RJ novels
Moderator
மெய்யழகனின் தேன்நிலவு - 1
கவிதா, “அடியேய் தேனு.. நீ அடங்க மாட்டியா.. இப்போ எதுக்குடி அது மேல ஏறி நிக்கிற.. மேல இருந்து கீழே விழுந்து கை, கால் உடைய போகுது. அப்புறம் உன் அப்பாவுக்கு யார் பதில் சொல்றது..”.
“என்னை நம்பி தானே உங்க வீட்ல அனுப்பி இருக்காங்க.. உன் அண்ணன், அக்கா வாயில் எல்லாம் என்னால் விழுந்து எழுந்திரிக்க முடியாது.. கீழே வந்திடு டி..” என்றாள் மிரட்டும் தோணியில்.
தேன்நிலவு, “அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாது.. இது என்ன முதல் தடவையா? நீ ஏன் இப்படி பயப்படுற.. நாம பார்க்காத மரமா.. இது கொஞ்சம் பெருசா இருக்கு அவ்வளவு தான்..” என்றபடி விறுவிறுவென மரத்தின் உச்சியை அடைய சென்று விட்டாள்.
கவிதா படபடக்கும் இதயத்துடன், “ஏய்.. பார்த்து டி.. ரொம்ப பெருசா இருக்கு.. இப்போ இதெல்லாம் தேவையா.. தேனீ கடிச்சிடும் தேனு.. நீ தேவையில்லாத வேலை பார்த்துகிட்டு இருக்க..” என்றாள் கோபத்தில் சிடுசிடுப்பாக.
தேன்நிலவு, “இந்த தேனையே தேனீ கடிக்குமா.. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ சும்மா நிக்கிறியா.. நீ இப்படி பேசிப்பேசியே தூங்குற தேனீயை கூட எழுப்பி விட்டிடுவ” என்றபடி மெதுவாக அந்த மரத்தில் இருக்கும் தேனீ கூட்டிலிருந்து தேனை எடுக்க சென்றாள்.
கவிதா, “அய்யய்யோ! அவங்க வந்துட்டானுங்க டி! சீக்கிரம் இறங்கு.. ஓடிடலாம்..” என்று அவசர குரலில் அவளை அழைக்க.
சட்டென்று திரும்பி பார்த்த தேன்நிலவு நான்கு, ஐந்து பேர் அந்த புறமாக வந்து கொண்டிருப்பதை கவனித்தவள். சரசரவென ஏறிய வேகத்தை விட வேகமாக கீழே இறங்கி வந்தாள்.
தன் கையை தூசி தட்டியவள், “சீக்கிரம் வா ஓடிடலாம்.. பார்த்திட போறானுங்க..” என்றபடி தன் ஆருயிர் தோழி கவிதாவின் கையையும் பிடித்து தன்னுடன் இழுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓட தொடங்கினாள்.
அதற்குள் அவர்களை செல்ல விடாமல் முன்னே வந்து நின்று வழிமறித்த அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவரின் மகன் அழகேசன், “ஏய் ஹனிமூன்.. இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”.
“நான் உன்கிட்ட ஏற்கனவே பல தடவை சொல்லி இருக்கேன் எங்க தோட்டத்து பக்கம் வந்து இப்படி திருட்டுத்தனமா மாங்காய் எடுக்கிற வேலையெல்லாம் வேண்டாம் என்று.. எத்தனை தடவை சொன்னாலும் நீ அடங்கவே மாட்டியா..”.
தேன்நிலவு சற்றும் அலட்டிக் கொள்ளாமல், “இங்க பாரு, நான் ஒன்னும் மாங்கா பறிக்க எல்லாம் வரல.. இன்னும் மாங்கா மரத்துல பூ வைக்கவே ஆரம்பிக்கல அதுக்குள்ள எப்படி மாங்காய் பறிக்க முடியும். எதையாவது லூசு மாதிரி பேசாதே”.
அழகேசன், “அப்புறம் எதுக்கு டி எங்க தோட்டத்துக்கு வந்து இருக்க..” என்றான் எகிரிக்கொண்டு.
தேன்நிலவு முறுக்கிக்கொண்டு, “இங்க பாரு, இந்த வாடி போடின்னு கூப்பிடுற வேலையெல்லாம் வேண்டாம்”.
அழகேசன், “அப்புறம் திருட்டுத்தனமா வந்து திருட்டு வேலை பார்க்கிறவங்களை வாங்க போங்கன்னு மரியாதையாக கூப்பிடுவாங்களா.. அப்படி தான் டி கூப்பிடுவேன் ஹனிமூன்..” என்றான்.
அந்த ‘ஹனிமூன்’ என்ற வார்த்தையில் மட்டும் சற்று அழுத்தத்தை கொடுத்தவாறு.
தேன்நிலவு விடைத்த மூக்குடன் புசுபுசுவென்று தன் மூச்சை விட்டவள் கோபமாக அவன் முன்னே தன் ஆள்காட்டி விரலை தூக்கி ஆட்டியபடி, “இங்க பாரு, இன்னொரு தடவை என்னை ஹனிமூன்னு கூப்பிட்ட.. மூஞ்சியை திருப்பிடுவேன் டா”.
அழகேசன், “என்ன டி.. என்னையே டா போட்டு கூப்பிடுறியா..”.
தேன்நிலவு தன் கையை கட்டிக்கொண்டு, “ஆமா டா.. அப்படி தான் டா கூப்பிடுவேன். நீ என்னை டி போட்டு பேசினால் நான் உன்னை டா போட்டு தான் டா கூப்பிடுவேன்” என்றாள் கோபமாக.
கவிதா அவளின் கையை பற்றி கொண்டு, “விடு டி.. வா போலாம்.. எதுக்கு இப்போ இப்படி சண்டை போட்டுக்கிட்டு நிக்கிற..” என்று அவளை சமாதானம் செய்ய முயற்சித்தவளை தடுத்த அழகேசன்.
“ஏய் கவிதை.. உனக்கு இங்க என்ன வேலை..” என்னும் பொழுதே தேன்நிலவு, “இங்க பாரு கவி, இவன் என்னை எங்க பார்த்தாலும் ஹனிமூன்னு கிண்டல் பண்றான். இன்னொரு தடவை அப்படி கூப்பிட்டான்னா இவன் வாயை உடைத்துவிடுவேன்” என்றாள் கோபத்தில் பத்ரகாளியாக.
அழகேசன் அவளைப் பார்த்து கோணலாக சிரித்தபடி, “அப்படி தான் டி கூப்பிடுவேன்.. நீயும் வேணும்னா என்னை பியூட்டின்னு கூப்பிட்டுக்கோ..” என்றான் கெத்தாக.
தேன்நிலவு, “பியூட்டி பேருல மட்டும் இருந்தால் பத்தாது.. முகத்திலும் கொஞ்சமாவது இருக்கணும்.. பியூட்டியாம் பியூட்டி..” என்றாள் தன் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு.
கவிதாவிற்கோ பயத்தில் கை கால்கள் எல்லாம் வெடவெடடக்க தொடங்கி விட்டது. இப்படி அவர்களின் தோட்டத்திற்குள் வந்து சிக்கி விட்டோமே என்ற பதட்டத்தில் படபடக்க தொடங்கி விட்டாள்.
“சாரி.. சாரி அண்ணா.. தெரியாமல் வந்துட்டோம்.. நாங்க சும்மா தான் இந்த பக்கம் வந்தோம். பாருங்க.. மரத்தில் மாங்கா கூட இல்லை. நாங்க எப்படி மாங்கா பறிக்க வந்திருக்க முடியும்”.
“சும்மா இந்த பக்கமா வந்தோம்.. தோட்டத்தை சுத்தி பார்க்கணும்னு ஆசைப்பட்டாள். அதான் உள்ளே வந்தோம்.. எங்களை மன்னிச்சிடுங்க.. நாங்க பண்ணது தப்பு தான்.. எங்களை விட்டுடுங்க அண்ணா..” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
அவளின் வார்த்தையில் கடுப்பான அழகேசன், “நீ கொஞ்சம் வாயை மூடுறியா.. சும்மா நொய்நொய்ன்னு பேசிகிட்டு இருப்ப” என்றான் சிடுசிடுப்பாக.
அதில் கவிதாவின் வாய் கப்சிப் என்று மூடிக்கொண்டது.
அழகேசன் தோழர்கள் அவன் அருகில் வந்து நிற்க.
அவனின் தோழன் சங்கர், “இவங்க ரெண்டு பேரையும் சும்மாவே விட கூடாது டா மச்சான். இவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலையா போச்சு.. போன தடவை உன் தோட்டத்துல மாங்கா பரிக்க வரும் பொழுதே நம்ம வான் பண்ணோம். ஆனாலும், அடங்க மாட்டேங்குதுங்க..”.
அழகேசன், “அது ஒன்னும் இல்லடா.. ஹனிமூன்க்கு எங்க தோட்டத்து மாங்காய் மட்டும் தான் பிடிக்கும் போலருக்கு. அதான் மாங்காய் சாப்பிடனும்னு ஆசைப்படுது” என்றான் ஒரு மாதிரியான குரலில்.
தேன்நிலவு, “தேவையில்லாத பேச்செல்லாம் பேசாத அழகு.. அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்” என்றவள்.
கவிதாவின் கையை பிடித்துக் கொண்டு, “ஏய்.. வாடி போலாம்..” என்றபடி முன்னே நடக்க.
தன் கையை நீட்டி அவர்களை தடுத்த அழகேசன், “மாங்கா சாப்பிடணும்னு ஆசையா இருந்தால் சொல்லுங்க நானே ஏற்பாடு பண்றேன்” என்றவன்.
கவிதாவை பார்த்து, “உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்” என்றான் கண்டிப்பான குரலில்.
அவ்வளவு தான்.. கவிதா தேன்நிலவின் கையை பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற வேகத்தில் ஓடத் தொடங்கி விட்டாள்.
சற்று தூரம் அந்த இடத்தை விட்டு தள்ளி வந்தவர்கள் மூச்சு வாங்கியபடி நிற்க. இருவருக்குமே ஓடி வந்ததில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
கவிதா மூச்சை இழுத்து விட்டபடி, “இதெல்லாம் தேவையா.. இதுக்கு தான் நான் அந்த தோட்டதுக்கு போக வேண்டாம்னு சொன்னேன். பார்த்தியா.. எப்படி எல்லாம் பேசுறான்னு..”.
தேன்நிலவு, “அவன் கிடக்குறான் விடு டி. அவ்வளவு கஷ்டப்பட்டு மரத்து மேல ஏறியும் கடைசியில் அந்த தேனை எடுக்க முடியாமல் போயிடுச்சே.. அதான் ரொம்ப வருத்தமா இருக்கு..” என்றாள் அங்கிருந்த மரத்தில் சாய்ந்த படி.
கவிதா அவளை அதிர்ந்து பார்த்தவள், “அடிப்பாவி! என்ன டி நீ இப்படி இருக்க.. அவன் அந்த பேச்சு பேசுறான்.. அப்படி சண்டை போடுகிறான்.. நீ என்னடான்னா அதையெல்லாம் விட்டுட்டு தேன் எடுக்க முடியலனு கவலைப்படுற..”.
தேன்நிலவு, “சரி விடு.. நாளைக்கு பாத்துக்கலாம்..”.
கவிதா அவளின் வார்த்தையில் அதிர்ந்தே விட்டாள்.
தன் தலைக்கு மேல் கரம் கூப்பி கும்பிடு போட்டவள், “அம்மா தாயே.. நாளைக்கு தேன் எடுக்க போவதாக இருந்தால் நீ மட்டும் போ..”.
“தயவு செஞ்சு என்னை கூப்பிடாதே.. என்னால் எல்லாம் அவனுடைய பேச்சை கேட்க முடியாது. ஒரு நிமிஷத்துல எனக்கு படபடன்னு வந்திடுச்சு தெரியுமா..”.
தேன்நிலவு அவளின் தோளில் கையை போட்டு தன்னுடன் இருக்கியபடி, “அதான் நான் கூட இருக்கேன்ல.. அப்புறம் எதுக்கு பயப்படுற..” என்றாள் கெத்தாக.
கவிதா அவளின் கையை பட்டென்று தட்டி விட்டவள், “நீ என் கூட இருக்கிறது தான் டி என் பயமே.. கொஞ்சமாவது சும்மா இருக்கியா.. ஏதாவது ஒரு வேலை பார்த்து வச்சிட்டு போயிடுற..”.
“எல்லார்கிட்டயும் நான் திட்டு வாங்க வேண்டியதா இருக்கு. இங்க பாரு, இனிமே இந்த மாதிரி ஏதாவது தேவையில்லாத வேலை பாக்குறதா இருந்தால் நீ தனியாவே போய் பார்த்துக்கோ.. என்னை கூப்பிடாதே..” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.
தேன்நிலவு, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. எனக்கு இருக்க ஒரே பிரண்டு நீ தான்.. உன்னை விட்டால் நான் வேறு யாரு கூட சுத்துறது..”.
“நான் என்ன செஞ்சாலும் அதில் உனக்கும் சம பங்கு இருக்கு. ஏன்னா, நீயும் நானும் உயிர் தோழிகள் இல்லையா..” என்று அவளை பார்த்து வசனம் பேசிய படியே வீடு நோக்கி புறப்பட்டனர்.
தேன்நிலவு வீட்டிற்குள் நுழையும் பொழுதே அவளின் அக்கா கஸ்தூரியின் பேச்சு சத்தம் வாசல் வரை எட்டியது.
தேனிலவு மனதிற்குள், “ஐயோ! இந்த ஸ்பீக்கர் பாக்ஸ் வேற வந்திடுச்சா.. என்னை போட்டு குடைய போறாங்க” என்று முணுமுணுப்பாக கூறியபடியே வீட்டிற்குள் நுழைய.
அவளின் அக்காவின் கணவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
அவரை பார்த்து மெல்லிதாக சிரித்தவள், “வாங்க மாமா.. எப்போ வந்தீங்க?” என்ற அவளின் வார்த்தையில் அவளை நோக்கி திரும்பிய கஸ்தூரி.
இளங்கோ பதில் கூறுவதற்கு முன்னதாகவே, “வாடி.. எங்க போய் ஊர் சுத்திட்டு வர.. வயசு பொண்ணா லட்சணமா வீட்டில் உன்னால் இருக்க முடியாதா.. எப்போ பார்த்தாலும் ஊர் சுத்திக்கிட்டே இருக்க..” என்றாள் அதட்டலாக.
தேன்நிலவு, ‘வந்த உடனேயே பர்பாமென்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா.. இனி நாம என்ன சொன்னாலும் இவ வாயை மூட முடியாது’ என்று எண்ணியவாறு அவர்களின் முகத்தை அப்பாவியாக பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
கஸ்தூரி, “முதல்ல முகத்தை இப்படி வச்சுகிறதை நிறுத்து.. பண்றது எல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி மூஞ்ச வச்சிக்க வேண்டியது” என்று அதற்கும் சேர்த்து இரண்டு தீட்டுகளை பரிசாக வாரி வழங்கினார்.
இளங்கோ, “கஸ்தூரி ஏன் தேனை இப்படி திட்டுற..”.
கஸ்தூரி இளங்கோவை நோக்கி தன் கோப விழிகளால் பொசுக்கும்படி பார்வையை வீச.
இளங்கோவின் வாய் ‘கப்சிப்’ என்று மூடிக்கொண்டது.
தன் மனைவியின் பார்வைக்கு முற்றிலுமாக அடங்கிப் போய் விட்டான் இளங்கோ.
தேன் நிலவின் தாய் சகுந்தலா, “அவ சும்மா கவிதா கூட சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் டி போனாள். நீ ஏன் வந்ததும் வராதுமா இப்படி அவகிட்ட எரிஞ்சு விழற..”.
Last edited: