எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிருகாண்டி

மிருகாண்டி

அஞ்யுகா ஸ்ரீ


Fish Jump From Bowl - 1920x1080 Wallpaper - teahub.io



பணம் என்றால்

பேயும் இறங்கும் காலத்தில்

இனம் என்றால்

வாயும் உறங்கும் காலத்தில்

மனம் கொன்ற மானுடம்

மனிதம் என்றால் மெய்யாமோ…?

“சொன்னாக் கேளுக்கா! நீயும் பையனும் இங்க இருக்க வேண்டாம். நம்ம வீட்டுக்கே வந்திடு… நீங்க ரெண்டு பேரும் இந்த ஊரில் இருந்தா, உயிருக்கே ஆபத்து. அந்த ஆளுங்க மனுசங்களே இல்லை. என்ன வேணாப் பண்ணுவானுங்க.” என அம்பாவின் தம்பி மருது, கெஞ்சாத குறையாக அழைத்தான்.

அதற்கு அம்பா, “நா எதுக்குடா பயந்துக்கிட்டு ஊர விட்டுட்டு வரணும்? அந்த நாயிங்க தான் போவணும்.” என்றவர்,

“எம்புட்டு ஏத்தம் இருந்தா, என்ன அடிச்சு விரட்டிருனுப்பானுங்க?” என மனம் ஆறாது கேட்டார்.

“மனுஷனா இருந்தாப் பரவாயில்லை. அவங்க எல்லாம் மிருகங்கக்கா… பார், எப்படி அடித்து மண்டையை உடைத்து இருக்கானுங்கனு” என கோபமாகக் கூறிய மருது,

“அதுக்கு தான் சொல்றேன். திருவை கூட்டிக்கிட்டு வா, போயிடலாம்னு.” என்றார்.

“இந்தக் காயத்துக்குப் பயந்துகிட்டு ஊருக்கு வந்துப்புட்டா, திருவுக்கு கிடைக்க வேண்டிய மருவாதையும் உரிமையும் கிடைக்காமப் போயிடும்… அப்படி எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தான் வரலைங்கிறேன்.” என்ற அம்பா,

“என்னைய பத்திலாம் யோசிக்காம, நீ ஊருக்குப் போய்ச் சேரு. இங்கன நடந்தது எதுவும் திருவுக்கு தெரிய வேணாம்…! தெரிஞ்சா புள்ளை பயந்துடுவான். அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் கூடச் சொல்லாத.” என அழுத்தமாகக் கூறினார்.

அதில் அதிருப்தி அடைந்த மருது, “நீயும் ஏங்க்கா இப்படி பண்ற? நெத்தியில் பட்ட அடி, கொஞ்சம் தள்ளிப் பட்டிருந்தா என்ன ஆவது? இந்நேரம் நீ இப்படி பேசிக்கிட்டு இருக்கமாட்ட, போய் சேர்ந்திருப்பக்கா” என்று கலங்கிய கண்களுடன் கேட்டார்.

அதற்கு அம்பா, “நான் போய்ச் சேர்ந்தாலும் பரவால்ல, மருது. அந்த காட்டுமிராண்டி கூட்டத்த விடமாட்டேன்.” என கோபமாகச் சொன்னவர்,

“எந்த அப்பனாவது சொத்துக்காக பெத்த புள்ளையையும் கட்டின பொண்டாட்டியையும் பகையாளியா நினைப்பானாடா?” என்று விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தபடி தம்பியிடம் கேட்டார்.

“இந்த ஆள் நினைப்பாங்க்கா” என வெடுக்கென கூறிய மருது,

“மதிப்ப வாங்கித் தரேன் மண்ணாங்கட்டியை வாங்கித்தரேன்னு அடிபட்டு சாகாமல் வந்திடு… திருவுக்கு இந்த ஊரும் வேண்டாம். அப்பங்காரனும் வேண்டாம். எதுவும் வேண்டாம்! மாமன் நான் பார்த்துக்கிறேன்.” என மீண்டும் அதே பல்லவியை பாடினார்.

“வருவேன்டா… ஆனா இப்ப இல்லை. முடிக்க வேண்டிய சோலி நிறைய இருக்கு. அத முடுச்சுட்டு வரேன்.” என்ற அம்பை,

“அந்த ஆள் அடிச்சதைப் பத்தி யாருகிட்டயும் சொல்லாத. அவைங்களாவது நிம்மதியா இருக்கட்டும்.” என கெஞ்சலாகக் கேட்டார்.

“சொன்னா கேட்கமாட்ட இல்லை? என்னமோ போக்கா… இங்க நடப்பது எதுவும் சரியா இல்லை… பார்த்து இருந்துக்கோ…! மறுபடியும் அவன் ஏதாவது இம்சை பண்ணா, எனக்குக் கூப்பிடு. கையை காலை உடைத்து விடறேன்.” என்று பல்லைக்கடித்தபடி கூறினார்.


“சரிடா” என்ற அம்பா,

“பாத்து சூதானமா வூட்டுக்கு போய்ச் சேரு” எனக்கூறி தம்பியை அனுப்பி வைத்தார்.

“என்னண்ணேன் அந்த பொம்பளை இத்தனை அடிவாங்கியும் போகாமல் இங்கனயே இருக்கா? எல்லாம் நம்ம அப்பங்காரன் செஞ்சு வச்ச வென… செத்தவன் சும்மா செத்தானா? அப்பவும் நமக்கு எதிரா, எத்தனை சோலியப் பார்த்துட்டு போயிருக்கான் பாரு.” என்றவர்,

“பெத்த புள்ளைங்க நாம இருக்கும் போது, அத்தன சொத்தையும் இந்த திரு பைய பேருல எழுதி வச்சு கழுத்தறுத்துட்டான்… இப்பமட்டும் அந்த ஆளு இருந்தா, நானே கொன்னு போட்டுருப்பேன்… இனி அவளையும் அவனையும் அப்படியே விடக்கூடாது. எதாச்சும் செய்யணுண்ணே!” என்று சகோதரனை காசுமாணிக்கம் ஏற்றிவிட்டார்.

அதற்கு காசிநாதன், “எதா இருந்தாலும் பார்த்து பதமா தான் பண்ணணும்… சும்மா இரு. பொறவு பாத்துக்கலாம்” என்றவரின் மனதில் பல யோசனைகள் வரிசையாக வந்து குமிந்தது.

“எப்புடி? நீ அடிச்சு வெரட்டி விட்டும், ஊர வுட்டு போவாம இருக்கா. நம்ம அப்பங்காரன் அவ புள்ளை பேர்ல எழுதிவச்ச வீட்ல இருந்துட்டு, அதிகாரமா பண்ணையம் பார்த்து, மாடி மேல மாடி கட்டி வாழ்ற வரை காத்துக்கிட்டு இருக்கணுமா?” என நக்கலாகக் கேட்க.

காசிநாதன், “அதுவரைக்கும் வுட்டு வைக்க எனக்கு என்ன கிறுக்கா புடுச்சிருக்கு?” என வினையமாகக் கேட்டவர்,

“அந்த திரு பையன் வரட்டும். சோலிய மொத்தமா முடிச்சுடலாம்.” என்றவர் சரக்கு மொத்தத்தையும் காலி செய்யும் பணியில் மும்முரமாக இருந்தார்.

தமையன் தலை போதையால் சாய்ந்ததைக் கண்டதும், இகழ்ச்சியாய் சிரித்த காசுமாணிக்கம், “கிறுக்கன்... காரியம் கச்சிதமா முடியட்டும். உன்னயும் அவைங்களோட மேலோகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்… குடும்பத்தப் பிரிச்ச பாவம் எனக்கு எதுக்கு?” என வன்மத்துடன் கூறினார்.

இதை எதையும் அறியாத அம்பா, மாத்திரையின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

காசுமாணிக்கமும் சரி, காசிநாதனும் சரி எதற்கும் துணிந்தவர்கள்… பணத்திற்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்க மாட்டார்கள்.

மகன்களின் இத்தகைய புத்தி பிடிக்காத தந்தை, சொத்தில் முக்கால் வாசியை திரு பெயரிலும், மீதியை அப்பாவியான இளைய மருமகள் பெயரிலும் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்டுவிட்டார்.

அவர் இறந்து வெகுநாட்களுக்குப் பிறகு, இந்த உண்மையை அறிந்து கொண்ட அண்ணன், தம்பி இருவருக்கும், மனைவியும் மகனும் எதிரிகளாகத் தெரிய ஆரம்பித்தனர்… அந்த எண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்து, கொலை செய்யும் அளவுக்கு வெறியாக மாறியது.

அதன் விளைவு காசுமாணிக்கத்தின் மனைவி இறப்பு… இல்லை இல்லை கொலை.

அதுவும் காசுமாணிக்கம் செய்த கொலை.

ஏற்கனவே கோபத்திலிருந்தவருக்கு மனைவியின் சின்ன சின்ன செயல் கூட தன்னை அவமதிப்பதாகத் தோன்ற ஆரம்பத்தது.

இதை அறியாத அந்த அப்பாவிப் பெண்மணி சாதாரணமாக கணவனிடம் மாமனாரை புகழ்ந்து பேச, ஏற்கனவே கடுங்கோபத்தில் இருந்தவர் தகாத வார்த்தைகளால் மனைவியைப் பேசினார்.

தன் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசவும் ஆத்திரமடைந்த காசுமாணிக்கத்தின் மனைவியும், ஆவேசம் கொண்டு எதிர்த்துச் சத்தமிட ஆரம்பித்தார்.

மனைவியின் பேச்சு காசுமாணிக்கத்தின் வன்மத்தையும் ஆத்திரத்தையும் மேலும் மேலும் தூண்டி விட, அருகிலிருந்த கடப்பாரையினால் சரமாரியாகத் தாக்கினார்… இதைத் துளியும் எதிர்பாராதவர் தன்னை காத்துக் கொள்ளக் கூட முடியாமல், அந்த நிமிடமே அவரின் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது.

மனைவி இறந்ததைக் கூட அறியாமல், காசு மாணிக்கம் ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டே இருந்தார்.

அப்பொழுது தூக்கத்திலிருந்து விழித்த அவரின் மகள் யமுனா, இந்தக் காட்சியைக் கண்டு கத்தவும் தான், இவர் சுயத்திற்கு வந்தார்.

யமுனாவின் அலறல் சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் என்னமோ ஏதோ என ஓடிவரவும், காசுமாணிக்கம் தப்பித்து ஓடிவிட்டார்.

யமுனாவை சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டி தடுத்த காசுமணிக்கம், ஆங்காங்கே பணத்தை தண்ணீர் போல் இறைத்து தப்பித்ததோடு, எந்தக் கவலையும் இன்றி சுதந்திரமாக வெளியில் நடமாடினார்.

அதில் தந்தையை வெறுத்த யமுனா, அவருடன் இருக்கப் பிடிக்காமல் அன்னையின் தாய், தந்தையுடனே கிளம்பிவிட்டாள்.

மனைவி செத்ததும் மகள் வீட்டை விட்டுப் போனதும் காசுமாணிக்கத்திற்கு வசதியாகப் போய்விட, நினைத்த இடத்தில் பன்றி வாய் வைப்பதைப் போல், இவரும் ஆங்காங்கே சின்ன வீடு வைத்துக்கொண்டு, உல்லாசமாக பொழுதைக் கழித்தார்.

இவற்றையெல்லாம் அறிந்த அம்பாவும் திருவும் காசு மாணிக்கத்தையும், அவருக்குத் துணையாக இருந்த காசிநாதனையும் வெறுக்க ஆரம்பித்தனர்.

அண்ணன் குடும்பத்தினர் தன்னை வெறுப்பதை அறிந்த காசுமாணிக்கம், காசிநாதனை தூண்டிவிட்டு, குடும்பத்தில் பிரச்சனையை கிளப்ப ஆரம்பித்தார்.

‘ஐந்து வயது வரை அண்ணன்- தம்பி… பத்து வயதில் பங்காளி' என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் காசுமாணிக்கம் அதையும் தாண்டி வஞ்சம் வைத்து காத்திருக்கும் பகையாளியாக மாறியிருந்தார்.

மழைநீரில் கரைந்து போன சாயம் போல் இல்லாது, இவரின் நஞ்சு நிறைந்த மனது, தனது உண்மை தோற்றத்தைக் காட்ட, மதகு உடைத்துக்கொண்டு சீறிப்பாயும் நீர் போல் வெளிப்பட ஆரம்பித்தது.

தம்பியின் பேச்சும் தந்தையின் செயலும் சேர, மனைவி மற்றும் மகனின் மீது வன்மம் கொண்ட காசிநாதன், இருவரையும் காரணமின்றித் தாக்கி வீட்டைவிட்டு விரட்டிவிட்டார்.

கணவனின் செயலில் வெகுண்ட அம்பா, மகனை மட்டும் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, மாமனார், தன் மகனுக்காக விட்டுச் சென்ற சொத்துக்களை பராமரிக்க ஆரம்பித்தார்.

அம்பாவின் உழைப்பால் கிடைத்த லாபம், இருவரின் கண்களையும் உறுத்த ஆரம்பிக்க, அடிக்கடி வம்பு செய்து இடைஞ்சல் கொடுத்தனர்.

இவர்களின் குடைச்சல்களை பொறுத்துக்கொண்டு, அவர் பாட்டுக்கு வேலையைச் செய்ய, அது பிடிக்காத ஆண்கள் இருவரும், அம்பாவின் மண்டையை உடைத்து விட்டனர்.

ஏதோ இன்று மருது இருக்கப் போய் உயிர் பிழைத்தார்… இல்லையேல், காசிநாதன் அடித்த வேகத்தில் அம்பா பரலோகத்திற்குப் போயிருப்பார்.

விடிந்ததும் வயலைப் பார்வையிடப் போன காசுமாணிக்கம், அம்பா வேலை செய்வதைக் கண்டதும், “இவள விடவே கூடாது. எதுனா செஞ்சே ஆவணும்.” என முணுமுணுத்தபடியே வீட்டிற்கு விரைந்தார்.

ஏதேதோ சொல்லி அண்ணனை உசிப்பியவர், அம்பாவிடம் வம்பு பண்ண அனுப்பினார்.

இதை அறியாத காசிநாதன் மனைவியிடம் மட்டுமல்லாது, அங்கு வேலை செய்த பெண்களிடம் சண்டைக்கு நின்றார்.

“பேசாமப் போயா… உன் பாட்டுக்கு ஏதாவது வம்பு செஞ்ச, மருவாத இருக்காது பாத்துக்க” என்ற அம்பா,

“உமக்கெல்லாம் வேல வெட்டியே இல்லையா? இங்கன வந்து ஒரண்ட இழுத்திக்கிட்டு இருக்காம உறுப்படியா ஏதாவது செய்யி... அதுதான் உமக்கு மருவாத” எனக் கோபத்தில் கத்தினார்.

மனைவியின் கத்தலில் ஆத்திரமடைந்த காசிநாதன், கையை ஓங்கிக் கொண்டு வரவும், அம்பா அவரை கீழே தள்ளி விட்டு விட்டார்.

மற்றவர்களின் முன்பு கீழே விழுந்ததால் அவமானமாக உணர்ந்த காசிநாதன், மனைவியை முறைத்தபடி, “என்னயவே தள்ளிவிடுறியா? ஏய் இருடி, உனக்கு இருக்கு” என வன்மம் நிறைந்த கண்களுடன் சொன்னவர், உடனடியாக அந்த இடத்தைக் காலி செய்து விட்டார்.

கணவனின் பேச்சை துளிகூட சட்டை செய்யாத அம்பா, ஆட்களை ஏவியபடி தன் வேலையில் கவனமாக இருந்தார்.

ஆனால் அங்கே இருந்த பெண்களோ, இனி என்ன ஆகுமோ என்ற பயத்துடன் வேலையைச் செய்தனர்.

மாலை போல் அக்காவுக்கு அழைத்த மருது, எடுத்த எடுப்பிலேயே, “என்னக்கா வேணுமாம் அந்தாளுக்கு? எதுக்காக பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கிறான்? உன்னை கஷ்டப்படுத்துவதை தவிர, அந்தாளுக்கு வேற வேலையே இல்லையா?” எனக் கோபமாகக் கேட்டார்.

“அதெல்லாம் கிடக்கட்டும். இங்கன நடக்கிறது, ஒனக்கு எப்புடி தெரியும்? யார் சொன்னா?” என கிடுக்குபடி போட்டுக் கேட்டார்.

“யாரோ சொன்னாங்க, இப்ப அதுவா முக்கியம்?” என சிடுசிடுக்கவும்.

அம்பா, “சமாளிக்காம, பதிலச் சொல்லுடா” என்றவர்,

“ஆள் யாராவது வச்சுயிருக்கியா?” எனக் கேட்க.

“அதெல்லாம் இல்லக்கா” என அவசரமாக மறுத்த மருது,

“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி, யாரோ கால் பண்ணி அந்த ஆள் நடந்ததை சொன்னாங்க… அதுதாங்க்கா உடனே உனக்கு கூப்பிட்டேன்” என்றார்.

“யாரோவா? அந்த யாரோக்கு நம்ம மேல என்ன அக்கறை? இது நல்லதாப்படல” என எதையோ யோசித்தபடி சொன்னவர்,

“ஒரு வேள ஒனக்கு போனப் போட்ட மாதிரி, அந்த யாரோ திருவுக்கும் போட்டிருந்தா?” என்று அதிர்ச்சியாகச் சொல்லவும், வெளியே ஒரு குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

உடனே அம்பா, “நீ திருவ கூப்பிட்டுப் பேசு. நான் யாருன்னு பார்த்துட்டு கூப்புடறேன்.” என்றவர் மருதுவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் வைத்துவிட்டார்.

அக்கா சொன்னதைக் கேட்டதும், குழப்பத்தில் ஆழ்ந்த மருது உடனடியாக மருமகனுக்கு அழைத்தார்… பலமுறை அழைத்தும் எடுக்காமல் போக, தங்களை சுற்றி பின்னப்படும் சூழ்ச்சியை உணர்ந்து, அடித்துப்பிடித்து ஊருக்குக் கிளம்பினார்.

கதவின் அருகில் சென்றவருக்கு மகனின் குரல் கேட்கவும், பரபரப்பாக தாழை திறந்தவர் அவனை பேசவிடாமல், “நீ ஏன்டா இங்கன வந்த? மொதோ உள்ளார வா” என்று அதிர்ந்து போய் கேட்டபடி கையைபிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே செல்லப் போனவரின் கரங்களை எதுவோ பலமாகத் தாக்கவும், வலி தாங்காமல் அலறினார்.

அன்னையின் அலறலில் திரும்பிய திருவின் தலையில், காசிநாதன் குத்துக்காலால் பலமாகத் தாக்கினார்.

திடீர் தாக்குதலில் நிலைகுழைந்த திரு வலியில் கதற, தனது வலியை மறந்து கணவனை கீழே தள்ளிய அம்பா,

“கொலைகார நாயிங்களா… என்னடா பண்றிங்க? ஏம் புள்ளைய?” என கத்தியபடி மகனிடம் விரைந்தார்.

அம்பாவின் செயலில் கோபமான காசிநாதன், கையிலிருந்த குத்துக்காலால் காலில் பலம் கொண்ட மட்டும் தாக்கவும், வலி தாளாமல் கீழே விழுந்தவரை, காசுமாணிக்கம் முடியைப் பிடித்து இழுத்துச்சென்று, அந்த சின்ன வீட்டினுல் தள்ளி கதவை அடைத்தார்.

அடிபட்ட கையையும் காலையும் இழுத்துக்கொண்டு கதவின் அருகில் சென்றவர், மகனுக்கு என்ன ஆனதோ என்ற தவிப்பில், “திரு, எப்படியாச்சும் தப்பிச்சு ஓடுடா… அம்மாவை பார்க்காத போ… போயிடு” என அழுகையோடு பலமாகக் கத்தினார்.

இடைஞ்சிலாக இருந்த அம்பாவை அப்புறபடுத்தவும், காசுமாணிக்கமும் காசிநாதனும் சேர்ந்து திருவை சரமாறியாகத் தாக்கினார்.

தொடர் தாக்குதலில் திருவுக்கு கத்தக்கூட திராணி இல்லாமல் போனது… அதன் விளைவு இவர்களை தடுக்கக்கூட முடியாமல் வசமாக சிக்கிக்கொண்டான்.

இரக்கமே இல்லாத காட்டுமிராண்டிகளிடம் சிக்கிக்கொண்டவனின் மனதில், அன்னை மட்டுமே தெரிந்தார்… தான் இல்லையேல் தாய் உயிரோடு இருக்கமாட்டாள் என தெளிவாக உணர்ந்தவன், முயன்று தனது எதிர்ப்பை காட்டியவனை, இருவரும் ஆவேசமாக இன்னும் இன்னும் தாக்க ஆரம்பித்தனர்… அதில் திருவிடம் எந்த அசைவும் இல்லாமல் போக, பையன் செத்துவிட்டதாக நினைத்து தாக்குவதை நிறுத்திவிட்டு, காசுமாணிக்கம் சோதனை செய்யப் போகவும், போலீஸ் ஜீப் வரும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது… சுதாரித்த ஆண்கள் இருவரும் சிட்டாகப் பறந்துவிட்டனர்.

உள்ளே இருந்த அம்பா, இங்கே நடப்பது தெரியாமல் தவிப்புடன், “ஐயோ! ஏம் புள்ளைய யாராவது காப்பாத்துங்களே…! கொலை காரப் பாவிங்களா கதவைத் திறங்கடா… கண்ணா, ராசா, சாமி பேசுய்யா!” என அழுகையோடு கத்தியவருக்கு, போலீஸ் ஜீப் சத்தம் கேட்டது.

இருளின் பிடியில் இருந்தவருக்கு, மெழுவர்த்தியின் வெளிச்சமாக காக்கி சட்டைக்கார்கள் தெரிய, தன் மொத்த பலத்தையும் திரட்டிக் கத்தியபடி கதவைத் தட்டினார்.

இந்த இரவின் அமைதியில் அம்பாவின் ஓலம் மிதமான வேகத்தில் வந்தவர்களுக்குத் தெளிவாகக் கேட்கவும், அதிகாரிகள் என்னமோ ஏதோ என ஓடினார்கள்.

அங்கே வந்தவர்களுக்கு நிலை புரிய, உடனே ஆம்புலன்ஸுக்கு கால் செய்தவர்கள், தாமதிக்காமல் தங்களின் ஜீப்பிலேயே தாய், மகன் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

இதற்காகவே இவ்வளவு நேரம் காத்திருந்தது போல், அம்பா ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்றார்.

அடுத்த இருபது நிமிடத்தில் இருவரும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

விடியலில் மருத்துவமனைக்கு வந்த மருது கண்டது, கைகால் இரண்டிலும் கட்டுடன் மயக்கத்திலிருந்த அம்பாவைத் தான்.

அக்காவைக் கண்டவருக்கு, திருவின் நிலை என்னவோ என, பயத்தில் போலீஸ் அதிகாரியிடம் சென்றார்.

வேர்க்க விறுவிறுக்க வந்த மருதைக் கண்டதும், காவல் அதிகாரி, “நீங்க தான் போன் போட்டதா?” எனக் கேட்டார்.

எதுவோ தவறாகத் தோன்ற, மருது ஊரிலிருந்து கிளம்பியதும் தனது காவல்துறை நண்பன் மூலம் போலீஸ்க்கு கால் பண்ணி தகவல் சொல்லிய பின் தான், பிளைட் ஏறினார்.

மருதுவின் இந்தச் செயலால் தான், அம்பாவும் திருவும் தப்பித்தனர்.

“ஆமாங்க சார்… நான் தான்” என்ற மருது, அக்காவின் புகுந்தவீட்டின் இலட்சணத்தை பிட்டுபிட்டு வைத்தவர், காசிநாதன் மற்றும் காசுமாணிக்கம் இருவரின் மேலும் புகார் தொடுத்தார்.

மருது, “சார்… பை… பையன்… எப்… எப்படி?” என தடுமாற்றத்துடன் கேட்டார்.

இவரின் நிலையை உணர்ந்த காவல் அதிகாரி, “கஷ்டம் தான் மருது… தலையில் பலமா அடிச்சு இருக்காங்க, அதில் மண்ட எழும்பு ஒடஞ்சு மூளையில் குத்தியிருக்கு.” என்றதும்,

உடைந்து போய்க் கதறிய மருதுவை தேற்றிய அதிகாரி, “வெசனப்படாதீக… ஆப்ரேஷன் ஆரம்பிச்சுட்டாக. நல்லதே நடக்கும்னு நம்புவோம்.” என்றார்.

இந்த வார்த்தையை மருது கேட்பதற்குள், பலமுறை செத்துப்பிழைத்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஒருபாடு அழுது தீர்த்தவர், மருமகனுக்காக குலதெய்வத்தை வேண்டிய படி, ஆபரேஷன் தியேட்டர் வாயிலில் தவம் கிடந்தார்.

இதற்கிடையில் மயக்கத்திலிருந்து விழித்ததும், மகனைத் தேடி ஆர்ப்பாட்டம் செய்த அம்பாவை சமாதானம் செய்து தூங்க வைத்தவர், விடியவிடிய நிலைகொள்ளாமல் தனி ஆளாகத் தவித்தார்.

காலை பத்துமணி போல் ஆபரேஷன் முடிந்து வெளியே வந்த மருத்துவரைக் கண்டதும், கடவுளைக் கண்டது போல் ஓடிய மருது, “டாக்டர், பையன் எப்படி இருக்கான்?” விழிநீர் தேங்கிய கண்களுடன் கேட்டார்.

மருத்துவர், “ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சடுச்சு” என்று கூறி, மருதுவின் காயம்பட்ட இதயத்திற்கு மயிலிறகால் மருந்திட்டவர்,

“என்னதான் ஆப்ரேஷன் முடிந்திருந்தாலும், பையன் கண்டிஷன் பத்தி தெளிவாச் சொல்ல நாப்பத்தெட்டு மணிநேரம் ஆகும்.” என்று குண்டைப் போட்டு விட்டுச் சென்று விட்டார்.

மருத்துவர் “க்கு” வைத்துப் பேசியதில் பயந்த மருது, அக்காவுக்கு விஷயம் தெரிய விடாமல், இரண்டு நாளாகப் போராடினார்.

ரெண்டு நாளாகத் தம்பியிடம் போராடிய அம்பா, நர்ஸிடம் பேசி விஷயத்தை அறிந்துகொண்டவர், தன்னால்தான் மகனுக்கு அந்த நிலை என்று அழுது தீர்த்துவிட்டார்.

இதற்கு இடையில் தப்பிச்சென்ற காசிநாதனும் காசுமாணிக்கமும் பிடிபட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அதில் இவர்கள் ஆள் வைத்து திருவை வரவைத்து, திட்டம்போட்டு கொலை செய்யப் பார்த்ததும் தெரிய வந்தது.

எதற்காக இத்தனையும் செய்தார்களோ, அதை அடைய முடியாமல், இருவரும் ஜெயிலில் இருக்கும் நிலை வந்தது தான் மிச்சம்.

அதற்குள்ள தான் இத்தனை ஆட்டம்… யாருக்காக இந்த சொத்தும் சுகமும்? போகும் போது தூக்கிச்செல்லவா? இல்லையே! அப்புறம் எதற்காக இத்தனை ஆங்காரமும் வஞ்சமும்? தந்தை சொத்துக்களை கொடுத்தது எவருக்கு? தாங்கள் பெற்ற மகனுக்கும் தன்னில் பாதியான மனைவிக்கும் தானே? தனது பெயரில் இருந்திருந்தாலும் இறுதிவரை வைத்து வாழப்போவது அவர்தானே? வெட்டி கௌரவமும் வீராப்பும் தங்களை அழித்ததோடில்லாமல் தங்களின் குடும்பத்தையே அழிக்கத்துணிந்தது எந்த விதத்தில் நியாயமானது? பணம், பெயர் என்ற எண்ணத்தில் மனிதனின் மனமும் இறுகி காட்டு விலங்குகளை விட மோசமான நிலைக்குச் செல்கின்றனர்…

காட்டு விலங்குகள் கூட பசிக்காக அடுத்த விலங்கைத் தான் வேட்டையாடுமே தவிர, தங்களின் குடும்பத்தை புசிக்காது…. ஆனால், இந்த மனிதர்கள் அராஜகத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.

இங்கே நடந்ததை தனது தோழி மூலம் அறிந்துகொண்ட யமுனா, தாத்தா, பாட்டியோடு அண்ணனைக் காண ஓடி வந்துவிட்டாள்.

இவளின் வரவு அம்பாவுக்கும் மருதுவுக்கும் பக்கபலமாக இருக்க, சற்று திடமாக உணர்ந்தனர்.

அண்ணனைக் காண வந்த யமுனா, அதோடு விடாமல் தன் பங்குங்கு கேஸ் போட்டு, காசிநாதனையும் காசு மாணிக்கத்தையும் ஜாமீனில் கூட வெளியே வராதபடி, ஆயுள் முழுவதும் உள்ளே இருக்கும் படி செய்தாள்.

இதன் மூலம் தனது அன்னைக்கான நியாயத்தையும் வாங்கிக் கொடுத்தாக நினைத்தவள், தன்னால் முடிந்த மட்டும் பெரிய அன்னையை கவனித்துக்கொண்டாள்.

இதற்கு இடையே, உயிர் பிழைத்த திரு, வெற்றுக்கூடாக ஆழ்ந்த துயிலுக்குச் சென்றுவிட்டான்.

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகியதே தவிர, திருவின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை… வெறும் மூச்சுமட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.

இன்றோடு கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது அப்போது என நாட்கள் ஓடியதே தவிர திரு விழித்தபாடில்லை.

அனைவரும் நம்பிக்கை இழந்த நிலையில், அம்பா மட்டும் தனது மகன் என்றாவது ஒருநாள் எழுந்துவருவான் என்ற நம்பிக்கையில் மருத்துவச் செலவுக்காக, கொஞ்சம் சொத்தை விற்று பணத்தை எடுத்துக்கொண்டு, சிகிச்சைக்காக கேரளா நோக்கி வைராக்கியமாகப் பயணித்தார்.

ஆம், இது வைராக்கியம் தான்…

தனது மகன் தனக்கு வேண்டும் என்ற அன்னையின் துடிப்பு, தவிப்பு…

இந்தத் தவிப்பின் முன், விதியானது பிடரியைக் காட்டி ஓடி மறையும் நாள், வெகுவிரைவில் என எண்ணுவோம்.

கதிரவனை மறைத்த கரிய மேகம் போல், இந்த வேதனையும் துயரமும் மறைந்து அன்னைக்காக திரு திரும்பி வருவான் என்று நாமும் நம்பிக்கையோடு காத்திருப்போம்.


ஆசை பேராசை

என்றும் நிராசை!

ஓசை பேரோசை

ஓங்கார பரிபாசை

தாய்மையின் மடி பேசும்

வைராக்கிய உளி ஓசை!

 

Attachments

  • eiSCMQW40282.jpg
    eiSCMQW40282.jpg
    290.7 KB · Views: 0
Top