எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 14

Privi

Moderator

இப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது. மலரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ரணதீரனும் தான் கொடுத்த வாக்கின்படி அவளுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை.​

ஆனால், அவனது விழிகள் மட்டும் அவளைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. வாரங்கள் மாதங்களாகக் கரைந்தன. ரணதீரனின் பார்வை தன் மீது நிலைத்திருப்பதை மலர் உணர்ந்தாலும், ஒருமுறை கூட அவள் தலைநிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை.​

அவளது மௌனம் ரணதீரனின் பொறுமையைக் காற்றில் கரைத்துக் கொண்டிருந்தது.இப்படிப்பட்ட ஒரு நாளில்தான், மலர் தன் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாகத் தினகரன் கைபேசியில் யாரிடமோ தீவிரமாகப் பேசிக் கொண்டு வந்தான்.​

"டேய்! என்னடா சொல்ற? அவனோட பைக் போச்சா? அவன் அப்பா வாங்கி கொடுத்த பைக் டா அது! தீரன் வந்து கேட்டா நாம என்ன பதில் சொல்றது?" எனப் பதற்றமாகப் பேசியவன், அடுத்த நொடி அதிர்ச்சியில் உறைந்தான். "என்னடா சொல்ற? இனி அவன் வரவே மாட்டானா?"​

தூரத்திலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த மலரின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. 'அவருக்கு என்ன ஆகிவிட்டது?' என்ற பதற்றம் அவளை உந்தித்தள்ள, ஓடிச் சென்று தினகரன் முன் நின்றாள்.​

"அண்ணா! அவருக்கு என்ன ஆச்சு?" என விம்மிய குரலில் கேட்டாள். அவளை அங்கே சற்றும் எதிர்பார்க்காத தினகரன், அவள் எதைக் கேட்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு பதில் சொல்வதற்குள், பொறுமையின்றி அங்கிருந்து ரணதீரனைத் தேடி ஓடினாள் மலர்.​

தினகரன், "இந்தக் பொண்ணு என்ன... நான் சொல்றதுக்குள்ள இப்படி ஓடுது?" எனப் புலம்பியபடி மீண்டும் யாரிடமோ போனில் பேசிக் கொண்டே சென்றான்.​

மலர் கல்லூரி முழுவதும் பித்துப்பிடித்தவள் போல் ரணதீரனைத் தேடி அலைந்தாள். அவளது மனம், 'தன்னை விட்டுச் சென்றுவிட்டாரா... எல்லாம் முடிந்துவிட்டதா?' என நினைத்து மருகியது.​

ஆனால் புத்தியோ, 'பெரிய ரதி இவள்... இவளுக்காக அவன் வாழ்நாள் முழுவதும் காத்திருப்பானா?' என அவளைச் சாடியது.​

எங்கும் அவனைக் காணாமல், தளர்ந்து போய் அதே பழைய மரத்தடி பெஞ்சில் அமர்ந்தாள். அரை மணி நேரம் சிலை போல் அங்கேயே அமர்ந்திருந்தாள். அவளது மன பாரத்தை உணர்ந்தது போல, வானமும் மெல்ல இருட்டிக்கொண்டு வந்தது.​

மழையும் தன் பங்கிற்குப் பொழியத் தொடங்கியது. அந்த மரத்தடியில் தனிமையில் அமர்ந்திருந்த மலர், தன் கண்ணீர் எனும் மழையைப் பொழியத் தொடங்கினாள்.​

திடீரென்று ஒரு கரம் அவள் தோள் மீது பட, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அங்கே நின்றிருந்தது வேறு யாருமல்ல; அவளின் நாயகன் ரணதீரன் தான்!​

சுற்றுப்புறத்தை முற்றிலுமாக மறந்தவள், அவனைத் தழுவிக்கொண்டாள். அவள் அணைத்த அந்த வேகத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் திகைத்துப் போனான் ரணதீரன். பின், அவளது தவிப்பைப் புரிந்து கொண்டு, இன்னும் நெருக்கமாக அவளை அணைத்து, முதுகைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினான்.​

அவளது அழுகை சற்று ஓய்ந்ததும், அவளை மெல்ல விலக்கி, "என்னடி ஆச்சு? ஏன் இங்கே தனியாக அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாய்?" என வினவினான்.​

அப்போதுதான் தான் எதற்காக அழுதோம் என்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது. சட்டென அவன் கைகளைப் பிடித்து, "உங்களுக்கு ஒன்றும் இல்லையே?" என்று அவனது உடலைப் பரிசோதிக்கத் தொடங்கினாள்.​

குழப்பமடைந்த ரணதீரன், "எனக்கு என்னடி... நான் நன்றாகத்தானே இருக்கிறேன்!" என்றான். அதைத் கேட்டு ஒரு அடி பின்வாங்கியவள், "தினகரன் அண்ணாதான் போனில் பேசும்போது அப்படிச் சொன்னார்..." என்று நடந்த அனைத்தையும் அவனிடம் விவரித்தாள்.​

எல்லாவற்றையும் கேட்டு முடித்த ரணதீரன், மெல்லிய சிரிப்புடன், "அவன் பேசியது என்னைப் பற்றி இல்லைடி. இந்தக் கல்லூரியில் இன்னொரு தீரன் இருக்கிறான், அவனைப் பற்றி!​

தினகரன் என்னை எப்போதுமே 'தீரா' என்றுதான் அழைப்பான். மற்றவர்களிடம் குறிப்பிடும் போதுதான் 'ரணதீரன்' என்பான்," என விளக்கமளித்தான்.​

பின் அவளைக் குறுகுறுவெனப் பார்த்தவன், "ஓ... அப்போ இப்படி ஏதாவதொரு ஆபத்து நடந்தால்தான் அம்மையார் என்னை ஏறெடுத்துப் பார்ப்பதும், அணைப்பதும் நடக்கும்... அப்படித்தானே?" எனக் கேலியாகக் கேட்டான்.​

அதற்கு மலரோ முகம் சிவக்க, "அப்படியெல்லாம் இல்லை... தெரிந்தவர் ஆச்சே, ஏதேனும் ஆகிவிட்டதோ என்ற அக்கறை... அதான்..." என இழுத்தாள்.​

அவளை நெருங்கி, அவள் இடையைத் தன் கரங்களால் வளைத்துத் தன்பக்கம் இழுத்தவன், "இன்னும் ஏன்டி என்னைச் சோதிக்கிறாய்? உனக்காக இன்னும் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்?" எனக் கண்களில் காதல் வழியக் கேட்டான்.​

அவன் அத்தனை நெருக்கமாகக் கேட்கவும், மலருக்குள் ஏதோ ஒன்று நிகழ... தலை குனிந்தபடி, "பிடிச்சிருக்கு..." எனச் சத்தமில்லாமல் முணுமுணுத்தாள். அவள் சொன்னது அவன் காதில் விழுந்திருந்தாலும், "என்ன? கொஞ்சம் சத்தமாகச் சொல்லேன்!" என அவளை மீண்டும் வம்பிழுத்தான் ரணதீரன்.​

பிடிச்சிருக்கு!" இம்முறை சற்றே சத்தமாகவே கூறினாள் மலர். இருவரும் மழையில் நனைந்தபடியே அந்த இனிய தருணத்தைப் பகிர்ந்துகொண்டனர். அவள் சொன்னதைக் கேட்ட ரணதீரனுக்குள் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.​

மலர் மெல்லத் தயங்கியபடி, "உங்களிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்..." எனத் தொடங்கினாள்.​

அவளது நடுக்கத்தைப் பார்த்த ரணதீரன், "நிறையவே பேசலாம்... ஆனால் இப்படி மழையில் நனைந்துகொண்டே வேண்டாம், வா!" என்று அவள் கைபற்றி மழை தூறாத ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.​

தினகரனிடம் இருந்த தன் குளிர்கால ஜாக்கெட்டை வாங்கி அவளிடம் கொடுத்தவன், "இதைப் போட்டுக்கொள். முதலில் பத்திரமாக வீட்டிற்குப் போ, மற்றதை நாளை பேசிக்கொள்ளலாம்," என்றான் அக்கறையுடன்.​

அவளும் சரி எனத் தலையசைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள். அவள் சென்ற பிறகு, ரணதீரனால் தன் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நின்ற இடத்திலேயே ஒரு சிறிய குழந்தையைப் போலத் துள்ளிக் குதித்து ஆடிக்கொண்டிருந்தான்.​

அவனது இந்த மாற்றத்தைப் பார்த்த தினகரன் தலையில் அடித்துக்கொண்டான். "டேய் மச்சான்... இதெல்லாம் எனக்குச் சரியென்று படவில்லை, பார்த்து நடடா!" என எச்சரித்தான்.​

அதற்கு ரணதீரன் நம்பிக்கையுடன், "எல்லாம் பார்த்துக்கலாம்டா!" எனப் பதிலளித்தான்.​

இங்கே, அவனது ஜாக்கெட்டை அணிந்திருந்த மலரோ மேகத்தில் மிதப்பதைப் போல உணர்ந்தாள். பல காதல் கனவுகளுடன் அவள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, கைபேசி அதிரும் சத்தம் கேட்டது.​

திறந்து பார்த்தால் ரணதீரனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது: "நாளை நான்கு மணிக்கு மரத்தடிக்கு வந்துவிடு." அந்தச் செய்தியைப் பார்த்த மலர், அவன் முன்னே இருப்பது போலவே வெட்கத்துடன் தலையசைத்துக் கொண்டாள்.​

வீட்டிற்குச் சென்ற பிறகும் அவள் அந்தப் பகல் கனவு உலகிலிருந்து வெளிவரவில்லை. அவளது அந்தப் பரவச நிலையைக் கண்ட முருகேசன், "பிள்ளைக்குக் காத்து கருப்பு ஏதாவது அண்டிவிட்டதோ?" என அஞ்சிப்போனார்.​

உடனே கருப்பண்ணசாமியை மனமுருக வேண்டிக்கொண்டு, மலருக்குத் திருநீறு பூசி விட்டார் அந்த அப்பாவித் தந்தை.​

என்னதான் நேற்று பரவச நிலையில் இருந்தாலும், மறுநாள் விடிந்ததும் மலருக்குள்ளே இனம் புரியாத பயம் வந்து ஒட்டிக்கொண்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வேணி அக்காவுக்கும் தேவன் அண்ணாவுக்கும் நேர்ந்த அந்தத் துயரச் சம்பவத்தை அவளால் எப்படி மறக்க முடியும்?​

அதை நினைத்தாலே அவள் உடல் ஒருமுறை நடுங்கியது. 'இன்று எப்படியாவது இவை அனைத்தையும் பற்றி அவரிடம் (ரணதீரனிடம்) பேசிவிட வேண்டும்' எனத் தீர்க்கமாகத் தீர்மானித்தாள்.​

பின் கல்லூரிக்குப் புறப்படத் தயாராகி, பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தாள். அதே பேருந்து நிலையத்தில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.​

மலர் அவர்களுக்குச் சற்றுத் தள்ளி, ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். அவர்களில் ஒருவன், "டேய் மச்சான்... அங்க பாருடா!" எனத் தன் கண்களாலேயே மலரைச் ஜாடை காட்டிக் கூறினான்.​

அவளைத் திரும்பிப் பார்த்த இன்னொருவனோ, முகத்தைச் சுளித்துக்கொண்டு ஏளனமாகச் சிரித்தான். "உனக்கு டேஸ்ட்டே இல்லையாடா? அந்தப் பொண்ணுப் போய்ப் பார்க்கிறாயே... அவ மூஞ்சியும் கலரும்... ஒரு கருகருவாச்சி!" என உரக்கவே கேலி செய்தான்.​

அந்த வார்த்தைகள் மலரின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது. அது அவளுக்குப் பெரும் அவமானத்தைத் தந்தது. இருந்தும், அந்த வலியை வெளியே காட்டிக்கொள்ளாமல், வந்த பேருந்தில் ஏறித் தன் கல்லூரிக்குச் சென்றாள். ஆனால், அந்த இளைஞர்களின் பேச்சும் அவளது மனதிற்குள் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.​

ஏற்கனவே அவளுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். ரணதீரனோ பேரழகன் நல்ல மாநிறத்திற்கும் மேலாக 'மஞ்சள்' நிறத்தில் ஜொலிப்பவன். 'அப்படிப்பட்ட ஒருவன், எதற்காக என்னைக் காதலிக்க வேண்டும்?​

அவனுக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத இடைவெளி இருக்கிறதே!' எனத் தன் பழையக் குழப்பங்களுடன் இந்த நிறப் பாகுபாட்டையும் ஒரு பெரிய கேள்விக் குறியாகத் தன் மனதில் இணைத்துக்கொண்டாள்.​

கல்லூரிக்குச் சென்ற மலர், நேராக ரணதீரனைத் தேடித்தான் போனாள். ரணதீரனோ தன் நண்பர்களுடன் கேண்டீனில் உற்சாகமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.​

அவன் முன்னே தயங்கி நின்றவள், "உங்களுடன்... கொஞ்சம் பேச வேண்டும்," எனத் தட்டுத்தடுமாறிக் கூறினாள். ரணதீரன் தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு, "சரி வா," என அவளை அழைத்துக்கொண்டு அதே பெரிய மரத்தடிக்குச் சென்றான்.​

அங்கே சென்றதும், அவளது விழிகளைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, “அதுதான் நான்கு மணிக்கு வர சொன்னேனே பிறகு ஏன் இவ்வளவு அவசரம்? என்னிடம் என்ன பேச வேண்டும்?" எனக் கேட்டான்.​

அவளிடம் கேட்க ஏகப்பட்ட கேள்விகள் இருந்தன; ஆனால், அவனை நேரில் கண்ட அந்த நொடியில் அனைத்தையும் மறந்தாள். இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.​

அந்தப் பார்வையின் வீச்சில் ரணதீரனுக்கே சற்றே வெட்கம் வந்துவிட்டது. ஆண்களின் வெட்கமும் ஒரு தனி அழகுதானே!​

அவனே அவளது மௌனத்தைக் கலைத்தான். "பேசப் போகிறாயா? இல்லை இப்படியே என்னைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா?" எனக் கேலியாகக் கேட்டான்.​

அவன் கேட்டதும் சட்டெனச் சுதாரித்துக்கொண்ட மலர், வழிந்த அசட்டுச் சிரிப்புடன், "இல்லை... உங்களைப் பற்றியும், என்னைப் பற்றியும் பேசத்தான் நினைத்தேன்," என்றாள்.​

"நம்மைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?" என அவன் திருப்பித் கேட்க, மலர் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.​

அவனோ மெல்லிய சிரிப்புடன், "சரி, உனக்கு என்ன சந்தேகமோ கேள்... இந்தச் சந்தேகங்கள் எல்லாம் இன்றோடு முடிந்துவிட வேண்டும். இனி இது தொடரக் கூடாது," எனக்கூறி அவளது கேள்விகளுக்காகக் காத்திருந்தான்.​

மலரும் தன் மனதிற்குள் புதைந்து கிடந்த அந்தப் பாரமான கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்க ஆரம்பித்தாள். அந்தத் தாழ்வு மனப்பான்மை, சாதித் தடை, நிற வேறுபாடு... என அவளது கேள்விகளுக்கான பதில்கள் ரணதீரனிடம் இருக்குமா?​

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…​

 
Top