எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஏழ் வண்ண வானவில் நீயே - கதை திரி

Status
Not open for further replies.

Asha Evander

Moderator
அத்தியாயம் 1

அந்த திரையரங்கம் முழுவதும் ஒரே கூச்சலும் இருக்கைகளை தூக்கி எறிவதுமாக, மிகவும் அமர்க்களமாக இருந்தது. காரணம் இன்று ஆரண்யன் சக்கரவர்த்தியின் ஏழாவது படம் முதல் காட்சி. அவனின் மற்ற படங்களில் நான்கு மட்டுமே ஹிட் கொடுத்தாலும் அவனுக்காகவே அவனை ரசிக்கும் ரசிகர்கள் பலர். இன்றும் அப்படி தான். படம் அத்தனை சுவாரசியமாக இல்லை என்றாலும் ஆரண்யணின் முகத்தை திரையில் பார்த்ததற்கே இத்தனை அமர்க்களம்.

அவன் சினிமா துறைக்கு வந்தே நான்கு வருடங்கள் தான் ஆகி இருந்தன. அதற்குள் ஏழு படங்களை முடித்து அதில் நான்கு படங்கள் மாபெரும் வெற்றியை கண்டிருந்தது. ஒரு படம் தேசிய விருதும் வாங்கி இருந்தது.

அந்த தியேட்டரில் கடைசி வரிசையில் மக்களோடு இணைந்து தானும் ரசித்துக் கொண்டிருந்தான் ஆரண்யன். அவன் எப்போதும் இப்படித் தான். அவனின் படம் ஓடுகிறதோ இல்லையோ, இந்த தியேட்டருக்கு தவறாமல் வந்து விடுவான். அவனின் ரசனையே வேறு.

இன்றும் படத்திற்கு கிடைத்த வரவேற்பை ரசித்தவாறே அவனுக்கு இடதுபக்க முன் வரிசையில் அமர்ந்திருந்தவளை கண்கொட்டாமல் பார்த்தான். அவன் இருந்தது கடைசி இருக்கை ஆதலால் அந்த இருட்டில் அவன் பார்வையை யாரும் கண்டுக் கொள்ளவும் இல்லை.

"ஹேய் வர்ஷ் இன்னைக்கு நைட் டுயூட்டி இருக்கு தானே. இந்த மொக்கை படத்துக்கு வரணும்னு இப்போ உனக்கு வேண்டுதலா? கிளம்பு. சீக்கிரம் வீட்டுக்கு போகணும்"

என்று வர்ஷ் என்றழைக்க பட்டவளின் தோழி பூர்விகா சிடுசிடுக்க,

"இன்னும் கொஞ்சம் நேரம் பூர்வி. என் ஹீரோவை சைட் அடிச்சிக்குறேன்" என்று அவனை அங்குலம் அங்குலமாக ரசித்தாள் வர்ஷிதா மேத்தா. மகப்பேறு மருத்துவர் அவள். சக்கரவர்த்தி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறாள்.

“ஆமா பெரிய ஹீரோ இவரு, நாலு படம் ஹிட் அடிச்சிட்டா சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரா? அவங்க பண பலத்தை வச்சு இப்படி பப்ளிசிட்டி தேடிட்டு இருக்கார்” பூர்விகா சொல்ல,

“ஷட் அப் பூர்வி. அவரை பத்தி பேசாதன்னு சொன்னா புரியாதா உனக்கு?” வர்ஷிதா முகம் சிவக்க கேட்க,

அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன் முகமும் மாறியது. ‘எதுக்காக இந்த கோபம்? அந்த பொண்ணு தான் ஏதோ பண்ணியிருக்கா’ அவனின் மனதில் பழகியே இராத பூர்வி மேல் கோபம் வந்தது.

“என்ன சொல்லிட்டேன் நான்? அவங்க ஹாஸ்பிட்டல்ல வேலை பார்த்தா அவங்களையே நெருங்க முடியாது வர்ஷி. மனசுல தேவை இல்லாத ஆசையை வளர்த்துகிட்டு உன்னை நீயே கஷ்டபடுத்தாம வீட்டுல பார்க்குற மாப்பிள்ளையை கட்டிட்டு நிம்மதியா வாழு. கனவு வாழ்க்கை வாழாத”

பூர்வியின் பேச்சில் வர்ஷிதா தளர்ந்து அவளை பார்க்க “சரி சரி விடு படத்தை பாரு, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்” என்ற பூர்வி அதற்கு மேல் எதுவும் பேசாமல் படத்தை பார்க்க, வர்ஷிதா அவனையே ரசித்து பார்த்தாள்.

அவளின் மனதில் அவனை பற்றிய பிம்பமே வேறு. காதல் என்பதை தாண்டி அவன் அவளின் எல்லாமுமாக மாறி சில வருடங்கள் ஆகி விட்டது. அது அவனுக்கு தெரியுமா என்றெல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால் எப்போதும் அவளுக்கு அவன் தான் ஹீரோ.

அவளின் ஒவ்வொரு முகபாவனையையும் பார்த்துக் கொண்டிருந்தவன் தனது பக்கத்தில் இருந்த மேனேஜரை பார்த்தான்.

“மிஸ்டர் மேத்தா வாங்கின அமௌண்ட் எல்லாம் செட்டில் பண்ணிட்டாரா?”

“சார்!” அவன் அதிர்ச்சியாக ஆரண்யனை பார்த்தான்.

‘படத்தை பார்க்க வந்து விட்டு என்ன நினைவில் இருக்கிறார் இவர்’ என நினைத்தவன் “இன்னும் அசல் வரல சார்” என்று கூற,

“இது முடிச்சிட்டு அங்க கிளம்பலாம்” என்றான் ஆரண்யன்.

“ஓகே சார்” என்று அவன் திரும்பி விட, மீண்டும் ஆரண்யன் பார்வை வர்ஷிதா பக்கம் தான் சென்றது.

இரண்டரை மணி நேரம் படம் முடிந்து அனைவரும் வெளியே வர, கூடவே யாருக்கும் தெரியாமல் கூட்டத்துடன் வெளியே வந்தவன் தியேட்டரின் பின்பக்கம் வழியாக கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து விட்டான்.

படத்தை நடித்து முடித்து கொடுப்பது வரை மட்டும் தான் அவன் பண்ணுவான். அடிக்கடி புரொமோஷன் செய்ய வந்தாலும் மீடியா பக்கம் திரும்பவே மாட்டான். இதுவரை அவனின் பேட்டி என எங்கேயும் வந்தது இல்லை.

அவன் மேனேஜர் வந்து காரை கிளப்ப, “மிஸ்டர் மேத்தா வீட்டுக்கு போ” என்று கூறி விட்டு வெளியே பார்க்க, தனது காரை எடுக்க நின்றாள் வர்ஷிதா.

“இவளை இன்னைக்கு பிடிச்சே ஆகணும்” எனக் கூற,

“யாரை சார்?” எனக் கேட்டான் மேனேஜர்.

“காரை ரோட்டை பார்த்து ஓட்டுறதுல கவனம் வைக்காம காதை என்கிட்ட ஒட்டு கேட்க விட்டுருக்கியா நீ?” ஆரண்யன் அழுத்தத்தில் “சாரி சார்” என திரும்பிக் கொண்டான் அவன்.

“இனி வீட்டுல தான் போய் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு நைட் டியூட்டி கிளம்பி வா” என்ற பூர்வி அவளின் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட,

“நான் வரதுக்குள்ள கிளம்பிட்டாரா இந்த ஹீரோ சார்? நாளைக்காவது மாட்டாமலா போயிடுவார்” என்று அவளின் காரை கிளப்பினாள். பாவம் அவளின் வீட்டையே அவன் திருப்பி போட்டுக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை.

—------
"சார் கொஞ்சம் நாள் டைம் குடுங்க பிளீஸ். எப்படியாவது இந்த முறை மொத்தமா கடனை அடைச்சிடுறேன். வீட்டுக்கு எல்லாம் வந்து அசிங்க படுத்தாதீங்க"

எனக் கெஞ்சி கொண்டிருந்தார் மேத்தா. அவரையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆரண்யன் சக்கரவர்த்தி.

நேராக மேத்தாவின் வீட்டிற்கு தான் வந்தான் என்றாலும் அவனை ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் அவர் பார்ப்பதை அவன் விரும்பவில்லை. அவனின் தொழில் நடிப்பு என்றாலும் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிப்பதை மற்றொரு தொழிலாக செய்துக் கொண்டிருக்கிறான். மேத்தா அவரின் மகளின் படிப்பிற்காக இவனிடம் வட்டிக்கு கடன் வாங்கி விட்டு இப்போது இரண்டு மாத வட்டி கட்ட முடியாமல் போகவும், நேரடியாக கேட்க வந்திருந்தான் அவன்.

“அவர் இரண்டு மாசம் வட்டி கூட கட்டலன்னு என்கிட்ட சொல்லவே இல்ல நீ” அவனின் மேனேஜரை முறைக்க,

“சார் நான் தெளிவா சொல்லும் முன்னாடி நீங்க கிளம்ப சொல்லிட்டீங்க” என்றான் அவன்.

“இங்க பாருங்க மிஸ்டர் மேத்தா”

அவரை தாண்டி மகன், மனைவி என அவனின் பார்வை போக சட்டென எழுந்து நின்றார் மேத்தா.

"கண்டிப்பா இந்த முறை பணத்தை தந்திடுவேன் சார்"

அவர் சொல்லி முடிக்கும் நேரம் “அப்பா” என்ற குரல் கேட்டு திரும்பினான் ஆரண்யன். அவளை அவன் எதிர்பார்த்தே நின்றிருந்தாலும் அவளுக்கு அவனை நேரில் பார்த்ததும் அதிர்ச்சி.

வெளியில் அவன் காரை பார்த்தாலும் அவனாக இருக்காது என்ற சந்தேகத்தில் உள்ளே வந்தவளுக்கு அவனை பார்த்ததில் மகிழ்ச்சி என்றாலும் தந்தை அவன் முன்னால் தவித்து நிற்பதை பார்த்து புருவம் சுருக்கினாள்.

“என்னாச்சு அப்பா? எதுக்காக இவர் இங்க வந்திருக்கார்?” அவள் கேட்க, ஆரண்யன் தோரணையாக அமர்ந்து கொண்டான்.

அவனின் தோரணையை ரசித்ததாக அவள் கண்கள் காட்டிக் கொடுத்து விட இன்னும் ஆழமாக அவளை பார்த்தான் அவன்.

தந்தையிடம் இருந்து பதில் வராமல் போகவே ஆரண்யனை பார்க்க, அவனோ மேத்தாவை பார்த்து,

"எனக்கு பணமா தான் வேணும்னு இல்ல. உங்க பொண்ணு கூட தரலாம்" என்று கூறி அவர்களின் அதிர்ந்த பார்வையை பொருட்படுத்தாமல் வெளியேறி விட்டான்.

வர்ஷிதா அவனின் பேச்சில் உச்சகட்ட கோபத்தில் இருந்தாள்.

“பணத்துக்காக நானா?”

“அப்பா என்ன நடக்குது இங்க?”

“அவர்கிட்ட அப்பா ஐம்பது லட்சம் கடன் வாங்கி இருக்கார் வர்ஷிக்கா. இந்த இரண்டு மாசமா வட்டியும் கட்டல. அதை கேட்க தான் அவர் வந்தார். ஆனா உன்னை பார்த்ததும் கல்யாணம் பண்ண கேட்கிறார் போல” என அவளின் தம்பி விஷ்ணு கூறவும் தந்தையை பார்த்தாள்.

“என்ன அப்பா இது?”

“இந்த டைம் பிசினஸ் நல்ல லாபம் தான்டா, கண்டிப்பா மொத்தமாவே கொடுத்துடலாம்” என்றார் மேத்தா.

ஆனால் அவளுக்கு தான் அதில் நம்பிக்கை இல்லை. இதுவரை நேரில் வராதவன் இப்போது வந்ததற்கு என்னவோ காரணம் இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது. கூடவே அவளை திருமணம் செய்யும் நோக்கில் தான் கேட்டானா எனும் குறுகுறுப்பும் கூடியது.

அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றவள் அப்படியே தூங்கி விட அவள் எழும்பும் போது மாலை ஐந்து ஆகி இருந்தது. எட்டு மணிக்கு மருத்துவமனை செல்ல வேண்டும்.

குளித்து முடித்து மருத்துவமனைக்கு கிளம்பி வந்தவள் ஆறு மணிக்கே கிளம்ப, “என்ன வர்ஷி இவ்ளோ சீக்கிரமா கிளம்பிட்ட?” என்று வந்தார் ராதா, அவளின் தாய்.

“ஒரு கான்பரன்ஸ் இருக்கும்மா. அப்பாகிட்ட ரொம்ப பணத்துக்காக கஷ்டபட வேண்டாம்னு சொல்லுங்க. நான் வெளியில் ரெடி பண்ண பார்க்கிறேன்” என்றவள் ஒரு முறை தாயை கட்டி அணைத்து விட்டு கிளம்பினாள்.

“இது என்ன புதுசா?”

“அவ அடிக்கடி பண்ணுறது தானே. ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா ராதாவை கட்டி பிடிச்சு கொஞ்சிட்டு தானே போவா” என்ற விஷ்ணு கூட அவரை பின்னால் இருந்து அணைக்க,

“விடுடா கழுதை வயசாச்சு இன்னும் என் பின்னாடி சுத்துற” என்று சமையலறைக்குள் சென்றார்.
----------

வர்ஷிதா மருத்துவமனை வழி செல்லாமல் அந்த பணக்காரர்கள் இருக்கும் சாலைக்குள் காரை திருப்பினாள். அனைத்தும் மேல்தட்டுவர்க்க மக்கள் வசிக்கும் இடம் அது. பல நடிகர்கள், தொழிலதிபர்கள், நடிகைககள் வீடு அங்கே இருக்க, ஆரண்யன் சக்கரவர்த்தியின் வீட்டின் முன் காரை நிறுத்தினாள் வர்ஷிதா.

அவளை பார்த்ததும் செக்யூரிட்டி கேட்டை திறந்து விட, அவரை ஆச்சர்யமாக பார்த்தவாறே காரை உள்ளே கொண்டு போய் நிறுத்தினாள் வர்ஷிதா.

“உள்ளே போங்கமா. சார் உள்ளே தான் இருக்காங்க” என்று அவர் கேட்டை பூட்டி விட, தயங்கியவாறே வாசலில் வலது காலை எடுத்து வைத்தாள் வர்ஷிதா.

முதல்முறையாக அவனின் வீட்டிற்கு வருகிறாள். மனம் கவர்ந்தவன் வீட்டிற்கு வரும் போதே மனம் முழுவதும் பரவசம். அதிலும் இது ஆரண்யன் தனியாக இருக்கவே வாங்கிய வீடு. அவனின் குடும்பத்தார் எல்லாம் வேறு இடத்தில் இருந்தனர்.

ஹால் பகுதிக்கு வந்து விட்டவள் அவனை தேட, “என்ன மேடம் வீடு வரைக்கும் விசிட்?” என்று கேட்டுக் கொண்டே வந்தவனை பார்த்து மூச்சடைத்து நின்றாள் வர்ஷிதா.

அப்போது தான் குளித்திருப்பான் போல. தலையில் போட்ட ஷாம்பூ மணமும் சோப்பு மணமும் கலந்து அவளின் நாசியை தீண்ட, சட்டை இல்லாமல் வெறும் ட்ராக் பேண்ட் உடன் வந்து நின்றவன் மீது தான் அவள் பார்வையே.

“என்ன வச்ச கண்ணு எடுக்காம சைட் அடிக்குற. ஆனா தியேட்டர்ல மட்டும் பக்கத்துல இருந்தும் உனக்கு கண் தெரியலையே” என சிரிக்க,

“ஐயோ! அங்க வந்தீங்களா?” என ஒரு நொடி தடுமாறி பின் நேராக அவனை பார்த்தாள். ஆனால் அந்த ஒருநொடி தடுமாற்றம் தான் அவனுக்கும் அவள் மீது கொஞ்சம் பித்தாக்கியது.

“என்ன விஷயம்?” அவன் கேட்க,

“சொல்லுறேன், அந்த சட்டையை போட்டுட்டு வரீங்களா?” என இப்போது அவன் முகம் பார்க்காமல் சொல்ல,

“இவ்ளோ நேரமா ரசிச்சியே, அப்போவே வெட்கம் எல்லாம் இல்லன்னு தெரிஞ்சு போச்சு. இப்போவும் இப்படியே பேசு” அவன் சோபாவில் அமர,

“உங்களுக்கே ஒரு பொண்ணு முன்னாடி இப்படி நிக்கிறோம்னு கூச்சம் இல்ல அப்புறம் எனக்கு என்ன வந்துச்சாம்?” என்றவள்,

“காலையில வீட்ல வச்சு எதுக்காக அப்படி சொன்னீங்க பணம் இல்லைன்னா பொண்ணு அப்படின்னு. நான் என்ன பொருளா பணத்துக்கு பதிலா என்ன நீங்க விலைக்கு வாங்க?” எனக் கேட்க அதில் கொஞ்சம் சூடு ஏறியிருந்தது.

“அப்படியா சொன்னேன்! அச்சோ சாரி, உனக்கு ஆசை இல்லையா என்னை கல்யாணம் பண்ணிக்க?”

“அதெல்லாம் இல்ல”

“ஓ! அதனால்தான் நான் நடிக்கிற எல்லா படத்துக்கும் தியேட்டர்ல வந்து அப்படியே வச்ச கண்ணு பாக்காம ரசிச்சிட்டு இருப்பியா?”

“அது.. அது ஹீரோவா உங்களை பிடிக்கும். அதுக்காக அப்படி பார்க்கிறேன், அதுக்குன்னு கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” அவள் தடுமாற, அவளை பிடித்து இழுத்தான் அவன்.

அவனின் மீது விழுந்தவளை இறுக பிடித்தவன், “அப்போ கல்யாணம் வேண்டாம் அப்படி தானே?” என்று கேட்க,

முயன்று “ஆமா” என்றாள், அவன் கண் பார்க்காமல்.

“ஓகே நீ கிளம்பலாம்” அவன் அவளை தள்ளி விட்டு எழும்ப, “என்ன!” அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“என்ன என்ன? நீ கிளம்பு. நான் வீட்டுக்கு போகணும். உனக்காக யாரும் இங்க தவம் இருக்கல” என்று கூற அவளுக்குள் சட்டென கோபம் மூண்டது.

‘கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ண நான் என்ன பைத்தியமா?’ என எண்ணிக் கொண்டவள்,

"எனக்கு உங்களை கல்யாணம் பண்ண பூரண சம்மதம். பணத்துக்காக இல்ல, எனக்கு உங்க மேல இருக்குற காதலுக்காக. ஆனால் அதுக்கு பிறகும் நான் வேலைக்கு போவேன். சம்பாதிக்கிறது எல்லாம் என் அம்மா, அப்பாக்கு தான் கொடுப்பேன்" என்றவளை சுவாரசியமாக பார்த்தான் ஆரண்யன்.

சிறிது நேரத்துக்கு முன்பு தயங்கி நின்றவளா இவள் எனும் ரீதியில் அவன் பார்த்தான்.

"வர்ஷிதா மேத்தா! ரைட்?"

"ஆமா, அதுவே இப்போ தான் தெரியுமா?" என்று கொஞ்சம் மனம் கனக்க கேட்டாள்.

"சட்டு சட்டுன்னு வானிலை மாதிரி மாத்தி பேசுறியே. நீ சொன்ன கண்டிஷனுக்கு நான் ஓகே சொல்லலன்னா என்ன பண்ணுவ?"

"சிம்பிள், அதிக வட்டிக்கு கடன் கொடுத்துட்டு திருப்பி கேட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் டார்ச்சர் பண்ணுறதாக புகார் கொடுப்பேன். நாங்க அதை திருப்பி தர டைம் தானே கேட்டோம். மொத்தமா தரவே மாட்டேன்னு சொல்லலயே"

அவளின் பேச்சில் சிரித்தவன்,

"என் மேல புகார் கொடுக்க போற. அதுவும் உடல்ரீதியா துன்புறுத்தியதாக. ஆனா சாட்சி வேணுமே" என அவளை நெருங்க, பின்னால் நகர்ந்தாள் வர்ஷிதா.

“என்ன மேடம் தைரியசாலி ஆச்சே. நில்லு பார்ப்போம்” என்றவன்,

"லுக் மிஸ். வர்ஷிதா, இது என்னோட கோட்டை. அவ்ளோ ஈசியா நீ வெளில போக முடியாது" என்று கூற,

"ஆஹான்!"

என்றவள் அவன் எதிர்பாராத நொடி அவனின் தாடியை பிடித்து இழுத்து உதட்டை கடித்தவள் அவனின் அதிர்ந்த நிலையை பயன்படுத்தி வாசலுக்கு சென்று விட்டாள்.

அவன் தான் ஒரு நொடி அவளின் செயலில் சுயம் இழந்து நின்றான்.

"ஆரண்யா" குரல் கேட்டு அவன் நிமிர,

"ஐ லவ் யூ டா. என்னை கல்யாணம் பண்ண நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். நீ கெட்டவனா இரு. நான் உனக்கும் மேல கெட்டவளா இருப்பேன். உனக்கும் எனக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும். உன் பணத்தை நான் திரும்ப தருவேன். ஆனா வேற எதுவும் என்கிட்ட இருந்து உனக்கு கிடைக்காது" என்று கூற,

“பாரேன்! உன்னை கல்யாணம் பண்ணி சும்மா உட்கார வைக்கவா முடியும்?அதையும் பார்க்கலாம்டி. இந்த உதட்டு கடியை நான் உனக்கு நாளைக்கே திருப்பி தரலன்னா நான் சக்கரவர்த்தி குடும்ப வாரிசு இல்லடி" என கத்தினான்.

"சரி தான் போடா" என்றவள் புன்சிரிப்புடன் வீட்டிற்கு கிளம்பினாள். ஆரண்யன் உதட்டிலும் அதே புன்னகை.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 2

எட்டு மணிக்கு சரியாக மருத்துவமனை வந்தவளுக்கு அடுத்து வேலையே இழுத்துக் கொண்டது. அன்று இரண்டு சிக்கலான பிரசவம் வேறு இருக்க, ஆரண்யன் பற்றிய நினைவே வரவில்லை. அவள் வேலை என்று வந்துவிட்டால் அதில் மட்டும் தான் கவனத்தை வைப்பாள். ஆனால் வேலை நேரம் முடிந்ததும் மீண்டும் ஆரண்யன் நினைவு அவளை அள்ளிக் கொள்ளும்.

பூர்வி ரவுண்ட்ஸ் வரும் நேரம் வர்ஷிதாவை அவள் அறையில் தேட காணவில்லை. “எங்க போயிட்டா இவ?” என்று பார்வையை சுழற்ற, ஒரு அறையில் இருந்த பெண்ணை பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ஆளு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரி” என சிரித்துக் கொண்டவள் மற்றவர்களை பரிசோதித்து விட்டு வரும் போது எதிரில் வந்தாள் நிகிதா. அதே மருத்துவமனையில் இன்னொரு மகப்பேறு மருத்துவர்.

“என்ன பூர்வி உன் ஆள காணல” என கிண்டலாக கேட்க,

“அவ இன்னும் முடிக்கல நிகி. இன்னைக்கு நீ தான் லேட். மேடம் வந்து ரெண்டு டெலிவரி முடிச்சிட்டு அடுத்து ரவுண்ட்ஸ் போயிருக்கா. வா ஒரு டீ குடிச்சுட்டு வருவோம்” என கேண்டீன் அழைத்து சென்றாள். நிகிதா டீ வாங்க, பூர்வி பாதாம் பால் வாங்கிக் கொண்டாள்.

“பேசிட்டியா பூர்வி?”

“ஹ்ம், இன்னைக்கு காலையில் தியேட்டர்ல வச்சு பேசினேன் நிகி. ஆனாலும் அவ கேட்கிறது போல இல்ல. அவரை அப்படியே மனசுக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கா. ஒரு வார்த்தை சொல்லிட்டாலும் பத்ரகாளி மாதிரி அடிக்க வரா”

“இது சரியே வராதே. அவளோட குடும்ப சூழ்நிலை என்ன? ஆக்டர் ஆரண்யன் குடும்பம் பரம்பரை பணக்காரங்க. இவளோட காதல் மட்டும் போதாதே. அதுவும் இல்லாமல் நம்மளோட டீன் டாக்டர். அசோகன் கூட இதுக்கு சப்போர்ட் பண்ணுவார்னு தோணல. அவகிட்ட தான் பேசணும் வரட்டும்”

அவர்கள் வர்ஷிதாவின் நெருங்கிய தோழிகள். மூவரும் மருத்துவ படிப்பை ஒன்றாக முடித்து ஒரே மருத்துவமனையில் பணிபுரிகின்றனர்.

அவர்கள் டீ குடித்து முடியும் நேரம் வர்ஷிதா அங்கே வந்தாள். அவள் முகத்தில் புதிதாக ஒரு பொலிவு தெரிய தோழிகள் கவலைக் கொண்டனர்.

“ஹேய் நிகி, இன்னைக்கு என்ன லேட்? உன்னால இன்னைக்கு ரெண்டு கேஸ் நானே ஹேண்டில் பண்ண வேண்டியதா போச்சு. அதுவும் கொஞ்சம் கிரிட்டிகல் வேற” என்றவள்,

“பூர்வி எனக்கும் ஒரு பாதாம் மில்க்” என்று கூறி விட்டு சோர்வாக அமர்ந்தாள்.

“என் மாமியார் வீட்ல கொஞ்சம் பிரச்சனை. அந்த டென்ஷன்ல தான் லேட். உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சா?” என கொஞ்சம் கவலையாக கேட்டாள் நிகிதா.

“கஷ்டம் எல்லாம் இல்ல. இந்த ஃபீல்டு வந்த பிறகு நம்மளோட அர்ப்பணிப்பு தான் அவங்க நலன். அதனால் பெருசா எனக்கு சோர்வு இல்ல”

“அது சரி தான். அப்புறம் உன் முகம் கொஞ்சம் டாலடிக்குதே, என்ன விஷயம்?” நிகிதா கேட்க, வர்ஷிதா முகம் அவனை நினைத்து வெட்கத்தில் சிவந்தது.

“அது காலையில் ஒரு நல்ல விஷயம் நடந்துச்சு” என்று காலையில் நடந்ததை கூற, பாதாம் பால் வாங்கி வந்த பூர்வி “என்னடி சொல்லுற? ஆரண்யன் உன்னை கல்யாணம் பண்ண கேட்டாரா?” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“ஷ்ஷ் அமைதியா பேசு பூர்வி. அவர் கேட்டார், நான் சம்மதம்னு சொல்லிட்டேன். இன்னும் அவர் வீட்டில் பேசினது போல தெரியல. நான் சம்மதம் சொன்னது என் வீட்டுக்கும் தெரியாது. அவர் வீட்டுக்கு போயிட்டு நேரடியா ஹாஸ்பிட்டல் தான் வரேன்” என்றாள் வர்ஷிதா.

“இதெல்லாம் சரியா வருமா வர்ஷி? அவருக்கும் உனக்கும் மட்டும் இல்ல இதுல உங்க பெற்றோர் கூட சம்மந்தப்பட்டு இருக்காங்க. அவங்களையும் யோசிக்கணும்ல” நிகிதா கூற,

“தெரியும் நிகி. ஆனா அவரா கேட்டு எனக்கு அதை மறுக்க விருப்பம் இல்ல. உனக்கே தெரியும் நான்கு வருஷமா அவரை நான் எந்தளவுக்கு காதலிச்சிட்டு இருக்கேன்னு. அவரை பார்க்க ஒரு சான்ஸ் கிடைக்காதான்னு தான் இந்த ஹாஸ்பிட்டல் வந்தேன். ஆனா இப்போ அவரே தேடி வரும்போது யாருக்காகவும் அவரை இழக்க எனக்கு தெம்பு இல்ல” என்ற வர்ஷிதா அவர்களுக்கு புதிது.

எப்போதும் குடும்பத்துக்காக யோசிக்கும் வர்ஷிதா காதலுக்காக குடும்பத்தையே இழக்க தயாராக இருக்கிறாள்.

“லூசு மாதிரி பேசாத வர்ஷி. உன்னை ஃபீல் பண்ண வைக்க நான் இதை சொல்லல. ஆனாலும் சொல்லுறேன், ஆரண்யன் வீட்டில் உன்னை ஏத்துக்க மாட்டாங்க. அங்க நீ கஷ்டப்படுற நிலமை வரலாம். அதனால் எதுக்கும் நல்லா யோசிச்சு முடிவு எடு” என்று பூர்வி கூற,

அந்த நேரம் வர்ஷிதாவின் அலைபேசி ஒலித்தது. முகப்பில் ஆரண்யன் படம் தெரிய பூர்வி அதிர்ச்சியில் கண்களை விரித்தாள்.

நிகிதா அவளை பார்த்து சிரிக்க, வர்ஷிதா அலைபேசியை எடுத்து “ஹலோ” என்றாள்.

“போனை ஸ்பீக்கர்ல போட்டு உன் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி வை” என்று அந்த பக்கம் ஆரண்யன் குரல் வர, பட்டென திரும்பி பார்த்தாள்.

“நான் அங்க ஒன்னும் இல்ல, என் வீட்டுல இருக்கேன். என் ஆளு தான் அங்க இருந்துட்டு எனக்கு தகவல் தரான்” என்று சிரிக்க,

“வேவு பாக்குறீங்களா?” கடுப்பாக கேட்டாள் இவள்.

“நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு பாதுகாப்பு வேண்டாமா? அதான் உனக்கு பாடிகார்ட் போட்டு இருக்கேன்” என்றான் அசால்டாக.

“ஆரண்யன்!” இவள் பல்லை கடிக்க,

“பார்த்துடி பொக்கை வாய் கூட எல்லாம் என்னால குடும்பம் நடத்த முடியாது” அவனின் பேச்சில்,

“நேர்ல வந்து உங்களை கவனிச்சிக்குறேன்” என்றாள்.

“நீ நேர்ல வாடி, சாயங்காலம் நீ கொடுத்ததை திரும்ப தர வேண்டாமா?”

அவன் எதை சொல்கிறான் எனப் புரிந்ததும் அவள் முகம் சிவந்து விட்டது.

“பேசுற பேச்சை பாரு” அவள் முணுமுணுக்க,

“அதெல்லாம் அப்புறம் தெளிவா பேசலாம். இப்போ போனை ஸ்பீக்கர்ல போடு”

“வேண்டாமே” அவள் தயங்க,

“இப்போ போன்ல பேச கூடாதுன்னா நேர்ல வந்து திட்டுவேன். நடிகன்னா அப்படியே வானத்தில் இருந்து விழுந்தவனா நான்? நானும் சாதாரண மனுஷன் தான். பணம் இருந்தா நான் பெரிய ஆள் போலவும், அது இல்லாம நீ என் வீட்டுக்கு வந்து கஷ்டப்படுறது போலவும் பேசுறாங்க. இன்னைக்கு இருக்கு அந்த தியேட்டர் காரிக்கு” என அவன் எகிற,

“தியேட்டர்காரியா? பூர்வியா?” என அவள் சிரிக்க, அவனின் முகத்திலும் புன்னகை.

“சரி நீ கொடு, நான் திட்ட மாட்டேன்” என்று அவன் கூற ஸ்பீக்கரில் போட்டு வைக்க,

“ஹலோ மிஸ் பூர்வி அண்ட் நிகிதா, என் பொண்டாட்டியை எப்படி கவனிக்கணும்னு எனக்கு தெரியும். எல்லாம் தெரிஞ்சது போல அவகிட்ட தப்பு தப்பா அட்வைஸ் பண்ணினா ரெண்டு பேரையும் எங்கேயும் வேலை பார்க்க முடியாதபடி பண்ணிடுவேன்” என்று மிரட்டினான்.

அவனின் பேச்சில் நிகிதாவும் பூர்வியும் திணற,

“ஆரண்யா!” வர்ஷிதா கோபமாக எச்சரித்தாள்.

“நாளைக்கே நமக்கு கல்யாணம். உங்க வீட்டு, எங்க வீட்டு சம்மதம் எல்லாம் பொறுமையா வாங்கிக்கலாம். நாளைக்கு நான் சொல்லுற இடத்துக்கு நீ வரணும்” என்றான் ஆரண்யன்.

“வாட்!” என அதிர்ந்தவள்,

போனை ஸ்பீக்கரில் இருந்து எடுத்து விட்டு காதில் வைத்து, “அப்பாகிட்ட பேசணும் நான்” என்றாள்.

“சரி அப்போ என்னை மறந்துடு” என்று அழைப்பை துண்டித்து விட்டான். வர்ஷிதா ஸ்தம்பித்து போய் நின்றாள்.

“மறந்து விடவா?” கண்கள் கலங்க மீண்டும் வாய்விட்டு சொல்ல, நிகிதா அவளை பாவமாக பார்த்தாள்.

“ஃபீல் பண்ணாத வர்ஷி. அவர் ஏதோ கோபத்தில் சொல்லியிருப்பார். நீ அப்பா, அம்மாகிட்ட பேசு. அவங்களுக்கு சம்மதம்னா கல்யாணம் பண்ணுவதில் தப்பு இல்லையே”

பக்கத்தில் இருந்த பூர்வி “இவ மட்டும் சொல்லாம கல்யாணம் பண்ணினா நானே அப்பா அம்மாகிட்ட சொல்லிடுவேன். அவர் சொல்லுவாராம், இவ உடனே கட்டுங்க தாலின்னு போய் நிற்பாளாம்” என்று கூறினாள்.

வர்ஷிதா கலக்கத்துடன் அவளை பார்த்தாள். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தவித்தது மனம்.

“டாக்டர். பூர்வி உங்க பேஷியன்ட் ஒருத்தங்க உங்களை தேடிட்டு இருக்காங்க” என்று செவிலியர் கூற,

“நல்லா சொல்லி வை நிகிதா. இது ஒன்னும் விளையாட்டு இல்ல இந்த முறை தோற்று போனால் அடுத்த முறை ஜெயிக்க முயற்சி செய்ய, இது வாழ்க்கை. தெளிவான முடிவு தான் அவளையும் நிம்மதியா வாழ வைக்கும்” என்று கூறி விட்டு கிளம்பினாள்.

நிகிதா வர்ஷியை பார்க்க “எனக்கும் புரியுது நிகி. ஆனா என்னால் ஆரண்யன் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. உனக்கே நல்லா தெரியும்ல அவர் மேல நான் உயிரா இருக்கேன். ஒரு நிமிஷம் அவர் கோபமா பேசினதையே என்னால தாங்க முடியல. ஆனா வாழ்க்கை முழுதும் அவரை மிஸ் பண்ணிட்டு அழ சொல்லுறியா?” என்று கேட்டாள் வர்ஷிதா.

“உன்னை அவரை மறக்க சொல்லல நான். உன்னை இத்தனை வருஷம் வளர்த்து உனக்காக கடன் வாங்கி இப்போ அதையும் கட்ட முடியாம தவிக்குற உன் குடும்பத்தை பற்றியும் யோசி. ஆரண்யன் மேல இருக்கும் காதல் உடனே அவர் வீட்டுக்கே போய் சரி சொல்ல வச்சிடுச்சு. இப்போ அவர் கொஞ்சம் கோபமா பேசினதும் அவர் பேச்சையே கேட்க சொல்லுது. ஆனா உன் அப்பா பத்தியும் யோசி. அவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணு.

அவர் வீட்டில் சமாளிக்கும் திறமை அவருக்கு இருக்கு. ஆனா உன் அப்பா பாவம் வர்ஷி. மனசு உடைஞ்சு போயிடுவாங்க. நீ பேசு, உன் காதலை பற்றி சொல்லி புரிய வை. ஆரண்யன் கூட அவங்ககிட்ட பேசட்டும். எல்லார் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணு. அது தான் நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கும். யோசி” என்றவளும் எழுந்து சென்று விட வர்ஷிதா தலையை பிடித்துக் கொண்டு அப்படியே இருந்தாள்.

‘நான் தப்பு பண்ணுறேனா?’ அவள் மனது கேள்வி எழுப்ப,

“என்னை கல்யாணம் பண்ணுறது உனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கா?” என அவளின் முன் வந்தமர்ந்தான் ஆரண்யன் சக்கரவர்த்தி.

தலையில் தொப்பி மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்திருக்க, அவனை யாருக்கும் சட்டென அடையாளம் தெரியவில்லை.

“ஆரண்யா!” வர்ஷிதா கண்களில் கண்ணீர் வர, அதை துடைத்து விட்டவன்,

“உனக்கு இப்போ உன் அப்பா அம்மா சம்மதம் வேணும் அவ்ளோ தானே?” என்று கேட்க ஆமென தலையசைத்தாள்.

“அது உனக்கு நாளைக்கு காலையில் கிடைக்கும். இப்போ அழுதுட்டு இருக்காம வேலையை கவனி” என்றான்.

“என்னை ஃபாலோ பண்ணுறதே உனக்கு வேலையா?”

“நீ அழுதுட்டு இருக்கன்னு போன் பண்ணினான். வெளில தான் இருந்தேன், இப்போ உள்ளே வந்துட்டேன். அவ்ளோ தான். உனக்கு என்னை எத்தனை வருஷமா தெரியும்னு எனக்கு தெரியல. ஆனா கடந்த இரண்டு வருஷமா நான் உன்னை மட்டும் தான் பார்க்கிறேன். காதல் அதையும் தான் உன் மேல ஒரு உணர்வு. ஆனா எதையும் சீக்கிரம் வெளிக்காட்டல.

உனக்காக தான் காலைல உங்க வீட்டுக்கு வந்தேன். உனக்காக தான் கல்யாண பேச்சை எடுத்தேன். இப்போ ஒரு நொடி உன் கண் கலங்கினாலும் என்னவோ போல இருக்கு. உன்னை அணைச்சு ஆறுதல் சொல்ல மனசு துடிக்குது. ஆனா அது கல்யாணம் ஆன அப்புறம் தான் நடக்கும்னு எனக்கு புரியுது. அதனால் தான் நாளைக்கே கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்”

“ஒரு கேள்வி கேட்டா ஒன்பது வரில பதில் சொல்லுற” என்று கிண்டலாக சொன்னாலும் அவனின் பேச்சில், காதலில் அவள் மனம் துள்ளிக் குதித்தது.

“இப்போ தான் மறுபடியும் பழைய வர்ஷி ஆகி இருக்க. இப்படியே இரு நீ. உன் காதலை என்கிட்ட சொன்ன நிமிஷத்தில் இருந்து நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். உன் பெற்றோர் சம்மத்தத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கும்” என்றவன் கூற,

“உங்க வீட்டில் சம்மதிப்பாங்களா?” அவள் மனம் மீண்டும் சுருண்டது.

“அவங்க சம்மதம் எல்லாம் அப்புறம் கேட்டுக்கலாம். நான் பார்த்துக்கிறேன்”

“அவங்க சம்மதம் கூட கேட்டுக்கோ. இல்லன்னா அதுவே நம்ம வாழ்க்கையை பாதிக்க கூடாதுல” அவள் கலக்கமாக கூற,

எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவளின் அருகில் அமர்ந்து தோளோடு அணைத்துக் கொண்டான்.

“எதுக்கும் பயப்படக் கூடாது வர்ஷி. நான் உன் கூட இருக்கும் வரைக்கும் உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக் கூடாது. என்னை எப்போவும் மிரட்டிட்டு இருக்குற வர்ஷி தான் எனக்கு வேணும்”

“ஹ்ம்” அவள் கண்களை துடைக்க,

“ராட்சசி உன்னை கல்யாணம் பண்ணிட்டு தான் அடுத்து ஷூட்டிங் எல்லாம் நான் போகணும். இப்போ நல்ல பொண்ணா உள்ளே போ. நாளைக்கு உன் அப்பா அம்மா சம்மதம் உனக்கு கிடைக்கும்” என்று அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட, அவள் உடல் சிலிர்த்தது.

அதை உணர்ந்தவன் உடலும் உள்ளமும் அவளுக்காக ஏங்கியது. ‘இன்னும் கொஞ்ச நாள் தான்டா, கண்ட்ரோல் பண்ணு’ என தனக்குள் கூறிக் கொண்டவன் அவளை அனுப்பி விட்டு காருக்கு வந்தான்.

 
Status
Not open for further replies.
Top