எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

செம்பருத்தி பூ - கதைத்திரி

Selvi_Saran

Moderator
ஹாய் நண்பர்களே, நான் செல்வி சரண். இன்று செம்பருத்தி பூ நாவல் மூலமாக உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 1​

''அம்மா '' என்று அழைத்து கொண்டே வந்தாள் நம் கதையின் நாயகி விதுஷிகா. "என்ன விது" என்றார் வாணலியில் கிச்சடியைக் கிண்டிக் கொண்டிருந்த கீதா, விதுஷியின் தாய்.

"வருண் போன தடவை வரும் போது, ஒரு புத்தகத்தை வைத்து விட்டுப் போய் விட்டானாம் அம்மா. அதை கூரியரில் அனுப்ப வேண்டுமாம்" என்றாள் விது.

திரும்பி மகளை பார்த்தார் அவர். இன்னும் சற்று நேரம் அவள் முகத்தைப் பார்த்து கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது அவருக்கு. அப்படி ஒரு களையான முகம், பால் போன்ற நிறம், மெலிவும் இல்லாமல் குண்டு என்று சொல்லவும் முடியாத அளவான உடலமைப்பு. எதிலும் ஒரு நிதானம் இருக்கும் அவள் செயல்களில்.

"அப்பா வெளியில் ஒரு வேலையாகக் காலையிலேயே போய் விட்டார்" என்றார் கீதா.

"இன்றைக்கே அனுப்ப வேண்டும் என்றானம்மா. நான் வேண்டுமானால் போய் வரட்டுமா?" தயக்கத்துடன் தான் கேட்டாள்.

ஏனெனில் விதுவைப் பெண் பார்க்க மாலை மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள். உடனே கீதாவுக்குக் கோபம் வந்து விட்டது. கிச்சடியை அடுப்பில் இருந்து இறக்கி "டங்" என்ற சத்தத்துடன் அடுப்பு மேடையில் வைத்தவர் மகளின் புறம் திரும்பினார்.

"என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் உன் தம்பி. அவனுக்கு ஒரு ஃபோனைப் போடு" என்றார் அதே கோபத்தோடு. தம்பிக்கு அழைப்பு விடுத்து அன்னையிடம் போனைக் கொடுத்தாள்.

அழைப்பு விடுத்து அந்தப் புறம் எடுக்கப் பட்டதும் "என்னடா நீ? தேவையான புத்தகத்தைக் கையோடு கொண்டு போகத் தெரியதா?" என்றார். இதையும் செல்ல சலிப்பாகத் தான் கேட்டார்.

அவனோ "சாரி ஹனி, இந்த முறை மட்டும் ஹெல்ப் பண்ணு. இனி உன் மகன் மிகவும் கவனமாக இருப்பேன். ப்ளீஸ் ப்ளீஸ் ஹனி" என்று கொஞ்சினான் வருண்குமார்.

"ம்ம் சரி கண்ணா. ஆனால் அக்காவை பகலில் வெயிலில் அனுப்ப வேண்டுமடா. அது தான் யோசித்தேன். சரி நான் அதை பார்த்து கொள்கிறேன். நீ சாப்பிட்டாயா வரு?" என்று அவனுடன் அளவளாவ ஆரம்பித்து விட்டார்.

விது தான் இருவரையும் கோபத்துடன் நோக்கக் கொண்டிருந்தாள். சாவகாசமாக பேசி முடித்து இவள் புறம் திரும்பியவர், சட்டென்று முகத்தை மாற்றக் கெத்தாக வைத்து கொண்டு "என்ன டி?" என்றார்.

"இதைத் தானே நானும் கூறினேன். அவன் மட்டும் என்னம்மா ஸ்பெஷல்".

"நீ கோபப்பட்டால் பக்கத்தில் இருப்பதால் உடனே சமாதான படுத்தி விடுவேன். அவன் ஹாஸ்டலில் தனியாக இருக்கிறான். அதனால் தான் அவனிடம் கோபம் கொள்ளவில்லை விது."

"சரிம்மா நான் கூரியர் ஆபீஸ் போய் வரட்டுமா" என்றாள் மீண்டும்.

"வேறு வழி? சாப்பிட்டுக் கிளம்பு. நான் கொஞ்சம் மார்க்கெட் போக வேண்டும்."

பூபதிராஜ், லட்சுமி தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள், விதுஷிகா 23, வருண் குமார் 19. தந்தை வங்கி மேலாளர், தாய் குடும்பத் தலைவி. விதுஷிகா தந்தையைப் பின்பற்றி ஐபிபிஎஸ் தேர்வு எழுதி, இரண்டு வருடங்களாக தூத்துக்குடியில் இருக்கும் ஒரு தேசிய வங்கியில், வேலை பார்த்து வருகிறாள். தம்பி சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில், ரோபோடிக் இன்ஜினியரிங் இரண்டாம் வருடம் படித்து கொண்டிருக்கிறான்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து, இப்போது தான் ரயில்வேயில் கிளெர்க்காக இருக்கும் சுகுமாரைத் தேர்ந்தெடுத்து, இன்று பெண் பார்க்கும் வைபவம் வைத்துள்ளனர். விதுஷிகாவைப் பொறுத்த வரை, தந்தை தாய் தம்பி தான் அவள் உலகம், நண்பர்கள் எல்லாம். அதற்காக யாருடனும் பழகாதவள் இல்லை. பள்ளி, கல்லூரித் தோழிகள் சிலர் இப்போது வரை தொடர்பில் இருக்கின்றனர் தான். ஆனால் அவளுக்கென்று உயிர்த்தோழி என்று, தனிப்பட்டவர்கள் யாரும் அவளுக்குத் தேவைப்படவில்லை. நண்பர்களுடன் பேசும் விசயங்கள் எதைப் பற்றியும், வீட்டினருடன் பேசும் சுதந்திரம் அவளுக்கு இருந்தது.

இவர்கள் குடும்பம் நவீன கூட்டுக்குடும்ப வகையைச் சேர்ந்தவர்கள். தூத்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். பூபதிராஜின் தந்தை சேர்வராயன், தாய் ராஜம்மாள். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் அவரவர் குடும்பத்துடன் ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் இருக்கின்றனர்.

பூபதிராஜின் அண்ணன் தங்கராஜ் உப்பளம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார், தங்கை வசந்தாவின் கணவர் புகழ்பெற்ற ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சேர்வராயன் தம்பதிகள் குத்தகைக்கு நிலங்களை எடுத்து விவசாயம் செய்து, அதில் வந்த வருமானத்தில், மூன்று பிள்ளைகளுக்கும் அந்தக் காலத்திலேயே ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், ஒன்று போல் நிலம் வாங்கி வீடுகட்டிக் கொடுத்தார்கள். தங்கள் கடமைகளை முடித்து, கடந்த இரு வருடங்களில் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்து விட்டனர்.

அடுத்த வீடுகளில் இருந்தாலும் ஒருவர் வீட்டில் சின்ன சந்தோஷமோ, கஷ்டமோ எதுவாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை. வாரம் ஒரு முறை ஞாயிறுகளில், மதிய உணவுக்கு யாராவது ஒருவர் வீட்டில் தான் அனைவரும் இருப்பார்கள். இவர்கள் பிள்ளைகளும் ஒருவருக்கு ஒருவர், இது வரை ஒற்றுமையாக தான் இருந்து வருகின்றனர்.

விதுஷிகாவின் பெரியப்பாவுக்கு இரு பெண்கள் கீர்த்திகா, பிரியா. கீர்த்திகாவுக்குத் திருமணம் முடிந்து மதுரையில், கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வசித்து வருகிறாள். பிரியா இப்போது தான் பொறியியல் இறுதி வருடம் படித்து வருகிறாள்.

அத்தை வசந்தாவுக்கு இரு ஆண் பிள்ளைகள் தர்ஷன், ராகவன். தர்ஷன் தந்தையுடன் தொழிலில் இறங்கி, காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்தித் தொழில் முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கிறான். ராகவன் வருண்குமாருடன் ஒரே கல்லூரியில் ஒரே பிரிவில் படிக்கிறான்.

விதுஷியைத் தனியாக வெளியில், அதுவும் இன்று அனுப்ப விருப்பம் இல்லாத கீதா, பிரியாவை துணைக்கு அழைத்து செல்லும் படி கூறினார்.

தாயின் மனநிலையைப் புரிந்து கொண்டு, உடனே பிரியாவுக்கு போன் செய்தாள் விதுஷி. தேர்வுக்குப் படிக்க விடுமுறையில் இருந்தாள் ப்ரியா.

விதுவின் எண்ணைப் பார்த்ததும் உற்சாகமாக "என்ன கல்யாணப் பொண்ணு காலையிலேயே என்னோட நியாபகம்? நியாயமாக அத்தான் நியாபகம் தானே வர வேண்டும்?" என்றாள்.

முகம் லேசாகச் சிவந்தாலும் "நான் உனக்கு அக்கா டி. இப்படிக் கிண்டல் செய்யக் கூடாது" என்றாள் விது.

"அதெல்லாம் செய்யலாம். என்ன விஷயம் அக்கா? அதை முதலில் சொல்லு"

"வெளியில் ஒரு வேலை பிரீ. என்னுடன் வருகிறாயா? ஐஸ் கிரீம் வாங்கித் தருகிறேன்."

"ம்ம்ம்" என்று யோசனை செய்த பிரியா, "சரி இடத்தைச் சொல். வரலாமா வேண்டாமா என்று யோசிக்கிறேன்" கெத்தாகப் பேசினாள்.

மனதுக்குள் இந்த அம்மாவால் தான் இவளிடம் கெஞ்ச வேண்டி உள்ளது. இவளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது காரியம் நடக்க வேண்டும் என்று, பெரிய மூச்சை எடுத்துத் தன்னை அமைதிப் படுத்திக் கொள்ள முயற்சி செய்தாள் விதுஷி.

"கூரியர் ஆபீஸ் போக வேண்டும் ப்ரீ செல்லம்."

"அக்கா.... ஆ"

காதைக் குடைந்து கொண்டே "ஏன் டி கத்துற?" எரிச்சலில் விது.

"நீ ஒரு கல்யாணப் பொண்ணு. பார்லர், பொட்டிக் இந்த மாதிரி இடங்களுக்கு என்னைக் கூப்பிட்டால் ஒரு நியாயம் இருக்கும். நீ எங்க அதுக்கு சரிப்பட்டு வரப் போற?."

வருணின் தேர்வைப் பற்றிக் கூறி, அந்தப் புத்தகத்தை அனுப்ப வேண்டிய அவசியத்தையும் கூறி, கிட்டத்தட்டக் கெஞ்சி அவளை வரவழைத்து, இருவருமாக வீட்டை விட்டு ஸ்கூட்டியில் வெளியேறிய போது ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

வழக்கம் போல் வீட்டை விட்டுச் சற்று தூரம் சென்றதுமே, சில நாள்களாக ஏற்படும் உணர்வு இன்றும் வந்தது. வண்டியை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தாள். யாரும் இல்லை, சாலையில் சந்தேகப் படுமாறு எந்த வாகனமும் செல்லவும் இல்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வும், அதைத் தொடர்ந்த இன்றைய உறுத்தலும் தொடர் கதையானது.​

வண்டி நிறுத்த பட்டதும் பின்னால் இருந்த பிரியா "என்ன அக்கா?" என்றாள்.

"யாரோ அழைத்தாற் போல் இருந்தது" முணுமுணுத்தவாறு மீண்டும் வண்டியை கிளப்பினாள் விது.

கூரியர் ஆபீஸ் போய் புத்தகத்தை அனுப்பி விட்டு, ஐஸ்கிரீம் பார்லர் போய் வசதியான இடம் பார்த்து அமர்ந்தனர் சகோதரிகள். சிரித்துக் கதைகள் பேசிக் கொண்டு இருந்தாலும், விதுவின் பார்வை எதையோ அலசி கொண்டே இருந்தது.

"என்ன அக்கா? யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டு விட்டாள் பிரியா.

"யாரோ தெரிந்தவர் போல் இருந்தது"

அந்நேரம் அவளுடைய அலைபேசி அழைத்தது. வருண் தான் பேசினான்.

"அக்கா எங்கே இருக்கிறாய்?"

"நானும் பிரீயும் கூரியர் ஆபீஸ் போயிட்டு, அப்படியே ஐஸ்கிரீம் சாப்பிட வந்தோம் வருண்"

"அக்கா.....?".

"என்ன டா? சொல்லு".

"இன்னைக்கு நீ மாப்பிள்ளையிடம் பேசி விட்டு, உனக்குப் பிடித்திருந்தால் மட்டும் தான் சம்மதம் சொல்ல வேண்டும். அப்பாவுக்காக, அம்மாவுக்காக என்று எந்த முடிவும் எடுக்க கூடாது. சரியா?".

தம்பியின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தாள் விதுஷி. ஆனால் வெளியில் அதை மறைத்து "என்னடா, பெரிய மனுஷன் போல் பேசுற!" என்றாள் விளையாட்டாக.

"அக்கா, செமஸ்டர் எக்ஸாமுக்கு படிக்க லீவு விட்டிருக்காங்க. இல்லா விட்டால் நான் இந்த நேரத்தில் உன் கூட இருந்து, அங்கே உன் முகம் பார்த்தே சொல்லிவிடுவேன். உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா என்று. அதனால் தான் உன்னிடம் சொல்லுகிறேன்."

"சரிடா, சரிடா பெரிய மனுசா. கண்டிப்பா சொல்லுகிறேன். சரி தானா?"

"சரிக்கா. அந்த பிஓடி நம்பரை அனுப்பு"

"ம்ம்" என்று காலை கட் செய்தாள் விதுஷி.

பிரியா விதுஷியிடம் "அக்கா வா பார்லர் போகலாம்."

"எதுக்குடி?"

"ம்ம். எனக்கு பேசியல் செய்யத் தான்"

"வா அக்கா. சித்தியிடம் காலையிலேயே பேசி விட்டேன். உனக்கும் செய்து தான் கூட்டி வரச் சொன்னார்கள்"

"அம்மா என்னிடம் எதுவும் சொல்லவில்லையே"

"நேற்று சொன்னதற்கு நீ வேண்டாம் என்றாயாம். அது தான் என்னிடம் இன்று தான் சொன்னார்கள். ப்ளீஸ் அக்கா"

இருவரும் பார்லருக்குள் நுழைந்தார்கள். உண்மையில் பிரியா புருவம் திருத்த மட்டும் தான் இங்கு வந்தாள். விதுஷிக்காக மட்டுமே இங்கு வந்துள்ளனர். விதுஷியை உள்ளே அனுப்பி விட்டு, வெளியில் காத்திருப்புப் பகுதியில் அமர்ந்திருந்தாள் பிரியா. அவர்கள் ஒரு காம்ப்ளெக்ஸில் இருக்கும் பார்லருக்குத் தான் வந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு நடுத்தர வயது ஆண், அவர்கள் வந்த ஸ்கூட்டி நம்பரைக் கூறி, அது பிற வண்டிகளை எடுக்க முடியாமல் சிரமம் ஏற்படுத்துவதாகவும் கூறி, அதைச் சற்றுத் தள்ளி நிறுத்துமாறு கேட்டார்.

பிரியா கீழே சென்று வண்டியைப் பார்த்தாள். அது அவர்கள் நிறுத்திய மாதிரி இல்லாமல், குறுக்காக நின்று கொண்டிருந்தது. அவளுக்குச் சற்று குழப்பம் ஏற்பட்டது. ஆனால் யாரிடம் சென்று கேட்பது என்று தெரியாமல், வண்டியைச் சிறிது போராட்டத்திற்குப் பிறகு சரியாக நிறுத்தி விட்டு, மீண்டும் சென்று இரண்டாம் தளத்தில் இருந்த பார்லர் பகுதியில் அமர்ந்தாள்.

வெகுநேரம் ஆகி விட்டது, விதுஷி இன்னும் வர வில்லை. ரிஷப்ஷன் பகுதிக்குச் சென்று இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டாள். அவள் சொன்ன பதிலில் பிரியாவுக்கு மயக்கம் வரும் போல் ஆகி விட்டது.​


  • தொடரும்….​

இந்த நாவல் பிரதிலிபியில் முடிவுற்ற நாவல். தளத்தில் முதல் முறை பதிவு செய்கிறேன். படித்து விட்டு தங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்…​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 2​

தலை கனமாக இருந்தது விதுஷிகாவுக்கு, கண்களைத் திறக்கவே முடியவில்லை. சிறிது நேர முயற்சிக்குப் பிறகு கண் இமைகளை மெதுவாகத் திறந்தாள். பார்வை மங்கலாக எதுவும் தெரியவில்லை, சுற்று புறம் புரியாமல், சூழ்நிலை புரியாமல் மூளை மந்தமாக இருந்தது.​

படுத்திருந்தவள் எழுந்து கொள்ள முயன்றாள். உடல் எங்கோ பறப்பது போல் இருந்தது. உடலையும், மூளையையும் திடப்படுத்த முயன்றவாறு எழுந்து அமர்ந்தாள். அந்த அறை அவளுக்குப் புதிது. அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது.​

ஆனால் அவளுக்குத் தற்போது உடல் உபாதைகளைத் தீர்க்க வேண்டி இருந்தது. அறைக்குள் இருந்த பாத்ரூமிற்குள் சென்று, முகத்தை நீர் விட்டு நன்றாக அடித்துக் கழுவினாள். மூளை கொஞ்சம் சுறுசுறுப்பு அடைந்தது. கடைசியாக பியூட்டி பார்லரில் நடந்ததை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.​

பார்லரில் முதலில் பிரியாவும், விதுஷிகாவும் தங்கள் தேவைகளை ரிசப்சனில் கூறி விட்டு அமர்ந்திருந்தனர்.​

பார்லர் பெண் ஒருத்தி பிரியாவிடம், "மேடம், உங்களுக்கு த்ரெட்டிங் மட்டும் என்பதால் நீங்கள் முதலில் வாருங்கள்" என்று அழைத்தாள்.​

"அக்கா, நான்போய் விட்டு வருகிறேன்" என்று விதுஷியிடம் கூறி விட்டுத் தன் மொபைல், பர்ஸை அவளிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்.​

சற்று நேரத்தில் பிரியா வெளியே வரவும், விதுஷியை உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போது விதுவை, உள்ளேயே பக்கவாட்டில் இருந்த இன்னொரு காத்திருப்பு அறையில் அமருமாறு சொன்னாள், அந்தப் பெண்.​

"பிரியாவுக்கு முடித்த உடன் எனக்குரிய நேரம் என்று சொன்னீர்களே?" என்றாள் விதுஷி.​

"ஆமாம் மேடம், ஆனால் உள்ளே இருக்கும் கஸ்டமர் சற்று நேரத்தை இழுத்தடிக்கிறார். அவர்களை அனுப்பி விட்டால், உங்களுக்குரிய சேவையில் இடையூறு இல்லாமல் இருக்கும். அதனால் தான் மேடம்" என்று விட்டு ஒரு கிளாஸ் பழச்சாற்றை அவளுக்குக் கொடுத்தாள்.​

அதைக் குடித்த பின்பு சற்று நேரத்தில், அவளே மீண்டும் விதுஷியிடம் வந்தாள்.​

"மேடம், உங்களுடன் வந்த பெண் காம்ப்ளக்ஸ் வாசலுக்கு உங்களை வர சொல்லி, ரிசப்ஷன்க்கு சொல்லி இருக்கிறார்கள்"​

"அவள் ஏன் கீழே சென்றாள்?"​

"தெரியவில்லை மேடம். வேண்டுமானால் ரிஷப்ஷனில் கேட்டு பாருங்கள்".​

விதுஷி ரிஷப்ஷனில் கேட்கும் அளவு பொறுமை இல்லாமல், அங்கிருந்து வெளியேறி, கீழே செல்வதற்காக படி இருக்கும் பகுதி நோக்கி செல்ல ஆரம்பித்தாள். அப்போது மேலே ஏறி வந்து கொண்டிருந்த ஒரு பெண் அவளிடம்,​

"இங்கே பொட்டிக் எந்த பக்கம் இருக்கிறது?" என்று கேட்டார்.​

அவள் வழி சொல்வதற்காக திரும்பிய போது, அவள் பின்புறம் இருந்து அவள் முகத்தில் ஒரு துணி அழுத்த பட்டது. அவ்வளவு தான் அவள் நினைவில் உள்ளது.​

இது யாருடைய வேலையாக இருக்கும்? இந்த கேள்வி தோன்றிய உடனேயே அவள் மனதில் ஒரு முகம் தோன்றி உடல் வெளிப்படையாக நடுங்க தொடங்கியது.​

வேகமாக அந்த அறையின் கதவை திறந்து பார்த்தாள். கதவு உடனே திறந்து கொண்டது. அந்த அறையின் வாயிலில் இருந்து வெளியில் பார்த்தாள். அது ஒரு நவீன மாடலில் கட்டப்பட்டிருந்த வீடு. ஆனால் வீடு அளவில் சிறியதே. இவள் இருந்தது மாடியில். கீழே எட்டி பார்த்தாள். பேச்சுக் குரல் மட்டும் கேட்டது, ஆனால் யாரும் கண்களுக்கு தெரியவில்லை.​

"திருப்பள்ளி எழுச்சி முடிந்ததா?" பின்புறம் கேட்ட குரலில் அதிர்ந்து திரும்பினாள். சர்வமும் ஒடுங்கி, மீண்டும் ஒரு மயக்கம் வந்ததைப் போல் தள்ளாடினாள்.​

பிரியா ரிஸப்ஷனை அணுகி, அங்கிருந்த பெண்ணிடம் விதுஷிகாவுக்கு ஃபேசியல் முடிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டாள். அவள் இன்டர்காமில் உள்ளே உள்ள அறைக்கு அழைத்து விவரம் கேட்டாள்.​

"மேடம், உங்களுடன் வந்தவர்கள் நீங்கள் கீழே சென்று அழைத்த போதே சென்று விட்டார்கள். இன்னும் திரும்பி வரவில்லை"​

பிரியாவுக்கு பதட்டமாகி விட்டது. "நான் எப்போது ஃபோன் செய்தேன்?"​

"மேடம் நீங்கள் தான் மேடம், என் அக்கா விதுஷிகா உள்ளே இருக்கிறாள். அவளை காம்ப்ளக்ஸ் வாசலுக்கு வரச் சொல்லச் சொன்னீர்கள். பெயர் கூட பிரியா என்றீர்களே?"​

"சரி அப்படியே என்றாலும் நான் தனியே இங்கே வந்து அமர்ந்து அரைமணி நேரம் ஆகி விட்டது. நீங்கள் ஏன் அவளுடைய ஃபேசியலுக்காக அவளை அழைக்கவில்லை?"​

"நீங்கள் தனியே வந்து அமர்ந்திருப்பதை பார்த்து, அவர்களுக்கு ஏதும் அவசர வேலையாக போய் இருப்பார்கள், அவர்கள் வருவதற்காக நீங்கள் வெயிட் செய்வதாக நினைத்து விட்டோம் மேடம்" என்றாள் அந்தப் பெண் மிகவும் பயத்தோடு.​

பிரியா கத்திப் பேசியதால், பார்லர் உள்ளே வேலை செய்பவர்களும் அவளிடம் வந்து விளக்கம் கொடுத்தனர். ஆனால் அந்த விளக்கத்தால் அவளுக்குத் தான் எந்த பயனும் இல்லை. இப்போது விதுஷியை எங்கே? அவளுக்கு என்ன ஆயிற்று?​

அவள் இப்படிப் பொறுப்பில்லாமல் தன்னை இங்கே விட்டு விட்டு வீட்டிற்குச் செல்ல ஒரு சதவீதம் கூட வாய்ப்பே இல்லை.​

ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லை. இப்போது வீட்டிற்குத் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் விதுஷி உள்ளே செல்லும் போது அவளுடைய ஃபோன், ஹாண்ட்பாக் போன்றவற் பிரியாவிடம் தான் கொடுத்து விட்டு சென்றிருந்தாள்.​

வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லப் பயமாக இருந்தது. அவள் நினைவுக்கு உடனே வந்தவன், அவளுடைய அத்தான் தர்ஷன் தான். இருவருக்குமிடையில் சொல்லப்படாத நேசம் ஒன்று உள்ளது. இருவருக்கும் ஒருவர் உணர்வு மற்றவர்க்கு சொல்லாமலேயே தெரியும். அதனால் தான் எந்த ஒரு இக்கட்டிலும் அவளுக்கு மனக்கண் முன் தோன்றுவது அவன் தான்.​

தர்ஷனுக்கு ஃபோன் செய்தாள். ரிங் சென்று அவன் அழைப்பை ஏற்றதும், "அத்தான்" என்றாள் அழுகுரலில்.​

"என்னம்மா? என்ன ப்ரீ? அழுகிறாயா?" என்றான் தர்ஷன் பதட்டத்துடன்.​

தேம்பலுக்கிடையே அவள் விசயத்தைச் சொன்னதும், "நீ அங்கேயே இரு. நான் வந்து விடுகிறேன். அது வரை அமைதியாக அங்கேயே அமர்ந்திரு" என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.​

கீதாவுக்கு கால் செய்தான் தர்ஷன். சாதாரணமாக விசாரிப்பது போல் அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்டு, விதுஷியைப் பற்றியும் விசாரித்தான். அவர் மார்க்கெட் போய்விட்டு வீட்டிற்கு வந்து விட்டதாகவும், விதுஷி ப்ரியாவோடு பார்லர் சென்று விட்டு இன்னும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.​

உடனே காரை எடுத்து கொண்டு, பிரியா கூறிய அந்த காம்ப்ளக்ஸை நோக்கி சென்றான்.​

பிரியாவைப் பார்த்து நடந்ததை விசாரித்து, பார்லரிலும் விசாரித்து பார்த்தான். ஆனால் அங்கே உருப்படியான விஷயம் எதுவும் கிடைக்கவில்லை. தந்தைக்கு அழைத்து விஷயத்தைக் கூறினான். அவர் மூலமாக கீதாவுக்கும், பூபதிக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தில் அனைவரும் விதுஷியின் வீட்டில் கூடினர்.​

தர்ஷன் பிரியாவை அழைத்துக் கொண்டு, அந்த காம்ப்ளக்சில் இருந்த நிர்வாக அறைக்குச் சென்று பார்த்தான். அவர்களின் உதவியுடன் சிசிடிவி காட்சிகளைப் பார்க்கத் தொடங்கினான். ப்ரியாவை வீட்டிற்கு செல்லுமாறு கூறினான். ஆனால் அவள் மறுத்து விட்டாள்.​

சற்று நேரத்தில் பூபதிராஜ், தங்கராஜ், தர்ஷனின் தந்தை சேகர் மூவரும் அங்கு வந்தனர். சிசிடிவி காட்சியில் விதுஷி பார்லரில் இருந்து வெளியில் வருவது தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகு அவள் அந்த காம்ப்ளக்சில் இருந்து வெளியில் வந்ததற்கான எந்த வீடியோவும் இல்லை. அந்த தளத்தில் இருந்த அனைத்து கேமரா பதிவுகளையும் பார்த்து விட்டனர். இதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டினரிடம் இருந்தும் பூபதிக்கு போன் அழைப்பு வர தொடங்கியது.​

பூபதிராஜ் மகளை தொலைத்த கவலையுடன் இந்த கவலையும் சேர நிற்க முடியாமல் தள்ளாடினார். அவரை அங்கிருந்த இருக்கையில் அமர செய்த தர்ஷன் அவரிடம் இருந்து போனை வாங்கி, பூபதிராஜிற்கு திடீரென்று உடல் நலம் சரியில்லையெனவும், அதனால் இன்று அவர்கள் வர வேண்டாம் என்றும் கூறி, மன்னிப்பும் கேட்டு கொண்டு காலை கட் செய்தான்.​

இதற்குப் பின் என்ன? இந்த எண்ணத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.​

சேகர் "நாம் இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை. இனி போலீஸ் உதவியைத் தான் நாட முடியும். இப்போதே நேரம் பிற்பகலைத் தாண்டி விட்டது. இனியும் நேரத்தைக் கடத்த வேண்டாம்" என்றார்.​

தங்கராஜ் "மாப்பிள்ளை சொல்வது தான்டா எனக்கும் சரியாகப்படுகிறது" என்றார் தம்பியிடம்.​

பூபதி அது வரை திடமாக இருந்தவர் திடீரென்று குலுங்கி அழத் தொடங்கினார். மற்ற அனைவரும் அவரைத் தேற்றி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றார்கள்.​

வீட்டில் கீதாவை மற்ற பெண்கள் அனைவரும், சமாதானப் படுத்த முயன்று தோற்று கொண்டிருந்தனர். ஏனெனில் விதுஷி அவர்கள் அனைவருக்குமே செல்லமான பெண். அத்தனை அமைதி வெளியில், வீட்டிலோ அதற்கு எதிராக அவ்வளவு கலகலப்பான குணமுள்ளவள். அவளுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவள் சுபாவம் தெரியும்.​

தர்ஷன் "பிரியாவும் தங்களுடன் போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டும், ஏனெனில் அவள் தான் விதுஷியுடன் இருந்தாள்" என்றான். அதனால் அவளும் அவர்களுடன் சென்றாள்.​

இன்ஸ்பெக்டர் முன் அனைவரும் நின்றிருந்தனர். தர்ஷன் நடந்த நிகழ்வைப் பற்றி கூறினான். பூபதி கண்ணீரை கட்டுப்படுத்திய முகத்துடனும், பிரியா அழுது கொண்டும் இருந்தார்கள்.​

இன்ஸ்பெக்டர் பிரியாவிடம் தேவையான கேள்விகளை கேட்டுப் பதில்களைப் பெற்றுக் கொண்டார். பின்பு நிமிர்ந்து அவர்கள் அனைவரையும் பார்த்தார்.​

ஒரு பெருமூச்சுடன் "சார், கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். இந்தக் கல்யாணத்தில் உங்கள் பெண்ணுக்குச் சம்மதமா?" என்றார்.​

பூபதி "சார், என் பெண் விருப்பத்திற்கு மாறாக, எங்கள் குடும்பத்தில் யாரும் நடந்து கொள்ளவே மாட்டோம். அவள் சரி என்ற பிறகு தான், இன்றைக்கு மாப்பிள்ளை வீட்டாரை வரக் கூறினோம். அதுவும் இல்லாமல் என் பெண் மிகவும் நேர்மையானவள் சார். பிடிக்கவில்லை என்றால், முகத்திற்கு நேராகக் கூறி விடுவாளே தவிர, இப்படி ஓடி ஒளிபவள் இல்லை" என்று கூறும் போதே அவருக்குக் கண்ணீர் வந்து விட்டது.​

இன்ஸ்பெக்டர் "சரி சார், இப்படிக் கேள்வி கேட்பது என்னுடைய கடமை. நீங்கள் சற்று நேரம் வெளியே காத்திருங்கள்" என்றார்.​

பிரியாவை, சேகர் அவருடைய காரில் டிரைவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். கீதாவும், தர்ஷனுக்கு அழைத்து கேட்டுக் கொண்டே இருந்தார். வருணும், ராகவனும் சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பி வந்து விட்டனர்.​

இவர்கள் இங்கே காத்துக் கொண்டிருக்கும் போது உள்ளே இன்ஸ்பெக்டருக்கு ஒரு போன் வந்தது. அவர் மிகுந்த பணிவுடன், அந்த பக்கம் சொல்வதை சிரத்தையாகக் கேட்டுக் கொண்டார். பின்பு வெளியில் பெண்ணின் நிலைமையைப் பற்றி கவலையில் இருப்பவர்களை நினைத்து, அவருக்கு ஒரு பெருமூச்சு வந்தது. இருந்தும் இந்த விஷயத்தில், அவரால் இவர்களுக்கு இனி, எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. ஆனால் அவருக்கு இடப்பட்டக் கட்டளைக்கு இணங்க அவர் செயலாற்ற வேண்டும்.​

கான்ஸ்டபிளைக் கூப்பிட்டுத் தர்ஷனை அழைத்து வரும் படி கூறினார். அவன் வந்ததும், "உங்கள் வீட்டுப் பெரியவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் சார். நாம் சில இடங்களுக்குப் போக வேண்டி இருக்கும்" என்றார்.​

அவனும் இங்கேயே இருக்கிறோம் என்ற தந்தையையும், மாமன் மார்களையும் வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, இன்ஸ்பெக்டர் உடன் கிளம்பினான்.​

தன் முன் நின்றவனை முகத்தில் கேள்வி, பயம், அதிர்ச்சி, கோபம் என்று எல்லா உணர்ச்சிகளையும் காட்டி வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள், விதுஷிகா.​

அவள் பார்வையை அலட்சியமாக எதிர் கொண்டான், அவன் "அரிமா துரை".​

- தொடரும்..​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 3​

திருநெல்வேலியில் கணபதி குரூப்ஸ் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நூற்பு ஆலைகள்(ஸ்பின்னிங் மில்ஸ்), கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்துகள், பல தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் இன்னும் பல துறைகளில் அவர்களின் பெயர் தான் முதன்மையானது. இதன் நிறுவனர் தான் கணபதி, மனைவி இந்திராணி. கணபதியின் சிறு வயதில் அவருடைய சொந்த உழைப்பில் மட்டுமே சிறு அளவில் ஆரம்பித்த தொழில் விரிவடைந்து, தற்போது மூன்றாவது தலைமுறை அவருடைய பேரன் அரிமா துரை கடந்த ஒன்பது வருடங்களில் பல துறைகளிலும் விரிவடைய செய்துள்ளான். கணபதி தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். முதல் மகன் நாச்சியப்பன், இவர் மனைவி லட்சுமி. அடுத்து பெண் சரஸ்வதி, இவர் கணவர் சேகர்.

கணபதி தன் பிள்ளைகள் இருவரையும், தன்னுடன் தான் ஒரே குடும்பமாக வைத்திருக்கிறார். நாச்சியப்பனுக்கு காயத்ரி, அரிமா துரை என இரு பிள்ளைகள். காயத்ரியை மதுரையில் மணம் முடித்து கொடுத்துள்ளனர். சரஸ்வதி சேகர் தம்பதிக்கு இரு மகள்கள், தன்ஷிகா மற்றும் அனுஷா. இருவரும் படிப்பை முடித்து விட்டு வீட்டில் தான் இருக்கின்றனர்.​

அரிமா துரை வயது 29, மாநிறம், உயரம் 6 அடிக்கும் மேல், ஆனால் அவன் உருவத்தை பார்த்த யாரும் சற்று மிரண்டு தான் போவார்கள். திருமலை தூண் (திருமலை நாயக்கர் மஹாலில் இருக்கும் தூண்) என்பார் அவன் தாத்தா கணபதி. அப்படி ஒரு ஓங்கு தாங்கான உடலமைப்பு. அதில் கணபதிக்கு அப்படி ஒரு பெருமை. எங்கேயும் யாரும் அவனை எதிர்த்து ஒரு சொல் சொல்ல யோசிப்பார்கள், ஏனெனில் அவன் கோபக்காரன் மட்டுமல்லாமல், சட்டென கை நீட்டி விடுபவனும் கூட. வீட்டினர் கூட அவனுடன் நினைத்ததை உடனே பேசி விட முடியாது. குடும்ப நிகழ்வுகளை பற்றி என்றால் அவன் தாய் லக்ஷ்மியோ, பாட்டி இந்திராணியோ தான் பேச முடியும், அவர்களிடம் மட்டுமே அவன் சற்று இளக்கம் காட்டி பேசுவான். வீட்டிலேயே இருந்தாலும் தன் அத்தை மகள்களிடம் கூட தேவைக்கு மட்டுமே அளவான பேச்சு இருக்கும்.

அரிமா துரையின் அத்தை சரஸ்வதிக்கு, தன் இரு மகள்களில் ஒருவரை அவனுக்கு மணம் முடித்து விட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏனெனில் கணபதி, கூட்டுக் குடும்பமாகவே இருந்தாலும் சரஸ்வதியின் கணவர் சேகரை கணபதி குழுமத் தொழில்களில் தலையிடுவதை விரும்புவதில்லை. அவருக்குத் தனியாக, ஆலைகள் நிறுவி, அதை சரஸ்வதியின் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். இது போக பல சொத்துக்களையும் சரஸ்வதியின் பெயரில் வாங்கி கொடுத்துள்ளார். இன்னும் ஒரு குடும்பமாகவே இருந்தாலும், தீபாவளி, பொங்கல், சரஸ்வதி மற்றும் அவர் மகள்களின் பிறந்த நாள், இதைப்போல் சுப தினங்களில் நகைகள், விலை உயர்ந்த பரிசுகள் எல்லாம் கணபதி, நாச்சியப்பன், அரிமா துரை மூவரிடம் இருந்தும் அவர்களுக்கு கணக்கில்லாமல் கிடைக்கும்.​

இருந்தும் சரஸ்வதிக்கு ஒருவித பய உணர்வு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அரிமா துரைக்கு வெளியில் இருந்து பெண் எடுத்தால், இப்போது போல் தன்னால் இந்த வீட்டில் நிரந்தரமாக தங்க முடியாது என்று, அவர் மனதில் எப்போதும் எண்ணம் உண்டு. அதனால் அவர் தன் அன்னையிடம், அவர் மூத்த மகள் தன்ஷிகாவை அரிமாவுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருப்பார். இந்திராணிக்கும் மகளின் ஆசையில் தவறு இருப்பது போல் தெரியவில்லை. அதனால் அவரும் சரஸ்வதியின் எண்ணத்தை மாற்ற முயலவில்லை. ஆனால் இருவரும் மறந்தது அரிமா துரையின் மனதை, விருப்பத்தை.​

அன்று அரிமா துரையின் பிறந்த நாள். நெல்லையின் பெருமையான நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் போன்றவை அவனுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நடைபெறும். நாச்சியப்பன் தான் கோவில் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். ஆனாலும் அரிமா துரை அப்பாவின் பொறுப்புகளில் முடிந்த வரை உறுதுணையாக இருக்கிறான்.​

கணபதி இல்லத்தில் காலை உணவுக்கு அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர். அது ஒரு அரண்மனை போன்ற தோற்றமுடைய வீடு. வெளியில் இருந்து பார்ப்பதற்கு பழமையும், கம்பீரமுமாக இருக்கும் மூன்று தளங்களையுடைய நவீன வசதிகளை கொண்ட வீடு அது.​

மாடிப்படியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் அரிமா துரை. பார்ப்பதற்கு அரசன் போன்ற கம்பீரமான தோற்றத்தில் இருந்தான், வேஷ்டியை ஒரு கையிலும், செல்போனை ஒரு காதில் வைத்து கொண்டு நடந்து வந்தவனை குடும்பம் மொத்தமும் மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தது. தன்ஷிகா, அனுஷாவை பற்றி சொல்லவே வேண்டாம், இமைக்கவும் மறந்து போய் பார்த்தவாறே இருந்தனர்.​

வந்தவன் நேராக கணபதியிடம், "தாத்தா, நீங்களும் பாட்டியும் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க" என்றான்.​

கணபதி "ராணி, இங்கே வா" என்றார். ஆம், கணபதி தன் மனைவியை ராணி என்றே அழைப்பார்.​

இருவரும் சேர்ந்து நிற்கவும், அரிமா அவர்கள் காலில் விழுந்து வணங்கினான். லட்சுமி பூஜை அறைக்கு சென்று திருநீறு கிண்ணத்தை கொண்டு வந்து மாமனார், மாமியாரிடம் நீட்டினார். கணபதி ஆசீர்வாதம் செய்து, அவனுக்கு திருநீறு பூசி விட்டார். அதை தொடர்ந்து அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும் சிறு தலை அசைப்பும், ஒரு வார்த்தை நன்றியும் மட்டுமே கூறினான். லட்சுமிக்கு சிறு பெருமூச்சு வெளிப்பட்டது. ஏனெனில் அவரிடமும் அவன் அதே தலை அசைப்பை மட்டுமே கொடுத்தான்.​

தன்ஷிகா "என்ன அனு, இந்த அத்தான், வாழ்த்து கூறினால் கூட சிரிக்கவில்லை. இப்படி இருந்தால் எப்படி எங்கள் கல்யாணம் நடக்கும்?" என்று முணுமுணுத்தாள் அனுஷாவிடம்.​

அனுஷா "அக்கா, உன்னால் முடியா விட்டால் என்னிடம் விட்டு விடு. நான் அத்தானை கட்டிக் கொள்கிறேன்". என்றாள்.​

"ம்க்கும், அதற்கு வேறு ஆளைப் பார். அத்தான் எனக்குத் தான்".​

"நீயே வைத்துக் கொள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நம் இருவருக்கும் இல்லாமல் போய் விட கூடாது. அதை மட்டும் கவனித்துக் கொள்."​

"சரி அனு. இனி பார் என்னுடைய செயல்திறனை".​

"பார்ப்போம்".​

உணவு முடிந்ததும் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினர். அரிமாவின் காரில் தாத்தா, பாட்டியை அழைத்து சென்றான். சரஸ்வதி, சேகர், தன்ஷிகா, அனுஷா ஒரு காரில் ஏறிக் கொண்டனர். நாச்சியப்பன், லட்சுமி தம்பதி தனி காரில் சென்றனர். கோவிலில் இவர்கள் குடும்பத்திற்கு சிறப்பான வரவேற்பு கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.​

முதலில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சன்னதிக்கு சென்று, ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் அனைவரும் கலந்து கொண்டனர். அன்று முகூர்த்த நாள் வேறு. எனவே கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.​

பூஜை முடிந்து அவர்கள் அரிமாவிற்கு மரியாதை செய்து மாலை அணிவித்தனர். அந்த நேரத்தில் தான் அரிமா துரை அவளை பார்த்தான். பார்த்ததும் உலகம் மறந்தது அவனுக்கு. பால் போன்ற நிறம், மாசு மருவற்ற ஒளி பொருந்திய முகம். அதிலும் அவள் கண்கள், அந்த கண்களை விட்டு அவனால் பார்வையை அகற்ற முடியவில்லை. ஆம், அவள் விதுஷிகா தான்.​

அன்று அவள் உடன் பணிபுரியும் தோழி ஒருத்தியின் திருமணம். அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு, அதனால் அவள் வங்கியில் அனைவரும் மினி வேன் ஒன்றில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வந்திருந்தனர். திருமணம் முடிந்ததும் மணமக்கள் மற்றும் அவர்கள் வீட்டார்கள் மண்டபத்திற்கு சென்று விட்டனர். விதுஷி மற்றும் அவளுடன் வந்தவர்கள் நெல்லையப்பரை தரிசிக்க சென்றனர்.​

விதுஷி அன்று பச்சை வண்ண பட்டுப்புடவையில், குடை ஜிமிக்கி, கழுத்தை ஒட்டிய மரகதக்கல் பதித்த அட்டிகை, மல்லிகைப்பூ சூடி தேவதை போல் இருந்தாள். அவள் பால் வண்ண மேனிக்கு அன்று அந்த அலங்காரம் மிகப் பொருத்தமாக இருந்தது. அரிமா தான் அவளை பார்த்தான், அவள் அவனை கவனிக்க கூட இல்லை. அவள் தன் உடன் பணிபுரியும் மற்றொரு தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.​

அரிமாவின் குடும்பம் கருவறை மண்டபத்தில் இருந்து வெளியேறினர். அரிமா மனமே இல்லாமல் தான் அங்கிருந்து சென்றான். அதன் பிறகு மற்ற பக்தர்களோடு விதுஷியும், அவளோடு உடன் வந்தவர்களும் சுவாமியை வணங்கி விட்டு கோவில் உட்பிரகாரத்திற்குள் நடக்கத் தொடங்கினார்கள்.​

கோவில் வெளிப்பிரகாரத்தில் நாச்சியப்பன், அரிமா துரை மற்றும் கோவில் நிர்வாகிகள் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்திராணி, குடும்பத்தில் பெண்கள் அனைவருடனும் அன்னதான மண்டபத்திற்கு சென்று விட்டார். சேகர் அவருக்கு மில்லில் வேலை இருப்பதால், பிறகு வருவதாக கூறி சென்று விட்டார். கணபதி கோவில் அலுவலக அறைக்குச் சென்று அவர் வயதினர் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். கோவில் வெளிப் பிரகாரத்தில் ஒரு தூணில், கோவில் யானை கட்டப்பட்டிருந்தது.​

அப்போது கோவில் செயலாளர் அரிமாவிடம், "தம்பி, பிறந்த நாள் அன்று கஜேந்திரனிடம் (யானையின் பெயர்) ஆசீர்வாதம் வாங்கி கொள்ளுங்கள்" என்றார்.​

நாச்சியப்பனும், "ஆமாம் அரி, காலையிலேயே தாத்தா உன்னை கஜேந்திரனிடம் கூட்டிப்போக சொன்னார்." என்றார்.​

அரிமா "சரிப்பா" என்று கஜேந்திரனிடம் சென்றான்.​

அவன் யானை முன் குனிந்து ஆசீர்வாதம் வாங்கும் போது தான், விதுஷி அரிமாவை முதன் முதலில் பார்த்தாள். பார்த்ததும் அவளுக்கு தோன்றியது, இவனுக்கும் யானைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தான். ஏனெனில் அரிமாவிற்கும், கஜேந்திரனிற்கும் கம்பீரத்தில் எந்த வித்தியாசமும் அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் அதற்குள் யானையை சமீபித்திருந்தார்கள்.​

விதுஷியின் தோழி ராதா அவளிடம், "வா விது யானையிடம் ஆசீர்வாதம் வாங்கலாம்" என்றாள்.​

"எனக்கு பயமாக இருக்கிறது" விதுஷி.​

அரிமா இப்போது மீண்டும் விதுஷியை கண்டான். இவர்கள் அருகில் சென்று மற்றவர் கவனத்தை கவராதது போல் நின்று, விதுஷியின் பேச்சை கேட்கத் தொடங்கினான்.​

ராதா "பயப்படாதே விது, இத்தனை பேர் இருக்கிறோம் இல்லையா. இன்னும் கொஞ்சம் பக்கத்தில் சென்று பார்க்கலாம், வா" என்றாள்.​

விதுஷி, "வேண்டாம் ராது, நீ போ. நான் இங்கேயே நின்று நீ ஆசீர்வாதம் வாங்குவதை பார்க்கிறேன்".​

அரிமா மனதில் இவள் உருவத்தில் தான் பெரிய பெண் போல இருக்கிறாள். கஜேந்திரனுக்கு அருகில் செல்லக் கூட பயமா? என்று நினைத்து சிரித்துக் கொண்டான். அவனுக்குத் தன்னை நினைத்தே வியப்பாக இருந்தது. இது வரை எந்த பெண்ணையும் தேவைக்கு அதிகமாக ஒரு நொடி கூட பார்த்ததில்லை. இப்போது இவள் குரல் கேட்க, இப்படி மற்றவர் பார்வை படாமல் அவள் அருகில் நிற்க துடிப்பது, டீன் ஏஜ் பையன் போல நடந்து கொள்வது அவனுக்கே வியப்பாக இருந்தது.​

அவளைத் தன் கை வளைவில் நிறுத்தி கஜேந்திரனிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கும் வேகம் எழுந்தது. இதற்குப் போய் பயப்படலாமா? அதுவும் நான் அருகில் இருக்கும் போது? என்று கேட்கத் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றியதும் அவனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவள் யாரோ, தான் யாரோ அவளுடன் சேர்ந்து ஆசீர்வாதமா? இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும். அவள் அவனுடையவள் என்பது தான் அது.​

ராதா விதூஷிகா வரவில்லை என்றதும், தான் மட்டும் சென்று கஜேந்திரனிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள். அப்போது நாச்சியப்பன் அன்னதானம் தொடங்கி வைக்க அரிமாவை அழைத்தார். இப்போது அவன் சென்று விட்டால் விதுவைப் பற்றி எப்படி தெரிந்து கொள்வது? அதுவும் அவள் கோவிலை விட்டு சென்று விட்டால் என்ன செய்வது? என்று யோசித்தான்.​

அவன் அதிர்ஷ்டத்திற்கு அவன் நண்பன் வெற்றிவேல், அங்கே அப்போது இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் தான் அரிமாவின் பிஏவும் கூட.​

தந்தையிடம் "அப்பா, நீங்கள் மண்டபத்திற்கு நடந்து கொண்டிருங்கள். வெற்றியிடம் சில வேலைகளை கூறிவிட்டு, இப்போது வந்து விடுகிறேன்" என்றான்.​

அவரும் "சரி தம்பி, சீக்கிரம் வா" என்று விட்டு சென்று விட்டார்.​

வெற்றியை சற்றுத் தள்ளி அழைத்து சென்றான் அரிமா.​

வெற்றி "என்னடா, என்ன விஷயம்?"​

அரிமா "...." பதிலற்று அமைதியாக இருந்தான்.​

வெற்றி "அரிமா நீயா இது? நீ இப்படி தயங்கி இப்போது தான் பார்க்கிறேன். என்னடா விஷயம்?".​

"இல்லை வெற்றி, இது வேலை பற்றி இல்லை. அதனால் தான் தயங்குகிறேன்."​

"எதுவாக இருந்தாலும் சொல்லு அரி. நாம் பார்த்துக் கொள்ளலாம்" என்றான் நண்பனுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக.​

அவன் சொன்னதும் இப்போது பேச்சிழந்து நிற்பது வெற்றியின் முறையானது.​

  • தொடரும்…​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 4​

கணபதி குடும்பத்தினர் அனைவரும் நெல்லையப்பர் கோவிலின் அன்னதான கூடத்தில் இருந்தனர். அரிமா துரை கையால் அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது. சற்று நேரம் நின்று விட்டு, வீட்டுப் பெண்கள், கணபதி ஆகியோரை காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார் நாச்சியப்பன்.​

அரிமாவின் போன் அடித்தது. சற்றுத் தள்ளி வந்து எடுத்துப் பார்த்தான். வெற்றிவேல் தான் அழைத்தான். சிலமணி நேரத்திற்கு முன் நண்பன் சொன்ன வேலையை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டான் அவன். அந்த தகவலை கூறவே இப்போது அழைத்தது.​

சற்றுமுன் அரிமா வெற்றியிடம் விதுஷியை சுட்டிக் காட்டி "அந்தப் பெண்ணை பற்றிய தகவல்கள் வேண்டும்'' என்றான்.​

வெற்றி திகைத்துப் போய் அப்படியே நின்று விட்டான்.​

அரிமா "வெற்றி, வெற்றி" என்று இருமுறை அழைத்த பிறகு தான் வெற்றிவேல் சிலைக்கு உயிர் வந்தது.​

வெற்றி "என்ன டா சொல்ற? இது வரை நாம நிறைய கிரிமினல் வேலை எல்லாம் செஞ்சிருக்கோம் டா. ஆனா இது, அந்த கேட்டகரில வராது மச்சான்" என்றான் அழுகுரலில்.​

அரிமா "அவளை எனக்கு பிடிச்சிருக்கு வெற்றி" என்றான் ஆழ்ந்த குரலில்.​

அவனின் அந்த வார்த்தைக்கு பிறகு வெற்றி வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. "நீ சொல்லிட்டல்ல, இதுக்கு அப்புறம் தங்கச்சிய பத்தி நீ கவலை படாத. நா பாத்துக்குறேன்" என்றான்.​

அரிமா சென்றதும், வெற்றி விதுஷிகாவை பின் தொடர்ந்து சென்றான். விதுஷிகா, அவளுடன் வந்தவர்கள் அனைவரும் கோவிலை சுற்றி பார்த்து விட்டு, திருமண மண்டபத்திற்கு சென்று மதிய உணவை முடித்து விட்டு, வேனில் தூத்துக்குடி கிளம்பினர்.​

வெற்றி விசாரித்ததில், மணப்பெண் உடன் வங்கியில் வேலை செய்பவள் தான் விதுஷிகா என்பது தெரிந்து விட்டது. அதன் பின் வங்கிக் கிளையை தெரிந்து கொண்டு, தூத்துக்குடியில் அந்த ஏரியாவில் அவனுக்கு தெரிந்தவர்கள் மூலமாக விசாரித்தான். விதுஷிகா தூத்துக்குடியில் அவள் வீட்டிற்கு சென்று சேரும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, அவளைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் வெற்றியின் கைக்கு வந்து சேர்ந்து விட்டது.​

வெற்றி கூறிய தகவல்களை கேட்டுக் கொண்டான் அரிமா.​

"நாளைக்கு தூத்துக்குடி போகனும் டா" என்றான் அரிமா.​

"நாளைக்கு போர்டு மீட்டிங் இருக்கிறதுடா" என்றான் வெற்றி.​

"மாலையில் தான்டா போகணும். அவள் பாங்கில் இருந்து கிளம்பும் நேரத்தை கேட்டு வை"​

"மச்சான், சூப்பர் டா" வெற்றி சந்தோசமாக கூறித் தன் வேலையை பார்க்க சென்றான்.​

அடுத்த நாள் காலை விதுஷிகாவுக்கு எப்போதும் போல் பொழுது விடிந்தது. அன்று அவளுடைய வாழ்வை மாற்றப் போகிறவனை சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமலே, காலை வேலைகளை செய்தாள். காலை எழுந்ததும் யோகா செய்தாள், தந்தையுடன் சேர்ந்து நியூஸ் பேப்பர் வாசித்து, அதிலிருக்கும் எகனாமிக் செய்திகளை அவருடன் விவாதித்தாள்.​

பின் குளித்து, தாயுடன் பேசி சிரித்து, சாப்பிட்டு அலுவலகம் கிளம்பினாள். பூபதிராஜ் அவருடைய பைக்கிலும், விதுஷி அவளுடைய ஸ்கூட்டியிலும் சென்றனர். திங்கள் கிழமை என்பதால் பேங்க் வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது, வேலை முடிய வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு, அந்த வளாகத்தை விட்டு வெளியேறினாள்.​

அவள் ஸ்கூட்டி அருகில் வந்து, தன்னுடைய ஹாண்ட்பாகில் இருக்கும் சாவியைத் தேடினாள். அப்போது அவளுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டது.​

"விதுஷிகா"​

அந்த குரலில் இருந்த ஆளுமையிலும், ஆண்மையிலும் விதுஷி சற்று திடுக்கிட்டுத் திரும்பினாள். இது....? இவர்....? அவள் சற்று யோசித்ததுமே அவளுக்கு அவனை நியாபகம் வந்து விட்டது. நேற்று கோவிலில் யானையிடம் ஆசீர்வாதம் வாங்கியவன். ஆனால் தன்னிடம் இவனுக்கு என்ன வேலை? அதிலும் தன் பெயர் கூட இவனுக்கு தெரிந்திருக்கிறது. எப்படி? அவள் முகத்தில் குழப்ப ரேகைகளை கண்டான் அரிமா.​

"என் பெயர் அரிமா துரை". என்றான்.​

அவள் இபோதும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றாள்.​

"விதுஷிகா?" என்றான் அரிமா கேள்வியாக.​

அவளுக்கு அவன் உருவமும், குரலுமே சற்று மிரட்சியைக் கொடுத்து விட்டது. தன்னை நினைத்தே வெட்கியவளாக, "சொல்லுங்க சார், என்ன விஷயம்? என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்றாள் முடிந்த வரை நிதானமாக.​

அவளை அவதானித்த படியே," எனக்கு உன்னிடம் ஒரு பத்து நிமிடங்கள் பேச வேண்டும்" என்றான்.​

"உங்களை எனக்குத் தெரியாது. நான் ஏன் உங்களுடன் பேச வேண்டும்? நான் கிளம்பப் போகிறேன்" என்றவாறு மீண்டும் பாகினுள் சாவியை தேடினாள்.​

"இதையா தேடுகிறாய்?" என்றவாறு அவளுடைய ஸ்கூட்டி சாவியை அவள் முகத்திற்கு நேரே ஆட்டி காண்பித்தான். "நான் பேச நினைத்ததை, நீ கேட்காமல் இங்கிருந்து செல்ல முடியாது" என்றான் திமிராகவே.​

அரிமா அவளிடம் இப்படி பேச நினைத்து வரவில்லை. ஆனால், அவள் அங்கிருந்து உடனே சென்று விட கூடாது என்று, மதியமே அவளுடைய ஸ்கூட்டி சாவியை கைப்பற்றி வைத்திருந்தான். ஆனால் இதுவரை மறுப்பையம், எதிர்ப்பையும் சந்திக்காதவனால், அவளுடைய சிறு மறுப்பை கூட பொறுக்க முடியாமல் அவனுடைய இயல்பான திமிர் வெளி வந்து விட்டது.​

விதுஷிகா அவசரமாக யோசித்தாள். இப்போது அவள் இங்கிருந்து செல்ல வேண்டுமானால் அவளுடைய சாவி வேண்டும். அது கூட வேண்டாம், நடந்து சென்று விடலாம் என்றாலும், இந்த பீமசேனனை மீறி இங்கிருந்து செல்வது கடினம். ஏனெனில் அவளுடைய வங்கி, தனி காம்பௌண்டிற்குள் அமைந்திருந்தது. செக்யூரிட்டி கூட இப்போது வாசலில் இல்லை, வங்கி பூட்டப் போகும் நேரம் என்பதால் அவர் மேனேஜருடன் சேர்ந்து, லாக்கர் அறையை பூட்டுவதற்கு உதவிக் கொண்டிருப்பார். அதனால் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்டு விட முடிவு செய்தாள்.​

"சொல்லுங்கள், என்ன பேச வேண்டும்? எதுவாக இருந்தாலும் என்னை நீ, வா என்று மரியாதை இல்லாமல் பேசாதீர்கள்" என்றாள் விதுஷி.​

"அதை இப்படி நடு வழியில் நின்று கொண்டு பேச முடியாது. எதிரில் இருக்கும் காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம். அடுத்த விஷயம் உன்னை, நீ என்று சொல்ல தான் என்னால் முடியும். அதை மாற்றிக் கொள்கிற விருப்பம் எனக்கில்லை. என்ன? போகலாமா?"​

முகம் கடுகடுக்க பதில் சொல்லாமல் முன்னால் திரும்பி நடந்தாள், விதுஷி. அவனும் தோளை குலுக்கி விட்டு அவள் பின்னால் சென்றான். ஒரு டேபிளில் இருவரும் அமர்ந்தனர்.​

"காபி ஓர் டீ?" என்று கேட்டான் அரிமா.​

"நான் எதுவும் குடிக்க வரவில்லை"​

அவள் பேசவே இல்லாதது போல பாவித்து, வெயிட்டரை அழைத்து இரண்டு காபிக்குச் சொன்னான்.​

பின் அவள் விழிகளை நேராக சந்தித்து, "எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது விது. உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறேன்" என்றான் அரிமா ஆழ்ந்த குரலில்.​

விதுஷி சற்று நேரம் பேச்சு வராமல், மூளை மரத்துப் போய் அமர்ந்திருந்தாள். அவள் சுதாரிக்க சற்று அவகாசம் கொடுத்து, அரிமா அமைதியாக அவள் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அவள் அசைவதாகக் காணோம். அதற்குள் வெயிட்டர் வந்து காபி வைத்துவிட்டு சென்றார். அந்த அசைவில் தான் விதுஷி தெளிந்தாள்.​

ஒரு பெரிய மூச்சை எடுத்துவிட்டு பேச ஆரம்பித்தாள். "நான்.."​

அவள் தொடங்குமுன் அரிமா, "வேண்டாம், முதலில் காபியை குடி. அப்புறம் பேசலாம்" என்று தடுத்தான்.​

காபி காலியாகும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பின்பும் அரிமாவே தொடங்கினான்.​

"நான் என்னைப் பற்றி கூறி முடித்த பிறகு, உன் பதிலை சொல்" என்று தொடங்கி தன்னுடைய குடும்பம், தொழில்கள், தன் குணம், விருப்பு வெறுப்பு, இத்தனை நாள் பெண்களிடம் விருப்பமற்று இருந்தது எல்லாவற்றையும் கூறி, அவளைப் பார்த்து பிடித்தது, விசாரித்தது எல்லாம் கூறி முடித்தான்.​

அவன் பேசும்போதே விதுஷியின் மூளை அவசர ஆலோசனை நடத்தியது. அவளுக்கு கணபதி குரூப்ஸ் அதன் செல்வாக்கு எல்லாமே நன்றாகவே தெரியும். அவள் பாங்கில் வேலை செய்வதால் பெரிய நிறுவனங்கள் அவற்றின் பங்குகள் எல்லாமே அவளுக்கு அத்துப்படி. அப்படிப் பார்த்தால், கணபதி குரூப்ஸ் தென்னிந்தியாவின் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்று. அதற்கு ஒற்றை வாரிசு என்றால் இவனை எதிர்ப்பது அவளால், அவள் குடும்பத்தால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் இவன் உடல்மொழி, உருவம், நிறம், குரல் முக்கியமாக அவனுடைய கர்வம், திமிர், கோபம் எதுவும் அவள் மென்மையான குணத்திற்கு சற்றும் பொருந்தாது. அவளைப் பொறுத்தவரை திருமணம் என்பது, ஒத்த குணங்களையுடைய இருவர் வாழ்க்கை முழுக்க ஒன்றாக பயணம் செய்வது தான். இதில் இவளும் அரிமாவும், வெவ்வேறு துருவங்கள்.​

இவனிடம் அவளுடைய சிறு மறுப்பு ஏற்படுத்திய மாற்றத்தை நேரிலேயே இப்போது தான் கண்டாள். பேச மறுத்து விடுவாள் என்ற சந்தேகித்ததற்கே சாவியை கைப்பற்றி வைத்திருக்கிறான். இவனிடம், இவனையே மறுத்தால், நிச்சயம் இங்கிருந்து தான் உருப்படியாக வீட்டிற்கு செல்ல முடியாது என்பது அவளுக்கு புரிந்தது.​

எனவே "எனக்கு இப்போது திருமணத்தைப் பற்றிய எண்ணமே இல்லை'' என்றாள் விதுஷிகா.​

"ஏன்?" ஒற்றை வார்த்தை கூர்மையாக வந்தது அரிமாவிடமிருந்து.​

"இதுவரை திருமணத்தைப் பற்றி யோசித்தது இல்லை. வீட்டிலும் யாரும் அதைப்பற்றி பேசியதில்லை. அதனால் எனக்கும் தோன்றவில்லை."​

"இருக்கட்டும். இப்போது தான் உனக்கு இருபத்து மூன்று ஆகிறதே. இது திருமணத்திற்கு பொருத்தமான வயது தான். யோசித்துப் பார்" என்றான் அதிகாரமாக.​

விதுஷிகா மனதில் அவனை வறுத்து எடுத்தாள். இவனைப் போய் கஜேந்திரனை மாதிரி கம்பீரம் என்று நினைத்தேனே. ச்சை, இவன் ஒரு காண்டாமிருகம், அப்புறம்... இவனைத் திட்ட கூட ஒரு வார்த்தை அவசரத்திற்கு கிடைக்கவில்லையே…​

"ம்க்கும்.." அரிமா சற்று செருமி அவளை நடப்புக்கு அழைத்தான்.​

நல்லவேளை ஒருவர் மனதில் நினைப்பது இன்னொருவருக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு நல்லது. முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டு "நான்.. நாளைக்கு பதில் சொல்லட்டுமா?" பணிவு போல் கேட்டாள்.​

அரிமாவின் முகம் சற்றுத் தெளிந்தது. "சரி விது, நீ நாளைக்கே பதில் சொல்" என்றான் அவன்.​

"என்னை விது என்று கூப்பிடாதீர்கள், ப்ளீஸ்."​

"எனக்கு இப்போதைக்கு அப்படி கூப்பிடுவது தான் பிடிக்கிறது. கல்யாணத்திற்கு பிறகு உனக்கு பிடிக்கிற மாதிரி சொல். மாற்றிக் கொள்கிறேன்"​

தன் பேச்சில் தன்னைத் தானே நொந்து கொண்டு அவனிடம் சொல்லிவிட்டு சாவியையும் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள் விதுஷிகா.​

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு சற்றுநேரம் நின்று விட்டு தன்னுடைய காருக்கு சென்றான் அரிமா துரை. காரில் அமர்ந்து இங்கே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான் வெற்றி வேல்.​

அரிமா காரில் ஏறியதும் வெற்றி "மச்சான், தங்கச்சி என்னடா சொல்லுச்சு?" என்றான்.​

"அவள் நாளைக்கு பதில் சொல்லுகிறாளாம்டா மாப்பு" அரிமா நல்ல மனநிலையில் இருந்தால் தான் இப்படிப்பட்ட வார்த்தை எல்லாம் வரும்.​

அவன் உற்சாகம் வெற்றிக்கும் தொற்றிக் கொண்டது. அவன் உடனே "நாளைக்கு தங்கச்சி நல்ல பதில் தான்டா சொல்லும். எனக்கு வைரமாளிகை ஹோட்டலில் ட்ரீட் வேணும் டா" என்றான்.​

"அது என்ன டா நாளைக்கு, இப்போவே போகலாம்டா" என்றான் அரிமா.​

வீட்டிற்கு சென்ற விதுஷிகா மிகுந்த மனஉளைச்சலில் இருந்தாள். கவனித்துக் கேட்ட தாயிடமும் தலைவலி என்று பொய் கூறி விட்டு, அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.​

அவனை எப்படி சமாளிப்பது? வீட்டில் சொல்லி விடலாமா? அவனுடைய செல்வ நிலைக்கும், செல்வாக்கிற்கும் தன் குடும்பத்தின் அனுமதியோ, தன்னுடைய அனுமதியோ கூட அவனுக்குத் தேவைப் படாது. அதனால் வீட்டில் சொல்லுவதால் அவர்களையும் கவலைப்பட வைப்பதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது. அதனால் வீட்டில் சொல்ல கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.​

நேர்மையாக இருந்தால், நிச்சயம் அவனிடம் இருந்து தப்ப முடியாது. பலவாறு யோசித்து அவனிடம் பொய் கூறினால் மட்டுமே, தன்னால் இந்த பிரச்சினையிலிருந்து வெளிவர முடியும் என்று தோன்றியது அவளுக்கு. என்ன சொல்வது? எப்படி சொல்வது? என்று யோசித்து முடிவு செய்த பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாக தூங்கத் தொடங்கினாள் விதுஷி.​

- தொடரும்…​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 4​

கணபதி குடும்பத்தினர் அனைவரும் நெல்லையப்பர் கோவிலின் அன்னதான கூடத்தில் இருந்தனர். அரிமா துரை கையால் அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது. சற்று நேரம் நின்று விட்டு, வீட்டுப் பெண்கள், கணபதி ஆகியோரை காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார் நாச்சியப்பன்.​

அரிமாவின் போன் அடித்தது. சற்றுத் தள்ளி வந்து எடுத்துப் பார்த்தான். வெற்றிவேல் தான் அழைத்தான். சிலமணி நேரத்திற்கு முன் நண்பன் சொன்ன வேலையை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டான் அவன். அந்த தகவலை கூறவே இப்போது அழைத்தது.​

சற்றுமுன் அரிமா வெற்றியிடம் விதுஷியை சுட்டிக் காட்டி "அந்தப் பெண்ணை பற்றிய தகவல்கள் வேண்டும்'' என்றான்.​

வெற்றி திகைத்துப் போய் அப்படியே நின்று விட்டான்.​

அரிமா "வெற்றி, வெற்றி" என்று இருமுறை அழைத்த பிறகு தான் வெற்றிவேல் சிலைக்கு உயிர் வந்தது.​

வெற்றி "என்ன டா சொல்ற? இது வரை நாம நிறைய கிரிமினல் வேலை எல்லாம் செஞ்சிருக்கோம் டா. ஆனா இது, அந்த கேட்டகரில வராது மச்சான்" என்றான் அழுகுரலில்.​

அரிமா "அவளை எனக்கு பிடிச்சிருக்கு வெற்றி" என்றான் ஆழ்ந்த குரலில்.​

அவனின் அந்த வார்த்தைக்கு பிறகு வெற்றி வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. "நீ சொல்லிட்டல்ல, இதுக்கு அப்புறம் தங்கச்சிய பத்தி நீ கவலை படாத. நா பாத்துக்குறேன்" என்றான்.​

அரிமா சென்றதும், வெற்றி விதுஷிகாவை பின் தொடர்ந்து சென்றான். விதுஷிகா, அவளுடன் வந்தவர்கள் அனைவரும் கோவிலை சுற்றி பார்த்து விட்டு, திருமண மண்டபத்திற்கு சென்று மதிய உணவை முடித்து விட்டு, வேனில் தூத்துக்குடி கிளம்பினர்.​

வெற்றி விசாரித்ததில், மணப்பெண் உடன் வங்கியில் வேலை செய்பவள் தான் விதுஷிகா என்பது தெரிந்து விட்டது. அதன் பின் வங்கிக் கிளையை தெரிந்து கொண்டு, தூத்துக்குடியில் அந்த ஏரியாவில் அவனுக்கு தெரிந்தவர்கள் மூலமாக விசாரித்தான். விதுஷிகா தூத்துக்குடியில் அவள் வீட்டிற்கு சென்று சேரும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, அவளைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் வெற்றியின் கைக்கு வந்து சேர்ந்து விட்டது.​

வெற்றி கூறிய தகவல்களை கேட்டுக் கொண்டான் அரிமா.​

"நாளைக்கு தூத்துக்குடி போகனும் டா" என்றான் அரிமா.​

"நாளைக்கு போர்டு மீட்டிங் இருக்கிறதுடா" என்றான் வெற்றி.​

"மாலையில் தான்டா போகணும். அவள் பாங்கில் இருந்து கிளம்பும் நேரத்தை கேட்டு வை"​

"மச்சான், சூப்பர் டா" வெற்றி சந்தோசமாக கூறித் தன் வேலையை பார்க்க சென்றான்.​

அடுத்த நாள் காலை விதுஷிகாவுக்கு எப்போதும் போல் பொழுது விடிந்தது. அன்று அவளுடைய வாழ்வை மாற்றப் போகிறவனை சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமலே, காலை வேலைகளை செய்தாள். காலை எழுந்ததும் யோகா செய்தாள், தந்தையுடன் சேர்ந்து நியூஸ் பேப்பர் வாசித்து, அதிலிருக்கும் எகனாமிக் செய்திகளை அவருடன் விவாதித்தாள்.​

பின் குளித்து, தாயுடன் பேசி சிரித்து, சாப்பிட்டு அலுவலகம் கிளம்பினாள். பூபதிராஜ் அவருடைய பைக்கிலும், விதுஷி அவளுடைய ஸ்கூட்டியிலும் சென்றனர். திங்கள் கிழமை என்பதால் பேங்க் வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது, வேலை முடிய வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு, அந்த வளாகத்தை விட்டு வெளியேறினாள்.​

அவள் ஸ்கூட்டி அருகில் வந்து, தன்னுடைய ஹாண்ட்பாகில் இருக்கும் சாவியைத் தேடினாள். அப்போது அவளுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டது.​

"விதுஷிகா"​

அந்த குரலில் இருந்த ஆளுமையிலும், ஆண்மையிலும் விதுஷி சற்று திடுக்கிட்டுத் திரும்பினாள். இது....? இவர்....? அவள் சற்று யோசித்ததுமே அவளுக்கு அவனை நியாபகம் வந்து விட்டது. நேற்று கோவிலில் யானையிடம் ஆசீர்வாதம் வாங்கியவன். ஆனால் தன்னிடம் இவனுக்கு என்ன வேலை? அதிலும் தன் பெயர் கூட இவனுக்கு தெரிந்திருக்கிறது. எப்படி? அவள் முகத்தில் குழப்ப ரேகைகளை கண்டான் அரிமா.​

"என் பெயர் அரிமா துரை". என்றான்.​

அவள் இபோதும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றாள்.​

"விதுஷிகா?" என்றான் அரிமா கேள்வியாக.​

அவளுக்கு அவன் உருவமும், குரலுமே சற்று மிரட்சியைக் கொடுத்து விட்டது. தன்னை நினைத்தே வெட்கியவளாக, "சொல்லுங்க சார், என்ன விஷயம்? என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்றாள் முடிந்த வரை நிதானமாக.​

அவளை அவதானித்த படியே," எனக்கு உன்னிடம் ஒரு பத்து நிமிடங்கள் பேச வேண்டும்" என்றான்.​

"உங்களை எனக்குத் தெரியாது. நான் ஏன் உங்களுடன் பேச வேண்டும்? நான் கிளம்பப் போகிறேன்" என்றவாறு மீண்டும் பாகினுள் சாவியை தேடினாள்.​

"இதையா தேடுகிறாய்?" என்றவாறு அவளுடைய ஸ்கூட்டி சாவியை அவள் முகத்திற்கு நேரே ஆட்டி காண்பித்தான். "நான் பேச நினைத்ததை, நீ கேட்காமல் இங்கிருந்து செல்ல முடியாது" என்றான் திமிராகவே.​

அரிமா அவளிடம் இப்படி பேச நினைத்து வரவில்லை. ஆனால், அவள் அங்கிருந்து உடனே சென்று விட கூடாது என்று, மதியமே அவளுடைய ஸ்கூட்டி சாவியை கைப்பற்றி வைத்திருந்தான். ஆனால் இதுவரை மறுப்பையம், எதிர்ப்பையும் சந்திக்காதவனால், அவளுடைய சிறு மறுப்பை கூட பொறுக்க முடியாமல் அவனுடைய இயல்பான திமிர் வெளி வந்து விட்டது.​

விதுஷிகா அவசரமாக யோசித்தாள். இப்போது அவள் இங்கிருந்து செல்ல வேண்டுமானால் அவளுடைய சாவி வேண்டும். அது கூட வேண்டாம், நடந்து சென்று விடலாம் என்றாலும், இந்த பீமசேனனை மீறி இங்கிருந்து செல்வது கடினம். ஏனெனில் அவளுடைய வங்கி, தனி காம்பௌண்டிற்குள் அமைந்திருந்தது. செக்யூரிட்டி கூட இப்போது வாசலில் இல்லை, வங்கி பூட்டப் போகும் நேரம் என்பதால் அவர் மேனேஜருடன் சேர்ந்து, லாக்கர் அறையை பூட்டுவதற்கு உதவிக் கொண்டிருப்பார். அதனால் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்டு விட முடிவு செய்தாள்.​

"சொல்லுங்கள், என்ன பேச வேண்டும்? எதுவாக இருந்தாலும் என்னை நீ, வா என்று மரியாதை இல்லாமல் பேசாதீர்கள்" என்றாள் விதுஷி.​

"அதை இப்படி நடு வழியில் நின்று கொண்டு பேச முடியாது. எதிரில் இருக்கும் காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம். அடுத்த விஷயம் உன்னை, நீ என்று சொல்ல தான் என்னால் முடியும். அதை மாற்றிக் கொள்கிற விருப்பம் எனக்கில்லை. என்ன? போகலாமா?"​

முகம் கடுகடுக்க பதில் சொல்லாமல் முன்னால் திரும்பி நடந்தாள், விதுஷி. அவனும் தோளை குலுக்கி விட்டு அவள் பின்னால் சென்றான். ஒரு டேபிளில் இருவரும் அமர்ந்தனர்.​

"காபி ஓர் டீ?" என்று கேட்டான் அரிமா.​

"நான் எதுவும் குடிக்க வரவில்லை"​

அவள் பேசவே இல்லாதது போல பாவித்து, வெயிட்டரை அழைத்து இரண்டு காபிக்குச் சொன்னான்.​

பின் அவள் விழிகளை நேராக சந்தித்து, "எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது விது. உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறேன்" என்றான் அரிமா ஆழ்ந்த குரலில்.​

விதுஷி சற்று நேரம் பேச்சு வராமல், மூளை மரத்துப் போய் அமர்ந்திருந்தாள். அவள் சுதாரிக்க சற்று அவகாசம் கொடுத்து, அரிமா அமைதியாக அவள் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அவள் அசைவதாகக் காணோம். அதற்குள் வெயிட்டர் வந்து காபி வைத்துவிட்டு சென்றார். அந்த அசைவில் தான் விதுஷி தெளிந்தாள்.​

ஒரு பெரிய மூச்சை எடுத்துவிட்டு பேச ஆரம்பித்தாள். "நான்.."​

அவள் தொடங்குமுன் அரிமா, "வேண்டாம், முதலில் காபியை குடி. அப்புறம் பேசலாம்" என்று தடுத்தான்.​

காபி காலியாகும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பின்பும் அரிமாவே தொடங்கினான்.​

"நான் என்னைப் பற்றி கூறி முடித்த பிறகு, உன் பதிலை சொல்" என்று தொடங்கி தன்னுடைய குடும்பம், தொழில்கள், தன் குணம், விருப்பு வெறுப்பு, இத்தனை நாள் பெண்களிடம் விருப்பமற்று இருந்தது எல்லாவற்றையும் கூறி, அவளைப் பார்த்து பிடித்தது, விசாரித்தது எல்லாம் கூறி முடித்தான்.​

அவன் பேசும்போதே விதுஷியின் மூளை அவசர ஆலோசனை நடத்தியது. அவளுக்கு கணபதி குரூப்ஸ் அதன் செல்வாக்கு எல்லாமே நன்றாகவே தெரியும். அவள் பாங்கில் வேலை செய்வதால் பெரிய நிறுவனங்கள் அவற்றின் பங்குகள் எல்லாமே அவளுக்கு அத்துப்படி. அப்படிப் பார்த்தால், கணபதி குரூப்ஸ் தென்னிந்தியாவின் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்று. அதற்கு ஒற்றை வாரிசு என்றால் இவனை எதிர்ப்பது அவளால், அவள் குடும்பத்தால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் இவன் உடல்மொழி, உருவம், நிறம், குரல் முக்கியமாக அவனுடைய கர்வம், திமிர், கோபம் எதுவும் அவள் மென்மையான குணத்திற்கு சற்றும் பொருந்தாது. அவளைப் பொறுத்தவரை திருமணம் என்பது, ஒத்த குணங்களையுடைய இருவர் வாழ்க்கை முழுக்க ஒன்றாக பயணம் செய்வது தான். இதில் இவளும் அரிமாவும், வெவ்வேறு துருவங்கள்.​

இவனிடம் அவளுடைய சிறு மறுப்பு ஏற்படுத்திய மாற்றத்தை நேரிலேயே இப்போது தான் கண்டாள். பேச மறுத்து விடுவாள் என்ற சந்தேகித்ததற்கே சாவியை கைப்பற்றி வைத்திருக்கிறான். இவனிடம், இவனையே மறுத்தால், நிச்சயம் இங்கிருந்து தான் உருப்படியாக வீட்டிற்கு செல்ல முடியாது என்பது அவளுக்கு புரிந்தது.​

எனவே "எனக்கு இப்போது திருமணத்தைப் பற்றிய எண்ணமே இல்லை'' என்றாள் விதுஷிகா.​

"ஏன்?" ஒற்றை வார்த்தை கூர்மையாக வந்தது அரிமாவிடமிருந்து.​

"இதுவரை திருமணத்தைப் பற்றி யோசித்தது இல்லை. வீட்டிலும் யாரும் அதைப்பற்றி பேசியதில்லை. அதனால் எனக்கும் தோன்றவில்லை."​

"இருக்கட்டும். இப்போது தான் உனக்கு இருபத்து மூன்று ஆகிறதே. இது திருமணத்திற்கு பொருத்தமான வயது தான். யோசித்துப் பார்" என்றான் அதிகாரமாக.​

விதுஷிகா மனதில் அவனை வறுத்து எடுத்தாள். இவனைப் போய் கஜேந்திரனை மாதிரி கம்பீரம் என்று நினைத்தேனே. ச்சை, இவன் ஒரு காண்டாமிருகம், அப்புறம்... இவனைத் திட்ட கூட ஒரு வார்த்தை அவசரத்திற்கு கிடைக்கவில்லையே…​

"ம்க்கும்.." அரிமா சற்று செருமி அவளை நடப்புக்கு அழைத்தான்.​

நல்லவேளை ஒருவர் மனதில் நினைப்பது இன்னொருவருக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு நல்லது. முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டு "நான்.. நாளைக்கு பதில் சொல்லட்டுமா?" பணிவு போல் கேட்டாள்.​

அரிமாவின் முகம் சற்றுத் தெளிந்தது. "சரி விது, நீ நாளைக்கே பதில் சொல்" என்றான் அவன்.​

"என்னை விது என்று கூப்பிடாதீர்கள், ப்ளீஸ்."​

"எனக்கு இப்போதைக்கு அப்படி கூப்பிடுவது தான் பிடிக்கிறது. கல்யாணத்திற்கு பிறகு உனக்கு பிடிக்கிற மாதிரி சொல். மாற்றிக் கொள்கிறேன்"​

தன் பேச்சில் தன்னைத் தானே நொந்து கொண்டு அவனிடம் சொல்லிவிட்டு சாவியையும் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள் விதுஷிகா.​

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு சற்றுநேரம் நின்று விட்டு தன்னுடைய காருக்கு சென்றான் அரிமா துரை. காரில் அமர்ந்து இங்கே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான் வெற்றி வேல்.​

அரிமா காரில் ஏறியதும் வெற்றி "மச்சான், தங்கச்சி என்னடா சொல்லுச்சு?" என்றான்.​

"அவள் நாளைக்கு பதில் சொல்லுகிறாளாம்டா மாப்பு" அரிமா நல்ல மனநிலையில் இருந்தால் தான் இப்படிப்பட்ட வார்த்தை எல்லாம் வரும்.​

அவன் உற்சாகம் வெற்றிக்கும் தொற்றிக் கொண்டது. அவன் உடனே "நாளைக்கு தங்கச்சி நல்ல பதில் தான்டா சொல்லும். எனக்கு வைரமாளிகை ஹோட்டலில் ட்ரீட் வேணும் டா" என்றான்.​

"அது என்ன டா நாளைக்கு, இப்போவே போகலாம்டா" என்றான் அரிமா.​

வீட்டிற்கு சென்ற விதுஷிகா மிகுந்த மனஉளைச்சலில் இருந்தாள். கவனித்துக் கேட்ட தாயிடமும் தலைவலி என்று பொய் கூறி விட்டு, அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.​

அவனை எப்படி சமாளிப்பது? வீட்டில் சொல்லி விடலாமா? அவனுடைய செல்வ நிலைக்கும், செல்வாக்கிற்கும் தன் குடும்பத்தின் அனுமதியோ, தன்னுடைய அனுமதியோ கூட அவனுக்குத் தேவைப் படாது. அதனால் வீட்டில் சொல்லுவதால் அவர்களையும் கவலைப்பட வைப்பதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது. அதனால் வீட்டில் சொல்ல கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.​

நேர்மையாக இருந்தால், நிச்சயம் அவனிடம் இருந்து தப்ப முடியாது. பலவாறு யோசித்து அவனிடம் பொய் கூறினால் மட்டுமே, தன்னால் இந்த பிரச்சினையிலிருந்து வெளிவர முடியும் என்று தோன்றியது அவளுக்கு. என்ன சொல்வது? எப்படி சொல்வது? என்று யோசித்து முடிவு செய்த பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாக தூங்கத் தொடங்கினாள் விதுஷி.​

- தொடரும்…​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 5​

காலை ஆறு மணிக்கு வழக்கம் போல் கண் விழித்தாள் விதுஷிகா. உடனே அரிமா துரை அவள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டான். உடல் வழக்கம் போல் தன் வேலைகளை செய்தாலும், மனமோ அவனைப் பற்றியும், இன்று அவனிடம் பேச வேண்டிய விஷயத்தையும் யோசித்துக் கொண்டிருந்தது. ஹாலில் பேச்சுக்குரல் கேட்டது. வேலைகளை முடித்துக் கொண்டு சென்று பார்த்தாள்.​

பிரியா வந்திருந்தாள். அவளுக்கு இன்று பிறந்த நாள். விதுஷியை கண்டதும் கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். விதுஷி நேற்றெல்லாம் நினைவு வைத்திருந்தாள். மாலை வரும் போது, ப்ரியாவுக்கு கிஃப்ட் வாங்க வேண்டும் என்று கூட நினைத்திருந்தாள். ஆனால் அரிமாவின் வரவால், அவளுக்கு அனைத்தும் மறந்து விட்டது.​

"ப்ரீ செல்லம், ஹாப்பி பெர்த் டே டா" என்றாள் விதுஷி, அவள் கன்னத்தைப் பற்றி.​

அவள் கையைத் தட்டி விட்டாள் பிரியா. "என் பிறந்த நாளை மறந்தவர்கள் ஒன்றும் எனக்கு விஷ் செய்ய வேண்டாம், நான் என் சித்தி, சித்தப்பாவை பார்க்க தான் வந்தேன்".​

"இல்லை குட்டி, இன்று உன்னை அழைத்துப் போய் உனக்கு பிடித்த டிரஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் டா, நேற்று மாலை தலைவலி வந்து விட்டது". என்றாள் அவளை சமாதான படுத்த.​

உடனே கீதாவும் "ஆமாம் ப்ரீ, விது வந்ததுமே தலைவலி என்று படுத்து விட்டாள். சாப்பிட கூட இல்லை. இல்லாவிட்டால் உன் பிறந்தநாளை மறப்பாளா?" என்றார் விதுவுக்கு ஆதரவாக.​

"சாரி அக்கா. இது தெரியாமல் உன்னிடம் கோபப்பட்டு விட்டேன். இப்போ எப்படி இருக்கிறது?" என்றாள் பிரியா வருத்தத்தோடு.​

"இப்போ நன்றாக இருக்கிறேன் மா. இன்று மதியம் வந்து விடுகிறேன். நாம் இருவரும் சேர்ந்து வெளியில் சென்று உனக்கு பிடித்த மாதிரி எல்லாம் வாங்கலாம், இப்போ நான் கிளம்பட்டுமா?"​

"சரிக்கா, மாலை கேக் வெட்டும் போது நீ வாங்கி கொடுக்கும் ட்ரெஸ்ஸை தான் போடுவேன்" என்று பிரியா அவளுக்குத் தேவையானவற்றை லிஸ்ட் போட தொடங்கி விட்டாள்.​

விதுஷிகா மதியம் வரை வங்கியில் இருந்து விட்டு பின்பு மேனேஜரிடம் கேட்டுக்கொண்டு, அரைநாள் விடுப்பில் வீட்டிற்கு கிளம்பி விட்டாள். அரிமா, அவள் மதியம் வீட்டிற்கு சென்று விட்டதால், இன்று பதில் சொல்லாமல் ஏமாற்ற நினைப்பதாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது? என்ற யோசனையும் அவளைக் குடைந்தது. ஆனால் பிரியாவை ஏமாற்ற அவளுக்கு விருப்பம் இல்லை. எனவே அவன் கேட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து வீட்டிற்குச் சென்று விட்டாள்.​

மதிய உணவுக்குப்பின் விதுஷியும், பிரியாவும் ஒரு மாலுக்கு சென்று சுற்றினார்கள். ப்ரியா கேட்ட உடையை விதுஷி அவளுக்கு வாங்கி கொடுத்தாள். அப்போது அங்கே தர்ஷனும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். விதுஷிக்கு ஏற்கனவே பிரியாவுக்கும், தர்ஷனுக்கும் இடையில் இருக்கும் நேசத்தைப் பற்றி தெரியும். இருவரும் இன்னும் ஒருவருக்கு ஒருவர் நேசத்தை வாய் வார்த்தையாக பரிமாறிக் கொள்ளவில்லை, ஆனால் குடும்பத்தில் சிறியவர்கள் அனைவரும் இருவரைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தனர்.​

விதுஷி சற்று நேரத்தில் இருவருக்கும் பேச நேரம் கொடுக்கும் பொருட்டு, ப்ரியாவை அழைத்து, "நீ இங்கே பார்த்துப் பிடித்ததை எடுத்துக் கொண்டிரு. எனக்கு சில புக்ஸ் வாங்க வேண்டும், நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று சென்று விட்டாள்.​

விதுஷி அந்த புத்தகக் கடையில் நின்று தேவையான புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தாள். அப்போது ஏதோ உள்ளுணர்வு தோன்றவே நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அரிமா துரை நின்று கொண்டிருந்தான். அவளுக்கு அவனைப் பார்த்ததும் பேச வேண்டும் என்று நினைத்தது எல்லாம் மறந்து விட்டது. சொல் மறந்தவள் போல அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தாள்.​

விதுஷி இன்று பீச் கலர் குர்தி அணிந்திருந்தாள். காதில் பெரிய வளையம் போன்ற ஸ்டட் அணிந்திருந்தாள். முடியை பிஷ் பிரைட் ஸ்டைலில் வலதுபக்க ஓரமாக பின்னலிட்டிருந்தாள். அரிமாவால் இன்றும் அவள் தோற்றத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. முகத்தில் எந்தவித ஒப்பனையும் இல்லாமலே அவனை அசரடித்துக் கொண்டிருந்தாள் அவள்.​

அவனும் இன்று கேசுவலான ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் தான் இருந்தான். அவளுக்குமே இன்று அவன் நேற்றை விட இளமையாக தெரிந்தான். ஆனால் விதுவுக்கு இருக்கும் குழப்பத்திற்கு கண்ணில் கண்டது அவள் கருத்தில் படவில்லை.​

"பேசலாமா?" என்று கேட்டு அரிமா தான் அந்த மௌனத்தைக் கலைத்தான்.​

அந்த தளத்தில் இருந்த பாஸ்ட் புட் கடைக்கு சென்று, ஒரு டேபிளில் இருவரும் அமர்ந்தார்கள்.​

"ஏன் இன்று அரை நாளோடு வீட்டிற்கு சென்று விட்டாய்?" என்று கேட்டான் அரிமா.​

விதுஷிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. முதலில் நேற்று என் சாவியை எனக்குத் தெரியாமல் எடுத்து தவறு. இதில் இன்று வேறு என்னை கண்காணித்து இங்கு வந்ததும் தவறு. இதில் தான் ஏதோ தவறு செய்த மாதிரி கேள்வி வேறு கேட்கிறானே? இவனை.... மானசீகமாக பல்லைக் கடித்தாள்.​

வெளியிலோ அமைதியாக "இன்று என் தங்கை பிரியாவின் பிறந்த நாள். அவளுக்கு நேற்று ஒன்றும் வாங்க முடியவில்லை என்று அவளுடன் இங்கே வந்தேன். அது தான்'' என்றாள்.​

"ம்ம்" என்று கேட்டுக் கொண்டவன், "இன்று பதில் சொல்வதாக கூறி இருந்தாயே?" என்றான் காரியத்தில் கண்ணாக.​

"எனக்கு இது சரி வரும் என்று தோன்றவில்லை சார். உங்கள் உயரம் வேறு. நாங்கள் மிடில் கிளாஸ்."​

"நீ எல்லாம் படித்த பெண் தானே? வாழ்க்கை என்று வரும் போது இந்த மாதிரி விஷயங்களை கடக்க பழகிக் கொள்ளலாம். இதைப்போய் பெரிய விஷயமாக சொல்லாதே"​

"அது மட்டும் இல்லை சார். குணத்திலும் நமக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை"​

"எதிர் துருவங்கள் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும். கேள்விப்பட்டிருப்பாய் தானே?"​

சுத்தம் என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டாள் விது. உண்மையை சொல்லியாயிற்று. இவன் கேட்பதாக இல்லை. இனி சொல்லப் போவதற்கு என் மேல் தவறில்லை என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.​

"நான் என் பெற்றோருக்குக் கட்டுப்பட்டவள் சார். என் தந்தைக்குக் கடந்த வருடம் மாரடைப்பு ஏற்பட்டு அவர் வைத்திருந்த சேவிங்ஸ் செலவாகி விட்டது, இன்னும் என் கல்யாண சீருக்காக ஒரு நிலம் வேறு வாங்கி இருந்தார். அதனால் இன்னும் ஒரு வருடம் சென்று தான் நிலைமை சற்று சரியான பின் தான் என் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பார்கள். அப்போது என் பெற்றோர் சம்மதித்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை. உங்களால் ஒரு வருடம் காத்திருக்க முடியுமா?" என்று கேட்டாள் விதுஷி.​

அவள் சொன்னதில் பாதி தான் பொய். அதாவது பூபதிக்கு மாரடைப்பு வந்தது மற்றும் நிலம் வாங்கியது எல்லாம் உண்மையே. ஆனால் அதற்காக வீட்டில் நிதிநிலைமை சரியில்லை என்றது தான் பொய். அவள் திருமணத்திற்காக அவள் தந்தை சிறு வயதிலேயே சேர்க்கத் தொடங்கி விட்டார். எனவே அவள் திருமணத்திற்காக பெரிய தொகை அவள் பெயரிலேயே பிக்சட் டெபாசிட்டில் இருக்கிறது.​

அதைப்போல், வீட்டில் அவளுக்கு தீவிரமாக வரன் பார்க்கா விட்டாலும், யாராவது தெரிந்தவர் மூலமாக வரன்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வரும் வரன்கள் ஒன்று, பொருத்தம் இல்லாமலோ, பூபதிக்கோ, கீதாவுக்கோ, ஏன் சில வரன்கள் வருணுக்கு பிடிக்காமல் கூடத் தட்டிப்போய் இருக்கிறது. அதனால் விதுஷியிடம் இன்னும் எந்த வரன் பற்றிய தகவலும் இதுவரை வந்து சேரவில்லை. மற்றபடி தாய், தந்தை, தம்பிக்கு பிடித்திருந்தால் விதுஷியும் கல்யாணத்திற்கு மறுப்பு சொல்லப் போவதில்லை.​

அரிமா அவள் கண்களை கூர்மையாகப் பார்த்தான். விதுஷிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், வெளியில் நிதானத்தை கைவிடாமல் அமர்ந்திருந்தாள்.​

பின் "எதற்கு ஆட்சேபனை இல்லை என்கிறாய்?" என்று கேட்டான்.​

அதாவது அவனை மணந்து கொள்ள சம்மதிக்கிறேன் என்கிற வார்த்தை அவள் வாயிலிருந்து வரவில்லையாம். அதை சொல்லிக் காட்டுகிறானாம். உள்ளுக்குள் கடுத்தது அவளுக்கு.​

"என் பெற்றோர் விருப்பம் தான் என்றேனே" என்றாள் திக்கித் திணறி.​

அரிமாவுக்கு சுவாரசியமாக இருந்தது. திருமணம் என்று கூறவே இத்தனை தயங்குகிறாளே. அவள் அவனுடனான திருமணத்தைப் பற்றிப் பேசத் தயங்குவதை, அவளுடைய கூச்ச சுபாவமாக எடுத்துக் கொண்டான் அவன்.​

''சரி விது. உனக்காக ஒரு வருடம் காத்திருக்க நான் தயார். அதன்பின் என் வீட்டுப் பெரியவர்கள் மூலமாகவே உன் பெற்றோரைத் தொடர்பு கொண்டு நம் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம். ஆனால், உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். ப்ளீஸ்" என்றான் அரிமா உருக்கமாக.​

"எனக்கு உண்மையில் உங்களைப் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. பொதுவாகவே என் பெற்றோர் சொல்லும் ஆணை தான் மணந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் ஒரு வருடம் முடிந்து நீங்கள் சொல்வது மாதிரி செய்யலாம்" என்றாள் கழுவுகிற மீனில் நழுவிகிற மீனாக.​

அரிமாவும் அதற்கு மேல் வற்புறுத்த முடியாமல் அவளிடம் விடைபெற்றுக் கிளம்பி விட்டான். செல்வதற்கு முன் "உன் பேச்சை மதித்து நான் காத்திருக்கிறேன். ஆனால் நீ என்னை ஏமாற்ற முயற்சி செய்வதாக தெரிந்தால், அப்போது தான் என் உண்மையான முகத்தை நீ பார்ப்பாய். அதுவரை உன்னைத் தொல்லை செய்ய மாட்டேன்" என்று எச்சரித்து விட்டே சென்றான்.​

அதன் பின் விதுஷியும், பிரியா தர்ஷனுடன் சேர்ந்து வீட்டிற்கு சென்று விட்டாள்.​

நாட்கள் அதன் போக்கில் சென்றன. ஆனால் அதன் பின் விதுஷிக்கு, ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. அவள் வெளியில் சென்றால் யாரோ பின் தொடர்வது போலவும், கண்காணிப்பது போலவும் ஏற்படும் உணர்வை அவளால் ஒதுக்க முடியவில்லை. அது உண்மையே என்பது போல, அடுத்தடுத்து சில சம்பவங்களும் நடந்தேறியது.​

விதுஷி கீதாவுடன் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றிருந்தாள். அன்று பிரதோஷ நாள், அதிலும் சிவன் கோவில் என்பதால் கூட்டமும் சற்று அதிகமாகவே இருந்தது. அவள் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் கூட்டத்தில் தொலைந்து விட்டது. ஆனால் அவள் அதை கவனிக்கவில்லை. அவர்கள் பூஜை முடிந்து கோவிலை விட்டு வெளியேறி, ஸ்கூட்டி அருகில் சென்ற போது ஒரு சிறுவன் வேகமாக வந்து, அவளுடைய பிரேஸ்லெட்டை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தான்.​

கீதா "உனக்கு எப்படிப்பா இந்த அக்காவுடையது என்று தெரியும்" என்று கேட்டார் அவனிடம்.​

அவனோ "எனக்குத் தெரியாது ஆன்ட்டி, ஒரு அங்கிள் தான் இந்த அக்காவிடம் இதை கொடுத்தால், சாக்லேட் தருவதாக சொன்னாங்க." என்றான்.​

விதுஷியும், கீதாவும் சுற்றிப் பார்த்தார்கள். யார் அந்த அங்கிள் என்று அவனிடமே கேட்டார்கள். அவனும் சுற்றி பார்த்துவிட்டு "ஐயோ, அந்த அங்கிளை காணவில்லையே" என்று விட்டு ஓடி விட்டான்.​

"யாராக இருக்கும் விது?" என்று கேட்டார் கீதா.​

"எனக்கும் தெரியவில்லை" முணுமுணுத்தாள் விதுஷி. ஆனால் அவளுக்குத் தோன்றியது, இது அரிமாவின் வேலை தான் என்று. யாரோ தன்னை கண்காணிக்கிறார்கள் என்கிற உறுத்தல் இது போன்ற சில நிகழ்வுகளால் அதிகம் ஆனது.​

அரிமாவை சந்தித்து மூன்று மாதங்கள் கழித்து வந்த வரன் தான் ரயில்வேயில் கிளார்க் ஆக இருக்கும் சுகுமார். அவன் தோற்றமும் குடும்பப் பின்னணியும் வீட்டினர் அனைவருக்கும் பிடித்தது. அரிமாவுக்குத் தெரியாமல் இந்த கல்யாணம் நடந்து விடுமா என்ற எண்ணம் விதுஷியை அலைக்கழித்தது.​

அவள் எண்ணம் சரி தான். அரிமா அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கத் தான் செய்தான். ஆனால் வீட்டிற்குள் நடப்பதை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டிற்கு வெளியில் அவள் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அவனுக்கு உடனுக்குடன் தகவல் வந்து விடும்.​

கடைசியாக விதுஷியும், ப்ரியாவும் ஐஸ்கிரீம் பார்லரில் பேசியதை வைத்து தான், அவளை அன்று பெண் பார்க்க வருவதே அரிமாவுக்கு தெரிய வந்தது. தன்னவள் கேட்டுக் கொண்டதற்காக அவளிடம் பேசக் கூட இல்லாமல், அவளுக்குத் தெரியாமல் எங்கிருந்தாவது அவளைப் பார்த்துக் கொண்டு மட்டும் நாள்களைக் கடத்தியவனால் அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை. விதுஷிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று அவள் உடல் மொழியிலிருந்தே அவனுக்குத் தெரிந்து தான் இருந்தது. ஆனால் அதற்காக அவள் இன்னொருவனை தனக்குத் தெரியாமல், மணம்புரிய சம்மதித்தது அவனை வெகுவாகவே அமைதி இழக்க செய்து விட்டது.​

ஆனால், அவன் அதற்கு ஆற்றிய எதிர்வினை?​

- தொடரும்...​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 6​

அன்று அரிமா துரையும், வெற்றிவேலும் அவர்களுடைய தலைமை அலுவலத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விதுஷிகாவை கண்காணிப்பவனிடம் இருந்து வெற்றிவேலுக்கு போன் வந்தது. அவன் சொல்ல சொல்ல வெற்றியின் முகம் மாறுவதை அரிமா பார்த்துக் கொண்டிருந்தான்.​

வெற்றி "அரி, தங்கச்சியை இன்று பெண் பார்க்க வராங்கலாம்டா" என்றான் தயக்கத்துடன்.​

அரிமாவின் கண்கள் கோபத்தில் சிவந்தது. எவ்வளவு தைரியம் அவளுக்கு. அவ்வளவு சொல்லியும், அவளை கண்காணிப்பது தெரிந்தும், தன்னை ஏமாற்ற நினைத்திருக்கிறாள்.​

"வெற்றி, இப்போது நீ பேசிய நம்பருக்கு கால் செய்து கொடு" என்றான்.​

அவன் எடுத்ததும் "நான் அரிமா பேசுகிறேன். உனக்கு எப்படி விஷயம் தெரிந்தது?".​

"சார், மேடமும் அவங்க சிஸ்டரும் சேர்ந்து ஐஸ்கிரீம் பார்லரில் வைத்து பேசிக் கொண்டிருந்தார்கள் சார்" என்றான் அந்த விசுவாசி.​

"என்ன பேசிக் கொண்டார்கள்? முழுமையாக சொல்".​

"அவங்க சிஸ்டர், மாலையில் மாப்பிள்ளை பார்க்க வருவதால் பார்லருக்கு போக மேடத்தைக் கூப்பிட்டாங்க, சிரித்து சந்தோசமாக தான் பேசிக்கிட்டாங்க சார். இப்போது ரெண்டு பேரும் சேர்ந்து பார்லருக்கு தான் போகிறார்கள் போலத் தெரிகிறது. பஸ்ஸ்டாண்ட் அருகில் போய்க் கொண்டிருக்காங்க. நான் பைக்கில் பாலோ செய்றேன் சார்" அவன் சொல்வதை கேட்ட அரிமாவின் மனம் இறுகியது.​

அதன் விளைவாக விதுஷிகா கடத்தப்பட்டு திருநெல்வேலியில் இருக்கும், அரிமாவின் தனிப்பட்ட வேலைகளுக்காக நகருக்கு வெளியில் கட்டப்பட்டிருக்கும் அவனுடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டாள்.​

வெற்றி "பெண் பார்க்க தானே வருகிறார்கள் அரிமா, பாத்துவிட்டு போகட்டும். நாம் நாளை தாத்தாவிடம் கூறினால் எல்லாமே மாறிவிடும். இந்த கடத்தல் அவசியமா?" என்று எடுத்து சொல்லிப் பார்த்தான்.​

"அவள் என் மனைவியாக தான் என் மனதில் இருக்கிறாள். என மனைவியை இன்னொருவன் வந்து பெண் பார்க்க நான் விட வேண்டுமா?" என்றான் கர்ஜனையாக.​

"அதற்கு அந்த மாப்பிள்ளையை கூட ஏதாவது செய்யலாம் டா. சிஸ்டர் பாவம். அவங்க வீட்டில் வேறு கஷ்டம் டா".​

"ஓஹோ, தங்கச்சி மேல் அவ்ளோ பாசமா? நல்லா இருக்குடா உன் நியாயம். உன் தங்கச்சி என்னை ஏமாற்ற பார்த்திருக்கிறாள். இது அவளுக்கான தண்டனை".​

"டேய், அது நீ கல்யாணம் முடிச்சிட்டு கூட அவகூட பேசி சரி செய்யலாம் டா. இது தப்பு அரி"​

"சாரிடா, இந்த விஷயம் இப்படி தான் நடக்கும். இது என்ன ஏமாத்துன அவளுக்கும், அவகிட்ட ஏமாந்த எனக்குமே தண்டனை தான்" என்றான் அரிமா தீர்மானமாக.​

வெற்றி அதன்பிறகு ஒன்றும் சொல்லவில்லை. அரிமா சொன்னதை அப்படியே அச்சுப்பிசகாமல் நிறைவேற்றத் தொடங்கினான்.​

விதுஷிகாவை அரிமாவின் பங்களாவில் சேர்த்து விட்டு, அடுத்து என்ன என்று தெரியாமல் அங்கிருக்கும் போர்டிகோவில் அமர்ந்திருந்தான். அரிமா அங்கிருக்கும் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தான். வெகுநேரம் கழித்து அரிமா விதுஷி இருந்த அறைக்கு, அவளைப் பார்க்க வந்தான். அப்போது தான் விதுஷியும் கண்விழித்து வெளியே வந்தாள்.​

விதுஷி "ஏன் இப்படி செய்தீர்கள்?" என்றாள் அரிமாவிடம் கோபமாக.​

"ஏன் செய்ய கூடாது?" என்றான் அரிமா அலட்சியமாக.​

"நீ என்னிடம் என்ன சொன்ன? ஒரு வருடம் வரை திருமணம் செய்ய மாட்டேன் என்று தானே? நீ என்னை ஏமாற்றினால் நான் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விட்டு உன்னை வேறு ஒருவனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமா? அதற்கு நீ வேறு ஆளை பார்த்திருக்க வேண்டும்" என்றான் கண்கள் சிவக்க.​

விதுஷி அவன் கோபத்தில் மிரண்டு முகம் வெளுத்தாள். அரிமாவின் கர்ஜனைக் குரல் கீழே இருந்த வெற்றிக்கும் கேட்டு, அவனும் மாடி ஹாலுக்கு வந்தான். கோபத்துடன் நிற்கும் அரிமாவையும், பயத்துடன் நிற்கும் விதுஷியையும் பார்த்து நடந்ததை அவதானித்துக் கொண்டான்.​

"அரி" என்று அழைத்தான்.​

அவன் குரல் கேட்டு இருவரும் அவனிடம் திரும்பினார்கள். அரிமா ஏன் இங்கே வந்தாய் என்பது போன்ற எரிச்சலை முகத்தில் காண்பித்தான். விதுஷியோ இன்னொரு ஆள் அங்கே இருப்பதைக் கண்டு வேகமாக வெற்றியின் அருகில் சென்று நின்று கொண்டாள்.​

அரிமா அவளைக் கண்டு நக்கலாக சிரித்தான். வெற்றிக்கும் சற்று சங்கடமாக இருந்தது.​

"என்னடா?" என்றான் அரிமா.​

வெற்றி பதில் சொல்வதற்குள் விதுஷி "அண்ணா, நான் எங்கள் வீட்டுக்குப் போக ஹெல்ப் பண்ணுங்க. ப்ளீஸ்" என்றாள் அவனிடம்.​

"ஹலோ மேடம், உங்களை இங்கே கொண்டு வந்தது நான். நான் மனது வைக்காமல் நீ இங்கே இருந்து எங்கேயும் போக முடியாது" என்றான் அரிமா அவளிடம் திமிராக.​

அவள் பதிலற்று அவனையே வெறித்தாள். வெற்றி அங்கிருந்து கீழே சென்று விட்டான்.​

அரிமா "வா, உன்னிடம் பேச வேண்டும்" என்று விட்டு அவள் இருந்த அறைக்குள் சென்றான்.​

அவளும் வேறு வழியின்றி அவனுடன் சென்றாள். அறையில் இருந்த பால்கனி சேரில் இருவரும் அமர்ந்தனர். அரிமா அவளுக்கு லெமன் ஜூஸ் கொண்டு வரச் செய்தான்.​

"மருந்து வீரியத்தில் சற்று கிறக்கமாக இருக்கும். இதைக் குடி"​

விதுஷி அமைதியாக அதை எடுத்து பருகினாள். அவள் குடித்ததும் அவனிடம் "நான் பொய் சொன்னது தவறு தான். ஆனால் அன்றைக்கு நான் என்னுடைய மறுப்பை சொன்னேன். நீங்கள் அதை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் அப்படி ஒரு வருடம் கழித்து திருமணம் என்று சொன்னேன்" என்றாள்.​

"நீ கூறுவது உன் வரையில் சரி தான். ஆனால் நீ அன்றைக்கே உறுதியாக மறுத்திருக்க வேண்டும்".​

"மறுத்திருந்தால் ஏற்றுக் கொண்டு ஒதுங்கிப் போய் இருப்பீர்களா?"​

"நிச்சயமாக மாட்டேன். நீ வேறு ஒருவரையும் மனதில் நினைக்கவில்லை என்று உறுதியாக தெரிந்த பின் தான் உன்னிடம் கல்யாணப் பேச்சையே எடுத்தேன். நீ மறுத்தால் உன் பெற்றோர் மூலமாக திருமண ஏற்பாடு செய்திருப்பேன்". என்றான்.​

"அதனால் தான் பொய் சொன்னேன்'' என்றாள் அவள் கோபமாக. பின் உடனே தணிந்து "வீட்டில் இதற்குள் என்னைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். ப்ளீஸ், என்னை அனுப்பி விடுங்கள்" என்றாள் கெஞ்சலாக.​

"போலீஸ் ஸ்டேஷனில் குடும்பத்தோடு இருப்பதாக கேள்வி"​

"என்ன?" என்றவளுக்கு கரகரவென்று கண்ணீரை வழிந்தது.​

"ம்ம். உன் அப்பா, மாமா, பெரியப்பா, தர்ஷன், பிரியா எல்லாருமே இப்போது போலீஸ் ஸ்டேஷனில் தான் இருக்கிறார்கள்."​

"ப்ளீஸ்" என்றாள் அழுது கொண்டே.​

"விது" என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான் அரிமா.​

கண்ணைத் துடைத்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.​

"நீ இனி உன் வீட்டிற்கு என் மனைவியாகத் தான் போகப் போகிறாய். நாளைக்கு நமக்குக் கல்யாணம். இன்று இரவை நீ இங்கு தான் கழித்தாக வேண்டும்".​

"நோ, என்னால் முடியாது. எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை".​

"சாரி, இதில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது, இனி உன்னை நம்பவும் முடியாது" என்றவன் அந்த அறையைப் பூட்டிச் சாவியை கையோடு கொண்டு சென்று விட்டான்.​

வெற்றியிடம் பேசி விட்டு, விதுஷி வீட்டினர் இருந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து பேசி விட்டு போனை வைத்தான்.​

வெற்றி "இரவாகி விட்டதே, நீ வீட்டிற்கு போகவில்லையா அரி?" என்றான்.​

"இல்லை மச்சான், இன்று இங்கே தான். விதுவை தனியே விட்டு செல்ல முடியாது."​

"ரொம்ப அக்கறை தான்டா. அவளை நான் பார்த்துக் கொள்கிறேன். தாத்தாவிடம் என்ன சொல்ல முடியும்? நீ கிளம்பு" என்றான் வெற்றி.​

"வேண்டாம். நான் இன்று இங்கே தான். உன் தங்கச்சியை ஒன்றும் விழுங்கி விட மாட்டேன். என்னை நம்புடா" என்றான் அரிமா நக்கலாக.​

வெற்றி "இல்லை மச்சான், அதற்காக சொல்லவில்லை" என்று அசடு வழிந்தான்.​

"நீ போய் நம் மூன்று பேருக்கும் இரவுக்கு சாப்பாடு வாங்கி வா" என்று வெற்றியை அனுப்பி வைத்துவிட்டு விதுஷியின் அறை முன்பு இருக்கும் சோபாவில் சென்று அமர்ந்தான் அரிமா.​

தூத்துக்குடியில் தர்ஷனை அழைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் முதலில் விதுஷியும், ப்ரியாவும் சென்ற காம்ப்ளக்ஸுக்கு சென்றார். அங்கு விசாரிக்கிறேன் என்ற பெயரில் முடிந்த வரை நேரத்தை கடத்திக் கொண்டிருந்தார். இரவு ஒன்பது மணி ஆகி விட்டது. தர்ஷனுக்கு அவர் மேல் சந்தேகம் வரவில்லை. அந்த அளவு பிஸியாக விசாரிப்பது போல் காட்டிக் கொண்டார்.​

வீட்டிலிருந்தும் தர்ஷனுக்கு போன் வந்து கொண்டிருந்தது. வீட்டில் கீதா அழுது அழுது அரை மயக்க நிலையில் இருந்தார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தி எதையாவது குடிக்க வைக்க முயன்று கொண்டிருந்தனர்.​

வசந்தா "குடி கீதா, நம் விது நல்ல பெண். அவள் குணத்திற்கு அவளுக்கு எந்த குறையும் வராது. நிச்சயம் நல்லபடியாகக் கிடைத்து விடுவாள். அதற்கு நீ கொஞ்சம் தைரியமாக இருக்க வேண்டாமா? குடி மா" என்று ஜூஸ் கிளாசை கையில் திணித்தார்.​

கீதா "நிச்சயம் கிடைத்து விடுவாளா அண்ணி?" கண்களில் ஏக்கத்துடன் சிறு குழந்தை போல கேட்டார்.​

அதைக் கண்டு மற்ற அனைவருக்கும் கண்ணீர் வந்தது. இருந்தும் அதை மறைத்துக் கொண்டு "கண்டிப்பாக நம் விது நன்றாகவே இருப்பாள். சீக்கிரம் நம்மிடம் வந்து விடுவாள். குடி சீக்கிரம்" என்றார் வசந்தா.​

நேரம் சென்று கொண்டிருந்த போது, சென்னையில் இருந்து வருண்குமாரும், ராகவனும் வந்து விட்டனர். சேகரும், தர்மராஜும் பூபதிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.​

இன்ஸ்பெக்டர் "சார், இங்கே விசாரித்ததில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை. சிட்டியை சுற்றி வாகனங்களை சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த ஊரை விட்டு வெளியில் செல்ல முடியாது. இந்த மாதிரி கடத்தலில் ஈடுபடும் ரவுடிகளின் லிஸ்ட்டை வைத்து நாளை தான் விசாரிக்க வேண்டும். அதனால் நீங்கள் வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வாருங்கள் சார்" என்று எடுத்து கூறி தர்ஷனை அனுப்பி வைக்க முயன்றார்.​

அவனுக்கும் புரிந்தது ''ஒரு நிமிடம் சார்" என்று விட்டு, தந்தைக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் கூறியதை எடுத்து சொன்னான்.​

"சரிப்பா நீ வா மற்றதை காலையில் பார்த்துக் கொள்ளலாம்" என்றார் சேகர்.​

தர்ஷன் வீட்டிற்குச் சென்றதும், எல்லாருக்கும் நடந்ததை தெரிவித்தான். அன்றைய இரவை அனைவரும் பயத்துடனேயே கழித்தனர்.​

வெற்றி வாங்கி வந்த உணவை எடுத்துக் கொண்டு விதுஷியின் அறைக்கு சென்றான் அரிமா. கட்டிலில் ஒரு மூலையில் கண்ணில் நீருடன் அமர்ந்திருந்தவள், கதவு திறக்கும் சத்தத்தில் சட்டென நிமிர்ந்து பார்த்தாள். வந்தது அரிமா என்றதும், கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.​

உணவு பார்சலை அங்கிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு, "சாப்பிட வா விது" என்று அழைத்தான்.​

பதில் சொல்லாமல் மெளனமாக மறுப்பைக் காட்டினாள் விதுஷி.​

சற்றுப் பொறுத்துப் பார்த்தவன், பின் ஒரு வேக மூச்சுடன் "சாப்பிட வா என்றேனே? கேட்கவில்லை?" என்றான் கோபமாக.​

அந்தக் குரலில் அவள் உடல் ஒரு முறை தூக்கிப் போட்டது. "என்னை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள். எனக்குப் பசிக்கவில்லை" என்றாள் கண்களில் மீண்டும் நிறைந்து விட்ட நீருடன்.​

"நாளைக்குப் போகலாம், இப்போது வா, சாப்பிடு. நீயாக சாப்பிடாவிட்டால், நான் ஊட்டி விட வேண்டி இருக்கும். எப்படி வசதி?"​

விதுஷி பதில் சொல்லாமல் அங்கிருந்த சோபாவில் வந்து அமர்ந்தாள். அரிமா உணவை எடுத்து வைத்தான். ஓரளவு அவளை சாப்பிட வைத்துவிட்டு அவனும் சாப்பிட்டான்.​

அரிமா தந்தைக்கு அழைத்து ஒரு வேலை இருப்பதால் அவன் இன்று வீட்டிற்கு வரவில்லை என்று கூறிவிட்டான். அவன் அவ்வப்போது இந்த வீட்டில் வேலைக்காகத் தங்குவது வழக்கம் என்பதால் அவரும் சரி என்று விட்டார்.​

விதுவை பெட்டில் படுக்குமாறு கூறிவிட்டு அரிமா அங்கிருந்த சோபாவில் படுத்துக் கொண்டான். வெற்றியை வீட்டிற்கு அனுப்பி விட்டான். விது அவனை அறையை விட்டு வெளியில் போக சொல்லியும் அவன் மறுத்து விட்டான்.​

"இதுவரை உன்னுடைய விரலைக்கூட நான் தொடவில்லை. அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை. புது இடம், உன்னை தனியாக விட மனமில்லாமல் தான் ஒரே அறையில் இருப்பதாக சொல்கிறேன். படுத்துக்கொள்" என்றுவிட்டான்.​

அடுத்த நாள் விடியலை நினைத்துப் பயந்து கொண்டிருந்த விதுஷி, இன்றைய இரவை நினைத்துப் பயம் கொள்ளவில்லை. அரிமாவின் வார்த்தையை அந்த அளவு அவளுடைய ஆழ்மனது நம்புகிறது. ஆனால் அவளுக்குத் தான் இன்னும் அது புரியவில்லை. பெற்றோரையும், குடும்பத்தினரையும் நினைத்துக் கவலையில் ஆழ்ந்தாள்.​

விடியல் அவளுக்கு என்ன வைத்திருக்கிறதோ?​

-தொடரும்.....​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 7​

காலை ஆறு மணிக்கே அரிமாவை தேடி வந்து விட்டான் வெற்றி.​

"என்ன முடிவு செய்திருக்கிறாய்? என்று கேட்டான் வெற்றிவேல்.​

"நேற்று சொன்னது தான். ரெஜிஸ்டராரை வர சொல்லி விட்டாயா?'' என்று கேட்டான் அரிமா.​

"ம். சொல்லிவிட்டேன். ஆனால் அரி, திருமணமாவது வீட்டினர் பார்க்கும் படி நடக்கட்டுமே. ஏன் இவ்வளவு பிடிவாதம்?"​

"என்னை என்ன டா செய்ய சொல்கிறாய்? உன் தங்கை தான் என்னைப் பிடிக்கவில்லை என்று என் முகத்திற்கு நேராகவே சொல்கிறாளே. இரண்டு வீட்டினரையும் வைத்துக் கொண்டு அவள் இப்படி சொன்னால் அப்புறம் என்ன செய்வது?"​

"இதற்காகவா திருமணம்?" என்று நம்பாமல் கேட்டான் வெற்றி.​

"அவள் அப்படி சொன்னாலும் எங்கள் திருமணத்தை என்னால் நடத்த முடியும். ஆனால் அதற்கு பிறகு பாட்டி, அத்தை ஆகியோரை சமாளிப்பது கடினம். பிடிக்காத பெண்ணை விட என் மகளைக் கட்டிக்கொள் என்பார் அத்தை. அது இன்னும் சிக்கலாகும். நான் யோசித்து தான்டா சொல்கிறேன்." என்றான் அரிமா.​

அதற்குள் காலிங்பெல் சத்தம் கேட்டது. வெற்றி சென்று கதவை திறந்தான்.​

ஒரு பெண்ணும் ஆணும் நின்றிருந்தனர். இருவர் கையிலும் சில பைகள் இருந்தன.​

அந்த பெண்மணி ஒரு பியூட்டீஷியன். உடன் வந்தவர் அவரின் கணவர்.​

இருவரையும் அமர சொன்ன அரிமா, வெற்றி வரும் போதே வாங்கி வந்திருந்த காபி பார்சலையும், கிளாசையும் எடுத்துக் கொண்டு விதுஷியின் அறைக்கு சென்றான்.​

ஒரு நாளில் பொழிவு இழந்து அமர்ந்திருந்தாள் விதுஷிகா. அவனைக் கண்டும் எதுவும் பேசவில்லை, பார்க்கக் கூட செய்யாமல் திரும்பிக் கொண்டாள்.​

அதைக் கவனியாதவன் போன்று, "எழுந்து வா விது, காபி குடி" என்றவாறு இரு டம்ளர்களில் காபியை ஊற்றினான் அரிமா.​

அவள் இன்றும் முகத்தைத் திருப்பவும், நேற்றைப் போல் மிரட்டி விரட்டி காபி குடிக்க செய்தான். பின்பு குளித்து விட்டு வருமாறு கூறியதும், அவள் முகம் வெளிறியது.​

"ஏன்?" என்றாள் நடுங்கும் குரலோடு.​

"நான் நேற்றே சொன்னேனே, இன்று நம் திருமணம். நீ குளித்துவிட்டு வா. உன்னை அலங்காரம் செய்வதற்காக பார்லரில் இருந்து வந்திருக்கிறார்கள்"​

"நோ, என்னால் முடியாது. வேண்டாம். என்னை விட்டு விடுங்கள்" என்றாள் விதுஷி அழுகையும் கோபமுமாக.​

"உனக்கு இப்போது தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுக்கப் படவில்லை விதுஷிகா" அரிமா அழுத்தமாக கூறினான்.​

விதுஷி பதில் சொல்லாமல் அறையிலிருந்து வெளியேற முயன்றாள். அரிமா சட்டென அவள் கையைப் பற்றி இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவன் மீதே சென்று விழுந்தாள் அவள். அடுத்த நொடி துடித்துக் கொண்டு அவனிடமிருந்து விலக முயன்றாள். அரிமா அவள் முயற்சியைத் தடுத்து அவளை இறுக அணைத்து, அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான். அவன் உதடுகள் அவளுடைய கழுத்தில் அழுத்தமாகப் பதிந்தது. விதுஷியின் உடல் வெளிப்படையாகவே உதறத் தொடங்கியது. அவன் அதைக் கண்டு கொள்ளாமல் உதடுகளை மிக மெதுவாக கழுத்திலிருந்து கன்னத்திற்கு கொண்டு சென்றான், பின்பு காதருகில் சென்று காதுமடலில் பதிந்தது. அவனுடைய மூச்சுக் காற்றின் வேகமே அவளை எரிக்கும் படி, அத்தனை வெப்பம் அதில் இருந்தது.​

அவள் காது மடலில் உதடுகளைப் பதித்தவாறே "நீ நான் சொல்கிற படி நடக்காவிட்டால் இங்கே என்ன நடக்கும் என்று சிறு முன்னோட்டம் தான் நடத்தினேன். தயார் ஆகிறாயா? இல்லை?...." என்று இழுத்தான்.​

விதுஷி வேகமாக "ஆமாம்" என்பது போல் தலையை ஆட்டினாள்.​

அரிமா அவளிடமிருந்து விலகி, இரு கைகளாலும் பின் தலையக் கோதி தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.​

பார்லர் பெண்மணி விதுஷியை தயார் செய்யத் தொடங்கினார். அவரிடம் விதுஷிகா எதுவும் பேசவில்லை. அவர் சொல்வதை மட்டும் பொம்மை போல் அமைதியாக செய்தாள்.​

அரிமா தயாராகி விட்டு, விதுஷிக்கு உணவு அனுப்பினான். மறுத்துப் பயனில்லை என்று உணர்ந்து, பெயருக்குக் கொறித்து விட்டு வைத்து விட்டாள்.​

சற்றுநேரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அதிகாரி ஒருவர் வந்து விட்டார். போட்டோகிராபர், அரிமாவின் நண்பர்கள் இன்னும் சிலர் வந்தனர். வெற்றி கிடைத்த நேரத்தில் அந்த ஹாலில் ஒரு பகுதியை, மலர்களால் சிறு அலங்காரம் செய்திருந்தான். விதுஷி ஹாலுக்கு அழைத்து வரப்பட்டாள்.​

அவள் கண்கள் மட்டும் அரிமாவின் பேச்சையும், மிரட்டலையும் மீறிக் கலங்கிக் கொண்டே தான் இருந்தது. மற்றபடி அவள் தன் எதிர்ப்பைக் காட்டுவதை விட்டு விட்டாள்.​

அரிமா விதுஷிகாவின் கழுத்தில், அவன் குடும்ப வழக்கப்படி பதினோரு பவுன் தாலிக்கொடியில் இணைந்திருந்த அவர்களின் பரம்பரைத் தாலியை கட்டினான். விதுஷிகா தலை நிமிரவே இல்லை. அவள் நெற்றியிலும், உச்சி வகிட்டிலும் குங்குமம் வைத்து விட்டான். பின்பு ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர். ரெஜிஸ்டரார் கொண்டு வந்திருந்த சில காகிதங்களில் இருவரிடமும் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டது.​

சற்றுநேரத்தில் வரிசையாக சில கார்கள் அந்த பங்காளவிற்குள் நுழைந்தது.​

வந்தது, அரிமா துரையின் குடும்பத்தினர் தான். அவர்கள் வந்ததும் வெற்றியத் தவிர மற்றவர்கள் வெளியேறி விட்டனர், வெற்றி அவர்களை போகச் சொல்லி விட்டான்.​

விதுஷிகா ஓய்ந்து போய் ஒரு சோபாவில் அமர்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த மாலையைக் கழற்றி சோபாவின் கைப்பிடியில் வைத்து விட்டு, அந்த கைப்பிடியிலேயே தலையை சாய்த்து அமர்ந்திருந்தாள். அரிமாவின் கண்களுக்கு அப்போது அவள், பார்ப்பதற்கு அநாதரவான குழந்தை போலத் தெரிந்தாள்.​

வந்ததும் அனைவரும் அங்கிருந்த சூழ்நிலையின் தாக்கத்தால் பேச்சிழந்து நின்று கொண்டிருந்தனர். இந்திராணி தான் முதலில் சுயம் தெளிந்து "என்ன அரிமா இதெல்லாம்?" என்று கோபத்துடன் கேட்டார்.​

அவர் குரல் கேட்டதும் தான் விதுஷிகா தன் மோன நிலையிலிருந்து கலைந்து, நிமிர்ந்து அமர்ந்து சுற்றுப்புறத்தை நோக்கினாள். இவர்கள் எல்லாம் யார்? இனி தான் என்ன செய்ய வேண்டும்? அவள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.​

"நான் தாத்தாவிடம் எல்லாமே போனில் சொன்னேனே பாட்டி, அவர் சொல்லவில்லையா?" என்றான் அரிமா நிதானமாக.​

உடனே கணபதி "என்னப்பா சொன்னாய்? இன்று இந்த வீட்டில் உன் திருமணம் என்று கூறினாய். இது தான் குடும்பத்திற்கு நீ கொடுக்கும் மரியாதையா?" என்றார் கணபதி தாத்தா.​

வெற்றி "தாத்தா, முதலில் எல்லாரும் உட்காருங்கள். நாம் பேசலாம். அரிமா எல்லாம் சொல்லுவான்" என்று அவர்களை அமைதிப் படுத்த முயன்றான்.​

இதற்குள் சுதாரித்துக் கொண்ட சரஸ்வதி "என்ன சொல்லுவான் அவன். என் பெண்ணுக்கு முதலில் அவன் பதில் சொல்லவேண்டும்" என்றார் ஆத்திரமாக.​

அரிமா "நான் ஏன் அத்தை உங்கள் பெண்ணக்கு பதில் சொல்ல வேண்டும்?" என்றான்.​

சரஸ்வதி அவனுக்குப் பதில் சொல்லாமல் இந்திராணியிடம் திரும்பி "அம்மா, இங்கே நடந்தது திருமணமே கிடையாது. உடனே இவளை விரட்டிவிட்டு, அரிமாவுக்கு என் பெண்ணைத் தான் மணமுடிக்க வேண்டும்" என்றார் அழுகையுடன்.​

"அத்தை" என்றான் அரிமா கர்ஜனையாக. "அவள் என் மனைவி. அவளைப்பற்றி ஒரு வார்த்தை தவறாக வரக்கூடாது"​

நாச்சியப்பன் "அரிமா நீ சற்றுப் பொறு. பெரியவர்கள் கோபத்தில் பேசுவதைப் பொருட்படுத்தக் கூடாது" என்று அரிமாவிடம் சொன்னவர், மற்றவர்களிடம் திரும்பி "எல்லோரும் உட்காருங்கள், அப்பா, அம்மா இங்கே வாங்க" என்று அழைத்து அனைவரையும் அமர சொன்னார்.​

இந்தக் குடும்பத்தில் அரிமாவின் திருமணத்தில், உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது அரிமாவின் தாய் லட்சுமி தான். எங்கே தன் நாத்தனார் மகள்களில் ஒருவரை, தன் மாமியார் அரிமாவுக்கு மனைவியாக்கி விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தார் அவர். இப்போது துடைத்து வைத்த குத்துவிளக்கு மாதிரி, சுடர் விடும் அழகோடு, முகத்தில் மழலை மறையாமல் கூட இருக்கும் விதுஷிகாவை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இத்தனைக்கும் இன்னும் அவள் பெயர் கூட அவருக்குத் தெரியாது. இருந்தும் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கும் அவளைத் தேற்றவே அவர் மனம் விளைந்தது.​

இதில் தன்ஷிகா, அனுஷா வேறு விதுஷியை கண்களாலே எரிப்பதுபோல் பார்த்து, முறைத்துக் கொண்டிருந்தனர். வெற்றி அரிமாவிடம் சென்று விதுஷியை சற்றுநேரம் அவளுடைய அறைக்கு அனுப்பி வைக்கும்படி கூறினான். அரிமாவுக்கும் அது சரி என்று தோன்றவே விதுஷியிடம் சென்று, அவளைக் கைபிடித்து எழுப்பினான். அவள் கையை உதறப் போகவும் இறுக்கமாகப் பிடித்து, எழுப்பித் தன்னுடன் அழைத்துச் சென்றான்.​

அவளை மாடியில் முதல் நாள் அவள் தங்கி இருந்த அறையில் அமர வைத்துவிட்டு, கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வந்தான். விதுஷிகாவுக்கு இவனை எப்படிக் கையாள்வது என்றே தெரியவில்லை. பெற்றோர் குடும்பத்தினர் இருக்கும் போதே இப்படி செய்கிறானே என்று இருந்தது அவளுக்கு.​

கீழே வந்த அரிமா "முதலில் எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள்" என்றான். "நான் செய்தது தவறு தான். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. விதுஷியை விட்டுக்கொடுக்க முடியாமல் தான் இப்படி நடந்து கொள்ள வேண்டியதாகி விட்டது" என்று தொடங்கி சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி முடித்தான்.​

கணபதி "அப்படி என்றால் அந்தப் பெண்ணுக்கு, இதில் விருப்பம் இல்லையா?" என்றார்.​

"இல்லை தாத்தா".​

சரஸ்வதி "அப்பா" என்று அவரிடம் பேச வந்தார்.​

அவர் கணவர் சேகர் அவரைத் தடுத்து விட்டார். சேகரிக்கும் அரிமாவைப் பிடிக்கும். ஆனால் இன்னொருத்தியின் கணவன் தன் பெண்ணுக்கு வேண்டாம் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். எனவே அவர் மனைவியை பேச விடாமல் செய்து விட்டார்.​

இந்திராணி "அந்த பெண் என்ன குடும்பமோ? என்ன குலமோ?" என்று புலம்பினார்.​

கணபதி "நம் குடும்பத்திற்கு வந்த பிறகு அவள் நம் குலம் தான் ராணி" என்றார் அழுத்தமாக.​

நாச்சியப்பன் "அப்படி என்றால் நீங்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டீர்களா அப்பா?" என்றார் ஆச்சரியத்துடன்.​

"ஆமாப்பா, இல்லாவிட்டால் உன் மகன் விட்டு விடுவானா?"​

"தாத்தா" என்று முகம் மலர்ந்தான் அரிமா.​

அந்த நேரத்தில் தான் விதுஷிகாவின் வீட்டினர் அங்கு வந்தனர். கார் வந்து நிற்கும் ஓசையில் வெற்றி சென்று பார்த்தான். விதுஷியின் குடும்பத்தினரைக் கண்டதும், உள்ளே வந்து தாத்தாவிடம் அவசரமாக விஷயத்தைக் கூறினான். அரிமா அவளைக் கடத்தியது, அவள் வீட்டினர் போலீஸ் ஸ்டேஷன் சென்று, ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது, பின் இன்று காலை இன்ஸ்பெக்டர் மூலமாகவே இந்த முகவரியைக் கூறி, இங்கே வர வைத்தது எல்லாம் சொல்லி விட்டான்.​

ஆம், காலையில் இன்ஸ்பெக்டர் தர்ஷனுக்கு போன் செய்தார். ஒரு முகவரியைக் கூறி அங்கே விதுஷிகா இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக கூறினார்.​

தர்ஷன் "இது யாருடைய வீடு சார்" என்று கேட்டான்.​

“சார், நீங்கள் அனாவசியமான கேள்விகளில் நேரத்தை செலவழிக்க வேண்டாம். உங்கள் வீட்டுப்பெண் இந்த முகவரியில் பத்திரமாக இருக்கிறார். நீங்கள் அங்கே சென்று பாருங்கள். போகும்போது விதுஷிகாவின் பெற்றோரையும் அழைத்து செல்லுங்கள்" என்றார் இன்ஸ்பெக்டர்.​

"சார், அப்படி என்றால் நீங்கள் எங்களுடன் வரவில்லையா?" என்று கேட்டான் குழப்பத்துடன்.​

"இல்லை சார், நீங்கள் அவர்களை அழைத்து செல்லுங்கள். உங்கள் மாமா மகள் மிகவும் பத்திரமாக இருக்கிறார். அதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு தைரியம் கூறி அழைத்துப் போங்கள்" என்று விட்டு போனை வைத்து விட்டார்.​

தர்ஷன் மனதில் குழப்பத்துடனேயே தன் குடும்பத்தினரிடம் விவரம் கூறினான். இன்ஸ்பெக்டரின் விதுஷிக்கு ஆபத்து இல்லை என்ற சொல்லை மட்டும் பற்றுக்கோலாகக் கொண்டு, விதுஷியின் குடும்பத்தினர் அரிமாவின் வீட்டிற்கு வந்தனர்.​

கேட்டில் காவலாளி அவர்கள் காரை நிறுத்தி, யார்? என்ன? என்று விசாரித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் வெற்றி கவனித்துவிட்டு தாத்தாவிடம் விவரம் கூறிவிட்டு, கேட்டிற்கு வந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான். தாத்தா அவர்களை வாசலுக்கு வந்து வரவேற்று உள்ளே அழைத்தார்.​

தர்ஷன் "ஐயா, நீங்கள் யார்? எங்கள் விது இங்கே இருக்கிறாளா?" என்றான் கணபதியிடம்.​

தன் குடும்பத்தினர் வந்திருப்பது கூட தெரியாமல் இருக்கும் விதுஷியின் நிலை?​

- தொடரும்....​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 8​

விதுஷிகா அவள் இருந்த அறையில் கீதாவின் மடியில் சுருண்டு படுத்திருந்தாள். பிரியா, வசந்தா, விதுஷியின் பெரியம்மா ரேணுகா ஆகியோர் அந்த அறையில் தான் அவளுடன் இருந்தனர்.​

அப்போது அங்கே "உள்ளே வரலாமா?" என்று கேட்டுக் கொண்டே லட்சுமி வந்தார்.​

"இது உங்கள் வீடு, நீங்கள் உள்ளே வர எங்களை ஏன் கேட்கிறீர்கள்? நாங்கள் தான் வெளி ஆட்கள்" என்று கோபமாக கூறினார் வசந்தா.​

லட்சுமியின் முகம் ஒரு நொடி வாடினாலும் சட்டெனத் தெளிந்து "இனி இது உங்கள் வீடும் தான் அக்கா" என்றார் மென்மையாக.​

அதற்கு மேல் அங்கிருந்த யாராலும் லட்சுமியிடம் கோபத்தை காட்ட முடியவில்லை. ஏன் அரிமாவின் வீட்டினர் யாரிடமும், விதுஷி குடும்பத்தாரின் கோபம் செல்லுபடி ஆகவில்லை.​

ஏனெனில், வந்ததும் அத்தனை கோபத்துடன் இருந்தவர்களையும், கணபதி மிக சுலபமாகக் கையாண்டார்.​

தர்ஷன் கேட்ட "விது இங்கே இருக்கிறாளா?" என்ற கேள்விக்கு கணபதி உடனே பதில் அளிக்கவில்லை.​

எல்லோரையும் உள்ளே அழைத்து வந்து, அமர வைத்து விட்டு தான் பேச்சைத் தொடங்கினார். அவருடைய மரியாதையான தோற்றம், யாராலும் அவரை எதிர்த்துப் பேச முடியாமல் செய்து விட்டது.​

கீதாவால் அதற்கு மேல் முடியவில்லை, "ஐயா என் மகள் இங்கே இருக்கிறாளா?" என்றார் கண்ணில் நீருடன்.​

கணபதி "பேத்தி பத்திரமாக இருக்கிறாள் அம்மா. அழாதீர்கள்" என்றுவிட்டு லட்சுமியிடம் திரும்பி "இவர்களை கூட்டிப் போம்மா" என்றார்.​

தர்மராஜ் "பேத்தியா?" என்றார் கேள்வியாக.​

"ஆமாம் தம்பி" என்றார் கணபதி உறுதியான குரலில்.​

அந்த இடத்தில இருந்த அலங்காரம், அரிமாவின் பட்டுவேஷ்டி சட்டை, மணமக்களுக்கான மாலை அந்த டீப்பாயில் இருந்தது, இது எல்லாமே அங்கு ஒரு திருமணம் நடந்ததை யாரும் சொல்லாமலே அவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.​

பூபதி கோபமாக "ஐயா இங்கே என்ன நடக்கிறது, என் மகள் எங்களுக்கு வேண்டும்" என்றார்.​

கீதா அதற்கு மேல் தாமதிக்காமல், விதுவைப் பார்க்க லட்சுமியுடன் சென்று விட்டார். அவருடனே பிரியா, வசந்தா, ரேணுகா ஆகியோரும் சென்றனர்.​

கணபதி "நான் எல்லாம் சொல்கிறேன் தம்பி. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்" என்றார்.​

பின்பு தங்கள் குடும்பம், தொழில் ஆகியவற்றைக் கூறினார். அதற்குள் வருண் "சார், நீங்கள் யாராக இருந்தாலும் அது எங்களுக்கு தேவை இல்லாத ஒன்று. என் அக்கா ஏன் உங்கள் வீட்டில் இருக்கிறாள்? அவள் எப்படி இங்கே வந்தாள்?" என்றான் பொறுமையற்று.​

தர்மராஜ் வருணிடம் "பொறுமையாக இரு வருண்" என்றார்.​

தர்மராஜ் இவர்களின் செல்வநிலையையும், செல்வாக்கையும் ஏற்கனவே அறிந்திருந்தார். இவர்கள் திருநெல்வேலியில் இருந்தாலும், தூதுக்குடியிலும் பல தொழில்களை செய்து வருகின்றனர். தர்மராஜ் கூட குத்தகைக்குத் தான் உப்பளம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் கணபதி குரூப்ஸ் பல உப்பள நிலங்களை சொந்தமாக நடத்திக் கொண்டிருந்தனர். அது மட்டுமின்றி வெளியில் என்ன தான் கணபதி குரூப்ஸ் தொழில் சாம்ராஜ்யத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், அவர்களின் தொழில் எதிரிகளை அவர்கள் கையாளும் வகை பலருக்குத் தெரியாது. தர்மராஜ் கூட, இதை சமீபத்தில் தான் அறிய நேரிட்டது.​

உப்பள உரிமையாளர்கள் அனைவருக்கும் ஒரு சங்கம் உண்டு. அதன் கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. தர்மராஜ் அதில் கலந்து கொண்டார். அப்போது அங்கு அரிமா துரையும் வந்திருந்தான். அதுவரை தலைவர் பதிவியில் இருந்தவரின் பதவிக்காலம் முடிவடைவதால், அடுத்த தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், அன்று மனு தாக்கல் செய்யலாம் என்று ஏற்கனவே அறிக்கை அனுப்பி இருந்தனர். அரிமா சார்பில் வெற்றி தலைவர் பதவிக்கான விண்ணப்பத்தைக் கொடுத்தான். அரிமா விண்ணப்பம் கொடுத்ததைப் பார்த்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தை கொடுக்காமல் விட்டுவிட்டனர். தர்மராஜுக்கு குத்தகைக்கு நிலத்தைக் கொடுத்தவர் கூட விண்ணப்பப் படிவம் கொண்டு வந்திருந்தார். அவர் தர்மராஜின் நண்பரும் கூட.​

தர்மராஜ் அவரிடம்"என்னப்பா நீ மனு தாக்கல் செய்யவில்லை?" என்றார்.​

"கணபதி குரூப்ஸ் விண்ணப்பம் போய் விட்டது. இதற்கு மேல் நான் மட்டும் இல்லை. வேறு யாரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள்" என்றார் அந்த நண்பர்.​

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் எழுந்தான். "என்ன டா, கணபதி குரூப்ஸ் மட்டும் தான் எல்லா தலைவர் பதவிலயும் இருக்கணுமா? நெல்லையப்பர் கோவில் தலைவர் இவனோட அப்பா" என்று அரிமாவை கை கட்டினான். "ரோட்டரி கிளப் தலைவர் இவனோட தாத்தா. திருநெல்வேலி வணிகர் சங்க தலைவர், இவர்" என்று நக்கலாக மீண்டும் அரிமாவை கை காட்டினான். "திருநெல்வேலில தான் இவனுங்க ராஜாங்கம்னு பாத்தா இப்போ தூதுக்குடிலையும் யாருக்கும் பதவி குடுக்க மாட்டானுங்க போல. ஆனா அதுக்கு இந்த சங்கர் விட மாட்டேன், என்னோட மனுவ வாங்கிக்கோங்க. நானா? இவனான்னு பாக்குறேன்" என்று வீரவசனம் பேசிக் கொண்டு மனுவை கொடுத்தான்.​

மனு வாங்குபவர் அரிமாவின் முகத்தைப் பார்த்தார். அவன் தலை அசைத்ததும் வாங்கிக்கொண்டார். அரிமா, சங்கருக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. கூட்டம் முடிந்து அனைவரும் சென்று விட்டனர்.​

மறுநாள் காலை தர்மராஜூக்கு அவர் நண்பர் போன் செய்தார். அந்த சங்கர் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக கூறினார்.​

"எப்படிப்பா? நேற்று அத்தனை திமிராக பேசினானே?" என்றார் தர்மராஜ்.​

"அவன் அவனுடய உப்பளத்திலேயே உடல் முழுக்கக் காயத்தோடு மயங்கிக் கிடந்தானாம்ப்பா. இது கணபதி குரூப்ஸ் அரிமாவின் வேலை தான்ப்பா. அவன் அப்பா, தாத்தா கூட இப்படி இல்லை. இவன் பொறுப்பிற்கு வந்த பிறகு எதிர்த்து ஒருவர் கூட குரல் உயர்த்த முடியாது. அதிலும் அந்த சங்கர் ..... அந்த அமைச்சரின் மச்சான். அவனுக்கே இந்த கதி என்றால் இவனை யார் எதிர்க்க முடியும்? இதற்குத் தான் மற்ற யாரும் நேற்று மனு தாக்கல் செய்யவில்லை" என்றார் அவர்.​

நடந்ததை நினைத்துப் பார்த்தவர், இப்படி ஒருவனிடம் தங்களால் மோத முடியாது. அதனால் அமைதியாகவே பேசி விதுஷியை இங்கிருந்து அழைத்து செல்லப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவருக்கு இங்கிருக்கும் சூழ்நிலையே பல கதைகளை மனதிற்குள் உருவாக்கியது. இருந்தாலும் முடிந்தவரை தங்கள் பெண்ணின் நலனுக்காகவும், எதிர் காலத்திற்காகவும் முயன்று அமைதியாகக் காட்டிக் கொண்டார்.​

தர்ஷன், வருண், ராகவன் ஆகியோர் கணபதியையும், அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அரிமாவையும் முறைத்துவிட்டு ஒருவருக்கொருவர் பார்வை பரிமாறிக் கொண்டனர்.​

கணபதி மீண்டும் பேச ஆரம்பித்தார் "இன்று என் பேரன் அரிமாவிற்கும், விதுஷிகாவிற்கும் திருமணம் நடந்து விட்டது. இந்த திருமணம் அரிமாவின் விருப்பத்தால் மட்டுமே நடந்தது. எங்களுக்கும் இது எதிர்பாராத செய்தி தான். ஆனால், இப்போது நாங்களும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டோம். உங்களுக்கும் இந்த செய்தி அதிர்ச்சியாகத் தான் இருக்கும், ஆனால் நம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்து நாம் முடிவு எடுக்க வேண்டும்..."​

அவர் பேச்சை இடை வெட்டினான் தர்ஷன் "சார், நீங்கள் உங்கள் பேரனைப்பற்றி மட்டுமே யோசிக்கிறீர்கள். எங்கள் விதுவின் நிலை என்ன? அவளுக்கு இந்த திருமணத்தில் நிச்சயம் விருப்பம் இருந்திருக்காது"​

தர்மராஜ் தர்ஷனிடம் "நீங்கள் மூன்று பேரும் கொஞ்சநேரம் வெளியில் போய்விட்டு வாருங்கள்" என்றார் கோபத்துடன். தர்ஷன், வருண், ராகவன் மூவரும் அரிமாவை முறைத்துப் பார்த்துவிட்டு வெளியேறி விட்டனர்.​

பூபதிராஜும் "தர்ஷன் சொல்வது சரி தான் அண்ணா, என் மகளின் விருப்பமின்றி நடந்த திருமணத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார் கோபமாக.​

கணபதி பொறுமையாகவே "தம்பி, உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது. ஆனால் நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். இந்த திருமணத்தை வீட்டில் பேசி நாம் முடிவு செய்த திருமணமாக நினைத்து யோசித்துப் பாருங்கள். என் பேரனுக்கு என்ன குறை? நான் செல்வநிலையை மட்டும் வைத்துக் கூறவில்லை. இந்த வயதிலேயே அவனுக்கு சமூகத்தில் எவ்வளவு மரியாதை இருக்கிறது என்று இந்த ஊரில் விசாரித்துப் பாருங்கள்" என்றார்.​

தர்மராஜ் "ஐயா, உங்கள் பேரனிடம் குறை கண்டுபிடிக்க எங்களுக்கு காரணமில்லை. ஆனால் இதில் பாதிக்கப்பட்டிருப்பது எங்கள் வீட்டுப் பெண். நீங்கள் திருநெல்வேலியில் புகழ்பெற்ற குடும்பம் தான். ஆனால் இதில் முடிவு விது தான் எடுக்க வேண்டும். அவள் இங்கே இருக்க மறுத்தால் உங்கள் முடிவு என்ன?" என்றார், விதுஷி எப்படியும் அரிமாவை மறுத்து விடுவாள் என்ற எண்ணத்துடன்.​

கணபதியின் பார்வை அரிமாவிடம் சென்றது.​

அரிமா "அவள் என் மனைவி, அவளே மறுத்தாலும் என்னை மீறி என்னிடம் இருந்து யாரும் அவளைப் பிரிக்க முடியாது" என்றான் கர்வத்துடன்.​

நாச்சியப்பன் பூபதியிடம் "என் மகன் நடந்து கொண்டதற்கு நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் சம்மந்தி" என்றார்.​

அரிமா "அப்பா" என்றான் அதட்டலாக.​

கணபதி "அரி, நீ சற்றுநேரம் அமைதியாக இரு" என்றார் அழுத்தமாக.​

நாச்சியப்பன் கேட்ட மன்னிப்பிற்கு பூபதி எந்த பதிலும் சொல்லவில்லை.​

தர்மராஜ் தான் "நாம் விதுஷியிடம் பேசாமல் இதற்கு எப்படி முடிவு எடுப்பது ஐயா?" என்றார்.​

அதற்கு கணபதியும், நாச்சியப்பனும் பேசிப்பேசியே தர்மராஜையும், பூபதியையும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளும்படி செய்துவிட்டனர்.​

மாடி அறையில் சோபாவில் அமர்ந்திருந்த விதுஷி, கதவு திறக்கவும் நிமிர்ந்து பார்த்தாள். அங்கே கீதாவைக் கண்டதும் "அம்மா" என்று வேகமாக சென்று அனைத்துக் கொண்டாள். அவள் உடல் அழுகையில் குலுங்கியது. கீதாவை அழைத்து வந்த லட்சுமிக்கும் ஏன் என்றே தெரியாமல் கண்கலங்கியது.​

கீதா விதுஷியை உள்ளே கூட்டி வந்து அமர வைத்தார். அவள் அழுகை சற்று மட்டுப்பட்டதும் தானும் கண்களைத் துடைத்துக் கொண்டு, "என்ன நடந்தது விது? நீ எப்படி இங்கே வந்தாய்?" என்று கேட்டார். அவர் பார்வை மகள் உடலில் இருந்த விலை உயர்ந்த பட்டுப்புடவை, வைர நகைகள், கழுத்திலிருந்த புதிய தாலிக்கொடி என்று வலம்வந்தது.​

விதுஷி அரிமாவை முதலில் கோவிலில் சந்தித்தது முதல் தொடங்கி, இன்று அவன் திருமணம் செய்தது வரை கூறினாள். அரிமா திருமணத்திற்காக மிரட்டி அவளிடம் நடந்து கொண்ட விதத்தை மட்டும் மறைத்து விட்டாள்.​

கேட்டுக் கொண்டிருந்த லட்சுமிக்கு அரிமாவின் நிலை புரிந்தது. விது மட்டும் முதலில் சம்மதித்திருந்தால், அரிமா இரு வீட்டாரிடமும் பேசி திருமணத்தை நல்ல முறையில் நடத்தியிருப்பான். அவர் அவர்களுக்குத் தனிமை கொடுத்து கீழே சென்று விட்டார். சற்று நேரத்திலேயே விதுஷி குடும்பத்துப் பெண்கள் உள்ளே வந்தனர். அவர்களும் விதுஷியிடம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தனர்.​

அரிமாவின் பாட்டி, அத்தை, அத்தை மகள்கள் எல்லோரும் கீழே இருந்த மற்றொரு அறையில் சென்று அடைந்து கொண்டனர். அழுது கொண்டிருந்த சரஸ்வதியை இந்திராணி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தன்ஷிகாவும், அனுஷாவும் அங்கேயே சோகமாக இருப்பது போல் காட்டிக்கொண்டு பாட்டியிடம் அனுதாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.​

கணபதி "தம்பி, நான் உங்களுக்கு ஒரு வாக்குக் கொடுக்கிறேன். இந்த திருமணம் நடந்தது இப்போது வேண்டுமானால் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் நீங்களே உங்கள் பெண்ணின் வாழ்க்கையை நினைத்துப் பூரித்துப் போகும்படி, என் பேரன் அவளைப் பார்த்துக் கொள்வான்" என்றார் நம்பிக்கையாக.​

சேகர் அத்தனை நேரம் அமைதியாக இருந்தவர் "என் பெண்ணுக்குத் தான் அரிமாவை மணமுடிக்க வேண்டும் என்று, எனக்கும் என் மனைவிக்கும் விருப்பம் இருந்தது. ஆனால் அவனுக்கு என்னவோ உங்கள் பெண்ணை பிடித்து விட்டது. நான் சிறுவயதிலிருந்து பார்க்கிற பையன், அவன் உங்கள் பெண்ணை திருமணம் செய்த விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவன் ஒரு செயல் செய்தால் அதில் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். நீங்கள் அரிமாவை நம்பி இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.​

தர்மராஜும், பூபதியும் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர்.​

தர்மராஜ் "நாங்கள் விதுவைப் பார்க்க வேண்டும்" என்றார்.​

விதுஷிகா கீழே அழைத்து வரப்பட்டாள்.​

மகளை திருமணக் கோலத்தில் கண்டதும் பூபதிக்குக் கண்கள் கலங்கியது. வருண் அக்காவைப் பார்த்துவிட்டு ஓடி வந்து அனைத்துக் கொண்டான். விதுஷியும் கண்ணீருடன் அணைத்துக் கொண்டாள்.​

இந்திராணியிடம் சரஸ்வதி "குடும்பமாக எப்படி நடிக்கிறார்கள்? அரிமாவை மணக்க அழுகையாம். இதெல்லாம் நம்புவது போலவா இருக்கிறது?" என்று விதுஷியின் மீது வெறுப்பை ஏற்படுத்த முயன்றார்.​

இந்திராணியும் என் பேரனைப் பிடிக்காத பெண்ணா? என்று நினைத்ததும் அவர் மனதிலும் விதுஷியின் மீது வெறுப்பின் விதை விழுந்து விட்டது.​

-தொடரும்....​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 9​

நாச்சியப்பன் "விதுஷிகா இங்கே வாம்மா" என்றார்.​

விதுஷி கீதாவைப் பார்க்க, அவர் போ என்பது போல் தலையசைக்கவும் நாச்சியப்பன் அருகில் சென்றாள்.​

"என்னுடன் நம் வீட்டிற்கு வருகிறாயா?" என்றார் நாச்சியப்பன் அவளிடம் மென்மையாக.​

அவள் பயத்துடன் அரிமாவைப் பார்த்தாள். அவன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.​

அவள் தலையை உடனே மறுப்பாக அசைத்தாள்.​

லட்சுமி அவள் அருகில் வந்து "அங்கே இவன் மட்டுமா இருக்கிறான்? நான், உன் மாமா, தாத்தா, பாட்டி எல்லோரும் இருக்கிறோம் கண்ணம்மா" என்றார் அவள் தலையை வருடி.​

ஏற்கனவே கீதா அவளிடம் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் படி, அறையில் வைத்தே எடுத்துச் சொல்லி தான் அழைத்து வந்திருந்தார். இருந்தும் காலையில் அரிமா அறையில் வைத்து அவளிடம் நடந்து கொண்ட முறையில் அவள் சற்றுப் பயந்து விட்டாள்.​

எனவே, லட்சுமி கேட்டதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.​

பூபதி மகள் விரும்பாத வாழ்க்கைக்கு அவளை வற்புறுத்துவது பிடிக்காமல் "அவள் தான் விருப்பமில்லை என்கிறாளே? சில நாட்கள் அவளை எங்கள் வீட்டிற்கு அழைத்துப் போகிறோம். பிறகு முடிவு செய்யலாம்" என்றார்.​

யாரும் எதிர்பாராத இடத்தில இருந்து பூபதிக்கு எதிர்ப்பு வந்தது. ஆம் அது கீதா தான். "என்னங்க பேசுறீங்க? அவள் ஒரு அதிர்ச்சியில் புரியாமல் பேசுகிறாள். பெரியவர்கள் நாம் தான் எது முறை என்று அவளிடம் எடுத்துச் சொல்லவேண்டும். நீங்களும் அவளுக்குத் துணை போவது போல் பேசாதீர்கள்" என்றுவிட்டு, விதுவிடம் திரும்பி "விது, அம்மா சொன்னால் கேட்பாய் தானே?" என்றார்.​

அவள் அவரைப் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அரிமாவுக்கு அவள் முகத்தைப் பார்த்து, அப்படியே அவளைத் தனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.​

"நாம் எல்லோருமே சேர்ந்து அவர்களுடன் போகலாம். உன்னை அங்கே அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு நாங்கள் தூத்துக்குடி போய்விட்டு நாளைக்கு வந்து உன்னை நம் வீட்டிற்கு அழைத்துப் போகிறோம். சரி தானா?" என்றார்.​

அவர் சொன்ன எல்லாவற்றையும் விட்டுவிட்டு "நாளைக்காம்மா?" என்றாள் ஆர்வமாக.​

கீதாவுக்கு கண்கள் கலங்கியது. மறைத்துக்கொண்டு "ஆமாம்" என்றார்.​

கணபதி அதற்குமேல் தாமதிக்கவில்லை. எல்லோரையும் கிளம்ப சொன்னார்.​

விதுஷி அன்னையுடன் சென்று காரில் ஏறப்போனாள். அரிமா அவள் கையைப்பற்றி இழுத்து வந்து அவன் காரில் உட்கார வைத்தான்.​

அரிமாவின் காரை வெற்றி எடுத்தான். அரிமாவும் விதுஷியும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்.​

இதைப் பார்த்துக் கொண்டிருந்த விதுஷி வீட்டில் அனைவருக்கும், அரிமா ஒரு வில்லனை போல் தெரிந்தான். பூபதி காரில் இருந்து இறங்கப் போகவும் கீதா தான் அவரைத் தடுத்தார். தர்ஷன் குரூப்ஸுக்கு (தர்ஷன், வருண், பிரியா, ராகவன்) அரிமாவைப் பிடிக்கவே இல்லை. இதில் அவன் விதுஷியை இழுத்துப் போனது இன்னும் அவர்களை வெறுப்பேற்றியது.​

இந்திராணி, சரஸ்வதி, அவர் மகள்கள் இந்த காட்சியைப் பொறாமையுடன் பார்த்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் பயணத்தைத் தொடங்கினர்.​

காரில், கார்க்கதவை இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் விதுஷி. அரிமா அதைப் பார்த்தாலும் எதுவும் சொல்லவில்லை. அவன் பக்கமும் திரும்பாமல் வெளியிலேயே பார்வையை பதித்திருந்தாள். சற்றுநேரம் கழித்து அவள் கையைப்பற்றி அவளை அருகில் இழுத்தான் அரிமா. அவள் அதிர்ந்து போய் அவன்மேல் மோதி அமர்ந்தாள். அவளுக்கு அவன் அருகாமை மிகவும் கூச்சத்தைக் கொடுத்தது, எனவே அவள் விலக முயன்றாள்.​

அரிமா "என்ன?" என்றான் அதட்டலாக.​

உடனே அசையாமல் அமர்ந்து கொண்டாள். அரிமாவுக்கு அவளை நினைத்து சிரிப்பாக இருந்தது. வெளிக்காட்டாமல் அமர்ந்து கொண்டான்.​

கணபதி இல்லத்தில் அரிமா, விதுஷிகா இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். விதுஷி வீட்டினரையும் மரியாதையுடன் அழைத்து அமர வைத்தனர்.​

முதலில் விதுவை பூஜை அறையில் விளக்கு ஏற்றும்படி சொன்னார் லட்சுமி. இந்திராணி எதிலும் தலையிடவில்லை. கணபதி அதை கவனித்தாலும், வீட்டில் சொந்தங்கள் நிறைந்திருக்கும் போது வேறு பிரச்சனைகளைப் பேச அவர் விரும்பவில்லை.​

அரிமாவின் அக்கா காயத்ரி சென்னையில் இருப்பதால், கிடைத்த முதல் விமானத்தில் அப்போது தான் கணவன், மகளுடன் வந்திறங்கினாள். வந்ததும் வீட்டினரிடம் பேசிவிட்டு விதுஷியிடமும், விதுஷி குடும்பத்தாரிடமும் நல்ல விதமாகவே நடந்து கொண்டாள். காயத்ரியின் மகள் வர்ஷா ஏழு வயது. அவள் வந்ததும் அந்த இடத்திற்கே ஒரு கலகலப்பு வந்தது.​

விதுஷி பூஜை அறையில் விளக்கு ஏற்றினாள். அரிமா அவள் அருகில் நின்று இருவருமாக கடவுளை வணங்கினார்கள். பின்பு மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப்பட்டது. நாச்சியப்பன் வீட்டினருக்கு விருந்து உணவு ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார். முதலில் மணமக்களுக்கு விருந்து பரிமாறப் பட்டது. பின்பு கணபதி, இந்திராணியுடன் விதுஷி குடும்பத்தினர் சாப்பிட்டனர்.​

அந்த வீடும், நாச்சியப்பன், கணபதி, லட்சுமி ஆகியோரின் அனுசரணையான அணுகுமுறையும் விதுஷி குடும்பத்தாருக்கு மனதுக்கு இதமாக இருந்தது. இந்திராணி, அவர் மகள், பேத்திகள் தான் இவர்கள் இருக்கும் திசைக்கே வராமல் அவர்கள் அறையிலேயே இருந்து கொண்டனர். இதில் இந்திராணி மட்டும் கணபதிக்காக கட்டாயத்தின் பேரில் ஹாலில் அமர்ந்திருந்தார்.​

உணவுக்குப் பின் விதுஷியை ஒரு அறையில் ஓய்வு எடுக்க சொன்னார் லட்சுமி. பிரியாவும் அவளுடனே இருந்தாள். லட்சுமி, கீதா, வசந்தா, ரேணுகா ஆகியோர் மாடி ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், ஆண்கள் கீழே ஹாலில் அமர்ந்திருந்தனர். தர்ஷன் குரூப் அங்கே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு அரிமாவை முறைத்துக் கொண்டுமிருந்தனர்.​

வெற்றி "அரி, ஏன் டா இவனுக மட்டும் இன்னும் முறைச்சிட்டே இருக்கானுங்க?" என்றான்.​

அரிமா சிறு சிரிப்புடன் "தெரியலடா, இவனுகளும் என் பொண்டாட்டியோட தங்கச்சி அந்த சில்வண்டு பிரியா மட்டும் இன்னும் மொறச்சிகிட்டு தான்டா சுத்துதுக. பாத்துக்கலாம், நாளைக்கு அவங்க வீட்டுக்கு மறுவீடு போகணும்னு சொல்லிருக்காங்க. அப்போ பாத்துக்கலாம் இவனுகள" என்றான் அரிமா.​

அறையில் பிரியா "அக்கா, நீ ஏன் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொண்டாய்?" என்று கேட்டாள்.​

விதுஷிகா "ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை பிரியா" என்றாள் சோகமாக.​

"ஏன் அப்படி சொல்கிறாய்?"​

விதுஷிகா ஒரு பெருமூச்சுடன் "சரி, இப்போது நான் மறுத்தால் என்ன ஆகும்?"​

"என்னக்கா இப்படி கேட்கிறாய்? எல்லாம் பழைய மாதிரி ஆகி விடும். உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லை தானே? அப்புறம் என்ன?"​

"அது அவ்வளவு சுலபம் இல்லை ப்ரீ"​

"ஏன்க்கா? அதெல்லாம் சுலபம் தான். அந்தப் பாட்டிக்குக் கூட இந்தக் கல்யாணம் பிடிக்கவில்லை. வந்ததிலிருந்து உம்மென்று தான் இருக்கிறது. அப்புறம் அவங்க மகள் பேத்திங்க கூட உன்ன மொறச்சிக்கிட்டே தான் சுத்துறாங்க. நீ எங்களோடு வந்து விட்டால் சிரிச்சிட்டே அனுப்பி வச்சிருவாங்க" என்றாள் பிரியா.​

"அவங்க மட்டுமா இந்த வீட்ல இருக்காங்க? அரிமா அப்படி சுலபமாக விட மாட்டார்" என்றாள் விதுஷிகா.​

"என்ன செய்வாராம்? அவ்வளவு பயம் இருந்தால் அவர் கேட்ட போதே நீ சம்மதிச்சிருக்கலாம்".​

"நான் முடிந்தவரை விலக தான் நினைத்தேன். அவர் அவரோட அப்பா அம்மா மூலமா பேசியிருந்தா, நமக்கு சம்மதிக்கிறத தவிர வேற வழி கிடையாது. அதனால் தான் ஒரு வருடம் காத்திருக்கச் சொல்லி, அவரை திசை திருப்ப நினைத்தேன்".​

"நீ இங்க சமாளிச்சிருவியா? இங்க ஒண்ணுக்கு நாலு வில்லிங்க இருக்காங்க. எனக்கு உன்ன நெனச்சா கஷ்டமா இருக்குக்கா" என்றாள் பிரியா மெய்யான வருத்தத்தோடு.​

விதுஷிக்கு தற்போது அரிமாவைத் தவிர யாரை நினைத்தும் கவலையோ, பயமோ இல்லை. எனவே ப்ரியாவிடம் "நான் சமாளித்துக் கொள்வேன் ப்ரீ. நீ கவலைப் படாதே" என்றாள்.​

சற்றுநேரத்தில் விதுஷிகா வீட்டினர் கிளம்பி விட்டனர். விதுஷியும், அரிமாவும் மற்ற குடும்பத்தினரும் வாசலுக்கு வந்து வழி அனுப்பினார்கள். குடும்பத்தினர் கிளம்பும்போது விதுஷி எவ்வளவு முயன்றும் முடியாமல் அழத் தொடங்கி விட்டாள். அரிமா அவள் கையைப் பற்றவும் சட்டென கையை உதறிக் கொண்டாள். அவன் பற்களைக் கடித்துக் கோபத்தை கட்டுப்படுத்தினான்.​

அவர்கள் சென்றதும் அனைவரும் உள்ளே வரவும், லட்சுமி விதுஷியை கீழே இருந்த இன்னொரு விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றார்.​

அரிமா "அம்மா அவள் என் அறையில் இருக்கட்டுமே? ஏன் விருந்தினர் அறை?" என்றான் லட்சுமியிடம்.​

அவன் கேள்வி கேட்டதும் அனைவரும் ஒரு நொடி அவனைப் பார்த்தனர். ஏனெனில் அரிமா அனாவசியமாக ஒரு வார்த்தை பேச மாட்டான்.​

லட்சுமிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மகன் சாதாரணமாக பேசி எத்தனை வருடங்கள் ஆகி விட்டது? அவர் "நாராயண குருக்கள் வருகிறார் அரி. திருமணம் உடனே நடந்து விட்டதால், மற்ற சடங்குகள் அவர் சொல்கிற படி தான் நடக்க வேண்டும் என்று பாட்டி கூறி விட்டார்கள். அது வரை விதுஷி இந்த அறையில் இருக்கட்டும்." என்றார்.​

"ம்ம்'' என்று கேட்டுக் கொண்டவன், "எனக்குக் கொஞ்சம் வெளி வேலைகள் இருக்கிறது" என்றான்.​

"அவர் இப்போது வந்து விடுவார். அவர் சென்றதும் நீ உன் வேலையைப் பாரேன்"​

இந்திராணி "அவன் போவதனால் போகட்டும் லட்சுமி" என்றார்.​

கணபதி "ராணி, என்ன பேசுகிறாய், பிள்ளைகள் ஐயாவிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டாமா?" என்றார்.​

"அது சரி தான். என்ன வேலைப்பா? அதுவும் இன்று?" என்று விசாரித்தார் இந்திராணி அரிமாவிடம்.​

அரிமாவின் முகம் லேசாக சிவந்தது. அவன் பதில் சொல்ல சற்றுத் தயங்கினான். பின் "விது காலையிலிருந்து இந்த சேலையிலேயே இருக்கிறாள். அது தான் அவளுக்குக் கொஞ்சம் உடைகள் வாங்க தான்" என்றான்.​

அதைக் கேட்டதும் லட் சுமியின் முகம் மலர்ந்தது என்றால், இந்திராணி & கோ முகம் கடுத்தது. இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு விதுஷியும் அங்கே தான் இருந்தாள்.​

லட்சுமி "சரிப்பா, கொஞ்ச நேரம் கழித்துப் போ" என்றுவிட்டு விதுவை அழைத்துக் கொண்டு அறைக்குப் போய் விட்டார்,​

அரிமா அவன் அறைக்குச் சென்று விட்டான்.​

சரஸ்வதி இந்திராணியிடம் "அம்மா, பார்த்தீர்களா? உங்கள் பேச்சுக்கு இந்த வீட்டில் மதிப்பு இல்லாமல் போய்விட்டது" என்றார்.​

"என்ன சொல்கிறாய்?"​

"நீங்கள் அரிமாவை வெளியே போக சொன்னீர்கள். அண்ணியும், அப்பாவும் குருக்கள் வரும்போது இங்கே இருக்கவேண்டும் என்றார்கள். அரிமா அவன் அம்மா பேச்சைத் தான் கேட்டான். அதை தான் சொன்னேன். இங்கே இனி உங்கள் சொல்லுக்கே மதிப்பு இருக்காது. இதில் என்னையும் என் குடும்பத்தையும் யார் மதிக்கப் போகிறார்கள்?" என்றார் சோகமாக.​

இந்திராணி இத்தனை வருடங்கள் இந்த வீட்டில் உண்மையாகவே ராணியாக தான் ஆட்சி செய்து வந்தார். லட்சுமி கூட இதுவரை அவரை ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசியதில்லை. இனி பேரன் மனைவியால் தான் ஓரம் கட்டப்பட்டு விடுவோமோ என்று அவருக்குப் பயம் ஏற்பட்டது.​

ஆனால் உண்மை என்னவென்றால் இப்போதுமே அந்த வீட்டின் ராணி அவர் தான். தேவையற்ற சிந்தனைகளும், எண்ணங்களும் தான் அவரை இனி மதிப்பிழக்கச் செய்யப் போகிறது. இதை யார் அவரிடம் சொல்வது?​

நாராயண குருக்கள் தன் கையில் அரிமாவின் ஜாதகத்தையும், போனில் இருந்த விதுஷியின் ஜாதகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். விதுஷியின் ஜாதகத்தை கீதா போனில் அனுப்பி இருந்தார்.​

சற்று நேரம் பார்த்துவிட்டு, கணபதியிடம் "விதுஷிக்கு இது குரு நோக்கம் உள்ள காலம் தான். அதனால் அவளுக்குப் பிரச்சனை இல்லை. இரண்டு பேர் ஜாதகமும் பொருத்தமும் இருக்கிறது. ஆனால் அரிமாவுக்கு குரு நோக்கம் வர இன்னும் ஒரு மாதம் ஆகும். அதுவரை இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்ய வேண்டாம். அதற்குப்பின் ஒரு மூன்று நாள்கள் குறித்துத் தருகிறேன். அதில் உங்களுக்கு வசதியான நாளில் சடங்கை வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.​

பின் குருக்களிடம் மணமக்கள் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.​

அவர் சென்றதும் அரிமா வெற்றிக்கு அழைத்து இருவருமாக கடைக்குச் சென்று விட்டனர். அரிமாவுக்கு விதுஷியை உடன் அழைத்துச் செல்ல ஆசை தான். ஆனால் அவள் தான் அவன் முகத்தைக் கூடப் பார்க்க மறுக்கிறாளே. இருவருமாக சென்று விதுஷிக்குத் தேவையான ஆடைகள், அன்றாடத் தேவைக்கான பொருட்கள் எல்லாம் வாங்கினார்கள்.​

-தொடரும்....​

தங்களுடைய விமர்சனங்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.... நன்றி....​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 10​

கணபதி இல்லத்தில் உணவு மேசையில் குடும்பத்தினர் அனைவரும் இரவு உணவுக்காக அமர்ந்திருந்தனர். லட்சுமி வேலைக்காரர்கள் உதவியுடன் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.​

வர்ஷா "எனக்கு இட்லி வேண்டாம்மா. பிரைட்ரைஸ் தான் வேணும்" என்றாள்.​

காயத்ரி "இட்லி வேண்டாம்னா இடியாப்பம், சப்பாத்தி, பணியாரம் இதுல ஏதாச்சும் சாப்பிடு. அதை விட்டுட்டு இல்லாத பிரைட்ரைஸ் வேணுமோ?" என்றாள்.​

இந்திராணி "அவள் கணபதி குடும்பத்து குட்டி இளவரசி. அவள் ஏன் இருப்பதை சாப்பிட வேண்டும்? அவள் விருப்பட்டதை சாப்பிட முடியும் காயு" என்றவர் வேலையாளிடம் திரும்பி "போய் பிரைட் ரைஸ் தயார் பண்ணு" என்றார்.​

காயத்ரி "பாட்டி, அவள் உங்கள் இளவரசி தான். அதற்காக ஒவ்வொரு வேளைக்கும், இப்படி அடம்பிடிப்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. இவளை நான் பார்த்துக் கொள்கிறேன் பாட்டி" என்று முடிவாகக் கூறியவள் மகளிடம் திரும்பி "உனக்கு என்ன வேண்டும்?" என்றாள் அதட்டலாக.​

காயத்ரியின் கணவன் விஷ்ணு வாயே திறக்கவில்லை. மனைவிக்கும், மகளுக்குமிடையே சென்றால் இருவரும் சேர்ந்து கொண்டு அவனை ஜோக்கர் ஆக்கி விடுவார்கள். அனுபவம் கொடுத்த பாடத்தால், அவன் அவர்களைக் கண்டு கொள்ளாமல், தன்னருகில் அமர்ந்திருந்த அரிமாவிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.​

விதுஷிக்கு உணவு இறங்க மறுத்தது. புது இடம், புது மனிதர்கள், முக்கியமாக அரிமா. அவனிடமிருந்து அவள் தப்பிக்க செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டது. இனி அவனுடன் அவளுடைய வாழ்க்கை எப்படி இருக்கும். இப்படி பலவித சிந்தனைகளால் அவள் மனம் சோர்ந்து இருந்தது. எனவே உணவில் விருப்பமற்றுத் தட்டில் விரலால் அலைந்து கொண்டிருந்தாள்.​

லட்சுமி "விது, என்னடா இடியாப்பம் ருசி இல்லையா? சப்பாத்தி வைக்கட்டுமா?" என்றார்.​

சரஸ்வதி "அண்ணி, அவள் வீட்டில் இத்தனை வகைகளை ஒரே நேரத்தில் பார்த்திருக்க மாட்டாள். அதனால் ஒரே நேரத்தில் இவ்வளவு வகையைப் பார்த்ததும் சாப்பிட முடியாமல் முகத்தில் அடித்திருக்கும்" என்றார் விதுஷியை மட்டம் தட்டும் விதமாக.​

மற்றவர்கள் பேசும் முன் அவர் கணவர் சேகர் "சரோ, அமைதியாக சாப்பிடு, புது இடம் என்பதால் அந்தப் பெண் சாப்பிட முடியவில்லை. தேவையில்லாமல் பேசாதே" என்றார் கண்டிப்புடன்.​

அரிமா கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். விதுஷியின் முகத்தைப் பார்த்தான். அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் நீர் இப்போது விழுந்து விடுவேன் என்பது போல் பளபளப்பாக இருந்தது.​

அரிமா சட்டென எழுந்து விட்டான். "விது" என்றான்.​

அவள் என்ன என்பது போல் பார்க்கவும் "எழுந்திரு" என்றான்.​

அவள் எழவும் இருவருமாக சென்று கிட்சனில் கை கழுவினார்கள். ஹால் சோபாவில் அவளை உட்கார சொல்லிவிட்டு அவனும் அமர்ந்தான்.​

அவன் சென்றதும் கணபதி "சாப்பிட்டுப் போய் எல்லோரும் ஹாலில் இருங்கள். நான் சில விஷயங்கள் பேச வேண்டும்'' என்றார்.​

லட்சுமிக்குக் கவலையாக இருந்தது. வந்த முதல் நாளே விதுஷி சரியாக சாப்பிட முடியவில்லை, அரிமாவும் பாதி கூட சாப்பிடவில்லை.​

தன்ஷிகாவும் அனுஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.​

சாப்பிட்டு முடித்து அனைவரும் ஹாலுக்கு வந்ததும், கணபதி "இந்த வீட்டில் இருக்கும் எல்லோரும் ஒரு விசயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அரிமாவின் திருமணம் அவன் விருப்பப்படி, நம்மில் யாருடைய விருப்பமோ கருத்தோ கேட்காமலே முடிந்து விட்டது. அதில் எல்லோருக்குமே வருத்தம் இருக்கலாம். ஆனால், இனி இதை மாற்ற முடியாது. விதுஷிகா தான் இந்த வீட்டின் அடுத்த தலைமுறையின் தலைவி. என் பேத்திக்கு இந்த வீட்டில் இனி எந்த அவ மரியாதையும் நடக்கக் கூடாது" என்று உத்தரவாகக் கூறினார்.​

சரஸ்வதி "அப்படி என்றால் நான் இங்கே யார் அப்பா?" என்றார் உருக்கமாக.​

"நீ என் மகள் தான்ம்மா. அதற்காக என் பேத்தியை நீ என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியாது. அவள் உன்னிடம் மரியாதைக் குறைவாக நடந்தாலும், அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன், மனதைக் குழப்பிக் கொள்ளதே சரோ" என்றார் தன்மையாகவே.​

இந்திராணி "அவள் பாவம்ங்க. அவளுடைய ஆசை நிறைவேறவில்லை என்று வருத்தம் இருக்கும். அது தான் சரோ அப்படிப் பேசுகிறாள். கொஞ்சநாள் பொறுத்துப் போனால் எல்லாம் சரி ஆகி விடும்" என்றார்.​

விதுஷிக்கு விசித்திரமாக இருந்தது அவர் நியாயம். அவருக்கு வருத்தம் இருந்தால் அதற்காக என்னை அவர்கள் வருத்தப் படுத்துவார்களாம். நான் பொறுத்துப் போக வேண்டுமாம். இதில் நியாயம் எங்கே இருக்கிறது? இந்த விஷயத்தில், அவளை சரஸ்வதி மட்டம் தட்டியதும், அரிமாவும் சாப்பிடாமல் எழுந்தது தான் மனதுக்கு சற்று இதமாக இருந்தது.​

கணபதி "அதற்கு எந்த அவசியமும் இல்லை ராணி. யாரும் யாருக்காகவும் பொறுத்துப் போக வேண்டாம். அவரவர் மனக் காயங்கள் ஆறும் வரை அடுத்தவர்களிடம் இருந்து விலகி இருந்தாலே போதுமானது." என்றவர் மேற்கொண்டு யாரும் பேச்சைத் தொடர முடியாதவாறு, அவரவர் அறைக்குப் போகச் சொல்லிவிட்டு அவரும் தன் அறைக்கு சென்று விட்டார்.​

விதுஷிகாவும் யாரிடமும் பேசாமல் அவள் இருந்த விருந்தினர் அறைக்குச் சென்று விட்டாள். அவள் பின்னேயே அரிமாவும் உள்ளே வந்து கதவைத் தாழிடவும் அவள் திகைத்துப் போனாள்.​

"என்ன?" என்றாள் திணறலாக.​

அவன் பதில் பேசாமல் அவளை இறுக்கி அணைத்து, கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். அவள் அவனை விலக்க முயன்றாள். அவன் உருவத்தை அவளால் மில்லிமீட்டர் அளவில் கூட அசைக்க முடியாமல் போனது. சற்றுநேரத்தில் அவனாகவே அவளை விட்டு விலகி, அந்த அறையை விட்டும் சென்றுவிட்டான்.​

அவன் போனதும் லட்சுமி வந்தார். வந்தவர் அவள் முகத்தைப் பார்த்துவிட்டு "என்னம்மா? முகம் ஏன் இப்படி வெளுத்துப் போய் இருக்கிறது?" என்றார்.​

விதுஷி "ஒன்றுமில்லை" என்று முனுமுனுத்தாள்.​

"ஒன்றுமில்லை அத்தை என்று சேர்த்து சொல்லவேண்டும்" என்றார் லட்சுமி சிரித்துக் கொண்டே.​

அப்போது காயத்ரியும் அங்கே வந்தாள். அவள் கையில் ஒரு கிளாசில் பால் இருந்தது.​

"பிடி விது. முதலில் இதைக் குடி" என்று உரிமையாக கிளாசை அவள் கையில் கொடுத்தாள். அவள் குடித்த பிறகு தான் தாயும், மகளும் அவளை விட்டனர்.​

சற்றுநேரம் பேசிப்பேசி விதுஷியை சகஜமாக்கி விட்டுத் தான் காயத்ரி அவள் அறைக்குச் சென்றாள். அப்போது விதுஷியின் போன் அடித்தது. அரிமா மாலை கடைக்குப் போய்விட்டு வரும் போது, விதுஷிக்கு புதிய மொபைல் ஒன்றும் வாங்கிக் கொடுத்திருந்தான். கீதா தான் அழைத்தார், அவள் பேசிவிட்டு, லட்சுமியிடம் கொடுத்தாள். மறுநாள் மறுவீட்டிற்கு எப்போது வருகிறார்கள்? என்பது போன்ற விஷயங்களைப் பேசிவிட்டு, மீண்டும் விதுஷியிடம் போனை கொடுத்துவிட்டு, அவர் அறையை விட்டு சென்றுவிட்டார்.​

மாமியாரின் இங்கிதத்தை மனதுக்குள் மெச்சிய படி, அன்னையிடம் பேச்சைத் தொடர்ந்தாள் விதுஷி. இளையவர்களும் விதுஷி வீட்டில் தான் இருந்தார்கள். வருணும், ராகவனும், ப்ரியாவும் மாறிமாறிப் பேசி அவளுடைய உற்சாகத்தை ஓரளவு மீட்டு விட்டனர். வெகு நேரம் பேசிவிட்டு போனை வைத்த போது விதுஷியின் முகம் தெளிந்திருந்தது.​

மணியைப் பார்த்தாள் இரவு பத்தரை. இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள். மாலை சேலையை மாற்றிவிட்டு, அரிமா வாங்கி வந்திருந்த ரெடிமேட் சுடிதாரில் தான் இவ்வளவு நேரம் இருந்தாள். உடைகள், உள்ளாடைகள் எல்லாமே சரியான அளவாக வாங்கி வந்திருந்தான். அதுவே அவளுக்கு அவன் வாங்கித் தந்ததை அணிய ஒரு கூச்சத்தைக் கொடுத்தது.​

அவள் குளியலறையிலிருந்து வெளிவந்த போது, லட்சுமி அந்த அறையில் இருந்தார்.​

"நான் இன்று உன்னுடன் தங்கிக் கொள்கிறேன் விது'' என்றார் அவர்.​

"நான் தனியாக இருந்து கொள்வேன் அத்தை. உங்களுக்கு ஏன் சிரமம்?"​

அவளுடைய அத்தை என்ற உரிமையான அழைப்பில் லட்சுமிக்கு சந்தோசமாக இருந்தது. "இருக்கட்டும் மா. நீ இதுவரை அப்பா அம்மா உடன் இருந்திருப்பாய். இது புது இடம் வேறு. அதனால் இன்று ஒரு நாள் உன்னுடன் இருக்கிறேன். நாளைக்கு மறுவீடு சென்று விடுவீர்கள்" என்றவர் மேலும் சிறிது நேரம் அவளிடம் அவளுடைய வேலை, பொழுதுபோக்கு போன்ற பொதுவான விஷயங்களையும் பேசி நல்ல, மனநிலை உடனே அவளை தூங்கச் செய்தார்.​

விதுஷி இங்கே நன்றாக தூங்க, அரிமாவோ அவன் அறையில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒன்றும், இன்றே அவன் மனைவியுடன் கூடிக்கலக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் நேற்று அவளுடன் ஒரே அறையில், அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தது போல், இன்றும் அவள் அவனுக்கருகில் வேண்டும் என்று தோன்றியது. அதிலும், காலையில் அவளை அவன் எதிர்பாராமல் அணைத்தது, அதை இப்போது நினைத்தாலும் அவன் மூச்சுக்காற்று சூடாகியது. அவன் அணைத்த போது, அவள் உடலின் பாகங்கள் அவனுடன் அழுந்தும் போது, அவன் உணர்ந்த அவளின் மென்மைகள், அவளுடைய மூச்சுக்காற்றின் வாசம், இப்படி அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டு, அந்த இரவை சுகமான நரகமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.​

காலையில் மறு வீட்டிற்கு மணமக்களை அழைக்க தர்ஷனும், வருணும் வந்திருந்தனர். லட்சுமி அவர்களை வரவேற்று அமர வைத்துவிட்டு, குடிக்க காபி கொடுத்தார். கணபதி, நாச்சியப்பன் இருவரும் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மாடியில் இருந்து அரிமா இறங்கி வந்தான். அவன் வந்ததைப் பார்த்த இருவரும், அவனுடைய கம்பீரத்தில் கவரப்பட்டு விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.​

அவன் அவர்களிடம் வந்து நின்று, "வாங்க, வந்து நேரம் ஆகி விட்டதா?" என்று விசாரித்த போது தான் சுயம் தெளிந்து, ஒருவரை ஒருவர் பாத்துக் கொண்டனர். வருண் அப்போது கூட மோனநிலை கலையாமல் இருக்க,​

தர்ஷன் "கொஞ்சம் முன்பு தான் வந்தோம்" என்றான்.​

நாச்சியப்பன் "முறை சொல்லிக் கூப்பிட வேண்டும்ப்பா. அவன் உனக்கு அண்ணன் முறை தானே? அப்படியே கூப்பிடு" என்றார் தர்ஷனிடம்.​

அரிமா சிரிப்பை உதட்டுக்குள் ஒளித்துக் கொண்டான்.​

தர்ஷன் சங்கடமாக "சரி சார்... சாரி சாரி... பெரியப்பா'' என்றான் திணறலாக.​

வருணுக்கும் சிரிப்பு வந்தது. கணபதி வருணிடம் "இன்னும் எத்தனை நாள்கள் இருக்கிறது தம்பி பரீட்சைக்கு?" என்றார்.​

"இன்னும் ஒரு வாரத்தில் தாத்தா".​

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது விதுஷி, அங்கே வந்தாள். வருணையும், தர்ஷனையும் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.​

கணபதி, "உன் அறைக்கு அவர்களை அழைத்துப் போம்மா" என்றார்.​

மனதில் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு "வா வருண், வாங்க அத்தான்" என்று இருவரையும் அவள் அறைக்கு அழைத்துப் போனாள். அருகில் அவ்வளவு பெரிய உருவமாக நின்ற அவள் கணவனை, அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.​

அரிமா அவள் செயலில் மனதில் பல்லைக் கடித்தான். இரவு முழுவதும் அவளை நினைத்து தூங்காமல் இருந்தவனை, ஒரு பார்வை கூடப் பார்க்கவில்லை. அவளுடைய அலட்சியத்தில் கூட அவனுக்கு, அவள் மீதிருந்தப் பார்வையைத் திருப்ப முடியவில்லை. நேற்று அவன் வாங்கி வந்திருந்த மெஜந்தா கலர் புடவை, ரெடிமேட் பிளவுஸ், ஜாதி மல்லி பூ, சிறு ஒப்பனை, லட்சுமி கொடுத்த நகைகள் என்று, அவன் கண்ணுக்கு இன்றும் அவள் தேவதையாக தான் தெரிந்தாள்.​

கணபதியிடம் திரும்பி "எப்போது கிளம்ப வேண்டும் தாத்தா? என்று கேட்டான்.​

"முதல் முறை பேத்தி வீட்டிற்கு போகிறோம். அதனால் எல்லோரும் போகவேண்டும். பெண்கள் கிளம்ப நேரத்தை சொல்லவா வேண்டும்? அனைவரும் வந்ததும் கிளம்பிவிட வேண்டியது தான்" என்றார் தாத்தா.​

அப்போது தான் கவனித்தான், அங்கே இந்திராணி இல்லை. அவர் இருந்தால் எல்லோரையும் இதற்குள் கிளப்பி இருப்பார்.​

பாட்டி எங்கே தாத்தா?" என்றான் ஆச்சரியமாக.​

"அவளுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. நேற்றிலிருந்து எதிலும் பட்டுக் கொள்ளாமல் இருக்கிறாள்" என்றார் வருத்தமாக.​

நாச்சியப்பன் "அம்மா சீக்கிரம் சரியாகி விடுவார்கள்" என்றார். பின் அவர் சென்று எல்லோரையும் விரட்டி கிளம்பச் செய்து, ஒரு வழியாகக் கணபதி குடும்பத்தினர் தூத்துக்குடி வந்தடைந்தனர்.​

விதுஷிகா வீட்டிற்கு அவர்கள் சென்ற போது, அவர்கள் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து, வாசலுக்கே வந்து கணபதி குடும்பத்தினரை வரவேற்று அழைத்துச் சென்றனர். அரிமா, விதுஷிகாவுக்கு இங்கும் ஆரத்தி எடுக்கப் பட்டது. பிரியாவின் அக்கா கீர்த்திகா, முதல் நாள் இரவே மதுரையிலிருந்து வந்து விட்டாள். அவள் தான் இவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள்.​

கீர்த்திகா "மாப்பிள்ளை, வீட்டிற்குள் செல்ல வேண்டுமானால், தட்டில் கனமாக விழ வேண்டும். இல்லாவிட்டால் உள்ளே செல்ல முடியாது" என்றாள் அரிமாவிடம்.​

அதற்கு காயத்ரி "என் தம்பி கனமாகப் போட்டால் உங்களால் பிடிக்க முடியுமா?" என்றாள் கேலியாக.​

கீர்த்திகா "போட சொல்லுங்களேன். பிடிக்க முடிகிறதா என்று பார்த்து விடலாம்" என்றாள் சவாலாக.​

கீர்த்தியின் அம்மா ரேணுகா "போதும் கீர்த்தி, மாப்பிள்ளைக்கு வழி விடு" என்றார். அவருக்கு அரிமா வீட்டினர் இதை தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்று தோன்றியது.​

அரிமா "இருக்கட்டும் அத்தை, என்னிடம் தானே பேச முடியும்?" என்றான் சிரித்த முகமாக. அவன் வீட்டினருக்கு மயக்கம் வராத குறை தான். இவனுக்கு இப்படிக் கூடப் பேசத் தெரியுமா என்பது போல் இருந்தது அவர்கள் பார்வை.​

அரிமா பக்கத்தில் இருந்த வெற்றியைத் திரும்பிப் பார்க்கவும், அவன் ஐநூறு ரூபாய் கட்டு ஒன்றைக் கையில் கொடுத்தான். அதை ஆரத்தி தட்டில் வைத்தான் அரிமா. இரு வீட்டாரும் திகைப்பில் இருக்கும் போதே புதுமணத் தம்பதியினர் வீட்டிற்குள் சென்று விட்டனர்.​

-தொடரும்....​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 11​

கணபதி குடும்பத்தினர் அந்த ஹாலில் அமர்ந்ததும், கீதா அவர்களுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார். அனைவரும் எடுத்துக் கொண்டனர்.​

சரஸ்வதி "எனக்கு வேண்டாங்க. ஏற்கனவே எனக்கு ஜலதோஷம்" என்றார்.​

கீதா "அப்படி என்றால் டீ, காபி ஏதாவது கொண்டு வரவா அக்கா?" என்றார்.​

சரஸ்வதியின் முகம் கடுத்தது. யாருக்கு யார் அக்கா? என்று மனதில் நினைத்தவர் "ஒன்றும் வேண்டாம்" என்று வேகமாக சொல்லி விட்டார்.​

கீதாவின் முகம் வாடியது. அவர் மகள்களும் ஒன்று போல் வேண்டாம் என்று விட்டனர்.​

விதுஷிக்கு வருத்தமாக இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் அவர்கள் வேண்டுமென்று செய்வது தெரிந்தது.​

காயத்ரி, கீர்த்திகாவிடம் ''உங்கள் மகனுக்கு ஒரு வயது ஆகி விட்டதா? என்னிடம் வருவானா?" என்றாள்.​

"ஆமாம் அண்ணி, போன மாதம் தான் பிறந்தநாள் முடிந்தது. அத்தையிடம் போ கண்ணா" என்றாள்.​

காயத்ரியின் மகள் "தம்பி என்னிடம் வருவானா?" என்று கேட்டு அவனைத் தூக்க முயன்றாள்.​

மழலைகளின் பிரசன்னத்தால் சூழ்நிலை சற்று சகஜமாகியது. சற்றுநேரத்தில் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.​

அப்போதும் ‘இது வேண்டாம், அது ஒத்துக் கொள்ளாது’ என்று விதுஷி வீட்டினரை, சரஸ்வதி ஒரு பாடு படுத்தி தான் எடுத்து விட்டார்.​

பிரியா, வருணிடம் தன்ஷிகா, அனுஷாவைப் பார்த்து "இவளுக ஏதோ பாரின் ரிட்டர்ன் போல பந்தா பண்ணுறாளுக பாரேன்" என்றாள்.​

"ஆமா ப்ரீ. இன்று நம் வீட்டுக்கு வந்திருக்காங்க. நாம் நம் வேலையை காட்ட முடியாது. ஆனால் ஒரு நாள் இவங்களை வச்சி செய்யணும்" என்றான் வருண் வன்மத்துடன்.​

தர்மராஜ் "இங்கே என்ன அரட்டை? போய் பந்தியில் என்ன வேண்டும்னு கேட்டுப் பரிமாருங்க" என்று விரட்டினார்.​

உணவு முடிந்து சிறிது நேரத்தில், மணமக்களை விட்டுவிட்டு மற்றவர்கள் மட்டும் கிளம்பினார்கள். அரிமாவும் விதுஷியும் மறுநாள் கிளம்புவதாக இருந்தது.​

கணபதி குடும்பத்தினர் கிளம்பியதும், விதுஷியிடம் "விது மாப்பிள்ளையை உன் அறையில் ஓய்வெடுக்க அழைத்துப் போம்மா" என்றார் கீதா.​

சொல்லிவிட்டு அவர் சென்றுவிட, விதுஷியின் பார்வை ஹால் சோபாவில் அமர்ந்து, போனைப் பார்த்துக் கொண்டிருந்த அரிமாவைத் திகைப்புடன் நோக்கியது. இவனை, தான் சென்று அழைப்பதா? கடவுளே!​

சற்று நேரம் நின்று பார்த்தாள். வேறு யாரும் அவள் உதவிக்கு வருவது போல் தெரியவைல்லை. அவள் அவனருகில் சென்று நின்றாள். அரிமா அவளை நிமிர்ந்து பார்த்தான்.​

புருவத்தை மட்டும் "என்ன?" என்பதுபோல் உயர்த்தினான்.​

"வந்து... அம்மா உங்களைக் கொஞ்சம் ஓய்வு எடுக்க அழைத்துப் போக சொன்னார்கள்" என்றாள் விதுஷி.​

"எங்கே?" என்றான் அரிமா கேலியாக.​

"புரியவில்லை"​

"ஓய்வெடுப்பது எங்கே?"​

"என் அறையில்" சொல்லும் போதே இதைத் தன் வாயால் சொல்வதற்காக தான் கேட்டான் என்பது புரிந்து அவள் முகம் சிவந்தது.​

அவளை ரசனையாகப் பார்த்துக் கொண்டே "வா போகலாம்" என்று எழுந்தான் அரிமா.​

அவள் அறைக்குச் சென்றதும் "என் உடைகள் இருந்த பை எங்கே?" என்றான்.​

"உள்ளே தான் இருக்கிறது" என்றவாறு இயல்பாக உள்ளே வந்து, கட்டிலுக்கு மறுபுறம் இருந்த பையை எடுத்துக் கொடுத்தாள்.​

அவன் மாற்றுவதற்கு உடைகளை எடுப்பதைக் கவனித்துவிட்டு "வேறு எதுவும் தேவை என்றால் கூப்பிடுங்கள்" என்று விட்டு அவன் நிமிர்ந்து பதில் சொல்வதற்குள் கீழே ஓடி விட்டாள்.​

அரிமா தலையை இருபுறமும் ஆட்டி சிரித்துக் கொண்டான்.​

அதன் பிறகு விதுஷிக்கு நேரம் மகிழ்ச்சியாக கழிந்தது. தாய்மார்கள் அவளை அப்படித் தாங்கினார்கள்.​

கீதா "அங்கே எல்லோரும் நன்றாக பழகுகிறார்களா விது?" என்று கேட்டார்.​

வசந்தா "அந்த சரஸ்வதி, அவரோட ரெண்டு பெண்களும் சரி இல்லை கீதா. அவர்களால் இவளுக்கு எந்த பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டும்" என்றார்.​

ரேணுகா "ஆமாம் விது. அவர்களிடமிருந்து விலகியே இருந்து கொள்" என்றார்.​

விதுஷிக்கு இரவு உணவு நேரத்தின் போது சரஸ்வதி பேசியது நியாபகம் வந்தது. மனதை மறைத்துப் புன்னகை செய்தாள்.​

"நீங்கள் இவ்வளவு கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை. தாத்தா நேற்று என்ன சொன்னார் தெரியுமா?" என்று கேட்டு, கணபதி அவளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும் என்றதைக் கூறினாள்.​

ரேணுகா "அப்படி என்றால் உனக்கு அங்கே மரியாதைக் குறைவு ஏற்பட்டதா?" என்றார் சரியாக யூகித்து.​

முகத்தில் எதையும் காட்டாமல் "இல்லை பெரியம்மா, இரவு உணவுக்கு பின், பொதுவாகவே அவர் எல்லோரிடமும் சேர்த்து தான் சொன்னார்" என்றாள் சிறு புன்னகையுடன்.​

மூவர் முகத்திலும் நிம்மதி வந்தது. அதன் பின்பு விதுஷி பெற்றோர் அறையில் சென்று ஓய்வெடுக்கச் சென்று விட்டாள்.​

மாலை அரிமாவையும், விதுஷியையும் கோவிலுக்குச் சென்று வருமாறு கூறினார் கீதா. அரிமா ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் இருந்தான், விதுஷி புடவையில் கிளம்பினாள். வருண் மதியம் உணவு பரிமாறி விட்டு தர்ஷன் வீட்டிற்கு சென்றவன், அரிமா இருப்பதால் இந்தப் பக்கமே ஆளைக் காணவில்லை. அவன் மட்டுமில்லை, தர்ஷன், ராகவன், பிரியா ஆகியோரும் வரவில்லை.​

காரில் விதுஷியுடன் உரிமையாக அமர்ந்து பயணிப்பது, அதுவும் தனியாக, இந்த அனுபவம் அரிமாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவளை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே காரை செலுத்தினான்.​

"வேலையை எப்போது விடப் போகிறாய்?" என்றான்.​

விதுஷிகா சினத்துடன் "ஏன் விட வேண்டும்?" என்றாள்.​

அவனுக்கு அவளுடைய குரலைக் கேட்க வேண்டும் போல் இருந்தது. அதற்காக அவன் வேறு ஏதாவது பேசி இருக்கலாம். இப்போது என்ன செய்வது?​

"ஏன் என்றால் என்ன அர்த்தம்? திருநெல்வேலியிலிருந்து தினமும் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து வேலைக்குப் போகப் போகிறாயா?"​

"நான் அதைப்பற்றி யோசிக்கவில்லை. ஆனால் வேலையை விட மாட்டேன்".​

"நீ வேலைக்குப் போகக் கூடாது" என்றான் அரிமா அவன் வழக்கமான அதிகாரமான குரலில்.​

இதோ வந்து விட்டதே இவன் உண்மையான குணம். தாலி கட்டிய நேரத்திலிருந்து அமைதியின் சிகரம் போல் எப்படி நடித்துக் கொண்டிருந்தான். காண்டாமிருகம். இன்னும் சில வசவுகளையும் அவள் மனம் அவனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. ஆனாலும் வாய் அவனுக்குப் பதில் சொன்னது.​

"நான் தாத்தாவிடம் பேசிக் கொள்கிறேன்"​

அவ்வளவு தான், அரிமாவின் சினம் இன்னும் கூடியது. "நான் எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது. உன்னால் முடிந்த முயற்சியை செய். இனி உன்னால் வேலைக்குப் போக முடியாது" என்றான்.​

விதுஷிகா இப்போது தான் யோசித்தாள். தான் அவசரப்பட்டு பேசி இருக்க வேண்டாம். அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு மெதுவாக தாத்தாவிடம் பேசி இருக்கலாம். இப்போது இவனை எப்படி மலை இறக்குவது? அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கோவில் வந்து விட்டது.​

இருவருமாக அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்கள். சங்கர ராமேஸ்வரர்(சிவன்) தன் சக்தியான பார்வதியுடன் காட்சியளித்தார். சிவனும் பார்வதியும் திருச்செந்தூர் சென்ற போது, பயண இடைவெளியில் இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்தில் ஓய்வு எடுத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது சிவன் பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை அருளியதாகவும் நம்பப்படுகிறது. கடவுள் ஓய்வு எடுத்த இடம் என்பதால், இந்த கோவிலுக்குச் செல்வதால் மனஅமைதி கிடைக்கும் என்று ஐதீகம்.​

இறைவனை வணங்கிவிட்டு அரிமாவும், விதுஷியும் கோவில் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது விதுஷி தயக்கத்துடன் அரிமாவைப் பார்த்தாள்.​

"என்ன விது? என்ன விஷயம்? என்னிடம் எதுவும் கேட்க வேண்டுமா?" என்றான் அரிமா.​

"அது வந்து, ஒருநாள் அம்மாவுடன் கோவிலுக்குச் சென்றபோது என் பிரேஸ்லெட்டை ஒரு சிறுவன் எடுத்துக் கொடுத்தான், அது தான்..." மேற்கொண்டு கேட்க முடியாமல் நிறுத்தி விட்டாள்.​

"அது நானா என்று தெரியவேண்டும். அது தானே?"​

"ஆமாம்".​

"அது நான் இல்லை விது. நான் உன்னைக் கண்காணிக்க ஏற்பாடு செய்தவன். உன் பிரேஸ்லெட் கீழே விழுந்ததும் கவனித்து எடுத்துக் கொடுத்திருக்கிறான். நான் உன்னைப் பார்க்க சிலமுறை தூத்துக்குடி வந்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் நீ வேலை முடிந்து செல்லும்போது, சற்றுத் தொலைவில் இருந்து உன்னைப் பார்ப்பதோடு சரி. மற்றபடி உன்னை தொல்லை செய்ய எனக்குத் தோன்றியதில்லை" என்றான் அரிமா.​

"கிளம்புவோமா?" என்றாள் விது.​

"சரி வா" என்றவாறு அவனும் எழுந்தான்.​

இரவு உணவு முடிந்ததும், அரிமா பூபதிராஜுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.​

அப்போது தான் வருண் வீட்டிற்குள் நுழைந்தான். விதுஷி கீதாவுடன் சமையலறையில் உதவிக் கொண்டிருந்தாள். வருண் அரிமாவை கண்டதும், சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டு உணவு மேசைக்கு சென்று விட்டான்.​

அரிமா பூபதிராஜிடம் பங்கு வர்த்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான். அவனுடைய முதலீடுகளைப் பற்றிக் கேட்டு பூபதிராஜ் வியப்படைந்தார். அவரும் சில ஆலோசைனைகளைக் கூறினார். அதை அவன் கவனமாகக் கேட்டுக் கொண்டான். இப்படியே அரிமா பூபதிராஜ் உறவு சீராகிவிட்டது.​

வருண் கீதாவிடம் "என்னம்மா? இந்த அப்பா நேற்றெல்லாம் அவரை எப்படித் திட்டினார். இன்று அவரோடு மாப்பிள்ளை என்று அழைத்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்" என்று கோபமாகக் கேட்டான்.​

"அப்படி பேசக் கூடாது வருண். அவர் திருமணம் செய்த முறை மட்டும் தான் தவறு. மற்றபடி அவர் தவறானவர் கிடையாது" என்றார் கீதா கண்டிப்பாக.​

விதுஷி அன்னையும், தம்பியும் பேசுவதில் பார்வையாளராக மட்டுமே இருந்தாள். "எப்படியோ போங்க. அக்கா நீ சொல்லு. உனக்கு அவர் மீது கோபம் போய்விட்டதா?" எண்று விதுவிடம் கேட்டான் வருண்.​

விதுஷி பதில் சொல்வதற்குள், கீதா "அது கணவன் மனைவி பிரச்சினை வருண். அதில் நீ மட்டும் இல்லை. வேறு யாரும் தலையிட முடியாது. நான் கூறுவது உன்னைப் பற்றி மட்டும் தான். நீ அவருடன் இனி ஒழுங்காக பேசிப் பழக வேண்டும்" என்றார்.​

வருண் பதில் கூறாமல் அமைதியாக சாப்பிட தொடங்கினான். கீதா அவனுக்குத் திட்டிக் கொண்டே உணவு பரிமாறினார். அவன் சாப்பிட்டுக் கிளம்பும் போது "நாளைக்கு நீ அவரிடம் ஒழுங்காக நடந்து கொள்ளளவில்லை என்றால் பார்" என்று மிரட்டியே அவன் அறைக்கு அனுப்பி வைத்தார்.​

பின் ஹாலுக்குச் சென்று கணவரிடம் "தூங்கும் முன் போடும் மாத்திரை போடவில்லையா?" என்றார். அதாவது மறைமுகமாக அவரை தூங்கப் போக சொல்கிறார். அது புரிந்து அரிமாவும் எழுந்தான்.​

"காலையில் பேசலாம் மாமா" என்றுவிட்டு அன்னை அருகில் நின்ற விதுஷியைப் பார்த்தான். அவள் கையில் பால் கிளாஸ் இருந்தது. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விதுவின் அறைக்குச் சென்று விட்டான்.​

அவன் செல்லவும், கீதா மகளிடம் திரும்பி "போ விது, அவருக்குத் தேவையானதைக் கவனித்துவிட்டு, இன்று அடுத்த அறையில் தங்கிக்கொள்" என்றார்.​

விதுஷி அவள் அறை வாசலில் நின்று கதவைத் தட்டினாள். "உள்ளே வா" என்றான் அரிமா.​

பால் கிளாஸை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுத் திரும்பினாள். அது மட்டும் தான் அவளுக்கு நினைவிருந்தது. அடுத்த நொடி அவள் மேகத்தில் மிதந்தாள்.​

அப்படித்தான் அவளுக்குத் தோன்றியது. அத்தனை வேகமாக அவளை இழுத்து அணைத்து, அவள் முகமெங்கும் முத்தங்களால் நிறைத்தான். அவன் கைகளும், அவள் உடலில் அழுத்தமாக பரவிப் படர்ந்தது. விரல்களாலும், உதடுகளாலும் ஒருவரை விண்ணில் பறக்கச் செய்ய முடியுமா? மேகத்தில் எறிந்தவன், இப்போது மோகத்தில் எரிக்கத் தொடங்கினான். விதுஷியின் உடலும் அவனுடன் ஒத்துழைக்கத் தொடங்கியது. அவள் இடையில் பதிந்த விரல்கள், அழுத்தமாக வருடியபடி சட்டென அவள் நாபிக் குழிக்குள் சென்று அழுத்தியது. அவள் உடலில் சட்டென ஏற்பட்ட மின்சாரம் அவளைப் பூமிக்கு இழுத்து வந்து விட்டது.​

அடுத்த நொடி அவனை தள்ளி விட்டு விட்டு, விலகி நின்று நலுங்கி இருந்த சேலையை சரி செய்து கொண்டாள் அவள். தீராத காமம் அரிமாவுக்குக் கோபமாக மாற்றம் பெற்றிருந்தது.​

"ஏன்டி? நான் என்ன உன்னை விழுங்கி விடவா போகிறேன்?" என்றான் கண்கள் சிவக்க.​

விதுஷி திகைத்தாள் "டியா?" என்றாள் அதிர்ச்சியுடன். ஏனெனில் விது, என்னம்மா என்று குழைபவன் கோபம் வந்தால் மட்டுமே இதுவரை விதுஷிகா என்று அழைத்திருக்கிறான். இப்போது ‘டி’யாமே? எவ்வளவு திமிர் என்று மனதில் கொதித்தாள்.​

ஆனால் அவன் தான் அவளுக்கு மேல் கொதிப்பில் இருக்கிறானே. "ஆமான்டி, கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் தான் என்ன? போ எல்லாவற்றையும் பொத்திப் பொத்தி வைத்துக் கொள். என் கண் முன்னால் இருக்காதே. போய்விடு" என்றான் அழுத்தமாக கோபத்தை அடக்கிக் கொண்டு. இது விதுஷியின் பெற்றோர் வீடு, அதனால் மட்டுமே அவன் இவ்வளவு சத்தம் குறைத்துப் பேசுவது.​

அவளுக்கும் ரோஷம் வந்துவிட்டது. "போடா" என்று கத்திவிட்டு அறையை விட்டு ஓடிவிட்டாள்.​

அவ்வளவு நேரம் கோபத்திலும், காமத்திலும் கொதித்தவனுக்கு அவளுடைய "போடா"வில் நியாயத்திற்கு இன்னும் கோபம் கூடியிருக்க வேண்டும். ஆனால் அரிமாவிற்கோ ''போடா"வா? அதுவும் என்னையா? என்று வியப்பும், சிரிப்பும் தான் வந்தது.​

- தொடரும்....​

 
Top