அத்தியாயம் : 1
ஓம் சரவண பவ,
ஓம் சரவண பவ,
ஓம் சரவண பவ என்று இடைவிடாமல் உச்சரித்தபடி அந்த ஆற்றங்கரை முருகனுக்கு தண்ணீர் சுமந்து ஊற்றி கொண்டிருந்த பெண்ணவளின் முகம் வியர்வையில் நனைந்திருக்க அங்கமோ நீரால் நனைந்து இருந்தது.
அன்றைய கணக்கான நூற்றி எட்டு குடம் நீரையும் கலைத்து சோர்ந்து எடுத்து ஊற்றி முடித்திருந்தாள் தெய்வ கீர்த்தனா.
பொதுவாக ஆற்றங்கரை என்றாலே பிள்ளையார் தான் அமர்ந்து இருப்பார் என்று எல்லோரும் அறிந்திருக்க, இங்கு சற்றே மாறுபட்டு முருகர் தனிமையில் ஆற்றங்கரை மரத்தடியில் அமர்ந்து இருப்பார்.
முருகர் அவர் அண்ணன் கணேசனை பார்க்க வந்து, கணேசன் அங்கு இல்லாமல் போனதால் அவருக்காக காத்திருக்க இங்கேயே அவர் அமர்ந்து விட்டதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.
மிகவும் சக்தி வாய்ந்தவர். வேண்டுதல் வைத்து ஆற்றில் நீர் எடுத்து அபிஷேகம் செய்தால் எண்ணியது நடக்கும். பலருக்கும் பல நல்லது நடந்திருக்க கீர்த்தனாவின் வேண்டுதலுக்கு மட்டும் அந்த முருகர் இன்னும் செவி சாய்க்கவில்லை.
அவளும் ஐந்து வருடமாக அவருக்கு நீர் எடுத்து ஊற்றுகிறாள். ஆனாலும் முருகன் மனம் இன்னும் குளிரவில்லை.
என்றேனும் தன் வேண்டுதலுக்கு அவர் செவி சாய்த்து விட மாட்டாரா என்ற நம்பிக்கையுடன் இன்றும் முருகனின் திருநாமத்தை உச்சரித்தபடி தெய்வ கீர்த்தனா சாமிக்கு நீர் எடுத்து ஊற்ற, "என்ன தெய்வா வள்ளி மணவாளனுக்கு அபிஷேகமா? நீயும் ஐஞ்சி வருசமா வாரம் நாலு முறை அபிஷேகம் பண்ணி தான் பார்க்குற...இந்த முருகன் கண்ணை திறக்க மாட்டேங்குறானே! வயசும் இருபத்தி ஒன்பது முடிய போகுது. வரன் எதுவும் வருதா?" என்று அவர்கள் தெருவில் வசிக்கும் ரூபா அக்கா கேட்க,
அவர் பேச்சில் 'ஹையோ....' என உள்ளுக்குள் அலறிய கீர்த்தனா, வெளியே "தெரியலையே கா அப்பாவை தான் கேட்கனும்" என்ற படி ஆற்றில் இறங்கி தண்ணீர் எடுத்தாள்.
"சீக்கிரம் நல்லது நடக்கும் கீர்த்தனா. நீ கவலை படாத. உனக்குனு போட்ட விதை வளர்ந்து இருக்கும். சரியான நேரத்துல உன் கையில கொண்டு முருகன் ஒப்படைப்பான். அதுவரைக்கு உன் அபிஷேகத்தை விடாத" என்ற ரூபா
தொடர்ந்து "முன்னைக்கு இப்போ ரொம்ப கருத்த மாதிரி இருக்க, இப்படி வெயில் நேரமா வந்து வேண்டுதல் பண்றதுக்கு... கொஞ்சம் வெயில் தாந்தால வந்து செய்யலாம் இல்ல!" என்றார் அக்கறையாக.
"மணி தான் ஆறு ஆகிட்டேக்கா ஆனாலும் வெயில் குறைய மாட்டேங்குது. அதான் எப்பவும் செய்யுறது தானேனு வந்துட்டேன்" என்ற கீர்த்தனா முருகர் மீது தண்ணீரை ஊற்ற, ரூபாவும் நின்று வணங்கியவர்
"நான் இப்படி கேட்டேனு நீ எதும் சங்கடப்பட்டுக்காத தெய்வா. உன்னை விட சின்ன பிள்ளைங்க எல்லாம் கல்யாணம் ஆகி கையில ஒன்னும் வயித்துல ஒன்னுமா இருக்கும் போது... அவங்க எல்லாரையும் விட பெரிய பொண்ணு நீ கல்யாணம் ஆகாம இருக்கும் போது பார்க்க சங்கடமா இருக்குது. உன் ப்ரெண்டெல்லாம் கூட பாரு... அடுத்த வருஷம் பிள்ளையை ஸ்கூல் சேர்க்கனும்னு பேசுறாளுங்க" என்றார் வருத்தம் நிறைந்த குரலில்.
"புரியுது கா. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கலை" என்று சிறு புன்னகையுடன் கூறிய கீர்த்தனா உள்ளுக்குள் 'நான் ஃபீல் பண்றேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா?' என கடுப்புடன் எண்ணிக்கொண்டாள்.
"சரி தெய்வா. நீ வேண்டுதலை பாரு... நான் கிளம்புறேன்" என்று ரூபா சென்று விட,
அவர்கள் சம்பாசனையை கேட்டு புன்னகையுடன் அமர்ந்திருந்த முருகனை முறைத்த கீர்த்தனா "எதுக்கு? இல்ல எதுக்குனு கேக்குறேன். நான் கேட்டேனா எனக்காக யாரும் பரிதாப படலை, நீ ஆள் அனுப்பி வைனு" என்று கோபமாய் கேட்டவள்,
" எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனை? உன்னை கும்பிடுறேனே அதுக்காகவா? எனக்கு கல்யாணம் ஆகலைங்குறதை விட இப்படி பேச்சை கேட்க தான் கஷ்டமா இருக்கு முருகா. ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல கல்யாணம் ஆகாம இருந்தா அம்மா கூட எதிரி ஆகிடுறாங்க. அவங்க வேதனை புரியுது. அதுக்குகாக... என்னோட சண்டை போட்டு என்ன பிரயோஜனம் சொல்லு? அதில் என்னோட நிம்மதியும் சேர்ந்து போறது தான் மிச்சம். அதனால உன் கருணையை கொஞ்சம் சீக்கிரம் காட்டு" என்றாள் தெய்வ கீர்த்தனா வருத்தமும் கெஞ்சலுமாய்.
ஆனால் அந்த அரசமரத்தான் தான் அதை கேட்டது போல் இல்லை. எப்போதும் முகத்தில் இருக்கும் நீங்காத புன்னகையுடனேயே தான் அமர்ந்து இருந்தார். அவரை சில நொடிகள் முறைத்து பார்த்த கீர்த்தானா முகத்திலும் அந்த புன்னகை வந்தமர
"இந்த டைம்மும் என்னை டீல்ல விட போற அதானே!" என்ற கேள்வியுடனும்
அதே புன்னகையுடனும் வேண்டுதலை முடித்துக்கொண்டு அவள் வீட்டிற்கு சென்றாள்.
அவள் நினைத்து வந்தது சரி தான் என்பது போல் "தெய்வா இங்க வா... இந்த போட்டோவை பாரு" என்று சந்தோஷத்துடன் ஒரு கவரை அவளிடம் கொடுத்தார் அபிராமி.
இது எப்போதும் நடக்கும் நிகழ்வு தான் என்பதால் "யாரு மா கொண்டு வந்தா?" என்று கேட்டு கொண்டே அந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த தெய்வ கீர்த்தனா, அபிராமியை பார்க்க,
"பையன் பெரு மகேஷ். இஞ்சினியரிங் முடிச்சிட்டு சென்னைல வேலை பார்க்குறானாம். மாசம் எழுபது சம்பளமாம். ஜாதகம் பார்க்க வேண்டாம் பொண்ணு பிடிச்சிருந்தா பேசலாம்னு சொல்லி இருக்காங்களாம். நம்ம ஜெயா இப்போ தான் வந்து போட்டோவும் ஜாதகமும் குடுத்துட்டு போறா" என்று அவள் பார்வைக்கான பதிலை கூறிய அபிராமி ஆவலாய் கீர்த்தனா முகம் பார்க்க,
"எப்போ வராங்கலாம்?" என்றாள் கீர்த்தானா பெரிதாய் எந்த ஆர்வமும் இல்லாமல்.
"நாளைக்கே நாள் நல்லா இருக்கு பார்க்க வரட்டுமானு ஜெயா கேட்டா... நான் தான் அப்பாட்ட கேட்டுட்டு தகவல் சொல்றதா சொல்லி இருக்கேன்" என்று அபிராமி சொல்ல,
"சரிமா..." என்ற கீர்த்தனா, போட்டோவை அவரிடமே கொடுக்க,
"தெய்வாமா..." என்று தவிப்புடன் அழைத்து அவள் கையை பிடித்து கொண்ட அபிராமி "உனக்கு பையனை பிடிச்சிருக்கு தானே டா?" என்று கேட்டார்.
"பிடிக்கலைனாலும் அப்பாகிட்ட பிடிச்சிருக்குனு சொல்றேன் மா. எனக்கா இல்லைனாலும் உனக்கா சீக்கிரமே இந்த வீட்டை விட்டு போய்டுறேன் சரியா?" என்ற கீர்த்தனா இன்னதென பிரித்தறிய முடியா குரலில் சொல்ல,
அவள் வார்த்தை அபிராமியை சுருக்கென குத்த "ஏன் தெய்வா!" என்று வலி மிகுந்த குரலில் கேட்ட அபிராமிக்கு கண்ணீர் கன்னத்தில் வழிந்து விட்டது.
"வேற என்னமா செய்யட்டும். நான் எனக்கு பிடிக்கலைனு சொன்னா அடுத்த பத்து நாள் என்னோட பேச மாட்டிங்க. என்னவோ... வந்த எல்லா சம்மந்தத்தையும் நானே எட்டி உதைச்ச மாதிரி பேசுவிங்க. கேட்டு கேட்டு எனக்கு வெறுத்து போச்சி மா. இந்த வீட்டை விட்டு, உங்களை விட்டு தூரமா போனா போதும்னு ஆகிட்டு" என்று கீர்த்தனா விரக்தியாய் சொல்ல,
"போதும் டி நீ பேசுனது. நீ பேசுனதை கேட்டு பெத்தவளா எனக்கு மனசு குளிர்ந்து போச்சி. ஆமா... நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சொன்னதை மட்டும் கேளு... போதும்" என்று கோபமும் அழுகையுமாய் சொன்னவர் அதற்கு மேல் மகளின் பேச்சை கேட்டு உள்ளம் போக பிடிகாகாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
மகள் சொன்ன இந்த வார்த்தையே ஜென்மத்துக்கும் போதுமானதாய் இருந்தது அவருக்கு.
"நீங்க இதை தான் செய்விங்கனு எனக்கு தெரியும்மா" என்று விரக்தியுடன் சொன்னபடி அறைக்குள் சென்ற கீர்த்தனா அடுத்த பத்து நிமிடத்தில் வேலைக்கு கிளம்பி சென்று விட்டாள்.
கீர்த்தனா கோவையில் உள்ள பெண்களின் பிரத்தியேக ஆடையகம் ஒன்றில் மேனேஜராக வேலை செய்கிறாள். இப்போதைய அவளின் ஒரே ஆறுதல் அவள் வேலை ஒன்று மட்டுமே.
தெய்வ கீர்த்தானா கல்யாண சந்தையில் கடந்த நான்கு ஆண்டுகளாய் விலை போகாமல் இருக்கும் பெண். அது அவள் தவறா? ஆனால் அவள் தவறு தான் என்றனர் ஊரும் உறவுகளும்.
கீர்த்தனாவை பொறுத்தவரை கல்யாணம் என்ற ஒன்று மட்டுமே வாழ்க்கை இல்லை. அதை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்று நினைக்கும் பெண். ஆனால் அபிராமியோ கல்யாணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கும் ரகம்.
அதனால் தானோ என்னவோ! கீர்த்தனா கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் போதே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கி விட்டார்.
அந்த வருடத்திலேயே திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று தீவிரமாய் இருந்தவரை "படிப்பு முடிந்த பிறகு தான் திருமணம் செய்வேன். இப்போது திருமணம் வேண்டாம்" என்று சண்டை போட்டு ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்து தான் கீர்த்தனா அந்த பேச்சை தள்ளி போட்டாள்.
ஆம்... அவளால் தள்ளி போட மட்டுமே முடிந்தது. நிறுத்த முடியவில்லை. அபிராமி அந்த விஷயத்தை அப்படியே விடாமல் உறவினர்கள் வீட்டு கல்யாணம், சடங்கு என்று சென்று வரும் போதெல்லாம் ஒரு ஜாதகத்துடனோ இல்லை மாப்பிள்ளை வீடு பற்றிய தகவலுடனோ தான் வருவார்.
வாரம் முழுவதும் அதை பற்றியே பேசி கீர்த்தனா மனதை கலைக்க முயற்சிப்பார். ஆனாலும் கீர்த்தனா அவள் முடிவில் உறுதியாக இருக்க அவரே அவளுக்கு தெரியாமல் ஜாதகமும் பார்க்க செல்வார்.
இதெல்லாம் தெரிந்து தெரியாதது போல் கீர்த்தனா இருந்து கொல்வாள்.
விஷயம் வெளியே வரும் போது பேசி கொள்ளலாம் என்று நினைத்து அமைதியா இருந்து விட்டாள். ஆனால் அவள் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ அந்த இரண்டு வருடத்தில் அவளுக்கு எந்த வரனும் அமையவில்லை.
ஆனால் அதன் பிறகும் அமையாதது தான் இங்கே கொடுமையாகி போனது. ஆனாலும் அதை பெரிதாக நினைக்காத கீர்த்தானா, வரன் அமைந்த உடன் படிப்பை விடுவதா அபிராமியிடம் கூறி படிப்பை தொடர்ந்தாள். ஆனால் எம்ஃபில் முடிந்து இதோ வருடம் ஒன்று கடந்து விட்டது இன்னும் வரம் அமையவில்லை.
அதை பெரிய விஷயமாக இன்று வரை கீர்த்தனா உணர்ந்தது இல்லை. ஆனால் அபிராமி அப்படி எண்ண வேண்டுமே!.
அவருக்கு பெண் பிள்ளைக்கு சீக்கிரம் திருமணம் செய்து விட வேண்டும் அதனால் வாரம் ஒரு வரனை கொண்டு வந்து நிறுத்த, கீர்த்தனா தான் நொந்து போனாள். அதில் அவர்களுக்கு பிடித்தால் அபிராமிக்கு பிடிக்காமல் போகும், இவர்களுக்கு பிடித்தால் அங்கே பிடிக்காமல் போகும். இருவருக்கும் பிடித்தால் ஜாதக பொருத்தம் இருக்காது. இப்படியே வருடங்கள் கடந்து இருக்க அபிராமியின் மற்றோரு முகத்தையும் கீர்த்தனா உணர்ந்து விட்டிருந்தாள்.
முன்பெல்லாம் உள்ளங்கையில் வைத்து பாசம் காட்டி வளர்ந்தர் இப்பொதெல்லாம் திருமணம் பற்றி பேசவும் திட்டவும் மட்டுமே என்று இருக்க சொந்த வீட்டையே வெறுத்து விட்டாள்.
ஒரு வயதிற்கு மேல் பெண் பிள்ளை திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்தால் அது பெற்றவருக்கு பாரம் என்று புரிய தொடங்கியது கீர்த்தனாவிற்கு. "நீ வீட்டை விட்டு போனா தான் எனக்கு நிம்மதியா சோறு இறங்கும்" என்று அபிராமி சொல்லு நேரம் எல்லாம் தனக்குள்ளே கலங்கி துடித்து போவாள்.
இன்று வரை அந்த பேச்சி ஓயவில்லை. மாறாக இன்னும் சில வார்த்தைகள் கூடி இருந்தது. 'உன்னை விட சின்னவளுங்க எல்லாம் கையில் ஒன்னும் வயித்துல ஒன்னுமா இருக்காளுங்க, உனக்கு எப்போ தான் நல்லா காலம் பிறக்குமோ? ராசி இல்லாதவடி நீ' என்ற வார்த்தை எல்லாம் வதைத்து கொள்ளும்.
அது எல்லாம் பெற்றவர்களான அவர்களின் வேதனையின் வெளிப்பாடு என்று புரிய தான் செய்தது ஆனால் அவர்கள் வேதனையை அவளின் மேல் திணிப்பது தான் கீர்த்தனாவிற்கு வலியை கொடுத்தது.
அதிலும் கடந்த இரண்டு வருடமாய் ஜாதகம் அமையவில்லை என்றாலும் சரி, மாப்பிள்ளை நன்றாக இல்லா விட்டாலும் சரி, கல்யாணம் நடந்தால் போதும் என்ற அபிராமியின் மனநிலை கீர்த்தனாவிற்கு ஒரு வித பாதுகாப்பின்மையையும் மன கசப்பையும் கொடுத்தது.
எங்கே 'திருமணம் நடந்தால் போதும்' என்ற எண்ணத்தில் விசாரிக்காமல் ஒரு கெட்டவனிடம் கையில் தன்னை பிடித்து கொடுத்து விடுவார்களோ! என்ற பயம் கீர்த்தனாவின் மனதை அறிக்க தொடங்க கடவுளை சரணடைந்து விட்டாள்.
முன்பு அபிராமியின் திட்டிற்கு பயந்து கடவுளை சுற்றியவள் இப்போது மனமாற செய்கிறாள். ஆனால் பலன் தான் இன்னும் கிடைக்கவில்லை.
அதனாலேயே நாளை வரும் வரனை ஏற்க தயாராகி விட்டாள். அதை தவிற அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவள் மறுத்து ஏதும் கூறினாள் மீண்டும் திட்டு, பேசாமல் முகத்தை திருப்புவது, உண்ணா விரதம் இருப்பது என்று அவளிடம் இருக்கும் கொஞ்ச நிம்மதியையும் அபிராமி எடுத்து கொள்வார். எனவே நடக்கது நடக்கட்டும் என்று விட்டு விட்டாள்.
வேலைக்கு சென்ற கீர்த்தனா தன் கவலைகளை மறந்துவிட்டு அவள் பதிக்கு உரிய மிடுக்குடனே அவள் வேலைகளை செய்யளானாள்.
மாலை சோர்வுடன் வீடு திரும்பியவளை "வா தெய்வாமா. இன்னைக்கு வேலை அதிகமாடா?" என்ற குமாரின் கனிவான குரலே வர வேற்க,
"ஆமா பா... தீபாவளி டைம் இல்லயா அதான் பா" என்றவள் குமார் சாப்பிட அமர்ந்து இருப்பதை பார்த்து "நான் ப்ரெஸ் ஆகிட்டு வரேன் பா. சேர்ந்து சாப்பிடுவோம்" என்றுவிட்டு சென்றவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் சாப்பிட வந்து அமர்ந்து விட்டாள்.
அவள் தந்தையின் முகத்தில் இருந்த புன்னகையே அவளின் முடிவை அபிராமி சொல்லி விட்டார் என்று புரிய, அவள் முடிவு சரிதான் என்ற எண்ணத்தை கொடுத்தது கீர்த்தனாவிற்கு.
அபிராமி திட்டி தீர்த்து, புலம்பி என்று அவர் கவலைகளை கொட்டி விடுவார். ஆனால் குமார் மனதிலேயே போட்டு அழுத்தி கொள்வார். அதனாலேயே கடந்த இரண்டு வருடங்களாய் அவரின் பேச்சி மிகவும் குறைந்து இருந்தது.
கல்யாணம், காதுகுத்து என்று எந்த சுப நிகழ்வுகளுக்கும் செல்வதும் இல்லை. அபிராமியை அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விடுவார்.
எல்லாவற்றையும் கீர்த்தனா கவனித்தாலும் அமைதியாகவே இருப்பாள். இதில் அவள் என்ன செய்து விட முடியும் என்று அவளுக்கு தெரியவில்லை. எனவே அமைதியாக இருந்து கொள்வாள்.
இப்போதும் அவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை மன நிறைவுடன் பார்த்தபடி சாப்பிட அமர்ந்தவள் அமைதியாக சாப்பிட,
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த குமார் "உனக்கு இந்த பையனை புடிச்சிருக்காமா? அம்மா சொன்னானு ஒன்னும் சம்மதம் சொல்லலையே!" என்று தவிப்பை அடக்கிய குரலில் கேட்க,
"பிடிச்சிருக்கு பா. நீங்க பேசுங்க" என்றாள் கீர்த்தனாவும் இப்போது உறுதியுடன்.
அதில் அகம் மகிழ்ந்து போன குமார் "சரி மா... சரி மா... உன் தம்பியை வர சொல்றேன். பையனுக்கும் உன்ன பிடிச்சிட்டுனா நாளைக்கு உடனே பூ வைக்கனும்னு பையனுக்கு அப்பா சொல்லிட்டு இருந்தாங்க . பையன் ரொம்ப நல்ல பையன் மா. அப்பா விசாரிச்சிட்டேன். நீ ஏதும் சங்கடப்பட்டுக்காத" என்று சொல்ல,
"எனக்கு உங்களை தெரியும் பா. உங்களை தவிர எனக்கு வேற யார் நல்லது நினைச்சிட போறாங்க! நீங்க ஏற்ப்பாடு பண்ணுங்கப்பா" என்றவள் அவள் அறைக்குள் சென்று படுத்து விட, அடுத்த பத்து நிமிடத்தில் அவள் தம்பி அழைத்து விட்டான்.
அவன் பங்கிற்கு அவனும் 'பையனை பிடித்திருக்கிறதா?' என்று கேட்டு திருப்தி ஆகி கொண்டவன் கிளம்பி விட்டதாக கூறி அழைப்பை துண்டித்தான்.
பொழுதும் விடிந்தது. அபிராமி வீட்டு வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க, அவருக்கு உதவ என்று கீர்த்தனாவும் அவருடன் சென்று நின்று சின்ன சின்ன வேலைகளை செய்து கொடுத்தாள்.
அபிராமி அடிக்கடி அவள் முகத்தை பார்ப்பதும், வேலை செய்வதுமாக இருக்க "என் முகத்துல என்ன படமாமா ஓடுது?" என்றாள் கீர்த்தனா எரிச்சலுடன்.
"சும்மா பார்த்தேன் டி. நேத்து மூக்கை சீந்திட்டு போனியே... அதான்" என்ற அபிராமி "உனக்கு பையனை பிடிச்சிருக்கு தானே தெய்வா?" என்றார் ஒரு அன்னையின் தவிப்புடன்.
"பிடிச்சிருக்கு மா. ஏன் அதையே யோசிச்சிட்டு இருக்க! சீக்கிரம் வேலையை முடிப்போம். நான் குளிச்சிட்டு கிளம்பனும். அப்பா எங்க போய்ட்டாங்க? ஹால்ல இல்லை" என்று கீர்த்தனா கேட்க,
"அவர் 'எல்லாம் நல்ல படியா முடியனும்னு' அந்த ஆலமரத்தானை பார்த்து அவருக்கு மாலை போட போய் இருக்கார். நீயும் குளிச்சிட்டு போய் கும்பிட்டுட்டு வந்துடு" என்றார் அபிராமியும் சந்தோஷத்துடன்.
தெய்வ கீர்த்தனாவிற்கும் முருகனை சென்று பார்க்க தோன்ற கிளம்பி சென்று அவரை வணங்கி விட்டு வந்தாள். முருகனும் சிரித்த முகமாய் வழியனுப்பி வைத்தார்.
அடுத்த சிலமணி நேரத்தில் அவளை பெண் பார்க்க வந்தனர். அனைவரும் டீ குடித்து பஜ்ஜி சாப்பிட்டு முடிக்க பெண் அழைக்கப்பாட்டாள்.
அபிராமி வந்து கீர்த்தனாவை வெளியே அழைத்து வர, பையன் வீட்டு சார்பில் வந்திருந்த அனைவரின் பார்வையும் அவளை அங்கு வேறு ஆணி வேறாய் ஆராய்ந்தனர்.
அதை தொடர்ந்து எல்லாரும் அவர்களுக்குள் ஏதோ பேசி கொள்ள, பையனின் அம்மா பையனிடம் கண் ஜாடையில் 'பெண்ணை பிடித்திருக்கிறதா?' என்று கேட்க,
அவனின் பதில் தலையசைப்பில் வந்தது.
பையனின் பெரியம்மா தெய்வகீர்த்தனாவிடம் "எங்க பையனை பிடிச்சிருக்கானு சொல்லுமா?" என்று சொல்ல,
கீர்த்தனாவும் நிமிர்ந்து மாப்பிள்ளையை பார்த்தாள். நேற்று போட்டோவில் பார்த்தவனுக்கும் நிஜத்துக்கும் பத்து வேறுபாடு இருந்தது. நேற்று போட்டோவில் சுமார் ரகமாய் இருந்தவன் நேரில் இன்னும் சுமாராய் தான் இருந்தான்.
குண நலன்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. இருந்தும் குமார் அபிராமி முகத்தில் இருந்த சந்தோசத்தை நிலைக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தவள் "பிடிச்சிருக்கு" என்றாள் தெளிவாய்.
அடுத்து மீண்டும் பத்து நிமிடம் அவர்களுக்குள் ஏதோ முணுமுணுப்பாய் பேசி கொண்டவர்கள் "நீங்க வேற இடம் பாருங்க" என்று நாசுக்காய் கூறி எழுந்து சென்றனர்.
அவ்வளவு தான் கீர்த்தனா வீட்டில் இருந்த அனைவர் முகத்திலும் கவலை குடியேற சோர்ந்து போனார்கள்.
ஆனாலும் அபிராமி கோபத்தையும், தவிப்பையும் அடக்க முடியாமல் "ஏங்க என்ன ஆச்சி? எதுவும் காரணம் சொல்லாம பிடிக்கலைனு சொன்னா நாங்க என்ன நினைக்குறது!" என்று கீர்த்தனா தடுத்ததையும் மீறி கேட்டு விட
"பொண்ணு மா நிறமா தான் இருக்கா. எங்க பையனுக்கு வெள்ளையா தான் பொண்ணு பார்க்க நினைச்சோம். ஜெயா பொண்ணு நல்ல வெள்ளைனு சொல்லவும் தான் வந்தோம்" என்று பையனின் அன்னை சொல்ல,
"போய்ட்டு வாங்க சாமி" என்று கை எடுத்து கும்பிட்டு விட்டார் அபிராமி.
ஆனால் அபிராமி அறியவில்லை அவரின் மருமகன் அதிரடியாக அவர் மகளை மணக்க போகிறான் என்று. அதை எல்லாம் அறிந்த முருகரோ மாற புன்னகையுடன் ஆலமரத்தின் நிழலில் அந்த விளையாட்டை பார்க்க காத்திருந்தார்.
தொடரும்....