொலி தோழி,

“வண்ணங்களோடு மலருகிறாய்
வாசனையோடு வாழுகிறாய்
பறித்திடும் பொழுதிலும்
சிரிக்கின்றாய்

பூவே சிறு பூவே
உன்னை போல் வாழ்ந்திடும்
வாழ்க்கையே வேண்டுமே

நீ ஓர் நாள் வாழ்வில்
உலகை ஆளும் ராணி
நீதானே என்றும்
எனக்கு நல்ல தோழி…!!!”

என இதமான பாடலை சினுங்க அதற்கு இனையாக தியாவின் தொலைபேசி அலறியது.

புதிய அழை எண் என்பதால் தியா சற்று தயக்கத்துடன் "ஹலோ" என்றாள்.

மறு முனையில் "வணக்கம் தியா " என்று மிக பழகிய கம்பீர குரல் அவள் செவி பரையை தாக்கிய வேளை அவள் கண்கள் பிரகாசமாகின அவள் செவ்விதல் புன்னகையை சிந்த ஏதும் பேசாமல் மௌனமானால் மங்கை.

தியாவின் அந்த உறைந்த நிமிடத்தில் தொலைபேசியில் அந்த குரல் மீண்டும் "வணக்கம்" என்றது.

தியா சுய நினைவுக்கு வந்தவள் "வணக்கம் சார்,நான் தியா தான்.நீங்க?" என பேச்சைத் தொடர்ந்தாள்.

“நான் நிலவொலி எப் எம் ல இருந்து “பேசுறேன், எப்படி இருக்கீங்க தியா?”

தியாவின் இதயத்தின் ஓசை வெளியே கேட்கும் அளவு வேகமாக துடித்தது, ஏன் என்றாள் அவளின் மனதை கொள்ளை கொண்ட குரலா தன்னிடம் பேசுவது என தன்னைத் தானே கேட்டாள்.

இல்லை இல்லை அது உன் பிரம்மை என மூளை சொல்ல அவள் ஆழ்ந்த மூச்சை எடுத்து உள்ளத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தாள்.

தியா "நான் சுகம்,நீங்க?" என்று மிக எளிமையான தொனியில் பேசினாள்.

"நானும் நலம்,தியா நேற்று நீங்க இதய ஒலி நிகழ்ச்சிக்கு கவிதை அனுப்பி இருந்தீங்க தானே?” என்று கேட்க,

அப்போது தான் தன் கவிதையை பகிர்ந்தது ஞாபகத்திற்கு வந்தது. அவசரமாக "ஆமாம் நீங்க அதை நிகழ்ச்சியில்... " என்று தடுமாறினாள்.

அதற்குள் அந்த குரல் "அதை பற்றி பேசத்தான் உங்களுக்கு கால் பண்ணேன்" என்றார்.

அவள் பயத்துடன் "ஏன் அதுல ஏதும் தப்பா சார்?” என கேட்க,

சத்தமாக சிரித்த அந்த குரலைக் கேட்ட தியாவுக்கு என்ன என்று புரியாமல் திகைத்து நின்றாள்.

“தயவு செய்து சீக்கிரமா, என்ன விஷயம் சொல்லுங்க சார்” என்றாள்.

"இல்ல அதுல ஏதும் தப்பில்லங்க ஏன் இவ்வளவு பயம் தியா?” என்றதும்.

பதில் ஏதும் இல்லாமல் போனால் அவள்.

“சரி தியா எங்க நிகழ்ச்சில ஒரு கவிதை போட்டி நடத்த ஏற்பாடு பன்னிருக்கோம், நீங்க ஒரு கவிதை எழுதி அதை ஒலி பதிவு செய்து அனுப்பனும் என்றார்.

“எனக்கு போட்டிக்காக எல்லாம் கவிதை எழுத வராது சார்” என்றாள்.

“நீங்க முயற்சி பண்ணி பார்க்கலாமா?” என்றார்.

“சரி” என சந்தேகத்துடன் சொன்னாள்.

“சரி தியா நான் கவிதை போட்டி விவரம் எல்லாம் உங்க வாட்ஸ் ஆப் கு அனுப்பி வைக்கிறேன்” என அழைப்பை துண்டித்திருந்தார்.

அதன் பிறகே அந்த குரல் யார் என்று அவள் கேட்கவே இல்லை அவரும் சொல்ல மறந்தார் என ஞாபகம் வர தன்னைத் தானே குட்டிக் கொண்டாள்.

தியாவின் தோழியும் தன் பங்கிற்கு,

“யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது….”

சூழ்நிலைக்கேற்ற பாடலை ஒலிக்க விட,

தியா வானொலியைப் பார்த்து “நீயும் வர வர உன் விளையாட்ட காட்ட ஆரம்பிச்சுட்ட….!! என சலித்துக்கொண்டு சிரித்தாள்.

தியா குழப்பமான மனதுடனே சமையல் வேலைகளை கவனிக்க முயற்சிக்க மனம் அந்த குரலைச் சுற்றியே வட்டமிட்ட படி இருந்தது.

தியாவுக்கு வெளியே எங்காவது போக வேண்டும் போல தோன்ற ,

அம்மாவிடம் சென்றவள் “அம்மா நான் கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்கு. சீக்கிரம் வந்துறேன்.” என்று விஜயாவின் பதிலை எதிர்பார்காமலே வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

காரணம் அன்று விஜயாவின் அக்கா பார்வதி திடீரென காலையிலேயே வீட்டிற்கு வந்திருக்க அதுவே தியா தன் அம்மா தனியாக இல்லை என்று உணர வைத்தது.

வாசலில் நின்ற தன் இரு சக்கர வண்டியை திருகிய தியா தன் மனம் போன பாதையிலே செல்ல இறுதியாக கடற்கரை ஓரம் வண்டி நின்றது.

தியா கடல் அலைகளை ரசித்தப்படி கரையில் நின்றிருக்க அலைகளின் தழுவல் மனதிற்கு இதம் தர அரைமணி நேரம் உறைந்து போனாள்.

திடீரென வீட்டு ஞாபகம் வர மதிய உணவு பொதிகளுடன் வீடு வந்தாள்.

“அம்மா , பெரியம்மா…..”என அழைத்தப் படி வீட்டினுள் நுழைந்தாள் தியா.

“வாம்மா தியா..” என்றார் பார்வதி.

“அம்மா எங்க பெரியம்மா..?

“ சாமி அறையில இருக்காம்மா..”

மகளின் பேச்சு சத்தம் கேட்க விஜயா வெளியே வந்தவர் “தியா டையடா இருப்ப, இனி மதியம் சமையல் செய்ய உன்னால முடியுமா… ? ஏதாச்சும் ஆடர் பண்ணிக்கலாமா … ?” என்றதோடு தியாவின் கையில் இருந்த பொதிகள் விஜயாவின் கண்களில் பட்டது.

“நான் சாப்பாடு வாங்கிட்டேன்மா , நீங்களும் பெரியம்மாவும் சாப்பிடுங்க நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வறேன்.” பொதிகளை சாப்பாட்டு மேஜையில் வைத்து விட்டு சென்றாள்.

“அக்கா நீயும் வா நாம சாப்பிடலாம்…” விஜயா அழைக்க பார்வதியும் பொதிகளை பிரித்து விஜயாவுக்கும் கொடுத்துத் தானும் உண்ண தொடங்கினார்.

தியா உடை மாற்றி வரத் தானும் அம்மாவின் அருகே அமர்ந்து கொண்டாள்.

“பெரியம்மா பிரதீப் அண்ணா வரலயா?”.உணவு பொதியை பிரித்துக் கொண்டே கேட்க,

“இல்லமா அவனுக்கு கொஞ்சம் ஆப்பீஸ் வேலையாம்.”

இடையில் விஜயா “தியா பிரதீப்புக்கு கல்யாணம் நிச்சயம் பண்ண போராங்களாம்…”

“அப்படியா பெரிம்மா!!! பொண்னுயாரு பூஜாத் தானே??? என்றதும்,

“உனக்கு எப்படி தெரியும் தியா ?? “என முகத்தில் கேள்விகுறியுடன் பார்வதி.

தியா பலமான சிரிப்புடன், “அது எல்லாம் அண்ணன் தங்கைக்குள்ள ரகசியமா இருக்குமா என்ன பெரிம்மா.” என்றால் கேலி சிரிப்போடு.

பிரதீப் அண்ணா என்றால் தியாவுக்கு மிக பிடிக்கும் ஏன் என்றால் தியாவின் அப்பா தவறிய பின் அவள் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே ஒரு உறவு அவன்.

“அட , கழுதை நீயும் அவனுக்கு சப்போட்டா!!!!!” என்றார் பார்வதி.

விஜயா வெகு நாட்களுக்கு பின் வாய் விட்டு சிரித்தார்.

“எப்போ பெரிம்மா நிச்சியதார்தம் வச்சிருக்கீங்க?”

“ நெக்ஸ்ட் சண்டே தியா” என்றார் பார்வதி.

“சரி பெரிம்மா நாங்க கண்டிப்பா வாறோம்.” என உறுதியாக சொல்ல.

“சரி விஜயா நானும் கிளம்புறேன் ரொம்ப நேரம் ஆச்சு. போயிட்டு வாறேன் தியாம்மா.” என்று தியாவை அன்புடன் அணைத்து விடை பெற்று பார்வதி வீடு திரும்பினார்.

இரவு எட்டு மணியளவில் தியா வாட்ஸ் ஆப க்கு வந்திருந்த குறுஞ்செய்திகளையும் தவறிய அழைப்புக்களையும் பார்த்தாள்.

ஒரு புதிய எண்ணிலிருந்து வந்திருந்த செய்தியை திறந்தாள்.

அதில் காலையில் சொன்ன கவிதை போட்டி பற்றிய தகவல்கள் இருந்தன.

அதில் தலைப்பு தெரிவு , வார்த்தைகளின் எண்ணிக்கை, குரல் பதிப்பு விவரம் மற்றும் கவிதையை சமர்ப்பிக்கும் காலக்கெடு என அனைத்து உள்ளடக்கிய முழுமையான விளக்க ஆவணம் இருந்தது.

இப்போது அவள் மனம், கலங்கிய நீராய் தெளிவின்றி கவிதை எழுதுவதா இல்லை விடுவதா என புரியாத புதிரென நின்றாள்.

“அம்மா” என தாயை தேடி சென்றாள்.

விஜயா ஏதோ ஓர் புத்தகத்தின் பக்கங்களை மிக ஆர்வமாக வாசித்துக் கொண்டிருப்பதை கண்டு நாவை மடக்கிக் கடித்து பேச்சை நிறுத்தினாள்.

ஆனால் செல்ல மகளின் சத்தம் விஜயாவின் செவியை வெகு விரைவாக தொட்டிருந்தது.

“என்ன தியா ?”

“டிஸ்டப் பண்ணிட்டனா ம்மா…?”

“இல்ல டா ,என்ன சொல்ல வந்தம்மா?”

“அம்மா, நான் லாஸ்ட் வீக் என்னோட கவிதையை நிலவொலி எப் எம் க்கு அனுப்பி இருந்தேன்மா.”

“அட! நீ கவிதை எல்லாம் எழுதுவியா தியா? இவ்ளே நாளா தெரியாம போச்சே!!!” என ஆச்சரியம் நிறைந்த கண்களோடு கேட்டார் விஜயா.

“இல்லமா, சும்மா ஏதோ தோனுச்சு டைப் பண்ணி அனுப்பிட்டேன்மா.”

“சரி, அந்த கவிதையை எப் எம் ல வாசிச்சாங்களா தியா?”

“எனக்கு தெரியலம்மா, நான் கவிதை அனுப்பினதையே மறந்துட்டேன்மா” அலட்சியமாக பதில் சொன்னாள் தியா.

“சரி ,இப்ப என்னாச்சு?அத சொல்லும்மா”.

“இன்னைக்கு காலை ல எனக்கு அந்த எப் எம் ல இருந்து கால் பண்ணாங்கம்மா.”

“எதுக்கு கால் பண்ணாங்க?”

“அவங்க ஏதோ கவிதை போட்டி ஏற்பாடு பண்ணிருக்காங்களாம். கவிதை எழுதி அதை வைஸ் ரெக்காட் பண்ணி அனுப்ப சொன்னாங்கம்மா.”

“ நீ எழுதி அனுப்ப போறியா தியா?” என ஆவலாய் கேட்டார் விஜயா.

“அதான்ம்மா நானும் யோசிக்கிறேன், எனக்கு , ஏதோ தோனுனதை அன்னைக்கு அனுப்பிட்டேன்மா, ஆனா போட்டிக்கு எல்லாம் எழுதுற அளவுக்கு என்னால முடியாதும்மா…”என பள்ளி மாணவி போல அம்மா மடியில் முகம் புதைத்து சொன்னால்.

“என்னடா தியா குட்டி , சின்ன குழந்தை போல பண்றடா.” தியாவின் தலையை மென்மையாக வருடி கேட்க.

“குழப்பமா இருக்கும்மா…” என உதடு சுழித்தாள்.

“இது எல்லாம் ஒரு பிரச்சனையா குட்டி, உன்னால முடியும் டா , நீ அனுப்பின கவிதையில ஏதோ அவங்களுக்கு பிடிக்க போய் தானே கால் பண்ணிருக்காங்க, சும்மா மனச போட்டு குழப்பிக்காம நீ தைரியமா எழுத ஆரம்பி.” என நம்பிக்கையாக தியாவின் கரங்களை இருக பிடித்து பேசினார்.

அம்மாவின் அந்த நம்பிக்கை கலந்த வார்த்தைகள் தியாவுக்கு கவிதையை தன் அம்மாவின் நம்பிக்கைக்காகச் சரி எழுதும் எண்ணத்தை தந்தது.

“சரிம்மா , நீங்களே சொன்ன பிறகு நான் எழுதாம இருப்பனா. நான் போய்ச் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வாங்க.” என தானும் பதிலை புன்னகையுடன் சொன்னாள்.

“சரிடா டென் மினிட்ஸ் குடு .” விஜயா மீண்டும் புத்தகத்தின் மீது கண் பதித்தார்.

தியா காலை சாப்பாட்டு வேலைகளை முடித்துவிட்டு கவிதை எழுதும் முயற்சியில் இறங்கினாள்.

தியா கண்களை மூடித் தன் கவிதைக்கான தலைப்பை யோசித்தாள். அவள் கண் மூடிய கணம் அம்மா விஜயாவின் முகம் தெரிய கண் திறந்தாள்.

முகத்தில் தெளிவுடன் கவிதை எழுதத் தொடங்கினாள்.

அஞ்சாத மனதுடன் உயரம் தொடும் அவள்,

ஆற்றல் நிறைந்த விழிகளில் கருணை பொழியும்.

இருள் வந்தாலும் மின்னலென மாறும்,

ஈரம் உள்ளத்தில் இருந்தும் உறுதி தளராது.

உயிருக்கு உறுதுணையாக நின்று போராடும்,

ஊக்கம் தந்திடும் வார்த்தைகளால் வாழ்வை உயர்த்தும்.

எழுச்சி நிறைந்த நடையோடு உலகை வெல்லும்,

ஏற்றம் தான் அவள் பாதை — சிங்கப்பெண் அவள்!


என கவிதையை முடித்தாள்.

அந்த நபர் சொன்னது போலவே அக்கவிதையை தன் இனிய குரலில் ஒலிப்பதிவும் செய்தாள்.

மறு நாளே அவள் கவிதையை நிலவொலி வானொலி நிறுவனத்தின் பிரத்தியக மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி இருந்தாள்.

இவை எல்லாம் கனவு போன்ற மாய தோற்றத்தை அவள் மனதில் தந்தது.

இன்னமும் யார் அன்று பேசிய குரல் என தனக்குத் தானே சில வினாடிகள் யோசிப்பதையும் நிறுத்தவில்லை அவள் ஆழ் மனம்.

தியாவுக்கு அந்த குரல் அடிக்கடி ஏதோ இனம்புரியா உணர்வை மனதுக்குள் தந்து மறைந்தது.

இருந்தாலும் ஏதோ ஓர் பிரபஞ்ச சக்தியின் உந்துதலும் தன் அம்மா தந்த நம்பிக்கை வார்த்தைகளின் உதவியுடன் கவிதையை எழுதி முடித்தாள்.

அலைபாயும்..........
 
Top