எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் நினைவிலே கரைகிறேன்! - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 81 (இறுதி அத்தியாயம்) (பாகம் 1)

மோஹித்தை எதுவும் செய்யாமல் பகீரதன் விட்டு விட்டாலும் கூட அவனுக்கான தண்டனை கிடைத்து விட்டது.

ஆம்! கார் விபத்தில் அவனுக்கு அளவுக்கதிகமான காயங்கள் ஏற்பட்டு அவனை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்கிறார்கள் அல்லவா?

அவ்வறைக்கு வெளியே இருந்து கொண்டுத் தன் மகனின் நிலையை எண்ணிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ஜெகதாவிடம் அவரது மகனுக்குத் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலைமையை எப்படி சொல்வது என்று தயக்கம் கொண்டார் அவனுக்குச் சிகிச்சைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்.

ஏனெனில், மோஹித்தின் விதத்தைப் பற்றிய செய்தியையே இவரால் தாங்க முடியவில்லை என்ற போது அவனின் இப்போதைய நிலைமையைப் பற்றிக் கேட்டால் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இவரது உடல்நலத்தில் இன்னும் மோசமான பாதிப்பு ஏற்பட்டு விடுமே என்று எண்ணியவரோ,

“மேம்! சந்திரபாபு சாருக்கு ஃபோன் செஞ்சி வரச் சொல்றீங்களா? அவர்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்”என்று ஜெகதாவிடம் கூறினார் மருத்துவர் தாமோதரன்.

அதைக் கேட்டதும்,”எதுக்கு சார்? என்ன விஷயமாகப் பேசப் போறீங்க? எங்கப் பையன் மோஹித்துக்கு எதுவும் ஆகலை தானே?”என அவரிடம் படபடப்புடன் வினவ,

“அவருக்கு எதுவும் ஆகலை மேம். நீங்க சாரை வரச் சொல்லுங்க ப்ளீஸ்”என்று அவருக்கு அறிவுறுத்த,

உடனே தனது செல்பேசியை எடுத்துக் கணவருக்கு அழைத்து,”ஏங்க! உங்க கிட்ட டாக்டர் ஏதோ முக்கியமான விஷயம் பேசனுமாம். உடனே கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வாங்க”என்று கூறி வைத்து விட்டு மனச் சஞ்சலத்துடன் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார் ஜெகதா.

அவரது அழைப்பை அவதானித்த சந்திரபாபுவோ தூக்கத்தை மறந்து, தன்னுடைய மகனைப் பற்றின கலக்கத்துடன் அடித்துப், பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து,

“ஜெகாம்மா! என்னாச்சு? மோஹித்துக்கு ஒன்னும் ஆகலை தானே?”என்று தன்னைப் போலவே பரிதவித்துப் போய்த் தன்னிடம் கேட்ட தனது கணவரிடம்,

“அது எனக்கும் தெரியலைங்க. டாக்டர் உங்க கிட்ட தான் பேசுவாராம். என்னன்னுப் போய்க் கேட்டுட்டு வாங்க”என்று கூறி அவரை மருத்துவரிடம் அனுப்பி வைத்தார் ஜெகதா.

உடனே தாமோதரனிடம் விரைந்து சென்று,”டாக்டர்! நீங்க என்னை வரச் சொன்னதாக என் வொய்ஃப் சொன்னாங்க”என்றதும்,

“ஆமாம் சார். நீங்க முதல்ல உட்காருங்க”என அவரை அமரச் சொல்லி விட்டு,

“உங்கப் பதட்டத்தைக் குறைங்க. தண்ணீர் குடிங்க”என்றவர் சொன்னதைச் செய்து விட்டு அவரையே பரபரப்புடன் ஏறிட்டார் சந்திரபாபு.

“நான் சொல்றதைக் கேட்டு நீங்க உடைஞ்சிடக் கூடாது சார். அதே மாதிரி அதை உங்க மனைவிக் கிட்டேயும் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லனும்”என்றவரை அலைபாயும் விழிகளுடன் நோக்க,

“உங்கப் பையன் மோஹித் சாருக்கு அந்தக் கார் ஆக்ஸிடன்ட்டில் ரொம்ப பலமாக அடிபட்டதால் அவர் ரொம்ப சீரியஸ் கண்டிஷனில் தான் இருந்தார். ப்ளட் லாஸ் ஆகி இருந்தாலும் கூட எப்படியோ இரத்தத்தை ஏத்தி அவரைக் குணமாக்க டிரை பண்ணோம். ஆனால் நாங்க அவருக்கு கொடுத்த ட்ரீட்மென்ட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படலை. அவர் கொஞ்சம், கொஞ்சமாகத் தன்னோட சுய நினைவை இழந்துட்டு இருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் கோமா ஸ்டேஜூக்குப் போயிடுவார்”எனத் திக்கித் திணறி அவரிடம் விஷயத்தை உரைத்து விட்டார் தாமோதரன்.

அதைக் கேட்டவுடனேயே சந்திரபாபுவிற்கு நிலைத் தடுமாறி விட்டது.

அவரது கைகள் நடுங்குவதைக் கண்டதும்,”சார் ப்ளீஸ்! காம் டவுன்”என்று அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அவரின் கரங்களைப் பற்றி,

“இங்கே பாருங்க சார். இப்போ தான் நீங்களும், உங்க வொய்ஃபும் ரொம்பவே மன உறுதியோட இருக்கனும். எப்போ வேணும்னாலும், என்ன அற்புதம் வேணும்னாலும் நிகழலாம். அதனால் நீங்க ரெண்டு பேரும் நம்பிக்கையைக் கை விட்றாதீங்க! உங்கப் பையன் வாழ்க்கை முழுசும் கோமாவிலேயே இருப்பாருன்னு இல்லை. அவர் எப்போ வேணும்னாலும் அதிலிருந்து மீண்டு வரலாம். நீங்க ரெண்டு பேரும் அவரை நல்லா பார்த்துக்கிட்டு, அவர்கிட்டே பேச்சுக் கொடுத்துட்டே இருங்க. அது மூலமாக கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்! மனசைத் தளர விடாதீங்க!”என்று கூறிச் சந்திரபாபுவிற்கு நம்பிக்கை கொடுத்தார் தாமோதரன்.

ஆனால் அவரது வார்த்தைகள் யாவும் வீண் போயிற்று.

அடுத்த நிமிடத்தில் அவர் மயங்கிப் போய் விட,

“சார்!”என்று அவரைப் பரிசோதித்து சிகிச்சையும் அளித்து விட்டு அவரது மனைவியை அழைத்து,

“ஜெகதா மேம். உங்க ஹஸ்பண்ட் மயக்கம் போட்டுட்டார். அவருக்கு ட்ரீட்மென்ட் தந்து ரூமில் படுக்க வச்சிருக்கோம்”என்றவுடன்,

“அச்சோ! அவருக்கு என்னாச்சு டாக்டர்? மோஹித்துக்கு ஏதோ ஆயிடுச்சு! அதை நீங்க அவர்கிட்டே சொல்லப் போய்த் தான் அவருக்கு இந்த நிலைமை வந்துருக்கு. அப்படித் தானே?”என்று அவரிடம் அழுகையுடன் கேட்க,

“ஆமாம் மேம். ஆனால் நான் உங்ககிட்ட உண்மையைச் சொல்லித் தானே ஆகனும்? உங்கப் பையனுக்கு என்ன ஆகுதுன்னு சொல்லனும்ல? அது தானே என்னோட கடமை? நான் வேற என்னப் பண்ண முடியும் மேம்?”என்ற தாமோதரனிடம்,

உடனே தனது கண்களைத் துடைத்து விட்டுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,”எங்கப் பையனுக்கு என்னாச்சு சார்? அவன் இனிமேல் கண்ணு முழிக்கவே மாட்டானா?”என்று வெற்றுப் பார்வையுடன் வினவினார் ஜெகதா.

உடனே நீண்ட பெருமூச்சை வெளியிட்டு,”ஆமாம் மேம்”என்றுரைத்து விட்டு, அவரது கணவர் சந்திரபாபுவிடம் சொன்னதை அப்படியே அவருக்கு விவரித்து முடித்தார் மருத்துவர் தாமோதரன்.

அதைக் கேட்ட ஜெகதாவிற்கு இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை என்றான பிறகு ஒரு வெறுமை உணர்வு ஏற்படுமே? அது அவருக்குள் தோன்றி விட்டது போலும்!

அதனாலேயே இப்போது மருத்துவர் தன்னிடம் கூறியதைக் கேட்டும் கூட ஆடாமல், அசையாமல், மயக்கம் போட்டு விழுகாமல் கல் மாதிரி அமர்ந்திருந்தார்.

அதைக் கண்டு,”மேம்”என்று தன்னை அழைத்த தாமோதரனிடம்,

“எனக்கு ஒன்னும் ஆகலை டாக்டர். நான் தானே இனிமேல் என் புருஷனையும், பையனையும் நல்லா பார்த்துக்கனும்! நாங்க செஞ்சப் பாவத்துக்கு அனுபவிச்சுத் தானே ஆகனும்? வேற என்னப் பண்ண முடியும்? இப்போ அவர் எங்கே இருக்கார்?”என்று தனது கணவரைப் பற்றி விசாரித்தார் ஜெகதா.

“இருங்க”என்றவரோ,

செவிலியரை அழைத்து,”இவங்களைச் சந்திரபாபு சார் இருக்கிற ரூமுக்கு அழைச்சிட்டுப் போங்க”என்றுரைத்து இருவரையும் அனுப்பி வைத்து விட,

உடனே அந்தச் செவிலியர் காட்டிய அறைக்குள் நுழைந்து தனது கணவரிடம்,”என்னங்க! டாக்டர் எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டார். இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு?”எனக் கேட்டார் ஜெகதா.

அப்போது தான், இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தவரோ,”எனக்கு இப்போ பரவாயில்லைம்மா. உண்மையிலேயே டாக்டர் உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரா?”என்று அவரிடம் பரிதவிப்புடன் வினவினார் சந்திரபாபு.

“ஆமாங்க”என்றவரிடம்,

“அதைக் கேட்டு நீ…”என்ற கணவரை இடைமறித்து,

“அதைக் கேட்டும் நான் இப்படிக் கல்லு மாதிரி இருக்கிறேன்னுப் பார்க்கிறீங்களா?”என்றதும்,

“ம்ஹ்ம்”என்றார் சந்திரபாபு.

“இப்போ வரைக்கும் நிறையப் பார்த்துட்டோம். இனிமேல் பார்க்க எண்ண இருக்குங்க? இதையெல்லாம் நம்மப் பையன் தானே நமக்குத் தேடிக் கொடுத்து இருக்கான்? நாம செஞ்சப் புண்ணியம் கூட அவனைக் காப்பாத்தலை! அப்படின்னா என்ன அர்த்தம்? அவ செஞ்சதுக்கு அவன் கண்டிப்பாக அனுபவிச்சுத் தான் ஆகனும்! அதே மாதிரி அவனைப் பெத்தக் காரணத்தால் நாமளும் அவன் கூடச் சேர்ந்து அந்தப் பாவத்தைச் சுமந்து தான் ஆகனும்! இனிமேல் அழுகிறதால் எந்தப் பிரயோஜனமும் இல்லங்க! நம்ம மோஹித், அந்தப் பகீரதனோட வழியில் போகாத வரைக்கும் அவனும் அமைதியாகத் தானே இருந்தான்? இவன் தானே அவனை உசுப்பேத்தி விட்டது! அதனால் தானே இதெல்லாம் நடந்துச்சு? அப்போ தப்பு நம்ம மேல் தான்! அதுக்கான தண்டனையையும் நாம அனுபவிக்கனும்! அது தான் உலக நியதி!”என்றுரைத்த மனைவியை மலைத்துப் போய்ப் பார்த்து,

“அப்போ நம்மப் பையனுக்காக நாம அந்தப் பகீரதனைப் பழி வாங்க வேண்டாமா?”என்றவரிடம்,

“ம்ஹூம். அவனைப் பழி வாங்குனா மட்டும் நம்ம மோஹித் எழுந்து நடமாடிடுவானா என்ன? அதெல்லாம் வேண்டாம்ங்க. நமக்கு யாருமே வேண்டாம். நாம மூனு பேரும் மட்டும் ஒன்னா இருப்போம்! நம்மப் பையன் கோமாவில் இருந்து மீண்டு வர்ற வரைக்கும் அவனை நாமப் பொத்திப் பாதுகாக்கனும். அதில் மட்டும் கவனத்தைச் செலுத்துவோம்”என்று தீர்க்கமாக கூறினார் ஜெகதா.

அவரது வார்த்தைகள் இருந்த உண்மைத் தன்னைச் சுட்டு விடவும்,

“நீ சொல்ற படியே நடப்போம்மா. நமக்கு மோஹித் தான் முக்கியம்!”என்று அவருக்கு உறுதி அளித்தார் சந்திரபாபு.

அதற்குப் பிறகுத் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு மருத்துவரிடம் போய் மேற்படி விவரங்களைக் கேட்டுக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியவற்றைச் செய்யத் தொடங்கினார்கள் இருவரும்.

அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறி முதல் வேலையாகத் தனது மகனைப் பற்றிய செய்தி ஒன்றை அனைத்து மீடியாக்கள் முன்னிலையிலும் அறிவிக்கப் போவதாக அவர்களை நேரலைக்கு அழைத்தார் சந்திரபாபு.

அவரது அழைப்பின் பேரில் உடனே அனைத்து மீடியா நிருபர்களும் ஒரு பொது இடத்தில் கூடி விட்டனர்.

தனது குரலைச் செருமிக் கொண்டு,”என் பையன் மோஹித் ஒரு படத்துக்காகத் தன்னோட உடலையும், முகத்தையும் மாத்திக்கிட்டு இருக்கார்! அதனால் அவர் கொஞ்ச மாசத்துக்கு வெளியே வர மாட்டார்! மக்கள் நிறைய பேர் கூடுற இடத்திலும் அவரை நீங்கப் பார்க்க முடியாது அப்படின்றதை உங்களுக்கும், அவரது மேலான ரசிகர்களுக்கும் தெரிவிச்சிக்கிறேன். அவரோட சினிமாப் பயணம் இன்னும் தொடர உங்களோட ஆசி வேணும்னு அவர் கேட்டுக்கிட்டார்! நன்றி!”என்று அறிவித்து விட்டுத் தன்னிடம் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு மேலோட்டமாகப் பதிலளித்து விட்டு அங்கேயிருந்து அகன்று விட்டார் சந்திரபாபு.

அதற்குப் பிறகு அனைத்து நேரலைகளிலும் இவரது அறிவிப்பு தான் காணக் கிடைத்தது.

அதைப் பார்த்த நடாஷாவும், அவரது பெற்றோரும் கூடச் சந்திரபாபுவிற்கு அழைத்து விவரம் கேட்டார்கள்.

“நான் லைவில் சொன்ன விஷயம் உண்மை தான்ங்க! அவன் அந்தப் படத்துக்காக ரொம்ப தீவிரமாகத் தன்னை மெருகேற்றிட்டு இருக்கான்! அதான்!”என்றுரைக்க,

“அப்போ ஓகே சார். அந்தப் படம் முடியிற வரைக்கும் நாங்க வெயிட் பண்றோம்”என்று கூறி விட்டனர் நவீன் மற்றும் ஹேமா.

அதற்குப் பிறகு, நடாஷாவும் தனது மாடலிங் தொழிலில் கவனம் செலுத்த முடிவெடுத்து விட்டாள்.

- தொடரும்
 
அத்தியாயம் - 81(இறுதி அத்தியாயம்) (பாகம் 2)

ஆனால் சந்திரபாபுவின் நேரலையைப் பார்த்ததும், சற்று முன்னர், தனது மெய்க்காப்பாளன் மோஹித்தின் நிலையைச் சொன்னதையும், இவரது அறிவிப்பையும் நினைத்துப் பார்த்து,”வினை விதைத்தவன் வினை அறுத்தே தீருவான்! யாராக இருந்தாலும், தான் செய்த பாவத்தின் பலனை அனுபவிச்சே தீரனும்!”என்று அழுத்தமாக கூறிக் கொண்டுத் தனது காரிலேறி மனைவியின் பிறந்த வீட்டிற்குச் சென்றான் பகீரதன்.

அங்கே தன்னைப் பிரத்தியேகமாக அலங்கரித்துக் கொண்டு அவனுக்காக காத்திருந்த ஹாரண்யாவோ, அவனது வருகையை அறிந்ததும்,”பகீ!”என்று மகிழ்ச்சி அடைந்து,”அவர் வந்துட்டார்”எனப் பெற்றோரிடம் தெரிவிக்க,

உடனே தாங்களும் அவளுடன் இணைந்து கொண்டுப் பகீரதனை வரவேற்று அவனுக்குப் பழச்சாறு கொடுத்து உபசரித்தனர் இயமானன் மற்றும் மதுராஹினி.

“நாங்க கிளம்புறோம் மாமா, அத்தை”என்றவனிடம்,

“நைட் தங்கிட்டு நாளைக்குப் போகலாம்ல மாப்பிள்ளை?”என்க,

“இருக்கட்டும் அத்தை. இன்னொரு நாள் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வர்றோம்”என்றுரைத்து விட்டுத் தனது மனைவியுடன் சேர்ந்து அவர்களது பாதம் பணிந்து எழுந்தான் பகீரதன்.

அதே சமயம்,”இதுவரைக்கும் நான் பண்ண எல்லாத்துக்கும், உங்களைக் கஷ்டப்படுத்துனதுக்கும் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன் மாமா, அத்தை”என்றவனோ,

“உங்க முன்னாடியே நான் ரணுகிட்டேயும் மனம் வருந்தி நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்”எனத் தனது மனைவியிடம் மனதார மன்னிப்பு வேண்டி விட்டு,

“இனிமேல் அப்படி நடக்காதுன்னு உங்க மூனு பேருக்கும் நான் வாக்குத் தர்றேன்”என்று உறுதி அளித்தான் பகீரதன்.

அவன் தன்னுடைய தவறை உணர்ந்து, வருந்தி தங்களிடம் மன்னிப்புக் கேட்டதைக் கண்ட மற்றவர்களது மனம் குளிர்ந்து போயிற்று.

“எங்களுக்கு உங்க மேல் நம்பிக்கை இருக்கு மாப்பிள்ளை”எனக் கூறி அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தங்களது மகளை மகிழ்ச்சியுடன் அவனுடன் அனுப்பி வைத்தார்கள் இயமானன் மற்றும் மதுராஹினி.

தன்னவனின் கையிடுக்கில் தனது கையைப் பிணைத்துக் கொண்டு அவனது தோளில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்து அவனுடனான பயணத்தை ரசித்தாள் ஹாரண்யா.

அதில் குறுநகை மிளிரத் தன்னவளின் நெற்றியில் முத்தத்தைப் பதித்தான் பகீரதன்.

அதைக் கண்களை மூடி அனுபவித்துக் கொண்டிருந்தவளை,”வீட்டுக்கு வந்தாச்சு ரணு”என அவளிடம் மிருதுவாக உரைக்க,

உடனே தன்னைச் சரிப்படுத்திக் கொண்டுக் காரிலிருந்து இறங்கி அவனுடன் தனது புகுந்த வீட்டிற்குள் பிரவேசிக்க முனைந்த ஹாரண்யாவை வாசலிலேயே தடுத்து நிறுத்தி,

“ஆரத்தி எடுத்ததுக்கு அப்பறம் உள்ளே வா ஹாரா”என்று கனிவுடன் கூறி விட்டு அவர்கள் இருவருக்கும் ஆரத்திச் சுற்றி முடித்து,

“இப்போ வாங்க”என அவர்களை வீட்டினுள் அனுமதித்தார் மனோரமா.

உடனே தானும், தன் கணவனும், அவரையும், பாலேந்திரனையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்களில் கால்களில் விழ,

“இனிமேல் உங்க வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல், எல்லாமும் பெற்று நீங்க சந்தோஷமாக இருக்கனும்!”என்று வாழ்த்தினர் இருவரும்.

அதற்குப் பிறகு ஹாரண்யாவிற்குக் குடிக்கப் பழச்சாறு கொடுத்து விட்டுத் தங்களுடன் அமர வைத்துக் கொண்டு அவளுடன் உரையாடத் தொடங்கி விட்டனர் பகீரதனின் பெற்றோர்.

அவள் இன்னும் தனது செல்பேசியை எடுத்துப் பார்க்கவில்லை மற்றும் சற்று நேரத்திற்கு முன்னர் தனது வீட்டிலும் தொலைக்காட்சியைப் பார்க்காமல் கணவனுக்காக காத்திருந்ததால் அவளுக்குச் சந்திரபாபுவின் பேட்டியையும் பார்க்கவில்லை.

அதனாலேயே அவள் தனது கணவனிடம் விஷயத்தைக் கேட்கவில்லை.

ஆனால் தனது அத்தை, மாமாவுடன் அளவளாவிக் கொண்டிருந்த ஹாரண்யாவின் செல்பேசி ஒலிக்கவே அதை எடுத்துப் பார்த்து விட்டு,”மினி தான் கால் செய்றா”என்று பொதுவாக அறிவித்தாள்.

மனோரமா,“நீ பேசிட்டு வா ஹாரா. இங்கே தானே இருக்கப் போற. நாம எப்போ வேணும்னாலும் பேசிக்கலாம். உன் ஃப்ரண்ட் உன்னை விசாரிக்க கால் பண்ணி இருப்பாள்”என்று கூறி விடவும்,

அதைக் கவனித்து விட்டு அந்த செல்பேசி அழைப்பைப் பேசி முடித்த பின் தன்னிடம் மனைவி கேட்கப் போகும் கேள்விகளை எதிர் கொண்டு அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருக்கலானான் பகீரதன்.

அதே நேரத்தில் தனது தோழியின் அழைப்பை ஏற்றுப் பேசிய ஹாரண்யாவிடம்,

“ஹலோ ஹாரா! நீ உன் புகுந்த வீட்டுக்கு வந்துட்டியா?”என்று அவளிடம் வினவினாள் தாமினி.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன் மினி”என்று அவளுக்கு உற்சாகமாகப் பதிலளித்தாள்.

“அப்போ நீ இப்போ வரைக்கும் டிவி நியூஸ் பார்க்கலையா?”என்ற தோழியிடம்,

“ஆமாம். இங்கே வந்ததும் அத்தை, மாமா கூடப் பேச ஆரம்பிச்சிட்டேன். டிவி, மொபைல் எதுவுமே பார்க்கலை. ஏன் ஏதாவது முக்கியமான நியூஸ் வந்திருக்கா?”என்றாள் ஹாரண்யா.

“ஆமாம். மோஹித் சாரோட அப்பா லைவில் ஒரு விஷயத்தைப் பத்திச் சொல்லி இருக்கார். அது தான் இப்போ தீயாகப் பரவிக்கிட்டு இருக்கு!”என்றதும்,

“அப்படியா மினி? இதோ நான் அதை உடனே பார்த்துட்டு உனக்குக் கூப்பிட்றேன்”என அழைப்பைத் துண்டித்து விட்டு,

“டிவியில் முக்கியமான ஒரு பேட்டி லைவில் போகுதாம். அதைப் பார்ப்போமா?”என்று தன் கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம் கேட்டாள் ஹாரண்யா.

“அதைச் சொல்லத் தான் உன் ஃப்ரண்ட் கூப்பிட்டாங்களா?”என விசாரித்தார் பாலேந்திரன்.

“ஆமாம் மாமா”என்றுரைத்து விட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பிக்க,

அதில் சற்று நேரத்திற்கு முன்னர் மோஹித்தின் தந்தை சந்திரபாபு நேரலையில் கொடுத்த நேர்காணலைக் கவனமாகப் பார்க்கத் தொடங்கி விட்டாள் ஹாரண்யா.

அவளுடன் சேர்ந்து பாலேந்திரன் மற்றும் மனோரமாவும் அந்தச் செய்தியைப் பார்க்கவும், அவர்கள் மூவரின் முக பாவனைகளைக் கவனிக்கத் தொடங்கினான் பகீரதன்.

சிறிது நேரம் கடந்த பின்பு, சந்திரபாபுவின் நேரலையை முழுமையாக கேட்டு முடித்திருந்த மற்ற மூவரும் அவனைக் கூர்மையான பார்வையால் துளைத்தனர்.

அதை அவதானித்து,”ம்ம். நான் அவனை ஆக்ஸிடன்ட் மட்டும் தான் பண்ண சொன்னேன். அதை மட்டும் தான் என்னோட ஆளுங்க செஞ்சாங்க. ஆனால் அவன் இப்போ கோமா ஸ்டேஜூக்குப் போயிட்டான்! அதை மறைக்கத் தான் அவனோட அப்பா இப்படி பேட்டிக் கொடுத்து இருக்கார்”என்று அவர்களிடம் விவரித்தான் பகீரதன்.

அதில் அவனைக் குற்றம் சாட்டுவது போல் பார்த்தாள் ஹாரண்யா.

உடனே,”நான் ஆக்ஸிடன்ட் பண்ணதுக்கு அப்பறம் தான் நீ எங்கிட்ட சத்தியம் வாங்குன! அதுக்கப்புறம் நான் அவனை எதுவும் பண்ணலை”என்று அவளுக்கு விளக்கம் அளிக்க,

“இனிமேலும் எதுவும் பண்ணிடாதீங்க!” என்று அவனிடம் அறிவுறுத்தினாள் மனைவி.

அதேபோல்,”அது தான், பாதிக்கப்பட்ட பொண்ணே சொல்லிட்டாளே! நீ அவனை எதுவும் செய்யக் கூடாது பகீரதா! அவன் இதிலிருந்து மீண்டு குணம் ஆகனும்! அவங்கப்பா, அம்மாவுக்கு அவன் ஒரே பையன்! இப்போவே அவனோட இந்த நிலைமையை நினைச்சு அவங்க ரொம்ப துடிச்சுப் போயிருப்பாங்க! அந்தப் பாவம் நமக்கு வேண்டாம்”என்று தாங்களும் அவனுக்கு அறிவுரை வழங்கினார்கள் பாலேந்திரன் மற்றும் மனோரமா.

அவர்களது வார்த்தைக்கு மரியாதை கொடுத்து,”சரி. நான் அவனை இனிமேல் ஒன்னும் செய்ய மாட்டேன்!”என்று உறுதி அளித்தான் பகீரதன்.

ஆனால் ஹாரண்யாவின் பெற்றோரான இயமானன் மற்றும் மதுராஹினிக்கோ தன் மனைவிக்காக செய்த பழி வாங்கும் படலங்கள் எதுவும் தெரியாததால், மோஹித்தின் தந்தையின் நேரலையைப் பார்த்து விட்டு,

“இனிமேலாவது அவன் படம் நடிக்கிறதில் கவனம் செலுத்தட்டும். நம்மப் பொண்ணை வாழ விடட்டும்! இதுக்கப்புறமும் அவன் நம்மப் பொண்ணுக்கு ஏதாவது தொல்லைக் கொடுத்தால் நானே அவனை ஏதாவது பண்ணிடுவேன்!”எனச் சூளுரைத்தார் ஹாரண்யாவின் தந்தை.

உடனே தனது தோழிக்கு அழைத்து,”அந்தப் பேட்டியைப் பத்தி இவர்கிட்டே கேட்டுப் பார்த்தேன் மினி. இவருக்கு எதுவும் தெரியாதாம். ‘ஒருவேளை நான் அவனை ஏதாவது செய்துடுவேன்னுப் பயந்து போய்த் தலைமறைவாகி இருப்பான்னு நினைக்கிறேன்’ - னு சொன்னார். எனக்கும் அது தான் தோணுது”என்று கூறித் தாமினியைச் சமாளித்து விட்டாள் ஹாரண்யா.

அதேபோல் தங்களுக்கு இனிமேல் மோஹித்தின் தொல்லை இருக்காது. அவன் தனது படப்பிடிப்பு விஷயங்களில் பிஸியாகி விடுவான் என்று எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலானார் சுதன்.

அதற்குப் பிறகு வந்த நாட்களில், தான் நினைத்ததைப் போல் பகீரதன் மற்றும் ஹாரண்யாவின் நலனிற்காக ஹோமம் நடத்தினார் மனோரமா.

அதில் இயமானன் மற்றும் மதுராஹினியும் கலந்து கொண்டுத் தங்களது மகள் மற்றும் மருமகனுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

இரவு நேரத்தில், தங்களது அறையில் இருக்கும் போது,”பகீ! நீங்க எனக்காக எது வேணும்னாலும் செய்வீங்களா?”என்று தன் கணவனிடம் வினவினாள் ஹாரண்யா.

“அதில் உனக்கு என்ன சந்தேகம் ரணு” என்றான் பகீரதன்.

“அப்போ நான் என்ன செய்யச் சொன்னாலும் அதையும் செய்வீங்களா?”என்று அவனிடம் கிறக்கத்துடன் கேட்க,

அவளது குரலில் இருந்த மோன நிலையை அறிந்து கொண்டு,”ம்ஹ்ம். ஆமாம். செய்வேன்”என்றுரைக்க,

“அப்படின்னா என்னை இப்போ இறுக்கமாக கட்டிப் பிடிச்சுக்கோங்க”என்றவளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் பகீரதன்.

அவனது காதுகளில்,”என்னைக் கிஸ் பண்ணுங்க”என்றதும்,

அவளது முகம் முழுவதும் தன் இதழ்களை அழுத்தி முத்த முத்திரைகளைப் பதிக்க,

அதில் தனது உடல் சிலிர்த்துப் போய்,”இப்போ நான் சொல்ற எல்லாத்தையும் நீங்க செய்யனும்!”என்றவளோ,

அவனுக்குக் கட்டளையிட, அதை எல்லாம் தீவிரமாகச் செயல்படுத்த தொடங்கி விட்டான் பகீரதன்.

தன்னுடைய அணைப்பில் இருந்து அவளை விடுவித்து விட்டுத் தன் கரங்களில் மனைவியைத் தூக்கிக் கொண்டுப் படுக்கைக்குச் சென்று அவளை மெல்ல இறக்கி விட்டு அவள் மீது மிருதுவாகப் படர்ந்து,

தன்னவளின் உடலை ஆட் கொள்ள ஆரம்பிக்க, அதில் அவளது உடலெங்கும் மயிர்க்கூச்செறிந்தது.

தன் கணவனின் கைகள் செய்த ஜாலத்தால் வெட்கத்தில் சொங்கொழுந்தாக மாறிப் போனது ஹாரண்யாவின் தேகம்.

தங்கள் இருவரின் உடைகளுக்கும் விடுதலை கொடுத்தவனோ, தன்னவளைச் சிறை செய்து அவளுக்கு இனிமையான தண்டனைகளை இரவு முழுவதும் வழங்கினான் பகீரதன்.

அதேபோல் கணவனுக்குச் சற்றும் சளைக்காமல் அவனுக்குத் தன்னுடைய காதலை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள் ஹாரண்யா.

அவர்கள் இருவரது இல்லற வாழ்க்கை இனிதே மலரத் தொடங்கி விட்டிருந்தது.

இங்கோ தங்களது மகனின் தற்போதைய நிலைமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அனுதினமும் அழுது புலம்புக் கொண்டு இருந்தனர் மோஹித்தின் பெற்றோரான சந்திரபாபு மற்றும் ஜெகதா.

அவன் கோமாவில் இருந்து மீண்டுக் குணமாகித் தங்களிடம் திரும்ப வந்து விட வேண்டும் என்று தான் அவர்களது அன்றாட வேண்டுதலாக இருந்தது.

“வினை விதைத்தவன், வினை அறுப்பான்! தினை விதைத்தவன் தினை அறுப்பான்”என்ற பழமொழியை உண்மை ஆக்குவதைப் போல் மோஹித்தின் நிலை மாறி விட்டது.

அவரவர் செய்த செயலுக்கு அவர்களுக்குத் தக்க சன்மானம் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது!

அதனால் நன்மையே செய்வோம்! நல்லதையே விதைப்போமாக!

முற்றும்

எபிலாக் இருக்கு ஃப்ரண்ட்ஸ்!
 
எபிலாக் :

சில மாதங்களுக்குப் பிறகு…

“ஹாரா மேடம்! ‘எனக்கு ஏற்கனவே இன்னைக்குக் கோல்ட். இதில், அந்த தலைக்கனம் பிடிச்ச, ஹீரோவை வேற, நான் இன்டர்வியூ செய்யனுமா?’ - அப்படின்னுக் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி பகீரதன் சாரை இண்டர்வியூ எடுக்கிறதை நினைச்சு எங்கிட்ட புலம்பிட்டு இருந்த அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”என்று தனக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு முக அலங்காரம் செய்து கொண்டிருந்த தோழியிடம் குறும்புடன் வினவினாள் தாமினி.

அதைக் கேட்டுத் தனது இதழ்களில் உதட்டுச் சாயத்தைப் போட்டு முடித்த ஹாரண்யாவோ,”அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க மேடம்!”என்று அவளிடம் கிண்டலாக கூறினாள்.

உடனே,”அப்படின்னா இப்பவும் அதே நிலைமையில் தான் இருக்கியா?”என்றவளிடம்,

“கண்டிப்பாக இல்லை! இப்போ என்னோட புருஷனை நான் இன்னும் உரிமையாக, வெளிப்படையாக சைட் அடிச்சிக்கிட்டே இண்டர்வியூ எடுக்கப் போறேதை நினைச்சு ஹேப்பியா இருக்கேன்!”எனச் சொல்லிக் கண்ணடித்துச் சிரித்தாள் ஹாரண்யா.

அதில் தானும் அவளுடன் சேர்ந்து சிரித்து விட்டு,”ஆல் தி பெஸ்ட் ஹாரா!”என்று அவளுக்கு வாழ்த்து தெரிவித்தாள் தோழி.

“தாங்க்யூ சோ மச் மினி!”என்று கூறி அவளை அணைத்து விடுவித்து விட்டுத் தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தவளிடம்,

“மிஸஸ். ஹாரண்யா! பகீரதன் சார் ஸ்டூடியோவுக்கு வந்துட்டார். இன்னும் கொஞ்ச நேரத்தில் இண்டர்வியூ ஸ்டார்ட் ஆகிடும். நீங்களும் ரெடியாக இருங்க!”என்ற சுதனிடம்,

“நான் ரெடியாகத் தான் இருக்கேன் சார்”என்று கூறி அவரை அனுப்பி வைத்தாள்.

“நானும் போய் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்டோட, ஃபேவரைட் ஹீரோவோட இண்டர்வியூவைப் பார்க்கத் தயாராகுறேன்!”எனத் தோழியிடம் உரைத்து விட்டுச் சென்றாள் தாமினி.

அதில் தனது இதழ்களில் புன்னகை அரும்ப தனது காதல் கணவனை நேர்காணல் செய்வதற்கான அழைப்பு வந்ததும் உடனே நேர்காணல் நடக்கும் இடத்திற்குப் போய் அங்கேயிருந்த சோபாவில் அமர்ந்தாள் ஹாரண்யா.

அவளும், பகீரதனும் கணவன், மனைவி என்பதை அனைவரும் அறிவார்கள் தானே?

அதனாலேயே அங்கிருந்த அனைவரும் அவளைப் பார்த்தவுடன் கத்தி ஆரவாரம் செய்தனர்!

அவர்களது வார்த்தைகள் வரம்பு மீறவில்லை என்பதால் அதை அவள் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டுச் சுதனின் ஒப்புதல் கிடைத்ததும்,”எல்லாருக்கும் வணக்கம்! நமது தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய முதல் இடத்தை எப்போதும் போல் இப்போது வரையிலும் தக்க வைத்துக் கொண்டு இருக்கிற அந்த மிகப் பிரபலமான நடிகர் மிஸ்டர். பகீரதனை இங்கு வருமாறு அழைக்கிறேன்!”என்று கூறியவுடன், அந்த அரங்கமே அதிரும் வண்ணம் காதைக் கிழித்த அனைவரின் கரகோஷங்களைப் புன்னகையுடன் அவதானித்துக் கொண்டே அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான் அந்த நேர்காணலின் நாயகன்.

அவனை வரவேற்றுச் சிரித்த முகத்துடன்,”ஹாய் பகீரதன் சார்! வெல்கம் டூ மை ஷோ!”என்றுரைத்து விட்டு அவனுக்குப் பூங்கொத்து வழங்கினாள் ஹாரண்யா.

“தாங்க்யூ மிஸஸ். ஹாரண்யா!”எனக் கூறினான் பகீரதன்.

அதைக் கேட்டவுடன்,”ஓஹ்ஹோ!!!”என்று அவனது ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர்.

அதில் இருவருக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது.

“உட்காருங்க சார்”என்று அவனை அமரச் சொல்லித், தானும் உட்கார்ந்து விட்டு,

அவனது விழி வீச்சால் முகம் சிவந்தாலும் கூட,”அப்பறம் சார், உங்க லைஃப் எப்படி போயிட்டு இருக்கு?”என்று அவனிடம் வினவினாள் ஹாரண்யா.

“என்னோட லைஃப் ரொம்ப சூப்பராகப் போயிட்டு இருக்கு! அதிலும் என்னோட வொய்ஃப் என் வாழ்க்கைக்குள்ளே வந்ததில் இருந்து இன்னும் நல்லா போயிட்டு இருக்கு!”என்றவனைக் காதலுடன் பார்த்தவளோ,

தன்னைச் சமாளித்துக் கொண்டு, நேராக நிமிர்ந்து அமர்ந்து விட்டு,”ரொம்ப நாள் கழிச்சு எங்க ஷோவுக்கு நீங்க கெஸ்ட் ஆக வந்திருக்கீங்க! அதனால் உங்களைப் பத்தி நிறைய தெரிஞ்சக்கனும்னு எங்களுக்கு ஆசையாக இருக்கு. அதனால் எங்கிட்ட சில கேள்விகள் இருக்கு! அதுக்கு நீங்கப் பதில் சொல்லனும்ன்றது எங்களோட வேண்டுகோள்!”என்று உரைத்தவளிடம்,

“கண்டிப்பாக!”என்றான்.

உடனே,”ஆரம்பிக்கலாமா சார்?”எனப் புன்னகையுடன் அவனிடம் கேட்டாள் ஹாரண்யா.

அதற்கு,”ஆரம்பிக்கலாமே மேம்!”என்று குறுஞ்சிரிப்புடன் கூறினான் பகீரதன்.

சுபம்

இந்தக் கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே!
 
Status
Not open for further replies.
Top