மாயம் 9
அதைப் பார்த்த நியதியால் தன்னுடைய கண்களை நம்பமுடியவில்லை. ஏனென்றால் ஆரியவர்தனின் பெர்சனல் அசிஸ்டன்டாக அவள் நியமிக்கப் பட்டிருப்பது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வர்தன் கார்ப்பரேட் குரூப்ஸில் பணிபுரிவது சாதாரண காரியம் அல்ல. அதில் பணிபுரியும் அடிமட்ட தொழிலாளி கூட அறிவுகூர்ந்தவனாக இருப்பான். அதனால் நிறுவனத்திற்குள் எளிதில் யாராலும் நுழையமுடியாது. முதலில் நியதியும் இங்கு பணிபுரியவேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தாள், ஏன் அது அவளது கனவாகவும் கூட இருந்தது.
ஆனால் வரதராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க, தன்கனவை கைவிட்டு அவருடைய நிறுவனத்தில் பணிபுரிந்தாள். அப்படி இருக்க இவ்வளவு வருடம் கழித்து தனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததை அவளால் நம்பமுடியவில்லை. தன்னுடைய கண்களை கசக்கி பலமுறை பார்த்தபோதும், தன் கையைக் கிள்ளிப்பார்த்தபோதும் அந்த கோப்பிலுள்ள செய்தியில் எந்த மாற்றமும் இல்லை. அவளுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இந்த சந்தோஷமான செய்தியை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று தன்னுடைய கைபேசியில் சரணை அழைத்து விஷயத்தை தெரிவித்தாள். அவனும் அதைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ந்து அவளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தான். கைபேசியை வைத்தபோது, 'கண்ணா இனிமேலாவது நியதியோட வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வராம நீதான் பாத்துக்கணும்' என்று கடவுளை சரண் வேண்டிக்கொண்டான்.
இங்கு நியதி இந்த விஷயத்தை சந்திரமதியிடம் தெரிவிப்பதற்காக திரும்பியபோது ரஞ்சித் அங்கு நின்றுகொண்டிருந்தான். "ஒரு நிமிஷம் உன்கூட பேசணும் நியதி" என்று கூற அவள் அங்கேயே நின்றாள். "அன்னைக்கு நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு ஐ யம் ரியல்லி சாரி. மிஸ்டர் வரதராஜன் அப்படி பண்ணதுல ஆரிக்கு ஏதாவது கெட்டபெயர் வந்துருமோங்குற ஆதங்கத்துலதான் அப்படி நடந்துக்கிட்டேன். சோ என்ன மன்னிச்சிடு" என்று தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கோரினான்.
அவள், "நீங்க உங்க ஃரெண்டு மேல வச்சிருக்குற நட்புனால தான் அப்படி பண்ணீங்கன்னு எனக்கு தெரியும். நான் அத தப்பா எடுத்துக்கல" என்று கூறினாள். ரஞ்சித் மீண்டும் பேசத் துவங்கினான், "நியதி ஆரி தன்னோட வாழ்க்கைல ரொம்ப கஷ்டங்கள அனுபவிச்சிட்டான். இனிமேலாவது அவன் சந்தோஷமா இருக்கட்டும். நீ அவன நல்லபடியா பாத்துக்கோ" என்று கூறவும், "அவர நான் ரொம்பவே நல்லா பாத்துக்குறேன். இனி அவர் வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். கவலையேபடாதீங்க" என்று அவனுக்கு உறுதியளித்தாள். அவன், "தாங்க் யூ" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அதன்பின் நியதி விரைந்து சந்திரமதியிடம் சென்றாள். அந்தவிஷயத்தை கேட்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அந்த அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் ஃலை பூஜையறையில் வைக்குமாறு கூறினார்.
ஆரியவர்தன் மாலை வீடுதிரும்பியபோது நியதி அவனிடம் சென்று, "சார், என்ன உங்க பி.ஏ.வா அப்பாய்ண்ட் பண்ணதுக்கு தாங்க் யூ சோ மச். என்ன நம்பி நீங்க இந்த போஸ்ட ஒப்படைச்சிருக்கீங்க. நான் எந்த ஒரு குறையும் இல்லாம நல்லபடியா என்னோட வேலைய செய்வேன் சார்" என்று அவனுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்தாள். "கங்கிராஜூலேஷன்ஸ் அண்ட் ஆல் தி பெஸ்ட்" என்று அவளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தான்.
பின், "அண்ட் ஒன் மோர் திங் நீ இனிமேல் என்ன சார்னு கூப்பிடாத" என்று அவன் கூறவும் புரியாமல் அவனைப் பார்த்தாள். ஆனால் அவனோ , "ஐ மீண் ப்ரோஃஷனல்லா இருக்கும்போது 'சார்'னு சொல்லு. ஆனா பாட்டி முன்னால என்ன நீங்க, வாங்கண்ன்னு கூப்பிடு" என்று அவளிடம் கூறினான். உடனே அவள் சந்தோஷமாக, "ஓகே சார்" என்று வழக்கம்போல அழைக்கவும் அவன் அவளை அப்படியே பார்த்தான். அவனுடைய அந்த பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவளாக, "சாரி" என்று கூறிவிட்டு அசடுவழிய சிரித்தவாறு அங்கிருந்து சென்றாள். அவள் அங்கிருந்து செல்லும் வரையிலும் அவளை லேசான புன்னகையுடன் பார்த்தவாறே தன்னுடைய வீல்சேரில் அமர்ந்திருந்தான் ஆரியன்.
மறுநாள் காலை உணவுக்காக அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தபோது வழக்கத்திற்கு மாறாக இனிப்பு பரிமாறப்பட்டது.
அதைப் பார்த்து, "என்ன பாட்டி இன்னைக்கு வித்யாசமா பிரேக்ஃஸ்ட்டுக்கு ஸ்வீட்லாம் செஞ்சிருக்கீங்க. என்ன விசேஷம்?" என்று அந்த இனிப்பை உண்டவாறே பார்கவ் வினவினான்.
உடனே, "டேய் என்னோட பேத்தி முதமுதல்ல உங்ககூட சேர்ந்து ஆஃஸ்க்கு வரப்போறா. அதான் எல்லாருக்கும் இன்னைக்கு ஸ்வீட். தெரியாத மாதிரியே கேப்பான்" என்று சந்திரமதி அவனை விளையாட்டாக கடிந்தார். உடனே, "அட ஆமா நான் அத மறந்தே போய்ட்டேன். சாரி சாரி... ஆல் தி பெஸ்ட் மேடம்" என்று நியதியைப் பார்த்து தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தான். அப்போது ரஞ்சித்தும் தன்னுடைய வாழ்த்துக்களைக் கூற இருவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்தாள்.
அனைவரும் உண்டுமுடித்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்லும்போது சந்திரமதி, "ஆரி இன்னைக்கு நியதியோட முதல்நாள். நானும் அவளும் கோவிலுக்கு போறோம். அதனால நியதி ஆஃஸ் வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகும்" என்று கூறினார். உடனே அவன், "இல்ல பாட்டி இன்னைக்கு நியதிக்கு ஃஸ்ட் டே. லேட்டா வந்தா கரெக்டா இருக்காது. அதுனால அவ என் கூடவே வரட்டும்" என்று மறுத்தான்.
ஆனால் சந்திரமதியோ, "போடா ஒருமணி நேரத்துல எதுவும் ஆகிடப் போறதில்ல. நியதி என் கூடத்தான் வருவா" என்று அவர் பிடிவாதமாகக் கூறவும் அவன், "உங்க இஷ்டம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து தன்னுடைய அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான். பூஜையறையிலுள்ள அந்த கோப்பை எடுத்துக்கொண்டு நியதியும் சந்திரமதியும் கோவிலுக்கு கிளம்பினர்.
அங்கு வரதராஜனின் வீட்டில், "என்னங்க நமக்குமட்டும் ஏன் அடுக்கடுக்கா பிரச்சன வருது. மொதல்ல ரியா நம்மள அவமானப் படுத்திட்டா, அடுத்து நம்ம பொண்ணு இருக்கவேண்டிய இடத்துல அந்த நியதி இருக்கா, எப்பவுமே நல்லா இருக்குற பிசினெஸ்ல இவ்வளவு பெரிய லாஸ்..." என்று பெருமூச்சுவிட்டாள். பின், "என் ஃரெண்டுக்கு ஒரு ஜோசியர தெரியுமாங்க. அவர போய் பாத்தா ஏதாவது பரிகாரம் சொல்லுவாரு. அத செஞ்சாலாவது நமக்கு நல்லது நடக்குமான்னு பாப்போமே" என்று வரதராஜனிடம் கேட்டாள். ஆனால் அவரோ, "நீயும் உன் பரிகாரமும். கோவிலுக்கு போவோம். வா" என்று கூற மாலினியும் ஒப்புக்கொண்டாள்.
அதேசமயம் கோவிலில் சந்திரமதி கருவறையின் முன்பு அமர்ந்திருக்க பிரகாரத்தை சுற்றிவிட்டு வருவதாகக் கூறி நியதி மட்டும் தனியே சென்றாள். அப்போது தற்செயலாக அங்கு வந்திருந்த வர்தராஜனை எதிர்கொண்டாள். அவரைப் பார்த்ததும் விரைந்து அவரருகே சென்று, "அப்பா எப்படி இருக்கீங்க?" என்று நலம்விசாரித்தாள்.
அவர் 'ம்ம்' என்று என்று மட்டும் பதிலளித்தார். "எனக்கு வர்தன் சாரோட பி.ஏ.வா வேல கிடைச்சிருக்கு. இன்னைக்கு தான் முதல் நாள். ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா" என்று அவருடைய காலில் விழுந்தாள். அவர் அவளை ஆசிர்வதிக்கவில்லை என்றபோது அவளுடைய மனது லேசாக வலித்தது. ஆனால் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்முருவலுடனேயே இருந்தாள்.
வரதராஜனின் நிறுவனத்தில் நடந்த அந்த பெரிய இழப்பைப் பற்றி எப்படி விசாரிப்பது என்று அவள் எண்ணும்போதே, "நீ எங்கள இங்கயும் நிம்மதியா இருக்கவிடமாடியா? எங்க போனாலும் பின்னாலயே வந்துடற. வாங்க நம்ம போகலாம்" என்று அங்கு வந்த மாலினி வரதராஜனை இழுத்துச் சென்றாள். ஆனாலும் நியதி அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள்.
தங்களை நியதி தொடர்வதை அறிந்த வரதராஜன் தன் கையிலுள்ள திருநீறை இறைவனின் முன்னுள்ள கல்லில் வைத்துவிட்டு, "போற காரியம் நல்லதாவே நடக்கட்டும்" என்று கூறினார். இதைக்கேட்ட நியதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ஆனால் மாலினிக்கு அவர் கூறியது விளங்கவில்லை, "நாம எங்கங்க போப்போறோம்?" என்று கேட்டதற்கு, "நீ வா" என்று அவளை அழைத்துச் சென்றார். அவர்கள் சென்றதும் நியதி அந்த திருநீறை அவருடைய ஆசீர்வாதமாக நினைத்து தன் நெற்றியில் இட்டுக்கொண்டாள்.
வரதராஜன் நல்லவர்தான், ஆனால் சில துர்போதனைகளால் அவ்வப்போது அவருடைய மனம் தடுமாறுகிறது. பின் சந்திரமதி வீடு திரும்ப நியதி அலுவலகத்திற்குச் சென்றாள். அங்கு அவளுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உயர் அதிகாரிகள் அனைவர்க்கும் நியதி அறிமுகப்படுத்தப் பட்டாள். அன்றிலிருந்து தினமும் ஆரியவர்தனின் பி.ஏ.வாக நியதி அவனுடன் அலுவலகத்திற்குச் சென்றாள். இவ்வாறாக மூன்று மாதங்கள் கடந்தன. அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.
தினமும் காலையிலிருந்து மாலைவரை இருவருமாக சேர்ந்தே இருப்பதால் அவர்களுக்குள் நல்ல புரிதல் உண்டாயிற்று. நியதிக்கு புத்தகம் வாசிப்பது பிடிக்கும் என்பதால் ஆரியன் ஒரு 'மினி லைபரேரியை' அவளுக்கென தனியாக அமைத்தான். அவர்களுக்கு இடையில் மெல்ல காதல் மலரத் துவங்கியது.
அப்படியொரு சமயம் ஆரியவர்தன் தன்னுடைய வேலைப்பளு காரணமாக விரல்களை தன்னுடைய புருவத்திற்கு இடையே அழுத்தியவாறு அமர்ந்திருந்தான். அவன் பார்கவைப் பார்த்து, "எனக்கு தல வலிக்குது காஃ போட்டு கொண்டுவா பார்கவ்" என்று கூறினான். அப்போது, "மே ஐ கம் இன்" என்று அனுமதிகேட்டவாறு கையில் காபி கப்புடன் நியதி அந்த அறையினுள் நுழைந்தாள்.
நியதி மற்றும் ஆரியன் இருந்த அறைகளை ஒரு கண்ணாடி சுவர் பிரிந்திருந்தது. அதனால் இருவரும் அடுத்தவர் அறையில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாகப் பார்க்கமுடியும். அப்படித்தான் நியதி அவனுடைய டென்ஷனைப் பார்த்து அவனுக்காக காஃ கொண்டுவந்தாள். அவளைப் பார்த்து அங்கிருந்த இருவரும் திகைத்தனர்.
அவள், "சார் நீங்க டென்ஷனா இருக்கீங்க. இந்த காஃய குடிங்க. உங்க டென்ஷனும் தலைவலியும் போய்டும்" என்று கூறி அவனிடம் கப்பை நீட்டினாள். நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த பார்கவ் லேசாக முறுவலித்தவாறு அங்கிருந்து வெளியேறினான். "நான் டென்ஷனா இருக்கேன்னு உனக்கெப்படி தெரியும்?" என்று காஃயை மிடறுகளாக அருந்தியவாறு அவளிடம் கேட்டான்.
அனால் அவளோ, "அதெல்லாம் தெரியும்" என்று புன்னகைத்தவாறு கூறிவிட்டு அங்கிருந்து செல்லவிருந்தவளை நிறுத்தி, "காஃ நல்லாயிருக்கு. தாங்ஸ் ஃர் தி காஃ" என்று அவன் பாராட்டவும் அவள் புன்னகைத்தவாறு அங்கிருந்து சென்றாள். மறுநாள் ஆரியன் தன்னுடைய அறைக்கு வந்தபோது ஒரு சுகந்தமான நறுமணம் அங்கு வீசியது. 'எங்கிருந்து அவை வருகின்றன?' என்று அவன் பார்த்தபோது அவனுடைய டேபிளில் லாவண்டர் பூக்கள் நிறைந்த கண்ணாடி வாஸ் வைக்கப்பட்டிருந்தது. ஆரியவர்தனுக்குப் பூக்கள் என்றால் பிடிக்கவேபிடிக்காது. அதனால் அவைகளைப் பார்த்தவுடன் அவனுடைய முகம் கோபத்தால் சிவந்தது.
உடனே தன் வீல் சேரை டேபிளின் அருகில் செலுத்தி அந்த வாஸை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டான். உடனே அந்த பூக்கள் கீழே விழ அந்த கண்ணாடி வாஸும் தூள் தூளாக நொறுங்கியது. பக்கத்து அறையிலிருந்து ஆரியனின் புன்னகைக்காக காத்துக்கொண்டிருந்த நியதி அவன் அவைகளை கீழே தள்ளிவிட்டது தெரிந்ததும் அவனுடைய அறைக்கு விரைந்தாள். ஆரியவர்தன் பார்கவைப் பார்த்து, "எனக்கு ஃலார்ஸ் பிடிக்காதுன்னு தெரியும்ல? யார் இங்க வச்சா?" என்று அவனை திட்டினான்.
பயத்தில் உறைந்திருந்த பார்கவ், "சாரி சார்...யாருன்னு தெரியல....இப்போவே...கிளியர் பண்ணசொலீறேன்..." என்று தக்கித்தடுமாறி கூறினான். அங்கு வேகமாக வந்த நியதி, "சார் அத நான் தான் வச்சேன். இந்த பூவோட ஸ்மெல் ஸ்ட்ரெஸ்ஸ குறைக்கும். அதுனாலதான்...இனிமேல் இப்படி நடக்காது சார்" என்று அவள் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள். அதை வைத்தது நியதி என்று தெரிந்ததும் ஆரியனுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால் அவன் செய்த காரியம் நியதியின் மனதைப் புண்படுத்தியதை நினைத்து மிகவும் வருந்தினான். அன்றைய நாள் ஏனோதானோ என இருவருக்கும் சென்றது.
மறுநாள் காலை அலுவலகத்திற்குச் சென்றபோது அவர்களது கார் சிக்னலில் நின்றது. அவன் மன்னிப்பு கேட்பதற்காக நியதியின் பக்கம் திரும்பியபோது அவள் வெளியே எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனும் அதே திசையில் பார்த்தபோது அங்கு ஒரு ஏழு வயது பெண்குழந்தை பூக்களை விற்றுக்கொண்டிருந்தாள். நியதிக்கு அந்த பூக்களை வாங்கி அந்த சிறுமிக்கு உதவவேண்டும் என்று ஆசை இருந்தபோதும் முந்தைய தினம் நடந்த நிகழ்வு அவளைத் தடுத்தது.
அவளுடைய எண்ணத்தைப் புரிந்தவனாக பார்கவிடம் அந்த குழந்தையை அழைத்து பூக்களை வாங்குமாறு உத்தரவிட்டான். அவன் கூறியதைக் கேட்டு நியதியும் பார்க்கவும் ஆச்சரியத்துடன் அவனை திரும்பிப் பார்த்தனர். அவன் பார்கவிடன் பூக்களை வாங்குமாறு புருவத்தை ஏற்றி இறக்க அவனும் அவ்வாறே செய்தான்.
அந்த பூக்களுக்கான விலை நூறு ரூபாயாக இருந்தபோதும் பார்கவிடம் ஐநூறு ருபாயை அந்த குழந்தையிடம் கொடுக்குமாறு கூறினான். ஆனால் அந்த குழந்தை மறுத்துவிட்டாள். காரணத்தைக் கேட்டபோது, "சார் என் அப்பா எப்பவுமே உழைச்சதுக்கு காசுவாங்குனாதான் நம்ம உடம்புல ஒட்டும்ன்னு சொல்லுவாரு. ஒரு ரோஜா பூச்செண்டோட விலை நூறு ரூபா. அதுமட்டும் போதும்" என்று கூறினாள்.
அவளுடைய அந்த பதிலால் மனம் நெகிழ்ந்த ஆரியவர்தன், "இன்டெரெஸ்ட்டிங், வெரி இன்டரெஸ்டிங்" என்று கூறினான். மேலும் அவளிடமிருந்தே தினமும் பூக்களை வாங்கிக்கொள்வதாகக் கூறவும் அந்த சிறு குழந்தையின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. ட்ராஃக் சிக்னலைக் கடந்து அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, "நியதி, நேத்து நான் அப்படி நடந்ததுக்கு ஐ அம் ரியல்லி சாரி. இனிமேல் தினமும் என்னோட டேபிள்ல அந்த பொண்ணு குடுக்குற ஃலவர்ஸ அரேஞ் பண்றது உன்னோட பொறுப்பு. ஓகே" என்று அவன் நியதியிடம் கூறினான். முதலில் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்த நியதி பின் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டாள். ஒருவருக்கொருவர் புன்முறுவலைப் பரிமாறிக் கொண்டனர்.
இங்கு இவர்களுக்கிடையே காதல் மலர்ந்துகொண்டிருக்க அங்கு ஒரு பெரிய கோல்ஃ மைதானத்தில் இருவரைப் படுக்கவைத்திருந்தனர். அவர்களின் முகத்தில் கோல்ஃ பந்து வைக்கப்பட்டிருந்தது.
அவர்களுள் ஒருவன், "டேய் நான் தான் அப்படி செய்யாதன்னு அப்பவே சொன்னேன்ல. பாரு நாம அவங்ககிட்ட மாட்டி தப்பிச்சி வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடுச்சு" என்று கூறினான்.
ஆனால் மற்றொருவனோ, "தப்பிச்சும் என்ன பிரயோஜனம் இங்க இவர்கிட்டல மாட்டிகிட்டோம். ஐயோ இவரு என்ன செய்யப்போறாருன்னே தெரியலையே. சிங்கத்துக்கு பயந்து மலைப்பாம்புகிட்ட சிக்குன்னு கதையாகிடுச்சே..." என்று அவர்கள் புலம்பும்போதே கோல்ஃ ஸ்டிக்கை இரும்புக் கம்பியில் யாரோ அடித்துக்கொண்டே வரும் சத்தம் கேட்டது. அங்கிருந்த இருவருக்கும் அவர்களது மரணம் நெருங்குகிறது என்று நன்றாகத் தெரிந்தது.
அவர்கள் முன் கோல்ஃ ஸ்டிக்குடன் ஒருவன் வந்து நின்றான். படுத்திருந்த இருவருக்கும் அவர்களது அடிவயிறு கலங்கியது, இதயம் இயல்பைவிட பலமடங்கு அதிகமாக துடித்தது. அவனிடம், "சார் எங்கள மன்னிச்சி விட்ருங்க. இனிமேல் இந்தப்பக்கம் வரவே மாட்டோம்" என்று தங்களுடைய உயிருக்காக மன்றாடினர். "என் கிட்ட வேல செய்யணும்னா ஒண்ணு அந்த வேலைய சரியா முடிக்கணும் இல்லாட்டி நான் அவங்கள முடிச்சிருவேன்” என்றவன் ஈவு இரக்கம் இல்லாத ராட்சசன் போல கோல்ஃ ஸ்டிக்கை ஓங்கினான்.
பின் அந்த இடத்தில் ரத்தவெள்ளத்தில் இருவரும் இறந்துகிடக்க ரத்தம் படிந்த அந்த கோல்ஃ ஸ்டிக்கை அருகிலுள்ள ஒருவனிடம் அந்த விராஜ் குணசீலன் கொடுத்தான். “யூஸ்லெஸ் ஃல்லோஸ் ஒரு காரியத்த ஒழுங்கா செய்ய தெரியுதா" என்று கூறியவாறு அந்த சடலங்களை எத்தினான்.
அவன் சைகை செய்ய அங்கிருந்த பாடி-காட்ஸ் அந்த சடலங்களை அப்புறப்படுத்தினர். அங்கு நின்றுகொண்டிருந்த அவனுடைய பி.ஏ. வீரா, "சார் கவர்மெண்ட் டெண்டெற்கான அனௌன்ஸ்மென்ட் வந்திருக்கு" என்று கூறவும், "இந்த டெண்டர் நம்ம கைக்கு வந்தே ஆகணும். வர்தன் கார்ப்பரேட்ஸ எப்படியாவது தோக்கடிச்சே ஆகணும்" என்று கூறி, "ஆரியவர்தன்" என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.
மாயங்கள் தொடரும்...